எதிர் பாலினத்தவர் (ஆண்) மீது ஒரு பெண்னின் ஆடை ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படையாக விவாதித்து, எல்லாக் காரியங்களிலும் தேவனைப் பிரியப்படுத்த வேண்டுமென்று விரும்புவோருக்கு உதவியாக இருக்கக்கூடிய தெய்வீக ஆலோசனைகளையும், நாம் கொண்டிருக்கவேண்டிய புரிதலையும் இந்தக் கட்டுரை விரிவாக முன்வைக்கிறது. ஒரு பெண்ணின் அழகின் மீது ஆண் இச்சைகொள்வது விபசாரம் என்று நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்குக் கற்பித்தார். “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.” (மத்தேயு 5:28). அதாவது ஓர் ஆண் ஒரு பெண்ணின் உடலைத் தொடாமலேயே, அவள்மீது கொண்டிருக்கிற இச்சையினால் அவளைக் குறித்து தவறான நோக்கில் தன் சிந்தனையில் அசைபோட்டுக் கொண்டிருந்தாலே அது விபாசாரம் ஆகிவிடும் என்பதே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கருத்தாகும். ஓர் ஆண் தனது இருதயத்தில் ஒரு பெண்ணின் மீது இச்சைகொண்டு செய்கிற பாவத்துக்கு அந்தப் பெண் அணிந்திருக்கிற ஆடை ஒரு காரணமாக இருக்கிறது. இத்தகைய பாவத்திற்கு பெண்ணின் அரைகுறையான ஆடை மட்டுமே காரணம் என்று கூறுவது முற்றிலும் உண்மையல்ல தாயினும், பொதுவாக இருக்கக்கூடிய பல காரணங்களில் இதுவும் ஒன்றாகும். விபசார மயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடைய ஆண்கள் (2 பேதுரு 2:14) இந்தப் பூமியிலேயே மிகவும் அடக்கமான பெண்ணின் மீதும் தனது காமப் பார்வையை வீசுவர் என்பதில் சந்தேகமில்லை.
இருப்பினும், கிறிஸ்தவ விசுவாசத்தில் நிலைகொண்டிருப்பதற்காக பாவத்திற்கு எதிராகப் போராடி, தனது பாவ உணர்ச்சிகளுக்கு எதிராக ஒரு நல்ல போராட்டத்தை நடத்துகிற ஒரு மனிதன், மோசமான ஆடை அணிந்த பெண்ணின் பார்வையைச் சமாளிப்பதற்காகக் கூடுதலான சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இவ்வாறு இந்த மனிதன் அடிக்கடியாக இவ்விதமான சோதனைக்கு ஆளாகும் போது அவர் இதில் வெற்றிகொள்ள முடியாமல், தோல்வியுற்று விழுந்துவிடுகிறார். மிகச் சிறந்த பரிசுத்தவான்கள்கூட இத்தகைய சோதனைகள் வரும்போது எப்போதும் வெற்றிகொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது என்பதே யதார்த்தமான உண்மையாகும். ஓர் ஆண் பெண்ணின் மீது இச்சை கொள்வது அவனுடைய சொந்த விருப்பப் பாவமேயன்றி, இதற்காக எதிர்பாலராகிய ஒரு பெண்ணைக் குற்றம் சொல்லக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அதேவேளையில், ஓர் ஆணின் தடுமாற்றத்திற்கும் அவனது வீழ்ச்சிக்கும் ஒரு பெண்ணின் நாகரீகமற்ற உடைகளும், அவளுடைய இச்சையான பேச்சுகளும், அவளுடைய விகற்பமான நடத்தைகளும் காரணமாக இருந்தால், தேவனுக்கு முன்பாக அவள் அந்த நடத்தையைக் குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதையும் ஒவ்வொரு பெண்களும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
“இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் (அது பெண்ணாயிருந்தாலும்) இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!” *(மத்தேயு. 18:7) என்று ஆண்டவர் கூறியது மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.
இந்தக் கட்டுரையில் ஆசிரியர் தனது பெயரை வெளிப்படுத்தவில்லை. இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைப் பிரயோகங்களும், சொல்லப்பட்டிருக்கிற முறைகளும் ஆசிரியர் தனது அடையாளத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் என்னும் கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கலாம். இருப்பினும், இதன் ஆசிரியர் எதையும் தவறான முறையில் எழுதாமல், பொதுவாக எல்லா எழுத்தாளர்களும் தங்களது கட்டுரையில் நடைமுறையில் என்ன வார்த்தைகளைக் கொண்டு எழுதுவார்களோ அவற்றைப் பயன்டுத்தியே இவரும் எழுதியுள்ளார். பாவத்தை அதன் அசலான பெயரில் குறிப்பிட்டு அம்பலப்படுத்துவது எந்த வகையிலும் பாவமாகக் கருத முடியாது என்று வெளியீட்டாளர்களாகிய நாங்களும் நினைக்கிறோம். ஆகவே இதன் ஆசிரியரின் கருத்தை நாங்கள் எவ்விதத்திலும் மாற்றி எழுதாமல், அவர் என்ன சொல்ல வருகிறாரோ அதன் கருத்தை நீர்த்துப் போகச் செய்யாத அளவிற்கு அதன் அசல் வடியிலேயே கொடுத்திருக்கிறோம்.
சில விஷயங்களை இங்கே குறிப்பிடுவது ஆட்சேபனைக்குரியது என்று எந்த வாசகராவது கருதினால், அதன் நடைமுறைகளை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் கண்டிக்க வேண்டும் என்று வருந்தி உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். நடைமுறையில் இருக்கிற ஓர் அநாகரிகமான செயலைத் திருத்துவதற்காகவும், கண்டிப்பதற்காகவும் சற்றுக் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது எந்த வகையிலும் அந்த தவறைக் காட்டிலும் மோசமானது ஆகாது என்பதைக் கூறிக்கொள்கிறோம். சொல்வதற்குச் சங்கடமான காரியங்களை எவ்விதத்திலும் பூசிமெழுகாமல், உள்ளதை உள்ளபடியே நாங்கள் இங்கே குறிப்பிடுவதற்காக கிறிஸ்துவின் நாமத்தில் உங்களிடத்தில் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறோம். கர்த்தருக்குள் இருக்கிற ஒவ்வொரு சகோதரியும் சரியான கிறிஸ்தவ நற்பண்புகளை வெளிப்படுத்தி, ஆடை அணியும் காரியத்திலும் கர்த்தரைக் கனப்படுத்த வேண்டும் என்னும் தூய நோக்கத்துடன் இக்கட்டுரையை நாங்கள் வெளியிடுகிறோம்.
“ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின் மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள்” (2 சாமுவேல் 11:2)
தாவீதின் பாவத்தைப் பற்றி நாம் அடிக்கடியாகவும் அதிகமாகவும் பேசுகிறோம். ஆனால் பத்சேபாளின் பாவத்தைப் பற்றி நாம் பேசுவதோ அல்லது அதைக் குறித்துக் கேள்விப்படுவதோ கூட மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது. தாவீதின் பாவம் மிகப் பெரியது, பத்சேபாளின் பாவமோ மிகச் சிறியது என்பது நிதர்சனமாக உண்மை. தாவீதின் பாவம் வேண்டுமென்றே செய்யப்பட்டது மற்றும் யார் நம்மைக் கேள்வி கேட்பார்கள் என்னும் அகந்தையில் செய்யப்பட்டது. ஆனால் பத்சேபாளின் பாவமோ கவனக்குறைவால் மட்டுமே நடைபெற்றது. தாவீது வேண்டுமென்றே பத்சேபாளுடன் விபச்சாரம் செய்தார் மேலும் அவனுடைய கணவனை திட்டமிட்டுக் கொலை செய்தார். ஆனால் பத்சேபாளின் வாழ்விலே இது ஏதேச்சையாக நடந்த ஒன்று, மேலும் தாவீதின் கண்களுக்கு முன்பாகத் தன்னை எதிர்பாராத வகையில் வெளிப்படுத்திக் காட்டினாள். எனவே தாவீதின் பாவம் பெரியது என்பதிலும் பத்சேபாளின் பாவம் சிறியது என்பதிலும் நமக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
ஆயினும் பத்சேபாளின் சிறிய பாவமே, தாவீதின் பெரிய பாவத்திற்குக் காரணமாக அமைந்து விட்டது என்பதும் உண்மையாகவே உள்ளது. பத்சேபாளுடைய அறியாமையின் சிறிய பாவமானது, சிந்தனையற்றதும் கவனக்குறைவாகவும் தாவீதுக்கு முன்பாகத் தன்னை வெளிப்படுத்திக் காட்டிய அவளுடைய சிறிய செயலானது, “சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!” (யாக். 3:5) என்னும் யாக்கோபின் வார்த்தைகளுக்கு ஏற்ப, ஒரு பெரிய தீப்பிழம்பை உண்டாக்கி காட்டையே எரித்த தீப்பொறியைப் போல மாறிவிட்டது. ஒரு பக்கம் பார்த்தால், பத்சேபாளைப் பொருத்தவரை அது தாவீதின் கண்களுக்கு முன்பாக கொஞ்சம் கவனக்குறைவாக நடந்துகொண்ட செயலாகவும், கொஞ்சம் சிந்தனையற்ற செயலாகவும் மற்றும் ஏதேச்சையாகவும் தற்செயலாகவும் நடைபெற்ற ஒரு செயலாகவும் இருக்கிறது. ஆனால் மறுபக்கம் பார்த்தால், தாவீதைப் பொருத்தவரை அது விபச்சாரமாகவும், மனசாட்சியின் குற்ற உணர்வை உண்டாக்கிய செயலாகவும் மாறிவிட்டது. மேலும் இது கொலைக்கும், அவளுடைய கணவனின் இழப்புக்கும், ஏதுவும் அறியாத போர் வீரர்களின் மரணத்திற்கும் வழிவகுத்துக் கொடுத்துவிட்டது. இவை மட்டுமின்றி, தேவனின் எதிரிகள் அவரைத் தூஷிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டதாகவும், முறையற்ற கர்ப்பம் தரித்த அவமானத்திற்கும், ஒன்றும் அறியாத குழந்தையின் மரணத்திற்கு ஏதுவாகவும், பின்னாட்களில் அப்சலோம் தவறான முறையில் தந்தையை எதிர்த்துக் கலகம் செய்வதற்கும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போரில் அவன் மரணமடைவதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. மேலும் இஸ்ரவேல் மக்கள் அனைவருடைய பார்வையில் படும்படி தாவீதின் மனைவிகளைத் தீட்டுப்படுத்திய தவறான செயலுக்கும், தாவீதின் குடும்பத்தார் ஒருவரையொருவர் வெட்டிக் கொலை செய்யப்படுவதற்கு ஏதுவான சூழலை உண்டாக்கியதற்கும் பத்சேபாளின் ஒரு சிறிய பாவம் காணமாக அமைந்துவிட்டது. (2 சாமு. 12:11-18)
“ஒரு சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டை எரித்துவிடுகிறது!” என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பத்சேபாள் மட்டும் தன் உடலை ஆணின் பார்வையில் காட்டாமல் மிகக் கவனமாக இருந்திருந்தால் இந்தப் பெரிய தீமையான காரியங்கள் எதுவும் நடந்திருக்காது. நான் கூறுவதைக் சிரத்தையுடன் கவனிக்கவும்: அவள் இந்தக் காரியத்தை திட்டமிட்டுச் செய்யவுமில்லை, அல்லது இந்தவிதமான தீமையான காரியம் நடந்துவிடும் என்று முன்னதாக யோசித்தும் செய்யவில்லை. ஆனாலும் இவையெல்லாம் நடைபெறுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொடுத்துவிட்டாள். அவள் தன் உடலை உள்நோக்கத்துடனோ அல்லது வேண்டுமென்றோ காட்டவில்லை. அவள் அதை உணராமலும் சிந்தனையின்றியுமே செய்தாள். ஆயினும்கூட அவளுடைய அறியாமையினுடைய சிறிய பாவத்தின் முடிவு, அது நோக்கத்துடனும், விருப்பத்துடனும் செய்யப்பட்டால் என்னவிதமான விளைவை உண்டுபண்ணுமோ அவ்விதமான விரும்பத்தகாத விளைவையே உண்டாக்கி விட்டது.
நான் மேற்கண்ட அனைத்துக் காரியங்களையும் இப்பொழுது எழுதுவதற்கான காரணம், “பத்சேபாளைப் போலவே கவனக்குறைவான வகையில் குற்றங்களைச் செய்கிற பல கிறிஸ்தவப் பெண்கள் இன்றைக்கும் நம்மிடையே இருக்கிறார்கள்” என்பதினாலேயே ஆகும்.
தேவபக்தியுள்ள பெண்கள் தங்களது உடலை விரும்பத்தகாத வகையில் காட்ட வேண்டும் என்று ஒருபோதும் எண்ணுவதில்லை. இத்தகைய எண்ணங்கள் தோன்றினாலும் கூட அவர்கள் அந்த எண்ணத்திலிருந்து உடனடியாக அச்சத்துடன் வெளியே வந்துவிடுவார்கள்.
