வேத சத்தியத்தை ஜெபசிந்தையோடு வாசிக்கும் யாவருக்கும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மரணத்தைக்குறித்த காரியங்கள் அல்லது படைப்புகள் என்றும் வற்றாத ஆர்வத்தை கொடுப்பவைகளாகும். ஏனென்றால் கிறிஸ்துவின் மரணமே விசுவாசிகளின் இம்மைக்கும், நித்தியத்திற்கும், எல்லாவற்றிலும் எல்லாமுமாயிருக்கிறது. மேலும் இது நமது சிந்தனைக்கும் எட்டாத தனித்தன்மை வாய்ந்த காரியமானாலும் நமது உள்ளுணர்வால் உணர்ந்து அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இரகசியங்களிலும் இரகசியம் எனக்கருதப்படும் இக்காரியத்தின் சிறப்பு அம்சங்களை நான்கு வார்த்தைகளைக் கொண்டு இதைத் தொகுத்து சொல்லலாம். கிறிஸ்துவின் மரணம் இயற்கையானது (Natural), இயற்கைக்குப் புறம்பானது (Un-Natural) இயற்கையைக் கடந்தது (Preter-Natural), வியக்கத்தக்க வகையில் இயற்கைக்கு அப்பாற்பட்டது (Super-Natural) இவைகள் ஏதோ புதிர்போல் தோன்றலாம். எனினும் இவற்றை விளக்கித் தெளிவுபடுத்த இயலும்.
முதலாவதாக கிறிஸ்துவின் மரணம் இயற்கையானது. இதன் மூலம் நாம் சொல்ல விரும்புகிற காரியம் என்னவெனில் கிறிஸ்துவின் மரணம் உண்மையானது. அவரது மரணம் தொடர்பான நிகழ்வுகள் யாவும் நாம் நன்கு அறிந்தவைகள் தான். ஆனாலும் இந்த நிகழ்வுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் ஆச்சரியமான காரியத்தைத்தான் உங்கள் ஆவிக்குரிய சிந்தையில் வைக்க விரும்புகிறேன். பொல்லாத மனிதர்களால் பிடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டாரே, அவர் யார்? அவர் யாரோ ஒருவரல்ல, அவர் இம்மானுவேல். சிலுவையில் கொடூர மரணத்தைச் சந்தித்தவர் யாரோ ஒருவரல்ல. அவர் யெஹோவா எனும் தேவனோடிருந்தவர், தேவனாயிருந்தவர். சபிக்கப்பட்ட மரத்தில் இரத்தம் சிந்தினாரே! அந்த மரமே தெய்வீகமாக மாறியது. அங்கேதான் தமது சுயரத்தத்தினாலே தேவனுடைய சபையை சம்பாதித்து கொண்டார் (அப்போஸ்தலர் 20:28). தமது இரத்தத்தைச் சிந்தி தேவனுடைய சபையை உண்டாக்கினவர். தேவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்து அவர் சிந்திய இரத்தத்தினாலே உலகத்தைத் தமக்குள் ஒப்புரவாக்கிக் கொண்டார் (2 கொரிந்தியர் 5:19). அந்த தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் பண்ணினார் என்றால் அவர் ஏன் இந்த கோரமான பாடுகளை அனுபவிக்கவேண்டும்? நித்தியமான அவர் எப்படி மரணத்தைத் தளுவ முடியும்? அவர் உலகத்தோற்ற முதல் இருந்தார் எனினும், தேவனோடிருந்தார், தேவனாய் இருந்தவர் எனினும் அவர் மாம்சமாக உருவெடுத்தார். அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் அடிமையின் ரூபம் எடுத்து மனித சாயலானார். "அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார்" (பிலிப்பியர் 2:8) என்று வாசிக்கிறோம். ஆகவே அவர் அவதாரமானார் என்பதை விளங்கிக் கொள்ளுகிறோம். அவ்வாறு அவதாரமான மகிமையின் தேவன் மரணப்பாடுகளை அனுபவிக்கவும் மரணத்தை ருசிபார்க்கவும் ஆயத்தமாயிருந்தார். "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்ற அவருடைய வார்த்தையைக் கவனித்துப் பாருங்கள். அவருடைய ஜீவனை யாரும் பறித்துவிடவில்லை, அவரே ஒப்புக்கொடுத்தார். ஆகவே அவருடைய மரணம் எவ்வளவு இயற்கையானது! எவ்வளவு உண்மையானது! மேலும் கல்லறையில் வைக்கப்பட்டாலும் மூன்று நாட்கள்தான் அவர் அங்கே இருந்தார்.
இரண்டாவதாக கிறிஸ்துவின் மரணம் இயற்கைக்குப் புறம்பானது. இதன் மூலம் நாம் சொல்ல விரும்புகிற காரியம் என்னவெனில் கிறிஸ்துவின் மரணம் அசாதாரணமானது. அவர் அவதாரமாக மாறியதின் காரணமாக மரணப்பாடுகளைச் சகிக்கவும், மரணத்தை ருசிபார்க்கவும் வல்லமையுள்ளவராய் இருந்தார். என்று முன்பு கண்டோம். ஆனாலும் அவர் மீது மரணத்திற்கு அதிகாரம் இருந்தது என்று யூகித்துக் கொள்ளக்கூடாது. அது உண்மை அல்ல. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று காண்கிறோம். ஆனால் அவரில் அப்படி பாவம் ஒன்றுமில்லையே! இயேசுவின் பிறப்பிற்கு முன்பாக மரியாளிடம் "உன்னிடத்தில் பிறக்கும் (பிள்ளை) பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும்" (லூக்கா 1:35) என்று தேவதூதன் மூலமாகச் சொல்லப்பட்டதைக் காண்கிறோம். ஆகவே விழுந்துபோன மனிதனின் சுபாவம் அவரைத் தீட்டுப்படுத்தாதவண்ணம் அவர் இவ்வுலகத்திற்கு வந்தார். அவர் உலகில் வாழ்ந்த காலத்திலும் "அவர் பாவஞ்செய்யவில்லை" (1 பேதுரு 2:22) "அவரிடத்தில் பாவமில்லை” (1 யோவான் 3:5) "பாவம் அறியாத அவர்" (2 கொரிந்தியர் 5:21) என்றுதான் பரிசுத்த வேதத்தில் வாசிக்கிறோம். அவருடைய நடக்கையிலும் சரீரத்திலும் தேவனுடைய பரிசுத்தராகவே இருந்தார். "குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டி" (1 பேதுரு 1:19) என்றே அவரைக்குறித்து வாசிக்கிறோம். ஆகவே மரணத்திற்கு அவர் மீது அதிகாரம் இல்லை. இயேசு கிறிஸ்துவை விசாரித்த அதிகாரியான பிலாத்தும்கூட "இவனிடத்தில் குற்றம் காணவில்லை" (லூக்கா 23:15) என்றுதான் கூறினார். ஆகவே அவர் இயற்கைக்குப் புறம்பான மரணத்தைச் சந்தித்தார் என்று நாம் கூறுகிறோம்.
மூன்றாவதாக அவருடைய மரணம் இயற்கையைக் கடந்தது. கிறிஸ்துவின் மரணம் அவருக்கு உலகத்தோற்றத்தின் போதே முன்குறிக்கப்பட்டது என்பது முக்கியமான காரியம். "உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி" (வெளிப்படுத்தல் 13:8) என்று அவரைக்குறித்து வாசிக்கிறோம். ஆதாமின் சிருஷ்டிப்புக்கு முன்பாகவே அவனுடைய விழ்ச்சி எதிர் பார்க்கப்பட்டதுதான். பாவம் உலகத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே தேவன் மனுக்குலத்தின் இரட்சிப்பைத் திட்டமிட்டு விட்டார். தேவத்துவத்தின் நித்திய ஆலோசனையின்படி பாவிகளுக்காக ஒரு இரட்சகர் முன் குறிக்கப்பட்டார். அநீதியுள்ளவர்களுக்காக நீதியுள்ள அந்த இரட்சகர் பாடுபட வேண்டும். நாம் ஜீவிப்பதற்காக அந்த இரட்சகர் ஜீவனைக் கொடுக்கவேண்டும் என்பது தேவனால் முன்குறிக்கப்பட்டதாகும். பாவத்தின் பரிகாரமாக ஒரு கிரயத்தைச் செலுத்த இயேசுகிறிஸ்துவைத் தவிர வேறு யாருமிருக்கமுடியாது. பிதா தம்முடைய ஒரே குமாரனை மனுக்குலத்தை மீட்கும்பொருளாக ஒப்புவித்தார்.
இயற்கையைக் கடந்த கிறிஸ்துவின் மரணத்தின் தன்மை சிலுவையைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது அதாவது சிலுவை மேன்மை பெற்றிருக்கிறது என்று சொல்லலாம். "தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்" (ரோமர் 3:25,26) என்ற வசனத்திலிருந்து கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் நோக்கத்தை விளங்கிக் கொள்ளுகிறோம். தேவன் இயேசுகிறிஸ்துவை கிருபாதார பலியாக முன்பே ஏற்படுத்தினார். உலகத்தோற்றத்திலிருந்தே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவை அவர் நியமிக்காமல் இருந்திருப்பாரானால் பழைய ஏற்பாட்டு காலத்திலுள்ளோரின் பாவங்களுக்கு அவ்வப்போது தண்டனையைப் பெற்றுக் படுகுழியில் இறங்கியிருப்பார்கள்.
நான்காவது கிறிஸ்துவின் மரணம் வியப்படியும் வகையில் இயற்கைக்கு அப்பாற்பட்டது. மற்ற எல்லா மரணத்தையும் விட கிறிஸ்துவின் மரணம் முற்றிலும் மாறானது. எல்லாவற்றிலும் மேலான மேன்மையை அவர் பெற்றிருந்தார். அவருடைய பிறப்பு மற்ற எல்லாருடைய பிறப்பைப் பார்க்கிலும் மாறுபட்டது. அதேபோல அவருடைய மரணமும் மற்ற எல்லாருடைய மரணத்தைவிட மாறுபட்டது. இதை அவருடைய வார்த்தையிலிருந்தே தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். "நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள மாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு" (யோவான் 10:17,18) என்று சொல்லுகிறார். சுவிசேஷ புத்தகங்களில் சொல்லப்பட்டவைகளைக் கவனமாக ஆராய்ந்து வாசித்தால் அவருடைய மரண வேளையில் சொன்ன வார்த்தைகளுக்கு வேதத்திலிருந்து ஏழு அம்ச நிரூபணங்கள் இருப்பதை நாம் காணமுடியும்.
தன்னைக் கைது செய்ய வந்தவர்களிடம் தன்னை ஒப்புக்கொடுத்தத் தன்மை, "மிகுந்த சத்தத்தோடு" கூப்பிட்டு தம்முடைய ஆவியை ஒப்புக் கொடுத்தத் தன்மை, கொடிய வேதனையை அனுபவித்த சூழ்நிலையின் மத்தியிலும் "எல்லாம் முடிந்தது என்று அறிந்து" என்று கூறியதிலிருந்து கடைசிவேளை வரை அவர் தம்முடைய சிந்தையின் தெளிவான கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருந்தார் என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன. "மேலும் தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்" என்ற நிலை, போர்ச்சேவகர்கள் மரணத்தைத் துரித்தப்படுவதற்கு கால்களின் எலும்பை முறிப்பதற்கு வரும்போது அதற்கு முன்பாகவே மரித்திருந்த தன்மை இவை எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும்பொழுது இவையாவும் அவருடைய ஜீவனை யாரும் எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தார் என்பதற்கு நிரூபணங்களாக இருக்கின்றன. மேலும் அவர் மரித்த மாத்திரத்தில் தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்த தன்மை, பூமி அதிர்ந்த நிலை, கன்மலை பிளந்த தன்மை, கல்லறைகள் திறந்த தன்மை போன்ற வெளிப்படையான ஆச்சரியமான நிகழ்ச்சிகள் யாவும் அவரது மரணம் வியத்தகு வகையில் இயற்கைக்கும் அப்பாற்பட்டது என்பதில் எந்த முரண்பாடுமில்லை. நூற்றுக்கதிபதி "மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்" என்று சொன்னதுபோலவே நாமும் சொல்ல முடியும். ஆகவே கிறிஸ்துவின் மரணம் தனித்துவம் வாய்ந்தது, ஆச்சரியமானது, இயற்கைக்கும் அப்பாற்பட்டது. தொடர்ந்து வரும் அதிகாரங்களில் அவர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த வேளையில் அவர் மொழிந்தருளிய வார்த்தைகளைக் கேட்போம். அந்த வார்த்தைகள் சிலுவையில் கொடிய பாடுகளை அனுபவித்த ஒருவரின் மகா மேன்மையை வெளிப்படுத்துகிறது. அந்த வார்த்தைகள் இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிக்கிறது. அவர் அனுபவித்த பாடுகள், அவற்றின் நோக்கங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அந்த தெய்வீக மரணம் எல்லாவற்றிற்கும் போதுமானதாக இருக்கிறது என்பதை அறிவித்துக் கொண்டேயிருக்கிறது.
“அப்பொழுது இயேசு: "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்” (லூக்கா 23:34).
மனிதன் கொடூரமான அக்கிரமத்தை செய்திருந்தான். உலகை சிருஷ்டித்தவர் உலகிற்கு வந்தார். ஆனால் உலகம் அவரை அறியவில்லை. மகிமையின் தேவன் மனிதர்களின் மத்தியில் வாசம் பண்ணினார். ஆனால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களின் கண்களை பாவம் குருடாக்கியதினால் அவர்களுக்கு அவரில் சௌந்தரியம் ஏதொன்று மில்லை, விரும்பப்படத்தக்க ரூபம் அவருக்கு இல்லை, என்றுதான் காண முடிந்தது. மனிதர்கள் அவரை எவ்வாறு நடத்தப்போகிறார்கள் என்பதை அவர் பிறப்பில் அவருக்கு சத்திரத்தில் இடம் கிடைக்கக் கூடாதிருந்தது முன்னோட்டமாகக் காட்டுகிறது. அவர் பிறந்த உடனே ஏரோது அவரைக் கொலை செய்ய வழி தேடினான். அவர் மேல் விரோதம் எழும்பியதை அறிவிப்பதோடு, உச்சகட்டத்தில் மனிதனின் பகை அவரை சிலுவைக்கு தள்ளியதை எடுத்துரைக்கிறது. மாறி மாறி அவருடைய பகைவர்கள் அவரை அழிப்பதற்கு முயற்சி எடுத்தார்கள். இப்பொழுது அவர்களுடைய இழிவான விருப்பங்கள் நிறைவேறியது. தேவ குமாரன் அவர்கள் கையில் தன்னைத் தானே ஒப்புக்கொடுத்தார். ஒரு போலி விசாரணை நடத்தி அவரை நியாயம் விசாரித்தவர்கள் யாதொரு குற்றமும் அவரிடத்தில் காணவில்லை யென்றாலும், அவனைச் "சிலுவையில் அறையும்" என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திய மக்களின் கூக்குரலுக்கு இணங்கினார். அவர்களது ஈவு இரக்கமற்றத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அமைதிப்படுத்த முடியாத எதிரிகளுக்கு அவர் சாதாரணமாக மரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மிகுந்த அவமானமான, வேதனையும், துயரமும் நிறைந்த மரணதண்டனையைத் தீர்மானித்தார்கள். ஒரு சிலுவையை வாங்கினார்கள். அதிலே இரட்சகர் அறையப்பட்டார். அதிலே அவர் அமைதியாகத் தொங்குகிறார். ஆனால் இப்பொழுது அவருடைய வெளிறிய உதடுகள் அசைகின்றன. பரிதாபத்திற்காக அழுகிறாரா? இல்லை. அப்படியானால்? அவரைச் சிலுவையில் அறைந்தவர்களின் மேல் சாபங் களைக்கூறுகிறாரா? இல்லை. அவர் ஜெபிக்கிறார், அவருடைய விரோதிகளுக்காக ஜெபிக்கிறார்.
"அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்" (லூக்கா 23:34).
நமது கர்த்தர் சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகளில் முதல் வசனம் ஜெபத்தில் மன்றாடும் அவரின் மனப்பான்மையைக் காண்பிக்கிறது. அது எத்தனை சிறப்பானது? நமக்கு எவ்வளவு கற்றுத்தருகிறதாக இருக்கிறது! அவரின் ஊழியம் ஜெபத்தில் ஆரம்பித்து (லூக்கா 3:21) ஜெபத்தில் முடிவடைகிறது. நிச்சயமாகவே நமக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டை விட்டுச் சென்றிருக்கிறார். சிலுவையில் அறையப்பட்ட அந்த கரங்கள் இனிமேல் வியாதியஸ்தரைத்தொட்டு குணப்படுத்த இயலாது. அந்த பாதங்கள் கொடூர மரத்தில் அறையப் பட்டிருப்பதினால் மனதுருக்கத்தின் அழைப்புகளை நிறைவேற்ற அவரை சுமந்து செல்லாது. அப்போஸ்தலர்களை அறிவுறுத்தலில் அவர் இனி தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இயலாது. ஏனெனில் அவர்கள் அவரை கைவிட்டு ஓடிவிட்டார்கள். அப்படியென்றால் எந்தக் காரியத்தில் தன்னை நியமித்து கொண்டார்? ஜெப ஊழியத்திலே! நமக்கு என்ன ஒரு பாடம்!
வயதானதினாலோ, வியாதியினாலோ கர்த்தரின் திராட்சத் தோட்டத்திலே முன்பு போல சுறுசுறுப்பாக செயல்பட முடியாமல் நீங்கள் வருந்திக் கொண்டிருக்கலாம். கடந்த நாட்களிலே ஒருவேளை நீங்கள் போதகராகவோ, பிரசங்கியாராகவோ, ஞாயிறு பள்ளி ஆசிரியையாகவோ, கைப்பிரதி கொடுக்கிறவர்களாகவோ செயல்பட்டு விட்டு இப்பொழுது படுத்த படுக்கையில் இருக்கலாம். ஆம்! ஆனாலும் நீங்கள் இன்னும் இந்த பூமியில்தான் இருக்கிறீர்கள்! தேவன் இன்னும் ஒரு சில நாட்கள் உங்களுக்குத் தந்திருப்பது ஜெப ஊழியத்திலே செலவழிக்க வேண்டுமென இருக்கலாம். யாருக்குத் தெரியும். உங்களுடைய கடந்த விறுவிறுப்பான சேவையைக் காட்டிலும் ஒருவேளை நீங்கள் இப்பொழுது முன்பைவிட ஜெபத்தினால் அதிகம் சாதிக்கலாம். இப்படிப்பட்ட ஒரு ஊழியத்தை நீங்கள் இகழ்ச்சியாகக் கருதுவீர்களானால், உங்கள் இரட்சகரை நினைவு கூறுங்கள். அவர் ஜெபித்தார், மற்றவர்களுக்காக ஜெபித்தார். பாவிகளுக்காக ஜெபித்தார். தன்னுடைய கடைசி வேளையில்கூட அவர் ஜெபித்தார்.
தன்னுடைய பகைவர்களுக்காக ஜெபித்தது, நமக்கு தீங்கிழைத்து வெறுக்கிறவர்களை நாம் எவ்வாறு நடத்தவேண்டும் என்பதற்கு முன் மாதிரியை வைத்ததோடு, ஜெபத்தால் எட்டமுடியாத, ஜெபத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் எந்த நபரும் இல்லை என்பதை நமக்கு கற்றுத் தந்துள்ளார். கிறிஸ்து அவருடைய கொலைக்காரர்களுக்கு ஜெபித்தது, நாம் பிரதான பாவிகளுக்காக ஜெபிக்க நம்மை உற்சாகப்படுத்தித் தூண்டுவதாயிருக்கிறது. அன்பான கிறிஸ்தவ வாசகரே, ஒருபோதும் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். குறிப்பிட்ட மனிதனுக்காக, குறிப்பிட்டப் பெண்ணுக்காக, உங்களுடைய ஊதாரிப் பிள்ளைக்காக தொடர்ந்து ஜெபிப்பது காலத்தை வீணடிப்பது போல் தோன்றுகிறதா? ஒவ்வொரு நாளும் அவர்களுடைய நிலைமை மோசமடைவதாகத் தோன்றுகிறதா? தெய்வீக இரக்கத்தின் அப்பாற்பட்ட நிலைக்குள் கடந்து விட்டது போலத் தெரிகிறதா? ஒருவேளை நீங்கள் நீண்ட நாட்களாக யாருக்காக ஜெபித்தீர்களோ அந்த நபர் இப்பொழுது சாத்தானின் வழிபாட்டு மரபுக்குள் அகப்பட்டு, அப்பட்டமான ஒரு தேவனை நம்பாதவராக, வேறுவிதமாகச் சொன்னால் கிறிஸ்துவுக்கு வெளிப்படையான எதிரியாக மாறிவிட்டாரா? சிலுவையை நினைவு கூறுங்கள். கிறிஸ்து அவருடைய பகைவர்களுக்காக ஜெபித்தார். அப்படியானால் எவரும் ஜெபத்தின் தொடுதலுக்கு மீறின எல்லையில் இருக்கிறது போல பார்க்கக்கூடாது என கற்றுக்கொள்ளுங்கள்.
கிறிஸ்துவின் ஜெபத்தைக் குறித்து சிந்திக்க மற்றுமொரு கருத்து. ஜெபத்தின் வல்லமையைக் குறித்து நாம் பார்க்கிறோம். தன்னுடைய எதிரிகளுக்காக சிலுவையில் கிறிஸ்து ஏறெடுத்த மன்றாட்டு ஜெபம் குறிப்பிட்ட நிச்சயமான பதிலை கொண்டு வந்தது. இந்தப் பதிலை பெந்தகோஸ்தே நாளில் 3000 பேர் மனந்திரும்பதியதிலே காண்கிறோம். அப்போஸ்தலர் நடபடிகள் 3:17 இன் அடிப்படையில் இந்த முடிவைக் கூறுகிறேன். அங்கே அப்போஸ்தலராகிய பேதுரு கூறுகிறார். "சகோதரரே நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்." பேதுரு "அறியாமை” என்ற பதத்தை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. அது நமது கர்த்தர் "தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்பதோடு ஒப்பிடத்தக்கதாய் இருக்கிறது. அப்படியென்றால் இங்கே ஒரே பிரசங்கத்தில் 3000 பேர் மனந்திரும்பியதற்கு ஒரு தெய்வீக விளக்கத்தை அறிந்து கொள்ளுகிறோம். பேதுருவின் பேச்சாற்றலினால் இல்லாமல் கிறிஸ்துவின் ஜெபமே காரணமாக உள்ளது. கிறிஸ்தவ வாசகரே, நம்மைக் குறித்தும் அதுவே உண்மையாக இருக்கிறது. நாம் அவரில் விசுவாசம் வைப்பதற்கு முன் உங்களுக்காகவும் எனக்காகவும் கிறிஸ்து ஜெபித்தார். இதற்கு ஆதாரமாக யோவான் 17:20 -ம் வசனத்தைப் பார்க்கலாம். "நான் இவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது மல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." என்று சொல்லுகிறார். மறுபடியுமாக நமது பூரண மாதிரியானவரை நோக்கிப் பார்த்துக் கற்றுப் பயனடைவோம். தேவனின் விரோதிகளுக்காக நாமும் மன்றாடுவோம். தவறிப்போன பாவிகளின் இரட்சிப்புக்காக விசுவாசத்தோடு ஊக்கமாய் ஜெபிப்போம்.
நேரடியாக நமது வசனத்திற்கு மீண்டும் வருவோம்: "அப்பொழுது இயேசு : பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்."
முன்குறிக்கப்பட்ட அந்த நாளன்று நடக்கவிருக்கின்றதை எவ்வளவாய் நமது தேவன் முன்னதாகவே தெரியப்படுத்தியிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் ஆண்டவரின் பாடுகளையும் அதனுடன்கூட உள்ள சூழ்நிலைகளையும் குறித்து எவ்வளவு முழுமையான படத்தை நமக்கு தந்துள்ளார். மற்ற எல்லாக்காரியங்களிலேயும் இரட்சகர் "அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொள்வது" (ஏசாயா 53:12) ஏற்கனவே முன்குறிக்கப் பட்டதாக இருக்கிறது. தேவனின் வலது பாரிசத்தில் கிறிஸ்து அமர்ந்திருந்து செய்யும் ஊழியத்தை இது குறிப்பிடவில்லை. "தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்று முடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்' (எபிரேயர் 7:25). இது உண்மைதான்.
ஆனால் இந்த ஊழியம் அவரின்மேல் விசுவாசம் வைத்தவர்களுக்கு இப்பொழுது அவர் செய்கிறதைக் குறிப்பிடுகிறது. ஆனால் கல்வாரிச் சிலுவையிலே அவர் செய்த தயை மிகுந்த காரியத்தை சுட்டிக்காட்டுகிறது. அக்கிரமக்காரருக்காக அவர் மன்றாடியது "அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம்" (ஏசாயா 53:12) என்பதோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
கிறிஸ்து அவருடைய விரோதிகளுக்காக மன்றாட வேண்டுமென்று ஏசாயா 53 ஆம் அதிகாரத்தில் காண்பது ஆச்சரியத்துக்குரிய தீர்க்கதரிசனங்களில் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது. இந்த அதிகாரம் நமது மீட்பரின் வேதனையையும், அவமானத்தையும் குறித்து பத்துக்காரியங் களையாவது குறிப்பிடுகிறது. மனிதரால் புறக்கணிக்கப் பட்டவரும் அசட்டை பண்ணப்பட்டவருமாயிருந்தார்; துக்கம் நிறைந்த மனிதராகவும் பாடு அனுபவித்தவருமாயிருந்தார்; அவர் காயப்பட்டு, நொறுக்கப்பட்டு வாதிக்கப்பட்டார்; கொலை செய்யப்படப்போகிறபோது எந்தவித எதிர்ப்புமின்றி சென்றார்; மயிர்கத்தரிக்கிறவர்களுக்கு முன்பாக சத்தமிடாத ஆட்டைப் போலிருந்தார்; மனிதர்கள் கையில் பாடுபடுவதோடு கர்த்தரால் நொறுக்கப்பட்டுமிருந்தார்; மரணத்திலே தன் ஆத்துமாவை ஊற்றினார்; ஐசுவரியவானின் கல்லறையிலே அவர் அடக்கம் பண்ணப்பட்டார்; இதோடுகூட அக்கரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்; இறுதியாக "அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொள்வார்" என்ற தீர்க்கதரிசனம் "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்று ஜெபித்த போது நிறைவேறிற்று. அவரைக் கொலை செய்தவர்களை அவர் நினைவு கூர்ந்தார்; சிலுவையில் அறைந்தவர்களுக்காக அவர் கெஞ்சினார்; அவர்களுடைய மன்னிப்புக்காக அவர் மன்றாடினார்.
"அப்பொழுது இயேசு பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்."
2 கிறிஸ்து தன் மக்களோடு தன்னை ஐக்கியப்படுத்துதல்
"பிதாவே இவர்களுக்கு மன்னியும்." இதற்கு முன்பாக எந்தச் சமயத்திலும் கிறிஸ்து பிதாவினிடத்தில் இப்படி ஒரு வேண்டுதல் செய்யவில்லை. மற்றவர்களுக்காக பிதாவின் மன்னிப்பை கேட்டு இதற்கு முன்பாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இதுவரைக்கும் அவரே மன்னித்தார். திமிர்வாதக்காரனிடத்தில் "மகனே, திடன் கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்” (மத்தேயு 9:2). சிமியோனின் வீட்டில் தன் பாதத்தை கண்ணீரால் கழுவிய பெண்ணிடம் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது" என்றார் (லூக்கா 7:48). அப்படியென்றால், தானாக நேரடியாக மன்னிப்பை அருளுவதற்குப் பதிலாக, ஏன் பிதாவினிடத்தில் மன்னிக்கும்படி அவர் கேட்க வேண்டும்?
பாவத்தை மன்னிப்பது என்பது தெய்வீக சிலாக்கியம்."தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்" (மாற்கு 2:7) என்று யூத வேதபாரகர் காரணம் காட்டியது செம்மையே. ஆனால் கிறிஸ்து தேவனாயிருந்தார் என்று நீங்கள் சொல்வீர்கள். உண்மை! ஆனால் அவர் மனிதனுமாயிருந்த ஒரு தேவமனிதன். பாவத்துக்குப் பதிலாக தன்னை ஒப்புக்கொடுப்பதற்காக தேவனின் குமாரனாய் இருந்தவர் மனுப்புத்திரனாய் உருவெடுத்தார். "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்" என்று ஆண்டவராகிய இயேசு கதறியபோது, அவர் சிலுவையிலே தொங்கிக் கொண்டிருந்தார். அங்கே அவர் தன்னுடைய தெய்வீக உரிமைகளை செயல்படுத்தாமல் இருந்திருக்கலாம். அவருடைய வார்த்தைகளைக் கவனியுங்கள் அதன்பின்பு வேதத்தின் ஆச்சரியமான துல்லிதத்தைப் பார்க்கலாம். ''பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் (மத்தேயு 9:6). "பூமியிலே" என்ற வார்த்தை வலியுறுத்தப்படுவதைக் கவனியுங்கள். ஆனால் அவர் பூமியிலே இல்லை! அவர் "பூமியிலிருந்து உயர்த்தப்பட்டார்" (யோவான் 12:32). மேலும், சிலுவையிலே அவர் நமக்குப் பதிலாளாக அவர் தொங்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய தெய்வீக உரிமைகளைப் பயன்படுத்தும் அதிகார ஸ்தானத்தில் அவர் இல்லை. ஆகையால் பிதாவினிடத்தில் மன்றாடுகிற ஒரு ஸ்தானத்தை எடுத்துள்ளார். ஆதலால் பரிசுத்த ஆண்டவராகிய இயேசு "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்" என்று கதறியபோது, அவர் தன் மக்களோடு முற்றிலும் ஐக்கியப்பட்டவராக காணப்படுகிறார். இந்தப் பூமியிலே "பாவத்தை மன்னிக்க வல்லமையும்" உரிமையும் உடையவராய் இருந்த ஸ்தானத்தில் இப்பொழுது அவர் இல்லை. மாறாக, பாவிகளுக்காக அவர் மன்றாடுகிறார். நாமும் அதைத்தான் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். ''அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக் கிறார்களே என்றார்."
அறியாமையினால் செய்கிற பாவங்களுக்கும் குற்ற நிவாரணபலி செலுத்த வேண்டிய தேவையை லேவியராகமத்திலே தேவன் குறிப்பிட்டுள்ளார். "ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன் மேல் சுமத்தும் அபதாரம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, பரிசுத்தமானதைக் குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதனோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்ற நிவாரண பலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்" (லேவிராகமம் 5:15-16). "அறியாமையினால் செய்த பாவம்" என்பதை வலியுறுத்திக் கூறப்படுவதைக் கவனியுங்கள். மேலும் வாசிக்கிறோம். ''கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும், கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளை கொடுத்த நாள்முதற்கெண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின் படியேயும் நீங்கள் செய்யாமல், அறியாமல் தவறி நடந்தாலும் சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜன பலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்த வேண்டும். அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையினால் செய்யப்பட்ட படியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரண பலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்" (எண்ணாகமம் 15:22-25). 'அறியாமையினால்' என்பதை வலியுறுத்தப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். இந்த வேதவசனங்களின் அடிப்படையில் தாவீது "மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்" (சங்கீதம் 19:12) என்று ஜெபிப்பதைக் காண்கிறோம்.
நாம் பாவத்தை அறிந்திருக்கிறோமோ இல்லையோ, கர்த்தரின் பார்வையில் பாவம் எப்பொழுதும் பாவம்தான். அறிந்து செய்கிற பாவத்தைப் போலவே அறியாமையில் செய்கிற பாவங்களுக்கும் குற்ற நிவாரணபலி தேவையாயிருக்கிறது. தேவன் பரிசுத்தர். நம்முடைய அறியாமைக்கேற்றவாறு அவர் நீதியின் விதியைத் தளர்த்துவது கிடையாது. அறியாமை என்பது மாசற்ற தன்மையன்று. மோசேயின் காலத்தில் இருந்ததைக்காட்டிலும் இந்தக் காலக்கட்டத்தில் அறியாமை இன்னும் அதிகபொறுப்பு நிலையிலிருக்கிறது. அறியாமைக்கு எந்தவித சாக்குபோக்கும் சொல்ல முடியாது. தேவன் தெளிவாகவும், முழுவதுமாகவும் தன் சித்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். வேதப்புத்தகம் நம் கையில் இருக்கிறது. அதன் உட்பொருளை அறியாமலிருந்தால் நமது சோம்பேறித்தனத்தின்மேல் தான் குறைகூற வேண்டியுள்ளது. தேவன் வேதத்தின்மூலம் பேசியுள்ளார். நாம் அவர் வார்த்தைகளினாலே நியாயந்தீர்க்கப்படுவோம்.
ஆனாலும், அநேக காரியங்களைக்குறித்து நாம் அறியாதிருக்கிறோம் என்பது உண்மை. குற்றமும், தவறும் நம்மேலே இருக்கிறது. அதனால் குற்றத்தின் பயங்கர நிலையைக் குறைக்க முடியாது. அறியாமையின் பாவங்கள் தெய்வீக மன்னிப்பை அடைய வேண்டியிருக்கிறது என்பது மிகவும் தெளிவாகிறது. அப்படியெனில் தேவனின் தரம் எவ்வளவு உயர்ந்தது; நம்முடைய தேவை எவ்வளவு பெரியதாயிருக்கிறது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மைக் சுத்திகரிக்கிற எல்லையில்லா, போதுமான குற்ற நிவாரணபலிக்காக தேவனைத் துதிப்போம்.
"அப்பொழுது பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்."
"தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.'" சிலுவை மரணத்தின் உண்மையை கிறிஸ்துவின் எதிரிகள் அறியாதிருந்தார்கள் என்ற பொருள் அல்ல. "சிலுவையில் அறையும்" என்று அவர்கள் கூக்குரலிட்ட போது அவர்கள் தாங்கள் செய்வதை முற்றிலும் அறிந்திருந்தார்கள். பிலாத்துவினால் அவர்களின் இழிவான வேண்டுகோள் அவர்கள் கேட்டபடி அளிக்கப்பட்டது என்பதையும் அறிந்திருந்தார்கள். அவர் மரத்தில் ஆணிகளைக்கொண்டு அறையப்பட்ட போது நன்றாக அறிந்திருந்தார்கள்.
ஏனெனில் அவர்கள் அந்த குற்றத்திற்கு கண்கூடான சாட்சியாய் இருந்தார்கள். அப்படியெனில் "தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்று அவர் கூறியதின் பொருள் என்ன? அந்தக் குற்றத்தின் மிகப்பெரிய தன்மையை அறியாதிருந்தார்கள் என்பதைக் கூறுகிறது. மகிமையின் தேவனை கொலை செய்கிறோம் என்பதை "அறியாதிருந்தார்கள்." "அறியாதிருந்தார்கள்" என்பதை வலியுறுத்தாமல் "தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்" என்பதே மிகமுக்கியமானது.
