“பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார். அவனை நடத்தினார். அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்” (உபாகமம் 32:10).
தலைப்பு வசனத்திற்கு முன் உள்ள வசனம், “கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு. யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்" என்று கூறுகிறது. இந்த உண்மை தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது என்பதற்காக அடுத்த வசனத்தில் வேறு விதமாகக் கூறப்பட்டிருக்கிறது. “யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்" இந்த வேதபகுதியில், தேவன் தம்முடைய சுதந்திரத்தைத் தனதாக்குவதற்காக எடுத்த முயற்சியைப் பற்றி நாம் கற்றுக்கொள்கிறோம். இதில் நாம் கவனித்து, ஆனந்தப்படக் கூடிய நான்கு விக்ஷயங்கள் இருக்கிறது.
“அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார்” “கண்டுபிடித்தார்" என்ற வார்த்தையில், தேடுதல் என்ற அர்த்தம் இருக்கிறது என்று சொல்ல தேவையில்லை, இங்கே நமது கண்களுக்கு முன்பாக நம்மைத் தேடுகிற தேவனைக் குறித்த ஆச்சரியமான காட்சியை சமர்ப்பிக்கிறோம். படைத்தவருக்கும் மனிதனுக்கும் இடையில் வந்த பாவம் பிரிவினையையும் தூரமாகுதலையும் கொண்டு வந்தது. வீழ்ச்சியின் விளைவாக, உலகில் நுழையும் ஒவ்வொரு மனிதனும் “தேவனுக்கு எதிரான பகை" உள்ள மனநிலையில் இருக்கிறான். இதன் விளைவாக தேவனை தேடுபவர்கள் இல்லை. எனவே தேவன் அதிசயமான முறையில் தம்மைத் தாழ்த்தி, தம்முடைய தனித்துவமான அன்பினாலும் கிருபையினாலும் மனிதனைத் தேடுகிறவராகிறார்.
“கண்டறிதல்" என்ற சொல் தேடுவதை மட்டுமல்ல, தேடப்பட்டவரின் தகுதியற்ற தன்மையையும் பாவத்தையும் கருத்தில் கொண்டு, தேடுபவரின் அன்பையும் குறிக்கிறது, மாபெரும் தேவன் தனது மகாமேன்மையான தயவுக்கு முன்குறிக்கப்பட்டவர்கள் அவரது கிருபையைப் பெற வேண்டும் என்பதற்காக அவர்களைத் தேடும்படி தனது மனதைச் செலுத்தி, அவர்களைத் தேடுபவரானார். தேவன் ஆபிரகாமின் மீது தனது மனதை வைத்தார், ஆகையால் தான் ஊர் என்ற கல்தேயரின் தேசத்தில் விக்கிரக ஆராதனை செய்யும் மக்களிடையே அவரை கண்டறிந்தார். தேவன் யாக்கோபின் மீது தனது மனதை வைத்தார். யாக்கோபு தனது சகோதரனுக்கு பயந்து போகையில் நிலத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது யாக்கோபைக் கண்டார். அதுபோலவே மோசேயை நித்திய அன்பால் நேசித்தபடியால் மீதியான் வனாந்தரத்தில், மோசேயைக் கண்டறிந்தார் (யாத்திராகமம் 3:1). இதே விதமாக உலகில் உள்ள ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனையும் அந்த அன்பு தேடி கண்டுக்கொள்கிறது. “என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன்" (ரோமர் 10:20).
தேவன் உன்னை கண்டுபிடித்தாரா? இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நமது வேதபகுதியின் முதல் பகுதியில் சொல்லப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். “பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார்" உனக்கு இந்த உலகம் அவ்விதமாக தோன்றுகிறதா? சூரியனுக்கு கீழே அனைத்தும் வருத்தத்தை தரக்கூடியதாக இருக்கிறதா? ஒவ்வொரு நாளும், இந்த உலகம் உங்களுக்குப் பாரமானதாகத் தோன்றுகிறதா? உலகத்தில் உங்கள் இருதயங்களைத் திருப்தி செய்யும் காரியம் ஒன்றுமில்லை, உங்களுக்குப் பயனுள்ள சேவை செய்ய ஒன்றுமில்லை என்று கண்டிருக்கிறீர்களா? இந்த உலகம் உங்களுக்கு உண்மையாகவே பாழான நிலத்தை போலவும் வெறுமையான வனாந்தர வெளியாகவும் தோன்றுகிறதா?
இந்த இரண்டாவது சோதனையையும் பார்ப்போம். தேவன் தான் முன்குறித்தவர்களைச் சந்திக்கும் போது அந்த நபருக்கு தன்னை குறித்து வெளிப்படுத்துகிறார். தேவன் அவர்களுக்கு அவருடைய சர்வ வல்லமையுள்ள இறையான்மையைம், அவருடைய மாபெரும் பலத்தையும், கற்பனைக்கு எட்டாத பரிசுத்தத்தையும், அவருடைய கருணையையும், வெளிப்படுத்துகிறார். அவ்விதமாக உனக்கு தேவன் வெளிப்படுத்தினாரா? அவருடைய சர்வ வல்லமையுள்ள இறையான்மையைம், அவருடைய மாபெரும் பலத்தையும், கற்பனைக்கு எட்டாத பரிசுத்தத்தையும், அவருடைய கருணையையும், எவ்வளவேனும் வெளிப்படுத்தினாரா? “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3).
இந்த மூன்றாவது சோதனையையும் பயன்படுத்துவோம்: தேவன் தன்னை உங்களுக்கு வெளிப்படுத்தி இருந்தால், அவர் உங்களைக்குரித்தும் வெளிப்படுத்துவார். ஏனெனில் அவருடைய வெளிசத்தில் தான் நாம் ஒளியைக் காண்கிறோம். உங்கள் நிலையைக் குறித்து வெளிப்படுத்துவது மிகவும் வேதனையான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அபிராகமுக்கு தேவன் தரிசனத்தின் மூலமாக தோன்றியபோது ஆபிரகாம் தேவனிடம் பேசிய வார்த்தைகளைக் கவனியுங்கள்: “இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன்." (ஆதியாகமம் 18:27). அவர் ஏசாயா தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தியபோது அவர், “ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுக்ஷன்” என்று சொன்னார். (ஏசாயா 6:5). தேவன் யோபுவுக்குத் தன்னை வெளிப்படுத்திய போது, “நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்” என்றார் (யோபு 42:6). குறிப்பு! இங்கு யோபு நான் என் அக்கிரம வழிகளை வெறுக்கிறேன் என்று சொல்லவில்லை, மாறாக அவர் "நான் என்னை வெறுக்கிறேன்" என்று சொல்லுகிறார். அன்புள்ள வாசகரே! உங்களுக்கு இந்த அனுபவம் உள்ளதா? நீங்கள் காணாமல் போன, வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளீர்கள் என்பதை உங்களால் உணர முடிகிறதா? உங்களில் எந்தவித நன்மையும் இல்லை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள முடிகிறதா? நீங்கள் நரகத்திற்கு மட்டுமே தகுதியானவர் என்பதை உங்களால் உணரமுடிகிறதா? உங்களுக்கு இதுபோன்ற அனுபவம் உண்டா? அப்படியென்றால் அதுவே சரியான ஆதாரம், ஆம், தேவன் உங்களைக் கண்டுபிடித்தார் என்பதற்கு இதுவே நேர்மறை சான்றாக இருக்கிறது.
“அவனை நடத்தினார்” கண்டுபிடித்தார் என்பது தேவன் தனது மக்களிடம் இடைபடும் விதத்தின் முடிவல்ல, அவரது செயல்பாடுகளின் ஆரம்பம் மட்டுமே! அவர்களைக் கண்டறிந்த தேவன் அவர்களை என்றும் கைவிடுவதில்லை. காணாமல் போய் அலைந்து கொண்டிருக்கும் தன்னுடைய பிள்ளையை கண்டறிந்த தேவன், தற்போது அவர்களை இடுக்கமான பாதையில் வழிநடத்துகிறார். தேவனுடைய வழிநடத்துதல் குறித்து ஓசியாவின் புத்தகத்தில் அழகான காரியத்தை வாசிக்கிறோம். “நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்” (ஓசியா 11:3). அன்பு நிறைந்த தாய் தன் சிறு பிள்ளையின் கால்கள் பலவீனமாயும் நடக்கப் பழக்கமும் இல்லாத போது, கைப்பிடித்து நடக்கப்பழக்குவதுபோல, தேவனும் தம்முடைய மக்களைக் கரம்பிடித்து தம்முடைய நாமத்தினிமித்தம் நீதியின் பாதைகளில் நடத்துகிறார். அப்படிப்பட்டது தான் தேவனுடைய வாக்குத்தத்தம்: “அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்” (1 சாமுவேல் 2:9). தேவனின் வழிநடத்தலில் மூன்று பரிமாணங்கள் உள்ளன.
அ. சுவிசேக்ஷத்தின் நடத்துதல். - இயேசு சொல்லுகிறார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6). ஆனால், அவர் இவ்விதமாகவும் சொல்லுகிறார், “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்" (யோவான் 6:44). இதுதான் தேவன் வழிநடத்தும் பாதை. அவர் பாவியை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்கிறார். அன்புள்ள வாசகரே! நீங்கள் இந்த பாதையில் இரட்சகரிடம் வழி நடத்தப்பட்டிருக்கிறீர்களா? கிறிஸ்துவே உங்களுடைய நம்பிக்கையாக இருக்கிறாரா? அவருடைய விலைமதிப்பற்ற இரத்தம் மட்டுமே உங்களுக்கு போதுமானது என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடம் உங்களை வழிநடத்தியதற்காக பிதாவாகிய தேவனை துதிப்பதற்கு எவ்வளவு பெரிய காரணம் இருக்கிறது!
