லோத்தின் மனைவி ஏதோ திரும்பி சோதோம் நகரத்தின் அழிவின் எச்சங்களைச் சற்றுத் திரும்பிப் பார்த்ததற்காக தேவன் அவளைக் கொன்ற செயல் பெண்களின் மீது அவருக்கு இருந்த குறைவான அபிப்பிராயத்தினால் தானா?
லோத்தும் அவனுடைய குடும்பத்தாரும் நகரத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்குத் தப்பிச் செல்லும்போது திரும்பிப் பார்க்கக்கூடாது என்று தேவதூதர்கள் தெளிவாக எச்சரித்திருந்தார்கள். எனவே, இது “வெறுமனே திரும்பிப் பார்க்கிற” ஒரு செயலாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் ஓடிச்செல்லும்போது அவர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு நேரடிக் கட்டளை தேவதூதர்களிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தது. முழு நகரமும் எரிக்கப்படும்போது அவர்கள் அதிலிருந்து மீட்கப்பட்டனர். எனவே தேவன் அவர்கள்மீது காட்டிய மாபெரும் இரக்கத்துக்கு அவர்கள் வாழ்க்கையில் காட்டவேண்டிய பிரதி உபகாரத்துக்கு அடையாளமாகவே திரும்பிப் பார்க்க வேண்டாம் என்னும் கட்டளை கொடுக்கப்பட்டது. இதற்கு அவர்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். ஆனால் தேவதூதர்களால் கொடுக்கப்பட்ட ஒரு நேரடியான கட்டளைக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாதது லோத்தின் மனைவியின் குற்றமே ஆகும். வேண்டுமென்றே சட்டங்களை மீறுகிற செயல்களுக்கு எந்த நீதிமன்றமும் தண்டனையே வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆகவேதான் லோத்தின் மனைவி உப்புத் தூணாக மாறினாள். இது அவள் ஒரு பெண்ணாக இருப்பதால் கொடுக்கப்பட்ட தண்டனை அல்ல. லோத்து திரும்பிப் பார்த்திருந்தாலும், அவனது கீழ்ப்படியாமையின் விளைவாக அவனும் சட்டத்தை மீறியதன் அடிப்படையில் தண்டனையைச் சந்தித்திருப்பான். எனவே, லோத்தின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வுகள் தேவன் எந்த வகையிலும் பாலினப் பாகுபாடு பார்க்கிறவர் அல்ல, என்பதை தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவன், பாவத்தை எந்தப் பாலினத்தவர் செய்தாலும், யாரையும் பொருட்படுத்தாமல் அதைத் தண்டிக்கிறவர் என்பதை இதன் மூலம் தெளிவாக அறிந்துகொள்கிறோம்.
ஆதியாகமம் 38:16-24: இந்த வேதபகுதி யூதா என்ற மனிதன் தன் விதவை மருமகளுடன் உடலுறவு கொண்ட அந்த நிகழ்வைச் சொல்கிறது. அவள் துக்கத்தின் ஆடை அணிந்திருந்ததை, விபச்சாரியின் ஆடை என்று தவறாகக் கருதி யூதா (ஒரு முட்டாள்தனமான மனிதனாக) அவளுடன் உடலுறவு கொண்டான். பின்னர் அவன் அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டான். இது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இல்லையா?
இது மிகவும் சுவாரசியமான கதை என்று சொல்லுகிறார். ஆனால் அவர் முழுக்கதையையும் புறக்கணித்துவிட்டு, கதையில் ஆங்காங்கே சில குறிப்புகளை மட்டும் எடுத்து வைத்து குற்றம் கண்டுபிடிப்பது சரியானது அல்ல. அகவே நாம் இதன் முழுக் கதையையும் பார்ப்போம். இந்த சம்பவத்தின் பின்னணி என்னவென்றால், தாமார் யூதாவின் மூத்த மகன் ஏர் என்பவனை மணந்திருந்தாள். இவன் இறந்துவிட்டான். எனவே யூதாவின் இரண்டாவது மகன் ஓனான் அவளை மணந்தான். ஆனால் அவன் தன் சகோதரனின் சந்ததியைப் (இஸ்ரவேலின் பொதுவான வழக்கம்) பாதுகாக்க விரும்பாததால் வேண்டுமென்றே அவளுக்கு குழந்தை உண்டாவதற்கான வாய்ப்பை மறுக்கிறான். இதனால் தேவன்அவனையும் கொன்று விடுகிறார். தேவன் பாலியல் பாகுபாடு காட்டுகிறவர் அல்ல என்பதற்கு இங்கே ஒரு நிரூபணம் இருக்கிறது. ஏனெனில் இந்தக் கதையில் அவர் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு எந்த வகையிலும் சாதகமாக நடந்துகொள்ளவில்லை. ஓனான் தாமாருக்கு கடமை தவறியபோது, தேவன் அவனைக் கொன்றுவிடுகிறார். தேவன் பாலியல் விஷயங்களில் பாரபட்சம் காட்டுகிறார் என்பது உண்மையல்ல. இங்கே ஆண்களுக்குச் சாதகமாக இருந்து ஒருதலைப் பட்சமாக நடந்துக் கொள்ளவில்லை என்பதற்கு இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும். இதற்கு மாறாக பாலுறவுக் காரியத்தில் பெண்ணின் உரிமையை தேவன் நிலைநாட்டுகிறதையே காண்கிறோம். மேலும் அவளிடம் அநியாயமாக நடந்துக் கொண்டதற்காக தண்டிக்கிறதையும் பார்க்கிறோம்.
இரு மகன்களும் இறந்துவிட்டதால் அவர்களுடைய வழக்கத்தின்படி யூதா இப்போது தனது மூன்றாவது மகனை தாமாருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். ஆனால் மூன்றாவது மகனும் இறந்துவிடுவானோ என்று அஞ்சி அவர் அதைச் செய்யவில்லை. யூதா அவளை அவளுடைய தந்தையின் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறான். இங்கே கவனிக்க வேண்டிய முதலாவது முக்கியமான காரியம் யூதா தாமருடன் உடலுறவு கொண்டபோது, அவள் தனது மாமனாருடன் வசிக்கவில்லை.
