விசுவாசப் பெண்கள் ஆடை அணிகிற காரியத்தில் நாம் இதுவரை கொடுத்த ஆலோசனைகள் போதுமானது. அடுத்து இது தொடர்பாக அவர்கள் எழுப்புகிற சில ஆட்சேபனைகள் (சந்தேகங்கள்) எதிர்கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும்.
1. முதலாவது எதிர்க் கேள்வி அல்லது ஆட்சேபனை: “பெண்களுடைய ஆடை விஷயத்தில், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென இதுபோன்ற கடுமையான நிபந்தனைகளைக் கொண்ட ஆலோசனைகளைப் பெண்களுக்கு பரிந்துரைக்க இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?”
இதற்கான என்னுடைய பதில்: நாம் ஏதேன் தோட்டத்தில் பாவம் இல்லாதவர்களாக வாழ்ந்து கொண்டிருந்தால், நீங்கள் விரும்பியபடி உடை உடுத்திக்கொள்ளலாம் அல்லது உடுத்தாமலும் இருக்கலாம். இவ்வாறு இருப்பது யாரையும் காயப்படுத்தாது. ஆனால் இந்த உலகில் உங்களால் அவ்வாறு வாழ முடியாது. அவ்வாறு இங்கே உங்கள் விருப்பப்படி வாழ்ந்து, உங்கள் விருப்பப்படி ஆடை அணிந்தால், நீங்கள் பாவத்தின் அலையை இன்னும் அதிகரிக்க மட்டுமே காரணமாக இருப்பீர்கள். நான் இந்த ஆலோசனைகளை சரியான ஆடை அணிய வேண்டும் என்று விரும்புகிற தேவபகுதியுள்ள பெண்களுக்காக எழுதுகிறேன். ஏனெனில் அவர்கள் சரியான விதத்தில் ஆடை அணிய வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் ஓர் ஆணிடமிருந்து சரியான சில ஆலோசனைகள் அல்லது அறிவுரைகள் இல்லாமல் அவர்களால் சரியானதைச் தெரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் இந்தக் கட்டுரையில், ஒரு பெண் அணியும் ஆடைகளைப் பார்க்கும் ஆண்களின் மனதில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி ஓர் ஆண் மகனால் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். நல்ல விதமாக ஆடை அணிய வேண்டும் என்று விருப்பத்துடன் இருக்கிற தேவபக்தியுள்ள பெண்கள் இத்தகைய அறிவுறுத்தலைப் பெற்றுக்கொள்வதில் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவார்கள் என்று நான் நினைக்கிறேன். பொதுவாக, எந்த விலை கொடுத்தாயினும் சரியானதைச் செய்யக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, சரியான உடை உடுத்த விரும்பாத பெண்களே இத்தகைய விதிமுறைகள் அல்லது நிபந்தனைகள் எங்களுக்குத் தேவையில்லை என்னும் முழக்கத்தை எழுப்புகிறார்கள்.
2. இரண்டாவது எதிர்க் கேள்வி அல்லது ஆட்சேபனை: “பெண்களுக்கான ஆடை என்பது ஒரு அற்ப காரியம், இவ்வளவு பெரிய அளவில் அறிவுரை கூறுவதற்கு ஏற்ப இது தகுதியானது அல்ல. இது வெறும் வெளிப்புறமான காரியங்கள், நாங்கள் இருதயம் தொடர்பான முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்த விரும்புகிறோம்”.