இருப்பினும் கவனக்குறைவாகவும், அறியாமையினாலும் தங்கள் உடல் தெரியும்படி ஆடை அணிவதைத் தங்களுடைய பழக்கமாக வைத்திருக்கிறார்கள். நான் வேண்டுமென்றே அவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்காக இதை எழுதவில்லை. பத்சேபாளைப் போலவே இவர்களும் அப்பாவிகள் என்று நான் கருதுகிறேன். ஆயினும் இவ்விவகாரத்தில் அவர்களைக் குற்றஞ்சாட்டுவதில் இருந்து என்னால் முற்றிலும் விலக்கிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பெண்களின் சில வகையான உடைகள் ஒரு ஆணின் கண்களையும் இருதயத்தையும் கவர்ந்திழுக்கும் விதத்தில் ஆபாசமாக இருக்கின்றன என்பதை முழு உலகமும் நன்கு அறிந்து வைத்திருக்கிறது, ஆகவே கிறிஸ்தவப் பெண்கள் மட்டும் இதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் ஒன்றும் அறியாத அப்பாவிகளாகவும் அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது நம்பக்கூடியதாக இல்லை. அவ்வாறு இருந்தால் அது நிச்சயமாக அரிதான ஒன்றாகவே இருக்க முடியும் என்று கருதுகிறேன். இதை நான் அவர்கள்மீது குற்றஞ்சாட்டும் படி எழுதாமல், அவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கும், அவர்கள் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படும்படி அவர்களைத் தூண்டிவிடவுமே எழுதுகிறேன். மேலும் ஆவிக்குரிய போரில் ஈடுபட்டிருக்கிற, எளிதில் வீழ்ந்துவிடக்கூடிய நிலையில் இருக்கிற அவர்களது பெலவீனமான சகோதரர்களின் ஆன்மீக நலனில் அக்கறையுடன் இருப்பதற்காக அவர்கள் முன்னதாக கவனக்குறைவாக இருந்த காரியத்தில் இப்பொழுது கவனமாய் இருக்கும்படியும், முன்பு அவர்கள் அலட்சியமாக இருந்த காரியத்தில் இப்பொழுது ஞானத்தோடு நடந்துகொள்ளும்படியாகப் புத்தி சொல்லவுமே எழுதுகிறேன்.
ஒருவர் மற்றொருவருடைய பார்வையில் படும்படி நிர்வாணமாக இருப்பது தவறு என்பதை நாம் முதலாவது புரிந்துகொள்ள வேண்டும். இது ஆணுக்கும் பொருந்தும், பெண்ணுக்கும் பொருந்தும். இருவரில் யார் எதைச் செய்தாலும் அது தவறே. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, தேவன் “தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்” (ஆதி 3:21). தேவன் அவர்களுக்கு ஆடைகளை அணிவித்ததற்கான ஒரே காரணம் அவர்களின் நிர்வாணத்தை மறைக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். வ்ர்தத்தின் முதல் புத்தகமான ஆதியாகமம் நமக்குத் தெளிவாகக் கூறுகிறது. தேவன் அவர்களுக்கு மேலங்கிகளை (உடியவள) அணிவித்தார். அவர்கள் ஏற்கனவே இலைகளால் ஆன ஆடைகளை அணிந்திருந்தார்கள். அதாவது இன்றைய நாட்களில் பலர் அணிந்திருக்கிறதைப் போலவே அவர்கள் தங்களது அந்தரங்க உறுப்புகளை மறைக்கும் அளவுக்கோ அல்லது அதைக் காட்டிலும் சற்றுக் கூடுதலாகவே அணிந்திருக்கலாம். அவர்கள் இத்தகைய ஆடைகளை அணிந்திருந்த போதிலும், அவர்கள் இன்னமும் தேவனுடைய பார்வையிலும், தங்களுடைய பார்வையிலும் நிர்வாணிகளாகவே இருந்தார்கள். அதாவது, தேவன் ஆதாமை அழைத்தபோது, “தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன்” என்றே ஆதாம் கூறினான். தேவன் அவர்களுடைய நிர்வாணத்தை மறைப்பதற்கு, ஒரு குட்டையான ஆடையையோ, அல்லது நீச்சல் உடையையோ, அரைக் கால் சட்டையையோ கொடுக்கவில்லை. மாறாக முழு நீள அங்கி போன்ற ஓர் ஆடையையே அணிவித்தார். அல்லது ஏவாளின் உடலை மூடி மறைக்கும் அளவுக்கு அங்கியைக் கொடுத்துவிட்டு, ஆதாமுக்கு ஒரு அரைக்கால் டவுசரையோ கொடுக்கவில்லை. இருவருக்குமே முழுநீள அங்கியையே அணிவித்தார். ஒரு பெண்ணில் நிர்வாணத்தில் தவறு இருப்பதைப் போலவே ஓர் ஆணின் நிர்வாணத்திலும் தவறு இருக்கிறது என்பதை இதன் மூலம் நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு பெண் ஆணின் முன்பாக தனது நிர்வாணத்தை வெளிப்படுத்துவது தவறாக இருப்பதைப் போலவே, ஓர் ஆண் தனது நிர்வாணத்தை ஒரு பெண்ணிடம் வெளிப்படுத்துவதும் தவறானதாகவே இருக்கிறது. இரண்டும் சம அளவில் தவறுடையவையாகவே இருக்கின்றன. ஆயினும் இரண்டும் சமமான ஆபத்தை விளைவிக்கக்கூடியவை அல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் ஆணின் நிர்வாணத்தைப் பார்த்து பெண்கள் சோதிக்கப்படுவதைக் காட்டிலும், பெண்ணின் நிர்வாணத்தைப் பார்த்து ஆண்களே அதிகமாகச் சோதிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் தனது உடலை சிறிதளவு வெளிப்படுத்தினாலும், அவளைப் பார்க்கிற ஒவ்வொரு ஆண்களுடைய இருதயமும் கவர்ந்திழுக்கப்படுகிறது. அதாவது அந்த பெண்ணைப் பார்க்கும் ஒவ்வொரு ஆணின் இதயமும் கவர்ந்திழுக்கிற அக்கினி அம்புகளால் தாக்கப்படுகிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதான் நிதர்சனமான உண்மை. இது ஓர் யதார்த்தமான உண்மை என்பதால், நாம் ஒவ்வொருவரும் விரும்பும் விதத்தில் ஆடை அணிந்துக் கொள்வதற்கு எவ்விதத்திலும் சுதந்திரம் கிடையாது.
“உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்ல என்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1 கொரி. 6:19-20).
ஒரு பெண் தன்னைப் பார்க்கிற ஆண்களின் காமப் பார்வை தன்மீது விழும்படி தனது உடலையோ அல்லது உடலின் பாகங்களையோ வெளிப்படுத்தும் வகையில் ஆடை அணிந்திருந்தால், அவள் நிச்சயமாகவே தனது உடலின் மூலமாகத் தேவனை மகிமைப்படுத்தமாட்டாள். ஆகவே ஒரு பெண் தேவனுக்குப் பயந்தவளாக இருப்பாளாகில், அவள் தன் அண்டை வீட்டாரின் ஆண்களை தேவன் அன்புகூருவது போல அன்புகூருவாளாகில், அவள் தன் உடல் தெரியும் வண்ணம் ஒருபோதும் ஆடை அணியத் துணியமாட்டாள் என்பது நிச்சயம். மேலும் அவள் ஆண்களின் இதயங்களை இச்சைக்கு ஏதுவாகத் தூண்டுவதற்காகவும், அவர்களுடைய கண்களைக் கவருவதற்காகவும் தன் உடலை அநீதியின் ஆயுதமாகப் பயன்படுத்த அவள் துணியமாட்டாள்.
