“அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது." (2 கொரிந்தியர் 4:17)
உபவத்திரத்தினால் மனம் தளராமல் இருப்பதற்கும், துன்பங்களில் மனம் தளராமல் இருப்பதற்கும் இந்த வசனம் ஒரு பெரிய காரணத்தைத் தருகிறது. குறுகிய கால உபவத்திரத்தை நித்தியத்தின் வெளிச்சத்தில் பார்ப்பதற்கு நம்மை இந்த வசனம் ஊக்குவிக்கிறது. இப்போதைய உபவத்திரங்கள் உள்ளான மனிதனின் மீது நன்மையான விளைவை ஏற்படுத்தும் என்பதை இந்த வசனம் குறிக்கிறது. இந்த சத்தியத்தை நீங்கள் உறுதியாக விசுவாசித்தால், வலிமிகுந்த நிகழ்கால அனுபவங்களை நீங்கள் எளிதாக சமாளிக்க முடியும். இந்த கொஞ்சக்கால உபவத்திரம் நமக்கு மேலும் மேலும் நித்திய மகிமையைக் கொண்டு வரும். நம்முடைய உபவத்திரம் இலகுவானது. அது குறுகிய காலம் மட்டுமே இருக்கும். ஆனால் வரப்போகும் மகிமையோ பெரியதும், நித்தியமானதும் ஆகும். இந்த வேறுபாட்டின் முக்கியத்துவத்தைத் தெளிவாக புரிந்து கொள்ள இந்த வசனத்தின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். ஆனால் இந்த வசனப்பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை கடைசியில் இருந்து பார்ப்போம்.
இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், “மகிமை" என்பதற்கு “கபோத்" என்ற எபிரேய வார்த்தைக்கு “கனம்" என்றும் அர்த்தம் உண்டு. தங்கம் மற்றும் விலையுயர்ந்த இரத்தினங்களின் எடை அதிகரிக்கும் போது அவற்றின் மதிப்பும் அதிகரிக்கிறது. பரலோகம் சமப்ந்தமான பேரானந்தத்தை உலக சம்ந்தமான புரிதலுக்குள் விவரிக்க இயலாது. அடையாளத்தால் தரப்படும் விளக்கங்கள் முழுமையற்றது. இந்த வசனத்தில் விரிவான விளக்கங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு விசுவாசிக்கு நித்தியத்தில் மகிமை காத்திருக்கிறது. நாம் மகிமையானது என்று சொல்லும்போது மிகவும் சிறப்பானதையும் பூரணமானதையும் விளக்கும் மனித மொழி வர்ணனையின் உட்சபட்ச எல்லையை அடைந்து விடுகிறோம். ஆனால் விசுவாசிக்குக் காத்திருக்கும் மகிமையானது அந்த எல்லைகளைவிட மிகவும் கனமானது, பூமிக்குரியவைகள் வேறு எதுவும் அதனுடன் ஒப்பிட முடியாதது, அதன் மதிப்பீடு மதிப்பீடுகளின் அளவுகளுக்கும் அப்பால் செல்கிறது. அதன் மகத்தான மதிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இந்த அற்புதமான மகிமை நிலையற்றதாகவும் அல்லது தற்காலிகமானதாகவும் இல்லாமல், தெய்வீகமானதும் மற்றும் நித்தியமானதுமாக இருக்கிறது. அது தெய்வீகமனதாக இல்லாவிட்டால் அது நித்தியமாக இருக்க முடியாது. ஆம், நம்முடைய மகிமையான தேவன் அவருக்குத் தகுதியானதையும், அவரைப் போன்றதையும், அதாவது அவரைப் போலவே முடிவில்லாத மற்றும் நித்தியமானதை நமக்குக் கொடுக்கப்போகிறார்.
(அ) "உபவத்திரம்" என்பது மனிதனுக்கு வருகிற இயல்பான ஒன்று தான். “அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுக்ஷன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்" (யோபு 5:7). இது பாவத்தின் விளைவுகளின் ஒரு பகுதியாகும். வீழ்ந்த மனிதன் தன் பாவ நிலையில் இருந்துக்கொண்டே மகிழ்ச்சியை அனுபவிப்பது தகுதியாக இருக்க முடியாது. தேவனுடைய பிள்ளைகளும் இதற்கு விதிவிலக்கல்ல, “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்" (அப்போஸ்தலர் 14:22). மகிமையான மற்றும் அழியாமைக்குக் கொண்டு செல்வதற்கு, தேவன் நம்மை இடுக்கமான பாதையில் வழிநடத்துகிறார்.