இதற்கான என்னுடைய பதில்: ஆடை அணிதல் என்பது ஒரு வெளிப்புற விஷயமாக இருக்கலாம், ஆனால் இது சிறிய காரியமல்ல. வேதத்திலுள்ள கீழ்க்கண்ட வசனங்களை நீங்கள் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்” (மத்தேயு 5:28-29). இந்த வசனங்களைப் படித்த பின்னரும், இது ஒரு சிறிய விஷயம் என்று நிங்கள் வாதிடுகிறீர்களா?? உங்களுடைய கூற்றுப்படி இதை ஒரு சிறிய காரியம் என்றே வைத்துக்கொள்வோம். அவ்வாறாயின் இந்த வசனங்கள் கூறும் கருத்தை உங்களால் எளிதாகக் கடந்து செல்லவோ அல்லது புறக்கணிக்கவோ முடியுமா? அவ்வாறு முடியாதே. ஏனென்றால், “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்” (லூக்கா 16:10). சிறிய சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தியதற்காக கர்த்தர் யூதர்களைக் கடிந்துகொள்வதில்லை, மாறாக அவர்கள் முக்கியமான காரியங்களை அலட்சியப்படுத்தியதாலேயே அவர்களைக் கடிந்துகொண்டர். அவருடைய வார்த்தைகளைக் கேளுங்கள்: “பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே” (லூக்கா 11:42).
3. மூன்றாவது எதிர்க் கேள்வி அல்லது ஆட்சேபனை: “பெண்களை இச்சையோடு பார்க்கிற எந்த ஓர் ஆணும் நிச்சயமாக கெட்டவனாகத்தான் இருக்க வேண்டும், அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?”.
இதற்கான என்னுடைய பதில்: ஆம், ஆண்கள் கெட்டவர்கள்தான். எனவே ஆண்கள் வக்கிரமானவர்கள் என்னும் உண்மை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள், இந்த உண்மை உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும். ஆண்கள் மட்டுமின்றி, நான் மற்றும் நீங்கள் உட்பட எல்லா மனிதர்களும் பாவிகளே. தேவனால் படைக்கப்பட்ட நமது இருதயத்தின் தூய்மையை நாம் இழந்துவிட்டோம். மேலும் நமது இருதயங்கள் இப்பொழுது பாவ சுபாவத்தையே கொண்டுள்ளன. குறிப்பாக சிற்றின்ப மோகத்தால் நமது இருதயம் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே பாவம் நம்மை எளிதில் வீழ்த்திவிடும். பாவம் நம்மைச் சுற்றி நெருங்கிக்கொண்டிருக்கிறது (எபிரெயர் 12:1). ஆயினும் ஒரு காரியத்தைப் புரிந்துகொள்ளுங்கள். எல்லா மனிதர்களும் பாவம் செய்யக்கூடாதபடி இருந்த நமது அசலான தூய்மையிலிருந்து நெறிதவறிப் போயிருக்கிறபடியினால், பெண்கள் தொடர்பான காரியங்களில் அனைத்து மனிதர்களின் காம உணர்ச்சிகளும் (மோசமான வழியில் மாறிய சிலரைத் தவிர) ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. எல்லா ஆண்களின் பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரியானவையாகவே இருக்கின்றன அல்லது அவர்களால் எளிதாகக் கடந்து செல்லக்கூடாத நிலையிலேயே அவர்கள் அனைவருடைய எண்ண அலைகளும் இருக்கின்றன என்னும் உண்மையை நான் உங்களிடத்தில் அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். ஆண்கள் எல்லாரும் நல்லவர்கள் என்று கூறி உங்களுடைய குற்றச்சாட்டிலிருந்து நான் தப்பிக்க விரும்பவில்லை.
நீங்கள் சரியான விதத்தில் உடை அணிந்து, சரியான விதத்தில் நடந்து கொண்டு, சரியான மனிதர்களுடன், சரியான சூழ்நிலைகளில் இருக்கப் பழகிக் கொண்டால், நீங்கள் சங்கடமாகவோ அல்லது அசௌகரியமாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும். ஆயினும் சிறந்த மனிதர்களின் முன்னிலையில் கூட நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய சந்தர்ப்பங்களே அதிகமாக இருக்கின்றன. ஏனெனில் இவர்கள் தேவபக்தி உள்ளவர்களாக இருந்தாலும், “தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருந்தாலும்” (கலாத்தியர் 5:24), வேதவசனத்திற்குப் புறம்பான ஆசை இச்சைகளின் மீதுள்ள ஈடுபாட்டை வெறுத்திருந்தாலும், அவர்களுடைய உள்ளத்தில் பாவ சுபாவங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. தேவபக்தியுள்ள மனிதர்களிடத்திலும், “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் தொடர்ந்து இச்சித்துக்கொண்டே இருக்கிறது” (கலாத்தியர் 5:17).
