நமது விவாதத்திற்கு முடிவாகச் சில காரியங்களைக் குறிப்பிட்டு விடைபெறுகிறேன்.
1) கர்த்தருடைய இராபோஜனத்தை ஏன் அனுசரிக்க வேண்டும்? அ) அவரை நினைவுகூர்ந்துகொள்ளக் கர்த்தருடைய இராபோஜனம் அனுசரிக்க வேண்டும் (1 கொரிந்தியர் 11:24-25). ஆ) அவருடைய மரணத்தின் மூலம் கிடைத்த சுவிசேஷத்தை உலகத்திற்குத் தெரிவிக்கக் கர்த்தருடைய இராபோஜனம் அனுசரிக்க வேண்டும் (1 கொரிந்தியர் 11:26). இ) சுயபரிசோதனை செய்துகொண்டு கர்த்தருடைய சந்நிதியில் நம்மை நாம் பரிசுத்தப்படுத்திக்கொள்ள உதவும் ஒரு வாய்ப்பாகக் கர்த்தருடைய இராபோஜனம் அனுசரிக்க வேண்டும் (1 கொரிந்தியர் 11:27-28). அதாவது ஓபிர் அவர்கள் சொன்னது போல, வாரமெல்லாம் செய்த பாவங்களைக் கழுவிக்கொள்ளும் ஆவிக்குரிய குளியலாகப் பந்தி உதவுகிறது என்பது என் கருத்தல்ல. இன்று நான் பாவம் செய்தால், இன்றே கர்த்தருடைய கிருபாசனத்தைத் தைரியமாகக் கிட்டிச்சேர்ந்து மன்னிப்பைப் பெறும் பாக்கியம் இருக்கும்போது, பந்தி நிகழ்ச்சி வரை காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் தேவன் மன்னிப்பார் (1 யோவான் 1:9), பந்தி எடுத்தால் அல்ல. இருப்பினும், பந்தியை உண்மையில் மதிப்பவர்கள் அனைவரும் பாத்திரமாக அதில் கை வைப்பார்கள் என்பதால், சுத்திகரிப்புக்கும் மற்றும் அர்ப்பணிப்புக்கும் (Re-dedication) அது கண்டிப்பாக ஒரு சிறப்பு வாய்ப்பே. ஈ) கிறிஸ்துவுக்குள் சபை ஒரே சரீரமாக இருக்கிற உண்மையை நடைமுறைப்படுத்தும்படி ஒருவரையொருவர் தூண்டுவதற்குக் கர்த்தருடைய இராபோஜனம் அனுசரிக்க வேண்டும் (1 கொரிந்தியர் 10:17).
இவையே பந்தியில் பங்குபெற வேதம் போதிக்கும் காரணங்கள். ஆனால், பந்தியில் பங்கு பெறுவது நித்திய ஜீவன் பெறுவதற்கு, கடைசி நாளில் உயிர்த்தெழுவதற்கு, இன்னபிற எல்லாவற்றிற்கும் போன்றவையெல்லாம் முழுமையற்ற வேதப் புரிதலில் இருந்து பிறந்த கருத்துக்களே என்று இந்த விவாதத்தில் நாம் உறுதிப்படுத்திக்கொண்டோம். எனவே சரியான வேதப் புரிதலோடு இந்தப் பரிசுத்த நியமத்தை அனுசரிக்கும்படி வாசகர்களுக்கு அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.
2) ஓபிர் அவர்களுக்குச் சில ஆலோசனைகள்: அ) "வேதபூர்வமான இரட்சிப்பின் அனுபவம் பெற்றும் கர்த்தருடைய இராபோஜனத்தின் முக்கியத்துவத்தை, மகிமையின் பிரபாவங்களை கிரகிக்க முடியாமல் இருப்பவர்களுக்காக மட்டுமே நான் இந்த நூலைப் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதுகிறேன்" (ஓபிர், கர்த்தருடைய இராபோஜன இரகசியம், பக்கம் 39). ஓபிர் அவர்கள் இப்படிச் சொல்லிக்கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறான போதனைகளுக்குப் பரிசுத்த ஆவியானவரைப் பொறுப்பாளியாக்குவது பயங்கரமான குற்றம் என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
ஆ) "தேவன் அனுப்பிய சீர்திருத்தவாதியைப் பின்பற்றாமல் ஒவ்வொருவனும் அகங்கரித்துத் தான் ஒரு சீர்திருத்தவாதி ஆகிவிட வேண்டும் என்று துடித்து, தன் புத்திக்குத் தோன்றிய விதமாகத் திருத்தங்களை முன்மொழிந்தால் நிலைமை அப்படியே மோசமாகும்" (ஓபிர், கர்த்தருடைய இராபோஜன இரகசியம், பக்கம் 54). ஓபிர் அவர்கள் இந்த விமர்சனம் அவருக்கே ஏன் பொருந்தாது என்று தன்னைத் தான் சோதித்துப் பார்ப்பது நல்லது.
இ) "கர்த்தருடைய இராபோஜன நிகழ்ச்சி சபை பக்திவிருத்திக்காக மிகவும் முக்கியமான கட்டளை என்பதால், சபை விரோதியாகிய சாத்தான் இந்த நிகழ்ச்சிக்கு எதிராகப் பகை கொண்டான். கர்த்தருடைய பந்தி விஷயத்தில் அவன் விரிவான குழப்பத்தை உண்டாக்கினான். இந்த ஒரு விஷயத்தில் உள்ள அளவுக்குப் பிரிவினைகள், கருத்து வேறுபாடுகள் அனேகமாக வேறெந்த விஷயத்திலும் இல்லையோ என்னவோ" (ஓபிர், கர்த்தருடைய இராபோஜன இரகசியம், பக்கம் 50). இப்படிக் குழப்பத்தை உண்டாக்கும் கருத்து வேறுபாடுகளை இரட்டிப்பாக்குவதில் சாத்தானுக்கு உதவும் வகையில் ஓபிர் அவர்கள் அஜாக்கிரதையாகப் புத்தகங்கள் எழுதுவதை நிறுத்தினால் அவருக்கு நல்லது. அவர் வேண்டுமென்றே அப்படிச் செய்கிறார் என்று நான் குற்றஞ்சாட்டவில்லை; ஆனால், தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் அதன் விளைவு மட்டும் மாறாது என்று பணிவுடன் நினைப்பூட்டுகிறேன்.
இந்தப் புத்தகம் ஓபிர் அவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டதல்ல. இருப்பினும், திரவிய மாற்று வாதத்தை ஆதரிக்கும் வாதங்களை அவர் புத்தகத்தில் தயாராகச் சேகரிக்க முடிந்தது என்பதால், அந்தக் கருத்து வேதத்தின் முழுமையான போதனைக்கு எப்படி, ஏன் பொருந்தாது என்று காண்பிக்க அவருடைய வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொண்டேன். ஓபிர் அவர்களுக்கும், வாசகர் அனைவருக்கும், ஆசிரியருக்கும் கூட, தேவன் ஆயத்தப்படுத்தின வேதப் பாதையில் இணைந்து நடக்கும் பாக்கியத்தைக் கர்த்தர் அருளுவாராக. ஆமென்.
"நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவின் இரத்தத்தினுடைய ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவின் சரீரத்தினுடைய ஐக்கியமாயிருக்கிறதல்லவா?" (1 கொரிந்தியர் 10:16) என்று பவுல் தெளிவாகப் பிரகடனப்படுத்தினார் அல்லவா! அப்படியே, "கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்" (1 கொரிந்தியர் 11:29) என்றும் எச்சரித்தார். அப்படியானால் திருவிருந்து ஆராதனையில் எடுக்கும் பொருட்கள் கர்த்தருடைய சரீரமும் இரத்தமுமே என்று நம்பினால் என்ன தவறு? அப்படி நம்புவது மகா தவறு. ஆனால், தவறு பவுலுடையது அல்ல; பவுலின் வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொண்டவர்களுடையதே. நாம் ஆரம்பத்தில் சொன்னது போல, பவுலின் நிருபங்களைப் படிக்கும்போது, அதில் உள்ள சில காரியங்களைப் புரிந்துகொள்வது கடினமானதென்றும், கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் தங்கள் சொந்தக் கேடுக்கு ஏதுவாக அவற்றைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள் என்றும் பேதுரு செய்த எச்சரிக்கையை நினைவில் வைத்துக்கொள்வது அனைவருக்கும் நலம் (2 பேதுரு 3:15-17).
