தோராவில் அதாவது ஐந்தாகமத்தில் பாலினப்பாகுபாடு உள்ளது என்னும் கட்டுரைக்கு இது மறுப்புக் கட்டுரையாகும். ( www.evilbible.com ) என்னும் இணையதலத்தில், “தோராவில் பாலினப்பாகுபாடு” என்ற தலைப்பில் பெயர் வெளியிடாத ஒருவரால், தோராவுக்கு எதிரான சில தவறான கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. இத்தகைய தவறான கருத்துகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு தாழ்மையான முயற்சியே இந்தக் கட்டுரை ஆகும். தடித்த எழுத்துகளில் உள்ள வாசகங்கள் அந்த இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகள்; அதைத் தொடர்ந்து அதற்கான மறுப்புரைகள் சாதாரண எழுத்துகளில் கொடுக்கப்பட்டுள்ளன.
“தோராவில் பாலினப் பாகுபாடு” என்னும் இணையத்தில் ( www.evilbible.com ) கட்டுரைக்கான மறுப்புரை
பரிசுத்த வேதாகமம் தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகம். இது 40 வெவ்வேறு எழுத்தாளர்களால் 1500 ஆண்டுகளாக மூன்று கண்டங்களிலிருந்து எழுதப்பட்டது. இவற்றில் தோரா என்பது வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களைக் குறிக்கிறது. தமிழில் இது ஐந்தாகமம் என்று அழைக்கப்படுகிறது. தோராவைப் படிக்கும்போது நாம் மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அது உண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தெரிவிக்கும் துல்லியமான வரலாற்றுக் குறிப்பு என்பதாகும். வேதாகமத்தின் வரலாற்றுப் பூர்வமான நம்பகத்தன்மைக்கும் அதனுடைய சான்று உறுதிக்கும் கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவ அல்லாத ஆதாரங்களில் இருந்து பல சான்றுகள் உள்ளன. உண்மையைக் கூறுவோமெனில், பிளேட்டோ மற்றும் இலியட் போன்ற வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பிற எழுத்தாளர்கள் மற்றும் அவர்களுடைய இலக்கியங்களுக்கு இருப்பதைக் காட்டிலும், பரிசுத்த வேதாகமத்தின் புத்தகங்களுக்கு கணிசமான அளவு சான்று ஆவணங்களும், அதன் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, அதில் சொல்லப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள், அவர்களின் பாவங்கள், அவர்களின் தோல்விகள், அவர்களின் வெற்றிகள், அவர்களின் நல்ல மற்றும் கெட்ட செயல்கள் ஆகியவற்றைப் பற்றிய எல்லா உண்மைகளையும் தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்.
இதனால் தேவன் அவர்களை அங்கீகரிக்கிறார் என்றோ அவர்களின் செயல்களை மன்னிக்கிறார் என்றோ இது எந்த வகையிலும் அர்த்தப்படுத்தாது. வேதாகம கதாபாத்திரங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும், அவர்களைக் கதாநாயகர்களாக மாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தால் இதன் ஆசிரியர்கள் தங்களது வாழ்க்கையின் இருண்ட அத்தியாயங்களைப் பதிவு செய்வதிலிருந்து விலகியிருக்க முடியும். அவ்வாறு செய்திருந்தால் அது யாருக்கும் தெரியாமல் போயிருக்கும். ஆனால் பிற அனைத்து மத நூல்களிலும், உலக வரலாற்றிலும் கூட இல்லாத வகையில் வேதாகமத்தின் நம்பகத்தன்மைக்கும் அதன் உண்மைத் தன்மைக்கும் மிகத் துல்லியமாகச் சான்றளிக்கும் வகையில், அதில் வருகிற ஆண்கள் மற்றம் பெண்களின் வாழ்க்கை முழுவதும் எவ்விதப் பாரபட்சம் இல்லாமலும், விருப்பு வெறுப்பு இல்லாமலும் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தோரா எழுதப்பட்ட சமயத்தில் எபிரெயர்கள் மிகவும் பேரினவாத (இனப்பற்று) சமூகமாக இருந்தனர். எனவே தோராவில் பாலியல் பாகுபாடு மிகவும் பரவலாக உள்ளது.
தோராவைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின், முக்கியமாகத் தோராவில் பாலியல் பாகுபாடு இருந்ததா? அல்லது இல்லையா? என்பதைப் புரிந்துகொள்வதற்கு அது எழுதப்பட்ட காலத்தில் இருந்த பிற மதக் கலாச்சாரங்கள், மதங்களுக்காக மக்கள் கடைப்பிடித்துவந்த நடைமுறைகள் மற்றும் சமுதாய விதிமுறைகள் ஆகியவற்றை நாம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். எனவே எபிரெயர்களை ஒரு பேரினவாத சமூகம் என்று கூறுவதற்கு, தோராவை எழுதிய ஆசிரியர் பிற பண்டைய கலாச்சாரங்களைப் பார்த்து அவற்றின் அடிப்படையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அது பற்றி ஆசிரியர் இங்கே தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கு முனைவர் “ஹன்னி ஜே. மார்ஸ்மேன்” என்பவரின் ஆய்வுகள் நமக்கு வெளிச்சத்தைக் காட்டுகின்றன. இஸ்ரவேலர்களின் தேவனை வழிபடும் பெண்களின் நிலையானது, இஷ்த்தாரையோ, அஷேராவையோ அல்லது வேறு எந்த தெய்வங்களையோ வணங்கும் பெண்களின் நிலையைக் காட்டிலும் மோசமானது என்று குரல் எழுப்புவோரின் உண்மையான நோக்கத்தைத் வெளியே கொண்டுவரும் நோக்கத்துடன் இவ்விரு வகையான பெண்களின் வாழ்க்கையையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தார். இதன் ஆய்வுகளின் முடிவை அவர் கீழ்க்காணுமாறு விவரிக்கிறார்: “இஸ்ரவேல் பெண்களின் சமூதாயம் மற்றும் மத நிலையானது உகாரித்தின் (சிரியாவிலுள்ள ஒரு நகரம்) பெண்களின் நிலையும் ஏறத்தாழ ஒரே மாதிளரியாகவே இருந்துள்ளது. மேலும் என்னால் அறிய முடிந்தவரை, பண்டைய அண்மைக் கிழக்கிலுள்ள உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மற்ற பெண்களை விட ஓரளவு சுதந்திரத்தை அனுபவித்தாலும் கூட, எல்லா இடங்களிலும் பெண்களின் நிலைகளும் ஒட்டுமொத்தமாக ஆண்களுக்கு அடிபணியக் கூடியதாகவே இருந்தது.” (ஹன்னி ஜே. மார்ஸ்மேன், உகாரிட் மற்றும் இஸ்ரவேலில் உள்ள பெண்கள்: பண்டைய அன்மைக் கிழக்கிலுள்ள சூழலில் அவர்களின் சமூக மற்றும் மதநிலை, பிரில் வெளியீடு, 2003, பக்-738).
எனவே, இஸ்ரேலிய கலாச்சாரத்தை மட்டும் ஒரு பேரினவாதக் கலாச்சாராமாக தனிமைப்படுத்துவது சரியானதன்று. உண்மையில் சொல்வதென்றால், இஸ்ரவேலின் தேவன் தம்முடைய மக்களுக்கு பரிந்துரைத்த பெரும்பாலான நடவடிக்கைகள், பெண்களைப் பாதுகாப்பதற்கு ஏதுவாகவும், அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு ஏதுவாகவுமே இருந்தன.
ஒரு பெண்ணியவாதியாக, அவர்களுடைய வழிபாட்டுக் காரியங்களில் பின்பற்றப்படும் பாலியல் பாகுபாடு பற்றிக் கூறும் வசனங்களைத் கண்டறிந்து அவற்றை என் சக பெண்களுக்கு அறிவிக்க வேண்டியதை எனது கடமையாகக் கருதுகிறேன்.
பழங்கால எழுத்துக்களின் சூழலையும் கலாச்சாரத்தையும் புரிந்துகொண்டு, எது சரியல்ல என்பதைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவது உண்மையில் உன்னதமானது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்து, தோராவில் பெண்களுக்கு எதிரான காரியங்கள் இருந்தால் பிறரை எச்சரிப்பது நல்லது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் நீங்கள் தோராவுக்கு உண்மையாக இருக்க வேண்டியது அவசியம்.
