ஜெபம் தேவன் ஏற்படுத்திக் கொடுத்த நியமங்களில் ஒன்றாகும். நாம் தனிப்பட்ட முறையிலும் ஜெபிக்க வேண்டும்; அவ்வாறே பொதுக் கூடுகைகளிலும் நாம் ஜெபிக்க வேண்டும். ஆவியினால் நிறைந்த மன்றாட்டு ஜெபத்தை ஏறெடுப்பவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாக மாறுகிறார்கள். ஜெபம் காரியங்களைச் சாதிக்கக்கூடியது. யார் ஜெபிக்கிறார்களோ அவர்களும், யாருக்காக ஜெபிக்கிறார்களோ அவர்களும் தேவனிடமிருந்து பெரிய காரியங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஜெபமே தேவனின் இருதயத்தைத் திறப்பதற்கான வழியாகவும், ஜெபிக்கிறவர்களின் வெறுமையான ஆத்துமா நன்மையால் நிரப்பப்படுவதற்கான வாய்க்காலாகவும் விளங்குகிறது. ஜெபத்தின் வாயிலாக ஒரு கிறிஸ்தவர் தனது இருதயத்தை ஒரு நம்பிக்கைக்குரிய நண்பரிடம் திறந்து காட்டுவதுபோல தேவனிடம் வெளிப்படுத்திக் காட்ட முடியும். மேலும் அவருடன் நெருக்கமாக உறவாடி நட்பைப் பெற்று, ஒரு புதிய சாட்சியாகத் திகழ முடியும். ஜெபம் ஒரே விதமாக, மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒருவிதமான மந்திரச் சொல்போன்று இராததால், நாம் தனிப்பட்ட முறையில் ஜெபிக்கும், பொது வெளியில் ஜெபிக்கும்போதும் வித்தியாசமான வார்த்தைகளைப் பயன்படுத்த முடியும். அவ்வாறே ஜெபிக்கும் முறையிலும் நாம் வித்தியாசத்தைக் காட்டமுடியும், அதாவது உரத்த சத்தத்தோடும் நாம் ஜெபிக்க முடியும், வெளியே சத்தம் கேட்காமல் மனதுக்குள்ளும் ஜெபிக்க முடியும். நாம் நமது தாலந்துகளைப் பயன்படுத்தி சத்தமாகவும் ஜெபிக்க முடியும், கிருபையைப் பயன்படுத்தி அமைதியாகவும் ஜெபிக்க முடியும். எவ்வாறாயினும், கைகளைக் கூப்பி, கண்களை மூடி, வாயை அசைத்துச் ஜெபிக்கும்போது நமது இருதயம் அதனுடன் இசைந்து செல்லாவிட்டால் அதனால் ஒரு பயனும் இல்லை. நாம் ஆவியோடும் ஜெபிக்க வேண்டும், அதே வேளையில் கருத்தோடும் ஜெபிக்க வேண்டும். ஜெபம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைக் காட்டக்கூடிய நான்கு காரியங்களை உங்கள் முன் வைக்கிறேன்.
ஜெபம் என்பது அறிவோடும். உண்மையோடும், அன்போடும், தேவனிடம், கிறிஸ்துவின் மூலம், பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு, அவர் வாக்குப்பண்ணின காரியங்களுக்காக, தேவனின் வார்த்தைப்படி, திருச்சபையின் நன்மைக்காக, விசுவாசத்தில் நம் சித்தத்தை தேவனது சித்தத்திற்கு கீழ்ப்படுத்தி, நம் இருதயத்தை அல்லது ஆத்துமாவை அதில் ஊற்றிவிடுவதாகும்.
மேற்கூறிய இலக்கண விதியில் ஏழு காரியங்களை கவனிக்கலாம்:
(1) ஒரு உண்மையான
(2) ஒரு அறிவான
(3) ஒரு அன்பான தேவனிடம் கிறிஸ்துவின் மூலம் ஊற்றிவிடுவதாகும்
(4) பரிசுத்தாவியின் உதவி அல்லது பெலத்தினால்
(5) தேவன் வாக்குப் பண்ணின காரியங்களுக்காக அல்லது அவரது வார்த்தையின்படி
(6) திருச்சபையின் நல்வாழ்வுக்காக
(7) விசுவாசத்தில் கடவுளின் சித்தத்துக்கு நம்மை கீழ்படுத்துதலாகும்.
உண்மையான ஜெபம் எது?
முதலாவது உத்தமத்தோடு தேவனிடம் நம் ஆத்மாவை ஊற்றிவிடுதல்:- உத்தமம் என்பது ஒரு கிருபை. கிறிஸ்தவனின் வாழ்க்கையில் வெளிப்பட வேண்டிய ஒரு குணம். அது இல்லாவிட்டால் தேவன் நம் செயல்களை ஏற்கவே மாட்டார். "அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன். என் நாவினால் அவர் புகழப்பட்டார். என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்." என்று தாவீது கூறுகிறார். (சங்கீதம் 66:17, 18).
உத்தமம் என்பது ஜெபத்தின் ஒரு பங்கு, அதில்லாமல் தேவன் நம் ஜெபத்தைக் கேட்க மாட்டார். “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." (எரேமியா 29:13). எனவே (ஓசியா 7:14) -ல் "தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத்துக்காகவும் கூடுகிறார்கள்: என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.'
இப்படிப்பட்ட ஜெபத்தைக் தேவன் வெறுக்கிறார். ஏனெனில் அப்படிப்பட்ட ஜெபம் உத்தமத்திற்கு மாறானது; ஏமாற்றுவதற்கு சமம், வெளிப்படையான வேஷம், மனுஷரால் காணப்படுவதற்கும், புகழப்படுவதற்காக மட்டும் செய்யப்படுகின்றது. உத்தமத்தை நாத்தான்வேலிடம் அத்திமரத்தின் கீழ் கிறிஸ்து கண்டு அதை மதிக்கின்றார். (யோவான். 1:47) ஒரு வேளை இந்த நல்ல மனிதன் தேவனிடம் தன் இருதயத்தை ஊற்றிக் கொண்டிருக்கலாம். உத்தமத்தோடும், ஏமாற்றாத வகையிலும் தேவனிடம் ஜெபம் செய்து கொண்டிருக்கலாம். இவ்வகை உத்தமமான ஜெபத்தைக் தேவன் மதிக்கின்றார்.
'செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்' (நீதிமொழிகள் 15:8).
ஏன் ஜெபத்திற்கு உத்தமம் அவசியமென்று பார்ப்போம். ஏனெனில், உத்தமம், நம் இருதயத்தை எளிமையான நிலையில் தேவனிடம் எடுத்துக்காட்டுகிறது. தன்னை அழிக்காத அளவுக்கு சீர் தூக்கிப்பார்க்கவும் உதவுகின்றது. மெச்சிக்கொள்ளாமல், முழு அளவில் தன் நிலையை காட்டுகின்றது. (எரேமியா 31:18) நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன். என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்.
உத்தமம் என்பது நம் சொந்த நிலையை ஒரே சீராய் காண்கின்றது. நாம் ஒரு மூலையில் நின்றாலும் சரி. உலக மக்களுக்கு முன்பாக நின்றாலும் சரி, இரண்டு முகமூடிகள் போட்டுக்கொள்ள அது விரும்புவதில்லை. ஒன்று மனிதருக்கு முன்பாக உபயோகப்படுத்துவதற்கும் தேவனிடம் அது இருக்கவேண்டும். நமது கடமையாகிய ஜெபத்தில் அது நம்மோடு இருக்கும். உதட்டளவில் அது மகிழ்கின்ற ஒன்றல்ல. தேவனைப் போலவே, உத்தமம் என்பது இருதயத்தைப் பார்க்கின்றது. இருதயத்திலிருந்துதான் உண்மை ஜெபம் வருகின்றது.
அறிவான ஜெபம் எது?
இரண்டாவது அறிவாற்றலோடு செய்யப்படுகின்ற ஒன்று உண்மை ஜெபமாகும். அது அநேகர் எண்ணுகின்றபடி தேவனைப் புகழக்கூடிய, அல்லது அர்த்தமற்ற சில வார்த்தைகளை சொல்வதைக் குறிக்காது. ஆனால், அறிவாற்றலோடு கூடிய இருதயத்தின் உணர்வுகளைக் குறிக்கும். அப்படிப்பட்ட உணர்வுகள் சில சமயங்களில் பாவத்தைப் பற்றியனவாய் இருக்கும். சில சமயங்களில் நாம் பெற்ற நன்மைகளை நினைத்ததாக அமையலாம்; சில சமயங்களில் தேவனை மன்னிக்க ஆயத்தமுள்ளவரென்பதை காட்டுவதாக அமையலாம்.
1) பாவத்தின் அகோரத்தினால் மன்னிப்பு இரக்கத்தை பெற விரும்பி நிற்கின்ற ஒரு நிலை - ஆத்மா உணர்வுள்ள நிலையில் காணப்படுகின்றது. ஏக்கத்தோடும். அழுகையோடும், உணர்வுகள் எழும்பி அவை இருதயத்தை உடையச் செய்கின்றது. இருதயம் கவலையோடு இருக்கின்ற சமயம், உண்மை ஜெபம் அப்பாரத்தைக் கிழித்துக்கொண்டு வெளிவருகின்றது. அதை அன்னாளின் ஜெபத்தில் பார்க்கிறோம். (1 சாமுவேல் 1:10) தாவீது ராஜா (சங்கீதம் 69:3, 38:8-10) ஆண்டவரிடம் எவ்வளவு உணர்வுகளோடு விண்ணப்பிக்கிறார் என்பதைப் பார்க்கிறோம். அதேபோல் எசேக்கியா 'புறாவைப் போல் புலம்புகிறார். 'எப்பிராயீம் தன்னைப் பற்றியே புலம்புகிறார். (எரேமியா .31:18,19). பேதுரு மனங்கசந்து அழுதார். (மத்தேயு 26:75) கிறிஸ்துவும் ''தேவனை நோக்கி பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி" (எபிரேயர் 5:7) என்று பார்க்கிறோம். மேலும், (சங்கீதம் 116: 3,4; 77:2; 38:6) போன்ற வசனங்களில் தாவீது ராஜா, தேவனை நோக்கி பாவத்திற்காக அழுது கெஞ்சி மன்றாடுவதைப் பார்க்கிறோம்.
2) அடுத்தபடியாக சில சமயங்களில் இவ்வித இரக்கத்தை தாவீது பெற்றுக்கொண்டு பெலனடைந்து, ஆறுதலடைந்ததாகப் பார்க்கிறோம். தேவனிடம் மன்னிப்பை பெற்றிருப்பதைப் பற்றி வாசிக்கிறோம். (சங்கீதம் 103:1-4) பெற்ற இரக்கத்திற்காக நன்றி செலுத்துகின்ற ஜெபம் மிகவும் வல்லமையுள்ளது. இதை (பிலிப்பியர் 4:6, 7) -ல் தெளிவாகப் பார்க்கிறோம்.
3) சில சமயங்களில், தேவன் வாக்குப்பண்ணி, நாம் பெறவேண்டிய இரக்கங்களைச் சொல்லியும் ஜெபிக்கலாம். இதற்கு உதாரணங்களாக, (2 சாமுவேல் 7:27) தாவீது ராஜாவைப் பார்க்கலாம். மேலும், (ஆதியகாமம் 32:10,11) (தானியேல் 9:3,4) -ல் வாசிக்கிறோம்.
ஒரு அன்பான தேவனிடம் கிறிஸ்துவின் மூலம் ஜெபிப்பது
அடுத்தபடியாக ஜெபம் என்பது வாஞ்சையோடும் அன்போடும் பிரியத்தோடு தேவனிடம் நம் ஆன்மாவை ஊற்றி விடுவதாகும். இதை (சங்கீதம் 42:1) "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது." என்று பார்க்கிறோம்.
(சங்கீதம் 84:2) "என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப் பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது."
மேலும் (சங்கீதம் 119:40) "இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்."
(சங்கீதம் 119:20) ''உமது நியாயங்கள் மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்து போகிறது."
