ஜான் பால்மர் 1812-ம் ஆண்டு மயிலாடியில் பிறந்தார். தன் வாழ்வின் ஆரம்ப நாட்களிலேயே ஆண்டவரைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, நாகர்கோவில் பகுதியில் மிஷனரிகளுடன் சேர்ந்து, உற்சாகமாக நற்செய்திப் பணியாற்றினார். பால்மர் பல பாடல்களை எழுதிய சிறந்த கவிஞராவார். அவர், ஆண்டவரின் வாழ்க்கைச் சரித்திரத்தை அழகாகச் சித்தரிக்கும் "கிறிஸ்தாயணம்,'' என்ற காவியத்தை உருவாக்கியிருக்கிறார்.
பால்மர் திருவனந்தபுரத்தில் அரசு அச்சகத்தில் பணியாற்றி வந்தார். நாதஸ்வர இசையைக் கேட்டு ரசிப்பது, அவருக்கு விருப்பமான பொழுது போக்காகும். எனவே, அவர் கேட்கும் இசையின் ராகத்தில் லயித்து, பரவசமாகப் பாடல்களை எழுதிவிடுவார்.
அந்நாட்களில், பொது இடங்களில் நாதஸ்வர இசைக்கச்சேரிகள் நடத்தப்படுவதில்லை. திருவனந்தபுரத்தின் புகழ்பெற்ற பத்மனாப சுவாமி கோவிலில், தினந்தோறும் அதிகாலைப் பூசை வேளையில், நாதஸ்வர இசை வாசிக்கப்படும். ஆனால், அக்கோவிலில் கிறிஸ்தவர் எவரும் நுழைந்தால், அவர்களுக்கு மரண தண்டனை உண்டு. எனினும், பால்மர் தன் உயிரையும் பொருட்படுத்தாது, ஒரு போர்வையால் தன்னை முழுவதும் மறைத்துக் கொண்டு, நாதஸ்வர இசையைக் கேட்கச் செல்லுவார். கேட்டு மகிழ்ந்த அதே ராகத்தில், அன்றே, ஆண்டவரைப் போற்றி அழகான ஒரு பாடல் உருவாகிவிடும்.
இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையின் வழியே, உயிரைப் பணயம் வைத்து எழுதப்பட்ட அருமையான பாடல் தான், "இயேசுவே கிருபாசனப் பதியே'' ஆகும்.
பால்மர், தமது 71 ஆண்டு கால வாழ்க்கையில், பல துன்பங்களுக்கும், வேதனை நிறைந்த அனுபவங்களுக்கும் உள்ளாயிருக்க வேண்டும். இவ்வுலக மக்களால் பல எதிர்ப்புகளை சந்தித்திருக்க வேண்டும். அடுக்கடுக்காய் வந்த இச்சோதனைகளால் தன் உள்ளம் சோர்ந்துபோகாதபடி, அவர் இறைவனின் துணையை நாடி, அவற்றின் மீது வெற்றியையும் பெற்றிருக்க வேண்டும். இவ்வனுபவமே அவரை, நாம் விரும்பிப் பாடும், "வாராவினை வந்தாலும் சோராதே மனமே,'' என்ற சிறந்த ஆறுதல் பாடலை எழுதத் தூண்டியிருக்கும்.
ஜான் பால்மர் இயற்றிய ஏனைய பாடல்களில் பிரபலமானவை:
பல்லவி
தேவாலயத்தில் மணமகனும் மணமகளும், "வாழ்விலும் தாழ்விலும் இணைந்து வாழுவோம்," என்று வாக்குக் கொடுத்து, இறையருள் வேண்டி நிற்கின்றனர். அப்பொழுது மங்களகரமாக ஒலிக்கும் பாடல் எது தெரியுமா?
"மங்களம் செழிக்கக் கிருபையருளும் மங்கள நாதனே" என்ற இப்பாடலே!
"இப்பாடல் பாடப்படாத கிறிஸ்தவத் திருமணமே தமிழ் உலகில் இல்லை," எனக் கூறலாம்! திருமண வைபவங்களில் அனைவரும் விரும்பிப் பாடும் இப்பாடலை இயற்றியவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ஆவார்.
ஆபிரகாம் பண்டிதர் தன் பிள்ளைகளின் திருமணங்களை நடத்தியபோது, இயேசு பெருமானுக்கு முதல் அழைப்புப் பத்திரிகையை வைத்து, திருமண அழைப்புக் கொடுப்பது வழக்கம். இறைவனை அவர் எவ்வளவு உரிமையோடு அழைக்கிறார் என்பதை அவர் இயற்றிய மற்றொரு திருமணப் பாடலில் காணலாம்.
