"அப்படியே பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்." (தீத்து 2:6)
கிறிஸ்துவின் ஊழியனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த தீத்துவுக்கு, அப்போஸ்தலனாகிய பவுல் நிருபத்தை எழுதி அனுப்புகையிலே, இளைஞர்களை விசேஷித்தவர்களாகக் கருதி அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றார். முதிர்வயதுள்ள ஆண்களையும், முதிர்வயதுள்ள பெண்களையும், வாலிபப் பெண்களையும் பற்றிக் குறிப்பிட்ட பிறகு, அவர் இந்த அர்த்தமுடைய புத்திமதியைக் கூறுகிறார்: "அப்படியே பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்" (தீத்து 2:6).
அப்போஸ்தலனாகிய பவுலினுடைய இந்த அறிவுரையையே நானும் கடைப்பிடிக்கப் போகிறேன். வாலிப வயதிலுள்ளவர்களுக்குக் கரிசனையோடு நான் ஒருசில புத்திமதிகளைக் கூறப் போகிறேன். இப்பொழுது நான் வயது முதிர்ந்தவன்; ஆனால், எனது வாலிப நாட்களின் சில காரியங்கள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றன. சந்தோஷங்களும், கவலைகளும், எதிர்பார்ப்புகளும், பயங்களும், சோதனைகளும், துன்பங்களும், தவறான புரிதல்களும், தவறாகச் செலுத்திய அன்பும், அறியாமல் செய்த தவறுகளும், ஆசைகளும் எப்படி ஒரு வாலிபனை அவன் வாலிப நாட்களில் சூழ்ந்திருக்கின்றன என்பதற்கு, என் வாழ்க்கையிலேயே நிறைய உதாரணங்களை நான் வைத்திருக்கிறேன். ஆகவே, என்னுடைய அனுபவத்தின் வாயிலாக நான் சொல்லுகிற ஏதாவது ஒருசில காரியங்கள், சில வாலிபர்களையாவது சரியான பாதைக்குத் திருப்பி, அவர்களைப் பாவத்திலிருந்து காத்து, நித்திய வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டுசெல்லுமானால் நான் மிகவும் நன்றியுள்ளவனாய் இருப்பேன்.
இந்தப் புத்தகத்தில் நான் குறிப்பிட விரும்பும் நான்கு காரியங்களைப் பார்ப்போம்:
இளைஞர்களுக்குப் புத்திமதிகளைச் சொல்வதற்கான பொதுவான காரணங்களைக் குறிப்பிடுகிறேன்.
இளைஞர்கள் எதிர்கொள்ள வேண்டிய சில ஆபத்துகளைக் குறித்து எச்சரிக்கிறேன்.
இளைஞர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய சில பொதுவான புத்திமதிகளைக் குறிப்பிடுகிறேன்.
சில ஒழுங்கு நடவடிக்கைகளைக் கட்டளையாகவும் குறிப்பிடுகிறேன். அவற்றை இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டுமெனப் புத்திசொல்லுகிறேன்.
இந்த நான்கு காரியங்களிலும் நான் கூறுகிற விஷயங்கள் இளைஞர்களுக்குப் பயனுள்ளதாக இருந்து, அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென நான் தேவனிடம் ஜெபிக்கிறேன்.
அதற்குச் சில காரணங்களை நான் வரிசைப்படுத்திக் கூறப்போகிறேன்.
அ. தேவபக்தி கொண்டிருத்தல்
இளைஞர்களில் வெகு சிலரே தேவபக்தி உணர்வு உடையவர்களாய் இருக்கிறார்கள் என்கிற துயரமூட்டும் உண்மையை நாம் மறுப்பதற்கில்லை. யாரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் பொதுவாகவே இதைச் சொல்லுகிறேன். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், அழகுள்ளவன், அழகில்லாதவன், கிராமத்தான், நகர்ப்புறத்தான் இப்படியாக யாரை எடுத்துக்கொண்டாலும் அதில் வித்தியாசமில்லை. ஒருசில வாலிபரே ஆவியினால் நடத்தப்படுகிறார்கள் என்பதை நான் கவனிக்கும்போது அதிர்ந்து போகிறேன். ஜீவனுக்குப் போகிற குறுகிய பாதையில் நடக்கிற இளைஞர்கள் வெகு சிலர் மட்டுமே! பரலோக காரியங்களில் ஒருசில வாலிபருக்கே நாட்டமிருக்கிறது. ஒருசில வாலிபரே தங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகத் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். இவைகளை நான் மிகவும் துக்கத்தோடு கூறுகிறேன். ஆனால், தேவனின் பார்வையில் உண்மை நிலவரம் இப்படியாகத்தான் இருக்கிறது.
இளைஞர்களே, இந்த உலகத்திலே நீங்கள்தான் பெருவாரியான எண்ணிக்கையில் நிறைந்து காணப்படுகிறீர்கள்; நீங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். ஆனால், அதை அறியாதவர்களாக இருக்கிறீர்கள். உங்கள் ஆத்துமா எங்கே இருக்கிறது? அது என்ன நிலைமையில் காணப்படுகிறது? இதற்குரிய விடையை நாம் யாரிடம் கேட்டுப் பார்த்தாலும் ஒரே மாதிரியான பதில்தான் கிடைக்கிறது. இது மிகவும் பரிதாபம்!
ஒரு உண்மையான சுவிசேஷ ஊழியனை அணுகி நாம் சில கேள்விகளைக் கேட்டு, அதற்கு அவர் என்ன பதில் சொல்லுகிறார் எனப் பார்ப்போம். திருச்சபையில், கர்த்தருடைய பந்தியில் கலந்துகொள்ள ஆவலுடன் வருகிற திருமணமில்லாத வாலிபர்கள் எத்தனை பேர்? கிருபைக்குரிய காரியங்களில் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள் யார்? ஞாயிறு ஆராதனைக்கு ஒழுங்காக வராதவர்கள் யார்? வாராந்திர ஜெபக்கூட்டங்களுக்கும், வேதபாட வகுப்புகளுக்கும் வர வைப்பதற்கு மிகவும் கடினமானவர்கள் யார்? வேதபாடங்கள் நடக்கையில் சரியாகக் கவனிக்காதவர்கள் யார்? தனது சபையில் யாரைக் குறித்துப் போதகர் மிகவும் கவலையாயிருக்கிறார்? யாருடைய இருதயத்தை அவர் மிகவும் ஆராய்ந்து அறிய வேண்டியதாயிருக்கிறது? தனது மந்தையில் எந்த ஆடுகளை அவர் சிரமப்பட்டு நடத்த வேண்டியதாயிருக்கிறது? யார் அடிக்கடி எச்சரித்துக் கடிந்துகொள்ளப்பட வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள்? மேய்ப்பனுக்கு மிகுந்த துயரத்தையும், மனச்சோர்வையும் அளிப்பது யார்? யாருடைய ஆத்துமாவைக் குறித்துப் பயமும், நம்பிக்கையற்ற நிலையும் ஏற்படுகிறது? இவ்வளவு கேள்விகளுக்கும் அந்த உண்மையான ஊழியன் தரும் பதில், 'வாலிபர்களைக் குறித்துத்தான்' என்பதாகவே இருக்கும்.
திருச்சபைக்கு வந்துகொண்டிருக்கிற பெற்றோரிடமும் சில கேள்விகளைக் கேட்கலாம். உங்களுடைய குடும்பத்தில் உங்களுக்கு மிகுந்த துக்கத்தையும் துயரத்தையும் தருவது யார்? யாரை மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டியதாயிருக்கிறது? யார் உங்களை மனச்சோர்வடையச் செய்வது? சரியான பாதையிலிருந்து யார் முதலில் வழிவிலகிச் செல்வது? எச்சரிப்புகளையும், புத்திமதிகளையும் கேட்பதில் கடைசியாக இருப்பது யார்? ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்குள்ளாக யாரைக் கொண்டுவருவது கடினமானது? துணிகரமான பாவங்களுக்கு உடன்படுவது யார்? தங்களுக்குக் கெட்ட பெயரைச் சம்பாதித்துக்கொள்வது யார்? நல்ல நண்பர்களைத் துயரப்படுத்துவது யார்? வயதானவர்களுக்கு வெறுப்புண்டாக்குவது யார்? நரைமயிரைத் துயரத்தோடு குழியில் இறங்கப்பண்ணுவது யார்? இந்த எல்லாவிதமான கேள்விகளுக்கும் அவர்கள் தரும் பதில் ‘இளைஞர்கள்’ என்கிற பதிலே கிடைக்கும்.
காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் போன்றோரிடம் சில கேள்விகளைக் கேட்போம். குடிப்பழக்கம் பெரும்பாலும் எந்த வகுப்பினரிடையே காணப்படுகின்றது? சட்டத்தை மீறுபவர்கள் எந்த வயதில் அதிகமாகக் காணப்படுகிறார்கள்? கூட்டங்களைத் தூண்டிவிட்டுக் கலகம் விளைவிப்பதில் முன்னோடியாய் இருப்பவர்கள் எந்த வயதினர்? குடிபோதை, சட்டத்தை மீறுதல், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல், அத்துமீறுதல், திருட்டுத்தனம் போன்ற குற்றங்களில் ஈடுபட்டுச் சிறைச்சாலைக்குப் போகிறவர்களில் எந்த வயதினர் அதிகமாகக் காணப்படுகிறார்கள்? எந்த வயதினரை மிகவும் விழிப்போடு கவனிக்க வேண்டியதாயிருக்கிறது? இதற்கும் அவர்கள் தரும் பதில் ‘வாலிபர்கள்’ என்கிற பதிலாகத்தான் இருக்கும்.
சற்று வசதியான குடும்பங்களிலே என்ன நிலைமை காணப்படுகிறது என்று பார்ப்போம். ஒரு பணக்காரக் குடும்பத்திலே உள்ள பிள்ளைகள் தங்கள் நேரத்தையும், பணத்தையும், சரீர பெலனையும் சிற்றின்பங்களிலே ஈடுபட்டு வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றொரு குடும்பத்திலே உள்ள மகன்கள் தங்களுடைய வருங்காலத்தைக் குறித்து எண்ணாமல், தங்களுக்கென ஒரு தொழில்திறமையை வளர்த்துக்கொள்ளாமல், தங்கள் வாழ்வின் பொன்னான காலத்தைச் சோம்பேறித்தனமாகப் போக்கிக்கொண்டிருக்கிறார்கள். மற்றொரு குடும்பத்திலே சொந்தமாகத் தொழில் இருந்தாலும், அதை விருத்திசெய்ய முயற்சிக்காமல் ஒரு பொழுதுபோக்கு போல ஏனோதானோவென அதை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு குடும்பத்திலே பிள்ளைகள் தவறான நண்பர்களோடு சேர்ந்துகொண்டு சூதாட்டங்களில் ஈடுபட்டுக் கடனாளியாகி, நல்ல நண்பர்களின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். படிப்போ, பணமோ, பதவியோ இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமற்போவது என்ன பரிதாபம்!
கவலை குடிகொண்டுள்ள பெற்றோர், மனமுடைந்துபோன தாய்மார், துயரத்தில் ஆழ்ந்துள்ள சகோதரிமார் எத்தனை பேர்! அவர்கள் கூறும் சோகக்கதைகள்தான் எத்தனை ஆயிரம்! பெரும்பாலான குடும்பங்களில் ஒரு மகனோ, சகோதரனோ, மாமா பிள்ளையோ அல்லது அத்தை பிள்ளையோ தங்களைக் கெடுத்துக்கொண்டு அனைவருக்கும் துயரத்தை உருவாக்கிய வாலிபனைக் குறித்துச் சொல்லும் நிலையே காணப்படுகிறது. பணக்காரக் குடும்பங்களில் முள்ளாகக் காணப்படும் வாலிபர்கள் இருப்பது மிகவும் சகஜமாயிருக்கிறது. குடும்ப சந்தோஷத்திற்கு முட்டுக்கட்டையாக இதுமாதிரி வாலிபர்கள் இருக்கிறார்கள். பணமிருந்தாலும் எப்போதும் அவர்களைக் குறித்த கவலையும் துயரமும் உடையவர்களாகக் குடும்பத்தார் வாழ வேண்டியதாயிருக்கிறது. வாலிபப் பருவத்திலே பெரும்பாலும் இதுமாதிரியான பிரச்சனைகளே உண்டாகின்றன.
இவைகளைக் குறித்து நாம் என்ன சொல்லுவது? இவையெல்லாம் உண்மைதானே? நடைமுறை வாழ்க்கையில் நாம் பார்ப்பவைதானே? உண்மையை மறைக்க முடியுமா? நிதர்சனமான காரியங்களாகிய இவை எல்லாத் திசைகளிலிருந்தும் நம் கண் முன்னாலே வந்து நிற்கிறதே, இல்லையென மறுக்க முடியுமா? எவ்வளவு பயங்கரமான நிலை இது! ஒவ்வொரு இளைஞனையும் நான் பார்க்கும்போது, 'இவன் தேவனுக்கு விரோதமாக இருப்பானோ?' என நினைக்காமல் இருக்க முடியவில்லை. 'அகலமான பாதையில் போய்க்கொண்டிருக்கிறானே! அழிவுக்குப் போகும் பாதையில் இருக்கிறானே! பரலோகத்திற்குள் பிரவேசிக்கப் பாத்திரவானாக இல்லையே!' என்கிற இவ்வளவு உண்மைகள் எனக்கு முன்பாக நிற்கும்போது, என்னால் இளைஞர்களுக்குப் புத்தி சொல்லாமல் இருக்க முடியுமா? ஆகவே, நான் ஏன் இவர்களுக்குப் புத்தி சொல்கிறேன் என்பதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படவும் வேண்டுமா?
ஆ. நியாயத்தீர்ப்பை மறத்தல்
மரணமும் நியாயத்தீர்ப்பும் மற்றவர்களுக்கு மாத்திரமல்ல, இளைஞர்களுக்கு முன்பாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. இதை மறந்துபோனது போல எல்லோருமே நடந்துகொள்ளுகிறார்கள். இளைஞனே, ஒரே தரம் மரிப்பதற்காக நீயும் நியமிக்கப்பட்டிருக்கிறாய். ஒருவேளை நீ இன்று பலசாலியாகவும் ஆரோக்கியமானவனாகவும் காணப்படலாம். ஆனால், உனது மரணநாளும் மிகவும் அருகிலேயே இருக்கலாம். வயதானவர்களைப் போலவே இளைஞர்களும் நோயில் விழுவதை நான் கண்டிருக்கிறேன். வயதானவர்களுக்கு மாத்திரமல்ல, இளைஞர்களுக்கும் நான் அடக்க ஆராதனை நடத்தியிருக்கிறேன். கல்லறைகளில் உன்னைக் காட்டிலும் வயது குறைந்தவர்களின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். குழந்தைப் பருவத்திலும் வயது முதிர்ந்தும் இறப்பவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பெரும்பாலும் 13 முதல் 23 வரையுள்ள வயதில்தான் அதிகமான மரணம் நிகழ்கிறதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் நீயோ, "நான் இப்போது ஒன்றும் சாக மாட்டேன்" என்கிற நிச்சயமுடையவனாக வாழ்ந்துகொண்டிருக்கிறாய்.
ஆவிக்குரிய காரியங்களை நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறாயா? சாலொமோன் கூறுவதை நினைவில்கொள்: "நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒரு நாள் பிறப்பிப்பதை அறியாயே" (நீதிமொழிகள் 27:1). கடினமானவைகளை நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறிய கிரேக்கத் தளபதி ஒருவன், தனக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படிப்பதைத் தள்ளிப்போட்டான். அடுத்த நாளில் அவன் கொலைசெய்யப்படப் போவதைக் குறித்து எச்சரித்து எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை அவன் உரிய நேரத்தில் படிக்காமல் போனதால், அடுத்த நாளைப் பார்க்காமலே இறந்துபோனான். நாளைய தினம் சாத்தானுடையது; ஆனால், இன்றைய தினமோ கர்த்தருடையது. நாளைக்குச் செய்யலாம் எனத் திட்டமிட்டிருக்கும் ஆவிக்குரிய காரியங்கள், தீர்மானங்கள் ஆகியவை எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் சாத்தான் அதைக் குறித்துக் கவலைப்படுவதில்லை. 'நாளைக்கு', 'பிறகு' போன்ற எண்ணங்கள் தோன்றிவிட்டாலே, சாத்தானுக்கு எல்லையற்ற மகிழ்ச்சிதான். ஆகவே இந்தக் காரியங்களில் சாத்தானுக்கு இடங்கொடாதிருங்கள். "சாத்தானே! நான் நினைத்ததை இன்றைக்கே, இப்போதிருந்தே செயல்படுத்த ஆரம்பிப்பேன்" என்று உறுதியாகச் சொல்லுங்கள்.
எல்லா மனிதர்களும் முற்பிதாக்களைப்போல வாழ்வதில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபைப் போன்ற வாழ்க்கை எல்லாருக்கும் கிடைப்பதில்லை. அநேகம் பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு முன்பாகவே மரிக்க நேரிடுகிறது. தாவீதின் இரண்டு அருமையான குமாரர்கள், தாவீதுக்கு முன்பாக மரித்துப்போக நேர்ந்தது. யோபு தனது பத்துப் பிள்ளைகளையும் ஒரே நாளில் பறிகொடுக்கும்படியாக ஆனது. தேவன் உங்களுக்கு என்ன குறித்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாது. சீக்கிரமாக மரணம் நேரிடுவதாக இருக்குமானால், நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளிப்போடுவதால் பலன் ஒன்றுமில்லை. செய்வதை, சிந்திப்பதை உடனடியாகச் செய்ய வேண்டும்.
சரியான நேரம் வரும்போது இவைகளைப் பற்றிச் சிந்தித்துக்கொள்ளலாம் என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? அத்தேனே பட்டணத்தாரும், பேலிக்ஸ் தேசாதிபதியுங்கூட அப்போஸ்தலனாகிய பவுலின் பிரசங்கத்தைக் கேட்டபோது இவ்வாறுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள் (அப்போஸ்தலர் 17:32; 24:25). "இன்னொரு சமயம் கேட்கிறோம்" என்றார்கள். ஆனால் அப்படியொரு காலம் அவர்களுக்கு வராமலேயே போய்விட்டது. 'நாளைக்கு நேரம் கிடைக்கும்' என்பது போன்ற தோற்றத்தை நரகம் ஏற்படுத்துகிறது. சமயம் இருக்கும்போதே காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நித்தியத்துக்குரிய எந்தக் காரியத்தையும் தள்ளிப்போடாதிருங்கள். ஆத்துமா ஆபத்திலிருக்கும்போது அலட்சியமாக இருக்காதீர்கள். ஒரு ஆத்துமா இரட்சிப்பை அடைவதென்பது சாதாரணமான காரியமல்ல. வாலிபராக இருந்தாலும், முதியவராக இருந்தாலும் எல்லோருக்கும் அந்தப் பெரிதான இரட்சிப்பு அவசியமானதாக இருக்கிறது. எல்லோரும் மறுபடியும் பிறக்க வேண்டியதாக இருக்கிறது. எல்லோரும் இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட வேண்டியது மிகவும் அவசியம். எல்லோரும் பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமடைய வேண்டியது அவசியம். இவைகளைக் குறித்துச் சிந்தித்து, இவைகளை அடைந்துகொண்டவனே மிகவும் சந்தோஷமான மனிதன். தேவனின் பிள்ளையாகிவிட்டோம் என்கிற நிச்சயத்தைப் பரிசுத்த ஆவியினால் தன் உள்ளத்தில் பெறும்வரைக்கும் அவன் சும்மா இருக்கமாட்டான்.