(தானியேல் 9:19) "ஆண்டவரே. கேளும், ஆண்டவரே மன்னியும்,
ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன்."
(லூக்கா 22:44) "இயேசு மிகுந்த வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார்".
ஆனால் அநேகர் இன்றைக்கு ஜெபிக்கும் பழக்கமில்லாதவர்களாக நம்மிடையே காணப்படுகிறார்கள். அவர்கள் ஜெபத்திற்கு அந்நியர், சரீரப்பிரகாரமாக முழங்கால் படியிடுவதும், உதட்டை அசைப்பதுமாகக் காணப்படுகிறார்கள். நம்முடைய வாஞ்சைகள், பிரியம் அதில் சேரும் பொழுதுதான், நாம் முழு மனிதனாக ஜெபிக்க முடியும். அப்படி ஜெபிக்கும்பொழுது மட்டுமே, கேட்ட காரியத்தை நிச்சயமாகப் பெற்றுக்கொள்ளுவோம். அதோடு கிறிஸ்துவின் ஐக்கியம், சமாதானத்தையும் பெற்றுக்கொள்வோம். ஆகவே பரிசுத்தவான்கள், தங்கள் முழு பலத்தோடு ஜெபிப்பதும். அதற்காக தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்து கேட்ட காரியம் கிடையாமல் திரும்பிப்போவதே கிடையாது.
அநேகர் இன்று தேவ பயமில்லாமல், பொறாமையால் தூண்டப்பட்டு, பலனற்ற ஜெபத்தை செய்வதனால் ஜெபத்தின் உண்மையான வல்லமையை அறிந்து கொள்ளமுடிவதில்லை. அவர்களில் அநேகருக்கு, மறுபடியும் பிறத்தல் குமாரன் மூலமாய் தேவனோடு தொடர்பு கொள்ளுதல், கிருபையின் சக்தியால் பாவம் கழுவப்படுதல் போன்றவற்றை உணரமுடியாமல் போய்விடுகிறது. எனவேதான் அவர்கள் ஜெபம் செய்தும், தங்கள் பாவமான, கேடான, விபசார, குடிகார வாழ்க்கையிலிருந்து விடுபட முடியாமல் போய்விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவ மக்களையும் கூட, தங்கள் பொறாமை, கெட்ட குணத்தால் துன்புறுத்துகின்றார்கள்.ஆ! எவ்வளவு பெரிய நியாயத்தீர்ப்பு அவர்கள் மேல் வந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆக்கினையிலிருந்து அவர்கள் ஜெபமும் மாய்மாலமான எண்ணங்களும், திட்டங்களும் அவர்களை விடுவிக்கவே மாட்டாது.
ஒரு மனிதனின் உண்மை ஜெபமானது தன் இருதயத்தை முழுவதுமாக தேவனிடம் திறந்து காட்டுவதாகும். (சங்கீதம் 38:9) மேலும் ''என் ஆத்துமா தேவன் மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது." (சங்கீதம் 42: 2,4), என் உருகிய உள்ளத்தை தேவனிடம் ஊற்றிவிடுகிறேன். என்பதுபோல் கூறுகிறார்.
அதாவது ஜெபம் என்பது தமது முழுபலன், ஜீவனோடு ஜெபித்தல் ஆகும் என்று அறிகிறோம். மேலும் 'எக்காலத்திலும் அவரை நம்புங்கள். உங்கள் இருதயத்தை ஊற்றி விடுங்கள். தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார் (சங்கீதம் 62:8). இப்படிப்பட்ட ஜெபத்தில் ஒரு வாக்குத்தத்தம் இருக்கிறது. நம்மை அடிமைத் தனத்தினின்று விடுவிக்கும் ஜெபம் இது. அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரை தேடுவாய். உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் தேடும்பொழுது அவரைக் கண்டடைவாய்? (உபாகமம் 4:29).
மேலும் ஜெபம் நம் இருதயத்தை தேவனிடம் ஊற்றி விடுவதாகும். இது ஜெபத்தின் உன்னத நோக்கத்தைக் காண்பிக்கிறது. வல்லமையுள்ள தேவனிடத்திற்கு அது செல்லுகிறது. எப்பொழுது நான் உமது சந்நிதியில் வந்து நிற்பேன், என்று ஜெபிக்கிற உள்ளம், உலகத்தின் திருப்தி தேவனிடம் மட்டுமே இளைப்பாறுதலும் மன திருப்தியும் இருப்பதை காண்கிறது. (1 தீமோத்தேயு 5:5) -ல் "உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய். இரவும் பகலும், வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள் " என்று கூறப்பட்டிருக்கின்றது.
மேலும் தாவீது சொல்கிறார். "கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும். உமது நீதியினிமித்தம் என்னை சாய்த்து என்னை ரட்சியும். நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிரும். என்னை இரட்சிப்பதற்கு கட்டளையிட்டீரே. நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாயிருக்கிறீர். என் தேவனே துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும். கர்த்தராகிய ஆண்டவரே நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்" (சங்கீதம் 71:1-5).
அநேகர் தேவனைப்பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் சரியான ஜெபம் என்பது தேவனை தன் நம்பிக்கையாய்க் கொண்டிருக்கிறது. உண்மை ஜெபம் தேவனைத் தவிர வேறெதையும் முக்கியமானதாகக் காண்பதில்லை. நாம் ஏற்கனவே சொன்னதுபோல, அதுதான் உண்மை உணர்வோடு, அறிவாற்றலோடு, உள்ளான அன்போடு செய்யப்படுகிற ஜெபமாகும்.
அடுத்தபடியாக, இப்படிப்பட்ட ஜெபம், கிறிஸ்துவின் மூலம் தேவனிடம் செல்லவேண்டும் என்று பார்க்கிறோம். ஏனெனில் கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே ஆத்துமாவுக்கு தேவனிடம் சேரமுடியும். நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன். (யோவான். 14:14) இதைப்போலவே தானியேலும் ஜனங்களுக்காக கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபித்தார். "இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும். ''. (தானியேல் 9:17). அப்படியே தாவீதும் ஜெபித்தார். "கர்த்தாவே, உமது நாமத்தினிமித்தம் அதாவது கிறிஸ்துவுக்காக மன்னித்தருளும்'' (சங்கீதம் 25: 11). ஆனால், தேவனிடம் கிறிஸ்துவின் மூலமாக ஜெபத்தில் வருவது ஒரு கடினமான காரியமாகும். ஒரு மனிதன் அறிவாற்றலோடு, அன்போடு வந்தாலும், கிறிஸ்துவின் மூலமாக வருவது கடினம். ஏனெனில் அவர் மூலமாக வரவேண்டுமானால் அவரைப்பற்றி அவன் அறிந்திருக்க வேண்டும். 'விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும். அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். (எபிரேயர் 11:6) மோசேயும் இப்படியே ஜெபிக்கிறார். (யாத்திராகம் 32:13)
இந்த கிறிஸ்துவை பிதா ஒருவர் மட்டுமே நமக்கு காண்பிக்க முடியும். (மத்தேயு 16:27; 16:16) கிறிஸ்துவின் மூலம் வருவதென்றால் தேவனின் ஒத்தாசையினால், கிறிஸ்துவின் நிழலில் தங்குவதற்கு சமானமாகக் கூறலாம்.
எனவே, தாவீது அவரைப் பற்றி "கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.'' (சங்கீதம் 18:2; 27:1: 28:1). ஏனெனில், அவரால் சத்துருக்களை மேற்கொண்டது மாத்திரமல்ல, அவரால் பிதாவாகிய தேவனிடம் ஒத்தாசை பெற்றார். தேவன் ஆபிரகாமிடம் "நான் உனக்கு கேடகம்" என்று கூறுகிறார். (ஆதியாகமம் 15:1) கிறிஸ்துவின் மூலம் தேவனிடம் வருகிற மனிதனுக்கு விசுவாசம் தேவை. விசுவாசம் உடையவன் தேவனால் பிறந்து, தேவனுடைய பிள்ளையாய் மாறுகிறான். இதனால் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு கிறிஸ்துவின் அவயமாகின்றான். (யோவான் 3:5,7; 1:12)
கிறிஸ்துவின் அவயமாக வரும்பொழுது, தேவன் அவனை கிறிஸ்துவின் அங்கமாகவும், அவரது சரீரமாகவும், மாம்சமாகவும், எலும்பாகவும். தன்னோடு, பிரித்தெடுத்தல், மனமாறுதல், உயிர்ப்பிக்கப்படுதல் என்பவற்றின் மூலம் ஏற்றுக்கொள்ளுகிறார். பரிசுத்த ஆவியையும் அவன் உள்ளத்தில் வைக்கிறார். ஆகவே, இப்பொழுது அவன் கிறிஸ்துவின் புண்ணியங்களினால் அவரது இரத்தம், நீதி, வெற்றி, பரிந்து பேசுதல் இவற்றின் மூலம் வருகிறான். ஆகவே, தம் குமாரன் மூலம் இப்பொழுது ஏற்றுக் கொள்ளப்படுகிறான். ஆகவே அவன் தேவனிடம் கிறிஸ்துவின் மூலம் வந்திருக்கிறான். பரிசுத்த ஆவி அவனுக்குள் இருப்பதனால் தன் இருதயத்தை தேவனிடம் ஊற்றிவிட முடியும்.
பரிசுத்த ஆவியின் உதவி அல்லது பெலத்தினால் ஜெபிப்பது
அது மட்டுமல்ல, ஆவியானவரின் துணை, பலன்கொண்டு ஜெபிப்பதுதான் உண்மை ஜெபமாகும். மேற் கூறப்பட்டுள்ள காரியங்களோடு, ஆவியானவரின் பலத்தைச் சேர்த்து ஜெபிக்கவேண்டும். அப்படி செய்யாவிட்டால், ஆரோனின் குமாரர் செய்ததுப் போல, அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்து அதன் விளைவாக மரித்தது போலாகிவிடும் (லேவியராகமம் 10:1,2). மேலும் ஆவியானவர் துணையின்றி செய்யும் ஜெபம், தேவ சித்தத்திற்கு ஏற்றதாயிராது என்று பார்க்கிறோம். (ரோமர் 8:26,27).
தேவன் வாக்குப் பண்ணின காரியங்களுக்காக அல்லது அவரது வார்த்தையின்படி ஜெபிப்பது
அடுத்தபடியாக நாம் கவனிக்க வேண்டியது, நம் ஜெபம் தேவ சித்தத்திற்கும், வேத வசனத்திற்கும் ஒத்ததாக அமையவேண்டும். தேவ வசனத்திற்கு ஒத்திருக்கும் பொழுதுதான் அது உண்மை ஜெபமாக விளங்க முடியும். தேவ வசனத்திற்கு மாறுபட்டிருந்தால், அது தேவதூஷணமாக, அர்த்தமற்ற வார்த்தைகளாகவே இருக்கும். எனவே தாவீது தமது ஜெபத்தில் எப்பொழுதும் தன் கண்ணை வேத வசனத்தின் மேல் வைத்திருந்தார். "என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும். சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்து போகிறது. உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.'' (சங்கீதம் 119:25-28) மேலும் அதே
சங்கீதத்தில், வசனங்கள் 41, 42, 58, 65, 74, 81, 82, 107, 147, 154, 169, 170 ஆகிய வசனங்களில் பார்க்கலாம். மேலும் 'நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை நினைத்தருளும்' (வசனம் 49)
உமது அடியேனுக்காக பரிசுத்த ஆவியானவர் நம்மை வசனத்தைக் கொண்டே நம் இருதயத்தை உணர்த்துகின்றார். எனவே, நாம் அவரது வசனத்தைக் கொண்டே தேவனிடம், விவாதம் செய்யவோ அல்லது விண்ணப்பம் செய்யவோ போகின்றோம். இதைப் போலவே தேவனது வல்லமையுள்ள தீர்க்கதரிசியாகிய தானியேலிடம் காண்கிறோம். அவர் புஸ்தகங்களின் மூலம். இஸ்ரவேலின் சிறையிருப்பின் வருஷங்கள் முடியப்போகிறதென்று அறிந்துக் கொண்டேன். நம் ஜெபங்களுக்கு பதிலளிப்பார் என்று நிச்சயம் நம்பவேண்டும்.
