“இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” (மத்தேயு 5:7)
இதுகாறும் நாம் தியானித்துக்கொண்டிருந்த முதல் நான்கு பாக்கியங்களிலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய போதனையின் முக்கிய அம்சங்களில் ஒன்றான ஆவிக்குரிய விழிப்புணர்வு மற்றும் மறுரூபமாகுதல் ஆகியவற்றில் ஒரு தெளிவான வளர்ச்சி இருப்பதை நாம் கவனித்தோம். முதலாவது, நான் ஒன்றுமில்லை, என்னிடத்தில் ஒன்றுமில்லை, என்னால் ஒன்றும் கூடும் என்கிற ஆவிக்குரிய வறுமையாகிய மெய்ந்நிலையை (ஆவியில் எளிமை) உணருகிறோம். இரண்டாவதாக, பாவ உணர்வு; அதாவது, தேவனுக்கேற்ற துக்கத்தை உண்டாக்குகிற ஒரு வகையான குற்ற உணர்வு ஏற்படுகிறது (துயரப்படுதல்). மூன்றாவதாக, நம்மையே சார்ந்திருப்பதை விடுத்து, தேவனுடைய சமுகத்தில் தூளிலும் சாம்பலிலும் அமரத்தக்கதான மனத்தாழ்வு உண்டாகிறது (சாந்தகுணம்). நான்காவதாக, கிறிஸ்துவையும் அவருடைய இரட்சிப்பையும் வாஞ்சிக்கிற ஒரு மாபெருந் தேட்டம்—அதாவது நீதியின்மேலுள்ள பசியும் தாகமும் தொடர்கிறது. ஆயினும் இவையெல்லாம், ஒருவகையில், எதிர்மறையானவைகளே; ஏனெனில், விசுவாசிக்கிற ஒரு பாவி தனக்குள்ளே காணும் குறைபாடுகளைக் குறித்த உணர்வும், நன்மையானவைகளை நாடித்தேடுகிற அவனது பேரார்வமுமாகவே இவை இருக்கின்றன. ஆனால், அடுத்து வருகிற நான்கு பாக்கியங்களில் விசுவாசியிடம் காணப்படும் நன்மையான காரியங்களின் வெளிப்பாடு, புதிய சிருஷ்டிப்பின் கனிகள், மற்றும் மறுரூபமாக்கப்பட்ட குணநலன்களின் ஆசீர்வாதங்களை நாம் காண்கிறோம். தேவனுடைய சத்தியம் நமக்கு எத்தகைய சிறப்பான ஒழுங்குமுறையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இது மீண்டும் ஒருமுறை எவ்வளவு நன்றாய் நமக்குக் காண்பிக்கிறது!
"இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் இரக்கம் பெறுவார்கள்." சுயநீதியில் மேன்மைபாராட்டுகிறவர்களால் இந்த வேத வாக்கியம் எவ்வளவு மோசமாகத் திரிக்கப்பட்டுள்ளது! கிரியைகளினால் உண்டாகும் இரட்சிப்பைக் குறித்து வேதாகமம் போதிக்கிறதென்று வற்புறுத்துகிறவர்கள், தங்களுடைய அழிவுக்கேதுவான தவறான கொள்கைக்கு இந்த வேத வாக்கியத்தையே ஆதாரமாய்ப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இது அவர்களுடைய நோக்கத்திற்குச் சிறிதும் துணைபோகாது. நம்முடைய கர்த்தரின் நோக்கமானது, பாவியானவன் தேவனிடமிருந்து இரக்கத்தைப் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதல்ல; மாறாக, தம்முடைய உண்மையான சீடர்களின் குணநலன்களை விவரிப்பதே ஆகும். இரக்கம் பாராட்டுதல் என்பது இந்த நற்குணத்தின் முதன்மையான ஒரு பண்பாகும். நம்முடைய கர்த்தருடைய உபதேசத்தின்படி, தேவனுடைய உன்னத கிருபையை அனுபவிப்பதோடு பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டுள்ள அந்தப் பரிசுத்த குணத்தின் இன்றியமையாத அம்சமே இந்த இரக்கமாகும். எனவே, ரோமன் கத்தோலிக்க சபையின் தவறான போதனைகளுக்குச் சாதகமாக இந்த வசனத்தில் எதுவுமே இல்லை.
மத்தேயு 5 ஆம் அதிகாரத்தில், இந்தப் பாக்கியம் இடம்பெற்றுள்ள சூழல் இதை விளக்குவதற்கான மற்றொரு திறவுகோலாயிருக்கிறது. முதல் நான்கு பாக்கியங்களும் பரிசுத்த ஆவியானவரால் உயிர்ப்பிக்கப்பட்ட ஒருவனுடைய இருதயத்தில் நிகழும் ஆவிக்குரிய அடிப்படைப் பயிற்சிகளை விவரிக்கின்றன. முந்தின வசனத்தில், ஒரு ஆத்துமா கிறிஸ்துவின்மேல் பசிதாகமாயிருப்பதையும், பின்னர் அவரால் நிரப்பப்படுவதையும் நாம் காண்கிறோம். இவ்வாறு நிரப்பப்படும்போது ஏற்படுகிற முதல் விளைவுகளையும் அதற்கான சான்றுகளையும் இங்கு நாம் காண்கிறோம். கர்த்தரின் இரக்கத்தைப் பெற்றுக்கொண்ட, இரட்சிக்கப்பட்ட பாவியாகிய ஒருவன் இப்பொழுது இரக்கம் பாராட்டுகின்றான். அவருடைய இரக்கத்தைப் பெறுவதற்குத் தகுதியடையும்படி நாம் இரக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் கோருவதில்லை; அப்படி இருந்தால் அது தேவ கிருபையின் முழுத் திட்டத்தையே கவிழ்த்துப்போடுவதாகிவிடும்! மாறாக, அவருடைய அதிசயமான இரக்கத்தைப் பெற்று மகிழ்கிற நான், மற்றவர்கள்பால் இரங்கி செயல்படாமல் இருக்க முடியாது.
இரக்கம் பாராட்டுதல் என்றால் என்ன? அது சக மனிதர்களிடமும், சக கிறிஸ்தவர்களிடமும் காண்பிக்கும் கிருபையான மனப்பான்மையாகும். அது மற்றவர்களுடைய துயரங்களைக் கண்டு உருகுகிற அன்பும் அறமுமாகும். அது சிறுமைப்படுகிற மக்களின் பாடுகளை மனவுருக்கத்தோடு நோக்கும் ஓர் ஆவியாகும். குற்றம் செய்தவனிடம் கடுமை காட்டாமல் கிருபையாக நடந்துகொள்வதும், பழிவாங்கும் எண்ணத்தை வெறுப்பதுமே அதுவாகும். அது மன்னிக்கிற ஆவி; பதிலுக்குப் பதில் செய்யாத ஆவி. தன்னுடைய நியாயத்தை நிலைநாட்ட முற்படுகிற எல்லா முயற்சிகளையும் கைவிட்டு, தீமைக்குத் தீமை செய்யாமல் தீமைக்கு நன்மையும், பகைமைக்கு அன்பும் செலுத்தும் ஆவியாகும். இதுவே இரக்கம் பாராட்டுதல். மன்னிக்கப்படும்போது இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் ஆத்துமா, இரக்கத்தின் எழிலை உணர்ந்துகொள்கிறது; மேலும், தனக்குக் காண்பிக்கப்பட்ட அதே கிருபையைத் தனக்குத் தீமை செய்தவர்களிடமும் காண்பிக்கும்படி பேரார்வங்கொள்கிறது (Dr. A. T. Pierson).
இப்படி இரக்கம் பாராட்டுகிற சுபாவத்தின் ஊற்றுக்கண்ணை, வீழ்ச்சியுற்ற நம்முடைய மானிட சுபாவத்தின் உடைமையாகக் கருத முடியாது. கிறிஸ்தவர்கள் அல்லாத வேறு சில மனிதர்களிடமும் மற்றவர்கள் படும் பாடுகளைக் கண்டு பரிதாபப்படுகிற, தங்களுக்குத் தீங்கு செய்தவர்களை மன்னிக்கத் தயாராக இருக்கிற இரக்கச் சிந்தையை நாம் காண முடிவது உண்மைதான். மனிதப் பார்வையிலிருந்து நோக்கும்போது இது பாராட்டுதற்குரிய ஒன்றுதான் என்றாலும், கிறிஸ்து இங்கே எந்த இரக்கத்தின் மீது தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறாரோ, அதற்கு இது மிகவும் குறைவுடையதேயாகும். மாம்சத்தினால் உண்டாகும் இந்த அன்பிற்கு எவ்வித ஆவிக்குரிய மதிப்பும் இல்லை; ஏனெனில், அதனுடைய செயல்பாடுகள் வேதாகமத்தினால் நெறிப்படுத்தப்படுவதோ அல்லது தெய்வீக அதிகாரத்தின்படி செயல்படுவதோ இல்லை. ஐந்தாவது பாக்கியம் கூறும் இந்த இரக்கம் பாராட்டுதல் என்பது, தேவனுடைய இரக்கத்தினால் ஆட்கொள்ளப்பட்டு, அந்த இரக்கத்தின் மீது அன்புகூரும் ஒரு இருதயத்திலிருந்து தன்னிச்சையாகப் புறப்பட்டு வரும் ஒரு நீரூற்றாகும்.