ஆனாலும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அவர்களுடைய கண்மூடித்தனத்தைக் காரணம் காட்டி குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது.பழைய ஏற்பாடு தீர்க்கதரிசனங்கள் அவரில் நிறைவேறுவதே அவர் தேவனின் பரிசுத்தர் என அடையாளம் கண்டு கொள்ள போதுமானதா யிருந்தது. அவருடைய உபதேசம் தன்னிகரற்றதாயிருந்ததை அவரைக் குறை கண்டுபிடிப்பவர்களே "அந்த மனுஷன் பேசுகிறது போல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை" என்று சொல்லி ஏற்றுக் கொண்டார்கள். அவருடைய பூரணமான வாழ்க்கையைக் குறித்து என்ன? பூமியிலே எங்கும் வாழ்ந்திராத ஒரு வாழ்க்கையை அவர் மனிதர்கள் முன்பாக வாழ்ந்தார். அவர் தன்னைத்தானே பிரியப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் நன்மை செய்து கொண்டே சுற்றித் திரிந்தார். அவர் எப்பொழுதும் மற்றவர்களுக்காகவே வாழ்ந்தார். சுய காரியத்தை தேடுகிறது அவரிடத்தில் இல்லை. துவக்கத்திலிருந்து முடிவு வரை தன்னைத் தியாகம் செய்த வாழ்க்கை அவருடையது. அவருடைய வாழ்க்கை தேவ மகிமைக்கே வாழ்ந்த ஒன்று. அவருடைய வாழ்க்கையை பரலோகம் அங்கிகரித்து முத்திரை போட்டது. ஏனெனில் பிதாவின் சத்தம் "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்" என்று காதுகள் கேட்கும் வண்ணமாக சாட்சி பகர்ந்தது. இல்லை, அவர்களுடைய அறியாமைக்கு ஏதுவான காரணங்கள் இல்லை. அது அவர்களின் இருதயம் குருடாயிருப்பதையே வெளிப் படுத்துகிறது. தேவ குமாரனை அவர்கள் ஒதுக்கித் தள்ளியது, மாம்சசிந்தை "தேவனுக்கு விரோதமான பகை" என்பதற்கு சாட்சி பகறுகிறது.
இந்த கொடூரமான அவல நிகழ்ச்சியை மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம் என்பது எத்தனை துக்ககரமானது! பாவியான மனுஷனே, தேவனின் மகாப்பெரிய இரட்சிப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளாததினால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்களே அறியாதிருக்கிறீர்கள். தேவனின் கிறிஸ்துவை நீங்கள் அவமதித்து, அவருடைய இரக்கத்தின் அழைப்பை புறக்கணிப்பது எத்தனை கொடூரமான பாவம் என்பதை சிறிதும் அறியாதிருக்கிறீர்கள். உங்கள் பாவத்திலிருந்து உங்களை விடுதலையாக்க அவரால் மாத்திரமே முடியும். அவரை நீங்கள் புறக்கணிப்பதினால் உண்டாகிற குற்றம் எத்தனை ஆழமானது என்பதை சற்றும் அறியாதிருக்கிறீர்கள். "இந்த மனிதன் எங்களை ஆளுகை செய்யக்கூடாது என்பதினால் உண்டாகிற பயங்கரமான குற்றத்தை நீங்கள் அறிந்து கொள்ளாதிருக்கிறீர்கள். அந்த நாட்களில் உண்டானது போலவே இந்த நாட்களிலும் "கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும்" என்ற கேள்வி உங்களை நோக்கி வருகிறது. ஏனெனில் நீங்கள் அவரோடுகூட ஒன்று செய்யவேண்டியதாயிருக்கிறது. ஒன்று அவரை அசட்டைபண்ணி புறக்கணிக்க வேண்டும். இல்லையெனில், அவரை உங்கள் ஆத்துமாவின் இரட்சகராக உங்கள் வாழ்க்கையின் ஆண்டவராக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் செய்வது ஒரு முக்கியத்துவம் இல்லாத அற்ப காரியமாக உங்களுக்குத் தோன்றுகிறது. அவருடைய பரிசுத்த ஆவியானவரின் முயற்சிகளை பல ஆண்டுகளாக எதிர்த்து நிற்கிறீர்கள். முக்கியத்துவம் வாய்ந்த காரியத்தை ஆண்டுகளாக தள்ளி வைத்துள்ளீர்கள். பல ஆண்டுகளாக அவருடைய அப்பாற்பட்ட அழகுக்கு உங்களுடைய கண்களை மூடிக் கொண்டீர்கள். அவருடைய அழைக்கும் குரலுக்கு உங்களுடைய செவிகளை மூடிக்கொண்டீர்கள். அவருக்கு எதிராக உங்கள் இருதயத்தை கடினப்படுத்திக் கொண்டீர்கள்.
ஆ! நீங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறீர்கள். உங்களுடைய மதிகேட்டைக் கண்டுகொள்ளக்கூடாதபடி நீங்கள் குருடாய் இருக்கிறீர்கள். பயங்கரமான பாவத்துக்கு குருடாயிருக்கிறீர்கள். ஆனாலும் மன்னிக்கமுடியாத நிலையில் நீங்கள் இல்லை. நீங்கள் சித்தம் கொண்டால் இப்பொழுதே நீங்கள் இரட்சிக்கப்படலாம். "கர்த்தராகிய இயேசுவை விசுவாசி. அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்." கர்த்தாவே, நான் பார்வையடைய வேண்டும் என்று சொல்லுங்கள்.
"அப்போது இயேசு பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்."
மலைப்பிரசங்கத்திலே தன்னுடைய சீஷர்களுக்கு இயேசு கற்றுக் கொடுத்தார்: "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” (மத். 5:44). எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்து எதை பிரசங்கித்தாரோ அதை வாழ்ந்து காட்டினார். சத்தியமும் கிருபையும் இயேசு கிறிஸ்துவினாலே வந்தது.
அவர் சத்தியத்தை மாத்திரம் கற்றுக்கொடுக்கவில்லை. அவரே சத்தியத்தின் அவதாரமாக இருந்தார். "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயுமிருக்கிறேன்" (யோவான் 14:6) என்று அவர் சொன்னார். மலையிலே கற்றுக்கொடுத்ததை அவர் இங்கே சிலுவையிலே நிரூபித்துக் காட்டினார். எல்லாவற்றிலும் அவர் நமக்கு ஒரு மாதிரியை விட்டுச் சென்றிருக்கிறார்.
கிறிஸ்து சுயமாக தன்னுடைய பகைவர்களை மன்னிக்கவில்லை என்பதை கவனியுங்கள். ஆகையால் மத்தேயு 5:44 -ல், தன்னுடைய சீஷர்களை அவர்களுடைய பகைவர்களை மன்னியுங்கள் என்று அறிவுறுத்தாமல் அவர்களுக்காக "ஜெபம் பண்ணுங்கள்" என அறிவுரை கூறினார். நமக்கு தீங்கிழைக்கிறவர்களை நாம் மன்னிக்க வேண்டாமா? அதிக விளக்கம் தேவைப்படுகிற ஒரு கருத்துக்கு இது நம்மை இழுத்துச் செல்லுகிறது. எல்லா சூழ்நிலையிலும் எப்பொழுதும் நாம் அவர்களை மன்னிக்க வேண்டுமென வேதம் சொல்லுகிறதா? இல்லை என்று நான் வலியுறுத்திக் கூறுகிறேன். தேவனின் வார்த்தை சொல்லுகிறது: "உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்து கொள்; அவன் மனஸ்தாப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒரு நாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்" (லூக்கா 17:3-4). 'மனஸ்தாபம் என்பது வலியுறுத்தப்படுவதைக் கவனியுங்கள். மன்னிப்பை நாம் கூறுவதற்கு முன்பாக குற்றவாளி ஒரு நிபந்தனையை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது என நமக்கு சுற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. தீங்கு செய்த மனிதன் தான் செய்த தவற்றிற்கு தன்னை நியாயம் தீர்த்து அதற்கு “மனஸ்தாபப்பட்டு" அப்படி வருந்துவதற்கு அடையாளம் காண்பிக்க வேண்டும். ஒருவேளை தவறு செய்தவர் மனஸ்தாபடவில்லையென்றால் என்ன? அப்பொழுது அவனை நான் மன்னிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் இங்கு குறிப்பிடுகிற அர்த்தத்தை தவறாக புரிந்து கொள்ளாமல் இருக்கட்டும். எனக்கு விரோதமாக செயல்பட்டவர் தான் செய்ததற்கு வருந்தவில்லை யென்றாலும்கூட நான் அவருக்கு எதிராக பகையுணர்வு கொள்ளக்கூடாது. இருதயத்தில் வெறுப்போ அல்லது வன்மமோ இருக்ககூடாது. அதே சமயத்தில் தவறு செய்தவனை எதுவுமே செய்யாதவனைப் போல நடத்தக்கூடாது. அது குற்றத்தை மன்னிப்பதாகும். அப்படி செய்தால் நீதியின் நெறிகளை பின்பற்ற தவறியவனாவேன். ஒரு விசுவாசி எப்பொழுதும் நீதியின் நெறிகளை உயர்த்தவேண்டும். எங்கே மனஸ்தாபப்படவில்லையோ அங்கே தேவன் மன்னிப்பாரா? இல்லை. ஏனெனில் வேதம் சொல்லுகிறது "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளரவாயிருக்கிறார்" (1 யோவான் 1:9). 'அறிக்கை யிட்டால்' என்பது வலியுறுத்தப்படுவதைக் கவனியுங்கள். இன்னுமொரு காரியம். ஒருவன் என்னைக் காயப்படுத்தி அதற்கு மனம் வருந்தவில்லை யென்றால் நான் அவனை மன்னிக்க முடியாது. அவன் தவறு செய்யாதவன் போல அவனை நடத்தவும் முடியாது. ஆனால் என் இருதயத்தில் பழியுணர்வு இல்லாமலிருப்பதோடு அவனுக்காக நான் கட்டாயம் ஜெபிக்க வேண்டும். இதிலேதான் கிறிஸ்துவின் பூரணமான மாதிரியின் உயர் நிலையுள்ளது. நாம் மன்னிக்க முடியாத நிலையில் அவர்களை மன்னிக்கும்படி நாம் தேவனிடத்தில் ஜெபிக்கலாம்.
"அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்"
நாம் எல்லாரும் பாவிகள்; அந்த நிலையில் பரிசுத்த தேவனின் பிரச்சன்னத்தில் நிற்க தகுதியற்றவர்கள் என்பதே எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் முக்கியமான பாடம். பாவப்பிரச்சனையை சீர் செய்யாவிட்டால் சீரிய கருத்துக்களை தேர்ந்தெடுப்பது, நல்ல தீர்மானங்கள் எடுப்பது, வாழ்வதற்கு உயர்ந்த கொள்கைகளை பின்பற்றுவது போன்ற காரியங்கள் எல்லாம் வீண். தேவனுக்கும் நம் ஆத்துமாவுக்கு மிடையில் பாவம் இருக்கும்போது, தேவனின் அங்கீகாரம் பெறுவதற்கு நேர்மையான குணாதிசயம் உடையவராக நம்மை வளர்த்துக் கொள்வது பிரயோஜனமற்றது. நம்முடைய பாதங்கள் முடக்குவாதத்தால் பாதிக்கப் பட்டிருக்கும்போது, செருப்பு எப்படி பயன்படும்? குருடர்களாய் நாம் இருந்தோமென்றால் கண்ணாடியினால் என்ன பயன்? பாவ மன்னிப்பு என்பது அடிப்படையானது, அத்யாவசமானது, இன்றியமையாதது. நான் பாவத்திலே வாழ்ந்து கொண்டிருக்கும்போது அநேக நண்பர்களால் மிகவும் மதிக்கப்பபட்டவனாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. தேவனின் பார்வையில் பாவ மன்னிப்படையாத ஒரு பாவி, தன் வணிகம் வளர்ச்சியடைந்தாலும் அதினால் அவனுக்கு என்ன லாபம்? என்னுடைய மரணநேரத்தில் எது மிகவும் முக்கியமானது என்றால் என்னுடைய பாவங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டிருக்கிறதா என்பதே.
பாவமன்னிப்பை எப்படி அடைந்து கொள்வது என்பது இரண்டாவதாக எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். எப்படி பரிசுத்த தேவன் பாவத்தை மன்னிப்பார்? தேவ மன்னிப்புக்கும் மனிதன் மன்னிப்பதற்குமுள்ள முக்கியமான வித்தியாசத்தை இங்கே குறிப்பிடுவது அவசியம். கண்டிப்புக் குறைவையும், கண்டிப்பில்லாததையுமே மனித மன்னிப்புக் காண்பிக்கிறது என்பது பொதுவான விதி. நியாயத்தையும் நீதியையும் கிரயம் வைத்தே மன்னிப்பு வழங்கப்படுகிறது. மனிதர்களின் நீதிமன்றத்தில் நியாயாதிபதி இரண்டு தீர்மானங்களுக்கிடையே ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். குற்றவாளிக் கூண்டில் நிற்பவர் குற்றவாளி என தீர்ப்பிடப்படும் போது, நியாயாதிபதி சட்டத்தின் மூலம் தண்டனையை கொடுக்க வேண்டும். இல்லையெனில், சட்டத்தின் நியதிகளை ஒதுக்கித் தள்ளவேண்டும். ஒன்று நீதி மற்றொன்று இரக்கம். குற்றம் செய்தவர்க்கு இரக்கமும் காண்பித்து சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டுமெனில், குற்றவாளி எனத் தீர்ப்பிடப்பட்டவரின் தண்டனையை மூன்றாவது நபர் ஒருவர் அவருக்குப்பதிலாக ஏற்றுக்கொள்ள முன்வந்தால் நியாயாதிபதி சட்டத்தின் நியாயங்களை நிறைவேற்றுவதோடு, குற்றவாளிக்கு இரக்கமும் காண்பிக்க இயலும். நீதியை விலைக்கிரயமாக வைத்து தேவன் இரக்கம் காண்பிக்க மாட்டார் என்பது தெய்வீக ஆலோசனையில் இருந்தது. இந்த பூமியனைத்திற்கும் நியாயாதிபதியாயிருக்கிற தேவன் பரிசுத்த சட்டத்தின் தேவைகளை புறம்பே தள்ளமாட்டார். ஆனாலும் தேவன் இரக்கம் காண்பிப்பார், எப்படி? சீரழிக்கப்பட்ட குலைத்துப்போடப்பட்ட அவருடைய சட்டத்தை முழுத் திருப்திக்கு நிறைவேற்றுகிற ஒருவராலே, அவர் நிறைவேற்றுவார். அவருடைய சொந்தக்குமாரன் அவர்மேல் விசுவாசிக்கிற ஜனங்களின் ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டு அவர்களுடைய பாவங்களை தன் சரீரத்திலே சிலுவை மரத்திலே சுமந்து அந்த நீதியை நிறைவேற்றினார். தேவன் ஒருவரே நீதிபரராயிருந்து இரக்கமாயும், இரக்கமாயிருந்து நீதியாயும் செயல்படமுடியும். எனவே "நீதியின் வழியாக கிருபை ஆளுகை செய்யும்."
அவரை விசுவாசிக்கிறவர்களை நீதியுள்ளவர்களாக்கும்படி ஏற்கனவே ஒரு நீதியின் ஸ்தலம் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. எனவே இவ்வாறாக நமக்கு உரைக்கப்பட்டுள்ளது, "எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது" (லூக்கா 24:46-47). மீண்டுமாக "ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப் படுகிறதென்றும், மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக் கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்கு தெரிந்திருக்கக்கடவது" (அப்போஸ்தலர் 13:38-39). இரட்சகர் தாம் சிந்திய இரத்தத்தினாலே, "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்" என்றார். அவர் செலுத்திய குற்ற நிவாரணப்பலியினாலே, "இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது" என்று கூறமுடியும்.
தன்னுடைய பகைவர்களுக்கு ஜெபித்ததினாலே, கிறிஸ்து அவர்களின் தேவையின் அடிவேரைத் தொட்டார். அவருடைய தேவை ஆதாமின் ஒவ்வொரு குழந்தையின் தேவையுமாயிருக்கிறது. வாசகரே, உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதா? அதற்கு வேண்டிய கிரயம் செலுத்தி நீக்கப்பட்டதா? "(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத் தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது" " (கொலோசியர் 1:14) என்று சொல்லுகிறவர்களின் கூட்டத்தில் நீங்களும் ஒருவரா?
"அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்."
எந்த வார்த்தையோடு இந்தப்பகுதி ஆரம்பிக்கிறது என்பதை கவனியுங்கள்; "அப்பொழுது”. அதற்கு முந்திய வசனம் "சுபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்த பொழுது, அங்கே அவரையும், அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்" (லூக்கா 23:33), அப்பொழுது பிதாவே இவர்களை மன்னியும் என்றார். "அப்பொழுது" - மனிதன் மிகவும் மோசமான காரியத்தை செய்திருந்த போது; "அப்பொழுது" - மனித இருதயத்தின் பொல்லாப்பு உச்சகட்டத்தில் வெளியரங்கமானபோது; "அப்பொழுது" - சிருஷ்டிக்கப்பட்ட மனிதனின் கரங்கள் மகிமையின் தேவனை சிலுவையில் அறைய துணிந்தபோது; கொடூரமான சாபங்களை அவர்கள்மேல் அவர் சொல்லியிருக்கலாம். நீதியின் கோபத்தினால் இடிமுழக்கங்களை கட்டவிழ்த்து அவர்களை சாகடித்திருக்கலாம். பூமியின் வாயைத் திறந்து, அதன் பாதாளத்துக்கு அவர்களை உயிரோடு அனுப்பியிருந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. சொல்ல முடியாத அவமானத்துக்கு உட்படுத்தப்பட்டு, தாங்க இயலாத வேதனையை அனுபவித்து, அசட்டை பண்ணப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, வெறுக்கப்பட்டு இருந்த நிலையில் இயேசு "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்" என்று கதறினார். மீட்டுக்கொள்ளும் வல்லமையுடைய அன்பின் வெற்றி அதுவே. அன்பு "நீடிய சாந்தமும், தயவுமுள்ளது... சகலத்தையும் சகிக்கும்" (1 கொரிந்தியர் 13:4,7). சிலுவையிலே இந்த அன்பு வெளிப்பட்டது.
சிம்சோன் தன்னுடைய மரண நேரத்தில், அவனுடைய எதிரிகள் எல்லோரையும் அழிக்கும்படி தன்னுடைய சரீர பலத்தை பயன்படுத்தினார்; ஆனால் பூரணமான கிறிஸ்து தன்னுடைய எதிரிகளுக்கு ஜெபிப்பதின்மூலம் தன்னுடைய அன்பின் வலிமையை வெளிப்படுத்தினார். நிகரற்ற கிருபை! தன்னிகரில்லாதது என்று சொல்லுகிறோம். ஏனெனில் நமது இரட்சகர் விட்டுச் சென்ற பாக்யமான இந்த முன்மாதிரியை ஸ்தேவான் கூட முழுவதுமாக பின்பற்ற இயலவில்லை. வாசகர் அப்போஸ்தலர் நடபடிகள் 7 ஆம் அதிகாரத்திற்கு திருப்பினால், முதலாவது ஸ்தேவான் தன்னைக்குறித்து நினைத்ததையும், பின்பு தன்னுடைய பகைவர்களுக்காக ஜெபித்ததையும் காணலாம் - ''அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுது கொள்ளுகையில், அவனை கல்லெறிந்தார்கள். அவனோ, முழங்காற்படியிட்டு : ஆண்டவரே, இவர்கள் மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்" (அப்போஸ்தலர் 7:59-60). ஆனால் கிறிஸ்துவோடு இந்தக் கிரமம் மாறியுள்ளது. முதலாவது தன்னுடைய பகைவர்களுக்காகவும் பின்பு தனக்காகவும் ஜெபம் பண்ணினார். எல்லாவற்றிலும் அவர் முதற்பேறானவர்.
புத்தி சொல்லவும் விண்ணப்பிக்கவும் இறுதியான வார்த்தை. இரட்சிக்கப்படாத ஒருவர் இந்த அதிகாரத்தை வாசிக்க நேர்ந்தால், அடுத்து வருகிற வாக்கியத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமாறு கேட்கிறோம். அறிந்திருந்தும் கிறிஸ்துவையும் அவருடைய சத்தியத்தையும் எதிர்த்து நிற்பது எத்துணை பயங்கரத்துக்குரியது! இரட்சகரை சிலுவையில் அறைந்தவர்கள் "தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்." ஆனால், அருமையான வாசகரே, உங்களைப் பொறுத்தவரையில் இது உண்மையல்ல. கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிந்திருக்கிறீர்கள்; அவரை உங்கள் வாழ்க்கையின் கர்த்தராக நீங்கள் முடிசூட்ட வேண்டும்; முதலும் முடிவுமான உங்களது நோக்கம் அவரைப் பிரியப்படுத்தி மகிமைப்படுத்த வேண்டும் என்பதே. அப்படியெனில் எச்சரிப்படையுங்கள் : உங்கள் அபாயம் பெரிது. வேண்டுமென்றே நீங்கள் அவரிடமிருந்து விலகினால், உங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்கக் கூடிய ஒரே ஒருவரிடமிருந்து விலகுகிறீர்கள். இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்" (எபிரேயர் 10:26-27).
தெய்வீக மன்னிப்பின் பாக்கியமான நிறைவைக் குறித்து ஒரு சில வார்த்தைகளை மட்டும் கூறவேண்டியிருக்கிறது. அநேக தேவ மக்கள் இந்தக் கருத்தை குறித்து சஞ்சலத்துக்குள்ளாகிறார்கள். கிறிஸ்துவை அவர் களுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்வதற்கு முன்பு செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்திருக்கிறார்கள்; ஆனால் அநேக வேளையில் அவர்கள் மறுபடியும் பிறந்த அனுபவத்துக்குள் வந்தபின் செய்கிற பாவங்களைக் குறித்து அவர்களுக்கு தெளிவில்லை. தேவன் அவர்களுக்கு வழங்கிய மன்னிப்பை பாவத்திலே நஷ்டப்படுத்தி விடுகிறோம் என்று எண்ணுகிறார்கள். கிறிஸ்துவின் இரத்தம் அவர்களின் பழைய வாழ்க்கைக்கு மாத்திரமே என்றும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் அவர்களே சமாளிக்க வேண்டும் என்று யூகிக்கிறார்கள். எந்த நேரத்திலும் என்னிடத்திலிருந்து மன்னிப்பு எடுக்கப்படுமென்றால் அதினால் பிரயோஜனம் என்ன? என்னுடைய கீழ்ப்படிதலினாலும், உண்மையினாலும் அல்லது நான் கிறிஸ்துவை தொடர்ந்து பற்றிக் கொண்டிருப்பதினாலும் நான் பரலோகம் செல்ல முடியுமென்றால் ஒரு நிலைவரமான சமாதானம் நிச்சயமாகவே ஏற்படாது.
பரிசுத்த தேவனாலே அவர் அருளுகிற மன்னிப்பு கடந்தகாலம், நிகழ்காலம் எதிர்காலம் ஆகிய எல்லாக் காலங்களிலுள்ள பாவங்களையும் மூடுகிறது. உடன் விசுவாசியே, கிறிஸ்து நம்முடைய எல்லா "பாவங்களையும்" அவருடைய சரீரத்தில் சிலுவை மரத்தில் சுமக்கவில்லையா? நிச்சயமாகவே, நீங்கள் அந்தக்காலக்கட்டத்தில் பிறக்கவில்லை; அதினால் ஒரு சிறிய பாவம்கூட செய்யவில்லை. நன்று. கிறிஸ்து உங்கள் பழைய பாவத்தையும் எதிர்காலத்திலுள்ள பாவத்தையும் சுமந்தார். தேவனின் வார்த்தை நமக்கு கற்றுக்கொடுக்கிறது: விசுவாசிக்காத ஆத்துமாக்கள் மன்னிப்பில்லாத இடத்திலிருந்து மன்னிப்புக்குரிய இடத்திற்கு கொண்டுவரப் படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் மன்னிக்கப்பட்ட மக்கள். பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார்: "எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்" (ரோமர் 4:8). 'எண்ணாதிருக் கிறார்' என்பதைக் கவனித்துப் பாருங்கள். விசுவாசிக்கிறவன் கிறிஸ்துவுக்குள் இருக்கிறான். அந்த இடத்திலே நமக்கு பாவம் எண்ணப்பட மாட்டாது. தேவனின் முன்னால் இது தான் நமது ஸ்தானமாயிருக்கிறது. நம்மைத் தேவன் கிறிஸ்துவுக்குள் பார்க்கிறார். நான் கிறிஸ்துவுக்குள் இருப்பதினால், நான் முழுவதுமாக நித்தியமாக மன்னிக்கப்பட்டுள்ளேன். நான் இந்த பூமியில் நூறு வருடங்கள் வாழ்ந்தாலும் என்னுடைய இரட்சிப்பைத் தொடும்படியாக பாவம் எனக்கு எதிராக சாற்றப்படாது. வேதத்தில் உள்ள சாட்சியைக் கேளுங்கள்: "உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடே (கிறிஸ்து) கூட உயிர்ப்பித்து, அக்கிரமங்க ளெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;" (கொலோசியர் 2:13); இங்கே இரண்டு காரியங்கள் இணைக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள். (தேவன்) இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்) கிறிஸ்துவுக்குள் நான் இருப்பது என்னுடைய மன்னிப்போடு இணைந்துள்ளது! என்னுடைய வாழ்க்கை "கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது'' (கொலோசியர் 3:3) என்றால் பாவம் எனக்கு எதிராக எண்ணப்படக்கூடிய இடத்திலிருந்து விலகி இருக்கிறேன். எனவே இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர் களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை" (ரோமர் 8:1). எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டதென்றால் ஆக்கினைத் தீர்ப்பு எப்படி வரும்? "தேவன் தெரிந்து கொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்?" (ரோமர் 8:33). கிறிஸ்தவ வாசகரே, இதை எழுதியிருக்கிறவருடன் சேர்ந்து தேவனைக் துதியுங்கள். ஏனெனில் நாம் நித்தியமாக மன்னிக்கப் பட்டுள்ளோம்”.
(நீதிக்குரிய ரீதியிலே உள்ள காரியங்களை நாம் விளக்கி உள்ளோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். பாவம் செய்கிற விசுவாசியை மீண்டுமாக தேவ ஐக்கியத்துக்குள் கொண்டு வருகிற புதுப்பிக்கிற மன்னிப்பு (1 யோவான் 1:9) -ல் விளக்கப்பட்டுள்ளபடி வேறு ஒரு பார்வையில் காண வேண்டும்.)
இயேசுவை நோக்கி: ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” (லூக்கா 23:42:43).
கிறிஸ்து சிலுவையில் அருளிய இரண்டாம் வார்த்தை, மரித்துக் கொண்டிருந்த கள்ளனின் விண்ணப்பத்திற்கு மறுமொழியாகச் சொல்லப் பட்டதாகும். இரட்சகரின் வார்த்தைகளை தியானிக்குமுன் அவைகளுக்குக் காரணமாயிருந்தவைகளை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.
நமது மகிமையின் தேவன் இரு கள்வர்களுக்கு மத்தியில் சிலுவையில் அறையப்பட்டது ஏதோ ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. ஆண்டவரால் ஆளுகை செய்யப்படும் உலகில் எதுவும் தற்செயலாய் நிகழ்வது அல்ல. உலக சரித்திரத்திற்கு மையமாக விளங்கும், எல்லா நாட்களுக்கும் மேலான அந்த நாளில் நடந்த, எல்லா நிகழ்ச்சிகளுக்கும் மேலான அந்த நிகழ்ச்சி நிச்சயமாக ஒரு தற்செயலான காரியமாக இருக்கமுடியாது. தேவன் தாமே தலைமையேற்று இந்நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். தம் குமாரன் எப்பொழுது, எங்கே, எப்படி, யாரோடு மரிக்க வேண்டுமென்பதை தேவன் நித்திய காலமாய் தீர்மானித்து வைத்திருந்தார். எதுவும், தற்செயல் நிகழ்வுக்கோ, மனிதனின் சலன புத்திக்கோ விட்டுவிடப்படவில்லை. தேவன் தீர்மானித்திருந்த அனைத்தும் அவர் திட்டம் பண்ணினபடி அப்படியே நடந்தது. அவர் நித்திய நோக்கத்தின்படி அன்றி ஒன்றும் நடைபெறவில்லை. மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியமும் ''உம்முடைய கரமும், உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள்” (அப்போஸ்தலர் 4:27).
நம் ஆண்டவராகிய இயேசுவை இரு குற்றவாளிகள் மத்தியில் சிலுவையில் அறையவேண்டும் என்று பிலாத்து உத்தரவிட்டபோது, தன்னை அறியாமலே தேவனின் நித்திய நியமத்தையும், தீர்க்கதரிசன வார்த்தையையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தான். இந்த ரோம அதிகாரி கட்டளை கொடுப்பதற்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேவன், ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக, தம் குமாரன் “அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப் பட்டார்" (ஏசாயா 53:12) என்று அறிவித்தார். தேவனின் பரிசுத்தர், அசுத்த மானவர்களோடு எண்ணப்படுவதும், சீனாய் மலையில் தன் விரலினால் கற்பலகைகளில் கற்பனைகளை எழுதியவர் கற்பனைகளைக் கைக் கொள்ளாத குற்றவாளிகளோடு நியமிக்கப்படுவதும் நிகழ முடியாத ஒரு காரியமாகவும், தேவகுமாரன் குற்றவாளிகளோடு தண்டனை அனுபவிப்பது சிந்தனைக்கு அப்பாற்பட்ட காரியமாகவும் தோன்றியது. ஆனால் அத்தனை காரியங்களும் அப்படியே நிறைவேறின. ஆண்டவரின் ஒரு வார்த்தையும் தரையிலே விழுந்து போவதில்லை. "கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது" (சங்கீதம் 119:89). கர்த்தர் திட்டம் பண்ணினபடியும், அவர் கூறி அறிவித்தபடியும் காரியங்கள் அப்படியே நிறைவேறின.
கர்த்தர் தம் அன்புக்குமாரன் இரு குற்றவாளிகள் மத்தியில் சிலுவையில் அறையப்பட வேண்டும் என ஏன் தீர்மானம் பண்ணினார்? நிச்சயமாகவே கர்த்தர் ஒரு நல்ல, சிறந்த காரணத்தோடு செயல்பட்டார். ஆனால் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். தேவன் ஒருபோதும் தன்னிச்சையாகச் செயல்படுபவர் அல்ல. அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு நல்ல நோக்கம் உண்டு. ஏனெனில் அவரது அனைத்து கிரியைகளும் எல்லையில்லா ஞானத்தினால் செயல்படுத்தப்படுகின்றன. இக்குறிப்பிட்ட நிகழ்ச்சியின் அநேக காரியங்கள் நம் உள்ளத்தில் பல கேள்விகளை எழுப்புகின்றன. அளவிடமுடியாத அவமானத்தின் ஆழத்தில் இறங்கியதை முழுமையாக சித்தரிக்கும்படியாக நம் தேவன் இரு கள்வர்கள் மத்தியில் சிலுவையில் அறையப்படவில்லையா? பிறப்பின் போது மிருகங் களால் சூழப்பட்டிருந்தவர் தற்போது தன் இறப்பில் மனுக்குலத்தின் இழிவானவர்களோடு எண்ணப்பட்டிருக்கிறார். நாம் இருக்கவேண்டிய இடத்தைத் தான் நமக்குப் பதிலாக அவர் ஏற்றுக்கொண்டார் என்பதைக் காண்பிப்பதற்காக நம் மீட்பர் அக்கிரமக்காரரோடு எண்ணப்படவில்லையா? நமக்கு சோவேண்டிய இடத்தை அவர் ஏற்றுக்கொண்டார். அது, அவமானத்தின் இடம், அக்கிரமக்காரர்களின் இடம் மற்றும் குற்றவாளிகள் மரண தண்டனைக்கு ஒப்புவிக்கப்படும் இடம் என்பதைத் தவிர வேறு என்ன இடமாக இருக்க முடியும்? மேலும் நிகரேயில்லாத ஒருவர் மக்கள் பார்வையில் எவ்வாறாக அசட்டை பண்ணப்பட்டு, புறக்கணிக்கப்படுகிறார் என்பதைக் காண்பித்து பிலாத்து இவரை வேண்டுமென்றே இழிவுபடுத்தவில்லையா? மேலும் அந்த மூன்று சிலுவை, மற்றும் அதில் தொங்கினவர்களில் 'மீட்பு மற்றும் மனிதனின் எதிர்ச்செயல்' என்ற நாடகத்தின் தெளிவான, திடமான பிரதிபலிப்பான இரட்சகரின் மீட்பு, பாவியின் மனந்திரும்புதல், விசுவாசம் மற்றும் பாவியின் நிந்தனை, புறக்கணிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டு வதற்காக அவர் இருகள்வர்களோடு சிலுவையில் அறையப்படவில்லையா?
கிறிஸ்து இருவர்களுக்கு மத்தியில் சிலுவையில் அறையப்பட்டு, ஒருவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒருவனால் புறக்கணிக்கப்பட்ட செயலிலிருந்து, அவர் வல்லமையுள்ள இறைத்தன்மையுள்ள கர்த்தர் என்ற மேலான பாடத்தைக் கற்றுக்கொள்ளுகிறோம். இரு குற்றவாளிகள் ஒன்றாக சிலுவையில் அறையப்பட்டனர். இருவரும் கிறிஸ்துவிற்கு சம நெருக்கத்தில் இருந்தனர். இருவரும் அந்த பயங்கரமான ஆறுமணி நேரத்தில் நடந்த காரியங்களைக் கண்டனர், கேட்டனர். இருவரும் பிரபலமான குற்றவாளிகள். இருவரும் பயங்கர வேதனை அனுபவித்தனர். இருவரும் மரித்துக் கொண்டிருந்தனர். இருவருக்கும் உடனடியாக மன்னிப்பு தேவைப்பட்டது. ஒருவன் தான் வாழ்ந்த வண்ணமாகவே கடினப்பட்டு, மனந்திரும்பாதவனாய் தன் பாவத்திலே மரித்தான். மற்றவனோ தன் அக்கிரமத்திலிருந்து மனந்திரும்பினான், கிறிஸ்துவை விசுவாசித்தான், அவருடைய இரக்கத் திற்காக கெஞ்சினான். பரதீசிற்குச் சென்றான். இது கர்த்தரின் இறை வல்லமையால் நடந்தது என்பது தவிர வேறு என்ன விளக்கம் கொடுக்க இயலும்? இன்றும் இதே காரியம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரே விதமான சூழ்நிலை மற்றும் நிலைமைகளில் ஒருவர் மனம் உருகுகிறது மற்றவர் அசையாமல் இருக்கிறார். ஒரே பிரசங்கத்தை ஒருவர் அலட்சியமாகவும், மற்றவர் திறந்த கண்களோடு, தன் தேவையும், சித்தமும் தேவன் அருளும் இரக்கத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு முன்னேறிச் செல்லும் வண்ணமாகக் கூர்ந்து கவனிப்பார். ஒருவருக்கு சுவிசேஷம் வெளிப்படுத்தப்படுகிறது;
மற்றவருக்கு மறைக்கப்படுகிறது. ஏன்? நாம் சொல்லக்கூடியதெல்லாம் “ஆம். பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்திற்குப் பிரியமாயிருந்தது" என்பது மட்டுமே. கர்த்தரின் இறைவல்லமை மனிதனின் பொறுப்புகளை அழிக்க முற்படுவதில்லை. இவ்விரண்டையும் வேதம் தெளிவாகக் கற்றுத்தருகிறது. இவைகளைப் புரிந்து ஒன்றிணைத்துக் கூற இயலுமோ இயலாதோ ஆனால் அவற்றை விசுவாசித்து போதிப்பதே நமது கடமையாகும். இவைகளைப் போதிக்கும்போது நம்மைக் கேட்பவர்களுக்கு நாம் முரண்பாடான கருத்துக்களை கூறுவதுபோல் தோன்றலாம். ஆனால் அதினாலென்ன தவறு? காலம் சென்ற சி.எச்.ஸ்பர்ஜன், 1 தீமோத்தேயு 2:3-4 வசனங்கள் மீது பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்."வசனம் சொல்லுகிறது. நானும் விசுவாசிக்கிறேன்." எல்லா மனுஷரும் இரட்சிக்கப் படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராய் இருக்கிறார். ஆனால் ஒருவன் தன் குமாரனை விசுவாசித்து ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில் பிதா அவனை இரட்சிக்க சித்தம் கொள்ளமாட்டார். இவ்வாறு செய்யமாட்டேன் எனப் பலமுறை கூறியுள்ளார்.