ஆனாலும் நீதிமான்கள், தேவனுடைய சித்தத்திற்கு தங்களை கீழ்ப்படுத்தி ஜெபிக்கும் பொழுது. தேவனுடைய அன்பை சந்தேகிக்கவோ, அதை வினவவோ வேண்டுமென்ற அவசியமில்லை. அவர்கள் எல்லா சமயங்களிலும் ஞானத்தோடு நடந்துக்கொள்ள முடியாத காரணத்தால், சாத்தான் அவர்களை மேற்கொள்ளக் கூடும். அவர்களை தவறாக ஜெபிக்கவும் தூண்டலாம். தங்கள் நன்மை. தேவனின் மகிமை இவற்றிற்கு மாறாகவும் ஜெபிக்கத் தூண்டலாம். 'நாம் எதையாகிலும் அவர் சித்தத்தின் படி கேட்டால் அவர் நமக்கு செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்கு செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளை பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்." (1 யோவான் 5:14,15) ஏற்கனவே நாம் கவனித்தபடி, பரிசுத்த ஆவியின் துணையின்றி ஜெபிக்கின்ற ஜெபத்திற்கு விடை கிடைப்பதில்லை. ஏனெனில் அது தேவ சித்தத்திற்கு முரண்பட்டு காணப்படுகிறது.
'நான் ஆவியோடு விண்ணப்பம் பண்ணுவேன்'
ஆவியோடு விண்ணப்பித்தல் என்பது ஜெபிக்கின்ற மனிதனைக் குறிக்கிறது. தேவன் தன்னை அங்கிகரிக்கின்ற வகையில் அவரிடத்தில் கிறிஸ்துவின் மூலம் வரவேண்டும். தேவனிடம் நாம் உண்மையோடும், அன்போடும், அறிவாற்றலோடும் வருவது என்பது தேவ ஆவியானவராலே நடைபெறக்கூடிய ஒரு காரியமாகும்.
உலகத்தில் ஒரு மனிதனாவது ஒரு சபையாவது பரிசுத்த ஆவியானவர் ஒத்தாசையின்றி ஜெபத்தில் தேவனிடம் வரவேமுடியாது. 'ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை கிறிஸ்துவின் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்'. (எபேசியர் 2:18). மேலும் "அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.'' (ரோமர் 8:26,27) வேதத்தில் விண்ணப்பத்தின் ஆவியைப்பற்றி இவ்வளவு கூறப்பட்டிருப்பதாலும், அதில்லாமல் மனிதன் ஜெபிக்க முடியாததாலும், அதைப் பற்றி சில கருத்துக்களைக் கீழே பார்ப்போம்.
முதலாவது நாம் கவனிக்க வேண்டியது பவுலடியாரும். அப்போஸ்தலருமாகிய அவர்கள், முக்கியஸ்தராயும், ஆதி சபையைக் கட்டுகிறவர்களாயும், மூன்றாம் வானமட்டும் சென்றவர்களாமாயிருந்த போதிலும், நாம் இன்னின்ன காரியத்திற்காக ஜெபிக்க வேண்டுமென்று அறியாதவர்களாயிருக்கிறோமென்று கூறியுள்ளார்கள்.
பரிசுத்த ஆவியானவர் துணையின்றி நாம் எக்காரியங்களுக்காக, யாரிடம், யார் மூலம் ஜெபிக்க வேண்டுமென்று அறிந்துக்கொள்ளவே முடியாது. கிறிஸ்துவின் மூலம் தேவனோடு நாம் ஐக்கியப்பட முயற்சிப்பதா? விசுவாசத்திற்காகவா, கிருபையினால் அங்கீகாரம் பெறுவதற்காகவா, இருதய சுத்திகரிப்பிற்காகவா. எதற்காக ஜெபிப்பது? இதற்கு விடையை தெரிந்துகொள்ளவே முடியாது. ஏனெனில் "மனுஷனிலுள்ள ஆவியேயன்றி எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்" (1 கொரிந்தியர் 2:11). இவ்விடத்தில் அப்போஸ்தலர் உலகம் அறியாத உள்ளானவற்றையும் ஆவிக்குரியவைகளையும் பற்றிப் பேசுகிறார். (ஏசாயா 29:11)
மேலும், ஆவியானவரின் உதவியின்றி, ஜெபத்தின் உண்மைக் கருத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது. எனவேதான், நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமல் இருக்கிறோமென்று அப். பவுல் கூறுகிறார். ஆனால் இதில் ஆவியானவர் வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார்.
ஆவியானவர் உதவிசெய்யும் பொழுது அப்போஸ்தலர் வல்லமையோடு ஜெபிக்கவும் ஊழியம் செய்யவும் முடிந்தது.
நமக்கு ஏற்றபடி வேண்டிக்கொள்ளத் தெரியாது என்று வேத வசனத்தில் கூறப்பட்டுள்ளது. வேத வசனத்திற்கு ஏற்ற முறையில் ஜெபிக்காமல், நமது விருப்பப்படி ஜெபித்ததற்கு யெரொபெயாம் ஒரு உதாரணம். (இராஜாக்கள் 12:26-33) நம்முடைய திறமையினாலோ. தந்திரத்தினாலோ ஜெபிக்க முற்படக்கூடாது. பரிசுத்த ஆவியானவர் துணையின்றி நமக்கு சரியான முறையில் ஜெபிக்கத் தெரியாது. ஆவியானவர் மட்டுமே நமக்குத் துணையாக இருக்கவேண்டும். நமது ஆசைகளையும் ஆவியானவரோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் மனிதன் தன் விருப்பப்படி நினைப்பது ஒன்று, ஆனால் ஆவியானவர் கட்டளையிடுவது வேறொன்றாக இருக்கும்.
"நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்." (யாக்கோபு 4:3) ''நாம் ஜெபித்துக்கொண்டிருக்கும்பொழுது. ஆண்டவர் நம் இருதயத்தை அதன் வேரையும், ஆவியையும் தேடிப் பார்க்கிறார் (1 யோவான் 5:14). அப்படிப் பார்க்கிறவர் ஆவியானவர் எடுத்துரைப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளுகிறார். ஏனெனில் ஆவியானவர் மட்டுமே பரிசுத்தவான்களுக்காக தேவ சித்தப்படி வேண்டிக் கொள்ளுகிறார் என்று அவருக்குத் தெரியும். தேவ சித்தப்படி இருப்பதை மட்டும் அவர் ஏற்றுக்கொள்ளுகிறார். ஆவியானவர் மட்டுமே அதை நமக்கு வெளிப்படுத்தக் கூடும்.
நமக்கு எத்தனை ஜெபபுத்தகங்கள் இருந்தாலும் ஆவியானவர் ஒருவர் தவிர உண்மையாக ஜெபிக்க அவை உதவி செய்யமுடியாது. ஏனெனில் நமது பெலவீனங்களே நமக்கு தடையாக உள்ளன. அவை எவையென்று பார்ப்போம்.
முதலாவது பலவீனம்
ஆவியானவர் துணையின்றி, கடவுளைப்பற்றியோ, கிறிஸ்துவைப் பற்றியோ, நற்பேறுகளைப் பற்றியோ, ஒரு எண்ணம் ஒருவனுக்கு உண்டாகாது.'ஏனெனில் துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே' (சங். 10:4), மேலும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கூறப்பட்டிருக்கிறது (ஆதி. 6:5; 8:21). நாம் கடவுளைப்பற்றி சரியான எண்ணம் கொள்ள இயலாமையால் யாரிடம், யார் மூலம், எதற்காக ஜெபிக்கவேண்டுமென்று அறியமுடியாது இருக்கின்றோம். ஆவியானவர் துணையோடு மட்டுமே அதை அறிந்து கொள்ள முடியும்.
ஆவியானவரே இக்காரியங்களை ஆத்துமாக்களுக்கு வெளிப்படுத்துகின்றார். கிறிஸ்து தமது சீஷர்களுக்கு ஆவியானவரை தாம் அனுப்பப்போவதைப் பற்றி சொல்லும்பொழுது "அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்." (யோவான். 16:14). அவர் இப்படிச் சொல்வது போல் நமக்கு தெரிகிறது. "இயற்கையாக நீங்கள் இருளாயிருப்பதனால், என் காரியங்களை அறிந்துகொள்ள முடியாது. நீங்கள் இப்படி அல்லது அப்படி என்று முயற்சித்தாலும், உங்கள் அறியாமை நீங்குவதில்லை. உங்கள் இருதயத்தை ஒரு திரை மூடியிருக்கிறது. அதை யாருமே எடுத்துப்போட முடியாது. ஆவியானவர் மட்டுமே ஆவிக்குரிய அறிவைப் புகட்ட முடியும்.
சரியான ஜெபம் என்பது ஆவியானவரின் வெளிச்சத்தில் ஆத்மா காண்கிற ஒரு காட்சியாகும்; மற்ற ஜெபங்கள் எல்லாம் பகட்டாகவோ அல்லது தீழ்ப்பானவையாகவோ காணப்படுகின்றன. ஏனெனில் அவற்றில் இருதயமும். நாவும் ஒரே திசையில் செல்வதில்லை. ஆவியானவர் நமது பெலவீனங்களில் நமக்கு உதவி செய்யாவிடில் அவை ஒரே திசையில் செல்லவும் முடியாது. மாற்கு 7 –ம் அதிகாரம் நீதிமொழிகள் 28:9; ஏசாயா 29:13) எனவேதான் தாவீது தேவனது சமூகத்தில் அவரை தொழுதுகொள்ள வரும் பொழுது, நீர் என் உதடுகளை திறந்தருளும். அப்பொழுது என் வாய் உமது புகழை அறிவிக்கும் என்று சொல்லுகிறார். ஆவியானவர் உதவியின்றி ஒரு புகழ் வார்த்தை கூட பேசமுடிவதில்லை. எனவேதான், 'நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது பலவீனம்
ஆவியோடு ஜெபிக்கும் பொழுது. நம்முடைய ஜெபம் பலனுள்ளதாயிருக்கும். ஏனெனில் மற்றபடி மக்கள் அறிவாளிகளாகக் காணப்படுவதுப் போல, மாய்மாலமாயும், அனலற்றவர்களாயும். ஜெபத்தில் மிக கேவலமாய் காணப்படுகிறார்கள். எனவே அவர்களும், அவர்கள் ஜெபங்களும் தேவனுடைய பார்வையில் அறுவருபானவைகளாகக் காணப்படுகின்றன. (மத்தேயு 23:14; மாற்கு 12:40: லூக்கா 18:11,12; ஏசாயா 58:2,3)
ஜெபத்தின் தொனி அல்லது சத்தத்தை வைத்து அல்லது ஜெபிக்கிறவனுடைய பிரியம், ஆர்வம் இவற்றை வைத்து ஜெபத்தை தேவன் மதிப்பதில்லை. தனது ஒரு வார்த்தையைக் கூடக் காப்பாற்ற முடியாத பொல்லாங்கு நிறைந்த மனிதனிடம் இருந்து தேவனுக்கு உகந்த ஜெபம் ஏறெடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. எனவே, பரிசேயரும் அவர்களது ஜெபங்களும் நிராகரிக்கப்பட்டது. அவர்களால் திறமையாகவும், நீண்ட நேரமுங்கூட ஜெபிக்க முடியும். ஆனால் அவர்களுக்குக் கிறிஸ்துவினுடைய ஆவியானவரின் உதவி கிடைப்பதில்லை. எனவே, தங்கள் பெலவீனங்களோடு செய்கின்ற ஜெபம்,ஒரு உண்மையோடு, அறிவாற்றலோடு, அன்போடு செய்யப்படுகின்ற ஜெபத்தைப்போன்று ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பரலோகத்திற்கு போய் சேருகின்ற ஜெபம், ஆவியானவரின் பெலத்தோடு அனுப்பப்பட வேண்டும்.