இந்தப் பகுதியிலுள்ள இரக்கம் என்பது, தேவனுடைய பிள்ளைக்குள் பரிசுத்த ஆவியானவரால் பதிக்கப்பட்ட புதிய சுபாவத்தின் விளைவாகும். எவ்வகையிலும் தகுதியற்ற, நம்மைப் போன்ற துர்ப்பாக்கியவான்களிடத்தில் தேவன் பாராட்டுகிற கிருபை, பரிதாபம் மற்றும் நீடிய பொறுமை ஆகிய அவருடைய அதிசயமான குணங்களைத் தியானிக்கும்பொழுதுதான், இந்த இரக்கம் நம்முள் செயல்படத் தொடங்கும். என்மேலுள்ள தேவனுடைய இறையாண்மைமிக்க இரக்கத்தை நான் எவ்வளவு அதிகமாய்த் தியானிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் வாயிலாக அவியாத அக்கினியினின்றும் நான் பெற்றுக்கொண்ட விடுதலையை நினைவுகூருவேன். தேவ கிருபைக்கு நான் எவ்வளவு அதிகமாய்க் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை உணரும்பொழுது, எனக்குத் தீமை செய்து, என்னைப் பகைத்து வெறுக்கிறவர்கள் மீதும் நான் அவ்வளவு அதிகமாக இரக்கம் காட்டுவேன்.
புதிதாய்ப் பிறக்கும்போது ஒருவன் பெற்றுக்கொள்கிற ஆவிக்குரிய சுபாவத்தின் பண்பு நலன்களில் ஒன்று இரக்கம் பாராட்டுதலாகும். தேவனுடைய பிள்ளையிடம் காணப்படும் இந்த இரக்கம், அவனுடைய பரம பிதாவிடமுள்ள அபரிமிதமான இரக்கத்தின் பிரதிபலிப்பேயாகும். இரக்கம் பாராட்டுதல் என்பது நம்முள் வாசமாயிருக்கிற இரக்கமுள்ள கிறிஸ்துவினாலுண்டாகும் இயல்பானதும் அவசியமானதுமான விளைவுகளில் ஒன்றாயிருக்கிறது. இது எப்பொழுதும் வெளிப்படாமல் போகலாம்; சில வேளைகளில் மாம்ச இச்சைகளினால் இது தடைசெய்யப்படலாம் அல்லது அமுக்கப்படலாம். ஆயினும், ஒரு கிறிஸ்தவனுடைய பொதுவான குணநலனையும் அவனுடைய வாழ்க்கையின் முக்கியப் போக்கையும் கருத்தில் கொண்டு நோக்கும்போது, இரக்கம் பாராட்டுதல் என்பது புதிய மனிதனின் மறுக்கமுடியாத ஒரு அடையாளம் என்பது தெளிவாகும்.
"துன்மார்க்கனோ கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக் கொடுக்கிறான்" (சங் 37:21). தன்னுடைய மருமகனால் தீமை செய்யப்பட்டபோதிலும், அவனைப் பின்தொடர்ந்து சென்று லோத்தையும் அவனுடைய உடைமைகளையும் விடுவித்துக்கொண்டு வந்தது ஆபிரகாமின் இரக்கமேயாகும் (ஆதி 14:1-16). யோசேப்பு தன்னுடைய சகோதரர்களால் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்டபோதிலும், அவர்களைத் தாராளமாய் மன்னிக்கும்படி செய்தது யோசேப்பிடமிருந்த இரக்கமேயாகும் (ஆதி 50:15-21). மீரியாம் தனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, கர்த்தரால் குஷ்டரோகத்தினால் வாதிக்கப்பட்டபொழுது, "என் தேவனே, அவளைக் குணமாக்கும்" என்று மோசே கெஞ்சி மன்றாடியது அவனிடமிருந்த இரக்கமேயாகும் (எண் 12:13). கொடுங்கோலனாகிய சவுல் தன் கையில் அகப்பட்டபோது பகைவனாகிய அவனுடைய உயிரைத் தப்புவித்தது தாவீதின் இரக்கமேயாகும் (1 சாமு 24:1-22; 26:1-25). ஆனால் இதற்கு முற்றிலும் நேர்மாறாக, மிகவும் துக்ககரமான விதத்தில் யூதாசைக் குறித்து, "அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினான்" (சங் 109:16) என்று சொல்லப்படுகிறது.
ரோமர் 12:8 ஆம் வசனத்தில், அப்போஸ்தலனாகிய பவுல், இரக்கம் எத்தகைய ஆவியுடன் செய்யப்பட வேண்டும் என்பதைக் குறித்த ஒரு முக்கிய அறிவுரையை நமக்கு வழங்குகிறார்: "இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்". இது ஏழைச் சகோதரர்களை ஆதரிக்கும் வகையில் நாம் வழங்கும் பண உதவியை நேரடியாகக் குறித்தாலும், அல்லற்படும் மக்களிடம் காண்பிக்கப்படும் எல்லா வகையான காருணியச் செயல்களுக்கும் இந்த அன்பின் கொள்கை பொருந்தும். இரக்கம் என்பது வெறும் கடமைக்காக மட்டுமின்றி, மகிழ்ச்சியாகவும் செய்யப்படுகிறது என்பதை வெளிப்படுத்த அது உற்சாகத்துடன் செய்யப்பட வேண்டும். இது உதவியைப் பெற்றுக்கொள்ளும் நபரின் உணர்வுகளைப் பாதுகாக்கிறது; துன்பப்படுகிறவர்களின் துயரத்தை ஆற்றுகிறது. இந்த உற்சாகம் என்ற குணமே செய்யப்படும் உதவிக்கு மிகுந்த மதிப்பளிக்கிறது. இதற்கான கிரேக்கச் சொல்லானது, இரக்கஞ்செய்கிறவனுடைய மகிழ்ச்சியான ஆர்வத்தையும், அவனது வருகையை ஒரு சூரியக் கதிரைப்போல ஆக்கி, துயரப்படுகிறவர்களின் இருதயத்தை வெப்பமூட்டும் இன்முகத்தையும் வெளிப்படுத்தும் ஒரு எழில்மிகு சொல்லாயிருக்கிறது. "உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" (2 கொரி 9:7) என்று வேதாகமம் நமக்கு அறிவிக்கிறபடியால், அவருடைய அறிவுரைகளுக்கு நாம் எத்தகைய ஆவியோடு செவிகொடுக்கிறோம் என்பதைக் கர்த்தர் கவனிப்பார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.
"அவர்கள் இரக்கம் பெறுவார்கள்." இம்மண்ணுலகில் வாழ்கிற நம்முடைய வாழ்க்கையின் மீது தேவன் தாமே தம்முடைய அரசாங்கத்தில் நியமித்துள்ள ஒரு கொள்கையை அல்லது பிரமாணத்தை இந்த வார்த்தைகள் விவரிக்கின்றன. "மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்" (கலா 6:7) என்னும் நன்கு அறியப்பட்ட வேத வாக்கியம் இதனைச் சுருங்கச் சொல்கிறது. மற்றவர்களிடத்தில் இரக்கம் பாராட்டுகிற கிறிஸ்தவன், தன் சக மனிதர்களிடமிருந்து இரக்கத்தைப் பெறுவான்; ஏனெனில், "நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்" (மத் 7:2). ஆகையால்தான் "நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்" (நீதி 21:21) என்று எழுதப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுகிறவன் அதனாலேயே தனிப்பட்ட நன்மையடைகிறான்: "தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்" (நீதி 11:17a). இரக்கம் பாராட்டுவதிலும் பரிதாபம் காட்டுவதிலும் உண்டாகும் ஒரு உள்மன நிறைவோடு, சுயநலவாதி அடையும் எவ்வித உயர்ந்த சந்தோஷமும் ஒப்பிடத்தக்கதன்று. "தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்" (நீதி 14:21b). இரக்கம் பாராட்டுதல் என்பது தேவனுக்கே மனநிறைவைத் தரும் ஒரு ஆதாரமாக இருக்கிறது: "அவர் கிருபைசெய்ய விரும்புகிறார்" (மீகா 7:18). அப்படியென்றால், நமக்கும் அது அவ்வாறே இருக்க வேண்டும்.
"அவர்கள் இரக்கம் பெறுவார்கள்." இரக்கம் பாராட்டுகிற கிறிஸ்தவன், இந்தக் கிருபையின் வாயிலாகத் தன் சொந்த ஆத்துமா அடையும் சந்தோஷத்தினால் நன்மையடைவதோடு மட்டுமன்றி, கர்த்தரும் தம்முடைய ஆளுகைக்குட்பட்ட பராமரிப்பின் மூலம் அவனுடைய இரக்கத்தின் பலனை அவனோடு வாழும் சக மனிதர்களின் கரங்களினாலேயே அவனுக்குத் திரும்பக் கிடைக்கச் செய்வார்; அதுமட்டுமல்ல, அந்தக் கிறிஸ்தவன் தேவனிடமிருந்தும் இரக்கத்தைப் பெற்றுக்கொள்வான். "தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவர்" (சங் 18:25) என்று தாவீது இந்த உண்மையை அறிவிக்கிறான். மறுபுறம், "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னிக்கமாட்டார்" (மத் 6:15) என்று இரட்சகர் தம்முடைய சீடர்களுக்குக் கண்டித்துணர்த்துகிறார்.
"அவர்கள் இரக்கம் பெறுவார்கள்." முந்தைய பாக்கியங்களோடு இணைந்து வரும் வாக்குத்தத்தங்களைப் போலவே, இந்த வாக்குத்தத்தமும் இதனுடைய இறுதி நிறைவேறுதலுக்காக எதிர்காலத்தை நோக்கியிருக்கிறது. 2 தீமோத்தேயு 1:16, 18 ஆகிய வசனங்களில், "ஓநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங்கட்டளையிடுவாராக... அந்த நாளிலே அவன் இரக்கத்தைக் கண்டடையும்படிக்குக் கர்த்தர் அவனுக்கு அனுக்கிரகஞ்செய்வாராக" என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியிருப்பதை நாம் காண்கிறோம். யூதா 21 ஆம் வசனத்திலும், "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள்" என்று பரிசுத்தவான்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்; இது மகிமையுள்ள கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது, அவரால் மீட்கப்பட்ட சொந்த மக்களாக நம்மை அவர் இறுதியாக ஏற்றுக்கொள்வதையே குறிக்கிறது.
"நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்" (மத்தேயு 5:6).
தேவனுடைய ஆவியானவரால் விழிப்புணர்வடைந்த ஒருவனுடைய உள்ளத்தில் நடைபெறும் செயல்பாடுகளை முதல் மூன்று பாக்கியங்களிலும் காணுமாறு நாம் அழைக்கப்படுகிறோம். முதலாவதாக, ஒரு தேவையை உணரும் நிலை; அதாவது என்னுடைய ஒன்றுமில்லாமையையும் வெறுமையையும் உணரும் நிலை. இரண்டாவதாக, என்னை நானே நியாயந்தீர்த்தல்; என் குற்றத்தை உணர்ந்து, என் அழிவான நிலையைக் குறித்துத் துக்கப்படுதல். மூன்றாவதாக, தேவனுக்கு முன்பாக என்னை நானே நீதிமானாக்கிக்கொள்ளும் முயற்சியைக் கைவிடுதல்; என் சுய புண்ணியங்கள் மீதான எல்லா நம்பிக்கைகளையும் துறந்து, தேவ சமுகத்தில் புழுதியில் என் இடத்தைப் பிடித்துக் கொள்ளுதல். இதோ இந்த நான்காம் பாக்கியத்தில், ஆத்துமாவின் கண்கள் ஒரு சிறப்பான காரணத்திற்காக சுயத்தை விட்டு தேவனிடமாகத் திரும்புகின்றன: என்னிடம் இல்லை என்று எனக்குத் தெரிந்த, ஆனால் எனக்கு அவசரமாகத் தேவைப்படுகிற ஒரு நீதியைக் குறித்த ஏக்கம் அங்கு உண்டாகிறது.
நமது தற்போதைய வேதப்பகுதியில் உள்ள 'நீதி' என்ற வார்த்தையின் துல்லியமான பொருளைக் குறித்து தேவையற்ற பல விவாதங்கள் எழுந்துள்ளன. இப்பதத்தின் மெய்யான பொருளை அறிந்துகொள்ள மிகச் சிறந்த வழி, பழைய ஏற்பாட்டில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள வேதவாக்கியங்களுக்குத் திரும்பிச் செல்வதும், பின்னர் புதிய ஏற்பாட்டு நிருபங்கள் அளிக்கும் பிரகாசமான ஒளியை அவற்றின்மீது வீசச் செய்வதுமே ஆகும். "வானங்களே, உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப் பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத் தந்து, நீதியுங்கூட விளையக்கடவது; கர்த்தராகிய நான் இவைகளைச் சிருஷ்டிக்கிறேன்" (ஏசாயா 45:8). இவ்வசனத்தின் முற்பகுதி, பூமிக்குக் கிறிஸ்துவின் வருகையை உருவகமாக விவரிக்கிறது; பிற்பகுதியோ, "நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக அவர் எழுப்பப்பட்ட" (ரோமர் 4:25) அவருடைய உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது. "முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள். என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்பு தாமதிப்பதில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்" (ஏசாயா 46:12-13). "என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்" (ஏசாயா 51:5). "கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது" (ஏசாயா 56:1). "கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழ்கிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; ... அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்" (ஏசாயா 61:10a). தேவனுடைய நீதியும், தேவனுடைய இரட்சிப்பும் ஒத்த பொருளுடையவை என்பதை இந்தப் பகுதிகள் தெளிவுபடுத்துகின்றன.
மேற்காணும் வேதவாக்கியங்கள், சுவிசேஷம் முழுமையாக விளக்கப்பட்டுள்ள ரோமருக்கு எழுதிய பவுலின் நிருபத்தில் விரித்துரைக்கப்படுகின்றன. ரோமர் 1:16, 17a-ல் பவுல் கூறுகிறார்: "கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது". ரோமர் 3:22-24 வசனங்களில் நாம் வாசிக்கிறோம்: "அது இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவருக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமேயில்லை. எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்". ரோமர் 5:19-ல் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பிரகடனம் செய்யப்பட்டுள்ளது: "அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்." ரோமர் 10:4-ல், "விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்" என்று கற்றுக்கொள்கிறோம்.
பாவிக்கு நீதி இல்லை, ஏனென்றால் "நீதிமான் ஒருவனாகிலும் இல்லை" (ரோமர் 3:10). ஆகையால், தேவன் தம்முடைய மக்கள் ஒவ்வொருவருக்காகவும் பரிபூரணமான ஒரு நீதியைக் கிறிஸ்துவுக்குள் வழங்கியுள்ளார். நமக்கு விரோதமாயிருந்த தேவனுடைய பரிசுத்த நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் திருப்திப்படுத்தும் இந்த நீதியானது, நம்முடைய பதிலாளும் பிணையாளியுமானவரால் (Substitute and Surety) நிறைவேற்றப்பட்டது. இந்த நீதியானது இப்போது விசுவாசிக்கும் பாவிக்கு எண்ணப்படுகிறது (அதாவது, அவனது கணக்கில் சட்டப்பூர்வமாக வரவு வைக்கப்படுகிறது). தேவனுடைய மக்களின் பாவங்கள் அனைத்தும் எவ்வாறு கிறிஸ்துவுக்கு மாற்றப்பட்டதோ, அப்படியே அவருடைய நீதியும் அவர்கள்மேல் வைக்கப்படுகிறது (2 கொரிந்தியர் 5:21). தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறதும், கிறிஸ்து இயேசுவின் மீதான விசுவாசத்தால் நமக்கு உரிமையானதுமான இந்தப் பரிபூரண நீதியைக் குறித்த வேதாகமப் போதனையின் சுருக்கமே இந்தச் சில வார்த்தைகள்.
"நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்." பசியும் தாகமும் என்பது ஆத்துமா தீவிரமாக உணரும் ஒரு படுமுனைப்பான வாஞ்சையை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய பரிசுத்தமான கோரிக்கைகளை இருதயத்திற்கு முன்பாகக் கொண்டு வருகிறார். ஒருபோதும் தளர்த்த முடியாத தேவனுடைய பரிபூரணமான அளவுகோலை அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார். "வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்" (மத்தேயு 5:20) என்பதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார். இரண்டாவதாக, தன் கொடிய வறுமையை உணர்ந்ததும், தேவனுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற தனக்குத் திராணியில்லை என்பதை உணர்ந்ததுமான நடுங்கும் ஆத்துமா, தனக்குள் எந்த உதவியும் இல்லை என்பதைக் காண்கிறது. இந்த வேதனையான கண்டடைதல் அவனைத் துக்கிக்கவும் பெருமூச்சு விடவும் செய்கிறது. நீங்கள் அப்படிச் செய்திருக்கிறீர்களா? மூன்றாவதாக, பரிசுத்த ஆவியானவர் இருதயத்தில் ஒரு ஆழமான "பசியையும் தாகத்தையும்" உருவாக்குகிறார்; இது, உணர்த்தப்பட்ட பாவியை தனக்குப் புறம்பே ஒரு விடுதலையையும், நிறைவையும் தேடச் செய்கிறது. விசுவாசிக்கும் கண்கள் "நமது நீதியாயிருக்கிற கர்த்தராகிய" (எரேமியா 23:6) கிறிஸ்துவை நோக்கித் திருப்பப்படுகின்றன.
முந்தைய பாக்கியங்களைப் போலவே, இந்த நான்காவது பாக்கியமும் இருநிலையான அனுபவத்தை விவரிக்கிறது. பாவி விசுவாசத்தால் கிறிஸ்துவிடம் திரும்புவதற்கு முன்பு ஏற்படும் ஆரம்பகால பசி தாகத்தை இது வெளிப்படையாகக் குறிக்கிறது. அதேவேளையில், இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு பாவியின் இருதயத்திலும் அவனது மரண நாள் வரை தொடரும் இடையறாத வாஞ்சையையும் இது குறிக்கிறது. இந்த கிருபையின் செயல்பாடுகள் வெவ்வேறு காலகட்டங்களில் மீண்டும் மீண்டும் உணரப்படுகின்றன. கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட வேண்டும் என்று வாஞ்சித்தவன், இப்போது அவரைப் போலவே மாற வேண்டும் என்று ஏங்குகிறான். பரந்த நோக்கில் பார்த்தால், இந்த பசியும் தாகமும் புதிதாக்கப்பட்ட இருதயம் தேவனை நோக்கி மூச்சுவாங்கித் தவிப்பதையும் (சங்கீதம் 42:1), அவரோடு நெருங்கி நடப்பதற்கான ஏக்கத்தையும், அவருடைய குமாரனுடைய சாயலுக்குப் பரிபூரணமாக ஒத்திருக்க வேண்டும் என்ற வாஞ்சையையும் குறிக்கிறது. நம்மைப் பலப்படுத்தவும், தாங்கவும், திருப்திப்படுத்தவும் கூடிய தேவ ஆசீர்வாதங்களுக்கான புதிய சுபாவத்தின் பேரார்வத்தை இது சொல்லுகிறது.