இப்போது, தாமருடைய செயலின் நோக்கத்தைக் காண்பதற்காக பின்வரும் வசனங்களை வாசித்துக்கொள்வோம்.
ஆதியாகமம் 38:11-15: “அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள். அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து.”
தாமார் அணிந்திருந்த முக்காட்டை யூதா வேசியின் முக்காடாகக் கருதினான் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்று இந்த வசனப் பகுதியின் வாயிலாக தெளிவாக அறிந்துகொள்கிறோம். தன் மாமனாகிய யூதா தன்னுடைய நகரத்துக்கு வந்திருக்கிறான் என்பதை அறிந்த தாமார், தனது விதவையின் ஆடைகளைக் கழற்றிவிட்டு, வேண்டுமென்றே ஒரு விபச்சாரியின் ஆடையை அணிந்திருந்தாள் என்பது இந்தப் பகுதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யூதா தனது மூன்றாவது மகனை தனக்குத் திருமணம் செய்துக் கொடுக்கவில்லை என்பதற்காக அவளுடைய ஒருவிதமாகபழிவாங்கல் இது. எனவே இந்த பெண்ணியவாதி இதை வேண்டுமென்றே இந்தப் பகுதியை தவறாகச் சித்தரித்து குற்றஞ்சாட்டியிருக்கிறார். யூதா ஒரு முட்டாளும் இல்லை, தாமார் விதவையின் உடையிலும் இல்லை. தாமாரின் நோக்கம், ஒரு விபச்சாரியாக நடித்து, யூதாவைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்பதே ஆகும். இதற்காக அவள் திட்டமிட்டு நாடகமாடினாள் என்பது தெளிவாகத் தெரிகிறது. லோத்தின் மகள்களின் காரியத்தைப் போலவே, இங்கேயும் தாமாரே தனது முதல் அடியை எடுத்து வைக்கிறாள். யூதா செய்ததை இது எந்த விதத்திலும் நியாயப்படுத்தாது. அது தீயது மற்றும் இழிவானது. ஆனால் முழு உண்மையையும் உணர்த்தும் வசனங்களை மேற்கோள் காட்டுவதை எவ்வளவு வசதியாக இந்த பெண்ணியவாதி தவிர்த்திருக்கிறார்.
பின்னாட்களில் யூதா மீண்டும் அந்த இளம் பெண்ணைப் (தாமாரைப்) பார்த்து, அவள் விபச்சாரியாக இருந்ததற்காக எரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இருவரும் இணைந்து தவறான செயலில் ஈடுபடும் போது, அந்தப் பெண் மட்டும் தண்டிக்கப்பட வேண்டும் என எவ்வாறு கோரிக்கை வைக்கிறார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்). ஆனால் உண்மை தெரிந்தபிறகு, யூதா அந்தப் பெண்ணை தன் மருமகளாக அங்கீகரித்து, அவள் தன் குழந்தையுடன் இருந்தபோது அவளைக் கொல்ல வேண்டாம் என்று அவன் முடிவு செய்தான். யூதா உடலுறவில் ஈடுபடலாம், தேவைக்கு ஒரு விபச்சாரியைப் பயன்படுத்தலாம், அதுவும் அவனைக் காட்டிலும் மிகவும் இளைய பெண்ணை கர்ப்பந்தரிக்கச் செய்யலாம், ஆனால் அவள் மட்டுமே மரணத்திற்கு தகுதியானவள் என்று அவர் நினைப்பது பாலினப் பாகுபட்டினால் அல்லவா?
யூதாவுக்கும் தாமாருக்கும் இடையே என்ன நடந்ததோ அது எவ்வித ஒளிவு மறைவுமின்றி வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நாங்கள் மீண்டும் சொல்ல விரும்புகிறோம். இந்தச் சம்பவமானது, மனிதன் முற்றிலும் பாவத்தால் ஆட்கொள்ளப்பட்டவனாகவும், கறைப்படிந்தவனாகவும், அவனது பாவநடத்தையில் எந்த எல்லைக்கும் அவனால் செல்வான் என்னும் வேதாகமத்தின் மையக் கருத்துக்கு உடன்பட்டதாகவும் ஆதரவளிக்கிறதாயும் இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். தேவனின் கிருபையையும் இரக்கத்தையும் தவிர அவனுக்கு வேறு எவ்வித நம்பிக்கையும் இல்லை.
நான் முன்பே குறிப்பிட்டது போல, திருமண உறவுக்கு அப்பாற்பட்டு நடக்கிற விபசாரம் போன்ற எந்தவொரு பாலியல் உறவுகளும் பாலியல் பழக்கவழக்கங்களும் தேவனால் தண்டிக்கப்படுகின்றன. யூதாவுக்கோ! அல்லது தாமாருக்கோ! சட்ட விரோதமான பாலுறவில் ஈடுபடும்படி தேவன் எந்த உரிமத்தையும் வழங்கவில்லை. எனவே, “யூதாவால் உடலுறவு கொள்ள முடியும், ஆனால் தாமரால் முடியாது” என்று இந்த பெண்ணியவாதி எப்படிச் சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. தேவனுடைய நீதிமன்றத்தில், இருவரும் சமமாகக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்கள். யூதா தான் உறவு கொண்டவள் தன்னுடைய மருமகளாகிய தாமார் என்று உணர்ந்தவுடன் அவன் அவளிடத்தில் மேலும் உறவு கொள்ளவில்லை என்பது வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. யூதாவும் கூட இத்தகைய தவறான உடலுறவுக்கு எதிரானவர் என்பதையே இது காட்டுகிறது.