ஒருவன் தன் பாவங்களை விட்டு முழுஇருதயத்தோடு அவரிடத்தில் திரும்பினாலன்றி அவனுக்கு இரட்சிப்பு இல்லை என்பது எனக்கும் தெரியும். தம் முடிவில்லாத அன்பினால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை மட்டுமே அவர் இரட்சித்து தம் நித்திய வல்லமையினால் மீட்டுக்கொள்ளுவார் என்பதும் எனக்குத் தெரியும். இவ்விரண்டு காரியங்களும் எவ்வாறு ஒன்றோடொன்று இசைந்து செல்லும் என்பது என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு காரியம்.'' பிரசங்கிகளின் அரசனான இவர் தொடர்ந்து கூறுகிறார். "ஒரு பகுதி யிலுள்ள தேவனுடைய வார்த்தையை இன்னொரு பகுதியில் உள்ள வார்த்தையோடு ஒத்துப்போகச் செய்ய முடியுமோ, முடியாதோ, தேவனுடைய வார்த்தையை அதில் இருக்கிறபடியே ஏற்றுக்கொண்டு இதுவரை பிரசிங்கித்தவைகளிலும், இனி பிரசிங்கிக்கப் போகிறவைகளிலும் உறுதியாயிருப்பேன்." கர்த்தரின் வல்லமை மனிதனின் பொறுப்புகளை அழிக்கும் ஒன்றல்ல என மறுபடியும் கூறுகிறேன். ஆத்தும இரட்சிப்பிற்காகக் கர்த்தர் ஏற்படுத்தியுள்ள எல்லா வழிமுறைகளையும் ஊக்கத்தோடு செயல்முறைப்படுத்தவேண்டும். 'சர்வ சிருஷ்டிக்கும்' சுவிசேஷத்தை அறிவிக்க நாம் கட்டளை பெற்றுள்ளோம். கிருபை இலவசமானது. கிறிஸ்து அவரண்டை வருகிற ஒருவனையும் புறம்பே தள்ளுவதில்லை. நாம் எல்லாவற்றையும் செய்தபின், நட்டு, நீர்ப்பாய்ச்சின பின் கர்த்தரே “விளையச்செய்கிறவர்” இதைத் தன் மகத்துவமான பிரியத்தின்படியும் சித்தத்தின்படியும் செய்கிறார்.
மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனின் இரட்சிப்பில் வேதத்தில் வேறெங்கும் காணக்கூடாத 'வெற்றியுள்ள கிருபை' யின் காட்சியைத் தெளிவாகக் காண்கிறோம். நம் தேவன் கிருபையின் தேவன். அவரின் கிருபையின் மூலமாகவே நமக்கு இரட்சிப்பு வந்தது. "கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்" (எபே.2:8) ஆரம்ப முதல் முடிவு வரை எல்லாம் கிருபையினாலே ஆயிற்று. நமது இரட்சிப்பைத் திட்டம் பண்ணியது கிருபை, இரட்சிப்பை அருளியது கிருபை, அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் செயல்பட்டு அவர்கள் இருதயக்கடினம், பிடிவாதமான விருப்பம், மனதின் பகைமை ஆகியவற்றை மேற்கொண்டு இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் மனவிருப்பத்தை அளிப்பதும் கிருபையே. கிருபை ஆரம்பிக்கிறது, கிருபை தொடர்கிறது. கிருபை நம் இரட்சிப்பைப் பூரணப்படுத்துகிறது.
கிருபையின் மூலம் இரட்சிப்பு - உன்னதமான எதிர்க்கமுடியாத இலவச கிருபை, புதிய ஏற்பாட்டில் எடுத்துக்காட்டு மூலமாகவும், கொள்கை மூலமாகவும் விவரித்துக் காட்டப்பட்டுள்ளது. ஒருவேளை நம் உள்ளத்தைத் தாக்கக்கூடிய இருமுக்கியமான நபர்கள் தர்சுபட்டணத்தானாகிய சவுலும், மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனுமே. இரண்டாவதான நபரின் வாழ்க்கை நிகழ்வு முதல் மனிதனுடையதைக் காட்டிலும் குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் புறஜாதிகளின் அப்போஸ்தலனான பவுலாக மாறிய சவுலின் காரியத்தில் அவனுடைய ஆரம்பகாலம் எல்லாராலும் பின்பற்றப்படக்கூடிய சீரிய நன்னடத்தை உள்ளதாகக் காணப்பட்டது. அநேக ஆண்டுகளுக்குப் பின்பு இந்த அப்போஸ்தலன் தான் இரட்சிக்கப்படுமுன் இருந்த நிலையைப்பற்றிக் கூறும்பொழுது "நியாயப் பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன் (பிலிபியர் 3:6) எனக் கூறுகிறான். அவன் 'பரிசேயரில் பரிசேயன்' அப்பழுக்கற்ற நடவடிக்கையும் சரியான நடத்தையும் உடையவன். மனமாற்றத்திற்குப் பின்பு அவன் வாழ்க்கை சுவிசேஷத்திற்கேற்ற நீதியுடையதாய் மாறியது. கிறிஸ்துவின் அன்பினால் நெருக்கி ஏவப்பட்ட வனாய் பாவிகளுக்கு சுவிசேஷத்தைக் கூறி அறிவிப்பவனாகவும், நீதிமான்களைக் கட்டி எழுப்புகிறனாகவும் கடினமாய்ப் பிரயாசப்பட்டான்.
அப். பவுல் கிறிஸ்தவ வாழ்க்கையின் மிகச்சீரிய இலட்சியங்களின் உன்னத நிலைக்கு மிக அருகாமையில் வந்தவன் என்பதையும் மற்ற எல்லா பரிசுத்தவான்களைக் காட்டிலும் தன் தலைவரை மிக நெருக்கமாய் பின்பற்றினான் என்பதையும் வாசகர்கள் சந்தேகத்திற்கிடமின்றி ஒத்துக்கொள்வார்கள். மனமாற்றமடைந்த கள்வனின் நிலை முற்றிலும் மாறுபட்டது. மனமாற்றத்திற்கு முன்பு எந்த ஒரு ஒழுக்கமான வாழ்வோ, அல்லது மனமாற்றத்திற்குப் பின்பு எந்த ஒரு ஊழியமோ, செயல்பாடோ இல்லை. மனமாற்றத்திற்கு முன்பு அவன் மனிதசட்டத்தையோ, ஆண்டவரு டைய சட்டத்தையோ மதிக்கவில்லை. மனமாற்றமடைந்தபின் கிறிஸ்துவின் ஊழியத்தில் ஈடுபட எந்தவொரு வாய்ப்புமின்றி மரித்தான். இதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். ஏனெனில் அநேகர் இவ்விரண்டு காரியங்களும் இரட்சிப்பிற்கு ஏதுவானவை என எண்ணுகிறார்கள். தேவன் நம்மை அவர் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளும் முன்னதாக நாம் ஒரு சீரிய நடக்கையை மேற்கொண்டு நம்மைத் தகுதிப்படுத்த வேண்டும் எனவும், தற்காலிகமாக நம்மை அவர் ஏற்றுக்கொண்ட பிறகு தகுதி காண் பருவத்தில் வைக்கப்பட்டு நாம் குறித்த அளவு மற்றும் உயர்தன்மையுள்ள நற்காரியங்கள் செய்யாவிடில் கிருபையிலிருந்து விழுந்து அழிந்துபோவோம் எனவும் கருதப்படுகிறது. ஆனால் மரிக்கும் கள்ளனின் கணக்கில் மனமாறுதலுக்கு முன்பும், பின்பும் எந்த ஒரு நற்காரியமும் இல்லை. அவன் இரட்சிக்கப்பட்டிருப்பானானால் அது கர்த்தருடைய பெரிதான கிருபையால் மட்டுமே என்ற முடிவுக்கு நாம் வருகிறோம்.
மனுஷீக சிந்தையின் நீதியின் குறுக்கீட்டினால் ஆண்டவரின் கிருபைக்கு வரவேண்டிய மகிமை திருடப்படுகிறது என்ற நிலைபாட்டிற்கும் இந்த மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனின் இரட்சிப்பு முற்றுப்புள்ளி வைக்கிறது. காணாமற்போன பாவிகளை இரட்சிக்கும் செயலின் மகிமையை ஒப்பற்ற ஆண்டவரின் கிருபைக்குக் கொடாமல், கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொள்ளும் அநேகர், மனித செல்வாக்கு, செயல்பாடு மற்றும் சூழ்நிலைகளைக் காரணம் காட்டுகின்றனர். பிரசங்கிமார், தெய்வாதீனம், சாதகமான சூழ்நிலைகள் அல்லது விசுவாசிகளின் ஜெபமே முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. நாம் தப்பாகப்புரிந்து கொள்ளப்படக் கூடாது. ஆண்டவர் பாவியின் மனந்திரும்புதலுக்கு அநேக வழிமுறைகளைப் பயன்படுத்த விருப்பம் உள்ளவராக இருக்கிறார் என்பது உண்மையே. நமது ஜெபங்களையும்,முயற்சியையும் ஆசீர்வதித்து, அவை பாவிகளைக் கிறிஸ்துவிடம் வழிகாட்டுவதற்கு நமக்கு அருள்பாலிக்கிறார். அநேக முறை அவர் தம் தெய்வீகத்தன்மையின் மூலம் தேவனற்ற மனிதனை எழுப்பி, விழிப்படையச் செய்து தன் நிலையை உணர்ந்து கொள்ளச் செய்கிறார். இவைகளுக்கு எதிராக தேவன் தன்னை அடைத்துக்கொள்பவரல்ல. மனித செயல்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவரும் இல்லை. அவர் கிருபை சர்வ வல்லமையுள்ளது. மனித செயல்பாடுகள் இல்லாத நிலையிலும், பாதகமான சூழ்நிலை மத்தியிலும் அவர் விரும்பும் போது கிருபை இரட்சிப்பைக் கொண்டு வருகிறது. மனந்திரும்பிய கள்ளனின் வாழ்க்கையில் நடந்தது இதுவே. கவனமாய்ப் பார்ப்போம்.
கிறிஸ்து தன்னையும், மற்றவர்களையும் இரட்சிக்கும் வல்லமையை இழந்து விட்டாரோ என்று வெளிப்படையாகத் தோன்றின நேரத்தில் அவனுடைய மனமாற்றம் நிகழ்ந்தது. அந்தக் கள்வன் இரட்சகரோடு எருசலேம் வீதிகளில் நடந்து வந்தான். அவர் சிலுவையின் பாரத்தின் கீழ் அமிழ்ந்ததையும் கண்டான். திருடுவதையும், கொள்ளையடிப்பதையுமே தன் வேலையாகக் கொண்டிருந்த ஒருவன் ஆண்டவராகிய இயேசுவின்மீது தன் கண்களைப் பதிப்பது இதுவே முதல் தடவையாக இருப்பது சாத்தியம். தற்போது அவரைப் பலவீனம் மற்றும் அவமானத்தின் சூழ்நிலையின் கீழ் பார்க்கிறான். அவர் பகைஞர் அவர்மீது வெற்றி கொண்டனர். அநேகமாக அவரது நண்பர்கள் அனைவருமே அவரைக் கைவிட்டனர். பொது மக்களின் கருத்து ஒரேவிதமாக அவருக்கு விரோதமாயிருந்தது. அவர் சிலுவையி லறையப்படுவது அவருடைய மேசியா தன்மைக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகவே கருதப்பட்டது. அவருடைய தாழ்மையான நிலை ஆரம்ப முதலே யூதருக்கு இடறுதலாகவே இருந்தது. தற்போது அவரது மரணத்தின் சூழ்நிலை எல்லோருக்கும், சிறப்பாக அவரை முதல்முதலாக இந்த நிலையில் பார்க்கும் ஒருவனுக்கும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். அவரை விசுவாசித்தவர்களையே சிலுவைமரணம் சந்தேகிக்கச் செய்தது. அந்தக்கூட்டத்தில் விரிக்கப்பட்ட கரங்களோடு நின்று "இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" (யோவான் 1:29) என்று சத்தமிட்டுக் கூப்பிட ஒருவர் கூட இல்லை. ஆனால் தன் விசுவாசப் பாதையின் குறுக்கே வந்த தடைகள் மற்றும் கஷ்டங்களைப் பொருட்படுத் தாது அந்தக் கள்ளன் இயேசுவின் இறையாண்மை மற்றும் மீட்பின் தன்மையைக் கண்டுணர்ந்தான். இவ்விதமான சூழ்நிலையிலிருந்த ஒருவனுடைய விசுவாசம் மற்றும் ஆவிக்குரிய புரிந்து கொள்ளுதலுக்கு நம்மால் என்ன காரணம் காட்ட முடியும்? மரித்துக் கொண்டிருந்த கள்ளன், வேதனைப்பட்டு, இரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்ட மனிதனைத் தன் தேவனாக ஏற்றுக்கொண்டதை எவ்வாறு விவரிக்க இயலும்? தெய்வீக இடைபடுதலையும், இயற்கைக்கு அப்பாற்பட்ட செய்கையையும் தவிர வேறொன்றையும் காரணம் காட்டமுடியாது. கிறிஸ்துவின் மீதான அவன் விசுவாசம் கிருபையின் அதிசயமே!
கள்ளனின் மனமாற்றம் அந்தநாளின் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புத நிகழ்வுகள் நடப்பதற்கு முன்னால் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தகாரம் ஏற்படுமுன், "முடிந்தது” என்ற வெற்றி முழக்கம் கேட்குமுன் தேவாலயத்தின் திரைச்சீலை கிழியுமுன், பூமியதிர்ச்சியும், மலை அதிர்வும் ஏற்படுமுன், நூற்றுக்கு அதிபதி “இவர் மெய்யாகவே தேவனுடைய குமாரன்” என அறிக்கை பண்ணுமுன் அவன் "ஆண்டவரே என்னை நினைத்தருளும்" எனக்கதறுகிறான். ஆண்டவருடைய மகத்துவமான கிருபை உயர்த்தப்படவும், அவருடைய தெய்வீக வல்லமை கண்டறியப்படவும், ஒரு நோக்கத்தோடு அவனுடைய மனமாறுதல் இவைகளுக்கு முன்னதாக இருக்கும்படி திட்டம் பண்ணியிருந்தார். அவருடைய சமுகத்தில் எந்த ஒரு மாம்சீகமான காரியமும் மகிமையடையக் கூடாதென்பதற்காக ஆண்டவர் மிகவும் பாதகமான சூழ்நிலையிலிருந்த இந்தக்கள்ளனைத் தெரிந்தெடுத்து இரட்சிக்கத் தீர்மானித்தார். “இரட்சிப்பு கர்த்தருடையது" என்ற உண்மையையும், காரண கர்த்தாவாக செயல்படும் மனிதன் தெய்வீக செயல்பாட்டிற்கு மேலாகத் தன்னை உயர்த்தக்கூடாது என்பதையும், உண்மையான எந்த ஒரு மனமாற்றமும் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டின் நேரடியான விளைவு என்பதையும் கற்றுக்கொடுக்கவே, ஆண்டவர் வேண்டுமென்றே அனுகூல மற்ற சூழ்நிலைகளையும், நிலைமைகளையும் ஒன்றிணைத்தார்.
தற்போது, கள்ளன், அவனுடைய வெவ்வேறு வார்த்தைகள், இரட்சகரிடம் வைத்த வேண்டுகோள் மற்றும் ஆண்டவரின் பதில் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஆராய்வோம். ''இயேசுவை நோக்கி : ஆண்டவரே, நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி, இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக்கா 23:42-43).
1 இங்கு பாவியின் ஒரு பிரதிநிதியைக் காண்கிறோம்.
இந்த மனிதனின் மனமாற்றத்தை ஒரு மாதிரிச் செயலாகவும், இந்தக்கள்வனை ஒரு மாதிரிப் பாத்திரமாக எடுத்துக் கொள்ளும்வரை இந்நிகழ்ச்சியின் மையப்பகுதியை சென்றடையமுடியாது. மனந்திரும்பும் கள்ளனின் பழைய சுபாவம் மனந்திருந்தாத பாவியைவிட மேலானதாகவும் சிறந்ததாகவும் இருந்ததாக சிலர் எடுத்துக்காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால் இது நிகழ்வின் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்லாது, அவன் மனமாற்றத்தின் விநோதமான மகிமையை அகற்றி விடுவதாகவும் ஆண்டவரின் கிரியையின் அதிசயத்தை அழித்து விடுவதாகவும் இருக்கிறது. ஒருவன் மனந்திரும்பி விசுவாசித்தற்கு முன்பு இருந்த நாட்களில் அந்த இரு கள்ளர்களுக்குமிடையில் குறிப்பிடத்தக்க எந்த ஒரு வித்தியாசமுமில்லை என்பது மிக முக்கியமான காரியம். அவர்களுடைய சுபாவம், வரலாறு மற்றும் சூழ்நிலையில் ஒன்றாகவே இருந்தனர்.
வேதனை அனுபவித்துக் கொண்டிருந்த இரட்சகரை இருவருமே நிந்தித்தார்கள் என்று கூறுவதில் பரிசுத்த ஆவியானவர் மிக கவனமாயிருக்கிறார். "அப்படியே பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் மூப்பரும் பரியாசம் பண்ணி, மற்றவர்களை ரட்சித்தான். தன்னைத்தான் ரட்சித்துக் கொள்ளத் திராணியில்லை. இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே. அவர் இவன் மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள் (மத்தேயு 27:41-44).
இந்தக் கள்ளனின் நிலையும், செயலும் உண்மையாகவே மிகப் பயங்கரமானது. நித்தியத்தின் ஓரத்தில் நின்று கிறிஸ்துவின் பகைஞரோடு சேர்ந்து அவரைப் பரிகசிக்கும் மிகப்பெரிய பாவத்தை செய்கிறான். இது ஒப்பிடமுடியாத நீசத்தன்மை! நினைத்துப் பாருங்கள். ஒரு மனுஷன் தன் மரணத்தருவாயில் வேதனை அனுபவிக்கும் இரட்சகரைப் பரியாசம் செய்கிறான். இது எப்பேர்ப்பட்ட மனித சீரழிவையும், கர்த்தருக்கு விரோதமான மாம்ச சிந்தையின் பகையையும் வெளிக்காட்டுகிறது! வாசகரே சுபாவத்தின்படி இதே துன்மார்க்கம் உனக்குள்ளும் வாசமாயிருக்கிறது. தெய்வீகக் கிருபையின் அற்புதம் உன்னில் நிகழ்ந்தாலொழிய கர்த்தருக்கும் கிறிஸ்துவிற்கும் விரோதமான இதே பகை உன் இருதயத்திலும் தங்கியிருக்கும். நீ அப்படி நினைக்காமலிருக்கலாம், அப்படி உணராமலிருக் கலாம், அப்படி நம்பாமலிருக்கலாம். ஆனால் இது, உண்மை நிலையை மாற்றப்போவதில்லை. பொய்யுரையாத அவரின் வார்த்தை கூறுகிறது. "எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது'' (எரே.17:9). இந்தக்கூற்று உலகனைத்திற்கும் பொருந்தக்கூடியது. சுபாவப்படி பிறக்கும் ஒவ்வொரு இருதயத்தின் நிலையையும் இது விவரிக்கிறது. மறுபடியும் நம் சத்தியவேதம் கூறுகிறது.
"எப்படியென்றால், மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவனுடைய நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும் கீழ்ப்படியக் கூடாமலும் இருக்கிறது" (ரோமர் 8:7). இதுவும் ஆதாமின் சந்ததியின் நிலையைத் தெளிவாகக் கண்டறிகிறது. “வித்தியாசமே இல்லை. எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானோம்" (ரோமர் 3:22,23) உச்சரிக்கக்கூடாத அளவு பயபக்திக்குரிய காரியமாயிருந்தபோதிலும் அழுத்திக் கூறப்படவேண்டியுள்ளது. நமது நம்பிக்கையற்ற தன்மையை உணர்ந்து கொள்ளும் வரை நமக்கு ஒரு தெய்வீக இரட்சகர் தேவை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. நாம் முழுவதுமாய் கெட்டுப்போய், வியாதியாய் இருப்பதைக் கண்டுகொண்டால் ஒழிய நாம் பெரிய வைத்தியரிடம் விரைந்து செல்லமாட்டோம். இந்தக் கள்ளனில் நம்முடைய வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருக்கிறதைக் காணும்போது மட்டுமே அவனோடு சேர்ந்து, "ஆண்டவரே என்னை நினைத்தருளும்" என்று கூற முடியும்.
நாம் உயர்த்தப்படுமுன்னதாகத் தாழ்த்தப்பட வேண்டும். இரட்சிப்பின் வஸ்திரத்தை அணிந்து கொள்ளுமுன் சுயநீதியென்னும் அழுக்கும் கந்தையுமான வஸ்திரத்தைக் களைந்தெறிய வேண்டும். நித்திய வாழ்வு என்னும் பரிசைப் பெறுவதற்கு முன், பிச்சைக்காரரைப் போல வெறுங்கையாக ஆண்டவரிடம் வரவேண்டும். அவருக்கு முன் இழந்துபோன பாவியின் இடத்தில் இருக்கும்போது நாம் இரட்சிக்கப்படுவோம். ஆம், நாம் ஆண்டவரின் குடும்பத்தில் இடம் பெற்றுக்கொள்ளுமுன் நாம் கள்ளர் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். "ஆனால் நான் ஒரு கள்ளன் அல்ல. நான் இருக்கவேண்டியபடி இருக்கவில்லை என ஒத்துக்கொள்ளுகிறேன்.
நான் பூரணவானவனல்ல. நான் பாவி என்று ஒப்புக்கொள்ளும் இடம் வரை நான் செல்லுவேன். ஆனால் இந்தக் கள்ளனை என்னுடைய நிலையை சித்தரிக்கும் மாதிரியாக ஏற்றுக்கொள்ளவே முடியாது." என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஓ, நண்பனே உன் நிலைமை நீ நினைப்பதைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கிறது. நீ ஒரு கள்ளன். மிக மோசமானவன். நீ ஆண்டவரைத் திருடியிருக்கிறாய். கிழக்கு தேசத்திலுள்ள ஒரு நிறுவனம் தங்கள் பிரதிநிதியாக ஒரு காரியஸ்தனை மேற்கு தேசத்திற்கு அனுப்பி மாதாமாதம் சம்பளமும் அனுப்பி வைக்கிறது என வைத்துக் கொள்வோம். இந்த மனிதன் ஒழுங்காக சம்பளத்தை வாங்கி அனுபவித்துக்கொண்டு அங்கு வேறு ஒரு நிறுவனத்தில் வருட முழுவதும் வேலை செய்தான் என்று வருடக்கடைசியில் மேலதிகாரிகள் கண்டுபிடிக்கிறார்கள். அந்த காரியஸ்தன் திருடனல்லவோ? ஆம். இதுவே ஒவ்வொரு பாவியின் காரியமும், நிலைமையுமாய் இருக்கிறது. அவன் ஆண்டவரால் இந்த உலகிற்கு அனுப்பப்பட்டிருக்கிறான். ஆண்டவர் அவனுக்குத் திறமை களையும் தாலந்துகளையும் அளித்து அவற்றை பயன்படுத்தி விருத்தி செய்ய எதிர்பார்க்கிறார். ஆண்டவர் நல்ல சுகபெலன் கொடுத்து ஆசீர்வதித்திருக் கிறார். நம் குறைவையெல்லாம் நிறைவாக்கி, அவரைச் சேவித்து மகிமைப்படுத்த எண்ணிலடங்காத தருணங்களை அளித்திருக்கிறார். ஆனால் அதன் முடிவு என்ன? ஆண்டவர் கொடுத்த அத்தனை காரியங்களும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பாவியான மனுஷன் வேறு அதிகாரிகளையும், ஏன் சாத்தானையும் சேவிக்கிறான். பாவ சிற்றின்பத்தில் தன் பலத்தை விரயம் செய்து காலத்தை வீணடித்துப் போடுகிறான். அவன் ஆண்டவரைத் திருடியிருக்கிறான். மீட்கப்படாத வாசகரே, பரலோகத்தின் பார்வையில், கள்ளனைப் போன்றே உங்கள் நிலை நம்பிக்கையற்றதாகவும் உங்கள் இருதயம் கேடுள்ளதாயும் இருக்கிறது. அவனில் உங்கள் படத்தைப் பாருங்கள்.
2 இரட்சிக்கப்படுமுன் மனிதன் வாழ்வின் கடைசிக்கட்டத்திற்கு வந்திருப்பதைப் பார்க்கிறோம்.
இதுவரை மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனை பாவியின் பிரதி நிதியாகவும், சுபாவத்தின்படியும் செயலின்படியும் அனைத்து மக்களின் அடையாள மாதிரியாகவும் ஆராய்ந்தோம். சுபாவத்தின்படி தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் பகைஞராகவும், செயலின்படி அவர் கொடுத்ததைத் தவறாகப் பயன்படுத்தி அவருக்குக் கொடுக்க வேண்டியவைகளைக் கொடுக்கத் தவறிய திருடர்களாகவும் பார்த்தோம். சிலுவையில் அறையப் பட்ட கள்ளன் தன் மனமாற்றத்திலும் ஒரு மாதிரியாக இருந்தான் எனப் பார்க்கிறோம். இவ்விஷயத்தில் அவன் உதவியற்ற நிலைக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்போம்.
நம்மை இழந்து போன பாவிகளாய் மாத்திரம் பார்ப்பது போதுமானதல்ல. நாம் சுபாவப்படி கறைப்பட்டவர்களாகவும், சீர்கெட்டவர்களாகவும் இருக்கிறோம் என்பதும் செயலின்படி பாவமீறுதல்களில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான முதல்பாடமாகும். நாம் முற்றிலுமாக விழுந்து போனவர்கள் என்பதும் நமக்கு உதவி செய்ய நம்மால் கூடாது என்பதும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய அடுத்தபாடம். நம்முடைய நிலை எந்த மனுஷனாலும் சீர்ப்படுத்த முடியாத அளவு மோசமானது என்பதைக் கண்டுகொள்வதே இரட்சிப்பிற்கு வழிநடத்தும் இரண்டாவதுபடி இது மனித கண்ணோட்டம். ஆனால் தான் ஒரு பாவி என்றும் பரிசுத்த தேவனின் பிரசன்னத்திற்குத் தகுதியற்றவனென்றும் மெதுவாக உணர்வானானால், தன் மீட்பிற்கு தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்பதையும் தான் தன்னைச் சீர்ப்படுத்தி ஆண்டவருக்கு உகந்தவனாக முடியாது என்பதையும் புரிந்துகொள்ள இன்னும் தாமதமாகும். நாம் "பெலனற்றவர்கள்" (ரோமர் 5:6) சக்தியற்றவர்கள் மற்றும் நாம் செய்யும் நீதியின் கிரியைகளினிமித்தம் நம்மை இரட்சியாமல் தமது இரக்கத்தின் படியே நம்மை இரட்சிக்கிறார் (தீத்து 3:5) என்று நாம் உணரும் வரைக்கும் நாம் நம்மில் நம்பிக்கை இழந்தவர்களாய், நம்மைவிட்டு வெளியே நோக்கிப்பார்த்து நம்மை இரட்சிக்கக்கூடிய அந்த ஒருவரைக் காண இயலாது. வேதாகமத்தின் படியான மிகப்பெரிய வியாதி குஷ்டரோகம். குஷ்டரோகத்திற்கு மனிதன் எந்த மருந்தையும் கண்டுபிடிக்க முடியாது. ஆண்டவரால் மாத்திரமே இப்பயங்கர வியாதியில் இருந்து விடுவிக்க முடியும். பாவமும் இதைப்போன்றதே. நாம் சொன்னதுபோல் மனிதன் மிக மெதுவாகவே பாடங்களைக் கற்றுக்கொள்ளுகிறான். அவன், தூரதேசத் திற்குப் போய் துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப் போட்டு ''குறைவுபடத் தொடங்கி" நேராகத் தன் தகப்பனிடத்தில் திரும்பிப் போகாமல் "அந்தத் தேசத்துக்குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டு" (லூக்.15:15) பின் குடியானவனின் வயல்களில் பன்றிகளை மேய்க்கப் போன, அதாவது, வேலை செய்யப்போன கெட்ட குமாரனைப் போல் இருக்கிறான். இதேவிதமாகத் தன் தேவைக்கு நேராகத் தூண்டிவிடப்படும் பொழுது ஒரு பாவி உடனடியாக கிறிஸ்துவிடம் செல்லாமல் கர்த்தருக்கு உகந்தவனாகத் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறான். ஆனால் கெட்ட குமாரனைக் காட்டிலும் மேலான யாதொன் றையும் சாதிக்க முடியாது. பன்றி தின்னும் தவிடே அவன் பங்காயிருக்கும். மேலும், பெரும்பாடுள்ள ஒரு பெண் அநேக ஆண்டுகளாக அவதிப்பட்டு, அநேக வைத்தியர்களிடம் சென்று முயற்சித்து பின்னர் பெரிய வைத்தியரை தேடி வந்ததைப் போல் இருக்கிறான். உணர்வடைந்த பாவி சிறிது மனஅமைதி அல்லது உதவி தேடி ஒவ்வொரு காரியமாக முயற்சி செய்து இவ்வாறாக மதசம்பந்தமான எல்லாச் சடங்காச்சாரங்களையும் முழுமையாக செய்து முடித்து “சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறதைக்” (மாற்கு 5:26) (மோசமடைகிறதை) கண்டு கொள்ளுகிறான். தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழிக்கும் வரை அவள் கிறிஸ்துவைத் தேடவில்லை. ஒரு பாவியும் தன் வாழ்வாதாரங்களின் எல்லைக்கோட்டைத் தொடும் நேரத்தில்தான் தன்னைத் தன் இரட்சகருக்கு நேராகத் திருப்புவான்.
ஒரு பாவி இரட்சிக்கப்படுமுன் தன் பலவீனத்தை உணரும் நிலைக்கு வரவேண்டும். இதைத்தான் மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனின் மனந்திரும்புதல் நமக்குக் காண்பிக்கின்றது. அவனால் என்ன செய்ய முடியும்? அவனால் நீதியின் பாதையில் நடக்கமுடியாது. ஏனெனில் அவன் இருபாதங்களும் ஆணிகளால் கடாவப்பட்டுள்ளன. எந்த நற்கிரியையும் செய்யமுடியாதபடி இரு கரங்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன. அவனால் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து நல்லதொரு வாழ்க்கை வாழமுடியாது ஏனெனில் அவன் மரித்துக்கொண்டிருக்கிறான். என் வாசகரே சுயநீதியை நடப்பிக்க விரைந்து செல்லும் உங்கள் கரங்களும், நியாயத்திற்குக் கீழ்ப்படிய விரைந்தோடும் உங்கள் கால்களும் சிலுவையில் அறையப்பட வேண்டும். ஒரு பாவி தன் சொந்த செயல்பாடுகளிலிருந்து வெட்டப்பட்டு கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட விருப்பம் உள்ளவனாய் இருக்க வேண்டும். ஒருவனின் பாவிநிலை மற்றும் இழந்துபோன உதவியற்ற நிலையை உணர்ந்துகொள்ளும் உணர்வு ஆதிகால முதலே பாவத்தைக் கண்டிந்துணர்த்தும் காரியமாகக் கருதப்படுகிறது. இன்றும் இதுமட்டுமே ஒரு பாவி இரட்சிக்கப்படும்படி இயேசுவிடம் வர ஒரே நிபந்தனையாய் இருக்கிறது. ஏனெனில் பாவிகளை இரட்சிக்கக் கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார்.
மனந்திரும்புதலை அநேக கோணங்களில் ஆராயலாம். இதன் பொருள் மற்றும் வாய்ப்பெல்லையைக் கருத்தில் கொள்ளும்போது பாவத்தைக்குறித்து மனமாற்றம், பாவத்தைக்குறித்த வருத்தம் மற்றும் பாவத்தை விட்டொழிதல் இதில் அடங்கும். உண்மையாகவே மனமாற்றம் நமது இழந்துபோன நிலையை உணர்வது. நம் அழிவைக் கண்டுகொள்வது, நம்மையே நியாயந்தீர்ப்பது. நம் சொத்துரிமை இழப்பை ஒத்துக்கொள்வது. மனந்திரும்புதல் ஆண்டவருக்கு முன்பாக உயிருள்ள மனச்சாட்சியைச் சார்ந்ததேயன்றி அறிவுபூர்வமான செயல் அல்ல. இந்த கள்ளனுடைய காரியத்தில் நாம் இதைத்தான் காண்கிறோம். முதலில் தன் தோழனிடம் கூறுகிறான். "நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?” (லூக்கா 23:40). சிறிது நேரத்திற்கு முன்பு அவனுடைய சத்தம் இரட்சகரை நிந்திப்பவர்களின் சத்தத்தோடு கலந்திருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவன் மேல் செயலாற்றிக் கொண்டிருந்தார். தற்போது கர்த்தர் முன்னிலையில் அவன் மனச்சாட்சி செயல்பட ஆரம்பித்தது. அவனது கேள்வி “தண்டனைக்குப் பயப்படுகிறதில்லையா?" என்பதல்ல ஆனால் "தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?" என்பதே, கர்த்தரை நியாயாதிபதியாக அறிந்து கொள்ளுகிறான். "நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்: நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்” (லூக்கா 23:41). இங்கு தன்னுடைய தவறையும், தனக்கு வரும் தண்டனையின் நியாயத்தையும் ஒத்துக்கொள்ளுகிறான். தன் மீதே தீர்ப்பு வழங்குகிறான். சாக்குப்போக்குச் சொல்லவோ, தன் குற்றத்தின் தன்மையைக் குறைத்துக்கூற முயற்சிக்கவோயில்லை. தான் பாவி என்பதையும், பாவத்திற்கான தண்டனை பெற முழுத்தகுதியுடையவன் என்பதையும், தன் பாவத்திற்குரிய தண்டனை மரணம் என்பதையும் உணர்ந்து கொண்டான். வாசகரே! நீங்கள் ஆண்டவருக்கு முன்னால் இந்த நிலையிலிருக்கிறீர்களா? வெளிப்படையாக உங்கள் பாவங்களை அவருக்கு அறிக்கையிட்டிருக்கிறீகளா? உங்களையும் உங்கள் வழிகளையும் நீங்களே நியாயந்தீர்த்திருக்கிறீர்களா? மரணமே உங்களுக்கு வரவேண்டியது என ஒத்துக்கொள்ளுகிறீர்களா? எப்பொழுதெல்லாம் பாவத்தின் தன்மையைக் குறைத்தோ, அலட்சியமாகவோ பேசுகிறீர்களோ அப்பொழுதெல்லாம் கிறிஸ்துவை விட்டு உங்களை அடைத்துக்கொள்ளுகிறீர்கள், கிறிஸ்து உலகிற்கு வந்தது பாவிகளை இரட்சிக்க - தன்னை அறிக்கை செய்த பாவிகள், ஆண்டவர் முன் பாவிகளுடைய இடத்தில் இருக்கும் பாவிகள் மற்றும் தாங்கள் இழந்து, அழிந்து போன பாவிகள் என்ற உணர்வுடையவர்கள்.
