கிறிஸ்தவ ஒழுங்கு

அன்பின் பாதையா? அன்பற்ற அதிகார பாதையா?
ஆசிரியர்: A. அருள்நேசன்
வாசிப்பதற்கான நேரம்: 12 நிமிடங்கள்

 பிள்ளைகள் வளர்ப்பில் நீங்கள் எந்த முறையை கையாள்கிறீர்கள்? வேதம் காண்பிக்கும் அன்பின் வழியா? உலகம் காண்பிக்கும் அன்பற்ற அதிகார வழியா?

இது என்னுடைய எண்ண ஓட்டத்தில் உருவான ஒரு கற்பனை கதையே. ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த பிள்ளை தன் தந்தையின் இறப்பிற்கு பிறகு என்ன செய்வதென்றே தெரியாமல் வாழ்க்கையின் நம்பிக்கைற்ற சூழ்நிலைக்கு சிறு வயதிலேயே சென்று விட்டான். அவனது ஏழைத்தாய் கூலி வேலை செய்து அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்தார்கள். அந்த சிறுவனுக்கு ஓட்டப்பந்தயத்தின் மீது நாட்டம் வந்துவிட்டது. மிக வேகமாக ஓடினால் பல சாதனைகளை செய்யலாம் என்ற எண்ணம் அவனுக்குள் ஆழமாக பதிந்து விட்டது. அவனது பள்ளியில் அவனுக்கு பயிற்சி கொடுத்த அவனது பயிற்சியாளர் மிகவும் கண்டிப்பானவர், அவனை மதிக்கக்கூட மாட்டார். அவனை ஏளனம் செய்பவர். பயிற்சியின் போது அனைவரின் முன்பாக அவனை அசிங்கப்படுத்துவார். அவர் எதிர்பார்த்த எந்த ஒரு தகுதியும் அவனிடம் இல்லை. அவனிடம் ஓடுவதற்கு ஒரு நல்ல ஷூ கூட கிடையாது. ஆனால் வாழ்க்கையில் அவன் முன்னேற இருக்கும் ஒரே ஒரு வழி அவன் ஓடுவது மட்டுமே. பயிற்சி ஆசிரியரிடம் பல வருடங்களாக இருந்தும் அவனால் சொல்லிக் கொள்ளும் வெற்றிகளை பெற முடியவில்லை. அவன் அனுதினமும் பல மைல்கள் ஓடுவான். அவன் ஓடுகிற சாலையோரத்தில் ஒரு வயதான ஏழை பாட்டி அன்போடு அவனுக்கு தண்ணீரும், காலையில் உணவும் தினமும் கொடுப்பாள். இப்படி பல வருடங்கள் சென்றது. ஒரு நாள் அவன் எதிர்ப்பார்த்து காத்திருந்த வெற்றியைப் பெற்றான். அவனது இந்த ஓட்டத்தை பார்த்து பலரும் அதிசயத்துப் போனார்கள். ஒரு பெரிய நிறுவனமும் அவனுக்கு ஸ்பான்சர் கொடுக்க முன் வந்தது. வாழ்க்கையின் உயரத்திற்கு மிக சீக்கிரமாக சென்றுவிட்டான். ஒரு நாள் அவனை செய்தி ஊடகங்கள் பேட்டி எடுக்க வந்தது. அவர்கள் கேட்கும் கேள்விக்கு அவன் அந்த ஏழை பாட்டியைத் தனக்கு அருகில் அமர வைத்தான். உண்மையில் அந்த பாட்டி அவனுக்கு பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. கொஞ்சம் உணவும் தண்ணீரும் கொடுத்ததைத் தவிர. அப்பொழுது ஒரு பிரபலமான பேட்டியாளர் ஏன் நீங்கள் உங்கள் பயிற்சி ஆசிரியரை இங்கே கூட்டி வரவில்லை என்று கேட்டார். அப்பொழுது அவன் தன்னுடைய விலையுர்ந்த ஷூ-வை அவர்கள் முன்பாக வைத்து அவரைவிட எனக்கு இந்த ஷூ மிகவும் உதவியது என்று சொன்னான். அவனுடைய பதில் எல்லாருக்கும் ஆச்சரியத்தை தந்தது. அன்பற்ற அதிகாரமும் ஆளுகையும் ஒருபோதும் மதிப்பை பெறாது. மாறாக வெறுப்பை மட்டுமே சம்பாதிக்கும்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை சற்று பாருங்கள். "அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும்" (ஏசாயா 42:3) என்ற வேத வார்த்தைகளின் விளக்கம் பெலவீனமான கைவிடப்பட்ட அழிந்து போகும் நிலையில் இருப்பவர்களை அழித்துவிடாமல், அவர்களுக்கு இரக்கத்துடனும் கிருபையுடனும் உதவி செய்வார் என்பதாகும். இப்படி அவரைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் அவர் இந்த உலகத்தில் வாழ்ந்த 33 வருடங்களில் நிறைவேறியது. ஒரு ஏழை மனிதனிடமும் அவர் கடினமாக நடந்து கொண்டதாக நாம் பார்க்க முடியாது. உதாரணமாக பேதுருவிடம் அவர் நடந்து கொண்ட அணுகுமுறையை பாருங்கள். இது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது உண்மையில் அற்புதம். நாம் பிள்ளை வளர்ப்பில் இந்த அணுகுமுறையே கையாள வேண்டும். 

