"நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவின் இரத்தத்தினுடைய ஐக்கியமாயிருக்கிறதல்லவா?நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவின் சரீரத்தினுடைய ஐக்கியமாயிருக்கிறதல்லவா?" (1 கொரிந்தியர் 10:16) என்று பவுல் தெளிவாகப் பிரகடனப்படுத்தினார் அல்லவா! அப்படியே, "கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால்,தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்" (1 கொரிந்தியர் 11:29) என்றும் எச்சரித்தார். அப்படியானால் திருவிருந்து ஆராதனையில் எடுக்கும் பொருட்கள் கர்த்தருடைய சரீரமும் இரத்தமுமே என்று நம்பினால் என்ன தவறு? அப்படி நம்புவது மகா தவறு. ஆனால், தவறு பவுலுடையது அல்ல; பவுலின் வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொண்டவர்களுடையதே. நாம் ஆரம்பத்தில் சொன்னது போல, பவுலின் நிருபங்களைப் படிக்கும்போது, அதில் உள்ள சில காரியங்களைப் புரிந்துகொள்வது கடினமானதென்றும், கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் தங்கள் சொந்தக் கேடுக்கு ஏதுவாக அவற்றைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள் என்றும் பேதுரு செய்த எச்சரிக்கையை நினைவில் வைத்துக்கொள்வது அனைவருக்கும் நலம் (2 பேதுரு 3:15-17).
1) 1கொரிந்தியர்10:16-க்கு விளக்கம்
அ) சூழல்: இங்கே என்ன சூழல்? விசுவாசிகள் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா என்ற கேள்வியுடன் பவுல் இந்தச் சூழலில் கையாளுகிறார். 1 கொரிந்தியர் எட்டாம் அதிகாரத்தில் இந்த விவாதத்தைத் தொடங்கி, பத்தாம் அதிகாரத்தின் இறுதி வரை இந்த விஷயத்தையே பல்வேறு கோணங்களில் இருந்து வாதிடுகிறார். விக்கிரகங்களிலோ, விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளிலோ ஒன்றும் இல்லை என்ற அறிவும், ஜெபம் செய்து ஸ்தோத்திரம் செலுத்தி எதையும் சாப்பிடக்கூடிய சுதந்திரம் நமக்கு இருந்தாலும், பலவீனமான மனசாட்சி உடையவர்களுக்கு இடறல் உண்டாக்காமல் நமது சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பது கிறிஸ்தவ நற்பண்பு என்று பவுல் எட்டாம் அதிகாரத்தில் போதிக்கிறார். தானும் அப்படியே சுவிசேஷத்திற்குத் தடையாக இருக்காதபடி தனக்குள்ள கிறிஸ்தவ உரிமைகள் எத்தனையோ விட்டுக்கொடுத்த உதாரணங்களை ஒன்பதாம் அதிகாரத்தில் குறிப்பிட்டார். இப்போது பத்தாம் அதிகாரத்தில், விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைச் சாப்பிடும் உரிமை இருப்பதாக நினைப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னும் சில விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.
