லேவியராகமம் 15:19-30: ஒரு பெண் தன் மாதவிடாய் காலத்தில், அவள் தொட்டதெல்லாம் தீட்டாக இருக்கிறது என்றும் அவள் தொட்டது எதைத் தொட்டாலும் தொட்டவர்களும் தீட்டாக இருக்கிறார்கள் என்றும் இந்த வேதபகுதி சொல்கிறது. தேவன் உருவாக்கியதாகக் கூறப்பட்டும் ஒரு உயிரியல் செயல்பாடு, அவளுக்கு வரும்போது (உதிரப்போக்கு) அது தீட்டாக எண்ணப்படுவதும், அதனினிமித்தம் அவள் தண்டிக்கப்படுவதும் வேடிக்கையாக உள்ளது. அவர் உருவாக்கிய ஒன்றை அவரே தீட்டு என்று சொல்வது தவறானது அல்லவா?
இந்த பத்திகளை நாம் படிக்கும்போது, இந்த கட்டளைகள் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டவை என்பதை நாம் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். யூத பாரம்பரியத்தில் சுத்திகரிப்புச் சடங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கே தீட்டு என்று கூறுவது, நான் குறிப்பிட்டது போல், அது பாவத்தையோ அல்லது தாழ்வு மனப்பான்மையையோ குறிப்பிடுவதில்லை. பெண்களின் மாதவிடாய் காலங்களில் அவளைத் தனிமைப்படுத்துவது அவளுக்கு அளிக்கப்படும் தண்டனை அல்ல. மாறாக இது தேவனுடைய மக்களுக்கான தரத்தை நிலை நிறுத்துவதற்கான ஏற்பாடு என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்.
உதிரப்போக்கு நாட்களில் தேவனுடைய மக்கள் அவரின் நிமித்தம் தங்களைப் பிரித்து வைத்துக்கொண்டு, தேசத்தின் நலனுக்காக மீண்டும் நல்ல முறையில் குழந்தை உண்டாகும் திறனுடன் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் திரும்பி வருவதற்கான ஏற்பாடு ஆகும். தேவன் இஸ்ரவேல் மக்களை தம்முடைய தனித்துவமானவர்களாகத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி, பிற தேசங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மக்களாக வாழும்படி அழைத்திருந்தார் என்பதை நினைவில் வையுங்கள். மேலும், தேவன் அவர்கள் நடுவில் தம்முடைய “வாசஸ்தலத்தையும் - ஆசரிப்புக்கூடாரம்” உருவாக்கியிருந்தார். (லேவியராகமம் 15:31).
அந்த பெண்ணியவாதி குறிப்பிடாத மற்றொரு குறிப்பிடத்தக்க காரியம் என்னவென்றால், இந்தச் சுத்திகரிப்பின் முறைமைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருந்தன என்பதே ஆகும். இது பெண்களுக்கு மட்டும் அல்ல. எனவே இது எந்தப் பாலின பாகுபாட்டையும் குறிக்கவில்லை. இது பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் போது மட்டுமின்றி, யாரிடமிருந்தும் எந்த பிரமியத்தினால் உண்டான தீட்டு வெளியேற்றத்தின் போதும் தனிமைப்படுத்தலும் மற்றும் சரீர சுத்திகரிப்பும் தேவைப்படும். லேவியராகமம் 15 -ஆம் அதிகாரத்தில் நான்கு வகையான தீட்டு வெளியேற்றத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1) ஆணின் பிரமியம் வெளியேற்றப்படுதல் (ஒரு வியாதியாக தொடர்ந்து வெளியேறுதல்) (வசனங்கள் 1-15)
2) ஆணின் இந்திரியம் வெளியேற்றப்படுதல் (வசனங்கள் 16-18)
3) பெண்ணின் மாதவிடாயின் உண்டாகிற உதிரப்போக்கு (வசனங்கள் 19-24)
4) பெண்ணுக்கு பால நாட்களாகதொடர்ந்து ஏற்படும் உதிரப்போக்கு (வசனம் 25-30).
இங்கே சொல்லப்பட்ட பிரச்சினைகள் இருபாலருக்கும் ஏற்படுகிறதைக் காண்கிறோம். இரு பிரச்சினைகள் ஆண்கள் சம்பந்தப்பட்டதாகவும், இரு பிரச்சினைகள் பெண்கள் சம்பந்தப்பட்டதாகவும் இருப்பதைக் காண்கிறோம். மேலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுத்திகரிப்பின் விதிகள் ஒரே மாதிரியானவை ஆகும். எனவே இந்த வசனங்களின் வாயிலாக தேவன் பாலினப் பாகுபாடு உடையவர் என்று தீர்மானிக்கமுடியாது. மாறாக இது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் தேசம் தனித்துவமாக விளங்கும்படி அவரால் கொடுக்கப்பட்ட உயரிய தரநிலைக் கட்டளைகளாகும்.