முதலில் நம்முடைய சூழ்நிலைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்:

நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், ஒரு இயந்திரத்தனமான உலகத்திலே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் தேவன் உலகத்தை ஆளுகிறார் என்ற உணர்வே இல்லாமல் நடந்து கொள்கிறோம். நம் வாயிலிருந்து பிறக்கும் வார்த்தைகள் அதை காட்டிக் கொடுத்து விடுகின்றன. பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் பணம் சம்பாதிக்க வேண்டும் பேர் புகழோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உண்மையில் மேலோங்கி இருக்கிறது. இந்த நோக்கத்திற்காக தேவன் நமக்கு அருமையாக கொடுத்திருக்கும் குழந்தைகளை நியாயமற்ற முறையில் தொந்தரவு செய்கிறோம். நம்முடைய சமுதாயத்தில் குழந்தைகள் உண்மையில் பரிதாபகரமான நிலையில் உள்ளார்கள். தங்களுடைய நியாயத்திற்காக யாரிடமும் முறையிட முடியாத சூழலில் உள்ளார்கள். பெற்றோர்களாகிய நாம் என்ன செய்தாலும் அதை சகித்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் செல்கிறார்கள். நாமும் கேள்வி கேட்பாரற்று நம்முடைய அதிகாரத்தை அவர்களின் திறமைக்கும் மீறி செயல்படுத்த முயற்சிக்கிறோம். நம்மை சுற்றி இருக்கும் உலகம் இப்படி தான் இருக்கிறது. நீங்களும் நானும் இப்படிப்பட்ட சமுதாயத்தில் தான் வாழ்கிறோம். குறை என்பது அடுத்தவரிடம் கிடையாது. குறை நம்மிடமே உள்ளது. முதலில் இந்த தவறை நாம் ஒத்துக் கொண்டால் மட்டுமே சரி செய்வதற்கான வழியை கண்டுபிடிக்க முடியும். 

உலகம் காண்பிக்கும் அன்பற்ற அதிகார வழிமுறை குறுகிய காலத்திற்கு மட்டுமே பிள்ளைகளின் வாழ்க்கையில் பயத்தை ஏற்படுத்தும். ஒரு நிலையான எக்காலத்துக்கும் உரிய சிறந்த மனிதர்களை உருவாக்காது. உங்கள் மீது இருக்கும் பயம் நீங்கும்போது உங்களுடைய அதிகாரத்திற்கு மதிப்பிருக்காது. பிள்ளைகள் தண்டனைக்கு பயந்து மட்டுமே கீழ்ப்படிவார்கள். பெற்றோர் இல்லாத இடத்தில் அவர்கள் தவறுகளைச் செய்ய தயங்கமாட்டார்கள். அதிகாரம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது. இது பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கும். 