ஆ. போதித்து நடத்துதல். – “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;" (யோவான் 16:13) என்று இயேசு கூறினார். நம்மால் சத்தியத்தை கண்டுபிடித்து, அதில் நடக்கும் திறன் நம்மிடம் இல்லை, எனவே நம்மை சத்தியத்தை நோக்கி வழிநடத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. “மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்" (ரோமர் 8:14). அவரே நம்மை வேத வசனம் என்னும் புல்லுள்ள இடங்களில் மேய்த்து அவருடைய வாக்குத்தத்தமாகிய அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் நம்மைக்கொண்டு போய் விடுகிறார் (சங்கீதம் 23:2)! அவருடைய வார்த்தையிலிருந்து பிரகாசிக்கும் ஒவ்வொரு ஒளிக்கதிர்க்கும் நாம் எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டும்!
இ. அன்றாட வாழ்வியல் நடத்துதல். - “நீர் உம்முடைய மிகுந்த மனஉருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை. அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை" (நெகேமியா 9:19). அன்றைக்கு கர்த்தர் இஸ்ரவேலர்களை எப்படி வழி நடத்தினாரோ, அதே வகையில் இன்றும் இந்த வனாந்தரம் என்னும் உலகில் ஒவ்வொரு அடியிலும் நம்மை வழிநடத்துகிறார். இது எவ்வளவு பெரிய கருணை! “நல்ல மனுக்ஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும். அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்" (சங்கீதம் 37:23). ஆம், நம் வாழ்வில் உள்ள அனைத்தும் உன்னதமான தேவனால் நடத்தப்படுகிறது. என் காலங்கள் அனைத்தும் உம் கையில், எல்லா நிகழ்வுகளும் உம் கட்டளையால் நடக்கின்றன. எல்லாம் வந்து, நிலைத்து முடிய வேண்டும், நமது பரம நண்பரின் விருப்பப்படியே.
“அவனை உணர்த்தினார்” தேவன் நமக்கும் அதையே செய்கிறார்; தேவன் நமக்கு ஆலோசனை தரும்படியாகவே தம்முடைய இரக்கத்தின்படியே, வேதத்தை நமக்கு கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார், அவர் நம்மை இருளில் தடவித் திரியாதபடி நம் கால்களுக்கு ஒரு தீபத்தையும், நம் பாதைக்கு வெளிச்சத்தையும் கொடுத்தார். மேலும், அவருடைய வார்த்தையை நாம் புரிந்துகொள்ளும் பணியை போதிய திறனற்ற நமது சுய அறிவுக்கே விட்டுவிடவில்லை. நமக்கு போதிப்பதற்காகத் தடுமாற்றம் இல்லாத போதகர் கொடுக்கப்பட்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நமது போதகர். “நீங்கள் பரிசுத்தராலே அபிக்ஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் அவராலே பெற்ற அபிக்ஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை” (1 யோவான் 2:20,27).
தேவனுடைய வார்த்தையைப் பற்றிய சரியான புரிதல் என்பது மனித புத்திசாலித்தனத்தால் அடையக்கூடிய ஒன்றல்ல, அது தேவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஈவு. இதைப் பற்றி இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது: “பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்" (யோவான் 3:27). வார்த்தைகள் எவ்வளவு தெளிவாக எழுதப்பட்டிருந்தாலும், நீங்கள் பார்வையற்றவனாக இருந்தால் என்ன பயன்? ஆகவே “ஜென்மசுபாவமான மனுக்ஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்” (1 கொரிந்தியர் 2:14) என்று எழுதப்பட்டுள்ளது. ஆவிக்குரிய பகுத்தறிவு பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே வழங்கப்படுகிறது.
“அவனை உணர்த்தினார்" நமது பலவீனத்தை தேவன் எவ்வளவு பொறுமையாக தாங்குகிறார்! எவ்வளவு கிருபை உள்ளவராய் நமக்கு திரும்பவும் கொஞ்சம் கொஞ்சமாக கற்பனையின் மேல் கற்பனையையும், பிரமாணத்தின் மேல் பிரமாணத்தையும் நமக்குச் சொல்லித்தருகிறார் (ஏசாயா 28:10). நாம் எவ்வளவு மந்தமாக இருந்தாலும், அவர் நம்மைப் போதிக்கிறதில் பொறுமை காக்கிறார். ஏனெனில் கர்த்தர் நமக்காக யாவையும் செய்து முடிப்பார் (சங்கீதம் 138:8) என்று வாக்குறுதி அளித்துள்ளார். அவர் உங்களை உணர்த்தியுள்ளாரா? மனிதன் முழுமையான வீழ்ந்துவிட்டான் என்றும், பாவத்திலிருந்து தன்னை தானே விடுவித்துக்கொள்ள அவன் சக்தியற்றவன் என்றும் போதித்திருக்கிறாரா? நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் (யோவான் 3:7) என்கிற நம்மைத் தாழ்த்த வேண்டிய சத்தியத்தையும், மறுபிறப்பின் அனுபவம் தேவனால் மட்டுமே சாத்தியம் என்றும், அதில் மனித பங்கு எதுவும் இல்லை (யோவான் 1:13) உங்களுக்கு உணர்த்தி இருக்கிறாரா? எல்லா பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்க அவருடைய இரத்தம் போதுமானது (1 யோவான் 1:7) என்றும் தேவனுடைய குமாரனின் பரிகார பலியின் சிறப்பை அவர் உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறாரா? அப்படியானால், அப்படிப்பட்ட தெய்வீக உணர்த்துதலுக்காக நீங்கள் அவருக்கு நன்றி சொல்ல எவ்வளவு பெரிய காரணம் இருக்கிறது பாருங்கள்!
“அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்." கிறிஸ்தவம் ஒரு நிபந்தனை சார்ந்த மதமோ, ஏதேச்சையானதும் நிச்சயமற்றதுமான மதமோ அல்ல. அத்தகைய மதத்திற்கு பொருத்தமான பெயர் அர்மீனியனிசம். இந்த ஆர்மினியனிசம் என்ற பிரிவு ரோமன் கத்தோலிக்க அமைப்பின் குமாரத்தி ஆகும். அது தேவனை அவமதிக்கிறதும், வேதத்தை எதிர்க்கிறதும், ஆத்துமாக்களை அழிவுக்கு நேராய் கூட்டிச் செல்வதுமான இந்த ரோமன் கத்தோலிக்க மதம். அதன் தந்தை பிசாசாகிய சாத்தான் என்பதால், அது மனிதனுடைய சுய நீதியையும் சுய மேன்மையையும் ஊக்குவிக்கிறது, மனிதனுக்கு இரட்சிக்கப்படும் திறன் உள்ளது என்று போதிக்கிறது, மேலும் பல உண்மையற்ற கூறுகள் மூலம் நிச்சயமற்ற தன்மையையும் கவலையையும் உருவாக்குகிறது. ஆனால் கிறிஸ்தவம் உறுதியைக் கொண்டுவருகிறது. அந்த உறுதியானது தேவனின் மாறாத அன்பிலிருந்தும் திட்டத்திலிருந்தும் எழுகிறது. நற்கிரியையைத் துவங்கியவராகியே தேவனே அதை நிறைவேற்றவும் செய்வார்.
“கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர். அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை. அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்" (சங்கீதம் 37:28). இது எவ்வளவு பாக்கியம்! நோவா குடிபோதையில் இருந்தபோது கர்த்தர் அவரைக் கைவிட்டாரா? நிச்சயமாக இல்லை. அபிமலேக்கிடம் பொய் சொன்ன போது தேவன் ஆபிரகாமைக் கைவிட்டாரா? இல்லையே. மோசே பாறையை அடித்ததால் அவரைக் கைவிட்டாரா? நிச்சயமாக இல்லை என்பதை இயேசு கிறிஸ்துவின் மறுரூபமலைக் காட்சி நிரூபிக்கிறது. அதேபோல தாவீது தன் பாவத்தால் கர்த்தருடைய எதிரிகள் தேவனுடைய நாமத்தைத் தூக்ஷிக்க இடங்கொடுத்த பாவங்களினிமித்தம் அவனைக் கைவிட்டாரா? நிச்சயமாக இல்லை. அதற்குப் பதிலாக அவனை மனந்திரும்புதலுக்கு வழி நடத்தி, தன்னுடைய பாவத்தை ஒப்புக்கொள்ளச் செய்து, தன்னுடைய தாசரில் ஒருவரை அனுப்பி, “நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்” (2 சாமுவேல் 12:13) என்று சொல்லக் கட்டளையிட்டார்.
“கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். (சங்கீதம் 121: 5 – 8). இவைகள் நமது உண்மையுள்ள தேவனின் உறுதியான உடன்படிக்கையின் சான்றுகள். இவை மூவொரு தேவனான கர்த்தரின் மாறாத வாக்குறுதிகள். பொய் சொல்லாத தேவனின் சத்தியத்தின் வாக்குறுதிகள் இவை. தேவனின் வாக்குறுதியில் எந்த நிபந்தனையும் இல்லை. ‘ஒருவேளை’ என்ற வார்த்தைக்கு இங்கு இடமில்லை. விசுவாசியின் மீது தேவனின் பாதுகாப்பிற்கு எந்த சூழ்நிலையும் தடையாக இல்லை. எந்த மாற்றமும் அந்த தெய்வீக ஸ்திரத்தன்மையை மாற்றவோ பாதிக்கவோ முடியாது. ஐஸ்வரியம் வலையில் அகப்படுத்தினாலும், வறுமை இடறச் செய்ய முயற்சித்தாலும்;, சாத்தான் நம்மை சோதித்தாலும், உள்ளான பாவங்கள் எரிச்சலூட்டினாலும், இவையெல்லாம் கிறிஸ்துவின் ஆடுகளாகிய நம்மில் ஒருவரைக் கூட அழிக்க முடியாது. மறுபுறம், இதுபோன்ற அனுபவங்கள் அனைத்தும் நம் தேவனின் இரட்சிப்பின் கரத்தை இன்னும் நேரடியாகவும் மகிமையாகவும் வெளிப்படுத்த உதவுகின்றன.
“கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே” நாம் காக்கப்பட்டிருக்கிறோம் (1 பேதுரு 1:5). கோபமடைந்த புறஜாதி பேரரசர்களின் சிங்கக் கூண்டுகளும், நெருப்புக் குழிகளும் முன்குறிக்கப்பட்டவர்களின் விசுவாசத்தைச் சோதிக்க முயற்சிக்கும், ஆனால் அவைகள் இவர்களின் விசுவாசத்தைக் காயப்படுத்தவோ அழிக்கவோ முடியாது. கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, நம்மை கண்டறிந்து, வழிநடத்தி, போதித்து, இரட்சிக்கும் திருத்துவ தேவனுக்கு நன்றி செலுத்த முடியும் எவ்வளவு பெரிய காரணம் இருக்கிறது பாருங்கள்!
“துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்" (மத்தேயு 5:4)
துக்கம் என்பதை விரும்பத்தகாததும், வேதனை நிறைந்ததுமான மனித இயல்பு எனலாம். நமது மனம் துன்பத்தினாலும் கவலையினாலும் உடனடியாகவே சுருங்கி விடுகிறது. இயல்பாகவே நாம் மகிழ்ச்சியான சமுதாயத்தை விரும்புகிறோம். நமது தியான வசனம் மீண்டும் பிறவாதவர்களுக்கு விநோதமாய்த் தோன்றலாம், ஆனால் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு இது இனிமையானதகவும், மன நிறைவான இசையாகவும் தோன்றுகிறது. ஒருவேளை பாக்கியவானாய் இருந்தால், ஏன் துயரப்பட வேண்டும்? நீங்கள் துயரப்படுகிறவர்களாய் இருந்தால் எப்படி பாக்கியவான்கள் ஆவீர்கள்? இந்த வார்த்தைகளை நாம் சிந்திக்கும்போது, ‘அந்த மனிதன் பேசியது போல் ஒருவரும் ஒருபோதும் பேசவில்லை' என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்" என்பது உலக வாழ்க்கைக்கு நேர் எதிரானது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தலைமுறையிலும் மனிதர்கள் செல்ந்தவர்களையும் மகிழ்ச்சியோடு வாழ்கிறவர்களையும் பாக்கியவான்களாகக் கருதுகிறார்கள். ஆனால் கிறிஸ்து மட்டுமே ஆவியில் தாழ்மை உள்ளவர்களை, துயரப்படுகிறவர்களை பாக்கியவான்கள் என்கிறார். எல்லாவிதமான துன்பங்களையும் அவர் இந்த இடத்தில் குறிப்பிடவில்லை என்பதே உண்மை. மரணத்திற்கு ஏதுவான துக்கமும் உள்ளது. “லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது” (2 கொரிந்தியர் 7:10). ஆனால் இங்கு வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதம் ஆவிக்குரிய துயரத்திற்கு மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. ஆசீர்வதிக்கப்பட்ட துயரம் என்பது தேவனின் பரிசுத்தம், நன்மை மற்றும் நமது சொந்த துன்மார்க்கம், நமது வீழ்ச்சியான இயல்பு, நமது நடத்தையில் இருக்கும் புரட்டுத்தனம் போன்றவற்றை அங்கீகரிப்பதால் வரும் துயரம்.
சுவிசேக்ஷ பகுதியில் வரும் பாக்கியவான்கள் குறித்த எட்டு குறிப்புகள் நான்கு ஜோடிகளாக அமைக்கப்பட்ட வகையில் தியானிப்பது நலமாக இருக்கும். இந்தப் புரிதல் நியாயமானது என்பதை நாம் இந்த தியானத்தில் தொடரும்போது புரிந்து கொள்ளலாம். இந்த எட்டில் முதல் ஆசீர்வாதம் ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கு என்பதை தங்களில் ஒன்றும் இல்லை, வெறுமையே உள்ளது என்கிற சத்தியத்தை உணர்பவர்கள் என்று நாம் அர்த்தம் கொள்கிறோம். அப்படியான ஏழ்மையில் இருந்து துயரத்திற்குக் கடந்து செல்வது புரிந்து கொள்ள மிகவும் இலகுவானதே. உண்மையில் இவை இரண்டும் தோழர்கள் என்றே கருதும் அளவிற்கு ஒன்றுடன் மற்றொன்று மிகவும் நெருக்கமாகப்; பின்தொடர்கின்றது.
இங்கே “துயரம்" என்ற வார்த்தையின் அர்த்தம் பலவீனம், துன்பம், இழப்பு போன்ற உணர்வுகளை விட அதிகம். இது பாவத்திற்காக வரும் துயரம். “இங்கு துக்கப்படுவது என்பது நமது ஆவியில் உணரும் கைவிடப்பட்ட நிலை, நமக்கும் தேவனுக்கும் பிரிவினையை ஏற்படுத்திய நம் அக்கிரமங்கள் நிமித்தம் வரும் துயரம், நம்மிடம் உள்ள அறச்செயல்களைப் போற்றியதின் விளைவாக வந்த துயரம், நமது சுய-நீதியைச் சார்ந்துகொண்டதால் வந்த துயரம், தேவனை எதிர்த்து, தேவனின் சித்தத்திற்கு விரோதமாக இருந்ததற்கான கவலை. இது போன்ற துயரம் ஆவியின் எளிமையுடன் எப்போதும் இணைந்தே பயணிக்கிறது” (டாக்டர். பெர்ஸன்).
நம்முடைய இரட்சகர் எப்படிப்பட்ட நபரை பாக்கியவான் என்று அழைத்தார் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை லூக்கா 18 -ல் நாம் பார்க்கிறோம். அங்கு சொல்லப்பட்ட ஜெபம் கவனிக்கதக்கது. முதலாவதாக ஒரு சுயநீதி உள்ளவன் தேவாலயத்தில் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். (லூக்கா 18:11,12). அவன் சொன்னவை உண்மையாக இருந்திருக்கலாம், ஆனால் அந்த பரிசேயன் ஆக்கினைக்குள்ளானவானகவே தன் வீட்டுக்குப்போனான். அவனுடைய சிறந்த ஆடை அழுக்கான கந்தைதான் என்றும், அவனது அங்கி கலங்கமுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளாமல் போனான். அதன்பிறகு ஆயக்காரனைக்குறித்து நாம் வாசிக்கிறோம். “எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது” (சங்கீதம் 40:12) என்று சங்கீதக்காரனைப் போல, புலம்புகிறவனாக ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவன் நீதிமானாக தன்னுடைய வீட்டுக்கு சென்றான் (லூக்கா 18:13). ஏனெனில் அவன் ஆவியில் எளிமையுள்ளவனாகவும், தன் பாவத்திற்காகப் புலம்பியவனாகவும் இருந்தான்.
தேவனால் பிறந்த பிள்ளைகளின் பிறப்பின் முதல்வகை அடையாளங்கள் இவை தான். தாங்கள் ஆவிக்குரிய ரீதியில் துயரப்படுகிறவர்கள் என்பதை உணர்ந்து, அதற்காக வருத்தப்படாதவர்கள், அவர்கள் திருச்சபையின் உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, அந்த திருச்சபையில் பணியாற்றுபவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவோ பார்க்கவோ முடியாது. நொறுங்குணடு பணிந்த இருதயத்தில் வாசம்பண்ணும்படி மகா தேவன் இறங்கி வருவதைக் குறித்து கிறிஸ்தவ வாசகர் எத்துணை நன்றியாக இருக்க வேண்டும். பழைய ஏற்பாடில் இதிலும் மகத்துவமான ஒன்றை வேறு எங்கு நாம் காணமுடியும். தேவனுடைய பார்வையில் வானங்கள் கூட சுத்தமில்லாதிருக்குமானால், மனிதன் அவருக்கு ஏற்ற ஆலயத்தை எந்த மனிதனால் கட்டி எழுப்ப முடியும்? அது எவ்வளவு அழகானதாகவே, மேன்மையானதாகவோ இருந்தாலும் அது தேவன் வாழ உகந்த இடமாகாது என்பதை ஏசாயா 66:2 மற்றும் ஏசாயா 57:15 உணர்த்துகின்றன.
“துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்.” துயரப்படுவது என்பது ஒருவன் தனது பாவங்களினால் வேதனைப்படும் போது உணரும் உணர்வு. ஆனால் அந்த எல்லைக்குள் மட்டுமே மட்டுப்படுவதில்லை. இப்படிப்பட்ட துயரம் கிறிஸ்தவ நிலைக்கு இயல்பான குணம். விசுவாசியை வருத்தமடையச் செய்து, அவன் இருதயத்தில் “நான் நிர்ப்பந்தமான மனுக்ஷன்” (ரோமர் 7:24) என்று கதறப் பண்ணும் அநேக காரியங்கள் உள்ளன. நாம் எளிதில் பின்நோக்கி இழுக்கும்படி நம்முடைய அவிசுவாசம் செயல்படுகிறது, நம்முடைய பாவங்கள் நம் தலைமுடியை விட அதிகமாகி, நம்மை வருத்தமடையச் செய்கிறது. நமது பயனற்ற, வாழ்க்கை நம்மில் தொடர்ச்சியான பெருமூச்சுக்கு உட்படுத்திவிடுகிறது. கிறிஸ்துவின் சந்நிதிலிருந்து இலகுவாக விலகிச் செல்லும் நமது மனநிலை, அவருடன் நெருக்கம் இல்லாத நிலைமை, அவர் மீதான பூரணமற்ற அன்பு ஆகியவை அனைத்தும் நம்மை மிகவும் வருத்தப்படுத்துகின்றன. இது மட்டுமல்ல. வெளிதோற்றத்தால் தங்களை பக்தி உள்ளவர்களாக காண்பித்துக்கொண்டு அதன் பலத்தை மறுதலிக்கும் நிலை எப்பக்கத்திலும் அதிகரித்திருக்கிறது (2 தீமோத்தேயு 3:5). தேவனின் சத்தியத்தை அவமதிக்கும் ஆயிரக்கணக்கான தளங்களிலிருந்து வெளிவரும் பொய்யான உபதேசங்கள், தேவ மக்களிடையே பிளவுகள், சகோதரர்களிடையே ஏற்படும் சச்சரவுகள், இவை அனைத்தும் பெரும் வேதனையை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், உலகில் நடக்கும் கொடூரமான துன்மார்க்கநிலை, கிறிஸ்துவை அவமதிக்கும் மனிதர்கள், சொல்லொணாத் துன்பங்கள் சூழ்ந்திருப்பது போன்றவைகளை நினைக்கும்போது நமக்குள்ளேயே நாம் பெருமூச்சு விடுகிறோம். ஒரு கிறிஸ்தவன் தேவனுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக ஆண்டவரைப் புண்படுத்தும் அனைத்தும் அவரையும் துக்கப்படுத்துகிறது. அவனுடைய மனப்பான்மை சங்கீதகரானோடும் (சங்கீதம் 119:53), எரேமியாவோடும் (எரேமியா 13:17) மற்றும் எசேக்கியேலிடமும் (எசேக்கியேல் 9:4) ஒத்துப்போகிறது.