இதுபோன்ற உடல் வெளியேற்றங்கள் முடிவடைந்தவுடன் சுத்திகரித்தல் முறைமை சொல்லப்பட்டுள்ளது. அது முடிந்த பிறகு, அவர்கள் தங்களது சரீரத்தை தியாகபலியாக ஒப்புவித்து, தேவனுக்கென்று தங்களை மறு பிரதிஷ்டை செய்வதற்காக ஏற்பாடாக இது இருக்கிறது.
மேலும், ஒரு பெண்ணின் மாதாந்திர மாதவிடாயின் போது, ஏழு நாட்கள் தனிமைப்படுத்துவது அவர்களுக்கு போதுமான ஓய்வையும் புத்துணர்ச்சியையும் தர அனுமதிக்கிறது. இது நவீன கால பெண்களுக்குக்கூட அரிதாகக் கிடைக்கிற ஒன்றாகும்.
லேவியராகமம் 18:19: பெண்களின் மாதவிடாய்க் காலத்தில் அவர்களைப் பார்ப்பது கூட தவறு என்று இந்த வசனம் சொல்கிறதே.
லேவியராகமம் 18:19: இந்த வசனம் உ.ண்மையிலேயே என்ன சொல்கிறது என்று பார்ப்போம்: “ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே”.
முதலாவதாக, இந்த வசனத்தை மேலோட்டமாக வாசித்தாலே, ஒரு பெண்ணை மிகவும் தவறான வகையில் சித்தரிக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இது மாதவிடாய் காலத்தில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள முயற்சிப்பது பற்றியது. இங்கு தடை என்பது, பெண்களைப் பார்க்கக்கூடாது என்றல்ல, மாறாக மாதவிடாய் காலத்தில் அவளுடன் உடலுறவு கொள்ளாமல் இருப்பதும், அதன் பொருட்டு அவளை நிர்வாணமாக்காமலிருப்பது பற்றியது ஆகும். நேர்மையாகச் சிந்திப்போமானால், இத்தகைய தடையானது யாருக்குச் சாதகமாக இருக்கிறது, ஆணுக்கா? அல்லது பெண்ணுக்கா? நிச்சயமாகவே இது பெண்ணுக்கே சாதகமானது ஆகும். ஒரு பெண் மாதவிடாய் காலத்தில், மனரீதியாக, உடல் ரீதியாகவும் மிகவும் பெலவீனமாக இருப்பாள். இந்த நேரத்தில் உடலுறவு என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே இதனுடைய வலியைப் புரிந்துகொள்ள முடியும். இந்த நேரத்தில் உடலுறவுத் தடை என்பது பெண்களைக் குறித்த காரியத்தில் தேவனுடைய கனிவான இருதயத்தையே என்னால் பார்க்க முடிகிறது. இதன் மூலம் தேவன் ஒரு பாலியல் பாகுபாடு காட்டுகிறவர் அல்ல என்பது தெளிவான உண்மையாகும்.
லேவியராகமம் 19:20: இந்த வசனம், ஒரு பெண் அடிமையாயிருந்து, ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும்போது அவள் வேறொருவனுடன் உடலுறவு கொண்டால், அவள் “கசையினால்” அடிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. கசையடி என்பது மிகவும் கடுமையான தண்டனை அல்லவா? இத்தகைய நிகழ்வுக்குக் காரணமன அந்தப் பெண் அடிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது, ஆனால் அவளுடன் இருந்த அந்த ஆணைப் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லையே இது என்ன மாதிரியான சமத்துவம்?
இந்தக் கேள்வியைப் புரிந்துகொள்ளவும், குற்றச்சாட்டை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் இந்தப் பகுதி முழுவதையும் வாசிப்போம்:
லேவியராகமம் 19:20-22 “ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல. அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன். அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.”
இந்த 20 -ஆம் வசனம் மூலமொழிக்கு ஏற்றாற்போல் மொழிபெயர்க்கப்படவில்லை. உண்மையில் இவ்வார்த்தைக்கு அடிக்கப்படுதல் என்பது பொருள் கிடையாது. இந்த பெயர்ச்சொல் முழு பழைய ஏற்பாட்டிலும் ஒருயொரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெயர்ச்சொல்லிலிருந்தே “பகார்” என்ற வினைச்சொல் தோன்றியது. அதாவது “விசாரணை செய், தீர விசாரி, தீவிரமாய் தேடு” என்பதே இதன் பொருள். எனவே, அடிக்கப்படுதல் என்பதற்குப் பதிலாக, அவளுடைய “விவகாரம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்” என்று வர வேண்டும். இவ்வசனத்தில் வருகிற “ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க,” என்ற வாசகத்தில் வருகிற, “மீட்கப்படாமலும்” என்னும் தமிழ் வார்த்தைக்கான எபிரெயச் சொல், “படா” என்பதாகும். இதற்கு மீட்பு என்ற பொருள் இருந்தாலும் பெரும்பாலும், “காப்பாற்றப்படுதல், விடுவிக்கப்படுதல்” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே “ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க” என்பதற்குப் பதில், “ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் காப்பாற்றப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க” என்று வர வேண்டும். அதாவது, அந்த அடிமைப் பெண், தவறான முறையில் உடலுறவு கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் போது, ஒருவராலும் அவள் காப்பாற்றப்படாமல் விட்டுவிடப்பட்டால் அவள் விசாரிக்கப்பட வேண்டும். எனவே லேவியராகமம் 19:20 க்கான மாற்று எளிய மொழிபெயர்ப்பு, இவ்வறாக இருக்க வேண்டும். “ஓர் அடிமையாகிய பெண்ணுடன் ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அப்பெண்ணுடன் தவறாக நடந்துகொண்ட நபரால் நிந்திக்கப்பட்டும், அவளுக்கு எந்த உதவியும் செய்யாமலும், அவளுக்குக் கிடைக்க வேண்டிய சுதந்தரம் வழங்கப்படாமலும் இருந்தால், அவள் விசாரிக்கப்பட வேண்டும்; அவள் அடிமை ஸ்தானத்திலிருந்து விடுதலை பெறாதவளாகையால் அவன் கொல்லப்படமாட்டான்.”