நமது வேதப்பகுதி ஒரு முரண்பாடு போன்ற உண்மையை (paradox) முன்வைக்கிறது; இது எந்த மாம்ச சிந்தையாலும் கற்பனை செய்யப்பட்டதல்ல என்பது தெளிவு. ஜீவ அப்பமாயிருக்கிறவரும், தமக்குள் சகல பரிபூரணமும் வாசமாயிருக்கப் பெற்றவருமானவரோடு உயிருள்ள ஐக்கியத்தில் இணைக்கப்பட்ட ஒருவன் இன்னும் பசியோடும் தாகத்தோடும் இருக்க முடியுமா? ஆம், புதிதாக்கப்பட்ட இருதயத்தின் அனுபவம் அதுவே. வினைச்சொல்லின் காலத்தை (tense) கவனமாகக் கவனியுங்கள்: அது "பசிதாகமாய் இருந்தவர்கள் பாக்கியவான்கள்" என்று சொல்லவில்லை, "பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்" (நிகழ்காலம்) என்றே சொல்கிறது. அன்பான வாசகரே, உங்களுக்கு அந்தப் பசி தாகம் இருக்கிறதா? அல்லது நீங்கள் அடைந்தவற்றைக் குறித்தும் உங்கள் தற்போதைய நிலையைக் குறித்தும் திருப்தியாக இருக்கிறீர்களா? நீதியின்மேல் பசி தாகம் கொள்வது என்பது எப்போதும் தேவனுடைய உண்மையான பரிசுத்தவான்களின் அனுபவமாகவே இருந்திருக்கிறது (பிலிப்பியர் 3:8-14).
"அவர்கள் திருப்தியடைவார்கள்." நமது வேதப்பகுதியின் முதல் பாதியைப் போலவே, இதுவும் ஆரம்பம் மற்றும் தொடர்ச்சி என இருநிலை நிறைவேற்றத்தைக் கொண்டுள்ளது. தேவன் ஆத்துமாவில் பசியையும் தாகத்தையும் உருவாக்கும்போது, அதை அவர் திருப்திப்படுத்துவதற்காகவே செய்கிறார். ஏழைப் பாவிக்குக் கிறிஸ்துவின் மீதான அவசியத்தை உணரச் செய்வது, அவனை கிறிஸ்துவிடம் இழுத்து, பரிசுத்த தேவனுக்கு முன்பாகத் தன் ஒரே நீதியாக அவரைத் தழுவிக்கொள்ளச் செய்வதற்காகவே. கிறிஸ்துவே தான் புதிதாகக் கண்டடைந்த நீதி என்று அறிக்கை செய்வதிலும், அவரை மட்டுமே மேன்மை பாராட்டுவதிலும் அவன் பெருமகிழ்ச்சியடைகிறான் (1 கொரிந்தியர் 1:30, 31). தேவன் இப்போது "பரிசுத்தவான்" என்று அழைக்கும் அத்தகைய நபர் (1 கொரிந்தியர் 1:2; 2 கொரிந்தியர் 1:1; எபேசியர் 1:1; பிலிப்பியர் 1:1), ஒரு தொடர்ச்சியான நிறைவை அனுபவிக்க வேண்டும்: துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபானத்தால் அல்ல, ஆவியானவராலே நிறையப்பட வேண்டும் (எபேசியர் 5:18). எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தால் அவன் நிரப்பப்பட வேண்டும் (பிலிப்பியர் 4:7).
கிறிஸ்துவின் நீதியின்மேல் நம்பிக்கை வைக்கும் நாம், ஒரு நாள் எந்தத் துக்கத்தின் கலப்புமற்ற தெய்வீக ஆசீர்வாதத்தால் நிரப்பப்படுவோம்; நமக்காகவும் நமக்குள்ளும் தம்முடைய இரட்சிப்பின் கிரியையின் காணக்கூடிய கனிகளாக, அன்பிற்கும் கீழ்ப்படிதலுக்கும் உரிய எல்லாச் செயல்களையும் நமக்குள் நடப்பித்தவரை (பிலிப்பியர் 2:12, 13) நோக்கித் துதியினாலும் ஸ்தோத்திரத்தினாலும் நிரப்பப்படுவோம். இவ்வுலகத்தில், "அவர் பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்புகிறார்" (லூக்கா 1:53). கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு (சங்கீதம் 34:10), இவ்வுலகம் கொடுக்கவும் முடியாத, தடுத்து நிறுத்தவும் முடியாத நன்மைகளை அவர் அருளுகிறார். தம்முடைய மேய்ச்சலின் ஆடுகளாகிய நமக்கு அவர் நன்மையையும் கிருபையையும் அருளுகிறார், நமது பாத்திரம் நிரம்பி வழிகிறது (சங்கீதம் 23:5, 6). ஆயினும், நாம் தற்போது அனுபவிப்பவை அனைத்தும், "தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளின்" (1 கொரிந்தியர் 2:9) ஒரு சிறிய முன்னுருசியே. நித்தியத்தில், நாம் பரிபூரண பரிசுத்தத்தால் நிரப்பப்படுவோம், ஏனென்றால் "அவருக்கு ஒப்பாயிருப்போம்" (1 யோவான் 3:2). அப்போது நாம் பாவத்தை என்றென்றைக்குமாக ஒழித்துவிடுவோம். அப்போது நமக்கு "இனிப் பசியுமிராது, இனித் தாகமுமிராது".
“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்” (மத்தேயு 5:5).
சாந்தம் என்னும் சொல்லின் துல்லியமான பொருள் குறித்துப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதனைச் சிலர் பொறுமை என்றும், அமைதியடங்கும் ஆவி என்றும் பொருள்கொள்ளுகின்றனர்; வேறு சிலர், தன்னலமின்மையும், தன்னைத் தானே மறுதலிக்கும் ஆவியும் என்பர்; இன்னும் சிலர், மற்றவர்கள் செய்யும் இன்னல்களை அமைதியாகச் சகித்துக்கொண்டு பதிலுக்குப் பதில் செய்யாதிருக்கிற மென்மையான ஆவியே சாந்தமாகும் என்பர். இந்த ஒவ்வொரு விளக்கத்திலும் ஓரளவு உண்மையிருக்கவே செய்கிறது என்பதில் ஐயமில்லை. ஆயினும், இந்த மூன்றாவது பாக்கியத்தின் வரிசைக்கிரமத்தை அவர்கள் கவனிக்கத் தவறுவதால், இவ்விளக்கங்கள் போதுமான ஆழம் கொண்டிருக்கவில்லை என்றே ஆசிரியராகிய எனக்குத் தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில், சாந்தம் என்பதை நாம் 'மனத்தாழ்மை' என்றே வரையறுப்போம். "சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்," அதாவது மனத்தாழ்மையுள்ளவர்கள், பணிவுள்ளவர்கள் பாக்கியவான்கள். இப்பொருள் விளக்கத்திற்கு ஆதாரமாக மற்ற வேத வாக்கியங்கள் ஒப்புதலாக இருக்கின்றனவா என்று நோக்குவோம்.
வேதாகமத்தில் சாந்தம் என்னும் சொல்லானது முதன்முறையாக எண்ணாகமம் 12:3 வசனத்தில்தான் காணப்படுகிறது. இங்கே, முந்தைய வசனங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள காரியங்களுக்கு முற்றிலும் மாறான ஒரு முரண்பாட்டைத் தேவனுடைய ஆவியானவர் சுட்டிக்காட்டுகிறார். அங்கே மீரியாமும் ஆரோனும் மோசேக்கு விரோதமாய்ப் பேசி, "கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ? எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ?" என்று சொன்னதை வாசிக்கிறோம். இத்தகைய வார்த்தைகள் அவர்களுடைய இருதயத்தின் பெருமையையும், மேட்டிமையையும், சுயநலத்தையும், கனத்திற்கான தாகத்தையும் வெளிப்படுத்தின. இதற்கு முற்றிலும் நேர்மாறாக, "மோசேயானவன் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்" என்று நாம் வாசிக்கிறோம். அதாவது, தன் சகோதரன் மற்றும் சகோதரியின் ஆவிக்கு முற்றிலும் நேரெதிரான ஓர் ஆவியினால் மோசே வழிநடத்தப்பட்டான் என்றுதானே நாம் பொருள்கொள்ளவேண்டும். மோசே மனத்தாழ்மையும், பணிவும், தன்னைத்தானே வெறுக்கும் குணமும் கொண்டவனாயிருந்தான். இது நம்முடைய போதனைக்காகவும் பாராட்டுதலுக்காகவும் எபிரெயர் 11:24-26 வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகத்தின் கனங்களுக்கும் பூமிக்குரிய செல்வங்களுக்கும் புறமுதுகு காட்டி, அரண்மனை வாழ்வைவிட வனாந்திரப் பயணமே மேலானது என ஒரு பரதேசியின் வாழ்க்கையைத் தெரிந்துகொண்டான்.
யேகோவா தேவன் மீதியானில் மோசேக்கு முதன்முறையாகத் தரிசனமாகி, தம்முடைய ஜனங்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்லும்படி அவனுக்குக் கட்டளையிட்டபோதும், அவனுடைய மனத்தாழ்மையை நாம் மீண்டும் காண முடிகிறது. "பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம்?" (யாத். 3:11) என்றான். இந்த வார்த்தைகள் எத்தகைய மனத்தாழ்மையை வெளிப்படுத்துகின்றன! ஆம், மோசே மிகவும் சாந்தமுள்ளவன்.
மற்ற வேதவாக்கியங்களும் மேலே கூறப்பட்ட விளக்கத்தையே உறுதிப்படுத்துவதுடன், அதை அவசியமாக்கவும் செய்கின்றன. "சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்" (சங். 25:9). மனத்தாழ்மையும் பணிவுள்ள இருதயமும் கொண்டவர்களுக்கே தேவன் ஆலோசனையும் போதனையும் வழங்குவதாக வாக்குப்பண்ணியுள்ளார் என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன பொருள் இருக்கமுடியும்? "இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார்" (மத். 21:5). இங்கே சாந்தம் அல்லது மனத்தாழ்மையின் உருவடிவையே நாம் காண்கிறோம். "சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு" (கலா. 6:1). தவறிப்போன ஒரு சகோதரனைச் சீர்பொருந்தப்பண்ண தேவன் பயன்படுத்தும் ஒருவனிடம் மனத்தாழ்மையின் ஆவி கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை இது தெளிவாக உணர்த்துகிறதல்லவா?
