நற்செய்திப் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் இப்பாடலை எழுதியவர், அருள்திரு வே. சந்தியாகு ஐயராவார். இவர் பாடல் இயற்றுவதில் தாலந்து படைத்த இந்துப் பெற்றோருக்குப் பிறந்தார். தன் வாலிப வயதிலே, தன் இரு சகோதரரோடும், தந்தையோடும், இயேசு கிறிஸ்துவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். இந்துப் பின்னணியிலிருந்து வந்ததால், ஆண்டவருக்காக முழுவதும் வைராக்கியத்துடன் ஊழியம் செய்யத் தன்னை அர்ப்பணித்தார். எனவே, இப்பாடலைப் போன்ற மீட்புப்பணிப் பாடல்களை அவர் இயற்றியதில் ஆச்சரியமொன்றுமில்லை.
சந்தியாகு கணிதப் பேராசிரியராக இருந்து, பின்னர் மதுரையில் திருச்சபைப் போதகராக, முழு நேரப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். திருச்சபையின் ஒருமைப்பாட்டிற்காக மிகவும் பாடுபட்டார். சந்தியாகு இயற்றிய பாடல்கள் அனைத்தும், எளிமையானவைகளாக, திருமறைச் சத்தியங்களை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டுள்ளன.
இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் வாழ்ந்த சந்தியாகு, இந்திய தேச சமுதாயத்தின் இழிநிலை கண்டு வேதனையுற்றார். இச்சமுதாயத்தைச் சீர்திருத்த ஒரே வழி, இயேசு கிறிஸ்துவின் இறையாட்சி மட்டுமே, என்று நிச்சயமாக நம்பினார். எனவே, இப்பாடலில், சமுதாயத்திற்குக் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆற்ற வேண்டிய திருப்பணியை எடுத்துக் கூறுகிறார்.
பசியுற்ற மக்களுக்கும், வியாதியஸ்தருக்கும், சமுதாயத்தின் சாதி வேற்றுமைகளால் நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கும், சத்திய வழியைவிட்டு மார்க்கம் தப்பி நடப்பவர்களுக்கும், தாங்க முடியாத துன்பத்திலும், படுகுழியான நிலைகளிலும் இருப்பவர்களுக்கும், தேவையான ஒன்று, இயேசுவின் அன்பின் நற்செய்தியே; எனவே, "இறைமகன் இயேசுவை, இந்திய தேசத்தின் இளவரசராக்குவோம்," என்று பாடுகிறார்.
சமுதாயச் சீர்திருத்தமும் தேசப்பற்றும் மிகுந்த இப்பாடலை எழுதிய சந்தியாகு, தன் சொந்த வாழ்விலும் பல பதவிகளில் இருந்து, சமுதாயத்திற்குத் தொண்டாற்றினார். ஊராட்சி மன்றத் தலைவராகவும், தென்னிந்திய ஐக்கியத் திருச்சபையின் நடுவராகவும் பணியாற்றினார்.
சமுதாயத்தில் நடைமுறைக்கிறிஸ்தவனாக சாட்சியுள்ள வாழ்க்கை வாழவேண்டுமென, எடுத்துக் கூறும் இப்பாடலின் சிறப்பை உணர்ந்த, Dr. D.T. நைல்ஸ் இப்பாடலை, ஆங்கிலத்தில் "கிறிஸ்துவுக்கு அடிமைகள்'' என்ற தலைப்பில் வெளியிட்டு, ஆசியக் கண்டத்தின் பல நாடுகளிலும், உலகின் பல பகுதிகளிலும் பாடுமளவிற்குச் சிறப்புப் பெறச் செய்திருக்கிறார்.
மேனாட்டுப் பாமாலைப் பாடல்களையும் விரும்பிப் பாடிய சந்தியாகு, அப்பாடல்களை அப்படியே தமிழ் மொழியாக்கம் செய்து பாடுவதோடு நிறுத்திவிடாமல், அக்கருத்துக்களனைத்தும் சிறிதும் குறையாது, தமிழில் புதுமைப் பாடல்களாக எழுதி, தமிழ்ப் பண் அமைத்து வெளியிட்டார். இவற்றில் சிறப்பாக, ""என் அருள் நாதா இயேசுவே'' என்ற மொழியாக்கத்தின் மூல ஆங்கிலப்பாடலின் கருத்துச் செறிவுடன், "விந்தைக் கிறிஸ்தேசு ராஜா'' என்ற பாடலை, தமிழ்க் கிறிஸ்தவ சமுதாயத்திற்குத் தந்தார்.
