ஒவ்வொரு உண்மைக் கிறிஸ்தவனும் மிகவும் தெளிவாக அறிந்திருக்க வேண்டிய காரியங்களில் இதுவும் ஒன்று. வேதப்புத்தகம் முழுவதுமே தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வதைப் பற்றிச் சொல்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வது மட்டுமல்ல, அதைச் செய்வதும் முக்கியம்.
"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" என்று ரோமர் 12:2-ல் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. தேவனுடைய சித்தத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற கற்பனையை நாம் இங்கே காண்கிறோம். கற்பனை மட்டுமல்ல, தேவனுடைய சித்தத்தைச் செய்பவர்களுக்கு உரிய தேவனுடைய வாக்குத்தத்தத்தையும் நாம் காண்கிறோம்.
"தேவனுடைய சித்தத்தைச் செய்பவன் என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்" என்று 1 யோவான் 2:17-ல் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வாக்குத்தத்தம் மட்டுமல்ல, தேவனுடைய சித்தத்தைச் செய்வது மிகவும் பாக்கியமும் ஆகும். இயேசு சொன்னார், "தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான்" (மாற்கு 3:35). நீங்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்யும்போது, இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருக்கிறீர்கள் என்பதைக் கண்டுகொள்வீர்கள். ஏனென்றால், இயேசு தமது வருகையைக் குறித்து எபிரெயர் 10:9-ல், "தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்" என்று சொன்னார். சொன்னது மட்டுமல்லாமல், தம் வாழ்க்கை முழுவதும் அதையே அவர் செய்தார். தம்முடைய வாழ்க்கையின் முடிவிலும், கெத்செமனே தோட்டத்தில் ஜெபித்தபோதும், "என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று ஜெபித்தார். "பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே... உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக" என்று நாம் ஜெபிக்க வேண்டும் எனவும் நமக்குக் கற்றுக்கொடுத்தார். நாம் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வதை முக்கியப்படுத்தும் பல வேதவசனங்களை நாம் வேதத்தில் காணலாம். ஆனாலும், ஒவ்வொரு விசுவாசியின் மனதிலும் எழும் கேள்வி: தேவனுடைய சித்தத்தை எப்படி அறிந்துகொள்வது?
நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் அல்லது முடிவும் தேவனுடைய சித்தத்தின்படி அமைய வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஏனென்றால், தேவனுடைய சித்தத்தைச் செய்வதில் ஒரு பாதுகாப்பு இருக்கிறது. ஒரு திட்டம் அல்லது செயல் எத்தனை கவர்ச்சிகரமாக இருப்பினும், அது தேவனுடைய சித்தம் இல்லை என்றால் நாம் அதிலிருந்து விலகியிருக்க வேண்டும். இதுவே ஒவ்வொரு உண்மையான தேவனுடைய பிள்ளையின் மனப்போக்காக இருக்கும். இதைக் குறித்து அவன் தெளிவான எண்ணம் கொண்டிருக்கிறான். அவன் தேவனுடைய சித்தத்தைத் தான் செய்கிறான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறான்.
கிறிஸ்தவ வட்டாரத்தில், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்றும் வரம்பெற்ற பெரிய ஊழியர்கள் என்றும் அழைத்துக்கொள்ளும் மற்றொரு கூட்டமும் இருக்கிறது. உண்மையான விசுவாசியின் 'தேவனுடைய சித்தத்தின்படி வாழவேண்டும்' என்ற தீர்மானத்தை, இவர்கள் தங்கள் சுய ஆதாயத்திற்காக வியாபார நோக்கில் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் என்ன சொல்வார்கள் என்றால், "எங்களிடத்தில் வாருங்கள், நாங்கள் உங்கள் மீது கைகளை வைத்து ஜெபம் செய்வோம், நாங்கள் தரிசனங்களைக் காண்போம், தேவனுடைய சத்தத்தைக் கேட்போம், உங்களைக் குறித்துத் தம்முடைய சித்தம் என்ன என்பதைத் தேவன் எங்களுக்கு வெளிப்படுத்துவார், அதை நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்" என்கிறார்கள். மிக மோசமான செய்தி என்னவென்றால், பெருங்கூட்டமான கிறிஸ்தவர்கள் அவர்கள் பின்னால் சென்றுகொண்டிருக்கிறார்கள். இதில் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், முதலாவது இவர்கள் உங்கள் பணத்தையும், பிறகு உங்கள் ஆத்துமாக்களையும் வாரிக்கொள்வார்கள்!