(ஆ) நம்முடைய உபவத்திரம் இலகுவானது. உபவத்திரம் என்றாலே இலகுவாக இருக்காது. பெரும்பாலும் அவை சுமையாகவும், வருத்தமாகவும் இருக்கும். இருப்பினும், பொதுவாக அவை இலகுவானவை. நாம் எதற்கு பாத்திரவான்கள் என்பதை ஒப்பிடும்போது அவை இலகுவானவை தான். நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பாடுகளுடன் ஒப்பிடும்போது அவை இலகுவானவை. ஆனால், நாம் பெறப்போகும் மகிமையின் ஸ்தானத்தை ஒப்பிடும் போது, நமது உபத்திரவம் உண்மையாகவே இலகுவானது எனபது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. இதே அப்போஸ்தலனாகிய பவுல் வேறொரு இடத்தில் இவ்விதமாக கூறுகிறார், “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" (ரோமர் 8:18).
(இ) உபத்திரவம் தற்காலிகமானவை. நம்முடைய உபத்திரவம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தாலும், அத்தகைய வாழ்க்கை மெத்தூசலாவைப்போல நீடிய ஆயுளாகப் போனாலும்;, நமக்கு கிடைக்போகும் நித்தியத்துடன் ஒப்பிடும்போது இதுவும் லேசானதே! நம்முடைய உபத்திரவம் சிறிது காலம் தோன்றி மறைந்து போகும் நீராவி போன்றது. நம்முடைய உபவத்திரத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க தேவன் நமக்கு ஞானத்தை தருவாராக.
சிறிது காலம் மட்டும் இருக்கும் நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. நிகழ்காலம் எதிர்காலத்தைப் பாதிக்கிறது. இதைப் பற்றி நாம் தத்துவ ரீதியில் தர்க்கம் செய்வது சரியல்ல. தேவனுடைய வார்த்தையை அவர் சொன்ன விதமாக விசுவாசிப்பது நமக்கு மிகவும் முக்கியம். மற்றவர்களின் அனுபவம், மற்றும் அவர்களுடைய உணர்வு இதிலிருந்து வேறுபட்டிருக்கலாம். பல சமயங்களில் உபத்திரவங்கள் நம்மை சோர்வடையச் செய்யவும், எதிர்த்து நிற்கிறவர்களாக மாற்றவும், திருப்தி அற்றவர்களாக்கவும் வருவது போல நமக்கு தோன்றுகிறது. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மற்றும் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த உபத்திரவங்கள் நமது மாம்ச இயல்பை பரிசுத்தப்படுத்த அனுப்பப்படவில்லை. அவை நம்மில் உள்ள “புதிய மனிதனின்" நன்மைக்காகவே உள்ளன. அது மட்டுமல்ல, வரப்போகும் மகிமைக்கு நம்மை தயார்படுத்த இந்த உபத்திரம் உதவுகிறது. உபத்திரவம் நம்மை உலகத்தின் மீதான ஆர்வத்திலிருந்து பிரித்து விடுகிறது. இந்தப் பாவமும்; துக்கமும் நிறைந்த உலகத்திலிருந்து நாம் விடுவிக்கப்படும் சமயத்தை அதிகம் அதிகமாக எதிர்நோக்கும்படி செய்கின்றது. தேவன் தம்மை நேசிப்பவர்களுக்காக ஏற்படுத்தியிருக்கிறவைகளைப் புரிந்துகொள்ள இவை நமக்கு உதவுகின்றன.