இவ்வாறு ஆங்கிலப்பாடலின் கருத்து, சிறிதும் குறையாத வண்ணம், தமிழில் புதுப்பாடல்கள் இயற்றி, அவற்றிற்கு அருமையான தமிழ்ப்பண் அமைக்கும் இவரது சிறப்பை, அவர் எழுதிய மற்றொரு பிரபல பாடலாகிய, "தேவனே நான் உமதண்டையில்'' என்ற கீர்த்தனையில் காணலாம். பாமாலையில் அனைவரும் விரும்பிப் பாடும் "உம்மண்டை கர்த்தரே'' என்ற பாடலின் தமிழிசைப் பிரதிபலிப்பாக இக்கீர்த்தனை விளங்குகிறதல்லவா?
சந்தியாகு 1929-ம் ஆண்டு, தமது 60வது வயதில் மரித்தார். விந்தைக் கிறிஸ்தேசுவின் சிலுவையின் மேன்மையைப் பாடிய சந்தியாகுவின் கல்லறையில், 10 அடி உயரச் சிலுவையை, நினைவுச் சின்னமாக, வத்தலக்குண்டில் எழுப்பியிருக்கின்றனர். அவரது அடக்க ஆராதனையின் சிறப்பென்னவெனில், அவர் இயற்றிய பாடல்களே அந்த ஆராதனையில் பாடப்பட்டன.
இந்துப் பின்னணியிலிருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட குடும்பத்தின் மூன்று சகோதரர்களும், தங்களை ஆண்டவரின் ஊழியத்திற்கு அர்ப்பணம் செய்து, திருச்சபையைக் கட்டும் போதகர்களாக, முழுநேரப்பணியில் ஈடுபட்டார்கள் என்பது வியக்கத் தக்கதல்லவா? இப்படிப்பட்ட குடும்பத்தின் மூத்த சகோதரராக விளங்கியவரே வே.மாசிலாமணி ஐயராவார். அவரது இளைய தம்பி வே. சந்தியாகு ஐயரும், சிறந்த பாடலாசிரியர், மற்றும் இசை வல்லுனர் என்பதை நாம் அறிவோம்.
மாசிலாமணி ஐயர் திருப்புவனம் என்ற சிற்றூரின் போதகராகப் பணியாற்றிய நாட்களில், இந்தக் கும்மிப்பாடலை எழுதினார். ஆண்டவரின் புகழை, அனைவரும் அறியும் வண்ணம், அவரைப் போற்றிப்பாட, திருச்சபையாகிய கன்னியரை அழைப்பதாக, இப்பாடலை மாசிலாமணி எழுதியிருக்கிறார். சிறந்த வயலின் வித்துவானாகிய மாசிலாமணி, தனது பாடல் மற்றும் இசைத் தாலந்துகளை, நற்செய்திப் பணிக்கென முழுவதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டார்.
திருவண்ணாமலையின் வாரச் சந்தை நாட்களில், மாசிலாமணி தன் நண்பர்களுடன் அங்கு சென்று இசைக்கச்சேரி நடத்துவார். அப்போது அவரின் பாடலையும் இசையையும் கேட்க, சந்தைக்கு வந்த மக்கள் கூட்டமாகக் கூடுவார்கள். அவர்களுக்கு நற்செய்தியைப் பக்குவமாகப் பாடல்கள் வழியாக அவர் எடுத்துக்கூறி, ஆண்டவரின் அன்பால் அவர்களைக் கவர்ந்திடுவார்.
மாசிலாமணி எழுதிய "ஆர் இவர் ஆராரோ" என்ற கிறிஸ்மஸ் பாடலும், "வந்தனம் வந்தனமே", மற்றும் "ஆனந்தமே ஜெயா ஜெயா" என்ற புத்தாண்டுப் பாடல்களும், கிறிஸ்தவ சமுதாயத்திற்கு பண்டிகைகளின் மகிழ்ச்சியைக் கூட்டித் தரும் பிரபலமான பாடல்களாக விளங்குகின்றன. கருத்துச் செறிவுடன் விளங்கும் இப்பாடல்கள், நூற்றாண்டு காலமாய், திருச்சபை மக்களனைவரும் விரும்பிப் பாடும் பாடல்களாகத் திகழ்கின்றன. இப்பாடல்கள் பிரபலமாவதற்கு, அவர் அமைத்த சிறந்த இசைப்பண்களும் காரணமாகும். இசையும் பாடலின் சொல்லடுக்கும், அருமையாக இணைந்து வருவதை, ''ஆனந்தமே ஜெயா ஜெயா'' என்ற பாடலைப் பாடி மகிழ்வோர் நன்கு அறிவர்.