பல ஆண்கள் பொல்லாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுடைய பொல்லாத பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக பெண்கள் எதை அணிந்தாலும் அவர்கள் உற்றுப் பார்த்து பெண்களின் மீது இச்சை கொள்வார்கள். “விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.” (2 பேதுரு 2:14) என்று பேதுரு கூறுகிறார். எனவே அவர்களுடைய பார்வையை நம்மால் நிறுத்த முடியாது. இப்படியிருக்கிற படியால் பெண்களாகிய நீங்கள் அவர்கள் பாவம் செய்வதற்கு உதவி செய்ய வேண்டுமா? ஏற்கனவே பாவவழியில் இருக்கிற அவர்களுக்கு மேலும் சோதனையைக் கொடுக்கும் வண்ணமாக நீங்கள் நடந்துகொள்ள வேண்டுமா? நீங்கள் இவ்வாறு செய்தால் தேவன் உங்களை மன்னிப்பாரா?
தேவபக்தியுள்ள மனிதர்கள் பிற மனிதர்களைப் போல பொல்லாத மனிதர்கள் அல்ல. ஆனால் அவர்களும் பெலவீனமான மனிதர்களே. தாவீது பொல்லாத மனிதர் அல்ல. அவர் தேவனுடைய இருதயத்துக்கு ஏற்ற ஒரு மனிதராக இருந்தார் என்று வேதம் சொல்கிறது. ஆனால் ஆடை அணியாத ஒரு பெண்ணுக்கு முன்பாக அவர் ஒரு பலவீனமான மனிதனாக இருந்தார். ஒரு பெண்ணின் நிர்வாணத்தைப் பார்த்தும் சலனம் அடையாத ஓர் ஆண் இருப்பானாகில் அவன் ஓர் அபூர்வமான மனிதனாகவே இருக்க வேண்டும். ஆகவே கிறிஸ்துவுக்குள் இருக்கிற சகோதரர்கள் ஒவ்வொருவரும் பொல்லாதவர்கள் இல்லையென்றாலும் அவர்கள் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள். இதுட்டுமின்றி, அவர்களை மென்மேலும் பலவீனப்படுத்தும் படி பிசாசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறான். இத்தகைய கிறிஸ்தவ சகோதரர்கள், தொடர்ந்து தங்கள் ஆத்துமாவின் எதிரிகளால் ஒழுக்கத்தைச் சிதைத்து பலவீனப்படுத்த முயற்சிக்கிற உலகில் வாழ்கிறார்கள். மேலும் அவர்களது இதயத்தின் பரிசுத்தத்தை அழிக்கும்படி வடிவமைக்கப்பட்ட இத்தகைய காட்சிகளால் தொடர்ந்து குண்டு வீசப்பட்டுத் தாக்கப்படுகிற உலகில் வாழும்படியான கட்டாயத்திலும் உள்ளார்கள். பிசாசினுடைய இத்தகைய தந்திரமான வேலைகளுக்கு கிறிஸ்தவப் பெண்கள் உடந்தையாகச் செயல்பட்டு, உதவி செய்ய வேண்டுமா? அதுவும் தேவனுடைய சபையில், எல்லாருமாகக் கூடிவந்திருக்கும் போது, உங்களுடைய கிறிஸ்துவுக்குள்ளான உடன் சகோதரர்களுக்குத் உங்களை ஒரு சோதனையின் கருவியாக ஆக்கிக் கொள்ள வேண்டுமா?
ஏதேச்சையாகவோ, அல்லது கவனக்குறைவாகவோ உங்கள் உடலின் பாகங்கள் தெரியும்படி, நீங்கள் உடையணிந்து, உங்கள் சகோதரர்கள் முன்பாக வரும்போது, அவர்கள் அதைக் கண்டு, அவர்களுடைய ஆத்துமாக்களில் நடைபெறும் கடுமையானதும் கசப்பானதுமான மோதலை நீங்கள் புரிந்து கொண்டிருக்க முடியும். அந்த சோதனையின் வல்லமையிலிருந்து விடுபடுவதற்காகவும், அதிலிருந்து மனம் வெளியே வருவதற்கான உதவிக்காகவும் அவர்கள் தேவனிடம் மன்றாடுவதையும் நீங்கள் கேட்டிருக்கலாம். ஒருவேளை இந்தக் கடுமையான சோதனையில் அவர்கள் விழுந்து பாவம் அவர்களை வென்றபோது, தங்கள் கண்களாலும் இதயத்தாலும் மனத்தாலும் பாவம் செய்தபோது, அவர்களுடைய அவமானத்தின் கண்ணீரையும் அதனின்று வெளியே வருவதற்கான மனந்திரும்புதலின் கண்ணீரை நீங்கள் பார்த்திருக்க முடியும். இவை எல்லாவற்றையும் பெண்களாகிய நீங்கள் மெய்யாகவே அறிந்திருப்பீர்களாயின், என் விருப்பப்படி தான் உடையை அணிவேன், அது என் உரிமை என்று நீங்கள் ஒருபோதும் போராடிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
உண்மை என்னவென்றால், உங்களுக்கு அத்தகைய உரிமை இல்லை என்பதே ஆகும். கிறிஸ்துவுடனேகூட பாவத்துக்கு மரித்த ஒரு சகோதரனை, நீங்கள் அணிந்திருக்கிற கவனக்குறைவான ஆடையால் அழித்துப்போட உங்களுக்கு உரிமை இல்லை. நீங்களும் கிறிஸ்துவினால் கிரயம் செலுத்தி விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய சரீரம் உங்களுடையது அல்ல. உங்களது உடலின் வாயிலாக தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். ஆகவே அந்த உடலுக்கு, உங்கள் விருப்பப்படி அல்ல, தேவனின் விருப்பப்படியே உடை உடுத்த வேண்டும்.
உங்களுடைய சகோதரர்களின் ஆத்துமாக்களின்மீது நீங்கள் கொண்டிருக்கிற சிறிதளவு உண்மையான அன்பானது, விரும்பியபடி ஆடை அணிவதற்கான உங்களது வாஞ்சையை உங்கள் இதயத்திலிருந்து நிரந்தரமாக நீக்கிவிடும். “அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும் படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்” (ரோமர் 15:1-3) என்று வாசிக்கிறோம். ஏனெனில் கிறிஸ்து நமக்கு முன்மாதிரியான வகையில், அவர் பரலோகத்தின் தமது அனைத்து மகிமைகளையும் நமக்காகத் துறக்கவும், நம்முடைய ஆத்துமாக்களைக் காப்பாற்றுவதற்காக தேவபக்தியற்ற மனிதர்களின் நிந்தைகளைத் தாங்கிக்கொள்ளவும் ஆயத்தமாக இருந்தார். இதை எல்லாம் அறிந்திருக்கிற நீங்கள், உங்களது உடையின் மூலமாக, உங்களைப் பிரியப்படுத்த வேண்டும் என்னும் உரிமைக்காக நீங்கள் போராடுவீர்களா? இன்னொரு மனிதனின் ஆன்மாவைக் காப்பாற்றுவதற்காக, ஆடையின் மூலமாக உங்களுக்கு கிடைக்கிற ஒரு சிறிய சந்தோஷத்தை உங்களால் விட்டுவிக் கொடுக்க முடியாதா? பாவத்திற்கு எதிரான போரில், உங்களுடைய சகோதரனுக்கு உதவுவதற்காக, “பழையபாணி உடைகளையும்” அல்லது “காலாவதியாகிப் போன உடைகளையும்” அணிவதால் ஏற்படுகிற சிறிதளவு அவமானத்தையோ அல்லது நிந்தையை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாதா??