நான் ஒரு சவாலான கேள்வியை இவர்களுக்கு முன் வைக்கிறேன். ஒருவரும் அதற்கு இன்னும் பதில் சொல்லவில்லை. "சாத்தானும் ஒளியின் தூதனைப் போல வந்து உங்களை ஏமாற்றுகிறான்" என்று வேத வசனம் சொல்கிறதே, அதை விசுவாசிக்கிறீர்களா? "ஆகவே எப்போது தேவன் பேசுகிறார், எப்போது சாத்தான் பேசுகிறான், அல்லது எப்போது உங்கள் சொந்த இருதயமே உங்களை வஞ்சிக்கிறது என்பதைத் தெளிவாக உங்களால் கூற முடியுமா?" என்ற கேள்வியை அந்த ஏமாற்றுக்காரர்களிடம் கேட்டு முயற்சித்துப் பாருங்கள். அவர்களிடமிருந்து எந்த ஒரு திருப்திகரமான பதிலும் வராது. ஆகவே இவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள இது மிகவும் தவறான வழி. நற்செய்தி வட்டாரங்களில் இது நன்றாக அறியப்பட்டுள்ளது. தேவன் என்னைக் குறித்து ஒரு சித்தம் வைத்திருப்பாரென்றால், அதை அவர் என்னிடம்தான் வெளிப்படுத்த வேண்டும், வேறொருவர் மூலமாக அல்ல. ஆனால் பிரச்சனை என்னவென்றால், தேவனுடைய சித்தத்தை அறிய நாமாகவே சில வழிமுறைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். ஆகவே, இக்கட்டுரையைப் பின்வரும் தலைப்புகளில் பிரித்திருக்கிறேன்: தேவனுடைய சித்தத்தை அறியத் தவறான வழிமுறைகள், சரியான வழிமுறைகள், வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தம் மற்றும் என்னுடைய வாழ்க்கையில் தேவ சித்தம்.
நாம் எவ்வாறு தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்யக்கூடாது என்பதை முதலில் சிந்தித்துவிட்டு, பின்பு சரியான வழிமுறைகள் என்ன என்பதைச் சிந்திப்பதே சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
காலையில் அமைதிவேளையின்போது நமது மனதில் எழுகிற சிந்தனைகள் எல்லாம் தேவனுடைய சித்தம் அல்ல! நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்து, அமைதிவேளையைச் சில காலங்களாகக் கடைப்பிடிக்கிறீர்கள் என்றால் இது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்கள் அமைதிவேளையின்போது பல தெளிவற்ற சிந்தனைகள் உங்கள் மனதில் ஓடும். இவற்றை நீங்கள் தேவனுடைய சித்தம் என்று சொல்ல முடியுமா? உங்கள் மனதில் எழுகின்ற ஆழ்ந்த அல்லது அழுத்தமான சிந்தனையையே தேவனுடைய சித்தம் என்று சொல்லிவிட இயலாது. ஏனென்றால், உங்கள் மனதில் எழுகின்ற உறுதியான சிந்தனைகள் தான் தேவனுடைய சித்தம் என்று வேத வாக்கியங்களில் எங்கும் சொல்லப்படவில்லை. சற்று நீங்கள் கவனித்தீர்களென்றால், அவிசுவாசிகளுக்கும் மனசாட்சி உண்டு. அவர்கள் தங்களுடைய விக்கிரகங்களுக்கு எதையாகிலும் நேர்ந்துகொண்டால், அதைத் தங்கள் மனசாட்சியின்படி சரியாக நிறைவேற்றிவிடுகிறார்கள். ஆகவே, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபித்துவிட்டபடியினால், உங்கள் மனசாட்சி ஏற்படுத்தும் சிந்தனைகள் எல்லாம் தேவனுடைய சித்தம் ஆகிவிடாது.
சிலர் சீட்டுப்போட்டு தேவனுடைய சித்தம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். தாங்கள் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தங்கள் மனதில் வைத்திருக்கிறார்களோ, அவற்றைத் தனித்தனித் துண்டுச் சீட்டுகளில் எழுதி, ஜெபம் செய்துவிட்டு, கண்களை மூடி ஏதேனும் ஒன்றை எடுப்பார்கள். அதில் என்ன வருகிறதோ, அதுவே தேவனுடைய சித்தம் என்று முடிவு செய்துவிடுவார்கள். நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனித்துப் பார்த்தால், சீஷர்கள் மத்தியாஸ் என்பவரைச் சீட்டுப்போட்டே அப்போஸ்தல ஊழியத்திற்குத் தெரிந்தெடுத்தார்கள். ஆனால், உண்மையில் தேவன் பவுலையே அப்போஸ்தல ஊழியத்திற்குத் தெரிந்தெடுத்தார். ஆகவே, சீட்டுப்போடுவதைவிட, தேவனை அண்டிக்கொள்வதே சிறந்ததல்லவா!