தோராவில் பெண்களுக்கு எதிராக உள்ள அனைத்து அநீதிகளையும் என்னால் பட்டியலிட முடியாது. கிருபையிலிருந்து விழுந்துபோனதற்கு காரணமானவர்களாக “லிலித்” முதல் பிற அனைத்துப் பெண்களும் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். “லலித்” ஆதாமுக்குக் கீழ்ப்படியாததனால் ஏதேனில் இருந்து வெளியேற்றப்பட்டவர் எனக் கருதப்படுபவர்).
லிலித் தோராவில் சொல்லப்பட்ட ஒரு கதாபாத்திரம் அல்ல. ஆதியாகமம் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள ஆதாம் மற்றும் ஏவாள் வாழ்ந்த வெகு காலத்திற்குப் பிறகு, யூத நாட்டுப்புற இலக்கியங்களிலும், யூதப் பாரம்பரியத்திலும் இடம் பெற்றிருக்கிற ஒரு கற்பனைக் கதாபாத்திரமே இந்த லலித் என்ற கதாபாத்திரம் ஆவாள்.
தோராவில் பெண்களுக்கு எதிரானதாகக் கருதப்படும் வசனங்களின் ஒரு மாதிரிப் பட்டியலைத் தருவதோடு இப்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை நான் தோராவைப் புரட்டிப் பார்க்கும்போது வெளிப்படும் வசனங்களை அப்பட்டியலுடன் சேர்ப்பேன். அதுவரைக்கும் நீங்கள் இங்கே பார்க்கும் எந்த வசனத்தையும் பயன்படுத்தத் தயங்க வேண்டாம்.
ஆதியாகமம் 3:16: ஏவாள் நன்மை தீமை அறியக்கூடிய மரத்தின் கனியை உண்டதால், எல்லாப் பெண்களும் குழந்தை பிறக்கும் போது மிகுந்த வேதனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறுகிறது. (இறந்து போன முதையார்களுக்கு சற்றும் தொடர்பில்லாத அவர்களுடைய உறவினர்கள் பாவப் பரிகாரத்தக்காக பணத்தைச் செலவழிப்பது எப்படியோ அப்படியோ ஏவாளின் பாவத்துக்குச் சற்றம் தொடர்பில்லா அவளுடைய தலைமுறையில் வருகிற பிற்காலப் பெண்கள் பிரசவ காலத்தில் வேதனையை அனுபவிக்க வேண்டியதாயிருக்கிறது. இது பெண்களுக்குக் காட்டும் பாகுபாடு அல்லவா?
ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள மனிதகுலத்திற்கு ஏற்பட்ட பாவவீழ்ச்சியைப் பற்றிச் சிந்திக்கும் முன்னர், ஒன்று மற்றம் இரண்டாம் அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ள படைப்பின் விவரங்களைச் சற்று உற்றுக் கவனிக்க வேண்டியது அவசியம். ஆண், பெண் இருவருமே தேவனுடைய சாயலிலும், வேதனுடைய ரூபத்திலும் படைக்கப்பட்டார்கள். “பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக! தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” (ஆதியாகமம் 1:26,27). இருவருமே தேவ சாயலில் படைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இருவருடைய குணத்திலும் மதிப்பிலும் எவ்வித வேறுபாடும் இல்லை. மேலும் ஆதியாகமம் 1:28-30 -இல் “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் ஆண் பெண் இருவருக்கும் சேர்ந்தே வழங்கப்பட்டுள்ளன. எனவே, படைப்பின் செயல்பாட்டிலிருந்தும், ஆசீர்வாதங்களை வழங்கியதில் இருந்தும், எல்லா ஆணும் பெண்ணும் தேவனுக்கு முன்பாகச் சமமாக இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கிடைய எவ்வித வேறுபாடுகளும் இல்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.