நான் ஒரு சிறிய காரியத்தை ஊதிப் பெருதாக்குகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் இந்தக் காரியத்தை பெரிய அளவில் முக்கியத்துவப்படுத்துவதுபோல இது அவ்வளவு தீவிரமான காரியம் அல்ல என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஒன்றைக் கருத்தில் கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்: நீங்கள் ஒரு பெண்ணாக இருக்கும்பட்சத்தில் ஓர் ஆணின் உணர்வுகளை உங்களால் அனுபவிக்க முடியாது. உங்களுக்கென்று சொந்தமாக உணர்வுகள் உள்ளன என்பது உண்மைதான். ஆயினும் அவை ஓர் ஆணின் உணர்வுகள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பெண்களுடைய உணர்வுகளைப் பற்றிய பொதுவான கருத்து என்னவெனில், அவர்களுடைய உணர்வுகள் ஓர் ஆணின் உணர்வைப் போன்று வலிமையானது அல்ல. மேலும் பெண்களின் உணர்வுகள் ஓர் ஆண் மகனைப் போன்று, எளிதில் காயமடையாது. அதுமட்டுமின்றி, ஓர் ஆணைப் போன்று, அவர்கள் எளிதில் உணர்ச்சிவயப்பட்டு உற்சாகம் அடையமாட்டார்கள்.
நீங்கள் ஆண்களின் உணர்வுரீதியான மனோபாவத்தை எப்போதாவது புரிந்து கொள்ள வேண்டுமெனில், அதற்கு ஓர் ஆணின் வார்த்தையைத்தான் நீங்கள் எடுத்துக் கொள்ளவேண்டும். அதைப் பெண்கள் அனுபவிக்க முடியாது. மேலும் ஒரு தெளிவான உண்மை என்னவென்றால், கவனக்குறைவான வகையில் தன்னை வெளிப்படுத்துகிற ஒரு பெண்ணின் பார்வையால் ஓர் ஆணின் உணர்ச்சிகள் எளிதில் தூண்டப்படுகின்றன. பத்சேபாள் குளித்துக்கொண்டிருக்கும் போது தாவீதுக்கு அதுதான் நடந்தது. அவள் குளித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் அவன் எளிதில் உணர்ச்சி அடைந்துவிட்டான். தாவீதிக் காட்டிலும் பெரும்பாலான ஆண்களால் இத்தகைய உணர்ச்சிகளை எளிதாகக் கைக்கொண்டு அதிலிருந்து வெளியே வந்துவிட முடியும் என்பது உண்மைதான். தாவீதைப் போல இந்த அளவுக்கு எல்லை மீற மாட்டார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் அவர்கள் எண்ணத்திலும் சிந்தையிலும் இத்தகைய காட்சியை ரசிக்காமல் இருந்தார்கள் என்று எவ்வாறு சொல்லமுடியும். இந்தக் காட்சியை நினைத்துப் பார்க்க வேண்டாமென அவர்கள் எதிர்த்து நின்றார்கள் என்று எப்படித் தெரியும்? அவர்கள் தங்கள்சிந்தையோடு கண்களாலும் இதயத்தாலும் கற்பனையாலும் பாவம் செய்ய மாட்டார்கள் என்று நாம் எவ்வாறு உறுதிகூற முடியும்? ஓர் ஆண், தான் கண்ட பெண்ணின் காட்சியை விட்டு வெகு தொலைவு சென்ற பிறகும், அதைக் கற்பனை செய்து பார்ப்பதில் அல்லது அதை மீண்டும் நினைத்துப் பார்ப்பதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான்.
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று” (மத்தேயு 5:28) என்று வேதாகமம் கூறுகிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இது ஒரு தீவிரமான விஷயம் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா? இது உண்மையில் தீவிரமானது, கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது ஆகும். ஏனென்றால் அது பாவம், பாவம் எப்போதும் தீவிரமானது. பாவம் அழிக்கக்கூடியது, சிதைக்கக்கூடியது, இடிக்கக்கூடியது அது தண்டனைக்குரியது. ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பது எவ்வளவு தீவிரமான விஷயம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமானால், நீங்கள் அடுத்த வசனத்தை படித்தால் புரிந்துகொள்ள முடியும். அவ்வசனத்தில், “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்” (மத்தேயு 5:29) என்று சொல்லப்பட்டுள்ளது. பாவத்தின் தீவிரத்தன்மையைப் பற்றி வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள மிகவும் ஆணித்தரமான அறிகுறியாகும் இது. இது பெண்கள் கவனக்குறைவான முறையில் அணிகிற ஆடையால், மிகவும் எளிதாகவும், ஏதேச்சையாகவும் ஏற்படக்கூடிய பாவத்தின் தீவிரத் தன்மையைப் பற்றிப் பேசுகிறது. எனவே இது ஓர் இலகுவான விஷயம் அல்ல, நீங்களும் அதை எளிதான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இதைக் கேட்கிற நீங்கள் (பெண்கள்), “நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான், நாங்கள் அதை ஒத்துக்கொள்கிறோம்; ஆனாலும் நான் கண்ணியமிக்க வகையில்தான் உடை உடுத்துகிறேன்; எனவே உங்களுடைய இந்தக் கருத்தை நான் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று கூறலாம். இதையெல்லாம் ஆமோதிக்கிற நீங்கள் ஆடை விஷயத்தில் அமைதியாய் இருந்துவிடப்போகிறீர்களா? ஆனால் ஒன்றை நான் கூறவிரும்புகிறேன், “இந்த நவீன யுகத்தின் நாகரீங்களையும் நடைமுறைகளையும் நீங்கள் பின்பற்றினால், நீங்கள் அடக்கமாக உடை உடுத்தமாட்டீர்கள் என்பது உறுதி. ஏனெனில், இந்த நவ நாகரிக உலகத்து மகளிரால் அடக்கமாயிருப்பது புறக்கணிக்கப்படுகிறது, கண்ணியமாக உடை உடுத்துவது வேண்டுமென்றே காற்றில் வீசப்படுகிறது”. நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பதால் ஓர் ஆணின் பார்வையின் மூலம் உங்களை நீங்களே பார்க்க முடியாமல் போகலாம். மேலும், நீங்கள் அணிந்திருக்கிற ஆடையில் எந்த அளவுக்கு கவர்ச்சி இருக்கிறது, அது எந்த அளவுக்கு ஆண்களைப் பாதிக்கிறது என்பதை உணர முடியாமல் இருக்கலாம். எனவே நீங்கள் ஆண்களின் கண்கள் கொண்டு பார்த்து கவனமாயிருக்க வேண்டியது அவசியம். “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்” (மத்.10:16) என்னும் வசனத்தின்படி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
இந்த உலக மக்கள் செய்வதைப் போலவே, நீங்களும் சிந்திக்காமல் ஆடை அணிந்தால், நீங்கள் நிச்சயமாக அறிவாளியோ அல்லது பாதிப்பை உண்டாக்காதவரோ அல்ல. நீங்கள் எத்தகைய அறியாமை உள்ளவர்களாகவும் அப்பாவியாகவும் இருந்தாலும், மனிதர்களின் நல்லொழுக்கத்தைக் கெடுக்கவும், அதைச் சீர்குலைக்கவும், அதைச் சிதைக்கவும் அழிக்கவும்படியான தீய மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு நாகரீக முறையை நீங்கள் பின்பற்றுவீர்களாயின், நீங்கள் ஒரு ஞானமுள்ள பெண்மணி அல்ல. அதிகப் பாதிப்பை உண்டாக்காத படிக்கு ஒரு சிறிய அளவு கவர்ச்சியாக உடை உடுத்தினாலும், உங்களைக் காண்கிற ஆண்களின் உணர்வுகளைத் தூண்டுவதற்காகப் பயன்படும் துன்மார்க்கரின் கையில் இருக்கும் அக்கினி அம்பாக உங்களை ஆக்கிக்கொள்கிறீர்கள்.