ஆகவே இங்கு வழங்கப்பட்ட அறிவுரையில் அந்தப் பெண்ணுடன் நேரடியாகப் பொருந்தக்கூடிய எந்த வித அறிவுரையும் இல்லை. அவளே இங்கு பாதிக்கப்பட்டவள். இந்த வசனத்தின் தொடக்கத்தில் ஒரு ஆண் அடிமைப் பெண்ணைக் கற்பழித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பிறகு, அவள் விடுதலையாகாதவள் ஆகையால் அவள் இறக்க மாட்டான் என்பதே முடிவு. அவள் விடுதலை பெற்ற ஒரு சுதந்திரப் பெண்ணாக இருந்திருந்தால், அவன் இறக்க வேண்டியிருக்கும்!
இந்த வழக்கில், அவளைக் கற்பழித்தவன் தன்னுடைய குற்றத்தை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, அதற்கான குற்றநிவாரண பலியைச் செலுத்த வேண்டும் (வசனம் 21). ஆகவே அவளைக் கற்பழித்த ஆணுக்குத் தண்டனை இல்லை என்று ஆகிவிடாது. அவனும் தன் குற்றத்தைச் சுமக்க வேண்டும், அதற்காக காணிக்கை செலுத்த வேண்டும். அவள் விட்டு விடப்படுவதுப் போல் இவன் விடுவிக்கப்படுவதில்லை.
இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்று உள்ளது. அது, என்னவெனில், இந்தப் பிரச்சினையில், அடிமைப் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆணிடம் மட்டுமே பரிகாரம் செய்ய வேண்டும் என்று கட்டளை உள்ளது. அந்த அடிமைப் பெண் செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஏனெனில் இவள் ஒரு அடிமையாக இருப்பதால், ஒரு சுதந்திரமான மனிதனை எதிர்ப்பதில் உள்ள தன்னுடைய இயலாமையை அவள் உணர்ந்திருக்கலாம். எனவே பாவத்திற்கு பரிகாரம் செய்யும் பொறுப்பை பெண்ணிடம் கேட்காமல் ஆணின்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இங்கே ஓர் அடிமைப் பெண்ணிடம் தேவன் கொண்டிருக்கிற கரிசனையுள்ள இதயத்தைப் பாருங்கள். அந்தக் காலத்தில் நிலவிய அடிமைத்தனத்தில் இப்படியான ஒன்று நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
லேவியராகமம் 21:9: இந்த வசனம், ஆசாரியர்களின் மகள் ஒழுக்கக்கேடான முறையில் நடந்துகொண்டால் எரித்து கொல்லப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் ஒழுக்கக் கேடாய் நடக்கிற ஆசாரியர்களின் மகன்களைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லையே? இது குறித்து தோராவில் எங்கும் பதிலளிக்கப் படவில்லை. இங்கே ஆண்களுக்கு அவர்கள் விரும்பியபடி செய்ய அதிகாரம் உள்ளது, ஆனால் ஒரு பெண் தவறு செய்துவிட்டால், அவள் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இது பாரபட்சம் அல்லவா?
லேவியராகமம் 21 மற்றும் 22 அதிகாரங்கள், ஆசாரியனுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் இருக்க வேண்டிய பரிசுத்த ஸ்தானத்திற்கான பரிந்துரைகளாகும். பரிசுத்த வேதாகமத்தின் தேவன் தம்முடைய ஆசாரியர்களிடத்திலும் குறிப்பாக யூத மக்களிடமும் எதிர்பார்க்கிற பரிசுத்த தரத்திற்கான தரநிலையாகும். இது தேவன் எதிர்பார்க்கிற பரிசுத்தத்திற்கான முக்கியத்தவத்தின் எதிர்பார்ப்பாகும்.
ஆரோனின் குமாரருக்குரிய பரிசுத்தராக இருக்க வேண்டும் என்ற பரிசுத்த நியமத்திற்கான கட்டளையை லேவியராகமம் 21 -ஆம் அதிகாரம் விவரிக்கிறது.. 1 முதல் 8 வசனங்கள் வரை ஆசாரியர்களின் மகன்கள் எவ்விதமாக இருக்க வேண்டும் என்பதற்கான அம்சங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. 9 -ஆம் வசனம், ஆசாரியனின் மகள்கள் இருக்க வேண்டிய முறை பற்றி விவரிக்கிறது.