1) 1 கொரிந்தியர் 10:16-க்கு விளக்கம்
அ) சூழல்: இங்கே என்ன சூழல்? விசுவாசிகள் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா என்ற கேள்வியுடன் பவுல் இந்தச் சூழலில் கையாளுகிறார். 1 கொரிந்தியர் எட்டாம் அதிகாரத்தில் இந்த விவாதத்தைத் தொடங்கி, பத்தாம் அதிகாரத்தின் இறுதி வரை இந்த விஷயத்தையே பல்வேறு கோணங்களில் இருந்து வாதிடுகிறார். விக்கிரகங்களிலோ, விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளிலோ ஒன்றும் இல்லை என்ற அறிவும், ஜெபம் செய்து ஸ்தோத்திரம் செலுத்தி எதையும் சாப்பிடக்கூடிய சுதந்திரம் நமக்கு இருந்தாலும், பலவீனமான மனசாட்சி உடையவர்களுக்கு இடறல் உண்டாக்காமல் நமது சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பது கிறிஸ்தவ நற்பண்பு என்று பவுல் எட்டாம் அதிகாரத்தில் போதிக்கிறார். தானும் அப்படியே சுவிசேஷத்திற்குத் தடையாக இருக்காதபடி தனக்குள்ள கிறிஸ்தவ உரிமைகள் எத்தனையோ விட்டுக்கொடுத்த உதாரணங்களை ஒன்பதாம் அதிகாரத்தில் குறிப்பிட்டார். இப்போது பத்தாம் அதிகாரத்தில், விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைச் சாப்பிடும் உரிமை இருப்பதாக நினைப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னும் சில விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.
ஆ) கருத்து: விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவை பேய்களுக்குப் படைக்கப்படுகின்றன, எனவே அந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கும்படி பவுல் எச்சரித்து, கர்த்தருடைய பந்தியில் பங்குபெற்றவர்கள் கர்த்தரோடு எவ்விதமாக ஐக்கியப்படுகிறார்களோ (10:16,17), பலியிடப்பட்டவைகளைச் சாப்பிடுகிறவர்கள் பலிபீடத்தோடு எவ்விதமாக ஐக்கியப்படுகிறார்களோ (10:18), பேய்களுக்குப் படைக்கப்பட்டவைகளைச் சாப்பிடுகிறவர்கள், பேய்களோடு ஐக்கியப்படுகிறார்கள் என்று வாதிடுகிறார் (10:19,20). இங்கே குறிப்பிடப்பட்ட அனைத்தும் ஆவிக்குரிய கருத்தில் சொல்லப்பட்டன என்பதை நாம் கவனிக்கலாம். பலியிடப்பட்டவை பலிபீடமாக மாறுகின்றன, எனவே அவற்றைச் சாப்பிட்டவர்கள் பலிபீடத்தோடு ஐக்கியப்படுகிறார்கள் என்று அப்போஸ்தலர் சொல்கிறாரா? பேய்களுக்குப் படைக்கப்பட்டவை பேய்களாக மாறுகின்றன, எனவே அவற்றைச் சாப்பிடுபவர்கள் பேய்களோடு ஐக்கியப்படுகிறார்கள் என்பது அப்போஸ்தலரின் கருத்தா? அவ்வாறு நினைப்பது எவ்வளவு விசித்திரம்! அவற்றைச் சாப்பிடுவதன் மூலம் அவர்கள் ஆவிக்குரிய ரீதியில் யாருக்குச் சம்பந்தப்பட்டவர்களோ அல்லது, அப்போஸ்தலப் பரிபாஷையில் யாரோடு 'ஐக்கியப்பட்டவர்களோ' (பங்காளிகளோ) என்பது தெரியவருமே தவிர, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் பொருள் மாற்றம் எதுவும் நிகழாது. அதாவது, பலிபீடத்தில் படைக்கப்பட்ட பொருட்கள் பலிபீடமாக மாறுவதும், பேய்களுக்குப் படைக்கப்பட்ட பொருட்கள் பேய்களாக மாறுவதும் போன்ற எவையேனும் நடக்கும் என்பது அப்போஸ்தலரின் நோக்கம் அல்ல. அப்படியிருக்கும்போது, அதே சூழலில், அதே வரிசையில், அதே தொனியில் குறிப்பிடப்பட்ட கர்த்தருடைய இராபோஜனப் பொருட்கள் மட்டும் எழுத்தர்த்தமாக அவருடைய சரீரமும் இரத்தமுமாக மாறும் என்பது அப்போஸ்தலரின் நோக்கம் என்று சொல்வது சூழலுக்குப் பொருந்தாத சுய வியாக்கியானமே தவிர வேறில்லை. கர்த்தருடைய பந்தியில் உள்ளதைச் சாப்பிட்டு அவருடைய சரீரத்திலும் இரத்தத்திலும் ஐக்கியப்படுகிற நாம், பேய்களின் பந்தியில் உள்ளதைச் சாப்பிட்டு அந்தப் பேய்களோடும் ஐக்கியப்படுவது சரியல்ல என்பதே இங்கே பவுலின் செய்தி. இந்த இரண்டில், ஒன்று ஆவிக்குரியது, மற்றொன்று எழுத்தர்த்தமானது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஒன்றுக்கு இன்னொன்று உவமையாகச் சொல்லப்படவில்லை, மாறாக ஒன்றைச் செய்யாமல் இருப்பதற்குத் தர்க்கரீதியான காரணமாக மற்றொன்று சொல்லப்பட்டது. எனவே, எழுத்தர்த்த வாதிகள் இந்தப் பகுதியைத் திரித்து, திரவிய மாற்று வாதத்தை நியாயப்படுத்துவது அநியாயம், வேதத்திற்கு முரணானது.
இ) ஒரே அப்பம் ஒரே சரீரம்: 17-ம் வசனத்தில் அப்போஸ்தலர் "அந்த ஒரே அப்பத்தில் நாம் எல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாமும் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்" என்கிறார். விசுவாசிகள் எல்லோரும் தங்கள் தங்கள் உள்ளூர் சபைகளில் அப்பத்தைப் பிட்கிறபோது, அவர்கள் எல்லோரும் அந்த ஒரே அப்பத்தில் பங்குபெறுகிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒரு உள்ளூர் சபையில் உள்ள உறுப்பினர்கள் எல்லோரும் ஒரு சரீரம் ஆவார்கள் என்று இதற்கு அர்த்தமா? அப்படியானால், கொரிந்து உள்ளூர் சபையை நோக்கிக் கடிதம் எழுதும்போது, 'நீங்கள்' என்று சொல்லாமல் 'நாம்' என்று பவுல் தன்னையும் சேர்த்துக்கொள்வது ஏன்? அதாவது, இணைந்து அப்பம் பிட்ட காரணத்தினால், பவுல் எத்தனை சபைகளை நிறுவியிருந்தாரோ, அல்லது சந்தித்திருந்தாரோ, அத்தனை சபைகளோடும் அவர் ஒரே சரீரமாக இருக்கிறாரா? ஒவ்வொரு உள்ளூர் சபையும் ஒவ்வொரு சரீரமானால், எத்தனையோ சரீரங்களோடு பவுல் ஒரே சரீரமாக ஆக்கப்பட்டார் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டுமா? அது அப்படி இருக்கட்டும், எத்தனை உள்ளூர் சபைகள் உள்ளனவோ அத்தனை சரீரங்கள் கிறிஸ்துவுக்கு இருக்குமா? அகில உலக அளவிலே கிறிஸ்துவின் சரீரம் என்று அழைக்கப்படும் சபை எந்த 'ஒரே அப்பத்தைச்' சாப்பிட்டு 'ஒரே சரீரம்' ஆனது? எழுத்தர்த்த திரவிய மாற்று வாதத்தை விட்டுவிட்டு ஆவிக்குரிய கருத்தில் சிந்திக்கும்போது இந்தச் சிக்கல் உடனே அவிழ்ந்துவிடும். கர்த்தருடைய பந்தியில் பிட்கப்படும் அப்பங்கள் அனைத்தும், எல்லோருக்காகவும் பிட்கப்பட்ட இயேசு கிறிஸ்து என்னும் அந்த ஒரே அப்பத்தைக் குறிக்கின்றன. எனவே, எத்தனை உள்ளூர் சபைகள் இருந்தாலும், எத்தனை அப்பங்கள் பிட்கப்பட்டாலும், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் ஒரே சரீரமாவோம். இதை கிரகிக்காமல் உள்ளூர் சபை விஸ்தீரண வரம்பை ஒரே அப்பத்திற்குச் சமமான அளவைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்று ஏதேதோ விசித்திரமான போதனைகளை உருவாக்குவது வேத முதிர்ச்சி என்று சொல்லப்படாது என அத்தகைய போதனைகளைச் செய்யும் பண்டிதர்கள் உணர்ந்தால் நல்லது (ஓபிர், கர்த்தருடைய இராபோஜன இரகசியம், பக்கம் 77).