கள்வனின் "ஆண்டவருக்கு நேரான மனந்திரும்புதல்" கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு நேரான விசுவாசத்தைத் தொடர்ந்து வந்தது. அவனுடைய விசுவாசத்தைத் தியானிக்கும்போது முதலாவது அது புத்திசாலித்தனமான அறிவு சார்ந்த விசுவாசம் என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த அத்தியாயத்தின் முதல்பகுதியில் இந்தக்கள்வனின் மனமாற்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஆண்டவரின் உன்னத மகத்துவம் மற்றும் எதிர்க்க முடியாத வெற்றியுள்ள கிருபை ஆகியவற்றிற்கு நேராக நம் கவனம் திருப்பப்பட்டது. நாம் தற்போது சம முக்கியம் வாய்ந்த உண்மையின் மறுபக்கத்திற்குத் திரும்புகிறோம். இப்பக்கம் நாம் முன்பு கூறியதற்கு முரண்பாடானதல்ல ஆனால் இணைந்து முழுமையும் நிறைவும் அடையச் செய்வது, தேவன் ஒரு ஆத்துமாவை மீட்டுக் கொள்ளத் தீர்மானித்திருக்கும் போது அம்மனிதன் விசுவாசித்தாலும் விசுவாசிக்காவிட்டாலும் இரட்சிக்கப் படுவான் என வேதம் நமக்குக் கற்பிக்கவில்லை. இது சத்தியத்தைப் புறக்கணிப்பவர்களால் எடுக்கப்படும் ஒரு தப்பான முடிவாகும். முடிவை முன்குறித்த தேவன் செல்லவேண்டிய வழியையும் முன்குறித் திருக்கிறார். மரித்துக்கொண்டிருக்கும் கள்வனின் இரட்சிப்பை தீர்மானித் திருந்த தேவன், தன்னை நம்பத்தக்க விசுவாசத்தை அவனுக்குக் கொடுத்துத் தன் தீர்மானத்தை நிறைவேற்றினார். இதுவே (2 தெசலோனிகேயர் 2:13) ம் மற்ற வேதபகுதி களும் தரும் எளிதான பாடம் “நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படு கிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு ஆதி முதல் தேவன் உங்களைத் தெரிந்து கொண்ட படியினால்" இந்தக் கள்ளனுடைய வாழ்க்கையில் இதைத்தான் பார்க்கிறோம். அவன் "சத்தியத்தை விசுவாசித் தான்" அவன் விசுவாசம் ஆண்டவருடைய வார்த்தையை உறுதியாய்ப் பிடித்துக் கொண்டது. சிலுவையின் மீது ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. "இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு" பிலாத்து அவரைப் பரிகாசம் பண்ணும்படியாக அதை வைத்தான். ஆனால் எப்படியும் அது உண்மையாய் இருந்தது. அவன் அதை எழுதின பிறகு, அதை மாற்ற ஆண்டவர் அவனை அனுமதிக்கவில்லை. இவ்வாசகம் எழுதப்பட்ட பலகை எருசலேம் தெருக்கள் வழியே தூக்கிச் செல்லப்பட்டு சிலுவை மேட்டை அடைந்தது. கள்ளன் அதை வாசித்தான். தெய்வீக கிருபையும் வல்லமையும் அது சத்தியம் என்று கண்டுகொள்ளத்தக்கதாக அவன் கண்களைத் திறந்தது. அவனுடைய விசுவாசம் கிறிஸ்துவின் இராஜரீகத் தன்மையைப் பற்றிக் கொண்டதினி மித்தமே "நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்" எனக்கூற முடிந்தது. விசுவாசம் எப்பொழுதும் எழுதப்பட்ட ஆண்டவரின் வார்த்தையைச் சார்ந்தே இருக்கும்.
ஒரு மனிதன் இயேசுவே கிறிஸ்து என்று விசுவாசிக்கு முன்பு, இயேசுவே கிறிஸ்து என்பதற்கான சாட்சி அவன் முன் இருக்கவேண்டும். இருதயம் சார்ந்த விசுவாசத்திற்கும் அறிவு சார்ந்த விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் உண்மையும், முக்கியமானதாயும் இருப்பதால் அடிக்கடி அவை எடுத்துக்காட்டப்படுகிறது. சிலநேரங்களில் அறிவு சார்ந்த விசுவாசம் முக்கியத்துவம் இல்லாதது என்று வர்ணிக்கப்படுவது மதியீனமாகும். இருதயத்திற்கேதுவான விசுவாசத்திற்கு முன் அறிவுக்கேதுவான விசுவாசம் இருப்பது தேவையாகும். கர்த்தராகிய இயேசுவின் இரட்சிப்பை விசுவாசிக்கு முன்பு, அறிவு சார்ந்த விசுவாசம் இருக்கவேண்டும். புறமதஸ்தர்களைப் பொறுத்த விஷயத்தில் இதற்கான சான்றைக் காணலாம். அவர்களுக்கு அறிவு சார்ந்த விசுவாசம் இல்லாததால் இருதயம் சார்ந்த விசுவாசமும் இல்லாமல் போகிறது. இருதய சம்பந்தமான விசுவாசத்தோடுகூட செயல்படாவிட்டால், அறிவு சார்ந்த விசுவாசம் இரட்சிக்க முடியாது என அடித்துக்கூறுகிறோம். ஆனால் முதலாவது அறிவு சார்ந்த விசுவாசம் இல்லாவிட்டால் இருதயம் சார்ந்த விசுவாசம் இல்லை என்றும் வற்புறுத்திக் கூறுகிறோம். அவரைப்பற்றிக் கேள்விப்படாதிருந்தால் எப்படி விசுவாசிக்க முடியும்? உண்மையில் ஒருவன் அவரை விசுவாசிக்காமலேயே அவரைப்பற்றி விசுவாசிக்க முடியும். ஆனால் அவரைப்பற்றி விசுவாசிக்காமல் அவரை விசுவாசிக்க முடியாது. மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனுடைய வாழ்விலும் இப்படியே இருந்தது. மரிக்கும் இந்த நாளுக்கு முன்பதாக கிறிஸ்துவைப் பார்க்கும் சந்தர்ப்பமே இல்லாமலிருந்திருக்கும். ஆனால் அவருடைய இராஜரீகத் தன்மைக்குச் சான்றளிக்கும் எழுதப்பட்ட வாசகத்தைக் கண்டான். பரிசுத்த ஆவியானவர் இதையே அவனுடைய விசுவாசத்தின் அஸ்திபாரமாகப் பயன்படுத்தினார். இது ஒரு புத்திசாலித்தனமான விசுவாசம் என்று நாம் கூறலாம். முதலாவது அவனுக்கருளப்பட்ட, எழுதப்பட்ட சாட்சியை விசுவாசிக்கும் அறிவுபூர்வமான விசுவாசம். இரண்டாவது அது இருதயத்தில் உணர்ந்து அமரிக்கையோடு பாவிகளின் இரட்சகரான கிறிஸ்துவில் சார்ந்திருக்கும் விசுவாசமாக வெளிப்பட்டது.
ஆம், இந்த மரித்துக்கொண்டிருக்கும் கள்ளன் கிறிஸ்துவின் மீது பாதுகாப்பாகச் சார்ந்திருக்கும் இருதயம் சார்ந்த விசுவாசத்தை செயல் முறைப்படுத்துகிறான். நாம் மிக எளிமையாக இருக்க முயற்சிப்போம். ஒருமனிதன் ஆண்டவராகிய இயேசுவின் மீது அறிவு சார்ந்த விசுவாசம் கொண்டு, இழந்து போயிருக்கலாம். ஒரு மனிதன் வரலாற்றுக் கிறிஸ்துவைப் பற்றி விசுவாசிப்பது அவனுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. அது வரலாற்று நெப்போலியனைப்பற்றி விசுவாசிப்பதிலும் எந்த விதத்திலும் மேலானதல்ல. வாசகரே நீங்கள் இரட்சகருடைய பூரண வாழ்க்கை, அவருடைய மகிமையான தியாகமான மரணம், அவருடைய வெற்றியுள்ள உயிர்த்தெழுதல், அவருடைய மகிமையான பரமேறுதல் மேலும் அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வருகை ஆகிய எல்லாவற்றையும் விசுவாசிக் கலாம். ஆகிலும் இதைக்காட்டிலும் அதிகமானதைச் செய்யவேண்டும். சுவிசேஷ விசுவாசம் என்பது முற்றிலும் நம்பிச் செயலாற்றும் விசுவாசம், இரட்சிப்பின் விசுவாசம், சரியான கருத்து மற்றும் பகுத்தறிவுத் தொடர் ஆகியவற்றிற்கு மேலானது. இரட்சிப்பின் விசுவாசம் எல்லா விளக்கங் களையும் கடந்து மேலோங்கி நிற்கிறது. மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனைப் பாருங்கள். கிறிஸ்து அவனை உற்று நோக்கக் காரணம் ஏதாவது உண்டா? சிலுவையில் அறையப்பட்ட கள்ளன், தானாகவே அறிக்கை செய்த குற்றவாளி. மேலும் சில நிமிடங்களுக்கு முன்னதாக அவரையே நிந்தித்துக் கொண்டிருந்தவன். அவன் பாதாள விளிம்பிலிருந்து பரலோகத்திற்கு சுமந்து செல்லப்படுவான் என்று எதிர்பார்ப்பதற்கு எந்தவிதமான நியாயமும் உண்டா? என் வாசகரே அறிவு, காரணங்களை ஆராய்கிறது. ஆனால் இருதயம் அப்படிச் செய்வதில்லை. இந்த மனிதனின் விண்ணப்பம் அவன் இருதயத்திலிருந்து வந்தது. அவனது கை கால்கள் அவனுக்கு உபயோகப்படவில்லை. (அவை இரட்சிப்புக்குத் தேவையில்லை. மாறாக தடையாகவே இருக்கும்) அவனுக்கு இருதயம் மற்றும் நாவின் செயல்பாடு இருந்தது. அவை எந்தத் தடையுமின்றி விசுவாசித்து அறிக்கை பண்ண ஏதுவாயிருந்தது. "நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினால் அறிக்கை பண்ணப்படும்" (ரோமர் 10:10).
அவனுடைய விசுவாசம் எளிமையானது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தகுதிக்கேற்ற தாழ்மையோடு ஜெபித்தான். அது "ஆண்டவரே என்னைக் கனப்படுத்தும்" என்றல்ல: "ஆண்டவரே என்னை மகிமைப் படுத்தும்" என்றுமல்ல. ஆனால் "ஆண்டவரே என்னை நினைத்து மட்டும் பார்க்க சித்தம் கொள்வீரானால்", "என்னை நோக்கிப்பார்க்க சித்தம் கொள்வீரானால்" "ஆண்டவரே என்னை நினைத்தருளும்" என்பது அவனுடைய ஜெபம். "நினைத்தருளும்" என்பது, அற்புதமான முழுமையும், பொருத்தமுமான வார்த்தையாகும். அவன் “என்னை மன்னியும்" "என்னை இரட்சியும்" "என்னை ஆசீர்வதியும்" எனக் கூறியிருக்கலாம். ஆனால் "நினைத்தருளும்" இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகும். கிறிஸ்துவின் இருதயத்தின் மீதுள்ள விருப்பம் அவருடைய ஆசீர்வாதங்கள் அனைத்தையும் உள்ளடக்கும் விருப்பமாகும். மேலும் இந்த வார்த்தை அதைக் கூறியவனின் நிலைக்கு மிகப்பொருத்தமானது. அவன் சமுதாயத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவன். யார் அவனை நினைப்பார்கள்? பொதுமக்கள் அவனை இனி நினைக்கவே மாட்டார்கள். அவனுடைய நண்பர்கள் தங்களுடைய குடும்பத்திற்கு அவமானத்தைக்கொண்டு வந்தவனை மறக்க ஆவலாயிருப்பர். ஆனால் அங்குள்ள ஒருவர் முன்னால் தன் வேண்டுகோளை வைக்க தைரியம் கொள்ளுகிறான். "ஆண்டவரே என்னை நினைத்தருளும்.”
கடைசியாக அவனுடையது "துணிச்சலான விசுவாசம்" என்பதை நாம் கவனிக்கலாம். ஒருவேளை முதலாவது இது வெளிப்படையாகத் தோன்றாமலிருக்கலாம். ஆனால் சிறிது ஆராய்ந்து பார்க்கும்போது இது தெளிவாகிறது. நடுச்சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தவருக்கு நேராக எல்லாருடைய கண்களும் திரும்பின. மற்றும் அநாகரீகமான கூட்டத்தின் கேவலமான பரிகாசச் சொற்கள் அவருக்கு நேராகச் செலுத்தப்பட்டன. அக்கூட்டத்தின் ஒவ்வொரு சிறுபகுதியினரும் இரட்சகரைத் தூஷிப்பதில் இணைந்து கொண்டனர். “அந்த வழியாய் நடந்து போகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி" "பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம் பண்ணி" என்று மத்தேயு கூறுகிறார். "போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து... அவரைப் பரிகாசம் பண்ணினார்கள்" (லூக்கா 23:36,37) எனத்தெரிவிக்கிறார். ஆகவே கள்ளரும் ஏன் பரிகாசக்குரல் எழுப்பினர் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. வேதபாரகரும் மூப்பரும், அவர்கள் அவ்வாறு செய்யும்போது அவர்களைப் பார்த்து பெருமிதப்புன்னகை பூத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் திடீரென ஒருமாற்றம் ஏற்பட்டது.மனந்திரும்பும் கள்ளன் தொடர்ந்து கிறிஸ்துவை பரியாசம் பண்ணுவதையும், ஏளனம் பண்ணுவதையும் விட்டுவிட்டு, சிலுவையைச் சுற்றியிருக்கும் அனைத்துப் பார்வையாளர்களும் கேட்கும்படி தன் தோழன் பக்கமாய் திரும்பி அவனை வெளிப்படையாய்க் கடிந்து கொள்ளுகிறான். "இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே" (லூக்கா 23:41). எனக் கதறுகிறான். இவ்வாறாக முழு யூதநாட்டையும் குற்றப்படுத்துகிறான். அது மாத்திரமல்ல. கிறிஸ்துவுடைய களங்கமற்ற நிலைக்கு சாட்சியாய் இருப்பதோடு அவருடைய அரசத்தன்மையையும் அறிக்கையிடுகிறான். இவ்வாறாக, ஒரே அடியில் தன் தோழன் மற்றும் கூட்டத்தார் அனைவரின் சாதகமான நிலையிலிருந்து முற்றிலுமாகப் பிரிக்கப்படுகிறான். இன்று கிறிஸ்துவிற்கு வெளிப்படையான சாட்சியாயிருக்கத் தேவையான துணிச்சலைக் குறித்துப் பேசுகிறோம். ஆனால் இந்தத் துணிச்சல் அந்த நாளில் மரித்துக்கொண்டிருக்கும் கள்ளனால் காட்டப்பட்ட துணிச்சலுக்கு முன், மிக அற்பமானதாக மறைந்துபோகிறது.
மரித்துக்கொண்டிருக்கும் அந்த சில மணிநேரங்களில் அவனில் ஏற்பட்ட முன்னேற்றம் ஒரு முழுமையான விந்தையாகும். அவனுடைய கிருபையின் வளர்ச்சி மற்றும் ஆண்டவரைப்பற்றியதான அறிவு மிக அற்புதமானதாகும். அவன் உதடுகளிலிருந்து விழுந்த மிகக்குறுகிய பதிவுக் குறிப்பிலிருந்து அவன் பரிசுத்த ஆவியானவரின் தனிப்போதனையில் கற்றுக்கொண்ட ஏழு காரியங்களைக் கண்டுபிடிக்க முடியும்.
முதலாவது ஒரு எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கையும், நீதியும், பாவத்திற்குப் பழிவாங்கும் தேவன் பாவத்திற்கு ஏற்ற கடுந்தண்டனையை வழங்குவார் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறான். ஆகவேதான் "நீ தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?" என்று மற்ற கள்ளனைக் கேட்கிறான். அது அவனுடைய நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. "குற்ற மில்லாத ஒரு மனிதரை நிந்திப்பதற்கு உனக்கு எப்படித் துணிச்சல் வந்தது?" என்று அவனைக் கடிந்துரைத்தான். "வெகு சீக்கிரத்தில் நீ தேவனுக்கு முன்பாக நிற்கவேண்டும். உன்னைச் சிலுவையில் அறைய உத்தரவிட்டவரை விட நீ சந்திக்கிப்போகிற நீதிமன்றம் எல்லையற்ற புனிதத்திற்குரியது என்பதை நினைத்துக்கொள்" என்றும் அவனைக் கடிந்துரைத்தான். "ஆண்டவருக்கு பயப்படத்தக்கவர்களாயிருக்க வேண்டும். ஆகவே அமைதலாயிரு" என்றான்.
இரண்டாவதாக, நாம் பார்ப்பது போல், அவனுடைய சொந்த பாவத்தன்மையின் காட்சி அவனுக்குமுன் தெளிவாக நின்றது. "நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும்...." நாமோ நியாயப்படி தண்டிக்கப் படுகிறோம். நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்" (லூக்கா 23:40-41). தான் பாவி என்பதை உணருகிறான். தன் பாவம் தண்டனைக்கு ஏற்புடையது என்றும், தான் குற்றவாளி என்று தீர்க்கப்பட்டது நியாயமானது என்றும் கண்டான். மரணம் தனக்குக் கொடுக்கப்பட வேண்டியது என்று ஒத்துக்கொண்டான். இது அவன் தோழனால் அறிக்கையிடப்படாததும், உணர்ந்து கொள்ளாததுமான காரியமாகும்.
மூன்றாவதாக, அவன் கிறிஸ்துவின் பாவமில்லாத் தன்மைக்கு சாட்சி கூறினான். "இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே"(லூக்கா 23: 41) இங்கு ஆண்டவர் தன் குமாரனின் மாசற்ற பண்பினைப் பாதுகாக்க எத்தனை சிரத்தை எடுத்தார் எனப் பார்க்கிறோம். கடைசி நாட்களில் இதை அதிகமாகப் பார்க்கிறோம். யூதாஸ் "குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக்கொடுத்தேன்” என்று கூறும்படி அவன் மனம் மாறியது. “இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை” என்று பிலாத்து சாட்சி கொடுத்தான். "நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்" என்று பிலாத்தின் மனைவி கூறினாள். தற்போது சிலுவையில் தொங்குகிறார். தேவன் தம் அன்புக்குமாரனின் குற்றமில்லாமையைக் காணும்படி திருடனின் கண்களைத் திறக்கிறார். அவரது இராஜரீக மகத்துவத்திற்கு சாட்சி பகரும் வண்ணம் அவன் உதடுகளைத் திறக்கிறார்.
நான்காவதாக, பாவமில்லாத கிறிஸ்துவின் மானிடத் தன்மைக்கு சாட்சி கொடுத்ததோடு அவரது தெய்வீகத்தையும் அறிக்கையிடுகிறான். "ஆண்டவரே! என்னை நினைத்தருளும்! எனக் கூறினான். அது ஒரு அற்புதமான வார்த்தை. யூதர்களின் வெறுப்பின் மூல காரணத்தையும், அநாகரீகக் கூட்டத்தின் பரிகாசத்தின் முனையையும் இரட்சகர் மரத்தில் ஆணியடித்தார். பிரதான ஆசாரியரின் ஏளன அறைகூவல் அந்தக்கள் வனின் காதில் விழுகிறது. "நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையில் இருந்து இறங்கி வா" இதற்குப் பதில் எதுவும் கொடுக்கப்படவில்லை. கண்ட காட்சியினாலன்றி விசுவாசத்தால் அசைக்கப்பட்டவனாய், நடுவில் துன்பப்படுவோரைப் புரிந்துக்கொண்டு தெய்வமாக ஏற்றுக்கொள்ளுகிறான்.
ஐந்தாவதாக, ஆண்டவராகிய இயேசுவின் மீட்பின்தன்மையை விசு வாசித்தான். கிறிஸ்து பகைவர்களுக்காக செய்த ஜெபத்தைக் கேட்டான். "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்" ஆண்டவரால் இருதயம் திறக்கப்பட்ட ஒருவனுக்கு இந்த சின்ன வாக்கியம் ஒரு மீட்பின் செய்தியாக மாறியது. அவனுடைய சொந்த கூக்குரலான "ஆண்டவரே என்னை நினைத்தருளும்" என்ற வாசகம் "ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்" என்ற வார்த்தை களையும் தன் வரம்பிற்குள்ளடக்கி ஆண்டவராகிய இயேசுவை விசுவாசத் தால் இரட்சகராக ஏற்றுக்கொள்ள செய்தது. உண்மையாகவே அவன் இயேசு, பிரதான பாவிகளுக்கும் இரட்சகர் என்பதை விசுவாசித்திருக்க வேண்டும். இல்லையென்றால் கிறிஸ்து தன்னைப் போன்ற ஒருவனை "நினைக்கக்" கூடும் என்று எப்படி விசுவாசிக்க முடியும்?
ஆறாவது, கிறிஸ்துவின் இராஜரீகத்தன்மையின் மேலிருந்த தன் விசுவாசத்திற்கு சான்றளிக்கிறான் - "நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது" இதுவும் ஒரு அற்புதமான வார்த்தை. வெளிப்படையான சூழ்நிலைகளெல்லாம் அவருடைய இராஜரீகத் தன்மையை மறுப்பதாகத் தோன்றியது. அரியணையில் அமர்ந்திருப்பதற்குப் பதிலாக சிலுவையில் தொங்கினார். ராஜகிரீடம் சூடப்படுவதற்குப்பதிலாக அவரது நெற்றி முட்களால் சூழப்பட்டிருந்தது. ஊழியர்களின் பரிவாரங்களால் கவனிக்கப் படுவதற்குப் பதிலாக அக்கிரமக்காரர்களோடு எண்ணப்பட்டார். ஆனாலும் அவர் யூதர்களின் இராஜா (மத்தேயு 2:2).
கடைசியாக அவன் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். “நீர் வரும் போது" நிகழ்காலத்தை விட்டு வருங்காலத்தை நோக்கிப்பார்த்தான். துன்பங்களுக்குப் பின்னால் உள்ள மகிமையைக் கண்டான். அவனுடைய விசுவாசக் கண்கள் சிலுவைக்கு மேலாக கிரீடத்தைக் கண்டுகொண்டன. இதில் அவன் அப்போஸ்தலரைக் காட்டிலும் மேலானவன் ஏனெனில் அவிசுவாசம் அவர்கள் கண்களை அடைத்து வைத்திருந்தது. ஆம் அவமானம் மிகுந்த முதலாம் வருகைக்குப் பின்னால் தோன்றும் இரண்டாம் வருகையின் வல்லமையையும் மகத்து வத்தையும் கண்டான்.
இந்த மரித்துக் கொண்டிருக்கும் கள்ளனின் ஆவிக்குரிய அறிவிற்கு என்ன காரணம் கொடுக்க முடியும்? கிறிஸ்துவுக்குள்ளான காரியங்களில் எப்போது இந்த வெளிப்பாடு பெற்றான்? எப்படி கிறிஸ்துவில் குழந்தையாய் இருக்கும் இவன் ஆண்டவர் பள்ளியில் வியத்தகு முன்னேற்றம் அடைந் தான்? தெய்வீக நடத்துதலை மட்டுமே காரணமாகக் கூறமுடியும். பரிசுத்த ஆவியானவரே அவனுடைய ஆசிரியர். மாம்சமும் இரத்தமும் இதை அவனுக்கு வெளிப்படுத்தாமல் பரலோகத்திலிருக்கிற பிதாவே வெளிப்படுத்தினார். தெய்வீகக் காரியங்கள் "ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும்'' மறைக்கப்பட்டு பாலகருக்கு வெளிப்படுத்தப்படுகிறது என்பதற்கான எத்தனை அற்புதமான விளக்கம்!
சிலுவைகளுக்கிடையே சில அடி தூரமே இருந்ததினால் மனந்திரும்பிய கள்ளனின் கூக்குரல் இரட்சகரிடம் வந்து சேர அதிக நேரம் எடுக்கவில்லை. அவருடைய பதில் என்ன? நீ இந்த முடிவிற்குத் தகுதிவுடையவன். நீ ஒரு பொல்லாத திருடன் ஆகையால் மரணம் உனக்கு நேரிட வேண்டியதே எனக்கூறியிருக்கலாம். அல்லது மிகத்தாமதமாக உன் பாவ வழியை விட்டிருக்கிறாய்; என்னை முன்னதாகவே தேடியிருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் “என்னண்டை வருகிற ஒருவனையும் நான் புறம்பே தள்ளுவதில்லை" என்ற கூற்று இங்கு நிறைவேறிற்று.
கூட்டத்தினரால் அவர் மீது வீசப்பட்ட வசைச்சொற்களை அவர் ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. சிலுவையிலிருந்து இறங்கி வருமாறு ஏளனமாக சவால் விடுத்த பிரதான ஆசாரியருக்குப் பிரதியுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் நொறுங்குண்ட இருதயத்திலிருந்து வந்த விசுவாசமுள்ள கள்ளனின் ஜெபம் அவர் கவனத்தை ஈர்த்தது. அந்தகார வல்லமைகளோடு போராடிக் கொண்டு, சர்வலோகத்தின் பாவங்களின் பயங்கரமான சுமையைத் தன்மேல் தாங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் ஒரு தனி மனிதனின் விண்ணப்பத்திற்கு செவி கொடுப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கலாம் என நாம் நினைத்திருப்போம். ஒரு பாவி, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நேரத்தில் இயேசுவிடம் வரமுடியாது. அவனுக்கு ஒரு சமாதானத்தின் பதிலை உடனடியாகத் தாமதமின்றி கொடுக்கிறார்.
மனந்திரும்பி விசுவாசிக்கும் கள்ளனின் இரட்சிப்பு, கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க எப்பொழுதும் ஆயத்தமாயிருப்பது மட்டுமின்றி அவர்களை இரட்சிக்க வல்லமையுள்ளவராயும் இருக்கிறார் என்பதை இது அழகாக விளக்குகிறது. ஆண்டவராகிய இயேசு ஒரு பலவீனமான இரட்சகர் அல்ல. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் மூலமாய் ஆண்டவரிடத்தில் வருகிறவர் களை அவர் முற்று முடிய இரட்சிக்க வல்லவராய் இருக்கிறார். சிலுவையின் மீதிருக்கும் போது வெளிப்படுத்தப்பட்டதைவிட இச்செயல் வேறெங்கும் இவ்வளவு குறிப்பாகக் காணப்படவில்லை. இது மீட்பரின் "பலவீனமான" நேரம் (2 கொரிந்தியர் 13:4). "ஆண்டவரே என்னை நினைத்தருளும்" என்று அக்கள்ளன் கதறும் நேரத்தில் இரட்சகர் தாங்கொணா வேதனையோடு சபிக்கப்பட்ட மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். அந்த வேளையிலும், அந்த இடத்திலும் இந்த ஆத்துமாவை மரணத்திலிருந்து விடுவித்து பரதீசின் கதவுகளைத் திறந்துவிட அவருக்கு வல்லமை இருந்தது. ஆகவே அவருடைய முடிவில்லா தகுதியுடைமையைக் கேள்வி கேட்கவோ, சந்தேகிக்கவோ செய்யாதீர்கள். ஒரு மரிக்கும் இரட்சகரால் இரட்சிக்கக்கூடுமானால், இனி ஒருபோதும் மரிக்காதபடி கல்லறையிலிருந்து வெற்றியோடு உயிர்த் தெழுந்தவராய் எவ்வளவு அதிகமாய் செய்யக்கூடும். தன்னுடைய வல்லமை ஒருவேளை மறைக்கப்பட்டிருந்ததான அந்த வேளையில்தானே, அக்கள் வனை இரட்சித்ததன் மூலம் தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்தினார்.
தேவன் “தன்னிடம் வரும் எவரையும்” இரட்சிக்க வல்லமையுள்ள வராகவும், விருப்பமுடையவராகவும் இருக்கிறார் என்பதற்கு மரித்துக் கொண்டிருக்கும் கள்ளனின் இரட்சிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கிறிஸ்து இந்த மனந்திரும்பி, விசுவாசித்த கள்ளனை ஏற்றுக்கொண்டாரா னால், கிறிஸ்துவிடம் மட்டும் வந்து விட்டால், வரவேற்பு எப்படியிருக்குமோ என்று ஒருவரும் நம்பிக்கையிழந்து காணப்படத் தேவையில்லை. மரித்துக் கொண்டிருந்த கள்வன் தேவகிருபையின் எல்லைக்கு அப்பாற்பட்டவன் இல்லையென்றால் தேவ கிருபையின் அழைப்பிற்கு செவிகொடுக்கும் எவரும் அப்படி இருக்க முடியாது. மனுஷகுமாரன் “இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே" வந்தார் (லூக்கா 19:10). இதற்குக் கீழான நிலையில் யாரும் இருக்க முடியாது. கிறிஸ்துவின் சுவிசேஷம் “விசுவாசிக்கிறவன் எவனோ?" அவனுக்கு தேவ பெலனாயிருக்கிறது (ரோமர் 1:16). ஆண்டவரின் கிருபையை ஒரு வரம்புக்குள் கொண்டுவராதே. பாவிகளில் பிரதான பாவி (1 தீமோத்தேயு 1:15) விசுவாசிக்க மட்டும் செய்வானானால் அவனுக்கு ஒரு இரட்சகர் அருளப் படுகிறார். இன்னும் பாவத்திலேயிருந்து மரணத்தின் கடைசி மணிநேரத்தில் பிரவேசிப்பவர்களும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர்களல்ல என்னைப் பொறுத்தவரை மிகமிகச் சிலரே மரணப்படுக்கையில் இரட்சிக்கப்படுகிறார்கள் என நம்புகிறேன். எந்த ஒரு மனுஷனுக்கும் மரணபடுக்கை கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லாததால் இரட்சிப்பைக் கடைசி வரைத் தள்ளி வைப்பது அறிவீனத்தின் உச்சகட்டமாகும். அநேகருக்குப் படுக்கையில் படுத்து மரிக்கும் தருணம் கொடுக்கப்படாமல் அவர்கள் வாழ்க்கை சடுதியில் பறிக்கப்படுகிறது. ஆயினும் மரணப்படுக்கையிலிருக்கும் ஒருவர்கூட தேவகிருபையின் ஆளுகைக்கு அப்பாற்பட்டவரல்ல. தம்மை மிகப் பரிசுத்தராகக் கருதிய பிரிவினரில் ஒருவர் பின்வருமாறு கூறினார். "முற்றிலும் நம்பிக்கை அற்றுப் போகாதபடிக்கு வேதத்தில் ஒரு எடுத்துக் காட்டு இருக்கிறது. ஆனால் ஒன்றே ஒன்று என்பதால் அதனால் எச்சரிக்கப் படுகிறோம்.
ஆம் இங்கு கிறிஸ்துவை இரட்சகராகக் காண்கிறோம். பாவிகளை இரட்சிக்க இவ்வுலகத்திற்கு வந்தவர், இவ்வுலகை விட்டுக்கடந்து செல்லும்போது தம் மீட்கும் இரத்தத்தின் முதல் வெற்றிச்சின்னமாக, மீட்கப்பட்ட குற்றவாளியைத் தன்னோடு கூட்டிக்கொண்டு பரதீசுக்குச் சென்றார்.
“கிறிஸ்து சிலுவையில் அருளிய ஏழு வார்த்தைகள்" என்ற அருமை யான புத்தகத்தில் டாக்டர். ஆன்டர்ஸன் பெரி என்பவர் ஜேம்ஸ் வேதாகம மொழிபெயர்ப்பில் “இன்று” என்ற வார்த்தை சரியான இடத்தில், வரவில்லை. என்றும், கள்ளனுடைய விண்ணப்பம் மற்றும் கிறிஸ்துவின் பதில் உள்ளடக்கி திட்டமிடப்பட்ட உரையாடல் வித்தியாசமான சொற்றொடர் கொண்டதா யிருக்கவேண்டும் என்றும் கூறுகிறார். கிறிஸ்துவுடைய பதிலின் அமைப்பு, கள்ளனுடைய விண்ணப்பத்தின் சிந்தனைக்கோர்வையோடு இசைந்து செயல்படுமாறு திட்டமிடப்பட்டிருக்கிறது. இவ்விரண்டையும், இணையான இரண்டடிச் செய்யுளைப் போல ஒழுங்குபடுத்திப் பார்த்தால் தெளிவாகப் புரியும்.
இயேசுவை நோக்கி இயேசு அவனை நோக்கி. ஆண்டவரே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். அடியேனை நினைத்தருளும் என்னுடனே கூட இருப்பாய். நீர் வரும் போது இன்று. உம்முடைய ராஜ்யத்தில் பரதீசில் இவ்விதமாக வார்த்தைகளை ஒழுங்கு பண்ணும்போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைக் கண்டு கொள்ளுகிறோம். அழுத்தம் கொடுக்கப்பட வேண்டிய வார்த்தை "இன்று" என்பதாகும். கள்ளனின் விண்ணப்பத்திற்கு நமது ஆண்டவர் அளித்த கிருபை நிறைந்த பதில், தெய்வீகக் கிருபை எவ்வாறு மனித எதிர்பார்ப்பையும் மிஞ்சுகிறது என்பதற்கு ஒரு ஆணித்தரமான எடுத்துக்காட்டு. ஆண்டவருடைய வரும் இராஜ்யத்தில் தன்னை நினைத்தருளும்படி அக்கள்வன் வேண்டினான். ஆனால் அந்த நாள் முடியுமுன்னதாக இரட்சகரோடு இருப்பான் என்று கிறிஸ்து உறுதியளித்தார். அந்தக்கள்ளன் இவ்வுலக இராஜ்யத்தில் நினைத்தருளப்படும்படி வேண்டினான். கிறிஸ்து அவனுக்குப் பரதீசில் இடத்தை உறுதிப்படுத்திக் கொடுத்தார். கள்வன் தன்னை "நினைத் தருளும்படி” மட்டுமே வேண்டினான். ஆனால் இரட்சகர் "நீ என்னோடு இருப்பாய்" என அறிவித்தார். இவ்விதமாக ஆண்டவர் நாம் நினைக்கிற தற்கும் எதிர்பார்க்கிறதற்கும் மிக அதிகமானவைகளை நமக்குச் செய்கிறார். கிறிஸ்துவின் பதில், சரீர மரணத்திற்குப்பின் ஆத்துமா உயிரோடிருக்கிறது என்ற உண்மையை நிரூபிப்பது மாத்திரமல்லாமல், மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பிரிக்கும் இடைபட்ட காலத்தில் விசுவாசி அவரோடிருப்பான் என்பதையும் கூறுகிறது. இதை இன்னும் வலியுறுத்தும் வண்ணமாகக் கிறிஸ்து தம்முடைய வாக்குத்தத்தத்தை "மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்ற பயபக்தியும், உறுதியுமான முன்னுரை யோடு கூறுகிறார். மரணத்தில் கிறிஸ்துவிடம் போவோம் என்ற உறுதியான நம்பிக்கையே இரத்தசாட்சியான ஸ்தேவானைக் கடைசிமணி நேரத்தில் உற்சாகப்படுத்திக் கர்த்தராகிய இயேசுவே என் ஆவியை ஏற்றுக் கொள்ளும்'' என்று வேண்டிக்கொள்ளச் செய்தது (அப்போஸ்தலர் 7:59). இந்த ஆசீர் வாதமான எதிர்பார்ப்பே, அப்போஸ்தலனாகிய பவுலை "கிறிஸ்துவுடனே இருக்க எனக்கு ஆசையுண்டு. அது அதிக நன்மையாயிருக்கும்." எனக் கூறச் செய்தது. மரணத்தின்பின் கல்லறையில் உணர்வற்ற நிலையில் இருப்பதல்ல ஆனால் பரதேசில் இயேசுவோடு இருப்பதே, விசுவாசிகள் எதிர்கொள்ளவிருக்கும் உண்மை நிலை. "விசுவாசிகள்" எனக் கூறுவது ஏனென்றால், லூக்கா 16 இல் உள்ள நமது ஆண்டவரின் போதனைப்படி அவிசுவாசிகளின் ஆத்துமாக்கள், பரதீசுக்குச் செல்வதற்குப் பதிலாக அழுகையும் பற்கடிப்புமான இடத்திற்குச் செல்லுகின்றன. வாசகரே, இந்த நொடியில் நீ மரித்துக்கொண்டிருந்தால் உன் ஆத்துமா எங்கு செல்லும்? ஆண்டவருடைய பரிசுத்தவான் களிடமிருந்து இந்த ஆசீர்வாதமான உண்மை நிலையை மறைக்க சாத்தான் எவ்வளவு கடினமாய் போராடிக் கொண்டிருக்கிறான்! அவன், ஒருபுறம், விசுவாசிகள் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையில் உணர்வற்ற ஒரு நிலையில் இருக்கிறார்கள் என்ற ஆத்தும நித்திரையைப் பற்றியதான வருந்தக்தக்கக் கொள்கையைப் பரப்பிக் கொண்டிருக்கிறான். மறுபுறத்தில், விசுவாசிகளைப் பயமுறுத்தும் வண்ணமாக, அவர்கள் மரணத்தின்போது தீக்குள் கடந்து சென்று, தங்களைச் சுத்திகரித்துப் பரலோகத்திற்குத் தகுதிப்படுத்த பயங்கரமான உத்தரிக்கும் ஸ்தலம் (இறந்த பிறகு ஆத்துமாவைப் புனிதப்படுத்தும் இடம்) என்ற ஒரு இடத்தை கண்டுபிடித்து வைத்திருக்கிறான். கிறிஸ்து கள்ளனுக்கு அளித்த வார்த்தை, எவ்வளவு தெளிவாக, இந்த ஆண்டவரை அவமதிக்கும் ஏமாற்றுக் காரியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது! இந்தக் கள்ளன் சிலுவையிலிருந்து நேராகப் பரதீசுக்குச் சென்றான். ஒரு பாவி விசுவாசிக்கும் நேரத்தில், அந்த நொடிப் பொழுதில் தானே "ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு நம்மைத் தகுதியுள்ள வர்களாக்குகிறார் (கொலோசியர் 1:12) எனப்பார்க்கிறோம். "பரிசுத்தமாக்கப்படு கிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தி யிருக்கிறார்” (எபிரேயர் 10:14). கிறிஸ்துவின் சமூகத்திற்குச் செல்வதற்கான தகுதி யும், உரிமையும் அவர் சிந்தின இரத்தத்தை மாத்திரமே சார்ந்திருக்கிறது.