“அவர்கள் ஆறுதலடைவார்கள்". இந்த ஆறுதல் முதன்மையாக குற்றஞ்சாட்டும் மனசாட்சியை அகற்றுவதிலிருந்து வருகிறது. இந்த ஆறுதல் பரிசுத்த ஆவியானவர் கிருபையின் சுவிசேக்ஷத்தை பாவ உணர்வு பெற்று இரட்சகரின் தேவையை உணர்ந்த நபரில் அப்பியாசப்படுத்துவதன் மூலம் நிறைவடைகிறது. பாவத்திற்காகப் பிராயச்சித்தம் செய்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாக இந்த மன்னிப்பு இலவசமாகவும், முழுமையாகவும் கிடைக்கிறது என்கிற உணர்வை உண்டாக்குகிறது. பிரியமானவருக்குள் அங்கிகரிக்கப்பட்ட (எபேசியர் 1:6) ஒவ்வொரு இருதயத்தையும் நிரப்பும் எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தினால் இந்த ஆறுதல் உண்டாகிறது. தேவன் ஆரோக்கியம் வரப்பண்ணுவதற்கு முன்னர் காயப்படுத்துகிறார். அவர் உயர்த்துவதற்கு முன்பு தழ்மைப்படுத்துவார். முதலில் அவர் நீதியையும் பரிசுத்தத்தையும் வெளிப்படுத்துகிறார், பின்னர் அவர் தம் இரக்கத்தையும் கிருபையையும் வெளிப்படப் பண்ணுகிறார்.
“அவர்கள் ஆறுதலடைவார்கள்" என்ற சொல்லாடல் கிறிஸ்தவர்களின் வாழ்வில் தொடர்ந்து நிறைவேறி வருவது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. போக்குச்சொல்ல முடியாத தன்னுடைய தோல்விக்காக துக்கத்துடன் தன் பாவங்களையெல்லாம் ஒப்புக்கொண்ட பிறகு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் தான் பரிசுத்தப்படுத்தப்படுவேன் என்ற பதிலையும் ஆறுதலையும் பெறுகிறான் (1 யோவான் 1:7). தன்னைச் சுற்றி கிறிஸ்துவிற்கு நடக்கும் அவமானத்தைக் கண்டு அவர் புலம்பினாலும், சாத்தான் முற்றிலுமாக அகற்றப்பட்டு, கிறிஸ்து ராஜா தனது கிருபையின் சிம்மாசனத்தில் அமர்ந்து நீதியின் ராஜ்யத்தை நிறுவுவார் என்ற அறிவு அவருக்கு ஆறுதலாக இருக்கிறது. கர்த்தரின் கடிந்துகொள்ளும் கரம் அவன் மீது தங்கியிருந்தாலும், தற்போது விதிக்கப்படும் தண்டனைகள் அனைத்தும் அவனுக்கு துக்கமாகத் தோன்றினாலும், ஆனந்தம் என்பது இல்லை என்றாலும், வரப்போகும் மகத்தான நித்திய மகிமைக்கு அவனைத் தயார்படுத்துவதற்காகவே (2 கொரிந்தியர் 4:17) இவையனைத்தும் இருப்பதை உணர்ந்துகொள்வது அவனுக்கு ஒரு பெரிய ஆறுதல். தன் தேவனுடன் ஐக்கியம் கொண்ட ஒரு விசுவாசி அப்போஸ்தலனுடன் சேர்ந்து, “துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோக்ஷப்படுகிறவர்களாகவும்" (2 கொரிந்தியர் 6:10) இருக்கிறோம் என்று கூறலாம். ஆனால் பலமுறை மாரா என்ற கசப்பான தண்ணீரை குடிக்க நேரிட்டாலும், தேவன் அதன் அருகிலே கசப்பை முறிக்கும் ஒரு செடியை அதன் பக்கத்திலே நட்டிருப்பதைக் காண்பார். ஆம், இப்போதும் துயரப்படுகிற கிறிஸ்தவர்கள் தெய்வீக ஆறுதல் தருகிறவரால் ஆறுதல் அடைகிறார்கள். அவருடைய ஊழியர்கள் ஊழியத்தின் வழியாகவும், சக கிறிஸ்தவர்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகளினாலும் ஆறுதல் அடைகிறார்கள். இது போன்ற வாய்ப்புகள் இல்லாதபோது, தேவனுடைய வார்த்தையின் வாக்குறுதிகள் அவர்களின் நினைவில் கொண்டு வரப்பட்டு ஆறுதல் பெறுகிறார்கள். நல்ல ரசம் கடைசிவரைக்கும் வைத்து வைக்கப்பட்டிருக்கிறது. சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்" (சங்கீதம் 30:5). அவர் இல்லாதது போன்ற இந்த நீண்ட இரவில், துக்கம் அனுபவித்தவராகிய மனுக்ஷகுமாரனுடன் ஐக்கியம்கொள்ள பரிசுத்தவான்கள் அழைக்கப்படுகின்றனர். ஆனால் தேவனுக்கே மகிமை, "நாம் அவருடன் பாடுசகித்தால், அவரோடே கூட ஆளுகையும் செய்வோம்" என்று எழுதப்பட்டுள்ளது (ரோமர் 8:17). அந்த மேகமற்ற விடியலைக் காணும்போது அது எவ்வளவு ஆறுதலையும் சந்தோக்ஷத்தையும் நமக்குத் தரும்! அப்போது ஏசாயா 35:10-ல் சொல்லப்பட்ட வார்த்தை நிறைவேறும்: “துக்கமும் பெருமூச்சும் பறந்துபோகும்." அது மட்டுமல்லாமல் வெளிப்படுத்துதல் 21:3-4ல் சொல்லப்பட்ட வார்த்தையும் நிறைவேறும்.
“நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்." (மத்தேயு 5:6).
முதல் மூன்று பாக்கியவான்கள் பரிசுத்த ஆவியின் ஏவுதலின்படி இதயத்தின் நோக்கங்களில் கவனம் செலுத்துகின்றன. முதலில் நாம் தேவை உள்ளவர்கள், வெறுமையானவர்கள் போன்ற உணர்வை அடைகிறோம். இரண்டாவதாக, நான் என்னை நானே நியாயந்தீர்க்கிறேன், என் தவறுகளை அடையாளம் கண்டு, என் பாவங்களுக்காக வருத்தப்படுகிறேன். மூன்றாவதாக, நான் தேவனுக்கு முன்பாக என்னை நியாயப்படுத்துவதை நிறுத்திவிட்டு, நான் பெருமையான பேசும் என் சுயநீதியையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, சாந்தமானவனாக மண்ணிலும் சாம்பலிலும் விழுந்து மனந்திரும்புகிறேன். இப்போது இந்த நான்காவது ஆசீர்வாதத்தில் என் கவனம் எனக்கு வெளியே ஏதோவொன்றின் மீது ஈர்க்கப்படுகிறது. என்னிடம் அது இல்லை என்பதை நான் உணர்கிறேன், ஆனாலும் அது எனக்கு மிகவும் தேவையானது என்பதை அறிந்து அதற்காக ஏங்குகிறேன்.
நமது தியான வசனத்தில் வரும் “நீதி" என்ற வார்த்தையைப் பற்றி காரணமின்றி நிறைய வெறுமையான வாதங்கள் முளைத்துள்ளன. இதன் முக்கியத்துவத்தை உணர, இந்த வார்த்தை பயன்படுத்தப்படும் பழைய ஏற்பாட்டுப் பகுதிகளைக் கருத்தில் கொண்டு இந்த தலைப்பை முழுமையாகவும் மற்றும் புதிய ஏற்பாட்டு விளக்கங்களின் வெளிச்சத்திலும் அவற்றைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.
“ஆகாயமண்டலங்கள் நீதியைப் பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக் கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்." (ஏசாயா 45:8). இந்த வசனத்தின் முதல் பாகத்தின் வார்த்தைகள் பூமியின் மீது கிறிஸ்துவின் வருகையை குறித்து விளக்குகிறது. இரண்டாவது பாகம் நமக்காக அவருடைய மரணம் உயிர்தெழுதலை தெரிவிக்கிறது. “நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்” (ரோமர் 4:25). “முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள். என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை. என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை. நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்." (ஏசாயா 46:12-13) “என் நீதி சமீபமாயிருக்கிறது. என் இரட்சிப்பு வெளிப்படும். என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும். தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும். (ஏசாயா 51:5) “கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள். என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.” (ஏசாயா 56:1). “கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன். என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது. மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார். பூமி தன் பூண்டுகளை விளைவிப்பது போலவும், தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும், கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்” (ஏசாயா 61:10,11). இந்த வேதபகுதிகள் தேவனுடைய நீதியை தேவன தரும் இரட்சிப்பிற்கு இணையாகச் சொல்வதைத் தெளிவாக்குகிறது.