இந்த அருமையான துதிப் பாடலை எழுதிய அருள்திரு. வேதமாணிக்கம், 1864-ம் ஆண்டு கல்லுக் கூட்டத்தில், மதுரநாயகம். - தேவாயி தம்பதியினருக்கு இரண்டவது மகனாகப் பிறந்தார். ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த வேதமாணிக்கத்தை அவரது தாயார் தெய்வ பக்தியில் வளர்த்தார். தனது 20-வது வயதில், வேதமாணிக்கம் மத்திகோடு சபையைச் சார்ந்த இராகேலை மணம்புரிந்தார்.
வேதமாணிக்கம் தனது உயர் படிப்பை முடித்து அரசு அதிகாரியாக வேலையிலமர்ந்தார். பக்தி, விசுவாசம், மற்றும் சிறப்பாக, ஜெபம் ஆகியவற்றில் அதிக வாஞ்சையுள்ளவராக விளங்கினார். உலகப் பொருளுக்கோ, பணத்திற்கோ மனதில் இடம் கொடாது, மண்தரை போட்ட, ஓலை வேய்ந்த குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஆங்கிலேயரான அவரது மேலதிகாரி, அவரை நோக்கி, ''வேத மாணிக்கம், நீ வேதம் ஓத வேண்டியவன்; இங்கு எப்படி வேலை செய்யலாம்?'' என்று கேட்டார். இக்கேள்வி வேதமாணிக்கத்தின் உள்ளத்தில் பதிந்தது.
ஆழ்ந்து சிந்தித்த வேதமாணிக்கம், நற்செய்திப் பணியில் கொண்ட ஆர்வத்தால், உடனே அரசு வேலையை இராஜிநாமா செய்து விட்டு, மிஷனில் ஆசிரியராகவும், பின்னர் மிஷன் பள்ளிகளின் ஆய்வாளராகவும் பணியாற்றினார். சிறிது காலம் மத்திகோடு சபை உபதேசியராக ஊழியம் செய்தபின், 1912-ம் ஆண்டு கல்லுக்கூட்டம் திருச்சபைப் போதகரானார். பல பாடல்களை இயற்றி, இன்னிசையுடன் நற்செய்தி அளித்து வந்தார்.
தன்னை ஒறுத்து ஊழியம் செய்த போதகர் வேதமாணிக்கத்தின் ஆலய ஆராதனையில், மக்கள் திரள் கூட்டமாகப் பங்கேற்றனர். அவர் வாலிபர்களை நல்வழிப் படுத்த ""சுவிசேஷப் படையெழுச்சி,'' என்ற திறந்த வெளிக் கூட்டங்களை நடத்தினார். இந்நிகழ்ச்சிகளில் பாட, ''சுவிசேஷப் படையெழுச்சிக் கீதங்கள்'' என்ற 16 பாடல்கள் அடங்கிய பாடல் புத்தகத்தை வெளியிட்டார். ஞாயிறு தோறும் மாலை நேரத்தில், பெண்களுக்குச் சிறப்பு வேதப்பயிற்சிக் கூட்டங்களை, வீடுகளில் நடத்தினார். கண்ணியமும், நேர்மையும் நிறைந்த போதகர் வேதமாணிக்கம், ஊர்ப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஊர்க்கூட்ட நடுவராகவும் சமுதாயப் பணி செய்தார்.