மத்தேயு ஒன்றாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள மேசியாவின் குடும்ப வழிப்பட்டியலில் தாமாரின் பெயர் இடம் பெற்றிருப்பது. குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெண்கள் பரிபூரணமான வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தாலும் தேவன் அவர்களை (பெண்களை) எவ்வாறு உயர்த்துகிறார் என்பது இதன் மூலம் உறுதியாகிறது அல்லவா!
யாத்திராகமம் 21:3-4: இந்த வேதபகுதியில், ஒரு எஜமான் தன்னிடத்தில் இருக்கிற ஒரு ஆண் அடிமைக்கு ஒரு பெண்ணை வாழ்க்கைத் துணையாகக் கொடுத்திருந்தாலும் (அவர்கள் எவ்வளவு காலம் திருமணம் செய்திருந்தாலும், அவர்கள் ஒருவரையொருவர் எவ்வளவு நேசித்தாலும் அல்லது குழந்தைகளைப் பெற்றிருந்தாலும்) அந்த அடிமை ஆண் விடுதலை பெற்றுப் போகிற சமயத்தில் தனது மனைவி அல்லது குழந்தைகளுடன் செல்ல முடியாது என்று கூறுகிறது. அவனுடைய மனைவியும் அவர்கள் பெற்ற குழந்தைகளும் எஜமானரின் சொத்தாகவே உள்ளது. இங்கே அந்தப் பெண் மற்றும் பிள்ளைகளுடைய தனிப்பட்ட மகிழ்ச்சியும், அந்தக் குடும்பத்தின் முக்கியத்துவமும் ஒரு பொருட்டாகவே எண்ணப்படவில்லையே?
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிற வேதபகுதியை தெளிவான வகையில் ஆராய்வதற்கு முன்னதாக அதன் பின்னணியை ஆராய்வது நமக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். பண்டைய உலகில் அடிமைத்தனம் கட்டுப்பாடற்ற வகையில் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. இத்தகைய அடிமைத்தனத்திற்கு வேதாகமமே காரணம் என்று சிலர் நினைக்கிறார்கள். இது முற்றிலும் முரணானது. மோசேயின் காலத்திற்கு முன்னரே அல்லது இஸ்ரவேல் நாடு உருவாவதற்கு முன்னரே அடிமைத்தனம் உலகில் இருந்தது. உண்மையைச் சொல்வதென்றால் எபிரெய மக்களே எகிப்தில் 400 ஆண்டுகளாக அடிமைகளாக இருந்தார்கள்.
அவர்கள் எகிப்தில் இருந்த சமயத்தில் அடிமைத்தனம் எவ்வளவு கொடூரமாக இருந்தது என்பதை நாம் பார்க்கிறோம். பண்டைய உலகில் இருந்த அடிமை முறையானது மனித இனத்தை மிகவும் இழிவுபடுத்துகிற ஒன்று என பண்டைய வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அடிமைகளின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிற எவ்வித சட்டங்களும் விதிமுறைகளும் அந்தக் காலத்தில் இல்லை. அவர்கள் மிகவும் தவறாக நடத்தப்பட்டார்கள், தவறாகக் கையாளப்பட்டார்கள். சமுதாயத்தில் எவ்வித மதிப்பும் இன்றி காணப்பட்டார்கள். பலர் அடித்துக் கொல்லப்பட்டார்கள், பலருக்கு உணவு கொடுக்கப்படாமல் பசியால் மடிந்தார்கள். அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை, விலங்குகளைக் காட்டிலும் மோசமான முறையில் நடத்தப்பட்டார்கள்.
இந்த சூழலைப் பார்க்கும்போது, யாத்திராகமம் 21 -ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட அடிமைகளைக் குறித்த காரியங்கள் எத்தனையோ சிறப்பானதாக அமைந்துள்ளது. தேவன் அடிமைகளின் மீது எவ்வளவு கரிசனையுள்ளவராக இருந்தார் என்பதைக் காணமுடிகிறது. ஆம், அது தேவனுடைய இளகிய இருதயத்தின் வெளிப்பாடே ஆகும். பண்டைய உலகத்தைப் போலவே இஸ்ரவேல் மக்களுக்கும் அடிமைகள் இருந்தார்கள். ஆனால் இவ்விரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருந்ததைக் காணடிமுடியும். பண்டைய காலத்தில் இருந்த அடிமைகளைப் போலவே இஸ்ரவேல் மக்களிடத்தில் இருந்த அடிமைகளும் இருந்தார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் பண்டைய உலகத்தைப் போல இஸ்ரவேலர்களின் அடிமைகள் மிருகத்தனமாகவோ இழிவாகவோ நடத்தப்படவில்லை. பண்டைய காலத்தில் அடிமைத்தனம் இருந்ததால், அதைத் தவிர்க்க முடியாத வகையில் ஏற்றுக்கொள்கிறது. “புதிய ஏற்பாட்டில் பவுல் காலத்தில் அப். பவுல் இத்தகைய அடிமைத்தனத்தை எவ்வாறு ஏடுத்துக்கொண்டாரோ அவ்விதமாகவே தோராவும் எடுத்துக்கொள்கிறது. ஆனால் பண்டைய உலகத்தைப் போல அல்லாமல் புதிய மனிதாபிமான அணுகுமுறையுடன் அவர்களைப் பார்க்கிறது. இறுதியில் அடிமைகளுக்கு விடுதலை கொடுப்பதன் மூலமாக அதற்குச் சாவுமணி அடிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் அடிமைத்தனம் இஸ்ரவேலின் கிராமப்புறங்களிலும், சிறிய ஊர்களிலும் ஒரு சிறிய அளவில் இருந்தது” என்று திரு. கோல் என்பார் கூறுகிறார். “மோசே அடிமைத்தனத்தின் எந்த வடிவத்தையும் நிறுவவில்லை; மேலும் அது தொடர்பான சட்டங்களை இயற்றி அதை ஒரு குறுகிய எல்லைக்குள் சுருக்கினார். இறுதியாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்பட்டன” என்று பிரசிங்கிகளின் இளவரசனான C.H. ஸ்பர்ஜன் கூறுகிறார்.