இந்த வசனங்கள் ரோமர் நிருபத்தில் மேலும் விளக்கி, சுவிசேக்ஷத்தைப் பற்றிய தீர்க்கமான விளக்கங்களை அப்போஸ்தலன் தருகிறார். ரோமர் 1:16,17 -ல் இவிதமாக நாம் வாசிக்கிறோம், “கிறிஸ்துவின் சுவிசேக்ஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேக்ஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது." அதேபோல், ரோமர் 3:22-24 -ல் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது. “அது இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே. விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.” ரோமர் 5:19 -ல் ஆசீர்வாதமான அறிவிப்பு வருகிறது: “அன்றியும் ஒரே மனுக்ஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.” இதே வேளையில் நாம் ரோமர் 10:4 ல் இவ்வாறு கற்றுக்கொள்கிறோம்: “விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்."
ஒரு பாவியிடம் நீதி என்பது எவ்வளவேனும் இல்லை. “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;" என்று எழுதப்பட்டிருக்கிறது. அதனால்தான் தேவன் தம்முடைய மக்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவுக்குள் பரிபூரண நீதியை வழங்கியுள்ளார். இந்த நீதி, தேவனுடைய நியாயபிரமாணத்தை நிறைவேற்றம் என்பது, நம் சார்பாக மற்றொருவரால் (இயேசு கிறிஸ்துவால்) சாத்தியமானதாகும். இப்போது இந்த நீதியானது விசுவாசிக்கும் ஒவ்வொரு பாவிக்கும் கிறிஸ்துவால் சாட்டப்படுகிறது. தேவனுடைய மக்களின் பாவங்கள் கிறிஸ்துவின் மீது எவ்விதமாக சுமத்தப்பட்டதோ, கிறிஸ்துவின் நீதி அவர்கள் மீது அவ்விதமாக சுமத்தப்படுகிறது. (பார்க்கவும் 2 கொரிந்தியர் 5:21). இதுவே நமக்குத் தேவையான, ஆசீர்வதிக்கப்பட்ட நீதியைக் குறித்த வேத போதனையின் சுருக்கமான விளக்கமாகும்.
“நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;" பசி என்பது ஒரு நபரின் பற்றாக்குறையை அங்கீகரிப்பதை குறிக்கிறது, முதலில், பரிசுத்த ஆவியானவர் தேவனின் பரிசுத்தமான கட்டளைகளை நம் இதயத்தின் முன் வைக்கிறார். அந்த பரிசுத்த கட்டளைகளின் தரத்தை அவரால் ஒருபோதும் குறைக்க முடியாது. “வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்” (மத்தேயு 5:20) என்பதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார். இரண்டாவதாக அவன் தேவனுடைய எதிர்பார்ப்புக்கு எவ்வளவு பின்தங்கியிருக்கிறான் என்பதை உணர்ந்துக் கொள்கிறான், இது அவனை தேவனுக்கு முன்பாக துக்கப்படுத்துவதற்கு அது வழி நடத்துகிறது. உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் இருக்கிறதா?
மூன்றாவதாக பரிசுத்த ஆவியானவர் ஊக்கப்படுத்திய இருதயத்தில் பசிதாகத்தை பிறக்கவைத்து அவன் தனக்கு இல்லாததைக் தேடும்படி அவனைத் தூண்டப்படுகிறான், அப்பொழுது அவனுடைய பார்வை கிறிஸ்துவின் பக்கமாக செய்கிறது. ஏனெனில் அவரே “நமது நீதியாயிருக்கிற கர்த்தர்" (எரேமியா 23:6). என்பதை அவன் அறிகிறான்.
முந்தையதைப் போலவே, இந்த நான்காவது ஆசீர்வாதமும் இரட்சிப்புக்கு முன் தொடங்கி, இரட்சிக்கப்பட்ட பாவியில் பூரணப்படுத்தப்படுகிறது. பசியின் இந்த அனுபவம் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. ஒரு காலத்தில் கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட இந்த மனிதன் இப்போது அவரைப் போல இருக்க ஆசைப்படுகிறான். இந்த செயல்முறையை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க முடிந்தால், அது கடவுளுக்காக ஏங்கும் ஒரு புதுப்பிக்கப்பட்ட இதயம்; (சங்கீதம் 42:1) அவருடன் நெருங்கிய ஐக்கியத்தை விரும்புவர் அவருடைய மகனின் சாயலாக மாற வேண்டும் என்ற ஏங்குகிறார். புதிய இயல்பு அத்தகைய குணங்களை வலுப்படுத்தவும், தூண்டவும், திருப்திப்படுத்தவும் அடிப்படையான தெய்வீக ஆசீர்வாதத்தை நாடுகிறது.
நம் வேதபகுதியின் மூலம் முன்வைக்கப்படும் அத்தகைய அற்புதமான யோசனை மனித நுண்ணறிவிலிருந்து எழுந்திருக்க முடியாது. ஜீவ அப்பமாகிய அவரோடு நாம் ஐக்கியமாகி, சகல பரிபூரணமும் வாசமாக இருக்கும் தேவகுமாரனுடன் இருந்தும், பசிதாகமாய் இருப்பது எப்படி சாத்தியம்? ஆனால் புதுப்பிக்கப்பட்ட இருதய அனுபவம் அப்படித்தான் இருக்கிறது. இங்குள்ள வினைச்சொல்லின் நேரத்தைக் கவனியுங்கள், “உடையவர்கள் பாக்கியவான்கள்” என்று சொல்லாமல் “பசி தாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்று வருகிறது. அன்பான வாசகரே, உங்கள் சாதனகைளிலும் உங்கள் தற்போதைய நிலையிலும் திருப்தி அடைகிறீர்களா? பசி தாகத்துடன் இருப்பது ஒவ்வொரு தலைமுறையிலும் தேவனுடைய பரிசுத்தவான்களின் அனுபவம் (காணவும் சங்கீதம் 82:4, பிலிப்பியர் 3:8,14)
“அவர்கள் திருப்தி அடைவார்கள்". தலைப்பு உரையின் முதல் பகுதியின் உட்பொருளைப் போலவே, இது இரட்டிப்பாக பூர்த்தி செய்யப்படுகிறது. ஒன்று இரட்சிப்பின் தொடக்கத்தில் நிகழும் நிறைவு, மற்றொன்று இரட்சிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் தொடரும் நிறைவு. கடவுள் ஒருவரின் வாழ்க்கையில் பசியை உண்டாக்குவது அதைத் திருப்திப்படுத்த மட்டுமே. ஒரு தாழ்ந்த பாவி கிறிஸ்துவின் தேவையை உணர வைக்கப்படுகிறான், அதனால் அவன் இழுக்கப்பட்டு தன்னைத் தொடும்படி வழிநடத்தப்படுகிறான். மனந்திரும்பி தகப்பனிடம் திரும்பிய ஊதாரித்தனமான மகனைப் போல, விசுவாசியான பாவி இப்போது கொழுத்த கன்றுக்கு ஒப்பிடப்பட்டவரால் வளர்க்கப்படுகிறார். யெகோவாவில் எனக்கு நீதி இருக்கிறது என்பதை (ஏசாயா 45:24) அவர் அறிவார்.
“அவர்கள் திருப்தியடைவார்கள்" 'அவர்கள் நிரப்பப்படுவார்கள்” துன்மார்க்கத்துக்கு ஏதுவான மதுவால் அல்ல, “ஆவியால் நிரப்பப்படுவார்கள்" (எபேசியர் 5:18). அவர்கள் எல்லா புத்திக்கும் மேலான கடவுளின் சமாதானத்தால் (பிலிப்பியர் 4:7) நிரப்பப்பட்டுள்ளனர். அவர்கள் துக்கமற்ற தெய்வீக ஆசீர்வாதங்களால் நிரப்பப்படுவார்கள். நமக்காக எல்லாவற்றையும் செய்த அவருக்கு ஏறெடுக்கும் துதி ஸ்தோத்திரத்தினால் நிரப்பப்படுவார்கள். இந்த ஏழை உலகம் கொடுக்க முடியாததும் எடுக்க முடியாததுமானவற்;றால் அவர்கள் நிரப்பப்படுவார்கள். அவருடைய நிறைவால் அவர்களுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது. ஆனால் இவை அனைத்தும் கடவுளை நேசிப்பவர்களுக்கு சுவைக்க மட்டுமே கொடுக்கப்படுகின்றன. வரவிருக்கும் மகிமையில் நாம் அவருடைய பரிசுத்தத்தால் நிரப்பப்படுவோம், ஏனென்றால் அவர் தோன்றும்போது நாம் அவரைப் போல இருப்போம். அப்போது நமது பாவ சுபாவம் முற்றிலும் நீங்கும். அதற்குப் பின், பசியும் தாகமும் ஒருபோதும் இருக்காது. (வெளிப்படுத்துதல் 7:16).
“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” (மத்தேயு 5:8).
இது நம் ஆண்டவரின் எதிரிகளின் கைகளால் சிதைக்கப்பட்ட மற்றொரு ஆசீர்வாதம். தங்கள் மூதாதையர்களான பரிசேயர்களைப் போலவே, தாங்கள் மட்டுமே சத்தியத்தில் உயர்ந்தவர்கள் என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள், மெய்யான தேவனுடைய மக்களிடம் இருக்கும் பரிசுத்தம் தங்களிடம் மட்டுமே இருப்பதாக பெருமை பேசுகிறார்கள். தங்களில் இருந்த பழைய பாவ சுபாவம் முழுவதுமாக பரிசுத்தமாகிவிட்டதாகவோ, அல்லது அவர்களிலுள்ள சரீர சுபாவம் முற்றாக தேவன் அழித்துவிட்டதாகவும் அதினால், அவர்கள் ஒருபோதும் பாவம் செய்யவில்லை என்றும், குறைந்த பட்சம் எந்த பாவ இச்சைகளும் எண்ணங்களும் அவர்களுக்குள் நுழையவில்லை என்றும். நினைத்து ஏமாற்றப்பட்ட துரதிக்ஷ்டசாலிகள் கிறிஸ்தவ வரலாற்றில் உண்டு. ஆனால் தேவனுடைய வார்த்தை இப்படியாக சொல்கிறது. “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது” (1 யோவான் 1:8).