ஆசாரியனின் மகள் விபச்சாரம் செய்தால் அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும், அதுவும் அவள் தீயினால் எரிக்கப்படுகிற மரணம் என்பது உண்மைதான். இது பாவங்களுக்கான தண்டனையிலேயே மிகவும் கடுமையான வடிவமாகும். தண்டனை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று அவர்கள் சட்டத்தை மீறுவதைத் தடுப்பதுதான். அதன் கடுமைக்கு பயந்து அவர்கள் அதைச் செய்யாமல் விட்டுவிடுவார்கள் என்பதே இதன் நோக்கம். மேலும் இங்கு ஆசாரியனின் மகன்களைப் பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் அவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விடுவார்கள் என்று கூறுவது வேதாகமத்தின் தேவனைப் பற்றிய அறிவு இல்லாதது ஆகும். எங்கெல்லாம் பாலியல் மீறுதல்களைப் பற்றி வேதம் விவாதிக்கிறதோ அந்தப் பகுதிகளில் எல்லாம் தேவன் ஆண் பெண் இருபாலருக்குமே தண்டனையை அறிவித்திருக்கிறார். எந்த ஒரு சாதாரண இஸ்ரவேலனுக்கும் இச்சட்டங்கள் பொருந்துமெனில், பலிகளுடன் தேவனிடம் நெருங்கி வரும் ஆசாரியர்களாக ஆரோனின் மகன்களுக்கு இது எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும். தேவனுக்கு அருகாமையில் இருப்பவர்களை அவர் தண்டிக்க மாட்டார் என்று சிந்திப்பது முட்டாள்தனமானது. இந்தக் குறிப்பிட்ட பகுதியில் ஆண்களின் தண்டனையைப் பற்றிக் குறிப்பிடாததால், அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று அர்த்தமல்ல.
நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான காரியம் என்னவெனில், இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு, எந்தவொரு ஆசாரியனின் மகளும் எரிக்கப்பட்டதாக வேதாகமத்தில் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் கீழப்படியாத ஆசாரியனின் மகன்களுக்கு என்ன நேரிட்டது என்பதற்கான இரண்டு பதிவுகள் வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளன. லேவியராகம் 10 -ஆம் அதிகாரத்தில், ஆரோனின் மூத்த மகன்களான நாதாபும், அபியுவும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்ததற்காக தேவனால் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள். பிரதான ஆசாரியனாகிய ஏலியின் மகன்களான ஓப்னியும், பினெகாசம் (1 சாமுவேல் 4) தங்களுடைய ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்காக போரில் கொல்லப்பட்டதையும் தேவனின் தண்டனையாகவே காண்கிறோம்.
பாவம் எப்பொழுதும் தேவனுக்கு முன்பாக மிகவும் தீவிரமான ஒரு காரியமாயிருக்கிறது. தேவன் பரிசுத்தரும், நீதியுள்ளவருமாயிருக்கிறார். பாலினம், தேசியம், சமூக அந்தஸ்து மற்றும் வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பாவம் செய்தால் தேவன் யாரையும் தண்டிக்கிறார். ஆணோ பெண்ணோ யார் பாவம் செய்தால், எந்தப் பாவத்தைச் செய்தாலும் தேவன் கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்கவே மாட்டார். அவர்களை நிச்சயமாகவே தண்டிப்பார். இந்தச் சத்தியம் வேதாகமம் முழுவதிலும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
அடுத்த அத்தியாயத்தில் (லேவியராகமம் 22) சொல்லப்பட்டு உள்ளதையும் நாம் கூடுதலாகக் கவனித்துப் பார்ப்போம். பலி செலுத்தப்பட்ட உணவுகளை ஆசாரியனின் பிள்ளைகள் என்ற முறையில் அவருடைய மகன்களும் மகள்களும் உண்பதற்கு தேவன் அனுமதித்திருக்கிறார். எனவே தேவன் பெண் பிள்ளைகளுடைய காரியத்தில் எவ்விதப் பாகுபாடும் பார்ப்பதில்லை. நாம் தேடினாலும் அவ்வாறு காட்டியதாக நாம் பர்க்கமுடியாது.
லேவியராகமம் 27:3-7 இந்த வசனங்களில் தேவன் மனிதர்களுக்கு நியமித்த மதிப்பைப் பார்க்கிறோம். இதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களை குறைவாக மதிப்பிடுகிறதைக் காண்கிறோமே? இது பெண்களை சமமாகப் பாவிக்காத காரியம் அல்லவா? ஏன் இந்தப் பாகுபாடு?
லேவியராகமம் 27 -ஆம் அதிகாரதில் பொருத்தனை செய்தவர்கள் தேவனுக்குச் செலுத்தவேண்டிய மதிப்புக் காணிக்கை பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.