“யாத்திராகமப் புத்தகத்தில் நியாயப்பிரமாணச்சட்டங்கள் பற்றிச் சொல்லப்பட்டபகுதியின் முதல் வார்த்தைகளே வேலைக்காரர்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் இஸ்ரவேலர் மதிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்னும் கருத்துடன் தொடங்குவது குறிப்பிடத்தக்கது ஆகும். அடிமைகளை மனிதர்களாகக் கூட கருதாத ஒரு கலாச்சாரத்திலேயே, அவர்களை இழிவுபடுத்துவதைக் கட்டுப்படுத்தவும், அவர்களுக்குரிய கண்ணியத்தை வழங்கவும் விதிகளையும் ஒழுங்கு முறைகளையும் வகுத்த வேதாகமத்தின் தேவனுடைய இதயத்தைப் பாருங்கள். சீனாய் மலையிலிருந்து மோசேயிடம் தேவன் பேசிய வார்த்தைகளில் முதல் வார்த்தையைக் கவனியுங்கள். உங்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டுவந்தர் யெகோவா என்றே அது அறிவிக்கிறது. சீனாய் மலையிலிருந்து கொடுக்கப்பட்ட இன்றியமையாத நியாயப்பிரமாணச் சட்டத்தில் முதல் முதலாகக் கையாளப்படும் நபர் அடிமைகள் என்பவர்களே ஆவார்” என்று திருவாளர் “சாட்விக்” என்பவர் கூறுகிறார்.
ஒரு எபிரெயர் மற்றொரு எபிரெயருக்கு அடிமையாக மாற வேண்டுமாயின் நான்கு அடிப்படை வழிகள் இருந்தன.
மேற்கண்ட நான்கு சந்தர்ப்பத்திலும், ஒருவன் வேறொருவருக்கு ஏன் வேலைக்காரனாக ஆக வேண்டும் என்ற நோக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கடன் பிரச்சினையினால் சாவதை விட, ஒருவனிடத்தில் வேலைக்காரனாக இருப்பதன் மூலம் அவன் வாழ முடியும் என்பதை நாம் காண்கிறோம்.
யாத்திராகமம் 21 -ஆம் அதிகாரத்தில், உண்மையிலே என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துக் கொள்வதற்காக அந்த அதிகாரத்தின் முழுப் பகுதியையும் படிக்கவேண்டும். ஆங்காங்கே சில வசனங்களை எடுத்துக்காட்டினால் முழுமையான பொருளைப் புரிந்துகொள்ள முடியாது. எனவே உண்மையை என்ன என்பதை அறிய அந்த அதிகாரத்தின் முதல் ஆறு வசனங்களைக் கவனமாகப் படிக்க வேண்டியது அவசியம்.
யாத்திராகமம் 21:1 –வது வசனத்தில், ஒரு எஜமானன் வேலையாட்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் தேவன் கட்டமைக்கிறார். இது ஒரு எஜமானன் தம்முடைய வேலைக்காரர்களை தாம் விரும்பியபடி நடத்துவதற்கான உரிமையைப் பறிக்கிறது. இதுவே பழங்காலக் கலாச்சாரத்தில் நாம் நம்புவதற்கு அரிதான ஒரு விதிமுறை.
யாத்திராகமம் 21:2 –வது வசனத்தில், ஒரு வேலைக்காரன் தன் எஜமானுக்கு என்றென்றும் அல்லது நிரந்தரமாக கட்டுப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைத் தெரிவிக்கிறது. அவன் அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் மட்டுமே அடிமையாக ஒருவனிடத்தில் இருக்க முடியும். அதற்குப் பிறகு அவனுக்கு விடுதலை கொடுத்துவிட வேண்டும். இதன் மூலம் ஒரு வேலைக்காரன் எஜமானரின் ஒரு உடைமையாக அல்லாமல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான தொழிலாளியாகவே இருக்கிறான். மேலும் இவன் எந்த முகாந்தரத்தை முன்னிட்டு வேலைக்காரனாக மாறியிருந்தாலும், ஏழாவது ஆண்டில் அவன் பணமோ அல்லது வேறு எந்தக் கிரயமோ செலுத்தாமல் சுதந்தரமாக எஜமானிடமிருந்து வெளியேறிச் செல்ல முடியும். இத்தகைய முறையில் ஒரு அடிமையை விடுதலையாக்குவது என்பது பழங்காலச் சமுதாயத்தில் கேள்விப்பட்டிராத ஒன்று.