ஆனால் வேதம் காண்பிக்கும் அன்பின் பாதை ஒரு சிறந்த தெய்வ பயமுள்ள பிள்ளைகளை உருவாக்கும். அவர்கள் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, இந்த சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் உதவி செய்யக்கூடிய ஒரு நல்ல பிள்ளைகளாக உருவாகிறார்கள். அன்பின் வழி, பிள்ளைகளின் இதயத்தைத் தொடுகிறது. அவர்கள் தண்டனைக்கு பயந்து அல்ல, தவறு செய்வது தங்களை நேசிப்பவர்களை காயப்படுத்தும் என்று உணர்ந்து திருந்துவார்கள். வேதம் "பிரம்பை" கையாளச் சொன்னாலும், அது பிள்ளையை திருத்துவதற்கே தவிர, கோபத்தை தீர்த்துக்கொள்ள அல்ல. வேதம் "பிள்ளைகளை கோபமூட்டாதீர்கள்" என்றும் போதிக்கிறது. அன்பின் பாதை என்றால் பிள்ளைகள் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுப்பதோ, தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதோ அல்ல. உண்மையான அன்பு என்பது "பிள்ளைகளின் ஆத்மீக நலனுக்காக, திருத்தும் நோக்கத்துடன் கண்டிப்பு கலந்த அன்பு செலுத்துவதாகும்”. 

ஒரு கிறிஸ்தவனாக நான் எப்படி இந்த சரியான அன்பை காட்டுவது:

  1. நீங்கள் பிள்ளைகளிடம் சொல்வதற்கு முன்பாக அவர்களிடம் வாழ்ந்து காட்டுங்கள். பிள்ளை வளர்ப்பின் மையக்கரு அதில் இருக்கிறது. பிள்ளைகள் உங்கள் வார்த்தைகளை அல்ல உங்கள் வாழ்க்கையை பார்க்கிறார்கள். இந்த எண்ணம் எப்போதும் உங்கள் மனதில் வரட்டும். நீங்கள் திரை மறைவில் எப்படி வாழ்கிறார்களோ அப்படிதான் உங்கள் பிள்ளைகளும் வாழ்வார்கள். நீங்கள் உண்மையாகவே எந்த நோக்கத்திற்காக வாழ்கிறார்களோ அந்த நோக்கத்தின் பிரதிபலிப்பை உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் பார்க்கலாம். உதாரணமாக நீங்கள் சபை காரியங்களில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால், நீங்கள் சொல்லவே தேவையில்லை உங்கள் பிள்ளைகளும் சபை காரியங்களில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். நீங்கள் கிறிஸ்தவர் என்று சொல்லிக் கொண்டு, உங்கள் பிள்ளைகளை கிறிஸ்தவ வாழ்க்கை வாழும்படி வற்புறுத்தி, நீங்கள் உலகப்பிறியராயும், சிற்றின்பப்பிறியராயும் இருந்தால் நிச்சயமாக பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க மாட்டார்கள். உங்கள் வாழ்க்கையே பின்பற்றுவார்கள். எனவே பிள்ளைகளை தனிப்பட்ட வேதவாசிப்பிற்கும் தனிப்பட்ட ஜெபத்திற்கும் வற்புறுத்துவதற்கு முன், நீங்கள் உண்மையாகவே இந்த நல்ல காரியங்களை செய்கிறவர்களாக இருங்கள்.
  1. தேவனுடைய (ஆளுகையில்) இறையாண்மையுள்ள பராமரிப்பில் விசுவாசிகளாகிய நமக்கு தேவன் கொடுத்த பிள்ளைகள் விசுவாசத்தை கண்டுகொள்ளும் படிக்கு எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள். இதை காட்டிலும் பெரியது வேறொன்றும் இல்லை. தேவன் நமக்கு கொடுத்திருக்கும் பிள்ளைகளை ஒரு சக விசுவாசியை போல நடத்துங்கள். இப்படியாக செய்யும்போது நாம் அவர்களை மதிக்க ஆரம்பிக்கிறோம். அவர்களும் நம்மை மதிக்கிறார்கள். இந்த கபடற்ற சரியான உறவு நித்தியத்திற்கும் நிலைக்கும்.
  1. சபை ஆராதனைக்கும், வேத பாடத்திற்கும், ஜெபக்கூட்டத்திற்கும் தவறாமல் கலந்து கொள்ள கற்றுக் கொடுங்கள். இப்படியாக தேவனை பிள்ளைகள் பிரியப்படுத்தக் கற்றுக் கொள்ளும் போது, அவர்களின் வாழ்க்கையில் தேவனுடைய உறுதியான பாதுகாப்பு இருக்கிறது. இந்த பாதுகாப்பு உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது.
  1. சபைக்கென்று ஏதாவது வேலை செய்ய பிள்ளைகளை சிறுவயதில் இருந்தே ஊக்கப்படுத்துங்கள். அது துடைப்பதாக இருக்கலாம், கூட்டுவதாக இருக்கலாம், பாடல் புத்தகங்களை எடுத்து வைப்பதாக இருக்கலாம். இப்படி எண்ணற்ற பணிகளை நாம் செய்யும்படி சொல்லிக்கொடுக்கலாம்.
  1. இப்படியான முயற்சிகளை செய்யும்போது பிள்ளைகள் நமக்கு முழுமையாக ஒத்துழைப்பார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விடாதீர்கள். நாம் பெற்ற பிள்ளைகள் நமக்கு தீமைக்கு ஒத்துழைப்பார்களே தவிர, நன்மையான காரியங்களுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். எனவே இந்த காரியங்களை எல்லாம் செய்யும்போது நமக்கு ஆவியானவரின் உதவியும், கிருபையும் முதலில் அவசியம். அதை நாம் அவரிடம் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். நம்மிடம் பொறுமையும், விடாமுயற்சியும், மன்னிக்கும் குணமும் அவசியம்.
  1. நேர்மறையாக சிந்திக்கும் போது பிள்ளை வளர்ப்பில் நாம் கவனத்துடன் ஈடுபடும்போது நாமே அநேக ஆசிர்வாதங்களை கண்டு கொள்கிறோம். தேவன் நம்மை அநேக காரியங்களில் திருத்துவதற்கும், நமக்கு பொறுமையை கற்றுக் கொடுப்பதற்கும், நாம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை குடும்பமாக அனுபவிப்பதற்கும் இதன் மூலமாக தேவன் உதவி செய்கிறார். முதலில் பிள்ளை வளர்ப்பு பெற்றோர்களாகிய நமக்கே பெரிய நன்மைகளை கொண்டு வருகிறது. நம்மை ஆவிக்குரியவர்களாக அழகுப்படுத்துகிறது.

முடிவாக, நீங்கள் எந்த காரியத்தில் கவனமற்று இருந்தாலும் பரவாயில்லை. உங்களுடையதும் உங்கள் பிள்ளைகளுடையதுமான இரட்சிப்பை குறித்து ஒரு நாளும் கவனமற்று இருந்து விடாதீர்கள். பிள்ளை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் கொடுக்கப்பட்ட கடமையாகும். ஒருநாளும் அன்பில்லாத அராஜகத்தை, உங்களின் சுய விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள். ஒரு நாளும் உங்கள் பிள்ளைகளிடம் அன்பில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள். நன்மையானதை கற்றுக் கொடுங்கள். இந்த காரியங்களுக்கு ஆரம்பமாக இன்றே உங்கள் பிள்ளைகளிடம் இத்தனை நாள் இப்படி நடந்து கொள்ளாததற்காக மன்னிப்பு கேளுங்கள். இந்த செயல் முதலில் சமாதானத்துக்கும், அடுத்தது சரியான பாதையில் நாம் செல்வதற்கு ஒரு ஆரம்பமாக இருக்கும். விசுவாசத்தோடு முயற்சி செய்யுங்கள். இந்த காரியங்களில் தேவனே நமக்கு சரியான ஞானத்தை கொடுப்பாராக. ஆமென்

 
 
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.