முதலாவதும் முக்கியமானதுமாகக் கவனிக்க வேண்டிய காரியம் என்னவெனில், இந்த மதிப்புக் காணிக்கை தேனுடைய கட்டளைப்படி செலுத்த வேண்டிய ஒன்றல்ல. இது தேவனுக்குப் பொருத்தனை பண்ணிய தனிப்பட்ட நபர் ஒருவர் மனப்பூர்வமாகச் செலுத்த வேண்டிய பணத்தைப் பற்றியது. அதாவது இது கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியவர்களின் நேர்மையைப் பற்றிய காரியம் இது.
இரண்டாவதாக, தேவனுக்குப் பொருத்தனை செய்த ஒரு நபர், அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நினைத்தால், ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட்டு அதிலிருந்து வெளியே வந்துவிடலாம்.
மூன்றாவதாக, தேவனுக்காகச் செய்யப்படுகிற பொருத்தனை என்பது வெற்று வார்த்தைகளைக் காட்டிலும் திட்டவட்டமான செயல் வடிவத்தைக் கொண்டது. இது பெயரளவுக்கு பொருத்தனை செய்வதிலிருந்து மக்களைத் தடுக்கிறது. பொருத்தனை செய்வது பாவம் அல்ல, ஒரு முறை பொருத்தனை செய்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பதே பாவம். ஆகவே ஒருவன் செய்த பொருத்தனையைக் கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும் (உபாகமம் 23:21-23; மற்றும் (எண்ணாகம்ம 30:2). ஆனால் சில சூழ்நிலைகள் கருதி இதற்கு விதிவிலக்குகளும் உள்ளன. அதாவது நிறைவேற்ற முடியாவிட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகளும் உண்டு. அதுவும் நம்முடைய சொந்த இஷ்டத்திற்கு செய்ய முடியாது, தேவன் பரிந்துரைத்திருக்கிற காரியங்களை செய்ய வேண்டும். இதிலிருந்து தேவன் விடாப்பிடியானவர் அல்ல என்றும், பொருத்தனை செய்தவரின் மீது தேவன் இரக்க குணமுள்ளவராக இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. மேலும் தேவன் நம்முடைய கஷ்டத்தையும், உணர்ச்சிகளையும் புரிந்துக் கொண்டவராக இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
இப்போது மீட்பிற்காக செலுத்த வேண்டிய தொகைக்கு வரும்வோம். இது பெரும்பாலும் அந்த நபரின் உடல் உழைப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் அளவீடு செய்யப்படுகிறது. 25 வயதுடைய இளைஞன் ஒருவன் 5 வயது சிறுவனைக் காட்டிலும் அதிகமாக வேலை செய்ய முடியும். எனவே, தனிநபர்களின் மதிப்பு என்பது ஒரு தொழிலாளியின் ஊதியத்திற்கு சமமாகவே (வேதாகம காலத்தில் ஒரு மாதத்திற்கு ஒரு ஷேக்கல் பணம் ஊதியமாக வழங்கப்பட்டது) அல்லது ஆசரிப்புக் கூடாரத்தில் அந்த நபர் செய்கிற வேலையின் மதிப்பை ஒப்பீட்டு அளவு குறிக்கப்படுகிறது. பலி செலுத்தப்பட வேண்டிய மிருகங்களைக் கையாளுதல் என்பது ஒரு கடினமான வேலை, அவ்வாறே ஆசரிப்புக் கூடாரத்தைக் தூக்கிச் சுமப்பதும் கடினமான வேலையாகும். இத்தகைய வேலைகளை இளைஞர்களே அதிகமாகச் செய்ய இயலாம். எனவேதான் இளைஞர்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படுகிறது. கடின உழைப்பைப் பொருத்தவரை ஒரு இளைஞனால் இயல்பாகவே வயதான ஆண்களைக் காட்டிலும் அல்லது ஒரு சிறுவனைக் காட்டிலும், அல்லது ஒரு பெண்ணைக் காட்டிலும் அதிக வேலைகளைச் செய்ய முடியும். எனவே அவர்கள் எல்லாரைக் காட்டிலும் இளைஞன் அதிக மதிப்புடையவனாக இருக்கிறான். எனவே, ஒவ்வொரு பிரிவினருக்கும் மதிப்பிடப்பட்ட பணத்தின் மதிப்பு என்பது, தேவன் மனித வாழ்க்கைக்கு அளிக்கும் மதிப்பையோ அல்லது பாலினத்தைச் சார்ந்த மதிப்பையோ பிரதிபலிக்கிறதில்லை. ஒவ்வொரு பிரிவினருக்கும் பொதுவாக அவர்கள் செய்யும் வேலைக்குத்த ஊழியம் வழங்கப்படும் முறையானது இன்றும் நடைமுறையில் இருக்கிறதைக் காணலாம். கட்டுமானப் பணி போன்ற பிற கடினமான வேலைகளில் கடினமான உடல் உழைப்பு தேவைப்படுகிறது. எனவே இத்தகைய வேலைகளுக்கு அதிகமான உடல் உழைப்பைக் காண்பித்து, அதிகமாக வேலை செய்கிறவர்களுக்கு