ஆ) கருத்து: விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவை பேய்களுக்குப் படைக்கப்படுகின்றன, எனவே அந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கும்படி பவுல் எச்சரித்து, கர்த்தருடைய பந்தியில் பங்குபெற்றவர்கள் கர்த்தரோடு எவ்விதமாக ஐக்கியப்படுகிறார்களோ (10:16,17), பலியிடப்பட்டவைகளைச் சாப்பிடுகிறவர்கள் பலிபீடத்தோடு எவ்விதமாக ஐக்கியப்படுகிறார்களோ (10:18), பேய்களுக்குப் படைக்கப்பட்டவைகளைச் சாப்பிடுகிறவர்கள், பேய்களோடு ஐக்கியப்படுகிறார்கள் என்று வாதிடுகிறார் (10:19,20). இங்கே குறிப்பிடப்பட்ட அனைத்தும் ஆவிக்குரிய கருத்தில் சொல்லப்பட்டன என்பதை நாம் கவனிக்கலாம். பலியிடப்பட்டவை பலிபீடமாக மாறுகின்றன, எனவே அவற்றைச் சாப்பிட்டவர்கள் பலிபீடத்தோடு ஐக்கியப்படுகிறார்கள் என்று அப்போஸ்தலர் சொல்கிறாரா? பேய்களுக்குப் படைக்கப்பட்டவை பேய்களாக மாறுகின்றன, எனவே அவற்றைச் சாப்பிடுபவர்கள் பேய்களோடு ஐக்கியப்படுகிறார்கள் என்பது அப்போஸ்தலரின் கருத்தா? அவ்வாறு நினைப்பது எவ்வளவு விசித்திரம்! அவற்றைச் சாப்பிடுவதன் மூலம் அவர்கள் ஆவிக்குரிய ரீதியில் யாருக்குச் சம்பந்தப்பட்டவர்களோ அல்லது, அப்போஸ்தலப் பரிபாஷையில் யாரோடு 'ஐக்கியப்பட்டவர்களோ' (பங்காளிகளோ) என்பது தெரியவருமே தவிர, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் பொருள் மாற்றம் எதுவும் நிகழாது. அதாவது, பலிபீடத்தில் படைக்கப்பட்ட பொருட்கள் பலிபீடமாக மாறுவதும், பேய்களுக்குப் படைக்கப்பட்ட பொருட்கள் பேய்களாக மாறுவதும் போன்ற எவையேனும் நடக்கும் என்பது அப்போஸ்தலரின் நோக்கம் அல்ல. அப்படியிருக்கும்போது, அதே சூழலில், அதே வரிசையில், அதே தொனியில் குறிப்பிடப்பட்ட கர்த்தருடைய இராபோஜனப் பொருட்கள் மட்டும் எழுத்தர்த்தமாக அவருடைய சரீரமும் இரத்தமுமாக மாறும் என்பது அப்போஸ்தலரின் நோக்கம் என்று சொல்வது சூழலுக்குப் பொருந்தாத சுய வியாக்கியானமே தவிர வேறில்லை. கர்த்தருடைய பந்தியில் உள்ளதைச் சாப்பிட்டு அவருடைய சரீரத்திலும் இரத்தத்திலும் ஐக்கியப்படுகிற நாம், பேய்களின் பந்தியில் உள்ளதைச் சாப்பிட்டு அந்தப் பேய்களோடும் ஐக்கியப்படுவது சரியல்ல என்பதே இங்கே பவுலின் செய்தி. இந்த இரண்டில், ஒன்று ஆவிக்குரியது, மற்றொன்று எழுத்தர்த்தமானது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஒன்றுக்கு இன்னொன்று உவமையாகச் சொல்லப்படவில்லை, மாறாக ஒன்றைச் செய்யாமல் இருப்பதற்குத் தர்க்கரீதியான காரணமாக மற்றொன்று சொல்லப்பட்டது. எனவே, எழுத்தர்த்த வாதிகள் இந்தப் பகுதியைத் திரித்து, திரவிய மாற்று வாதத்தை நியாயப்படுத்துவது அநியாயம், வேதத்திற்கு முரணானது.