ஆனால் விசுவாசி செய்ய வேண்டியது இதுதான். தராசின் ஒருபுறத்தில் உபத்திரங்களையும், மறுபுறம் வரவிருக்கின்ற மகிமையையும் வைத்துப் பாருங்கள். நாம் அவற்றை ஒப்பிட முடியுமா? அதை ஒப்பிடவே முடியாது. மகிமையின் ஒரு கணம் வாழ்நாள் முழுவதும் பட்ட உபவத்திரத்தை விட அதிகமாக உள்ளது. தேவனின் வலது பாரிசத்தில் நித்திய மகிழ்ச்சியோடு இருப்பதை ஒப்பிடுகையில் இந்த வருடங்கள் ஏற்படும் உபத்திரம், நோய், வறுமை, இக்கட்டுகள் மற்றும் இரத்த சாட்சியாக மரிப்பது ஆகியவை பரலோகத்தில் தேவனுடைய வலதுகரத்தில் நாம் எப்போதும் அனுபவிக்கப்போகும் இன்பங்களுடன் ஒப்பிடும்போது, நாம் பரத்தில் சுவாசிக்கும் ஒரு மூச்சு காற்று இந்த உலகின் அனைத்துவித எதிர்மறையான அனைத்தையும் இது அணைத்துப் போடும்;. பிதாவின் வீட்டில் நாம் கழிக்கும் ஒரு நாள் இந்த பயங்கரமான வனாந்தர வாழ்க்கையைவிட அதிக மகிழ்ச்சியைத் தரப்போகிறது. வரப்போகும் மகிமையில் நமக்காக ஆயத்தம் செய்யப்பட்டுள்ளதை இப்போதும் நாம் எதிர்பார்ப்புடன் அனுபவித்து ஆனந்தப்பட வேண்டிய விசுவாசத்தையும் பெலத்தையும் தேவன் நமக்குத் தந்தருள்வாராக!
“ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்." (பிலிப்பியர் 4:11).
நிறைவற்ற தன்மை! உலகில் எப்போதாவது இவ்வளவு அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதா? இருக்காது என்பதில் சந்தேகம் வேண்டாம். நாம் பெருமைப்படும் அளவிற்கு வளர்ச்சியும், ஐசுவரியத்தின் மிகப்பெரிய விருத்தியும் இருந்தும், அனுதின சந்தோக்ஷங்களுக்காக நேரத்தையும் பணத்தையும் செலவழித்தாலும், திருப்தியின்மை எங்கும் வியாபித்திருக்கிறது. எந்த தரப்பு மக்களும் இதில் விதிவிலக்கல்ல. எலே;லாரும்; உறுதியற்றும், திருப்தியற்றும் இருக்கிறார்கள். தேவனுடைய மக்களிலும் அநேகர்சுகூட இந்த சந்ததியின் அசுத்த ஆவியாகிய திருப்தியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனநிறைவு! அத்தகைய அனுபவத்தைப் பெறுவது சாத்தியமா? அல்லது இது ஒரு நல்ல கற்பனை மட்டுமா? அல்லது கிட்டத்தட்ட கனவில் வரும் கதையைப் போன்றதா? அதைப் பூமியில் பெறுவது சாத்தியமா? அல்லது பரலோகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்தான் அது பொருந்துமா? ஒருவேளை பூமியில் அதைப் பெற முடிந்தால், அது நிலைத்திருக்குமா? அல்லது சில காலத்திற்கு மட்டும் நிடிக்குமா? இதுபோன்ற எல்லாக் கேள்விகளுக்கும் அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளில் பதில் இருக்கிறது. “ என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை. ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்" (பிலிப்பியர் 4:11).
பவுலின் இந்த வார்த்தைகளை அவர் எந்த சூழலில் எழுதினார் என்பதைக் கவனித்தால் நாம் அதின் வீரியத்தை நன்றாகப் புரிந்துகொள்வோம். இந்த நிருபத்தை அவர் எழுதும்போது (அல்லது ஒருவேளை வேறொரிடம் சொல்ல அந்த உதவியாளர் எழுதியிருக்கலாம்), அவர் பேரரசர் அரண்மனை மெத்தையில் இருந்து எழுதவில்லை. அல்லது நல்ல வசதியான மற்றும் தங்கள் தேவபக்தியில் சிறந்து விளங்கிய கிறிஸ்தவருடைய மாளிகையில் இருந்தும் எழுதவில்லை. மாறாக அவர் சிறையில் (பிலிப்பியர் 1:13-14) கட்டப்பட்டவராக இதை எழுதுகிறார். வேறொரு நிருபத்தில் கட்டுண்டவன் என்று தன்னை அடையாளப்படுத்துகிறார் (எபேசியர் 4:1). இந்த நிலையில் இருந்தாலும் அவர் மனரம்மியமாக இருப்பதை வெளிப்படுத்துகிறார்.