மூன்றாவது பலவீனம்
ஆவியானவர் மட்டுமே நம்முடைய உண்மை, உள்ளான தீழ்ப்பான நிலையை நமக்குக் காட்டமுடியும். பேசும் வெறும் பேச்சுத்தான் என்ற கூற்றுக்கிணங்க, நம் தீழ்ப்பான நிலையை உணராத மனதில் எழுகின்ற ஜெபம் ஒரு வாய்ச் ஜெபமாகவே அமையும். அநேக ஜெபிக்கும் மக்களின் உள்ளங்களில் சாபத்திற்குரிய மாய்மாலமே காணப்படுகிறது. ஏனெனில் தங்கள் தீழ்ப்பான தன்மையை உணருகின்ற மனநிலை இன்னும் அவர்களில் உருவாகவில்லை. ஆவியானவர் கிரியை செய்தால், நமது தீழ்ப்பான தன்மையை மிக அழகாக தெளிவாக, அது எங்கே இருக்கிறது. அதற்கு மாற்று என்ன, அது நாம் தாங்க முடியாத நிலை என்றெல்லாம் எடுத்துக் காட்டுவார். நம் பாவத்தையும் தீழ்ப்பான தன்மையையும் திறம்பட சுட்டிக்காட்டக் கூடியவர் ஆவியானவரே. அதன் மூலம் நம் ஆத்துமா தேவனிடம் பரிவோடும். உணர்வோடும், ஆற்றலோடும் அவர் வார்த்தைக்கிணங்க ஜெபிக்க கூடிய நிலையை அடைகின்றது. (யோவான் 16:7-9)
நான்காவது பலவீனம்
மக்கள் தங்கள் பாவங்களை ஆவியானவரின் துணையின்றி பார்க்கும் பொழுது நம்மை மீட்ட கிறிஸ்துவிடம் ஜெபிக்க முன்வர மாட்டார்கள். ஆவியானவரின் உதவி இல்லாதிருந்தால், அவர்கள் காயீன், யூதாஸ்காரியோத்தைப் போல கடவுள் சமூகத்திலிருந்து ஓடிவிடுவார்கள். ஒரு மனிதன் தன் பாவ நிலையையும், தேவ சாபத்தையும் உணரும் பொழுதுகூட ஜெபிக்க முன்வரமாட்டான். அவனுடைய இருதயம் அவனிடம் நம்பிக்கை இல்லை, தேவனை தேடுவது வீண்? என்று சொல்லும். (எரேமியா 2:25; 18:12). நான் மிகவும் தீழ்ப்பானவன், கேவலமானவன், மதிப்பிடமுடியாத அளவுக்கு சாபத்திற்குரியவன் என்று நினைக்கலாம்! அந்நேரத்தில் தான் ஆவியானவர் நம்மிடம் வருகிறார். ஆத்துமாவை அமைதிப்படுத்தி, நம் முகத்தை ஆண்டவருக்கு நேராக திருப்புகிறார்: கடவுளிடமிருந்து சிறிதளவு இரக்கத்தை நமது இருதயத்தில் வரப்பண்ணி, தேவனிடம் நாம் தைரியமாக நெருங்கி வர நம்மை ஏவுகிறார். எனவேதான் ஆவியானவருக்கு 'தேற்றரவாளன்' என்று பெயர் கொடுக்கப் பட்டிருக்கிறது. (யோவான் 14:26)
ஐந்தாவது பலவீனம்
'ஆவியானவருக்குள்' அல்லது 'ஆவியானவரோடு' என்ற நிலை நமக்கு ஏற்பட வேண்டும், ஏனெனில் அவரின்றி, ஒருவருக்கும். தேவனிடம் வருவதற்கு வழி தெரிவதில்லை. நாம் குமாரன் மூலமாக தேவனிடம் வந்திருக்கிறோம் என்று எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் ஆவியானவர் உதவியின்றி தேவனிடம் வருவது என்பது ஆயிரத்தில் ஒறு என்று சொல்லக் கூடிய அளவுக்கு, அசாத்தியமான காரியம் என்று கூறலாம். "அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்" (1 கொரிந்தியர் 2:10) தேவனிடம் வருகிற வழியை மட்டுமல்ல, அவரிடம் எதை வாஞ்சிக்க வேண்டுமென்றும் ஆவியானவர் நமக்குக் காண்பிக்கிறார். ஆகையால்தான் மோசே ''நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்;" என்று சொல்லுகிறார் (யாத்திராகமம் 33:13). ஆவியானவர் என்னுடையதிலிருந்து எடுத்து உங்களுக்கு அறிவிப்பார்' என்று இயேசு கூறியுள்ளார். (யோவான் 16:14)
ஆறாவது பலவீனம்
ஆவியானவரின் துணையின்றி ஒருவன் தன் தீழ்ப்பான நிலையை அறிந்தாலும், அவரிடம் வருகிறதற்கான வழியை அறிந்திருந்தாலும், தேவன் கிறிஸ்து, இரக்கம் இவற்றில் அவனுக்கு பங்கில்லை. ஒரு தீழ்ப்பான பாவிக்கு, தன் பாவ உணர்வோடு, கடவுளது கோபத்தை உணர்ந்தவனாக, அவரிடம் வந்து 'பிதாவே' என்று அழைப்பது உலகிலேயே மிகப் பெரிய கடினமான காரியமாகும். அதோடு மாய்மாலமான கிறிஸ்தவனுக்கு இது மிகக் கடினமான காரியம். கடவுள் தனது தந்தை என்று அவனால் கூற முடிவதில்லை. அவ்வாறு கடவுளைத் தன்னால் அழைக்க தைரியமில்லை என்று கூறலாம். எனவேதான் ஆவியானவர் மக்கள் இருதயங்களில் அனுப்பப்பட்டு, தேவனை 'அப்பா பிதாவே' 'என்று கூப்பிடப் பண்ணவேண்டும்.
மனித சக்தியால் செய்ய முடியாத ஒன்றை ஆவியானவரின் உதவியால் நாம் செய்ய முடிகின்றது (கலாத்தியர் 4:6) ஆவியானவர் உதவி கொண்டுதான் நாம் தேவனது பிள்ளைகளென்றும், மறுபிறப்பின் அனுபவத்தையும், அறிந்துகொள்ள முடியும். ஆவியானவர் துணை கொண்டுதான், இரக்கத்தின் கிரியை தன்னில் செய்யப்பட்டிருக்கிறது என்று ஆத்துமா நம்பிக்கையோடு அறிந்து கொள்ளுகிறது. இதுதான் கடவுளை நாம் சரியாக அறிந்து கொண்டிருப்பதற்கு அடையாளம்.
ஏதோ கர்த்தரின் ஜெபத்தை பாராமல் படிப்பது, சொல்வது என்பது ஒரு அர்த்தமற்ற காரியமாகும். ஜெபத்தின் ஜீவன் இதில்தான் இருக்கிறது. அதாவது 'ஆவியானவரில்' அல்லது 'ஆவியானவரோடு' என்றிருத்தலாகும். அப்படி இருக்கும்பொழுது தான் அவன் பாவ உணர்வோடு தேவனிடம் வந்து இரக்கத்திற்காக, ஆவியானவர் பெலத்தோடு, 'பிதாவே' என்று கதற முடிகின்றது. அந்த 'பிதாவே' என்ற ஒரு வார்த்தை, விசுவாசத்தோடு சொல்லப்படும் பொழுது, மக்கள் சொல்லுகின்ற, அர்த்தமற்ற, அனலற்ற, ஆயிரம் ஜெபங்களை விட மிக விலையுயர்ந்ததாக அமைகின்றது.
இதைப் பற்றி நாம் நினைப்பதே கிடையாது. பிள்ளைகளுக்கு கர்த்தரின் ஜெபம், விசுவாசப்பிரமாணம் இவற்றை கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் அவற்றின் உண்மை அர்த்தத்தை அவர்கள் உணர்வதில்லை. தங்கள் தீழ்ப்பான தன்மையையும், கிறிஸ்துவின் மூலம் கடவுளிடம் வருவது இன்னதென்பதை உணராமல் இருக்கிறார்கள்.
ஆ! உன்னுடைய அவல நிலையை, தீழ்ப்பான நிலையை, முதலில் உணர்ந்துகொள்! உன்னுடைய குருட்டாட்டத்தையும், அறிவின்மையையும் காட்டும்படி அவரிடம் கதறி அழு. அவரை 'பிதாவே' என்றழைப்பதற்கு முன் இதைச் செய். பாவ உணர்வடைவதற்குமுன், கடவுளை பிதாவே என்றழைப்பது நாம் நமக்கு சொந்தமல்லாத ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வதுபோலாகும். நீங்கள் 'பிதாவே' என்றழைக்கிறீர்கள். ஆனால், கடவுள் நீங்கள் தேவ தூஷணம் சொல்வதாக சொல்கிறார். கடவுள் சொல்கிறார். "யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்றும் பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில்,' "தங்களை யூதரென்று சொல்லியும், யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள்" (வெளிப்படுத்தல் 3:9; 2:9).
ஒரு பாவி, தன்னை பரிசுத்தமுடையவனைப் போல நடிக்கும் பொழுது அவனை அதிக சாபம் சேரும். யூதர் இயேசுவிடம் யோவான் 8 -ல் சொன்னதுபோல இருக்கும். அவர்களது மாய்மாலத்தை அவர்களுக்கு சுட்டிக் காட்டினார் (யோவான் 8:41-45). இன்றைக்கும் கூட விபசாரக்காரர், திருடர், குடிகாரர், தவறாய் ஆணையிடுகிறவர். பொய்யர் போன்றவர் ஆலயத்திற்கு வந்து தங்கள் தேவதூஷண தொண்டைகளினாலும், மாய்மால இருதயங்களினாலும், பிதாவே! என்று அழைக்கும்பொழுது, நீதிமான்களைப்போல் காட்சியளிக் கின்றனர். ஒவ்வொரு தடவையும் இவ்வாறு செய்யும் பொழுது தேவதூஷணம் சொல்லுகிறார்கள். அதே சமயம் நேர்மையாக நடக்கிறவர்களை நாம் மதிப்பதில்லை. ஆனால் மாய்மாலங்களோடு இருப்பவர்களை நேர்மையானவர்கள், தேவமக்களென்று நாம் தவறாக நினைக்கிறோம். உண்மையான தேவ மக்களை, சண்டைக்காரர், எதிர்க்கின்றவர்கள், கோபிக்கிறவர்கள் 'என்றும் நினைக்கிறோம்.
நான் அதை சற்று விளக்கமாக கூற விரும்புகிறேன்.
iii) மேலும், 'உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல. பூமியிலேயும் செய்யப்படுவதாக' என்று நீ சொல்லுகிறாயா? இல்லை. வெளிப்படையாக நீ அப்படி சொன்னபோதிலும், உண்மையில் அவர் வானத்தில் வரும்பொழுது, எக்காளம் தொனிக்கும்பொழுது, மரித்தோர் எழுந்திருக்கும் பொழுது, நீ உன்கிரியைகளுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டியபொழுது, நீ ஓடி ஒளிந்து கொள்ள முயற்சிப்பாயல்லவா? இவ்விதமான எண்ணங்கள் கூட உனக்கு வெறுப்பாயிருக்கிறதல்லவா? தேவனுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலே செய்யப்பட்டால், நீ பிழைப்பது எப்படி?