சந்தேகத்திற்கு இடமின்றி, அத்தகைய மக்கள், தங்கள் வஞ்சகமான மற்றும் வீண் கருத்துக்களை நியாயப்படுத்த, வேதத்தை சுட்டிக்காட்டி, வசனப் பகுதிகளை மேற்கோள் காட்டி, பாவ பரிகார விக்ஷயத்தில் தேவனுடைய நீதியின் வார்த்தைகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” என்பது நமது இருதயங்கள் தீமையான அசுத்தங்களில் இருந்து கழுவப்பட்டது என்று அர்த்தம் அல்ல, மாறாக கிறிஸ்துவின் தியாகபலி நமது பாவங்களுக்கான தண்டனையை முற்றிலும் அகற்றி இருக்கிறது என்பது தான். “பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்ற வசனப்பகுதி இந்த உலகத்தில் நாம் இருக்கும் நிலையை குறித்ததல்ல, தேவனுக்கு முன்பாக நிற்கும் கிறிஸ்தவனின் நிலையைக் குறிக்கிறது.
இருதயத்தில் சுத்தம் என்பது பாவமே இல்லாத வாழ்க்கை என்ற அர்த்தமுடையது அல்ல என்பதை ஆவியானவரால் எழுதப்பட்ட தேவனின் பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் ஆராயும்போது தெளிவாகிறது, நோவா ஒரு சமயத்தில் குடிபோதையில் இருந்தார். ஆபிரகாமும் தெளிவற்றவராகவும் திசைதிருப்புகிறவராகவும் நடந்து கொண்ட உதாரணங்கள் உள்ளன. மோசே கீழ்ப்படியாதவராக ஆனார். யோபு தான் பிறந்த நாளைச் சபித்தார். எலியா யேசபேலின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் ஓடிப்போனார். பேதுரு கிறிஸ்துவை அவர் எனக்கு யாரென்று தெரியாது என்று மறுத்தார். உண்மைதான்! இருப்பினும், இவை அனைத்தும் கிறிஸ்தவம் நிறுவப்படுவதற்கு முன்பே நடந்தது என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆம், ஆனால் அதன் பிறகும் அவ்வாறுதான் நடந்தது. அப். பவுலை விட கிறிஸ்துவைப் பின்பற்றிய ஒருவரை நாம் எங்கே போய்க் கண்டுபிடிக்க முடியும்? அவருடைய அனுபவம் எப்படி இருக்கிறது? ரோமர் நிருபத்தின் 7வது அதிகாரத்தைப் வாசித்துப் பாருங்கள். “ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். உள்ளான மனுக்ஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது." (ரோமர் 7:21,22,23) என்று எழுதுகிறார். இங்கு அப். பவுல் மனதளவில் நான் தேவனுக்கும் சரீர காரியத்தில் பாவத்திற்கும் அடிமையாய் இருக்கிறேன் என்கிறார். ஓ..! கிறிஸ்தவ வாசகரே! உண்மையில் நம்முடைய பழைய மனிதனின் அசுத்தமும் அவருடைய இருதயத்தில் இருந்துகொண்டு தான் இருக்கிறது என்பதைப் பற்றி அறிவும் உணர்வும் தான் நமக்கு சுத்தமான இருதயம் இருக்கிறது என்பதற்கான முடிவான சான்று. நமது வேதபகுதியை இன்னும் நெருக்கமாகப் பார்க்க முயலுவோம்.
“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்". மலைப் பிரசங்கத்தின் எந்த அம்சத்தைப் பற்றி கருத்துத் தெரிவிப்பதற்கு முன், கர்த்தராகிய இயேசு யூத சமயத்தில் பிறந்து வளர்ந்தவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆவியால் போதிக்கப்பட்ட ஒருவர் இவ்விதமாக கூறினார், 'இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், யூதர்கள் கடைப்பிடிக்கும் வெளிப்புற சுத்திகரிப்பு அல்லது பரிசுத்தம் மற்றும் தேவனுடனான இந்த பரிசுத்தத்தின் தொடர்பை நமது தேவன் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று நான் நினைக்காமல் இருக்க முடியாது. சிலை வழிபாட்டால் தீட்டுப்படுத்தப்பட்ட புறஜாதியாரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தேவனுடைய மக்கள் என்று அழைக்கப்படும் இந்த யூதர்கள், கர்த்தருக்குப் பரிசுத்த மக்களாக ஏற்;படுத்தப் பட்டனர். பரிசுத்த ஜனங்களாக, ஜீவனுள்ள மெய்யான தேவனை ஆராதனை முறைகளின் மூலம் தேவனிடம் செல்லும் பாக்கியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இத்தகைய பரிசுத்தம் மற்றும் தேவனுடன் தொடர்பு கொள்ளும் பாக்கியத்தைப் அடைந்த இவர்களில் வீண் பெருமை வந்தது.
ஆனால் மேசியா இராஜ்யத்தின் வாரிசுகளுக்கு இதைவிட ஒரு உன்னதமான தன்மையும், அதிக பாக்கியமும் இருக்கும். அவர்கள் வெளிப்புறமாக மட்டும் பரிசுத்தமாக இருப்பதுடன் நில்லாமல், “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்". தேவனின் மகிமை தங்கும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவது மட்டுமல்லாமல், தேவனைப் தரிசிக்கவும், அவருடன் நெருங்கிய உறவுக்குள் நுழையவும் வேண்டும். யூதர்களின் வெளிப்புற சட்டங்கள் மற்றும் கடமைகளுக்கு மாறாக, மேசியாவின் ஊழியர்கள் என்கிற வகையில் நமக்கான உறவு உள்ளான ஆவிக்குரிய நிலையில் வெளிப்படுகிறது. நமக்கு முன்பாக உள்ள இந்த வசனப்பகுதி மிகவும் முக்கியமானதும், பூரிப்படையச்செய்யும் சத்தியமாயும் இருக்கிறது. (டாக்டர்: ஜான் புரௌண்)
“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்". இயேசு சொல்லிய இந்த வார்த்தைகள் அதே நேரடி அர்த்தம் உடையதா, அல்லது உருவகமானதா? என்கிற கேள்வியில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. ஒரு நபர் மறுபடியும் பிறக்கும்போது கிடைக்கும் புதிய இதயத்தை அது குறிக்கிறதா? அல்லது தேவ ஆவியால் பரிசுத்தப்படுத்தப்படுவதால் அவனுக்குள் நிகழும் மாற்றத்தின் தினசரி செயல்முறையைக் குறிக்கிறதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளன. ஒருவேளை இவை இரண்டும் ஒன்றாக வருகிறதாக இருக்கலாம். ஆசீர்வாதங்களின் வரிசையில் இந்த ஆசீர்வாதம் பிந்தி வருவதால் நமது இரட்சகர் ஆசீர்வதித்த புதிய இருதய சுத்தம் என்பது நமது மறுபிறப்பின் அனுபவத்தில் தொடங்கி வளர்ந்தேறுகிற ஒன்று தான் என்று நாம் விளங்கிக்கொள்ளலாம். இருப்பினும், ஒரு இரட்சிக்கப்படாத நபரில் இதய சுத்தம் இல்லாததால், இங்கு குறிப்பிட்ட இதய சுத்தத்திற்கு மூலம் மறுபிறப்பு என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
சங்கீதக்காரன் சொன்னார், “இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர். அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்” (சங்கீதம் 51:6). இன்றைய கிறிஸ்தவ வெளிப்புற மறுமலர்ச்சி மற்றும் சீர்திருத்தத்தை விட இது எவ்வளவு ஆழமானது! இங்கே வெளிப்புறப் பிரயாசங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இன்று நாம் நம்மைச் சுற்றி இருக்கும் பெரும்பாலான கிறிஸ்தவம், செயல்களினால் மூலம் இரட்சிப்பைத் தேடும் ஒரு மதமாக அல்லது சரியான விசுவாச சட்டத்திற்கு அறிவுப்பூர்வமாக இசைந்திருப்பதை மட்டும் முக்கியப்படுத்துகிற மதமாக இருக்கிறது. ஆனால் தேவன் இதயத்தைப் பார்க்கிறார். இங்கே இருதயம் என்ற வார்த்தை மனம், ஆசைகள், சித்தம் போன்ற மனதின் உள்ளே இருக்கும் அனைத்தையும் உள்ளடக்கியது. தேவன் அந்தரங்கத்தை பார்ப்பவராக இருப்பதால், அவர் தனது மக்களுக்கு ஒரு புதிய இதயத்தைத் தருகிறார் (எசேக்கியேல் 36:26). இந்த சுத்த இதயத்தைப் பெற்றவர்கள் அனைவருமே பாக்கியவான்கள் தான்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த ஆறாவது பாக்கியமான பண்பு நமது மறுபிறப்பில் நமக்குக் கொடுக்கப்பட்ட புதிய இதயம் மற்றும் சுபாவத்தின் அடுத்தடுத்த மாற்றம், ஆகிய இரண்டையுமே குறிக்கின்றன என்று நான் நம்புகிறேன். முதலில் மறுஜென்ம முழுக்கு (தீத்து 3:5) வழியாக நமது ஆசாபாசங்கள் சுத்திகரிக்கப்பட்டு, நமது விருப்பங்கள் பூமிக்குரியவைகளாக இல்லாமல், பரத்துக்குரியவைகளாக மாற்றப்படுகின்றன. இதற்கு இணையாக “விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி” (அப்போஸ்தலர் 15:9) என்னும் வசனத்தைக் குறிப்பிடலாம். இத்துடன் சேர வேண்டியது மனசாட்சியின் சுத்திகரிப்பு - “துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.” (எபிரேயர் 10:22).
இந்த வசனங்கள் அனைத்தும் மனசாட்சியிலிருந்து பாவத்தின் சுமையை அகற்றுவதையும், விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்கப்படுவதையும் தேவனோடு சமாதனப்படுவதையும் குறிக்கிறது (ரோமர் 5:1).