கொள்கைக்கும் நடைமுறைக்கும், இலட்சியத்திற்கும் அனுபவத்திற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. ஆனால் அப். பவுலின் விக்ஷயத்தில், மனநிறைவு என்பது இடைவிடாத உண்மையான அனுபவமாக இருக்கிறது. “நான் எந்த நிலைமையிலிருந்தாலும்” என்ற அவரது வார்த்தைகளை நாம் கவனிக்கிறோம். ஆனால் பவுல் எப்படி அத்தகைய அனுபவத்தில் பிரவேசித்தார்? இத்தகைய அனுபவம் எதைக் கொண்டுள்ளது? முதல் கேள்விக்கான பதிலை "மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்" என்பதில் நாம் காணலாம். 'ஆவியின் ஞானஸ்நானத்தை நான் பெற்றதால் மனநிறைவை பெற்றேன்,” என்று அவர் கூறவில்லை. இந்த ஆசீர்வாதத்தை தேவனுக்கு முழுமையாக அர்ப்பணித்ததினால் பெற்றுக்கொண்டேன் என்றும் அவர் கூறவில்லை. அது நம்முடைய உள்ளார்ந்த குணத்தால் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அவர் அதை கிறிஸ்தவ அனுபவம் என்ற பள்ளியில் கற்றுக்கொண்டார். இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விக்ஷயம் என்னவென்றால், அவர் தன்; தனது ஊழியத்தின் கடைசி நாட்களில் எழுதிய நிருபங்களில் ஒன்றில் இந்த வாக்கியத்தை எழுதினார்!
அப். பவுல் அனுபவித்த “மனநிறைவு" நேர்மறையான மற்றும் இனிமையான சந்தர்ப்பத்தில் இருந்து வரவில்லை என்பது மேலே சுட்டிக்காட்டப்பட்ட உண்மையிலிருந்து தெளிவாகிறது. அதிலிருந்து மாறுபட்ட சில பொதுவான கருத்துக்களையும் நீக்குகிறார்கள். ஒருவரின் இதயத்தின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றாமல் திருப்தி அடைய முடியாது என்பது அநேகர் நினைக்கிறார்கள். சிறைசாலையில் மனநிறைவான ஒருவரை யாரும் பார்ப்பதில்லை. எனவே ஒன்று தெளிவாகிறது இங்கு குறிப்பிடப்படும் மனநிறைவு என்பது வெளிதோற்றத்தில் அல்ல, உள்ளிருந்து வருபவை. இதை தேவனிடம் இருந்தே பெறும்படி நாட வேண்டும், மற்ற படைப்பின் மகிழ்வில் அல்ல.
இன்னும் கொஞ்சம் ஆழமாகச் செல்ல முயற்சிப்போம். மனநிறைவு என்றால் என்ன? இது தேவனின் சர்வவல்ல திட்டதில் வரும் அவருடைய பராமரிப்பில் திருப்தியாய் இருப்பது தான். இது முறுமுறுப்புக்கு எதிரானது. முறுமுறுப்பு தேவனுக்கு எதிரான கலகக் குரல் எழுப்பி, ஒரு களிமண் தன்னை வனைந்தவனைப் பார்த்து, “என்னை ஏன் இப்படி உருவாக்கினீர்” என்று கேள்வி கேட்பதற்குச் சமம் (ரோமர் 9:20). தன் நிலையைக் குறித்து முறுமுறுப்பதைவிட, மனரம்மியம் உள்ள மனிதன் தனது சூழ்நிலையும் காரியங்களும் இன்னமும் மோசமாக இல்லை என்பதை எண்ணி தேவனுக்கு நன்றி சொல்கிறான். தனக்கு இருக்கும் நிகழ்காலத் தேவைக்கும் அதிகமாக இச்சிப்பதைக் காட்டிலும், தன்னைக் குறித்து இன்னும் தேவன் கரிசனையாக இருக்கிறார் என்று ஆண்டவருக்குள் அகமகிழ்கிறான். அப்படிப்பட்டவன் தான் தன்னிடம் உள்ளதைப் போதும் என்கிற மனநிலையுடன் திருப்தி அடைகிறவன் (எபிரெயர் 13:5).