பரலோகத்தில் தேவனுக்கு எதிர்ப்பே கிடையாது. அவ்வாறே பூலோகத்தில் தேவனுக்கு எதிர்ப்பே கிடையாது. அவ்வாறே பூலோகத்தில் ஏற்பட்டால், நீ நரகத்திற்கல்லவா அனுப்பப்பட வேண்டும். இதைப் போலவே கர்த்தருடைய ஜெபத்தின் மற்ற பகுதிகளை கூட நீ வாசித்து புரிந்துகொள்ளலாம். வெளிப்படையாக மட்டும் அதை அறிக்கை செய்து, தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளாமல், மாய்மாலமாக ஜீவித்துக் கொண்டிருக்கிற மக்களின் நிலையை சிந்தித்து பார். அப்படிப்பட்டவர்களில் நீயும் ஒருவனா? தேவனே இதை உனக்கு தெளிவாக்கி போதிக்க வேண்டுகிறேன். எதையும் அவசரப்பட்டு, புத்தியில்லாமல் செய்யவேண்டாம்: முக்கியமாக உன் வார்த்தைகளை குறித்து எச்சரிக்கையாயிரு. எனவேதான், ஞானி இவ்வாறு சொல்லுகிறார். "நீ மனம் பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு". (பிரசங்கி. 5:2)
ஏழாவது பலவீனம்
ஆவியானவரோடு சேர்ந்து ஜெபித்தால்தான் நம் ஜெபம் கேட்கப்படும். ஏனெனில், ஆவியானவர்தான் ஆத்துமாவை அல்லது இருதயத்தை தேவனிடம் உயர்த்திக் காட்ட முடியும். ''மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்' '(நீதிமொழிகள் 16:1). தேவ சம்பந்தப்பட்ட எந்த காரியத்திலும், குறிப்பாக ஜெபத்தில், இருதயமும், நாவும் ஒரே திசையில் செல்லவேண்டுமானால், தூய ஆவியானவரால் அது பக்குவப்படுத்த வேண்டும். நாவானது தானாக செயல்படக்கூடியது. பயமின்றி அல்லது ஞானமின்றிகூட பேச துணிந்துவிடும். தூய ஆவியானவரால் ஆளப்படுகின்ற இருதயத்தோடு இணைந்து செயல்படும்பொழுது தேவன் விரும்புகிற, கட்டளையிடுகின்ற காரியங்களையே நாவானது பேசும்.
தாவீது ராஜா 'கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்' என்று கூறுகிறார் (சங்கீதம் 25:1) பரிசுத்த ஆவி ஒத்தாசையின்றி ஒருவன் தேவனிடம் வந்து விண்ணப்பிக்க முடியாது. எனவேதான் தேவனது ஆவியானவரை 'விண்ணப்பங்களின் ஆவி' என்று அழைக்கப்படுகிறது. (சகரியா 12:10) ஆவியானவர் விண்ணப்பம் செய்ய நமக்கு உதவி செய்கிறார். எனவே பவுல், "வேண்டுதலோடும், விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி" என்று கூறுகிறார். (எபேசியர் 6:18) எனவேதான், 'ஆவியோடு ஜெபித்தல்' என்ற தலைப்பு கொடுத்துள்ளேன்.
நம் முழு இருதயம் ஜெபத்தில் இராவிட்டால், உயிரில்லாத வெறும் சத்தமாகவே அது இருக்கும்; ஆவியினால் உயர்த்தப்படாத எந்த இருதயமும் கடவுளிடம் ஜெபிக்க முன்வராது.
எட்டாவது பலவீனம்
எவ்வாறு இருதயமானது ஆவியானவரால் ஜெபத்தில் உயர்த்தப்படவேண்டுமோ, அப்படியே அங்கே ஆவியானரால் நிறுத்திவைக்கப்படவும் வேண்டும். அதுதான் சரியாக ஜெபிக்கும் முறையாகும். முதலாவது நான் நினைப்பது என்னவெனில், ஜெப்புத்தகங்கள் மூலம் நம் இருதயத்தை சரியான நிலையில் வைத்துக்கொள்ள இயலாது. ஏனெனில் அது கடவுளின் வேலை. இரண்டாவது அவை இருதயத்தை அதே நிலையில் வைத்திருக்கவும் இயலாது. மோசேயினால் தனது கையை நீண்ட நேரம் ஏறெடுக்க இயலாதிருந்தது என்று வாசிக்கிறோம். (யாத்திராகமம் 17:12) அப்படியானால் இருதயத்தை அதே நிலையில் வைத்திருப்பது எத்தனை கடினம் என்று நினைத்துப் பாருங்கள்!
இவ்வாறான மேலெழுச்சியான, கவலையீனமான ஜெபத்தை பார்த்து ஆண்டவர் மிகவும் வருத்தப்படுகிறார். "வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னை கனம் பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்கு தூரமாய் விலகியிருக்கிறது" (எசாயா 29:13). மேலும், "மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாய் போதித்து'' என்று அப்படிப் பட்டவர்களை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. (மத்தேயு 15:9) நான் ஜெபத்தை பற்றி என் சொந்த அனுபவத்தை சொல்ல விழைகின்றேன். ஒருவேளை அக்கருத்துக்களை வைத்து நீங்கள் என்னைப்பற்றி விபரீதமாகக்கூட நினைக்கலாம். ஆனால் நான் சொல்பவை முற்றிலும் உண்மையென்று அறிவேன்.
நான் ஜெபம் செய்ய ஆரம்பிக்கும் பொழுது என் இருதயம் தேவனிடம் வரமறுக்கின்றது, அங்கே தன் கவனத்தை செலுத்த மறுக்கின்றது. ஆகையால் நான் முதலில் செய்வது, கிறிஸ்துவின் மூலமாக தம்மிடத்தில் என் இருதயத்தை கொண்டுவரும்படி தேவனிடம் ஜெபிப்பேன். அதன்பிறகு அவ்விடத்திலே என் இருதயத்தை வைத்திருக்குமாறு தேவனை கெஞ்சிக் கேட்டுகொள்வேன். அநேக தடவைகளில் எனக்கு எவற்றிற்காக ஜெபிக்க வேண்டுமென்றே தெரியாதிருந்தது. அப்படிப்பட்ட குருடனாய், அறிவீனனாய் இருந்திருக்கிறேன். ஆனால், அவர் கிருபை எத்தனை அளவிறந்தது! அவரே நமக்குப் போதிக்கிறவர். (சங்கீதம் 86:11).
ஜெப நேரத்தில் நமது இருதயங்களில் அநேக பொத்தல்கள் இருப்பதை நாம் உணருகிறோம். தேவனுடைய சமூகத்திலிருந்து எப்படியாவது தப்பித்துகொள்ள இருதயத்தில் அநேக பக்கவழிகளும், பிரிந்து செல்லும் பாதைகளும் இருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ளவே முடியாது. எவ்வளவு பெருமை, எத்தனை மாய்மாலம் இருதயத்தில் இருக்கின்றது என்று நாம் அறிந்து கொள்ளவே முடியாது. ஆவியானவர் துணையில்லாவிட்டால், ஆத்மாவுக்கும், தேவனுக்கும் ஜெபத்தில் சரியான உறவு இருக்க முடியாது. ஆனால், ஆத்துமாவில் ஆவியானவர் வரும்பொழுது மட்டுமே ஜெபம் உண்மை ஜெபமாக மாறுகின்றது. மற்றப்படி அப்படி இருப்பதில்லை.
ஒம்பதாவது பலவீனம்
மேலும், நாம் ஆவியானவரின் உதவி, பெலத்தோடு ஜெபித்தால்தான், நாம் முறையான வகையில் ஜெபிக்கிறோம் என்று அறிந்து கொள்ளலாம். ஆவியானவரின் துணையின்றி, இருதயம் உத்தமத்தோடும். பிரியத்தோடும் ஜெபிக்க இயலாது; பெருமூச்சுகளோடும், ஏக்கத்தோடும் தனது இருதயத்தை கடவுளிடம் ஊற்றிவிட இயலாது. ஜெபத்தில் ஒருவனுடைய வாய் முக்கியமல்ல. அவனுடைய இருதயம் பிரியத்தோடு, வாஞ்சையோடு இருந்தாலும், தன்னுடைய விருப்பத்தை வெளிக் கொணர முடிவதில்லை. அவனுடைய விருப்பங்கள் பலவாறாக, பெலமுள்ளவையாக, வல்லமையுள்ளவையாக இருந்தாலும், இருதயத்திலிருந்து வருகிற வார்த்தைகளாலும், கண்ணீராலும், பெருமூச்சுகளாலும், அவிருப்பங்களை சரிவர வெளிக்கொணரமுடிவதில்லை. ஏனெனில், "அந்தப்படியே ஆவியானவரும் நமது பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். அவரே நமக்காக வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார்." (ரோமர் 8:27)
வெறும் வார்த்தைகளாலான ஜெபம் ஒரு பரிதாபமான ஜெபம். உண்மையாக தேவனிடம் ஜெபிக்கிற மனிதன் எவனும் தன் விருப்பத்தை, பிரியத்தை, தன் வாஞ்சையை, வார்த்தையின் மூலமோ அல்லது எழுத்தின் மூலமோ வெளியிடமுடிவதில்லை.
மிக அருமையான ஜெபங்கள் வார்த்தைகளல்ல, வெறும் பெருமூச்சுகளாகவே இருக்கும். ஜெபத்தில் அடங்கியிருக்கின்ற இருதயத்தை, ஜீவனை, ஆவியை, வார்த்தையில் வெளிப்படுத்தும் பொழுது ஜெபம் ஆழமற்ற, சக்தியற்றதாக காணப்படுகிறது. மோசே எகிப்தைவிட்டு வெளியேறி வந்து, பார்வோனால் விரட்டப்பட்டும் இஸ்ரவேலரால் நிந்திக்கப்பட்டும் இருந்த சமயம், அவன் தேவனை நோக்கி முறையிட்டான். (யாத்திராகமம் 14:15) உண்மையிலே, அவர் தன் ஆத்துமாவில் பெருமூச்சுகளோடும், அழுகையோடும், ஆவியிலே விண்ணப்பம் செய்திருக்கவேண்டும். மேலும், 'தேவன் ஆவிகளுக்கு தேவனாயிருக்கிறார்' என்று பார்க்கிறோம். (எண்ணாகமம் 16:22) அதோடு, (1 சாமுவேல் 16:7) -ல் தேவன் இருதயத்தைப் பார்க்கிறார் என்றும் நாம் அறியவேண்டும்.
தேவன் நமக்கு காட்டுகின்ற ஏதாவது ஒரு வேலையை நாம் செய்ய ஆரம்பிக்கும் கட்டத்தில், அதிகக் கடினமாகவே இருப்பதைக் காண்கிறோம். ஏனெனில் மனிதராக நமது சுய பெலத்தில் அதைச்செய்ய முடிவதில்லை. ஆனால் மேற்கூறிய ஜெபம் என்பது ஒரு கடமை மட்டுமல்ல. அது மிகத் தலையாகிய கடமையாக இருக்கின்றது. ஆகையால் தான் பவுலடியார் 'நான் ஆவியோடு விண்ணப்பம் செய்வேன்' என்று சொல்லும்பொழுது, ஆவியானவர் துணையின்றி நாம் ஜெபிக்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். மற்ற மனிதர் எழுதினதையோ, பேசினதை வைத்தோ நாம் ஜெபித்தல் என்பது கூடாத காரியம் என்பதை அவர் அறிந்திருந்தார்.
பத்தாவது பலவீனம்
ஆவியானவர் துணையில்லாவிட்டால், நாம் ஜெபிக்கின்ற கடமையில் தவறிவிடுவோம். அதை செய்தாலும்கூட இடையில் சோர்ந்துவிடுவோம். ஜெபம் என்பது தேவனின் சட்டமும் கூட என்று அறிதல் அவசியம். இவ்வுலக வாழ்க்கை முழுவதும் தவறாது அதை நாம் கடைபிடித்தல் தேவை. ஏற்கனவே, நாம் பார்த்ததுபோல, ஒருவனுடைய இருதயத்தை ஜெபத்தில் கொண்டுவருவதும், அதை அங்கேயே நிறுத்திவைப்பதும் ஆவியானவர் துணையின்றி மிகக்கடினம் என்று கவனித்தோம்.
எனவே இயேசு 'சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்' (லூக்கா 18:1) -ல் கூறியுள்ளார். மேலும் 'மாயக்காரன் எப்பொழுதும் தொழுது கொண்டிருப்பானோ' என்று (யோபு 27:10) -ல் பார்க்கிறோம். அப்படி அவன் ஜெபித்தாலும் நீண்ட ஜெபம் செய்து, தான் ஒரு மாய்மாலக்காரன் என்று காட்டுவான் என்று இயேசு கூறுகிறார். (மத்தேயு 23:14).