ஈ) முழுமையான வேத போதனை: ஒருவேளை இந்தக் கர்த்தருடைய இராபோஜனத்தில் பொருள் மாற்றம் நிகழ்கிறது என்று இங்கே பவுல் சொல்லியிருந்தால், நாம் ஏற்கெனவே வேத வெளிச்சத்தில் விவாதித்த சிக்கல்கள் அனைத்திற்கும் பவுலே காரணமாகியிருப்பார். ஆனால் பவுல் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதிய காரியங்கள் வேதத்தின் முழுமையான போதனைக்கு இசைவற்றதாக இருக்கச் சாத்தியமில்லை என்பதால், இந்த வேதப் பகுதி எழுத்தர்த்த வாதத்தை ஆதரிக்காது என்று சந்தேகமின்றிச் சொல்லலாம்.
2) 1 கொரிந்தியர் 11:29-க்கு விளக்கம்:
"கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்" (1 கொரிந்தியர் 11:29).
அ) ஓபிர் அவர்களின் வியாக்கியானம்: இந்த வசனத்திற்குள்ள உண்மையான கருத்தை அறிந்துகொள்வதற்கு முன்பு, திரவிய மாற்று வாதத்தை ஆதரிக்கும் ஓபிர் அவர்கள் இந்த வார்த்தைகளை எப்படி விவரித்தார் என்று கவனியுங்கள்: "அந்த வார்த்தைகளைக் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? கர்த்தருடைய அப்பத்தைப் புசிக்கும் விசுவாசிகள் சரியான விதத்தில் புசிக்காவிட்டால், அவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு உண்டாகுமெனச் சொல்லப்பட்டுள்ளது. சரியான விதத்தில் புசிப்பது என்றால் என்ன? கர்த்தருடைய சரீரம் என்று நிதானித்து புசிப்பதே பாத்திரமாகப் புசிப்பதாகும்" (ஓபிர், கர்த்தருடைய இராபோஜன இரகசியம், பக்கம் 5). "அப்படி உண்மையில் அது கிறிஸ்துவின் சரீரமே என்று புரிந்துகொள்ளாமல் கர்த்தருடைய பந்தியில் பங்குபெறுவது மிகவும் கொடிய தவறு. அந்தத் தவறு தேவனுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது" (பக்கம் 5). "கொரிந்து விசுவாசிகளில் சிலர் அப்படியே கர்த்தருடைய போஜனப் பொருளை கிறிஸ்துவின் சரீரம் என்று புரிந்துகொள்ளாமலேயே புசித்தார்கள். அதன் விளைவாக அவர்களுக்குத் தேவன் தண்டனை விதித்தார். நானாவிதமாகத் தேவன் அவர்களைத் தண்டித்தார்" (பக்கம் 6). "அவர்கள் தாங்கள் சாப்பிடுவது கர்த்தருடைய சொந்தச் சரீரம் என்று கிரகிக்கவில்லை. ஏதோ இது ஒரு சாதாரணமான மனிதக் கையாற் செய்யப்பட்ட அப்பம் என்று நினைத்தார்கள். இது வெறும் அடையாளம் மட்டுமே. இது உண்மையில் கர்த்தருடைய சரீரம் எப்படி ஆகும்? என்று நினைத்தார்கள். இது கர்த்தருடைய சரீரம் என்று அவர்கள் நினைக்கமுடியவில்லை. அந்தக் கொடிய குற்றத்திற்காகத் தேவன் அவர்களில் அநேகரைக் கொன்றுபோட்டார். எவ்வளவு பயங்கரமான விஷயமோ பாருங்கள். நாம் பிட்கிற அப்பம் சாட்சாத் கர்த்தருடைய சரீரம் என்று கிரகிக்காதிருப்பது மரணத்திற்கேதுவான குற்றம்" (பக்கம் 6).
ஆ) சூழல் சார்ந்த வியாக்கியானம்: ஓபிர் அவர்களின் வியாக்கியானத்தை அப்படி வைத்துவிட்டு, 1 கொரிந்தியர் 11-ம் அதிகாரத்தின் சூழலைப் பார்க்கும்போது, உண்மையில் பொருள் மாற்றம் நிகழ்ந்தது என்று கருதாமல் அடையாளம் என்று நம்பியதாலேயே கொரிந்து சபை மக்கள் அபாத்திரமாகப் பந்தியில் பங்குபெற்றார்கள் என்பதற்கு ஒரு ஆதாரம் கூட இல்லை. பந்தியின் முழுச் சூழலில் அவர்கள் செய்த தவறு எல்லாம் ஒன்றே. அது என்னவென்று புரிந்துகொள்வோம். "நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அது கர்த்தருடைய இராபோஜனத்தைப் பண்ணுவதற்கேற்றதாயிராதே. என்னத்தினாலெனில், போஜனம்பண்ணுகையில் ஒருவன் மற்றொருவனுக்கு முந்தித் தன் சொந்தப் போஜனத்தைச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான். புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன்" (1 கொரிந்தியர் 11:20-22).
கர்த்தர் நமக்காகப் பிட்கப்பட்ட சரீரத்தையும், சிந்தப்பட்ட இரத்தத்தையும் நினைவுகூர அனுசரிக்கும் பந்தியை, ஆதிச்சபை மக்கள் ஒரு அன்பு விருந்தின் (Love Feast) பகுதியாக நடத்திக்கொண்டிருந்தார்கள் என்று இந்தச் சூழலில் பார்க்கிறோம். ஆனால், கொரிந்தியர்கள் அந்த விருந்தின் பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தைப் புறக்கணித்து, மற்றவர்களுக்குப் போதுமா இல்லையா என்று பார்க்காமல், வீட்டில் உணவு இல்லாதது போலவே பெருந்தீனிக்கு ஆளானார்கள். பெயருக்குக் கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தத்தை நினைவுகூரும் விருந்து; செய்யும் காரியமோ, அந்தச் சரீரம் மற்றும் இரத்தத்தினால் ஒரே சரீரமாக ஆக்கப்பட்ட மற்றவர்கள் மீது எள்ளளவும் கரிசனை இல்லாத பெருந்தீனி. அப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் கர்த்தருடைய இராபோஜனத்தைச் சாதாரண உணவு நிலைக்குத் தாழ்த்தி, கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தத்தின் நினைவுகளை அவமானப்படுத்துகிறார்கள் என்றும், அது மிகுந்த தண்டனைக்குரியது என்றும் பவுல் சொல்கிறார். இது சூழலிலிருந்து எவரும் தெளிவாகப் பார்க்கக்கூடிய கருத்து.
இ) கர்த்தருடைய சரீரம் என்று நிதானிக்காதிருத்தல் (விவேகிக்காதிருத்தல்) என்பதன் அர்த்தம்: கர்த்தருடைய சரீரம் என்று நிதானிக்காமல் பந்தியில் உள்ளதைச் சாப்பிடுவது தண்டனைக்குரியது என்று 1 கொரிந்தியர் 11:27-29 இல் வாசிக்கிறோம். வீட்டில் பசி தீர்த்துக்கொள்ளச் சாப்பிடும் சாதாரண உணவைப் போலக் கர்த்தருடைய இராபோஜனத்தோடு நடந்துகொண்டு, கொரிந்தியர்கள் அந்த இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணரும் விவேகத்தை இழந்தார்கள். அந்த விவேகம் இல்லாத காரணத்தினால் அவர்களில் அநேகர் ஆக்கினைத்தீர்ப்புக்கு உள்ளானார்கள் என்று எச்சரித்து, ஆக்கினைத்தீர்ப்புக்குள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் பவுல் தெரிவிக்கிறார். "ஆதலால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணும்படி கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். நீங்கள் கூடிவருகிறது ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவாயிராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் தன் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போதுத் திட்டப்படுத்துவேன்" (1 கொரிந்தியர் 11:33-34).