சிலர் இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறேன்: "நான் வேதப் புத்தகத்தைத் திறக்கும்போது எந்த வசனம் என் கண்முன் வருகிறதோ, அந்த வசனத்தின் மூலம் தேவன் என்னோடு பேசுகிறார், அதுதான் தேவனுடைய சித்தம்." வேதப்புத்தகம் அந்த நோக்கத்துடன் ஒருபோதும் எழுதப்படவில்லை. அது தோல் சுருள்களில்தான் எழுதப்பட்டது; வசனங்களாகக் கூட பிரிக்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே, இதுதான் தேவனுடைய சித்தத்தை அறிய சரியான முறை என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், நாம் பின்வரும் கருத்தையும் நம்ப வேண்டும்: அச்சு இயந்திரங்களும், தாள்களும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் தேவன் இந்த முறையைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார் என்று சொல்ல வேண்டும். எனவே, இந்த முறைகளெல்லாம் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளச் சரியான முறைகள் அல்ல.
தேவன் என்னைக் குறித்து ஒரு சித்தம் வைத்திருப்பார் என்றால், அதை அவர் நிச்சயமாக ஒளித்து வைக்கப் போவதில்லை! நான் அதை எளிதாகக் கண்டுகொள்ளும் வகையில் அவரே வழிகளை ஏற்படுத்தி வைத்திருப்பார். 2 பேதுரு 1:19-ஆம் வசனத்திற்கு உங்கள் கவனத்தைத் திருப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்: > "அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்." இங்கே பேதுரு குறிப்பிடும் தீர்க்கதரிசனம் எது? அவர் முழு வேதவாக்கியங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் (இந்நாட்களில் கள்ளத் தீர்க்கதரிசிகள் சொல்லும் கள்ளத் தீர்க்கதரிசனத்தைப் பற்றி அல்ல!). ஆகவே, வேதத்தை முழுமையாக ஆராய்ந்தால் மட்டுமே நீங்கள் அதைக் கண்டுகொள்ள முடியும்.
தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள இதுவே மிகச் சரியான வழி. நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், அவர் அதை எங்கே வெளிப்படுத்தியிருக்கிறாரோ அங்கேதான் நீங்கள் அதைக் கண்டுகொள்ள வேண்டும். தேவன் தன்னுடைய வார்த்தையைவிட வேறு எங்கும் அவருடைய சித்தத்தை வெளிப்படையாக, தெளிவாக வெளிப்படுத்தவில்லை!
இப்பொழுது நீங்கள் சொல்லலாம், "வேதாகமத்தில் என்னைப் பற்றித் தனியாக ஒரு அதிகாரம் இல்லையே. நான் யாரைத் திருமணம் செய்ய வேண்டும், கல்லூரியில் எந்தப் படிப்பைப் படிக்க வேண்டும், எந்த நிறுவனத்தில் அல்லது எந்த வேலையில் நான் சேர வேண்டும் என்பதைப் பற்றி வேதாகமம் எதுவுமே எனக்குச் சொல்லவில்லையே" என்று நீங்கள் கேட்கலாம். இவைகளைக் குறித்து நான் வேதாகமத்தில் எப்படிக் கண்டுபிடிப்பது என்றும் நீங்கள் சிந்திக்கலாம். தொடர்ந்து வாசியுங்கள், அதை நீங்கள் சீக்கிரம் கண்டுகொள்வீர்கள்.
நாம் மேலும் தொடர்வதற்கு முன்பாக, உபாகமம் 29:29-ஐ வாசிக்கலாம்: > "மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்." இந்த வசனத்தை நீங்கள் கவனித்தால், தேவனுடைய சித்தம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது, மறைவான தேவனுடைய சித்தம்; இரண்டாவது, வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சித்தம். முதல் பகுதியானது தேவனுக்குச் சொந்தமானது, அதை அறிந்துகொள்ள முயற்சிப்பதும் செய்வதும் என்னுடைய வேலை அல்ல. அது தேவன் செய்ய வேண்டிய பணி. என்னுடைய வேலையெல்லாம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற தேவனுடைய சித்தத்தை ஒழுங்காகச் செய்வதுதான். நம்முடைய வாழ்க்கையில் நாம் நிறைவேற்ற வேண்டிய தேவனுடைய சித்தம் இதுவே.