அடுத்ததாக அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டபோது, ஆதியாகம் 2:18-25 வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, தேவனானவர் கணவனுக்கும் மனைவிக்கும் வெவ்வேறு வகையான பாத்திரங்களைக் (பங்களிப்புகளைக்) கொடுத்தார். (அவர்களுடைய மதிப்பில் அல்லது பெறுமதியில் வேறுபாடு அல்ல, பங்களிப்பில் வேறுபாடுகள் என்பதை மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்). தேவன் பெண்ணை ஆதாமுக்கு ஏற்ற துணையாகப் படைத்தார். இதிலிருந்து ஓர் ஆணுக்கு சம அளவிலுள்ள ஓர் உதவியாளர் அல்லது ஒரு துணையாளர் தேவை என்னும் உண்மையைக் கண்டுகொள்கிறோம்.
ஆதியாகமம் 2:18-20 -இல் பயன்படுத்தப்பட்டுள்ள, “ஏற்றதுணை” என்ற வார்த்தைக்கு எபிரெய மொழியில்அய்ஸர் (ay-zer) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தை பழைய ஏற்பாட்டில் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம், மிக இன்றியமையாததும் முக்கியமானதுமான ஆற்றல் மிக்க மீட்பின் நடவடிக்கைகளுக்கு உதவிசெய்யக்கூடிய செயலின் பின்னணியில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தை (ezer) என்னும் பெயர்ச்சொல்லாக பழைய ஏற்பாட்டில் இருபத்தி ஒரு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு முறை முதல் பெண்ணாகிய ஏவாளின் தொடர்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று முறை உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் உதவி செய்கிற (அல்லது ஆபத்தில் உதவி செய்யத் தவறிய) நபர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பதினாறு முறை தேவன் நமக்கு உதவியாளராக இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏவாளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள, “எற்றதுணை” என்ற வார்த்தையானது வேறு பகுதிகளில், “தேவன் நமக்கு உதவிசெய்கிறவர்” என்ற சொல்லப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே தோராவில் பெண்ணின் பங்கு என்பது குறைந்த மதிப்புடையது அல்ல, மேலும் முக்கியத்துவம் குறைந்ததும் அல்ல. ஆகவே பெண்ணின் மதிப்பும் தகுதியும் ஆணுக்குக் கொடுக்கப்பட்டதைப் போலவே இருக்கிறது. ஆயினும் அவர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்பில் வேறுபாடுகள் இருக்கின்றன.
இப்பொழுது மூன்றாம் அதிகாரத்துக்கு வருவோம். ஆணும் பெண்ணும் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் பாவத்தில் விழுந்தனர். நீதியும் பரிசுத்தமுமான தேவனால் பாவம் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். ஆகவே தேவன் அவர்களுக்குத் தண்டனை வழங்கினார். இதில் ஏவாளுக்கு வழங்கப்பட்ட தண்டனையே, அவள் பிரசவ வேதனைப்படும்போது வலி உண்டாகும் என்பது. ஆயினும் ஏவாளுக்குத் தண்டனை வழங்கிய விதத்திலும் தேவன் எவ்விதப் பாலினப் பாகுபாடும் கட்டவில்லை என்பதை மூன்று கருத்துகளை முன்வைத்து அதை நிரூபிக்க விரும்புகிறேன்.
* அவளுக்குப் பிரசவ வலி உண்டாகும் என்று சொல்லப்பட்ட தண்டனையின் ஊடாக, மேலும் ஒரு வாக்குறுதி அவளுக்கு வழங்கப்பட்டதைக் காண்கிறோம். இந்த வாக்குறுதி சர்ப்பத்திற்கு வழங்கப்பட்ட சாபத்தின் ஊடாகக் காணப்படுகிறது. “உனக்கும் பெண்ணுக்கும், உன் சந்ததிக்கும் (வித்துக்கும்) அவளுடைய சந்ததிக்கும் (வித்துக்கும்) பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவருடைய குதிங்காலை நசுக்குவாய்” (ஆதியாகமம் 3:15). இது மேசியாவைப் பற்றிய ஒரு முக்கியமான தீர்க்கதரிசனம். பெண்ணின் வித்திலிருந்து ஒரு மீட்பர் இந்த உலகில் தோன்றுவார் என்னும் வாக்குறுதி ஏவாளுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களில் மிகவும் பெரியதாகும்.