"சாந்தமும் மனத்தாழ்மையுமாய்" இருக்கிற கிறிஸ்துவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தச் சொற்றொடரில் பின்னால் வரும் சொல், முன்னால் வரும் சொல்லுக்கு விளக்கமாக அமைகிறது. எபேசியர் 4:2-ல் "மனத்தாழ்மையும் சாந்தமும்" என இவை இரண்டும் மீண்டும் இணைந்து வருவதைக் கவனியுங்கள். இங்கே மத்தேயு 11:29-ல் உள்ள வரிசை முறை வேண்டுமென்றே மாற்றி எழுதப்பட்டுள்ளது. இவை இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கும் இணையான சொற்கள் (synonymous terms) என்பதையே இது காட்டுகிறது.
வேதாகமத்தில் சாந்தம் என்பது மனத்தாழ்மையையும் பணிவையும் குறிக்கிறது என்பதை இதுவரை நிலைநாட்ட முயன்றோம். இனி, சந்தர்ப்பச் சூழல்கள் இதனை எவ்வாறு மேலும் உறுதிப்படுத்துகின்றன என்பதையும், இத்தகைய சாந்தம் எப்படி வெளிப்படுகிறது என்பதையும் நோக்குவோம்.
பரிசுத்த ஆவியானவரின் கிருபையின் செயல் ஒருவருடைய ஆத்துமாவில் அனுபவபூர்வமாக உணர்த்தப்படும்போது, அது எப்படி ஒரு முறையான வளர்ச்சியைக் (orderly development) கொண்டுள்ளது என்பதையே நம்முடைய கர்த்தர் இந்தப் பாக்கியங்களில் விவரிக்கிறார் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். முதலாவதாக, 'ஆவியில் எளிமை' காணப்படுகிறது: அதாவது, என் சுய-போதாமையையும், நான் ஒன்றுமில்லாதவன் என்பதையும் உணரும் நிலை. அடுத்ததாக, 'துயரப்படுதல்' காணப்படுகிறது: அதாவது, என்னுடைய இழந்துபோன நிலையைக் குறித்தும், தேவனுக்கு விரோதமான என் பாவங்களின் கொடூரத்தைக் குறித்தும் துக்கப்படுவது. ஆவிக்குரிய அனுபவத்தின் வரிசைக்கிரமத்தில், இதைத் தொடர்ந்து வருவது 'ஆத்துமாவின் மனத்தாழ்மை' ஆகும். தேவ ஆவியானவர் ஒரு மனிதனுக்குள் கிரியை செய்து, அவனது தேவையையும் ஒன்றுமில்லாமையையும் உணரச் செய்யும்போது, அவன் தேவனுக்கு முன்பாகத் தூளிலும் சாம்பலிலும் தாழ்த்தப்படுகிறான்.
சுவிசேஷ ஊழியத்தில் தேவன் பயன்படுத்திய ஒருவராகப் பேசும்போது அப்போஸ்தலனாகிய பவுல், "எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்" (2 கொரி. 10:4-5) என்று கூறுகிறார். அப்போஸ்தலர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், மனிதனை ஆராய்ந்து, கண்டித்து உணர்த்தி, தாழ்மைப்படுத்தும் வேத சத்தியங்களேயாகும். இவை பரிசுத்த ஆவியானவரால் வல்லமையாய்ப் பயன்படுத்தப்படும்போது, அரண்களை—அதாவது பாவ மனிதர்கள் அடைக்கலம் புகும் வலுவான தப்பெண்ணங்களையும், சுயநீதியின் அரண்களையும்—நிர்மூலமாக்க வல்லமையுள்ளவைகளாக இருக்கின்றன. இதன் விளைவுகள் இன்றும் மாறாதவை: மறுபிறப்படையாத மாம்ச சிந்தையின் பகையும், புதிதாகப் பிறந்த சிந்தையின் எதிர்ப்பும், பெருமையான கற்பனைகளும் தர்க்கங்களும் இப்போது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியும்படி சிறைப்படுத்தப்படுகின்றன.
சுபாவத்தின்படி ஒவ்வொரு பாவியும் பரிசேயனைப் போலவே, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் தன்னை நீதிமானாக்கிக்கொள்ள விரும்புகிறான். சுபாவத்தின்படி நாமனைவரும், நம்முடைய அவமானத்தை மறைக்க நமக்காகவே ஒரு போர்வையை உருவாக்கிக்கொள்ளும் தன்மையை நம் ஆதிப் பெற்றோரிடமிருந்து சுதந்தரித்துள்ளோம். சுபாவத்தின்படி மனுக்குலத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும், தன் சொந்த உழைப்பின் பலனைக் கொண்டு தேவனிடம் அங்கீகாரம் பெற முயன்ற காயீனின் வழியிலேயே நடக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால், சுய தகுதிகளின் அடிப்படையில் தேவனுக்கு முன்பாக ஒரு நிலைப்பாட்டைப் பெற நாம் விரும்புகிறோம்; நமது நற்செயல்களால் இரட்சிப்பை விலைக்கு வாங்க எண்ணுகிறோம்; நமது சொந்தச் செயல்களால் பரலோகத்தை வென்றெடுக்கத் துடிக்கிறோம்.
ஆனால் தேவனுடைய இரட்சிப்பின் வழியோ, மாம்ச சிந்தைக்கு ஏற்றதாக இல்லாதபடிக்கு மிகவும் தாழ்மையை கோருவதாக இருக்கிறது; ஏனெனில் அது மேன்மைபாராட்டுவதற்கான அனைத்து முகாந்திரங்களையும் அகற்றிவிடுகிறது. எனவே, மறுபிறப்படையாத பெருமைமிக்க இருதயத்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மனிதன் தன் சொந்த இரட்சிப்பில் தன் கைவரிசையும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். அவனிடமிருந்து தேவன் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும், இரட்சிப்பு என்பது முழுக்க முழுக்க தெய்வீக இரக்கத்தின் செயல் என்றும், நித்திய ஜீவன் என்பது இலவசமாகப் பெற்றுக்கொள்ள வெறுங்கையோடு வருபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஈவு என்றும் சொல்லப்படும்போது, அது சுயநீதி கொண்ட மதவாதிக்கு இடறலாகவே இருக்கிறது.
ஆனால் ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கும், தங்கள் இழிவான மற்றும் நிர்ப்பந்தமான நிலையைக் குறித்துத் துயரப்படுகிறவர்களுக்கும் அது அப்படி இருப்பதில்லை. 'இரக்கம்' என்ற வார்த்தையே அவர்கள் செவிகளுக்கு இன்னிசையாக ஒலிக்கிறது. தேவனுடைய இலவச ஈவாகிய நித்திய ஜீவன், அவர்களுடைய வறுமையான நிலைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. நரகத்திற்குப் பாத்திரவான்களாகிய தங்களுக்குத் தேவன் அருளும் இறையாண்மையுள்ள தயவாகிய 'கிருபையே' தங்களுக்கு மிகவும் தேவையானது என்று அவர்கள் உணருகிறார்கள்! அத்தகைய மனிதன் இனி தன் கண்களில் தன்னை நீதிமானாக்கிக்கொள்ள எண்ணுவதில்லை; தேவனுடைய தயவுக்கு எதிராக அவன் கொண்டிருந்த இருமாப்பான ஆட்சேபனைகள் அனைத்தும் இப்போது மௌனமாக்கப்படுகின்றன. அவன் தன்னை ஒரு பிச்சைக்காரனாக ஏற்றுக்கொண்டு, தேவனுக்கு முன்பாகத் தூளில் தாழ்ப்புகழ்வதில் மகிழ்ச்சி கொள்கிறான். ஒரு காலத்தில், நாகமானைப் போல அவனும் தேவனுடைய ஊழியக்காரன் அறிவித்த தாழ்மைப்படுத்தும் நிபந்தனைகளை எதிர்த்துக் கலகம் செய்தான்; ஆனால் இப்போது, கடைசியில் நாகமானைப் போலவே அவனும் தன் பெருமையின் இரதத்தை விட்டு இறங்கி, கர்த்தருக்கு முன்பாகத் தூளில் தன் இடத்தைப் பிடித்துக்கொள்ளச் சந்தோஷப்படுகிறான். தேவனுடைய ஊழியக்காரனின் தாழ்மைப்படுத்தும் வார்த்தைக்கு நாகமான் கீழ்ப்படிந்தபோதுதான் அவனுடைய குஷ்டரோகம் குணமாக்கப்பட்டது. அதேபோல, ஒரு பாவி தன் தகுதியின்மையை ஒப்புக்கொள்ளும்போது, அவனுக்கு தெய்வீகத் தயவு காண்பிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவனே தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெறுகிறான்: "சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்."
ஏசாயாவின் மூலமாகத் தீர்க்கதரிசனமாகப் பேசும்போது இரட்சகர், "சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்" (ஏசா. 61:1) என்று கூறினார். மேலும், "கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்" (சங். 149:4) என்றும் எழுதப்பட்டுள்ளது.
தேவனுடைய இரட்சிப்பின் வழிக்குக் கீழ்ப்படிவதில் உள்ள ஆத்துமாவின் தாழ்மையே இந்த மூன்றாவது பாக்கியத்தின் முதன்மையான பயன்பாடாக இருந்தாலும், அது அதோடு மட்டுமே மட்டுப்படுத்தப்படக் கூடாது. சாந்தம் என்பது கிறிஸ்தவனுக்குள் உருவாக்கப்பட்டு வெளிப்படும் "ஆவியின் கனியின்" ஒரு உள்ளார்ந்த அம்சமுமாகும் (கலா. 5:22, 23). இது, சிட்சையினாலும் பாடுகளினாலும் மென்மைப்படுத்தப்பட்டு, தேவனுடைய சித்தத்திற்கு இனிமையாய்க் கீழ்ப்படியக் கற்றுக்கொண்ட ஒருவனிடம் காணப்படும் ஆவிக்குரிய குணமாகும். இந்தக் கிருபை ஒரு விசுவாசியிடம் செயல்படும்போது, நிந்தைகளையும் காயங்களையும் பொறுமையோடு சகித்துக்கொள்ளவும், பரிசுத்தவான்களில் மிகச் சிறியவரால் அறிவுறுத்தப்படவும் கடிந்துகொள்ளப்படவும் ஆயத்தமாயிருக்கவும், மற்றவர்களைத் தன்னைவிட மேன்மையானவர்களாக எண்ணவும் (பிலி. 2:3), தன்னிடம் உள்ள நன்மையான எல்லாவற்றிற்கும் தேவனுடைய இறையாண்மையுள்ள கிருபையே காரணம் என அறிக்கையிடவும் அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறது.