இளைஞர்களே, உங்கள் காலம் குறுகியது. உங்கள் வாழ்நாள் ஒரு நிழலைப்போல மறைந்துபோய்விடும். புகையைப்போலக் காணாமல் போகும். உங்கள் வாழ்க்கை நடந்து முடிந்த சரித்திரமாக மாறிவிடும். உங்கள் சரீரம் வெண்கலத்தினால் ஆனதல்ல. "இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்" என்று ஏசாயா 40:30-ல் சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் பெலனெல்லாம் ஒரு நொடியிலே உங்களிடமிருந்து பறித்துக்கொள்ளப்படலாம். அதற்குப் பெரிய பிரயத்தனம் தேவையில்லை. ஒரு சின்ன தடுக்கி விழுதல், ஒரு காய்ச்சல், கட்டி அல்லது காயம்... இவை போதும்; பிறகு கல்லறையிலே புழு உங்களைத் தின்கிற நிலைமை வெகு விரைவில் வந்துவிடும். மரணத்திற்கும் உங்களுக்கும் இடையே ஒரு படி இருக்கிறது. உங்கள் ஆத்துமா தன்னை உருவாக்கியவரிடம் மறுபடியும் போகும். "இன்றிரவு உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து கேட்கப்படும்" (லூக்கா 12:20).
உலகத்தார் போகிற வழியிலே நீங்கள் விரைந்து போய்க்கொண்டிருக்கிறீர்கள். ஒருநாளிலே நீங்கள் இந்த உலகத்திலே இல்லாமலே போய்விடுவீர்கள். உங்கள் உலகவாழ்வு நிச்சயமானதல்ல. உங்களுடைய மரணமும், நியாயத்தீர்ப்பும் நிச்சயமாக வந்தே தீரும். நீங்களும் பிரதான தூதனுடைய எக்காள சத்தத்தைக் கேட்பீர்கள். வெள்ளைச் சிங்காசனத்தின் முன்பாக நியாயத்தீர்ப்படைவதற்கு நிற்பீர்கள் (வெளிப்படுத்தல் 20:11). "மரித்தோர்களே, எழுந்திருங்கள்; நியாயத்தீர்ப்படைய வாருங்கள்" என்கிற சத்தம் தன் காதுகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருப்பதாக ஜெரோம் (கி.பி. 345-420) என்பவர் கூறியது போல, அந்த அழைப்புக்கு நீங்களும் கீழ்ப்படிய வேண்டிய காலம் வரும். "இதோ, சீக்கிரமாய் வருகிறேன்" (வெளிப்படுத்தல் 22:7) என்று நியாயாதிபதியே கூறுகிறார். இப்படியிருக்கையில், வாலிபர்களே! என்னால் எப்படி உங்களுக்குப் புத்திமதி கூறாமல் இருக்க முடியும்? எனவே நான் உங்களை விட்டுவிடத் துணியமாட்டேன்.
ஓ! இளைஞர்களே, நீங்கள் எல்லோரும் பிரசங்கியின் வாக்கியங்களை மனதினுள் பொக்கிஷமாகப் பாதுகாத்து வையுங்கள்: "வாலிபனே, உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிபத்தின் நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி" (பிரசங்கி 11:9). காரியம் இப்படியிருக்கையில் எந்த மனிதனாவது அலட்சியமாகவோ, கவலையற்றோ இருக்க முடியுமா? உலக வாழ்க்கையே போதுமானது என நினைத்து, மரிப்பதற்கு ஆயத்தமில்லாமல் இருப்பவர்களைப் போன்ற முட்டாள்கள் யாரும் கிடையாது. வருங்காலத்தைக் குறித்த மனிதனுடைய விசுவாசமற்ற தன்மை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏசாயா மிகவும் தெளிவாக இதைத் தீர்க்கதரிசனமாக முன்னுரைத்திருக்கிறார்: "எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்?" (ஏசாயா 53:1). இயேசுக்கிறிஸ்துவும் அதையே குறிப்பிடுகிறார்: "மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ?" (லூக்கா 18:8). தேவனுடைய நியாயாசனத்திலே உங்களில் அநேகரைக் குறித்துக் கர்த்தர் 'அவர்கள் விசுவாசிக்கவில்லை' என்று கூறுவாரோ என நான் மிகவும் பயப்படுகிறேன். நீங்கள் வெகுசீக்கிரமாய் இந்த உலகத்தை விட்டு கடந்துபோய், விழித்தெழும்போது 'மரணமும் நியாயத்தீர்ப்பும் உண்மையாகவே இருக்கிறதே!' என்பதைக் காலங்கடந்து உணர்ந்துகொள்வீர்களோ என அஞ்சுகிறேன். இவைகளினிமித்தமாகவும் உங்களைக் குறித்து நான் பயப்படுவதால் உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.
இ. எதிர்காலத்தைத் தீர்மானித்தல்
இப்பொழுது இளைஞர்கள் வாழுகின்றதான வாழ்க்கை முறையே அவர்களுடைய எதிர்காலத்தை எல்லா வகையிலும் நிர்ணயிப்பதாயிருக்கிறது. ஆனால், அவர்கள் அதை மறந்துபோனது போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவனுடைய முழுவாழ்க்கையையும் விதைக்கும் காலம் வாலிப வயது. அவனுடைய சொற்ப ஜீவிய காலத்தை ஒழுங்குபடுத்துவது வாலிப வயது. அவனுடைய வாழ்க்கையைத் திசை திருப்புவதும் வாலிப வயதே! விதையைக் கொண்டு மரத்தின் தரத்தை நாம் நிர்ணயிக்கலாம். பூக்கும் நிலையிலேயே பழங்கள் எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதைக் கணிக்கலாம். வசந்தத்தைப் பார்த்து அறுப்பு எப்படியிருக்கும் எனக் கூறலாம். காலைப்பொழுதின் மேகமூட்டத்தைக் கொண்டு அந்த நாளின் வானிலையைக் கூறலாம். ஒருவனுடைய வாலிப வயதின் குணாதிசயங்களைக் கொண்டு, பெரும்பாலும் அவன் முதிர்ச்சியடைந்த நிலையில் இப்படித்தான் இருப்பான் என்பதைத் தீர்மானிக்கலாம்.
இளைஞர்களே, ஏமாந்து போகாதீர்கள். வாலிப நாட்களைச் சிற்றின்பங்களிலும், கேளிக்கைகளிலும் கழித்துவிட்டு, சற்று வயது வந்த பிற்பாடு தேவனிடம் வந்து அவருக்குப் பிரியமாக நடந்துகொள்ளலாம் என நினைக்காதிருங்கள். வாழ்வின் ஆரம்ப காலத்தை ஏசாவைப் போலக் களியாட்டங்களில் கழித்துவிட்டு, மரிக்கும் தறுவாயில் யாக்கோபைப் போலப் பக்தனாக மாறிக்கொள்ளலாம் என ஒருபோதும் கனவு காணாதீர்கள். அப்படி நீங்கள் நினைப்பது தேவனையும் உங்கள் ஆத்துமாவையும் கேலி செய்வது போலாகும். வாலிப நாட்களின் பெலனையும் சக்தியையும் உலகத்துக்கும் சாத்தானுக்கும் கொடுத்துவிட்டு, பெலனற்றுப் போகும் முதிர்வயதில் எஞ்சியிருக்கும் மீதிகளை ராஜாதிராஜனுக்குக் கொடுக்கலாம் என நீங்கள் நினைப்பது எவ்வளவு அறிவீனம்? அப்படி ஒருபோதும் செய்ய முடியாது என்பதை நீங்கள் முடிவில்தான் உணருவீர்கள்.
கடைசியில் மனந்திரும்பிக்கொள்ளலாம் என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறீர்கள். தேவனின் உதவியில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். மனந்திரும்புதலும் விசுவாசமும் தேவன் அருளும் ஈவுகள். வெகுநாட்களாக அவர் அதை உங்களுக்குக் கொடுப்பதற்காக வைத்துக்கொண்டிருந்தபோதும், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டாதபடியினால் அவர் அதை இனிக் கொடுக்க மாட்டார். 'நீ என்னிடம் வந்தால் உடனடியாக உனக்கு மனந்திரும்புதலை அளிக்க இருக்கிறேன்; ஆனால், அதே சமயத்தில் நீ காலதாமதம் செய்துகொண்டே இருப்பாயானால் அதை அடையாமலே போவாய்' எனத் தேவன் எச்சரிக்கிறார். தனது பாவங்களுக்காக மனந்திரும்புகிற பாவியை, கடைசித் தருணமாயிருந்தாலும், அவன் நம்பிக்கையிழந்து போகாதபடிக்கு மன்னித்து இரட்சிக்கிற சிலாக்கியத்தைத் தான் கொண்டிருப்பதைக் காண்பிப்பதற்காகவே, சிலுவை மரத்திலே மனந்திரும்பிய கள்ளனை உதாரணத்திற்கு மன்னித்துக் காண்பித்தார். ஆனால் அப்படி மன்னிக்கப்பட்டது ஒரே ஒருவன் மாத்திரந்தான் என்பதை எல்லாருக்கும் எச்சரிப்பாகவும் வைத்திருக்கிறார். கடைசித் தருணத்தில் மன்னிக்கிற உரிமையைத் தேவன் கொண்டிருக்கிறார்; ஆனால், அப்படி மன்னிக்கப்படும் பாக்கியத்தை நீ அடைவாய் என்பது என்ன நிச்சயம்? "தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களை அவர் முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்" (எபிரேயர் 7:25). இப்படியாக எழுதிய அதே பரிசுத்த ஆவியானவர்தான் இந்த எச்சரிப்பையும் கூறுகிறார் என்பதைக் கவனியுங்கள்: "நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனுமில்லை. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்" (நீதிமொழிகள் 1:24-26).
இஷ்டமான சமயத்தில் தேவனிடம் வந்துவிடலாம் என்பது சுலபமல்ல. தேவபக்தனாகிய ஒரு போதகர் கூறினார்: "பாவத்திற்குப் போகிற வழி என்பது மலையிலிருந்து இறங்குவது போன்றது. ஒருவன் நிறுத்த வேண்டுமென விரும்பினாலும் அது கட்டுப்படாமல் அவனை வெகுசுலபமாக இறக்கத்திற்குக் கொண்டுவந்துவிடும்". பரிசுத்த காரியங்களில் ஆர்வமும் திட உறுதியும் அவ்வளவு இலகுவாக வந்துவிடுவதில்லை. அவை அந்த நூற்றுக்கதிபதியின் வேலைக்காரரைப் போன்றதல்ல; 'போ' என்றால் போய்விடுவதும், 'வா' என்றால் வந்துவிடுவதும் அல்ல. அது காண்டாமிருகத்தைப் போன்றது (யோபு 39:9). உன்னிடத்தில் பணிந்து வர சம்மதிக்காது. அவைகள் உன் சத்தத்துக்குக் கீழ்ப்படியாது; உன் கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளாது. நித்தியத்துக்குரிய காரியங்களில் இப்படிப்பட்டவை உனக்குச் சம்பவித்துவிடாதபடிக்கு, வாலிபனே நீ எச்சரிக்கையாயிரு.
நான் எதற்காக இவைகளையெல்லாம் சொல்லுகிறேன்? பழக்கவழக்கங்கள் நம்மை அடிமைப்படுத்தக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பதால் சொல்லுகிறேன். இளமையில் நல்ல பழக்கவழக்கங்களைப் பழகிக்கொள்ளாதவர்களைப் பிறகு மாற்றுவது கடினம் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். முதுமையில் மாற்றிக்கொள்வது மிகவும் அரிதாகும். பழக்கவழக்கங்கள் நம்மில் ஆழமாக வேரூன்றிவிடுகின்றன. இருதயத்திலே பாவம் தனது கூட்டைக் கட்டிக்கொள்ள நீ அனுமதித்தாயானால், அதை எவ்வளவு விரட்டினாலும் அது உன்னை விட்டுப் போகாது. பழக்கங்கள் இயற்கை சுபாவமாகவே மாறிப்போய்விடுகின்றன. அவை முப்புரி நூலைப் போன்றவை; எளிதில் அறாது. எரேமியா தீர்க்கதரிசி அழகாகச் சொல்லுகிறார்: "எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப் பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்" (எரேமியா 13:23). தீய பழக்கவழக்கங்கள் மலையின் அடிவாரத்தை நோக்கி ஓடுகின்ற பாறையைப் போன்றது. எவ்வளவு தூரத்திற்கு அது உருளுகின்றதோ அவ்வளவுக்கு அதன் வேகம் அதிகரிக்கிறது; கட்டுப்படுத்த முடியாதபடிக்குத் தறிகெட்டு ஓடுகிறது. மேலும், அவை மரங்களைப் போன்றவை. வெகுநாட்களாக இருக்கும் பழக்கவழக்கங்கள், நல்ல வைரம் பாய்ந்த மரத்தைப் போன்று உறுதியோடு இருக்கும். தேக்கு மரம் சிறிய செடியாக இருக்கும்போது ஒரு சிறுவன்கூட அதை எளிதில் பிடுங்கிவிட முடியும். ஆனால், அதுவே நாள்பட வளர்ந்து பெரிய மரமாகும்போது நூறு பலசாலிகள் சேர்ந்தால்கூட அதை அசைக்க முடியாது. அதுபோலத்தான் பழக்கவழக்கங்களும் இருக்கின்றன. எவ்வளவு நாள்பட அவை ஒருவனிடத்தில் இருக்கிறதோ அவ்வளவுக்கு அது அசைக்கப்பட முடியாமல் உறுதியோடு விளங்கும்; அவைகளை நீக்கிப்போடுவது சுலபமல்ல. தீய பழக்கவழக்கங்கள் பாவத்திற்குத் தீனி போட்டு வளர்க்கின்றன. பாவத்தை முதலில் செய்யும்போது, அது பயத்தை மெதுவாக நீக்கிவிடுகிறது. இருதயத்தைக் கடினப்படச் செய்கிறது; மனசாட்சியின் எச்சரிப்பின் குரலை மழுங்கச் செய்கிறது. பாவத்தை மேலும் செய்யும்படிக்கு நம்மைத் தூண்டிவிடுகிறது.
இளைஞர்களே, நான் உங்களை மிகவும் அதிகமாகப் பயப்படுத்துவதாக நீங்கள் நினைக்கலாம். நான் பார்த்தது போன்ற முதியவர்களை நீங்கள் சந்தித்தால் அப்படி நினைக்கமாட்டீர்கள். செத்தவர்களைப் போன்று உணர்ச்சியற்றவர்களாக, வறண்டு போனவர்களாக, இரக்கமற்றவர்களாக, மரித்தவர்களாக, கடினப்பட்டுப் போனவர்களாக வாழ்வின் விளிம்பிலே அவர்கள் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஆத்தும காரியங்களைக் குறித்து நீங்கள் ஏனோதானோவென இருக்க முடியாது. நல்ல பழக்கமோ, தீய பழக்கமோ அது நாள்தோறும் உங்கள் ஆத்துமாவில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நீங்கள் ஒன்று தேவனுக்கு அருகாமையிலே கிட்டிச் சேர்ந்துகொண்டிருக்கிறீர்கள், அல்லது அவரை விட்டு விலகிப் போய்க்கொண்டிருக்கிறீர்கள். மனந்திரும்பாமல் கடந்துபோகின்ற ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கும் பரலோகத்திற்கும் இடையிலுள்ள சுவர் உயரத்திலும் அகலத்திலும் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆழமானதும் அகலமானதுமான மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுக்கொண்டே போகிறது. பாவத்திலேயே தொடர்ந்து தரித்திருப்பது எவ்வளவு கடினமான பாதையை ஏற்படுத்திவிடுகிறது என்பதைக் குறித்துப் பயந்து நடுங்குங்கள். இப்போதே தகுந்த வேளை. கொடிய நாட்கள் வந்து உங்களை எதுவும் செய்யவிடாதபடிக்கு இன்றே செயல்படுங்கள். வாலிப நாட்களிலே நீங்கள் கர்த்தரைத் தேடிக் கண்டடையாவிட்டால், நீங்கள் ஒருபோதும் அவரைக் கண்டுபிடிக்காதபடிக்கு உங்கள் பழக்கவழக்கங்களே மிகவும் வலிமை பெற்று உங்கள் ஆத்துமாவை மேற்கொண்டுவிடும். இவைகளைக் குறித்து நான் பயப்படுவதால் உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.
ஈ. சாத்தானைச் சமாளித்தல்
வாலிபர்களின் ஆத்துமாக்களை அழித்துப்போடச் சாத்தான் விசேஷித்த தீவிரத்தோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறான். அவர்களோ இதை உணராமல் இருக்கிறார்கள். உங்களை விட்டுவைத்தால், நீங்கள் அடுத்த சந்ததியையாவது தேவனுக்குள் கொண்டுவர வேண்டுமென முயற்சிப்பீர்கள் என்பது சாத்தானுக்குத் தெரியும். ஆகவே, அவன் அந்தந்த காலத்துக்கு ஏற்ப புதிய உத்திகளைத் தயாரித்து உங்களைத் தன் வசப்படுத்திக்கொள்ளுகிறான். அவனுடைய சூழ்ச்சிகளைக் குறித்து நீங்கள் அறியாமலிருக்கக் கூடாது.
தனது அதிபுத்திசாலித்தனமான தந்திரங்களைச் சாத்தான் வாலிபப் பருவத்தினர் மீது பிரயோகிக்கவே முயற்சிப்பான். உங்கள் இருதயத்தைத் தன்வசமாக்கிக்கொள்ளும்படிக்கு அவன் தன்னுடைய தந்திரமான வலைகளை மிகவும் கவனத்தோடு பின்னுகிறான். அதற்குள் தன்னுடைய மாயமான வலைகளைப் போட்டு உங்களைக் கவர்ந்திழுக்க வகை செய்கிறான். மிகுந்த ஞானத்தோடு தனது சோதனைகளாகிய விஷங்களைக் கவர்ச்சிகரமான காரியங்களுக்குள் மறைத்துவைத்து, தனது கடையைக் கவர்ச்சிகரமாக உங்கள் முன்னாலே விரிக்கிறான். சாத்தானுக்கு மிகவும் விருப்பமான ஆத்துமாக்கள் வாலிப ஆத்துமாக்கள்தான். கர்த்தர்தாமே சாத்தானைக் கடிந்துகொண்டு உங்களை அவன் வலையில் சிக்காமல் விடுவிப்பாராக!