ஆண்டவரின் ஊழியப் பாதையில் தன்னுடையது அனைத்தையும் அர்ப்பணம் செய்த வேதமாணிக்கத்தின் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதித்தார். அவரது மூன்று பையன்களுக்கும், மூன்று பெண்பிள்ளைகளுக்கும், தேவன் நல்ல படிப்பு, வேலை, மற்றும் இசை ஞானத்தைத் தந்தார். வயலின் தான் அவர்களின் குடும்ப வாத்தியம். அதில் அவர்கள் அனைவரும் மேதைகளாக விளங்கினார்கள். எனவே, குடும்பமாகப் பல இடங்களுக்குச் சென்று, நற்செய்திக் கூட்டங்களையும், கதாகாலட்சேபங்களையும் நடத்தி வந்தனர். வெள்ளி, மற்றும் ஞாயிறு இரவு ஜெபக் கூட்டங்கள் வாத்தியக்கருவிகளுடன் பாட்டுகள் முழங்க நடைபெற்றன.
1917-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி, அருள்திரு. வேதமாணிக்கம் மார்த்தாண்டத்திலுள்ள தனது மனைவியின் தங்கை வீட்டிற்குச் செல்ல பஸ்ஸில் ஏறும்போது தவறி விழுந்ததில், பேருந்தின் சக்கரம் அவரது காலில் ஏறிக் காயம் ஏற்பட்டது. அத்துடன் பயணத்தைத் தொடர்ந்த அவர், மார்த்தாண்டத்தில், மூன்றாம் நாளில், 10-05-1917 அன்று, தனது 53-வது வயதில் மரணமடைந்தார். அவர் இயற்றிய, ''ஆ! இன்ப காலமல்லோ'' ''ஜீவ வசனம் கூறுவோம்'' என்ற பாடல்களும், திருச்சபைக் கீர்த்தனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
மரியான் உபதேசியார் எளிய வாழ்வை மேற்கொண்டவர். பார்ப்பவர்கள் அவரை ஓர் ''ஏழைப் பரதேசி '' என எண்ணுமளவிற்கு, தாழ்மைக் கோலம் கொண்டவர். ஆண்டவருக்காக உற்சாகமாகப் பல இடங்களில் பணியாற்றினார். பல இனிய பாடல்களை, அவர் தன் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சி ததும்ப எழுதினார்.
கடந்த நூற்றாண்டில் நெல்லை மாவட்டத்தில் வாழ்ந்த மரியான் உபதேசியார், கொடிய தொழுநோயால் பீடிக்கப்பட்டார். எனினும், ஆண்டவர் பேரில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை, சிறிதும் குறைந்து போகவில்லை. தொடர்ந்து நற்செய்திப் பணிகளை, உற்சாகமாய்ச் செய்து வந்தார்.
ஒருமுறை, அவர் பணியாற்றிய திருச்சபையின் மூப்பர் ஒருவர், அவருடன் ஒத்துழைக்க மறுத்தார். மாறாக, அவருக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். அதனால், திருச்சபையின் வழிபாட்டில் கலந்து கொள்வதையும் நிறுத்தி விட்டார். இதை அறிந்து துயருற்ற மரியான், ஒரு ஞாயிற்றுக் கிழமை அவருடைய வீட்டிற்குச் சென்றார். அவரைத் திருவிருந்து ஆராதனையில் கலந்துகொள்ளுமாறு, வருந்தி அழைத்தார். அந்நிலையில் அவர் உள்ளத்தில் எழுந்ததே இப்பாடல். இந்த அருமையான பாடலை, மரியான் உருக்கமாகப் பாடினார். அதைக் கேட்ட அந்த மூப்பர், உடனே மனம் மாறி, மன்னிப்புக் கேட்டு, அந்நாளின் நற்கருணை ஆராதனையில் கலந்து கொண்டார்.
''சுந்தரப் பரம தேவ மைந்தன்'' போன்ற பல துதிப் பாடல்களையும், மரியான் உபதேசியார் இயற்றியிருக்கிறார். ''கிறிஸ்துவுக்குள் அனைவரும் சகோதரர்; எனவே, திருச்சபையில் சாதி வேற்றுமை பாராட்டுவது தவறு,'' என்று ஆணித்தரமாய் எடுத்துக் கூறினார். அவர் வாழ்ந்த காலத்தில், பரவலாக நிலவிய இச்சீர்கெட்ட பழக்கத்தைக் கடிந்து, சமுதாயச் சீர்திருத்தவாதியாக விளங்கினார்.