மேற்கண்ட வசனங்களின்படி நடந்துகொண்டால், ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து தப்பிக்கக்கூடிய விவேகத்தை, அதாவது கர்த்தருடைய இராபோஜனத்திற்கும் சாதாரண போஜனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பகுத்தறியும் விவேகத்தை அவர்கள் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதே இங்கே பவுலின் வார்த்தைகளின் கருத்து. கவனியுங்கள், இங்கே, 'நீங்கள் கர்த்தருடைய இராபோஜனம் உவமை என்று நம்புவதை விட்டுவிட்டு, அந்தப் பொருட்கள் சாட்சாத் கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தம் என்று நம்புவதன் மூலம் கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தம் என்று நிதானித்து ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்' என்று பவுல் எச்சரிக்கவில்லை. மாறாக, போஜனம் பண்ணுவதற்குக் கூடிவந்தாலும் ஒருவருக்காக ஒருவர் காத்திருக்க வேண்டும் என்றும், பசி தீர்த்துக்கொள்ள வீட்டில் சாப்பிடும் உணவாக இந்த உணவைக் கருதக்கூடாது என்றும் எச்சரித்ததைப் பார்க்கிறோம்.
ஈ) ஒருவருக்காக ஒருவர் காத்திருக்காமல் சாப்பிட்டால் அது மரண தண்டனை பெறும் அளவுக்குப் பாவமாகுமா? ஒருவருக்காக ஒருவர் காத்திருக்காமல் சாப்பிட்டதனால் கர்த்தருடைய சரீரம் என்று அவர்கள் நிதானிக்கவில்லை என்றும், அதற்காக அவர்களில் அநேகர் வியாதிப்பட்டார்கள் என்றும், சிலர் மரித்தார்கள் என்றும் பவுல் கொரிந்தியர்களை எச்சரித்தார். மற்றவர்களுக்காகக் காத்திருக்காமல் சாப்பிட்டால் அது மரண தண்டனைக்குரிய குற்றமா? இந்தக் கேள்வி, கர்த்தருடைய இராபோஜனத்தின் பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் ஆணிவேரான கேள்வி.
கொரிந்து சபையினர் ஒருவருக்காக ஒருவர் காத்திருக்காமல் சாப்பிடுவதற்கு, அவர்களுக்குள் இருந்த வைராக்கியங்களே (பிரிவினைகளே) காரணம் என்று பவுல் தெளிவுபடுத்தினார் (18-ம் வசனம்). இந்தப் பிரிவினைகளின் காரணமாக அவர்கள் தேவனுடைய சபையைத் தள்ளி, ஏழைகளை அவமானப்படுத்தும் விதமாக இந்தப் பெருந்தீனிக்குப் பால்பட்டது தெரிகிறது (22-ம் வசனம்). கிறிஸ்துவின் சரீரமாக 1 கொரிந்தியர் 12:27-ல் பவுல் விவரித்த சபையை, கர்த்தருடைய சரீரமாக நிதானித்து (பகுத்தறிந்து) கௌரவிக்க இவ்விதமாக அவர்கள் தவறினார்கள். கர்த்தருடைய சரீரமாகிய சபையை அலட்சியம் செய்து, அவருடைய சரீரம் மற்றும் இரத்தத்தை நினைவுகூரும் பந்தியில் உள்ளதை உண்பவர்களுக்கும், குடிப்பவர்களுக்கும், அவருடைய சரீரத்தைக் குறித்த குறைந்தபட்ச விவேகமாவது உண்டு என்று எப்படிக் கருத முடியும்? அவர்களுக்கு அந்தப் பந்தியில் கையை நீட்டத் தகுதியில்லை என்பதே இங்கே பவுலின் வார்த்தைகளின் கருத்து என்று தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான், அவர்கள் கூடிவருவது நன்மைக்கல்ல தீமைக்கே ஏதுவாக இருக்கிறது என்று அவர்களைக் கடிந்துகொண்டு, இந்த நிலையில் கர்த்தருடைய இராபோஜனத்தை அனுசரிப்பது அவர்களுக்குச் சாத்தியமில்லை என்றும், அன்பினால் மட்டுமே அவருக்குச் சொந்தமானவர்கள் ஆவோம் என்று யோவான் 13:34-35 இல் தெரிவிக்கப்பட்ட விதியை மீறிச் சாப்பிடும் ஒவ்வொரு முறையும் அவர்கள் கர்த்தருடைய சரீரமாகிய சபையை நிராகரித்து அதை நிதானிக்காமலே சாப்பிடுகிறார்கள் என்பதால் அது மிகுந்த தண்டனைக்குரியது என்று பவுல் அவர்களை எச்சரிக்கிறார்.
மேலே விளக்கிய இந்தப் பாவத்தைச் செய்யாமல் சுயபரிசோதனை செய்துகொண்டு பந்தியில் உள்ளதைச் சாப்பிடவும் குடிக்கவும் வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் அபாத்திரமாகப் பந்தியில் கை வைத்தவர்கள் ஆவார்கள் என்றும் பவுல் அன்று செய்த எச்சரிக்கை, இன்று சபைக்கும் பொருந்தும் என்பதை நாம் மறந்துபோகக் கூடாது. வேறு எந்தப் பாவத்தைக் குறித்தும் தங்கள் மனசாட்சி குற்றஞ்சாட்ட இடம் கொடுக்காமல் ஜாக்கிரதையாக இருப்பவர்கள் கூட, சபையில் யார் மீதாவது பகை அல்லது வெறுப்பு கொண்டு பந்தியில் கை வைத்தாலும் அது அபாத்திரமாகப் பந்தியில் பங்குபெறுவதே ஆகும். அதுவே கர்த்தருடைய சரீரத்தை நிதானிக்காதிருத்தலுக்குச் சூழல் சார்ந்த விளக்கம். எனவே, சூழலில் இல்லாத புதிய விளக்கங்களைப் புகுத்தினால், அது இந்தப் பாவத்தின் விஷயத்தில் சபையின் கவனத்தைத் திசைதிருப்பி, அவர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய உண்மையான விஷயத்திலிருந்து வழிவிலக்குவது ஆகும் என்பதை இப்போதாவது உணர்வது திரவிய மாற்று வாதிகளுக்கு நல்லது. "பந்தியில் அபாத்திரமாகப் பங்குபெறும் ஆபத்தைக் குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாததால், அவர்கள் அந்தத் தவறைச் செய்தாலும் அதை உணரும் நிலையில் இல்லை" என்பது எவ்வளவு வருத்தமோ, எவ்வளவு ஆபத்தோ சிந்தியுங்கள்.
உ) கர்த்தருடைய இராபோஜனத்திற்குள்ள சிறப்பு: கர்த்தருடைய இராபோஜனத்திற்கும் சாதாரண போஜனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பகுத்தறியாமல் பந்தியில் கை வைப்பதே கொரிந்தியர்கள் செய்த பாவம் என்று சொன்னோம் அல்லவா; உண்மையில் என்ன இந்தக் கர்த்தருடைய இராபோஜனத்திற்குள்ள சிறப்பு? அதைச் சாதாரண போஜனத்திலிருந்து வேறுபடுத்தியது எது? அதிலுள்ள பொருட்கள் கர்த்தருடைய சரீரமும் இரத்தமுமாக மாறுவதா? 'கர்த்தருடைய சரீரம் என்று நிதானிக்காமல்' என்றால் அதுதானே கருத்து? மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் சிந்திக்கும்போது அப்படி நினைப்பது சாத்தியப்படாது என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். வேறென்ன இந்த வார்த்தைகளின் கருத்து?
கர்த்தருடைய இராபோஜனத்தை அறிமுகப்படுத்தி, "என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்" என்று கர்த்தர் கட்டளையிட்டார். அதற்கப்பால், 'என் பலியைத் திரும்பச் செய்வதற்கு (மீண்டும் நிகழ்த்துவதற்கு) நீங்கள் இதைச் செய்யுங்கள்' என்று எப்போழுதும் எங்கும் சொல்லவில்லை. எனவே, பந்தியில் உள்ள அந்தப் பொருட்கள், நமக்காகப் பிட்கப்பட்ட கர்த்தருடைய சரீரத்தை, சிந்திய இரத்தத்தை நினைவுக்குக் கொண்டுவரும் ஞாபகார்த்தச் சின்னங்கள் (Remembrances) மட்டுமே தவிர, அசல் சரீரமும் இரத்தமும் அல்ல. இருப்பினும், அப்படிக் கர்த்தரை நினைவுகூரத் தவறி, அந்தப் புனிதமான ஆச்சாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், அவர்கள் அகௌரவப்படுத்துவது அந்தப் பொருட்களை அல்ல, அவை அடையாளப்படுத்தும் கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தத்தையே என்று இங்கே பவுலின் கருத்து. கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் அவர்கள் ஈடுபட்ட பெருந்தீனி மற்றும் சபையின் மீது கொண்டிருந்த அன்பில்லாமை தண்டனைக்குரியது என்றும், அப்படி நம்மை மீட்டுக்கொண்ட கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தத்தைக்கூட மறந்து பாவம் செய்ய வேண்டாம் என்றும் இங்கே பவுலின் எச்சரிக்கையின் பின்னால் உள்ள கருத்து. அதுவல்லாமல், முழுமையான வேத போதனையைத் தகர்க்கும் விதமாக பவுல் இங்கே திரவிய மாற்று வாதத்தை எள்ளளவும் ஆதரிக்கவில்லை.