அவருடைய ஐக்கியத்தில் நாம் கிருபை மற்றும் கிறிஸ்தவனின் ஒட்டு மொத்த உரிமையின் உச்சக்கட்டத்தை அடைகிறோம். இந்த ஐக்கியத்தைத் தாண்டி செல்லக்கூடியது ஒன்றுமில்லை. "இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு” (1 கொரிந்தியர் 1:9) நம்மை அழைத்திருக்கிறார். அடிக்கடி நாம் "ஊழியம் செய்வதற்கே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்" எனக்கூறக் கேட்கிறோம். இது உண்மையாயினும், உண்மையின் ஒரு பகுதி மட்டுமே - ஆனாலும் இது அற்புதமான அல்லது ஆசீர்வாதமான பகுதி எனக் கூறமுடியாது. நாம் ஐக்கியத்திற்காக இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். இயேசு மரிப்பதற்காக இங்கு வருமுன்பு ஆண்டவருக்கு எண்ணிலடங்கா ஊழியக்காரர் இருந்தனர். அவர்கள் அவரது கட்டளையை நிறைவேற்றும் தேவதூதர்களே. கிறிஸ்து முக்கியமாக தேடி வந்தது ஊழியர்களை அல்ல தம்மோடு ஐக்கியம் கொள்ள விருப்பமுள்ளவர்களையே.
பரிசுத்தவான்களின் இருதயத்தைப் பரலோகம் அதிஉன்னத கவர்ச்சியுள்ள இடமாக ஈர்த்திழுப்பதற்கு காரணம், அது நம் கவலை கஷ்டங்களிலிருந்து மீட்கும் இடமாகவோ, நாம் கிறிஸ்துவில் அதிகமாய் அன்பு கூர்ந்தவர்களை மீண்டும் சந்திக்கும் இடமாகவோ, பொற்றள வீதி, முத்தாலான வாசல் வச்சிரக்கற்களாலான சுவர்களைக் கொண்ட இடமாகவோ இருப்பதால் அல்ல - இவைகளெல்லாம் ஆசீர்வாதமான காரியங்கள். ஆனால் கிறிஸ்து இல்லாத பரலோகம், பரலோகமாய் இருக்க முடியாது. விசுவாசியின் இருதயம் ஏங்கித் தவிப்பது கிறிஸ்துவிற்காக மட்டுமே."பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பம் இல்லை" (சங். 73:25). தம்மால் மீட்கப்பட்ட அனைவராலும் சூழப்பட்டிராவிட்டால் கிறிஸ்துவிற்குப் பரலோகம், பரலோகமாயிராது என்பது மிக விந்தையானதொரு காரியம்.
அவருடைய இருதயம் அவர் பரிசுத்தவான்களுக்காக ஏங்குகிறது. மறுபடியும் வந்து நம்மைத் “தம்மோடு அழைத்துக்கொள்ளுவது” அவருக்கு முன் வைக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு. ஆத்தும வருத்தத்தின் பலனைக் காணுமட்டாக அவரால் முற்றிலும் திருப்தி அடைய முடியாது.
இவைகள் ஆண்டவராகிய இயேசு மரித்துக் கொண்டிருந்த கள்ளனுக்குக் கூறப்பட்ட வார்த்தைகளை முன்னிலைப்படுத்தி உறுதி செய்யப்பட்ட கருத்துக்களாகும். "ஆண்டவரே என்னை நினைத்தருளும்" என்பது கள்ளனின் கூக்குரல். அதனுடைய பதில் என்ன? கூர்ந்து கவனியுங்கள். கிறிஸ்து, "மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன். இன்றைக்கு நீ பரதீசில் இருப்பாய்" என்று மாத்திரமே கூறியிருப்பாரானால் அது கள்ளனின் எல்லாப் பயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கும். ஆனால் அது இரட்சகரை திருப்திப்படுத்த வில்லை. அவருடைய விலையேறப்பற்ற இரத்தத்தால் மீட்கப்பட்ட ஆத்துமா அந்த நாளில் தானே பரதீசில் அவரோடு இருக்கவேண்டும் என்று அவர் இருதயம் உறுதியாய் இருந்தது. இதுவே கிருபையின் உச்சகட்டமும், கிறிஸ்தவ ஆசீர்வாதத்தின் முழுமையுமாய் இருக்கிறது என்று மறுபடியும் சொல்லுகிறோம். அப்போஸ்தலர் "கிறிஸ்துவுடனே இருக்க எனக்கு ஆசை உண்டு" (பிலிபியர் 1:23) என்று கூறினார். பின்பு "தேகத்தை விட்டுப் பிரிந்து'' என்று எழுதினார் எல்லா வேதனைகள் கவலைகளிலிருந்து விடுதலை பெறவா? இல்லை. "தேகத்தை விட்டுப் பிரிந்து" மகிமையில் மறுரூபமடையவா? இல்லை. "இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும், கர்த்தரிடத்தில் குடியிருக்கவும்" (2 கொரிந்தியர் 5:8). கிறிஸ்துவிலும் இதையே காண்கிறோம். "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன். ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன்" என்று கூறினார். தொடர்ந்து கூறும்பொழுது "பிதாவின் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போவேன்" என்றோ "ஆயத்தம் பண்ணிய ஸ்தலத்திற்கு அழைத்துக் கொண்டுபோவேன்" என்றோ கூறாமல் "நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்" என்றார்."எப்பொழு தும் கர்த்தருடனேகூட இருப்போம்' (1 தெசலோனிகேயர் 4:17). என்பதுவே நமது முழுநம்பிக்கையின் இலக்காக இருக்கிறது. என்றென்றும் நம்மை அவருடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவருடைய இருதய வாஞ்சையும் ஆவலான எதிர்பார்ப்புமாயிருக்கிறது. நீ என்னோடுகூட பரதீசிலிருப்பாய்!
இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாய்.. நின்று கொண்டிருந்தார். அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி, ஸ்திரீயே, அதோ உன் மகன் என்றார்! பின்பு அந்த சீஷனை நோக்கி, அதோ உன் தாய் என்றார்! யோவான் 19:25-27.
“இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாய் நின்று கொண்டிருந் தார் (யோவான் 19:25). தனது குமாரனைப் போலவே, மரியாள் துக்கத்தைப் பற்றித் தெரியாதவரல்ல. ஆரம்பத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது" அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப் பட்டவள் என்றான். அவளோ அவனைக் கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந் தாள்" (லூக்கா 1:28-29) இவ்வாழ்த்துதல், பல வேதனைகளுக்கு ஒரு முன்னறிவிப்பாக உள்ளது. காபிரியேல் தூதன் மரியாளின் அற்புதமான கருத்தரித்தலைப்பற்றி அறிவிக்க வந்திருக்கிறார், ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால், முற்றிலும் விளங்காத கேள்விப்படாத முறையில்,நம் ஆண்டவராகிய இயேசுவுக்கு தாயாராகுவது மரியாளுக்கு எளிதான விஷயமல்ல. அது தொலைநோக்கில் சந்தேகமில்லாமல் மரியாளுக்கு பெரிய கெளரவத்தைக் கொண்டு வருகிறது; ஆனால் தற்சமயம் மரியாளின் மரியாதைக்கு பெரிய அபாயத்தையும், அவரது விசுவாசத்திற்கு பெரிய சோதனையையும் கொண்டு வந்துள்ளது. தேவனின் சித்தத்திற்கு, அமைந்த மரியாளின் பணிவு, கவனிப்பதற்கு இனிமையாக உள்ளது. “அதற்கு மரியாள்: இதோ நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்" (லூக்கா 1:38). இது அருமையான, எதிர்ப்பு தெரிவிக்காத கீழ்ப்படிதல் ஆகும். எனினும் காபிரியேல் தூதன் மரியாளிடம் இயேசுவின் பிறப்பை உணர்த்தியபோது கலக்கமுற்றிருந்தார்கள் ஏற்கனவே கூறியதின்படி இது பல சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் முன்னறிவிப்பாக உள்ளது.
சத்திரத்தில் இடமில்லாததால், புதிதாகப் பிறந்த பாலகனை முன்னணையில் கிடத்தியது மரியாளுக்கு எவ்வளவு வேதனை அளித்திருக்கும்! தன் குழந்தையைக் கொல்லுவதற்கான ஏரோதின் திட்டத்தை அறிந்து எவ்வளவு தாங்கொண்ணா மனவேதனை அடைந்திருப்பார்கள்! குழந்தையினிமித்தம் எகிப்திற்கு ஓடிப்போய், பல ஆண்டுகள் அங்கு தங்கியிருக்கும்போது எவ்வளவு கலக்க முற்றிருப்பார்கள்! அவர்களது மகன், மனிதர்களால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டதைக் கண்ணுற்று, ஆத்துமா எவ்வளவு துயருற்றிருக்கும்! தனது சொந்த தேசத்தினரால் அவர் வெறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதைக் கண்டு அவர்களது இதயம் எவ்வளவு கலக்கமுற்றிருக்கும்! சிலுவையினருகே நின்ற போது அவர்கள் கடந்து வந்த வேதனையை யாரால் மதிப்பிட முடியும்? கிறிஸ்து வேதனையின் மனிதர் என்றால் மரியாள் வேதனையின் பெண்மணியன்றோ?
“அங்கே இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாய் நின்று கொண்டிருந்தார்" (யோவான் 19:25).
1. இங்கே நாம் சிமியோனின் தீர்க்கதரிசன நிறைவேறுதலைக் காண்கிறோம்
மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, பாலகன் இயேசுவின் பெற்றோர், அவரை எருசலேம் ஆலயத்திற்குக் கொண்டு சென்றனர். இஸ்ரவேலில் ஆறுதல் வரக்காத்திருந்த முதியவர் சிமியோன், பிள்ளையைத் தன் கைகளில் ஏந்தி தேவனை ஸ்தோத்திரித்தார். "ஆண்டவரே உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது" என்றான் (லூக்கா 2:29-32). பின்னும் சிமியோன் மரியாளை நோக்கி, "இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத் தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும் இவர் நியமிக்கப்பட்டிருக் கிறார். உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்" என்றான். வியப்பான வார்த்தை அல்லவா அது! மரியாளுடைய மிகப்பெரிய சிறப்புரிமை அதனோடேகூட மிகப்பெரிய வேதனையையும் கொண்டு வந்ததா? சிமியோன் கூறும்போது அது முற்றிலும் நேரிடக்கூடாததாக இருந்தது. இருப்பினும் எவ்வளவு உண்மையாகவும் எவ்வளவு துயரம் நிறைந்ததாகவும் நிகழ்ந்தது! இங்கே சிலுவையில் சிமியோனின் தீர்க்கதரிசனம் நிறை வேறியது.
"அங்கே இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாய் நின்று கொண்டிருந்தார் (யோவான் 19:25). அவரது குழந்தைப் பருவத்திற்குப் பிறகு, கிறிஸ்துவின் ஊழியக்காலங்களில் மரியாளை நாம் பார்க்கவோ அவர்களைப் பற்றி கேள்விப்படவோ இல்லை. அவர்களது வாழ்க்கை, நிழல்களின் நடுவில் அமைந்த பின்புறக்காட்சியாக உள்ளது. ஆனால் இப்போது, தனது குமாரனின் வேதனையின் உச்சக்கட்டத்தில், உலகம் தூக்கி எறிந்து, ஒதுக்கிய தன் மகனின் சிலுவையினருகில் நிற்கிறார்கள். இதை யாரால் விளக்கமாக சித்தரிக்க முடியும்? மரியாள் கொடூரமான சிலுவை மரத்தினருகில் நின்றார்கள். அனைத்து நம்பிக்கையையும் இழந்து, எல்லா நியாயங்களுக்கும் மாறான காட்சியைக் கண்டு குழம்பித் திணறி, செயலற்றுப்போன நிலையில் இருப்பினும், மரணத் தருவாயிலிருக்கும் தன் மகனோடு அன்பின் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அங்கே நிற்கிறார்கள்! அந்தத் தாயின் உள்ளத்தின் சிந்தனைகளையும் உணர்வுகளையும் அறிய முயலுங்கள்! ஓ! எப்படிப்பட்ட வாள் அவர்கள் ஆத்துமாவை ஊடுருவிப் பாய்ந்துள்ளது! அவர் மனிதனாக அவதரித்த பொழுது, அப்படிப்பட்ட பேரானந்தம் இருந்ததில்லை, அந்தக் குரூரமான மரணத்தில் அவ்விதமான வேதனையும் இருந்ததில்லை.
இங்கே நாம் திறந்து காட்டப்பட்ட தாயின் உள்ளத்தைக் காண்கிறோம். அவர்கள் மரிக்கும் மனிதனின் தாயார். சிலுவையில் அகோர வேதனைப் படுபவர் அவர்களது மகன். அவர்கள் முதன்முதலில் முத்தம் பதித்த நெற்றியில் இப்பொழுது முட்கிரீடம் சூட்டப்பட்டுள்ளது. குழந்தைப்பருவத்தில் அந்தக் கரங்களையும் கால்களையும் வழிநடத்திச் சென்றிருக்கிறார்கள். அவர்களைப் போல எந்தத்தாயும் வேதனையடைந்ததில்லை. அவருடைய சீஷர்கள் அவரை விட்டு விட்டு ஓடலாம், அவருடைய நண்பர்கள் அவரைக் கைவிடலாம், அவருடைய தேசத்தார் அவரை வெறுத்து ஒதுக்கலாம் ஆனால் அவருடைய தாய் அவருடைய சிலுவையினடியில் நிற்கிறார்கள். ஓ! யாரால் அந்தத் தாயின் உள்ளத்தை ஆழ்ந்தறிந்து ஆராய முடியும்!
மரியாளின் ஆத்துமாவில் பட்டயம் மெதுவாக ஊடுருவும் போது, அந்த வேதனையின் காலத்தையும், துயரத்தையும் யாரால் அளவிட முடியும்! அவர்களது துயரம் உணர்ச்சிவசப்பட்டு, வெளியில் காட்டும் துயரமல்ல. அங்கே பெண்மைக்குரிய பலவீனம் காணப்படவில்லை, தாங்கமுடியாத துயரத்தால் சத்தமிடும் கூக்குரல் இல்லை, மயக்கமடைந்து உணர்விழக்க வில்லை. நான்கு சுவிசேஷகர்களில் யாரேனும் ஒருவராவது எழுதக்கூடிய எந்த ஒரு வார்த்தையும் அவர்கள் வாயிலிருந்து வரவில்லை: பிரத்தியட்சமாக அவர்கள் தொடர்ந்து அடக்க இயலாத அமைதியில் துயருற்றார்கள். இருப்பினும் கடுமையான வேதனையிலிருந்தார்கள். நிறைகுடம் ததும்பாது. அவரது நெற்றி கொடூரமான முட்களால் குத்தி துளையிடப்பட்டதைக் கண்டார்கள். ஆனால் அதை மென்மையாகத் தொட்டு மிருதுவாக்க முடியவில்லை. அவருடைய துளையிடப்பட்ட கரங்கள் வெளீரிய நீல நிறத்துடன் மரத்துப் போவதைக் கண்ணுற்றார்கள். ஆனால் அவற்றைத் தொட்டுத் தேய்க்க இயலவில்லை. அவருக்குத் தாகத்திற்குப் பானம் தேவை என்பதைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அவரது தாகத்தைத் தணிக்க அனுமதியில்லை. மிக ஆழ்ந்த தனிமையான ஆறுதலற்ற மனநிலையில் அவர்கள் துயறுற்றார்கள்.
"அங்கே இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாய் நின்று கொண்டிருந்தார்" யோவான் 19:25.
அந்தக்கூட்டத்தினர் இயேசுவைக் கேலி செய்தனர், திருடர்கள் ஏளனமாய்ச் பேசினார்கள், வேதபாரகர் இகழ்ந்தனர், போர்வீரர்கள் உணர்வற்று, அக்கறையற்றவர்களாய் இருந்தார்கள், நம் இரட்சகர் இரத்தம் சிந்தி, மரிக்கும் தருவாயில் இருந்தார். அங்கே அவரது தாயார். அவர்கள் கொடுமையாக கேலி செய்ததைக் கண்ணுற்றிருந்தார்கள். இப்படிப்பட்ட கோரமான காட்சியைக் கண்டு தாயார் மயக்கமுறாமல் இருந்தது விந்தையே! இப்படிப்பட்ட கொடூரக்காட்சியைக் காணாது விலகிச் செல்லாதது அற்புதமே! இப்பேர்ப்பட்ட காட்சியைக் கண்டு அங்கிருந்து ஓடாமலிருப்பது ஆச்சரியமே! ஆனால் இல்லை! அங்கே இருக்கிறார்கள்: பயத்தில் பதுங்கவில்லை, மயக்கமுறவில்லை, கீழே தரையில் மிகுந்த வேதனையில் மூழ்கவில்லை. அவர்கள் நிற்கிறார்கள். அவர்களது செய்கையும், மனப்பான்மையும் இணையற்றது. ஆண்டுதோறும் எழுதப்பட்டு வரும் வரலாற்றுக் குறிப்புகளிலும் ஈடு இணையில்லை. என்னே! மனித வலிமையின் எல்லைகளை எல்லாம் கடந்த சென்ற மன வலிமை! இயேசுவின் சிலுவையினருகே நின்றார்கள் - எவ்வளவு அற்புதமான மனவலிமை. தனது துயரத்தை அடக்கி வைத்து, அங்கே அமைதியாக நின்றார்கள். இறுதி வேளையில் அவரது அமைதியைக் குலைக்காமல் இருந்தது, ஆண்டவராகிய இயேசுவின் மீது அவர்கள் வைத்திருந்த பயபக்தி அல்லவா?
"அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார் பின்பு அந்த சீஷனை நோக்கி: அதோ உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்" யோவான் 19:26-27.
2 இங்கே, பெற்றோருக்கு பிள்ளைகள் மரியாதை செலுத்தவேண்டும் என்று முன் மாதிரி வைத்துப்போன குறைவற்ற முழுமையான மனிதனைக் காண்கிறோம்.
கர்த்தராகிய இயேசு, தேவனுக்கும் மனிதனுக்கும் தனக்கிருந்த கடமைப் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றினார். சிலுவையில், இயேசுவிற்கு தன் தாயின் மீதிருந்த மென்மையான பொறுப்பினையும் அக்கறையினையும் காண்கிறோம், பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை இயற்கை விதிப்படியும் அன்பினாலும் திறம்பட நடத்துவதற்கான மாதிரியை இயேசுகிறிஸ்து எல்லோருக்கும் அளித்துள்ளார்.
கர்த்தரின் விரல்களால் இரு கற்பலகைகளில் எழுதப்பட்டு சீனாய் மலையில் மோசேக்குக் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் இன்றும் இரத்து செய்யப்படவில்லை. பூமி உள்ளவரை அவை நிலைத்துநிற்கும். அவற்றில் ஒவ்வொன்றும் புதிய ஏற்பாட்டில் உள்ள கண்டுணர்தல் சார்ந்தவற்றை உள்ளடக்கியுள்ளது. யாத்திராகமம் 20:12 இல் உள்ள வார்த்தைகள் எபேசியர் 6:1-3 இல் திரும்பச் சொல்லப்பட்டுள்ளது."பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம் உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பதே. வாக்குத்தத்த முள்ள முதலாவது கற்பனையாயிருக்கிறது"
பெற்றோருக்குப் பிள்ளைகள் மரியாதை செலுத்த வேண்டும் என்ற கற்பனையானது வெறுமையான கீழ்ப்படிதலுக்கு அப்பாற்பட்டு, வெளிப் படுத்தப்படும் விருப்பமாயுள்ளது. அது அன்பினையும், நன்றியறிதலையும் மரியாதையையும் உள்ளடக்கியுள்ளது. பொதுவாக ஐந்தாம் கற்பனையானது இளைஞர்களுக்கு எழுதப்பட்டுள்ளது என எடுத்துக்கொள்ளப்படுகிறது. உண்மைக்கு அப்பால் எதுவும் இருக்கமுடியாது. இயற்கையாகவே பிள்ளைகள் முதலில் இளையவர்களாய் இருப்பதால், சந்தேகமில்லாமல் பிள்ளைகளுக்காக கூறப்படுகிறது. ஆனால் முடிவாக குழந்தைப் பருவத்தைக் கடந்தவுடன் இந்தக் கற்பனை அதன் பாதியளவு முக்கியத்துவத்தை இழக்கிறது. தெரிவிக்கப்பட்டபடி 'மரியாதை' என்ற வார்த்தை கீழ்ப்படிதலுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றுகிறது. காலப்போக்கில் பிள்ளைகள் வளர்ந்து முழுமையான சொந்தப் பொறுப்புள்ள ஆண், பெண் பருவத்தை அடையும்போது அவர்கள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இல்லை, இருப்பினும் பெற்றோருக்கு அவர்களது கடமை நிறுத்தப்படாமலிருக்கிறதா? முழுமையாகக் கொடுத்துத் தீர்க்க முடியாமல் அவர்கள் அவர்களது பெற்றோருக்குக் கடன்பட்டிருக்கிறார்கள். தங்கள் பெற்றோரை உயர்ந்த மதிப்பில் வைத்து அவர்களிடம் பயபக்தியுடன் இருப்பது மட்டுமே மிகச்சிறிய அளவில் பிள்ளைகளால் செய்ய முடிகிறது. குறைவற்ற முழுமையான முன்மாதிரியான இயேசுவிடம் கீழ்ப்படிதல் மற்றும் மதிப்பு மரியாதை கொடுத்தல் ஆகிய இருபண்புகளும் தெளிவாகக் காட்டப்படுகிறது.
மெய்யாகவே பிந்திய ஆதாம் இவ்வுலகிற்கு வந்தார். முந்திய ஆதாமைப் போல் - மனித இனத்தின் மேலான மகிமை பொருந்தினவராய் அல்ல: உடலும் உள்ளமும் முழு வளர்ச்சியடைந்தவராக அல்ல - ஆனால் குழந்தைப் பருவத்தைக் கடக்க வேண்டிய சிறு குழந்தையாக வந்தார். ஐந்தாம் கற்பனையினைச் சார்ந்த அவரது குழந்தைப்பருவம் மிக முக்கியத்துவமும் மதிப்பும் வாய்ந்தது. குழந்தைப்பருவத்தில் இயேசுவானவர் அவரது தாய் மரியாள் மற்றும் சட்டப்படி தகப்பன் யோசேப்பு ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருந்தார். லூக்கா இரண்டாம் அதிகாரத்தில் இது அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளது. அவருக்குப் பன்னிரண்டு வயதான போது பஸ்கா பண்டிகை முறைமையின்படி எருச்லேமுக்குப் போனார். இங்கு கொடுக்கப்பட்டுள்ள விவரம், உரிய கவனம் செலுத்தினால், ஆழ்ந்த குறிப்பினைத் தெரிவிக்கிற. தாய் உள்ளது. பண்டிகை முடிந்தவுடன், யோசேப்பும் மரியாளும், இயேசு தங்களோடு வருகிறார் என்று நினைத்து, நண்பர்களுடன் நாசரேத்திற்கு திரும்பினார்கள். ஆனால் இயேசு எருசலேமில் இருந்துவிட்டார். ஒருநாள் பிரயாணம் வந்தபின்பு, அவர் வராததைக் கண்டுபிடித்தனர். உடனே அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே அவரைத் தேவாலயத்தில் கண்டனர். அவருடைய தாயார் அவரை நோக்கி: “மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே" என்றாள் (லூக்கா 2:48).
"விசாரத்தோடே" என்ற வார்த்தை, அவர் தாயாரின் உடனடி எல்லையை விட்டு வெளியே சென்றதில்லை என்னும் உண்மையினை உணர்த்துகிறது. தேடிய போது உடனடியாகக் காணமுடியவில்லையே என்பது அவர்களுக்குப் புதிய, விநோதமான அனுபவமாயிருந்தது. மேலும் யோசேப்பும், மரியாளுடனிருந்து ''விசாரத்தோடே" தேடினார் என்பது நாசரேத்து வீட்டில் அவர்களிடையேய இனிய உறவினை வெளிப் படுத்துகிறது. அவர்கள் வினவியதற்கு இயேசு கொடுத்த பதிலைச் சரியாகப் புரிந்து கொண்டால், அவர் தனது தாயார் மீது வைத்திருந்த மரியாதையை வெளிப்படுத்துகிறது. இயேசுவானவர் தன் தாயைக் கடிந்து கொள்ளவில்லை என்ற Dr. காம்பெல் மார்கனின் கூற்றை நாம் ஒத்துக் கொள்கிறோம். "என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா?" என்பதில் "தாயே, நிச்சயமாக என்னை உங்களுக்கு நன்றாகவே தெரியும் மேலும் பிதாவுக்கடுத்தவைகளிலிருந்து தடுத்து நிறுத்த எதாலும் முடியாது என்பதும் உங்களுக்குத் தெரியும்" என்று கூறுவதுபோல் உள்ளது என ஏற்கனவே விவரித்தவர் நன்றாகக் கூறுகிறார். "பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்" என்ற பின்தொடர்ச்சியை வாசிக்கும்போது இன்னும் அருமையாக உள்ளது. இவ்வாறு எல்லா வேளைகளிலும் கிறிஸ்துவானவர் பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற முன்மாதிரியை வைத்துப் போயிருக்கிறார்.
மேலும் மரியாள் யோசேப்பிடம் இருந்த கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின் வருடங்கள் முடிவடைந்தன. ஆனால் 'மரியாதை 'யின் வருடங்கள் அவ்வாறில்லை. சிலுவையின் அகோர வேதனைகளுக்கு மத்தியில், மனித வாழ்க்கையின் பயங்கரமான இறுதி மணிவேளையில், ஆண்டவராகிய இயேசு, தன்னை நேசித்த மரியாளையும் தான் நேசித்தவரையும் எண்ணிப் பார்க்கிறார். மரியாளது தற்சமயத் தேவையினை எண்ணி, எதிர்காலத் தேவையினைக் கவனிக்க தனது அன்பை ஆழமாக அறிந்திருந்த தன் சீஷனிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அந்த நேரத்தில் மரியாளை நினைத்து, அவர்களுக்கு மரியாதை கொடுத்தது, அவருக்கு வேதனையின் மேலுள்ள வெற்றியைக் காண்பிக்கிறது.
மரியாளை 'ஸ்திரீயே' என்று ஆண்டவர் கூறியதற்கு ஒருவேளை விளக்கம் தேவைப்படுகிறது. நான்கு சுவிசேஷங்களிலும் எழுதப்பட்டபடி ஒருமுறை கூட அவர் 'தாயே' என்று கூறவில்லை. இன்றைய நாட்களில் வாழும் நமக்கு இதற்கான காரணத்தை உணர்ந்து கொள்வது கடினமல்ல. சர்வ ஞானமுள்ள நம் ஆண்டவர் பல நூற்றாண்டின் நிகழ்வுகளையும், எதிர்காலத்தில் கன்னிமரியாள் வழிபாடு கட்டி எழுப்பப்படுவதையும் வெறுப்புடன் கணித்து தேவகுமாரனுக்கே உரிய கனத்தை, "ஆண்டவரின் தாயார்" என்று மரியாளின் உருவ வழிபாட்டிற்கு செலுத்துவார்கள் என்ற காரணத்தாலேயே 'தாயார்' என்று கூப்பிடுவதைத் தவிர்த்து 'ஸ்திரியே' என்றார்.
சுவிசேஷங்களில் இருமுறை நம் ஆண்டவர் மரியாளை 'ஸ்திரியே என்று அழைத்ததைக் காண்கிறோம். இந்த இரு முறையும் யோவான் சுவிசேஷத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக எழுதுபவர்கள் அவரை மனித உறவுகளில் முன் வைக்கிறார்கள். ஆனால் நான்காம் சுவிசேஷத்தில் அவ்வாறில்லை. யோவான் சுவிசேஷம் கிறிஸ்துவை தேவகுமாரனாக காட்டியுள்ளது. தேவ குமாரனாக அவர் அனைத்து மனித உறவுகளுக்கும் அப்பாற்பட்டுள்ளார். எனவே மரியாளை ஆண்டவராகிய இயேசு 'ஸ்திரீயே' என்று அழைப்பது முற்றிலும் இசைவாக உள்ளது.
சிலுவையிலிருந்த நம் ஆண்டவர், மரியாளைத் தனக்கு மிகவும் அன்பாயிருந்த அப்போஸ்தலனின் பராமரிப்பில் விட்ட அந்தச் செய்கை யானது, மரியாளின் விதவையிருப்பைக் காணும் பொழுது, நன்கு புரிகிறது. யோசேப்பின் மரணத்தை சுவிசேஷங்கள் திட்டவட்டமாகப் பதியாவிட்டாலும், ஆண்டவராகிய இயேசு தன் பொது ஊழியத்தைத் துவங்கும் சிறிது காலத்திற்கு முன்னதாக யோசேப்பு மரித்தார் என்பதில் சந்தேகமில்லை. கிறிஸ்துவானவர் பன்னிரண்டு வயதாயிருக்கும் போது, லூக்கா இரண்டாம் அதிகாரத்தில் கூறப்பட்ட சம்பவத்திற்குப்பிறகு, மரியாளின் கணவர் யோசேப்பைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை. யோவான் இரண்டாம் அதிகாரத்தில் மரியாள் கானாவூர் கலியாணத்தில் இருக்கிறார்கள். ஆனால் யோசேப்பு அங்கிருந்தாரா என்பது பற்றி மிகச் சிறிய குறிப்புகூட இல்லை. மரியாளின் விதவையிருப்பைக் கருத்தில் கொண்டும், தான் உடலளவில் இருந்து மரியாளுக்கு ஆறுதலாய் இருக்கமுடியாத வேளை வந்தது என்பதைக் கருத்தில் கொண்டும் அவரது அன்பின் பராமரிப்பு வெளிப்படுத்தப்படுகிறது.
புத்திமதியாக ஒரு சுருக்கமான வார்த்தை கூற அனுமதியுங்கள். அநேகமாக இந்த வரிகள், உயிருடன் தங்கள் தகப்பன், தாய் உள்ள பெரியவர்கள் வாசிக்கக்கூடும். நீங்கள் எவ்வாறு அவர்களை நடத்துகிறீர்கள்? நீங்கள் உண்மையாக அவர்களுக்கு மரியாதை செய்கிறீர்களா? கிறிஸ்து சிலுவையில் காட்டிய முன்மாதிரி உங்களை வெட்கமடையச் செய்கிறதா? நீங்கள் ஒருவேளை இளைஞராகவும் திடகாத்திரமாகவும் இருக்கலாம். உங்கள் பெற்றோர் நரைத்த தலையுடன், உடல் மனவலிமை குன்றியிருக்கலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார் "உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டை பண்ணாதே" நீதிமொழிகள் 23:22. நீங்கள் பணம் படைத்தவர்களாகவும் அவர்கள் ஏழ்மை நிலையிலும் இருக்கலாம். அப்பொழுது அவர்களுக்குத் தேவையான பொருட்களை அளிக்கத் தவறிவிடாதீர்கள். அவர்கள் தொலைவிலுள்ள மாநிலத்திலோ, தூர தேசத்திலோ வசிக்கலாம் அப்பொழுது அவர்களது கடைசிநாட்களில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இனிமையான பாராட்டும் வார்த்தைகளை எழுதாமலிருந்து விடாதீர்கள். இவைகள் புனிதமான கடமைகள். "உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணு."
3. இங்கே நாம் யோவான் இரட்சகரின் பக்கம் திரும்பியிருப்பதைக் காண்கிறோம்.