இ) ஒரே அப்பம் ஒரே சரீரம்: 17-ம் வசனத்தில் அப்போஸ்தலர் "அந்த ஒரே அப்பத்தில் நாம் எல்லாரும் பங்குபெறுகிறபடியால்,அநேகரான நாமும் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்" என்கிறார். விசுவாசிகள் எல்லோரும் தங்கள் தங்கள் உள்ளூர் சபைகளில் அப்பத்தைப் பிட்கிறபோது, அவர்கள் எல்லோரும் அந்த ஒரே அப்பத்தில் பங்குபெறுகிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒரு உள்ளூர் சபையில் உள்ள உறுப்பினர்கள் எல்லோரும் ஒரு சரீரம் ஆவார்கள் என்று இதற்கு அர்த்தமா? அப்படியானால், கொரிந்து உள்ளூர் சபையை நோக்கிக் கடிதம் எழுதும்போது, 'நீங்கள்' என்று சொல்லாமல் 'நாம்' என்று பவுல் தன்னையும் சேர்த்துக்கொள்வது ஏன்? அதாவது, இணைந்து அப்பம் பிட்ட காரணத்தினால், பவுல் எத்தனை சபைகளை நிறுவியிருந்தாரோ, அல்லது சந்தித்திருந்தாரோ, அத்தனை சபைகளோடும் அவர் ஒரே சரீரமாக இருக்கிறாரா? ஒவ்வொரு உள்ளூர் சபையும் ஒவ்வொரு சரீரமானால், எத்தனையோ சரீரங்களோடு பவுல் ஒரே சரீரமாக ஆக்கப்பட்டார் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டுமா? அது அப்படி இருக்கட்டும், எத்தனை உள்ளூர் சபைகள் உள்ளனவோ அத்தனை சரீரங்கள் கிறிஸ்துவுக்கு இருக்குமா? அகில உலக அளவிலே கிறிஸ்துவின் சரீரம் என்று அழைக்கப்படும் சபை எந்த 'ஒரே அப்பத்தைச்' சாப்பிட்டு 'ஒரே சரீரம்' ஆனது? எழுத்தர்த்த திரவிய மாற்று வாதத்தை விட்டுவிட்டு ஆவிக்குரிய கருத்தில் சிந்திக்கும்போது இந்தச் சிக்கல் உடனே அவிழ்ந்துவிடும். கர்த்தருடைய பந்தியில் பிட்கப்படும் அப்பங்கள் அனைத்தும், எல்லோருக்காகவும் பிட்கப்பட்ட இயேசு கிறிஸ்து என்னும் அந்த ஒரே அப்பத்தைக் குறிக்கின்றன. எனவே, எத்தனை உள்ளூர் சபைகள் இருந்தாலும், எத்தனை அப்பங்கள் பிட்கப்பட்டாலும், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் ஒரே சரீரமாவோம். இதை கிரகிக்காமல் உள்ளூர் சபை விஸ்தீரண வரம்பை ஒரே அப்பத்திற்குச் சமமான அளவைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்று ஏதேதோ விசித்திரமான போதனைகளை உருவாக்குவது வேத முதிர்ச்சி என்று சொல்லப்படாது என அத்தகைய போதனைகளைச் செய்யும் பண்டிதர்கள் உணர்ந்தால் நல்லது (ஓபிர், கர்த்தருடைய இராபோஜன இரகசியம், பக்கம் 77).
ஈ) முழுமையான வேத போதனை: ஒருவேளை இந்தக் கர்த்தருடைய இராபோஜனத்தில் பொருள் மாற்றம் நிகழ்கிறது என்று இங்கே பவுல் சொல்லியிருந்தால், நாம் ஏற்கெனவே வேத வெளிச்சத்தில் விவாதித்த சிக்கல்கள் அனைத்திற்கும் பவுலே காரணமாகியிருப்பார். ஆனால் பவுல் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதிய காரியங்கள் வேதத்தின் முழுமையான போதனைக்கு இசைவற்றதாக இருக்கச் சாத்தியமில்லை என்பதால், இந்த வேதப் பகுதி எழுத்தர்த்த வாதத்தை ஆதரிக்காது என்று சந்தேகமின்றிச் சொல்லலாம்.
2) 1கொரிந்தியர்11:29-க்கு விளக்கம்:
"கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால்,தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்" (1 கொரிந்தியர் 11:29).