சிறுவர்களைக் காட்டிலும், பெண்களைக் காட்டிலும் அதிகமான ஊதியம் வழங்கப்படுகிறதை நாம் அறிந்திருக்கிறோம். எங்கே பெண்கள் அதிகமாக வேலை செய்து உற்பத்தியைப் பெருக்குகிறார்களோ அங்கே பெண்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்படுகிறது. எனவே, இது பாலினப் பாகுபாட்டினால் நிர்ணயிக்கப்படுவது அல்ல. இது எந்தத் துறையில் எவ்விதமான செயல்திறனுடன் வேலை செய்கிறார்களோ அதைப் பொறுத்தே இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆகவே இதன் அடிப்படையில் நாம் ஒரு முடிவுக்கு வருவோம். மனித வாழ்க்கையின் பண மதிப்பு என்பது ஒரு தொழிலாளியின் கூலியின் மதிப்பீடாகவே இருக்கிறதே தவிர, மனித வாழ்க்கையைக் குறித்து தேவன் தரும் மதிப்பல்ல. தர்க்கரீதியாகப் பார்த்தால், இந்த மதிப்பீடு பெண்களுக்குச் சாதகமாக உள்ளது, ஏனெனில் பெண்களுக்கான மீட்பிற்கான தொகை ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குக் குறைவாகவே உள்ளது. மேலும் அவர்களது மீட்பு எளிதாக இருக்கிறது. இது ஒரு நபரின் மதிப்பு அல்ல, ஒருவர் செய்த பொருத்தனையைக் கைவிட்டு வெளியேறுவதற்காகச் செலுத்த வேண்டிய பணமதிப்பு. இந்தச் சட்டமும் மக்களின் நலனுக்காக மட்டுமே போடப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் எளிதாக பொருத்தனைக்கு உட்பட்டு விடமாட்டார்கள், அதாவது எளிதாக பாவத்திற்கு ஆட்பட்டு விட மாட்டார்கள். ஆசரிப்புக்கூடாரத்தில் ஊழியம் செய்ய முடியாத சூழல் ஏற்படும்போது, அதற்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்ட நபரை மீட்பதற்கான ஏற்பாடுகளை அனுமதிப்பதில் தேவனுடைய இரக்கத்தையே இது காட்டுகிறது. மேலும், ஏழைகள் தேவனுக்குச் செய்த வாக்கை நிறைவேற்றுவதற்கும் அதிகமான ஏற்பாடுகளை வழங்கியிருக்கிறார். லேவியராகமம் 27:8 –ம் வசனத்தில் நாம் இவ்விதமாகப் படிக்கிறோம்: “9. ஒருவன் பொருத்தனை பண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருக ஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக”.
எனவே, இது உண்மையில் ஏழைகளுக்கும் பெண்களுக்கும் ஓர் அற்புதமான நிவாரணமாகும். குறைந்த பணத்தைச் செலுத்துவது என்பது மதிப்பைக் குறைப்பது அல்ல, அது ஒரு சிறப்புச் சலுகையாகும்.
எண்ணாகமம் 1:2: இன்றைய காலகட்டம் வரை தலைவிரித்தாடுகிற பாலினப் பாகுபாடுக்கு அடிப்படையாக இருப்பதே இந்த வசனம். போரிடுவதற்குத் தகுதியான அனைத்து ஆண்களையெல்லாம் கணக்கிடுமாறு மோசே இந்த வசனத்தின் வாயிலாகக் கூறியிருக்கிறார். பொதுவான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது கூட பெண்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை. அன்று இருந்ததைப் போலவே இன்றைய காலத்திலும் பெண்கள் புறக்கணிக்கப் பட்டவர்களாகவே இருக்கிறார்கள். பெண்களாகிய நாங்கள் போரிடுவதற்குத் தகுதியற்ற அல்லது இயலாத பெலவீனர்களாகவே கருதப்படுகிறோம். (தோரா எழுதப்பட்ட காலத்தில், இஸ்ரவேலர் அல்லாத அந்நிய கலாச்சாரங்களில் பெண்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாகவும், பிறர் பெண்களைக் கண்டு அஞ்சுகிற நிலையிலும் இருந்தார்கள். மட்டுமின்றி, அவர்கள் சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாகவும் இருந்தார்கள் எனபதை மறந்துவிடாதீர்கள். இந்த ஆணாதிக்க மதத்தாலும், அதன் பிரிவுகளாலும் பெண்கள் மனித நிலையைக் காட்டிலும் சற்றுக் குறைவான பிறவிகளாகவும், தாழ்த்தப்பட்ட உயிரிகளாகவும் தரங்குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்).
எண்ணாகமம் 1:2-3: “நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர் பேராக எண்ணித் தொகையேற்றுங்கள். இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக” என்றார்.