இப்போது நாம் இரண்டாவது குற்றச்சாட்டு நேராக வருவோம். ஏவாள் பாவம் செய்தாள், தண்டனை அனுபவித்தாள். ஆனால் தாங்கள் செய்யாத பாவத்திற்காக எல்லாப் பெண்களும் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்?
முதலாவது நாம் புரிந்துகொள்ள வேண்டிய காரியம் என்னவெனில், பாவத்திற்கான தண்டனை பெண்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை, அது ஆண்களுக்கும் வழங்கப்பட்டது. இங்கு ஆண் பெண் பேதமின்றி இருவருக்கும் வழங்கப்பட்டது. எனவே இது பாலியல் ரீதியிலான பிரச்சினை மட்டுமல்ல. இது ஆதாம் மற்றும் ஏவாள் இந்த இருவருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை வழி வழியாக அவர்களடைய பிள்ளைகளுக்கும் கடத்துவதுடன் தொடர்புடையது. அதாவது அவர்களுடைய பாவத்தின் விளைவைச் சந்ததி சந்ததியாக அனுபவிப்பதாகும். ஆகவேதான் இன்றும் கூட அந்தத் தண்டனையின் பாதிப்பு தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆகவே தோராவில் பாலினப் பாகுபாடு காட்டப்படுகிறது என்று புலம்புவதற்கு முன், சந்ததிதோறும் தண்டனையின் பாதிப்பு கடத்தப்படுவதை எதிர்மறையான காரியமாக மட்டும் காணமால், நேர்மறையான ஒன்றாகவும் இருக்கிறது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஆகவேதான், பிள்ளைகள் பெற்றோரின் சுதந்தரத்தை வழி வழியாகப் பெற்றுவருகிறார்கள். இந்தத் தண்டனையில் அது சொல்லப்படாவிட்டாலும் கூட, வாழ்க்கை என்னும் பரிசை நாம் பெற்றோரிடமிருந்து தான் பெற்றுக்கொள்கிறோம். இந்த ஆசீர்வாதம் அந்த தண்டனையின் ஊடாகவே அடங்கியிருக்கிறது. ஆதாமுக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் குறித்துப் பார்ப்போம். ஒரு நாட்டின் பிரதம அமைச்சரோ அல்லது ஒரு மாநிலத்தின் தலைமை அமைச்சரோ எடுக்கும் ஒரு முடிவானது அதன் குடிமக்கள் அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவது போல, ஆதாம் மனித இனத்தின் தலைவராக இருப்பதால், அவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை முழு மனித குலத்தையும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளது. மனித சமுதாயத்தில் நாம் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களாக இருக்கும் வரை, ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு இத்தகைய விளைவுகள் உண்டாவது தவிர்க்க முடியாதது ஆகும். ஒரு தலைமைப் பிரதிநிதி என்ற வகையில் ஒரு நாட்டின் தலைவர் எடுக்கும் முடிவுகள், அது போர் போன்ற பெரிய காரியமாக இருந்தாலும், அல்லது சிறிய காரியமாக இருந்தாலும் அது மக்களைப் பாதிக்கிறது. மேலும் ஒரு குடும்பத் தலைவர் என்ற முறையில் ஒரு ஆண் எடுக்கிற காரியங்கள் பிள்ளைகளைப் பாதிக்கின்றன. எடுத்துக்காட்டாக, வேலை தொடர்பாகவோ, அல்லது தங்குமிடம் தொடர்பாகவோ அல்லது இடம் பெயர்வது தொடர்பாகவோ எந்த முடிவெடுத்தாலும் அவை பிள்ளைகளின் மீது அழியாத முத்திரையை பதித்துவிடுகின்றன.
“உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” (ஆதி. 3:16) என்று கூறுவதன் மூலம் பாலினங்களுக்கு இடையேயுள்ள சமத்துவமின்மையோடு அதாவது ஆண்களுக்கு அதிகாரத்தை வழங்குவதோடு இந்த வசனம் முடிகிறது.