ஆண்கள் தங்களது மாம்ச இச்சைகளை அழிக்கக் கடுமையாக முயற்சி செய்யலாம், ஆயினும் அது எவ்வளவு எளிதான காரியமன்று. இத்தகைய உணர்வுகளை அழிப்பதற்காக மிகவும் நேர்மையான முறையிலும், விடாமுயற்சியுடன் மேற்கொள்ளப்பட்ட காரியங்கள் கூட மிகவும் வெற்றிகரமாக அமையவில்லை என்பதே பலரது அனுபவங்களின் வாயிலாக வெளிப்பட்ட யதார்த்தமான உண்மை. இது வரலாற்று உண்மையும் கூட இத்தகைய அனுபவங்களைக் கடந்துவந்த பலர் இதற்குச் சான்றளித்திருக்கிறார்கள். பெரும்பாலான பக்தியுள்ள சிறந்த ஆண்களும் இத்தகைய மாம்ச இச்சைகளால் வெல்லப்பட வாய்ப்புள்ளது. “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போலப் பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.” (யோபு. 1:8), “என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” (யோபு 31:1). மிகச் சிறந்த தேவமானிதனாகிய தாவீதுகூட பத்சேபாளின் வசீகரத்தால் தோற்கடிக்கப்பட்டான். மேலும் இத்தகைய மாம்ச இச்சைகள், “வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்” (1 கொரிந்தியர். 7:2) என்னும் தேவனுடைய பொதுவான சட்டத்தை அழித்துப் போட்டுவிடக் கூடாது.
திருமணமானவர்கள் உட்பட தேவபக்தியுள்ள ஆண்கள், பெண்களை நேரடியாகக் கண்டோ, அல்லது சிந்தனையிலோ, தார்மீக ஒழுக்க நெறிகளுக்கு மாறாக ஏற்படக்கூடிய மாம்ச இச்சை என்னும் உணர்வுகளுக்கு எதிராக மிகவும் கடினமான போராட்டத்தையே கொண்டிருந்தார்கள் என்பதை அவர்களுடைய அனுபவங்களும், வரலாறும் இணைந்து சான்றளிக்கின்றன. ஒளிவுமறைவில்லாத திறந்த கண்களுடன் நம்முடைய வாழ்க்கையின் வழியாகக் கடந்து செல்வோமாயின், தேவபக்தியுள்ள மற்றும் தேவபக்தி இல்லாதோரின் குடும்ப வாழ்க்கையில் இத்தகைய இச்சைகளின் மூலம் விரும்பத்தாக முடிவுகள் ஏற்பட்டு, விரக்தியையும், வெறுமையையும் அனுபவிக்கிறதைத் தெளிவாகக் கண்டுகொள்ள முடியும். ஆகவேதான், “ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்” (1 கொரி. 7:9) என்னும் வசனத்திற்கு ஏற்றபடி சில தம்பதியினர் தங்களது இல்லற வாழ்க்கையில் நுழைய வழிவகுத்தது. சிலர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட திருமண வாழ்வின் ஊடாக இதற்கான வழியைக் கண்டுகொண்டனர். ஆயினும் இது சிறிது காலத்திற்கு மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. மேலும் இப்பொழுது நீங்கள் இத்தகைய நபர்கள்மீது பரிதாபப்பட விரும்பினாலும், அல்லது கோபப்படவிரும்பினாலும், அல்லது இரண்டையும் செய்ய விரும்பினாலும், பல தம்பதியினர் இத்தகைய காரியங்களில் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கவில்லை என்பதே உண்மையாகும். மாம்ச இச்சையோடு போராடிக்கொண்டிருக்கிற ஒரு மனிதன், அவன் உண்மையாகவே தன் நிலையை உணர்ந்தவனாக இருந்தாலும், தனக்கான தேவைகளைத் திருமண பந்தத்திற்குள் தீர்த்துக் கொண்டாலும், மாம்ச உணர்ச்சிகளுக்கு எதிரான போராட்டத்தில் கசப்பான அனுபவத்தையே சந்தித்திருக்கிறார்கள் என்பதும் மற்றோர் உண்மையாகும்.