எண்ணாகமம் 1 -ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி போருக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பெண்கள் சேர்க்கப்படாமல் விட்டதற்கும், நவீன உலகில் காணப்படுகிற பாலினப் பாகுபாட்டுக்கும் இடையே எளிதாக முடிச்சுப்போடுகிற இந்தப் பெண்ணியவாதியின் குரல் வேடிக்கையானதும் விசித்திரமானதுமாக இருக்கிறது. அவர் இந்த விநோதமான முடிவுக்கு வருவதற்கு என்னென்ன அதிகாரப்பூர்வச் சான்றுகளோ அல்லது வரலாற்றுத் தொடர்பான ஆவணங்களோ வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
இரண்டு முக்கியமான காரியங்களை நாம் இங்கே கவனிக்க வேண்டும். 20 வயதுக்குட்பட்ட ஆண்களில் யாரும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. மேலும், இஸ்ரேலுக்காக யாரெல்லாம் போருக்குச் செல்வதற்கு தகுதிபெற்றவர்களோ அவர்கள் மட்டுமே மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே இதில் பெண்கள் மட்டுமின்றி, ஏராளமான ஆண்களுக்கும் இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை என்பது தெளிவான உண்மையாகும்.
அந்தக் காலத்தில் நிலவிய கலாச்சாரம் மற்றும் அந்தக் காலத்தில் நிலவிய தீய பழக்கவழக்கங்களால் பெண்களை போருக்கு அனுப்புவது என்பது அவர்கள் எதிரிகளால் மிகப் பெரிய தீங்குக்கு ஆளாக நேரிடும். எனவே, தேவன் தீய கலாச்சாரங்களுக்கிடையில், பெண்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஓர் ஒழுங்கு முறையைக் கொண்டு வந்திருந்தார். இந்த 21 -ஆம் நூற்றாண்டிலேயே “நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்” மீ டூ என்ற இயக்கம் தேவைப்படுகிறதெனில் அந்த நாட்களின் பெண்களின் நிலை என்னவாயிருந்திருக்கும்?!
பெண்கள் போருக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படாமல் விடபட்டிருந்ததற்கான மிக முக்கியமான காரணம், ஆண்கள் போருக்குச் செல்லும் போது பெண்கள் தங்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வீடுகளில் இருந்தார்கள். அந்தக் காலப் போர்கள் மிகவும் கொடூரமானவை, ஒவ்வொரு போரிலும் விலைமதிப்பற்ற உயிர்களின் இரத்த ஆறு ஓடும். இதனால் போரில் பங்கு பெற்றோரின் விலைமதிப்பற்ற உயிர்கள் எளிதில் பறிபோய்விடும். பெண்கள் போருக்குப் போய்விட்டால் வீட்டில் இருக்கும் குழந்தைகளை என்ன செய்வது? ஆகவே தேவன் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டும், பிள்ளைகள் அனாதைகள் ஆவதை தடுக்கும் பொருட்டும், அல்லது இருக்கிற பிள்ளைகள் பராமரிப்பின்று அனாதைகளாக ஆக நேரிடும் என்பதைக் கருத்தில் கொண்டும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட அற்புதமான ஏற்பாடே இது. ஒரு மனிதனுக்குச் சமீபத்தில் திருமணம் ஆகியிருந்தால், அவனும் போருக்குச் செல்லக்கூடாது அல்லது அவனை அனுப்பப்படக்கூடாது அல்லது வேறு எந்தக் கடமையும் அவன் மீது சுமத்தப்படக்கூடாது என்பதை திட்டவட்டமாக (உபாகமம் 24:5) –ம் வசனத்தில் போதிக்கும் அறிவுரையாகும். அவன் ஓராண்டு காலம் வீட்டில் தங்கியிருந்து தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். எனவே, போருக்குச் செல்ல ஆண்களைத் தேர்ந்தெடுக்கும் போது, குடும்பத்தின் நலனும் இங்கே கருத்தில் கொள்ளப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. இது திருமணம் மற்றும் குடும்பத்திற்கு தேவன் அளிக்கும் முக்கியத்துவத்தையும், குடும்பத்தில் அவரவர் வகிக்கும் பங்கையும் காட்டுகிறது.
(எண்ணாகமம் 30:3-16): இந்தப் பகுதியில் ஒரு பெண் தன் கணவன் அனுமதிக்காத வரை ஒரு பொருத்தனையைச் செய்ய முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது பாலினப் பாகுபாடு அல்லவா?
