சிலர் ஒருபோது ஜெபிக்கிறதில்லை
நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்று நான் கேட்கிறேன், ஏனெனில் கிறிஸ்தவத்தில் தனிப்பட்ட ஜெபத்தைப் போல புறக்கணிக்கப்படும் கடமை வேறு எதுவும் இல்லை.
கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு அருமையான சூழ்நிலைகள் நிறைந்த காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன் எப்போதும் இருந்ததைவிட இப்போது அநேக இடங்களில் பொது ஆராதனை ஸ்தலங்கள் இருக்கின்றன. முன் எப்போதும் இருந்ததைவிட இப்போது அநேக மக்கள் ஆராதனைக்கு செல்லுகிறார்கள். இப்படி மக்கள் அனைத்து பொதுவான கிறிஸ்தவ ஜெபகூட்டங்களை நடத்தினாலும், அநேகர் தனிஜெபம் செய்வது இல்லை என்று முழுமையாக நம்புகிறேன். தேவனுக்கும் நமது ஆத்துமாவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களை எந்த கண்ணும் காண்பதில்லை. அதினால் அநேகர் தனிஜெபத்தை செய்யாமல் போகிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர் ஒருபோதும் ஜெபம் என்று ஒரு வார்த்தையும் உச்சரிப்பதில்லை என்று நான் நம்புகிறேன். அவர்கள் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள், தூங்குகிறார்கள், வேலைக்கு செல்லுகிறார்கள், மறுபடியும் வீட்டுக்கு திரும்புகிறார்கள். அவர்கள் கர்த்தர் கொடுத்த காற்றை சுவாசிக்கிறார்கள், தேவனுடைய உலகத்திலே சுற்றி திரிகிறார்கள், கர்த்தருடைய இரக்கங்களினால் சந்தோஷமடைகிறார்கள். அவர்கள் மரிக்கும் சரீரத்தை பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பாக நியாயதீர்ப்பும் நித்தியமும் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தேவனிடம் ஜெபிப்பதில்லை. அழிந்து போகிற மிருகத்தை போல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆத்துமா இல்லாத உயிரினங்களை போல வாழ்ந்து, உயிரினங்களை போல நடந்து கொள்ளுகிறார்கள். அவர்களுக்கு சுவாசத்தையும் ஜீவனையும் எல்லாவற்றையும் கொடுத்த தேவனிடம் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கமாட்டார்கள். முடிவிலே தேவனின் வாயிலிருந்து அவர்களுக்கு நித்தியத்திற்கு தண்டனை வரப்போகிறது. இது எவ்வளவு கொடூரமானது. ஆனால் இது ஒரு இரகசியமாக நடக்கப் போகிற காரியமல்ல. எல்லா மக்களும் அறிந்து கொள்ளுகிற விதத்தில்தான் இருக்கப்போகிறது.
சிலர் ஜெப வடிவங்களை மட்டும் பயன்படுத்துகிறார்கள்
அநேக ஆயிரகணக்கான மக்களின் ஜெபங்கள் வெறும் வாயின் வார்த்தைகளாகவும், மனப்பாடம் செய்த ஜெபத்தை திரும்ப திரும்ப சொல்வதாகவும் தான் இருக்கிறது. மனப்பாடம் செய்த ஜெபத்தின் அர்த்தத்தை கூட அறியாமல் ஜெபிக்கிறார்கள். ஒரு சிலர் சிறிய வயதில் தங்கள் பள்ளியில் சொல்லிகொடுத்த ஜெபத்தை அவசர அவசரமாக சொல்லி விடுவார்கள். ஒரு சிலர் தாங்கள் பின்பற்றுகிற விசுவாச அறிக்கையில் இருந்து ஜெபிப்பார்கள். ஆனால் அவர்கள் விசுவாச அறிக்கை என்ன எதிர்பார்க்கிறது என்பதை மறந்துபோய் ஜெபிப்பார்கள். ஒரு சிலர் ஜெபத்தில் இயேசு சொல்லிக் கொடுத்த ஜெபத்தை செய்வார்கள். ஆனால் அந்த ஜெபத்தை மனப்பூர்வமாகவோ அல்லது அதின் ஆசிர்வாதங்களை அறிந்தவர்களாகவோ ஜெபிக்கமாட்டார்கள்.