உண்மை ஜெபத்தின் வல்லமையை விட்டுவிட்டு அதை வெறும் சடங்காச்சாரமாக செய்வது அநேகருக்கு அது மிக எளிதாக இருக்கும். ஆனால் ஜெபத்தை ஜீவனோடு, ஆவியோடு ஆவியானவர் துணையின்றி ஏறெடுப்பது ஒரு மனிதனுக்கு மிகக் கடினமாயிருக்கும். தேவன் காதுகள் கேட்கத்தக்கதாக ஜெபிப்பது ஒரு மனிதனுக்கு மிகக் கடினமாயிருக்கும். யாக்கோபு ஜெபிக்க ஆரம்பித்தது மட்டுமல்ல, பிடிவாதமாக தொடர்ந்து அதில் நிலைத்து நின்றார் என்று (ஆதியாகமம் 32:26) -ல் பார்க்கிறோம். 'ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்' என்று (எபேசியர் 2:18) -ல் கூறப்பட்டிருக்கிறது.
யூதா நிருபத்தில், கெட்ட மனிதர் மீது தேவனது நியாயத்தீர்ப்பு வரும்பொழுது, பரிசுத்தவான்கள் எங்ஙனம் சுவிசேஷத்தின்மீதுள்ள விசுவாசத்தில் உறுதியாய் பற்றிக் கொண்டு நிற்கவேண்டுமென்பதைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. "உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி' (யூதா 20) என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படி நிலைநிற்பவர்களுக்கு மட்டுமே நித்ய பரலோக வாழ்வு உண்டு என்று நாம் அறியவேண்டும். நிலைநிற்க வேண்டுமானால், ஆவியில் ஜெபிக்க வேண்டும்.
சாத்தானும், அந்திக்கிறிஸ்துவும் உலகத்தை ஏமாற்றுவது எப்படியெனில், மக்களை தமது கடமைகளை, ஜெபத்தை, பிரசங்கத்தை செய்வதை, கேட்பதை, ஒரு வேஷமாக, ஒரு சடங்காச்சாரமாவே செய்யத்தூண்டுவதன் மூலமேயாகும். எனவேதான் பவுலடியார் தீமோத்தேயுவுக்கு எழுதும் பொழுது 'கடைசிக் காலத்தில் மக்கள் தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். இப்படிப் பட்டவர்களை நீ விட்டு விலகு' (2 தீமோத்தேயு 3:5) என்று கூறுகிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல், ஆவியோடு விண்ணப்பித்தலுக்கும், கருத்தோடும் விண்ணப்பித்தலுக்குமுள்ள வித்தியாசத்தை அறிந்திருந்தார். எனவேதான், 'நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன். நான் கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்' என்று கூறுகிறார். இதற்குக் காரணம் கொரிந்து சபையில் மக்கள் தங்கள் நன்மைக்கென்று மட்டும் காரியங்களை (ஜெபத்தை) செய்தார்களேயொழிய மற்றவர்கள் நன்மையை பற்றிக் கருதவேயில்லை. எனவேதான் நான் இதைப்பற்றி எழுத விரும்புகிறேன். அநேகருக்கு பல பாஷை வரங்கள் இருந்தும் அதை சுயமேன்மைக்காக தங்கள் வரங்களை மக்கள் உபயோகிக்க முன்வரவேண்டுமென்று வலியுறுத்துவதற்காகவே இவ்வதிகாரத்தை பவுலடியார் எழுதியுள்ளார். புரியாத ஒரு பாஷையில் நான் ஜெபித்தால். அதனால் எனக்கும், மற்றவர்களுக்கும் பிரயோஜனம் இருக்காது. (1 கொரிந்தியர் 14:3, 4, 12, 19, 24, 25) எனவே, 'நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம். பண்ணுவேன் என்று அப். பவுல் கூறுகிறார்.
இருதயம் ஜெபத்தில் சேர்ந்தே செயல்பட வேண்டியதின் அவசியத்தைப் போலவே நமது கருத்தும் அதில் சேரவேண்டும். கருத்தோடு செய்யப்படுகின்ற ஜெபமானது, அதில்லாமல் செய்யப்படுகின்ற ஜெபத்தைவிட அதிக ஆற்றலோடும், பயனுள்ளதாயும் அமையும் என்பது நிச்சயம். எனவேதான், அப். பவுல் கொலோசேயருக்கு எழுதும்பொழுது. 'நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும் ஜெபம் பண்ணுகிறோம்' என்று கூறுகிறார். (கொலோசியர் 1:9) மேலும் எபேசியருக்கு அப். பவுல் எழுதும்பொழுது 'தேவனை அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்கு அளிக்கத்தக்கதாக' என்று கூறுகிறார். (எபேசியர் 1:17) மேலும், பிலிப்பியருக்கு அவர் எழுதும்பொழுது, 'உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும் (பிலிப்பியர் 1:9) என்று கூறியுள்ளார். சரியான அறிவு, உணர்வு என்பது நம் எல்லா சரீர அல்லது ஆவிக்குரிய காரியங்களில் நன்மையாகவே அமையும் என்பது நிச்சயம். ஆகவே, இவ்வாறான அறிவு நமக்கு நம் ஜெபத்திலும் மிகத் தேவையானதாக இருக்கின்றது. கருத்தோடு ஜெபித்தல் என்றால் என்ன என்று கீழே பார்ப்போம்.
'கருத்தோடு'' என்று கூறும்பொழுது, நம் தாய் மொழியில் ஜெபிப்பதைக் குறிப்பதோடு, நடைமுறையில் எவ்வாறு அது அமைய வேண்டுமென்பதை காட்டுவதாகவும் இருத்தல் வேண்டும். பொருத்தமான ஜெபங்களை தேவனிடம் ஏறெடுக்க நமக்கு ஆவிக்குரிய அறிவு இருத்தல் வேண்டும்.
அ. கருத்தோடு ஜெபித்தல், ஆவியானவர் நமக்கு கொடுக்கின்ற அறிவிலிருந்து உண்டாகின்றது. ஒரு மனிதனுக்கு பாவமன்னிப்பின் அவசியமோ அல்லது நியாயத்தீர்ப்பின் ஆக்கினையிலிருந்து விடுதலையோ வேண்டுமானால் அதை இவ்வகை ஆவிக்குரிய அறிவிலிருந்துதான் நாம் பெற்றுக்கொள்ளமுடியும். மற்றப்படி, ஒன்று அதை வாஞ்சிக்கமாட்டோம், அல்லது அதைக்குறித்து கவலைப்படாமலே இருந்துவிடுவோம். இப்படித்தான் லவோதிக்கேயா சபை காணப்பட்டது என்று வெளி. 3:14ல் வாசிக்கிறோம். அவர்களுக்கு ஆவிக்குரிய கருத்து (அறிவு) இல்லாதிருந்தது. தாங்கள் நிர்ப்பாக்கியரும், பரிதபிக்கப்படத்தக்கவரும், குருடரும், நிர்வாணியுமாயிருப்பதை உணராதிருந்தார்கள். அதனால் அவர்களது ஆராதனை கிறிஸ்துவுக்கு வெறுப்பாயிருந்தது. எனவே 'நான் உன்னை வாந்தி பண்ணிப்போடுவேன்' என்று கூறுகிறார். (வெளிப்படுத்தல் 3:16,17. ஆவிக்குரிய அறிவில்லாதவர்களும், மற்றவர்களைப் போல வார்த்தைகளைச் சொல்லலாம். ஆனால், இரண்டிற்கும் எத்தனை வேறுபாடு உள்ளது! ஒருவர் தான் விரும்புவதை ஆவிக்குரிய அறிவோடு சொல்கிறார். மற்றவர் வெறும் வார்த்தைகளைச் சொல்லுகிறார் என்று அறிதல் வேண்டும்.
ஆ. ஆவிக்குரிய அறிவு, கடவுளது இருதயம், நம் ஆத்துமாவுக்கு தேவையான காரியங்களை கொடுக்கக் காத்திருப்பதை உணர்கிறது. தாவீது, தேவன் தன் மீது கொண்டுள்ள எண்ணங்களை உணர்ந்து கொள்ளுகிறார். (சங்கீதம் 40:5) அதைப்போலவே அந்த கானானிய ஸ்தீரியைக் கூட சொல்லலாம். அவளுடைய ஆவிக்குரிய அறிவினாலும், விசுவாசத்தினாலும், கிறிஸ்து கூறிய சில வெளிப்படையான கோப வார்த்தைகளுக்கு பின்னால் மறைந்திருந்த அவருடைய இரக்கத்தையும், சம்மதத்தையும் அறிந்துகொள்ள முடிந்தது. அவளும் கோபமடையக்கூடிய வார்த்தையை கேட்டாலும் தான் பெறவிரும்பிய இரக்கத்தை பெறும் வரை அங்கிருந்து போகவில்லை. (மத்தேயு 15:22-28)
தேவனது இருதயத்தில் இருக்கின்ற, பாவிகளை இரட்சிக்க வேண்டுமென்ற ஆவலை நாம் காணும்பொழுதுதான் நம் ஆத்மா அவரிடம் வந்து அவரது மன்னிப்பிற்காக கெஞ்சவேண்டி வரும். ஒரு மனிதன் ஒரு சாக்கடையில் நூறு பவுன் மதிப்புள்ள ஒரு முத்தைப் பார்த்தும் அதனுடைய மதிப்பை உணராதிருந்தால், அதை அப்படியே எடுக்காமல் விட்டுவிடுவான். ஆனால் அதன் மதிப்பை அறிந்திருந்தானானால், எப்படியாவது அதை எடுத்துவிடுவான். இதைப்போலவே ஆத்துமாவும் கடவுளுடைய காரியங்களின் மதிப்பை அறிந்திருந்தால் அதை பெற்றுக்கொள்ளாமல் விட்டுவிடவே மாட்டாது. தேவனது காரியங்களின் மதிப்பு ஒருவனுக்கு தெரிந்திருந்தால் அதற்காக தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் முயற்சி செய்து அழுது அதைப் பெற்றுக்கொள்ளும் வரை விட்டு விடமாட்டான். சுவிசேஷத்தில் கூறப்பட்டுள்ள அந்த இரு குருடர்களும், இயேசுவால், தமது வியாதிகளை சுகமாக்க முடியுமென்று அறிந்திருந்தபடியால், அழுது கூப்பிட்டார்கள். மற்றவர்கள் அதட்டினாலும் அதிகமதிகமாக அழுது கூப்பிட்டார்கள். (மத்தேயு 20:29-31) என்று பார்க்கிறோம்.
இ. நமது அறிவு, ஆவியானவரால் தெளிவாக்கப்படும்பொழுது, ஆத்துமா தேவனிடம் வருவதற்காக வழி காட்டப்படும். ஆத்துமாவுக்கு நல்ல ஊக்கமும் அளிக்கப்படுகிறது. அவ்வாறு வழிகாட்டப்படாத ஒரு ஆத்துமா மிகவும் சஞ்சலப்பட்டும் வழியை கண்டுகொள்ள முடியாது. அப்படிப்பட்ட ஆத்துமாவுக்கு எப்படி ஆரம்பிப்பது, எப்படிச் சொல்வது என்று அறியாமல், மனம் சோர்ந்து, ஆபத்தான நிலையில் இருப்பதாக நாம் அறியலாம்.
ஈ. ஆவியானவரால் தெளிவாக்கப்பட்ட அறிவானது, தேவனது வாக்குத்தத்தங்களைப் பெற்றுக் கொள்ளுகின்ற தைரியத்தை அடைகிறது. அதனால் பெலன்மேல் பெலன் பெற்றுக்கொள்ளுகிறது. சாதாரணமாக, மனிதர் நமக்கு சில காரியங்களை கொடுக்கப்போகிறோமென்று சொன்னாலே நம் இருதயம் எவ்வளவு ஆவலோடு பொங்கி நிற்கிறது என்பதை அறிவோம்.
