தேவனின் சத்தியமானது இருபுறமும் ஆபத்தான மற்றும் செங்குத்தான மலைச்சரிவைக் கொண்டிருக்கும் குறுகலான பாதையுடன் சிறப்பாக இணைத்துக்கூற முடியும்: வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், இரண்டு தவறான வளைகுடாக்களுக்கு இடையில் இருக்கிறது. இந்த ஓவியம் எந்த அளவிற்கு சிறந்தது என்பதை நாம் ஒரு உச்சியிலிருந்து மறு உச்சிக்கு நகரக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதிலிருந்து கண்டுக்கொள்ளலாம். பரிசுத்த ஆவியானவரின் உதவி மட்டுமே நாம் இதில் சமநிலையில் இருக்கவைக்க முடியும், அப்படி செய்யத் தவறும்பட்சத்தில் நாம் தவறிழைப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது, தவறு என்பது சத்தியத்தை புரட்டி அதை மறுதலிப்பதே, சத்தியத்தின் ஒரு பகுதிக்கு எதிராக அடுத்த பகுதியில் குழிபறிப்பது என்று சொல்லலாம்.
இறையியல் வரலாறு இந்த உண்மையை வலுக்கட்டாயமாக அதே நேரத்தில் மகிழ்ச்சியற்ற தோற்றத்துடன் எடுத்துரைக்கிறது. ஒரு சந்ததியினர் சரியாகவும் சிரத்தையுடனும் அவர்கள் நாட்களில் மிகவும் தேவைப்பட்ட சத்தியத்தின் இந்த அம்சத்திற்காக வழக்காடினார்கள். அடுத்த சந்ததியினர் அதிலே நடந்து முன் செல்வதற்குப்பதிலாக, தங்கள் தரப்பு தனித்தன்மையைக் காட்டிக்கொள்ள அறிவுப்பூர்வமாக போரிட்டனர், வழக்கமாக, தாக்கப்பட்ட சத்தியத்தை பாதுகாப்பதில், அவர்களுடைய எதிர்த்தரப்பினர் எடுத்துரைத்த சமநிலையான சத்தியத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்; அதன் தொடர்ச்சியாக, அடுத்த சந்ததியில், உண்மையான தேவனுடைய ஊழியக்காரன் அவர்களுடைய (சத்தியத்தை மறுதலித்தவர்களுடைய) கண்களுக்கு எது மிகவும் மதிப்புமிக்கதாகத் (தவறான சத்தியங்கள்) தெரிந்ததோ, அதைப் புறந்தள்ளவும், அவர்கள் எதை மறந்துபோனார்களோ (சரியான சத்தியம்), அதை முக்கியத்துவப்படுத்தவும் அழைக்கப்படுகிறான்.
‘ஒளிக்கதிர்கள் சூரியனிலிருந்தோ, நட்சத்திரங்களிலிருந்தோ அல்லது மெழுகுவர்த்தியிலிருந்தோ, எதிலிருந்து வந்தாலும் அது நேர் கோட்டில் பயனிக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது; மனிதனுடைய நடுக்கமற்ற கைக்கூட ஒரு நெளிவில்லாத நேர்க்கோட்டை வரைய முடியாததுபோல, தேவனுக்கான நம்முடைய செயல்கள் மிகவும் குறைவுள்ளதாகவே உள்ளன’ (டி. குத்திரி 1867). இது உண்மையோ இல்லையோ, நிச்சயமாக ஒரு மனிதன் தானாகவே இந்த இரு முரண்பாடான போதனைகளுக்கிடையில் நேர் கோடான சத்தியத்தில் நடப்பது இயலாத காரியம்: தேவனுடைய அநாதி சித்தம் மற்றும் மனிதனுடைய பொறுப்பு; கிருபையின் தெரிந்தெடுப்பு மற்றும் உலகலாவிய நற்செய்தி அறிவிப்பு; பவுலின் கூற்றுப்படி கிருபையினால் நீதிமானாக்கப்படுதல் மற்றும் யாக்கோபுவின் கூற்றுப்படி கிரியையினால் நீதிமானாக்கப்படுதல். பல தருணங்களில், தேவனுடைய முழுமையான சித்தம் வலியுறுத்தப்படுமிடத்திலே, மனிதனுடைய பொறுப்பு தட்டிக்கழிக்கப்படிருக்கிறது; நிபந்தனையில்லா தெரிந்தெடுப்பு பற்றிப்பிடிக்கப்பட்ட இடத்தில், இரட்சிக்கப்படாதவர்களுக்கு தடையின்றி இரட்சிப்பை பிரசங்கித்தல் கைவிடப்பட்டது. மற்றொருவகையில், மனிதனுடைய பொறுப்பு உறுதிபடுத்தப்பட்டு நற்செய்தி ஊழியம் தொடர்ந்த இடத்தில், தேவனுடைய அநாதி சித்தமும், தெரிந்தெடுப்பின் சத்தியமும் துண்டாடப்பட்டது அல்லது முற்றிலும் மறக்கப்பட்டது.
நம்முடைய வாசகர்களில் பலர் மேலே சொல்லப்பட்ட உண்மைகளை விளக்கும் உதாரணங்களை வாசித்திருக்கிறார்கள், ஆனால் சிலரே அதை சரியாக புரித்திருப்பார்கள், சரியாக அதேஅளவு கடினத்தை விசுவாசத்திற்கும் நற்கிரியைகளுக்குமிடையேயான சரியான தொடர்பை விளக்க முற்படும்பொழுதும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு வகையில் சிலர் நற்கிரியைகளுக்கு வேதவாக்கியங்கள் அனுமதிக்காதவிதத்தில் இடம் கொடுத்து தவறு செய்கிறார்களென்றால், மற்றொருவகையில், சிலர் நற்காரியங்களுக்கு வேதவாக்கியங்கள் கொடுத்திருக்கும் அளவுக்கு முக்கியமான இடத்தைக் கொடுக்க தவறிவிடுகிறார்கள். ஒரு பக்கத்தில், நம்முடைய செயல்களை தேவனுக்கு முன்பாக நியாயப்படுத்துவது மாபெரும் தவறாக இருத்தாலும், மற்றொரு பக்கத்தில், நாம் பரலோகம் செல்வதற்கு நம்முடைய நற்செயல்களும் முக்கியம், மேலும் நம்மை நியாயப்படுத்துவதற்கு அவைகள் வெறும் ஆதாரம் மற்றும் கனிகள் மட்டுமே என்பதை மறுப்பவர்களும் சமஅளவு குற்றம்செய்கிறார்கள். நாம் இப்பொழுது மெல்லிய பனிக்கட்டி படலத்தின் மீது நடந்துகொண்டிருக்கிறோமென்பதையும், கள்ளபோதனை செய்கிறோம் என்று மோசமாக குற்றம்சாட்டப்படும் ஆபத்திலிருக்கிறோமென்பதையும் நாம் அறிவோம்; இருப்பினும், இந்த பிரச்சனையை எதிர்கொள்ள நாங்கள் தெய்வீக உதவியையே நாடி, தேவனிடமே இந்த காரியங்களை விட்டுவிடுகிறோம்.
ஒரு சில சதுக்கங்களில் விசுவாசத்தின் முக்கியத்துவம், முழுவதும் நிராகரிக்கப்படாவிட்டாலும், நற்காரியங்கள் மிகைப்படுத்தப்பட வேண்டுமென்கிற வைராக்கியத்தால் மட்டம் தட்டப்படுகிறது. மற்ற வட்டங்களில், சமயரீதியாக மிகவும் ஆச்சாரமானவர்கள் (Orthodox) என்று அறியப்படுபவர்கள் (அவர்களைத்தான் இபொழுது மனதிலே பிரதானமாகவைத்து குறிப்பிடுகிறோம்), மிக அரிதாகவே நற்கிரியைகளுக்கு அவர்கள் சரியான இடத்தைக் கொடுக்கிறார்கள், மிகமிக அரிதாகவே அப்போஸ்தல சிந்தையுடன் அவைகளில் தொடர்ந்து ஈடுபட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சிலசமயங்களிலே இது விசுவாசத்தைக் குறைத்து மதிப்பிட்டு, பாவிகள் கிறிஸ்துவின் நீதியின்மேல் நம்பிக்கையை வைப்பதற்குப்பதிலாக தங்கள் சொந்த நற்கிரியைகளின் மேல் நம்பிக்கை வைக்க அவர்களை உற்சாகப்படுத்திவிடுமோ என்ற ஐயம் வரப்போவதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அப்படி எந்த ஒரு அச்சமும் ஒரு பிரசங்கியை ‘தேவனுடைய முழு ஆலோசனையையும்’ பிரசங்கிப்பதிலிருந்து தடுக்கக்கூடாது. இழந்துபோனவர்களின் இரட்சகராகிய கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசமே அவனது கருப்பொருளானால், அவன் அந்த உண்மையில் எந்த மாற்றமும் இல்லாமல் முன்னோக்கிச் செல்லக்கடவன், பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரனுக்கு பவுல் கொடுத்த பிரதியுத்தரத்தின் (அப் 16:31) அளவிற்கு இந்த நற்பண்புக்கு அவன் இடமளிக்கக்கடவன். ஆனால் அவனுடைய பொருள் நற்கிரியைகளென்றால், அதைப்பற்றி வேதவாக்கியங்கள் சொல்வதைத்தவிர வேறு எதையும் கைக்கொள்ளாதிருக்கக்கடவன்; ‘தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்து திட்டமாய் போதிக்க வேண்டும்’ (தீத்து 3:8) என்ற தெய்வீகக் கட்டளையை அவன் மறவாதிருக்கக்கடவன்.
இறுதியாகக் குறிப்பிட்ட வசனமானது இக்காலத்தின் அலட்சியப்போக்கிற்கும், விழிப்பில்லாத்தன்மைக்கும், பிரயோஜனமில்லா வேலைக்கும் வெற்று தம்பட்டதிற்கும் மிகவும் பொருத்தமான ஒன்றாகும். ‘நற்கிரியைகள்’ என்ற வெளிப்பாடானது புதியஏற்பாட்டில் ஒருமையிலோ அல்லது பன்மையிலோ முப்பதுக்கும் அதிகமான இடங்களிலே குறிப்பிடப்பட்டுள்ளது; ஆயினும், அவைகளின் மீது விசுவாசம்வைத்து, உபயோகித்து, வலியுறுத்தி, விளக்கமளிப்பவர்கள் என்று மதிக்கப்படும் பிரசங்கிமார்கள்கூட, அவர்கள் பிரசங்கத்தைக் கேட்பவர்கள் வேதப்புத்தகத்தில் இந்த வார்த்தை ஓரிரு முறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று முடிவுசெய்யுமளவிற்கு மிக அரிதாகவே அதைப்பற்றி பேசுகிறார்கள். மற்றொரு காரியத்தைக்குறித்து யூதர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்பொழுது கர்த்தர் சொன்னார், ‘தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்’ (மாற் 10:9). இப்பொழுது எபேசியர் 2:8-10ல் தேவன் இரண்டு மிக முக்கியமான ஆசீர்வதிக்கப்பட்ட காரியங்களை இணைத்திருக்கிறார், அவைகளை நாம் நம்முடைய இருதயத்திலும் மனதிலும் பிரிக்கக்கூடாது, ஆனாலும் அவைகள் இந்த நவீன பிரசங்கபீடத்திலே அடிக்கடி பிரிக்கப்படுகின்றன.
இரட்சிப்பானது கிருபையினாலே விசுவாசத்தினால் வருகிறது, இது நற்கிரியைகளினால் உண்டானதல்ல என்பதை தெளிவாக சொல்லும் முதல் இரண்டு வசனங்களிலிருந்து (எபே 2:8,9) எத்தனைமுறை பிரசங்கிக்கக் கேட்டிருக்கிறோம். கிருபை மற்றும் விசுவாசம் என்பவைகளுடன் துவங்கும் வாக்கியமானது 10ம் வசனத்திலேதான் நிறைவுறுகிறது, அங்கே ‘நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம், அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்’ என்று நமக்கு சொல்லப்பட்டிருப்பது, எத்தனை முறை நமக்கு நினைவூட்டப்பட்டிருக்கிறது!
தேவனுடைய வார்த்தையை சுட்டிக்காடி நாம் இந்தத் தொடரைத் துவங்குகிறோம், இது பலவிதமான எண்ணங்களிலும், வித்தியாசமான வடிவமைப்புகளிலும் வாசிக்கப்பட்டு எடுத்துக்கொள்ளப்படலாம், இந்த வேதவாக்கியங்கள் உண்மையாகவே எப்படி ‘ஆதாயம் தரக்கூடியவை’ என்பதை 2தீமோத்தேயு 3:16,17ம் வசனங்கள், ‘தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்ய தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது’ என்று வெளிப்படுத்துகின்றன. தேவன் மற்றும் கிறிஸ்துவைக்குறித்தும், பாவத்தின்மீதான கடிந்துகொள்ளுதல் மற்றும் சீர்திருத்தலைக்குறித்தும், ஜெபம் தொடர்பான அறிவுரைகளைக்குறித்தும், இதன் போதனைகளில் தங்கியிருந்த நாம், இப்பொழுது இவைகள் எப்படி ‘எல்லா நற்காரியங்களையும்’ குறித்து விளக்குகிறது என்பதை கவனிப்போம். உண்மையான ஒரு ஆத்துமா, பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் உண்மையாகவே அவனது வேதவாசிப்பும் வேதஆராய்சியும் அவனுக்கு பலனளிக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள மற்றுமொரு அடிப்படை இங்கே இருக்கிறது.
‘பலர் கிறிஸ்தவ சமயவழி மரபுகளை ஒரு அமைப்பாக ஆதரிக்க தங்களுக்குள்ள ஆர்வத்தினால், பரிசுத்தத்தையும் தேவனுக்கு அற்பணிக்க்கப்பட்ட வாழ்க்கையையும் குறைத்து மதிப்பிடும்விதத்தில் கிருபையினாலே இரட்சிப்பு என்பதைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் பரிசுத்த வேதவாக்கியங்களில் இதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. கிறிஸ்துவின் இரத்தத்தினால் விசுவாசத்தின் மூலம் தேவனுடைய கிருபையினாலே இரட்சிப்பு இலவசமாய் கிடைக்கிறது என்பதை அறிவிக்கும் அதே நற்செய்தியானது, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் அவரில் பாவிகள் விசுவாசம் வைப்பதின்மூலம் இரட்சகரின் நீதியால் அவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறார்கள் என்பதை உறுதியாக வலியுறுத்தி, பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாது என்பதையும் உறுதியாகக் கூறுகிறது; அதாவது விசுவாசிகள் பாவநிவிர்த்தியின் இரத்தத்தினால் கழுவப்படுகிறார்கள்; அவர்களுடைய இருதயம் விசுவாசத்தினால் சுத்திகரிக்கப்படுகிறது, அன்பினால் கிரியைசெய்து, உலகத்தை மேற்கொள்ளுகிறது; எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவரும் அந்த கிருபையானது, அதைப் பெற்றுக்கொள்பவர்கள், தேவபக்தியற்றவைகளையும் உலகப்பிரகாரமான இச்சைகளையும் மறுதலித்து, தெளிந்தபுத்தியுள்ளவர்களாய், நீதியுள்ள மற்றும் தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் போதிக்கிறது. வேதவாக்கியங்களின் அடிப்படையில் நற்கிரியையை விடாப்பிடியாக பதியவைப்பதில் கிருபையின் போதனைக்கு ஏதேனும் பாதிப்பு இருக்குமென்றால், அது தெய்வீக சத்தியத்தில் பற்றாக்குறையான, மிகவும் குறைவான அறிவுமட்டுமே அவர்களுக்கு உள்ளது என்பதைக் காட்டிக்கொடுக்கிறது, அவர்களுடைய சாட்சியைக் காத்துக்கொள்ளுவதற்காக நீதியின் கனிகள் ஒரு கிறிஸ்தவனுக்கு முழுமையாகத் தேவை என்பதற்கு சாதகமாக உள்ள வேதவாக்கியங்களை சேதப்படுத்துவது, தேவனுடைய வார்த்தையை புரட்டி மோசடியில் ஈடுபடுவதாகும்’ (அலெக்சாண்டர் கார்சன்).
நற்கிரியைகளைச் செய்யும்படி தேவனுடைய கட்டளை இருந்தாலும், அதற்கு நாம் உண்மையாகக் கீழ்ப்படிவதில் தோல்விகண்டாலும், நம்மீது வைக்கப்பட்ட கிறிஸ்துவின் நீதியினால் நாம் நீதிமான்களாக்கப்படுவதினால், அவைகளில்லாமல் நாம் இரட்சிக்கப்படக்கூடுமாகையால், அந்த கட்டளைக்கு என்ன வல்லமையிருக்கிறது? இதைப்போன்ற உணர்வற்ற ஆட்சேபம், விசுவாசியின் தற்பொழுதைய நிலை மற்றும் தேவனுடன் அவனுக்குள்ள தொடர்பைப்பற்றிய அறியாமையிலிருந்து வருகிறது. மறுபிறப்படைந்தவர்களின் இருதயங்கள் தேவனுடைய கட்டளைகளுக்கும் அதிகாரத்திற்கும் கீழ்ப்படியும்படி வல்லமையான தாக்கத்திற்குட்பட்டதல்ல என்று எண்ணுவது, அவர்களை நீதிமான்களாக்குவதற்குத் தேவையான உண்மையான விசுவாசமற்றதாயும், கிறிஸ்தவர்களின் சிந்தை அப்படிப்பட்ட வாதங்களால் பாழடைந்து போயிருப்பதற்கும் ஒப்பாகும். மேலும், நம்முடைய நீதிமானாக்கப்படுதலுக்கும், நம்முடைய பரிசுத்தமாக்கப்படுதலுக்கும் இடையில் தேவன் ஏற்படுத்தியுள்ள பிரிக்க இயலாத் தொடர்பை கவனிக்கத் தவறுவதாகும். இவைகளில் ஒன்று மற்றொன்றில்லாமல் தொடர முடியுமென்று கருதுவது ஒட்டுமொத்த நற்செய்தியையே கவிழ்ப்பதற்கொப்பாகும். இந்த ஆட்சேபனையைப்பற்றி அப்போஸ்தலன் ரோமர் 6:1-3 வசனங்களில் கையாளுகிறார்.
‘இரத்தஞ்சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்புண்டாகாது’ (எபி 9:22) மேலும், ‘விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்’ (எபி 11:6) என்று எழுதி, ‘யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே’ (எபி 12:14) என்றும் உண்மையின் வேதவாக்கியங்கள் அறிவிக்கிறது. பரலோகத்தில் பரிசுத்தர்கள் வாழப்போகிற வாழ்க்கையானது, அவர்களுடைய மறுபிறப்பிற்குப்பின் இந்த பூமியிலே அவர்கள் வாழ்கிற வாழ்க்கையின் நிறைவு மற்றும் முழுமையாகும். இரண்டு வாழ்க்கைகளும் முற்றிலும் வேறுபட்டதல்ல, மாறாக பரிபூரணத்தின் அளவுமட்டுமே மாறுபடும். ‘நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகதிகமாய் பிரகாசிக்கும் சூரியபிரகாசம்போலிருக்கும்’ (நீதி 4:18). இங்கே கீழே தேவனுடன் நடத்தல் இல்லையென்றால், அங்கே மேலேயும் தேவனுடன் வாழுதல் என்பதுமில்லை. இக்காலத்தில் அவருடன் உண்மையான ஐக்கியமில்லையென்றால், அங்கே நித்தியத்திலும் அவருடன் ஒன்றுமில்லை. மரணம் இருதயத்தில் எந்த முக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. மரணத்தில் பரிசுத்தரின் மிச்சமீதியான பாவங்களெல்லாம் காலாகாலத்திற்கும் இங்கே விட்டுச்செல்லப்படுகிறது, புதிதான எந்தஒரு தன்மையும் கொடுக்கப்படுகிறதில்லை என்பது உண்மையே. அப்படியானால் அவன் மரணத்திற்கு முன்னால் பாவத்தை வெறுத்து பரிசுத்தத்தை சிநேகிக்கவில்லையென்றால், அவன் மரணத்திற்குப்பிறகும் அப்படிச்செய்யப்போவதில்லை.