இளைஞர்களே, சாத்தானின் கண்ணிகளுக்கு எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் கண்களில் எதையாவது தூவிவிட்டு, நீங்கள் உண்மையைப் பாராதபடிக்கு உங்கள் மனதைக் குருடாக்குவதில் அவன் வல்லவன். நல்லவைகளைக் கெட்டதென்றும், தீயவைகளை நல்லதென்றும் உங்களை நம்பப்பண்ணுவான் (ஏசாயா 5:20). பாவத்திற்கு நல்ல வண்ணசாயம் பூசி, அதைக் கவர்ச்சிகரமானதாகத் தோன்றப்பண்ணி, பாவத்தையே நீங்கள் நேசிக்கும்படியாக மாற்றிவிடுவான் (2 கொரிந்தியர் 11:14-15). உண்மையான பக்தியை மாற்றிப்போட்டு, பக்திக்குத் தவறுதலான விளக்கங்களைக் கொடுத்து, அதைக் கேலிச்சித்திரமாக்கி, நீங்கள் தேவபக்தியை வெறுக்கும்படியாகச் செய்துவிடுவான். பொல்லாதவைகளில்தான் அதிக இன்பம் இருப்பது போலக் காண்பிப்பான்; ஆனால், அதிலுள்ள விஷத்தன்மையை நீங்கள் காணாதபடிக்கு மறைத்துவிடுவான். சிலுவையின் பாதையை மிகவும் கடினமானதாக உங்கள் கண்களுக்கு முன்பாகக் காண்பித்து, அதினால் அடையக்கூடிய நித்திய கிரீடங்களை மறைத்துவிடுவான். தனக்குச் சேவை செய்தால், சகல இன்பத்தையும் தருவதாக கிறிஸ்துவிடம் சொன்னது போலவே உங்களிடமும் கூறுவான் (மத்தேயு 4:8). ஒருவிதமான தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொள்ளச் செய்து (2 தீமோத்தேயு 3:5), பக்தியின் உண்மையான வல்லமையை மறந்துவிடுவதற்குச் சாத்தான் உங்களுக்கு உதவியும் செய்வான். உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் நீங்கள் இருக்கும் இத்தருணத்தில், "இப்போதே தேவனுக்குச் சேவை செய்ய என்ன அவசரம்? வாழ்க்கையை இப்போது அனுபவித்துக்கொள். சற்று வயதான பிறகு தேவனுக்குச் சேவை செய்யலாம்" என உங்களுக்கு யோசனை கூறுவான். ஆனால், வாழ்வின் இறுதிகட்டம் வந்த பிறகோ, "இனி உன்னால் ஒன்றும் செய்ய முடியாது; காலதாமதம் ஆகிவிட்டது" எனக்கூறி உங்களைப் பார்த்து நகைப்பான். வாலிபர்களே, ஏமாந்துபோகாதிருங்கள்.
இந்த பயங்கரமான எதிரியிடமிருந்து வரக்கூடிய ஆபத்துக்களைக் குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரியாதிருக்கிறது. உங்களுடைய அறியாமையை எண்ணித்தான் நான் மிகவும் கலக்கமடைகிறேன். உங்களைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கிற ஆபத்தான பள்ளங்களையும், வழுக்கிவிழக்கூடிய சறுக்கலான இடங்களையும், கண்ணிகளையும் அறியாதவர்களாகக் குருடரைப் போல வாழ்க்கைப் பாதையில் நடந்துசென்று கொண்டிருக்கிறீர்கள் (லூக்கா 6:39).
உங்களுடைய எதிரி மிகவும் வல்லவன். அவன் உலகத்தின் அதிபதி என அழைக்கப்படுகிறான் (யோவான் 14:30). இயேசுக்கிறிஸ்துவின் ஊழியக்காலம் முழுவதும் அவரை எதிர்த்துக்கொண்டேயிருந்தான். ஆதாம் ஏவாளை ஏமாற்றி, அவர்களை விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும்படியாகச் செய்து, அதன் மூலமாக உலகத்துக்குள் பாவத்தை வரவழைத்துவிட்டான் (ஆதியாகமம் 3). தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவனாகிய தாவீதைக்கூட சோதனைக்குட்படுத்தி, தாவீது தனது வாழ்நாளின் இறுதிப்பகுதி முழுவதையும் சஞ்சலத்தோடு கழிக்கும்படியாகச் செய்துவிட்டான் (2 சாமுவேல் 11). கர்த்தராலே தெரிந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவையும் சோதனைக்குட்படுத்தி, கர்த்தரை மறுதலிக்கும்படியாகத் தூண்டிவிட்டான் (மத்தேயு 26:69-75). இளைஞர்களே! இந்த விரோதியைச் சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள்.
உங்கள் எதிரி ஓயாதவன். அவன் தூங்குவதே இல்லை; எவனை விழுங்கலாமோ என ஓயாமல் அலைந்துகொண்டிருக்கிற கெர்ச்சிக்கிற சிங்கம்போல வகைதேடிச் சுற்றித்திரிகிறான் (1 பேதுரு 5:8). எப்போதும் பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்துகொண்டே இருக்கிறான் (யோபு 1:7). உங்களுடைய ஆத்துமாவைக் குறித்து நீங்கள் வேண்டுமானால் அலட்சியமாக இருக்கலாம்; ஆனால், சாத்தான் அப்படியில்லை. உங்கள் ஆத்துமாவைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள ஓயாமல் பாடுபடுகிறான். தன்னைப்போலவே நீங்கள் ஒவ்வொருவரும் அதிகக் கேடான நிலையை அடைய வேண்டுமென விரும்பி, உங்களை அவனுடையவர்களாக்கிக்கொள்ள முயற்சி செய்துகொண்டேயிருக்கிறான். இந்த சத்துருவைக் குறித்துக் குறைவாக மதிப்பிட்டுவிடாதீர்கள்.
உங்களுடைய எதிரி தந்திரமானவன். ஏறக்குறைய ஆறாயிரம் வருஷங்களாக அவன் மனிதர்களுடைய இருதயத்தை ஆராய்ந்துகொண்டேயிருக்கிறான். ஆகவே இந்த விஷயத்தில் அவன் மிகவும் அனுபவசாலி என்பதை மறந்துவிடாதீர்கள். மனித இருதயத்தின் பலவீனங்கள், தந்திரமான எண்ணங்கள், முட்டாள்தனங்கள் இவை யாவும் சாத்தானுக்குத் தெளிவாகவே தெரியும். மனித இருதயங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய விதவிதமான சோதனைகளை அவன் ஏராளமாக உண்டுபண்ணுகிறான். அவனுக்கு மறைவாக எந்த இடத்திலும் நீங்கள் போய் ஒளிந்துகொள்ள முடியாது. பெரிய பட்டணங்களுக்குப் போங்கள், அவன் அங்கேயும் இருப்பான்; அல்லது பாலைவனத்திற்கே போங்கள், அவன் அங்கேயும் இருப்பான். குடிகாரர்கள் மத்தியிலும், பரியாசம்பண்ணுகிறவர்களின் மத்தியிலும் நீ போய் உட்கார்ந்திருந்தால் அவன் அங்கேயிருந்து உனக்கு உதவிகள்கூட செய்வான். திருச்சபைக்குச் சென்று பிரசங்கம் கேட்க நீ உட்கார்ந்திருக்கும்போது உனது கவனத்தைத் திசைதிருப்பும்படியாக அங்கேயும் வருவான். இந்த விரோதியைக் குறித்துத் தாழ்வாக எண்ணிவிட முடியுமா?
இளைஞர்களே, இந்த விரோதியை நீங்கள் சற்றும் நினைத்துப்பார்க்காவிட்டால்கூட அவன் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறான். உங்களை அழித்துப்போடுவதையே அவன் குறியாகக் கொண்டு, மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறான். அவனுடைய போராட்டத்திற்கு வெகுமதியாக உங்களைப் போன்ற வாலிபர்களின் ஆத்துமாவையே எதிர்பார்த்து உழைக்கிறான். ஒன்று நீங்கள் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள் அல்லது அவருடைய சாபத்தைப் பெறுவீர்கள் என்பதை அறிந்திருக்கும் அவன், உங்களைத் தன்னுடைய ராஜ்யத்திற்கு உரியவர்களாக ஆக்கிக்கொள்வதற்காகப் பலவிதமான உபாய தந்திரங்களை உங்கள் வாழ்வின் ஆரம்பகால முதலே செய்ய ஆரம்பித்துவிடுகிறான். விளையும் பயிரை முளையிலேயே கிள்ளிவிட்டால் தனக்கு வேலை மிகவும் சுலபமாக முடிந்துவிடும் என்பதை நன்றாக அறிந்துவைத்திருப்பவன் சாத்தான். எலிசா தீர்க்கதரிசியின் வேலைக்காரனுடைய கண்கள் திறக்கப்பட்டதுபோல உங்களுடைய கண்களும் திறக்கப்படுமானால் எவ்வளவு நன்மையாயிருக்கும்! (2 ராஜாக்கள் 6:13-17). உங்களுடைய சமாதானத்தைக் குலைத்துப்போடுவதற்குச் சாத்தான் என்னென்ன திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கக்கூடுமானால் எவ்வளவு நன்றாயிருக்கும்! நீங்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, என்னால் உங்களை எச்சரிக்காமல் இருக்க முடியாது. உங்களை எச்சரிக்காமல் இருக்கத் துணியமாட்டேன். உங்களைச் சாத்தானின் பிடியிலும், அவனுடைய வஞ்சக வலையிலும் விழுவதற்கு விடமாட்டேன். எனவே நான் உங்களை எச்சரிக்கத்தான் வேண்டும். நான் உங்களுக்குப் புத்தி சொல்லத்தான் வேண்டும்.
உ. துன்பத்திலிருந்து காப்பாற்றுதல்
நீங்கள் அடையப்போகிற துயரத்திலிருந்து உங்களைக் காப்பாற்றி, தேவனுக்குரியவர்களாக்க வேண்டுமானால் உங்களுக்குப் புத்திமதி சொல்ல வேண்டியது அவசியம். பாவமானது அனைத்துத் துயரங்களையும் பிறப்பிக்கிறது. வாலிப வயதில் செய்கிற பாவந்தான் ஒருவனுக்கு அளவிடமுடியாத துயரங்களைக் கொண்டுவந்து சேர்க்கிறது. வாலிபப் பிராயத்தில் முட்டாள்தனமாகச் செய்த காரியங்கள், வீணாகக் கழித்த காலங்கள், செய்த தவறுகள், அவன் கொண்டிருந்த தவறான நட்புகள், ஆத்துமாவிலும் சரீரத்திலும் தனக்குத்தானே அவன் வருவித்துக்கொண்ட கேடுகள், சந்தோஷமாக இருப்பதற்குக் கொடுக்கப்பட்ட தருணங்களைத் தூக்கியெறிந்தது, உபயோககரமான வாய்ப்புகளை அலட்சியப்படுத்தியது; இவையெல்லாம் ஒரு மனிதனுடைய வாழ்நாளின் இறுதிப்பகுதிகளில் அவன் உள்ளத்தை மிகவும் குத்துகிறது. அதனால் அவன் உள்ளத்தில் நிறைந்த கசப்புகள் காணப்படுகின்றன. கடந்துபோன தனது வாலிப வாழ்க்கையை எண்ணி அவமானத்தினாலும் வெட்கத்தினாலும் தன்னைத்தானே கடிந்துகொள்ளுகிறவனாக வாழ்நாளின் எஞ்சிய பகுதிகளைக் கழித்துப்போடுகிறான்.
வாலிப நாட்களில் செய்த தவறுகளினாலே பலவித நோய்களுக்கு ஆளாகி உடல்நலக் குறைவு ஏற்பட்டதைக் குறித்துச் சில மனிதர்கள் உங்களுக்குச் சொல்லக்கூடும். எலும்புகள் வரைக்கும் வியாதியின் கொடூரம் தாக்கி, வாழவே வெறுத்துப்போனவர்களாக அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதைக் காணலாம். வாலிப வயதில் சரீர பலத்தையெல்லாம் வீணாக்கியதால் இப்போது பலமிழந்து, வெட்டுக்கிளியைக்கூடத் தூக்கியெறிய முடியாத பலவீன நிலையில் அவர்கள் காணப்படுவார்கள். வயதாவதற்கு முன்னாலேயே அவர்களுடைய கண்களின் பார்வை குன்றிவிடுகிறது. அவர்களுடைய பெலனெல்லாம் அற்றுப்போகிறது. வயதாவதற்கு முன்னாலேயே பலம் இழந்துபோய்த் தங்கள் சரீரம் அழிந்துகொண்டிருப்பதைக் கண்டு கலக்கமடைவார்கள். இப்படியான கசப்பான பாத்திரத்திலே பானம்பண்ணும்படியான நிலைமையை அவர்களே வருவித்துக்கொண்டார்கள்.
சோம்பேறித்தனத்தினால் ஏற்பட்ட விளைவுகளைக் குறித்துச் சிலபேர் உங்களுக்குச் சொல்லக்கூடும். படிப்பதற்குக் கிடைத்த பொன்னான காலத்தை அவர்கள் அலட்சியப்படுத்திவிட்டார்கள். தங்களுடைய மனதும் இருதயமும், அறிவையும் ஞானத்தையும் பெற்றுக்கொள்ளப் பக்குவமாயிருந்த காலத்திலே அதை அடைந்துகொள்ளாமல் வாலிப நாட்களை வீணாகக் கழித்துப்போட்டார்கள். இப்போது காலம் கடந்துவிட்டது. உட்கார்ந்து படித்துக் கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை; நேரம் கிடைத்தாலும் கற்கின்ற வலிமை போய்விட்டது. இழந்துபோன காலங்களை என்ன கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாது; இதுவும் கசப்பானதாக இருக்கிறது.
சரியான பாதையைத் தேர்ந்தெடுக்கத் தவறியதால் ஏற்பட்ட துயரங்களைக் குறித்து இன்னும் சிலபேர் சொல்லக்கூடும். அதன்காரணமாக அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமாகத் துயரப்பட நேர்ந்ததைக் காணலாம். அவர்கள் தங்கள் சுய இஷ்டத்தின் பிரகாரம் தங்கள் பாதையை வகுத்துக்கொண்டார்கள். யாருடைய ஆலோசனையையும் அவர்கள் கேட்கவில்லை. தவறானவர்களோடு அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட பழக்கவழக்கங்கள் அவர்களுடைய சந்தோஷத்தையே அழித்துவிட்டது. தங்களுக்குப் பொருத்தமில்லாத ஒரு தொழிலை அல்லது வாழ்க்கையைச் சிலர் தேர்ந்தெடுத்திருக்கலாம்; அதை இப்போதுதான் உணருகிறார்கள். காலம் கடந்த பிறகுதான் அவர்கள் தெளிவாகப் பார்க்கத் தொடங்குகிறார்கள். இப்போது தெரிந்தாலும் அதை மாற்றிக்கொள்ள முடியாத சிக்கலான நிலைமை உருவாகிவிட்டதே; இதுவும் ஒரு கசப்பான பானமாக இருக்கிறது.
இளைஞர்களே! நீங்கள் வாலிப வயதின் இச்சையினால் பாரமடையாமல் சமாதானமுள்ள மனசாட்சியை உடையவர்களாயிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அவைகள் உங்கள் இருதயத்தை மிகவும் ஆழமாகக் காயப்படுத்திவிடுமே! மனிதனின் உற்சாகத்தையே கொன்றுவிடக்கூடிய கொடிய விஷமுள்ள அம்புகளல்லவா அவை! ஆத்துமாவை ஊடுருவக்கூடிய இரும்பு அவை! உங்களைக் குறித்து நீங்களே இரக்கம் பாராட்ட வேண்டியதாயிருக்கிறது. கர்த்தரை வாலிப நாட்களிலே தேடுங்கள்; அப்போதுதான் அநேகம் கசப்பான கண்ணீர்களைத் தவிர்க்கலாம்.
இந்த உண்மையை யோபு அறிந்திருந்தார். "மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்" (யோபு 13:26) என்று அவர் சொல்லுகிறார். அதைப் போலவே அவருடைய நண்பன் சோப்பாரும், "அவன் எலும்புகள் அவனுடைய பாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்" (யோபு 20:11) என்று கூறுகிறார். தாவீதுங்கூட இதை உணர்ந்திருந்தார். கர்த்தரிடம் அவர் வேண்டுகிறார்: "என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்" (சங்கீதம் 25:7).
இதை நன்கு உணர்ந்திருந்த ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த தியடோர் பெஸா (Theodore Beza) என்கிற சீர்திருத்தவாதி தமது உயிலில் இவ்வாறு எழுதி வைத்திருந்தார்: "தேவனின் பெரிதான கிருபையால் 16 வயதிலேயே உலகத்திலிருந்து தேவனுக்காகப் பிரித்தெடுக்கப்பட்டதையே நான் மிகப்பெரும் சொத்தாகக் கருதுகிறேன்."
நீங்கள் போய் எந்த விசுவாசியிடமும் கேளுங்கள்; அவர்களும் இதைப் போலத்தான் கூறுவார்கள். "ஓ! நான் என்னுடைய இளமை நாட்களை மீண்டுமொரு முறைகூட வாழுவேன்", "நல்லவேளையாக நான் என் இளமைக்காலத்தை ஒழுக்கத்தோடு செலவிட்டேன்; நான் என்னுடைய வாழ்நாளின் ஆரம்பத்திலேயே தீய பழக்கவழக்கங்கள் என்னை அணுகிவிடாதபடி பாதுகாத்துக்கொண்டேன்", இப்படியெல்லாம் கூறுவார்கள். ஆரம்பத்தை அவர்கள் சரியாகத் தொடங்கினபடியால்தான் விசுவாச வீரர்களாக அவர்களால் வாழ முடிந்தது என்பதை அனைவருமே ஒத்துக்கொள்ளுவார்கள்.
இளைஞர்களே, வாழ்நாளின் முடிவில் வருத்தமடையாதபடிக்கு நான் உங்களைக் காப்பாற்ற விரும்புகிறேன். வாழ்நாள் முடிந்தபின்தான் நரகம் எவ்வளவு கொடியது என்கிற உண்மை தெரியவரும். தக்க நேரத்திலே புத்தியடைந்து கொள்ளுங்கள். இளமையில் விதைப்பதை முதுமை அறுவடை செய்யும். உங்கள் வாழ்க்கையிலேயே அருமையான பருவத்தைத் தீயவைகளுக்குக் கொடுத்துவிட்டு, அதன்காரணமாக முதுமையில் அவதிப்படாதிருக்க நாடுங்கள். நீதியின் விதைகளை விதையுங்கள். உங்கள் இருதயமாகிய நிலத்தை உழுது பண்படுத்துங்கள். முட்களுக்கிடையே உங்கள் விதை வளராது; ஆகையால் முட்களை அகற்றிப்போடுங்கள்.
பாவம் இப்போது உங்களுக்கு மிகவும் சிறியதாகத் தோன்றலாம். உங்கள் வாயிலிருந்து சுலபமாக வரும் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால் நாட்கள் போகப்போக நீங்கள் அதைத் திரும்பத் திரும்பச் சந்திக்க நேரிடும். அதன் வல்லமை அதிகமதிகமாகக் கிரியை செய்யத் தொடங்கும். அதை நீங்கள் விரும்பாவிட்டாலும் அது உங்களை வந்து தொடர்ந்து தாக்கிக்கொண்டேயிருக்கும். நாள்பட்ட காயங்கள் ஆறாத ஆழமான வடுக்களை ஏற்படுத்திவிடும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே ஈரமான இடத்திலே பதிந்த மிருகங்களின் காலடித்தடங்கள் அழியாத தடயங்களை ஏற்படுத்தியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வியக்கிறார்களல்லவா? அதுபோல, காலங்கள் பல மறைந்துபோனாலும் இளமையில் செய்த பாவத்தின் அடிச்சுவடு நினைவில் மறையாது நின்று மிகுந்த துயரத்தைக் கொடுக்கும். அதிலிருந்து தப்புவதற்காக உங்கள் வாலிப நாட்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
"அனுபவங்கள் பாடம் கற்பிக்கிறது" என்பது ஒரு வழக்கச்சொல். தீமையான அனுபவங்களின் மூலமாக நீங்கள் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்ளாதபடிக்குத் தப்ப வேண்டுமென்றிருக்கிறேன். தொடர்ந்து பிடிக்கின்ற இளவயதின் பாவங்களுக்கு விலகியோடித் தப்பித்துக்கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் புத்தி சொல்லுவதற்கு இதுதான் கடைசி காரணம்.