நான் வெளிப்படையாகக் கூறுகிற உண்மைகளை நீங்கள் பொருத்துக்கொள்வீர்களாயின், உங்களை ஞானவான்களாக்கும் படியாக நான் குறிப்பிட்ட சில முக்கியமான அறிவுரைகளை வழங்குகிறேன். இத்தகைய அறிவுரைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களாயின், உங்களுடைய சொந்த இருதயத்தின் தெய்வீகத்தன்மை உங்களை மற்றவர்களுக்குப் பாதிப்பில்லாதவர்களாக மாற்றும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
நான் முன்னரே கூறியது போல், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவன் வடிவமைத்த ஆடையானது அவர்களுடைய நிர்வாணத்தை முழுவதும் மறைக்கக்கூடியதாக இருந்தது. இந்த நோக்கத்தைச் செய்யத் தவறுகிற எந்தவோர் ஆடையும் சரியான ஆடையாக இருக்க முடியாது. முதுகு அதிக அளவில் தெரியும்படியான ஆடைகள், முதுகின் நடுவில் துணியில்லாமல் வடிவமைக்கப்பட்ட ஆடைகள், தொடைகள் தெரியும்படியாக அல்லது கால்களை முழுவதும் மறைக்காத ஆடைகள் யாவும் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் முழு நீள அளவில் வடிவமைத்துக் கொடுத்த தேவனுடைய பார்வையில் அவரது நோக்கத்தை நிறைவேற்றாத தவறான ஆடைகளே ஆகும். குட்டையான உடைகளும், வயிறு தெரியப் போடும் மேலாடைகளும் அல்லது உடல் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே அணியும் அரைகுறை ஆடைகளும் தேவபக்தியுள்ள பெண்களின் ஆடைகள் வரிசையில் இடமில்லை.
உலகிலுள்ள மக்கள் எதைச் செய்தாலும், என்ன செய்தாலும், எப்படிச் செய்தாலும் நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்வதற்குக் கடமைப்பட்டுள்ளீர்கள். ஆடைகளைக் குறித்த காரியத்தில் பிற சபை மக்கள் என்ன செய்தாலும், நீங்கள் கண்ணியமாக உடை உடுத்துவதற்குக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் இப்போது குறிப்பிட்டுள்ள காரியங்கள் மிகவும் வெளிப்படையானவை. இதில் எது சரி, எது தவறு என்ற கேள்விக்கு இடமே இருக்கக்கூடாது. இவ்வாறு கேள்வி கேட்பது தேவனின் நோக்கங்களை அப்பட்டமாக மீறுவதாகும். இன்றைய நாட்களில் திருச்சபைகள் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளன. உண்மையைச் சொல்வதென்றால், இன்றைய கிறிஸ்தவர்களும் பிரசங்கிமார்களும், அரைகுறையான ஆடைகளை அணிவோரின் உரிமைகளைப் பாதுகாக்கும்படி செயல்படுகிறார்கள்.
இன்றைய பிரசங்கியார்கள் ஆண்களும் பெண்களும் சேர்ந்து செய்யும் காரியங்களை ஊக்குவிக்கிறார்கள். பொழுதுபோக்கு பூங்காக்களிலும், கடற்கரைகளிலும், நீச்சல் குளங்களிலும் ஆண் பெண் பேதமின்றி இருப்பதை இவர்கள் ஆதரிக்கிறார்கள். இப்படிச் செய்வது அவர்களுக்கு வெட்கமாகத் தோன்றவில்லையா? இப்படிச் செய்வதற்கு அவர்களுக்கு உணர்வு இல்லாமல் போனதென்ன? இவர்கள் கிறிஸ்துவின் நியாயாசனத்தின் முன்பாக நிற்கும்போது இதுபோன்ற விஷயங்களுக்கு ஆதாவாக இருந்ததை நியாயப்படுத்துவார்கள் என்று நான் நம்பவில்லை. இப்பொழுது அவர்களுக்கு வெட்கமாக இல்லை என்றால் பின்னர் இதைப் போன்ற வேறு பெரிய காரியங்களைச் செய்வார்கள். இதற்கிடையில், தேவனின் நோக்கங்களை மிகவும் வெளிப்படையாக முறியடிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் ஆடைகளைப் பற்றி நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. சிறிதளவே உடல் தெரியும்படி அணிகிற ஆடைகளே தேவனின் தெளிவான நோக்கத்தை மீறுகிறபடியால் இது தொடர்பான காரியங்களுக்கு நமது சிந்தனையைத் திருப்புவோம்.