எனவே கொரிந்து சபை எதிர்கொண்டது, எழுத்தர்த்த வாதமா அல்லது அடையாள வாதமா என்ற பிரச்சனை இல்லவே இல்லை என்றும், அவர்கள் கர்த்தருடைய சரீரத்தை நிதானிக்காததற்கும், தற்போதைய சர்ச்சைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் சூழலைப் பாரபட்சமின்றி வாசிக்கும் எவரும் உடனே அறிந்துகொள்வார்கள்.
பந்தியில் பங்குபெறுவதன் மூலம், யோவான் ஆறாம் அதிகாரத்தில் கர்த்தர் போதித்த விதமாக அவருடைய சரீரம் மற்றும் இரத்தத்தைப் புசித்து, நித்திய ஜீவனைப் பெறுவதற்கு கர்த்தர் அங்கே குறிப்பிட்ட நிபந்தனையை நிறைவேற்றுகிறார்கள் என்று எழுத்தர்த்த வாதிகள் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் யோவான் ஆறாம் அதிகாரத்தில் கர்த்தர் சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன? அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். ஏனென்றால், திரவிய மாற்று வாதிகள் பொதுவாகத் தவறாகப் புரிந்துகொள்வது இந்த வார்த்தைகளைத் தான். உதாரணமாக, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்:
"அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய சரீரத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் சரீரம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலேயும் நான் அவனிலேயும் நிலைத்திருக்கிறோம்" (யோவான் 6:53-56).
கண்டிப்பாகத் தனது சரீரம் மற்றும் இரத்தத்தைச் சாப்பிட வேண்டும் என்றே சொல்வது போலத் தோன்றுகிறது அல்லவா? ஆனால், அந்த அதிகாரம் முழுவதையும் சூழலின் பின்னணியில் ஆய்வு செய்யும்போது, இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் கர்த்தர் நோக்கிய உண்மையான கருத்தை அறிவது எளிது.
1) இந்த உரையாடல் எங்கே தொடங்கியது?
ஐயாயிரம் பேருக்கு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு திருப்தியாக விருந்து செய்வித்த அற்புதத்தோடு யோவான் ஆறாம் அதிகாரம் தொடங்குகிறது. இன்னொரு முறை இலவச உணவு கிடைக்குமென்று அவர்கள் எல்லோரும் மறுநாளும் வந்து அமர்ந்தார்கள். அப்போது, "இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அடையாளங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்" (யோவான் 6:26-27). இந்தப் பின்னணியில் அவர் தன்னை உணவோடு ஒப்பிட்டுக்கொண்டு, தனது வழக்கத்தின்படி ஆவிக்குரிய காரியங்களை பௌதிக (சரீரப்பிரகாரமான) உவமையோடு அவர்களுக்குப் போதிக்கலானார்.
2) விசுவாசமே உண்மையான விஷயம்
இயேசு நித்திய ஜீவனைத் தருவேன் என்று அவர்களிடத்தில் சொன்னபோது (வசனம் 27), அவர்கள் செய்யவேண்டிய தேவனுக்கு ஏற்ற கிரியை என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள். அதற்கு "இயேசு: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கு ஏற்ற கிரியையாயிருக்கிறது என்று அவர்களுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னார்" (யோவான் 6:29). இங்கே கர்த்தர் சாப்பிடுவதைக் குறித்து எதுவும் சொல்லவில்லை, வெறும் விசுவாசத்தைக் குறித்து மட்டுமே குறிப்பிட்டார் என்பதைக் கவனியுங்கள்.
3) உவமையைத் தெளிவுபடுத்திய கர்த்தருடைய வார்த்தைகள்
அதன் பிறகு அவர்கள், மோசே தங்கள் பிதாக்களுக்கு மன்னா பொழியச் செய்து போஷித்த விஷயத்தை எழுப்பினார்கள். அதற்கு அவர், பரலோகத்திலிருந்து இறங்கிவந்த மெய்யான அப்பம் தானே என்று அவர்களுக்குப் பதிலளித்தார் (வசனம் 32-33). ஆனால் ஒரு ஆவிக்குரிய காரியத்தை வெளிப்படுத்த ஒரு பௌதிக உவமையை அவர் பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ளாமல், தங்களுக்கு அந்த அப்பம் வேண்டுமென்று யூதர்கள் கேட்கலானார்கள். அப்போது கர்த்தர், தனது வார்த்தைகளின் கருத்தை அவர்களுக்குத் தெளிவுபடுத்தி இவ்வாறு கூறினார்: "நானே ஜீவ அப்பம்; என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்" (யோவான் 6:35). இங்கே கர்த்தர் பௌதிக உணவைக் குறித்துப் பேசவில்லை என்பது தெளிவாகிறது. ஏனென்றால், பௌதிக உணவைச் சாப்பிடுகிறவர்களுக்கு மீண்டும் மீண்டும் பசி எடுக்கும். தான் ஆவிக்குரிய உணவு என்றும், விசுவாசத்தோடு தன்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு ஆவிக்குரிய பசி நிரந்தரமாகத் தீர்ந்துபோகும் என்றும் இங்கே கர்த்தருடைய நோக்கம். கவனியுங்கள்: பசி தீரவேண்டுமென்றால் சாப்பிட வேண்டும், தாகம் தீரவேண்டுமென்றால் குடிக்க வேண்டும் அல்லவா? ஆனால் தன்னிடத்தில் வந்தால் பசி தீரும் என்றும், தன்னை விசுவாசித்தால் தாகமடையார்கள் என்றும் கர்த்தர் ஏன் சொன்னார்? தன்னைச் சாப்பிடுவது என்றால் தன்னிடத்தில் வருவதே; தன்னைக் குடிப்பது என்றால் தன்மீது விசுவாசம் வைப்பதே என்ற விளக்கம், கர்த்தரே சுயமாகக் கொடுத்த இந்த விளக்கத்தில் தெளிவாகக் காணப்படுகிறது.
4) பசி, உணவு
இப்படிப் பசியையும், உணவையும் உவமைகளாகப் பயன்படுத்துவது, கர்த்தர் பிரசங்கித்த மற்ற செய்திகளிலும் நமக்குக் காணப்படுகின்றன. உதாரணமாக, "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்" (மத்தேயு 5:6). ஜீவ அப்பமாகிய கர்த்தருக்குள் நம்முடைய ஆவிக்குரிய பசிதாகங்கள் தீரும். அப்பமும் திராட்சை ரசமும் அந்தப் பசிதாகங்களைத் தீர்க்காது. பௌதிக உணவு பௌதிகப் பசிதாகங்களைத் தீர்க்கும்; ஆவிக்குரிய உணவு ஆவிக்குரிய பசிதாகங்களைத் தீர்க்கும்.
அப்படியே, "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவக்காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்" என்று யோவான் 4:14-ல் பார்க்கிறோம். இதுவும் சரீர தாகத்தைக் குறித்தோ மற்றும் அதைத் தீர்க்கும் தண்ணீரைக் குறித்தோ உள்ள குறிப்பு அல்ல என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை. அவர் கொடுக்கும் ஜீவ தண்ணீர் பரிசுத்த ஆவியானவர் என்று யோவான் 7:37-39 இல் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதற்காகப் பரிசுத்த ஆவியானவர் எழுத்தர்த்தமாகத் தண்ணீரைப் போல இருப்பார் என்றோ அல்லது அவரைப் பெற்றவர்களுக்குள் தண்ணீராக ஜீரணமாவார் என்றோ கருதினால் அது வேதத்திற்கு எவ்வளவு முரணானது! கர்த்தருடைய இராபோஜனத்தை எழுத்தர்த்தமாகக் கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தம் என்று நினைப்பவர்கள் செய்யும் தவறும் சரியாக இப்படிப்பட்டதே.