இளைஞர்களுக்கேயென சில விசேஷித்த ஆபத்துகள் உள்ளன. அவைகளைக் குறித்து எச்சரிக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. எல்லா ஆத்துமாக்களுமே பயங்கர ஆபத்தான நிலையில்தான் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். வயது ஒரு காரணமல்ல. எல்லோருமே ஒரு பந்தயத்தை ஓடி முடிக்க வேண்டியதாயிருக்கிறது. எல்லோருக்குமே போராட வேண்டிய ஒரு போராட்டம் இருக்கிறது. இருதயத்தை தாழ்த்த வேண்டியதாயிருக்கிறது, சரீரத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிருக்கிறது, சாத்தானை எதிர்க்க வேண்டியதாக இருக்கிறது. இதையெல்லாம் யாரால் செய்யக்கூடும் என்று நாம் அனைவருமே அங்கலாய்ப்போம். இருந்தாலும் ஒவ்வொரு வயதுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றபிரகாரமான விசேஷித்த பிரச்சனைகளும், சோதனைகளும், கண்ணிகளும் உண்டு. அவைகளை நாம் அறிந்து வைத்திருப்பது நல்லது. முன்னெச்சரிக்கை செய்யப்படுபவனே, தற்காத்துக் கொள்வதற்காகத் தன்னைப் பலப்படுத்திக் கொள்வான். நான் சொல்லப் போகிற இந்த ஆபத்துகளுக்கு எச்சரிப்பாயிருக்க வேண்டியதின் அவசியத்தை நான் உங்களுக்கு உணர்த்தி விட்டேனென்றால் உங்கள் ஆத்துமாக்களுக்கு நன்மை செய்தவனாவேன்.
அ) பெருமை
இளைஞர்கள் சந்திக்கிற ஒரு ஆபத்து பெருமை. இது உலகின் மிகப் பழமையான பாவம். உலகம் உருவாவதற்கு முன்னாலேயே இது இருந்தது என்றுகூட சொல்லலாம். சாத்தானும் அதன் தூதர்களும் விழக் காரணமாயிருந்தது பெருமையே. தேவன் தங்களுக்கு அளித்திருந்த நிலை போதாது என்கிற அகங்காரத்தினால் வீழ்ந்து போனார்கள். பெருமையினாலேயே அவர்கள் நரகத்தின் முதல் குடிமக்களானார்கள்.
ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தி விட்டதும் பெருமையே. தேவன் தங்களுக்குக் கொடுத்திருந்த இடத்தைவிட உயர்ந்த இடத்தில் இருக்கவேண்டியவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டதால் வந்த விளைவு அது. ஆதாமும் ஏவாளும் தங்களை உயர்த்த முயற்சித்ததால் விழ நேரிட்டது. உலகத்திலே பாவமும், துன்பமும், மரணமும் பிரவேசிக்க பெருமை காரணமாயிற்று.
நம் இருதயங்களில் பெருமை சுபாவத்திலேயே குடிகொண்டிருக்கிறது. நாம் பெருமையிலேயே பிறந்தவர்கள். நம்மைக் குறித்தே சுயதிருப்தி உடையவர்கள், நமக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணம் கொண்டவர்கள். அறிவுரைகளுக்குச் செவிகளை அடைத்துக் கொள்ளுதல்! கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மறுத்தல்! அவனவன் தன்தன் வழியிலே செல்ல விரும்புதல்! பெருமையின் அவதாரங்களாகிய இப்பேர்ப்பட்ட குணங்கள் மற்ற வயதினரைக் காட்டிலும் இளைஞர்களின் உள்ளத்தையே அதிகமாக ஆளுகை செய்கிறது.
புத்திமதிகள் வழங்கும்போது இளைஞர்கள் அடங்காத தன்மையாகவும், அகந்தையோடும், பொறுமையிழந்தவர்களாகவும் காணப்படுவது சர்வ சாதாரணமாயிருக்கிறது. தங்களைப் பிறர் மதிக்காமலும், தங்கள் அருமையை உணராமலும் இருப்பதாக எண்ணங்கொண்டு அவர்கள் கடுமையான வார்த்தைகளைப் பேசி மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதைக் காண்கிறோம். பெரியோர்கள் சொல்லும் புத்திமதியை அவர்கள் நின்று கேட்பதில்லை. எனக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்கள். தங்களுடைய சுயஞானத்தினாலே வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதியவர்களையும், தங்கள் உறவினரையும் முட்டாள்களாகவும், சிந்திக்கத் தெரியாதவர்களாகவும், விரைவான முடிவெடுக்கத் தெரியாதவர்களாகவும் எண்ணிக் கொள்கிறார்கள். தங்களுக்குப் போதனையோ, அறிவுரையோ எதுவுமே தேவையில்லை என்பதாகக் கற்பனை பண்ணிக் கொள்கிறார்கள். எல்லாவற்றையும் தாங்கள் புரிந்து கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள். எதையாவது குறித்து அவர்களுக்குச் சொல்லப் போனால் சீற்றம் கொள்கிறார்கள். இளங்குதிரை கடிவாளத்தை வெறுப்பது போல, கட்டுப்பாடுகளை வெறுக்கிறார்கள். எங்களை எங்களுடைய வழியிலே சுதந்திரமாக விடுங்கள் என்கிறார்கள். யோபு சொல்வதைப் போல தாங்கள் இருப்பதாக நினைக்கிறார்கள்: "ஆம் நீங்களே ஞானமுள்ள ஜனம், உங்களுடனே ஞானம் சாகும்" (யோபு 12:2).
இதைப் போன்றவன்தான் சாலமோனுடைய குமாரன் ரெகோபெயாம் என்பவன். அவன் தனது தகப்பனுக்கு ஆலோசனை கூறிவந்த முதியோர்களுடைய யோசனையின்படி நடவாமல், அனுபவமற்ற தன் வயதைச் சேர்ந்த இளைஞர்களுடைய ஆலோசனைக்குச் செவி கொடுத்தபடியினால், அதனால் விளைந்த விளைவுகளை அவன் அனுபவிக்க வேண்டியதாயிற்று. இந்த மாதிரியான முட்டாள்தனமான இளைஞர்கள் இன்று அநேகர் காணப்படுகிறார்கள்.
அவர்களில் ஒருவன்தான் கெட்டகுமாரன் உவமையில் வருகின்ற இளைய குமாரன். தனக்கு வரவேண்டிய பங்கை உடனடியாகப் பிரித்துத் தரும்படி சொத்துகளைக் கேட்டவன். தகப்பனுடைய பாதுகாப்பின் கீழே அடங்கி வாழ மனதில்லாமல், தன் இஷ்டப்படி வாழ்வதற்காகத் தூரத்தில் இருந்த நாட்டிற்குப் போக விரும்பினவன். சிறிய குழந்தை தாயின் கையை விட்டுவிட்டுத் தனியே நடக்கப் பார்ப்பது போல நடந்து கீழே விழுந்தான். பன்றிகளின் தவிட்டைத் தின்றபோதுதான் அவனுக்கு அறிவு வந்தது. அப்படிப்பட்ட இளைஞர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
வாலிபர்களே பெருமையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இந்த உலகத்திலே இரண்டு காரியங்களைக் காண்பது மிகவும் அரிதானது என்று சொல்லப்பட்டிருக்கிறது: ஒன்று தாழ்மையுள்ள இளைஞன், இரண்டாவது திருப்தியுள்ள முதியவன். இது மிகவும் அப்பட்டமான உண்மையாயிருக்கிறதை நான் காண்கிறேன்.
உன்னுடைய திறமையைக் குறித்தும், உன்னுடைய பலத்தைக் குறித்தும், அறிவைக் குறித்தும், தோற்றத்தைக் குறித்தும், சாமர்த்தியத்தைக் குறித்தும் பெருமை கொள்ளாதே. உன்னைக் குறித்தும், உன் ஆஸ்தியைக் குறித்தும் பெருமைப்படாதே. உன்னையும் உலகத்தையும் குறித்து நீ சரியாக விளங்கிக் கொள்ளாததால்தான் இவ்வித பெருமைகள் ஏற்படுகின்றன. உனக்கு வயது ஏறும்போதுதான் நீ இவைகளைச் சரியானவிதத்தில் பார்க்கத் தொடங்குவாய். பெருமை கொள்ள அவசியமேயில்லை என்பதை உணர்ந்து கொள்வாய். அறியாமையும், அனுபவமின்மையும்தான் பெருமைக்கு அஸ்திபாரமாக இருக்கிறது. அந்த அஸ்திபாரம் அகன்றுவிட்டால் பெருமை குணம் போய்விடும்.
தாழ்மையுள்ள ஆவியின் விசேஷத்தைக் குறித்து நமக்கு வேதாகமம் எத்தனையோ முறை கூறுகிறது. "எவனானாலும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்..." (ரோமர் 12:3) இருக்கும்படியாக வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது. "ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவன் என்று எண்ணிக் கொள்வானானால் ஒன்றையும் அறியவேண்டிய பிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை" (1 கொரிந்தியர் 8:2) என்று வேதாகமம் எவ்வளவு தெளிவாக எடுத்துரைக்கிறது. "மனத்தாழ்மையைத் தரித்துக் கொள்ளுங்கள்" (கொலோசியர் 3:12) என்று பவுல் கட்டளையிடுகிறார். "மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்" (1 பேதுரு 5:5) என்று பேதுருவும் குறிப்பிடுகிறார். அநேகருக்கு இது ஒரு கந்தையான ஆடையைப் போலத் தோற்றமளிப்பது என்ன பரிதாபம்!
இந்தக் காரியத்தில் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விட்டுச் சென்றிருக்கும் மாபெரும் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர் தமது சீஷர்களின் கால்களைக் கழுவினார். "நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்" (யோவான் 13:15). மேலும் "அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே" (2 கொரிந்தியர் 8:9) என்று அவரது தாழ்மையைக் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது. அதுமாத்திரமல்ல, "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும்... தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாகக் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்" (பிலிப்பியர் 2:6-8) என்றும் கூறப்பட்டுள்ளது. பெருமையாயிருப்பதென்பது சாத்தானைப் போலவும், பாவத்தில் விழுந்துபோன ஆதாமைப் போலவும் இருப்பதாகும். அது, கிறிஸ்துவைப் போல இருக்கமுடியாது. கர்வமுள்ள இருதயம் இயேசுவுக்கு ஏற்றதாக இருக்க முடியாது.
ஞானிகளிலேயே பிரதான ஞானியான சாலமோனை நினைத்துப் பாருங்கள். அவர் தன்னைக் குறித்து எப்படிப்பட்ட அபிப்ராயம் கொண்டிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்: "நானோவென்றால் போக்குவரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்" (1 ராஜாக்கள் 3:7). தன்னைச் சிறு பிள்ளையாகவே நினைக்கிறார். ஆனால், அவரது சகோதரனாகிய அப்சலோமுக்கோ வேறுவிதமான ஆவி இருந்தது. தனக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வமிருந்தது. "வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எவரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு, என்னைத் தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும்" (2 சாமுவேல் 15:4). இவனுடைய ஆவி, அவன் சகோதரனாகிய சாலமோனின் ஆவிக்கு முற்றிலும் வேறுபட்டதாய் இருப்பதைக் கவனியுங்கள். அவனுடைய இன்னொரு சகோதரனாகிய அதோனியாவும்: "நான் ராஜா ஆவேன் என்று சொல்லித் தன்னைத்தான் உயர்த்தினான்" (1 ராஜாக்கள் 1:5). தாழ்மையே சாலமோனுடைய ஞானத்திற்கு ஆரம்பமாயிருந்தது. தனது அனுபவத்தை அவர் எழுதுகிறார்: "தன் பார்வைக்கு ஞானியாய் இருப்பவனைக் கண்டாயானால், அவனைப் பார்க்கிலும் மூடனைக் குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்" (நீதிமொழிகள் 26:12).
வாலிபர்களே, இங்கே குறிப்பிட்ட வசனங்கள் யாவையும் உங்கள் இருதயத்திலே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சொந்தக் கருத்துகளைக் குறித்து அதிக நம்பிக்கையாய் இராதேயுங்கள். மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு, நான் நினைப்பது மாத்திரம்தான் சரி என்கிற எண்ணத்தை அகற்றிப் போடுங்கள். பெரியவர்களோ, முக்கியமாக உங்கள் பெற்றோரோ கூறும் கருத்து உங்களுடைய கருத்துக்கு எதிராக இருக்குமானால் உங்கள் கருத்தை நம்புவதை விட்டுவிடுங்கள். வயது அனுபவங்களைக் கொடுக்கிறது; ஆகவே அது மரியாதைக்குரியதாகும். யோபுவின் புத்தகத்திலே காணப்படுகின்ற எலிகூ என்பவனின் ஞானம் இவ்விஷயத்திலே காணப்பட்டது. "அவர்கள் தன்னைப் பார்க்கிலும் வயது சென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான்" (யோபு 32:4). அதன் பிறகு சொல்கிறான்: "நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்ராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்த பயந்திருந்தேன். முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்" (யோபு 32:6,7).
அடக்கமும் அமைதலும் இளைஞர்களுக்கு நல்ல ஆபரணங்களாக இருக்கின்றன. கற்றுக் கொள்வதற்கு ஒருபோதும் வெட்கப்படாதிருங்கள். இயேசுக்கிறிஸ்து தமது 12ஆம் வயதிலே அப்படிப்பட்டவராய் இருந்தார். அவரை தேவாலயத்தில் கண்டார்கள். போதகர்கள், ஞானிகளின் நடுவிலே அவர் உட்கார்ந்திருந்தார். "அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும் அவர்களை வினாவவும் கண்டார்கள்" (லூக்கா 2:46). உண்மையான புத்திசாலிகள் எப்போதும் கற்றுக் கொள்ளவே விரும்புவார்கள். தாங்கள் அறிந்திருப்பது மிகவும் குறைவானது என்றே அவர்கள் கூறுவார்கள். ஐசக் நியூட்டன் என்கிற மாபெரும் ஞானி, "அறிவாகிய மாபெரும் கடலின் கரையிலே ஒருசில விலையேறப்பெற்ற கற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் சிறுவன் நான்" எனக் கூறுவார்.
இளைஞர்களே, நீங்கள் புத்திசாலிகளாகவும், சந்தோஷமாகவும் இருக்க விரும்பினால், இந்தப் பெருமை குணத்தைக் குறித்து எச்சரிப்பாயிருங்கள்.
ஆ) சிற்றின்பங்களில் பிரியப்படுதல்
இளைஞர்கள் சந்திக்கும் அடுத்த ஆபத்து என்னவென்றால் சிற்றின்பங்கள். இளவயதில்தான் ஆசை இச்சைகள் அதிகமாகச் செயல்படும். அது, கட்டுக்கடங்காமல் அழுகிற சிறு குழந்தையைப் போலப் பிடிவாதமாகச் சிற்றின்பங்களை நாடிப் போகின்ற வயது. வாலிபவயதில்தான் நமக்குப் பெரும்பாலும் நல்ல சுகமும் தேகபெலனும் இருக்கும். மரணம் வெகு தொலைவில் இருப்பது போலிருக்கும். இந்த உலக வாழ்க்கையை அனுபவிப்பதுதான் எல்லாமே என்பது போலத் தோன்றும். வாலிபவயதுதான் பெரும்பாலானோருக்கு கவலையற்றதும், பொறுப்புகள் இல்லாததுமான காலமாக இருக்கும். ஆகவே சந்தோஷத்தை நாடிப் போவதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என்கிற உணர்வை வாலிபருக்குக் கொடுக்க இந்தக் காரணங்களெல்லாம் உதவியாயிருக்கின்றன. "நீ யாருக்கு அடிமை?" என்று வாலிபர்களிடம் இன்று கேட்டால், "சிற்றின்பங்களுக்கே நான் அடிமை" என்பதையே பலரும் சொல்லுவார்கள். அதுதான் அவர்களுடைய உண்மையான பதிலாக இருக்கும்.
வாலிபரே! இந்தச் சிற்றின்பங்களும் மோகமும் என்னவிதமான கனிகளைக் கொண்டுவரும் என்பதையும், அது உங்களுக்கு எப்படியெல்லாம் தீமை செய்யும் என்பதையும் நான் பட்டியலிட்டால் நேரமே போதாது. கேளிக்கைகள், விருந்துகள், குடி, சூதாட்டங்கள், சினிமாக்கள், நடனங்கள் இவை போன்றவற்றைக் குறித்து நான் சொல்லவும் வேண்டுமா? இவைகளில் சிக்கிக் கொண்டு கசப்பான அனுபவங்களைப் பெற்றவர்கள் கொஞ்சநஞ்சமில்லை. இவைகளெல்லாம் ஒருசில உதாரணங்களே.
சிற்றின்பங்களின் அடிப்படையான நோக்கம்: நேரம் போவதே தெரியாமல் உணர்ச்சிவசப்பட வைப்பது; மனதை சிந்திக்க விடாமல் குழம்பச் செய்வது; மாம்சத்துக்கும் உணர்ச்சிகளுக்கும் தீனி போடுவது. இவை போன்ற காரியங்கள் உங்களுடைய வாலிப வயதை மிகவும் வலுவாகத் தாக்கக் கூடியவை. சிற்றின்பங்களுக்கு இவை தமது அதிகாரத்தை வழங்கியிருக்கின்றன. "எச்சரிப்போடிருங்கள்... தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயிருப்பார்கள்" (2 தீமோத்தேயு 3:4) என அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிற எச்சரிப்புக்குச் செவி கொடுங்கள்.
நான் கூறுவதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்: உலகத்தின் இச்சைகளோடு நீங்கள் இணைந்திருப்பீர்களானால் அவை உங்களுடைய ஆத்துமாவைக் கொன்றுவிடும். மாம்சத்துக்கும், மனதின் இச்சைகளுக்கும் செவி கொடுத்தீர்களானால் அது நிச்சயமாக உங்கள் மனசாட்சியைக் கருகச் செய்து, இருதயத்தையும் கடினப்படுத்திவிடும். ஆரம்பத்தில் ஒன்றுமே ஆகாதது போலத்தான் தோன்றும்; ஆனால் நாளடைவில் அதன் கொடூரங்களைக் காண்பீர்கள்.
பேதுருவும் இதே புத்திமதியைக் கூறுகிறார்: "ஆத்துமாவுக்கு விரோதமாகப் போர் செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகுங்கள்" (1 பேதுரு 2:11). சிற்றின்பங்கள் ஆத்துமாவின் சமாதானத்தைக் குலைத்துப் போடும். ஆத்துமாவைப் பலன் இழக்கச் செய்து அதைத் தனக்கு அடிமையாகச் சிறைப்பிடித்துக் கொள்ளும். பவுல் அப்போஸ்தலன் சொல்லுவதைக் கவனித்துக் கேளுங்கள்: "விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள்" (கொலோசியர் 3:5). "கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்" (கலாத்தியர் 5:24). "நான் என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்" (1 கொரிந்தியர் 9:27) என்று பவுல் சொல்லுகிறார். பாவம் ஏற்படுவதற்கு முன்னால் ஆத்துமா மகிழ்ச்சியோடு சரீரமாகிய மாளிகையில் குடிகொண்டிருந்தது. ஆனால் பாவத்திற்குப் பின்னால் சரீரமானது கெட்டுப் போய், ஒழுக்கம் குலைந்துவிட்ட நிலையில் இருக்கிறது. அதைக் கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டியதாயிருக்கிறது. இப்போது சரீரம் ஆத்துமாவுக்கு உதவியாக இராமல், அது ஆத்துமாவுக்குத் தொந்தரவாயிருக்கிறது. ஆத்துமாவை முன்னேறவிடாமல் தடை செய்து கொண்டேயிருக்கிறது. நாம் மாம்சத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தி வைத்திருந்தோமானால் அது நமக்குச் சேவை செய்யக்கூடிய நல்ல வேலையாளாக இருக்கும். ஆனால் அதை ஆளும்படி விட்டுவிட்டோமானால் அது மிகவும் மோசமான எஜமானாகச் செயல்படும்.