நாம் அடிக்கடி செய்யும் தவறு என்னவென்றால், வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தேவனுடைய சித்தத்தைச் செய்யாமல், மறைக்கப்பட்டிருக்கும் தேவனுடைய சித்தம் என்ன என்பதைக் கண்டுகொள்ள நாம் ஆர்வம் காட்டுகிறோம். நம்முடைய பணியைச் செய்யாமல், தேவன் செய்ய வேண்டிய பணியில் கவனம் செலுத்துகிறோம். தேவன் வெளிப்படுத்தியிருக்கிற அவருடைய சித்தத்தை நீங்கள் செய்யவில்லை என்றால், தேவன் அவருடைய பணியைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆகவே, நமக்குச் சொந்தமானது என்னவென்றால் வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற தேவனுடைய சித்தமே.
இப்பொழுது வேதவாக்கியங்கள் மூலம் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வது எப்படி என்பதைக் குறித்துச் சொல்லப்போகிறேன். நீங்கள் யாரைத் திருமணம் செய்ய வேண்டும், என்ன படிக்க வேண்டும் என்பதைக் குறித்து நேரடியாகச் சொல்லாவிட்டாலும், அவைகளைக் குறித்தும் நீங்கள் எப்படி தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதை முடிவில் கண்டுகொள்வீர்கள்.
முதலாவது, பொதுவாக வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தத்தைக் குறித்துப் பார்ப்போம். 2 பேதுரு 3:9-ல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்பதே தேவனுடைய சித்தம் என்று வாசிக்கிறோம். ஆகவே, ஒவ்வொரு மனிதரைக் குறித்தும் முதன்மையான தேவனுடைய சித்தம், அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்பதே ஆகும். நாம் அழிந்துபோகாமல் மனந்திரும்ப வேண்டுமென்பதே தேவனுடைய சித்தம். ஆகவே, தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள முற்படும்முன் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி, "நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேனா?" என்பதே. ஏனெனில், தேவனுடனான உறவில் இதுவே முதல் படி. இரட்சிக்கப்படாத ஒவ்வொருவரும் தேவனுக்குப் பகைஞராயிருக்கிறார்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து மூலமாக தேவனிடத்தில் நீங்கள் சமாதானமாகவில்லை என்றால், உங்களுக்கும் தேவனுக்கும் எந்த உறவும் இல்லை; நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள வேண்டிய தேவையும் இல்லை. அது ராஜாதி ராஜாவாகிய தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் சொந்தமானதேயன்றி, இரட்சிக்கப்படாதவர்களுக்கல்ல. நீங்கள் உங்கள் வாழ்க்கையை தேவனின் ஆளுகைக்கு முழுமையாக அர்ப்பணிக்கவில்லை என்றால், அவருடைய சித்தத்தைக் கேட்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆகவே, நீங்கள் உங்களைக் கேட்க வேண்டிய முதலாவது கேள்வி: இரட்சிக்கப்பட வேண்டும் என்ற தேவனுடைய சித்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படிந்திருக்கிறீர்களா? உங்கள் பதில் 'ஆம்' என்றிருந்து, அந்தப் பதில் வேதவாக்கியங்களின் அடிப்படையில் அமைந்திருக்குமென்றால், உங்கள் கனிகளினால் அது உறுதிப்படுமென்றால், இரட்சிப்பைப் பொறுத்தமட்டில் நீங்கள் தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறீர்கள்.
இரண்டாவதாக, ஒவ்வொரு மனிதரைக் குறித்தும் பொதுவான தேவனுடைய சித்தம் என்னவென்றால், ஆவியில் நிறைந்திருப்பதே. எபேசியர் 5:17-18 வசனங்களில், "ஆனபடியினாலே, நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்தவர்களாயிருங்கள்" என்று வாசிக்கிறோம். எனக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே, நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளவில்லை என்றால், வேதப்புத்தகம் உங்களை மதியற்றவர்கள் என்று அழைக்கிறது. ஆகவே, ஒரு தேவனுடைய பிள்ளை இயல்பாகவே தேவனுடைய சித்தத்தை அறிந்தவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதியில் தேவனுடைய சித்தம் 18-ஆம் வசனத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆவியில் நிறைந்திருங்கள் என்றால் என்ன அர்த்தம்? இன்று பெந்தெகோஸ்தே வட்டாரங்களில் சொல்லப்படுவதுபோல், ஆவியில் நிறைதல் என்றால், அந்நியபாஷை என்ற பெயரில் கத்தி, உருண்டு புரண்டு அமர்க்களப்படுத்துவதல்ல! ஏனென்றால், நீங்கள் விசுவாசிகளானபோதே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் முத்திரைபோடப்பட்டீர்கள் என்றும், பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாழ்கிறார் என்றும், நீங்களே பரிசுத்த ஆலயம் என்றும் வேத வசனம் சொல்லுகிறது. அப்படியானால், ஏற்கனவே விசுவாசிகளாயிருக்கிற எபேசியர்களுக்குப் பவுல் ஏன் "ஆவியில் நிறைந்தவர்களாயிருங்கள்" என்று சொல்லுகிறார்? எபேசியர்கள் அவிசுவாசிகளாயிருந்த நாட்களில் குடித்து வெறித்து, மதுபான வெறிகொண்டிருக்கையில் தங்கள் தேவதையான தியானாளின் (Diana) ஆலயத்தில் பிரவேசித்து, தங்கள் தேவதையை ஆராதித்தார்கள். அப்பொழுது அவர்கள் மதுபானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். 'இப்பொழுது இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்; குடித்து வெறிக்காமல் பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டின் கீழ் வாருங்கள்' என்று பவுல் சொல்லுகிறார். ஆவியில் நிறைதல் என்பது முழுமையாகப் பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதைக் குறிக்கிறது.