ஒருவரும் உண்மையில் நரகத்திற்குப்போக விரும்புவதில்லை, சிலர் உண்மையில் அங்கே தவறாமல் அழைத்துச்செல்லும் அகலமான பாதையை உண்மையில் கைவிட விருப்பமுள்ளவர்களாயிருக்கிறார்கள். எல்லாரும் பரலோகத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள், ஆனால், தங்களைக் கிறிஸ்தவர்களென்று அழைத்துக்கொள்ளும் திரளானவர்களில் எத்தனை பேர் அவர்களை அங்கே அழைத்துசெல்லும் அந்த ஒரே குறுகலான பாதையில் நடக்க உண்மையில் விருப்பமுள்ளவர்களாயிருக்கிறார்கள்? நற்கிரியைகள் இரட்சிப்புடன் கொண்டிருக்கும் தொடர்பின் சரியான இடத்தை நாம் இந்த பகுதியில் நிதானிக்க முடியும். அவைகள் எந்த தகுதியையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவைகளிலிருந்து அது பிரிக்கப்படமுடியாதது. அவைகள் பரலோகத்திற்கென்று எந்த பட்டத்தையும் பெற்றுத்தருவதில்லை, ஆனாலும் அவைகள் தன்னுடைய பிள்ளைகள் அங்கே வருவதற்கென்று தேவன் நியமித்திருக்கிற நியமங்களில் ஒன்று. எந்த வகையிலும் நற்கிரியைகள் நித்தியவாழ்க்கையை பெற்றுத்தருவதில்லை, ஆனால் அதைப்பெற்றுக்கொள்ள (பரிசுத்த ஆவியானவர் நம்மில் ஏற்படுத்தும் மனந்திரும்புதல், விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவைகளைப்போல) உதவுபவைகளில் அதுவும் ஒன்று. கிறிஸ்துவால் நமக்கென்று வாங்கப்பட்டிருக்கும் சுதந்தரத்திற்கு வந்து சேரவேண்டியதற்கென்று நாம் நடக்கவேண்டிய வழியை தேவன் நியமித்திருக்கிறார். தேவனுக்கு அனுதினம் கீழ்ப்படிந்து நடக்கும் வாழ்க்கை மட்டுமே கிறிஸ்து தன்னுடைய ஜனங்களுக்காக வாங்கியிருப்பதில் மகிழுவதற்கான உண்மையான அனுமதியை அளிக்கிறது – விசுவாசத்தினாலே கிடைக்கும் அந்த அனுமதி, நம்முடைய மரணத்திலோ அல்லது அவருடைய வருகையிலோ உண்மையாகிறது.
இது தெளிவாக மத்தேயு 5:16ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது: ‘மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது’. இந்த வெளிப்பாடு (நற்கிரியைகள்) இங்கேதான் முதலாவது காணப்படுகிறதென்பது குறிப்பிடத்தக்க ஒன்று, மேலும், வேதவாக்கியங்களில் ஒரு காரியம் முதன்முதலில் குறிப்பிடப்படும்பொழுது அது அதன் தொடர்ச்சியான நோக்கத்தையும் பயன்பாட்டையும் சேர்த்தே வெளிப்படுத்தும் என்பது பொதுவான விதி. கிறிஸ்துவின் சீஷர்கள் தங்களுடைய கிறிஸ்தவ சார்பை அவர்களுடைய வாழ்க்கையின் நிசப்தமான சாட்சியின்மூலம் (‘ஒளி’ ‘பிரகாசிக்கும்பொழுது’ ஒலியெழுப்புவதில்லை) உறுதிபடுத்த வேண்டியவர்களாயிருக்கிறார்கள், அவர்களுடைய நற்கிரியைகளை மனுஷர் பார்த்து (அதைப்பற்றி தம்பட்டம் அடிப்பதைக் கேட்டு அல்ல), பரலோகத்திலிருக்கிற அவர்கள் பிதா மகிமைப்படுத்தப்படுவார் என்பதை நாம் இங்கே கற்றுக்கொள்கிறோம். இங்கே அவைகளின் அடிப்படையான வடிவமைப்பும் இருக்கிறது: அது தேவனுடைய மகிமைக்காகவே.
மத்தேயு 5:16-ன் உள்ளடக்கம் பொதுவாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, புரட்டப்படுகிறது, அங்கே நாம் மேலும் சில கருத்துக்களைப் பார்க்கலாம். பல தருணங்களில் ‘நற்கிரியைகள்’ ‘வெளிச்சத்துடன்’ ஒப்பிடப்பட்டு குழப்பிக்கொள்ளப்படுகிறது, அவைகள் பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டிருந்தாலும், அவைகள் தனித்துவம் வாய்ந்தது. ‘வெளிச்சம்’ என்பது கிறிஸ்துவுக்காக நம்முடைய சாட்சியாகும், நம்முடைய வாழ்க்கை அதை நிரூபிக்காவிட்டால் அதற்கு என்ன மதிப்பு இருக்கிறது? ‘நற்கிரியைகள்’ மற்றவர்களுடைய கவனத்தை, அவைகளை நம்மீது ஏற்படுத்தினவரை நோக்கித் திருப்புவதற்காக, நம்பக்கம் திருப்புவதற்காக அல்ல. தேவனற்றவர்கள்கூட விழுந்துபோன மனிதத் தன்மையிலிருந்து அவைகள் வரவில்லை, அதைவிட மேலான ஒன்றிலிருந்து அவைகள் வருகின்றன என்பதை அறிந்துகொள்ளும்விதத்தில் அதன் பண்புகளும் தனித்திறமும் அமைய வேண்டும். இயற்கைக்கு அப்பாற்பட்ட கனிக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட வேர் தேவைப்படுகிறது, அது கண்டுகொள்ளப்படும்பொழுது, அதினால் உழவன் மகிமைப்படுத்தப்படுகிறார். வேதவாக்கியங்களில் ‘நற்கிரியைகளைக்’ குறித்த கடைசி குறிப்பும் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்தது: ‘புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி, நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்’ (1பேது 2:12). ஆகவே முதல் மற்றும் இறுதிக்குறிப்புகள் அவைகளுடைய வடிவமைப்பை வலியுறுத்துகிறது: அவருடைய ஜனங்களின் மூலமாக தேவன் இந்த உலகத்தில் செய்யும் கிரியைகளின் மூலம் அவருடைய நாமம் மகிமைப்பட வேண்டுமென்பதே.
மறுபடியும் பிறவாதவர்கள் முற்றிலும் ஒன்றுமறியாமலிருப்பவைகளில் இதுவும் ஒன்று. வெறும் வெளிப்பிரகாரமானவைகளிலிருந்து தீர்ப்பளித்தல், மனிதத் தரத்தின்படி மட்டுமே காரியங்களை மதிப்பிடுதல் ஆகியவை தேவனுடைய மதிப்பில் எவைகள் நல்லவை, எவைகள் நல்லவைகளல்ல என்பதைத் தீர்மானிக்க தகுதியற்றவை. மனிதன் எவைகள் நற்காரியங்களென்று மதிப்பிடுகிறானோ அவைகளை தேவனும் ஏற்றுக்கொள்ளுவார் என்றெண்ணுவது, அவர்கள் இன்னும் இருளாகிய தங்கள் பாவம் குருடாக்கிய புரிந்துகொள்ளுதலில் தொடர்கிறார்கள்; பரிசுத்த ஆவியானவர் அவர்களை வாழ்க்கையின் புதியதன்மைக்குள் உயிர்ப்பித்து, அவர்களை இருளிலிருந்து தேவனுடைய அதிசயமான ஒளியினிடத்தில் அழைத்து வரும்வரை, ஒருவரும் அவர்களுடைய தவறை அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கமுடியாது. அதன்பிறகு, தேவனுடைய சித்தத்திற்கு அடிபணிந்து (ரோம 6:16), அவர்மீது அன்பு என்ற கொள்கையின்படி (எபி 10:24), கிறிஸ்துவின் நாமத்தினாலே (கொலோ 3:17), அவராலே தேவனுடைய நாமம் மகிமைப்படும்படி (1 கொரி 10:31) செய்யப்பட்டவைகளே நற்கிரியைகள் என்று காணப்படும்.
‘நற்கிரியைகளின்’ உண்மையான தன்மை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே பரிபூரணமாக விளக்கிக்காட்டப்பட்டுள்ளது. அவர் செய்த எல்லாவற்றையும் அவருடைய பிதாவின் சித்தத்திற்குட்பட்டே செய்தார். அவர் ‘தமக்கே பிரியமாய் நடவாமல்’ (ரோம 15:3), அவரை அனுப்பினவர் சொன்னதையே எப்பொழுதும் செய்தார் (யோவா 6:38). ‘அவருக்குப் பிரியமானவைகளையே நான் எப்பொழுதும் செய்கிறேன்’ (யோவா 8: 29) என்று அவர் சொல்ல முடியும். பிதாவின் சித்தத்திற்கு கிறிஸ்து கீழ்ப்படிந்ததற்கு எந்த எல்லையும் இல்லை: அவர் ‘மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்’ (பிலி 2:8). ஆகவே அவர் செய்த எல்லாம் அவர் பிதாவின்மீதும் தன்னுடைய அயலகத்தாரின்மீதும் கொண்டிருந்த அன்பின் மூலமே வந்தது. அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது; அன்பில்லாமல், நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிவதென்பது கொத்தடிமைத்தனமேயல்லாமல் வேறல்ல, அது அன்பாகவே இருக்கிறவரால் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கிறிஸ்துவினுடைய எல்லாக் கீழ்ப்படிதலும் அவருடைய வார்த்தைகளில் காணப்படும் அன்பிலிருந்தே பாய்ந்தோடியது என்பதற்கு ஆதாரம்: ‘என் தேவனே, உமக்குப் பிரியமானதை செய்ய விரும்புகிறேன்’ (சங் 40:8) என்பதே. ஆகவே கிறிஸ்து செய்ததெல்லாம் தேவனுக்கு மகிமை சேரவேண்டும் என்பதற்காகவே இருந்தது: ‘பிதவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்’ (யோவா 12:28) என்பது எப்பொழுதும் அவருக்கு முன்னால் இருந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
மறுபடியும் பிறவாத மனிதர்கள் செய்யும் கிரியை, ஆவிக்குறிய தன்மையில் இல்லாவிட்டாலும், இயற்கையாக மற்றும் நன்றியை வெளிப்படுத்தும்விதமாக நல்லவைகளாக இருக்கும். வேதத்தை வாசித்தல், தேவனுடைய ஊழியத்தில் பங்குபெறுதல், ஏழைகளுக்கு பிச்சை கொடுத்தல் போன்றவை, வெளிப்பிரகாரமாக, அவைகளின் பொருள் நல்லவைகளாக இருப்பதால், அவைகளை அவர்கள் செய்யலாம்; ஆனால் அவைகளின் பிரதான ஊற்று, தேவனுடைய சிந்தையற்றவைகளாயிருப்பதினால், திரியேக ஒரே பரிசுத்த தேவனின் பார்வையில் அவைகள் கந்தையான குப்பையாயிருக்கிறது. மறுபடியும் பிறவாதவர்கள் ஆவிக்குறிய கிரியைசெய்ய எந்த வல்லமையும் இல்லாதவர்களாயிருக்கிறார்கள், ஆகவேதான் இப்படி எழுதப்பட்டிருக்கிறது, ‘நன்மைசெய்கிறவன் இல்லை; ஒருவனாகிலும் இல்லை’ (ரோம 3:12). அவர்கள் ‘தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது’ (ரோம 8:7). எனவே, ‘துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே’ (நீதி 21:4). விசுவாசிகள் தாங்களாகவே நல்ல ஒன்றை சிந்திக்கவோ அல்லது நற்கிரியையை செய்யவோ முடியுமென்று சிந்திக்கக்கூட முடிகிறதில்லை (2கொரி 3:5). ‘தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும்’ (பிலி 2:13) அவர்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளியையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால் தீமைசெய்யப் பழகின அவர்களும் நன்மைசெய்யக் கூடும் (எரே 13:23). மனிதன் விரைவாக முற்செடிகளிலிருந்து திராட்சைப்பழங்களையும், களைகளிலிருந்து அத்திப்பழங்களையும் பறிக்க முடியாததுபோல, மறுபடியும் பிறவாதவர்கள் வளரும்படிக்கு நற்கனிகளும், செய்யும்படிக்கு நற்கிரியைகளும் இருக்கிறது. நற்கிரியைகளைச் செய்ய முன்னதாக நம்மில் பெலனிருக்கும்படியாக, முதலாவதாக ‘நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு’ (எபி 2:10), அவருடைய ஆவி நம்மில் வைக்கப்பட்டவர்களாய் (கலா 4:6), அவருடைய கிருபை நம்முடைய இருதயங்களிலே நாட்டப்பட (எபே 4:7, 1கொரி 15:10) வேண்டும். அப்பொழுதும் கூட கிறிஸ்துவில்லாமல் நம்மால் ஒன்றுஞ்செய்யக்கூடாது (யோவா 15:5). அடிக்கடி நன்மையானதை செய்யும்படி நமக்கு விருப்பமிருக்கிறது, ஆனால் அவைகளை எப்படிச்செய்ய வேண்டுமென்று நமக்குத் தெரியாது (ரோம 7:18). இது நம்மை ‘சகல நற்கிரியைகளிலும் சீர்பொருந்தினவர்களாக்கி’, நம்மில் ‘இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்கு முன்பாக பிரியமானதை நடப்பிக்க’ (எபி 13:22) நாம் தேவனை வேண்டிக்கொள்ளும்படியாக, நம்மை நம்முடைய முழங்கால்களுக்கு நடத்துகிறது. ஆகவே நாம் நம்முடைய சுயபோதுமானத்தன்மையை வெறுமையாக்கி, நம்முடைய ஊற்றுகளெல்லாம் தேவனில் இருக்கிறது என்ற உணர்வுக்கு (சங் 87:7) கொண்டுவரப்படுகிறோம்; அதன்பிறகு, நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய நமக்கு பெலனுண்டு (பிலி 4:13) என்பதைக் கண்டுகொள்ளுகிறோம்.
முடிந்த அளவுக்கு சுருக்கமாக: ‘நற்கிரியைகள்’ மூலம் தேவன் மகிமைப்படுத்தப்படுவதால் அவைகள் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை (மத் 5:16), அவைகளின் மூலம் நமக்கெதிராக பேசுபவர்களின் வாய் அடைபடுகிறது (1 பேது 2:12), அவைகளின் மூலம் நாம் சார்ந்துள்ள விசுவாசத்தின் உண்மைத்தன்மையை ஆதாரப்படுத்துகிறோம் (யாக் 2:13-17). நாம் ‘நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிப்பதை’ (தீத் 2:9) வெளிக்காட்ட வசதியாயிருக்கிறது. அவருடைய நாமத்தை தரித்திருப்பவர்கள், அவருடைய செய்கையினால் கிறிஸ்துவின் வழியிலேயும் ஆவியிலேயும் தொடர்ச்சியாக நடக்கிறார்கள் என்பதைத்தவிர வேறு எதுவும் கிறிஸ்துவின் நாமத்திற்கு மதிப்பைக் கொண்டுவராது. அதே ஆவி, அப்போஸ்தலனும் இந்த உலகத்தில் கிறிஸ்துவின் வருகையைக்குறித்த தன்னுடைய வாக்கியத்தில் ‘இந்த வார்த்தை உண்மையுள்ளது’ என்று முகவுரைப்படுத்தசெய்ததற்கு காரணமில்லாமலில்லை, மேலும், ‘இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச்செய்ய ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்’ (தீத் 3:8) என்றும் எழுத உந்தித்தள்ளியது. நாம் உண்மையில் ‘நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும்’ (தீத் 2:14) இருக்கக்கடவோம்.
தேவன் நம்மை வைத்திருக்கிற ஒவ்வொரு தொடர்பிலும் நம்முடைய கடமையை நாம் நிறைவேற்ற வேண்டியவர்களாயிருக்கிறோம். பெத்தானியா ஊராளாகிய மரியாள் இரட்சகரை அபிஷேகம் பண்ணினதே (மத் 26:10, மாற் 14:6) வேதாகமத்தில் ‘நற்கிரியை’ என்று முதன்முதலில் குறிப்பிடப்பட்டிருப்பது ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், குறித்துக்கொள்ளுவதற்கு பயனுள்ளதாயும் இருக்கிறது. மனிதரால் தூற்றப்பட்டாலும், புகழப்பட்டாலும் இரண்டையும் ஒன்றாகவே கருதி, ‘பதினாயிரங்களில் சிறந்தவர் மேலேயே’ கண்ணைவைத்து, அவளுடைய விலையுயர்ந்த தைலத்தை அவர்மேல் ஊற்றினாள். மற்றுமொரு ஸ்திரீ, தொற்காள் (அப் 9:36), ‘நற்கிரியைகளை மிகுதியாய் செய்தாள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது; மனிதர்களிடையே தேவன் மகிமைப்படும்படி மற்றவர்களுக்கு பிரயோஜனமாக, ஆராதனைக்குப்பின் ஊழியம் வருகிறது.
‘சகலவித நற்கிரியைகளுமான கனிகளையும் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்கு பாத்திரமாய் நடந்துகொள்ள வேண்டும்’ (கொலோ 1:10). பிள்ளைகளை வளர்த்தல் (இழுத்தலல்ல!), (ஆவிக்குறிய) அந்நியரை உபசரித்தல், பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவுதல் (அவர்களுடைய உலகப்பிரகாரமான தேவைகளை சந்தித்தல்), உபத்திரவப்படுபவர்களுக்கு உதவிசெய்தல் (1தீமோ 5:10) ஆகியவை ‘நற்கிரியைகளாக’ சொல்லப்பட்டிருக்கின்றன. நம்முடைய வேதவாசிப்பும் வேதஆராய்ச்சியும் நம்மை கிறிஸ்துவுக்கென்று நல்ல போர்வீரர்களாக, நாம் வாழும் நாட்டிற்கு நல்ல குடிமகன்களாக, பூமியிலுள்ள நம்முடைய குடும்பத்திற்கு நல்ல அங்கத்தினர்களாக (தாழ்மையானவர்களாக, கனிவுள்ளவர்களாக, சுயனலமற்றவர்களாக) மாற்றாவிட்டால், ‘எல்லா நற்கிரியைகளையும் முழுமையாக செய்தாலும்’ அதினால் நமக்கு எந்த ஆதாயமுமில்லை.
கிறிஸ்துவின் நாமத்தைக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் இந்த உலகத்திலே அவரை மகிமைப்படுத்தி கனப்படுத்த வேண்டுமென்பதை, தங்களைக் கிறிஸ்தவர்களென்று சொல்லிக்கொள்கிற அனைவரும் குறைந்தபட்சம் பெயரளவிலாவது ஒத்துக்கொள்வார்கள். ஆனால் இதை எப்படிச் செய்ய வேண்டும், அவர் நம்மிடத்திலிருந்து எதை எதிர்ப்பார்க்கிறார் என்பதில் தான் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. பலர் நினைக்கிறார்கள், கிறிஸ்துவைக் கனப்படுத்துதல் என்பது ஏதோ ஒரு ‘சபையில்’ சேர்ந்து, அதனுடைய பல செயல்பாடுகளில் பங்குபெற்று அதை ஆதரிப்பது என்று. மற்றவர்கள் நினைக்கிறார்கள், கிறிஸ்துவைக் கனப்படுத்துதல் என்பது அவரைப்பற்றி மற்றவர்களிடம் பேசி, ‘தங்களுடைய தனிப்பட்ட வேலையைக்’ கருத்தாய் செய்வது என்று. இன்னும் சிலர் இப்படிக் கற்பனை செய்து கொள்கிறார்கள், கிறிஸ்துவைக் கனப்படுத்துதல் என்பது அவருடைய வேலைக்காக இன்னும் கொஞ்சம் அதிகமான பணத்தை செலவிடுவது என்று. நாம் அவருக்கென்று பரிசுத்தமாய் வாழ்ந்து, அவருடைய வெளிப்படுத்தப்பட்டிருக்கிற சித்தத்துக்கு அடிபணிந்து நடப்பதின் மூலமே கிறிஸ்து கனப்படுத்தப்படுகிறார் என்பதை உண்மையில் வெகுச்சிலரே உணர்ந்திருக்கிறார்கள். ‘பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்’ (1சாமு 15:22) என்ற வார்த்தையை வெகுச்சிலரே உண்மையில் நம்புகிறார்கள்.
‘கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டு’ (கொலோ 2:6) நம்மை முழுவதுமாக அவருக்கு ஒப்புக்கொடுக்காவிட்டால் நாம் கிறிஸ்தவர்களே அல்ல. இந்த வாக்கியத்தை சிரத்தையுடன் சிந்தித்துப்பார்க்க உங்களை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். தங்களுடைய இருதயத்தில் மாற்றம்பெறாமல், சுயம் தங்களை முழுவதுமாக ஆண்டுக்கொண்டிருக்கும்பொழுது, கிறிஸ்துவின் ‘செய்து முடிக்கப்பட்ட பணியில்’ விசுவாசம் வைத்திருப்பதாக நினைக்கவைத்து சாத்தான் பலரை இன்று ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். தேவனுடைய வார்த்தையைக் கேளுங்கள்: ‘இரட்சிப்பு துன்மார்கருக்குத் தூரமாயிருக்கிறது; அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்’ (சங் 119:155). நீங்கள் உண்மையாகவே அவருடைய பிரமாணங்களைத் தேடுகிறீர்களா? அவர் என்ன கட்டளையிட்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க நீங்கள் சிரத்தையுடன் அவருடைய வார்த்தையைத் தேடுகிறீர்களா? ‘அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை’ (1யோவா 2:4). இதைவிட வெளிப்படையாக என்ன இருக்க முடியும்?