அ) ஓபிர் அவர்களின் வியாக்கியானம்: இந்த வசனத்திற்குள்ள உண்மையான கருத்தை அறிந்துகொள்வதற்கு முன்பு, திரவிய மாற்று வாதத்தை ஆதரிக்கும் ஓபிர் அவர்கள் இந்த வார்த்தைகளை எப்படி விவரித்தார் என்று கவனியுங்கள்: "அந்த வார்த்தைகளைக் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?கர்த்தருடைய அப்பத்தைப் புசிக்கும் விசுவாசிகள் சரியான விதத்தில் புசிக்காவிட்டால்,அவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு உண்டாகுமெனச் சொல்லப்பட்டுள்ளது. சரியான விதத்தில் புசிப்பது என்றால் என்ன?கர்த்தருடைய சரீரம் என்று நிதானித்து புசிப்பதே பாத்திரமாகப் புசிப்பதாகும்" (ஓபிர், கர்த்தருடைய இராபோஜன இரகசியம், பக்கம் 5). "அப்படி உண்மையில் அது கிறிஸ்துவின் சரீரமே என்று புரிந்துகொள்ளாமல் கர்த்தருடைய பந்தியில் பங்குபெறுவது மிகவும் கொடிய தவறு. அந்தத் தவறு தேவனுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது" (பக்கம் 5). "கொரிந்து விசுவாசிகளில் சிலர் அப்படியே கர்த்தருடைய போஜனப் பொருளை கிறிஸ்துவின் சரீரம் என்று புரிந்துகொள்ளாமலேயே புசித்தார்கள். அதன் விளைவாக அவர்களுக்குத் தேவன் தண்டனை விதித்தார். நானாவிதமாகத் தேவன் அவர்களைத் தண்டித்தார்" (பக்கம் 6). "அவர்கள் தாங்கள் சாப்பிடுவது கர்த்தருடைய சொந்தச் சரீரம் என்று கிரகிக்கவில்லை. ஏதோ இது ஒரு சாதாரணமான மனிதக் கையாற் செய்யப்பட்ட அப்பம் என்று நினைத்தார்கள். இது வெறும் அடையாளம் மட்டுமே. இது உண்மையில் கர்த்தருடைய சரீரம் எப்படி ஆகும்?என்று நினைத்தார்கள். இது கர்த்தருடைய சரீரம் என்று அவர்கள் நினைக்கமுடியவில்லை. அந்தக் கொடிய குற்றத்திற்காகத் தேவன் அவர்களில் அநேகரைக் கொன்றுபோட்டார். எவ்வளவு பயங்கரமான விஷயமோ பாருங்கள். நாம் பிட்கிற அப்பம் சாட்சாத் கர்த்தருடைய சரீரம் என்று கிரகிக்காதிருப்பது மரணத்திற்கேதுவான குற்றம்" (பக்கம் 6).
ஆ) சூழல் சார்ந்த வியாக்கியானம்: ஓபிர் அவர்களின் வியாக்கியானத்தை அப்படி வைத்துவிட்டு, 1 கொரிந்தியர் 11-ம் அதிகாரத்தின் சூழலைப் பார்க்கும்போது, உண்மையில் பொருள் மாற்றம் நிகழ்ந்தது என்று கருதாமல் அடையாளம் என்று நம்பியதாலேயே கொரிந்து சபை மக்கள் அபாத்திரமாகப் பந்தியில் பங்குபெற்றார்கள் என்பதற்கு ஒரு ஆதாரம் கூட இல்லை. பந்தியின் முழுச் சூழலில் அவர்கள் செய்த தவறு எல்லாம் ஒன்றே. அது என்னவென்று புரிந்துகொள்வோம். "நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது,அது கர்த்தருடைய இராபோஜனத்தைப் பண்ணுவதற்கேற்றதாயிராதே. என்னத்தினாலெனில்,போஜனம்பண்ணுகையில் ஒருவன் மற்றொருவனுக்கு முந்தித் தன் சொந்தப் போஜனத்தைச் சாப்பிடுகிறான்;ஒருவன் பசியாயிருக்கிறான்,ஒருவன் வெறியாயிருக்கிறான். புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா?தேவனுடைய சபையை அசட்டைபண்ணி,இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா?உங்களுக்கு என்ன சொல்லுவேன்?இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ?புகழேன்" (1 கொரிந்தியர் 11:20-22).