அப்படியானால், பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படுத்தப்படுதல் அல்லது வழிநடத்தப்படுதல் என்றால் என்ன? வேதவாக்கியங்களெல்லாம் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு என்பதை அறிந்திருக்கிறோம். ஆகவே, பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுதல், கட்டுப்படுத்தப்படுதல் அல்லது பரிசுத்த ஆவியால் நிறைதல் என்பது தேவனுடைய வார்த்தையினால், அதாவது வேதவசனத்தினால் நடத்தப்படுதல் என்பதையே குறிக்கிறது. பரிசுத்த ஆவியால் நிறைந்திருக்கும்பொழுது என்ன நடக்கிறது? அதே அதிகாரத்தைத் தொடர்ந்து வாசித்தால், ஆவியின் கனிகள் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவதை நீங்களும் காணலாம், மற்றவர்களும் காண்பார்கள். மற்றவர்களுடனான உங்கள் உறவு மேம்படும்; உங்கள் குடும்பத்தினருடனான உங்கள் உறவு மேம்படும். தேவனுடனான உங்கள் உறவு புதிய பரிமாணத்தைப் பெறும். உங்கள் கனிகளினால் அநேகரை ஆத்துமாதாயம் செய்வீர்கள். இவைகளெல்லாம் ஆவியில் நிறைந்திருப்பதற்கான ஆதாரங்கள். ஆவியின் கனிகளைக் கொலோசெயர் 3:16-ஆம் வசனத்திலும், கலாத்தியர் 5:22-23 வசனங்களிலும் காணலாம். இதுவே உங்களைக் குறித்த தேவனின் வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தமாயிருக்கிறது. ஆகவே, இத்தருணத்தில் நீங்கள் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி: உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவது எது? தேவனுடைய வார்த்தையா அல்லது உங்கள் சொந்த விருப்பங்களா? நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் வேத வசனத்தின் அடிப்படையில் சோதித்துப்பார்த்து, இதை தேவன் அனுமதிக்கிறாரா என்பதை உறுதி செய்கிறீர்களா? நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் தேவனின் வார்த்தைக்கு ஒத்துப்போகவில்லை என்றால், அது தேவனுடைய சித்தமல்ல. இந்தக் கேள்விகள் நீங்கள் மற்றவர்களுக்குப் பதிலளிக்க வேண்டியவைகளல்ல; உங்களுக்கு நீங்களே பதிலளித்துக்கொள்ள வேண்டியவை. நீங்கள் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் நிறைந்திருப்பீர்கள் என்றால், நீங்கள் தேவனுடைய சித்தத்தின் அடிப்படையில் வாழ்கிறீர்கள்.
மூன்றாவதாக, நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. "அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்" என்று 1 தெசலோனிக்கேயர் 4:3-6-ல் வாசிக்கிறோம். நீங்கள் உலகத்திலுள்ள எல்லாவிதமான துன்மார்க்க இச்சைகளுக்கும் ஆசைகளுக்கும் விலகி, தேவனை உண்மையோடும் உத்தமத்தோடும், பரிசுத்தத்துடனும் ஆராதிக்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. உண்மையாகவே நீங்கள் தேவனுடைய சித்தம் செய்ய வாஞ்சிப்பீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையின் பரிசுத்தத்திற்காக நீங்கள் கருத்தாய் முயற்சி செய்வீர்கள். நீங்கள் தேவனின் பரிசுத்த ஆலயமாயிருக்கிறீர்கள். எங்கெல்லாம் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறாரோ, அங்கெல்லாம் அவர் பரிசுத்தத்தை ஏற்படுத்துகிறார். நீதியின் மீது வாஞ்சையையும், பாவத்தின் மீது வெறுப்பையும் ஏற்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவரின் இந்தச் செயல் உங்கள் வாழ்க்கையில் நடைமுறையில் இருக்கிறதா? "நான் இயேசுவை விசுவாசிக்கிறேன்" என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், அந்த விசுவாசம் உண்மையானது என்றால், அது செத்த விசுவாசமாயிருக்காது. அது தொடர்ந்து தன்னுடைய பணியைச் செய்யும். அது உங்கள் வாழ்க்கையைப் பரிசுத்தத்திற்கு நேராய் மாற்றும். இது உங்கள் வாழ்க்கையின் அனுபவமாயிராவிட்டால், உங்கள் அடிப்படை இரட்சிப்பிலேயே பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். ஏனென்றால், கிரியையில்லாத விசுவாசம் செத்த விசுவாசம். ஆகவே, உங்கள் வாழ்க்கையின் பரிசுத்தத்தைக் குறித்து இதுவே தேவனுடைய சித்தம்.