இந்த கேள்வியைச் சிந்திப்பதற்கு முன்னதாக, இது ஒரு திருமண உறவுக்குள் ஏற்படும் மாற்றத்தைப் பற்றி பேசுவதால், திருமணம் பற்றிய தேவனின் கண்ணோட்டத்தை அல்லது திருமணத்தில் தேவன் ஏற்படுத்தி வைத்திருக்கிற அமைப்பு முறையைப் பற்றிச் சிந்திப்போம். திருமணம் என்பது தேவனால் திட்டமிடப்பட்டு நிறுவப்பட்டது. ஒரு குடும்பத்தில், பல்வேறு விதமான கடமைகளும், பங்களிப்புகளும், பொறுப்புகளும் உள்ளன. தேவன் ஏற்படுத்திய இத்தகைய கடமைகளையும் பங்களிப்புகளையும் நாம் புரிந்துகொண்டு வாழ்வதே ஒரு சிறந்த குடும்பத்திற்கான எடுத்துக்காட்டாகும். ஒரு குடும்பத்தில் கணவனின் பங்கு என்பது அக்குடும்பத்தைத் தலைமை தாங்கி நடத்துவதாகும். அவன் தன் வீட்டிற்கு சேவை செய்யும் ஒரு அன்பான தலைவனாக விளங்குகிறார். மனைவிக்கும் இதற்கு நிகரான பங்களிப்பு இருக்கிறது. கணவனுக்கு ஏற்ற உதவியாளராக இருப்பதும், அவருடைய தலைமைக்குக் கீழ்ப்படிந்து இருப்பதுமே அவளுடைய கணவனுக்கு நிகரான பங்களிப்பாகும். இந்த உலகத்தில் எந்த நிறுவனத்தையோ அல்லது அமைப்பையோ எடுத்துக்கொண்டாலும், அங்கு பணிபுரிகிற எல்லாருக்கும் ஒரே மாதிரியான பங்களிப்பு கிடையாது. எல்லோரும் ஒரே பங்களிப்பை அல்லது பொறுப்பை ஏற்று, எல்லாரும் ஓரேவிதமாகச் செயல்பட்டால், அந்தச் சமுதாயத்தில் குறைவுகளும், திறமையின்மைகளும், குழப்பங்களுமே மிஞ்சும். குடும்பம் என்பது ஒரு பெரிய சமுதாயத்தின் மிகச்சிறிய அம்சம் அல்லது நிறுவனம் ஆகும். ஏற்கனவே நாம் விவாதித்தபடி, குடும்பத்திற்கு தேவன் சமமான மதிப்புள்ள, ஆனால் வெவ்வேறு பொறுப்புள்ள பாத்திரங்களை வழங்கியிருக்கிறார். அப்பொழுதே குடும்பம் என்னும் அமைப்பு தன்னுடைய முழுத் திறனுடன் செயல்பட முடிகிறது.
குடும்ப வாழ்க்கையானது, அன்பு, ஆறுதல், மற்றும் பெண்ணின் ஆசை நிறைவேறுதல் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எளிதானதாக இருப்பதற்குப் பதிலாக, பாவம் உலகத்தில் நுழைந்ததால் அது வலிந்து நடத்துகிற ஒன்றாக மாறிவிட்டது. பாவத்தின் விளைவாகக் கணவன் மனைவி ஆகிய இருவரின் மனப்பான்மையும் மொத்தமாகத் தலைகீழாக மாறிவிட்டது. மனைவியானவள் தன் கணவனின் தலைமைக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்திருப்பதற்குப் பதிலாக, பாவம் பிரவேசித்ததன் காரணமாக இப்போது வலுக்கட்டாயமாகக் கீழ்ப்படிகிற நிலைமைக்கு ஆளாகிவிட்டது. உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும் என்னும் அறிக்கையானது, மனைவி கணவன் மீது கொண்டிருக்கும் எளிய ஆசையன்று, மாறாக அது கணவனையே ஆளுகை செய்ய வேண்டும் என்னும் ஆசையாகும். “அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய்” (ஆதி. 