பிதாவின் கரத்தில் கிறிஸ்து சிலுவையில் பட்டபாடுகளைத்தவிர, ஒருவேளை அப்போஸ்தலர்களால் அவர் கைவிடப்பட்டது, அவர் பருகிய பானத்தின் மிகக் கசப்பான துகள்களாக இருந்திருக்கும். அவருடைய சொந்த ஜனங்களாகிய யூதர்களே அவரை வெறுத்து, ஏற்றுக்கொள்ள மறுத்தது மிகக் கொடுமையானதாகவும், மிக வேதனை நிறைந்ததாகவும் இருந்திருக்கும். இதைவிட மோசமானது என்னவென்றால், அவருடனே இருந்த பதினொருவர் ஆண்டவரின் நெருக்கடியான நேரத்தில் அவரை விட்டு நீங்கியதாகும். அவர்களது விசுவாசமும் ஆண்டவரிடம் உள்ள அன்பும் எந்த அதிர்ச்சியிலும் மாறுதலின்றி ஒரே சீராக இருக்கும் என ஒருவர் எண்ணியிருக்கலாம். ஆனால் அது அவ்வாறன்று, "சீஷர்களெல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள்" (மத்தேயு 26:56) என்று பரிசுத்த வேதாக மத்தில் வாசிக்கிறோம். சொல்லமுடியாத துயர நிகழ்வு. கெத்செமெனே தோட்டத்தில் ஒரு மணிநேரமாவது அவரோடு “விழித்திருக்கத் தவறியது நம் மனதைச் செயலிழக்கச் செய்கிறது, மேலும் அவரைக் கைது செய்தபோது, அவரை விட்டுச் சென்றது ஏறக்குறைய புரிந்து கொள்ள முடியாமல் நம்மைக் குழப்புகிறது. கசப்பான அனுபவங்களிலிருந்து, நம் இருதயம் எவ்வளவு வஞ்சகம் நிறைந்தது என்பதையும், நம் விசுவாசம் எவ்வளவு வலுக்குறைந்தது என்பதையும், சோதனை நேரத்தில் நாம் எவ்வளவு பரிதபிக்கப்படும் விதமாய் பலவீனமானவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளவில்லையா! ஆண்டவரின் கிருபை இல்லாவிடில் மிகச்சிறிய துயரமும் நம்மை வீழ்த்துவதற்குப் போதுமானதாகும். நம்மைக் கட்டுப்படுத்துகிற, தாங்குகிற ஆண்டவரின் வலிமை நம்மை விட்டு விலகினால் எவ்வளவு காலம் நாம் நிலைத்து நிற்க முடியும்?
ஆண்டவராகிய இயேசு தம் சீஷர்களிடம், நெருங்கி வரும் ஆபத்தை எதிர்கொள்ளும் மன உறுதியின்மையினை, முறையாக எச்சரித்திருக்கிறார். "அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி : மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்" (மத்தேயு 26:31). பேதுரு மட்டுமல்ல மற்ற அப்போஸ்தலர்கள் அனைவரும், தாங்கள் இயேசுவின் பக்கம் நிலைத்து நிற்போம் என்ற தங்கள் தீர்மானத்தை உறுதியாகக் கூறினார்கள். "அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்க வேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்க மாட்டேன் என்றான். சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள்" (மத்தேயு 26:35). இருந்தபோதிலும் அவருடைய வார்த்தை மெய்யாகவே நிரூபிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் இழிவாக அவரை விட்டு ஓடிவிட்டனர். அவருடைய மகிமையின் மேல் எவ்வாறு இது பிரதிபலித்தது! அவர்களுடைய பாவமான நிலையினால் ஆண்டவராகிய இயேசுவை அவருடைய பகைவர்களின் அவமதிப்பிற்கும் ஏளனத்திற்கும் ஒப்புக்கொடுத்தார்கள். ஏனென்றால் "பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக் குறித்தும் போதகத்தைக் குறித்தும் விசாரித்தான்" (யோவான் 18:19) என்று வாசிக்கிறோம். காலியிடங்களை நிரப்புவது கடினமல்ல. சந்தேகமில்லாமல், காய்பா இயேசுவிடம் எத்தனை சீஷர்கள் இருந்தனர்? இப்பொழுது அவர்களுக்கு நடந்தது என்ன? ஆபத்து நேரிட்ட போது அவரை விட்டுவிட்டுச் சென்றதன் காரணம் என்ன? என்று வினவினான். ஆனால் கவனியுங்கள். இந்தக் கேள்விக்கு இரட்சகர் பதில் ஒன்றும் கூறவில்லை. அவர்கள் அவரை விட்டு விட்டுச் சென்றாலும், அவர்களுக்குப் பொதுவான விரோதியிடம் அவர்களைக் குற்றஞ்சாட்ட மாட்டார்.
சீஷர்கள் அவரிடம் இடறலடைந்ததால் அவர்கள் அவரைக் கைவிட்டுச் சென்றனர். "இந்த இராத்திரியிலே, நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்." மத்தேயு 26:31. இங்கே கிரேக்க வார்த்தையை மொழிபெயர்க்கும் போது "இடறலடைதல்" என்ற வார்த்தையை "அவதூறு செய்து ஒருவர் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல்" என்றும் ஈடாகச் சொல்லலாம். அவரோடுகூட இருப்பதற்கு அவர்கள் வெட்கப்பட்டனர். அவரோடு இருப்பது தங்களுக்குப் பாதுகாப்பல்ல என்றும் கருதினார்கள். அவர் தன்னையே ஒப்புக்கொடுத்தால், அவரை மேற்கொண்ட கொந்தளிப் பிலிருந்து தங்களுக்கு எங்காவது புகலிடம் தேடிக்கொள்வது சிறந்தது என்று கருதினார்கள். இது மனுஷீகத்திலிருந்து வந்தது.
தெய்வீகத்திலிருந்து பார்த்தால், பிதாவின் பாதுகாக்கும் மற்றும் ஆதரவளிக்கும் கிருபை விலகியதால் கிறிஸ்து சீஷர்களால் கைவிடப்பட்ட நிலையில் இருந்தார். அவரைக் கைவிடும் பழக்கம் அவர்களுக்கு இருந்ததில்லை. பரத்திலிருந்து செயல்திறன், ஆர்வம், மற்றும் அன்பு அவர்கள் மீது இறங்கியிருந்தால் அவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆனால் கிறிஸ்து எவ்வாறு பாரத்தைச் சுமந்து அந்நாளின் வெப்பத்தைத் தாங்கியிருக்க முடியும்? தன்னைப் பிழிந்தெடுக்கும் இடத்திற்கு எவ்வாறு தனியாகச் சென்றிருக்க முடியும்? அவர்கள் விசுவாசத்தோடு அவரில் நிலைத்திருந்தால் அவருடைய துயரம் எவ்வாறு கடுமை குறையாததாக இருந்திருக்கும்? இல்லை, இல்லை அவ்வாறில்லை. எந்த ஒரு சிருஷ்டியாலும் கிறிஸ்துவிற்கு விடுதலையோ ஆறுதலோ கிடைக்காது. எனவே பிதாவின் கோபாக்கினை இறுகப் பற்றிப்பிடிக்க அவர் தனியாக விடப்பட வேண்டும். பிதா சற்று நேரம் அவருடைய தெய்வீக பலத்தையும் வல்லமையையும் நிறுத்தி வைத்தார்; அப்போது சிம்சோனின் தலைமயிர் சிரைக்கப்பட்டதும், அவன் பலம் இழந்தது போன்று இருந்தது. "கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பெலப்படுங்கள்" என்று அப்போஸ்தலர் கூறுகிறார். அவருடைய வல்லமை நிறுத்திவைக்கப்பட்டால், நம் நோக்கங்களும் தீர்மானங்களும் சோதனையின் முன்பு சூரியனைக்கண்ட பனிபோல உருகிப்போகும்.
அப்போஸ்தலரின் கோழைத்தனமும் நம்பிக்கைத் துரோகமும் தற்காலிகமானது. பிறகு பதினொரு சீஷர்களும் இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள் (மத்தேயு 28:6). ஆனால் பதினொரு வரில் ஒருவன், அவர் கல்லறையிலிருந்து வெற்றி சிறக்க எழுந்திருக்கும் முன்னமே அவரைத் தேடினான் என்பது மகிழ்ச்சி அளிக்கவில்லையா? ஆம் அவர் வெட்கத்தின் சிலுவையில் தொங்கும்போதே அவரைத் தேடினான். இந்த நபர் யாராயிருந்திருக்கக்கூடும்? அவருடைய உன்னதமான அன்பினை அப்போஸ்தலர் குழுவில் யாரால் விளக்கிக் காட்ட முடியும்? புனித திருமறையில், அவருடைய அடையாளத்தை மறைத்தாலும், அவருடைய பெயரைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. நாம் படிக்கும் திருமறையில் யோவான் சிலுவையினடியில் நின்றான் என்பது திருமறையின் தெய்வீகத் தூண்டு தலுக்கு அமைதியான மற்றும் போதுமான சாட்சியாக உள்ளது. திட்டமிடப் படாமல் இவ்வார்த்தையின் ஊடாக இணைந்து செயல்படும் தன்மை, நம் வேதாகமத்தின் ஆரம்ப மனித ஆற்றலுக்கும் மேற்பட்டதென்பதற்கு முக்கிய சான்றாகும். பதினொருவரில் வேறு எவரேனும் சிலுவையினருகில் இருந்தாரா என்பதற்கு சிறுகுறிப்பு ஒன்றுமில்லை. ஆனால் சிந்தனையாற்றல் உள்ள வாசகர் அங்கு இயேசு நேசித்த சீஷனை எதிர்பார்ப்பார்கள். அங்கே யோவான் இருந்தார். இரட்சகரின் பக்கம் யோவான் திரும்பி வந்தார். அவரிடமிருந்து ஆசீர்வாதமான பொறுப்பை ஏற்றுக் கொண்டார். வேதாகமத்தில் அமைதியாக இசைந்து செயல்படும் தன்மை எவ்வளவு எளிமையாகவும் குறைவற்றதாகவும் உள்ளது!
மீண்டும் ஒரு சுருக்கமான உணர்த்தும் வார்த்தைகள். இதை வாசிப்பவரில் எவராவது ஆண்டவரிடம் இனிமையான தொடர்பு இல்லாமல், நம்பிக்கையைத் துறந்து, விசுவாசத்தை விட்டு விலகி, இரட்சகரின் பக்கமிருந்து அலைந்து திரிவது உண்டா? ஒருவேளை வேதனையின் நேரம் அவரை மறுதலித்திருக்கலாம்! ஒருவேளை சோதனையின் நேரம் நீங்கள் தவறியிருக்கலாம்! அவருடைய விருப்பத்தைவிட உங்கள் விருப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
நீங்கள் சுமந்திருக்கிற அவருடைய நாமத்திற்கு மரியாதை கொடுக்கத் தவறியிருக்கலாம். குற்ற உணர்வாகிய அம்பு உங்கள் மனசாட்சியில் நுழையட்டும். தெய்வீக கிருபை உங்கள் இருதயத்தை இளகப் பண்ணட்டும். தேவனின் வல்லமை உங்களை கிறிஸ்து பக்கம் மீண்டும் இழுக்கட்டும் ஏனென்றால் அவரிடம் மட்டுமே உங்கள் ஆத்துமாவிற்கு திருப்தியும் சமாதானமும் கிடைக்கும். இங்கே உங்களுக்கு உற்சாகமூட்டுதல் உள்ளது. யோவான் திரும்பியபோது, கிறிஸ்து அவரை கடிந்து கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அவரது அதிசயமான கிருபை அவனுக்கு சொல்லமுடியாத சிறப்புரிமையைக் கொடுத்தது. நீங்கள் அலைந்து திரிவதை விட்டுவிட்டு உடனடியாக கிறிஸ்துவிடம் திரும்புங்கள். அவர் உங்களை உற்சாகத்துடன் வரவேற்பார். யாருக்குத் தெரியும், மதிப்பிற்குரிய பொறுப்பு உங்களுக்காகக் காத்திருக்கும்!
4. இங்கே கிறிஸ்துவின் விவேகத்திற்கான விளக்கத்தைக் காண்கிறோம்.
மரியாளை சீஷனிடம் ஒப்படைப்பது இயேசுவின் மென்மையான அன்பையும், எதிர்காலத்தை முன்னறியும் திறனையும் வெளிப்படுத்துகிறது என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். யோவான் நமது இரட்சகரின் விதவைத் தாயாரின் பொறுப்பை எடுப்பது என்பது ஒரு ஆசீர்வாதமான பொறுப்பு ஆகும். இருப்பினும் அது ஒரு மதிப்பு மிக்க பரம்பரைச் சொத்து ஆகும். கிறிஸ்து யோவானிடம் ''இதோ உன் தாய்" என்பது, மரியாள் உனக்கு சொந்தத் தாயாக இருக்கட்டும்; என் மீது உள்ள உன் அன்பு அவர்களிடம் மென்மையான மரியாதையாக விளங்கட்டும் என்பது போல் இருந்தது.
முற்காலத்தில் இயேசுகிறிஸ்து ஞானமாகவும் விவேகமாகவும் நடப்பார் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. ஏசாயா தீர்க்கதரிசி மூலம் "இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார்," என்று கூறப்பட்டுள்ளது. தனக்கு அன்பான சீஷனிடம் மரியாளை ஒப்படைத்ததில் இரட்சகர் தனது ஞானமாக பகுத்தறிந்து செயலாற்றும் தன்மையினை வெளிப்படுத்தியுள்ளார். ஒருவேளை இயேசுவை நன்கு புரிந்து கொண்டவர் அவருடைய தாயாரைத் தவிர வேறொருவரும் இல்லை. மேலும் அவருடைய அன்பைப் புரிந்து கொண்டவர் யோவானைத் தவிர எவரும் இல்லை. எனவே பொதுவாக பிறர் உணர்வுகளை உணரும் திறன் கொண்ட இருவரும் நெருங்கிய ஒப்பந்தத்தில் பிணைக்கப்பட்டு, கிறிஸ்துவோடும் இணைந்திருக்கின்றனர். இவ்வாறு மரியாளைப் பராமரிப்பதற்கு யோவானைத் தவிர பொருத்தமானவர் எவருமில்லை. அதேபோன்று யோவானும் மரியாளின் தோழமையில் அதிகம் மகிழ்ச்சியடைவார்.
மேலும் யோவானுக்கு அதிசயமான, பெரும் மரியாதைக்குரிய ஒருவேலை காத்திருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
வருடங்களுக்கு பிறகு இயேசுவானவர் யோவானுக்கு இவ்வுலகு முடியும்போது என்ன நடக்கும் என்ற வெளிப்பாட்டை காண்பிக்கிறார். முப்பது ஆண்டுளாக நம் இரட்சகரோடு நெருங்கிய உறவில் இருந்த மரியாளைப் பராமரிப்பதோடு இன்னும் சிறப்பாக ஆண்டவரின் வேலை ஆரம்பமாகும் நேரத்திற்காக தன்னைத் தகுதிப்படுத்திக் காத்திருந்தான். எனவே மரியாளையும் யோவானையும் ஒன்றாகக் கூட்டிச் சேர்த்தது தனிச்சிறப்புள்ள பொருத்தமானதாகும். மரியாளுக்கு பொருத்தமான வீட்டைத் தேர்ந்தெடுத்ததும், தனக்கு அன்பாயிருந்த சீஷனுடனிருக்க மரியாளை ஒழுங்கு படுத்தியதுமான கிறிஸ்துவின் விவேகம் வியந்து பாராட்டப்பட வேண்டியதே.
அடுத்த குறிப்பிற்குச் செல்லுமுன்னதாக, மரியாளை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பிறகு உள்ள நிகழ்வுகள் யோவான் சுவிசேஷம் 20 ஆம் அதிகாரத்தில் உள்ளது. அதில் பேதுருவும் யோவானும் வெறுமையான கல்லறைக்குச் சென்றனர். யோவான் பேதுருவைப் பார்க்கிலும் துரிதமாய் ஓடி முந்திக் கல்லறையிடம் வந்து, உள்ளே போகவில்லை; தனிப்பட்ட தன்மையுள்ள பேதுரு, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, சீலைகள் சுற்றி வைக்கப்பட்டிருப்பதையும் கண்டான். பிறகு யோவானும் பிரவேசித்து, கண்டு "விசுவாசித்தான்" ஏனெனில் இந்த நேரம்வரை கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்திருப்பார் என்ற வேதவாக்கியத்தை உணராதிருந்தார்கள். மேலும் யோவான் விசுவாசித்ததன் விளைவாக "பின்பு அந்த சீஷர்கள் தங்களுடைய வீட்டிற்குத் திரும்பிப் போனார்கள்" என்று யோவான் 20:10 இல் வாசிக்கிறோம். ஏன் இவ்வாறு செய்தார்கள் என்று கூறப்படவில்லை. ஆனால் யோவான் 19:27 இன்படி அதன் விளக்கம் தெளிவாக உள்ளது. அங்கே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. "அந்த நேரத்திலிருந்து அந்த சீஷன் மரியாளைத் தன் சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.'' இப்பொழுது இரட்சகர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அறிந்தவுடன், அந்த நல்ல செய்தியை மரியாளிடம் கூற "வீட்டிற்கு " விரைந்தான். இந்த சந்தோஷ செய்தியைக் கேட்டு மரியாளைவிட யாரால் அதிகக் களிப்பாயிருக்கக்கூடும்! இது வேதாகமத்தில் அமைதியாக மறைந்து முரண்பாடற்று செயல்படும் தன்மைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாகும்.
5. இங்கே நாம் ஆவிக்குரிய உறவுகள் மற்றும் இயற்கையான பொறுப்புகளைப் புறக்கணிக்கக்கூடாது என்று பார்க்கிறோம்.
ஆண்டவராகிய இயேசு பாவிகளுக்காக இரட்சகராக மரித்தார். இப்பூவுலகில் என்றுமே கண்டிராத பெரும் முக்கியத்துவம் வாய்ந்த, வியக்கத்தக்க வேலையில் ஈடுபட்டிருந்தார்.
உலகம் எதற்காக உண்டாக்கப்பட்டதோ, எதற்காக மனித இனம் சிருஷ்டிக்கப்பட்டதோ, எதற்காக எல்லாக்காலங்களும் காத்திருக்கிறதோ மேலும் எதற்காக ஆதி அந்தமுமில்லாத என்றும் நிலைத்திருக்கும் வார்த்தை மனுஉருவெடுத்ததோ அதற்காசு அந்தப் பணியினைச் செய்ய முற்பட்டார். எனினும் இயற்கையான பிணைப்புகளின் பொறுப்புகளை கவனிக்கத் தவறவில்லை. மாம்சத்தின்படி தன் தாய்க்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்து வைக்கத் தவறவில்லை.
இந்நாட்களில், அநேகர் தங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொள்ளத் தேவையான பாடம் இங்கு உள்ளது. கடமையோ, வேலையோ எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், உறவினர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளிலிருந்தோ, உரிமை கோருபவர்களை கவனியாமலோ இருக்க முடியாது. தங்கள் குழந்தைகளை விட்டுவிட்டு, அல்லது அவர்களைச் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி அந்நியர் பராமரிப்பில் விட்டுவிட்டு புறமதத்தினர் நாடுகளுக்கு ஊழியஞ் செய்யச் செல்பவர்கள் நம் இரட்சகரின் வழியை பின்பற்றாதவர்களாகும். பொதுக்கூட்டங்களில் அதிக நேரம் செலவழிப்பவர்கள் அது ஆவிக்குரிய கூட்டங்களாக இருந்தாலும், அல்லது சேரிகளுக்குச் சென்று ஏழைகள் மற்றும் தேவைபடுபவருக்கு ஊழியம் செய்தாலும், தன் சொந்தக் குடும்பத்தை விசாரிக்காமல் இருந்தால் கிறிஸ்துவின் பெயருக்கு அவதூறு கொண்டுவருபவர்களாய் இருப்பார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் கிறிஸ்தவப் பணியில் முன்னணியில் இருந்தாலும், பிரசங்கிப்பதிலும், கற்றுக்கொடுப்பதிலும் மிக சுறுசுறுப்பாயிருந்து, தன் சொந்த மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தனது பொறுப்பைச் செய்யாதவர்கள், சிலுவையில் கிறிஸ்து காட்டிய முன்மாதிரியை படித்து கடைபிடிக்க வேண்டும்.
6. உலகளாவிய தேவை முன்மாதிரியாக எடுத்துக்காட்டப்படுவதை இங்கு காண்கிறோம்.
திருமறையில் சொல்லப்பட்டிருக்கும் மரியாள் மூடநம்பிக்கையாய் பின்பற்றப்படுகிற மரியாளிலிருந்து எவ்வளவு வேறுபட்டவர்! அவர்கள் பெருமையுள்ள மெடோனாவாக அல்ல ஆனால் நம்மைப் போன்று வீழ்ச்சியடைந்த இனத்தின் ஒரு அங்கத்தினர், இயற்கையாகவும் பயிற்சியினாலும் ஒரு பாவி. கிறிஸ்து பிறக்கும் முன்பு "என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது" லூக்கா 1:46,47 என்று அறிவிக்கிறார்கள். இப்பொழுது ஆண்டவராகிய இயேசு மரிக்கும்போது அவர்கள் சிலுவையின் முன்பாக நிற்கிறார்கள். கர்த்தருடைய வார்த்தை இயேசுவின் தாயாரை தேவதை களின் ராணியாக அல்லாமல் இரட்சகரில் களிகூருபவராக அறிமுகப்படுத்து கிறார். அவர்கள் "ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள்ஆனால் ஸ்திரீகளுக்கு மேல் அல்ல; மீட்பரின் தாய் என்ற உயர்ந்த மதிப்புடையவராக இருப்பினும் அவர்கள் வீழ்ச்சியடைந்த மனித இனத்தின் உண்மையான அங்கத்தினர், இரட்சகர் தேவைப்படும் ஒரு பாவி.
மரியாள் சிலுவையண்டையில் நின்றார்கள். அவர்கள் அங்கே நிற்கையில் நம் இரட்சகர் "ஸ்திரீயே, அதோ உன் மகன்" என்றார் (யோவா.19:26), உலகத்தையும் சுயத்தையும் விட்டுத்திரும்பி, பாவிகளுக்காக மரித்த இரட்சகரை விசுவாசத்தால் நோக்கிப் பார்ப்பதே, ஆதாமின் வழிவந்த ஒவ்வொருவரின் தேவை என்று சுருக்கமாக ஒருவார்த்தையில் வெளிப் படுத்தப்படுகிறது. இரட்சிப்பின் வழிக்கான தெய்வீகச் சுருக்கம் அங்கே உள்ளது. வருங்கோபாக்கினையிலிருந்து விடுதலை, பாவமன்னிப்பு மற்றும் ஆண்டவரோடு ஏற்றுக்கொள்ளப்படுதல் ஆகியவை, சிறப்பான செய்கை யாலோ, நன்னடத்தையாலோ அல்லது மதசம்பந்தமான கட்டளைகளாலோ கிடைப்பதில்லை. இல்லை, இரட்சிப்பு நோக்கிப் பார்ப்பதன் மூலம் வருகிறது "உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியை நோக்கிப்பார்" வனாந்தரத்தில் சர்ப்பத்தால் கடிக்கப்பட்ட இஸ்ரவேலர், யெகோவா நியமித்த அவர்கள் விசுவாசத்தின் பொருளைப் பார்த்த ஒரு பார்வையால் குணமடைந்தார்கள் எனவே இன்று குற்றத்திலிருந்தும், பாவ வலிமையி லிருந்தும் மீட்பு, உடைந்த சட்டத்தின் சாபத்திலிருந்தும், சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை, ஆகியவை கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினால் மட்டுமே கிடைக்கிறது. "சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்பட வேண்டும்" (யோவான் 3:14-15). ஒரு பார்வையில் ஜீவன் இருக்கிறது. இதை வாசிப்பவர்களே, அந்த தெய்வீக துயருற்றவரை நீங்கள் இவ்வாறு நோக்கிப் பார்த்ததுண்டா? நம்மைத் தேவனிடம் கூட்டிச் சேர்ப்பதற்காக, அநீதியுள்ளவர்களுக்காக நீதிமான் சிலுவையில் மரித்ததை நீங்கள் பார்த்ததுண்டா? கிறிஸ்துவின் தாய் மரியாள் அவரை நோக்கிப் பார்க்க வேண்டியிருந்தது. நீங்களும் அவ்வாறு தானே கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து இரட்சிப்படையுங்கள்.
7. கிறிஸ்துவின் முழுநிறைவின் அற்புதமான ஒத்திசைவை இங்கே நாம் காண்கிறோம்.
முழுநிறைவான மனித அன்பும் அவருடைய தெய்வீக மகிமையும் ஒருங்கிணைந்திருப்பது, அவரது ஆள்தத்துவத்தின் அற்புதங்களில் ஒன்றாகும். எல்லாவற்றிற்கும் மேலாக அவரை ஆண்டவரராகக் காண்பிக்கும் சுவிசேஷம், வார்த்தை மாம்சமானது என்று அவரை மனிதனாகக் காட்டவும் கவனமாயுள்ளது. தெய்வீக நடத்துதலில் ஈடுபடுதல், அவருடைய அனைத்து மக்களின் எல்லாப் பாவங்களுக்கும் பரிகாரம் செய்தல், அந்தகார சக்திகளை இறுகப்பற்றிப் போரிடுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட போதிலும், இவையெல்லாவற்றிற்கு நடுவிலும் அவர் இன்னமும் மனித மென்மையான உணர்வுடனிருந்தது, இயேசுகிறிஸ்துவின் ஆள்தத்து வத்தின் முழுநிறை வினைக் காட்டுகிறது. மரணத் தருவாயிலும், அவருடைய தாயின் மீதிருந்த அக்கறை, அவருடைய குணாதிசயத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஒவ்வொன்றும் இயற்கையாகவும் முழுமையாகவும் இருந்தது. இயற்கையாகவே தோன்றும் அவருடைய எளிமை மிகவும் குறிப்பிடத்தக்கது. அங்கே பகட்டாரவாரமோ அல்லது ஆடம்பரமோ இல்லை. அநேகமாக அவருடைய வல்லமையான ஊழியங்கள் நெடுஞ்சாலையிலும், குடிசையிலும், துயரப்படுகிற சிறுகூட்டத்தின் மத்தியிலுமே நடைபெற்றது. இன்று இன்னமும் புரிந்து கொள்ளமுடியாத, அளவிடமுடியாத, அநேகமான அவருடைய வார்த்தைகள், சாதாரணமாக சில நண்பர்களுடன் அவர் நடந்து போகையில் சொல்லப்பட்டவையே ஆகும். சிலுவையிலும் அதே போன்று தான். வரலாறு எல்லாவற்றிலும் அவர் மிக வல்லமையான காரியங்களைச் செய்து கொண்டிருந்தார். அவர் ஈடுபட்டிருந்த கிரியைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவருடைய சிருஷ்டிப்பின் மகிமை, முற்றிலும் அற்பமானதாக மங்கிப்போகிறது. இருந்தபோதிலும் நாசரேத்து வீட்டில் தாயோடு ஒன்றாக இருந்திருந்தால் என்ன ஏற்பாடுகள் செய்திருப்பாரோ, அவ்வாறு தன் தாய்க்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்ய அவர் மறக்கவில்லை. பழைய ஏற்பாட்டில் சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “அவர் நாமம் அதிசயமானவர் என்னப்படும்" (ஏசாயா 9:6). அவர் செய்ததெல்லாவற்றிலும் அவர் அதிசயமானவர். அவர் தாங்கிய எல்லா உறவுகளிலும் அவர் அதிசயமானவர். ஆள்தத்துவத்தில் அவர் அதிசயமானவர். மேலும் அவர் கிரியைகளெல்லா வற்றிலும் அவர் பரிசுத்தர். வாழ்விலும் அவர் பரிசுத்தர், சாவிலும் அவர் பரிசுத்தர், நாம் அவரை வியந்து போற்றுவோம்!
"ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று அர்த்தமாம் மத்தேயு 27:46.
"என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" இவை திடுக்கிடச் செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகள். மகிமையின் தேவன் சிலுவையில் அறையப்பட்டது, பூவுலகில் இதுவரை நிகழ்ந்திராத, மிகவும் அசாதாரணமான நிகழ்வு ஆகும், மிகுந்த துக்கத்தோடு இருப்பவரின் அழுகுரல், திகைக்க வைக்கும் அந்தக் காட்சியின் மிகவும் அதிர்ச்சியூட்டும் செயலாகும். மாசற்றவரைக் கண்டனம் செய்வதும், குற்றமற்றவரை வேதனைக்குட்படுத்துவதும் நன்மை செய்பவரைக் கொடூரமான சாவுக்குட்படுத்துவதும், வரலாற்றில் புதிய நிகழ்வு அல்ல. நீதிமான் ஆபேலின் கொலையிலிருந்து சகரியா வரை, இரத்தசாட்சிகளின் நீண்ட பட்டியல் உள்ளது. ஆனால் மையச் சிலுவையில் தொங்கியவர் சாதாரண மனிதர் அல்ல, அவர் மனுஷகுமாரன், அனைத்து மதிப்படை மொழிகள் அடங்கிய குறைவற்ற ஒருவர். அவருடைய குணாதிசயம் அவரது மேலங்கியைப் போன்றே ஒட்டுத் தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது" (யோவான் 19:23). சாதாரணமாக வேதனைப்பட்டவர்களைப் பொறுத்த வரையில், அவர்களை வேதனைக்குட்படுத்தியவர்களைக் குற்றஞ்சாட்டுவதற்கு குறைகளும் கறைகளும் இருந்தன. ஆனால் இவருடைய நீதிபதி, "நான் இவரிடம் ஒரு குற்றத்தையும் காணவில்லை” என்கிறார். மேலும் துயருற்றவர், குறையற்ற மனிதர் மட்டுமல்ல அவர் தேவகுமாரன். இருப்பினும், மனிதன், தேவனை அழிக்க விரும்புவது விந்தையாக இல்லையா? “தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்" (சங்கீதம் 14:1). இதுவே அவனுடைய விருப்பம். ஆனால் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன், தன் விரோதிகளால்தான் துன்புறுத்தப்படுவதற்கு அனுமதித்தது விந்தையாகவே உள்ளது. "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத்தேயு 3:17) என்று உரைத்து இவரில் மகிழ்ச்சியாயிருந்த பிதாவானவர் தன் குமாரனை இந்த இழிவான மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தது மிகவும் விந்தையாக உள்ளது. "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" இந்த வார்த்தைகள் திகைப்பின் வார்த்தைகளாகும். 'கைவிடப்பட்டவன்' என்ற வார்த்தை மனிதன் பேசும் வார்த்தைகளில் மிக சோகமானதாகும். எழுத்தாளர் ஒருவர், குடியிருப்பவர்களால் கைவிடப்பட்ட ஒரு நகரத்தின் வழியாகக் கடந்து செல்வாரானால், அந்நேரம் உள்ள அவரது உணர்வுகளை அவரால் மறக்க முடியாது. நண்பர்களால் கைவிடப்பட்ட மனிதன், கணவனால் கைவிடப்பட்ட மனைவி, பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தை - என்ற இந்த வார்த்தைகளில் எப்பேர்பட்ட சோகம் நிறைந் துள்ளது! ஆனால் ஒரு சிருஷ்டி அதன் சிருஷ்டிகர்த்தாவால் கைவிடப் படுவது, ஒரு மனிதன் தேவனால் கைவிடப்படுவது ஒ! இது எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் பயங்கரமானது. இது தீங்குகளெல்லாவற்றிலும் பெரிய தீங்கு. இது பேராபத்தின் உச்சக்கட்டம். ஆம், வீழ்ச்சியடைந்த மனிதன், அவனுடைய புதுப்பிக்கப்படாத நிலையில், அவ்வாறு கருதுவதில்லை. ஆனால், அனைத்து முழுமையின் தொகுப்பு ஆண்டவர் என ஓரளவு அறிந்தவன், எல்லா சிறப்பின் ஊற்றும் இலக்கும் அவரே என்றும், "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (சங்கீதம் 41:2) என்று கதறுபவன், இப்பொழுது கூறப்பட்டதை ஆமோதிக்க தயாராக இருக்கிறான். அனைத்து காலங்களிலும் பரிசுத்தவான்கள் எழுப்பும் ஒலி என்னவென்றால் "தேவனே எங்களைக் கைவிடாதேயும்" என்பது தான். தேவன், தம் முகத்தை நம்மிடமிருந்து ஒரு கணம் மறைப்பது தாங்க முடியாதது. புதுப்பிக்கப்பட்ட பாவிகளிடம் இது மெய் என்றால், பிதாவானவர் தம் முகத்தைத் தம்முடைய அன்பான குமாரனுக்கு மறைப்பது எவ்வளவு எல்லையற்ற தாக்கத்தை உண்டு பண்ணும்!சாபத்தீடான மரத்தில் தொங்கிய அவர் முந்திய நித்தியத்திலிருந்தே பிதாவின் அன்பிற்குப் பாத்திரராய் இருந்திருக்கிறார். நீதிமொழிகள் 8:30 -ன் மொழி நடையில் நம் கவனத்தை ஈர்க்கும் போது, துயருற்ற இரட்சகர் "பிதாவின் அருகில் இருந்தார், அவரால் வளர்க்கப்பட்டார்” அவர் “நித்தம் அவரின் மனமகிழ்ச்சியாய் இருந்தார்.” பிதாவின் சமுகம் அவருடைய வீடாய் இருந்திருக்கிறது, பிதாவின் மார்பு அவருடைய இருப்பிடமாயிருந்தது, உலகம் உண்டாவதற்கு முன்னே அவர் பிதாவின் மகிமையில் பங்கேற்றிருக்கிறார். குமாரன் பூமியிலிருந்த முப்பத்தி மூன்று வருட காலத்தில், அவர் பிதாவோடு உள்ள இடைவிடாத ஐக்கியத்தில் மகிழ்ந்திருந்தார். பிதாவின் விருப்பத்திற்கு மாறான எந்த எண்ணமும் அவரில் இருந்ததில்லை, பிதாவிடமிருந்து வந்த விருப்பத்திற்கு மாறான மீறுதலும் இல்லை. அவருடைய உணர்வுள்ள சமுகத்திற்கு வெளியே ஒரு கணம் கூட இருந்ததில்லை. அப்படியானால் தேவனால் இப்பொழுது “கைவிடப்பட்டார்” என்பதன் பொருள் என்னவாயிருக்கும்! "பிதாவின் முகம் மறைக்கப்பட்டது " என்பது பிதா இரட்சகருக்குக் குடிக்கக் கொடுத்த பானத்தின் மிகக் கசப்பான பகுதியாக இருந்தது. "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" இவை ஒப்புமை இல்லாத அவலம் நிறைந்த வார்த்தைகளாகும். அவைகள் அவருடைய துயரத்தின் உச்சக்கட்டத்தைக் குறிக்கின்றன. போர்ச்சேவகர்கள் அவரைக் கொடூரமாக ஏளனம் செய்கின்றனர். முட்கிரீடத்தை அவருக்குச் சூட்டியிருந்தார்கள்; சாட்டை கொண்டும் கையாலும் அவரை அடித்திருக்கிறார்கள்; அவர் மீது உமிழ்ந்து அவர் முடியைப் பிடுங்கும் அளவுக்குச் சென்றனர். அவருடைய உடையைக் களைந்து வெளியரங்கமான அவமானத்திற்குட்படுத்தினார்கள். இருப்பினும் இவையெல்லாவற்றையும் அமைதியாகச் சகித்தார். அவருடைய கைகளையும் கால்களையும் ஆணிகளால் துளைத்தார்கள். அவமானத்தை ஏற்றுச் சிலுவையைப் பொறுமையுடன் சகித்தார். அந்த இழிவான கூட்டம் அவரை இகழ்ந்து பேசியது, அவரோடு சிலுவையிலறையப்பட்ட கள்வர்கள் அவர் முகத்திற்கு எதிரே இழிவான சொற்களை உறைக்கும்படிப் பேசினார்கள். இருந்தபோதிலும் அவர் தன் வாயைத் திறக்கவில்லை. மனிதர்கள் கையில்பட்ட வேதனைக்குப் பதிலாக அவர் வாயிலிருந்து கூக்குரல் எழும்பவில்லை. ஆனால் இப்போது ஒருமுனைப்படுத்தப்பட்ட முழுச் செறிவுள்ள கடும்சினம் விண்ணிலிருந்து அவர் மீது இறங்கியது. "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்" என்று சத்தமிட்டார். நிச்சயமாகவே இந்தக் கூக்குரல் கடின இருதயத்தைக் கரைத்திருக்க வேண்டும். "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" இவை ஆழ்ந்த புரியமுடியாத இரகசியத்தின் வார்த்தைகளாகும். பழைய ஏற்பாட்டின் காலத்தில், யொகோவா தேவன் அவருடைய மக்களைக் கைவிடவில்லை. திரும்பத் திரும்ப அவர்கள் கஷ்டத்தில் அவரே அவர்கள் புகலிடமாயிருந்தார். இஸ்ரவேலர் கொடுமையான அடிமைத்தன கட்டில் இருந்தபோது தேவனை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர் அவர்களைக் கேட்டார். அவர்கள் சிவந்த சமுத்திரத்திற்கு முன்பாக உதவியற்ற நிலையில் நிற்கும்போது, அவர் அவர்களுக்கு உதவியாக வந்து, அவர்கள் பகைவர் களிடமிருந்து அவர்களை விடுவித்தார். மூன்று எபிரேயர்களை எரிகிற அக்கினிச் சூளையில் போட்டபோது தேவன் அவர்களோடிருந்தார். ஆனால் இங்கு சிலுவையில், எகிப்து நாட்டிலிருந்து எழுந்ததைவிட மிக சோகமான அங்கலாய்ப்பின் குரல் எழும்பியது, இருப்பினும் அங்கு பதில் ஏதுவுமில்லை! சிவந்த சமுத்திர நெருக்கடியைக் காட்டிலும் இங்கு அதிக ஆபத்தான நிலை: அவர்களைவிட இங்கு கருணை உள்ளம் இல்லாத விரோதிகளால் உண்டான குழப்பமான நிலை இருப்பினும் அங்கே விடுதலை இல்லை! நேபுகாத்நேச்சாரின் அக்கினிச் சூளையைவிட முடிவின்றி பயங்கரமாக எரியும் நிலை ஆனால் அவர் அருகில் ஆறுதலுக்காக ஒருவருமில்லை. அவர் தேவனால் கைவிடப்பட்டார்!ஆம், துயருறும் இரட்சகரின் வேதனைக்குரல் ஆழ்ந்த புதிராக உள்ளது. முதலாவது "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னது என்று அறியாதிருக்கிறார்கள்" என்று சத்தமிட்டார், இதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது ஏனென்றால் இது இரக்ககுணமுள்ள இதயத்தோடு ஒத்துப்போகிறது. மீண்டும் அவர் தம் வாயைத் திறந்து, மனந்திரும்பிய கள்வனிடம், "மெய்யாகவே நான் உனக்கு சொல்கிறேன், இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்" என்றார், மேலும் இதுவும் நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும் ஏனென்றால் பாவியின் மீது அவருக்குள்ள இரக்கம் அவருடைய உதடுகள் அசைந்தன, தன்னுடைய தாயை நோக்கி, "ஸ்திரீயே! அதோ, உன் மகன்" என்றார். தனக்கு அன்பாயிருந்த சீஷனை நோக்கி, "அதோ உன் தாய்" என்றார். இதுவும் நம்மால் பாராட்ட முடியும். ஆனால் அடுத்ததாக அவர் தன் வாயைத் திறந்து போட்ட சத்தம் நம்மைத் திகைத்து, தள்ளாட வைக்கிறது. பழைய ஏற்பாட்டில் தாவீது இவ்வாறு கூறுகிறார். "நீதிமான் கைவிடப்பட்டதைக் கண்டதில்லை" ஆனால் நாம் இங்கே தாம் ஒருவரே நீதிமானாயிருப்பவர் கைவிடப்பட்டதைக் காண்கிறோம். "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" இவை ஆழ்ந்த அறிவுள்ள பயபக்தியான வார்த்தைகளாகும். இந்த வேதனையின் குரலானது, இப்பூவுலகை நடுங்க வைத்து அது அண்டசராசரம் எங்கும் எதிரொலித்தது. ஆ! யாரால் இந்த விந்தையிலும் விந்தையை ஆழ்ந்து சிந்திக்க முடியும்! அச்சந்தருகிற பயங்கரமான இருளைக் கிழித்தெறிந்த இந்த வியக்கவைக்கும் அவலக்குரலின் அர்த்தத்தை யாரால் ஆராய முடியும்! “ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்ற வார்த்தைகள் பரிசுத்த ஸ்தலத்திற்கே நம்மை நடத்திச் செல்கிறது. இங்கே அல்லது எங்காகிலும் சிற்றின்பத்தைத் தூண்டும் ஆவல்களை நாம் களைந்து போடுவதே மேன்மையானதாகும். தேவனுடைய வார்த்தைகளை இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமோ என யூகித்தல் அதன் புனிதத் தன்மையைக் கெடுப்பதாகும். வார்த்தைகளின் ஆழத்தை வியந்து அவரைத் தொழுது கொள்வதே மேன்மை. இந்த வார்த்தைகள் திடுக்கிடச் செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த தாகவும், திகைக்க வைக்கும் துயரம் நிறைந்ததாகவும், ஆழ்ந்த இரகசிய மாகவும், இணையற்ற அவலச்சுவையுள்ளதாகவும், ஆழ்ந்த பயபக்தி உணர்வு உள்ளதாகவும் இருந்தபோதிலும், நாம் இன்னமும் அதன் அர்த்தத்தை அறியாமல் இல்லை. உண்மையில், இந்த வேதனையின் குரலானது ஆழ்ந்த இரகசியமானது. எனினும் ஆசீர்வாதமான தீர்விற்கு ஏதுவாக உள்ளது. இணையற்ற அவலம் நிறைந்த இந்த வார்த்தைகள் தெய்வீக அன்பின் முழுமையையும் தேவனின் அச்சமூட்டும் வளைந்து கொடுக்காத நீதியையும் வெளிப்படுத்துகின்றன என்பதை வேதம் சந்தேகமின்றித் தெளிவுபடுத்து கிறது. மரிக்கும் தருவாயில் இரட்சகர் மொழிந்த நான்காவது வார்த்தையை உற்று நோக்கும்போது, நம் ஒவ்வொரு எண்ணமும் கிறிஸ்துவுக்குள் சிறையாக்கப்பட்டு, நம்முடைய இருதயங்கள் பயபக்தியுள்ள உணர்வடையட்டும். "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?"