மறுபடியுமாக அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுவதைக் கருத்தில் கொள்ளுங்கள்: "துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுங்கள்" (ரோமர் 13:14). இந்த வார்த்தைகள்தான் அகஸ்டின் என்கிற மனிதரை அவரது அடங்காத நிலையிலிருந்து மாபெரும் தேவபக்தனாக மாற்றியது. வாலிபர்களே! இந்த வார்த்தைகள் உங்கள் இருதயத்திலும் கிரியை நடப்பிக்க நான் வாஞ்சிக்கிறேன்.
உலகத்தின் ஆசை இச்சைகளின் மீது நாட்டம் வைத்தீர்களானால் அவை எதுவுமே நிறைவைத் தருவதில்லை என்பதையும், அவை மாயையாக இருக்கிறதென்பதையும் ஞாபகத்தில் வையுங்கள். இவை, வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டிருக்கும் வெட்டுக்கிளியைப் போன்றவை. அவைகளுக்குக் கிரீடம் போன்றவை கொடுக்கப்பட்டிருந்தாலும் தங்கள் வால்களில் அவைகள் கொடுக்குகளை உடையவைகளாயிருந்தன. வெளித் தோற்றத்தில் பிரமாதமாகத் தோன்றினாலும் உள்ளே கொடிய விஷத்தைக் கொண்டவை. அப்படியே மாயையான காரியங்களும் இன்பம் அளிப்பது போலத் தோன்றினாலும் அவை மனிதர்களின் ஆத்துமாக்களைச் சேதப்படுத்துகிறது. மின்னுவதெல்லாம் பொன் அல்ல அல்லவா? சுவையாக இருப்பவை எல்லாம் நல்லவை என்று கூறிவிட முடியாது. தற்காலிகமாகப் பெறும் இன்பங்கள் மெய்யான சந்தோஷத்தைத் தராது.
நீங்கள் போய் உங்களால் ஆன மட்டும் உலக சந்தோஷங்களை அனுபவித்துப் பாருங்கள். ஆனால் அதினால் உங்கள் இருதயத்துக்குள் திருப்தி ஏற்படாது. (நீதிமொழிகள் 30:15) -ல் காண்கின்ற அட்டையைப் போல் "இன்னும் தா தா" என்று திருப்தி இல்லாமல் உள்மனது கத்திக் கொண்டேயிருக்கும். மனதில் ஒரு வெற்றிடம் இருக்கிறது; அதை எதைக் கொண்டும் நிரப்ப முடியாது. தேவன் ஒருவர்தான் அதை நிரப்பக் கூடியவர். சாலமோன் அதை அனுபவித்து உணர்ந்து கொண்டார். உலக இன்பங்கள் யாவும் மாயையே என்பதை அறிந்து கொண்டார். அது மனதுக்குச் சஞ்சலத்தையே உண்டு பண்ணுகிறது. வெளிப்பார்வைக்கு, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை போல அழகாக, இன்பமாகத் தோற்றமளிக்கிறது. ஆனால் உள்ளேயோ சகலவித அசுத்தங்களும் நிறைந்ததாய், வருத்தத்தையே விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. காலம் கடந்து போவதற்குள் புத்திசாலித்தனமாகச் செயல்படுங்கள். உங்கள் கண்களுக்கு இன்பமாகத் தோன்றுகிற காரியங்கள் மீதும் "கொடிய விஷம்" என்று எழுதி வையுங்கள். மிகவும் நியாயமான இன்பங்களைக்கூட அளவு மீறாமல் மிதமாகவே அனுபவிக்க வேண்டும். அவைகளில் உங்கள் இருதயத்தைப் பறிகொடுத்து விட்டீர்களானால், உங்கள் ஆத்துமா அழிக்கப்பட்டுவிடும். எந்த இன்பமும், அதில் பாவம் இல்லை என்பது உறுதியாக்கப்பட்டதினால், அளவோடு உபயோகிக்கப்படலாம்.
இளைஞர்களே, ஏழாம் கற்பனையைக் கொண்டு நான் உங்களை எச்சரிக்காமல் விடமாட்டேன். (யாத்திராகமம் 20:14) -யை ஞாபகத்தில் வையுங்கள்: "விபசாரம் செய்யாதிருப்பாயாக". விபசாரம், வேசித்தனம், மற்ற எந்த அசுத்தமும் உங்கள் வாழ்வில் பிரவேசிக்க விடாதிருங்கள். இந்தக் கற்பனையைக் குறித்து மிகவும் தெளிவாக விவரமாக இளைஞர்களுக்குச் சொல்லப்பட வேண்டியது மிகவும் அவசியமாயிருக்கிறது என நான் எப்போதுமே நினைப்பேன். தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும் இந்தப் பாவத்தைக் குறித்துப் பேசியிருப்பதைப் பார்க்கிறேன். நமது சீர்திருத்த சபைகளில் இந்த விஷயத்தை எவ்வளவாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறேன். அநேக இளைஞர்கள் ரூபனைப் போலும், ஒப்னி பினெகாஸைப் போலும், அம்னோனைப் போலும் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது எனது மனசாட்சியின் பிரகாரம் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. இந்தக் கற்பனையிலுள்ள பாவத்தைக் குறித்து உலகமானது பேசாமல் ஏன் மௌனத்தைக் கடைப்பிடிக்கிறது என நான் வியந்து போகிறேன். "இளைஞர்களின் பாவம்" எனக் கருதப்படும் இந்தப் பாவத்தைக் குறித்து எச்சரிக்காமல் இருந்தால் அது தவறும், வேதத்திற்கு விரோதமான செயலுமாக நான் நினைக்கிறேன்.
ஏழாம் கற்பனையை மீறுவது மற்ற எல்லாப் பாவங்களைக் காட்டிலும் கொடிய விளைவுகளைக் கொண்டுவரும். (ஓசியா 4:11) சொல்வது போல, "வேசித்தனமும், திராட்சரசமும், மதுபானமும் இருதயத்தை மயக்கும்". ஒரு மனிதன் செய்த எந்தப் பாவங்களைக் காட்டிலும் இந்தப் பாவம்தான் ஆழமான என்றும் மறையாத தழும்பை அவனில் ஏற்படுத்திவிடும். ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஆயிரக்கணக்கானவர்களை இந்தப் பாவம் விழத் தள்ளுகிறது. தேவனுடைய பக்தர்களைக்கூட இந்தப் பாவம் பதம் பார்த்துவிடுகிறது. லோத்து, சிம்சோன், தாவீது போன்றவர்களையும் இது தீண்டியது. நமக்கு பயத்தை வருவிப்பதாக இருக்கிறது. இந்தப் பாவத்தை மனிதன் சாதாரணமாக நினைத்துவிட முடியாது. இந்தப் பாவத்தைக் குறித்துச் சாத்தானுக்கு விசேஷித்த சந்தோஷம் உண்டு. ஏனெனில் சாத்தான் அசுத்த ஆவியாக இருப்பதால் அசுத்த காரியங்களில் சாத்தானுக்கு ஏக சந்தோஷம்.
இளைஞர்களே, நீங்கள் நல்ல வாழ்க்கையை அடைய வேண்டுமானால், "வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்" (1 கொரிந்தியர் 6:18). "இப்படிப்பட்டவைகளின் நிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண் வார்த்தைகளினால் மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள்" (எபேசியர் 5:6-7). அந்தவிதமான சந்தர்ப்பங்களுக்கு விலகியோடுங்கள். அக்காரியங்களில் உங்களைச் சிக்க வைக்கும் நண்பர்களை விட்டு விலகுங்கள். உங்களைச் சோதனைகளில் விழப்பண்ணுகிற இடங்களுக்குப் போகாமல் தவிர்த்து விடுங்கள். நமது ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து இது சம்பந்தமாகக் கூறும் புத்திமதிகளைக் கவனித்து மனதில் வையுங்கள்: "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரம் செய்தாயிற்று. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்" (மத்தேயு 5:28-30). பரிசுத்த யோபைப் போல, "என் கண்களோடே உடன்படிக்கை பண்ணினேன்" (யோபு 31:1). அக்காரியங்களைக் குறித்துப் பேசுவதற்கும் இடங்கொடாதீர்கள். அவைகளின் பேர்முதலாய்ச் சொல்லக்கூடாத காரியங்களில் இதுவும் அடங்கும். தாரைத் தொட்டால் அது ஒட்டிக் கொள்ளத்தான் செய்யும். அவ்வித பாவத்தைக் குறித்த சிந்தனையை மனதில் வளர்க்கக் கூடாது. அவைகளை எதிர்த்து நில்லுங்கள், அவைகளை அழித்துப் போடுங்கள். அந்தப் பாவம் உங்களைத் தீண்டி விடாதபடிக்கு ஜெபம் செய்யுங்கள். அதற்கு இடங்கொடாமலிருப்பதற்காக எதையும் இழப்பதற்குத் தயாராயிருங்கள். மனதிலே கற்பனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலமாகவும் பாவம் வளர்ந்து பெருகும். ஆகவே உங்கள் சிந்தைகளையும் காத்துக் கொள்ளுங்கள். சிந்தையைக் காத்துக் கொண்டீர்களானால், செயல்களையும் காத்துக் கொண்டவர்களாவீர்கள்.
நான் கூறிய இந்த எச்சரிப்புகளையெல்லாம் கவனமாகக் கேளுங்கள். மற்றவைகளை மறந்தாலும், இந்த ஆபத்தைக் குறித்து மறந்து போகாதீர்கள்.
இ) சிந்தனையின்மை
யோசனையற்றவர்களாய் இளைஞர்கள் இருப்பதுதான் இன்னுமொரு ஆபத்து. சிந்திக்காமல் இருப்பதுதான் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் நித்தியமாக அழிந்து போகக் காரணம். மனிதர்கள் விளைவை யோசிப்பதில்லை. தங்களைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பதில்லை. தற்போது தாங்கள் இருக்கிற நிலைமை பிற்காலத்தில் உள்ள விளைவுகளைக் கொண்டுவரும் என்பதைக் குறித்து ஒருபோதும் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள். முடிவில்தான் விழித்துக் கொள்வார்கள். தாங்கள் கெட்டுப் போனற்குக் காரணம் முன்கூட்டியே சிந்திக்காததுதான் என்பதை மிகவும் தாமதமாகவே உணருவார்கள்.
மற்றவர்களைக் காட்டிலும் இளவயதுள்ளவர்களுக்குத்தான் இது ஆபத்தாக முடிகிறது. உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஆபத்துகளை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறபடியால் உங்கள் நடக்கையைக் குறித்து நீங்கள் கவனம் செலுத்துவதில்லை. தெளிந்த புத்தியையும் நல் ஆலோசனையையும் அடையப் பொறுமையற்றவர்களாய், விரைந்து முடிவெடுக்க விரும்பி, தவறான முடிவுகளை எடுத்துவிடுவதால் பிற்பாடு மிகுந்த
வேத விளக்கவுரையை எழுதிய மத்யூ ஹென்றி என்பவர் எலிசபெத் ராணியினுடைய செயலாளராகிய வால்ஷிங்காம் என்கிறவரைக் குறித்த ஒரு செய்தியைக் கூறுகிறார். இந்தச் செயலாளர் தனது பணிக்காலம் முடிந்து பொதுவாழ்விலிருந்து ஓய்வு பெற்று வீட்டிலே இருந்தார். அப்போது அதிக ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினார். அவரைச் சந்திப்பதற்கு அவருடைய நண்பர்கள் வருவார்கள். அவர்கள் அவரைப் பார்த்துவிட்டு, "நண்பரே, நீங்கள் முன்பு போல கலகலவென்று இல்லையே, முகத்தில் சந்தோஷம் இல்லாமல் ஏதோ பாரமுடையவராக இருப்பது போல இருக்கிறீர்களே, என்ன விஷயம்?" எனக் கேட்பார்கள். அதற்கு அவர் பதில் கூறுவார்: "ஆம், நான் உல்லாசமாக இல்லைதான். என்னைச் சுற்றிலும் இருக்கிறவர்கள் அதிக பாரத்துடன் உழைத்துக் கொண்டிருக்கும்போது நான் மாத்திரம் எப்படி உல்லாசமாக இருப்பது? தேவன் அதிக பாரத்தோடு நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். கிறிஸ்து நமக்காக பாரத்தோடு பிதாவிடம் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். பரிசுத்தாவியானவர் பாரத்தோடு தம்மோடு போராடிக் கொண்டிருக்கிறார். வேதசத்தியங்கள் யாவும் அதிக ஆழமானவை. நமது ஆவிக்குரிய விரோதிகளும் நம்மை அழித்துப் போட அதிக பாரத்தோடு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவிகள் நரகத்தில் பாரமான சூழலில் இருக்கிறார்கள். இப்படியாக நம்மைச் சுற்றிலும் உள்ள காரியங்கள் பாரத்தோடு இயங்கிக் கொண்டிருக்கையில் நீங்களும் நானும் பாரமற்றவர்களாக, உல்லாசமாக இருப்பது எப்படி முடியும்?"
இளைஞர்களே, சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும், எங்கே போகிறீர்கள் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். அமைதலாகத் தனிமையில் உட்கார்ந்து சிந்திக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இருதயத்தோடு நீங்களே பேசிக் கொண்டு அமர்ந்திருங்கள். என்னுடைய எச்சரிப்பை நினைவில் வையுங்கள்: சிந்திக்காத காரணத்தினால் பாழாகிவிடாதீர்கள்.
இளைஞனே, நீ உன் மனதைக் கடினப்படுத்துகிறாயா? பக்தியை அலட்சியம் செய்தால் உனக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் பெருங்குழியில் விழுந்து துயரத்துக்குள்ளாவாய் என்பதை உணருகிறாயா? தாவீது கூறுவதைச் சிந்தித்துப்பார்: “தேவன் இல்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்” (சங்கீதம் 14:1). மதிகெட்டவன், முட்டாள் என தாவீது அவனைக் குறிப்பிடுகிறார். அவனால் 'தேவன் இல்லை' என சொல்லத்தான் முடிகிறதே தவிர, தான் சொல்லுவதை அவனால் நிரூபிக்க முடியாது. ஒரு புத்தகமானது ஆரம்பம் தொடங்கி முடிவு வரைக்கும் பிழையே இல்லாமல் இருக்கக் கூடுமானால் அது வேதாகமம் ஒன்றுதான். வேதாகமம் தனது பிழையற்ற தன்மையைக் காலங்காலமாக பலவிதங்களில் நிரூபித்து வந்திருக்கிறது. எப்பேர்ப்பட்ட விரோதி வந்து அதற்கு விரோதமான காரியங்களைக் கூறினாலும், பிழைகளைக் கண்டுபிடிக்க முயன்றாலும் அது தனது உண்மைத் தன்மையை நிரூபித்திருக்கிறது. "கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது" (சங்கீதம் 18:30) என்று தாவீது கூறுகிறார். வேதாகமம் எத்தனையோ முறை, எத்தனையோ விதங்களில் சோதிக்கப்பட்டுள்ளது. எவ்வளவுக்கு அதைச் சோதித்துப் பார்த்தார்களோ அவ்வளவுக்கு அது தேவனின் கரம் உருவாக்கியதுதான் என்பதும் அதன் உண்மைத் தன்மையும் தெளிவாக விளங்கிற்று. நீங்கள் வேதாகமத்தை நம்பவில்லையானால் வேறு எதை நம்புவீர்கள்? இல்லையென்றால் அபத்தமான ஏதாவது கட்டுக்கதைகளைத்தான் நம்ப வேண்டியதாயிருக்கும். வேதாகமத்தைக் கடவுளின் வார்த்தையாக ஏற்றுக் கொள்ளாதவன், இந்த மாதிரியான அபத்தங்களைச் சுலபமாக ஏற்றுக் கொள்வான். நீ வேதாகமத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலுங்கூட அது தேவனின் வார்த்தையாக இருப்பதால் அதை அவமதிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
"வேதாகமத்தில் விளங்கிக் கொள்ள முடியாத கடினமான பகுதிகள் இருக்கிறதே" என சிலபேர் சொல்லுவார்கள். அப்படி இல்லாவிட்டால் அது தேவனின் புத்தகமாக இருக்க முடியாதே. அப்படி இருப்பதால் உனக்கென்ன பிரச்சனை? நீ சாப்பிடும் மருந்துகள் உனது உடலில் என்னென்ன காரியங்களைச் செய்கிறது என்பது உனக்குப் புரியவில்லை என்பதற்காக மருந்து சாப்பிடாமல் இருக்கிறாயா? மனிதர்கள் என்ன கூறினாலும் சரி, இரட்சிப்புக்கடுத்த காரியங்கள் வேதத்தில் மிகவும் தெளிவாகவே இருக்கின்றன. 'வேதம் விளங்கவில்லை' என்பதற்காக யாரும் ஒருபோதும் வேதத்தை நிராகரிக்க மாட்டார்கள்; இதை நினைவில் கொள். மாறாக, வேதத்தை நிராகரிப்பவர்களுக்கு அது நன்றாகவே விளங்கியிருக்கிறது! அது அவர்களுடைய குணங்களைக் கண்டிக்கிறதை அவர்கள் உணருகிறார்கள். அவர்களுடைய பாவநிலையை உணர்த்தி, அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு உரியவர்கள் என்பதை வேதம் சுட்டிக் காண்பிக்கிறது. அதைப் பொறுக்க மனமில்லாமல், வேதத்தைத் தவறு என்றும், உபயோகமற்றது என்றும் நம்பும்படியாகத் தங்கள் மனதைச் செலுத்துகிறார்கள். 'தவறுதலான வாழ்க்கைதான் வேதத்தை எதிர்ப்பதற்கு ஒரே காரணம்' என்று ரோச்சஸ்டர் என்பவர் குறிப்பிடுகிறார். 'கிறிஸ்தவ சத்தியங்களைத் தங்களுடைய வாழ்க்கையிலே செயல்படுத்த விரும்பாததால்தான் மனிதர்கள் கிறிஸ்தவத்தின் உண்மைத் தன்மையைக் குறித்துக் கேள்வி எழுப்புகிறார்கள்' என்று ராபர்ட் சௌத் என்பவர் கூறுகிறார்.
இளைஞர்களே, தேவன் என்றாவது தாம் கூறியவைகளை நிறைவேற்றாமல் விட்டிருக்கிறாரா? இல்லவே இல்லை. அவர் சொல்லியதைச் செய்கிறவர். அவருடைய வாயின் வார்த்தைகள் நன்மையையே கொண்டு வந்திருக்கின்றன. வெள்ளம் வரும் என அவர் எச்சரிப்பு விடுத்ததை நிறைவேற்றாமல் போனாரா? இல்லை. சோதோம் கொமோராவின் அழிவைக் குறித்ததான தமது வார்த்தைகளை நிறைவேற்றவில்லையா? அவருடைய வார்த்தைகளை நம்பாத எருசலேமைக் குறித்த வார்த்தைகளை நிறைவேற்றத் தவறினாரா? யூதர்களைக் குறித்துச் சொல்லப்பட்டவை இதுவரை நிறைவேறவில்லையா? அவர் ஒருபோதும் தமது வார்த்தைகளை நிறைவேற்றத் தவறவே மாட்டார். ஜாக்கிரதையாயிருங்கள். அவருடைய வார்த்தைகளை அவமதிப்பவர்களின் மத்தியிலே நீங்களும் காணப்படாதபடிக்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
தேவபக்தியைக் குறித்து ஒருபோதும் அவமதித்துச் சிரிக்காதீர்கள். பரிசுத்த காரியங்களை அவமதிப்பு செய்யாதீர்கள். தங்களுடைய ஆத்துமாக்களைக் குறித்துக் கவலையுடையவர்களாய் அதற்காக பாரத்தோடு இருக்கிறவர்களை ஏளனம் செய்யாதீர்கள். யாரை வருத்தம் நிறைந்தவர்களாய் இப்போது நீங்கள் காண்கிறீர்களோ அவர்கள் மிகுந்த சந்தோஷ வெள்ளத்தில் திளைத்திருப்பதைக் காணும் காலம் வரும். அந்த நேரத்திலே நீங்கள் இப்போது சிரித்த சிரிப்புகளெல்லாம் மாறிப்போய் வருத்தத்தை ஏற்படுத்துவதை உணருவீர்கள். உங்களுடைய அவமதிப்பு, ஏளனம், கும்மாளம் யாவும் இருதயத்தில் மிகுந்த பாரமாக அழுத்துவதை உணருவீர்கள்.