கர்த்தர் நமக்காகப் பிட்கப்பட்ட சரீரத்தையும், சிந்தப்பட்ட இரத்தத்தையும் நினைவுகூர அனுசரிக்கும் பந்தியை, ஆதிச்சபை மக்கள் ஒரு அன்பு விருந்தின் (Love Feast) பகுதியாக நடத்திக்கொண்டிருந்தார்கள் என்று இந்தச் சூழலில் பார்க்கிறோம். ஆனால், கொரிந்தியர்கள் அந்த விருந்தின் பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தைப் புறக்கணித்து, மற்றவர்களுக்குப் போதுமா இல்லையா என்று பார்க்காமல், வீட்டில் உணவு இல்லாதது போலவே பெருந்தீனிக்கு ஆளானார்கள். பெயருக்குக் கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தத்தை நினைவுகூரும் விருந்து; செய்யும் காரியமோ, அந்தச் சரீரம் மற்றும் இரத்தத்தினால் ஒரே சரீரமாக ஆக்கப்பட்ட மற்றவர்கள் மீது எள்ளளவும் கரிசனை இல்லாத பெருந்தீனி. அப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் கர்த்தருடைய இராபோஜனத்தைச் சாதாரண உணவு நிலைக்குத் தாழ்த்தி, கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தத்தின் நினைவுகளை அவமானப்படுத்துகிறார்கள் என்றும், அது மிகுந்த தண்டனைக்குரியது என்றும் பவுல் சொல்கிறார். இது சூழலிலிருந்து எவரும் தெளிவாகப் பார்க்கக்கூடிய கருத்து.
இ) கர்த்தருடைய சரீரம் என்று நிதானிக்காதிருத்தல் (விவேகிக்காதிருத்தல்) என்பதன் அர்த்தம்: கர்த்தருடைய சரீரம் என்று நிதானிக்காமல் பந்தியில் உள்ளதைச் சாப்பிடுவது தண்டனைக்குரியது என்று 1 கொரிந்தியர் 11:27-29 இல் வாசிக்கிறோம். வீட்டில் பசி தீர்த்துக்கொள்ளச் சாப்பிடும் சாதாரண உணவைப் போலக் கர்த்தருடைய இராபோஜனத்தோடு நடந்துகொண்டு, கொரிந்தியர்கள் அந்த இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணரும் விவேகத்தை இழந்தார்கள். அந்த விவேகம் இல்லாத காரணத்தினால் அவர்களில் அநேகர் ஆக்கினைத்தீர்ப்புக்கு உள்ளானார்கள் என்று எச்சரித்து, ஆக்கினைத்தீர்ப்புக்குள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் பவுல் தெரிவிக்கிறார். "ஆதலால்,என் சகோதரரே,நீங்கள் போஜனம்பண்ணும்படி கூடிவரும்போது,ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். நீங்கள் கூடிவருகிறது ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவாயிராதபடிக்கு,ஒருவனுக்குப் பசியிருந்தால் தன் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போதுத் திட்டப்படுத்துவேன்" (1 கொரிந்தியர் 11:33-34).
மேற்கண்ட வசனங்களின்படி நடந்துகொண்டால், ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து தப்பிக்கக்கூடிய விவேகத்தை, அதாவது கர்த்தருடைய இராபோஜனத்திற்கும் சாதாரண போஜனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பகுத்தறியும் விவேகத்தை அவர்கள் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதே இங்கே பவுலின் வார்த்தைகளின் கருத்து. கவனியுங்கள், இங்கே, 'நீங்கள் கர்த்தருடைய இராபோஜனம் உவமை என்று நம்புவதை விட்டுவிட்டு, அந்தப் பொருட்கள் சாட்சாத் கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தம் என்று நம்புவதன் மூலம் கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தம் என்று நிதானித்து ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்' என்று பவுல் எச்சரிக்கவில்லை. மாறாக, போஜனம் பண்ணுவதற்குக் கூடிவந்தாலும் ஒருவருக்காக ஒருவர் காத்திருக்க வேண்டும் என்றும், பசி தீர்த்துக்கொள்ள வீட்டில் சாப்பிடும் உணவாக இந்த உணவைக் கருதக்கூடாது என்றும் எச்சரித்ததைப் பார்க்கிறோம்.
ஈ) ஒருவருக்காக ஒருவர் காத்திருக்காமல் சாப்பிட்டால் அது மரண தண்டனை பெறும் அளவுக்குப் பாவமாகுமா? ஒருவருக்காக ஒருவர் காத்திருக்காமல் சாப்பிட்டதனால் கர்த்தருடைய சரீரம் என்று அவர்கள் நிதானிக்கவில்லை என்றும், அதற்காக அவர்களில் அநேகர் வியாதிப்பட்டார்கள் என்றும், சிலர் மரித்தார்கள் என்றும் பவுல் கொரிந்தியர்களை எச்சரித்தார். மற்றவர்களுக்காகக் காத்திருக்காமல் சாப்பிட்டால் அது மரண தண்டனைக்குரிய குற்றமா? இந்தக் கேள்வி, கர்த்தருடைய இராபோஜனத்தின் பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் ஆணிவேரான கேள்வி.