இந்தப் போர் மிகவும் கடினமானது. ஆவிக்குரிய ரீதியில் மிகவும் வலிமையான மனிதராயினும், தன்னுடைய ஆசையை தன் குடும்பத்திற்குள் அனுபவித்து மகிழ்வதை நிறைவேற்றத் தவறுகிற ஒரு மனிதராக இருப்பாராகில், தனது மனதின் விருப்பத்தையெல்லாம் தன்னுடைய வழியில் நிறைவேற்றுகிற மிகவும் பெலவீனமான ஒரு மனிதரைக் காட்டிலும் போர்க்களத்தில் மிகவும் மோசமான தோல்வியைச் சந்திக்கக்கூடும். தாவீது ஒரு தேவனுடைய மனிதனாக விளங்கினான் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். பழைய ஏற்பாட்டு வரலாறு முழுவதிலும் தேவபக்தியுள்ள மனிதன் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதற்கான ஓர் அளவுகோலாக விளங்கினான். தாவீதினுடைய சந்ததியினரை தேவன் நியாயந்தீர்ப்பதற்காக இவனுடைய தேவபக்தியையே முன்னுதாரனமாகப் பயன்படுத்தினார். ஆயினும் அவன் பலாதார மணம் புரிந்ததற்கான காரணம் என்னவெனில், எல்லா மனிதருக்கும் இருக்கிற ஆசையையும் விருப்பத்தையும் ஒரே மனைவியினிடத்தில் திருப்தி அடையாமல் இருந்ததே ஆகும். இந்தக் காரியத்தில் ஓர் ஆவிக்குரிய பலமான மனிதனுக்கு இருக்க வேண்டிய திருப்தி அவனுக்கு இல்லாமல் போனதால், அவன் ஒரு பெலவீனமான மனிதனாகவே காணப்பட்டான்.
நாம் அந்தப் பழைய கேள்விக்கு நேராக மீண்டும் நம்முடைய கவனத்தைத் திருப்புவோம். ஆண்கள் ஒழக்கக்கேடானவர்களா இல்லையா என்பது நாம் இதுவரை சிந்தித்துக்கொண்டிருக்கும் கருத்துடன் தொடர்பில்லாதது ஆகும். ஆண்களுடைய விருப்பங்கள் எல்லாருக்கும் இருக்க வேண்டிய சராசரியைக் காட்டிலும் அல்லது சரியானதைக் காட்டிலும் எவ்வளவு தூரமாக இருந்தாலும், அவன் பாவத்தினால் வரக்கூடிய விளைவுகளுக்கு அவன் அப்பாற்பட்டவனாக இருந்தாலும் அவனுடைய குணாதிசயத்தை அளவிடுவது என்பது மிகவும் கடினமான காரியமாகும். இது எத்தகைய வேறுபாட்டை அவனில் உருவாக்கும்? அவன் எப்படி இருக்கிறான் அல்லது அவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்னும் உண்மையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதுடன் தொடர்புடையது ஆகும். ஆண்கள் பலவீனமானவர்கள் என்பதும், அவர்கள் பெண்களின் உருவத்தையோ அல்லது மறைவான அவயவங்களையோ பார்ப்பதன் வாயிலாக உணர்வுப்பூர்வமாகத் தூண்டப்படுகிறார்கள் என்பதும் யதார்த்தமான உண்மையாகும். விதிவிலக்காக சில மனிதர்கள் ஆவிக்குரிய வலிமையுடையவர்களாகவும், தங்களது சொந்த வாழ்க்கையிலே தனது ஆசைகளைத் திருப்தியாக்கிக்கொள்கிறவர்களாவும், நீங்கள் நினைத்தாலும் அவர்களை உணர்ச்சிவயப்படாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பலருடைய வாழ்க்கையில் இது உண்மையாக இருந்தாலும்கூட, பொதுவான ஆண்கள் பெலவீனமானவர்களாவும், பாவத்தில் எளிதாக விழுந்துவிடக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
சோதனைக்கு ஆளாகாத ஒரு பலமான மனிதனுடன் இருப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் பலவீனமான மனிதர்களைப் பொறுத்தவரை நீங்கள் அன்பினால் தூண்டப்படுகிற கடமைக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும். “அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்” (ரோமர் 15:1; 14:13).