1 இங்கே நாம் பாவத்தின் பயங்கரத்தையும் அதன் சம்பளத்தின் தன்மையும் காண்கிறோம்.
ஆண்டவராகிய இயேசு நடுப்பகலில் சிலுவையில் அறையப்பட்டார். கல்வாரியின் வெளிச்சத்தில் அனைத்தும் அதன் உண்மைத் தன்மையில் வெளிப்பட்டது. அங்கே, எல்லாவற்றின் தன்மைகளும் முழுமையாகவும் இறுதியாகவும் வெளிப்பட்டது. மனித இதயத்தின் சீர்கேடுகளாகிய தேவன் மீதுள்ள வெறுப்பு, அதன் இழிவான நன்றிகேடு, ஒளியைக் காட்டிலும் இருளை நேசிக்கும் தன்மை, ஜீவனின் அதிபதியைக் காட்டிலும் கொலை யாளிக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஆகிய அனைத்தும் பயங்கரமாக வெளிப்பட்டது. சாத்தானின் அச்சந்தரும் தன்மை தேவனிடம் உள்ள பகைமை உணர்வு, கிறிஸ்துவின் மீதுள்ள தீராதவிரோதம், இவற்றை மனிதனின் இதயத்தில் வைத்து இரட்சகரைக் காட்டிக்கொடுக்கச் செய்தல், இவை யாவும் முழுமையாக வெளிப்பட்டது. அதேபோன்று முழுமையான தெய்வீகத்தன்மை, சொல்வதற்கு அரிய தேவனின் பரிசுத்தம், அசைக்க முடியாத நேர்மை தவறாத நடத்தை, அவருடைய பயங்கரமான கடுங்கோபம், அவரது ஈடு இணையற்ற கிருபை ஆகியவை முழுமையாக அங்கு அறியப்பட்டது. மேலும் அங்கே பாவத்தின் இழிவான தன்மை, அதன் கயமை, அதன் சட்டத்திற்குட்படாத குழப்பமான தன்மை ஆகியவையும் தெளிவாக வெளிப்படையாயிற்று. பாவம் ஊடுறுவக்கூடிய அளவின் தன்மையும் இங்கே காட்டப்பட்டுள்ளது. அதன் முதலாவது வெளிப்பாட்டில் அது தற்கொலை வடிவில் வந்தது - அதாவது ஆதாம் தன்னுடைய சொந்த ஆவிக்குரிய வாழ்க்கையை அழித்தல்; இரண்டாவது உடன் பிறந்தவர்களைக் கொலை செய்யும் வடிவில் வந்தது - காயீன் தன் சொந்த சகோதரன் ஆபேலைக் கொலை செய்தல்; ஆனால் சிலுவையில் மனிதன் மனுஷகுமாரனைச் சிலுவையில் அறைந்து, தேவனை கொல்லுதல் என்ற உச்சக்கட்டத்தில் வந்தது.ஆனால் சிலுவையில் மிகவும் வெறுக்கத்தக்க பாவத்தின் தன்மையை மட்டுமல்லாமல் அதன் பயங்கரமான சம்பளத்தின் தன்மையினையும் நாம் காண்கிறோம். "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23) பாவத்தின் மேல் சுமத்தப்பட்டது மரணம் ஆகும். “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்தில் பிரவேசித்து போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவு மாயிற்று" (ரோமர் 5:12). பாவம் இல்லாதிருந்திருந்தால் மரணமும் இல்லாதிருக்கும். ஆனால் 'மரணம்' என்பது என்ன? இறுதிமூச்சு விட்டபின்பு, பயங்கரமான அமைதி ஆட்கொண்டு, உடல் அசைவின்றி இருப்பதா? இரத்த ஓட்டம் நின்று போனதால் முகம் வெளீறிய நிறத்துடனும் கண்கள் உணர்விழந்து கோரமாகக் காட்சியளிப்பதா? ஆம், ஆனால் இது அதைவிட அதிகமானதே. இந்த வார்த்தையில், உடல் ரீதியாக முடிவுக்கு வருவதைவிட அதிகப் பரிதாபமானதாகவும் சோகமானதாகவும் உள்ள ஒன்று அடங்கியுள்ளது. பாவத்தின் சம்பளம் ஆவிக்குரிய மரணமாகும். பாவம், எல்லா ஜீவனுக்கும் ஊற்றாகிய தேவனிடமிருந்து நம்மை பிரித்து விடுகிறது. இது ஏதேன் தோட்டத்தில் காட்டப்பட்டது. வீழ்ச்சிக்கு முன்னதாக, ஆதாம் தன்னைப் படைத்தவரின் ஆசீர்வாதமான தோழமையில் மகிழ்ந்திருந்தான், பாவம் உலகினுள் நுழைந்த அந்த நாளின் மாலைப்பொழுதில், தேவனாகிய தேவன் தோட்டத்திற்குள் பிரவேசித்தபோது, அவருடைய குரல் நம் முற்பிதாக்களுக்குக் கேட்டது, குற்றம் புரிந்த இருவரும் தோட்டத்திலிருந்த மரங்களுக்குள் தங்களை மறைத்துக் கொண்டார்கள். சதாகாலமும் ஒளியாய் இருக்கிற தேவனோடு உறவு கொண்டு மகிழ முடியவில்லை; அதற்குப் பதிலாக அவர்கள் அவரிடமிருந்து விலகி ஒதுங்கியிருந்தனர். காயீனும் அதே போன்றுதான் : தேவனால் கேள்வி கேட்கப்பட்ட போது "நான் உமது சமூகத்துக்கு விலகி மறைந்து பூமியில் நிலையற்று அலைகிறவனா யிருப்பேன்" (ஆதியாகமம் 4:14). பாவம் தேவனுடைய சமுகத்திலிருந்து நம்மை விலக்குகிறது. இஸ்ரவேலுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட பெரிய பாடம் இதுதான். யெகோவா தேவனின் சிங்காசனம் அவர்கள் நடுவில் இருந்தது, இருப்பினும் அதை நெருங்க முடியாது. அவர் சேரூபீன்கள் மத்தியில் மகாபரிசுத்த ஸ்தலத்தில் வாசம் பண்ணினார், பிரதான ஆசாரியன் தவிர ஒருவரும் அங்கே நுழைய முடியாது. மேலும் ஆசாரியனும் வருடத்தின் ஒரு நாளில் இரத்தத்தைச் சுமந்து கொண்டு உள்ளே செல்லவேண்டும். அந்தக் கூடாரத்திலும் ஆலயத்திலும், தேவனின் சிங்காசனத்தண்டை எவரும் நெருங்காதவாறு தொங்கிய திரைச்சீலையானது, பாவம் தேவனிடமிருந்து பிரிந்துள்ளது என்ற பயபக்தியான உண்மைக்குச் சாட்சியாக உள்ளது.பாவத்தின் சம்பளம் மரணம். இது சரீரப்பிரகாரமானது மட்டுமல்ல, ஆவிக்குரிய மரணமுமாகும், இயற்கையானது மட்டுமல்ல முக்கியமாக தண்டனைக்குரிய மரணமாகும். சரீரப்பிரகாரமான மரணம் என்பது என்ன? இது ஆன்மாவும் ஆவியும் உடலிலிருந்து பிரிவது ஆகும். எனவே தண்டனைக்குரிய மரணம் என்பது ஆன்மாவும் ஆவியும் தேவனிடமிருந்து பிரிவது ஆகும். சுகபோகமாய் வாழ்கிறவனைக் குறித்து சத்தியவார்த்தை "அவள் உயிரோடே செத்தவள்" (1 தீமோத்தேயு 5:6) என்று கூறுகிறது. கெட்ட குமாரன் என்ற அற்புதமான உவமையில் 'மரணம்' என்ற பதத்தின் அர்த்தம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கெட்டகுமாரன் திரும்பிய பிறகு அவனுடைய தகப்பன் என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்" (லூக்கா 15:24). அவன் 'தூரதேசத்தில்' இருக்கும்போது அவன் வாழாமல் இருக்கவில்லை; இல்லை, அவன் உடலளவில் மரிக்கவில்லை. ஆனால் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்தான் - அவனுடைய தகப்பனிடமிருந்து அவன் ஒதுக்கப்பட்டு, பிரிக்கப்பட்டான்.இப்பொழுது சிலுவையில் அவருடைய மக்கள் அடையவேண்டிய சம்பளத்தை அல்லது பலனைத் தாம் ஏற்றுக்கொண்டார். அவரிடம் பாவம் இருந்ததில்லை. ஏனெனில் அவர் தாம் ஒருவரே புனிதமான தேவன். "அவர் தாமே தமது சரீரத்தில் நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார்" (1 பேதுரு 2:24). அநீதியுள்ளவர்களுக்காக நீதியுள்ளவர், நம் இடத்தை எடுத்துக்கொண்டு துயருற்றார். நம்முடைய சமாதானத்திற்காக, அவர் தண்டனையை சுமந்தார். பாவத்தின் சம்பளமாக நமக்கு வரவேண்டிய கஷ்டங்கள், தண்டனை மற்றும் மரணம் அனைத்தையும் தாமே ஏற்றுக்கொண்டார். சரீரப்பிரகாரமான கஷ்டங்களை மாத்திரமல்ல பாவத்தின் தண்டனையானப் பலனையும் ஏற்றுக்கொண்டார். நாம் ஏற்கனவே கூறியபடி, இது தேவனிடமிருந்து பிரிப்பது ஆகும். எனவே இரட்சகர் இவ்வாறு சத்தமிட்டார். “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" இறுதியில் குற்ற உணர்வற்ற இருதயமுள்ளோரின் நிலை இவ்வாறாகத் தான் இருக்கும். வழிதவறியவர்களுக்கு இவ்வாறு பயங்கரமான அழிவு காத்திருக்கிறது. "அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும் அவ ருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்" (2 தெசலோனிக்கேயர் 1:10). எல்லா நன்மைகளுக்கும் ஊற்றும் மேலும் அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் வழியாகவும் உள்ள தேவனிடமிருந்து நித்தியகாலமாகப் பிரிந்திருப்பார்கள். "சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என்று தீயவர்களை நோக்கி கிறிஸ்து கூறுவார். அவர் சமுகத்திலிருந்து வெளியேற்றப்படுவது, தேவனை விட்டு நித்தியமாய் அகற்றப்படுவதே சபிக்கப்பட்டவர்களுக்குக் காத்திருக்கிறது. ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டிராதவன், முடிவில்லா குடியிருப்பாகிய அக்கினிக்கடலிலே தள்ளப்படுவான். இதுவே இரண்டாம் மரணம் (வெளிப்படுத்தல் 20:14). வாழ்க்கை முடிவுறுவது மட்டுமல்ல, ஜீவனுள்ள தேவனிடமிருந்து முடிவில்லாப் பிரிவு ஏற்பட்டுவிடுகிறது. பாவிகளின் இடத்தில் கிறிஸ்து சிலுவையில் மூன்று மணிநேரம் தொங்கியபோது தேவனையற்ற பிரிவுதான் சம்பவித்தது. சிலுவையில் கிறிஸ்து நம் பாவங்களின் சம்பளத்தைப் பெற்றார். "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?"
2 இங்கே நாம் தேவனின் முழுமையான புனிதத் தன்மையினையும் நிலையான நீதியையும் காண்கிறோம்.
கல்வாரியின் சோகத்தை நாம் குறைந்தது நான்கு நிலைகளிலிருந்து உற்று நோக்கவேண்டும். சிலுவையில் மனிதன் ஒரு வேலையைச் செய்தான் பூரணரான ஒருவரைத் தனது "கொடிய கைகளால்" சிலுவை மரத்தில் ஆணியிலறைந்ததன் மூலம் தனது சீர்கேட்டின் உச்சத்தை வெளிப்படுத் தினான். சிலுவையில் பிசாசானவன் ஒரு வேலையைச் செய்தான் -அவருடைய குதிங்காலை நசுக்கியதின் மூலம் ஸ்திரீயின் வித்திற்கு விரோதமாகத் தனக்கிருந்த தீராத விரோதத்தை வெளிப்படுத்தினான். சிலுவையில் ஆண்டவராகிய இயேசு ஒரு வேலையைச் செய்தார் - நம்மை தேவனிடம் கூட்டிச் சேர்ப்பதற்காய், நீதியுள்ளவர் அநீதியுள்ளவர்களுக்காய் மரித்தார். சிலுவையில் தேவன் ஒருவேலை செய்தார் - அவர் தமது புனிதத்தை வெளிப்படுத்தி, நமக்காகப் பாவமாக்கப்பட்டவர் மீது தமது கடுங்கோபத்தை ஊற்றியதின் மூலம், தமது நீதியை நிலைப்படுத்தினார்.ஆண்டவரின் கறைபடாத புனிதத்தைப் பற்றி மனிதனால் எவ்வாறு எழுதமுடியும் அல்லது எழுதுவதற்குத் தகுதி பெற முடியும்! சாவுக்கேதுவான மனிதன் அவரைப் பார்த்து உயிருடன் இருக்க முடியாத அளவுக்கு அவர் பரிசுத்தர். அவருடைய பார்வையில் பரலோகம்கூட சுத்தமில்லாத அளவுக்கு அவர் பரிசுத்தர். சேராபீன் அவருக்கு முன்பாக முகத்தை மூடியிருக்கும் அளவுக்கு அவர் பரிசுத்தர். ஆபிரகாம் அவருக்கு முன்பாக நின்றபொழுது, "இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன்" (ஆதியாகமம் 18:27) என்று கூறிய அளவுக்கு அவர் பரிசுத்தர். யோபு அவர் சமூகத்திற்கு வந்த பொழுது, "நான் என்னை அருவருக்கிறேன்" (யோபு 42:6) என்று கூறும் அளவுக்கு அவர் பரிசுத்தர். ஏசாயா அவருடைய மகிமைக்காட்சியைக் கண்ட பொழுது, "ஐயோ! நான் அதமானேன்... சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே" என்று அதிசயிக்கும் அளவுக்கு அவர் பரிசுத்தர், தானியேல் முன் தேவன் காட்சியளித்த போது, "என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப் போயிற்று; திடனற்றுப் போனேன்" என்று அறிவித்த அளவுக்கு அவர் பரிசுத்தர். இங்கே நமக்குக் கூறப்பட்டது. போல், "தீமையைப் பார்க்க மாட்டாத சுத்தக் கண்ணனே, அநியாயத்தை நோக்கிக் கொண்டிருக்க மாட்டீரே” (ஆபகூக் 1:13) என்ற அளவுக்கு அவர் பரிசுத்தர். நம் இரட்கர் நம் பாவங்களைச் சுமந்து கொண்டிருந்ததால், மும்மடங்கு, பரிசுத்த தேவன், அவரைப் பார்க்காது, தனது முகத்தை விலக்கி அவரைக் கைவிட்டார். நமக்குப் பதிலாக, நம்முடைய பாவங்களும் அக்கிரமங்களும் கிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்டதால், நம் மீறுதல்கள் மீது தேவகோபம் இறங்கியது. "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" சிலுவையைச் சுற்றி இருந்தவர்கள் எவரும் பதிலளிக்க முடியாத கேள்விதான் அந்தக் கேள்வி. அந்த நேரத்தில் ஒரு அப்போஸ்தலன்கூட பதில் கூறியிருக்க முடியாது. ஆம், பரலோகத்திலிருக்கிற தேவதூதர்கள் கூட பதிலளிக்க இயலாமல் திகைக்க வைத்த கேள்வி அது. ஆனால் நம் ஆண்டவராகிய கிறிஸ்து அதற்கு பதிலளித்தார், அவருடைய பதில் சங்கீதம் 22 இல் உள்ளது. அந்த சங்கீதம் அற்புதமாக அவருடைய பாடுகளைப் பற்றிய தீர்க்கதரிசனமான முன்னறிவிப்பைக் கொடுத்துள்ளது. அந்த சங்கீதம், ஆண்டவர் சிலுவையில் மொழிந்த நான்காவது வார்த்தையோடு ஆரம்பித்து, அதே அங்கலாய்ப்பின் குரல் மூன்றாம் வசனம் வரை தொடர்கிறது, 3 ஆம் வசனத்தில் "இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்" என்று கூறுவதைக் காண்கிறோம். இது அநீதி என்று யாரையும் புகார் கூறவில்லை. அதற்குப் பதிலாக தேவன் நீதியுள்ளவர் என்று ஒப்புக் கொள்கிறார் - நீரே பரிசுத்தர், நான் உத்தரவாதமாகவுள்ள எல்லாக் கடனையும் என் கையில் வாங்குவதில் நீர் நீதியுள்ளவர்; என் ஜனங்கள் பதிலளிக்க வேண்டிய எல்லாப் பாவங்களையும் நான் சுமந்துள்ளேன். எனவே உம்முடைய எச்சரிக்கையின் கரத்திலிருந்து வரும் இந்த பலத்த அடி சரியானதே என்று மெய்ப்பிக்கிறேன். நீரே பரிசுத்தர்: நீர் தீர்ப்பளிக்கும் போது நீர் தெளிவானவர்.சிலுவையில், எங்கும் இல்லாத அளவுக்கு பாவத்தின் முடிவில்லா வெறுப்புணர்வையும், அதன் தண்டனையில் தேவனுடைய நீதியையும் காண்கிறோம். முற்காலத்தில் உலகம் தண்ணீரால் மூழ்கடிக்கப்பட்டதா? சோதோம் கொமோரா வானத்திலிருந்து வந்த கந்தகத்தாலும் அக்கினியாலும் அழிக்கப்பட்டதா? எகிப்தியருக்கு கொள்ளை நோய் அனுப்பப்பட்டதா? பார்வோனும் அவன் சேனையும் சிவந்த சமுத்திரத்தில் மூழ்கடிக்கப்பட்டனரா? இவையெல்லாவற்றிலும் பாவத்தின் தீயத்தன்மை யையும் தேவனின் வெறுப்பையும் காண்கிறோம். ஆனால் அதைவிட அதிகமாக இங்கே கிறிஸ்து தேவனால் கைவிடப்பட்ட நிலையைக் காண்கிறோம். கொல்கொதாவிற்குச் சென்று பார்த்தால், யெகோவாவின் மைந்தன், அவருடைய தகப்பனின் கடுங்கோபமாகிய பாத்திரத்தைக் குடிப்பதையும், தெய்வீக நீதி என்ற கூர்வாளால் அடிக்கப்படுவதையும், தேவனால் புதுப்பிக்கப்படுவதையும், மரிக்கும் வரை துயரப்படுவதையும், அவர் சிலுவையில் பாவிகளின் இடத்தில் தொங்குகையில், தன் சொந்தக் குமாரனையும் கடுமையாக நடத்தாமல் விட்டு வைக்கவில்லை என்பதையும் காண்கிறோம். இயற்கை இந்த பயங்கரமான சோகத்தை எவ்வாறு முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கிறது என்பதைக் காண்கிறோம் - அந்த நிலத்தின் உருவமைப்பு ஒரு மண்டையோடு போல் காட்சியளிக்கிறது. கொட்டப்பட்ட கடும் சினத்தின் பெரும் சுமையால் அந்த பூமி அடியில் கொந்தளித்து நடுங்குவதைப் பாருங்கள். வானத்தில் சூரியன், அப்படிப்பட்ட கொடிய காட்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொள்வதால் பூமியெங்கும் இருளால் மூடப்பட்டிருப்பதைப் பாருங்கள். இங்கே பாவத்திற்குப் பழிவாங்கும் தேவனின் பயங்கரமான கோபத்தைக் காண்கிறோம். பழைய ஏற்பாடு காலத்தின் தெய்வீக நியாயத்தீர்ப்பில் கட்டவிழ்த்து விடப்பட்ட இடியுடன் கூடிய மின்னல், பெரும் துன்பத்தின் இணையற்ற பயத்தால் கிறிஸ்தவ சமயத்தைக் கைவிட்டவர்கள் மேல் வரும் கோபாக்கினை, அக்கினிக் கடலில் தள்ளப்பட்டவர்களின் அழுகையும் புலம்பலும் பற்கடிப்பும் ஆகிய இவைகளே தேவனின் அசைக்கமுடியாத தீர்ப்பு, சொல்லில் அடங்காத பரிசுத்தம், பாவத்தின் மீது முடிவில்லா வெறுப்பு ஆகியவை சிலுவையில் உள்ள தன் சொந்தக் குமாரனின் மீது பற்றி எரிந்த தேவனின் கடும் சினத்திற்கு உதாரணங்களாகக் காட்டப்பட்டு உணர்த்த முடியாது. ஏனென்றால் அவர் பாவத்தின் பயங்கரமான கொடிய தீர்ப்பைச் சகித்துக் கொண்டிருந்தார்.அவர் தேவனால் கைவிடப்பட்டார். தாம் ஒருவரே பரிசுத்தரானவர். பாவத்தின் மீதுள்ள எல்லையில்லா வெறுப்புடையவர், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல (1 யோவான் 3:3) பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2 கொரிந்தியர் 5:21). எனவே அவர் உக்கிரப் புயலின் முன்பு தலைகுனிந்தார். இதில் எவராலும் எண்ணமுடியாத பெரும் திரள்கூட்ட மக்களின் எண்ணிலடங்கா பாவங்களின் மீதுள்ள தெய்வீகக் கோபம் காட்டப்பட்டுள்ளது. இதுவே கல்வாரியின் உண்மையான விளக்கம் ஆகும். தன் சொந்தக்குமாரனாகிய கிறிஸ்து மீது பாவம் காணப்பட்டாலும், தேவனின் புனிதமான பண்பு, பாவத்தை நியாயந்தீர்ப்பதை விட வேறு எதுவும் செய்ய முடியாது. சிலுவையில் தேவனின் நியாயத்தீர்ப்பு மன நிறைவளிக்கிறதாகவும் அவருடைய தூய்மை மெய்ப்பித்துக் காட்டப்பட்டதாயுமிருக்கிறது. "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?"
3 இங்கே நாம் கெத்செமெனேயின் விளக்கத்தைக் காண்கிறோம்.
நம் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகர் சிலுவையருகில் சென்றபோது, தொடுவானம் மேலும் மேலும் இருளடைந்தது. குழந்தைப்பருவத்தில் அவர் மனிதனிடமிருந்து துன்பப்பட்டிருக்கிறார், பொது ஊழியம் ஆரம்பித்த திலிருந்து சாத்தானிடமிருந்து துன்பப்பட்டிருக்கிறார்; ஆனால் சிலுவையில் தேவனின் கையில் துன்பப்பட வேண்டியிருந்தது. யெகோவாவே, நம் இரட்சகரை அடித்துக் காயம் உண்டாக்க வேண்டியிருந்தது இதுதான் எல்லாவற்றையும் இருளடையச் செய்தது. கெத்செமெனேயில் அவர், சிலுவையின் மும்மணி நேரத்திற்காக மனச்சோர்வுடன் நுழைந்தார். அதனால்தான் அந்த மூன்று சீஷர்களையும் தோட்டத்தின் வெளியில் விட்டு வந்தார், ஏனென்றால் தன்னைப் பிழிந்தெடுக்கும் இடத்திற்கு தனிமையாக நடக்க வேண்டியிருந்தது. "என் ஆத்துமா அளவிலடங்காத துக்கம் கொண்டிருக்கிறது" என்று சத்தமிட்டார். இது தன்னுடைய கொடூரச் சாவை அறிந்து பயத்தினால் பின்னுக்கு விலகுவது அல்ல. தான் நன்கு அறிந்த தன் நண்பன் தன்னைக் காட்டிக்கொடுத்த எண்ணமல்ல, தேவையின் உச்சக்கட்டத்தில் அவருடைய பிரியமான சீஷர்கள் அவரைக் கைவிட்டு ஓடியதுமல்ல, எதிர்பார்த்த ஏளனப் பேச்சுகளும் வெறுப்பூட்டும் வகையில் திட்டுதலும் அல்ல, உடையைக் களைந்ததோ அல்லது ஆணிகளோ அவரது ஆத்துமாவை மேற்கொள்ளவில்லை. இல்லை இந்தக் கூர்மையான மனவேதனை, அவர் சிலுவையில் பாவத்தைச் சுமந்து சகிக்கும் வேதனை யோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றுமில்லை என்றே கூறலாம். "அப்பொழுது இயேசு அவர்களோடே கெத்சமெனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி, நான் அங்கே போய் ஜெபம் பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டு போய் துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங் கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம் போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்" (மத்தேயு 26:36-39). இங்கே அவர் இருண்ட மேகங்கள் மேலே எழும்புவதைக் காண்கிறார். பயங்கரமான புயல் வருவதைக் காண்கிறார். அந்த இருண்ட மும்மணி நேரத்தின் உணர்த்தமுடியாத பயங் கரத்தை முன்கூட்டியே எண்ணிப் பார்க்கிறார். "என் ஆத்துமா அளவிலடங்காத துக்கங் கொண்டிருக்கிறது" என்று சத்தமிட்டார். அந்த கிரேக்க பதம் இன்னமும் அழுத்தம் நிறைந்ததாயும் இருக்கிறது. அவர் துக்கத்தால் சூழப்பட்டிருந்தார். எதிர்பார்த்த தேவனின் கடுங்கோபத்தில் மூழ்கியிருந்தார். அவருடைய அனைத்து வலிமையும் வேதனையால் நசுக்கப்பட்டிருந்தது. புனித மாற்கு மற்றொரு வகையாக வெளிப்படுத்துகிறார். "அவர் திகிலடையும்" (மாற்கு 14:33) ஒருவரைப் பேரச்சமூட்டி, புல்லரிக்கச் செய்யும் அளவிற்குத் திகிலின் உச்சநிலை முதன்மையாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. மாற்கு, சுவிசேஷம் மேலும் "மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்" என்பதில், அவருடைய ஆவி வேதனையில் முற்றிலும் மூழ்கியதைக் குறிக்கிறது. அந்த பயங்கரமான கசப்பான பாத்திரத்தைப் பார்த்து அவருடைய இதயம் மெழுகு போல் உருகியது. ஆனால் லூக்கா சுவிசேஷகன், எல்லாவற்றையும்விட மிக்க வலிமை வாய்ந்த சொற்களைப் பயன்படுத்துகிறார்: "அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது" (லூக்கா 22:44). "வியாகுலம்" என்ற வார்த்தைக்கு கிரேக்க பதம் 'போராட்டத்தில் ஈடுபடு' என்பதாகும். முன்னதாக மனிதரின் எதிர்ப்புகளோடு போராடினார். பிசாசின் எதிர்ப்புகளோடு போராடினார். ஆனால் இப்பொழுது பிதா தனக்குக் குடிக்கக் கொடுத்த பாத்திரத்தை எதிர்நோக்கி இருக்கிறார். அந்தப் பாத்திரம், பாவத்தை வெறுக்கும் பிதாவின், கடுங்கோபத்தை உள்ளடக்கியிருந்தது. "உமக்குச் சித்தமானால், இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்" என்று கூறியதன் அர்த்தத்தை விளக்குகிறது. அந்த "பாத்திரம்" என்பது ஐக்கியத்தின் அடையாளமாகும். அவருடைய கோபத்தில் ஐக்கியம் இருக்க முடியாது. ஆனால் அவருடைய அன்பில் மட்டுமே ஐக்கியம் இருக்க முடியும், எப்படியிருப்பினும், பிதாவோடு உள்ள ஐக்கியம் துண்டிக்கப்படுமோ என்று எண்ணி, மேலும் கூறுகிறார், "ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின் படியே ஆகக்கடவது” இருந்தபோதிலும் அவருடைய வியாகுலம் மிகப்பெரியதாக இருக்கிறது. "அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது" லூக்கா 22:44. நம் இரட்சகர் இரத்தத் துளிகளை உண்மையாகவே சிந்தினார் என்பதற்கு சந்தேகமிருக்க முடியாது என்று நாம் நினைக்கலாம். அவருடைய வியர்வை இரத்தத்தைப் போன்றிருந்தது ஆனால் உண்மையில் அதுவல்ல என்று கூறுவதில் அர்த்தமில்லை; இதில் 'இரத்தம்' என்ற வார்த்தையில் அழுத்தம் இருப்பதாகத் தோன்றுகிறது. சாதாரணமாக தண்ணீர் முத்துக்களைப் போன்று இரத்தம் சிந்தினார். இந்த பயங்கரமும் முன்னோடியுமான துயரக் காட்சிக்குப் பொருத்தமான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 'கெத்சமெனே' ஆ! இந்தப் பெயர் உம்மைக் காட்டிக் கொடுக்கிறதே! ஒலிவ எண்ணெய் பிழியும் இடம் என்பது இதன் அர்த்தமாகும். இந்த இடத்தில் தான் நம் இரட்சகரின் ஜீவஇரத்தம் சொட்டு சொட்டாகப் பிழியப்பட்டது. இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சரியாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது உண்மையாகவே சிலுவைக்கேற்ற ஒரு பாதப்படி, நிகரற்ற, விவரிக்கமுடியாத வியாகுலத்தின் பாதப்படி. கெத்சமெனேயில் அவருக்கு அளிக்கப்பட்ட பாத்திரம் சிலுவையில் கிறிஸ்துவால் குடித்து முடிக்கப்பட்டது.
4.இங்கு இரட்சகருக்கு ஆண்டவர் மீதுள்ள அசையாத நம்பிக்கையைப் பார்க்கிறோம்.