நாம் மீண்டும் ஒரு முக்கியமான பகுதியைச் சிந்திக்கப் போகிறோம். மேலும் இதுவே பெரும்பாலன மக்களால் அடிக்கடி தவறாக விளக்கம் கொடுக்கப்படுகிற பகுதியாகும். அந்தப் பெண்ணியவாதி குறிப்பிடுவது போல, இந்த பகுதி கர்த்தருக்குப் பொருத்தனை செய்வது பற்றியதுதான். நாம் ஏற்கனவே சிந்தித்தபடி பொருத்தனை செய்வது ஒரு தீவிரமான விஷயமாகும். அதை ஒருவரும் எளிதாகக் கருத முடியாது. எவனொருவன் பொருத்தனை செய்தாலும் அவன் எந்தக் காரியமாக இருந்தாலும் அதை அவன் நிறைவேற்றியே ஆக வேண்டும். ஒருவேளை ஒரு பெண் தன் தந்தையின் அனுமதியில்லாமலோ அல்லது கணவனின் அனுமதியில்லாமலோ ஒரு பொருத்தனை செய்திருந்தால், அவள் அதை நிறைவேற்றாமல் போனால், அவள் அதைச் செலுத்தியே தீர வேண்டும் என்று கட்டாயத்திலிருந்து விடுபடுகிறாள். தேவன் அவளை மன்னிப்பார், அது அவளுக்கு எதிரான பாவமாக கருதப்படமாட்டாது. மேலும் கணவனோ அல்லது தந்தையோ அதற்கு உடன்படவில்லை என்றாலும் அவள் அந்தப் பொருத்தனையிலிருந்து விடுபடுகிறாள். என்னைப் பொருத்தவரை இது பெண்களைப் பற்றிய காரியத்தில் பதற்றத்தைக் காட்டிலும் பெரிய ஆறுதலையே தருகிறது. ஒரு குடும்பத்தில் தந்தையோ (திருமணமாகாத பெண்ணின் விஷயத்தில்) அல்லது கணவனோ தான் (திருமணமான பெண்ணின் விஷயத்தில்) தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்பதே தெய்வீக வடிவமைப்பில் குடும்பத்தைப் பற்றி கருத்தாகும்.
எனவே ஒரு பெண் பொருத்தனை செய்ய முடியாது என்ற பெண்ணியவாதியின் அனுமானம் மிகவும் தவறானது. ஆனால் இந்தப் பொருத்தனைகளானது குடும்பத்தின் தேவைகளைச் சந்திக்கவும் அதைப் பாதுகாக்கவும் தேவன் கட்டளையிட்ட நபர்களாகிய அவரது தந்தை அல்லது கணவர் ஆகியோருடன் தொடர்புடையது ஏற்புடையதா என்பதே கேள்வியாகும். ஒரு பெண் தனது திருமணத்திற்கு முன் இளம் பெண்ணாக தனது தந்தையின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறபடியால் அவள் வீட்டில் உள்ள விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் மற்றும் அவளுடைய தந்தைக்கு கீழ்ப்படியவும் வேண்டும் (எப்படி நம் குழந்தைகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பதவியில் இருப்பவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று கற்பிக்கிறோமோ அதுபோலத்தான் இதுவும்). ஆதியாகமம் 1-2 ல் நாம் முன்பு விவாதித்தபடி, படைப்பில் தேவன் மனிதனை வீட்டின் தலைவராக உருவாக்கியிருக்கிறார். எனவே குடும்பத்தின் தலைவரின் வழி நடத்துதலுக்கு அடிபணிந்து நடக்க வேண்டிய பொறுப்பு மனைவிக்கு உள்ளது.
தேவனை மையமாகக் கொண்ட ஒரு அன்பான இல்லத்தில், தந்தையாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி, பெண்கள் செய்த பொருத்தனையைப் புரிந்துகொண்டு, அந்தப் பெண்ணின் பொருத்தனையை நிறைவேற்றவே அனுமதிப்பார்கள் என நான் நம்புகிறேன். ஒரு அன்பான குடும்பத்தில் ஒரு பெண் சுயாதீனமாக தேவனுக்குப் பொருத்தனை செய்கிற சுதந்திரம் உள்ள சிறந்த சூழ்நிலையே நிலவும் என்பதிலும் சந்தேகமில்லை. எனினும் இந்த பகுதி சுட்டிக்காட்டுகிற படி பெண்கள் பொருத்தனை செய்வதை ஏதோவொரு காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ளாத தந்தைகளும் கணவர்களும் இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தேவன் பொருத்தனை செய்த பெண்களைக் காப்பாற்றவே விரும்புகிறார். அவர்களுடைய பொருத்தனைமீது கவனம் வைக்காமல், அவர்களுக்கு மன்னிப்பையும் பொருத்தனையை நிறைவேற்றாத குற்றத்திலிருந்து விடுதலையையும் தருகிறார்.
சில சமயங்களில் பெண்களின் கடினமான சூழ்நிலைகளைத் தேவன் புரிந்துகொள்கிறார். மேலும் அவருடைய இருதயம் பெண்களின் பக்கமாக தாங்கலாக இருக்கிறது. அவரது இரக்கமும் கருணையும் பெண்களின் கரிசணையைக் குறித்தே உள்ளது, இது இந்த தேவனைப் பின்பற்றுவதற்கு எனக்கு அதிக நம்பிக்கையைத் தருகிறது. எனவே, ஒரு பெண் பொருத்தனையை நிறைவேற்றாவிட்டால் அவள் அதற்குப் பொறுப்பாளியாவதில்லை, மாறாக அவள் பொருத்னையை நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். பெண்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுகிறது என்று எப்படிக் கூறமுடியும்?
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.