திருமண வைபவ ஆயத்தங்களின் பலவித வேலைகளில் அமிழ்ந்து தவிக்கும் வேளையில், அழைப்பை ஏற்று , கானா ஊர்க் கலியாணத்தில் வந்திருந்து , குறைவை நிறைவாக்கிய நம் இறைவன் இயேசு, இம்மானுவேலாக நம்மோடு இருக்கிறார், என்ற நல்நம்பிக்கை, எத்தனை ஆனந்தத்தையும் புதுபெலனையும் நமக்களிக்கின்றது!
ஆபிரகாம் பண்டிதரின் வேண்டுகோளுக்கிணங்கி , அவரது இல்லத்தில் நடந்த திருமணத்திற்கு இறைவன் ஒருமுறை ஓர் ஏழைச் சிறுவனாக வந்ததாகவும், யாரென அச்சிறுவனை அவர் வினவியபோது, மரியின் மைந்தனெனக் கூறி மறைந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தையே ஆபிரகாம் அவரெழுதிய ஒரு பாடலில் வெளிப்படுத்துகிறார்:
ஆபிரகாம் எழுதிய மற்றுமொரு திருமணப் பாடல் லாலிப் பாடலாகும். தமிழ் நாட்டில் மணமகனையும் மணமகளையும் ஊஞ்சலில் இருத்தி, பெண்கள் அவ்வூஞ்சலை ஆட்டி, லாலி பாடுவது மரபாகும். இதையே, ஆபிரகாம் ஞான மணவாளனான இறைவனைத் தம் உள்ளமெனும் ஊஞ்சலில் இருத்தி, லாலி பாடி மகிழ்கிறார்!
நாதவடிவான இறைவனை ஆராதிக்க மிகச்சிறந்த வழி, அவரைப் போற்றிப் பாடுவதே. எனவே, நம் வாழ்வின் அனைத்து வைபவங்களிலும், நாத நற்சொரூபனை நாமும் பாடித் துதிப்போமா?
இப்பாடல் 1811-ம் ஆண்டு, வேதநாயக சாஸ்திரியார் இலங்கைக்கு நற்செய்திப் பணி செய்யக் குடும்பமாய்ச் சென்ற போது அவரால் எழுதப்பட்டது.
சாஸ்திரியாரின் இலங்கைப் பயணம் முழுவதுமே, பல தடைகளை மேற்கொண்டு செய்ய நேரிட்டது. பாம்பனை அவர்கள் அடைந்த போது, காற்று சாதகமாக அமையாத காரணத்தால், சுமார் ஒரு மாத காலம் பாம்பனிலேயே தங்க வேண்டியதாயிற்று. அவர் கையிலிருந்த, பணமனைத்தும் செலவாகி, ஒரே ஒரு காசு மட்டும் மீதமிருந்தது. இந்நிலையில், சாஸ்திரியார், "தேவனால் எல்லாம் கூடும்,'' என்ற வேத வாக்கை நம்பியவராய், படகோட்டியைத் தயாராக இருக்கக் கூறி, தேவனைத் துதித்து, "வட காற்றருள் திரியேகா'' என்ற பாடலை எழுதிப் பாடினார். அவர் பாடி முடிக்கு முன்னரே, காற்று அவர்களுக்குச் சாதகமாய் மாறியது.
யாழ்ப்பாணத்தில் போதகர் கிறிஸ்தியான் தாவீது, அவர்களை வரவேற்று, அவர்கள் அங்கு தங்கிய நாட்களெல்லாம், செலவுக்குப் பணம் கொடுத்துப் பராமரித்தார். அங்கு தங்கியிருந்த போது, வேதநாயக சாஸ்திரியார் குழுவினர், சலவைக் காரனிடம் தங்கள் துணிகள் அனைத்தையும் தோய்க்கக் கொடுத்தனர். சலவைக்காரன் வீட்டில் திருடன் நுழைந்து, சாஸ்திரியாரின் குடும்பத்தினருடைய துணிமணிகள் அனைத்தையும் திருடிக் கொண்டு சென்றான். சலவைக்காரன் ஓடிவந்து, செய்தியைச் சாஸ்திரியாருக்கு அறிவித்தான்.