யாத்திராகமம் 21:3 –வது வசனத்தில், அவன் திருமணம் செய்து கொண்டவனாக வந்திருந்தால் அவன் விடுதலை பெற்றுப் போகிற சமயத்தில் தனது மனைவியையும் தன்னுடன் அழைத்துச் செல்லலாம் என்று நாம் காண்கிறோம். (பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைச் சுட்டிக்காட்டுகிற இந்தப் பெண்ணியவாதி இந்த வசனத்தைப் படித்திருந்தாலும் இந்தக் கருத்தை அறியாமல் போனது ஏனோ?). தன்னிடம் வருகிற ஒரு அடிமைக்கு குடும்பம் இருந்தால் அந்தக் குடும்பத்தையும் அந்த எஜமானர் கவனித்துக் கொள்ளவேண்டும். மேலும் அந்த அடிமை தனது குடும்பத்தை தன்னுடன் வைத்துக் கொள்ளவும், மனைவியுடன் இணைந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். ஓர் அடிமைக்கு குடும்ப வாழ்க்கை நடத்துவது என்பது அந்தக் காலக் கலாச்சாரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
யாத்திராகமம் 21:4-6 வசனங்களில், ஒரு அடிமை குடும்பம் இல்லாதவனாக வந்திருந்தால், அவன் வந்தபின் அவனுக்கு எஜமான் திருமணம் முடித்துக்கொடுத்து குடும்பம் நடத்த அனுமதித்திருந்தால் (இதுவும் அந்தக் கலாச்சாரத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாதது), அந்தக் குடும்பம் எஜமானருக்கு சொந்தமானது. அதாவது அவனுடைய மனைவியும் அவளுடைய பிள்ளைகளும் எஜமானுக்குச் சொந்தமானவர்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது இது நியாயமற்றதாகத் தோன்றினாலும், அந்தக் காலத்தில் இருந்த அடிமைத்தனத்தோடு ஒப்பிடும் போது இது பெரிய காரியமே அல்ல. அந்தக் காலத்திய கலாச்சாரம் ஓர் அடிமைக்கு ஒரு குடும்பத்தைக் கொடுக்க வேண்டும் என்பதைக் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு செயலாகும். குடும்பத்தோடு வந்திருந்தால் குடும்பத்தோடு செல்லலாம் என்று கூறிய முந்தைய வசனத்தில் சொல்லப்பட்டதற்கு மாறாக, இது எஜமான் வழங்கிய குடும்பமாகையால் இது எஜமானனுக்கே சொந்தம். திருமணமாகி அடிமையாகி வந்தவனின் குடும்பத்தை வைத்துக்கொள்ள எஜமானுக்கு எவ்விதத்திலும் உரிமையில்லை. ஆனால் எஜமான் கொடுத்த குடும்பத்தை அவரே வைத்துக்கொள்ள முடியும். இங்கே ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஓர் அடிமைக்கு தன் குடும்பத்தை விட்டுச் செல்லலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் அந்த அடிமையின் முடிவாகவும் விருப்பமாகவுமே இருக்கிறது. அந்தக் காலத்தில் அடிமைகளுக்கென்று சுயமான எந்த விருப்பமும் இல்லை என்பது நாம் அறிந்ததே. மேலும் ஒரு சுவாராஸ்யமான காரியம் என்னவெனில், ஓர் அடிமை தன் எஜமான் மீதும், தன் குடும்பத்தார் மீதும் அன்பு வைத்து அங்கே நிரந்தரமாகத் தங்கிவிட முடியும். தனது அன்பான எஜமானரின் பாதுகாப்பில், தனது குடும்பத்துடன் தொடர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு இருந்தது, ஒரு அடிமைக்குக் கிடைக்கக்கூடிய எவ்வளவு சிறந்த வாழ்க்கை இது. இப்படி இருப்பானேயாகில் அந்த எஜமான் அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் தேவையான பாதுகாப்பைக் கொடுத்து, அவர்களுடைய அடிப்படையான தேவைகளைச் சந்தித்து, சமாதானத்துடன் வாழ வழிவகை செய்கிறார்.
அடிமை தொடர்பான சட்டங்களை நன்றாக அறிந்திருக்கிற திருவாளர் “கேம்பல் மோர்கன்” என்பாருடைய மேற்கோளுடன் இந்தப் பகுதியை நிறைவு செய்ய விரும்புகிறேன்:
“வேதாகமத்தில் சொல்லப்பட்ட அடிமைத்தனம் தொடர்பான சட்டங்களை கவனமாக ஆராய்ந்து பரிசீலித்தால், அங்கே அடிமைத்தனத்தை ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக அவர்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒர் உடன்படிக்கையின் வரம்புக்குள் செய்ய வேண்டிய உழைப்பு என்றே தெரிய வருகிறது. மேலும் அந்தக் காலத்திய சமுதாயத்தில் இருந்த அடிமைகளின் நிலைக்கும், எபிரெய மக்களிடையே காணப்பட்ட அடிமைகளின் நிலைக்கும் குறிப்பிடத்தக்க பெரிய வேறுபாடுகள் இருந்ததைக் காணமுடியும். அடிமைகள் விடுதலையாகிச் செல்வதற்கான தார்மீக முன்னெடுப்பின் ஒரு தொடக்கம் என்றே இதைக் குறித்துக் கூற முடியும். உண்மையில் வேதாகமம் அடிமைத்தனத்தை அகற்றுவதற்கான பொறுப்பையே கொண்டிருக்கிறது தவிர, அதை நிலை நிறுத்துவதற்கு ஒருபோதும் முயலவில்லை. பண்டைய உலகில் இத்தகைய நியாயப்பிரமாணச் சட்டங்களின் மூலமாகவும், நவீன உலகில் “ஆபிரகாம் லிங்கன்”, “வில்லியம் வில்பர்ஃபோர்ஸ்” மற்றும் “வில்லியம் கேரி” போன்ற மனிதர்கள் மூலமாகவும் அகற்றவே போராடுகிறது.
யாத்திராகமம் 21:7 -ஆம் வசனம் கூறுகிறபடி, ஒருவன் தன் மகளை அடிமைத்தனத்திற்கு விற்க தேவன் அனுமதிக்கிறார் என்பது மட்டுமின்றி, அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான சட்டங்களையும் அவர் வழங்குகிறாரே. இது பெண்களுக்கு எதிரான பாகுபாடு அல்லவா?
யாத்திராகமம் 21:7-11: “ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது. அவளைத் தனக்கு நியமித்துக்கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை. அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன். அவன் வேறொரு பெண்ணைக் கொண்டானாகில், இவளுக்குரிய அன்னவஸ்திர விவாகக்கடமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருப்பானாக. இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணங்கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவள்”.