இயேசுவின் மந்தையில் சேராத மற்றவர்களும், அவரது தியாக அன்பை அறியவேண்டுமென, மரியான் விரும்பினார். எனவே, அவர் நற்செய்திப் பணியில் துரிதமாக ஈடுபட்டார். தாம் பணியாற்றிய சிற்றூரில் ஓர் ஆலயம் கட்ட, தீவிர முயற்சி எடுத்தார். அதனால், கிறிஸ்தவரல்லாத மற்றோரின் பலத்த எதிர்ப்புக்குள்ளானார். ஒருமுறை அவர்கள் அவரைக் கொலை செய்ய முயன்றபோது, மரியான் தமது நண்பரின் வீட்டுப் பரணில் ஒளிந்துகொண்டார். அந்நிலையிலும் விசுவாசத்தில் தளர்ந்திடாமல், ''என் ஐயா, தினம் உன்னை நம்பி நான்,''என்ற நம்பிக்கையூட்டும் பாடலை எழுதினார். இவ்வாறு, தன் வாழ்வின் பிரச்சினை நேரத்தைக் கூட, ஆண்டவரின் ஊழிய வாய்ப்பாக மாற்றிக் கொண்டார்.
மரியான் உபதேசியார், ஸ்ரீவைகுண்டம், கிறிஸ்தியான் கோட்டை, ஏழாயிரம் பண்ணை, ஆகிய பல ஊர்களில் ஊழியம் செய்துமுடித்து, பின்னர் தேவனின் பரம அழைப்பைப் பெற்று, ஏழாயிரம் பண்ணையில் அடக்கம் செய்யப்பட்டார்.
சென்னை பெரியார் திடலில் கிறிஸ்மஸ் இன்னிசை முழங்கிக் கொண்டிருந்தது. சிமியோனின் ஆனந்தக் களிப்பை இசைமழையாகப் பொழிந்து கொண்டிருந்தனர் தஞ்சை இம்மானுவேல் இசைக் குழுவினர்.
"கண்டேன் என் கண் குளிர
கர்த்தனையின்று கண்டேன் என் கண் குளிர"
கூடியிருந்த மக்கள் அவ்விசையின் இனிமையை ரசித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென மின்சாரம் தடைப்பட, பெரியார் திடல் இருளில் மூழ்கியது!
இசைக் குழுவின் தலைவர் திரு. T.A.G. துரைப்பாண்டியனும், குழுவின் மற்ற அங்கத்தினர்களும் கணப்பொழுது திகைத்தனர். ஆயினும், இசைக்குறியீடுகளைப் பாராமலே, ஒலி பெருக்கியின்றித் தொடர்ந்து பாடினர். நேரம் செல்லச்செல்ல, பாடகர்களில் ஆண்களும், பெண்களும் மாறி மாறி, "கண்டேன் கர்த்தனை இன்று," என்று உற்சாகத்துடன் உரத்த சத்தமாய்ப் பாட, பாடலின் உச்சக்கட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து, "கண்டேன்!" என்று முழங்க, "பளிச்" என விளக்குகள் திடலில் ஒளிர்ந்தன. அவையோரின் முகங்களும் மலர்ந்தன. இருள் சூழ்ந்த வேளையில், "கண்டேன் கர்த்தனை இன்று," என்ற பாடல், ஜெய தொனியாக என்னைப் பரவசப்படுத்தியது. என்றார் ஒருவர்!
கிறிஸ்மஸ் காலங்களில் அனைவரும் மிகவும் விரும்பி பாடும் இப்பாடலை இயற்றியவர் இசை மாமேதை ஆபிரகாம் பண்டிதர் ஆவார்.
ஆபிரகாம் பண்டிதர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை என்னும் ஊரில், முத்துசாமி-அன்னம்மாள் தம்பதியருக்குப் புதல்வராக
2-8-1859 அன்று பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், தமது அயராத உழைப்பாலும், விடா முயற்சியாலும், சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து ஆசிரியரானார். அச்சுக்கலை, தோட்டக்கலை, சித்த வைத்தியம், இசை ஆராய்ச்சி என்று, பல துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
இளமையிலேயே பக்தி நெறியில் சிறந்து விளங்கிய ஆபிரகாம், தித்திக்கும் செந்தமிழில் இறைவனைப் போற்றிப் பாடல்கள் இயற்ற ஆரம்பித்தார். வாழ்விலும், தாழ்விலும், இறைவனோடு ஒன்றி வாழக் கற்றுக் கொண்ட அவர், வறுமையில் வாடும்போது,
"ஏழை எனக்கிரங்க இன்னும் மனதில்லையா?"