‘என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?’ (லூக் 6:46). கிறிஸ்து கேட்பது, நம்முடைய வாழ்க்கையில் கீழ்ப்படிதல், பிரகாசமான வெறும் வாயின் வார்த்தைகளல்ல. யாக்கோபு 1:22 என்ன ஒரு ஆராயவைத்து துக்கப்படவைக்கும் வார்த்தை! ‘நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயுமிருங்கள்!’ வசனத்தைக் ‘கேட்பவர்களில்’ பலவகைகள் உண்டு, வழக்கமாகக் கேட்பவர்கள், நன்றியுணர்ச்சியுடன் கேட்பவர்கள், ஆர்வத்துடன் கேட்பவர்கள்; ஐயோ, அவர்கள் கேட்பது வாழ்க்கையிலே இணைக்கப்படவில்லை: அவர்களுடைய வாழ்க்கையை அது ஒழுங்குபடுத்தவில்லை. மேலும், வசனத்தின்படி நடக்காதவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக்கொள்கிறார்கள் என்று தேவன் சொல்கிறார்.
ஐயோ, அப்படிப்பட்ட எத்தனைப்பேர் இன்று கிறிஸ்தவ உலகில் இருக்கிறார்கள்! அவர்கள் மாய்மாலக்காரர்களல்ல, தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டிருப்பவர்கள். கிருபையினாலேயே தாங்கள் இரட்சிக்கப்படுகிறோம் என்பதில் தாங்கள் தெளிவாக இருப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். ‘வேதத்தை ஒரு புதிய புத்தகமாக’ அவர்களுக்குக் காட்டும் ஒரு மனிதனுடைய ஊழியத்தில் பங்கெடுப்பதன் மூலம் அவர்கள் கிருபையில் வளர்ந்திருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். தங்களுடைய வேதாகம அறிவு அதிகரித்திருப்பதால் அவர்கள் அதிகமாக ஆவியில் வளர்ந்திருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஒரு தேவனுடைய மனிதனின் செய்தியைக் கேட்பதும் அல்லது அவருடைய படைப்புகளை வாசிப்பதும்தான் வார்த்தையை உண்ணுதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அப்படியல்ல! நாம் கேட்டதையும் வாசித்ததையும் தனிப்பட்ட விதத்திலே அப்பியாசப்படுத்தி, அசைபோட்டு அதன் உண்மையை வாழ்க்கையில் புரிந்துகொள்ளும்பொழுதுதான் நாம் வார்த்தையை உண்ணுகிறோம். எங்கே இருதயத்திலும் வாழ்க்கையிலும் தேவனுடைய வார்த்தைக்கு அதிகரிக்கும் ஒத்திசைவு இல்லையோ, அங்கே தேவனுடைய வார்த்தையைப்பற்றிய அதிகப்படியான அறிவு அதிகப்படியான ஆக்கினையையே கொண்டுவரும். ‘தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்து ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்’ (லூக் 12:47).
‘எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிறார்கள்’ (2தீமோ 3:7). இப்பொழுது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் ‘அபாயகரமான காலத்திற்கு’ மிக முக்கியமான அடையாளங்களில் இதுவும் ஒன்று. மக்கள் இந்த போதகர் அந்த போதகர் என்று பலருக்கு செவிசாய்க்கிறார்கள், இந்த கூட்டம் அந்த கூட்டம் என்று பல கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள், வேதபுத்தகம் சம்பந்தபட்ட இந்த புத்தகம் அந்த புத்தகம் என்று பல புத்தகங்களை வாசிக்கிறார்கள், ஆனாலும் சத்தியத்தைக்குறித்த மிகமுக்கியமான செயல்ரீதியான அறிவைப்பெறுகிறதில்லை, அதனுடைய வல்லமையின் சுவடோ அல்லது ஆத்துமாவிற்கான எந்த பயனோ தென்படுகிறதுமில்லை. ஆவிக்குறிய வீக்கம் என்று ஒன்று இருக்கிறது, பலர் இன்று அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த அளவிற்கு அதிகமாக அவர்கள் கேட்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் அப்படியாகிறார்கள்: அவர்கள் பிரசங்கங்களைக் கேட்கிறார்கள், அதிக வாஞ்சையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. தேவனுக்கு முன்பாகத் தங்களைத் தாழ்த்தாமல், அவர்களுடைய அறிவைக்குறித்து பெருமைப்படுகிறார்கள். ‘தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமுமே’ (தீத்து 1:3) தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விசுவாசமாயிருக்கிறது, ஆனால் இதற்கு பெரும்பாலானவர்கள் அந்நியர்களாயிருக்கிறார்கள்.
தேவன் தம்முடைய வார்த்தையை நமக்குக் கொடுத்திருப்பது அவர் நம்மிடத்தில் சொல்ல நினைத்ததை சொல்வதற்கு மாத்திரமல்ல, நமக்கு உத்தரவு கொடுக்கவும் சேர்த்துதான்: நாம் என்ன செய்ய அவர் விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்துவதற்காக. நமக்கு வேண்டிய முதற்காரியம் நம்முடைய கடமையைக்குறித்த தெளிவான அறிவு; தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் முதல் காரியம், நம்முடைய அறிவுக்கேற்றபடி அதை உண்மையுடன் செயல்படுத்துதல். ‘நியாயஞ்செய்து, இரக்கத்தை சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்’ (மல் 6:8). ‘காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்கு பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே’ (பிர 12:13). ‘நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்’ (யோவா 15:14) என்று இயேசு சொன்னபொழுது இதே காரியத்தை அவர் உறுதிபடுத்தினார்.
இக்காலத்தில் மனிதனிடம் தேவன் தன்னுடைய எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டிருக்கிறாரென்று நினைப்பது ஒரு மிகப்பெரிய மோசமான தவறாகும். ஏனென்றால் அது முற்காலத்தில் தேவன் கொடுத்த கற்பனைகள் கடுமையானவைகள்போலும், நீதியற்றவைகளாக இருந்ததுபோலும் ஆகிவிடும். அப்படியல்ல! ‘நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் நீதியாயும், பரிசுத்தமாயும், நன்மையுமாயும் இருக்கிறது’ (ரோம 7:12). ‘நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்பு கூறுவாயாக’ (உப 6:5) என்பதே தேவனின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாயிருக்கிறது; மத்தேயு 22:37ல் இயேசு அதைத் திரும்பவும் எடுத்துரைக்கிறார். ‘ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்பு கூறாமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்’ (1கொரி 16:22) என்று அப்போஸ்தலனாகிய பவுலும் தன்னுடைய கடிதத்தில் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.
கடந்த பத்தியில் நாம் பார்த்தபடி, தேவன் மனிதனிடம் கொண்டிருக்கும் மிக உயர்ந்த எதிர்பார்ப்பை அவன் கண்டுகொள்ளும்வரை, எந்த மனிதனும் தான் எப்பேர்ப்பட்ட பாவி என்பதைக் கண்டுகொள்ள முடியாது, தேவனின் தரத்துடன் ஒப்பிடும்பொழுது தான் எப்படி முடிவில்லாமல் விழுந்துபோயிருக்கிறான் என்ற செய்தியை பெரிதுபடுத்தும் மனிதனின் பயனுக்காக நாம் சிலவற்றை சுட்டிக்காட்டுவோம்! தேவன் மனுகுலத்திடமிருந்து எதிர்பார்க்கும் தன்னுடைய தரத்தை எந்த அளவிற்கு பிரசங்கியார்கள் குறைத்து போதிக்கிறார்களோ, அந்த அளவிற்கு தங்களுடைய பாவத்தைப்பற்றிக் குறைவான மற்றும் தவறான புரிந்துகொள்ளுதலையே அதைக் கேட்பவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள், மேலும் அந்த அளவிற்கு குறைவான அளவே சர்வ வல்லமையுள்ள இரட்சகரின் தேவையை அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் ஒரு ஆத்துமா தன்மீதான தேவனின் உண்மையான எதிர்பார்ப்பை, எப்படி அவன் முழுமையாக தொடர்ச்சியாக அதை சந்திக்க தவறியிருக்கிறான் என்பதை உணர்ந்துகொள்ளும்பொழுது, அவன் எப்படி ஒரு உதவியற்ற சூழ்நிலையில் இருக்கிறான் என்பதை புரிந்துகொள்கிறான். நற்செய்தியை கேட்க ஆயத்தமாயிருக்கிறவர்களுக்கு முன்னர் நியாயப்பிரமாணம் போதிக்கப்பட வேண்டும்.
இந்த பகுதியில் கூட, தற்காலத்து போதனைகள் மிகவும் மோசமாக பழுதடைந்ததாகவே இருக்கிறது. ‘அரை நற்செய்தி’ என்று சகஜமாக அழைக்கப்படக்கூடிய ஒன்று கொடுக்கப்படுகிறது, ஆனால் உண்மையில் நடைமுறையில் அது உண்மையான நற்செய்தியை மறுதலிப்பதாகும். ஒரு ஒப்புக்காக கிறிஸ்து உள்ளே எடுத்துவரப்படுகிறார். கிறிஸ்துவானவர் தேவனுடைய எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்திசெய்துவிட்டாரென்பது ஆசீர்வதிக்கப்பட்ட உண்மை, ஆனாலும் இது உண்மையின் ஒரு பகுதியே. தேவனுடைய நீதியின் எதிர்பார்ப்புகளை கிறிஸ்து தன்னுடைய ஜனங்களுக்காக பூர்த்திசெய்துவிட்டார் என்பது மட்டுமல்ல, அவர்கள் தங்களை தனிப்பட்டவிதத்திலே திருப்திபடுத்திக்கொள்ளவும் அதை சம்பாதித்தார். மீட்பர் அவர்களுக்காக செய்த நற்காரிங்களை அவர்களில் ஏற்படுத்துவதற்காக பரிசுத்த ஆவியானவரையும் கிறிஸ்து அனுப்பியிருக்கிறார்.
மீட்கப்பட்டவர்கள், புதுபிக்கப்படுகிறார்கள் (மறுபிறப்பு) என்பது இரட்சிப்பின் விமரிசையான, மகிமையான அற்புதமாகும். ஒரு மாற்றம் அவர்களுக்குள்ளாக ஏற்படுத்தப்படுகிறது. அவர்களுடைய புரிந்துகொள்ளுதல் ஒளியேற்றப்படுகிறது, அவர்களுடைய இருதயம் மாற்றமடைகிறது, அவர்களுடைய ஆசைகள் புதுபிக்கப்படுகிறது. அவர்கள் ‘கிறிஸ்துவுக்குள்ளாக புதுசிருஷ்டியாகிறார்கள்’ (2கொரி 5:17). இந்த அதிசயமான கிருபையை தேவன் இவ்விதமாகக் குறிப்பிடுகிறார்: ‘என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்’ (எபி 8:10). இருதயமானது இப்பொழுது தேவனுடைய பிரமாணத்திற்கு செவிசாய்க்கிறது: ஒரு புதிய நடத்தை இருதயத்திற்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது, அதனுடைய எதிபார்ப்புகளுக்கு இருதயம் பதிலளிக்கிறது; அதை நடப்பிக்க ஒரு உண்மையான விருப்பம் அங்கே இருக்கிறது. ஆகவேதான், ‘என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடம் சொல்லிற்று’ (சங் 27:8) என்று உயிர்பிக்கப்பட்ட ஆத்துமாவால் சொல்லமுடிகிறது.
தன்னை விசுவாசிக்கிறவர்களை நீதிமான்களாக்கும்படியாக கிறிஸ்து நியாயப்பிரமாணத்திற்கு பரிபூரணமாகக் கீழ்ப்படிந்தது மட்டுமல்லாமல், மாம்ச சிருஷ்டிகளை மாற்றம்பெறசெய்து, தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய கீழ்ப்படிதலை ஏற்படுத்தும் பரிசுத்தமாகுதலுக்கு அவசியமான பரிசுத்த ஆவியானவரையும் அவர்களுக்காக அனுப்பியிருக்கிறார். கிறிஸ்து ‘அக்கிரமக்காரருக்காக’ மரித்திருந்தாலும் (ரோம 5:6), அவர்களை நீதிமான்களாக்கும்பொழுதுகூட அவர்களை பாவிகளாகப்பார்த்தாலும் (ரோம 4:5), அவர்களை அந்த அருவறுப்பான நிலையிலேயே விட்டுவிடுகிறதில்லை. அதற்குமாறாக, அக்கிரமத்தையும், உலக இச்சைகளையும் மறுதலிக்கும்படியாக தன்னுடைய ஆவியினாலே அவர்களுக்கு வல்லமையாய் போதிக்கிறார் (தீத்து 2:12). எப்படி ஒரு கல்லிலிருந்து அதன் எடையையோ அல்லது நெருப்பிலிருந்து வெப்பத்தையோ பிரிக்க முடியாதோ, அதைப்போல பரிசுத்தமாகுதலிருந்து நீதிமானாக்கப்படுத்தல் என்பதையும் பிரிக்கமுடியாது.
தேவன் ஒரு மனிதனின் பாவத்தை முழுமையாக மன்னித்து அவனுடைய மனசாட்சியில் உணர்த்தும்பொழுது, உன்னதமான கிருபையினால் அவனுடைய இருதயம் சுத்திகரிக்கப்படுகிறது, வாழ்க்கைத் திருத்தப்படுகிறது மற்றும் முழு மனிதனும் பரிசுத்தமாக்கப்படுகிறான். ‘கிறிஸ்து நம்மை சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குறிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் (அக்கரையற்றவர்களாக அல்ல) நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்’ (தீத்து 2:14). எப்படி ஒரு பொருளும் அதன் பண்புகளும், காரணங்களும் அதன் விளைவுகளும் ஒன்றையொன்று பிரிக்க முடியாமல் இணைந்திருப்பதுபோல, இரட்சிக்கும் விசுவாசமும், தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்கிற மனநினைவும் ஒன்றையொன்று பிரியாது. ஆகவேதான் நாம் ‘விசுவாசத்திற்கு கீழ்ப்படிதலைக்’ (ரோம 16:25) குறித்து வாசிக்கிறோம்.
‘என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னில் அன்பாயிருக்கிறான்’ (யோவா 14:21) என்று இயேசு சொன்னார். பழைய ஏற்பாடானாலும் சரி, நற்செய்தி அல்லது நிரூபங்களானாலும் சரி, தன்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாத எவரையும் தன்னில் அன்புகூர்ந்தவர்களாக அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்பு என்பது உணர்ச்சிகளுக்கு மேற்பட்டது; இது செயல்பாட்டின் தத்துவம், தேன்போன்ற இனிமையான வெளிப்படுத்துதல்களைவிட மேலாக தன்னை வெளிப்படுத்துகிறது, எடுத்துக்காட்டாக, தன்னுடைய செயல்கள் மூலமாகத்தான் நேசிப்பவரை மகிழ்விக்கிறது. ‘நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதே அவரிடத்தில் அன்புகூறுவதாம்’ (1யோவா 5:3). என்னுடைய வாசகரே! நீங்கள் தேவனை நேசிக்கிறீர்கள் என்று நினைத்துக்கொண்டு, இன்னும் தேவனுக்கு முன்பாக கீழ்படிவதற்கு ஆழமான ஆசையோ, உண்மையான முயற்சியோ எடுக்காமல் இருப்பீர்கள் என்றால், உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்.
தேவனுக்கு கீழ்ப்படிதல் என்றால் என்ன? இயந்திரமையமாக சில கடமைகளைச் செய்வதிலிருந்து இது மிகவும் வேறுபட்டது. நான் கிறிஸ்தவ பெற்றோர்களால் வளர்க்கப்பட்டிருக்கலாம், அதனால் நான் சில நன்னடத்தைகளைப் பெற்றிருக்கலாம், ஆனாலும் நாம் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பதோ அல்லது திருடாமலிருப்பதோ, மூன்றாவது மற்றும் எட்டாவது கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதல்ல. மறுபடியும், தேவனுக்குக் கீழ்ப்படிதல் என்பது அவருடைய ஜனங்களின் நடத்தையைவிட மேலானது. ஓய்வு நாளை கண்டிப்பாக ஆசரிக்கும் ஒரு குடும்பத்தில் நான் இருக்கலாம், அவர்களின் மேலுள்ள மரியாதையினாலோ அல்லது ஏழு நாட்களில் ஒரு நாள் ஓய்வு எடுப்பது நல்லது என்று நான் நினைப்பதினாலோ, அந்தநாளில் மற்ற தேவையில்லாத வேலைகளை நான் தவிர்க்கலாம், ஆனாலும் நான் நான்காம் கற்பனையைக் கைக்கொள்ளவில்லை! கீழ்ப்படிதல் என்பது வெளிப்பிரகாரமாக கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதுமட்டுமல்ல, என்னுடைய சித்தத்தையே அதனுடைய அதிகாரத்திற்கு சரணடையச்செய்வதாகும். ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிதல் என்பது தேவனுடைய தலைமைத்துவத்தை இருதயத்தில் ஏற்றுக்கொள்வதே: கட்டளையிடுவது அவருடைய உரிமை, அதற்கு பணிந்துபோதல் என்னுடைய கடமை. இதுவே ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துவின் நுகத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிதலாகும்.
தேவனுக்குத் தேவைப்படும் இந்தக் கீழ்ப்படிதலானது அவரை நேசிக்கும் இருதயத்திலிருந்து மட்டுமே புறப்பட முடியும். ‘நீங்கள் எதைச் செய்தாலும் மனுஷருக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்’ (கொலோ 3:24). தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் வரும் கீழ்ப்படிதலானது அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்பட்டது. தேவனிடத்திலிருந்து நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்துடன் வரும் கீழ்ப்படிதலானது சுயநலமானது, மாம்சத்துக்குறியது. ஆனால், ஆவிக்குறிய மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கீழ்ப்படிதலானது உற்சாகத்துடன் கொடுக்கப்படுகிறது: தகுதியில்லாத நமக்கு தேவன் கொடுத்திருக்கும் அன்பிற்காகவும், மதிப்பிற்காகவும் நம்முடைய இருதயத்தின் நன்றியால் வரும் கீழ்ப்படிதலாகும்.
‘ஆசீர்வதிக்கப்பட்டவன்’ என்பவன் ‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருப்பவனே’ (சங் 1:2). மீண்டும் நாம் வாசிக்கிறோம், ‘கர்த்தருக்கு பயந்து, அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்’ (சங் 112:1). அவருடைய வாக்குத்தத்தங்களை நான் மதிக்குமளவிற்கு, அவருடைய கற்பனைகளை நான் மதிக்கிறேனா? அல்லது நான் மதியாமலிருக்கிறேனா? என்ற கேள்வியை உண்மையாகவே நம் இருதயம் எதிர்கொள்ளத்தக்க சோதனையை இந்த வசனம் நம்மில் ஏற்படுத்துகிறது. நிச்சயமாக, அவருடைய அன்பிலிருந்து தொடங்குகிற ஒருவன் அவருடைய கற்பனைகளை மதிக்கிறான். கிறிஸ்துவினுடைய சத்தத்திற்கு இருதயம் ஒத்துப்போதலே, எல்லா நடைமுறை பரிசுத்தத்துக்கும் அடித்தளமாகும்.
பின்வருவனவற்றை உன்னிப்பாக கவனிக்கும்படி, மீண்டுமாக நாங்கள் வாசிப்பவரை சிரத்தையுடனும் அன்புடனும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறோம். தான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லுகிற எந்த மனிதனும், அவருடைய கற்பனைகளின் மீது உண்மையான அன்பு செலுத்தாவிட்டால், அவன் தன்னைத்தானே வஞ்சித்துக் கொண்டிருக்கிறான். ‘உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்!’ (சங் 119:97) என்று சங்கீதக்காரன் சொல்லியிருக்கிறான். மறுபடியுமாக, ‘நான் பொன்னிலும் பசும் பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்’ (சங் 119:127) என்கிறான். இது பழைய ஏற்பாட்டின் காலத்தில் என்று எவரேனும் பொருள்படுத்துவாரென்றால், நாங்கள் கேட்கிறோம், பரிசுத்த ஆவியானவர் பழைய ஏற்பாட்டு காலத்தைவிட, இன்றைய நாட்களில் மறுபிறப்படைவோரின் உள்ளத்தில் மிகக்குறைந்த மாற்றத்தையே ஏற்படுத்துகிறார் என்று நீங்கள் தெரிவிக்கிறீர்களோ? ஆனால், புதிய ஏற்பாட்டு பரிசுத்தாவானும் கூட ‘உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன்’ (ரோம 7:22) என்று பதிவு செய்திருக்கிறார். என்னுடைய வாசகரே, ‘தேவனுடைய கற்பனைகளில்’ உங்கள் இருதயம் பிரியமாயிருக்காவிட்டால், அடிப்படையிலேயே ஏதோ உங்களிடத்தில் தவறு இருக்கிறது; ஆம், நீங்கள் ஆவிக்குறிய மரணமடைந்திருக்கிறீர்கள், இது மிகவும் அச்சத்திற்குறியது.