வேதநாயக சாஸ்திரியார் தீர விசாரித்து, தனது இக்கட்டான நிலையை அறிந்தார். அப்போது அவர் உள்ளம் திகைப்புற்றது. உடனே, தன்னைத் தேற்றிக் கொள்ள, ஆண்டவன் துணையை நாடி, இப்பாடலை, அவ்வீட்டின் திண்ணையில் அமர்ந்தவாறு பாடலானார். அப்போது, அத்தெருவின் வழியே வந்த ராமசாமி என்ற இந்து புகையிலை வியாபாரி, சாஸ்திரியாரின் பாடலைக் கேட்டு ரசித்து மயங்கினார். அப்பாட்டின் வார்த்தைகளின் மூலம், சாஸ்திரியாரின் நிலைமையைப் புரிந்து கொண்டார். ஆண்டவர் அனுப்பிய நல்ல சமாரியனாக, அவர், இரண்டு புடவைகளையும், நானூறு ரூபாய் பணத்தையும் கொடுத்து உதவினார். இன்னும் தேவைகள் இருப்பின், அதையும் தாம் தருவதாக வாக்களித்தார். ஆண்டவரின் அதிசய வழிநடத்துதலால் அகமகிழ்ந்த வேதநாயக சாஸ்திரியார், இலங்கையின் நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று, நற்செய்தித் தொண்டாற்றினார்.
கவிஞர் தே. தேவசகாயம் சாட்சியாபுரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மேசியாதாஸ், தேவநேசன் என்று இரு குமாரர்கள் உண்டு. ஒரு நாள் இவ்விரு பையன்களும் பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில், ஏதோ ஒரு பொருளுக்காக, "இது என்னுடையது; உன்னுடையதல்ல,'' என்று கூச்சலிட்டுச் சண்டை போட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்த முயன்ற தந்தையின் உள்ளத்தில், மேலே குறிப்பிட்ட பவுலடியாரின் வேத அறிவுரை நினைவில் வந்தது.
இந்நிகழ்ச்சியால் உள்ளக்கிளர்ச்சி பெற்ற இக்கவிஞர், இந்தப் பாடலின் முதல் வரியை, "நீ உனக்குச் சொந்தமல்லவே, தாசா, நேசா,'' என்பதாக எழுதினார். "ஒவ்வொரு கிறிஸ்தவனும் இறைவன் இயேசுவின் விலையேறப்பெற்ற ரத்தத்தால் மீட்டெடுக்கப்பட்ட அடிமை. எனவே, தனக்கென்று உரிமை பாராட்டத் தகுதியற்றவன்."
இக்கருத்தை மையமாகக்கொண்டு, இந்த அருமையான பாடலை, தேவசகாயம் தன் பிள்ளைகளுக்கென எழுதினார். அதையே, திருச்சபைப் பிள்ளைகளாகிய நம் அனைவருக்கும் பயன்படும் வகையில், "தாசா.. நேசா..'' என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு, ''மீட்கப்பட்ட பாவி'' என்ற வார்த்தைகள் அவ்விடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
"தம் ஜீவனையே ஈனச் சிலுவையில் கிரயமாகச் செலுத்தி, பாவிகளாகிய நம்மை மீட்டெடுத்த இயேசுவுக்கே நாம் சொந்தம். எனவே, பழைய ஏற்பாட்டுக் கால "விருப்ப அடிமைகளைப்" போல, நாமும், தொடர்ந்து ஜீவ காலம் முழுவதும், அவரையே அண்டி வாழ வேண்டும். அவரை விட்டு ஓட முயற்சிக்கலாகாது. பழைய வாழ்க்கையின் மீது மீண்டும் நாட்டம் கொள்ளக் கூடாது'' என்ற கிறிஸ்தவத் தத்துவக் கருத்துக்களை அழகாக, தெளிவாக, இப்பாடலில் தமது மைந்தர்களுக்காக இக்கவிஞர் எழுதியிருக்கிறார்.
இப்பாடலின் கடைசிச் சரணத்தைச் சார்ந்த ஒரு நிகழ்ச்சியைக் கிறிஸ்தவ அருட்கவிஞராகிய அருட்திரு டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் இவ்வாறு எழுதுகிறார்: "யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த Dr. D.T நைல்ஸ் என்ற பெரியார், வேலூர் கிறிஸ்தவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருக்குப் புற்றுநோய் கண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டபோது, அவர், எவ்வித மனக்கலக்கமும் அடையாமல், மருத்துவர்களையும், நண்பர்களையும் பார்த்து, "நாம் பிழைத்தாலும், மரித்தாலும், ஆண்டவருக்குச் சொந்தமானவர்கள்," என்று கூறினார்.