நான்காவது, உங்கள் சொந்த சாட்சியுள்ள வாழ்க்கை. "நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது" என்று 1 பேதுரு 2:15-ல் வாசிக்கிறோம். இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ‘நன்மை செய்தல்’ என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள, 12-ஆம் வசனத்திலிருந்து நீங்கள் படிக்க வேண்டும். அவிசுவாசிகளுக்கு முன்பாகப் பரிசுத்தமாகப் பேசுங்கள், அரசாங்கத்திற்குக் கீழ்ப்படியுங்கள், அரசு அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியுங்கள், மற்றவர்களைக் கனம்பண்ணுங்கள், சகோதரரைச் சிநேகியுங்கள். இயேசு கிறிஸ்து தம்முடைய வாழ்க்கையில் வெளிப்படுத்திய மன்னிப்பு, உங்கள் வாழ்க்கையின் மூலமாக வெளிப்பட வேண்டும். இவைகளெல்லாம் மற்றவர்களுக்கு முன்பான உங்கள் சாட்சியுடன் சம்பந்தப்பட்டவை. இந்த நற்செயல்களினால் நீங்கள் புத்தியீன மனிதருடைய அறியாமையை அடக்க வேண்டும். இது உங்களைக் குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது. உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? உங்கள் வாழ்க்கையைப் பார்த்து மற்றவர்கள் தேவனைத் தூஷிக்கிறார்களா? அல்லது துதிக்கிறார்களா?
ஐந்தாவது, உங்கள் இருதயத்தின் மனப்போக்கு. "எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது" (1 தெசலோனிக்கேயர் 5:16-18). 'எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்' என்பது, தேவனுடைய கரத்திலிருந்து வரும் எந்த ஒன்றையும் நீங்கள் மகிழ்ச்சியாய்ப் பெற்றுக்கொள்ளுகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. உங்கள் வெளிப்புறச் சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தேவனுடனான உறவில் உங்கள் இருதயம் மகிழும். இது உங்கள் இருதயத்தின் மனப்போக்குடன் நேரடியாகத் தொடர்புள்ளது. 'இடைவிடாமல் ஜெபம்பண்ணுதல்' என்பது, 'என் சுய புத்தியின்மேல் சாயாமல், என் முழு இருதயத்தோடும் நான் தேவனை விசுவாசிக்கிறேன்' என்று நீங்கள் சொல்வதைக் குறிக்கிறது. என் வழிகள் எல்லாவற்றையும் நான் தேவனிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவர் என் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். 'எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்தல்' என்பதும் தேவனுடனான உங்கள் இருதயத்தின் மனப்போக்கைக் குறிக்கிறது. ஏனென்றால், சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருக்கும்பொழுது, நீங்கள் விரும்பியவை கிடைக்காமல் இருக்கும்பொழுது, உங்களுக்குப் பிரியமானவர்கள் தேவனுடைய சித்தத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டபொழுது, முறுமுறுப்பதும் தேவனிடத்தில் கோபித்துக்கொள்வதும் இயற்கையானதே. ஆனால் "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்" என்று சொல்வது முற்றிலும் இயற்கைக்கு அப்பாற்பட்டது. ஆனால், இதுவே உங்களைக் குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
இதுவரை நாம் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தத்தைக் குறித்து ஐந்து காரியங்களைப் பார்த்திருக்கிறோம். அவையாவன: இரட்சிக்கப்படுதல், ஆவியில் நிறைந்திருத்தல், பரிசுத்தமுள்ள வாழ்க்கை, சாட்சியுள்ள வாழ்க்கை மற்றும் உங்கள் இருதயத்தின் மனப்போக்கு. இவை வேதவசனத்தின் அடிப்படையில் சரியாக இருக்குமென்றால், நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். இதெல்லாம் சரிதான்; இவையெல்லாம் மற்றவர்கள் சொன்னதுதான். ஆனால், என்னைப் பற்றி நீங்கள் பேசவே இல்லையே. 'நான் யாரைத் திருமணம் செய்வது?', 'எந்தக் கல்லூரியில் என்ன படிப்பைப் படிப்பது?', 'எந்த நிறுவனத்தில், எந்த வேலையில் சேருவது?' போன்ற என்னுடைய தனிப்பட்ட கேள்விகளுக்கு இது பதில் தரவில்லையே என்று நீங்கள் கேட்கலாம். அதைத்தான் இப்பொழுது நாம் பார்க்கப்போகிறோம். இதை நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள்.