உ) மனித கருத்தைப் பற்றிய பயம்
மனிதர்களின் கருத்துகளுக்கு ஒத்துப்போவது இளைஞர்கள் சந்திக்கும் மற்றொரு ஆபத்து. “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்” (நீதிமொழிகள் 29:25). இது பெரும்பாலான மக்களுடைய மனதை ஆளுகின்ற வல்லமையைக் கொண்டிருப்பதைக் காண்கையில் பயங்கரமாயிருக்கிறது. அதிலும் முக்கியமாக இளைஞர்களின் மனதை அது ஆளுகை செய்கிறது. தங்களுடைய சொந்தக் கருத்துகளை உடையவர்கள் சொற்பமாகத்தான் இருக்கிறார்கள். தாங்களாகச் சுயமாகச் சிந்திப்பதும் சிலபேர்தான். செத்த மீன்களைப் போல ஆற்றின் போக்கிலேயே அடித்துச் செல்லப்படுபவர்கள் போலத்தான் பலரும் இருக்கிறார்கள். பொதுவாக எல்லோரும் எதை சரியென்று சொல்லுகிறார்களோ அது இவர்களுக்கும் சரியாகப்படும். மற்றவர்கள் தவறு எனக் கூறுவதை இவர்களும் தவறுதான் எனச் சாதித்துவிடுவார்கள். இந்த உலகத்தில் தாங்களாகச் சிந்திக்கக் கூடிய சிந்தனாவாதிகள் அதிகம் இல்லை. மனிதர்கள் யாவரும் ஆடுகளைப் போல இருக்கிறார்கள். ஒரு ஆடு போகிற பாதையிலே எல்லா ஆடுகளும் போவது போல, ஒரு தலைவனின் பிறகே கூட்டம் கூட்டமாகச் செல்லவே விரும்புகிறார்கள். ரோமரின் நாகரீகம் ஓங்கி இருந்தால் எல்லாரும் அதைப் பின்பற்றுவார்கள். அல்லது முகமதியர் நாகரீகம் பிரபலமானால் உடனே அனைவரும் அதற்குத் திரும்பிவிடுவார்கள். உலகத்தார் போகிற போக்கிற்குச் சிந்திக்கவோ எதிராகச் செயல்படவோ மிகவும் பயப்படுவார்கள். உலகம் என்ன நினைக்கிறதோ அதுதான் அவர்களுக்குத் தேவனுடைய வார்த்தை; அதுதான் அவர்களுடைய சட்டம்; அதுவே வேதப்புத்தகம்; அதுவே அவர்களின் தேவன்.
“என்னுடைய நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?” என்கிற சிந்தனையே அநேக நல்ல செயல்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடக் கூடியதாக இருக்கிறது. 'மற்றவர்கள் பார்ப்பார்களே, சிரிப்பார்களே, ஏளனம் செய்வார்களே' என்கிற எண்ணம் பலரை நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொள்ளவிடாமல் தடை செய்கிறது. மற்றவர்களுக்குப் பயப்படுவதால், அநேக வேதபுத்தகங்கள் இன்றைக்கு அதனுடைய சொந்தக்காரர்களால் படிக்கப்படாமலேயே இருக்கின்றன. அதைப் படிப்பது அவசியம் என்பது அவர்களுக்குத் தெரியும், ஆனால் 'மற்றவர்கள் என்ன சொல்வார்களோ?' என்கிற பயம் அதைத் தடை செய்கிறது. அநேக முழங்கால்கள் இன்று இரவிலே ஜெபிப்பதற்கு முடங்காமல் இருக்கின்றன. "நான் ஜெபிப்பதை என் மனைவியோ, சகோதரனோ, நண்பனோ பார்த்தால் என்ன சொல்லுவார்கள்?" என்கிற பயம் தேவனிடம் பேசுவதை நிறுத்திவிடுகிறது. என்ன பரிதாபம்! என்ன மோசமான அடிமைத்தனம்! இந்தக் குணம் எல்லாரிடமும் பரவி நிறைந்திருக்கிறது. "நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்" (1 சாமுவேல் 15:24) என்று ராஜாவாகிய சவுல், சாமுவேல் தீர்க்கதரிசியிடம் கூறுகிறான். ஜனங்களுக்குப் பயந்ததினால் அவன் தேவனுடைய கட்டளையை மீறி நடந்தான். இன்னொரு ராஜா, அவன் யூதாவின் ராஜா, இவனும் யூதர்களுக்குப் பயந்ததினால் தனக்கு எரேமியா தீர்க்கதரிசி கொடுத்த ஆலோசனையின்படி நடக்காமல் போனான். சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: "...யூதரின் கையிலே என்னை ஒப்புக்கொடுப்பார்களோ என்று ஐயப்படுகிறேன்" என்றான் (எரேமியா 38:19). ஏரோது விருந்து பண்ணினபோது நடந்தது என்ன? அவன் தனது விருந்தினர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என பயந்ததினால், தான் செய்கிற காரியம் சரியல்ல என்பது தெரிந்திருந்துங்கூட யோவான் ஸ்நானகனின் தலையைத் தட்டிலே எடுத்து வரக் கட்டளையிட்டான். அது பிற்காலத்திலே அவனுக்கு மிகுந்த விசனத்தைக் கொடுத்தது. யூதர்களைப் பகைத்துக் கொள்வதை விரும்பாத பிலாத்து, தான் அநியாயமாகத் தீர்ப்பளிக்கிறோம் என்பதை நன்றாக உணர்ந்திருந்தும், குற்றமேயில்லாத இயேசுக்கிறிஸ்துவைக் கொலை செய்யப்பட யூதர்களின் கையிலே ஒப்புக் கொடுத்தான். மனிதனுடைய கருத்துகளுக்குப் பயப்படுகிற இந்தத் தன்மையை அடிமைத்தனம் எனக் குறிப்பிடாமல் வேறு எப்படி கூறுவது?
இளைஞர்களே, நீங்கள் எல்லாரும் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டுமென நான் விரும்புகிறேன். உங்களுடைய கடமை என்னவென்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும்போது, மனிதர்களுடைய கருத்துகளுக்கு இடம் கொடாதிருங்கள். ‘முடியாது’ என்று சொல்பவன்தான் மிகுந்த துணிச்சல்காரன். யூதாவின் ராஜாவாகிய யோசபாத் என்பவன் நல்லவனாக இருந்தாலும் இந்த விஷயத்தில் மிகவும் பலவீனனாய் இருந்தான். முடியாது என்றும் மாட்டேன் என்றும் சொல்வதற்குப் பயந்தபடியினால் அவன் இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாபின் சொற்படியெல்லாம் கேட்டு பலவிதமான ஆபத்துகளில் சிக்கிக் கொண்டான் (1 இராஜாக்கள் 22:4). இளைஞர்களே, தீமையான காரியங்களுக்கு 'முடியாது', ‘மாட்டேன்’ என்று தைரியமாகச் சொல்லக்கூடிய துணிச்சல்காரர்களாக இருங்கள். மற்றவர்கள் மாதிரி செய்யாவிட்டால் நன்றாக இருக்காதே என்கிற பயம், உங்களைச் சரியானதைச் செய்யவிடாமல் ஆக்குவதை அனுமதிக்காதீர்கள். பாவிகள் உங்களைத் தீமையான காரியங்களில் ஈடுபட வலியுறுத்தும்போது, மிகுந்த உறுதியோடு அதற்குச் சற்றும் இடங்கொடாதிருக்கப் பழகுங்கள் (நீதிமொழிகள் 1:10).
இப்படியாக மனிதருக்குப் பயப்படுதல் எவ்வளவு அநியாயமாயிருக்கிறது! அப்படியே அவர்கள் எவ்வளவு உங்களை விரோதித்துவிட்டாலும் எவ்வளவு காலத்துக்கு அந்த விரோதம் நிலைநிற்கும்? மற்றவர்கள் கூறியபடி நீங்கள் செய்யாமற் போவதால் அவர்களால் உங்களுக்கு என்ன தீங்கு விளைவித்துவிட முடியும்? 'நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்? இடுக்கண் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய உக்கிரத்திற்கு நித்தம் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன?' (ஏசாயா 51:12,13). இப்படி மனிதருக்குப் பயப்படுகிற பயம் என்ன பலன்களை அளித்துவிடப் போகிறது? நீ அவர்கள் கூறியபடி நடந்துவிட்டதால் யாரும் உன்னைப் போற்றிக் கொண்டாடப் போவதில்லை. தேவனுக்கென்று தைரியமாக வாழ்பவர்களுக்குத்தான் மரியாதை கிடைக்கும். ஆகவே இந்த அடிமைத்தன சங்கிலிகளைக் கழற்றி வீசி எறியுங்கள். நீ பரலோகத்திற்குப் போவதில் விருப்பம் கொண்டிருப்பவன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளும்படியாக வாழ்வதைக் குறித்து ஒருபோதும் வெட்கம் அடையாதே. உங்களைத் தேவனின் அடிமையாகக் காண்பிப்பது இழிவானது என எண்ணாதீர்கள். சரியானதைச் செய்வதற்கு ஒருபோதும் பயம் அடையாதீர்கள்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளை ஞாபகத்தில் வையுங்கள்: "ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்" (மத்தேயு 10:28). தேவனை மட்டுமே பிரியப்படுத்தப் பாருங்கள். அப்போது அவர், மற்றவர்களும் உங்களோடு சமாதானமாயிருக்கும்படி செய்வார்: “ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்” (நீதிமொழிகள் 16:7).
இளைஞர்களே, நல்ல துணிவுள்ளவர்களாயிருங்கள். உலகம் என்ன சொல்லுகிறது, என்ன நினைக்கிறது என்பதைக் குறித்துக் கவலைப்படாமல் இருங்கள். நீங்கள் எப்போதும் இந்த உலகத்திலேயே இருக்கப் போவதில்லை. மனிதர் உங்கள் ஆத்துமாவைக் காப்பாற்றக் கூடுமா? இல்லையே. கணக்கொப்புவிக்க வேண்டிய அந்த பயங்கரமான நியாயத்தீர்ப்பின் நாளிலே மனிதனா உங்களை நியாயந்தீர்க்கப் போகிறான்? வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல மனசாட்சியையும், மரணத்தில் ஒரு நல்ல நம்பிக்கையையும், உயிர்த்தெழுதலின் காலையிலே சரியான பலன்களையும் தரக்கூடியது மனிதர் கையிலா இருக்கிறது? இல்லவே இல்லை. மனிதனால் இவை எதையுமே செய்ய முடியாது. ஆகவே "நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கி
மூன்றாவதாக, இளைஞர்களுக்குச் சில பொதுவான ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன்.
அ) பாவத்தின் தீமையைப் பாருங்கள் பாவத்தின் பயங்கரத்தைக் குறித்து நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இளைஞனே! பாவம் என்பது என்ன என்பதையும், அது என்னவெல்லாம் செய்யும் என்பதையும் தெரிந்து வைத்திருந்தாயானால், நான் எதற்காக இப்படிப் புத்தி சொல்லுகிறேன் என்பதைக் குறித்து நீ ஆச்சரியப்பட மாட்டாய். பாவத்தின் உண்மையான தோற்றம் என்னவென்பதை நீ அறியாமல் இருக்கிறாய், அதன் பயங்கரத்துக்கு உனது கண்கள் அடைக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான், நான் ஏன் உன்னைக் குறித்து இவ்வளவு கவலைப்படுகிறேன் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று கூறி சாத்தான் உன்னை மேற்கொண்டுவிடாதபடி காக்கப்படுவாயாக.
பாவத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதைச் சற்று ஆராய்வோம்: உயிரோடிருக்கிற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சுபாவத்திலேயே பாவமுடையவர்களாய் இருக்கிறார்கள். "ஒரு பாவமும் செய்யாமல் நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலே இல்லை" (பிரசங்கி 7:20). "எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களாகி..." (ரோமர் 3:23).
பாவமானது நமது எண்ணங்களையும், வார்த்தைகளையும், செயல்களையும் விடாமல் தொடர்ந்து கெடுத்துக் கொண்டேயிருக்கிறது. "மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது... அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே" (ஆதியாகமம் 6:5). "இருதயத்திலிருந்து கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வரும்." (மத்தேயு 15:19).
பாவமானது பரிசுத்த தேவனுக்கு முன்பாக நம்மைக் குற்றமுள்ளவர்களாகவும் அருவருக்கத்தக்கவர்களாகவும் நிறுத்தியிருக்கிறது. "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள் போல் இருக்கிறோம். எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தையைப் போல் இருக்கிறது." (ஏசாயா 64:6). "தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே" (ஆபகூக் 1:13).
நம்மை நாமே நோக்கிப் பார்க்கும்போது, இரட்சிக்கப்படும் நம்பிக்கையற்றவர்களாகப் பாவம் நம்மை ஆக்கியிருக்கிறது. "ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்" (சங்கீதம் 143:2). "எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை" (ரோமர் 3:20).
பாவமானது, இந்த உலக வாழ்க்கையிலே அவமானத்தையும் மறுஉலக வாழ்க்கையிலே மரணத்தையும் கொடுப்பதாக இருக்கிறது. "இப்பொழுது வெட்கமாக உங்களுக்குத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்திலே உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே." (ரோமர் 6:21). "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23).
இவைகளைக் குறித்து நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். அறியாமையினாலே அழிந்துபோன மனிதர்களைக் காட்டிலும், உயிரோடே இருந்து இன்னமும் அறிந்து கொள்ளாமல் இருப்பவர்கள்தான் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள்.
சிந்தித்துப் பாருங்கள். தேவன் பூமியின் மண்ணிலிருந்து எடுத்து உருவாக்கிய முதலாம் மனிதனைப் போல இன்று யாருமே இல்லை. அவன் பாவமின்றி கடவுளின் கரத்திலிருந்து உருவாக்கப்பட்டிருந்தான். "தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்" (பிரசங்கி 7:29). அவன் படைக்கப்பட்ட நாளிலே, மற்ற எல்லா சிருஷ்டிகளையும் போலவே, அவனையும் தேவன் 'மிகவும் நல்லது' என்று கண்டார் (ஆதியாகமம் 1:31). ஆனால் மனிதனின் நிலைமை இப்போது எப்படியிருக்கிறது?
விழுந்துபோன ஒரு சிருஷ்டியாக, அழிக்கப்பட்டவனாக, வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் சீர்கேடுகளையே காண்பிக்கிறவனாக அவன் மாறிப்போனான்.
அவனுடைய இருதயம் நேபுகாத்நேச்சாரைப் போல மகிமையிழந்ததாகவும், மண்ணுக்குரியதாகவும், மேலே பார்க்கக் கூடாமல் கீழானவைகளையே நோக்கக் கூடியதாகவும் ஆயிற்று. அவனுடைய மனநிலை, எஜமான் இல்லாததால் ஒரே குழப்பமும் கட்டுப்பாடற்ற தன்மையுமாக இருக்கின்ற ஒழுங்கற்ற வீட்டைப் போல ஆகிவிட்டது. அவனுடைய அறிவு, மங்கி எரிகிற விளக்கைப் போல முழுவதும் அணைந்துவிடுகிறதான நிலையில் இருக்கிறது. அந்த வெளிச்சம் அவனை வழிநடத்துவதற்குப் போதுமானதாக இல்லை. நன்மை எது, தீமை எது என்பதைப் பகுத்தறியக் கூடாதவனாக அவன் இருக்கிறான். அவனுடைய விருப்பங்கள், சுக்கான் இல்லாத கப்பலைப் போல அலைக்கழிக்கப்படுவதால் பலவிதமான ஆசைகளின் நடுவே அவன் போராடிக் கொண்டிருக்கிறான். தேவனின் வழிவகைகளைத் தவிர்த்து, தனது சுயசித்தத்தின்படியான சகலவிதமான ஆசை இச்சைகளை நோக்கியே அவனது முழு கவனமும் இருக்கிறது.
அந்தப் பரிதாபம்! எப்படி இருந்திருக்க வேண்டிய மனிதன் இன்று எப்படி இருக்கிறான்? மனிதனின் நிலையை ஆவியானவர் இன்று பல வார்த்தைகளால் விளக்க வேண்டியதாயிருக்கிறது. குருடன், செவிடன், நோயுற்றவன், நித்திரையடைந்தவன், மரித்துப் போனவன் - இப்படியாக அவனது நிலை விவரிக்கப்படுகிறது. இந்த நிலையை அவனில் ஏற்படுத்தியது பாவம்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
பாவிகளான இவர்கள் மன்னித்து ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு என்னவிதமான பரிகார பலி தேவைப்பட்டது என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். தேவனுடைய சர்வ மகிமை பொருந்திய குமாரன் இந்த உலகத்திலே வர வேண்டியதாயிருந்தது. அவர் நம்மைப் போன்ற பாவமனுஷ சாயலைத் தரித்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. நம்மைச் சாபங்களிலிருந்து மீட்க, நமது மீட்புக்கான ஒரு விலையைச் செலுத்துவதற்காகக் குமாரன் இவ்வுலகிலே மனிதனாக அவதரிக்க நேர்ந்தது. அவர் ஆதிமுதலாய் பிதாவோடு இருந்தவர். அவர் மூலமாகவே சகலமும் உருவாக்கப்பட்டதான மகிமையுள்ள நிலையில் இருந்தவர். பாவத்தினிமித்தமாகப் பாடுபடவும், அநீதியுள்ளவர்களுக்காக நீதியுள்ள அவர் துயரப்படவும், பரலோகத்திற்கான பாதை திறக்கப்படுவதற்காகக் குற்றமில்லாத அவர் குற்றவாளியைப் போல மரிக்கவும் வேண்டியதாயிற்று. தேவனுடைய குமாரனாகிய இந்த இயேசுவை, பாவிகளாகிய மனிதர்கள் அசட்டை பண்ணினார்கள், அவரைப் புறக்கணித்தார்கள், வாரினால் அடித்தார்கள், பரிகாசம் பண்ணினார்கள், அவமதித்தார்கள். அவர் கல்வாரி சிலுவையிலே இரத்தம் வடியத் தொங்கினதை நினைத்துப் பாருங்கள். வேதனையோடு, "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று சத்தமிட்டதைச் சற்று யோசித்துப் பாருங்கள். அந்தக் காட்சியைக் காணச் சகிக்காமல் சூரியன் இருளடைந்ததையும், பூமி அதிர்ந்ததையும் பாருங்கள். அப்படியானால் பாவத்தின் அகோரம் எவ்வளவு கடுமையானது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஏற்கனவே பாவம் பூமியில் எதை நடப்பித்திருக்கிறது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். ஆதாமையும் ஏவாளையும் கடவுளின் பிரசன்னத்திலிருந்து துரத்தி விட்டிருந்தது. பழைய உலகத்தை வெள்ளத்தினால் அழித்துப் போட்டது. சோதோம் கொமோராவின் மேல் அக்கினியையும் கந்தகத்தையும் வருவித்து அழித்துப் போட்டது. பார்வோனையும் அவனுடைய சேனையையும் செங்கடலிலே அமிழ்த்திப் போட்டது. கானானில் இருந்த ஏழு பொல்லாத தேசங்களை அழித்துப் போட்டது. இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களையும் பூமியின் மீதெங்கும் சிதறிப் போகப் பண்ணினது. இதற்கெல்லாம் மூலகாரணம் பாவம் மாத்திரமே.