கொரிந்து சபையினர் ஒருவருக்காக ஒருவர் காத்திருக்காமல் சாப்பிடுவதற்கு, அவர்களுக்குள் இருந்த வைராக்கியங்களே (பிரிவினைகளே) காரணம் என்று பவுல் தெளிவுபடுத்தினார் (18-ம் வசனம்). இந்தப் பிரிவினைகளின் காரணமாக அவர்கள் தேவனுடைய சபையைத் தள்ளி, ஏழைகளை அவமானப்படுத்தும் விதமாக இந்தப் பெருந்தீனிக்குப் பால்பட்டது தெரிகிறது (22-ம் வசனம்). கிறிஸ்துவின் சரீரமாக 1 கொரிந்தியர் 12:27-ல் பவுல் விவரித்த சபையை, கர்த்தருடைய சரீரமாக நிதானித்து (பகுத்தறிந்து) கௌரவிக்க இவ்விதமாக அவர்கள் தவறினார்கள். கர்த்தருடைய சரீரமாகிய சபையை அலட்சியம் செய்து, அவருடைய சரீரம் மற்றும் இரத்தத்தை நினைவுகூரும் பந்தியில் உள்ளதை உண்பவர்களுக்கும், குடிப்பவர்களுக்கும், அவருடைய சரீரத்தைக் குறித்த குறைந்தபட்ச விவேகமாவது உண்டு என்று எப்படிக் கருத முடியும்? அவர்களுக்கு அந்தப் பந்தியில் கையை நீட்டத் தகுதியில்லை என்பதே இங்கே பவுலின் வார்த்தைகளின் கருத்து என்று தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான், அவர்கள் கூடிவருவது நன்மைக்கல்ல தீமைக்கே ஏதுவாக இருக்கிறது என்று அவர்களைக் கடிந்துகொண்டு, இந்த நிலையில் கர்த்தருடைய இராபோஜனத்தை அனுசரிப்பது அவர்களுக்குச் சாத்தியமில்லை என்றும், அன்பினால் மட்டுமே அவருக்குச் சொந்தமானவர்கள் ஆவோம் என்று யோவான் 13:34-35 இல் தெரிவிக்கப்பட்ட விதியை மீறிச் சாப்பிடும் ஒவ்வொரு முறையும் அவர்கள் கர்த்தருடைய சரீரமாகிய சபையை நிராகரித்து அதை நிதானிக்காமலே சாப்பிடுகிறார்கள் என்பதால் அது மிகுந்த தண்டனைக்குரியது என்று பவுல் அவர்களை எச்சரிக்கிறார்.
மேலே விளக்கிய இந்தப் பாவத்தைச் செய்யாமல் சுயபரிசோதனை செய்துகொண்டு பந்தியில் உள்ளதைச் சாப்பிடவும் குடிக்கவும் வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் அபாத்திரமாகப் பந்தியில் கை வைத்தவர்கள் ஆவார்கள் என்றும் பவுல் அன்று செய்த எச்சரிக்கை, இன்று சபைக்கும் பொருந்தும் என்பதை நாம் மறந்துபோகக் கூடாது. வேறு எந்தப் பாவத்தைக் குறித்தும் தங்கள் மனசாட்சி குற்றஞ்சாட்ட இடம் கொடுக்காமல் ஜாக்கிரதையாக இருப்பவர்கள் கூட, சபையில் யார் மீதாவது பகை அல்லது வெறுப்பு கொண்டு பந்தியில் கை வைத்தாலும் அது அபாத்திரமாகப் பந்தியில் பங்குபெறுவதே ஆகும். அதுவே கர்த்தருடைய சரீரத்தை நிதானிக்காதிருத்தலுக்குச் சூழல் சார்ந்த விளக்கம். எனவே, சூழலில் இல்லாத புதிய விளக்கங்களைப் புகுத்தினால், அது இந்தப் பாவத்தின் விஷயத்தில் சபையின் கவனத்தைத் திசைதிருப்பி, அவர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய உண்மையான விஷயத்திலிருந்து வழிவிலக்குவது ஆகும் என்பதை இப்போதாவது உணர்வது திரவிய மாற்று வாதிகளுக்கு நல்லது. "பந்தியில் அபாத்திரமாகப் பங்குபெறும் ஆபத்தைக் குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாததால்,அவர்கள் அந்தத் தவறைச் செய்தாலும் அதை உணரும் நிலையில் இல்லை" என்பது எவ்வளவு வருத்தமோ, எவ்வளவு ஆபத்தோ சிந்தியுங்கள்.