என்று பாடுவார். வளம் பெருகியபோது,
"இல்லான் எந்தனுக்கு என்றும் நிறைவாய்
எல்லாம் தந்த உன்னை என்றும் துதிப்பேன்."
எனப் போற்றிப் பாடுவார். பாவ உணர்வால் தவிக்கும் போதோ,
"மண்ணுலக மீதில் மா பாவி நான்
மா தயாளு நீ - மன்னித்தாளுவாய்"
எனப் பாடுவார்.
ஆபிரகாம் பண்டிதர் தஞ்சையை மையமாகக் கொண்டு வாழ்ந்ததால், அவ்வூர் அவரது பெயருடன் இணைந்து புகழ் பெற்றது. அவர் ஏழு இசைமாநாடுகளைத் தஞ்சையில் தம் சொந்தச் செலவில் நடத்தினார். இசைத்தமிழை ஆராய்ந்து, தாம் கண்டுபிடித்த உண்மைகளை 1917-ம் ஆண்டு கருணாமிர்த சாகரம் - முதல் புத்தகத்தில் வெளியிட்டார். 22 அலகுகள் ஓர் இயக்கில் பூர்த்தியடையாதென்பதும், ஓர் இயக்கில் 24 அலகுகள் உள்ளன என்பதும் அவர் கண்டறிந்த மாபெரும் உண்மையாகும். கருணாமிர்த சாகரம் - இரண்டாம் புத்தகத்தில் ராகங்களைப் பற்றிய முழு விபரங்களையும் கொடுத்துள்ளார்.
இவ்விரு ஆராய்ச்சி நூல்களின் அடிப்படையில் பண்டிதரின் பேரனான திரு. D.A. தனபாண்டியன், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் சார்பாக, "நுண்ணலகுகளும் இராகங்களும்'' என்ற தலைப்பில், மேலும் ஆராய்ச்சி செய்து, ஆபிரகாம் பண்டிதரின் கண்டுபிடிப்புகளை உபகரணங்களுடன் நிரூபித்தார். இம்முயற்சியைப் பாராட்டி, தமிழக அரசு 1990-ம் ஆண்டு அவருக்குக் ""கலைமாமணி'' பட்டம் அளித்து கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இசையில் சிறந்து விளங்கிய ஆபிரகாம், இயேசு பெருமானின் நாமத்தைத் துதிப்பதையே தன் வாழ்வின் பேரின்பமாகக் கருதினார். அவரது,
"திரு நாமம் துதிக்க வரமருள்
கருணாமிர்த சாகரத் தயாளோ"
என்ற பாடலும்,
"வரந்தரவே வாவா தேவா
நிரந்தரமாக நின்னை நான் புகழ
மறந்திடா துனை வாழ்த்தியே மகிழ"
என்ற பாடலும், அவரது இதயத்தின் வாஞ்சையை வெளிப்படுத்துகின்றன.
தெலுங்கில் பிற தெய்வங்களைப் போற்றி எழுதப்பட்ட கீதங்கள், சுரஜதிகள், வர்ணங்கள், கீர்த்தனைகளைக் கண்ட ஆபிரகாம் பண்டிதர், இயேசு பெருமானைப் போற்றும் வகையில், இவற்றிற்குத் தமிழில் கிறிஸ்தவ சாகித்தியங்களை இயற்றி அரும்பணி புரிந்தார். எடுத்துக்காட்டாக, "பதும நாபா பரம புருஷா" என்ற மலஹரி கீதம், "உன்னத வாசா உச்சித நேசா," என மாறிற்று. பிலஹரி சுரஜதி, "வாரும் தேவதேவா இங்கு, வாரும் உனதடிமை மன மகிழ," என இறைவனை வருந்தி அழைக்கும் ஜெபப் பாடலாக மாறியது. இவ்வாறு, கிறிஸ்தவ நெறி பிறழாமல் கர்நாடக சங்கீதம் பயில, ஆபிரகாம் பண்டிதர் வழிவகுத்தார்.
இறைவனின் பேரன்பில் மூழ்கித் திளைத்து எழுதப்பட்ட இத்தமிழிசைப் பாடல்களை நாமும் பயின்று, பாடி, பரமனருள் பெறுவோமா?
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.