மேலும் பாவம் ஏற்படுத்தின, ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் துன்பங்களையும் துயரங்களையும் யோசித்துப் பாருங்கள். வலி, வியாதி, மரணம், விரோதம், சண்டை, பிரிவுகள், பகை, பொறாமை, வெறுப்பு, சூது, ஏமாற்று, வஞ்சகம், கொடூரம், அடக்குமுறை, திருட்டு, சுயநலம், அன்பில்லாமை, நன்றியற்ற தன்மை - இவை யாவும் பாவம் பிறப்பித்திருக்கும் கனிகள். இவைகளைப் பெற்றெடுத்தது பாவமே. தேவனின் உன்னத சிருஷ்டிப்பைக் கெடுத்து அந்த சிருஷ்டிப்பின் முகத்தில் கரியைப் பூசியிருப்பது இந்தப் பாவமே.
வாலிபர்களே, இவைகளைக் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். பிறகு நாங்கள் ஏன் பிரசங்கிக்க வருகிறோம் என்பதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட மாட்டீர்கள். நீங்கள் மாத்திரம் இவைகளை நன்றாகச் சிந்தித்து அறிந்து கொண்டுவிட்டீர்களானால், பாவத்தை ஒருபோதும் உங்கள் அருகில் வருவதற்கு வி
ஆ) கிறிஸ்துவின் மகத்துவத்தை அறிய நாடுங்கள்
இளைஞர்கள் இயேசு கிறிஸ்துவோடு உறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தேவபக்தியின் முக்கிய கொள்கையே இதுதான். கிறிஸ்தவத்தில் முக்கியமாக இருக்க வேண்டியது இயேசுவோடுள்ள தொடர்பு. இதை நீங்கள் உணர்ந்து கொள்ளாவிட்டால் என்னுடைய எச்சரிப்புகளும் அறிவுரைகளும் பிரயோஜனமற்றது, நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணானது. ஒரு கடிகாரத்தில் முக்கியமான பாகம் இல்லாவிட்டால்கூட அதைச் சரிசெய்து விடலாம், ஆனால் இயேசுக்கிறிஸ்து இல்லாத தேவபக்தியைச் சரிசெய்யவே முடியாது.
நான் கூறுவதைத் தவறாக விளங்கிக் கொள்ளவேண்டாம். இயேசுக்கிறிஸ்து என்கிற ஒருவரைப் பெயரளவில் தெரிந்து வைத்திருப்பதை நான் குறிப்பிடவில்லை. அவருடைய இரக்கத்தையும், கிருபையையும், வல்லமையையும் அறிந்து கொள்ளுதலைக் குறிப்பிடுகிறேன். மேலும் வெறுமனே காதுகளால் கேட்பது மாத்திரமல்ல, இருதயத்திலும் உணர்ந்து கொள்ளுதல் அவசியம். அவரை நீங்கள் விசுவாசத்தினாலே அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். பவுல் கூறு
ஆவிக்குரிய முன்னேற்றத்தின் இரகசியத்தை நான் கூறவா? கிறிஸ்துவில் வாழுங்கள். கிறிஸ்துவிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளுங்கள். அவருடைய பெலத்தினாலே எல்லாவற்றையும் செய்யுங்கள். எப்போதும் கிறிஸ்துவையே மாதிரியாகக் கண்ணோக்கியவர்களாக இருங்கள். "என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் 4:13) என்று பவுல் சொல்லுகிறார்.
இளைஞர்களே, உங்களுடைய ஆத்துமாவின் பொக்கிஷமாக இன்று நான் உங்களுக்கு முன்பாகக் கிறிஸ்துவையே வைக்கிறேன். அவரிடம் செல்லும்படியாக நான் உங்களை அழைக்கிறேன். கூடுமானால் விரைந்து ஓடி அவரிடமிருந்து நன்மையானவைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். கிறிஸ்துவிடம் செல்ல வேண்டுமென்பதே உங்களுடைய முதல் படியாக இருக்கட்டும். ஆலோசனைகேட்கத்தக்க நல்ல நண்பன் வேண்டுமா? இயேசுவே மிகவும் நல்ல நண்பர். "சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனும் உண்டு" (நீதிமொழிகள் 18:24).
உன்னுடைய பாவங்களினிமித்தமாக நீ அவரிடம் வரத் தகுதியற்றவன் என நினைக்கிறாயா? பயப்படாதே. அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கிச் சுத்திகரிக்கிறது. "உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்" (ஏசாயா 1:18) என அவர் கூறியிருக்கிறார்.
நீங்கள் மிகவும் பலவீனமாகவும் அவரைப் பின்பற்ற முடியாதவர்களாகவும் இருப்பதாக நினைக்கிறீர்களா? அஞ்ச வேண்டாம். நீங்கள் அவருடைய பிள்ளைகளாக ஆவதற்கு அவர் பெலனைக் கொடுப்பார். உங்களிடத்தில் வாசமாயிருப்பதற்குத் தமது பரிசுத்த ஆவியைத் தந்து, தம்முடையவர்களாக முத்திரையிடுவார். உங்களுக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுத்து, உங்களில் ஒரு புதிய ஆவியையும் வைப்பார்.
கடவுள் நம்மிடம் பார்க்கிறதான ஒரே காரியம் என்றும் அழியாததான ஆத்துமாவையே. எல்லா மனிதரையும் அவர் ஒரேவிதமான அளவுகோலினாலே, ஒரே தராசினால், ஒரேவிதமான பரீட்சையினாலே, ஒரே நிபந்தனையினாலேதான் அளவிடுகிறார். அவனுடைய ஆத்துமாவின் நிலை என்ன என்பதையே அவர் நோக்குகிறார்.
இதை மறக்காதீர்கள். காலையிலும், மதியத்திலும், இரவிலும் உங்கள் ஆத்துமாவைக் குறித்ததான சிந்தனையே உங்களில் இருக்கட்டும். ஒவ்வொரு நாளின் காலையிலும் எழும்போது, இன்றைக்கு இன்னும் முன்னேற வேண்டுமென வாஞ்சியுங்கள். அன்று இரவிலே படுக்கும் முன்பாக, இன்று முன்னேறியிருக்கிறேனா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். சியூக்சிஸ் (Zeuxis) என்கிறவர் மிகவும் பிரபலமான கிரேக்க ஓவியர். இவர் தமது ஒவ்வொரு ஓவியத்தை
இளைஞர்களே கர்த்தருக்குச் சேவை செய்ய முயற்சியுங்கள். அதெல்லாம் நடக்காது என உங்கள் காதுகளில் ஓதுகிற சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள். முயற்சி செய்யுங்கள். வாக்குத்தத்தங்களின் தேவன் உங்கள் முயற்சியைப் பார்த்து உங்களுக்கு வேண்டிய பெலனைக் கொடுப்பார். அவரிடம் வருவதற்குப் பிரயாசம் எடுக்கிறவர்களைச் சந்திக்க அவர் ஆவலுள்ளவர். முயற்சி எடுக்கிற உங்களைச் சந்தித்து, உங்களுக்குத் தேவையான பெலனை அவர் தருவார்.
ஜான் பனியன் எழுதிய "மோட்சப் பிரயாணம்" (Pilgrim's Progress) வாசித்திருக்கிறீர்களா? மோட்சப் பிரயாணியாகிய கிறிஸ்தியான், விளக்கம் கூறுபவரின் (Interpreter) வீட்டில் சில காட்சிகளைக் காண்பான். அதில் ஒரு மகிமையான அரண்மனையின் உள்ளே நுழைய ஆசைப்படுபவர்களின் பெயர்கள் ஒரு ஏட்டில் எழுதப்படும். ஆனால் வாசலில் அப்படி நுழைய முற்படுபவர்களை அடித்து விரட்ட ஆயுதந்தரித்த பலவான்கள் அநேகர் அங்கு காணப்படுவதால் பலரும் பயந்துபோய் தயங்கி நிற்பார்கள். அப்போது ஒரு மனிதன் துணிந்துபோய், "என் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்" என்று கூறியவுடனே அவனுக்கு ஒரு பட்டயம் கொடுக்கப்படும். அதைக் கொண்டு அவன் அந்த அரண்மனையில் பிரவேசிப்பான். அவனைப் போல நீங்களும் தைரியமுள்ளவர்களாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
"தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்" (மத்தேயு 7:7) என்கிற நம்முடைய கர்த்தரின் வார்த்தை உண்மையுள்ளது. பலரும் இந்த வார்த்தையை அர்த்தமற்று உபயோகிப்பதை நான் கேட்டிருந்தாலும், இது உண்மையுள்ள வாக்குத்தத்தம். மலை போன்ற பிரச்சனைகள் யாவும், வாலிபரே, பனி போல உருகிப் போய்விடும். தூரத்திலே கொடிதான அரக்கனைப் போலக் காட்சியளிக்கும் தடைகளெல்லாம், நீங்கள் துணிந்து முன்னேறும்போது ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். வழியில் எதிர்பட்ட சிங்கத்தைப் பார்த்துப் பயந்தது, தொடர்ந்து முன்னேறும்போதுதான் அவைகள் சங்கிலிகளினால் கட்டப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. கடவுளின் வாக்குத்தத்தங்களை மனிதர்கள் அதிகமாக நம்ப ஆரம்பித்தார்களானால், தங்களுடைய கடமைகளைக் குறித்துப் பயப்பட மாட்டார்கள். நான் உங்களுக்குச் சொல்லித் தரும் ஒரு சிறிய வாக்கியத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்: சாத்தான் உங்களிடம் வந்து, 'இளம் வயதிலுள்ள உன்னால் கிறிஸ்தவனாக வாழ முடியாது' என்று கூறினால், நீங்கள், "எனக்குப் பின்னாகப் போ சாத்தானே, கடவுளின் உதவியோடு நான் முயற்சி செய்வேன்" என்று சொல்லுங்கள்.
உ) வேதாகமத்தையே உங்கள் வழிகாட்டியாகக் கொள்ளுங்கள்
இளைஞர்களே, வாழ்நாள் முழுவதும் வேதமே உங்களுக்கு வழிகாட்டட்டும். பாவக்கறை படிந்த மனிதனின் ஆத்துமாவுக்குத் தேவன் கொடுத்திருக்கும் நல்லதொரு சாதனம் வேதாகமம் ஆகும். அவன் நித்தியஜீவனை அடைந்துகொள்ள வேண்டுமானால், வேதாகமத்தை வழிகாட்டியாகக் கொண்டு தனது வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும். மெய்யான சமாதானத்தையும், பரிசுத்தத்தையும், மகிழ்ச்சியையும் அடைவதற்கு வேண்டிய வழிவகைகள் யாவும் வேதாகமத்தில் நிறைந்து காணப்படுகின்றன. தனது வாழ்க்கையை எப்படி சரியான விதத்தில் ஆரம்பிப்பது என இளைஞர்கள் அறிய விரும்பினால் தாவீது சொல்வதைக் கேளுங்கள்: "வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே?" (சங்கீதம் 119:9).
இளைஞர்களே, வேதத்தைத் தினமும் வாசிப்பதை ஒரு பழக்கமாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒருநாள் கூட அந்தப் பழக்கத்தைத் தவறவிடாதிருங்கள். நண்பர்கள் கேலி செய்கிறார்களே என்பதற்காகவோ, நீங்கள் வாழுகின்ற குடும்ப சூழ்நிலை சரியாக இல்லை என்பதாலோ வேதம் வாசிக்கும் பழக்கத்தை விட்டுக்கொடுத்து விடாதீர்கள். உங்களுக்கெனத் தனியாக ஒரு வேதபுத்தகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதை வாசிப்பதற்குத் தினமும் நேரம் ஒதுக்க வேண்டுமென்றும் தீர்மானம் செய்து கொள்ளுங்கள். வேதாகமம், ஞாயிறு பாடசாலைப் பிள்ளைகளுக்கும், வயதான பெண்களுக்கும்தான் உரியது என யாரும் உங்களை நம்பப் பண்ணுவதற்குச் சற்றும் இடங்கொடாதீர்கள். அந்தப் புத்தகத்திலிருந்துதான் தாவீது ராஜா ஞானமும் அறிவும் பெற்றுக் கொண்டார். அந்தப் புத்தகத்தைத் தீமோத்தேயு தமது இளம்பிராயம் முதல் அறிந்து வைத்திருந்தார். அதைப் படிப்பதற்கு ஒருபோதும் வெட்கப்படாதிருங்கள்; "திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்" (நீதிமொழிகள் 13:13).
ஆவியானவர்தாமே கிருபையாக அதிலுள்ளவைகளை விளங்கப் பண்ண வேண்டுமென்கிற ஜெபத்தோடு வாசியுங்கள். ஆவியின் கிருபையைப் பெறாதவர்களாக வேதாகமத்தைப் படிப்பது, குருடர் வாசிக்க முயற்சிப்பது போலத்தான் இருக்கும்.
ஊ) தேவனை ஏற்காதவனோடு நெருங்கிய தோழமை கொள்ளாதே
இளைஞனே, தேவனின் விரோதி உனக்கும் விரோதியே. சாதாரணமான நட்பைக் குறித்து நான் சொல்லவில்லை. உங்களுக்கு கிறிஸ்தவ நண்பர்கள் மாத்திரமே இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அப்படி நாம் ஒரு வரையறை வகுத்துக் கொள்வது இவ்வுலகத்தில் நடக்க முடியாத காரியம், அப்படி இருப்பதும் விரும்பத்தகுந்ததல்ல. அப்படி அநாகரீகமாக நடந்து கொள்வது கிறிஸ்தவத்துக்குப் புறம்பானது.
ஆனால் உங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள் என்று புத்தி சொல்லுகிறேன். ஒருவன் புத்திசாலியாகவும், ஒத்துப்போகிறவனாகவும், நல்ல சுபாவமுடையவனாகவும், சந்தோஷம் நிறைந்தவனாகவும், அன்பாகவும் இருக்கிறான் என்பதற்காக அவனிடம் மனதிலுள்ள எல்லாக் காரியங்களையும் ஒளிவு மறைவில்லாமல் சொல்லிவிடாதீர்கள். அந்த மாதிரியான குணங்களைக் கொண்டிருப்பது நல்லதுதான், ஆனால் அதுவே பரிபூரணமானது அல்ல. உங்களுடைய ஆத்துமாவுக்கு உதவாத எந்தவிதமான நட்பிலும் திருப்தியடைந்து விடா
கடைசியாக நான் இளைஞர்களுக்கென சில சிறப்பான கட்டளைகளை உங்கள் முன் வைக்கிறேன். இவற்றை எல்லா இளைஞர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென புத்தி சொல்லுகிறேன்.
அ) பாவம் என்று உணர்கிற எல்லாவற்றையும் விட்டு விலக முடிவு செய்துகொள்.
இளைஞர்கள் தேவனின் உதவியைக் கொண்டு, எவ்வளவு சிறிய பாவமாக இருந்தாலும், அதைவிட்டு விலக உடனடியாகத் தீர்மானம் எடுக்க வேண்டும். இளைஞர்களே, உங்கள் இருதயத்தை நீங்களே பரிசோதித்துப் பாருங்கள். தேவனுடைய பார்வையில் தவறாகத் தெரிகின்ற ஏதாவதொரு பழக்கமோ, செயல்பாடோ உங்களிடத்தில் இருப்பது தெரிகிறதா? அப்படி இருப்பது தெரிந்த உடனே, அதைத் தகர்த்துப் போடுவதற்கு ஒரு நிமிடமும் தாமதம் செய்யாதிருங்கள். அதை விலக்கிவிட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.
விட்டுவைக்கப்படும் பாவங்கள்தான் மனதைக் குருடாக்கிப் போடுகிறது; மனசாட்சியையும் செத்துப் போகச் செய்கிறது. அது எவ்வளவு சிறிய பாவமாக இருந்தாலும் ஆபத்தானதுதான். ஒரு பெரிய கப்பலைக் கவிழ்க்க அதில் இருக்கும் ஒரு சிறிய துளையே போதுமானதாக இருக்கிறது. பெரிய நெருப்பை உண்டாக்குவதற்கு ஒரு சிறு பொறி போதும். அதுபோலவே விட்டு வைக்கப்பட்டிருக்கின்ற சிறிய பாவமானது ஆத்துமாவையே அழிக்கக் கூடியதாயிருக்கிறது. ஆகவே என்னுடைய புத்திமதியைக் கேளுங்கள்; சிறிய பாவமானாலும் அதை விட்டு வைக்காதீர்கள். கானானியரைப் பெரியோர் சிறியோர் ஒருவர் விடாமல் அழித்துப் போடும்படி கர்த்தர் கட்டளையிட்டார். அதே கொள்கையைப் பாவத்திலும் காண்பியுங்கள். சிறிய பாவம்தானே என இரக்கப்பட்டு விடாதீர்கள். உன்னதப்பாட்டிலே சாலமோன் அருமையாக சொல்லுகிறார்; 'திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும், சிறு நரிகளையும் பிடியுங்கள்' (உன்னதப்பாட்டு 2:15).
எந்தவொரு பயங்கரமான பாவியும் ஆரம்பத்தில் அவ்வளவு பயங்கரமானவனாக இருந்திருக்க மாட்டான். ஆரம்பத்தில் கொஞ்சம்தான் மீறிப் போயிருப்பான். அது அவனை இன்னும் அதிகமாகக் கேடு செய்யும்படிக்குத் தூண்டியிருக்கும். இப்படியே காலம் செல்லச் செல்ல அவன் அதிக கொடுமையானவனாக மாறியிருப்பான். ஆசகேல் என்பவன் இப்படித்தான் மாறிப் போனான் என்பதை வேதத்தில் காண்கிறோம். இந்த ஆசகேல் எதிர்காலத்தில் இஸ்ரவேல் புத்திரருக்கு என்னவிதமான பயங்கரத் தீங்கை செய்வான் என்பதை தேவனுடைய மனுஷனாகிய எலிசா அவனிடம் சொன்னபோது, அச்சமயத்தில் அவனால் அதை நம்பவே முடியவில்லை. 'இத்தனை பெரிய காரியத்தை செய்ய செத்த நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம்' என்றான் (2 ராஜாக்கள் 8:13). ஆனால் அவன் பாவத்தைத் தன் இருதயத்திலே வளர விட்டபடியினாலே, முடிவிலே அவன் எலிசா சொன்ன மாதிரியேதான் செய்தான்.
வாலிபரே, பாவத்தை அதன் ஆரம்பத்திலேயே எதிர்த்து நில்லுங்கள். அது சிறியதாகத் தோன்றலாம். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று நினைக்கத் தோன்றும். ஆனால் நான் சொல்லுவதைக் கேளுங்கள், அதை எதிர்த்து நில்லுங்கள். அதற்கு ஒருபோதும் ஒத்துப் போகாதிருங்கள். எந்தப் பாவமும் நுழைவது தெரியாமல் உங்கள் இருதயத்துக்குள் புகுந்துவிட வாய்ப்பு அளிக்காதிருங்கள். ஒரு ஊசியின் முனை எவ்வளவு சிறியது! ஆனால், அது ஏற்படுத்துகின்ற சிறிய துளையின் வழியாக மிக நீளமான நூலையே இழுத்து விடுகிறதல்லவா? “கொஞ்சம் புளித்த மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?” (1 கொரிந்தியர் 5:6) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கேட்கும் கேள்வியை மனதில் வையுங்கள்.