5) எத்தனை முறை தெளிவுபடுத்தினாலும் தவறான புரிதலே மிஞ்சியது
தன்னை விசுவாசிக்க வேண்டும் என்பதே தனது வார்த்தைகளின் கருத்து என்று கர்த்தர் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு நினைப்பூட்டினார். "நீங்கள் என்னைக் கண்டும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்" (யோவான் 6:36). "குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது" (யோவான் 6:40). நான்கு முறை இதே சத்தியத்தை வலியுறுத்திக் கூறினாலும், அவிசுவாசிகளான அந்த யூதர்களுக்குப் புரியவில்லை. அவரே சாப்பிடச் சொல்கிறார் என்று, அது எப்படிச் சாத்தியம் என்று பெரிய அமளியே செய்தார்கள் (யோவான் 6:42-43). ஆனாலும், அப்பம் பூமியிலிருந்து விளையும் தானியத்திலிருந்து வருகிறதே தவிர, பரலோகத்திலிருந்து வராது அல்லவா? தன்னைத் தான் பரலோகத்திலிருந்து வந்த அப்பமாக அழைக்கிறார், எனவே இது உவமையாகவே இருக்கும் என்று சிந்திக்கும் குறைந்தபட்ச அறிவுக்குக் கூட அவர்கள் வேலை கொடுக்கவில்லை. ஒருவேளை மன்னாவைப் போல பரலோகத்திலிருந்து அருளப்பட்டாலும், அப்பம் ஒரு உயிருள்ள நபராக இருக்காது அல்லவா? எனவே இது அலங்காரமாகவே இருக்க வேண்டும் என்று கூடக் குறைந்தபட்சம் சிந்திக்கவில்லை. அடிக்கடி உவமை ரீதியாகப் போதிக்கிறவர் என்பதால் இதுவும் அப்படியே இருக்கலாம் அல்லவா என்ற எண்ணம் கூட அவர்களுக்கு வரவில்லை.
"என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஜீவ அப்பம் நானே" (யோவான் 6:47-48). தன்னிடத்தில் வந்தவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்றும், அந்த ஜீவனைக் கொடுக்கும் அப்பம் தானே என்றும் இங்கே கர்த்தர் மீண்டும் ஒருமுறை இந்த உவமைக் கருத்தை விளக்கிக் கூறினார். இங்கே அப்பம் மற்றும் திராட்சை ரசத்தைக் குறித்துக் காட்டும்போதோ, சாப்பிடுவதைக் குறித்தோ ஏதுமில்லை. பௌதிக ஜீவனுக்கு அப்பத்திற்கும் உள்ள உறவே, நித்திய ஜீவனுக்குத் தனக்கும் உள்ளது என்று மட்டுமே இந்த உவமைக் கருத்து.
"உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். இதைப் புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி பரலோகத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே" (யோவான் 6:49-50). இங்கே கர்த்தர் அவர்களுக்குப் பௌதிக உணவுக்கும் ஆவிக்குரிய உணவுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பித்து, மன்னா என்ற பௌதிக உணவைச் சாப்பிட்டவர்கள் மரித்தார்கள், ஆனால் ஆவிக்குரிய உணவான தன்னைச் சாப்பிட்டவர்கள் மரிக்கமாட்டார்கள் என்று இன்னும் விவரமாகச் சொன்னார். அப்படியே, பந்தியில் உள்ள அப்பம் மற்றும் திராட்சை ரசத்தைச் சாப்பிட்ட மாத்திரத்தில் யாரும் நித்தியமாக உயிர்வாழ மாட்டார்கள், ஆனால் கர்த்தரை விசுவாசித்தவர்களே நித்தியமாக வாழ்வார்கள்.
இவ்வளவு தெளிவாகச் சொன்னாலும், தங்களுக்கு ஆவிக்குரிய கருத்துக்களைப் பகுத்தறியும் திறன் துளியும் இல்லை என்று நிரூபிக்கும் வகையில், "யூதர்கள்: இவன் தன்னுடைய சரீரத்தை நமக்கு எப்படிப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம் பண்ணினார்கள்" (யோவான் 6:52). அவர் நித்திய ஜீவனுக்குத் தேவையான ஆவிக்குரிய அப்பம் என்பதே அவருடைய கருத்து என்று துளியும் கிரகிக்காமல், இன்னும் தங்கள் வயிறு பற்றியே சிந்திக்கிறார்கள். 'நீ மறுபடியும் பிறக்க வேண்டும்' என்று கர்த்தர் சொன்னபோது, மறுபடியும் தாயின் கர்ப்பத்திற்குள் பிரவேசித்துப் பிறப்பது எப்படிச் சாத்தியமாகும் என்று நிக்கொதேமுவுக்கு ஏற்பட்ட தவறான புரிதல் போன்றதே இங்கேயும் நிகழ்ந்தது (யோவான் 3:3-8). சரீரத்திற்குச் சரீரப் பிரகாரமான பிறப்பு, ஆவிக்கு ஆவிக்குரிய பிறப்பு. அப்படியே, சரீரத்திற்குப் பௌதிகமான உணவு, ஆவிக்குக் கிறிஸ்து என்னும் நித்திய ஜீவ அப்பம்.
6) யோவான் ஆறாம் அதிகாரத்தைக் கர்த்தருடைய இராபோஜனமாகப் பாவித்தால் எழும் பிரச்சனைகள்
அ) யோவான் ஆறாம் அதிகாரத்தின் சூழல் கர்த்தருடைய இராபோஜனத்தைக் குறித்ததே அல்ல என்றும், அப்பத்திற்காக அலைந்து கர்த்தரைத் தேடி வந்தவர்களுக்குத் தேவையான உண்மையான அப்பம் என்னவென்று விளக்கும் சூழல் மட்டுமே என்றும், அந்த அதிகாரத்தை யாராவது ஆராய்ந்தால் மறுக்கமுடியாதபடி உறுதிப்படுத்திக்கொள்ளலாம். தன்னையே புசித்து, குடிக்க வேண்டும் என்ற வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொண்டவர்களுக்கு விளக்கம் அளிக்கும்போது, இயேசு ஒரு அப்பத்தை எடுத்து அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்து, "இதோ என் சரீரம், இதைப் புசிக்கிறவர்கள் என் சரீரத்தில் பங்குபெறுவார்கள்" என்று சொல்லவில்லை. அப்படியென்று, ஓபிர் அவர்கள் நினைத்தது போல "பதில் கேட்பதற்கு அவர்கள் தகுதியற்றவர்கள்" என்பதால் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை என்று நினைப்பதும் சரியாகாது (ஓபிர், கர்த்தருடைய இராபோஜன இரகசியம், பக்கம் 8). சொல்லப்பட்ட பதில் நம் சிந்தனைக்கு ஏற்றதாக இல்லாத காரணத்தினால் பதில் சொல்லவில்லை என்று உண்மைகளிலிருந்து திசை திருப்புவது நேர்மை என்று சொல்லப்படாது. தனது சரீரத்தையும் இரத்தத்தையும் புசித்து, குடிப்பதென்றால் தன்னிடத்தில் வந்து தன்மீது விசுவாசம் வைப்பது என்று தவிர வேறு எந்த விளக்கமும் கர்த்தர் அந்தச் சந்தர்ப்பத்தில் கொடுத்ததாக நாம் பார்க்கவில்லை. சபையோடு அவர் பிறகு ஏற்படுத்திய கர்த்தருடைய இராபோஜன சந்தர்ப்பத்தைக் கொண்டுவந்து, யூதர்களோடு மட்டுமே நிகழ்ந்த இந்த உரையாடலுக்கு இணைப்பது முற்றிலும் பொருத்தமற்ற வியாக்கியானமே ஆகும்.