அரைகுறையான கீழ்ப்படிதல், கீழ்ப்படிதலே அல்ல. ஒரு பரிசுத்தமான சிந்தை தேவன் தடுக்கும் எந்த காரியத்தையும் மறுக்கிறது, எந்த விதிவிலக்குமின்றி, தேவன் கேட்கும் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த தெரிந்தெடுக்கிறது. நம்முடைய மனது தேவனில் அவருடைய எல்லா கற்பனைகளுக்கும் கீழ்ப்படியாவிட்டால், தேவன் கட்டளையிடும் எதிலும் அவருடைய அதிகாரத்திற்கு நாம் கீழ்ப்படியவில்லை. நாம் நம்முடைய கடமையை முழுமையாகச் செய்யாமல், நாம் அவருடைய கற்பனைகளை விரும்புகிறோம் என்று நினைத்துக்கொண்டிருப்போமென்றால், நாம் மிகப்பெரும் தவறு செய்கிறோம். பரிசுத்தம் என்ற கொள்கையில்லா மனிதன் கூட, தவறான செயல்கள் தான் செய்வதற்கு உகந்ததல்ல, ஆனால் நற்செயல்கள் தான் செய்யத்தகுந்தவை என்று கருதுகிறான், அதனால் அவன் தவறான காரியங்களைச் செய்யாமல் நற்காரியங்களைச் செய்தாலும் அது அவனுடைய உள்ளத்திலிருந்து தேவனுடைய சித்தத்திற்கு அடிபணிதல் ஆகிவிடாது.
உண்மையான ஆவிக்குறிய கீழ்ப்படிதலென்பது முழுமையானது. புதிதாக்கப்பட்ட ஒரு இருதயம் தேவனுடைய கற்பனைகளிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பொருக்கிகொண்டிருக்காது: அப்படி செய்யும் மனிதன் தேவனுடைய சித்தத்தை செய்யவில்லை, தன்னுடைய சித்தத்தை செய்து கொண்டிருக்கிறான். நாம் எல்லா காரியங்களிலும் சிரத்தையுடன் தேவனை பிரியப்படுத்த விரும்பாவிட்டால், நாம் உண்மையாக எந்தக் காரியத்தையும் செய்ய விரும்பவில்லை என்ற இந்த கருத்தில் தவறு செய்துவிடாதிருங்கள். சுயம் வெறுக்கப்பட வேண்டும்; நாம் ஆசைப்படுகிற சில காரியங்களை மட்டுமல்ல, முழுசுயத்தையும்! பாவம் என்று அறிந்திருக்கும் எந்த ஒன்றையும் விருப்பத்துடன் நம்மில் அனுமதித்தல் முழு நியாயப்பிரமாணத்தையும் மீறுவதாகும் (யாக் 2:10,11). ‘நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுபோவதில்லை’ (சங் 119:6). இயேசு சொன்னார், ‘நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்’ (யோவா 15:14): நான் அவருடைய நண்பனாயிராவிட்டால், வேறு மாற்றுவழி இல்லாததால், நான் அவருடைய எதிராளியாகத்தான் இருக்க வேண்டும் (லூக் 19:27).
கிறிஸ்துவுக்குள்ளான மறுபிறப்பில், தேவனுடைய வார்த்தைக்கேற்ற கீழ்ப்படியும் சுபாவத்தைப் பரிசுத்த ஆவியானவர் ஏற்படுத்துகிறார். இருதயம் தேவனால் வெற்றிக்கொள்ளப்படுகிறது. இப்பொழுது அவரைப் பிரியப்படுத்த ஒரு ஆழமான உண்மையான விருப்பம் இருக்கிறது. ஆனால் அந்த புதிய சுபாவத்திற்கு எந்த உள்ளான வல்லமையும் இல்லை, பழைய சுபாவம் அல்லது மாம்சம் அதற்கு எதிராகப் போரிடுகிறது, மேலும் சாத்தானும் எதிர்க்கிறான். ஆகவே ஒரு கிறிஸ்தவன் கதறுகிறான், ‘நன்மைசெய்ய வேண்டும் என்ற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, ஆனால் நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை’ (ரோம 7:18). தன்னுடைய மனமாற்றத்திற்கு முன்னர் இருந்ததுபோல, இது அவன் பாவத்திற்கு அடிமை என்பது பொருளல்ல; தன்னுடைய ஆவிக்குறிய வாஞ்சையை எப்படி முழுமையாக உண்மையாக்குவது என்பதை அவன் கண்டுகொள்ளாமலிருக்கிறான் என்பதே பொருளாகும். ஆகையால் ‘உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்’ (சங் 119:35) என்று அவன் ஜெபிக்கிறான். மீண்டுமாக, ‘உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்’ (சங் 119:133) என்றும் சொல்கிறான்.
அநேகமாக பலருடைய சிந்தையில் இப்பொழுது எழும்பியிருக்கும் கேள்விக்கு நாங்கள் பதிலுரைக்க விரும்புகிறோம்: இந்த வாழ்க்கையில் தேவன் நம்மிடத்தில் பரிபூரண கீழ்ப்படிதலை கேட்கிறார் என்று நீங்கள் உறுதிபட கூறுகிறீர்களோ? நாங்கள் பதிலுரைக்கிறோம், ஆமாம்! தேவன் அதைவிட குறைவான தரத்தை நம் முன்னால் வைக்கமாட்டார் (1பேது 1:15). அப்படியனால் உண்மையான கிறிஸ்தவன் அந்தத் தரத்திற்கு இருக்கிறானா? ஆம் மற்றும் இல்லை! ஆம், அவனுடைய இருதயத்தில், மேலும் அந்த இருதயத்தை தேவன் பார்க்கிறார் (1சாமு 16:7). ஒவ்வொரு மறுபிறப்படைந்த மனிதனும் தன்னுடைய இருதயத்தில் தேவனுடைய கற்பனைகளுக்கு உண்மையான அன்பைக் கொண்டிருக்கிறான், அவைகள் எல்லாவற்றையும் முழுமையாக கைக்கொள்ள அவன் உண்மையாக விரும்புகிறான். இந்தவகையில், இதில் மட்டும், கிறிஸ்தவன் செயல்முறையில் ‘பரிபூரணமாயிருக்கிறான்’. ‘பரிபூரணம்’ என்கிற வார்த்தை, பழைய ஏற்பாட்டிலும் (யோபு 1:1, சங் 37:37), புதிய ஏற்பாட்டிலும் (பிலி 3:15) ‘மாய்மாலம்’ என்ற வார்த்தைக்கு மாறாக ‘செம்மையானவன்’ மற்றும் ‘உத்தமன்’ என்கிற பொருள்படுகிறது.
‘கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்’ (சங் 10:17). பரிசுத்தவான்களுடைய ஆத்துமாவின் மொழியே அவர்களின் ‘விருப்பமாயிருக்கிறது’, அவர்களுக்குறிய வாக்குத்ததமானது, ‘அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின் படி செய்கிறார்’ (சங் 145:19). தேவனுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்து, கிறிஸ்துவின் சாயலுக்கு முழுவதுமாக ஒத்திருக்க வேண்டுமென்பதே கிறிஸ்தவனின் வாஞ்சையாயிருக்கிறது. அதே நேரத்தில், தேவனும் கிறிஸ்துவின் நிமித்தம் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்று முயலுகிற மனதை ஏற்றுக்கொள்கிறார் (1பேது 2:5). தேவன் நம்முடைய இருதயத்தை அறிந்திருக்கிறார், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டுமென்கிற தன்னுடைய பிள்ளையின் அந்த உண்மையான ஆழமான அன்பை அவர் பார்க்கிறார், மிகச்சரியான நடத்தைக்குப்பதிலாக உள்ளான ஏக்கத்தையும், விருப்பமான அவனுடைய முயற்சியையும் அவர் ஏற்றுக்கொள்கிறார் (2கொரி 8:12). ஆனால் தேவனை தங்கள் வாழ்க்கையின் எல்லாக் காரியங்களிலும் இருதயப்பூர்வமாக பிரியப்படுத்த விரும்புபவர்களின் ஆறுதலுக்காக இப்பொழுது சொல்லப்பட்டிருக்கும் இந்தக் காரியங்கள், விருப்பத்துடன் கீழ்ப்படியாமையில் வாழ்பவர்கள் தவறான சமாதானத்தைத் தேடிக்கொண்டு தங்கள் சொந்த அழிவுக்காக மாற்றிக்கொள்வதற்கு அல்ல.
என்னுடைய விருப்பங்களெல்லாம் மறுபடியும் பிறந்த ஆத்துமாவினுடையதென்று எனக்கு எப்படித் தெரியும்? என்று எவரேனும் கேட்டால், நாங்கள் சொல்கிறோம், இரட்சிப்புக்கேதுவான விசுவாசமானது (கிருபையானது) பரிசுத்த நடக்கைக்கேற்ற பழக்கவழக்கங்களையே உள்ளான இருதயத்தில் விளங்கப்பண்ணும். இதை வாசிப்பவரின் ‘விருப்பங்கள்’ இப்படியாக பரிசோதிக்கப்பட வேண்டும்: அவைகள் நிலையானதாகவும் தொடர்ச்சியானதாகவும் இருக்கிறதா? அல்லது இப்பொழுதும் அப்பொழுதும் வருவதும் போவதுமாக இருக்கிறதா? நீங்கள் உண்மையாகவே ‘நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்களாகும் படிக்கும்’ (மத் 5:6), ‘தேவனை வாஞ்சித்து கதறும்படியும்’ (சங் 42:1) அவைகள் சிரத்தையாகவும் உண்மையாகவும் இருக்கிறதா? அவைகள் செயல்படுகிறவைகளாகவும், சாதிக்கிறவைகளாகவும் இருக்கிறதா? பலர் நரகத்திற்கு தப்பிக்கொள்ள விரும்புகிறார்கள், ஆனால் அவர்களை நிச்சயமாக நரகத்திற்கு எடுத்துச் செல்லக் காரணமான, ‘விரும்பி தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தலை’, வெறுத்து அதைவிட்டு திரும்பும்படிக்கு அவர்களுடைய விருப்பங்கள் போதுமான அளவிற்கு வலிமையுள்ளதாக இல்லை. பலர் பரலோகத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள், ஆனால் அவர்களை அங்கே எடுத்துச் செல்லும் அந்த ஒரே ‘குறுகலான வழியில்’ நுழையவோ, அதில் தொடரவோ அவர்களுக்கு விருப்பமில்லை. உண்மையான ஆவிக்குறிய ‘விருப்பங்கள்’ கிருபையை பயன்படுத்தி அதை அடையும்படிக்கு எந்த ஒரு வலியையும் பொறுத்துக்கொண்டு, தனக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள இலக்கை நோக்கி ஜெபத்துடன் தொடரும்.
கீழ்ப்படிவதால் நாம் நம்முடைய ஆத்துமாவை சுத்தப்படுத்துகிறோம் (1பேது 1:22). கீழ்ப்படியாமை நம்முடைய ஜெபங்களுக்குத் தடையாயிருப்பதுபோல (ஏசா 59:2, எரே 5:25), கீழ்ப்படிதலினாலே நாம் தேவனுடைய பதிலைப் பெற்றுக்கொள்கிறோம் (1யோவா 3:22). கீழ்ப்படிதலினாலே நாம் ஆத்துமாவிற்கு விலைமதியா கிறிஸ்துவின் நெருங்கிய வெளிப்பாடுகளைப் (யோவா 14:21) பெற்றுக்கொள்கிறோம். தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படுத்தின அந்த ஞானத்தின் வழியிலே நாம் நடக்கும்பொழுது, ‘அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்’ (நீதி 3:17) என்பதை நாம் கண்டுக்கொள்ளுவோம். ‘அவருடைய கற்பனைகள் பாரமானவைகளல்ல’ (1யோவா 5:3) மேலும் ‘அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு’ (சங் 19:11).
புதிய ஏற்பாட்டில் உள்ள கிறிஸ்தவனுக்கு இந்த ‘உலகத்தைக்’ குறித்தும், அதைக் குறித்த அவனது மனப்போக்கைக்குறித்தும் மிகக்குறைவாக எழுதப்படவில்லை. அதன் உண்மையான தன்மை வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கிறது, மேலும் விசுவாசி அதற்கெதிராக முறையாக எச்சரிக்கப்பட்டிருக்கிறான். தேவனின் பரிசுத்தமான வார்த்தையானது பரலோகத்திலிருந்து வரும் வெளிச்சமாகவும், ‘இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிறதாகவும்’ (2பேது 1:19) இருக்கிறது. அதன் தெய்வீக ஒளிக்கதிர்கள் காரியங்களை அதன் உண்மையான நிறத்தில் வெளிப்படுத்துகிறது, காரியங்கள் தவறான அலங்கரிப்புகளாலும், கவர்ச்சியாலும் மறைக்கப்பட்டிருப்பதை அந்த ஒளிக்கதிர்கள் அதனுள் ஊடுருவி வெளிப்படுத்துகிறது. அதிகமான பிரயாசமும், பணமும் செலவழிக்கப்பட்டு, கண்மூடித்தனமான ஏமாற்றுகளினால் வெகுவாக உயர்த்தப்பட்டு மெச்சிக்கொள்ளப்படும் இந்த உலகமானது ‘தேவனுக்குப் பகை’ என்றே அறிவிக்கப்பட்டிருக்கிறது; ஆகவே அவருடைய பிள்ளைகள் அதனுடன் ‘ஒத்துப்போகவோ’ அல்லது தங்கள் ஆசையை அதன் மீது வைக்கவோ அனுமதிக்கப்படுகிறதில்லை.
இந்த பகுதியானது நாம் இனி பார்க்க இருக்கும் பகுதிகளைவிட எந்த வகையிலும் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததல்ல, மேலும் இதை உண்மையாக வாசிப்பவர் தன்னை ஆராய்ந்து பார்க்க தேவனின் கிருபையையும் நாடுவார். தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்கு போதித்திருக்கிற போதனை இப்படியாகச் சொல்கிறது, ‘நீங்கள் வளரும்படி, புதிதாய்ப்பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய கலங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்’ (1பேது 2:3), மேலும் இதுதான் தன்னுடைய உண்மையான நிலையா என்பதைக் கண்டுபிடிக்கும்படி அவனை உண்மையாகவும், சிரத்தையுடனும் பரிசோதித்துப் பார்க்கும்படியும் அறிவுறுத்துகிறது. வேதத்தைப்பற்றிய வெறும் அறிவுடன் நாம் திருப்தியடைந்துவிடாமலிருக்க, நம்முடைய நடைமுறையான வளர்ச்சியைக்குறித்தும், கிறிஸ்துவின் சாயலுடன் ஒத்திருப்பதைக்குறித்தும் நாம் அதிக கவனமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். நம்மைப் பரிச்சித்துப்பார்க்கக்கூடிய ஒரு காரியம் என்னவென்றால், என்னுடைய வேதவாசிப்பும், ஆராய்ச்சியும் என்னை உலகப்பிரகாரமானத்தன்மையிலிருந்து குறைத்திருக்கிறதா? என்பதே.
ஒரு கவிஞன் இப்படியாக எழுதினான், ‘கடவுள் பரலோகத்திலிருக்கிறார் - உலகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது’. ஒருவகையிலே இது ஆசீர்வதிக்கப்பட்ட உண்மை, ‘உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறபடியால்’ (1யோவா 5:19) மற்றொருவகையில் இது மிகவும் தவறு. ஆனால் நம்முடைய இருதயமானது இயற்கைக்கு அப்பாற்பட்டவிதத்திலே பரிசுத்த ஆவியானவரால் வெளிப்படுத்தப்படுவதாலேயே, மனிதர்களிடையே மிகுந்த மதிப்பைப்பெற்றிருப்பது, ‘தேவனுக்கு முன்பாக அருவருபாயிருக்கிறது’ (லூக் 15:16). ‘உலகமானது’ மிகப்பெரும் ஏமாற்றுப்பேர்விழி, வெறுமையான குமிழி, மிகவும் கேடான ஒன்று, ஒரு நாள் சுட்டெரிக்கப்படப்போகிறது என்பதை ஒரு ஆத்துமா கண்டுக்கொள்ளும்பொழுது அது மிகவும் நன்றிக்கடன் படுகிறது.
நாம் மேலும் செல்லும்முன்னர், ஒரு கிறிஸ்தவன் நேசிக்க மறுக்க வேண்டிய ‘உலகத்தை’ வரையறை செய்வோம். பரிசுத்த எழுத்துக்களின் (வேதாகமத்தின்) பக்கங்களில் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளதைவிட அதிகமான அர்த்தங்களில் சில வார்த்தைகள் காணப்படுகின்றன. ஆனாலும் அதன் பின்னனியத்தைக் கூர்ந்து கவனித்தால், அதன் நோக்கத்தை அறிந்துகொள்ளலாம். இந்த ‘உலகம்’ ஒரு அமைப்பு அல்லது பொருட்களின் ஒழுங்கமைப்பு, அது தன்னில் தானே முழுமையுள்ளதாயிருக்கிறது. எந்த ஒரு அன்னிய பொருளும் அதனுள் நுழைய முடியாது, அப்படியே நுழைந்தாலும் அதன் ஒரு அங்கமாக மாறிவிடுகிறது. உலகமானது வீழ்ந்துபோன மனிதத்தன்மையாகும், அதுவே மனிதக்குடும்பங்களிலும் செயல்படுகிறது, அதனுடைய பண்புகளுக்கேற்ற கட்டமைப்பையே நடைமுறை வழக்காக வெளிப்படுத்துகிறது. இது ஒரு ‘மாம்ச சிந்தையின்’ ராஜ்ஜியம், ‘அது தேவனுக்கு விரோதமான பகை, அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது’ (ரோம 8:7). எங்கெல்லாம் ‘மாம்ச சிந்தை’ இருக்கிறதோ, அங்கெல்லாம் ‘உலகம்’ இருக்கிறது; ஆகவே ‘உலகப்பிரகாரமானது’ என்பது தேவனில்லா உலகமாகும்.
‘விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராட’ (2தீமோ 6:12) ஒரு கிறிஸ்தவன் அனுமதிக்கப்படுகிறான், அப்படியானால் சந்தித்து முற்றிலும் அழித்துப்போடவேண்டிய எதிரிகள் இருக்கிறார்களென்று பொருள். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்ற பரிசுத்த திரித்துவம் இருக்கிறதுபோல, மாமிசம், உலகம் மற்றும் பிசாசு என்ற தீய திரித்துவமும் இருக்கிறது. தேவனுடைய பிள்ளை அவைகளுடன் ஒரு முடிவுள்ள போர்புரிய அழைக்கப்படுகிறான்; ‘முடிவுள்ள’ என்று நாங்கள் சொல்கிறோம், ஏனெனில் ஒன்று அவன் அவைகளை வெற்றிகொள்வான் அல்லது அவைகள் அவன் மீது வெற்றி கொள்ளும். என் வாசகரே, ‘உலகமானது சாவுக்கேதுவான பகை’ என்பதை உங்கள் மனதில் முடிவு கட்டுங்கள், ‘தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்’ (1யோவா 5:4) என்று எழுதப்பட்டிருப்பதால் உங்கள் இருதயத்தில் முற்றிலும் அதை நீங்கள் அழித்துப்போடாவிட்டால், நீங்கள் தேவனுடைய பிள்ளையல்ல.
இந்த உலகம் ஏன் ‘மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்பதற்கான பல காரணங்களில், பின்வரும் காரணங்களும் உள்ளன. முதலாவதாக, அதனுடைய எல்லா கவர்ந்திழுக்கும் பொருள்களும், ஒரு ஆத்துமாவின் தேவன்மீதானப் பற்றை சிதறப்பண்ணி, அவனை அதற்கு அந்நியனாக்கிவிடுகின்றன. காணப்படுகிறவைகள், இருதயத்தை காணப்படாதவைகளிலிருந்து திருப்பிவிடும் தன்மையுடையதாகையால் அப்படியிருக்கிறது. இரண்டாவதாக, இந்த உலகத்தின் ஆவியானது, கிறிஸ்துவின் ஆவிக்கு முழுமையாக எதிரிடையானது; ஆகவேதான், ‘நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்’ (1கொரி 2:8) என்று அப்போஸ்தலன் எழுதினான். மூன்றாவதாக, அதன் கவலைகளும், கரிசனைகளும் பக்திவிருத்திக்கும், பரலோக வாழ்க்கைக்கும் எதிரானவைகள். மற்ற மனிதர்களைப்போல, கிறிஸ்தவனும் ஒரு வாரத்தில் ஆறு நாளும் வேலைசெய்ய தேவனால் எதிர்பார்க்கப்படுகிறான்; ஆனாலும் அவன் வேலை செய்யும்பொழுது, தன்னுடைய வேலையை செய்வதைவிட, இச்சையான எதிலும் மனதை செலுத்தாதபடி தன்னைத் தொடர்ச்சியாகக் காத்துக்கொள்ள வேண்டும்.