நீங்கள் 'உண்மையாகவே' இரட்சிக்கப்பட்டிருந்தால், 'உண்மையாகவே' ஆவியில் நிறைந்திருந்தால், 'உண்மையாகவே' பரிசுத்தமாய் வாழ்ந்தால், 'உண்மையாகவே' சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்தால், தேவனைக் குறித்த உங்கள் இருதயத்தின் மனப்போக்கு 'உண்மையாகவே' சரியாக இருந்தால் (இவற்றில் 'உண்மையாகவே' என்ற வார்த்தையை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்), இப்போது உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துபவர் பரிசுத்த ஆவியானவரே. இனி வாழ்வது நீங்களல்ல, கிறிஸ்துவே உங்களில் வாழ்கிறார். அப்படியானால், உங்கள் விருப்பங்களும் தெரிந்துகொள்ளுதல்களும் பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படுத்தப்படும். ஏனென்றால், தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான எந்த ஒன்றையும் நீங்கள் விரும்பப்போவதில்லை! அப்புறம் என்ன? நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்துவிட்டீர்கள்! இந்த ஐந்து காரியங்களும் உங்கள் வாழ்க்கையில் உண்மையாகவே செயல்படுமானால், நீங்கள் எதையெல்லாம் விரும்புகிறீர்களோ அவைகளே தேவனுடைய சித்தமாக இருக்கும்!
இங்கே உங்களை எச்சரிக்க விரும்புகிறேன்: எதை யார் விரும்பினாலும் அதுவே தேவனுடைய சித்தம் என்று நான் சொல்லவில்லை. வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த ஐந்து தேவனுடைய சித்தத்தின் மீதும் உங்கள் கண்களை வையுங்கள். அவை உங்கள் வாழ்க்கையில் செயல்பாட்டில் இருக்கும்போதும், உங்கள் விருப்பங்கள் உண்மையாகவே இந்த ஐந்து காரியங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும்போதும், உங்களுடைய அந்த மனதின் விருப்பங்களே தேவனுடைய சித்தமாக மாறும். இது என்னுடைய சொந்த வேத விளக்கமா? இல்லை. சங்கீதம் 37:4, 5-ஐ வாசித்துப் பாருங்கள்: "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்." கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருத்தல் என்றால் என்ன? நாம் குறிப்பிட்ட இந்த ஐந்து காரியங்களுமே கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருத்தல் என்பதற்கான விளக்கமாகும். இந்த ஐந்து காரியங்களிலும் நீங்கள் உறுதியாயும் உண்மையாயும் இருப்பீர்கள் என்றால், உங்களுக்கான தேவனுடைய வாக்குத்தத்தம் இதுவே: அவர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை அருளிச்செய்வார்! தேவன் தம்முடைய விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவார். இந்த தேவனுடைய வார்த்தையின்படி நீங்கள் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருப்பீர்கள் என்றால், அவர் தம்முடைய விருப்பத்தையே உங்கள் மனதில் வைக்கிறார். அதையே அவர் நிறைவேற்றியும் முடிக்கிறார். தேவனுடைய சித்தத்தை அறிய இதுவே உறுதியான மற்றும் சரியான வழியாகும்.
இப்போது சில உதாரணங்களை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்:
உதாரணம் 1: ஒரு மனிதன் தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லுகிறார். நாம் குறிப்பிட்ட அந்த ஐந்து அம்சங்களும் தன்னிடம் உண்மையாகவே இருப்பதாகச் சொல்கிறார். ஆனால், தான் ஒரு அவிசுவாசியை நேசிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறுகிறார். இந்த நபரைக் குறித்து நாம் என்ன சொல்லலாம்? கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கத் தேவையான அந்த ஐந்து அம்சங்களும் உண்மையாகவே அவரிடத்தில் இல்லை. 'அந்நிய நுகத்தில் பிணைக்கப்படாதிருங்கள்' என்றும், ஒரு விசுவாசி அவிசுவாசியை எந்தச் சூழ்நிலையிலும் திருமணம் செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ள தேவனுடைய நியமத்திற்கு அவர் கீழ்ப்படியவில்லை. எனவே, அவருடைய இந்த விருப்பம் தேவனுடைய சித்தத்தின்படி அமைந்ததல்ல.