ஆ) "நீங்கள் மனுஷகுமாரனுடைய சரீரத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை" (யோவான் 6:53) என்று கர்த்தர் சொன்ன வார்த்தைகளை எழுத்தர்த்தமாக எடுத்துக்கொண்டால், தன்னோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளனுக்கு நித்திய ஜீவனை எப்படி வாக்குத்தத்தம் செய்ய முடியும்? (லூக்கா 23:43). அந்தக் கள்ளன் கர்த்தருடைய இராபோஜனத்தின் மூலம் அவருடைய சரீரத்தைப் புசித்து அவருடைய இரத்தத்தைக் குடித்து அந்த நித்திய ஜீவனைச் சம்பாதித்துக்கொண்டானா? இல்லை என்று நமக்குத் தெரியும். ஆனாலும், கர்த்தருடைய சரீரத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைக் குடித்தால் ஒழிய நித்திய ஜீவன் இல்லை என்று அவர் யூதர்களிடம் சொன்னார் அல்லவா? கர்த்தர் யூதர்களிடம் பொய் சொன்னாரா? அல்லது இந்தக் கள்ளனுக்கே போலியான உத்திரவாதம் அளிக்கிறாரா? யோவான் 6:53-56 ஐ எழுத்தர்த்தமாக எடுத்துக்கொள்வது இவ்விதமாகக் கர்த்தரைப் பொய்யராக்குவது போலவே ஆகும். இது கர்த்தருடைய இராபோஜனத்தைக் குறித்த குறிப்பு என்று நம்புபவர்கள் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க முடியாது. ஆனால், அவரை விசுவாசிப்பதே அவரைப் புசிப்பது என்று யோவான் ஆறாம் அதிகாரத்தின் முழுச் சூழலும் நமக்குத் தெளிவுபடுத்துகிறபடியால், இந்தக் கருத்தில் அந்தக் கள்ளன் தனக்காகப் பிட்கப்பட்ட கர்த்தருடைய சரீரத்தைப் புசித்து, தனக்காகச் சிந்தப்பட்ட கர்த்தருடைய இரத்தத்தைக் குடித்தான். அவன் இயேசுவை விசுவாசித்தான். எனவே அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. இந்த விளக்கம் மட்டுமே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு.
சிலுவையிலுள்ள கள்ளன் நிகழ்வு சபை ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பு நடந்தது அல்லவா என்று யாராவது பதிலளித்தால், யோவான் 3:16-ல் நித்திய ஜீவன் எப்படிக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்ட வாக்குத்தத்தம், சபை ஸ்தாபிக்கப்பட்ட பிறகு ரத்து செய்யப்படவில்லை, சிறிதளவும் திருத்தப்படவில்லை என்று அவர்களுக்கு நினைப்பூட்டுகிறேன். கர்த்தரைப் புசித்து, குடியாதவனுக்கு நித்திய ஜீவன் இல்லை (யோவான் 6:53-56). ஆனால் அவரை விசுவாசித்தவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவான் (யோவான் 3:16). ஏனென்றால், கர்த்தரைப் புசித்து, குடிப்பதென்றால் அவரை விசுவாசிப்பதே.
இ) ஒருபுறம் இரட்சிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால் மட்டுமே அப்பம் கர்த்தருடைய சரீரமாக மாறும் என்று போதித்துக்கொண்டு, மறுபுறம் நித்திய ஜீவனைப் பெறுவது நமக்குக் கர்த்தருடைய இராபோஜனத்தினால் கிடைக்கும் முதல் பயன் என்றும் ஓபிர் அவர்கள் எழுதினார் (ஓபிர், கர்த்தருடைய இராபோஜன இரகசியம், பக்கம் 12, 39). இரட்சிக்கப்பட்டவர்களுக்கு நித்திய ஜீவன் இல்லையா? இருந்தால், கர்த்தருடைய இராபோஜன சடங்கினால் வரும் நித்திய ஜீவன் என்ன? அதாவது, நித்திய ஜீவன் இல்லாத இரட்சிப்பும் இருக்குமா? பைபிள் அப்படி எதையும் போதிக்கவில்லை. ஒருவேளை நித்திய ஜீவனைக் கொடுக்கும் வல்லமை ஏதேனும் அந்தச் சடங்கில் இருந்தால், அதை இரட்சிப்புப் பெறாதவர்களுக்கு வழங்க வேண்டும் அல்லவா! ஆனால் வேதம் அதற்கு ஒப்புக்கொள்ளாது. இரட்சிப்புப் பெற்று, அதாவது விசுவாசத்தின் மூலம் நித்திய ஜீவனை அடைந்தவர்களே கர்த்தருடைய பந்தியில் கையை நீட்ட வேண்டும். எனவே, கர்த்தருடைய இராபோஜனம் நித்திய ஜீவனைக் கொடுக்கும் கர்த்தருடைய சரீரத்திலும் இரத்தத்திலும் பங்காளிகளாக ஆக்குவதற்கு உருவாக்கப்பட்ட ஏற்பாடு எள்ளளவும் அல்ல.
7) தெளிவான முடிவு
யோவான் ஆறாம் அதிகாரத்தில் தனது செய்தியை முடிக்கும்போது, தனது இந்த வார்த்தைகளை ஆவிக்குரிய கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது சரீரப் பிரகாரமான கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ற கேள்விக்கு, யாருக்கும் இனி எந்தச் சந்தேகத்திற்கும் இடமளிக்காத அளவு தெளிவான விளக்கத்தைக் கர்த்தரே சுயமாகக் கொடுத்தார். "ஆவியே உயிர்ப்பிக்கிறது, சரீரமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது" (யோவான் 6:63). சரீரப் பிரகாரமாகப் புசித்து, குடிப்பதினால் யாருக்கும் எந்த ஆவிக்குரிய நன்மையும் வராது. ஆவிக்குரிய விதமாகக் கர்த்தரை அணுகி அவரை விசுவாசிப்பதே நித்திய ஜீவனுக்கு ஒரே வழி. உவமைகளையும், ஆவிக்குரிய காரியங்களையும் புரிந்துகொள்ள முடியாத யூதர்களைப் போல, பிடிவாதமாக, முட்டாள்தனமாக, அர்த்தமற்ற சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கர்த்தருடைய பந்தியில் உள்ள பொருட்களை எழுத்தர்த்தமாக எடுத்துக்கொண்டால், விடை தெரியாத பல கேள்விகளுக்கும், வேதத்திற்கு முரணான பல சிந்தனைகளுக்கும், புதிய தவறான உபதேசங்களுக்கும் இடமளித்தது போலாகும். அவை என்னவென்று சுருக்கமாகக் கவனியுங்கள்:
விசுவாசிகளின் ஐக்கியத்திற்கு கருவியாக இருக்கவேண்டிய திருவிருந்து ஆராதனை (கர்த்தருடைய பந்தி), விசுவாசிகளுக்குள் பிளவை உண்டாக்கும் காரணியாக மாறியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. அந்த கர்த்தருடைய பந்தியிலுள்ள பொருட்கள் (அப்பம் மற்றும் திராட்சை ரசம்) எழுத்தர்த்தமாக இயேசுவின் சரீரமாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன என்றும், அதில் பங்குபெறுபவர்கள் வெறும் அப்பத்தையும் திராட்சை ரசத்தையுமல்ல, நேரடியாக கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையுமே புசிக்கிறார்கள் என்றும் சிலர் கருதுகிறார்கள்.
"இது என்னுடைய சரீரம், இது என்னுடைய இரத்தம்" (மத்தேயு 26:26-28, மாற்கு 14:22-24, லூக்கா 22:19-20, (1கொரிந்தியர் 11:23-26) என்று அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் குறித்து இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளின் நேரடிப் பொருளை (எழுத்தர்த்தத்தை) இவர்கள் தங்கள் கருத்திற்கு ஆதாரமாக கொள்கிறார்கள். "நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவின் இரத்தத்தினுடைய ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவின் சரீரத்தினுடைய ஐக்கியமாயிருக்கிறதல்லவா?" (1கொரிந்தியர் 10:16) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறிய வார்த்தைகளையும் எழுத்தர்த்தமாகவே எடுத்துக்கொண்டு, தங்கள் சிந்தனையை மேலும் உறுதிபடுத்த முயற்சிக்கிறார்கள். எளிதாக குறிப்பிடுவதற்கு வசதியாக, இந்தக் கோட்பாட்டை நமது விவாதத்தில் 'எழுத்தர்த்த வாதம்' என்று அழைப்போம். ரோமன் கத்தோலிக்க சபையோடு, இன்று சில புராட்டஸ்டன்ட் சபைகளும் இந்த எழுத்தர்த்தக் கருத்தையே சத்தியம் என்று நம்புகின்றன.
இருப்பினும், மேற்கண்ட கருத்தை எதிர்ப்பவர்கள், கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தத்திற்கு அந்த அப்பமும் திராட்சை ரசமும் அடையாளங்களே என்றும், "இது என் சரீரம்", "இது என் இரத்தம்" என்ற கர்த்தருடைய வார்த்தைகள் வெறும் உவமையாக (அலங்காரமாக) சொல்லப்பட்டவை என்றும், அப்போஸ்தலரும் அதே உவமையையே வலியுறுத்தினார் என்றும் வாதிடுகிறார்கள். எளிதாக குறிப்பிடுவதற்கு வசதியாக, இந்தக் கோட்பாட்டை நமது விவாதத்தில் 'அலங்கார வாதம்' அல்லது 'அடையாள வாதம்' என்று அழைப்போம். பெரும்பான்மையான புராட்டஸ்டன்ட் சபைகள் இந்த அடையாளக் கொள்கையையே கொண்டுள்ளன.