‘நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்’ (1யோவா 5:4). தேவன் அருளிய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும். இப்பொழுது மறைந்திருந்தாலும், நிச்சயமான நித்தியத்தின் உண்மைகளினால் இருதயம் நிறைந்திருக்கும்பொழுது, கேடுவிளைவிக்கும் உலக பொருட்களின் தாக்கத்திலிருந்து அது விடுவிக்கப்படுகிறது. விசுவாசக் கண்கள் உலகப்பொருட்களின் உண்மை நிறத்தை அறிந்துகொண்டு, அவைகள் வெறுமையானவை, மாயையானவை மேலும் உன்னதமான நித்தியத்தின் மகிமையான காரியங்களுடன் அவைகள் ஒப்பிடத்தக்கவைகளல்ல என்பதை கண்டுக்கொள்கிறது. பரிபூரணத்தையும், தேவ பிரசன்னத்தையும் உணர்ந்துகொள்ளுதல் இந்த உலகத்தை வெறுமையைவிட கீழானதாக்கிவிடுகிறது. தெய்வீக மீட்பர் அவனுடைய பாவத்திற்காக மரித்து, அவனுடைய விடாமுயற்சிகாகவும், இறுதி இரட்சிப்பிற்காகவும் காரியங்களை அவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை ஒரு கிறிஸ்தவன் பார்க்கும்பொழுது, ‘உம்மைத் தவிர இந்த உலகத்தில் எனக்கு வேறு எந்த விருப்பமும் இல்லை’ என்று அவன் வியக்கிறான்!
இந்த வரிகளை வாசிக்கும்பொழுது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? கடந்த பத்தியிலே சொல்லப்பட்டவைகளை நீங்கள் உண்மையாக ஒத்துக்கொள்ளலாம், உங்களுடைய வாழ்க்கை உண்மையில் எப்படி இருக்கிறது? மறுபடியும் பிறவாதவர்கள் மிகவும் மதிப்புமிக்கதாக எண்ணும் காரியங்கள் உங்களை கவர்ந்திழுத்து அடிமையாக்குகிறதா? அவன் மகிழ்ந்திருக்கும் உலகப்பிரகாரமான காரியங்களிலிருந்து விலகிவிடு, அவன் துன்மார்க்கன்: உங்களுடைய நிலையும் இதுதானா? அல்லது உங்களுடைய தற்பொழுதைய மகிழ்ச்சியும் திருப்தியும் உங்களிடமிருந்து பறித்துக்கொள்ளப்பட முடியாத பொருட்களின் மீது இருக்கிறதா? இந்தக் கேள்விகளை இலகுவாக எடுத்துக்கொள்ளாதீர்கள், தேவனுடைய பிரசன்னதிலே அவைகளை உண்மையாய் எண்ணிப்பார்க்க உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவைகளுக்கு நீங்கள் அளிக்கும் உண்மையான பதில் உங்கள் ஆத்துமாவின் உண்மை நிலைக்கு முகப்பாக அமையும், மேலும் ‘நான் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டி’ என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்களா என்பதையும் அது காட்டிவிடும்.
தேவக்குமாரன் நியாயப்பிரமாணத்தை ‘நிறைவேற்ற’ மட்டுமல்ல (மத் 5:17), ‘பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கும்’ (1யோவா 3:8), ‘இனி வரும் கோபாக்கினைக்கு நம்மை நீங்களாக்கி இரட்சிக்கவும்’ (1தெச 1:10), பாவத்திலிருந்து மீட்கவும் (மத் 1:21) மேலும் இந்த உலகத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுதலையாக்கவும், அதனுடைய கவர்ந்திழுக்கும் தாக்கத்திலிருந்து ஆத்துமாவை விடுவிக்கவுமே இவ்வுலகிற்கு வந்தார். பழங்காலத்தில் தேவன் இஸ்ரவேலிடம் செயல்பட்டவிதத்திலிருந்து இது நிழலோட்டமாய் அமைகிறது. அவர்கள் எகிப்திலே அடிமைகளாயிருந்தார்கள், ‘எகிப்து’ இந்த உலகத்திற்கான ஒரு அடையாளம். பார்வோனுக்கு செங்கற்களை செய்வதில் தங்கள் நேரத்தை செலவிட்டு, அவர்கள் கொத்தடிமைகளாக இருந்தார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் யெகோவா, தன்னுடைய வல்லமையினால், அவர்களை ஏகாதிபத்தியத்திலிருந்து விடுவித்து, ‘இரும்பு உலையிலிருந்து’ வெளியே கொண்டுவந்தார். கிறிஸ்துவும் அதையேதான் செய்தார். அவர்கள் இருதயங்களிலுள்ள உலகத்தின் அதிகாரத்தை அவர் உடைக்கிறார். உலகத்தின் விருப்பங்களின் மீதான நாட்டத்திற்கும் மேலும் உலகம் அவர்களை ஒதுக்கித்தள்ளிவிடுமோ என்ற பயத்திலிருந்தும் அவர்களை விடுவிக்கிறார்.
கிறிஸ்துவானவர் தன்னுடைய பிள்ளைகளின் பாவங்களைப் போக்கத் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார், அதன் விளைவாக, இவ்வுலகத்தின் தீய சக்தியிலிருந்தும் அதன் ஆளுகையிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட முடியும்: அதன் பிரபுவாகிய சாத்தானிடமிருந்து; அதனுள் ஏராளமாய் மண்டிக்கிடக்கும் இச்சைகளிலிருந்து; அதற்கு சொந்தமான மனிதனின் வீண்பேச்சுகளிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட முடியும். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட செயலை செய்ய பரிசுத்தர்களுக்குள் வாசம்செய்யும் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவுடன் இணைந்து செயல்படுகிறார். அவர் அவர்களுடைய நினைவுகளையும் உணர்வுகளையும் இவ்வுலக காரியங்களிலிருந்து பரலோகத்தை நோக்கித் திருப்புகிறார். தன்னுடைய வல்லமையை செயல்படுத்தி, அவர் அவர்களை சூழ்ந்துள்ள நன்னெறிகெட்டு நடக்கச்செய்யும் தாக்கங்களிலிருந்து அவர்களை விடுவித்து, பரலோகத்தின் தரத்திற்கு அவர்களை மாற்றுகிறார். ஒரு கிறிஸ்தவன் கிருபையிலே வளரும்பொழுது, இதை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்துகொள்கிறான். தற்பொழுதைய ‘தீய உலகிலிருந்து’ தன்னை முழுமையாக விடுவிக்க விரும்புகிறான், ஆகவே தன்னை முற்றிலுமாக விடுவிக்கும்படி அவன் தேவனைக் கெஞ்சுகிறான். அவனைக் கவர்ந்திழுத்த ஒன்று இப்பொழுது அவனுக்கு துக்கத்தைத் தருகிறது. அவனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட தேவனை மோசமாக துக்கப்படுத்தும் அந்த இடத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்ளப்படும் நேரத்திற்காக அவன் ஏங்குகிறான்.
‘உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்’ (1யோவா 2:15). ஒரு பிரயாணிக்கு அவனது வழியிலுள்ள தடைக்கல் எது? ஓடுபவனுக்கு அவன்மீதுள்ள ஒரு பாரமான பொருள், பறக்கும் பறவைக்கு அதை கவர்ந்து இழுத்து பிறகு அதன் கால்களை இறுகப் பிடித்துக்கொள்ளும் பசை – அப்படியே ஓட்டத்தைத் தொடருகிற ஒரு கிறிஸ்தவனுக்கு இவ்வுலக பற்று – ஒன்று தேவனுடைய வழிகளிலிருந்து அவனை முழுவதுமாக திருப்பிவிடும் அல்லது அவனை உலகத்திற்குள்ளாக மயக்கி இழுத்துவிடும் அல்லது அவனை வலுக்கட்டாயமாக தேவனைவிட்டு வெளியே தள்ளிவிடும். உண்மை என்னவென்றால் இருதயத்திலிருந்து அந்த தீய சிந்தைகள் அகற்றபடும்வரை தெய்வீக வழி நடத்துதல்களுக்கு நம்முடைய காதுகள் செவிடாகிவிடும். இந்த முடிவுள்ள காலம் மற்றும் உணர்வுகளிலிருந்து நாம் மேலெழும்பாதவரை, தேவனுக்குக் கீழ்ப்படிதலை நாம் கட்டுக்குள் கொண்டுவர இயலாது. ஒரு உருண்டையின் மீது தண்ணீர் தங்காமல் வழுக்கி வழிந்துவிடுகிறதுபோல, மாம்ச சிந்தையிலிருந்து பரலோக சத்தியமும் வழிந்துவிடுகிறது.
உலகம் கிறிஸ்துவைவிட்டு பின்னிட்டுத் திரும்பியிருக்கிறது, அவருடைய நாமம் பல இடங்களிலே அறிவிக்கப்பட்டாலும், அது அவருடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்தாது. உலகத்தின் எல்லா விருப்பங்களும் வடிவமைப்புகளும் சுயத்தை பிரியப்படுத்துபவையே. அவர்களுடைய நோக்கமும் நடக்கையும் வேறுவகையிலேயே இருக்கட்டும், சுயம் பிரதானமானதாகவும், சுயத்தை பிரியப்படுத்த அவர்கள் எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தட்டும். இப்பொழுது கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள், அவர்கள் இந்த உலகத்தைவிட்டு வெளியே செல்ல முடியாது; அவர்களுடைய தேவன் குறித்திருக்கிற காலம் மட்டும் அவர்கள் இந்த உலகத்திலே வாழ வேண்டும். அவர்கள் இங்கே இருக்கும்போது அவர்கள் வாழ்க்கைக்காக சம்பாதிக்க வேண்டும், குடும்பத்தை தாங்க வேண்டும், உலகப்பிரகாரமான வேலையையும் கவனிக்க வேண்டும். ஆனால், உலகம் அவர்களை மகிழ்விக்குமென்றாலும், அதிலே அன்புகூற அவர்களுக்கு அனுமதியில்லை. அவர்களுடைய ‘பொக்கிஷமும்’ ‘பங்கும்’ வேறு ஒரு இடத்திலே கண்டுகொள்ளக்கூடியதாயிருக்கிறது.
இந்த உலகமானது விழுந்துபோன மனிதனின் ஒவ்வொரு உள்ளுணர்வையும் கவர்ந்தழைக்கிறது. இது அவனை மயக்க ஆயிரக்கணக்கான பொருட்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது: அவை அவனது கவனத்தைக் கவருகிறது, அந்த கவனம் அதைக்குறித்த ஆசையையும் விருப்பத்தையும் அவனில் தோற்றுவிக்கிறது, உணர்வற்றவிதமாக அவைகள் அவனுடைய இருதயத்தில் மிகவும் ஆழமான பதிவுகளை ஏற்படுத்திவிடுகிறது. எல்லா வகைகளிலேயும் அவைகள் மிகவும் மோசமான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. உலகத்தின் கவர்ச்சியும், கவர்ந்திழுக்கும் தன்மையும் பல்வேறுபட்ட வகைகளிலிருப்பினும், அதனுடைய நோக்கமும் இன்பமும் இவ்வுலகத்தின் மகிழ்ச்சியை மட்டுமே ஊக்குவிக்கத்தக்கவகையில் வடிவமைக்கப்பட்டதாகும் – ஆகையால், ‘மனிதன் இந்த உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபமென்ன?’ ஒரு கிறிஸ்தவன் ஆவியினால் நடத்தப்படுவதால், ஆத்துமாவிற்கு அவர் கிறிஸ்துவை காண்பிப்பதின்மூலமாக அவனுடைய நினைவுகள் இந்த உலகத்திலிருந்து திசை திருப்பப்படுகின்றன. ஒரு சிறு குழந்தை அதற்கு மிகவும் பிரியமான ஒன்றை பெற்றுக்கொள்ள தன்னிடமுள்ள அசுத்தமான ஒன்றை உடனடியாக விட்டுவிட எப்படி ஆயத்தமாயிருக்குமோ அதைப்போல, தேவனுடன் ஐக்கியம் கொண்டிருக்கும் ஒரு இருதயம் சொல்லும், ‘என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும்.... எல்லாவற்றையும் குப்பையுமாக எண்ணுகிறேன்’ (பிலி 3:8-10).
‘உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்கு பகைஞனாயிருக்கிறான்’ (யாக் 4:4). இப்படிபட்ட வசனம் நம் ஒவ்வொருவரையும் முற்றுமுழுவதுமாக ஆராய்ந்து நம்மை நடுங்கச்செய்ய வேண்டும். தேவகுமாரனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கக் காரணமான இந்த உலகத்தில் எப்படி நான் அதன் இன்பங்களை விரும்பி அதனுடன் ஒத்துப்போக முடியும்? அப்படிச்செய்தால் அது அவருடைய எதிராளிகளுடன் என்னை அடையாளப்படுத்திவிடும். ஓ! என்னுடைய வாசகரே, இதிலே எந்த தவறும் செய்துவிடாதீர்கள். இப்படியாக எழுதப்பட்டிருக்கிறது, ‘ஒருவன் உலகத்தில் அன்புக்கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை’ (1யோவா 2:15). பழைய ஏற்பாட்டில் தேவனுடைய பிள்ளைகளைக்குறித்து, ‘அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்’ (எண் 23:9) என்று சொல்லப்பட்டிருக்கிறது. உறுதியாக அவனது குணத்திலும் நடத்தையிலும், விருப்பங்களிலும் நாட்டங்களிலும் காணப்படும் அந்த வித்தியாசம், மறுபிறப்படைந்தவனையும் மறுபிறப்படையாதவனையும் வேறுபடுத்தும் அந்த வித்தியாசம், அவனை நிச்சயமாக உலகத்திலிருந்து பிரித்தெடுக்கும். வேறொரு உலகத்தில் குடியுரிமை இருப்பதாகவும், வேறொரு ஆவியினால் நடத்தப்படுவதாகவும், வேறொரு சட்டத்தினால் ஆளப்படுவதாகவும் சொல்லிக்கொள்ளும் நாம், இந்த எல்லாவற்றையும் அவமதிப்பவர்களோடு கையோடு கைகோர்த்து செல்ல முடியாது! நம்மில் மற்றும் நம்மைச்சுற்றியுள்ள அனைத்தும் நம்முடைய கிறிஸ்தவ பிரயாணத்தை வெளிப்படுத்தட்டும். ‘இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமலிருப்பதினால்’ (ரோம 12:2), நாம் உண்மையில் ‘அடையாளப்புருஷராய்’ (சக 3:8) இருக்கக்கடவோம்.
உலகத்தின் தோற்றத்தையும் அதன் ஒழுங்கான தன்மையும் பாதுகாக்க எத்தனை கடின முயற்சிகள் எடுக்கப்படுகின்றன! தன்னுடைய மதிக்கத்தக்க பொதுவான நடைமுறை மற்றும் நாகரிகமான மொழிநடை, உபகாரங்கள் மற்றும் அற நிலையங்கள் போன்ற செயற்கையான காரியங்கள் மூலம் அதற்கு மரியாதை கொடுக்க முற்படுகிறது. அப்படியே அதன் திருச்சபைகளும் மற்றும் பேராலயங்களும், அதன் ஆயர்களும் மற்றும் பேராயர்களும் உட்புறத்திலே கொதித்துக்கொண்டிருக்கும் சீர்கேட்டை வெளிப்புறமான அலங்கரிப்புகளினாலே மூடி மறைக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள். அதற்கு ஒரு நல்ல மதிப்புக்கொடுக்க அதனுடன் ‘கிறிஸ்தவம்’ சேர்க்கப்படுகிறது, கிறிஸ்துவின் ‘நுகத்தை’ தங்கள் மேல் சுமந்துகொள்ளாத ஆயிரக்கணக்கானவர்கள், பரிசுத்த கிறிஸ்துவின் நாமத்தை மட்டும் தங்கள் உதடுகளில் சொல்கிறார்கள். அவர்களைக் குறித்து தேவன் சொல்கிறார், ‘இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள், அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது’ (மத் 15:8).
அப்படிப்பட்டவைகளைக்குறித்து ஒரு உண்மையான கிறிஸ்தவனின் மனப்போக்கு எப்படியாக இருக்க வேண்டும்? வேதத்தின் பதில் தெளிவானது, ‘இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு’ (2தீமோ 3:5). ‘நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்’ (2கொரி 6:17). இந்த தெய்வீக கட்டளைக்குக் கீழ்ப்படியும்பொழுது அவர்களை என்ன தொடரும்? நாம் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நிரூபணம் செய்வோம்: ‘நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதை சிநேகிக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது’ (யோவா 15: 19). குறிப்பாக எந்த ‘உலகம்’ இங்கே காட்டப்படுகிறது? இதற்கு முந்தைய வசனம் இக்கேள்விக்குப் பதில் தரட்டும்: ‘உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்’. எந்த ‘உலகம்’ கிறிஸ்துவைப் பகைத்து அவரை மரணத்திற்கு நேராகத் துன்பப்படுத்தியது? சமய உலகம், தேவனுடைய மகிமைக்கு தங்களை வைராக்கியம் உள்ளவர்களைப்போல காட்டிக்கொண்டவர்களே. இப்பொழுதும் இப்படியே இருக்கிறது. ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்துவை அவமதிக்கும் கிறிஸ்தவ உலகத்தைவிட்டு பின்னிட்டுத் திரும்பட்டும், அவனது மிகவும் கொடூரமான, ஆழமான மற்றும் நன்னெறியற்ற எதிராளிகள் யாரெனில் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்பவர்களே! ‘என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூறுங்கள்’ (மத் 5:11:12). ஆ! என் சகோதரரே, இது ஒரு ஆரோக்கியமான் அடையாளம், சமய உலகம் உங்களை வெறுக்கும்பொழுது நீங்கள் உண்மையாகவே வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறீர்கள் என்பதற்கு அது ஒரு உறுதியான அடையாளம். ஆனால் மற்றொருவகையில், உங்களுக்கு ‘திருச்சபைகளிலோ’ அல்லது ‘கூடுகைகளிலோ’ ஒரு ‘நற்பெயர்’ இருக்குமென்றால் தேவனால் வரும் மகிமையைவிட மனுஷரால் வரும் மகிமையை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று பயப்படுவதற்கு அதிக காரணங்கள் உண்டு!
முதலாவது, அதனுடைய வழக்குகளிலிருந்தும் நடைமுறைகளிலிருந்தும் உயர்த்தப்பட வேண்டும். இந்த உலகமானது அதன் நடைமுறை வழக்குக்கும், நாளின் பாணிக்கும் (Style of the day) அடிமைப்பட்டுக் கிடக்கிறது. ஆனால் தேவனுடன் நடக்கும் ஒருவன் அப்படியில்லை: அவனது பிரதானமான கரிசனையெல்லாம் ‘அவரது குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதே’. இரண்டாவதாக, அதனுடைய பாதுகாப்பிலிருந்தும், கவலையிலிருந்தும் உயர்த்தப்பட வேண்டும். பழைய பரிசுத்தவான்களைக்குறித்து இப்படியாகச் சொல்லப்பட்டிருக்கிறது, ‘பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்திரம் தங்களுக்கு உண்டென்று அறிந்து’ (எபி 10:34), தங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாக கொள்ளையிடக் கொடுத்தார்கள். மூன்றாவதாக, அதனுடைய சோதனைகளுக்கு மேலாக: ‘தேவனில் மகிழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு’ இந்த உலகத்தின் கண்ணை கூசும் மற்றும் மின்னும் பொருட்களில் என்ன கவர்ச்சி இருக்கிறது? அது எதுவாக இருந்தாலும், அவர்களுக்கு அது ஒன்றுமில்லை! நான்காவதாக, அதனுடைய கருத்துக்களுக்கும், ஏற்றுக்கொள்ளுதல்களுக்கும் மேலாக: உலகத்திலிருந்து சுதந்தரமாயிருக்கவும் அதை மீறி நடக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் முழு இருதயமும் தேவனைப் பிரியப்படுத்துவதில் வைக்கப்பட்டிருக்குமென்றால், தேவனற்றவர்கள் உங்களைப்பற்றி கூறும் குறைகளைப்பற்றி நீங்கள் முற்றிலும் கவலையற்றவர்களாயிருப்பீர்கள்.