4. நான்காவது எதிர்க் கேள்வி அல்லது ஆட்சேபனை: “ஓர் ஆண் பெண்களாகிய எங்களை இச்சையோடு பார்த்தால் அது அவனுடைய பாவமேயன்றி, அது எங்களுடைய பாவமல்லவே?”.
இதற்கான என்னுடைய பதில்: “போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்” (ரோமர் 14:15,21). பத்சேபாளுடைய அறியாமையால் அவள் தன் உடலை ஏதேச்சையாகக் காண்பித்ததால், தாவீது பலவீனமாக்கப்பட்டார், தாவீது தடுமாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டார். ஆகவேஉங்களது பெண்மையின் அழகைக் காட்டும் போது உங்களுடைய சகோதரர்களுக்கும் அதேவிதமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தக் கட்டுரையைப் படித்த பிறகும், இந்த உண்மை எனக்குத் தெரியாது என்று உங்களால் கெஞ்ச முடியாது. “ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” (யாக்கோபு 4:17) என்று அப்போஸ்தலன் கூறியிருக்கிறார்.
உங்களது ஆடை ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி நீங்கள் முற்றிலும் அறியாதவராக இருந்தால், உங்கள் விருப்பப்படி நீங்கள் உடை அணியலாம், அது பாவமன்று. ஆனால் எத்தகைய விளைவுகளை உண்டாக்குகிறது என்று நீங்கள் அறிந்துவிட்டால் நீங்கள் முன்னர் போல இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் அவனுடைய பாவத்திற்கு அவனே முழுவதும் பொறுப்பாளியாக இருக்கிறான். ஆனால் நீங்கள் வேண்டுமென்றே அவனது உணர்வுகளைத் தூண்டிவிட்டால், அவனது பாவத்திற்கு நீங்களும் நிச்சயமாக ஏதோவொரு வகையில் பொறுப்பாளியாவீர்கள். கர்த்தர் எசேக்கியேலிடம் இவ்விதமாகச் சொன்னார்: “நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்தில் இராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்” (எசே.33:8). இவ்வசனத்தில் துன்மார்க்கன் தனது பாவத்திற்கு அவனே முழுப் பொறுப்பாளியாக இருக்கிறான், அதற்காக அவன் மரணமடைவான். ஆனால் இங்கே காவலாளியும் பொறுப்பாக்கப்படுகிறான். ஏனெனில் காவலாளி தன்னுடைய சக மனிதனை அனது பாவத்திலிருந்து திருப்புவதற்கு என்ன செய்ய முடியுமோ அதைச் சொல்லத் தவறி விட்டான். நீங்கள் இன்னொருவரின் வழியில் இடறுதலுக்கேதுவான கல்லலைப் போட்டு, மெய்யாகவே அவனைப் பாவம் செய்யத் தூண்டினால், நீங்கள் எவ்வளவு அதிகமாக கணக்கு ஒப்புவிக்க வேண்டும்?