4:7) என்று காயீனை ஆளுகை செய்ய வேண்டும் என்கிற பாவத்தின் ஆசையைப் பற்றிச் சொல்லும்போதும் இதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும்” என்ற வசனத்தின் அர்த்தம், “பெண் தன் கணவனைக் கட்டுப்படுத்த விரும்புவாள், ஆனால் அவனோ அதையும் மீறி அவளுடைய எஜமானனாக இருப்பான்” என்பதாகும். தேவன் கொடுத்த பொறுப்பை அழகான முறையில் வெளிப்படுத்த வேண்டிய மனைவி என்னும் பாத்திரம், பாவத்தின் காரணமாக இப்பொழுது வெறுப்புடன் செய்ய வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. பாவம் நுழைந்ததின் விளைவாக பெண்ணைப் பற்றியிருந்த ஆசையானது அவளது கணவனின் அதிகாரத்தால் உறவுகள் விரக்தியடையும் நிலைக்குச் சென்றுவிட்டது. மேலும் இந்த ஆசையானது, வீழ்ந்துபோன உலகில், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே மோதல்களுக்கு ஓர் ஆதாரமாகவும் ஆகிவிட்டது. ஆயினும், பாவத்தின் தாக்கத்தால் முழுமையான வகையில் வாழ்க்கை மூழ்கியிருந்தாலும், இது எந்த வகையிலும் குடும்பத்திலுள்ள அதிகாரத்தை அகற்றிப் போடாமல், அதிலுள்ள வெவ்வேறு பாத்திரங்கள் எவ்வாறு தங்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றப்படும் என்பது தொடர்ந்து இருந்து வருகிறது.
ஆதியாகமம் 19:8 : லோத்து என்ற ஒரு மனிதன் தூதர்களைக் காப்பாற்றுவதற்காக தன் சொந்த மகள்களை மோசமான நடத்தையுள்ள ஒரு குழுவினருக்குக் கொடுக்க முன்வந்த செயல் பெண்களை இழிவாக நடத்துகிற செயல் அல்லவா?
தொடக்கத்தில் நாம் குறிப்பிட்டபடி, இந்தக் காரியமானது அங்கே என்ன நடந்ததோ அதை எவ்விதப் பாரபட்சமும் இன்றி வெளிப்படையாகவும் உண்மையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதோமின் ஆண்கள் கூட்டம், ஆண்களுடன் தவறாக நடக்க விரும்பி லோத்தின் வீட்டைச் சுற்றி வளைந்துகொண்டர். தன்னைத் தேடிவந்த இரண்டு தூதர்களுக்குப் பதிலாக, லோத் தனது சொந்த மகள்களை வழங்க முன்வந்த செயல் சரியானதா? நிச்சயமாக? இல்லை. இந்த சம்பவத்தில் லோத்து ஒரு தவறான பார்வையைக் கொண்டிருந்தான், அதாவது அவன் நற்குணத்தில் தரம் தாழ்ந்தவனாகவும், உலகத்தாரைப் போலவும் நடந்துக் கொண்டான். ஆனால் அவனுடைய வீட்டிற்கு விருந்தினராக வந்த இரண்டு கர்த்தருடைய தூதர்கள் லோத்துவையும் அவனது இரண்டு மகள்களையும் அந்த ஊர் ஆண்களிடமிருந்து பாதுகாத்துக்கொண்டனர். தன்னையும் தன் வீட்டையும், தன் விட்டுக்கு வந்த விருந்தினரையும் பாதுகாக்கும் பொருட்டு, இவ்விதமான முடிவை அவன் எடுத்தான். குறிப்பாக அந்த ஊர் ஆண்களை சமாதானப்படுத்தும் பொருட்டு இவ்விதமான வார்த்தைகளைப் பேசினான். ஆயினும் அவன் தன் சொந்த மகள்களை வழங்க வேண்டும் என்பது தவறான தெரிந்தெடுப்பே ஆகும். இருப்பினும் கர்த்தருடைய தூதர்கள் லோத்தின் செயலை நிராகரித்து, தங்களுடைய அதிகாரத்தால் அதை வேறு விதமாகக் கையாண்டர்கள். இதன் மூலம் லோத்தின் இத்தகைய தவறான நடத்தையை தேவன் ஏற்கவில்லை என்பதைக் காண்கிறோம். மேலும் குற்றவாளிகளைக் குருடாக்கிய தன் மூலம் லோத்தின் மகள்களைப் பாதுகாக்கத் தேவையான காரியங்களை அவர் செய்தார் என்பதையும் இது காட்டுகிறது. ஒரு பூமிக்குரிய தந்தை தன் சொந்த மகள்களைப் பாதுகாக்கத் தவறினாலும் கூட, தேவன் அந்தப் பெண் பிள்ளைகளைப் பாதுகாக்கிறார்.