உ) கர்த்தருடைய இராபோஜனத்திற்குள்ள சிறப்பு: கர்த்தருடைய இராபோஜனத்திற்கும் சாதாரண போஜனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பகுத்தறியாமல் பந்தியில் கை வைப்பதே கொரிந்தியர்கள் செய்த பாவம் என்று சொன்னோம் அல்லவா; உண்மையில் என்ன இந்தக் கர்த்தருடைய இராபோஜனத்திற்குள்ள சிறப்பு? அதைச் சாதாரண போஜனத்திலிருந்து வேறுபடுத்தியது எது? அதிலுள்ள பொருட்கள் கர்த்தருடைய சரீரமும் இரத்தமுமாக மாறுவதா? 'கர்த்தருடைய சரீரம் என்று நிதானிக்காமல்' என்றால் அதுதானே கருத்து? மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் சிந்திக்கும்போது அப்படி நினைப்பது சாத்தியப்படாது என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். வேறென்ன இந்த வார்த்தைகளின் கருத்து?
கர்த்தருடைய இராபோஜனத்தை அறிமுகப்படுத்தி, "என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்" என்று கர்த்தர் கட்டளையிட்டார். அதற்கப்பால், 'என் பலியைத் திரும்பச் செய்வதற்கு (மீண்டும் நிகழ்த்துவதற்கு) நீங்கள் இதைச் செய்யுங்கள்' என்று எப்போழுதும் எங்கும் சொல்லவில்லை. எனவே, பந்தியில் உள்ள அந்தப் பொருட்கள், நமக்காகப் பிட்கப்பட்ட கர்த்தருடைய சரீரத்தை, சிந்திய இரத்தத்தை நினைவுக்குக் கொண்டுவரும் ஞாபகார்த்தச் சின்னங்கள் (Remembrances) மட்டுமே தவிர, அசல் சரீரமும் இரத்தமும் அல்ல. இருப்பினும், அப்படிக் கர்த்தரை நினைவுகூரத் தவறி, அந்தப் புனிதமான ஆச்சாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், அவர்கள் அகௌரவப்படுத்துவது அந்தப் பொருட்களை அல்ல, அவை அடையாளப்படுத்தும் கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தத்தையே என்று இங்கே பவுலின் கருத்து. கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் அவர்கள் ஈடுபட்ட பெருந்தீனி மற்றும் சபையின் மீது கொண்டிருந்த அன்பில்லாமை தண்டனைக்குரியது என்றும், அப்படி நம்மை மீட்டுக்கொண்ட கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தத்தைக்கூட மறந்து பாவம் செய்ய வேண்டாம் என்றும் இங்கே பவுலின் எச்சரிக்கையின் பின்னால் உள்ள கருத்து. அதுவல்லாமல், முழுமையான வேத போதனையைத் தகர்க்கும் விதமாக பவுல் இங்கே திரவிய மாற்று வாதத்தை எள்ளளவும் ஆதரிக்கவில்லை.
எனவே கொரிந்து சபை எதிர்கொண்டது, எழுத்தர்த்த வாதமா அல்லது அடையாள வாதமா என்ற பிரச்சனை இல்லவே இல்லை என்றும், அவர்கள் கர்த்தருடைய சரீரத்தை நிதானிக்காததற்கும், தற்போதைய சர்ச்சைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் சூழலைப் பாரபட்சமின்றி வாசிக்கும் எவரும் உடனே அறிந்துகொள்வார்கள்.{jcomments off}