5. ஐந்தாவது எதிர்க் கேள்வி அல்லது ஆட்சேபனை: “நீங்கள் சொல்லுகிற அனைத்து அறிவுரைகளையும் நான் பின்பற்ற வேண்டியிருந்தால், என்னுடைய அலமாரியில் இருக்கிற அனைத்து உடைகளையும் தூக்கிப் போட்டுவிட்டு, எல்லாம் புதியதான ஆடைகள் வாங்க வேண்டியிருக்குதே, இதற்கு நான் என்ன செய்வது, என்னால் ஒரே நேரத்தில் அவ்வளவு பணம் கொடுத்து வாங்க முடியாதே?”.
இதற்கான என்னுடைய பதில்: என்னுடைய அருமையான நண்பர்களே, ஒரு காரியம் உங்களை பாவத்திற்கு நேராக இழுக்குமானால் அதை நீங்கள் செய்யாமல் இருப்பதே நலம். அதற்காக நீங்கள் எந்தக் கிரயத்தையும் கொடுக்கலாம். நீங்கள் ஒரு மெய்யான கிறிஸ்தவராக இருந்தால், எல்லா பாவங்களையும் விட்டுவிட்டு நீங்கள் கிறிஸ்துவிடம் வந்திருக்கிறீர்கள். அகவே இப்பொழுது எந்த விலை கொடுத்தாயினும் கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்றுவேன் என்னும் தீர்மானத்தை எடுங்கள். கர்த்தருடைய முழு விருப்பத்தையும் சரியானதையும் செய்ய உங்களுக்கு விருப்பம் இருந்தால், அவர் உங்களுக்கு ஒரு வழியைக் காட்டுவார், இல்லையெனில் இத்தகைய வழி ஒன்றைக் காண்பியுங்கள் என்று அவருடைய சமூகத்தில் கதறி அழுங்கள். மேலும் நீங்கள் பாவம் செய்யவோ அல்லது மற்றவர்களைப் பாவம் செய்ய தூண்டவோ கூடாதபடி நீங்கள் ஆடைஉடுத்தும் பாங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.
6. ஆறாவது எதிர்க் கேள்வி அல்லது ஆட்சேபனை: “நான் பிறரைக் கவர்ந்திழுக்கக்கூடிய அளவுக்கு அழகான பெண்ணோ அல்லது பிறர் சோதிக்கப்படும் அளவுக்கு என்னுடைய உடல் அமைப்பு கவர்ச்சியானதோ கிடையாது. ஆகவே நான் என்னுடைய விருப்பப்படி எனக்கான ஆடையை அணிந்துகொள்கிறேன். இதில் என்ன தவறு இருக்க முடியும்?”.
இதற்கான என்னுடைய பதில்: முதலாவதாக, ஒரு மனிதனுக்கு எது கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதற்கு நீங்கள் ஒன்றும் தேர்ந்த நீதிபதி அல்ல. ஓர் எளிமையான அல்லது அழகற்ற பெண்ணைக் காட்டிலும், ஓர் அழகான மற்றும் நல்ல வடிவமைப்புள்ள பெண் ஒரு ஆணுக்கு ஒரு சோதனையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது உண்மைதான். ஆயினும், ஒரு ஆணிடம் பார்வைக்குக் கவர்ச்சி அற்றவளாகத் தோற்ற்மளிக்கிற ஒரு பெண், வேறொரு ஆணின் பார்வையில் மிகவும் கவர்ச்சியாகத் தோன்றுவதற்காக வாய்ப்புகள் அதிகம் என்பதும் உண்மையாகும். எளிமையான வகையில் உடை உடுத்தியிருக்கிற பெண்கள் கூட யாருக்காவத பிடித்த பெண்ணாக இருப்பாள். நீங்கள் உண்மையிலேயே மிகவும் கவர்ச்சியற்றவராக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், உங்களால் எந்த மனிதனும் உங்களால் சோதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வைத்துக்கொள்வோம். ஆயினும் பிற பெண்களுக்கு நீங்கள் எந்த வகையான முன்மாதிரியைக் கொடுக்கப்போகிறீர்கள்? தங்கள் மனம்போனபடி ஆடை அணிகிற தேவபக்தியற்ற பெண்களுக்கு நீங்கள் எவ்வாறான மாதிரியாக இருக்கப்போகிறீர்கள்? உங்களைப் பார்க்கிற பெண்களுக்கு நீங்கள் எதைக் கற்றுக்கொடுக்கப்போகிறீர்கள் அல்லது நிங்கள் எவ்வாறான சரியான வழியில் நடத்தப்போகிறீர்கள்? அவர்கள் உங்களைப் பார்ப்பதன் மூலமாக, நீங்கள் அணிகிற விதத்தைப் பார்த்து, தங்களுடைய சீறற்ற ஆடையை, மாற்றிக்கொள்ள முன்வருவார்களா?