தேவனால் நம் மீட்பர் கைவிடப்படும் காட்சி, ஒரு அச்சவுணர்வை எழுப்பக்கூடிய நிகழ்வாகவும், தம் விசுவாசத்தைத் தவிரத் தனக்கு வேறெந்த ஆதரவுமில்லாத அனுபவமாகவும் இருக்கிறது. சிலுவை மீது நமது இரட்சகர் நிலை ஒரு தன்னிகரற்ற தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அவர் பொது ஊழியத்தின் போது பேசிய வார்த்தைகளை சிலுவையில் கூறிய வார்த்தைகளோடு வேறுபடுத்திப் பார்க்கும்போது இது தெளிவாகப் புரியும். முன்பு அவர் கூறியது, “நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்" (யோவான் 11:42). தற்போது அவரது கூக்குரல், "என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன். உத்தரவு கொடீர்” (சங்.22:2) முன்பு அவர் கூறியது, “என்னை அனுப்பினவர் என்னு டனேகூட இருக்கிறார்...அவர் என்னைத் தனியேயிருக்க விடவில்லை” (யோவா.8:29). தற்போது அவரது கதறல், “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” பிதாவின் உடன்படிக்கை மற்றும் வாக்குத்தத் தத்தைக் தவிர அவர் சார்ந்து கொள்ளுவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அவரது வியாகுலத்தின் கதறலில் அவர் பிதா வெளிப்படுத்தப்படுகிறார். இது வேதனையின் கூக்குரலேயன்றி அவநம்பிக்கையின் கூக்குரல் அல்ல. தேவன் அவரை விட்டு விலகிச் சென்றார் ஆனால் அவருடைய ஆத்துமா இன்னும் தேவனை இறுகப்பற்றிக் கொண்டிருக்கிறதை நாம் கவனித்துப் பார்ப்போம். இருளின் மத்தியிலும் அவரது விசுவாசம் ஆண்டவரையே முற்றிலும் சார்ந்து வெற்றி சிறந்தது. "என் தேவனே” அவர் கூறுகிறார் "என் தேவனே "நீர் தங்கியிருப்பவர் மேல் என்றும் நீங்காத நித்திய பெலன் உண்டு. நீர் இதுவரைக்கும் என் மனிதத்தன்மைக்கு ஆதரவு அளித்து, உமது வாக்கின்படி அடியேனைத் தாங்கினீர். இப்போதும் என் தேவனே எனக்குத் தூரமாகாதேயும். நான் உம்மையே சார்ந்திருக்கிறேன். காணக்கூடியதும், உணரக்கூடியதுமான சகல ஆறுதலும் காணப்படாமற்போன நிலையில் இரட்சகர் காணக்கூடாத விசுவாசத்தின் ஆதரவையும், அடைக்கலத்தையும் தனதாக்கிக் கொண்டார்.இருபத்தி இரண்டாம் சங்கீதத்தில் இரட்சகருக்கு ஆண்டவர் மீதுள்ள ஒரு சிறிதும் விலகாத விசுவாசம் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. இந்த மிக அருமையான சங்கீதத்தில் அவரது இருதயத்தின் ஆழம் வெளிக் கொணரப்படுகிறது. அவரைக் கேளுங்கள், "எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள். நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள். உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள். நானோ ஒரு புழு. மனுஷனல்ல: மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம் பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி; கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும். இவன் மேல் பிரியமாய் இருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள். நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர். என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடைய பேரில் நம்பிக்கையாய் இருக்கப் பண்ணினீர். கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன். நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்" (சங்கீதம் 22:4-10). அவருடைய பகைஞர் அவருக்கு விரோதமாக எழுப்ப முயன்ற முக்கிய விஷயம் கர்த்தர் பேரிலான அவரது விசுவாசம். யெகோவா மீது அவருக்குள்ள நம்பிக்கையை வைத்து அவரைக் கேலி செய்தனர் - அவர் உண்மையிலே ஆண்டவர் மேல் விசுவாசமுள்ளவராய் இருந்தாரானால் ஆண்டவர் நிச்சயமாக இவரை விடுவிப்பார். எந்தவொரு விடுதலையும் இல்லாத நிலையில் இரட்சகர் தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டிருந்தார், சிறிது நேரம் கைவிடப்பட்ட நிலையிலும் தொடர்ந்து விசுவாசித்தார். கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்ட போதே தேவன் மேல் சார்ந்திருந்த அவர் மரண நேரத்திலும் தேவன் பேரிலே சார்ந்திருப்பதைப் பார்க்கிறோம். அவர் தொடர்ந்து கூறுகிறார். "என்னை விட்டுத் தூரமாகாதேயும்: ஆபத்துக் கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது : பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டது. பீறிக் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல் என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள். தண்ணீரைப்போல ஊற்றுண்டேன். என் எலும்புகளெல்லாம் கட்டு விட்டது. என் இருதயம் மெழுகு போலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. என் பெலன் ஓட்டைப் போல் காய்ந்தது. என் நாவு மேல் வாயோடே ஒட்டிக்கொண்டது. என்னை மரணத்தூளிலே போடுகிறீர். நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது. பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்து கொண்டது. என் கைகளையும் என் கால்களையும் உருவக்குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம். அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப் போடுகிறார்கள். ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும் என் பெலனே, எனக்குச் சகாயம் பண்ணத் தீவிரித்துக் கொள்ளும். என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும் எனக்கு அருமையானதை நாய்களின் தூஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்" (சங்கீதம் 22:11-20). யோபு ஆண்டவரைக் குறித்து இவ்வாறு கூறியிருக்கிறார். "அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையா யிருப்பேன்" (யோபு 13:15). ஆண்டவருக்கு பாவத்தின் மீதிருந்தகோபம் இரட்சகர் மீது விழுந்த நேரத்திலும் அவர் தொடர்ந்து விசுவாசித்தார். ஆம் அவர் விசுவாசம் நம்புவதைக் காட்டிலும் பெரிய காரியத்தை செய்தது - வெற்றிவாகை சூடியது "என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும். நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவி கொடுத்தருளினீர்" (சங்கீதம் 22:21). எவ்வளவு மகத்துவமானதொரு மாதிரியை நம் இரட்சகர் தம் மக்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்! ஒப்பிட்டு நோக்குங்கால் ஒருவேளை சூரியன் பிரகாசிக்கிற நேரத்தில் ஆண்டவரை நம்புவது ஒரு சுலபமான காரியமா யிருக்கும். எல்லாம் இருளாய் இருக்கும் நேரமே பரீட்சிக்கப்பட வேண்டிய நேரம். செழிப்பிலும் தரித்திரத்திலும் ஆண்டவரைச் சார்ந்திராத விசுவாசம் ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விசுவாசம் அல்ல. நாம் சாகும்போது விசுவாசம் வேண்டுமென்றால் நாம் வாழ்ந்திருக்கும் போது உண்மையான விசுவாசம் தேவை. இரட்சகர், கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்ட போதே ஆண்டவர் சார்பில் விழுந்தார். முப்பத்து மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு விநாடியும் ஆண்டவர் சார்பில் விழுந்து கொண்டிருந்த அவர் மரண நேரத்திலும் இன்னும் அவர் சார்பில் விழுந்திருந்ததில் ஆச்சரியம்' ஒன்றுமில்லையே! கிறிஸ்தவ தோழர்களே, உங்களுக்கு எல்லாம் இருளாய் இருக்கலாம். ஆண்டவருடைய முகத்திலிருந்து பிரகாசிக்கும் ஒளியை இனிமேலும் காணக்கூடாதபடி இருக்கலாம். ஆண்டவரே உங்களைக் கோபத்தோடு நோக்கிப் பார்ப்பதைப் போன்று தோன்றலாம். இவை எல்லாவற்றின் மத்தியிலும், இன்னும் 'ஏலி, ஏலீ, என் தேவனே, என் தேவனே என்று கூறலாம். "என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?"
5.இங்கு நாம் இரட்சிப்பின் அடித்தளத்தைக் காண்கிறோம்.
ஆண்டவர் பரிசுத்தராய் இருப்பதால் அவரால் பாவத்தை ஏறிட்டுக்கூடப் பார்க்க முடியாது. அவர் நீதியுள்ளவர். ஆகவே பாவத்தை எங்கு கண்டாலும் அவர் நியாயந்தீர்க்கிறார். ஆனால் ஆண்டவர் அன்பின் உருவாகவும் இருக்கிறார். ஆண்டவர் இரக்கத்தில் களிகூருகிறார். ஆகவே அவருடைய அளவிலா ஞானம், நீதியைத் திருப்தியடையச் செய்து அவரது இரக்கம் குற்றவுணர்வுள்ள பாவிகளிடம் தடையில்லாமல் பாய்ந்து செல்ல ஒரு வழி வகுத்தது. இது அநீதியுள்ளவர்களுக்காக நீதியுள்ளவர் பாடுகளை அனுபவிக்கும் ஒரு பதிலாள் நிலை. இங்கு வேறு யாரும் தகுதிவுள்ளவராக இல்லாததால் ஆண்டவருடைய குமாரனே பதிலாளாகத் தெரிவு செய்யப்படுகிறார். நாகூம் தீர்க்கதரிசியால் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. "அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிர கோபத்தில் தரிப்பவன் யார்?" (நாகூம் 1:3). வணங்கப்படத்தக்கவரான நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவில் இந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்தது. அவரால் மாத்திரமே "நிற்க" முடியும். ஒருவரால் மாத்திரமே சாபத்தைச் சுமந்து, அதே நேரத்தில் அதன் மேலெழும்பி வெற்றி சிறக்க முடியும். ஒருவரால் மாத்திரமே பழிவாங்கும் உக்கிரத்தைத் தாங்கிக் கொண்டு அதே நேரத்தில் சட்டத்தின் நிலையை உயர்த்த மேன்மைப்படுத்த முடியும். ஒருவரால் மாத்திரமே சாத்தானைத் தன் குதிங்காலை நசுக்க அனுமதித்து அந்த நசுக்கப்பட்ட நேரத்தில் தானே மரணத்தின் மேல் அவனுக்கிருந்த வல்லமையை அழிக்க முடியும். ஆண்டவர் "சகாயஞ் செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான் மேல் வைத்து," (சங்கீதம் 89:19) யெகோவாவிற்கு எவ்விதத்திலும் குறைவில்லாத, அவருடைய மகிமையைப் பிரகாசிப்பிக்கிற, அவரைப் போன்ற அச்சடையாளமுள்ள ஒருவரைத் தெரிந்து கொண்டார். அந்த எல்லையில்லா அன்பு, வளைந்து கொடுக்காத நியாயம், சர்வ வல்லமை ஆகியவைகளின் ஒன்றிணைப்பு விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிப்பை சாத்தியமாக்கிற்று.சிலுவையில் நம்மெல்லாருடைய அக்கிரமமும் அவர் மேல் சுமத்தப் பட்டதால் தெய்வீக நியாயத்தீர்ப்பு அவர் மேல் விழுந்தது. ஒருவர் மேலுள்ள பாவத்தை இன்னொருவர் மேல் மாற்றும் போது அதற்கான தண்டனையும் மாற்றப்படவேண்டும். பாவமும் அதற்கான தண்டனையும் ஆண்டவராகிய இயேசுவிடம் மாற்றப்பட்டது. சிலுவையின் மீது பாவநிவிர்த்தி செய்து கொண்டிருந்தார். பாவநிவிர்த்தி முற்றிலுமாகக் கர்த்தருடைய காரியம். இது ஆண்டவருடைய பரிசுத்தத்தின் முழு எதிர்பார்த்தலுக்கு ஈடுகொடுக்கும் காரியத்தைப் பற்றியது. அவருடைய நியாயத்தின் கோரிக்கையை முழுமையாகத் திருப்திப்படுத்தும் ஒன்றாகவும் காணப்பட்டது. கிறிஸ்துவின் இரத்தம் நமக்காக மாத்திரம் சிந்தப்படவில்லை அது தேவனுக்காகவும் சிந்தப்பட்டது. "கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனை யான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து" (எபேசியர் 5:2) என்ற வசனம் "தேவனுக்குப் பலியாக ஒப்புக்கொடுத்ததை வலியுறுத்துகிறது. அந்த மறக்க முடியாத இரவில் எகிப்தில் ஆசரிக்கப்பட்ட பஸ்கா இதற்கு ஓர் முன்னடையாளமாக இருந்தது. ஆட்டுக்குட்டியின் இரத்தம் ஆண்டவரின் கண்களுக்குத் தென்படும் இடத்தில் இருக்க வேண்டும். "அந்த இரத்தத்தை நான் கண்டு உங்களைக் கடந்து போவேன்!" (யாத்.12:13). கிறிஸ்துவின் சிலுவை மரணம் ஒரு சாபத்தின் மரணம். "மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார்" (கலாத்தியர் 3:13). கர்த்தரிடத்திலிருந்து முற்றிலுமாகப் பிரிக்கப்படுதலே "சாபம்” கிறிஸ்து வல்லமையோடு வெளிப்படும் நாளில் தனது இடது பக்கத்திலிருப்பவர்களிடத்தில் இன்னும் பேசுவதிலிருந்து இது தெளிவாகிறது. "சபிக்கப்பட்டவர்களே என்னை விட்டுப்... போங்கள்" என்று சொல்லுவார். கர்த்தருடைய சமுகத்திலும் மகிமையிலுமிருந்து நாடு கடத்தலைப் போன்ற அனுபவமே சாபமாகும். இது பழைய ஏற்பாட்டின் அநேக மாதிரிகளின் பொருளை விளக்குகிறது. வருஷத்திற்கொருமுறை, பாவ நிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலி செலுத்தப்படும் போது காளையைக் கொன்று அதன் இரத்தத்தைக் கிருபாசனத்தின் மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து, அதைப் பாளையத்திற்குப் புறம்பே கொண்டு சென்றனர் (லேவிராகமம் 16:27). அங்கே காளையின் உடல் முழுவதுமாக எரிக்கப்பட்டது. பாளையத்தின் நடுவில் ஆண்டவருடைய வாசஸ்தலம் இருந்தது. பாளையத்திற்குப் புறம்பே கொண்டு செல்லப்படுவது ஆண்டவரது பிரசன்னத்திலிருந்து விலக்கப்படுவதாகும். ஒரு குஷ்டரோகியின் நிலையும் இதுதான். "அந்த வியாதி அவனில் இருக்கும் நாள் வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன். அவன் தீட்டுள்ளவனே. ஆகவே அவன் தனியே குடியிருக்க வேண்டும். அவன் குடியிருப்புப் பாளையத்திற்குப் புறம்பே இருக்கக்கடவது" (லேவிராகமம் 13:46). அதேனெனில் ஒரு குஷ்டரோகி எல்லாப்பாவத்தின் ஒரு முழு உருவமாகக் கருதப்பட்டான். 'வெண்கல சர்ப்பத்தின்' ஒரு மாதிரிப் படிவமூலமாகவும் இதைப் பார்க்கிறோம். ஏன் ஆண்டவர் மோசேயிடம் கம்பத்தின் மேல் 'சர்ப்பத்தை' வைத்து சர்ப்பத்தால் கடிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களை அதை நோக்கிப் பார்க்கும்படி சொன்னார்? கிறிஸ்துவை, உன்னதமான பரிசுத்த தேவனை ஒரு சர்ப்பத்தின் மாதிரியாகக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஆம், அது அவர் "நமக்காகச் சாபமானதைத்" தெளிவு படுத்துகிறது. ஏனெனில் சர்ப்பம் சாபத்திற்கு அடையாளமாகக் காட்டப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் நிழலாட்டமாய் வந்த காரியங்களை தற்போது கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். தேவனின் பிரசன்னத்தி லிருந்து பிரிக்கப்பட்டவராய் "நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்' (எபிசியர் 13:12) என்று பார்க்கிறோம். அவர் ஒரு "குஷ்டரோகியைப்" போல் பாவத்தின் உருவானார். ஒரு "வெண்கல சர்ப்பத்தைப்" போன்று நமக்காகச் சாபமானார். முள்முடியின் ஆழமான அர்த்தத்தைப் பார்க்கிறோம் - முட்கள் சாபத்தின் அடையாளம். தலையில் முள்முடி சூட்டப்பட்டவராய் உயர்த்தப்பட்ட காட்சி அவர் நம் சாபத்தை சுமப்பதைக் காட்டுகிறது. தேசம் மரணப் போர்வை போர்த்தப்பட்டதாய் காரிருளில் இருந்த அந்த மூன்று மணிநேரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது இயற்கைக் கப்பாற்பட்ட ஒரு அந்தகாரம். இது இரவு நேரம் அல்ல. உச்சி வானத்தில் சூரியன் இருக்கிறது. திரு. ஸ்பர்ஜன் சொன்னது போல இது "ஒரு நடுப்பகலின் நடு இரவு "இது ஒரு கிரகணமும் இல்லை. ஆற்றல் மிக்க வான்கணிப்பாளர் கூற்றுப்படி இயேசு சிலுவையிலறையப்பட்ட அந்த நேரத்தில் சந்திரன், சூரியனை விட்டு அதிக தொலைவில் இருந்தது. காரிருள் அந்த வேதனைக் குரலுக்குப் பொருளாய் அமைவது போல் கிறிஸ்துவின் கதறுதல் அந்தக் காரிருளுக்கு விளக்கம் கொடுக்கிறது. இந்தஇருளுக்கு விளக்கம் அளித்து இந்தக் கூக்குரலை விவரித்துக் கூறும் ஒரு காரியத்தைக் கவனிப்போம் - கிறிஸ்து பாவிகள் மற்றும் இழந்து போனவர்கள் இடத்தைத் தனதாக்கிக் கொண்டார். பாவத்தைச் சுமக்கும் இடத்தில் இருந்தார். மக்களுக்கு வரவேண்டிய நியாயத்தீர்ப்பைத் தான் சகித்துக் கொண்டு பாவமறியாத அவர் நமக்காகப் பாவமானார். அங்கு என்ன நடந்தது என்பதை நாம் தெரிந்து கொள்வதற்காகவே அந்தக் கதறல் வெளிப்பட்டது. இது பாவநிவராணத்தின் வெளிப்பாடு எனக்கூறலாம். ஏனெனில் மூன்று (மூன்று மணிநேரம்) என்பது எப்பொழுதும் வெளிப்பாட்டின் எண்ணாகக் கருதப்படுகிறது. தேவன் வெளிச்சமா யிருக்கிறார். 'இருள்' என்பது அவர் விலகிச் சென்றுவிட்டார் என்பதற்கான இயற்கையான ஒரு அடையாளம். மீட்பர் பாவிகளின் பாவத்தோடு தனித்திருக்கும்படி விடப்பட்டார்: இதுவே மூன்று மணி அந்தகாரத்திற்கான விளக்கம். அக்கினிக்கடலில், சபிக்கப்பட்டவர்கள் மீது இரட்டிப்பான துன்பங்களான, உணர்ச்சியின் வேதனை மற்றும் இழப்பின் வேதனை செயல்படுவது போல கிறிஸ்துவும், தேவனுடைய உக்கிரம் அவர் மேல் ஊற்றப்பட்டதினிமித்தமும், அவருடைய பிரசன்னமும் ஐக்கியமும் விலக்கப்பட்டதினிமித்தமும் தாங்கொணா துயரம் அடைந்தார்.ஒரு விசுவாசிக்கு சிலுவையின் மேன்மையென்ன என்பதை கலாத்தியர் 2:20 விவரித்துக் காண்பிக்கிறது. "கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன்." அவர் நமக்குப் பதிலாளரானார். தேவன் நம்மை இரட்சகரோடு ஒன்றாக இணைத்தார். அவர் மரணம் என்னுடையதாயிற்று. என்னுடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு,என்னுடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். பாவம் தள்ளிவிடப்பட வில்லை. ஆனால் தூக்கி எறியப்பட்டது. வேறொருவர் கூறுவது போல, "ஆண்டவர் பாவத்தைத் தன் குமாரன் மீது வைத்து நியாயம் தீர்த்ததால் தற்போது விசுவாசிக்கும் பாவியைத் தன் குமாரனில் ஏற்றுக்கொள்கிறார்." நமது "ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது" (கொலோசியர் 3:3). நான் கிறிஸ்துவுடனே அடைக்கப்பட்டுள்ளேன். ஏனெனில் கிறிஸ்து ஆண்டவரிடமிருந்து அடைக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டார்.அவர் நமக்காகத் துக்கப்பட்டுத் தம் ஜனங்களை மீட்டார்.நாம் பெறவேண்டிய சாபம் அவர் தலைமேல் வீழ்ந்தது.அவர் புனிதத்தலை கவிழச்செய்த கோரப்புயல் முற்றிலும் ஓய்ந்ததுஅதன் விளைவாக நான் பெற்றது தெய்வீக அமைதி. அவர் தலை ஏற்றதுமகிமையின் கிரீடம்இங்கு இரட்சிப்பின் அடிப்படித் தன்மையைக் காண்கிறோம். நமது பாவங்கள் ஏற்கப்பட்டாயிற்று. நமக்கு விரோதமான தேவனின் எல்லாக் கோரிக்கைகளும் ஈடுகொடுக்கப்பட்டாயிற்று. நாம் அவர் பிரசன்னத்தில் எப்போதும் மகிழ்ந்திருக்க சிறிது நேரம் கிறிஸ்து கைவிடப்பட்டார். "என் தேவனே! என் தேவனே! ஏனென்னைக் கைவிட்டீர்?" ஒவ்வொரு விசுவாசமுள்ள ஆத்துமாவும் இதற்குப் பதில் கூறட்டும். நான் ஒளியில் நடக்கும்படி அவர் பயங்கரமான இருளுக்குள் பிரவேசித்தார். நாம் மகிழ்ச்சியின் பாத்திரத்தில் பானம் பண்ணுமாறு அவர் வியாகுலத்தின் பாத்திரத்தில் பானம் பண்ணினார். நான் மன்னிக்கப்படும்படியாக அவர் கைவிடப்பட்டார். "என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?"
6.இங்கு கிறிஸ்து நம்பேரில் கொண்டுள்ள அன்பின் மிக உன்னத சான்றினைக் காண்கிறோம்.
"ஒருவன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை" (யோவான் 15:13). ஆனால் அவர் "ஜீவனைக் கொடுக்கும் அன்பு" எவையெல்லாம் உள்ளடக்கியது என்று அளக்க முடிந்தால் மட்டுமே கிறிஸ்துவின் அன்பை மதிப்பீடு செய்ய இயலும். சரீர மரணத்தின் மூலம் சொல்லமுடியாத நிந்தை மற்றும் விவரிக்க முடியாத வேதனை அடைந்தபோதிலும், இதைக்காட்டிலும் அதிக முக்கியத்துவம் இதில் அடங்கியிருக்கிறது. அவர் நமது இடத்தை ஏற்று நமக்காகப் பாவமானார் என்பதே இதன் பொருள். இதன் உட்கருத்து என்ன என்பதை அவர் ஆள்தத்துவத்தின் வெளிச்சத்தில் மட்டுமே தீர்மானிக்க முடியும் மிகவும் கனம் பொருந்திய சீரிய நல்லொழுக்கமுள்ள ஒரு பெண் சில காலம் மட்டும் இழிவான அசுத்தமான மனிதரோடு இணைந்து இருப்பதைத் தாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்தப்படும் காட்சியை நம் கண்முன் நிறுத்துவோம். அக்கிரமக்காரர்களின் குகையில் முரட்டுத்தனமான நாகரீகமற்ற ஆண்களாலும் பெண்களாலும் சூழப்பட்டு தப்பிச் செல்ல முடியாதபடி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அவளைக் கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் அசுத்த உதடுகளிலிருந்து வரும் சூளுரைகள், குடிகாரரின் வெறியாட்டம் மற்றும் அந்த ஆபாச சூழ்நிலைகள் மீதான அவள் அரு வருப்பை மதிப்பீடு செய்ய முடியுமா? அக்கிரமத்தின் மத்தியில் ஒரு தூய்மை யான பெண்மணி ஆத்துமாவில் எவ்வளவு வேதனை அடைந்திருப்பாள் என்றதொரு கருத்துக்கணிப்புச் செய்ய முடியுமா? ஆனால் இந்த எடுத்துக்காட்டு அநேகக்குறைபாடுகள் கொண்டது. ஏனென்றால் ஒரு பெண்ணும் பரிபூரண தூய்மை, மேன்மை, நல்லொழுக்கம் மற்றும் களங்கமற்ற நன்னடத்தை உடையவளாய் இருக்க முடியாது. தூய்மை என்பது பாவமில்லாத நிலை - ஆவிக்குரிய பரிசுத்தம். கிறிஸ்து தூய்மையானவர்-பரிபூரண தூய்மையானவர். அவர் ஒருவரே பரிசுத்தர். பாவத்தின் மீது எல்லையற்ற அருவருப்பு இருந்தது. அதை வெறுத்தார். அவருடைய பரிசுத்த ஆத்துமா வெறுப்பினால் பின்னிட்டது. ஆனால் நம்மெல்லாருடைய அக்கிரமும் அவர் மீது சுமத்தப்பட்டது. அந்த இழிவான பாவம் பயங்கரமான சர்ப்பத்தைப் போன்று அவரைச் சுற்றிச் சூழ்ந்து இறுகப் பற்றிக் கொண்டது. ஆனாலும் அவர் நமக்காகப் பாடுகளைச் சகிக்க சித்தங்கொண்டார்.ஏன்? அவர் நம்மீது அன்பு கூர்ந்ததால்! "இவ்வுலகத்தில் இருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே, முடிவு பரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்" (யோவான் 13:1). இன்னும் பார்ப்போமானால், கர்த்தரால் அவர் மீது ஊற்றப்பட்ட உக்கிரத்தை அளக்க முடியுமானால் மட்டுமே நம்மேல் இருக்கும் கிறிஸ்துவின் அன்பின் மேன்மையை மதிப்பீடு செய்ய இயலும். இதிலிருந்து மட்டுமே அவர் ஆத்துமா பின்னிழுக்கப்பட்டது. இது அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, மற்றும் இதற்கு என்ன விலைக்கிரயம் செலுத்த வேண்டியிருந்தது என்பதைத் தானாகவே வேதனையோடு வெளிப்படுத்தும் மற்றும் கர்த்தரிடத்தில் ஏறெடுக்கும் விண்ணப்பங்களின் சங்கீதங் கனிலிருந்து ஓரளவு கற்றுக்கொள்ள நாம் அனுமதிக்கப்படுகிறோம். எதிர்பார்த்தலோடு பேசும் வண்ணமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஆவியிலே தாவீதின் மூலமாகப் பின்வருமாறு கதறுகிறார். "தேவனே என்னை இரட்சியும்: வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகி வருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்கநிலையில்லை நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன். வெள்ளங்கள் என்மேல் புரண்டு போகிறது. நாள் கூப்பிடுகிறதினால் இளைத்தேன் என் தொண்டை வறண்டு போயிற்று. என் தேவனுக்கு நான் காத்திருக்கையால் என் கண்கள் பூத்தப் போயிற்று... நான் அமிழ்ந்துப் போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும். என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும். ஜலப்பிரவாகங்கள் என் மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும் பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக் கொள்ளாமலும் இருப்பதாக... உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும். நான் வியாகுலப்படுகிறேன். எனக்குத் தீவிரமாய்ச் செவி கொடுத்தருளும். நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலை பண்ணும். என் சத்துருக் களினிமித்தம் என்னை மீட்டுவிடும். தேவரீர் என் நிந்தையையும், என் வெட்கத்தையும், என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர். என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள். நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது. நான் மிகவும் வேதனைப்படுகிறேன். எனக்காகப் பரிதபிக்கிறவன் உண்டோ என்று காத்திருக்கிறேன். ஒருவனையும் காணேன்" (சங்கீதம் 69:1-3, 14-15, 17-20). மேலும் "உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது. உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என் மேல் புரண்டு போகிறது'' (சங்கீதம் 42:7). ஆண்டவருக்குப் பாவத்தின் மீதிருந்த அருவருப்பு பாவத்தைச் சுமப்பவர் மீது வீசி அடித்து வழிந்தோடும் வெள்ளத்தைப் போலச் சீறிப் பாய்ந்தது. சிலுவையின் வியாகுலத்தை ஆவலோடு எதிர்பார்ப்பவராக எரேமியாவின் மூலம் கதறுகிறார், "வழியில் நடந்து போகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா? கர்த்தர் உமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தின தினால் எனக்கு உண்டான என் துக்கத்திற்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப் பாருங்கள்" (புலம்பல் 1:12). பரிசுத்தமானவர் மூன்று மணிநேரம் சிலுவையில் அனுபவித்த சொல்லொண்ணா துயரத்தைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு சில அறிக்கைகளே இவைகள். அந்த மூன்று மணி நேரத்திற்குள் நித்திய நரகத்திற்கொப்பானதொன்று சிறிய வடிவில் புகுத்தப்பட்டுள்ளது.தேவனுடைய முகத்தின் ஒளி பிதாவின் செல்லக்குமாரனுக்கு மறைக்கப்பட்டிருந்திருக்கும். வெளியிலுள்ள இருளில் அவர் தனித்து விடப்பட்டிருந்தார்.இங்கு நாம் காண்பது தன்னிகரற்ற அளவிடப்பட முடியாத அன்பு. "உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கும்படி செய்யும்" என்று கதறினார். ஆனால் வேதனையும் உக்கிரமும் நிறைந்த பாத்திரத்தை முற்றிலும் குடித்துத் தீர்க்காவிட்டால் அவருடைய மக்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியாது. அதைக் குடிப்பதற்கு வேறொருவரும் இல்லையாதலால் அவர் முற்றிலும் குடித்துத் தீர்த்தார். அவருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்! பாவம் மனிதர்களைக் கொண்டு வந்தது, அன்பு இரட்சகரைக் கொண்டு வந்தது. "என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவீட்டீர்?"
7.இங்கு அந்த ‘பெரிய நம்பிக்கை'யின் அழிவைக் காண்கிறோம்.
இரட்சகரின் இந்தக் கதறல் ஆண்டவரால் கைவிடப்பட்டு இழந்து போன ஒவ்வொரு ஆத்துமாவின் இறுதிநிலையை முன்னறிவிக்கிறது. வாசகர்கள் இந்த நாட்களின் கள்ளப்போதகத்திற்கு எதிராக எச்சரிக்கை செய்யப்பட என் மனச்சாட்சி என்னை வற்புறுத்துகிறது. ஆண்டவர் நம் எல்லோரையும் நேசிக்கிறார். அவர் அதிக இரக்கமுள்ளவராக இருக்கிற படியால் தம் வார்த்தையில் கூறப்பட்ட பயங்கரமான அச்சுறுத்தல்களை நம் மேல் வரவிடமாட்டார். எனப் போதிக்கப்படுகிறோம். இதேவிதமாகத்தான் அந்த பழைய பாம்பு ஏவாளிடம் வாதாடியது. "அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று ஆண்டவர் சொல்லி இருந்தார். ஆனால் சர்ப்பம் "நீங்கள் சாகவே சாவதில்லை" என்று கூறியது. ஆனால் யாருடைய வார்த்தை உண்மையென நிரூபிக்கப்பட்டது? நிச்சயமாக பிசாசினுடைய தல்ல. ஏனெனில் ஆதி முதல் அவன் பொய்யனாயிருக்கிறான். ஆண்டவரின் எச்சரிப்பின் வார்த்தை நிறைவேறியது. நமது முதல் பெற்றோர் அவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியத் தவறிய அந்த நாளில்தானே ஆவிக்குரிய மரணமடைந்தனர். வரும் நாட்களிலும் இது நிறைவேறும். ஆண்டவர் இரக்கமுள்ளவர். அவர் நமக்கு ஒரு இரட்சகரை அனுப்பித்தந்தது இந்த உண்மையை நிரூபிக்கிறது. கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படி அழைப்பது அவருடைய இரக்கத்திற்குச் சான்றாகும். உங்கள் மேல் நீடிய பொறுமையுள்ளவராய் இருந்து உங்கள் முரட்டாட்டமான கலகங்களை இந்நாள் மட்டும் பொறுத்து கிருபையின் நாட்களை இந்நிமிட மட்டும் நீட்டிக்கொடுத்தது இதை நிரூபிக்கிறது. ஆனால் ஆண்டவருடைய இரக்கத்திற்கு ஓர் எல்லை உண்டு. கிருபையின் நாள் வெகுசீக்கிரத்தில் முடிவிற்கு வரும். நம்பிக்கையின் வாசல் மிகச்சீக்கிரத்தில் முற்றிலுமாக அடைபடும். மரணம் உங்கள் வாழ்க்கையை தீவிரமாகத் துண்டித்துப் போடலாம். மரணத்திற்குப் பின் "நியாயத்தீர்ப்பு” உண்டு. அந்த நியாயத் தீர்ப்பு நாளிலே ஆண்டவர் கிருபையாய் அல்ல ஆனால் நீதியாய் செயல்படு வார். நீங்கள் ஏளனமாய் உதாசீனம் பண்ணின கிருபையினிமித்தம் உங்களைப் பழிவாங்குவார்.கிறிஸ்துவின் கதறல், ஆண்டவருக்குப் பாவத்தின் மேலுள்ள வெறுப் பிற்கு எவ்வாறு சாட்சியாக வெளிப்பட்டது என்பதை அறிந்து கொள்ள இது போதுமானதாய் இருப்பதால் விரிவாக விளக்கப்பட்ட காரியங்களை மறுபடியும் கூறப்போவதில்லை. ஆண்டவர் பரிசுத்தமும், நீதியும் உள்ளவராய் இருப்பதால் பாவத்தை எங்கு கண்டாலும் நியாயம் தீர்ப்பார். பாவம் ஆண்டவராகிய இயேசுவின் மீது சுமத்தப்பட்ட போது தன் சொந்தகுமா ரென்றும் பாராது செயல்பட்டவர், இரட்சிக்கப்படாத வாசகராகிய நீங்கள் பாவத்தோடு அந்த வெள்ளை சிங்காசன ங்காசனத்தில் வீற்றிருப்பவர் முன் நிற்கும்போது அவர் உங்களை விடுவிப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? தம் மக்களின் பிணையாளியாகக் கிறிஸ்து தொங்கிக் கொண்டிருக் கும்போது ஆண்டவர் தம் உக்கிரத்தை அவர் மீது ஊற்றினாரானால், நீங்கள் உங்கள் பாவத்தில் மரித்தால் எவ்வளவு நிச்சயமாய் அவர் தம் உக்கிரத்தை உங்கள் மேல் ஊற்றுவார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சத்திய வார்த்தைத் தெள்ளத்தெளிவாய் இருக்கிறது. "குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை. தேவனுடைய கோபம் அவன் மேல் நிலை நிற்கும் என்றான்" (யோவான் 3:36). பாவிகளின் இடத்தை எடுத்த பொழுது தன் சொந்தக்குமாரனையே 'தப்பவிடாத' தேவன், இரட்சகரைத் தள்ளிவிடும் ஒருவனை நிச்சயமாகத் தப்பவிட மாட்டார். கிறிஸ்து மூன்று மணி நேரம் ஆண்டவரிடமிருந்து பிரிக்கப்பட்டார். நீங்கள் உங்கள் இரட்சகரை கடைசிவரை ஒதுக்கி விட்டீர்களானால் நித்திய நித்தியமாய் ஆண்டவரிடமிருந்து பிரிக்கப்படுவீர்கள். "அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும்... நீங்கலாகி நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்” (2 தெச.1:10) “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?" இங்கொரு பாழ்க்கடிப்பின் குரல் கேட்டது.வாசகரே, அதன் எதிரொலி ஒருபோதும் உங்களுக்கு வேண்டாம்இங்கொரு பிரிவின் கூக்குரல் கேட்கிறது.வாசகரே, அதன் அனுபவம் ஒருபோதும் உங்களுக்கு வேண்டாம்.இங்கொரு பாவநிவிர்த்தியின் குரல் கேட்கிறது.வாசகரே, அதன் இரட்சிப்பின் நன்மை உங்களுக்கு வேண்டும்; உரிமையாக்கிக் கொள்ளுங்கள்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.