இந்த வசனம், “ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால்” என்று தொடங்குகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். தேவன் யாரிடமும் அடிமைத்தனத்தை திணிப்பவரும் அல்ல, அதை உற்சாகமூட்டுபவரும் அல்ல. மாறாக அங்கே ஒரு தந்தை தனது மோசமான சூழ்நிலையின் காரணமாக தன் மகளை விற்க வேண்டும் என்னும் முடிவை எடுக்க நிர்பந்திக்கப்படுகிறார். இது அந்த கலாச்சாரத்தில் நிலவும் சூழ்நிலை. எனவே தேவன் இதில் உடனடியாகத் தலையிட்டு தனது அக்கறையை வெளிப்படுத்துகிறார். எனவேதான் ஒரு “வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது” என்று கூறுகிறார். இதைக் கண்டு பெண்ணிய வாதிகள் தேவன் ஆண்களுக்கு ஆதரவாகவும் பெண்களுக்கு எதிராகவும் இருக்கிறார் என்று முறையிடுகிறார்கள். இது தேவனுடைய பாலினப்பாகுபாட்டைக் காட்டுகிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக, பெண்களையும் அவர்களது நல்வாழ்வையும் பாதுகாக்க தேவன் வகுத்துள்ள விதிகளைக் காட்டுகிறது என்பதே உண்மையாகும்.
மேலும், வசனம் 8 -ஆம் வசனத்திலிருந்து, அடிமையாக விற்கப்பட்ட மகளை எஜமான் ஒரு கட்டத்தில் ( அநேகமாக யூத வழக்கப்படி ஒரு வருடம் கழித்து ) திருமணம் செய்து கொடுக்க வாய்ப்பிருப்பதாக புரிந்துகொள்கிறோம். இது நிச்சயமாகவே அவளுடைய நிலையை உயர்த்தும். எனவே, இங்கு விவரிக்கப்பட்டுள்ள விஷயம் என்னவெனில், ஓர் இளம் பெண்ணை அவளது தந்தை ஒரு குடும்பத்திற்கு திருமண நோக்கத்துடன் விற்றதாகத் தெரிகிறது. திருமணத்தின் விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், அது ஒப்பந்தத்தை மீறுவதாகக் கருதப்படும். மேலும் அந்தப் பெண் அவனுக்கு வஞ்சக துரோகம் செய்தாலும் அவளை அவன் வேறொருவருக்கு விற்றுவிட முடியாது. மேலும் அந்த எஜமான் இந்த நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள முற்படுவதை தேவன் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார். எனவே அந்த மனிதன் அவளை வெறுமனே அனுப்பிவிட முடியாது. அவர் அவளை எந்த வெளி மனிதருக்கும் விற்க முடியாது. ஆனால் அவள் தந்தையால் மீட்கப்படலாம். ஒருவேளை அவர் அவளைத் தன் மகனுக்கு திருமணம் செய்துகொடுத்தால், அவர் அந்தப் பெண்ணை ஓர் அடிமையாக அல்ல, தன் மகள்களில் ஒருத்தியைப் போல நடத்த வேண்டும். மேலும் அவன் வேறொரு மனைவியைத் திருமணம் செய்துகொண்டாலும், இவளைக் கைவிட்டுவிடாமல், ஒரு மனைவிக்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் செய்து அவளைப் பராமரிக்க வேண்டும். இவை எதுவும் செய்யப்படவில்லையெனில், அவளுடைய தந்தை அவளை எவ்வளவு தொகைக்கு விற்றானோ அந்தத் தொகையைக் கூட திருப்பிச் செலுத்தாமல் அவளை விடுதலையாக அழைத்துச் சென்றுவிடலாம். இது அவளை ஓர் அடிமைப் பெண் என்ற நிலையிலிருந்து அவளுக்கு விடுதலையைக் கொண்டுவரும். எனவே, விற்கப்பட்ட பெண்ணாணவள் தன் எஜமானரின் வீட்டில், எஜமானனின் மனைவியாகவோ அல்லது அவரது மகளைப் போலவோ கண்ணியமான வாழ்க்கை வாழவே வழியிருக்கிறது. இப்படி இராவிட்டாலும், எஜமானோ அல்லது அவருடைய மகனோ அவளைத் திருமணம் செய்துகொள்ளத் தவறினாலும், அவள் தந்தையால் மீட்கப்படுகிறாள் அல்லது அவள் விடுவிக்கப்படுகிறாள்.
இன்றைய நவீன காலத்திலும், குறிப்பாக பெண்களுக்கு அதிகப்படியாக சுதந்தரம் கொடுக்கப்பட்டிருக்கிற இந்தக் காலத்திலும், அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் அளிப்பது இருந்தாலும் கூட, எந்த விதத்திலும் பொறுப்பேற்காமல் எத்தனை ஆண்கள் பெண்களை வாக்குக்கொடுத்துவிட்டு அதாவது நிச்சயம் வரை சென்றுவிட்டு திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிடுகிறார்கள். இவற்றையெல்லாம் கண்டும்கூட நமது தற்காலச் சமூகம் அமைதியாக வேடிக்கை பார்த்தக்கொண்டிருப்பது விநோதமான காரியம் அல்லவா? பண்டைய கலாச்சாரத்தில், நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நிறுத்தப்பட்ட அடிமைப் பெண்ணைத் தேவன் எவ்வளவு கரிசணையோடு கவனித்துக் கொள்கிறார் என்பது எவ்வளவு பெரிய காரியம். இதை உங்களால் கற்பனை செய்தாவது பார்க்க முடிகிறதா? ஆகவே பெண்ணியவாதிகள் குற்றம் சாட்டுவதுபோல் வேதாகமக் காலத்தில் அல்லது தோராவில் பெண்களுக்கு அநிதி எதுவும் இழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது?
யாத்திராகமம் 21:10 –ம் வசனப் பகுதி தோராவில், ஆண்கள் பலாதார மணம் செய்துகொள்ளும்படி தேவன் அனுமதிக்கிறார், மேலும் ஓர் ஆண் பல மனைவிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான சட்டங்களையும் கூட அமைத்திருக்கிறாரோ?