ஆனால் இங்கே கிறிஸ்துவால் புதுப்பிக்கபட்ட இதயத்தின் சுத்தம் இதோடு நின்று விடாமல் முன்னோக்கி செல்கிறது. சுத்திகரிப்பு என்றால் என்ன? அசுத்தத்திலிருந்து விடுதலை, பிரிக்கப்படாத அன்பு, விசுவாசம் மற்றும் நேர்மையான தன்மை ஆகியவை. ஒரு கிறிஸ்தவப் பண்பாக நாம் அதை தெய்வீக வெளிப்படைத்தன்மை என்று விவரிக்கிறோம். இது கபடம் மற்றும் போலித்தனத்திற்கு எதிரானது. உண்மையான கிறிஸ்தவம் பொறாமை, வெறுப்பு, வஞ்சகம் மற்றும் கள்ளத்தனம் ஆகியவற்றை வெறுக்கிறது. வார்த்தைகளிலும், வெளிப்புற நடத்தையிலும் பரிசுத்தமாக நடந்துகொள்வது மட்டும் போதாது. மெய்யான தேவனுடைய பிள்ளைகள் தனது ஆசைகள், எண்ணங்கள் மற்றும் நோக்கங்களில் பரிசுத்தமாக இருக்க வேண்டும்;. இதுவே கிறிஸ்தவனின் பண்பு. ஒவ்வொரு விசுவாசியும் சந்திக்க கூடிய பரிசோதனையின் கேள்விகள் இவை தான்: பரத்துக்குரிய காரியங்களில் எனது கவனம் இருக்கின்றதா? எனது நோக்கங்கள் பரிசுத்தமானதா? நான் ஏன் தேவனுடைய பிள்ளைகளுடன் சபைகூடி வருகிறேன்? மனிதகள் பார்க்க வேண்டும் என்றா? அல்லது தேவனைச் சந்தித்து அவருடைய உறவை அனுபவிக்கும்படியாகவா?
“அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." இந்த ஆசீர்வாதங்களுடன் இணைக்கப்பட்ட வாக்குதத்தங்களின் நிறைவேற்றம் இப்போதும் எதிர்காலத்திலும் எவ்வாறு நடைபெறும் என்பதை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் ஆத்மீக விவேகத்தோடு இருப்பார்கள். அவர்கள் மன கண்கள்; திறக்கப்பட்டு, தேவனின் பரிசுத்தத்தைப் பார்த்து, அவருடைய குணாதிசயங்களின் மேன்மையை உணர்வார்கள். உங்கள் கண் பிரகாசமாக இருந்தால், உங்கள் சரீரம் முழுவதும் பிரகாசமாக இருக்கும். சத்தியத்தின் மீதுள்ள விசுவாசம் இதயத்தை பரிசுத்தப்படுத்துகிறது, அதனால் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள். சத்தியம் என்பது இயேசு கிறிஸ்துவின் முகத்தில் காணப்படுகிற தேவனின் வெளிப்பாடே அல்லாமல் வேறென்னவாக இருக்கமுடியும்! அதில் தேவனின் பரிசுத்தமும் பரிபூரண கிருபையும் இணைந்துள்ளன. விசுவாசிகள் தெய்வீக சுபாவத்தை தெளிவாகவும் திருப்திகரமாகவும் காண்பது மட்டுமல்லாமல், ஒரு நெருக்கமான, ஆனந்தமான தெய்வீக இருப்பு மற்றும் தேவனோடு உறவு ஆகியவற்றை அனுபவிக்கிறார். அவர்கள் தேவனுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். தேவனுடைய சித்தம் இப்போது தன்னுடைய சித்தமாகிறது, அவர்களுடைய ஐக்கியம் பிதாவுடனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடனும் உள்ளது.
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் இவ்விதமாக தேவனை தரிசிப்பார்கள். கடந்த காலங்களைவிட வருங்காலங்களில் தேவனைப் பற்றிய அவர்களின் புரிதல் மேலும் வளர்ச்சியடையும், மேலும் தேவனுடனான அவர்களின் ஐக்கியம் இன்னும் பெருகும். “நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருக்ஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.” (1 கொரிந்தியர் 13:9-12) அல்லது சங்கீதக்காரனின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன். நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.” (சங்கீதம் 17:15) எனலாம். அதுவரையில், அது வரும்போது மட்டுமே, “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்” என்ற இந்த வார்த்தைகளின் முழுமையான அர்த்தமும் நமக்குத் தெளிவாகப் புரியும் (முனைவர் ஜான் பிரவுன்).
பாக்கியவான்களைக் குறித்த நம்முடைய சிந்தனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆளுமைக்கு நம்மை வழிநடத்தவில்லை என்றால், நமது தியானம் முழுமையடையாது. பாக்கியவான்களின் பண்புகள் வரிசையை விளக்குவதற்கு நாம் ஏற்கனவே சிரத்தை எடுத்துள்ளோம். ஆனால் உண்மையில் கிறிஸ்தவனின் குணாதிசயங்கள் எந்த மாறுபாடும் இல்லாமல் கிறிஸ்துவின் குணாதிசயத்துடன் மிகவும் ஒத்ததாக இருக்க வேண்டும், இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனின் சரியான உதாரணத்தை நாம் கிறிஸ்துவில் காணலாம். இந்த தெய்வீகப் பண்புகள் கிறிஸ்துவில் மிகவும் பிரமாதமாக வெளிப்பட்டு, மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கின்றன, மேலும் அவை அவரைப் பின்பற்றுபவர்களிடம் மங்கலாக மட்டுமே பிரதிபலிக்கின்றன. ஒன்றிரண்டு மட்டுமல்ல, இந்த அருட்கொடைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தெய்வீக பரிபூரணங்களும் அவரில் பரிபூரணமாக உள்ளன. என்னைப் பொறுத்தவரை அவர் “சிறந்தவர்" மட்டுமல்ல, “மிகவும் சிறந்தவர்". கிறிஸ்துவை மகிமைப்படுத்த அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவின் காரியங்களை நம் ஆத்துமாக்களுக்கு வெளிப்படுத்துவாராக!
முதலாவதாக, “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்;", “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே." அவரைக் குறித்து சொல்லிய இந்த வேத வார்த்தை எவ்வளவு பாக்கியமானது! ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய வாழ்வை மாட்டுத் தொழுவத்தில் தொடங்கினார். அவர் தனது குழந்தைப் பருவத்திலும் இளமைப் பருவத்திலும் தச்சுப் பணியைச் செய்து பாடுப்பட்டார். மேலும் அவரது ஊழியத்தின் தொடக்கத்திற்குப் பிறகு, “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுக்ஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.” சங்கீதத்தில் மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனமாக எழுதப்பட்ட பகுதிகளில் தனது ஆவியின் எளிமையைப் பற்றி பலமுறை ஒப்புக்கொண்டதை பார்க்க முடியும். “நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்." (சங்கீதம் 69:29). “கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும். நான் சிறுமையும் எளிமையுமானவன்." (சங்கீதம் 86:1). “நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.” (சங்கீதம் 109:22).
இரண்டாவதாக, “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்". கிறிஸ்து உண்மையாகவே துயரப்படுபவர்களில் முதன்மையானவர். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் அவரை “துக்கம் நிறைந்தவராகவும் பாடு அனுபவித்தவராகவும்" சித்தரிக்கிறது (ஏசாயா 53:3). “அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்படுவதை,” பாருங்கள் (மாற்கு 3:5). ஊமையும் செவிடுமான மனிதனை விடுதலையாக்கும்போது அவர் பெருமூச்சு விட்டதைப் பாருங்கள் (மாற்கு 7:34). லாசருவின் கல்லறையில் எப்படி அழுதார் என்பதைக் கவனியுங்கள். எருசலேமைப் பற்றி அவர் புலம்புவதைக் கேளுங்கள். “எருசலேமே, எருசலேமே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்" (மத்தேயு 23:37). கெத்செமனே தோட்டத்தில் அவர் செய்த கண்ணீருடன் கூடிய ஜெபங்களையும் மன்றாட்டுகளையும் பயபக்தியுடன் பாருங்கள் (எபிரேயர் 5:7). சிலுவையில் தொங்கும்போது, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" (மாற்கு 15:34) என்று கதறியதை பணிவுடன் பாருங்கள். அவருடைய விண்ணப்பத்தைக் கேளுங்கள். “வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்." (புலம்பல் 1:12)
மூன்றாவதாக, “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்". மகிமை நிறைந்த தேவன் மனிதனாக ஊழியம் செய்த போது காண்பித்த சாந்தகுணத்திற்கு சுவிசேக்ஷத்தில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவருடன் இருக்கும்படி தெரிந்துகொண்ட சீக்ஷர்கள் விவரத்தில் இதை நாம் பார்க்க முடிகிறது. அவர் தெரிந்தெடுத்தது ஞானிகளையும், கல்விமான்களையும், பெரிதும், மேன்மையுமானவர்களையும் அல்ல, மாறாக அவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள் தான். அவருடன் தொடர்பில் இருந்த மக்களின் நிலையைப் பாருங்கள். அவர் ஐசுவரியவான்களையும் புகழ்பெற்றர்களையும் நாடாமல், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதனாய் இருந்தார் (மத்தேயு 11:19). அவர் செய்த அற்புதங்களில் இதை கவனியுங்கள். அவரால் குணமடைந்தவர்களிடம் தங்களுக்கு நேர்ந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்வதை நாம் பார்க்கலாம். அவருடைய ஊழியத்தில், பணிவானதாக இருப்பதைக் கவனியுங்கள். மாயக்காரர் செய்வதைப்போல தாரை ஊதுவியாமல், விளம்பரத்தைத் தவிர்த்து, புகழைத் துறந்து, ஊழியம் செய்து எளிமையாக வாழ்ந்தார். மக்கள் அவரை புகழ்ந்தப்போது அவர்களிடமிருந்து விலகி சென்றார். (மாற்கு 1:45, 7:17). அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்தபோது, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்." (யோவான் 6:15). அவருடைய சகோதரர்கள் தன்னை உலகுக்குக் காண்பிக்கச் சொன்ன போது, அதை மறுத்து இரகசியமாய்ப் போனார் (யோவான் 7:4-10). வேத வாக்கியங்களை நிறைவேற்றும்படி, இயேசு தம்மை இஸ்ரவேலுக்கு அறிமுகம் செய்த போதும், அவர் எருசலேமில் “தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாய்” வெளிப்படுத்தினார் (சகரியா 9:9).