உதாரணம் 2: ஒருவர் தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லுகிறார்; அந்த ஐந்து அம்சங்களும் தன்னிடம் உண்மையாகவே இருப்பதாகச் சொல்கிறார். தனக்கு அமெரிக்க தேசத்தில் ஒரு நல்ல வேலை கிடைத்திருப்பதாகவும், அதற்காகத் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு அமெரிக்காவிற்கு ஐந்து ஆண்டுகள் செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார். இதுவும் தேவனுடைய சித்தமல்ல. தேவன் குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்தியது, கணவனும் மனைவியும் இணைந்து பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தில் வளர்த்தெடுத்து, சாட்சியுள்ள குடும்ப வாழ்க்கை வாழ்வதற்காகவே. கணவன் மட்டும் தனியாக வெளிநாட்டிற்குச் சென்று பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. 1 கொரிந்தியர் 7-ஆம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள்; கணவனும் மனைவியும் எத்தனை நாட்கள் அதிகபட்சம் பிரிந்திருக்கலாம் என்பதைக் கண்டுகொள்வீர்கள்.
உதாரணம் 3: நீங்கள் ஒரு நல்ல வேலையில் இருக்கிறீர்கள், உங்களுக்குச் சொந்தமாக ஒரு வீடும் இருக்கிறது. இப்போது, இன்னுமொரு வீடோ அல்லது இடமோ குறைந்த விலைக்கு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். இன்னும் சில ஆண்டுகளில் அது நல்ல விலைக்குப் போகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், இப்போது அந்த வீட்டையோ அல்லது இடத்தையோ வாங்குவது தேவனுடைய சித்தமாக இருக்காது. ஏனென்றால், உங்கள் அடிப்படைத் தேவைகள் சந்திக்கப்பட்ட பிறகு, நீங்கள் உங்கள் சக கிறிஸ்தவ சகோதரனின் தேவையைச் சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். உங்கள் எதிர்காலத்திற்காக எதையுமே சேர்த்து வைக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. மாறாக, பூமியிலே உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பது (அளவுக்கு மீறி சொத்துக்களைச் சேர்ப்பது) தேவனுடைய சித்தமல்ல என்றே சொல்லுகிறேன். அந்தப் பணத்தை ஆத்தும ஆதாயம் செய்யவும், சக விசுவாசியின் தேவைகளைச் சந்திக்கவும் செலவிடுங்கள். ஆதித் திருச்சபை விசுவாசிகள் எப்படித் தங்களுடையதைப் பகிர்ந்துகொண்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
இதேபோன்று, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தை மீறாமல் இருக்கிறதா, அது தேவனைப் பிரியப்படுத்துகிறதாக இருக்கிறதா என்பதில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்காக ஜெபம்பண்ணி தேவனுடைய சித்தத்தை அறிய வேறொரு (கள்ளத்) தீர்க்கதரிசியை நாடி ஓட அவசியமில்லை. உங்கள் தெரிந்துகொள்ளுதல்களைக் குறித்துச் சீட்டுப்போட வேண்டிய அவசியமில்லை. வேதப்புத்தகத்தைக் குலுக்கல் சீட்டுபோலப் பயன்படுத்த வேண்டிய அவசியமுமில்லை. நீங்கள் வலதுபுறமோ இடதுபுறமோ சாயும்போது, "வழி இதுவே, இதிலே நடவுங்கள்" என்று சொல்லும் தேவனுடைய சத்தத்தை உங்கள் காதுகள் கேட்கும். "நீ நடக்கவேண்டிய வழியில் உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே" என்று அவர் சொல்லியிருக்கிறார். மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; அவற்றை அவர் ஏற்ற நேரத்தில் சரியாகச் செயல்படுத்துவார்.
பிரியமானவர்களே, இந்த உண்மையை நான் தெரிந்துகொண்டபோது ஒரு மிகப்பெரும் விடுதலையை அடைந்தேன். வேதவாக்கியம் சொல்லுகிறது: "சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்." "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வதில் இதுவே சத்தியமாகும். உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்தைச் செய்ய, கர்த்தர்தாமே உங்களுக்குக் கிருபையளிப்பாராக.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.