உ. ஆவியானவரால் தெளிவாக்கப்பட்ட அறிவோடு தேவனிடம் வரும்பொழுது, சில சமயங்களில் தேவன் நமக்கு கடந்த காலங்களில் பாராட்டின நன்மைகளை அவரிடமே எடுத்துச்சொல்லிக் கெஞ்சி ஜெபிக்கலாம். யாக்கோபு அவ்வாறு செய்தார். (ஆதியாகமம் 32:9) எப்பிராயீம் தன் குற்றங்களைக் குறித்து வெட்கப்பட்டு அதற்காக மனஸ்தாபப்பட்டு, துக்கப்பட்டு புலம்பிக் கொண்டிருப்பதை நாம் அறிகிறோம். (எரேமியா 31:18-20). அப்படிச் செய்யும் பொழுது எப்பிராயீம் தன்னை தேவனுக்கு உகந்தவனாக மாற்றிக்கொண்டு அவரது மன்னிப்பையும் பெற்றுக்கொள்வதைப் பார்க்கிறோம். எப்பிராயீம் தன்னைப்பற்றி வருத்தப்படும் பொழுது பின்வருமாறு கூறுவதைப் பார்க்கிறோம். ‘தேவனே, நீரே என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்;' நான் மனஸ்தாபப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் என்னை விலாவில் அடித்துக் கொண்டிருக்கிறேன் நாணிக்கொண்டுமிருக்கிறேன். என் இளவயதின் நிந்தையை சுமந்து வருகிறேன்" இப்புலம்பலைக் கேட்ட தேவன் தன் உடன் பதிலை சொல்லுகிறார். "எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்கு பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாக பேசினது முதல் அவனை நினைத்துக் கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காக கொதிக்கிறது, அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் ". எனவே, ஆவியோடு மட்டுமல்ல, கருத்தோடும் ஜெபிக்க வேண்டுமென்பதை உணருகிறோம்.
ஒரு உதாரணத்தை வைத்து விளக்கலாம். நம்முடைய வாசலில் இரண்டு பேர் பிச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்களென்று வைத்துக்கொள்வோம். ஒருவன், மிகவும் ஏழ்மையான நிலையிலும், பசியோடும், காலில் காயத்தோடு நடக்கமுடியாமலும், அதேசமயம் மற்றெருவன் நல்ல சுகத்தோடும். காணப்படுகிறார்களென்று வைத்துக்கொள்வோம். பலத்தோடும் ஆனால் இருவரும் ஒரே வார்த்தைகளைச் சொல்லி நம்மிடம் பிச்சை கேட்கிறார்களென்றும் வைத்துக்கொள்வோம். இருந்தபோதிலும், உண்மையாகவே வறுமையிலும், பசியிலும் இருக்கிறவனுடைய வேண்டுதல், சுகமாயிருக்கிறவனுடைய வேண்டுதலை விட அதிக உருக்கமாயும், நம் இரக்கத்தைத் தூண்டுகிறதாயும் அமையுமல்லவா? இதைப் போலவே நம்மில் சிலர் தேவனிடம் பழக்கத்தின் பேரிலும், சடங்காச்சாரமாகவும் ஜெபிக்கிறோம். சிலர் மனக்கிலேசத்தில் போய் ஜெபிக்கிறோம். முதல் தரத்தார் தங்கள் மூளை அறிவையும். எண்ணங்களையும் வைத்து ஜெபிக்கிறார்கள். ஆனால் 'சிறுமைபட்டு, ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்'. (ஏசாயா 66:2). என்று கர்த்தர் கூறுகிறார்.
ஊ. நாம் தெளிவாக்கப்பட்ட கருத்தோடு ஜெபிக்கும் பொழுது, ஜெபத்தின் அர்த்தமும் அதன் முறையும் மிகவும் உபயோகமானதாக அமையும் என்பது உறுதி. ஒருவன் தனது கருத்தைத் தெளிவாக வைத்திருக்கும்பொழுது நன்மை தீமை எதுவென்று எளிதாகப் புரிந்து கொள்ளவும், அதோடு மனிதனின் அபாத்திரத்தன்மையையும், கடவுளின் இரக்கத்தையும் புரிந்துகொள்ளவும் முடிகின்றது. அதனால் அவனுடைய ஆத்துமாவுக்கு, மற்றவர்களால் எழுதப்பட்ட ஜெபங்களின் போதனை அவசியப்படாது. அப்படிப்பட்டவனுக்கு வேதனை ஏற்படும்பொழுது, ஜெபிக்கவேண்டுமென்று யாருமே சொல்லிக்கொடுக்க தேவையில்லை. தானாகவே ஜெபிக்க ஆரம்பிப்பான். தனது ஆவியில் ஏற்படுகின்ற நெருக்கம்,உணர்வு இவைகளால் தூண்டப்பட்டு அவ்வாறு செய்வான். கடவுளிடம் ஜெபத்தில் அழுது தன்னை விடுவிக்கும்படி கெஞ்சுவான். இவ்வாறு தாவீது ராஜா செய்தார் என்று வாசிக்கிறோம். (சங். 116:3,4). மேலும், (சங்கீதா 38:1-12) -ல் தாவீது ராஜா, தமது துன்பத்தில் தேவனிடத்தில் முறையிடுவதை வாசிக்கிறோம்.
எ. நம்முடைய தெளிவாக்கப்பட்ட கருத்து, நம்மைக் கடைசி வரை. நமது கடமையாகிய ஜெபத்தில் நிலைத்திருக்கப்பண்ண வேண்டும். தேவனுடைய மக்கள் சாத்தானுடைய தந்திரம், ஏமாற்றும் வகை இவற்றையெல்லாம் நன்கு அறிந்திருக்கிறார்கள். சாத்தான் நம்முடைய காத்திருத்தலின் மூலம் நம்மை ஆயாசப்படுத்தி, நம்மேல் தேவனுக்கு பிரியமில்லை என்பதுபோல் காட்டிவிடுவான். நீ ஜெபித்துக் கொண்டேயிருந்தாலும், அதற்கு பதிலொன்றுமில்லை? என்று நம்மிடம் சாத்தான் சொல்லுவான். உன்னுடைய இருதயம் கடினப்பட்டு, குளிர்ந்து இறந்துவிட்டது. நீ ஆவியோடு ஜெபிப்பதில்லை. ஆர்வத்தோடு ஜெபிப்பதில்லை. மற்ற காரியங்களை பற்றி அதிக கவலைப்படுகிறாய், ஜெபிப்பதுபோல் நடிக்கிறாய். எனவே, மாய்மாலக்காரனே நீ ஜெபிப்பதில் பயனில்லை, அதை விட்டுவிடு என்று அவன் சொல்லுவான்.
இப்படிப்பட்ட சமயத்தில், நீ சரியான கருத்தோடு இராவிட்டால். ஒருவேளை நீ 'கர்த்தர் என்னை கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார்' என்று சொல்லலாம். (ஏசாயா 49:14) ஆனால் உண்மையில் கருத்தோடு இருந்தால், 'நான் ஆண்டவரைத்தேடி, அவருக்காகக் காத்திருப்பேன், அவர் மௌனமாயிருந்தாலும் ஆறுதல் அளிக்காவிட்டாலும், அவரை நான் விடமாட்டேன்' என்று சொல்லுவோம். (ஏசாயா 40:27) தேவன் யாக்கோபை சிநேகித்தார், ஆனாலும் அவனை ஆசீர்வதிக்குமுன்பு அவனைத் தன்னோடு போராடவைத்தார். (ஆதியாகமம் 32:25-27) தாமதிப்பதினால் நம் மேல் அவருக்கு பிரியமில்லை என்று நினைக்காமல், சில சமயங்களில் தம்மை தமது பரிசுத்தவான்களின் கண்களுக்கு மறைத்துக் கொள்ளுகிறார். (ஏசாயா 8:17) என்று அறிதல் அவசியம். தமது பிள்ளைகள் ஜெபித்துக் கொண்டேயிருப்பது அவருக்குப் பிரியம். நாம் பரலோக கதவுகளைத் தட்டிக் கொண்டிருப்பதைப் பார்ப்பது அவருக்குப்பிரியம். ஒருவேளை நம் ஆத்துமா, என்னை சோதிப்பது அவருக்கு பிரியமோ, நான் அழுவதை ஏன் அவர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்று கூட நினைக்கலாம்.
இயேசு சொன்ன உவமையில், அந்த விதவை, நியாயாதிபதி தாமதம் செய்தாலும், தனக்கு நீதி எப்படியாவது கிடைக்குமென்று நம்பினாள் என்று கூறப்பட்டிருக்கிறது. (லூக்கா 18:1-6) நாம் கடவுளுக்கு காத்திருப்பதை விட அவர் நமக்காக அதிக நாட்கள் காத்திருக்கின்றார் என்பதை உணரவேண்டும். எனவே, தாவீது 'கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார்' என்று சொல்லுகிறார். (சங்.40:1) இப்படிச் சொல்வதற்கு, நமது கருத்து தெளிவாக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் இன்றைய உலகில் அநேக கடவுளுக்குப் பயந்த விசுவாசிகள், தங்களது கருத்து ஆவியானவரால் தெளிவாக்கப்படாததால் சாத்தானின் சோதனை ஏற்படும்பொழுது தங்கள் விசுவாசத்தை, ஜெபத்தை விட்டு விடுகிறார்கள். தேவன் அவர்கள் மீது இரக்கப்பட்டு, அவர்கள் ஆவியோடும். கருத்தோடும் ஜெபிக்க உதவிசெய்வாராக.
இதைப்பற்றி எனது அனுபவத்தைக்கூற விரும்புகிறேன். ஆனால் தேவன் எப்படிப்பட்ட பெரிய பாவிகள் மீதும் இரங்கக்கூடும் என்று அறிந்தேன். சுகமாயிருக்கிறவர்கள் மீதல்ல. வியாதியஸ்தன் மீது, நீதிமான்கள் மீதல்ல, பாவிகள் மீது, நிறைவுள்ளவர்கள் மீதல்ல. குறைவுள்ளவர் மீதே தேவன் தமது கிருபையை, இரக்கத்தை பொழிகிறார் என்று அறிந்தேன். பரிசுத்த ஆவியானவர் உதவியால். அவர் மீது அண்டிக்கொண்டேன். அவர் கரத்தை பிடித்துத் தொங்கிகொண்டேன். அவர் உடனே பதில் கொடுக்காவிட்டாலும், அவரிடம் சென்று அழக் கற்றுக்கொண்டேன். இப்படிப்பட்ட சோதனையில், துன்பத்தில் இருக்கின்ற தமது ஏழைமக்களை, தேவன் தாமே விடுவிப்பாராக. குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும். அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. (அப்போஸ்தலர் 2:3). தேவன் நமக்கு ஆவியோடும், கருத்தோடும் ஜெபிக்க உதவி செய்வாராக.
1. கேள்வி: 'எதற்காக எப்படி ஜெபிப்பது என்று நமக்கு தெரியாது என்பது தேவனுக்கு தெரியும். அப்படியிருக்கும் பொழுது தேவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?