இந்தக் குட்டையான ஆடைகள் தவறானவை என்று எவரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்விதமான ஆடைகள் ஓர் ஆணின் கண்களுக்கு பாலியல் கவர்ச்சியை உண்டுபண்ணக்கூடியதாக, இருக்கின்றன என்று முழு உலகத்துக்குமே தெரியும். தங்களைத் தேவபக்தியுள்ள பெண்கள் என்று அழைத்துக்கொள்பவர்களும், எங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும் என்று கூறிக்கொள்கிற பெண்களும், இது நல்லதா அல்லது கெட்டதா என்று யோசிக்காமலேயே தற்காலத்தில் பிரபலமாயிருக்கிற ஆடைகளையே அது குட்டையான உடையாயினும் அல்லது நீளமான உடையாயினும் தொடர்ந்து அணிந்து வருகிறார்கள். இது இவ்வளவு குட்டையாயிருக்கிறது என்று பிறர் விமர்சிக்கிற அளவுக்கு இது சிறியதாயிருக்கிறது. இவர்கள் தங்களது ஆடைகளை நீளமாக இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்வதற்குப் பதிலாக, நாங்கள் எவ்வளவு உயரமாக இருக்கிறோம் என்பதை மெச்சிக்கொண்டு இத்தகைய ஆடைகளை தைரியமாக அணிந்துகொண்டு வருகிறார்கள். இத்தகைய ஆடைகளை அணிந்துகொண்டு, உங்கள் வீட்டுக் கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது, என்னுடைய உடலின் எந்தப் பாகமும் வெளியே தெரியவில்லை என்று உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் உட்காரும்போதோ, குனியும்போதோ அல்லது காரில் ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ என்ன நிகழும் என்பதை நீங்களே அறிவீர்கள். அப்பொழுது தெரிபவை அநாகரிகத்தின் உச்சகட்டம் என்றே சொல்ல வேண்டும். இத்தகைய உடைகளை நீங்கள் வடிவமைத்தாலும் இல்லாவிட்டாலும் அல்லது அவற்றை நீங்கள் விரும்வினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் தொடைகளும், உங்கள் கால்களும் வெளியே தெரிந்து, ஆண்களுடைய கண்களின் இச்சையைத் தூண்டுகின்றன என்பதில் சந்தேமேயில்லை.
குட்டையான அரைக்கால் பாவடைகளோ அல்லது அரைக்கால் டவுசர்களோ என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ அதேவிதமான விளைவுகளையே பக்கவாட்டில் கிழித்துவிடப்பட்டுள்ள நீளமான பாவடைகளும் ஏற்படுத்துகின்றன. இந்தவகையான ஆடைகளுடனும் உங்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இருக்கக்கூடாது. இத்தகைய ஆடைகளை அணியும் போது உங்கள் தொடைகளை யாரால் பார்க்காமல் இருக்க முடியும்? அது நடப்பதற்கு வசதியாக கிழித்துவிடப்பட்டிருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம், ஆனால் அதை அவ்வளவு இறுக்கமாக அணிந்தால் அதைக் கிழித்துவிடாமல் நடக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியாதா? இவ்விதமான ஆடைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, நீளமானதும் அகலமானதுமான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இத்தகைய இறுக்கமான ஆடைகளைக் குறித்து இன்னும் சில காரியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
உங்கள் ஆடைகள் எவ்வளவு நீளமாக இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? நீங்கள் குனியும் போதும் அல்லது உட்கார்ந்திருக்கும் போதும் உங்கள் கால்கள் வெளியே தெரியாவண்ணம், அது முழங்காலுக்குக் கீழேயும், முன்னும் பின்னும் முழுவதுமாக மூடப்பட்டிருக்கும் படியான ஆடைகளை அணிந்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் போதுமான அளவு பாதுகாப்பாக இருப்பதை உணருவீர்கள். நீங்கள் கவனமாக இருப்பதற்காக மற்றொரு காரியத்தையும் கூறுகிறேன். உங்களுடைய கால்கள் உங்களது பார்வையில் மறைந்திருந்தால் மட்டும் போதாது, பிறருடைய பார்வையிலும் மறைந்திருக்க வேண்டும். அதாவது, நீங்கள் குனியும்போதும், உட்காரும்போதும் ஆடையின் முன்புறம் இயல்பாகவே தாழ்வாகத் தொங்கும், முன்புறக் கால்களை முழுவதுமாக மறைத்துவிடும், அதே நேரத்தில், கால்களின் பின்புறம் அதிகமாக வெளியே தெரியும் அளவில் ஆடைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். பெண்கள் அமரும்போது, தங்களது கால்களின் முன்பக்கம் வெளியே தெரியாவண்ணம் கவனமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன், ஆனால் கால்களின் பின்பகுதியும், தொடைகளின் பக்கவாட்டுப் பகுதியும் அருகில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும். உங்களது ஆடை போதுமான அளவு நீளமாக இல்லாவிட்டால் மட்டுமே இத்தகைய பிரச்சினைகள் ஏற்படும். உங்களது கால்கள் எந்த வகையிலும் வெளியே தெரியாவண்ணம் இருக்க வேண்டுமாயின், நீங்கள் அணிகிற ஆடைகள் முழங்கால்களுக்குக் கீழே அனைத்து அம்சங்களிலும் மறைக்கும்படி இருக்க வேண்டும்.
குறைந்த இறக்கமுள்ள மேலாடைகள் அல்லது அகலக் கழுத்துள்ள மேலாடைகளை அணிவது ஆண்களின் கண்களுக்கு ஒரு மிகப்பெரிய சோதனை என்று முழு உலகத்துக்கும் நன்றாகவே தெரியும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நீங்கள் ஒரு தேவபக்தியுள்ள பெண்ணாக இருந்தால், வேண்டுமென்றே குறைந்த இறக்குமுள்ள மேலாடைகள் அல்லது அகலக் கழுத்துள்ள மேலாடைகளை அணிவதைக் குறித்து நீங்கள் கனவு காணமாட்டீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் கவனக்குறைவாகவோ அல்லது ஏதேச்சையாகவே இத்தகைய ஆடைகளை அணிந்துகொண்டிருக்கலாம். இது இறக்கம் குறைந்த மேலாடைகளுக்கு மட்டுமின்றி, அளவுக்கு மீறிய தொள தொள மேலாடைகளுக்கும் பொருந்தும். இத்தகைய ஆடைகளை அணிந்துகொண்டு உங்கள் கண்ணாடியின் முன் நிமிர்ந்து நின்று பார்க்கும்போது, இவை அடக்கமான ஆடைகளைப் போன்று தோன்றலாம். ஆனால் சற்றுக் குனிந்த நிலையில் பாருங்கள், உங்கள் மேலாடை உங்கள் உடலிலிருந்து விலகுவதைக் காண்பிர்கள். உங்கள் உடலிலேயே மிகவும் ஆபாசமான அல்லது கவர்ச்சியான பகுதி அதன் வழியாக வெளியே தெரியும். அது உங்கள் முன் நிற்கும் எந்த ஆணின் பார்வைக்கு வெளிப்பட்டு சோதனைக்குள்ளாக்கும். உங்கள் ரவிக்கையின் இரண்டு அல்லது மூன்று பொத்தான்களை அவிழ்த்துவிட்டு ஆடை அணியும் போதும் இவ்விதமான நிலையே உண்டாகும். உண்மையில் நீங்கள் வேண்டுமென்றே எதையும் வெளிப்படுத்தாவிட்டாலும்கூட இது கவர்ச்சியாகவும் ஆபாசமாகவும் தெரியும். உங்களது உடல் பாகத்தை வெளிப்படுத்தி, ஒருவனுடைய உணர்வைத் துண்டி, அவனை ஏக்கத்துள்ளாக்குவதற்காகவே இத்தகைய ஆடைகள் வடிவமைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை இது அவனுக்கு ஏற்படுத்தும்.