வேதாகமத்தின் தேவன் ஒருபோதும் பலதார மணத்தை ஏற்படுத்தவுமில்லை, அதை ஆதரிக்கவும் இல்லை (ஆதியாகமம் 2:18-25 ஆகிய வசனங்களில் சொல்லப்பட்ட காரியம், மத்தேயு 19:1-9 ஆகிய வசனங்களிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது திருமண உடன்படிக்கையில் ஓர் ஆண் ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்துகொள்வதே தேவனுடைய திட்டமாயிருக்கிறது. இதை மீறுவது பாவமாகும், மேலும் தேவனின் பார்வையில் இது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகும். புறமதக் கலாச்சாரங்கள் எபிரெய மக்களின் மீது அதிக அளவிலான தாக்கங்களைக் கொண்டிருந்தன என்பது உண்மைதான். பலருக்கு பல மனைவிகள் இருந்தார்கள் என்பது உண்மையே. ஆனால் இது ஒருபோதும் தேவனின் திட்டம் அல்ல. தேவன் ஒருபோதும் பலதார மணத்தை மன்னிக்கவில்லை. உண்மையில், தோராவின் சட்டங்கள் மிகவும் கடுமையானவை. அது திருமணமானவர்களிடையே காணப்படும் விபச்சாரம் என்னும் பாவத்துக்கு மரண தண்டனையை கொடுக்கப் பரிந்துரைக்கிறது. (லேவியராகமம் 20:10, உபாகமம் 20:20). பெரும்பாலான பண்டைய கலாச்சாரங்களும் மதங்களும் விபசாரத்தைக் குற்றத்துக்குரிய ஒரு தண்டனையின் செயலாகக் கூடப் பார்ப்பதில்லை.
வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள எந்த குடும்பத்திலும் பலதாரமணம் நேர்மறையான விளைவை ஏற்படுத்தியதாக நாம் காண்கிறதில்லை. வேதம் கூறும் அனைத்து முக்கியமான கதாபாத்திரங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கொண்டிருந்ததால் பிரச்சினைகளையே சந்தித்தன என்பதே உண்மை. இத்தகைய பிரச்சினைகள் அனைத்துக்கும் முதன்மையாக காரணம் ஒரே கணவன் ஒரு மனைவி என்ற குடும்பத்திற்கான தேவ திட்டத்திற்கு எதிராக இருந்ததன் விளைவு தான். இத்தகைய பிரச்சினைக்குரிய நிகழ்வுகளை வேதத்தில் சேர்க்கப்படுவதை தேவன் உறுதி செய்தார். ஏனெனில் இத்தகைய பலாதாரண திருமணத்தை தேவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், அது தண்டனைக்குரியது என்பதையும் மக்கள் அறிந்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவும் இதை வேதாகமத்தில் சேர்த்துள்ளார். பழைய ஏற்பாட்டின் இறுதிப் பகுதிக்கு நாம் வரும்போது, கணவன் - மனைவிக்கு இடையே (மனைவிகளுக்கு இடையே அல்ல) அமைந்துள்ள திருமண உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மல்கியாவின் தீர்க்கதரிசனத்தில் தேவன் தெளிவாகக் கூறியுள்ளார். நாம் புதிய ஏற்பாட்டிற்கு வரும்போது அந்தக் காட்டளை மீண்டும் உறுதிப்படுத்தப்படிருப்பதைக் காண்கிறோம்.
லேவியராகமம் 12:1-8: இந்த வேதபகுதியில் ஒரு பெண் “அசுத்தமானவள்” என்பதால் பிரசவத்திற்குப் பிறகு அவள் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. பெண் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதைக் காட்டிலும் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுப்பது தூய்மையானது என்றும் அது கூறுகிறது. மேலும் ஒரு தாய் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது இருமுறை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும் என்று அது கூறுகிறது. இது குழந்தைப் பிறப்பின் அடிப்படையில் முக்கியமாக பெண் குழந்தைகளைப் பொருத்தவரை பாலினப் பாகுபாடு காட்டப்படுகிற ஒன்றல்லவா? ஒரு பெண் ஒரு பெண்ணாக இருக்கிறதற்காக தீட்டுள்ளவளாக இருக்க வேண்டுமா? இது பெண்களுக்கு எதிராக வெளிப்படையான பேரினவாதமும் பாரபட்சமுமாக இருக்கிறது அல்லவா?
ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்த பெண் 7 நாட்கள் மற்றும் 33 நாட்கள் (மொத்தம் 40 நாட்கள்) சடங்கு ரீதியாகத் தீட்டுள்ளவளாக இருக்க வேண்டும் என்று நியாயப்பிரமாணச் சட்டம் குறிப்பிடுகிறது. அதுவே அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் 14 நாட்கள் மற்றும் 66 நாட்களுமாகச் சேர்த்து 80 நாட்கள் தீட்டுள்ளவளாக இருக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது என்பது உண்மையே.
யூத பாரம்பரியத்தில் பின்பற்றப் படுகிற சடங்குகளையும், வாழ்க்கையில் தூய்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் புரிந்துகொள்வதே இந்த வாதத்தைத் தீர்ப்பதற்கான சிறந்த வழியாகும். இங்கே சொல்லப்பட்டுள்ள தீட்டு என்ற வார்த்தையானது குறைவுள்ளவள் என்றோ அல்லது பாவம் நிறைந்தவள் என்றோ பொருளைத் தருகிறதில்லை. மாறாக, இது யூத கலாச்சாரத்தில் பேணப்படுகிற சுத்தத்தின் மாபெரும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இதற்காக நாற்பது நாட்கள் எண்பது நாட்கள் போன்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்கள் ஏன் கொடுக்கப்படுகின்றன என்று வேதம் நமக்குச் சரியாகச் சொல்லவில்லை என்றாலும், நாம் நம்பத்தகுந்த சிறந்த காரணங்கள் சிலவற்றை நாம் சிந்திக்கலாம்.