விடை: 'நமக்கு ஜெபிக்க தெரியாது என்று சொல்லுகிறோம். உண்மைதான் ஆனால் நம் தீழ்ப்பான நிலையை நம்மால் உணரமுடிகின்றதா? சட்டத்தின் தண்டனைக்குள்ளாக வாழ்கிறோமென்று தேவன் நமக்கு காட்டியிருக்கிறாரா? அப்படி யிருக்குமானால் நீ கவலைப்படவேண்டியதில்லை. உன் இருதயத்தில் தேவன் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்று நினைக்க இடமுண்டு. ஜெபம் உன் வாழ்வில் கண்டிப்பாக பலமாக வெளிப்படும். உன் பெருமூச்சுகள் உன் வீட்டின் பல பாகங்களிலிருந்து பரலோகத்திற்கு சென்றிருக்கிறது. ரோமர் 8:26), உன் இருதயம் உன் கண்ணீரை நன்கு அறியும். உன் இருதயம் இன்னொரு உலகத்தின் காரியங்களை வாஞ்சித்து, இவ்வுலக காரியங்களை மறக்கும்படி செய்திருக்கின்றதா? (யோபு 23:12) வசனத்தை வாசித்துப்பார். 'குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை'
விடை : தேவன், ஜெபத்தில் நீ சொல்லும் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் உன் இருதயத்தின் நொறுங்குண்ட தன்மையை உற்று கவனிக்கிறார். அதுமட்டுமே அவருடைய இரக்கத்தை நமக்குக்கொண்டுவரும். தேவனே. நொறுங்குண்டதும், நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் (சங்கீதம் 51:17)
சில சமயங்களில், நமது பேசமுடியாத நிலை, மிகுந்த துன்பத்தால் ஏற்படக்கூடும். 'நான் பேசமாட்டாதபடி சஞ்சலப் படுகிறேன் (சங். 77:4). இதனால் துன்பப்படுகிற ஆத்துமாக்களுக்கு ஆறுதல் ஏற்படக்கூடும். நம்முடைய வாயின் வார்த்தைகள் வராவிட்டாலும், ஆவியானவர் நம் உள்ளங்களில் பெருமூச்சோடு விண்ணப்பம் செய்ய உதவுகிறார்.
தேவனுக்கு முன்பாக நாம் நின்று பேசவேண்டுமானால், முதலாவது, நமது தீழ்ப்பான நிலையை உணரவேன்டும். இரண்டாவது, தேவனது வாக்குத்தத்தங்களை நினைவு கூரவேண்டும். மூன்றாவது கிறிஸ்துவின் இருதயத்தை நோக்கி பார்க்கவேண்டும். நம்முடைய பாவநிலையை உணர்ந்து சுத்திகரிக்குமென்று நம்பவேண்டும். நம்மைப் போன்ற பாவிகளுக்கு, கிறிஸ்து உதவியிருக்கிறாரென்று அறியவேண்டும். அவர் இரக்கத்தின் ஐசுவரியத்தை நம் இருதயத்தில் நினைவுகூரவேண்டும். வார்த்தைகளால் மட்டும் தேவனிடம் ஜெபிக்கக்கூடாது. அவ்வார்த்தைகளோடு நம் முழு இருதயமும் சேர்ந்திருக்கவேண்டும். அப்படியிருக்குமானால் நிச்சயம் ஜெபிக்கும்பொழுது தேவனைக் கண்டுக் கொள்ளுவோம். (எரேமியா 29:13)
விடை: நாம் ஒருவரையொருவர் ஜெபிக்க உற்சாகப்படுத்த வேண்டும். ஆனால் இப்படித்தான் ஜெபிக்க வேண்டுமென்று வலியுறுத்த அவசியமில்லை. பொதுவாக கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டுமென்று சொல்லலாமேயொழிய, ஒரு குறிப்பிட்ட ஜெபங்களை மட்டும் ஜெபிக்க வேண்டுமென்று சொல்லுவது தவறு. பவுல் அப்போஸ்தலன் பொதுவாக கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டுமென்று மட்டும் சொல்லுகிறார். (எபேசியர் 6:8) (ரோமர் 15:30-32)
விடை : நாம் சில வேளைகளில் நமது பிள்ளைகளுக்கு ஜெபிப்பதற்கு தவறான முறைகளை கற்றுக்கொடுக்கிறோம். ஆனால் பிள்ளைகளுக்கு தங்களுடைய தீழ்ப்பான நிலையை உணரும்படி செய்யவேண்டும். ஆதி பாவத்தினாலும், செயற்பாவத்தினாலும், தேவ கோபாக்கினையின் கீழிருக்கிறார்களென்று எடுத்துகாட்ட வேண்டும். இதன் மூலம் நம் பிள்ளைகள் விரைவில் தாங்களே ஜெபிக்க கற்றுக்கொள்ளுவார்கள். இதற்குப் பதிலாக அவர்கள் பாவ நிலையை அவர்களுக்கு எடுத்துக்காட்டாமல், சில எழுதப்பட்ட ஜெபங்களை மட்டும் கற்றுக்கொடுத்தால், அவர்களை நாமே சபிக்கப்பட்ட மாய்மாலக்காரர்களாக, பெருமையோடு சுற்றித்திரிய தூண்டுவதுபோல காணப்படும். எனவே பிள்ளைகளுக்கு. அவர்களுடைய அவலநிலையை எடுத்துக்காட்ட வேண்டும். பாவத்தினால் ஆக்கினைகுள்ளாகி நரகத்திற்கு போக வேண்டும். அதே சமயம் எப்படி மன்னிப்பு பெற்று வெற்றியோடு வாழமுடியுமென்று அவர்களிடம் சொல்ல வேண்டும். அப்படி செய்யும் பொழுது அவர்கள் கண்களில் கண்ணீர்வரும். இருதயத்தில் பெருமூச்சும் ஏற்படும். மேலும் யாரிடம். யார்மூலம் ஜெபிக்கவேண்டுமென்று சொல்லவேண்டும். தேவனுடைய வாக்குத்தத்தங்களையும். அவருடைய கிருபையும் எடுத்துச்சொல்ல வேண்டும்.
தேவனே அவர்கள் கண்களைத் திறக்க வேண்டும். எனவேதான். தாவீது 'பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.' என்று சொல்லுகிறார். (சங்கீதம் 34:11) உங்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுப்பேன் என்று சொல்லாமல், கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்கு போதிப்பேன் என்று சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். அதாவது, கர்த்தருக்குப் பயப்படுவதன் மூலம், நாம் நம்முடைய பாவநிலையை உணர்ந்து சுவிசேஷத்தில் நம்பிக்கை வைக்கமுடியும். அந்த நம்பிக்கையின் மூலம், ஆவியானவர் நமக்கு ஜெபிக்க கற்றுக் கொடுக்கிறார். இவ்வகை போதனையினால் அவர்கள் தேவனிடம் ஜெபிக்கும்படி பழகிக்கொள்வார்கள். தேவன் அப். பவுலை அவர் மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பும்வரை, ஒரு ஜெபிக்கின்ற மனிதனாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று பார்க்கிறோம். அதேபோல் நாமும் கூட (அப்போஸ்தலர் 9:11)
விடை: அவர்கள் மட்டுமல்ல, நாமுங்கூட கிறிஸ்துவால் போதிக்கப்பட விரும்புவோம். தற்சமயம் அவர் சரீரத்தில் இல்லாததால், நமக்கு வார்த்தையாலும், ஆவியானவர் மூலமாயும் கற்றுக்கொடுக்கிறார். நமக்கு போதிக்க, ஆவியானவரை அனுப்ப வேண்டுமேன்று சொன்னதிற்கு இணங்க அவரை நம்மிடையே அனுப்பி இன்றும் போதிக்கிறார். (யோவான் 14:16; 16:7)
மேலும், பரமண்டல ஜெபம் மத்தேயு 6 -ல் இருப்பதை விட லூக்கா 11 -ல் வித்தியாசப்படுவதைப் பார்க்கலாம். மேலும் சீஷர்கள், நாம் எல்லாருமே ஒரே வகை ஜெபத்தை செய்யும்படி சொல்லவில்லை. அவர்களும் அப்படி செய்யவில்லை. மேலும் நிருபங்களிலும், நாம் விசுவாசத்தை முக்கியமாக முயற்சிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருப்பதை பார்க்கிறோம்.
மேலும், கிறிஸ்து, பரமண்டல ஜெபத்தின் மூலம், நாம் ஜெபத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும், பரலோகத்திலிருக்கிற தேவனிடம், விசுவாசத்தோடு, அவருடைய சித்தத்திற்கு உகுந்த காரியங்களுக்காக, ஜெபிக்க வேண்டுமென்று கூறியுள்ளார். அந்த ஜெபத்தையே ஏறெடுங்கள். அல்லது அந்தமாதிரியில் ஜெபியுங்கள் என்று கூறியுள்ளார் என்று அறியலாம்.
விடை : தேவன் நம்மிடம் பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்கிறவர்களுக்கு அதைக் கொடுப்பார் என்று கிறிஸ்து சொன்னார். அதாவது, அதிக அளவு பரிசுத்த ஆவியைக் கொடுப்பார் என்று அர்த்தப்படும். அவர்கள் ஏற்கனவே, ஓரளவு பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தார்கள். கிறிஸ்தவர்களாகிய நாமும் கூட அதிக அளவு பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப் பட்டுள்ளது. ஓரளவு பரிசுத்த ஆவியை நாமும் பெற்றிருக்கிறோம்.
விடை: இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்ற யாராயிருந்தாலும் சரி, அவர்கள் ஜெபிக்கலாம். ஆனால் ஜெபிக்க ஆரம்பித்தவுடன் தன்னை கதேவனுடைய பிள்ளையென்று நினைத்துவிட முடியாது. தேவனுடைய இரக்கம் உனக்கு காட்டப்பட்டால், இயற்கையாகவே ஜெபிக்க ஆரம்பிக்கலாம். கிறிஸ்தவன் என்பதற்கு முதல் அடையாளம் அவன் ஜெபிக்கிறவனாயிருப்பான் (அப்போஸ்தலர் 9:11). தேவனை கிறிஸ்துவாக பார்க்க முற்படுகின்றான்.
அ. கிறிஸ்துவை அவரது பரிசுத்தம், அன்பு, ஞானம், வல்லமை இவற்றிற்காக தேடுகின்றான். சரியான ஜெபம், கிறிஸ்துவின்மூலம் தான் தேவனிடம் செல்லவேண்டும். எனவே, ஜெபம், கிறிஸ்துவையே மையமாக கொண்டிருக்க வேண்டும். பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு. பூலோகத்தில் உம்மைத்தவிர வேறே விருப்பமில்லை' (சங்கீதம் 73:25).
ஆ. நம் ஆத்துமா கடவுளோடு தொடர்ந்து சம்பந்தத்தில் ஈடுபடவேண்டும். 'நான் விழிக்கும் போது உமது சாயலால் திருப்தியாவேன்' (சங்கீதம் 17:15) ''நம்முடைய பரம வாசஸ்தலத்தை தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்'' (2 கொரிந்தியர் 5:2).
இ. சரியான ஜெபம், ஜெபிக்கப்படுகின்ற காரியத்துக்காக காத்திருக்க நம்மைத் தூண்டுகிறது. "எப்பொழுது விடியுமென்று விடியற்காலத்திற்கு காத்திருக்கிற ஜாமக்காரரைப் பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது" (சங்கீதம் 130:6). ''நான் எழுந்து, என் ஆத்தும நேசரைத் தேடினேன்" (உன்னதப்பாட்டு 3:2) இங்கே நம்மை ஜெபத்திற்கு தூண்டுகிற இரு காரியங்களைப் பார்க்கிறோம். ஒன்று, இவ்வுலக காரியங்களிலும், பாவத்தின் மேலும் வெறுப்பு; மற்றொன்று, பரிசுத்த நிலையில் தேவனோடு தொடர்பு கொள்ள ஒரு அடக்கமுடியாத ஆவல். இவற்றோடு, மக்கள் பொதுவாக ஏறெடுக்கின்ற ஜெபங்களை ஒப்பிட்டு பார்த்தால், அவை கேலி ஜெபங்களாகவும், வெறுக்கப்படத்தக்க ஆவியின் பெரு மூச்சாகவும் காணப்படுகின்றது. அநேகர் ஏறெடுக்கின்ற ஜெபங்கள், ஜெபங்களே அல்ல: அவை, கடவுளையும், உலகத்தையும் ஏமாற்றுவதுபோல் அமைகின்றது. அவர்கள் வாழ்க்கையும், அவர்கள் ஜெபத்தையும் ஒப்பிட்டு பார்த்தால், அவர்கள் ஜெபிக்கிற காரியங்களுக்காக, வாழ்க்கையில் அவர்கள் வாஞ்சிப்பதில்லை. அவர்களது மாய்மாலம் இதில் விளங்குகிறது.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.