உலகில் முன்னேறாத மனிதர்களைக் கேட்டீர்களானால் அவர்களும் நான் கூறுவதைத்தான் கூறுவார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, பாவத்திற்கு ஆரம்பத்திலேயே இடம் கொடுத்தபடியினால்தான் தங்கள் வாழ்க்கையை தாங்களே அழித்துக் கொண்டதான நிலை ஏற்பட்டது என்பதைக் கூறுவார்கள். அவர்கள் ஆரம்ப நாட்களில் சிறிய விஷயங்களில் பொய்யர்களாயும், உண்மையற்றோராயும் இருந்தனர். அதிலேயே வளர்ந்தனர். படிப்படியாக மோசமான நிலைமையிலிருந்து மேலும் மோசமான நிலையை நோக்கி முன்னேறினர். தாங்கள் செய்வோம் எனக் கனவிலும் நினைத்திராத காரியங்களை செய்யத் துவங்கினர். முடிவில் அவர்கள் தங்கள் மானம், மரியாதையை இழந்தனர். குணத்தை இழந்தனர். மனசமாதானம் போயிற்று. முடிவில் தங்கள் ஆத்துமாவையே இழந்து போயினர். சுவரிலே போடும் சிறிய துளையைப் போல தங்கள் மனசாட்சியில் பாவத்திற்கு இடங்கொடுத்தனர். சிறிய துளை பெரிய விரிசலாகி சுவரையே தகர்த்துப் போட்டதுபோல, அவர்களது பாவமும் அவர்கள் மனசாட்சியை செத்துப் போகப் பண்ணிவிட்டது. அது ஆத்தும அழிவிற்குக் காரணமாகி விட்டது.
உண்மையாக நடந்து கொள்வதிலும், நேர்மையாக நடந்து கொள்ளுவதிலும் இவைகளை நினைத்து கடைப்பிடியுங்கள். சிறிய விஷயமானாலும் மனசாட்சிக்கு விரோதமாக நடக்காதிருங்கள். 'கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்' (லூக்கா 16:10). உலகம் என்ன கூறினாலும் சிறிய பாவம் என்று ஒன்றுமில்லை. பெரிய கட்டிடங்கள் யாவும் சிறிய செங்கற்கள் சேர்ந்து கட்டப்பட்டவைதானே! முதலாவது வைக்கிற கல்லும் மற்ற எல்லாக் கற்களைப் போலவும் முக்கியமானதே. எல்லா பழக்கவழக்கங்களும் தொடர்ந்து செய்கின்ற சிறிய பழக்கவழக்கங்களால் உருவானவைகளே. சிறு வயதில் ஒரு கதை படித்திருப்பீர்கள்; ஒரு கோடாரியானது காட்டில் உள்ள எல்லா மரங்களிடமும், தனது கைப்பிடிக்காக ஒரு சிறிய மரத்துண்டை தரும்படி கெஞ்சிக் கேட்டது. அப்படி கொடுத்துவிட்டால், பிறகு அவர்களை தொந்தரவு செய்யாமலிருப்பதாக வாக்குறுதி அளித்தது. கடைசியில் ஏதோ ஒரு மரம் அதற்கு இணங்கி ஒரு மரத்துண்டைக் கொடுத்தது. அதன்பின் என்ன நடந்திருக்கும்? அந்தக் கோடாரியானது காட்டிலுள்ள அனைத்து மரங்களையும் வெட்டத் தொடங்கி, முடிவில் காட்டையே அழித்துப் போட்டது. சாத்தான் உங்கள் இருதயத்தில் ஒரு சிறிய பாவத்திற்கு மட்டுந்தான் இடம் கேட்பான். கொஞ்சம் இடம் கிடைத்தால் போதும், சிறிது சிறிதாக உங்கள் இருதயம் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்துவிடுவான். நமக்கும் கடவுளுக்கும் இடையே எந்த சிறிய பாவத்தையும் வரவிடக் கூடாது.
சறுக்கலான இடத்தின் உச்சியிலிருந்து இரண்டு விதங்களில் கீழே வரலாம். ஒரேயடியாக சறுக்கிக் கொண்டும் வந்துவிடலாம், அல்லது, படிப்படியாக சறுக்கியும் வரலாம். அதுபோல, தெரிந்தே நரகத்தின் வழியில் சிலபேர் துணிந்து போவார்கள். ஆனால் அநேகர் தங்கள் பாவங்களை உணராதவர்களாக படிப்படியாக நரகவழியிலே போவார்கள். அது மிகவும் பரிதாபகரமானது. சிறிய பாவங்களை அனுமதித்தீர்களானால், அது மற்ற பெரிய பாவங்களையும் விரும்பச் செய்யும். ஒரு புறமதஸ்தானாகிய ரோமக் கவிஞனே, 'யாரால் ஒரு பாவத்தோடு நிறுத்த முடியும்?' என்கிற கேள்வியைக் கேட்கிறான். ஆண்டுகள் செல்லச் செல்ல பாவமானது அதிகரித்துக் கொண்டே போகும். ஜெரமி டெய்லர் (Jeremy Taylor) என்பவர், பாவம் எப்படிப் படிப்படியாக முன்னேறுகிறது என்பதைக் கூறுகிறார்: 'முதலில் அது அவனைத் திடுக்கிடச் செய்கிறது. பிறகு அது அவனுக்கு இன்பமாக இருக்கிறது. பிறகு சுலபமாக செய்ய முடிகிறது. அது அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. அடிக்கடி செய்யத் தூண்டுகிறது. பிறகு அது பழக்கமாகவே ஆகிவிடுகிறது. அவனில் அது உறுதிப்பட்டுவிடுகிறது. பின்பு அவன் கல்நெஞ்சனாகி விடுகிறான். பிடிவாதமுள்ளவனாகிறான். மனந்திரும்பவே கூடாது எனத் தீர்மானித்துக் கொள்கிறான். அத்தோடு அவன் அழிந்து போகிறான்.'
இளைஞனே, நீ இந்தவித நிலைமைக்கு வராதபடிக்கு நான் கூறியிருக்கிற கட்டளையைக் கைக்கொள். அதாவது, எந்தப் பாவமாக இருந்தாலும் அதை விட்டுவைக்காமல் அடியோடு அழித்து விடுகிற உறுதி கொள்.
ஆ) பாவத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கிற யாவற்றையும் விட்டு ஓடி விலகத் தீர்மானித்துக் கொள்.
இளைஞர்கள் தேவனின் உதவி பெற்று, பாவத்திற்கு சாதகமான சந்தர்ப்பங்களை விட்டு விலகியோட வேண்டும். ‘தீமையில் அகப்பட்டுக் கொள்ளக்கூடாது என விரும்புகிறவன் அதற்கான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்’ என்று தூய்மைவாதியாகிய பிஷப் ஹால் (Hall) என்பவர் கூறினார். ஒரு சிறிய கதையுண்டு. ஒரு பட்டாம்பூச்சி, ஆந்தையைப் பார்த்து நெருப்பில் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பிப்பது எப்படியென்று கேட்டதாம். அதற்கு ஆந்தை, 'புகை வந்து கொண்டிருக்கிற இடத்தின் அருகேகூட போகாதே' என்று கூறியதாம். பாவம் செய்யக்கூடாது என்று நாம் தீர்மானம் எடுத்துக் கொள்வதுகூட போதாது. அதற்கு வழி உண்டாக்குகிற சகல காரியங்களிலிருந்தும் வெகுதூரம் விலகி இருக்க வேண்டும். பின்வரும் விதங்களில் நம்மைத் தற்சோதனை செய்துகொண்டே இருக்க வேண்டும்: நமது நேரத்தை எப்படியாக செலவிடுகிறோம்? நாம் என்ன மாதிரியான புத்தகங்களை வாசிக்கிறோம்? எந்தவித குடும்பங்களிடம் நாம் செல்கிறோம்? நாம் போகிறதான சமூக சூழ்நிலைகள் என்ன? நான் செய்கிற காரியங்களிலும், செல்கிற இடங்களிலும் தவறு எதுவும் காணப்படவில்லை என்று கூறிக் கொள்வது மாத்திரம் போதாது. நான் பாவத்தில் விழக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் இவைகளின் மூலமாக ஏற்படுமோ என்பதை ஆராய்ந்து பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
சோம்பலாக இருப்பதுகூட மறைமுகமாக பாவத்திற்கு வழிவகுக்கிறது என்பதை மறக்கக் கூடாது. ஒன்றுமே செய்யாமல் இருப்பதை பாவம் எனக் கூறவில்லை. ஆனால் அது பொல்லாத சிந்தனைகளுக்கும் வீணான கற்பனைகளுக்கும் வழிவகுத்துக் கொடுக்கிறது. சாத்தான் அசுத்தமான விதைகளைத் தூவுவதற்கு நமது சோம்பல்தனம் ஏதுவாகிவிடுகிறது. அதற்குத்தான் நாம் பயப்பட வேண்டும். எருசலேமில் தனது வீட்டின் மேல்மாடியில் தாவீது வீணாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தது சாத்தானுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. அப்படி தாவீது நேரத்தை வீணாகக் கழித்துப் போடாமலிருந்தால், பத்சேபாளைக் கண்டிருக்கவும், உரியாவைக் கொலை செய்திருக்கவும் மாட்டார் அல்லவா?
'எங்களை சோதனைக்குட்படப் பண்ணாதிரும்' (மத்தேயு 6:13) என்று ஜெபிக்கிறீர்களே, நீங்களே சோதனைக்குள் பிரவேசிக்கிறவர்களாக இருந்து கொண்டு அப்படி ஜெபிப்பதால் என்ன பிரயோஜனம்? 'தீமையிலிருந்து இரட்சித்துக் கொள்ளும்' என்கிறீர்கள். தீமையிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டியதான விருப்பம் உங்களுக்கு இருப்பதை செயலில் காண்பிக்கிறீர்களா? யோசேப்பின் முன்மாதிரியைப் பாருங்கள். அவனுடைய எஜமானனின் மனைவி அவனைப் பாவம் செய்யத் தூண்டினாள். அவன் அதற்கு மறுப்புத் தெரிவித்தது மாத்திரமல்ல, அவள் இருக்கும் இடத்திலே செல்வதையே தவிர்த்தான் என்கிறதைக் காண்கிறோமல்லவா? "அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை" (ஆதியாகமம் 39:10). சாலமோன் சொல்வது போல, "துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே. தீயோருடைய வழியிலே நடவாதே. அதுமாத்திரமல்ல, அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே. அதை விட்டு விலகி, கடந்து போ" (நீதிமொழிகள் 4:14-15). குடிகாரனாக ஆகிவிடக்கூடாது என நினைப்பது மாத்திரமல்ல, மதுபானத்தை 'இரத்த வருணமாயிருந்து பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும் அதை நீ பாராதே' (நீதிமொழிகள் 23:31) என்று எச்சரிக்கிறார். இஸ்ரவேலிலே நசரேய விரதம் இருப்பவர்கள் திராட்சை ரசத்தைப் பானம் பண்ணாமலிருப்பது மாத்திரமல்ல, திராட்சையினால் செய்யப்பட்ட எந்தப் பதார்த்தத்தையும் விலக்கிவிட வேண்டும் என்கிற கட்டுப்பாடு இருந்தது. தீமையை செய்யாதீர்கள் என்று கூறாமல் பவுல் ஒரு படி மேலே போய் 'தீமையை வெறுத்துவிடுங்கள்' என்கிறார் (ரோமர் 12:9). பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகி ஓடு என்று தீமோத்தேயுவுக்கு புத்தி சொல்லுகிறார். இந்த மாதிரியான எச்சரிப்புகள் எவ்வளவு தேவையாக இருக்கிறது! தீனாள், பக்தியற்ற சீகேமிய தேசத்தின் பெண்களைப் பார்த்து வரப் புறப்பட்டதினால் தனக்கு மிகுந்த பொல்லாப்பை வருவித்துக் கொண்டாள். லோத்து, பொல்லாதவர்களாகிய சோதோம் குடிகளின் அருகில் தனது கூடாரத்தைப் போட்டதால், தனது உயிரைத் தவிர யாவையும் இழந்து போனான்.
இளைஞர்களே, எச்சரிப்பாயிருங்கள். சாத்தானை உங்கள் ஆத்துமாவுக்கு மிக அருகில் வர விட்டுவிட்டு, பிறகு தப்பித்துக் கொள்ளலாம் என எண்ணாதீர்கள். உங்களைத் தொட முடியாத தொலைவிலேயே அவன் நிற்கட்டும். சோதனைகளை தூரத்திலேயே கண்டு உணர்ந்து கொள்ளுங்கள். அது பாவம் உருவாவதை தவிர்க்கும்.
இளைஞர்களே, நீங்கள் அனைவரும் 139-ம் சங்கீதத்தை மனப்பாடமாகப் படித்து வைத்துக் கொள்ளும்படி புத்தி கூறுகிறேன். நீங்கள் உலகில் செய்கின்ற சகல காரியங்களிலும், 'தேவன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது நினைவில் இருக்கிறதா?' என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டு, உங்களையே ஆராய்ந்து பாருங்கள்.
கிருபையின் சாதனங்கள் இளைஞர்கள் கிருபையின் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிக முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். ஜெபத்திற்கும் பிரசங்கத்திற்குமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிற தேவனின் வீட்டிற்குத் தவறாமல் செல். அப்படி செல்வது உன் கையில்தான் இருக்கிறது. கர்த்தருடைய நாளை பரிசுத்தமாக ஆசரிப்பதைத் தவறாமல் கடைப்பிடி. உனக்கு நாட்களை அருளிச் செய்திருப்பவர் தேவன். ஏழுநாளில் ஒரு நாளை அவருக்காக செலவிடுவதே சரியானதென்று தீர்மானித்துக் கொள்.
இதைக் குறித்து நீங்கள் தவறான அபிப்ராயம் கொண்டுவிடாதபடிக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சபைக்கு ஒழுங்காகச் சென்றுவிட்டால் ஆவிக்குரிய வாழ்க்கைக்குப் போதுமானது என்று நான் கூறுவதாக சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். நான் அப்படிக் கூறவில்லை. பாரம்பரியங்களைக் கைக்கொண்டு வந்த பரிசேயரைப் போல நீங்கள் ஆகவேண்டுமென நான் கூறவில்லை. வாரத்தின் ஒரு குறிப்பிட்ட நாளிலே, குறிப்பிட்ட நேரத்திலே, உங்கள் சரீரத்தை கர்த்தருடைய ஆலயத்திற்குக் கூட்டிச் சென்றுவிட்டால், நீங்கள் மெய்யான கிறிஸ்தவர்கள் என்றும், கர்த்தரை சந்திக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்றும் நான் கூறுவதாக நீங்கள் நினைத்தீர்களானால், நீங்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் கூறுவேன். இருதயத்திலிருந்து ஏறெடுக்கப்படாத எந்த ஆராதனையும் பிரயோஜனமற்ற வீணான காரியம் ஆகும். உண்மையான ஆராதனை எப்படி இருக்கும் தெரியுமா? "உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளும் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாய் இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்" (யோவான் 4:23).
அதே சமயத்தில் கிருபையின் சாதனங்கள் ஒருவனுக்கு இரட்சிப்பை அளிக்காது என்பதால் அவைகளை அலட்சியப்படுத்திவிடவும் கூடாது. தங்கம் ஒரு சாப்பிடும் பொருள் அல்ல; அதனால் அதை உபயோகமற்றது எனக்கூறி தூர எறிந்துவிட மாட்டீர்கள் அல்லவா! உங்களுடைய ஆத்துமா நித்தியமாக வாழ்வதற்கு அது கிருபையின் சாதனங்களை சார்ந்து இருக்கவில்லை என்பதற்காக அவைகளை அலட்சியப்படுத்திவிட முடியாது. உங்கள் ஆத்துமாவின்
இளைஞர்களே, கர்த்தருடைய நாளை மதிக்க மறந்துபோன மக்களின் மத்தியிலே நீங்கள் இருக்க நேரிடலாம். ஆனால் கடவுளின் உதவியைப் பெற்றுக் கொண்டவர்களாக அந்நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டுமென்பதை மறவாமலிருக்கும்படி தீர்மானம் பண்ணிக் கொள்ளுங்கள். சுவிசேஷம் சரியாக சொல்லப்படுகிறதான ஒரு சபையிலே தவறாமல் பங்கெடுப்பதன் மூலமாக கர்த்தருடைய நாளுக்கு கனம் செலுத்துங்கள். உண்மையான ஊழியம் நடக்கிறதான அவ்விடத்திலே தரித்திருங்கள். வாரந்தவறாமல் கர்த்தருடைய நாளிலே அங்கு செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அதனால் உங்களுக்குக் கர்த்தருடைய ஆசீர்வாதம் நிச்சயமாக வந்து சேரும்: 'என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே உனக்கு இஷ்டமானதை செய்யாதபடி உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும் உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொ
உங்களுக்கு இதைக் குறித்து சில சிரமங்கள் இருக்கிறதென்று நம்புகிறேன். சந்தர்ப்பங்கள், நேரம், இடம் போன்ற சிரமங்கள் இருக்கலாம். இவைகளில் நான் எந்த கடினமான கட்டளையையும் விதிக்க மாட்டேன். நீங்கள் உங்கள் மனசாட்சியின் பிரகாரம் செயல்படுங்கள். நீங்கள் உங்கள் சூழ்நிலைக்கேற்ப சிந்தித்து செயல்படுங்கள். நமது கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து தனித்து மலையின் மீது போய் ஜெபித்தார். ஈசாக்கு வயல்வெளிகளில் ஜெபிக்கச் சென்றார். எசேக்கியா ராஜா தனது வியாதிப் படுக்கையிலே கட்டிலின் மேல் படுத்து சுவர்ப்புறமாகத் திரும்பி ஜெபித்தார். தானியேல் ஆற்றங்கரையிலே ஜெபித்தார். பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் மேல்மாடியிலே ஜெபித்தனர். சில இளைஞர்கள் குதிரைகள் கட்டும் லாயத்திலும் வைக்கோற் பரண்களிலும் ஜெபித்திருக்கிறார்கள் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் உங்களுக்குக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது, "அறை வீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி" (மத்தேயு 6:6) என்பதன் அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் என்பதே. கடவுளோடு நீங்கள் முகமுகமாகப் பேசுவதற்கு நேரம் ஒதுக்குங்கள், தினசரி அவ்வேளையிலே கடவுளோடு பேசும்படி பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் கட்டாயம் ஜெபிக்க வேண்டும்.
இது இல்லாமல் எந்த புத்திமதியாலும், அறிவுரைகளாலும் பயன் ஒன்றுமில்லை. பவுல் அப்போஸ்தலன் எபேசியர் 6-ஆம் அதிகாரத்தில் பட்டியலிட்டுக் காண்பிக்கிற சர்வாயுத வர்க்கத்தின் கடைசி ஆயுதம் இந்த ஜெபமாகும். இதை உண்மையோடும், அதன் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்தவர்களாகவும் பிரயோகிக்க வேண்டும். வாழ்க்கையாகிய வனாந்தரத்திலே நீங்கள் பத்திரமாக பயணம் செய்ய வேண்டுமானால் அனுதினமும் உட்கொள்ள வேண்டிய ஆகாரமாக இது இருக்கிறது. கடவுள் இருக்கின்ற உயர்ந்த ஸ்தலத்திற்கு முன்னேறிச் செல்வதற்கு ஜெபத்தின் மூலமாக பலம் பெற வேண்டும். நான் ஒரு காரியத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இரும்பு பட்டறைகளில் வேலை செய்பவர்கள், காந்த சக்தியுள்ள ஒரு முகமூடியை அணிந்து கொள்வார்களாம். அங்கு பறக்கின்ற இரும்புத் துகள்கள் அவர்கள் உட
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.