இறுதியாக, சில பெண்கள் மிகவும் அப்பாவியாகவும், ஆண்களின் சுபாவத்தைப் பற்றிச் சிறிதளவும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். மேலும் எந்த ஆண்களும் அவர்களைத் தங்களுடையவர்களாகக் கருதவோ அல்லது அவர்களைக் காதலிக்கவோ முன்வராததால், எங்களால் எந்த ஆண்களுக்கும் பாதகமில்லை, எனவே நாங்கள் எந்த ஆண்களின் மனமும் சலனமமையும்படி நடந்துகொள்ள மாட்டோம் என்று சொல்கிறார்கள்.
பெண்களைப் பார்ப்பதாலும், முக்கியமாக கவர்ச்சிகரமாக இருக்கிற பெண்ணைப் பார்ப்பதாலும் ஒரு ஆண் பாவ இன்பத்தை பெறுகிறான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆண்கள் ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடிகளைச் செலவிடுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? பெண்களின் நிர்வணாப் படங்களைப் போடும் ஆபாசப் பத்திரிக்கைகள் எத்தனை ஆயிரங்கள் விற்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? இவ்வளவு பெரிய தொகை செலவழித்து இதைப் பார்ப்பதால் அவர்களுக்கு என்ன இன்பம் கிடைத்துவிடப் போகிறது? இந்தப் படங்கள் என்ன இன்பத்தை ஆண்களுக்குத் தந்துவிடப் போகிறது? ஆம், இவையெல்லாம் பார்ப்பதில் கிடைக்கும் இன்பங்களாகும். பெண்களின் உடலைப் பார்ப்பதன் மூலமாக ஆண்களின் உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன. இது அவனது கற்பனையைத் தூண்டி, சரீர இன்பத்தைப் புகுத்திவிடுகிறது. பெரும்பாலான ஆண்கள் சுதந்திரமாக இத்தகைய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். கொஞ்சமும் கட்டுப்பாடும் இல்லாமல், அவர்கள் பெண்களை எங்கு பார்த்தாலும், அவர்களை உற்றுப் பார்த்து, பெண்மையின் உருவத்தைக் தங்கள் கண்களுக்கு விருந்தாக்கிக் கொள்கிறார்கள். ஆகவே உங்களுடைய சரீரத்தை வெளிப்படுத்தும் ஆடைகள் இந்தக் காரியத்துக்கு தூண்டுகோலாக இருந்துவிட வேண்டாம்.