பேராசை தான் மனநிறைவுக்கு எதிரான கொடிய தடையாக இருக்கிறது. அது ஒரு புற்றுநோயைப் போல நிகழ்கால மனநிறைவை அரித்து விடுகிறது. “பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” (லூக்கா 12:15) என்று கர்த்தர் தம்முடைய சீக்ஷர்களுக்கு கனமான எச்சரிக்கையைக் கொடுத்ததற்குக் காரணமில்லாமல் இல்லை. சில காரியங்கள் நம்மை இன்னும் ஏமாற்றும். அவை சேமிப்பு, வருங்கால பாதுகாப்பு, அதாவது வேலை செய்ய முடியாத காலங்களுக்காக இருப்பு வைத்தல் போன்ற நல்ல பெயர்களில் தோன்றுகின்றன. வேதம் பண ஆசையை “விக்கிரக வழிபாடு" என்று அழைக்கிறது. “விக்கிரகாராதனையான பொருளாசை” (கொலோசெயர் 3:5) என்பது தேவன் மீது இருதயத்தை வைக்காமல் பொருள்களின்மீது இருதயத்தை சாயப்பண்ணுவதாகும். “தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள்” (நீதி. 30:15) உடைய அட்டையைப் போன்றது பொருளாசையுடைய இருதயத்தின் மொழி. பேராசை கொண்ட ஒரு மனிதன் தன்னிடம் சிறிதளவு இருந்தாலும் அல்லது நிறைவானதாக இருந்தாலும் இன்னும் வேண்டுமென்றே விரும்புகிறான். இது பவுலின் வார்த்தைகளின் இருந்து எவ்வளவு மாறாக இருக்கிறது பாருங்கள்: “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்” (1 தீமோ. 6:8). லூக்கா நற்செய்தியில் உள்ள இந்த வார்த்தைகள் கட்டாயம் நமக்குத் தேவையானவை: “உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள்" (லூக்கா 3:14).
“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்" (1 தீமோத்தேயு 6:6). இந்த வேத வார்த்தை நம்மை கவலை, அடிமைத்தனம், பேராசை மற்றும் சுயநலம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கிறது. இந்த மனநிலை தேவன் கொடுப்பவைகளில் ஆனந்தப்படுவதற்;கு நமக்கு விடுதலையைக் கொடுக்கிறது. இதற்கும் பின்வரும் வார்த்தைகளிலும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுக்ஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்." (1தீமோத்தேயு 6:9-10). இந்த உலக கவலையிலிருந்து நம்மை விடுதலை செய்து, நம்மிடம் இருப்பதில் மனநிறைவு அடைய அருள்புரிவாராக.
மனநிறைவு என்பது தேவனைச் சார்ந்து இளைப்பாறும் இதயத்திலிருந்து வருகிறது. தேவன் தருகிற எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை அனுபவிக்கும் ஆத்துமாவின் நிலை. தேவனுடைய சித்தத்திற்கு என் விருப்பத்தை ஒப்புக்கொடுத்ததால் வரும் மனநிலை அது. தேவன் எல்லாவற்றையும் திறம்பட செய்கிறார் என்பதை உறுதிபட நம்பும் ஆனந்த பாக்கியம். இப்போதும் அவர் சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடப்பிக்கிறார் என்கிற உறுதிப்பாடு. இந்த அனுபவத்தை “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிவதால்” (ரோமர் 12:2) பெறமுடிகிறது. நம் வாழ்வில் அனுமதிக்கப்படும் அனைத்தும் தவறு செய்ய முடியாத சர்வவல்லமையுள்ள தேவனின் கையிலிருந்து வருகிறது. அவர் தம் பிள்ளைகள் தேவையில்லாமல் ஒரு கண்ணீரைக் கூட சிந்துவதை விரும்பாத அளவு அன்பானவர் என்பதை நாம் புரிந்து ஏற்றுக்கொண்டால் மட்டுமே, நமக்கு உண்மையான மனநிறைவு கிடைக்கும்.