நன்றாக இறையியலை தெரிந்துவைத்திருக்கிறவர்கள் கூட தங்கள் ஜெபங்களை குறித்து மிகவும் அலட்சியமாகவே இருக்கிறார்கள். படுக்கைக்கு சென்ற பிறகு வாயில் முனுமுனுவென்று ஜெபிப்பது அல்லது துணி துவைக்கும் போது ஜெபிப்பது அல்லது காலையில் உடை உடுத்தும் போது ஜெபிப்பது என அலட்சியமாக இருக்கிறார்கள். ஆனால் இப்படி ஜெபித்துவிட்டு தேவனிடம் தங்கள் ஜெபம் கேட்கப் பட்டுவிட்டது என்று தவறாக நினைத்து கொள்ளுகிறார்கள். தேவனின் பார்வையில் இப்படி செய்கிற ஜெபம் ஜெபமாக ஏற்றுகொள்ளப்படாது. நம்முடைய இருதயத்திலிருந்து வராத வார்த்தைகள் நமது ஆத்துமாவிற்கு ஒரு நாளும் பயனை தராது. அது நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக கொட்டுகிற முழக்கம் போல் இருக்கிறது. இருதயத்திலிருந்து வராமல் நமது வாயிலிருந்தும் உதடுகளிலிருந்தும் வருகிற ஜெபம் ஜெபமல்ல.
தமஸ்கு வீதியில் கர்த்தர் சவுலை சந்திப்பதற்கு முன்பு சவுல் அநேக நீண்ட ஜெபங்களை செய்திருப்பார் என நிச்சயம் நம்புகிறேன். ஆனால் இயேசுவை சந்தித்த அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நொறுங்குண்ட இருதயத்திலிருந்து சவுல் ஜெபிக்கும்போது "அவன் இப்போது ஜெபிக்கிறான்" என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறதா? நான் சொல்வதை கேளுங்கள். நான் காரணமின்றி இவ்வாறு பேசவில்லை என்பதைக் காட்டுகிறேன். எனது அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் உத்தரவாதமற்றவை என்றும் நினைக்கிறீர்களா? கவனமாகக் கேளுங்கள், நான் உங்களுக்கு உண்மையை மட்டுமே சொல்கிறேன் என்பதை விரைவில் காட்டுகிறேன்.
மனிதன் ஏன் ஜெபிக்கிறதில்லை
ஜெபிப்பது என்பது எந்த ஒரு மனிதனின் இயற்கையான குணநலன் அல்ல. "மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை" (ரோமர் 8:7). மனிதனின் இருதயம் தேவனை விட்டு பிரிந்து தூரமாக போவதைத்தான் மிகவும் விரும்புகிறது. கர்த்தருக்கு முன்பாக மனிதர்களுக்கு பய உணர்வு மட்டுமே எஞ்சி இருக்கிறது.
தன்னுடைய பாவத்தைப்பற்றி உணராமல், தன்னுடைய ஆவிக்குரிய நிலையை உணராமல், காணப்படாத காரியங்களில் விசுவாசம் இல்லாமல், பரலோகத்தின் மீதும் பரிசுத்தத்தின் மீதும் விருப்பமில்லாமல் ஜெபிக்கும் ஜெபத்தினால் என்ன பிரயோஜனம்? இவை எல்லாவற்றையும் மக்கள் அறிவில் அறிந்திருக்கிறார்கள். ஆனால் உணர்வுகளில் அறிந்து வைத்திருக்கவில்லை. அநேக மக்கள் அகலமான பாதையில் பயணிக் கிறார்கள். காரியம் இப்படி இருப்பதால்தான், ஒருசிலர் மட்டுமே உண்மையாக ஜெபிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஜெபிப்பது என்பது நாகரிகமாக இருக்காது என்று சொல்லுகிறவர்களை பற்றி சிந்தித்து பாருங்கள். ஜெபிக்க அநேக மக்கள் வெட்கப்படுகிறார்கள். நூற்றுகணக்கான மக்கள் தாங்கள் ஜெபிப்பதை வெளிப்படையாக சொல்வதற்கு மறுக்கிறார்கள். ஆயிரக் கணக்கான மக்கள் புறஜாதி மக்களுடன் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஜெபிக்காமலே படுக்கைக்கு செல்கிறார்கள். நன்றாக உடுத்துகிறார்கள், திரையரங்ககளுக்கு செல்கிறார்கள், நன்றாக சிந்தித்து செயல்படுகிறார்கள், நல்ல நாகரீகத்துடன் இருக்கிறார்கள். ஆனால் ஜெபிக்க மறுக்கிறார்கள். நான் இதை மறுக்க முடியாது. ஏனெனில் அநேக மக்கள் ஜெபிக்க வெட்கப்படுகிறார்கள் என்பது சமுதாயத்தில் நான் பொதுவாக பார்க்க கூடியதாயிருக்கிறது. இதினால் தான் ஒருசிலர் மட்டுமே உண்மையாக ஜெபிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