நான்காவதாக, “நீதியின் மீது பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்", மனுக்ஷ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் உள்ளார்ந்த வாழ்க்கையைப் பற்றிய இந்த சுருக்கம் எவ்வளவு ஆச்சரியமானது, “நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.” (ஏசாயா 11:5) அவர் இந்த உலகத்தில் பிரவேசிக்கும் முன் பரிசுத்த ஆவியானவர் கொடுத்த சாட்சி அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், (எபிரெயர் 10:7) பன்னிரெண்டு வயது சிறுவனாக இருந்தபோது இயேசு, “என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்” (லூக்கா 2:49). அவருடைய ஊழியத்தின் தொடக்கத்தில், "நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்." (மத்தேயு 5:17) என்று அவர் தனது சீஷர்களிடம் கூறினார். என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது." (யோவான் 4:34) தம் சீக்ஷரிடம் பகிர்ந்தார். பரிசுத்த ஆவியானவர் அவரைப் பற்றி சாட்சியாளிக்கிறார், “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிக்ஷேகம் பண்ணினார்" (சங்கீதம் 45:7). எனவே “ஆண்டவரே நமது நீதி” என்று கூறுவது பொருத்தமானது.
ஐந்தாவதாக, “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்". கிறிஸ்து இரக்கத்தின் உருவமாய் உள்ளவர். அவருடைய இரக்கமே தொலைந்துபோன பாவிகளை பரலோக மகிமையாக மாற்றியது. அவருடைய அற்புதமான, தனித்துவமான இரக்கமே, அவருடைய ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி அவர்களுக்காக சாபமாக ஒப்புக்கொடுக்கும்படி சிலுவைக்கு அழைத்துச் சென்றது அந்த இரக்கமே! எனவே, “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்" (தீத்து 3:5). அவர் இன்றும் நமக்கான பிரதான ஆசாரியராய் நம்மீது இரக்கத்தை வெளிப்படுத்துகிறார் (எபிரேயர் 2:17). மேலும் நாம் நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகி இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்கிறோம் (யூதா 21). அவர் தம் மக்களுக்கு இன்னும் இரக்கம் காட்டுகிறவரார் இருக்கிறார், ஏனெனில் “அந்த நாளில் கர்த்தர் நமக்கு இரக்கம் அளிப்பார்" (2 தீமோத்தேயு 1:18).
ஆறாவது, “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்" இந்த வசனம் கூட கிறிஸ்துவில் முழுமை பெறுகிறது. அவர் “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து” (1 பேதுரு 1:19). அவர் மனிதனானபோது, அவர் மனித அசுத்தங்களால் தீட்டுப்படவில்லை. அவருடைய மனித வாழ்வு பரிசுத்தமானதாக இருந்தது (லூக்கா 1:36). அவர் “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும்” ஆகவே இருந்தார் (எபிரேயர் 7:26). "அவரிடத்தில் பாவமில்லை" (1 யோவான் 3:5). எனவே, "அவர் பாவஞ்செய்யவில்லை (1 பேதுரு 2:22) அவர் பாவம் அறியாதவராக இருந்தார் (2 கொரிந்தியர் 5:21). அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 3:3). பரிபூரணமான பரிசுத்த சுபாவத்தை அவர் கொண்டிருப்பதால் அவருடைய செயல்கள் அனைத்தும் பரிசுத்மானவை. “நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை” (யோவான் 8:50) என்ற வேத வார்த்தைகளில் அவருடைய வாழ்க்கையின் முழு சாராம்சமும் அடங்கியுள்ளது.
ஏழாவது, “சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்", அவருடைய சிலுவையின் இரத்தத்தால் நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணிவர் என்பது நமது இரட்சகருக்கு மிகவும் பொருத்தமானது. தேவன் அவரை நம் பாவம் போக்கும் “கிருபாதாரபலியாக” ஏற்படுத்தினார். அதாவது அவர் தேவனுடைய கோபத்தைச் சாந்தப்படுத்தி, உடைத்துப்போடப்பட்ட நியாயப்பிரமாணத்தின் நீதியை முழுமையாக நிறைவேற்றவும், தேவனுடைய நீதியை மகிமைப்படுத்தவும் நியமிக்கப்பட்டார், அவர் இதுவரை பிரிந்திருந்த யூதர்களையும் புறஜாதிகளையும் ஒன்றிணைத்தார் (எபேசியர் 2:11 ஐப் பார்க்கவும்). இனிவரும் நாட்களில் இந்த சபிக்கப்பட்டதும் யுத்தங்களால் சிதைந்ததுமான பூமியில் சமாதானத்தை ஏற்படுத்துவார். அவர் தனது தந்தையாகிய தாவீதின் சிம்மாசனத்தில் அமர்வார். அப்போது, “அவருடைய கர்த்தத்துவத்திற்கும் அதன் சமாதானத்துக்கும் முடிவு இல்லை" என்ற வாக்குத்தத்தம் நிறைவேறும் (ஏசாயா 9:7).
எட்டாவது, “நீதியினிமித்தம் துன்புறுத்தப்பட்டவர்கள் பாக்கியவான்கள்" இயேசுவைப்போல ஒருவரும் நீதிக்காகத் துன்பப்பட்டிருக்க முடியாது. வெளிப்படுத்துதல் 12:4 எவ்வளவு அற்புதமாகன வார்த்தை பாருங்கள்! தீர்க்கதரிசனத்தின் ஆவியால் அவர் முன்னறிவித்தது, “சிறுவயது முதல் நான் சிறுமைப்பட்டவனும், மாண்டுபோகிறவனுமாய் இருக்கிறேன்” (சங்கீதம் 88:15). அவருடைய ஊழியத்தின் ஆரம்ப கட்டத்தில், இயேசுவுக்கு நேர்ந்ததை வாசிக்கிறோம். “எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர்கட்டப்பட்ட செங்குத்தான மலைசிகரத்தில் இருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளி விடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டு போனார்கள்” (லூக்கா 4:29). தேவாலய வளாகங்களிலும் அவர் மீது கல்லெறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டனர் (யோவான் 8:59). அவர் தனது ஊழியத்தின் ஒவ்வொரு அடியிலும் எதிரிகளை எதிர்கொண்டார். சுயநீதியுள்ள யூதர்கள் அவரைப் பேய் பிடித்தவன் என்று குற்றம் சாட்டினார்கள் (யோவான் 8:48). நகர வாசலில் அமர்ந்திருந்தவர்களும் அவருக்கு விரோதமாய்ப் பேசினார்கள். மதுபானம் பண்ணுகிறவர்களின் பாடலும் ஆனார் (சங்கீதம் 69:12). அவரை விசாரிக்கையில் அவருடைய தலை முடியைப் பிடுங்கினார்கள் (ஏசாயா 50:6), முகத்தில் துப்பி, ஏளனம் செய்து, தங்கள் கைகளால் அவரைத் தாக்கினார்கள் (மத்தேயு 26:67). அவர் (இயேசு) கசையடியால் அடிக்கப்பட்டு, முட்களால் முடிசூட்டப்பட்டு, தனது சொந்த சிலுவையை கல்வாரிக்கு எடுத்துச் சென்றார், அங்கு அவர் சிலுவையில் அறையப்பட்டார். இறக்கும் தருணத்தில் கூட, அவர் அவரை அமைதியாக விடவில்லை. அவர்கள் அவரை பல வழிகளில் வன்முறைக்கு உட்படுத்தி, கேலிகளால்; துன்புறுத்தினர். இதையெல்லாம் ஒப்பிடுகையில், அவருக்காக நாம் அனுபவிக்கும் துன்புறுத்தல் எந்த வகையிலும் மிகவும் இலகுவானதே!
இவ்வாறே இந்த பாக்கியப்பண்புகளுடன் இணைக்கப்பட்ட வாக்குறுதிகள் கிறிஸ்துவில் முழுமையாக நிறைவேற்றப்படுகின்றன. அவர் ஆவியில் எளிமையானவராக இருந்தார், ஆனால் பரலோக ராஜ்யம் முதன்மையாக அவருக்கு சொந்தமானது. அவர் புலம்பினார், ஆனால் அவர் தனது துன்பத்தின் பலனைக் கண்டு ஆறுதல் அடைவார். அவர் சாந்தத்தின் மொத்த உருவம், ஆனால் மகிமையின் சிங்காசனத்தில் அமர்வார். அவர் நீதிக்காகப் பசிதாகம் உடையவராய் இருந்தார்;, ஆனால் இப்போது அவர் தம்முடைய ஜனங்களுக்காக ஆயத்தம்; செய்திருக்கும் நீதியில் மக்கள் பயனடைவதைக் கண்டு திருப்தியடைகிறார். அவர் இதயத்தில் தூய்மையானவர், அதனால் கடவுளை யாரும் பார்க்காத வகையில் பார்க்கிறார் (மத்தேயு 11:27). அவர் சமாதானம் பண்ணுகிறவர் என்பதால்;, அவருடைய இரத்தத்தால் வாங்கப்பட்ட அனைவரும் அவரைக் கடவுளின் மகன் என்று சொந்தங் கொண்டாடுகிறார்கள். பாடுசகிக்கிறவராக, அவர் பெற்ற வெகுமதி தனித்துவமானது. எல்லா நாமங்களுக்கும் மேலாக அவருடைய நாமம் உயர்த்தப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்க்கையை மனுபுத்திரரில் மிகவும் அழகானவராகிய தேவகுமாரன் குறித்த சிந்தையால்; அதிகமதிகமாக நிரப்புவாராக!
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.