"இந்த சர்ச்சை எல்லாம் எதற்கு? திருவிருந்தின் மூலம் கர்த்தரை நினைவுகூர்ந்தோமா இல்லையா என்பதுதானே முக்கியம்? அப்பம் மற்றும் திராட்சை ரசம் அவருடைய சரீரம் மற்றும் இரத்தம் என்று சொல்வதை எழுத்தர்த்தமாக நம்பினாலும், அல்லது உவமையாக நம்பினாலும் பிரச்சனை என்ன?" என்று சமரசம் செய்துகொள்பவர்களும் சிலர் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்தப் பிரச்சனை எவ்வளவு சிக்கலானது என்பதை ஒருவேளை சிந்திக்காமல் இருக்கலாம். இந்த ஆய்வு ஏன் அவசியம் என்பதைத் தெரிவிக்கும் சில முக்கிய கோணங்களை இங்கே முன்வைக்கிறேன்:
1) நித்திய ஜீவனைப் பெறும் வழிமுறையைத் தவறாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு இந்த சர்ச்சையைத் தீர்ப்பது அவசியம்.
கர்த்தருடைய சரீரத்தைப் புசித்து அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவர்களுக்கு மட்டுமே நித்திய ஜீவன் உண்டு என்று வேதம் போதிக்கிறது (யோவான் 6:53-56). இது பந்தியில் பங்குபெறுவதன் மூலமே நடக்கிறது என்று எழுத்தர்த்த வாதிகள் நம்புகிறார்கள். உதாரணமாக, நவீன புராட்டஸ்டன்ட் & சுயதீனா சபைகளில் எழுத்தர்த்த போதனையைப் புகுத்தியவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: "இயேசுவில் பங்கு பெறுவது என்றால் அவருடைய சரீரத்திலும், இரத்தத்திலும் பங்கு பெறுவதே. இயேசுவின் சரீரத்திலும் இரத்தத்திலும் பங்கு பெறுவது என்றால் கர்த்தருடைய இராபோஜன பொருட்களைப் புசித்து பானம் பண்ணுவதே" இதுவே உண்மையானால், இந்த அடையாள வாதிகள், இயேசுவின் சரீரத்திலும் இரத்தத்திலும் பங்கு பெறச் செய்யும் ஒரே வழிமுறையை நிராகரிக்கிறார்கள். அதை வெறும் அடையாளமாகத் தாழ்த்தி, தெரிந்தோ தெரியாமலோ பந்தியை அவர்கள் அவமதிக்கிறார்கள்.
ஆனால் ஒருவேளை அடையாள வாதமே உண்மையானால், கர்த்தருடைய இராபோஜனத்தில் பங்குபெறுவதே அவருடைய சரீரத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைக் குடிப்பதாகும் என்று நம்புபவர்கள் அவர்கள் பெரிய தவறையே செய்கிறார்கள். நித்திய ஜீவனைப் பெறக்கூடிய ஒரே வழியை அவர்கள் முற்றிலுமாகத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். எனவே, கர்த்தருடைய இராபோஜனத்தைக் குறித்து இந்த இரண்டு கருத்துக்களில் எது வேதத்திற்கு இசைவானது என்று தீர்மானிப்பது முக்கியமற்ற விஷயம் என்று எண்ணுவது மிகவும் ஆபத்தானது.
2) பந்தியில் பாத்திரவான்களாக (தகுதியோடு) பங்குபெறுகிறோமா இல்லையா என்பதை உறுதிப்படுத்த இந்த சர்ச்சையைத் தீர்ப்பது அவசியம்.
"என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்" (1கொரிந்தியர் 11:29). அபாத்திரமாக (தகுதியற்ற விதத்தில்) பந்தியில் பங்குபெறுவது என்றால் என்ன? எழுத்தர்த்த வாதத்தை ஆதரித்து சிலர் 1கொரிந்தியர் 11:29-ம் வசனத்தை இவ்வாறு வியாக்கியானம் செய்கிறார்கள்: "அந்த வார்த்தைகளைக் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? கர்த்தருடைய அப்பத்தைப் புசிக்கும் விசுவாசிகள் சரியான விதத்தில் புசிக்காவிட்டால், அவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு உண்டாகுமெனச் சொல்லப்பட்டுள்ளது. சரியான விதத்தில் புசிப்பது என்றால் என்ன? கர்த்தருடைய சரீரம் என்று நிதானித்து (விவேகித்து) புசிப்பதே பாத்திரமாகப் புசிப்பதாகும்" அதுவே உண்மையானால், அடையாள வாதிகள் பந்தியில் பங்குபெறும் ஒவ்வொரு முறையும் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்கிறார்கள்! அவைகள் அடையாளங்கள் மட்டுமே என்று நம்பி, அபாத்திரமாக, ஆக்கினைத்தீர்ப்பை வருவித்துக்கொள்ளும்படியே அவர்கள் பந்தியில் பங்குபெறுகிறார்கள்.
ஆனால், அடையாள வாதமே உண்மையானால், பாத்திரமாகப் பந்தியில் பங்குபெறுவது என்று பவுல் சொன்ன நோக்கத்தையே திரவிய மாற்று வாதிகள் முற்றிலுமாகத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். பந்தியில் அபாத்திரமாகப் பங்குபெறும் ஆபத்தைக் குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாததால், அவர்கள் அந்தத் தவறைச் செய்தாலும் அதை உணரும் நிலையில் இல்லை. பாத்திரமாகப் பந்தியில் பங்குபெறுகிறோமா இல்லையா என்பதை அறிந்துகொள்ளும் பொறுப்புள்ளவர்களுக்கு இந்த சர்ச்சை தீர்க்கப்படுவது அவசியம்.
3) வேத போதனையைத் தவறாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு இந்த சர்ச்சையைத் தீர்ப்பது அவசியம்.
தேவனுடைய வார்த்தையில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட போதனைகள் இருக்காது. இரண்டு முரண்பட்ட போதனைகள் எழும்போது, அவற்றில் ஏதேனும் ஒன்று மட்டுமே சத்தியமாக இருக்க வேண்டும், அல்லது இரண்டுமே தவறான போதனைகளாக இருக்க வேண்டும்; ஆனால் அந்த இரண்டும் சத்தியமாக இருப்பது சாத்தியமில்லை. தேவன் தனது வார்த்தைக்குத் தானே முரண்படமாட்டார் என்பதால், ஒரு வசனத்திற்குக் கூறப்படும் விளக்கம், மற்ற எந்த வசனங்களில் உள்ள போதனையோடு முரண்பட்டாலும், அந்த விளக்கத்தை மனித கற்பனைப் போதனையாகக் கருதி நிராகரிக்க வேண்டும். இது வேதாகம வியாக்கியானத்தில் பயன்படுத்தவேண்டிய அடிப்படை விதி. நாம் தற்போது ஆராயும் இந்த இரண்டு முரண்பட்ட கருத்துக்களில், முழுமையான வேத போதனையோடு ஒத்துப்போகும் கருத்தே சத்தியம். எந்த வேத வசனத்தோடும் ஒத்துவராத கருத்து தவறான புரிதலும், பொய்யுமாகும். வேதத்தைத் தவறாகப் புரிந்துகொள்கிறவர்கள் தங்கள் சொந்த கேடுக்கு ஏதுவாகவே அப்படிச் செய்கிறார்கள் என்று பேதுரு செய்த எச்சரிக்கையைப் புறக்கணித்தவர்கள் மட்டுமே இந்த சர்ச்சையின் விஷயத்தில் நடுநிலை வகிப்பார்கள் (2பேதுரு 3:16).
எனவே ஜெபத்துடனும், வேத வெளிச்சத்திலும், இந்த சர்ச்சைக்குத் தீர்வு காண்பதே இரு தரப்பினருக்கும் நல்லது. நடுநிலை வகிப்பதைக் கைவிட்டு, பாரபட்சமற்ற மனநிலையுடன் வாருங்கள், நாம் இணைந்து ஆராய்வோம், சத்தியம் என்னவென்று அறிந்துகொள்வோம்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.