நமது கடைசி வார்த்தைகள் கீழ்கண்டவாறு இருக்கட்டும்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சந்நிதியில் அதிகம் இருப்பதால் மட்டுமே உண்மையான மனநிறைவு சாத்தியம். அதைத்தான் நமது தியானப்பகுதி வலியுறுத்தி உள்ளது: “தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும். எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் 4:12,13). ஒருபோதும் திருப்தியற்றவராகவே இல்லாத பிதாவுடன் நாம் நெருங்கிய உறவில் பழகி இருக்கும்போதுதான், முறுமுறுக்கும் பாவத்திலிருந்து நாம் விடுபட முடியும். இதைப் படிக்கிறவர்களும், எழுதுகிறவரும், தேவனுடைய வார்த்தையாகிய கண்ணாடியால் கர்த்தருடைய மகிமையை தரிசித்து, அதன் விளைவாக, “ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து” மறுரூபப்படுவோமாக (2 கொரிந்தியர் 3:18).
“கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது." (சங்கீதம் 116:15).
மாம்சத்தில் மிகவும் இருக்கத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய காரியத்தைப் பற்றிய ஆசீர்வாதமும் ஆறுதலும் தரும் வேத வசனங்களில் ஒன்று தான் நமது தியான வசனப்பகுதி. தேவனுடைய மக்கள் பெரும்பாலும் இந்த காரியத்தில் தேவ வார்த்தை என்ன சொல்லுகிறது. என்தை ஜெபத்துடன் ஆராய்ந்து, விசுவாசித்து புரிந்துகொண்டார்கள் என்றால், மரண பயத்திலிருந்து முழுமையாக இல்லாவிட்டாலும் பெரிய அளவில் விடுவிக்கப்படுவார்கள். ஐயோ! பலர் அவ்விதமாக இல்லாமல் அதற்கு பதிலாக தங்கள் எண்ணங்கள் மற்றும் கற்பனைகளுக்கு இடமளித்து, பயத்துக்கு ஆளாகிறார்கள். அவர்கள் விசுவாசத்து நடவாமல் தரிசித்து நடக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரை நோக்கிப் பார்த்து, அவருடைய வழிநடத்துதலுடன் வேத வசனத்தின்; வெளிச்சத்தில் ஒரு கிறிஸ்தவனின் மரணம் குறித்த தேவனுடைய வெளிப்பாட்டை அறிந்து, மரணம் பற்றிய சோகத்தையும், அவிசுவாசத்தையும் அகற்ற முயற்சிப்போம்.
“கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது." (சங்கீதம் 116:15). ஒரு விசுவாசி மாரிக்கும் போது தேவன் அவர் மீது கவனம் செலுத்துகிறார் என்பதை இந்த வேத வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. “அவர் பார்வைக்கு" என்ற வார்த்தையைக் கவனியுங்கள், தேவனுடைய கண்கள் எப்போதும் நம்மீது உள்ளன எனபது உண்மையே! அவர் உறங்குகிறதில்லை, தூங்குகிறதுமில்லை. நீர் என்னைக் காண்கிற தேவன் என்று நாம் எல்லாக் காலங்களிலும் அறிக்கைசெய்கிற உண்மைதான் அது. ஆனால் நம்முடைய முக்கியமான சந்தர்ப்பங்களில் அவர் அதிகக் கரிசனையும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று வேதம் சொல்கிறது. “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்” (சங்கீதம் 46:1). “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்” (ஏசாயா 43:2).
"கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது", இந்த வசனம் மரணத்தைப் பற்றி மிகவும் அரிதாகவே விசுவாசிகள் சிந்திக்கின்ற அம்சத்தை நம் முன் நிறுத்துகிறது. தேவனுடைய பார்வையில் இதை அவர் எவ்வாறு காண்கிறார் என்பதை இங்கே நாம் காண்கிறோம். மற்ற காரியங்களைப் போலவே மரணத்தைப் பற்றியும் நமது பார்வையில் அதிகம் சிந்திக்கிறோம். ஆனால் இந்த வேதபகுதி மரணத்தைப் பரலோக கண்ணோட்டத்தில் குறிப்பிடுகிறது. அது பயங்கரமானது, துயரமானது, மோசமானது என்று சொல்லாமல் “அருமையானது” என்று கூறுகிறது. இது நம்மில் ஒரு கேள்வியை எழுப்புகிறது: தேவனுடைய பக்தர்களின் மரணம் அவருடைய பார்வையில் ஏன் மதிப்புமிக்கதாக இருக்கிறது? மனித வாழ்வின் இந்தக் கடைசி நிகழ்வு அவருக்கு அருைமாய் இருப்பது ஏன்? இதற்கு ஓரிரு பதில்களை விரிவாகக் கூறாமல் சுருக்கமாகத் தர முயல்கிறேன்.