அதேவேளையில், மெய்யான சாந்தம் என்பது பெலவீனம் அல்ல. அப்போஸ்தலர் 16:35-37 வசனங்களில் இதற்கு ஒரு வலிமையான சான்று வழங்கப்பட்டுள்ளது. அப்போஸ்தலர்கள் அநியாயமாக அடிக்கப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டனர். மறுநாள் காலையில், அவர்களை விடுவிக்குமாறு அதிகாரிகள் கட்டளையிட்டனர்; ஆனால் பவுல் அவர்களுடைய சேவகர்களிடம், "அவர்களே வந்து எங்களை வெளியே அழைத்துப்போகட்டும்" என்றார். தேவன் அருளும் சாந்தம், தேவன் அருளும் உரிமைகளுக்காக எழுந்து நிற்க வல்லது. பிரதான ஆசாரியனின் சேவகர்களில் ஒருவன் நம் கர்த்தரை அறைந்தபோது, "நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய்?" (யோவா. 18:23) என்று அவர் பதிலளித்தார்.
"சாந்தமும் மனத்தாழ்மையுமாய்" இருந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடத்தில் மட்டுமே சாந்தத்தின் ஆவி பரிபூரணமாக வெளிப்பட்டது. அவருடைய மக்களிடத்திலோ இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆவி, மாம்சத்தின் எழுச்சிகளால் பல நேரங்களில் மங்கலாக்கப்பட்டு, ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கிறது. மோசேயைக் குறித்து, "அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினால், தன் உதடுகளினால் பதறிப் பேசினான்" (சங். 106:33) என்று சொல்லப்பட்டுள்ளது. எசேக்கியேல் தன்னைக் குறித்து, "நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்து போனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது" (எசே. 3:14) என்று கூறுகிறார். யோனாவைக் குறித்து, அவனுடைய அதிசயமான விடுதலைக்குப் பிறகு, "இது யோனாவுக்கு மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டான்" (யோனா 4:1) என்று வாசிக்கிறோம். சாந்தமுள்ள பர்னபாவும்கூட பவுலோடு கடுமையான வாக்குவாதத்தினால் பிரிந்து சென்றார் (அப். 15:37-39). இவையெல்லாம் நமக்கு எத்தகைய எச்சரிப்புகளாக இருக்கின்றன! கிறிஸ்துவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை எவ்வளவோ உள்ளன!
"சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்." நம்முடைய கர்த்தர் சங்கீதம் 37:11-ஐ மேற்கோள் காட்டி அதைப் பயன்படுத்துகிறார். இந்த வாக்குத்தத்தம் நேரடியான மற்றும் ஆவிக்குரிய ஆகிய இரண்டு பொருள்களையும் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது: "சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்." இம்மைக்குரிய நன்மையான காரியங்களை மிக அதிகமாய் அனுபவிப்பவர்கள் சாந்தகுணமுள்ளவர்களே. பேராசையிலிருந்தும், பொருளாசையிலிருந்தும் விடுதலையாக்கப்பட்டு, தங்களுக்கு உள்ளதைக் கொண்டு அவர்கள் மனநிறைவுடன் இருக்கிறார்கள். "அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப் பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது" (சங். 37:16). மனநிறைவு என்பது சாந்தமுள்ள ஆவியின் கனிகளில் ஒன்றாகும். பெருமையுள்ளவர்களும் அமைதியற்றவர்களும் பல ஏக்கர் நிலங்களைச் சொந்தமாகப் பெற்றிருந்தாலும், அவர்கள் "பூமியைச் சுதந்தரிப்பது" இல்லை. ஒரு துன்மார்க்கன் அரண்மனையில் அனுபவிப்பதை விட, எளிமையான ஒரு கிறிஸ்தவன் குடிசையில் அதிக மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். "சஞ்சலத்தோடுகூடிய அதிகப் பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்துடன்கூடிய கொஞ்சப் பொருளே உத்தமம்" (நீதி. 15:16).
"அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்." நாம் ஏற்கனவே கூறியது போல, இந்த மூன்றாவது பாக்கியம் சங்கீதம் 37:11-ன் மேற்கோளாகும். புதிய உடன்படிக்கையின் சத்தியத்தை வெளிப்படுத்த, கர்த்தராகிய இயேசு அனேகமாகப் பழைய ஏற்பாட்டு மொழியைப் பயன்படுத்தியிருக்கலாம். யோவான் 6:50-58-ல் உள்ள மாம்சமும் இரத்தமும், யோவான் 3:5-ல் உள்ள தண்ணீரும், மறுபடியும் பிறந்தவர்களுக்கு எப்படி ஓர் ஆவிக்குரிய பொருளைத் தருகிறதோ, அதேபோலவே இங்கேயும் பூமி அல்லது நிலம் என்ற வார்த்தையும் ஆவிக்குரிய பொருளைத் தருகிறது. எபிரெய மற்றும் கிரேக்க மொழிகளில் உள்ள, ஆங்கிலத்தில் earth அல்லது land என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள முதன்மையான சொற்களை, அதன் சூழலுக்கு ஏற்ப நேரடியாகவோ அல்லது ஆவிக்குரிய விதமாகவோ மொழிபெயர்க்கலாம்.
அவருடைய வார்த்தைகளை நேரடியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், "அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பார்கள்", அதாவது "வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமாகிய" கானானைச் சுதந்தரிப்பார்கள் என்று பொருளாகும். அவர் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசன மொழியில் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைக் குறித்துப் பேசுகிறார். மாம்சத்தின்படியான இஸ்ரவேலர்கள் (பழைய உடன்படிக்கையின் கீழான வெளிப்படையான தேவ மக்கள்), ஆவியின்படியான இஸ்ரவேலர்களுக்கு (புதிய உடன்படிக்கையின் கீழான தேவனுடைய ஆவிக்குரிய மக்கள்) ஒரு நிழலாக இருந்தனர்; முன்னவர்களுடைய [பூமிக்குரிய] சுதந்தரமாகிய கானான், பின்னவர்களின் சுதந்தரமாகிய பரலோக மற்றும் ஆவிக்குரிய முழுமையான ஆசீர்வாதங்களுக்கு ஒரு முன்னடையாளமாக இருக்கிறது. புதிய உடன்படிக்கையின் கீழ் "பூமியைச் சுதந்தரித்துக்கொள்வது" என்பது, தேவனுடைய மக்களுக்கு உரிய விசேஷித்த ஆசீர்வாதங்களை அனுபவிப்பதாகும்; இது உலகத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும், தேவனுடைய சுதந்தரராகவும், கிறிஸ்துவுக்கு உடன்சுதந்தரராகவும் (ரோமர் 8:17) மாறுவதாகும். இது "கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலுள்ள சகலவிதமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும்" ஆசீர்வதிக்கப்படுவதாகும் (எபே. 1:3). இஸ்ரவேலருக்குக் கானானில் கிடைத்த இளைப்பாறுதல் எந்த மெய்யான சமாதானத்திற்கும் இளைப்பாறுதலுக்கும் முன்னடையாளமாக இருந்ததோ, அந்த இளைப்பாறுதலை அனுபவிப்பதே பூமியைச் சுதந்தரிப்பதாகும் (டாக்டர் ஜான் பிரவுன்).
இறுதியாக, சாந்தகுணமுள்ளவர்கள் "நீதி வாசமாயிருக்கும் புதிய பூமியையும்" (2பேதுரு 3:13) சுதந்தரிப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
"துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்" (மத்தேயு 5:4).
பரிதாபகரமான மனித சுபாவத்திற்குத் துயரமானது அருவருப்பும் தொந்தரவு நிறைந்ததாகும். பாடு மற்றும் துக்கத்திலிருந்து நமது ஆவியானது இயல்பாகவே பின்வாங்குகிறது. சுபாவத்தின்படி நாம் சந்தோஷமும் மகிழ்ச்சியுமுடைய மக்களின் ஐக்கியத்தையே நாடுகிறோம். மறுபிறப்படையாதவர்களுக்கு நமது இந்த வேதப்பகுதி ஒரு முரண்பாடாகத் தோன்றுகிறது, ஆயினும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் செவிகளுக்கு இது இன்னிசையாகும். அவர்கள் "பாக்கியவான்கள்" (மகிழ்ச்சியானவர்கள்) என்றால், ஏன் "துயரப்படுகிறார்கள்"? அவர்கள் "துயரப்படுகிறார்கள்" என்றால், எப்படி "பாக்கியவான்களாக" இருக்க முடியும்? இந்த முரண்பாட்டிற்கான திறவுகோல் தேவனுடைய பிள்ளையிடம் மட்டுமே உள்ளது. இந்த வேதப்பகுதியை நாம் எவ்வளவு ஆழமாகத் சிந்திக்கிறோமோ, அவ்வளவாக "இந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை!" என்று வியந்துரைக்க நெருக்கப்படுகிறோம்.
'துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்' என்பது உலகத்தின் தர்க்கத்திற்கு முற்றிலும் முரண்படும் ஒரு பொன்மொழியாகும். எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் உடையவர்களையே உலகம் பாக்கியவான்களாகக் கருதுகிறது. ஆனால் கிறிஸ்துவோ, ஆவியில் எளிமையுள்ளவர்களையும் துயரப்படுகிறவர்களையுமே பாக்கியவான்கள் என்று அறிவிக்கிறார். இங்கு எல்லா வகையான துயரங்களும் குறிப்பிடப்படவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. "மரணத்தை உண்டாக்குகிற லௌகீக துக்கம்" ஒன்றும் உண்டு (2கொரிந்தியர் 7:10). கிறிஸ்து வாக்களிக்கும் ஆறுதலைப் பெறுவதற்கான துயரம் ஆவிக்குரிய துயரமாக மட்டுமே இருக்க வேண்டும். பாக்கியமுள்ள அந்தத் துயரமானது, தேவனுடைய பரிசுத்தத்தையும் நன்மையையும் குறித்த தெளிவுணர்வின் விளைவாகப் பிறப்பதாகும்; இது நமது சுபாவத்தின் சீர்கேட்டையும், நமது நடக்கையின் மாபெரும் குற்றத்தையும் உணர்த்துகிறது. கிறிஸ்து தெய்வீக ஆறுதலை வாக்குப்பண்ணும் அந்தத் துயரம் என்பது, தேவனுக்கேற்ற துக்கத்தோடே நம்முடைய பாவங்களைக் குறித்துத் துயரப்படுவதாகும்.
எட்டு பாக்கியங்களும் நான்கு இணைகளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பாடத்தைத் தொடர்ந்து சிந்திக்கும்போது இதற்கான சான்று தெளிவுபடுத்தப்படும். இந்த வரிசையில் முதலாவது, ஆவியில் எளிமையுள்ளவர்களுக்குக் கிறிஸ்து அறிவிக்கும் பாக்கியமாகும். தங்களுடைய சொந்த வெறுமையையும் ஒன்றுமில்லாமையையும் உணரும்படி விழிப்புணர்வு பெற்றவர்களையே இது விவரிக்கிறது என்பதை நாம் கண்டோம். இத்தகைய ஆவிக்குரிய ஏழ்மையிலிருந்து துயரத்திற்குச் செல்லும் மாறுதலைப் புரிந்துகொள்வது எளிது. உண்மையில், துயரமானது ஆவியின் எளிமையை மிகவும் நெருக்கமாகப் பின்தொடர்வதால், அது ஆவியில் எளிமையின் உற்ற துணையாகவே விளங்குகிறது.
இங்கு குறிப்பிடப்படும் துயரமானது, உற்றார் உறவினர்களின் மரணம், இன்னல்கள் அல்லது இழப்புகளினால் ஏற்படும் துயரத்திற்கும் மேம்பட்டதாகும். இது பாவத்தைக் குறித்த துயரமாகும். இது நமது ஆவிக்குரிய நிலையின் வறுமையை உணர்ந்து நாம் படும் துயரமும், தேவனுக்கும் நமக்குமிடையே பிரிவினையை உண்டாக்கிய அக்கிரமங்களைக் குறித்த துயரமுமாகும்; நாம் பெருமை பாராட்டிய நமது சொந்த நன்னெறிகளையும், நாம் நம்பிக்கொண்டிருந்த சுயநீதியையும் குறித்த துயரமாகும்; தேவனுக்கு விரோதமான கலகத்தையும், அவருடைய சித்தத்திற்கு எதிரான பகைமையையும் குறித்த துயரமாகும். இத்தகைய துயரமானது எப்பொழுதும் விழிப்படைந்த ஆவியின் எளிமையுடன் இணைந்தே செல்கிறது (டாக்டர் பியர்சன்).
இரட்சகர் தமது ஆசீர்வாதத்தை அறிவிக்கும் இந்த ஆவிக்குரிய நிலைக்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டும் விளக்கமும் லூக்கா 18:9-14 வசனங்களில் காணப்படுகின்றன. அங்கே முற்றிலும் மாறுபட்ட இரு நிலைகள் நம் கண்முன் வைக்கப்படுகின்றன. முதலாவதாக, சுயநீதியுள்ள ஒரு பரிசேயன் தேவனை நோக்கி, "தேவனே, நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன்" என்று சொல்வதைக் காண்கிறோம். அவன் பார்வையில் இவையெல்லாம் உண்மையாகவே இருந்திருக்கலாம்; ஆயினும் இந்த மனிதன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்ட நிலையில்தான் தன் வீட்டுக்குத் திரும்பினான். அவனுடைய அழகான உடுப்புகள் கந்தையாகவும், அவனுடைய வெண்மையான ஆடைகள் அழுக்காகவும் இருந்தன, ஆனால் பெருமை பாராட்டின அவனோ அதை அறியவில்லை. பின்னர் ஒரு ஆயக்காரனைக் காண்கிறோம்; அவன் தூரத்திலே நின்று, சங்கீதக்காரனுடைய வார்த்தைகளின்படி தன் அக்கிரமங்களினால் கலக்கமடைந்து தேவனை நோக்கி நிமிர்ந்து பார்க்கவும் கூடாதிருந்தான் (சங்கீதம் 40:12). அவன் தன் கண்களை வானத்துக்கு ஏறெடுக்கவும் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு, "தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்றான். அவனுக்குள் இருந்த பாவ ஊற்றை உணர்ந்தவனாக அவன் இவ்வாறு கதறினான். அந்த மனிதன் ஆவியில் எளிமையுள்ளவனாகவும் தன் பாவங்களுக்காகத் துயரப்படுகிறவனாகவும் இருந்தபடியால், நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான்.
ஆகவே, தேவனுடைய பிள்ளைகளின் மறுபிறப்பு அடைந்ததின் முதலாவது அடையாளங்கள் இவைகளே. ஆவியில் எளிமையுள்ளவனாக மாறாமலும், தன் பாவங்களுக்காக மெய்யாகவே துயரப்படுவது என்னவென்று அறியாமலும் இருக்கும் ஒருவன், ஒரு திருச்சபையின் உறுப்பினராகவோ அல்லது அதில் பொறுப்பிலிருப்பவனாகவோ இருந்தாலும், அவன் தேவனுடைய ராஜ்யத்தைக் காணவும் மாட்டான், அதில் பிரவேசிக்கவும் மாட்டான். மகத்துவமுள்ள தேவன் சிறுமைப்பட்டு நொறுங்குண்ட இருதயத்தில் வாசம்பண்ண இறங்கிவருகிறார் என்பது கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவு பெரிய நன்றியுணர்வைத் தரவேண்டும்! இது பழைய ஏற்பாட்டிலும் தேவனால் அருளப்பட்ட அற்புதமான வாக்குத்தத்தமாகும் (வானங்களும் கூட எவருடைய பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்லவோ, அந்த தேவன், மனிதன் கட்டும் எந்தவொரு பிரம்மாண்டமான ஆலயத்தையும் தமக்குரிய வாசஸ்தலமாகக் கொள்ளாமல், நொறுங்குண்ட இருதயத்தையே நாடுகிறார் - ஏசாயா 57:15 மற்றும் 66:2-ஐப் பார்க்கவும்)!
"துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்." பாவ உணர்வடைதல் என்று பொதுவாக அழைக்கப்படும் ஆரம்பக்கட்டத் துயரமே இங்கு முதன்மையாகக் குறிப்பிடப்பட்டாலும், துயரப்படுதல் அத்துடன் முடிந்துவிடுவதில்லை. துயரப்படுதல் என்பது சாதாரண கிறிஸ்தவ வாழ்க்கையின் நிரந்தரமான பண்பாகும். விசுவாசி துயரப்படுவதற்கு அநேக காரியங்கள் உள்ளன. அவனுடைய சொந்த இருதயத்தின் வாதையானது அவனை, "நிர்ப்பந்தமான மனுஷன் நான்" (ரோமர் 7:24) என்று கதறச் செய்கிறது. நம்மை "எளிதாய் நெருக்குகிற" (எபிரெயர் 12:1) அவிசுவாசமும், நமது தலையின் மயிரிலும் அதிகமாக நாம் செய்யும் பாவங்களும் நமக்குத் தொடர்ச்சியான துக்கத்தைத் தருகின்றன. நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் வறட்சியும், பயனற்ற நிலையும் நம்மைப் பெருமூச்சுவிட்டு அழச் செய்கின்றன. கிறிஸ்துவை விட்டு வழிவிலகும் நமது மனச்சாய்வு, அவரோடு நமக்குள்ள ஐக்கியத்தின் குறைபாடு, அவர்மீது நாம் கொண்டுள்ள அன்பின் ஆழமின்மை ஆகியவை நமது வீணைகளை அலரிச்செடிகளின்மேல் தூக்கிவைக்கச் செய்கின்றன.
கிறிஸ்தவர்களின் இருதயங்களைத் தாக்கும் துயரத்திற்கான வேறு பல காரணங்களும் உண்டு: தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு அதின் பெலனை மறுதலிக்கும் மாயமாலமான மார்க்கம் எங்கும் பரவியிருப்பது (2தீமோத்தேயு 3:5); எண்ணற்ற பிரசங்க பீடங்களில் போதிக்கப்படும் தவறான உபதேசங்களால் தேவனுடைய சத்தியத்திற்கு ஏற்படும் கொடிய கனவீனம்; கர்த்தருடைய பிள்ளைகளிடையே நிலவும் பிரிவினைகள்; மற்றும் சகோதரர்களுக்கிடையேயான வாக்குவாதங்கள் ஆகியவை. இவைகளின் கலவையானது இருதயத்தில் தொடர்ச்சியான துக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகில் காணப்படும் கொடிய சீர்கேடு, கிறிஸ்து அசட்டைப் பண்ணப்படுதல், மற்றும் சொல்ல முடியாத மனித துயரங்கள் ஆகியவை நமக்குள்ளே பெருமூச்சு விடச் செய்கின்றன. ஒரு கிறிஸ்தவன் தேவனோடு எவ்வளவு நெருக்கமாக வாழ்கிறானோ, அவ்வளவு அதிகமாக அவர் கனவீனப்படுத்தப்படுவதைக் கண்டு துயரப்படுவான். உண்மையான தேவப்பிள்ளைகளின் பொதுவான அனுபவம் இதுவே (சங்கீதம் 119:53; எரேமியா 13:17; 14:17; எசேக்கியேல் 9:4).