இப்பொழுது, என் வாசகரே, இந்த அதிகாரத்தில் உள்ளவைகளைவைத்து உண்மையாகவே உங்களை அளந்துபார்க்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால் பின்வரும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களைக் கண்டுபிடியுங்கள். முதலாவதாக, உங்களுடைய ஓய்வு நேரங்களில் உங்கள் மனதின் முன்னால் நிற்கும் காரியங்கள் எவை? உங்கள் மனது எதைக்குறித்து ஓடிக்கொண்டிருக்கிறது? இரண்டாவதாக, உங்களுடைய தெரிந்தெடுப்புகள் எப்படிபட்டவைகளாயிருக்கிறது? ஒரு மாலை நேரத்தையோ அல்லது ஓய்வு நாளின் மதியவேளையையோ எப்படி செலவு செய்ய வேண்டுமென்று முடிவுசெய்யும்பொழுது, நீங்கள் எதைத் தெரிந்தெடுக்கிறீர்கள்? மூன்றாவதாக, எந்த தருணங்களில் நீங்கள் அதிகமாக வருந்துகிறீர்கள்? ஏதோ ஒரு உலகப் பொருளை இழந்தபொழுதா? அல்லது தேவனுடனான ஐக்கியத்தை இழந்தபொழுதா? எது உங்களை மிகவும் துக்கப்படுத்துகிறது? உங்களுடைய திட்டங்கள் தோல்வியை தழுவியபொழுதா? அல்லது கிறிஸ்துவுக்குள் உங்கள் இருதயம் குளிர்ந்தபொழுதா? நான்காவதாக, நீங்கள் கலந்துரையாட உங்களுக்கு மிகவும் பிடித்த தலைப்பு எது? அன்றைய நாளின் செய்தியை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்களா? அல்லது ‘முற்றிலும் அழகுள்ளவரைப்’ பற்றி பேசுபவர்களை சந்திப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுடைய ‘நல்ல எண்ணங்கள்’ நடைமுறைப்படுத்தப்படுகிறதா? அல்லது அவைகள் வெறுமையான கனவுகள்தானா? நீங்கள் முழங்காலில் செலவிடும் நேரம் முன்னைவிட அதிகரித்திருக்கிறதா? அல்லது குறைந்திருக்கிறதா? தேவனுடைய வார்த்தை உங்களுக்கு சுவைக்க இனிதாயிருக்கிறதா? அல்லது உங்கள் ஆத்துமா அதன் மீதுள்ள இனிய சுவையை இழந்துவிட்டதா?
தன்னுடைய பிள்ளைகளின்மீது, அவருடைய கிருபையின் ஐசுவரியத்தை பொழிந்தருள வேண்டுமென்கிற மிக இன்பமான தேவனின் சித்தத்தை தெய்வீக வாக்குத்தத்தங்கள் வெளிப்படுத்துகின்றன. அவைகள் அவருடைய இருதயத்தின் வெளிபடையான சாட்சிகள், அவர் அவைகளிலிருந்து முழு நித்தியத்திற்கும் அவர்களில் அன்பு கூறுகிறார் மற்றும் அவர்களுக்காகவும், அவர்களைக்குறித்தும் அவர் எல்லாக்காரியங்களையும் முன் குறித்திருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன. மனிதனிலும் மற்றும் தன்னுடைய குமாரனுடைய செய்து முடிக்கப்பட்ட பணியிலும், இக்காலத்திற்கும் நித்தியத்திற்கும், அவர்களுடைய முழுமையான இரட்சிப்பிற்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் செய்து முடித்துவிட்டார். வாக்குத்தத்தங்களைக்குறித்த உண்மையான, தெளிவான மற்றும் ஆவிக்குறிய அறிவை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்கிற நோக்கத்தில், வானலாவிய மகிமையான கிருபையில் எண்ணுக்கடங்கா நட்சத்திரங்களைப்போல, வேதவாக்கியங்களில் சிதறிக்கிடக்கும் மகா உன்னதமான விலைமதிப்பில்லா வாக்குத்தத்தங்களை அவர்களுக்கு முன்னால் வைப்பது தேவனுக்குப் பிரியமாகக் கண்டது; அவைகளினாலே கிறிஸ்துவுக்குள் அவர்களைக்குறித்த தேவனுடைய சித்தம் அவர்களுக்கு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது, அவருக்குள்ளாக பரிசுத்த ஸ்தலத்தை எடுத்துக்கொள்ளும்படியாகவும், அவர்களுடைய நிலையோ சூழ்நிலையோ எதுவாக இருந்தாலும், இதன் மூலமாக எல்லா நேரங்களிலும் அவருடைய கிருபையிலும், இரக்கத்திலும் அவரில் உண்மையான ஐக்கியம் கொள்ளும்படியாகவும் அவைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
நல்லதைக் கொடுக்கும்படிக்கோ அல்லது கெட்டதை நீக்கும்படிக்கோ தெய்வீக வாக்குத்தத்தங்கள் பலதரப்பட்டவை. ஆசீர்வதிக்கப்பட்ட அவைகள் இருக்கும் வண்ணமாகவே அவருடைய பிள்ளைகளுக்கு தேவனின் அன்பை வெளிப்படுத்தி அறிவிக்கின்றன. தேவனுடைய அன்புடன் தொடர்புடைய மூன்று படிகள் உள்ளன: முதலாவதாக, அதை செயல்படுத்த அவருக்கு ஒரு உள்ளான நோக்கமுண்டு; இறுதியாக அந்த நோக்கத்தை உண்மையாகவே செயல்படுத்துதல்; ஆனால் அதற்கிடையில் அதன் பயனாளிகளுக்கு அந்த நோக்கத்தை கிருபையாக வெளிப்படுத்துவது. அன்பு மறைக்கப்பட்டிருக்கும்பொழுது நாம் அதினால் ஆறுதல் அடைய முடியாது. இப்பொழுது ‘அன்பாகவே’ இருக்கும் தேவன் தன்னுடையதில் அன்புகூறுவது மட்டுமல்ல, சரியான நேரத்தில் தன்னுடைய அன்பை அவர்களுக்கு முழுமையாக விளங்கப்பண்ணுவதுமட்டுமல்ல, அதற்கிடையில் நாம் அவருடைய இரக்கமுள்ள சித்தங்களை அறிந்துகொண்டவர்களாகவும், அவருடைய அன்பிலே நாம் இனிமையாக தங்கியிருக்கும்படியாகவும், அவருடைய உண்மையான வாக்குத்தத்தங்களில் நாம் நம்மை முழுமையாக செளகரியப்படுத்திக்கொள்ளவும் செய்வார். ‘தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்’ (சங் 139:17) என்று நம்மால் அங்கே சொல்ல முடியும்.
2பேதுரு 1:4ல் தெய்வீக வாக்குத்தத்தங்கள் ‘மகா மேன்மையும் அருமையுமானவைகள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்பர்ஜன் அவர்கள் சுட்டிக்காட்டியதுபோல, ‘உன்னதமானத்தன்மையும், விலைமதிப்பற்றதன்மையும் ஒருபோதும் இணைந்துசெல்வதில்லை, ஆனால் இத்தருணத்தில் இவை மிக அதிகளவில் இணைந்திருக்கின்றன’. யெகோவா தன்னுடைய இருயதத்தை வெளிப்படுத்த தன்னுடைய வாயைத் திறக்க பிரியப்படும்பொழுது, அதை அவர் தனக்கே உரிய தகுதியுடன், உயர்ந்த வல்லமையுடனும் செழுமையுடனும் செய்கிறார். பிரியமான லண்டன் போதகரை மீண்டும் குறிப்பிடவேண்டுமானால்: ‘அவைகள் உன்னதமான தேவனிடத்திலிருந்து வருகின்றன, அவைகள் மகாப்பெரிய பாவிகளுக்கு வந்திருக்கின்றன, அவைகள் நல்ல முடிவுகளுக்காக செயல்படுகின்றன மற்றும் பெரிய காரியங்களுடன் செயல்படுகின்றன’. அவைகளின் உன்னதத்தன்மையை இயற்கையான அறிவு புரிந்துகொள்ளமுடியுமென்றாலும், ஒரு புதுப்பிக்கப்பட்ட இருதயம் மட்டுமே அவைகளின் மகாப்பெரிய விலைமதிப்பற்றதன்மையை ருசித்து, தாவீதுடன் சேர்ந்து, ‘உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்’ (சங் 119:103) என்று சொல்ல முடியும்.
அவைகள் கிறிஸ்துவுக்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே உரியவை. ‘தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே’ (2கொரி 1:20). மூவரான பரிசுத்த தேவனுக்கும், பாவம் நிறைந்த சிருஷ்டிக்கும் இடையில், அவர்கள் சார்பிலே தேவனை முழுவதுமாக திருப்திபடுத்திய அந்த மத்தியஸ்தரைத் தவிர வேறு எதுவும் இணைப்பாயிருக்க முடியாது. ஆகையினாலே அந்த மத்தியஸ்தர் எல்லா நல்லவற்றையும் தன்னுடைய மக்களுக்காக தேவனிடமிருந்தும், அதை அவர்கள் அவர் மூலமாக இரண்டாவதாக பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பாவி கிறிஸ்துவை அவமதித்து அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கும்பொழுது, கிறிஸ்துவை அவமதித்து புறக்கணித்துவிட்டு, தேவனை அவருடைய இரக்கங்களுக்காக நோக்கிக் கூப்பிடும்பொழுது அது ஒரு மரத்திடம் விண்ணப்பம் பண்ணுவதுபோலவே இருக்கும், எந்த பயனும் இல்லை.
கர்த்தராகிய இயேசுவின் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்குத்தத்தங்களும், வாக்குப்பண்ணப்பட்டிருக்கிற காரியங்களும் அவர்மூலமாகவே அவருடைய பரிசுத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘(முதன்மையான மற்றும் உன்னதமான) நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச்செய்த வாக்குத்தத்தம்’ (1யோவா 2:25). இதே நிரூபம் நமக்கு சொல்கிறது, ‘அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது’ (5:11). இப்படியிருக்கையில், கிறிஸ்துவுக்குள் இல்லாதவர்களுக்கு இந்த வாக்குத்தத்தங்களால் என்ன நன்மை உண்டாயிருக்கிறது? ஒன்றும் இல்லை. கிறிஸ்துவுக்கு வெளியே இருக்கும் மனிதனானவன், தேவனுடைய அன்பைவிட்டு வெளியே இருக்கிறான்; ஆம், உண்மையாகவே அவன் தேவனுடைய கோபத்தில் இருக்கிறான்; தெய்வீக வாக்குத்தத்தங்களல்ல, பயமுறுத்தல்களே அவனது பங்கு. ‘கிறிஸ்துவை சேராதவர்கள்’ ‘இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாய்’ (எபே 2:12) இருக்கிறார்கள் என்பதே மனப்பூர்வமாய் கவனத்தில் கொள்ளவேண்டியதாயிருக்கிறது. ‘தேவனுடைய பிள்ளைகளே’ ‘வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள்’ (ரோம 9:8). என்னுடைய வாசகரே நீங்களும் அவர்களில் ஒருவராயிருக்கிறீர்களா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
தெய்வீக வாக்குத்தத்தங்கள் இரட்சிக்கப்பட்டவர்களுக்கும், இரட்சிக்கப்படாதவர்களுக்கும் எந்த வித்தியாசமுமின்றி ஒன்றுபோலவே கிடைக்கிறது என்று போதிப்பவரின் குருட்டுத்தன்மையும், மகாபெரிய பாவமும் எத்தனை பயங்கரமானது! அவர்கள் ‘பிள்ளைகளின் அப்பத்தை’ எடுத்து ‘நாய்களுக்கு’ போடுகிறது மட்டுமல்ல, ‘வேதவசனத்தை புரட்டி’ (2கொரி 4:2), ஒழுக்ககேடான ஆத்துமாக்களை வசியப்படுத்துகிறார்கள். வேதவாக்கியங்களைப் படித்து அதை ஆராயவேண்டியதும், மேலும் அவர்கள் வாசிப்பதையும் கேட்பதையும் தவறில்லாத தரத்துடன் சோதிக்க வேண்டியதும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுடைய கடமையென்று தேவன் சொல்லியிருப்பதால், அவைகளைக் கேட்டு அவர்களுக்கு செவிசாய்ப்பவர்களும் எந்த வகையிலும் குற்றமற்றவர்களல்ல. அவர்கள் அப்படிச்செய்வதற்கு சோம்பேறிகளாயிருந்து, தங்களுடைய குருடான வழிகாட்டிகளையே கண்மூடித்தனமாகப் பின்பற்ற முடிவுசெய்தால், அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள் தலைமேலேயே இருக்கும். சத்தியம் ‘வாங்கப்பட’ வேண்டியதாயிருக்கிறது (நீதி 23:23), அதனுடைய விலையை செலுத்த ஆயத்தமில்லாதிருந்தால், அது இல்லாமலே போகக்கடவன்.
இதைச்செய்ய நாம் உண்மையாகவே அவைகளை தெரிந்து வைத்துக்கொள்ளத் தேவையான பிரயாசத்தையெடுக்க வேண்டும். பரிசுத்தர்கள் கொஞ்சமும் தெரிந்து வைத்திருக்காத வாக்குத்தத்தங்கள் வேதவாக்கியங்களில் எத்தனை இருக்கிறது என்பதும், அவைகள் விசுவாசிகளின் விசித்திரமான பொக்கிஷங்கள், விசுவாசத்தின் பாரம்பரியப் பொருள் அதிலே இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாமலிருப்பதும் மேலும் ஆச்சரியமளிக்கிறது! கிறிஸ்தவர்கள் ஏற்கனவே அந்த அதிசயமான வாக்குத்தத்தங்களைப் பெற்றவர்களாயிருக்கிறார்கள் என்பது உண்மையாலும், அவர்களுடைய செல்வத்தின் தலைச்சிறந்தது, அவர்களுடைய சொத்தின் முழுமையும், வர இருக்கிற ஒன்று (நித்தியஜீவன்) மட்டுமே. அவர்கள் ஏற்கனவே ‘ஊக்கமான’ ஒன்றை பெற்றிருக்கிறார்கள், ஆனாலும் கிறிஸ்து அவர்களுக்காக வாங்கியிருக்கிற சிறந்த பகுதி இன்னும் தேவனுடைய வாக்குத்தத்தத்திலேயே இருக்கிறது. அப்படியானால் ‘தேவன் தமது ஆவியினாலே வெளிப்படுத்தியிருக்கும்’ (2கொரி 2:10) பல நற்காரியங்களை தாங்கள் அறிந்துவைத்துக்கொள்ள, அவர்களுடைய ஆவிக்குறிய ஆசீர்வாதங்களின் கையிருப்பை அறிந்துகொள்ள, அவருடைய சித்தத்தின் ஏற்பாட்டை அவர்கள் எத்தனை விடாமுயற்சியுடன் ஆராயவேண்டும்!
நித்திய உடன்படிக்கையாக என் மீது ஏற்படுத்தப்பட்டிருப்பதை அறிந்துகொள்ளும்படி நான் வேதவாக்கியங்களை ஆராய்வது மட்டுமல்ல, என் மனதிலே மீண்டும் மீண்டும் அவைகளைச் சிந்தித்து, அதன் ஆவிக்குறிய அர்த்தத்தைப் புரிந்துகொள்ள நான் தேவனிடத்தில் கதறும்படியாக, வாக்குத்தத்தங்களை நான் தியானிக்கவும் வேண்டும். ஒரு தேனீயானது பூவைப் பார்த்துக்கொண்டிருக்கும்வரை அதிலிருந்து தேனை உரிஞ்ச முடியாது. ஒரு கிறிஸ்தவனும் தன்னுடைய விசுவாசத்தினால் தெய்வீக வாக்குத்தத்தங்களைப் பற்றி அதன் ஆழத்தில் ஊடுருவும்வரை, அதிலிருந்து உண்மையான ஆறுதலையோ அல்லது பலத்தையோ பெற்றுக்கொள்ள முடியாது. சோம்பேறி போஷிக்கப்படுவான் என்ற எந்த ஒரு உறுதியையும் தேவன் கொடுக்கவில்லை, ஆனால் ‘ஜாக்கிரதையுள்ளவனுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்’ (நீதி 13:4) என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆகவேதான் கிறிஸ்து சொன்னார், ‘அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்’ (யோவா 6:27). வாக்குத்தத்தங்களை மனதிலே பதித்திருக்கும்பொழுதுதான், உண்மையாகவே அவைகள் நமக்குத் தேவைப்படும்பொழுது, நாம் பெலனற்று மயங்கிவிழும்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவைகளை நமக்கு ஞாபகப்படுத்தி பெலப்படுத்துவார்.
‘அனுதின வாழ்க்கையின் பொது இடங்களில் சில கிறிஸ்தவர்களின் நடக்கை, கிறிஸ்தவமென்பது ஏதோ ஒரு பந்துபோலவும், பொது உலக வாழ்க்கைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அது அவர்களுக்கு அசாதாரணமானதாகவும் சொப்பனத்தைப்போலவும் இருக்கிறது; இவையெல்லாம் உண்மை என்பதைவிட அவைகள் கடவுள் சம்மந்தபட்ட ஒரு கட்டுக்கதையாக அவர்களுக்குத் தோன்றுகிறது. ஆவிக்குறிய காரியங்களுக்காகவும், வரப்போகிற வாழ்க்கைக்காகவும் ஒரு நடைமுறை வழக்காக அவர்கள் தேவனில் நம்பிக்கை வைக்கிறார்கள்; ஆனால் உண்மையான தேவபக்தி இம்மை மற்றும் மறுமைக்குறிய வாக்குத்தத்தங்களை உள்ளடக்கியது என்பதை அவர்கள் முற்றிலும் மறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அனுதின வாழ்க்கையின் சிறுசிறு காரியங்களுக்காக ஜெபம்செய்வதும் வீணானதாகத் தோன்றும். இந்த மனப்போக்கு அவர்களுடைய விசுவாசத்தின் உண்மைத்தன்மையையே கேள்விக்குறியாக்குகிறது என்று நான் சொல்லப்போனால் அது அவர்களை அதிர்ச்சியடையச் செய்யலாம். இது அவர்கள் வாழ்க்கையின் சிறு பிரச்சனைகளில் கூட உதவி செய்யாவிட்டால், மரணம்போன்ற மிகப்பெரிய சோதனைகளில் அவர்களுக்கு அது கைக்கொடுக்குமா?’ (சி. ஹெச். ஸ்பர்ஜன்).
‘தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது’ (1தீமோ 4:8). வாசகரே, தேவனின் வாக்குத்தத்தங்கள் அனுதின வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும், காரியங்களுக்கும் பொருந்தும் என்பதை விசுவாசிக்கிறீர்களா? அல்லது பழைய ஏற்பாடு மாம்ச பிரகாரமான யூதர்களுக்குமட்டுமே சொந்தமானது, ‘நம்முடைய வாக்குத்தத்தங்கள்’ ஆவிக்குறியது, இந்த உலகத்துக்குறியதல்ல என்று நம்பவைத்து, வேதத்தைப் ‘பங்கிட்டு விளக்கமளிப்பவர்கள்’ (Dispensationalists) உங்களை ஏமாற்றியிருக்கிறார்களா? யோசுவா 1:5ல் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கும், ‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுகிறதுமில்லை’ (எபி 13:5) என்ற வாக்குத்தத்தத்திலிருந்து எத்தனை முறை ஒரு கிறிஸ்தவன் தேற்றபட்டிருக்கிறான்! சொல்லப்பட்டிருக்கிற வாக்குத்தத்தங்களில் 2கொரிந்தியர் 6:18ல் குறிப்பிடப்பட்டிருப்பது லேவியராகமத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தும் 2கொரிந்தியர் 7:1ல் ‘இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியால்’ என்று சொல்லப்பட்டிருக்கிறதே!
‘பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களில் எது சரியாக எனக்குப் பொருத்தமானது? எங்கே நான் அதற்கான வரையறையை செய்ய முடியும்? என்று ஒருவேளை யாராவது கேட்டால், நாங்கள் பதிலுரைக்கிறோம், சங்கீதம் 84:11 அறிவிக்கிறது, ‘கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்’. நீங்கள் உண்மையாகவே ‘உத்தமமாய்’ நடப்பீர்களென்றால், ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குத்தத்தங்களையும், உண்மையாகவே உங்களுக்கு வேண்டியதாயிருக்கும் ‘நன்மைகளையும்’ தேவன் உங்களுக்குக் கொடுக்கிறார் என்பதை உங்களுடையதாக்கிகொள்ள நீங்கள் பாத்திரவான்களாயிருக்கிறீர்கள். ‘என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்’ (பிலி 4:19). இப்படியிருக்க, அவருடைய வார்த்தைகளில் எங்காகிலுமுள்ள வாக்குத்தத்தங்கள் உங்களுடைய தற்பொழுதைய சூழ்நிலைக்கு பொருந்துமென்றால், உங்களுடைய ‘தேவை’க்கேற்ப அதை உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்.