இந்தக் காரியங்கள் நடந்த பின்னர், லோத்து தனது சொந்த மகள்கள் கர்ப்பந்தரிக்கும் படிக்கு காரணமாகிறான். இதுவும் பெண்களைத் தவறாகக் கையாளுகிற செயல் அல்லவா?
ஆதியாகமம் 19:31-32 வரையுள்ள வசனங்கள் இந்தச் சம்பவத்தின் காரண காரியத்தை தெளிவாக விளக்குகின்றன. லோத்தின் மகள்கள், தங்களைத் திருமணம் செய்து, சந்ததியை உண்டாக்குவதற்கு அதாவது குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு அந்த இடத்தில் எவ்வித ஆண்களும் இல்லை என்று நம்பினர். ஏனெனில் அவர்கள் சோதோம் நகரின் அழிவைக் கண்டவர்கள். மேலும் அங்கே எல்லாரும் இறந்திருக்கலாம், பூமியில் எஞ்சியிருக்கும் மக்கள் தாங்கள் மட்டுமே என்று நம்பியிருக்கலாம். மேலும் இந்த இளம் பெண்கள் தாங்கள் இதுவரைக்கும் வாழ்ந்த நகரத்தின் பாவ கலாச்சாரத்தின் தாக்கத்தினாலும் இந்த முடிவை எடுத்திருக்கலாம். சோதோம் மக்களின் இயல்புக்கு மாறாக ஒழுக்கக்கேடான பாலியல் பழக்கங்களுக்காக தேவன் அவர்களைத் தண்டித்தார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இருப்பினும் இவ்விரு பெண்களும் தங்களது குடும்பத்தின் வம்சம் அழிந்துபோகாமல் காப்பாற்ற முயன்றனர்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியம், தந்தையோடு உடலுறவு கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் அந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கே ஏற்பட்டது, அவர்களே இதற்காக முயற்சியைத் தொடங்கினார்கள். லோத்து தனது சொந்த மகள்களுடன் உடலுறவு கொண்டதற்கான காரணம் என்ன? அவருக்க ஏற்கனவே மதுபானம் குடிக்கும் பழக்கம் இருந்தது, இந்தக் குடிப்பழக்கத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அவ்விரு வாலிபப் பெண்களும் சதிசெய்தார்கள். லோத்து ஏற்கனவே குடிகாரனாக இருந்ததால், தன் மகள்கள் கொடுத்த மதுபானத்தை விருப்பத்துடன் குடித்தான். அவனுக்கு மேலும் மேலும் மதுபானம் கொடுக்கப்பட்டதால் அவன் தன் கட்டுப்பாட்டையும் பொது அறிவையும் இழந்தான். (ஆதியாகமம் 19:30-38), மேலும் தான் என்ன செய்கிறோம் என்று அவனுக்கே உணர்வில்லாத நிலை இருந்தது. இருப்பினும் அவன் செய்ததை எந்த விதத்திலும் நியாயப்படுத்தாது. ஒரு நபர் அளவுக்கு அதிகமாக மதுபாகம் குடிக்கும்போது, அவரால் நல்ல காரியங்களைச் செய்யும்படி தேர்ந்தெடுக்க முடியாது. நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை இது. மேலும் மோசேயினால் கொடுக்கப்பட்ட சட்டத்திலும் இத்தகைய முறை தவறிய உடலுறவு தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது, தேவன் அங்கீகரிக்காத ஒன்றாகவே இது இருக்கிறது (லேவியராகமம் 18:6-26). இத்தகைய உறவுகள் தேவனுக்கு முன்பாக அறுவெறுப்பான செயலாகவே பார்க்கப்படுகிறது.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.