பரிசுத்தவான்கள் எப்போதும் அவருக்கு அன்பானவர்கள்! அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே, வானங்கள் உருவாவதற்கு முன்னரே, அவருடைய அன்பு அவர்களின் மீது இருந்தது. அவர்களுக்காகவே அவர் தன்னுடைய உன்னதமான ஸ்தானத்தை விட்டு வந்தார். அவருடைய பரிசுத்தமான விலைமதிப்பற்ற இரத்தத்தை சிந்தி, இரட்சிப்பை கொடுப்பதற்காக தன் உயிரை தியாகமாக மனமுவந்து கொடுத்தார். அந்த பிரதான ஆசாரியரின் இதயத்தில் எழுதப்பட்டு, அவருடைய உள்ளங்கைகளில் பொறிக்கப்பட்டது அவர்களுடைய பெயர்களே! அவர்கள் அவரது பிதாவின் அன்பின் பரிசுகள். தம்முடைய பிள்ளைகள். அவரது சரீரத்தின் அங்கங்களாக இருக்கிறார்கள். ஆகவே அவர்ள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் அவர் நேசிக்கிறார். அவர்களின் தலையில் உள்ள முடியெல்லாம் எண்ணப்படும் அளவிற்கு அவர்கள் மீதான நேசம் ஆழமானது. அவர் தம்முடைய தூதர்களை அவர்களுக்கு ஊழியம் செய்யவும், அவர்களைப் பாதுகாக்கவும் அனுப்புகிறார். அவர்கள் அவருக்குப் பிரியமானவர்களாய் இருப்பதால் அவர்களுடைய மரணம் கூட பார்வைக்கு அருமையானது.
நாம் உபத்திரம் படுவது அவசியமாக இருக்கிறது. நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் (அப்போஸ்தலர் 14:22). ஆனால் "அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை." (புலம்பல் 3:33) தேவன் நம்முடைய உபத்திர விக்ஷயத்தில் அலட்சியமாக இருப்பதில்லை. தம் பழைய ஏற்பாடு மக்கள் குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” (ஏசாயா 63:9). “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்” (சங்கீதம் 103:13). அதேப்போல நமது பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து நமது பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடியவர் என்று நாம் வாசிக்கிறோம் (எபிரெயர் 4:15). ஆகையால் இங்கே அவருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வையில் விலைமதிப்புள்ளதாக இருப்பதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது – அதாவது அது அவர்களின் கவலைகள் மற்றும் பாடுகளுக்கு முடிவைக் குறிக்கிறது.
தேவன் தான் நேசிப்பவர்களின் தேவைகளை சந்திக்க ஊழியம் செய்வதைத் தவிர அவருடைய அன்பு வேறு எதிலும் திருப்தி அடைவதில்லை. மரண நேரத்தை விட ஒரு கிறிஸ்தவனுக்கு மிகவும் தேவையான உதவி வேறு எதிலும் இருக்காது. மனிதனின் இக்கட்டு தேவனின் செயல்பாட்டிற்கான வாய்ப்பு. எனவே இக்கட்டான சூழ்நிலையில் பிதாவாகிய தேவன் நடுங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய பிள்ளையிடம், “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே. நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்" (ஏசாயா 4:10). இந்த காரணத்திற்காகவே ஒரு விசுவாசி நம்பிக்கையுடன் கூற முடியும்: “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர். உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" (சங்கீதம் 23:4). நம்முடைய ஒவ்வொரு பலவீனமும் அவருடைய பலத்தை நோக்கி அபயமிடுகிறது. நம்முடைய தேவை அவருடைய சர்வ வல்லமையுள்ள ஈவுக்காக வேண்டுகிறது. இந்தச் சத்தியம் ஆசீர்வாதமான வகையில் இந்த வார்த்தைகளில் உதாரணப்படுத்தப்படுகிறது: “ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்” (ஏசாயா 40:11). ஆம், நம்முடைய பலவீனங்களில் அவருடைய வல்லமை பூரணப்படுத்தப்படுகிறது. ஆகவே, அவருடைய அன்பாலும், கருணையாலும், வல்லமையாலும் அவருடைய பரிசுத்தவான்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பாக மரணம் இருப்பதால், அது தேவனுடைய பார்வையில் அருமையானது.