தேவனுடைய ஜனங்களில் பலர் அடிக்கடி ஆவிக்குறிய திருட்டிலே குற்றவாளிகளாகிறார்கள், நாங்கள் எதை இங்கே குறிப்பிடுகிறோமென்றால், தங்களுக்கு சொந்தமில்லாத ஒன்றை அவர்கள் தங்களுடையதாக்கிகொள்கிறார்கள், ஆனால் உண்மையில் அவைகள் மற்றவர்களுக்கு சொந்தமானது. இயேசுகிறிஸ்துவுடன், அவரால் தெரிந்துகொள்ளப்பட்டு மீட்கப்பட்டவர்களாகிய நமக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சில குறிப்பிட்ட உடன்படிக்கைகள், எந்த நிபந்தனைகளுமின்றி நமக்கிருக்கிறது; ஆனால் தேவனால் சொல்லப்பட்டிருக்கும் பல வளமான வார்த்தைகள் மிகவும் கவனமுடன் மதிக்கப்பட வேண்டிய நிபந்தனைகளை உள்ளடக்கியது, அதற்கு கீழ்ப்படியாவிட்டால் நாம் அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய வாசகரின் உண்மையான தேடுதலின் ஒரு பகுதி இந்த முக்கியமான பகுதிக்கு தரப்பட வேண்டும். ‘அவருடைய உடன்படிக்கை உன்னால் கவனமாக கைக்கொள்ளப்பட வேண்டுமென்ற அவருடைய நிபந்தனைக்கு நீ உட்பட்டு நடக்கும்பொழுது மட்டுமே, தேவன் உனக்குள்ள தன்னுடைய வாக்குத்தத்தத்தை காத்துக்கொள்ளுவார். நாம் அவருடைய நிபந்தனையுடன் கூடிய வாக்குத்தத்தத்தின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும்பொழுது மட்டுமே, நாம் அந்த வாக்குத்தத்தம் நமக்காக நிறைவேற்றப்படுமென்று எதிர்ப்பார்க்கலாம்’ (சி. ஹெச். ஸ்பர்ஜன்).
பல தெய்வீக வாக்குத்தத்தங்கள் குறிப்பிட்ட குணாதிசயங்கள் கொண்டவர்களுக்கு சொந்தமானவை, இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் ஆவிக்குறிய கனிகளை உரியவர்களுக்கு சொந்தமானவை. உதாரணமாக, சங்கீதம் 25:9ல், சாந்தகுணமுள்ளவர்களை ‘நியாயத்திலே நடத்துவார்’ என்று தேவன் சொல்கிறார்; ஒருவேளை நான் அவருடன் ஐக்கியத்தில் இல்லாதிருப்பேனானால், என்னுடைய சுயசித்தத்தைச் செய்துகொண்டிருப்பேனென்றால், என்னுடைய இருதயம் அகந்தையுள்ளதாயிருந்தால், இந்த வசனத்தின்படி என்னைத் தேற்றிக்கொள்ள எனக்கு எந்த நியாமும் இல்லை. மீண்டும் யோவான் 15:7ல், தேவன் நமக்கு சொல்கிறார், ‘நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்’. ஆனால் நான் அவருடன் செயல்முறையில் ஐக்கியம் கொள்ளாதிருந்தேனானால், என்னுடைய நடத்தையை அவருடைய கட்டளைகள் ஒழுங்குபடுத்தவில்லையென்றால், என்னுடைய ஜெபத்திற்கு பதில் வராது. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் சுத்தமான கிருபையினாலே வரும்பொழுது, அந்த கிருபையானது ‘நீதியினாலே ஆண்டுகொள்ளப்படுகிறது’ (ரோம 5:21) மேலும் அது மனிதனுடைய பொறுப்பை தட்டிக்கழிப்பதில்லை என்பதும் எப்பொழுதும் நினைவில் கொள்ளப்பட வேண்டியதாயிருக்கிறது. உடல் ஆரோக்கியத்தைக்குறித்த காரியங்களை நான் அலட்சியம் பண்ணினால், தேவனுடைய பல வகையான உலகப்பிரகாரமான இரக்கங்களை அனுபவிப்பதை என் சரீரத்திலுள்ள நோய் பாதிக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை: அதே வகையில், அவருடைய நியமங்களை நான் அசட்டைப்பண்ணினால், அவருடைய வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறாதபொழுது, என்னை நானே குற்றம் சாற்றிக்கொள்ள வேண்டியதுதான்.
தேவன் வாக்குப்பண்ணியிருப்பதால் பரிசுத்தம் காணப்படாவிட்டாலும் அவர் தன்னுடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறார் என்று ஒருவரும் நினைக்க வேண்டாம்: ஒரு பரிபூரணத்தின் விலையில் (பரிசுத்தமில்லாத்தன்மையில்) அவர் மற்றொரு பரிபூரணத்தை (வாக்குத்தத்தங்களை) செயல்படுத்துவதில்லை. கிறிஸ்துவினுடைய தியாகமான செயலை தேவன் பெரிதுபடுத்தி அதன் கனிகளை தன்னுடைய செயலைக்குறித்து வருத்தப்படாத அக்கரையற்ற ஆத்துமாவின்மேல் வைத்து கனப்படுத்துவார் என்று ஒருவரும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். ஒரு உண்மையின் சம நிலை இங்கே காணப்பட வேண்டும்; அந்தோ! அது பலமுறை மறக்கப்படுகிறது, தெய்வீகக் கிருபையை உயர்த்துவதாகக் கருதிக்கொண்டு உண்மையில் மனிதரில் பலர் ‘இச்சையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்’. ‘ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன்’ (சங் 50:15) என்று குறிப்பிட எத்தனை முறை ஒருவன் கேட்டிருக்கிறான்! ஆனால் அது அதற்கு முந்தைய வசனத்தில் ‘நீ தேவனுக்கு ஸ்தோத்திர பலிகளையிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளை செலுத்தி’ என்பதுடன் இணைந்திருக்கிறது! மறுபடியும், ‘என் கண்ணைவைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்’ (சங் 32:8) என்ற வாக்குத்தத்தமானது அதனுடைய பின்னனியத்தை கவனிக்காமல் எத்தனைமுறை பிடித்துக்கொள்ளப்படுகிறது! அது தன்னுடைய ‘மீறுதல்களை’ (வசனம் 5) அறிக்கை பண்ணினவனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம். அப்படியானால், நான் என்னுடைய மனதிலே அறிக்கைப்பண்ணாத பாவத்தை நான் வைத்திருந்தேனால், மற்றும் மாம்சத்தின் பெலத்திலே சாய்திருந்தேனானால் அல்லது தேவனுக்கு காத்திருப்பதற்குப் (சங் 62:5) பதிலாக என்னுடைய சகாக்களின் உதவியை நாடினேனானால் – நான் அவருடன் நெருக்கமான ஐக்கியத்தில் நடக்க வேண்டுமென்பதை அது முக்கியப்படுத்துவதால், நான் ஒருவரை விட்டுத் தூரமாயிருக்கையில் அவருடைய கண்களை காணமுடியாதாகையால், தேவன் தன்னுடைய கண்ணைவைத்து ஆலோசனை சொல்லுவார் என்பதை எண்ண எனக்கு எந்த உரிமையும் இல்லை.
தேவன் அவைகளை நமக்குக் கொடுத்திருப்பது, தன்னுடைய இரக்கமுள்ள வடிவமைப்புகளை தெரியப்படுத்துவதன் மூலம் தன்னுடைய அன்பை வெளிப்படுத்துவதுமட்டுமல்ல, நம்முடைய இருதயத்தை தேற்றவும் விசுவாசத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்பதும் ஒரு காரணம். தேவன் விரும்பியிருந்தால் தன்னுடைய நோக்கத்தை வெளிப்படுத்தாமலேயே அவருடைய வாக்குத்தத்தங்களை பொழிந்திருக்க முடியும். நமக்குத் தேவையான எல்லா இரக்கங்களையும் தன்னைப் பணையம் வைக்காமலேயே கர்த்தர் கொடுத்திருக்க முடியும். அப்படியிருந்திருந்தால் நாம் விசுவாசிகளாயிருக்க முடியாது; வாக்குத்தத்தம் இல்லாமல் விசுவாசம் என்பது ஊன்றுவதற்கு தரையில்லாமல் கால்கள் இருப்பதைப் போன்றது. நமக்கு எல்லாவற்றையும் தரும் பிதாவானவர் இரண்டுவிதங்களில் நாம் ஈவுகளை அனுபவிக்கும்படி திட்டமிட்டுள்ளார்: முதலில் விசுவாசத்தின் மூலம், இரண்டாவதாக கனி கொடுப்பதின் மூலம். அவர் ஞானமாக நம்முடைய இருதயத்தை காணப்படுகிற மற்றும் அழிந்துபோகிற காரியங்களை மறக்கச்செய்து, ஆவிக்குறிய மற்றும் நித்தியத்திற்குறியவைகளை நோக்கி உயர்த்தி ஈர்க்கிறார்.
ஒருவேளை வாக்குத்தத்தங்கள் இல்லாதிருந்தால் நமக்கு எந்த விசுவாசமும் இருந்திருக்காது என்பது மட்டுமல்ல, எந்த நம்பிக்கையுமே இல்லை. தேவன் நமக்கு கொடுப்பேன் என்று அறிவித்திருக்கிற காரியங்களை எதிர்பார்த்திருப்பதே நம்பிக்கையல்லவா? விசுவாசமானது ‘வாக்குத்தத்தம்’ என்ற வார்த்தையைப் பார்க்கிறது, நம்பிக்கையானது அதனுடைய செயலாக்கத்தைப் பார்க்கிறது. ஆகவே, இது ஆபிரகாமுடன் இருந்தது; ‘நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும் அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்பொழுது தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான்’ (ரோம 4:18-21). மோசேயிடமும் இது இப்படியே இருந்தது: ‘இனி வரும் பலன் மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்’ (எபி 11:26). பவுலிடமும் இது இப்படியே இருந்தது: ‘எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்குமென்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்’ (அப் 27:25). அன்பான வாசகரே, உங்களிடத்திலும் இது இப்படியே இருக்கிறதா? பொய்யுரையாதவரின் வாக்குத்ததங்களே உங்கள் எளிய இருதயத்தின் இளைப்பாறுமிடமாக இருக்கிறதா?
தேவன் ஆபிரகாமுக்கு ஒரு குமாரனை வாக்குப்பண்ணினார், ஆனால் அது நிறைவேற அவன் பல ஆண்டுகள் காத்திருந்தான். கர்த்தருடைய கிறிஸ்துவை அவன் காணுமுன்னே மரணத்தைக் காண்பதில்லை (லூக் 2:26) என்ற வாக்குத்தத்தத்தை அவன் பெற்றிருந்தான், ஆனாலும் அவன் கல்லரையில் ஒரு காலை வைக்கும் வரை அது அவனுக்கு நன்மையாக முடியவில்லை. ஜெபமாகிய விதைக்கும் நேரத்திற்கும், பதில் பெற்றுக்கொள்ளுதலாகிய அறுவடை நேரத்திற்கும் இடையில் அடிக்கடி நீண்ட மற்றும் கடினமான குளிர்காலமுண்டு. யோவான் நற்செய்தி புத்தகம் பதினேழாம் அதிகாரத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இயேசு தானே செய்த ஜெபத்திற்கு அவர் இன்னும் முழுமையான பதிலைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவருடைய ஜனங்களுக்குள்ள தேவனுடைய சிறந்த வாக்குத்தத்தங்களில் பல அவர்கள் மகிமையில் பிரவேசிக்கும்வரை செழுமையுடன் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. எல்லா நித்தியத்தையும் தன்னுடைய அதிகாரத்தில் கொண்டிருப்பவர் அவசரப்பட வேண்டியதில்லை. பொறுமை ‘அவளுடைய பரிபூரண வேலையை’ செய்யும்படியாக தேவன் நம்மை அடிக்கடி காத்திருக்க வைக்கிறார், ஆனாலும் நாம் அவரில் உள்ள நம்பிக்கையை விடாதிருப்போமாக. ‘குறித்த காலத்துக்கு தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும்; அது தாமதிப்பதில்லை’ (ஆப 2:3).
‘இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்’ (எபி 11:13). விசுவாசத்தின் முழு செயலும் இங்கே புரிந்துகொள்ளப்படுகிறது: அறிவு, நம்பிக்கை, அன்புடன் ஒட்டிக்கொள்ளுதல். ‘தூரத்திலே’ என்பது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைக் குறிக்கிறது; அவைகளை அவர்கள் மனதினால் ‘பார்த்தார்கள்’, நிழலுக்கு பின்னால் இருந்தவைகளை அறிந்து, தேவனுடைய ஞானத்தையும் நல்ல தன்மையையும் அவைகளில் கண்டுகொண்டார்கள். அவைகள் ‘பின்தொடரப்பட்டன’: அவர்கள் சந்தேகப்படவில்லை, அவைகளில் அவர்களுடைய பங்குபெறுதல் உறுதியளிக்கப்பட்டிருந்தது, அது அவர்களை ஏமாற்றாது என்பதை அறிந்திருந்தார்கள். ‘அணைத்துகொண்டு’ என்பது அவர்களுடைய மகிழ்ச்சியையும், அதற்குள்ள தங்களுடைய மதிப்பையும் மேலும் அன்பையும், இதயப்பூர்வமாக வரவேற்பதையும், உற்சாகப்படுத்துவதையும் மனநிர்ணயம் பண்ணிக்கொள்வதைக் குறிக்கிறது. வாக்குத்தத்தங்களே அவர்களுடைய அலைதல்களிலும், சோதனைகளிலும், பாடுகளிலும் அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு தேற்றமாகவும் தாபரமாகவும் இருந்தது.
தேவன் தன்னுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதை தாமதப்படுத்துவதன் மூலம் பலவகையான முடிவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. நம்முடைய விசுவாசம் நிரூபிக்கப்படுவது மட்டுமல்லாது, அதனுடைய உண்மைத்தன்மையும் தெளிவாகக் காணப்படுகிறது; பொறுமை அதிகரிக்கப்படுவது மட்டுமல்லாமல், நம்பிக்கை செயல்வடிவம் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது; தேவனுடைய சித்தத்திற்கு அடிபணிதலும் ஊக்குவிக்கப்படுகிறது. ‘மறக்கடிக்கப்படுதல் இன்னும் முற்றுபெறவில்லை: நாம் மீண்டு வரவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிற சொகுசை சுற்றியே நாம் இன்னும் வலம் வந்துகொண்டிருக்கிறோம். ஆபிரகாம் தன்னுடைய மகன் ஈசாக்கு பால் மறந்தபொழுது பெரிய விருந்துபண்ணினான்; ஒருவேளை நம்முடைய பரலோகத் தகப்பனும் நமக்கு அதையே செய்யலாம். பெருமையுள்ள இருதயமே உன்னைத் தாழ்மைப்படுத்து. உன்னுடைய விக்கிரங்களை விட்டுவிடு; நீ விரும்பி செய்பவைகளை மறந்துவிடு; தேவன் வாக்குப்பண்ணின சமாதானம் உனக்கு வரும்’ (சி. ஹெச். ஸ்பர்ஜன்).
முதலாவது, தேவனுடனான நமது நடவடிக்கைகளில்; அவருடைய சிம்மாசனத்தை நாம் நாடுவது, அவருடைய வாக்குத்தத்தங்களில் ஒன்றை கெஞ்சுவதற்காக இருக்க வேண்டும். அது நம்முடைய விசுவாசம் தங்கியிருப்பதற்கு அஸ்திபாரமாக அமைவது மட்டுமல்லாமல், நம்முடைய வேண்டுதல்களுக்கு அதுவே பொருளாகவும் அமைய வேண்டும். நம்முடைய வேண்டுதல் கேட்கப்படவேண்டுமானால், நாம் தேவனுடைய சித்தத்தின்படி கேட்க வேண்டும், அவருடைய சித்தமானது, அவர் நம்மீது பொழிந்தருளுவேன் என்று சொல்லியிருக்கிற நற்காரியங்களின் மீது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் அவர் வாக்குபண்ணினவைகளைப் பிடித்துக்கொண்டவர்களாய், அவருக்கு முன்னால் அவைகளை விரித்துக்காட்டி, ‘தேவரீர் சொன்னபடியே செய்தருளும்’ (2சாமு 7:25) என்று சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். ஆதியாகமம் 32:12ல் உள்ள வாக்குத்தத்தங்களை யாக்கோபு எப்படி வேண்டுதல் செய்தான் என்பதை கவனியுங்கள்; யாத்திராகமம் 32:13ல் மோசேயையும், சங்கீதம் 119:58ல் தாவீதையும், 1இராஜாக்கள் 8:25ல் சாலமோனையும் கவனியுங்கள்; என்னுடைய கிறிஸ்தவ வாசகரே, நீங்களும் அப்படியே செய்யுங்கள். இரண்டாவதாக, இந்த உலகத்தில் நாம் வாழ்கின்ற வாழ்க்கையில்; எபிரேயர் 11:13ல் விசுவாச வீரர்கள் அறிந்திருந்ததையும், நம்பினதையும், தெய்வீக வாக்குத்தத்தங்களை அவர்கள் தழுவிக்கொண்டதையும் மாத்திரம் நாம் வாசிக்கவில்லை, அவர்களில் அது ஏற்படுத்தின விளைவுகளும் நமக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது: ‘அவர்கள் தங்களை இந்த உலகத்திற்கு அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு’, அதன்மூலம் தங்கள் விசுவாசத்தை பலர் அறிய சூளுரைத்தார்கள். மேலும் அவர்கள் (தங்கள் நடக்கையின் மூலம் வெளிக்காட்டி) அவர்களின் ஆர்வம் இந்த உலகத்தின் காரியங்களின் மீது இல்லை என்பதை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்கள் குறித்துக்கொண்டிருந்த வாக்குத்தத்தங்களிலேயே அவர்களைத் திருப்திபடுத்தும் பங்கு இருந்தது. ஒருவனுடைய பொக்கிஷம் எங்கேயோ, அங்கே அவனுடைய இருதயமும் இருப்பதால், அவர்களுடைய இருதயங்கள் பரலோகத்துக்குறிய காரியங்களில் வைக்கப்பட்டிருந்தது.
‘இப்படிபட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடு பூரணமாக்கக் கடவோம்’ (2கொரி 7:1); இந்த விளைவையே இது நம்மில் ஏற்படுத்த வேண்டும், விசுவாசம் அவைகளையே பிடித்துக்கொண்டிருக்குமானால், நிச்சயமாக ஏற்படுத்தும். ‘இச்சையினால் உலத்துக்குண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது’ (2பேது 1:4). இப்பொழுது நற்செய்தியும் விலைமதிப்பற்ற வாக்குத்தத்தங்களும், கிருபையாக பொழிந்தருளப்பட்டு வல்லமையாக செயல்படுத்தப்படும்பொழுது, அவைகள் இருதய சுத்தத்திலும் நடவடிக்கைகளிலும் தாக்கம்கொள்ளுகிறது, அவபக்தியையும் உலக இச்சையையும் விட்டுவிடவும், தெளிந்த புத்தியுள்ளவர்களாக, நீதியுள்ள மற்றும் தேவபத்தியுள்ள வாழ்க்கை வாழப் போதிக்கிறது. தெய்வீக தாக்கத்தின் மூலமாக மனிதனை உள்ளார்ந்த விதத்தில் தெய்வீகத் தன்மையில் பங்கடையச்செய்து, வெளிப்பிரகாரமாக இவ்வுலத்தில் இருக்கும் கேட்டிற்கும் தீயவைகளிலிருந்தும் விலகி ஒதுங்கியிருக்கச் செய்வதே நற்செய்தி வாக்குத்தத்தங்களின் வல்லமையான விளைவுகளாகும்.
தேவபக்தியற்றவர்கள் ஓயாமல் சந்தோஷத்தை தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் கண்டுபிடிப்பதில்லை: அதைத் தொடர்வதிலே அவர்கள் தீவிரமாய் செயல்பட்டு சோர்ந்து போகிறார்கள், ஆனால் அவைகளெல்லாம் வீணாண முயற்சியே. அவர்களுடைய இருதயங்கள் தேவனைவிட்டு திரும்பியிருப்பதால், சந்தோஷத்தை அது இல்லாத கீழான இடத்தை நோக்கித் தேடுகிறார்கள்; அதன் பொருளை (தேவனை) நிராகரித்துவிட்டு, அதனால் கேலி பண்ணப்படும்படியாக நிழலை நோக்கி சிரத்தையுடன் தேடுகிறார்கள். கிறிஸ்துவில் தேவன் மாத்திரமே பாவிகளை மகிழ்ச்சியாக்க முடியுமென்பது பரலோகத்தின் அநாதி கட்டளையாகும்; ஆனால் இதை அவர்கள் நம்புவதில்லை, ஆகவே எங்கே சிறந்த சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று விசாரித்துக்கொண்டே ஒரு சிருஷ்டியிடமிருந்து மற்றுமொரு சிருஷ்டியை நோக்கி செல்கிறார்கள், ஒரு உடைந்த நீரூற்றிடமிருந்து மற்றொன்டிடம் செல்கிறார்கள். என்னிலே நீங்கள் அதைக் கண்டுகொள்ளலாம் என்று அவர்களை ஈர்க்கும் ஒவ்வொரு உலகப் பொருளும் சொல்கிறது, ஆனால் விரைவில் அது அவர்களை ஏமாற்றிவிடுகிறது. ஆனாலும் இன்றும் புதிதாக சந்தோஷத்தைத் தேடிக்கொண்டு நேற்று அவர்களை ஏமாற்றிய அதே சிருஷ்டியிடம் செல்கிறார்கள். ஒரு சொகுசான சிருஷ்டியிடம் பல மாதிரி பரிசோதனைகளுக்குப்பிறகு அவர்கள் இது வெறுமையே என்பதைக் கண்டுகொண்டால், ‘இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்’ (யோவா 4:13) என்ற நம்முடைய தேவனின் வார்த்தையை சரிபார்க்கும் விதமாக, அவர்கள் மற்றொரு சிருஷ்டியிடம் செல்கிறார்கள்.