அநேக மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி சிந்தித்து பாருங்கள். இரவும் பகலும் அவர்கள் பாவத்தோடு விளையாடி கொண்டு இருந்ததையும், பாவத்தோடு கொஞ்சி கொளாவி கொண்டு இருந்ததையும் நீங்கள் சிந்தித்துபாருங்கள். உலகத்துக்காகவும் அதில் உள்ளவை களுக்காகவும் அவர்கள் வாழ்ந்தபோது, அவர்கள் உலகத்திற்கு எதிராக ஜெபித்தார்கள் என்று நாம் எப்படி சொல்லமுடியும்? தேவனுக்காக சேவை செய்ய ஒரு சிறிய அக்கறை கூட காட்டாத அவர்களை பார்த்து, தேவனுக்காக சேவை செய்ய கர்த்தரிடம் கிருபையை கேட்பார்கள் என்று எப்படி சொல்லமுடியும்? முடியவே முடியாது. அநேக மக்கள் தேவனிடம் எதையும் கேட்கவில்லை. அப்படி கேட்டாலும் எதை கேட்கிறோம் என்பதை அறிந்து கேட்கவில்லை என்பது மிகவும் தெளிவாய் தெரிகிறது. ஜெபமும் பாவமும் ஒருசேர ஒரே இருதயத்தில் வாழமுடியாது. ஜெபம் பாவத்தை இல்லாமலாக்கும் அல்லது பாவம் ஜெபத்தை இல்லாமலாக்கும். நான் அநேக மக்களின் வாழ்க்கையை பார்ப்பதால் இந்த உண்மையை மறுக்கமுடியாது. இதினால் தான் ஒருசிலர் மட்டுமே ஜெபிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
அநேக மக்களின் மரணங்களை பற்றி சிந்தித்து பாருங்கள். எத்தனை மக்கள் மரணத்திற்கு அருகில் செல்லும்போது தாங்கள் தேவனுக்கு அந்நியர்களாக இருப்பதைப் பார்த்திருப்பார்கள். அவர்கள் அப்போது சுவிசேஷத்தை அறியாமல் இருந்ததற்காக மட்டும் வருத்தப்படுகிறதில்லை. கர்த்தரிடம் பேசுவதற்கான வல்லமை அற்றவர்களாக இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். அந்த தருணத்தில் தேவனிடம் செல்வதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகளில் தடுமாற்றமும் கூச்சமும் காணப்படுகிறது. அவர்கள் ஏதோ ஒரு புதிதான காரியத்தை கையில் எடுத்தது போல் காணப்படுகிறார்கள். அவர்கள் கர்த்தரிடம் இதற்கு முன்பாக பேசினதில்லை. யாரோ ஒருவர் அவர்களுக்கு அறிமுகம் தரவேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு போதகர் ஒரு பெண்ணின் வியாதியின் கடைசி தருணத்தில் சென்றபோது அந்த பெண் கவலையோடு போதகரிடம் கேட்ட காரியம் எனக்கு ஞாபகம் வருகிறது. அந்த வியாதி நிறைந்த பெண், போதகரை பார்த்து தனக்காக ஜெபிக்கும்படி மிகவும் ஆசையாக கேட்டாள். அதற்கு அந்த போதகர் நான் உங்களுக்காக என்ன ஜெபிக்கவேண்டும் என்று கேட்டார். ஆனால் அவளிடமிருந்து அவளுடைய ஆத்துமாவிற்கு பிரயோஜனமாக தேவனிடம் கேட்ககூடிய ஒரு வார்த்தைகூட பதிலாக வரவில்லை. அவள் எதிர்பார்த்ததெல்லாம் ஒரு சராசரி போதகரின் ஜெபத்தை மட்டுமே. நான் இதை தெளிவாக புரிந்துகொண்டேன். மரணப்படுக்கை பல இரகசியங்களை வெளிப்படுத்தும். வியாதி மற்றும் மரணப்படுக்கையில் உள்ள மக்களிடம் நான் கண்டதை என்னால் மறக்க முடியாது. இதுவும் சிலரே ஜெபிக்கிறார்கள் என்று நம்புவதற்கு என்னை வழி நடத்துகிறது.
உங்கள் இருதயத்தை என்னால் பார்க்க முடியாது. உங்களின் தனிப்பட்ட ஆவிக்குரிய காரியங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் வேதத்தையும் உலகத்தையும் நான் பார்க்கிறபோது நிச்சயமாக இதைக் காட்டிலும் ஒரு முக்கியமான தேவையான கேள்வியை நான் கேட்டுவிட முடியாது. அது “நீங்கள் ஜெபிக்கிறீர்களா?” என்பதே.