தேவபக்தியுள்ள மனிதர்கள் அத்தகைய இன்பம் பாவமானது என்பதை உணர்ந்துகொள்வார்கள். மேலும் இத்தகைய இன்பத்தை தங்கள் சொந்த மனைவிகளிடத்தில் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்றும் அறிந்திருக்கிறார்கள். எனவே பிற பெண்கள் மூலமாக இத்தகைய சோதனைகள் வரும்போது அவர்கள் இச்சோதனைகளை மிகவும் தீவிரமாக எதிர்த்துப் போராடி அதை வெல்வார்கள். ஆனாலும்கூட ஆண்களுக்கு ஏற்படுகிற உணர்ச்சிகளின் தீவிர வலிமை மற்றும் அதன் கடினத் தன்மையின் காரணமாக இதற்கு எதிரான போராட்டத்தை இவர்கள் மிகவும் கடினமானதாகக் காண்கிறார்கள். இதைப் எதிர்த்துப் போராடுவதற்கு அவர்களுடைய ஆவி ஆயத்தாக இருக்கிறது. ஆனால் சோதனையின் பயங்கரமான முகத்துக்கு முன்பாக அவர்களுடைய மாம்சம் பலவீனமாகக் காணப்படுகிறது. சோதனையை வெல்ல வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது ஆனால், பல நேரங்களில் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று அறியாதினாலே தோல்வியைத் தழுவுகிறார்கள். இதைக் குறித்து வேதம் இவ்விதமாகக் கூறுகிறது: “அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை” (ரோமர் 7:18).
இந்தக் காரியத்தில் அவர்களுக்கு மன உறுதியும், ஜெபமும், பிரயாசமும் இருந்தபோதிலும், ஓர் அழகான மற்றும் அம்சமான பெண்ணைக் கண்டால் இவர்களது விருப்பம் இல்லாமையினாலே கண்கள் அவர்களை நோக்கிவிடுகின்றன. அதாவது விருப்பமின்றியே பெண்களின் மீது ஈர்க்கப்பட்டு விடுகிறார்கள். விருப்பமில்லாமல் பார்க்கிற ஒரு கணப்பொழுது பார்வையானது, அவர்களுடைய இருதயத்தில் இச்சித்துப் பாவம் கொள்வதற்குப் போதுமானதாக அமைந்து விடுகிறது. இந்த வகையான சோதனைகளைக் கையாளுவதில் ஓரளவு தேர்ச்சி பெற்ற ஒரு மனிதன் ஆரம்ப தாக்குதலை வேண்டுமானால் எளிதில் எதிர்த்துவிடலாம். ஆனால் இத்தகைய சோதனைகள் பெண்களால் தொடர்ந்து வருமானால் எத்தகைய வலிமையானவர்களும் பலவீனமடைந்து கவர்ச்சிக்கு அடிபணிந்துவிடுகிறார்கள். எனவேதான், “பாலிய இச்சைக்கு விலகி ஓடு” (2 தீமோ. 2:22) என்று புத்தி சொல்கிறோம். அதாவது இத்தகைய சோதனைகள் வருக்கிற ஒவ்வொரு சமயத்திலும் ஓடிவிட வேண்டும். இதுவே தப்பிப்பதற்கான சிறந்த வழியாகும். ஆனால் இந்த பொல்லாத உலகில் நாம் ஓடிப்போவோமா? இதை விடுங்கள், நம் இதயங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தேவனுடைய சபையையும் விட்டு நாம் ஓடிப்போக வேண்டுமா? இப்படிச் செய்வது மிகவும் அவமானம் அல்லவா? ஒரு விசுவாசியாகிய ஆணுக்கு எங்கு புகலிடம் கிடைக்க வேண்டுமோ அங்கிருந்தே ஓட வேண்டிய சூழல் நேரிட்டால் என்ன செய்வது? சபையிலேயே புகலிடம் கிடைக்கவில்லை எனில் வேறு எங்கு ஓடுவது?
காப்புரிமை அறிவிப்பு
இந்த இணையதளத்தில் வெளியிடப்படும் அனைத்து கட்டுரை & புத்தகத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்த விரும்பும் எவரும் எங்கள் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும். இலவச வெளியீட்டிற்கு எங்கள் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அவர்கள் வெளியிடுபவைகளில் "தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்" என்ற அறிவிப்பைச் சேர்க்க வேண்டும். நாங்கள் மேற்கோளுக்கு பயன்படுத்தியது BSI வேதாகமம்.