இதைக் காட்டிலும் அவர் வேறு எவ்வாறு யோசிக்க முடியும்? வேறு எந்த நோக்கத்திற்காக உங்கள் மேலாடை அல்லது ரவிக்கையின் இரண்டு அல்லது மூன்று பொத்தான்களை அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள்? இவ்வாறு செய்தால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா? இறுக்கமாக இருந்தால் மூச்சு முட்டுகிறதா? ஆண்கள் தங்களது கட்டுமஸ்தான மார்புப் பகுதியை வெளியே காட்டும் வண்ணமாக உடை அணிவதைப் பார்த்து, நீங்களும் அவ்வாறு செய்ய முயற்சிக்கிறீர்களோ என்று நம்புகிறேன்.
உங்கள் வசதிக்காக ரவிக்கையின் கழுத்துப் பகுதியில் சற்று திறந்து வைப்பது முறையானதாக இருக்கலாம் அல்லது ஒரு பொத்தானை மட்டும் அவிழ்த்துவிட்டால் அது அடக்கமாகவும் இருக்கலாம் (இது ஆடையைப் பொறுத்து). ஆனால் இரண்டு அல்லது மூன்று பொத்தான்களைத் திறந்து வைப்பதற்கு என்னவிதமான காரணம் இருக்க முடியும் அல்லது அதற்கான சாத்தியம் என்ன? இது நிச்சயமாக உங்கள் வசதிக்காக அல்ல, இது ஒரு பொல்லாத உலகத்தின் ஒரு பொல்லாத நாகரீகத்தைப் பின்பற்றுவது மட்டுமே ஆகும். ஆடையின் கழுத்துப் பகுதியிலுள்ள மூன்று பொத்தான்களைத் திறப்பதைக் காட்டிலும், ஒரு பொத்தானைத் திறந்தால் அது உங்களை மூச்சுமுட்ட வைக்காது. ஒரு பொத்தான்களைத் திறந்தாலே அது நீங்கள் எதிர்பார்க்கிற வசதியைக் காட்டிலும் அதிக வசதியைக் கொடுக்கும். உங்கள் மேலாடையின் மேல் பொத்தானைத் திறந்து வைத்திருக்கும்போது, நீங்கள் குனிய நேரிட்டால், ஆடைக்கும் உடலுக்கும் இடைவெளி ஏற்பட்டு, உடலின் பாகங்கள் வெளியே தெரியாவண்ணம் இருந்தால் அதுவே நல்லது. இது உங்களது ரவிக்கையின் தன்மை மற்றும் உடல்வாகைப் பொறுத்தது. ஆயினும் இவ்வாறு இருப்பதை அசௌரியமாக உணர்ந்தாலோ, அல்லது பாதுகாப்பின்மையை உணர்ந்தாலோ அனைத்துப் பொத்தான்களையும் போட்டுக்கொள்வதே சிறந்தது. இன்னும் உங்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், மேலாடையின் முதல் பொத்தானை ஒரு இஞ்ச் அளவுக்கு கீழே இறக்கி வைத்துத் தைத்துக்கொள்ளுங்கள், இது உங்களுக்கு சௌகரியத்தையும் தரும், கண்ணியமான வகையில் உடை அணிந்த வசதியையும் ஏற்படுத்தித் தரும்.
இது சிறிய காரியம்தானே என்று நீங்கள் அலட்சியமாக இருந்துவிட முடியாது. ஒரு பெரிய நெருப்பைப் பற்றவைப்பதற்கு ஒரு சிறிய காரியம் மட்டுமே போதுமானது. எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரண்டு மூன்று பொத்தான்கள் திறந்திருக்கிற ஒரு மேலாடையை அணிந்திருக்கிற ஒரு பெண்ணை ஓர் ஆண் காணும்போது, ஆண்களைக் கவர்ந்திழுப்பதும் அவர்களது உணர்ச்சியைத் தூண்டிவிடுவதுமே இப்பெண்ணின் நோக்கமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு அவன் வந்துவிடுவான். உங்களைக் குறித்து நீங்கள் அவனிடத்தில் உண்டுபண்ண விரும்புகிற தாக்கம் இதுதானா? இவ்வாறு விரும்பவில்லையெனில், ஆடையின் பொத்தான் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிற பொத்தானாக இருக்கட்டும், ஆடையின் கொக்கி உங்கள் ஆளுகையின் கீழ் இருக்கிற கொக்கியாக இருக்கட்டும், ஆடையின் இணைபல்பட்டிகையின் (ஷிப்) திறப்பு உங்கள் வசமாக இருக்கட்டும். நீங்கள் இறக்கமுள்ள, தொளதொள, அகலக் கழுத்துள்ள மேலாடையை அணிந்திருக்கும் போது, ஓர் ஆணுக்கு முன்பாக நீங்கள் குனிய நேரிட்டால், அவன் ஆதீதமான நல்லொழுக்கமுள்ள ஒரு நபராக இல்லாவிட்டால், உங்களுடைய நோக்கம் அதுவாக இல்லாவிட்டாலும் கூட, உங்கள் சரீரத்தின் மறைவான அவயவத்தைப் பார்த்து, அவன் மிகுந்த உணர்ச்சிக்குள்ளாகி, பாவ சோதனைக்கு ஆட்படுவான் என்பதில் சந்தேகமில்லை.
எனவே உலத்கதார் செய்வது போல விசுவாசிகளாகிய நீங்கள் செய்ய முடியாது. உங்கள் மேலாடையின் கழுத்துப் பகுதி போதுமான அளவு உயரமாகவும், சரியானதாகவும் இருக்கட்டும். உங்கள் மேலாடையின் கழுத்துத் திறப்பு, உண்மையிலே கழுத்துத் திறப்பாகவே இருக்கட்டும், அது மார்பகத்தின் திறப்பாகவோ, தோள்பட்டையின் திறப்பாகவோ இருக்க வேண்டாம். அப்பொழுது நீங்களும் மிகுந்த பாதுகாப்பாக இருப்பீர்கள். நன்றாகக் கவனியுங்கள்: உங்கள் மேலாடை கழுத்து வழியாகப் போடும்படியானதாக இருக்க வேண்டாம், அப்படி இருந்தால் அதனுடைய திறப்பு பெரியதாக இருக்கும். அகவே உங்கள் மேலாடையை அணிந்த பின்னர், பொத்தான்கள், கொக்கிகள், இணைபல்பட்டிகையால் மூடக்கூடியதாக இருக்கட்டும். அப்பொழுது அது சிறிய கழுத்து திறப்பைக் கொண்டதாகவும் உங்களுக்கு சௌகரியமானதாகவும் இருக்கும்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.