1) தாயின் வயிற்றில் இருக்கும் போது, குழந்தைகளிடத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக குழந்தைகளுக்கு “மாதவிடாய்” போன்ற சிறிய இரத்தப் போக்கு பிறப்புறுப்பு வழியாக வெளியேற்றப்படுவது பொதுவான ஒன்றாகும். குழந்தைகளுக்கு உண்டாகிற மாதவிடாய் போன்ற இது தோராயமாக ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வாரங்கள் வரை நீடிக்கும். எனவே, ஒரு பெண் குழந்தையும் அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கும் மற்றொரு பெண்ணும் அதாவது, தாயுக்கும் மகளுக்கும் சுத்திகரிப்புக்க்கான காலம் இரட்டிப்பாகத் தேவைப்படலாம்.
2) மேலும், “ஜான் ஹாப்கின்ஸ்” பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வறிக்கை கூறுவதைக் கவனிப்போம். பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயின் மாதவிடாயிலிருந்து வெளிப்படும் இரத்தத்தின் நச்சுத்தன்மையானது, ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயின் இரத்தப்போக்கின் நச்சுத் தன்மையைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. குழந்தைகள் பிறந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு பெண்களின் மாதவிடாய் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யப்பட்டபோது, ((David I. MAcht, A Scientific Appreciation of Genesis 1:28 Leviticus 12:1-5, Journal of Biblical Literature, Vol. 52, No. 4 (Dec., 1933), pp. 253-260).) (வெளியிடப்பட்ட ஆய்வு மற்றும் முடிவுகளின் விவரங்களை https://www.jstor.org/stable/3259207காணலாம்) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு பெண் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரவும், மற்றும் பாலியல் உறவுகளை வைத்துக்கொள்ளவும் அதிக நேரம் தேவைப்படுவதாக அது கூறுகிறது. எனவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேவையான பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இத்தகைய நீண்ட காலம் அதாவது எண்பது நாட்கள் விலகியிருக்க வேண்டியது அவசியமாக இருக்கலாம்.
3) ஆண் குழந்தைகள் பிறந்த ஏழவாது நாளில் அதற்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும், இது இக்குழந்தைகளுக்கு இயல்பான சுத்தம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கலாம். ஆனால் பெண் குழந்தைக்கு இத்தகைய விருத்தசேதனம் இல்லாததால் இது தன்னைச் சுத்திகரித்துக் கொள்வதற்காக அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம்.
4) பண்டைய கலாச்சாரங்களில் ஆண் பிள்ளைகள் மிகவும் மதிப்பு மிக்கவர்களாகக் கருதப்பட்டார்கள் (இன்றைய பல கலாச்சாரங்களில் இத்தகைய எண்ணமே தொடர்ந்துக் கொண்டிருக்கிறது). ஒரு தாய் புதிதாகப் பிறந்த ஒரு பெண் குழந்தையுடன் வீட்டில் அதிக நாட்கள் (அதாவது சுத்திகரிப்பின் நாட்கள்) இருப்பது, தாய்க்கும் மகளுக்குமான அதிகமான பிணைப்பை உருவாக்க உதவும். மேலும் பெண் குழந்தை பிறந்து விட்டதே, ஓர் ஆண் குழந்தை பிறந்தால் நன்றாயிருக்குமே என்று கருதுகிற கணவன், பெண் குழந்தை பிறந்த சிறிது நாட்களிலேயே மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தடுப்பதற்கும் இந்த அதிகப்படியான சுத்திகரிப்பின் நாட்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. தாயின் ஆரோக்கியத்தைக் காக்கப்படுவதற்கும் மேம்படுவதற்கும் இத்தகைய சுத்திகரிப்பின் நாட்கள் அதிகமாக உதவி செய்கின்றன.
இப்போது முக்கியமானதும் நம்முடைய ஆர்வத்தைத் தூண்டுகிறதுமான ஒரு காரியத்துக்கு வருவோம். பிறக்கிற குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், சுத்திகரிப்பின் பிராயச்சித்தத்துக்காக தேவனுக்கு முன்பாக செலுத்த வேண்டிய பலிகள் ஒரே விதமானதாகும். ஆண் குழந்தைகளுக்கு வேறு விதமான பலியும் பெண் குழந்தைகளுக்கு வேறுவிதமான பலிகளும் கிடையாது. இரண்டு சடங்குகளிலும் வேறுபாடுகள் எதுவும் இல்லை, இது தேவனுக்கு முன்பாக இரு பாலினத்தவரும் சமமாக இருக்கிறார்கள் எனபதையும் அவர் எவ்விதப் பாகுபாடும் காட்டுகிறவர் அல்ல என்பதையும் இது நமக்குக் காட்டுகிறது. பாலினம் தொடர்பான தேவனின் இருதயத்தைப் புரிந்துகொள்வதற்கு இந்தக் குறிப்பு முக்கியமானதாக உள்ளது.
“தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்” (ஆதி. 1:28) என்று கட்டளையிட்டார். எனவே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளையாகும். மேலும் பிள்ளைகள் கர்த்தருடைய சுதந்தராமாகக் (வெகுமதியாகக்) கருதப்படுகிறார்கள் (சங்கீதம் 127:3). தம்மிடத்தில் வந்த குழந்தைகளை வரவேற்று அவர்களை ஆசீர்வதித்ததன் மூலமாக இயேசு கிறிஸ்து மோசேயின் சட்டங்களை நிறைவேற்றினார் (மத்தேயு 18). ஆகவே பெண்களுக்கான சுத்திகரிப்பின் நாட்கள் (தனிமைப்படுத்தப்பட்ட காலங்கள்) பாலினங்களின் அடிப்படையில் அதாவது ஆண், பெண் குழந்தைகளின் சுத்திகரிப்பு நாட்களுடன் நேடியாக தொடர்புபடுத்தப்படவில்லை என்னும் முடிவுக்கு நாம் தைரியாகவே வரலாம். மாறாக இது பிறப்பின் காலத்திலும், பிரசவத்திற்குப் பிந்தைய காலகட்டங்களிலும் இருக்க வேண்டிய சுத்திகரிப்பு நடைமுறைச் சூழ்நிலைகளுடன் தொடர்புடையது என்றும் நாம் தைரியமாகச் செய்யலாம்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.