"அவர்கள் ஆறுதலடைவார்கள்." மனசாட்சியைப் பாரப்படுத்தும் குற்ற உணர்வு நீக்கப்படுவதையே கிறிஸ்து இந்த வார்த்தைகளின் மூலம் முதன்மையாகக் குறிப்பிடுகிறார். நமது இரட்சகரின் அவசரத் தேவை தமக்கு உணர்த்தப்பட்ட ஒருவருக்கு, தேவ கிருபையின் சுவிசேஷத்தைப் பரிசுத்த ஆவியானவர் தாமே பயன்படுத்துவதன் மூலம் இது நிறைவேற்றப்படுகிறது. இதன் விளைவு, கிறிஸ்துவின் பாவப்பரிகார இரத்தத்தின் புண்ணியத்தினால் உண்டாகும் இலவசமான மற்றும் முழுமையான பாவமன்னிப்பின் உணர்வாகும். இந்தத் தெய்வீக ஆறுதல் என்பது "எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானமாகும்" (பிலிப்பியர் 4:7); இது, தான் இப்போது "பிரியமானவருக்குள் அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்" (எபேசியர் 1:6) என்ற நிச்சயத்தைக் கொண்டிருப்பவனின் இருதயத்தை நிரப்புகிறது. தேவன் குணமாக்கும் முன் காயப்படுத்துகிறார்; உயர்த்தும் முன் தாழ்த்துகிறார். முதலாவது அவருடைய நீதியும் பரிசுத்தமும் வெளிப்படுத்தப்படுகிறது, பின்னரே அவருடைய இரக்கமும் கிருபையும் அறியப்படுகிறது.
"அவர்கள் ஆறுதலடைவார்கள்" என்ற வார்த்தைகள் கிறிஸ்தவனின் அனுபவத்தில் தொடர்ந்து நிறைவேறுகின்றன. அவன் சாக்குப்போக்குச் சொல்ல முடியாத தன் தோல்விகளைக் குறித்துத் துயரப்பட்டு, அவற்றை தேவனிடம் அறிக்கை செய்தாலும், தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி அவனைச் சுத்திகரிக்கிறது (1யோவான் 1:7) என்ற நிச்சயத்தால் அவன் ஆறுதலடைகிறான். எங்கும் தேவனுக்கு நேரிடும் கனவீனத்தைக் கண்டு அவன் பெருமூச்சு விட்டாலும், சாத்தான் என்றென்றைக்குமாக நரகத்தில் தள்ளப்படும் நாளும், "நீதி வாசமாயிருக்கும் புதிய வானமும் புதிய பூமியும்" (2பேதுரு 3:13) உண்டாகி, கர்த்தராகிய இயேசுவோடு பரிசுத்தவான்கள் ஆளுகை செய்யும் நாளும் அதிவேகமாக நெருங்கி வருகிறது என்ற அறிவினால் அவன் ஆறுதலடைகிறான். கர்த்தருடைய சிட்சிக்கும் கரம் அடிக்கடி அவன்மீது வைக்கப்படுவதாலும், "எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணப்பட்டாலும்" (எபிரெயர் 12:11), இது தனக்காக "மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது" (2கொரிந்தியர் 4:17) என்பதை உணருவதால் அவன் தேற்றப்படுகிறான்.
தேவனோடு ஐக்கியத்திலிருக்கும் விசுவாசி, அப்போஸ்தலனாகிய பவுலைப்போல, "துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாக" (2கொரிந்தியர் 6:10) இருக்க முடியும். மாராவின் கசப்பான தண்ணீரை குடிக்க அவன் அடிக்கடி அழைக்கப்பட்டாலும், அந்தத் தண்ணீர மதுரமாக்க தேவன் அருகிலேயே ஒரு மரத்தை நாட்டியுள்ளார். ஆம், துயரப்படும் கிறிஸ்தவர்கள் தெய்வீகத் தேற்றரவாளனால் இப்போதே ஆறுதலடைகிறார்கள்: தேவ ஊழியர்களின் பணிவிடையினாலும், சக கிறிஸ்தவர்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகளினாலும், (இவை கிடைக்காதபோது) ஆவியானவர் அவர்களின் நினைவுக் களஞ்சியத்திலிருந்து வார்த்தையின் விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களை வல்லமையோடு அவர்கள் இருதயத்திற்குக் கொண்டுவருவதன் மூலமும் ஆறுதலடைகிறார்கள்.
"அவர்கள் ஆறுதலடைவார்கள்." சிறந்த திராட்சரசம் இறுதிக்காக வைக்கப்பட்டுள்ளது. "சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்" (சங்கீதம் 30:5). அவர் இல்லாத இந்த நீண்ட இரவு வேளையில், பாடுகளின் நாயகனாய் இருந்த அவரோடு ஐக்கியப்பட விசுவாசிகள் அழைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், "அவருடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு... அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்" (ரோமர் 8:17) என்று எழுதப்பட்டுள்ளது. மேகமில்லாத காலை வேளை உதிக்கும்போது நமக்குக் கிடைக்கும் ஆறுதலும் மகிழ்ச்சியும் எத்தகையதாயிருக்கும்! அப்போது "சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்" (ஏசாயா 35:10). அப்போது வெளிப்படுத்தல் 21:3,4-ல் உள்ள பரலோகத்தின் பெருஞ்சத்தத்தின் வார்த்தைகள் நிறைவேறும்:
"இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின."
"ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது" (மத்தேயு 5:3).
இந்த மலைப்பிரசங்கம் எவ்வாறு தொடங்குகிறது என்பதை நாம் கவனிப்பதே மெய்யான ஆசீர்வாதமாகும். துன்மார்க்கர் மீது சாபங்களை உச்சரிப்பதன் மூலம் அல்ல, மாறாகத் தமது ஜனங்கள் மீது ஆசீர்வாதங்களை உச்சரிப்பதன் மூலமாகவே கிறிஸ்து இதனைத் தொடங்கினார். நியாயத்தீர்ப்புத் தீர்ப்பதை ஒரு அந்நிய காரியமாகக் கொண்டிருக்கும் அவருக்கு இது எவ்வளவு நேர்த்தியாய் பொருந்துகிறது! (ஏசாயா 28:21,22; ஒப்பிடுக: யோவான் 1:17). ஆனால் அடுத்த வார்த்தை எவ்வளவு விசித்திரமானது: "பாக்கியவான்கள்" அல்லது "மகிழ்ச்சியுள்ளவர்கள்" என்பவர்கள் எளிமையானவர்கள் "ஆவியில் எளிமையுள்ளவர்கள்". இதற்கு முன்பு, இவர்களைப் பூமியில் பாக்கியவான்களாகக் கருதியவர்கள் எவரேனும் உண்டோ? விசுவாசிகளைத் தவிர்த்து, இன்று அப்படி நினைப்பவர் யார்? இந்த ஆரம்ப வார்த்தைகள், தொடர்ந்து வரும் கிறிஸ்துவின் உபதேசங்களுக்கெல்லாம் எவ்வாறு ஒரு முக்கிய சுருதியாக (ஆரம்ப வார்த்தையாக) அமைகின்றன என்பதைப் பாருங்கள்: ஒரு மனிதன் என்ன செய்கிறான் என்பதல்ல, அவன் எப்படி இருக்கிறான் என்பதே மிகவும் முக்கியமானது.
"ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்." ஆவியின் எளிமை என்றால் என்ன? உலகம் வெகுவாய்ப் புகழ்ந்து பாராட்டுகிற மேட்டிமை, தற்பெருமை, மற்றும் தன்னிறைவு கொண்ட மனப்பான்மைக்கு இது நேர்மாறானதாகும். தேவனுக்கு முன்பாகத் தலைவணங்க மறுத்து, எதையும் துணிகரமாய் எதிர்கொள்ளத் தீர்மானித்து, "நான் அவர் வார்த்தையைக் கேட்க... கர்த்தர் யார்?" (யாத்திராகமம் 5:2) என்று பார்வோனோடு சேர்ந்து சொல்லும் தன்னிச்சையான மற்றும் எதிர்ப்பான மனப்பான்மைக்கு இது முற்றிலும் எதிரானதாகும்.
ஆவியில் எளிமையாய் இருப்பது என்பது, என்னிடம் ஒன்றுமில்லை, நான் ஒன்றுமில்லை, என்னால் எதுவும் இயலாது, அதே வேளையில் எனக்கு எல்லாமே தேவைப்படுகிறது என்பதை உணருவதாகும். ஒரு மனிதன் தன் முழுமையான உதவியற்ற நிலைமையை அறிக்கையிட்டு, தேவனுடைய சந்நிதியில் புழுதிமட்டும் தன்னைத் தாழ்த்தும் நிலைக்கு வரும்போது அவனில் ஆவியின் எளிமை தெளிவாக விளங்கும். ஒரு ஆத்துமாவிற்குள் நடைபெறும் கிருபையின் தெய்வீகக் கிரியைக்கான முதலாவது அனுபவ அடையாளம் இதுவே ஆகும்; தூர தேசத்தில் கெட்ட குமாரன் "குறைவுபடத் தொடங்கினபோது" அவனில் ஏற்பட்ட ஆரம்ப விழிப்புணர்வுக்கு இது ஒப்பாயிருக்கிறது (லூக்கா 15:14).
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.