தேவன் தன்னுடைய மக்கள் தன்னோடு இருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைகிறார், இந்த ஆசீர்வாதமான சத்தியம் அவர் பூமியில் ஊழியம் செய்தபோது உறுதியான சான்றாக வெளிப்படுகிறது. அவர் செல்லும் இடமெல்லாம் தம்முடைய அன்பான சீடர்களை அழைத்துச் சென்றார். கானா ஊரில் திருமணத்திற்கும், எருசலேமில் பரிசுத்த பண்டிகைக்காகவும், யாவீரு வீட்டில் மரித்த பெண்ணை உயிரோடு எழுப்பும் போதும். மறுரூப மலைக்கு போகும்பொதும் அவர் சென்ற எல்லா இடங்களிலும் அவர்கள் எப்போதும் அவரைப் பின்தொடர்ந்தனர். “அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும் ... நியமித்தார்" (மாற்கு 3:14). அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் (எபிரெயர் 13:8). அதனால்தான், “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.” என்ற இந்த உறுதியை நமக்குத் தருகிறார் (யோவான் 14:3). ஆகையால் பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. “நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்” (2 கொரிந்தியர் 5:8).
ஒரு பக்தன் நம் மத்தியிலிருந்து பிரிந்தால் நாம் துக்கப்படுகையில், கிறிஸ்து மகிழ்ச்சியடைகிறார். “பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்" (யோவான் 17:24). பரலோகத்தில் அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் பிரவேசிக்கும் போதும் அவருடைய ஜெபத்திற்கு பதில் கிடைத்ததை எண்ணி நமதாண்டவர் பூரிப்படைகிறார். இந்த சாவுக்கேதுவான சரீரத்திலிருந்து விடுபட்ட தனது ஒவ்வொரு பிள்ளையின் வழியாக, அவர் அனுபவித்த துன்பங்களின் பலனைக் கணடு திருப்தி அடைகிறார். ஆகவே, கிறிஸ்துவுக்கு ஏற்படும் மகிழ்ச்சியின் காரணத்தால் பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
இங்கே “விலையேறப்பெற்றது” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேய வார்த்தையின் முழுமையைக் கண்டறிவது மிகவும் சுவாரஸ்யமாக மற்றும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த வார்த்தை "விலைமதிப்பற்றது" என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது!" (சங்கீதம் 36:7) அந்தப் பரிசுத்தவான் எவ்வளவு மேன்மையாகவோ, தாழ்ச்சியாகவே வாழ்ந்தாலும், அவருடைய மரணம் கர்த்தரின் பார்வைக்கு அருமையானது.
அதே எபிரேய வார்த்தை “கனமானது" என்றும் மொழிபெயர்க்கப்படலாம். “உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு” (சங்கீதம் 49:5). இங்கே நாயகிகள் என்கிற பதம் கனமுள்ள பெண்கள் என்கிற வகையில் மொழிபெயர்க்கலாம். அகாஸ்வேரு அரசன் ஆமானிடம், “ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்;” (எஸ்தர் 6:6). ஆம், பூமிக்குப் பதிலாக பரத்திற்கு மாற்றம் பெறுவது உண்மையில் கனமானது தான். “இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாருக்கும் உண்டாகும், அல்லேலூயா” (சங்கீதம் 149:9).
இந்த வார்த்தையின் எபிரெயப் பதம் “பிரகாசம்” என்கிற அர்த்தத்தையும் கொண்டதாக விளங்குகிறது. “சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச் செல்லும்போதும்...” (யோபு 31:26). பரிசுத்தவான் மரணத்தில் விட்டுச் செல்கிற உறவினருக்கு அது இருள் நிறைந்தும், துயரம் நிறைந்தும் காணப்பட்டாலும், அது கர்த்தருடைய பார்வையில் பிரகாசமாக இருக்கிறது: “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்” (சகரியா 14:7). பரிசுத்தவான்களின் மரணம் கர்த்தருடைய பார்வையில் விலையேறப்பெற்றதாக, சிறந்ததாக, கனத்துக்குரியதாக, பிரகாசமானதாக இருக்கிறது. இந்தச் சிறிய தியானம் தம்முடைய பரிசுத்தவான்களுக்கு அருமையானதாக இருப்பதாக.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.