இந்த நிலையான கிறிஸ்தவ நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் இப்பாடலை, கவிஞர் தேவசகாயம் எவ்வளவு நேர்த்தியாக எழுதியிருக்கிறார்! கவிஞர் தேவசகாயம் இயற்றிய மற்றுமிரு பாடல்களும் திருச்சபை மக்களால் விரும்பிப் பாடப்படுகின்றன. அவை, "வா, பாவி, மலைத்து நில்லாதே, வா'' என்ற அன்பின் அழைப்புப் பாடலும், "அடைக்கலம் அடைக்கலமே'' என்ற நம்பிக்கையூட்டும் பாடலுமாகும்.
தென்னிந்தியச் திருச்சபையின் திருச்சி - தஞ்சை திருமண்டல மிஷனரிப் பணித்தளமாக, திருச்சி மாவட்டத்திலுள்ள பச்சை மலை விளங்குகிறது. இப்பணித்தளத்தின் ஊழிய தரிசனத்தை முதலாவது பெற்றவர், "கொல்லிமலை மிஷனரி'' என அழைக்கப்படும் ஆங்கிலேய மிஷனரி, ஜெசிமன் பிராண்ட் ஆவார். இவர் குஷ்டரோகிகளுக்கு அறுவை சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்த, உலகப் பிரசித்தி பெற்ற மருத்துவ மேதையும், வேலூர் CMC மருத்துவமனையின் முன்னாள் இயக்குனருமான Dr. பால் பிராண்டின் தந்தையாவார்.
தமிழைக் கற்று, கொல்லிமலை ஊழியத்திற்குத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஜெசிமனுக்குப் பிடித்த பாடல், தன் தாய்மொழியான ஆங்கிலத்திலல்ல. தமிழில் உள்ள "தேவபிதா'' என்ற இப்பாடலே. தனது 43-வது வயதிலேயே, அவர் கொல்லி மலையின் விஷக்காய்ச்சலால் மரித்தபோது, அவர் அடிக்கடி விரும்பிப் பாடிய இப்பாடலையே, அவரது அடக்க ஆராதனையில், அம்மலை மக்கள் பாடினார்கள்.
இவ்வாறு, வெளிநாட்டுத் தேவ ஊழியர்களையும் கவர்ந்த இப்பாடல், கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. இன்றும், இந்தியாவின் வட மாநிலங்களில் நடைபெறும் மிஷனரிப் பணிகளில், பல ஆதிவாசி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுப் பாடப்படும் முதல் பாடலாக, இப்பாடல் விளங்குகிறது. தமிழகத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீர்த்தனைகளில், இப்பாடல் மிகச் சிறந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட புகழ்பெற்ற இப்பாடலை எழுதியவர், நெய்யூரைச் சேர்ந்த யோசேப்பு ஆவார். தன் இளமைப் பருவத்திலேயே தன் உடன் பிறந்தோரையும், தன் தந்தையையும் இழந்த அவர், பின்னர் தன் தாயையும் இழந்து அனாதையானார். இந்நிலையில், தன் பரம பிதாவையே நம்பி வாழ்ந்த யோசேப்பு, அவரை உரிமையோடு, "தேவபிதா'' என அழைத்து, இப்பாடலை எழுதியிருக்கிறார்.
இப்பாடலின் முக்கியத்துவம் என்னவெனில், இதின் அடிப்படையான 23-ம் சங்கீதம், பலவித சூழ்நிலைகளிலும் உபயோகிக்கப்படுவது போல, இப்பாடலும், திருமணம் போன்ற சந்தோஷ நிகழ்ச்சிகளில் தேவ அருளைப் பெற வேண்டிப் பாடுவதற்கும், திகிலுற்ற வேளைகளில் அடைக்கலப் பாடலாகப் பாடுவதற்கும், துயருற்றுக் கலங்கி நிற்கும் வேளைகளிலும் அருமையானவர்களை இழந்து தவிக்கும் வேளைகளிலும் ஆறுதல் பெறப் பாடுவதற்கும் ஏற்ற தகுதி நிறைந்ததாக விளங்குகிறது. எனவே, இப்பாடல், பலதரப்பட்ட மக்களும், பற்பல மொழிகளில், இவ்வுலக வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளிலும், நிகழ்ச்சிகளிலும், விரும்பிப் பாடும் சிறப்புப் பாடலாகத் தனிச்சிறப்புப் பெற்றிருக்கிறது.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.