இப்பொழுது மற்றுமொரு உச்ச நிலைக்கு நாம் செல்கிறோம்: சந்தோஷமாயிருப்பது பாவம் என்று கருதுகிற சில கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இதைக் கேட்கும்பொழுது நம்முடைய வாசகர்களில் பலர் ஆச்சரியப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை, அந்த குறைந்த பாக்கியமுள்ளவர்களுடன் நாம் செயல்படும் அதேவேளையில், அவர்களாவது (நம்முடைய வாசகர்களாவது) சூரியஒளிமிக்க சூழ்நிலைக்கு வந்திருப்பதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கட்டும். வெளிப்படையாக பதியவைப்பதற்குப்பதிலாக, பெருவாரியாக உதாரணங்கள் மூலமும், சிலவற்றை சம்மந்தப்படுத்திக்காட்டியும், அவர்கள் எப்பொழுதும் வெளிச்சம் குறைந்த இடத்திலேயே இருப்பது அவர்கள் கடமையென்று ஒரு சிலர் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். சந்தோஷத்தின் உணர்வுகள் ஒளியின் தூதனைப்போல காணப்படும் சாத்தானால் ஏற்படுத்தப்பட்டவையென்று அவர்கள் கற்பனை செய்து கொள்ளுகிறார்கள். இந்த பாவம் நிறைந்த உலகத்தினுள் நாம் இருப்பதால் மகிழ்ச்சியாயிருப்பதே துன்மார்க்கமான ஒன்றென்று அவர்கள் முடிவுகட்டிவிடுகிறார்கள். பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டது என்றறிந்து மகிழ்ச்சியாயிருப்பது ஒரு துணிகரம் என்று அவர்கள் நினைக்கிறார்கள், மேலும் அப்படி மகிழ்ச்சியாயிருக்கும் இளம் கிறிஸ்தவர்களிடம், நீங்கள் மீண்டும் பாவக் குலத்தில் இடறிவிழ அதிக காலம் செல்லாதென்றும் அவர்கள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட எல்லாரையும் இந்த அதிகாரத்தின் பின்வரும் பகுதியை ஜெபத்துடன் அவர்கள் எண்ண ஓட்டத்தில் சிந்தித்துப் பார்க்கும்படி மென்மையுடன் வேண்டுகிறோம்.
‘எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்’ (1தெச 5:16). தேவன் நம்மை என்ன செய்ய கட்டளையிட்டிருக்கிறாரோ அதைச்செய்வது நிச்சயமாக பாதுகாப்பற்ற ஒன்றாக இருக்க முடியாது. சந்தோஷமாயிருப்பதற்கு தேவன் தடைவிதிப்பதில்லை. இல்லை, சாத்தானே நாம் நம்முடைய சுரமண்டலத்தை (மகிழ்ச்சியின் கீதத்தை) கீழே வைக்கச்செய்யப் போராடுகிறான். ‘கர்த்தருக்குள் துக்கமாயிருங்கள்: துக்கமாயிருங்களென்று மறுபடியும் சொல்லுகிறேன்’ என்று கட்டளையிடும் எந்தக் குறிப்பும் வேதவாக்கியங்களில் இல்லை; ஆனால், ‘நீதிமான்களே கர்த்தருக்குள் களிகூறுங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்’ (சங் 33:1) என்று உற்சாகப்படுத்தும் புத்திமதி இருக்கிறது. வாசகரே, நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவரானால் (இத்தருணத்தில் வேதவாக்கியங்களினால் உங்களை பரிசோதித்து இக்கருத்தை உறுதிசெய்துகொண்டிருக்க வேண்டும்), கிறிஸ்து உங்களுடையவர், அவருக்குள் இருக்கிற எல்லாம் உங்களுக்குள் இருக்கிறது. அவர் உங்களை உற்சாகப்படுத்தி கட்டளையிடுகிறார், ‘சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள்; பூர்த்தியாய்க் குடியுங்கள்’ (உன் 5:1): அவருடைய அன்பின் விருந்துக்கு எதிராக நீங்கள் செய்யகூடிய ஒரே பாவம் என்னவென்றால் மிகக் குறைவான அளவில் அதில் நீங்கள் பங்குபெறுவதே. ‘உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்’ (ஏசா 55:1) என்பது ஏற்கனவே பரலோகத்திலிருப்பவர்களுக்காக சொல்லப்பட்டதல்ல, மாறாக தற்பொழுது பூமியிலிருக்கும் பரிசுத்தர்களுக்கே சொல்லப்பட்டது. இது எங்களை இப்படியாகச் சொல்லச் செய்கிறது:
‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்’ (பிலி 4:4). இங்கே சந்தோஷமாயிருப்பதை ஒரு விசுவாசி தனிப்பட்டவிதத்தில், தற்காலத்தில் மற்றும் நிரந்தரமாக செய்யவேண்டியக் கடமையாகப் பரிசுத்த ஆவியானவர் பேசுகிறார். நாம் சந்தோஷமாயிருக்க வேண்டுமா அல்லது கவலையாயிருக்க வேண்டுமா என்ற ஒரு தெரிந்தெடுத்தலை கர்த்தர் நமக்கு கொடுக்கவில்லை, ஆனால் மகிழ்ச்சியாயிருப்பதைக் கடமையாக்கியிருக்கிறார். நாம் சந்தோஷமாயில்லாதிருப்பது, செய்ய வேண்டிய ஒன்றை நாம் செய்யாமலிருப்பதால் செய்யும் பாவமாகும் (Sin of omission). அடுத்தமுறை நீங்கள் ஒரு பிரகாசமானக் கிறிஸ்தவனை சந்திக்கும்பொழுது, அவனைக் கடிந்துகொள்ளாதீர்கள், சந்தேகக் கோட்டைக்குள் வாழும் நீங்கள் உங்களையே கடிந்துகொள்ளுங்கள்; தெய்வீக ஊற்றாகிய அவனது உற்சாகத்தை கேள்விக் கேட்பதற்கு நீங்கள் ஆயத்தமாகுவதற்குப்பதிலாக, உங்களுடைய பரிதாபத் தன்மையை நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்.
நாங்கள் இங்கே விரும்பிக் கேட்டுக்கொண்டிருப்பது மாம்சபிரகாரமான மகிழ்ச்சியல்ல, அதாவது மாம்சத்தின் மூலம் வரும் சந்தோஷத்தை நாங்கள் அர்த்தப்படுத்தவில்லை. பூமிக்குறிய ஐஸ்வரியத்திலிருந்து சந்தோஷத்தைத் தேடுவது பயனற்றது, அது அடிக்கடி தனக்கென்று இறக்கைகளை ஏற்படுத்திக்கொண்டு பறந்துவிடுகிறது. சிலர் தங்களுடைய குடும்ப வட்டங்களில் சந்தோஷத்தைத் தேடுகிறார்கள், அது அதிகபட்சம் சில வருடங்கள் மட்டுமே நீடிக்கிறது. இல்லை, நாம் ‘எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கவேண்டுமென்றால்’ அது எப்பொழுதுமே நிலைநிற்கிற பொருளில் தான் இருக்க முடியும். பொருளாதாரம் சம்மந்தப்பட்ட மகிழ்ச்சியையும் நாங்கள் குறிப்பிடவில்லை. பைத்தியக்காரர் போல் நடந்துகொள்ளும்பொழுது மாத்திரமே உற்சாகமூட்டும் மகிழ்ச்சியுடன் காணப்படும் சிலர் இருக்கிறார்கள், அதின் விளைவோ பயங்கரமானது. இல்லை, இது புத்திக்கூர்மையாக, நிலையாக ஒரு இருதயம் தேவனுக்குள் மகிழுவது. தேவனுடைய ஒவ்வொரு குணாதிசயமும், விசுவாசத்துடன் சிந்திக்கப்படும்பொழுது, அது இருதயத்தைக் கீதம் பாடச்செய்யும். நற்செய்தியின் ஒவ்வொரு போதனையும் உண்மையாகப் புரிந்துகொள்ளப்படும்பொழுது, அது மகிழ்ச்சியையும் துதியையும் முன்னின்று அழைக்கும்.
சந்தோஷமென்பது கிறிஸ்தவக் கடமைகளில் ஒன்று. ஒருவேளை இதை வாசிப்பவர் வியப்படைய ஆயத்தமாகலாம், என்னுடைய உணர்வுகளாகிய சந்தோஷமும் கவலையும் என்னுடையக் கட்டுப்பாட்டில் இல்லை; சூழ்நிலைகள் உத்தரவிடுவதால் சந்தோஷமாயிருப்பதற்கோ அல்லது கவலையாயிருப்பதற்கோ எனக்கு நானே உதவிசெய்துக்கொள்ள முடியாதென்று சொல்லலாம். ஆனால் நாங்கள் மறுபடியும் சொல்கிறோம், ‘கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்’ என்பது தெய்வீகக் கட்டளை, ஆகவே அதற்குப் பெருமளவில் கீழ்ப்படிய வேண்டியது ஒருவனுடைய சொந்த சக்திக்குட்பட்டதாயிருக்கிறது. என்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டியதற்கு நானே பொறுப்பு. கவலையான நினைவுகள் இருக்கும்பட்சத்தில் கவலையாக இருப்பதில் எனக்கு நானே உதவிசெய்துகொள்ள முடியாதென்பது உண்மை, ஆனால் என்னுடைய மனம் அதிலே வாழ்வதை நான் தடுத்து நிறுத்த முடியும். என்னுடைய இளைப்பாறுதலுக்காக நான் இருதயத்தைக் கர்த்தரிடத்தில் ஊற்ற முடியும், என் பாரத்தை அவர்மேல் போட முடியும். அவருடைய நல்லத் தன்மையையும், நல்ல வாக்குத்தத்தங்களையும், எனக்காகக் காத்திருக்கும் மகிமையான எதிர்காலத்தையும் தியானிக்கும்படியாக அவருடைய கிருபையை நான் நாட முடியும். நான் வெளிச்சத்திலேபோய் நிற்க வேண்டுமா அல்லது நிழலிலே மறைந்துகொள்ள வேண்டுமா என்பதை நானே தீர்மானிக்க வேண்டும். கர்த்தருக்குள் சந்தோஷமாயில்லாதிருப்பதென்பது துர்துஷ்டத்தைவிட மோசமானது, இது அறிக்கைசெய்து விட்டுவிட வேண்டிய ஒரு தவறு.
1யோவான் 1: 3,4ம் வசனங்களில் அந்த ரகசியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது: ‘எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்’. தேவனுடனான நம்முடைய ஐக்கியத்தின் குறைந்ததன்மையையும், அதனுடைய குறுகியத்தன்மையையும் நாம் பார்க்கும்பொழுது, ஒப்பீட்டு அளவில் பல கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாயிருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ‘ஓ, மகிழ்ச்சியின் நாள் என் பங்கை உம்மீது வைத்தது, என் இரட்சகா, என் தேவனே! இந்த மின்னும் இருதயம் மகிழ்ச்சியாயிருக்கட்டும், வருகையை உலகெங்கும் சொல்லட்டும்’ என்று பலமுறை நாம் பாடுகிறோம். ஆம், ஆனால் இந்த மகிழ்ச்சி தொடர வேண்டுமானால், கிறிஸ்துவானவர் தொடர்ச்சியாகவும் நிலையாகவும் நம்முடைய மனதிலும், இருதயத்திலும் வைக்கப்பட வேண்டியவராயிருக்கிறார். எங்கே மிகுந்த விசுவாசமும் அதைத் தொடர்ந்த அன்பும் இருக்கிறதோ அங்கு மாத்திரமே மிகுந்த மகிழ்ச்சியும் இருக்கும்.
‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்’. நாம் ‘எப்பொழுதுமே’ மகிழ்ச்சியாயிருக்கக்கூடிய வேறு எந்த ஒரு பொருளும் இல்லை. மற்ற எல்லாம் மாறக்கூடியது நிலையில்லாதது. இன்று நம்மை மகிழ்வூட்டும் ஒன்று நாளை நம்மை துக்கப்படுத்தலாம். ஆனால் செழுமையான காலங்களைப்போல, வறட்சியான காலங்களிலும் மகிழ்ந்திருக்கும்படி, கர்த்தர் எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறார். இதற்கு வலுசேர்க்கும்வகையில் அதற்கு அடுத்த வசனம் சொல்கிறது, ‘உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக, கர்த்தர் சமீபமாயிருக்கிறார்’ (பிலி 4:5). எல்லா வெளிப்பிரகாரமான காரியங்களிலும் சுயக்கட்டுப்பாட்டுடன் இருங்கள்; அவைகள் உங்களை அதிகம் மகிழ்வூட்டுவதாகத் தோன்றும்பொழுது அதில் இழுப்புண்டு விடாதீர்கள், மகிழ்ச்சியாக்காதபொழுது துவண்டுவிடாதீர்கள். உலகம் உங்களிடத்தில் புன்னகை பூக்கும்பொழுது உச்சத்திற்கு செல்லாதீர்கள், அது உங்களை முரைத்துப் பார்க்கும்பொழுது சோர்ந்துபோகாதிருங்கள். வெளிப்பிரகாரமான சொகுசுகளுடன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்: தேவனே ‘சமீபத்திலிருக்கும்பொழுது’ நாம் ஏன் அவைகளுடன் எப்பொழுதும் நிரம்பியிருக்க வேண்டும்? துன்பங்கள் கோரமாக இருந்தாலும், உலகப்பிரகாரமான இழப்பு பெரிதாக இருந்தாலும், ‘தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்’ (சங் 46:1) – தங்களை அவர்மேல் ஊற்றிவிடுபவர்களை ஆதரிக்கவும் தாங்கவும் அவர் ஆயத்தமாயிருக்கிறார். அவர் உங்களை விசாரிக்கிரவரானபடியால், ‘நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாதிருங்கள்’ (பிலி 4:6). உலகபிரகாரமானவைகள் பயமுறுத்தும் கவலைகளை உள்ளடக்கியது, ஒரு கிறிஸ்தவன் அப்படியிருக்க முடியாது.
‘என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்’ (யோவா 15:11). கிறிஸ்துவின் இந்த மதிப்புமிக்க வார்த்தைகள் மனதிலே சிந்திக்கப்பட்டு இருதயத்தில் நம்பப்படும்பொழுது அவை சந்தோஷத்தைத்தவிர வேறொன்றையும் பிறப்பிக்கமுடியாது. கிறிஸ்துவில் இருப்பதைப்போன்று ஒரு மகிழ்ச்சியான இருதயமானது சத்தியத்தை அறிகிற அறிவின் அன்பிலிருந்து வருகிறது. ‘உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கும் மகிழ்ச்சியுமாயிருந்தது’ (எரே 15:16). ஆம், கர்த்தருடைய வார்த்தைகளை போஷித்து, உண்பதன்மூலமே ஆத்துமா கொழுமையாகிறது, நம்மால் அவரை நோக்கிப் பாடவும் இருதயத்தில் கீதஞ்சொல்லவும் முடிகிறது.
‘அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன்’ (சங் 43:4). ஸ்பர்ஜன் அவர்கள் நன்றாய் சொன்னதுபோல, பலிபீடத்தின் அடையாளமாயிருக்கும் கிறிஸ்துவண்டை, எத்தனை உற்சாகத்துடன் ஒரு கிறிஸ்தவன் நெருங்க வேண்டும்! தெளிவான வெளிச்சம் மிகப்பெரும் ஆழமான ஆசையைத் தூண்ட வேண்டும். சங்கீதக்காரன் புறஜாதிகளின் சம்பிரதாயத்தை நம்பாதவனாகையால், அவன் விரும்பியது வெறும் பலிபீடத்தையல்ல: அவனுடைய ஆத்துமா ஆவிக்குறிய ஐக்கியத்தையும், தன்னுடைய அந்த செயலின் மூலம் தேவனுடைய ஐக்கியத்தையே அவன் நாடினான். தேவன் இல்லாவிட்டால் அந்த ஆராதனையில் என்ன கடமை இருக்கிறது? வெறுமையான ஓடுகளையும் பதரையும்தவிர உண்மையில் அதில் என்ன இருக்கிறது? பரிசுத்த வெளிப்பாடுகளுடன் தாவீது தன்னுடைய ஆண்டவரை போற்றுவதை கவனியுங்கள்! அது அவனுடைய மகிழ்ச்சிமட்டுமல்ல, ஆனந்த மகிழ்ச்சி; மகிழ்ச்சியின் ஊற்றல்ல, மகிழ்ச்சியைத் தருபவரல்ல அல்லது மகிழ்ச்சியைக் கொண்டிருப்பவரல்ல; அவரே அந்த மகிழ்ச்சி! “என்னுடைய மகிழ்ச்சியின் சந்தோஷம்” அதாவது, ஆத்துமாவே, அந்த முக்கியமானதே, என்னுடைய சந்தோஷத்தின் பொருள் என்பதே அதன் அடிக்குறிப்பு.
‘அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒளிவமரத்தின் பலன் அற்றுபோனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூறுவேன்’ (ஆப 3: 17, 18). இது உலகப்பிரகாரமானது அறியாத ஒன்று; ஐயோ! இந்த அனுபவத்திற்கு கிறிஸ்தவர்களென்று சொல்லிக்கொள்ளும் பலரும் அந்நியராகவே இருக்கிறார்கள்! ஆவிக்குறிய மற்றும் நிலைத்திருக்கும் மகிழ்ச்சியின் ஊற்றானது தேவனில் புறப்படுகிறது; அவரிடத்திலிருந்து அது முன்னோக்கிப் பாய்கிறது. பழைய ஏற்பாட்டு திருச்சபை, ‘எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது’ (சங் 87:7) என்று சொன்னபொழுது இது அவளால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த இரகசியம் உண்மையாய் போதிக்கப்பட்டிருக்கிற ஆத்துமா மகிழ்ச்சியானது!
பறவைக்கு அதன் இறக்கைகள்போல, ஒரு ஆத்துமாவிற்கு மகிழ்ச்சியிருக்கிறது, அது நம்மை இந்த உலகத்தின் காரியங்களைவிட்டு உயரே எழும்பச்செய்கிறது. இது நெகேமியா 8:10ல் வெளிப்படையாகக் காண்பிக்கப்பட்டுள்ளது: ‘கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன்’. இஸ்ரவேலின் சரித்திரத்தில் நெகேமியாவின் காலம் ஒரு திருப்புமுனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சிறிய கூட்டம் பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்டு பாலஸ்தீனத்திற்கு திரும்பியிருந்தது. சிறையாகக் கொண்டுபோகப்பட்டவர்களால் நீண்டகாலமாக மறக்கப்பட்டிருந்த நியாயப்பிரமாணமானது, இப்பொழுது மறுபடியும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள காணியாட்சியின் சட்டமாக நிலைநாட்டப்பட வேண்டியதாயிருந்தது. அச்சமயத்தில் கடந்தகாலத்தின் அவர்களுடைய பல பாவங்கள் நினைவுக்கு வந்தது, தெய்வீக ஆராதனையயும் தெய்வீக நியாயப்பிரமாணத்தையும் தங்கள் நடுவில் கொண்டவர்களாய் புதிய தேசமாக உருவெடுத்திருப்பதில், அவர்களுடைய கண்ணீர் இயற்கைக்குமாறாக அவர்களுடைய நன்றிதலுடன் கலந்தது. ஜனங்களுடைய ஆவியின் வல்லமை குறைய ஆரம்பித்தால் அவர்களால் தற்பொழுதைய கடினமான நிலமையை எதிர்கொள்ள முடியாதென்பதை நன்றாக அறிந்திருந்த அவர்களின் தலைவன் அவர்களிடம்: ‘நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன் என்றான்’.
பாவ அறிக்கையும், பாவத்திற்காக மனஸ்தாபப்படுதலும் முக்கியமான ஒன்று, அவைகள் இல்லாமல் தேவனுடனான ஐக்கியத்தைத் தொடர முடியாது. ஆனாலும், உண்மையான மனந்திரும்புதல் ஏற்படும்பொழுது, தேவனுடன் காரியங்கள் சரிசெய்யப்படும்பொழுது, நாம் ‘பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாட’ (பிலி 3:13) வேண்டியவர்களாயிருக்கிறோம். நம்முடைய இருதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதால் நாம் உற்சாகத்துடன் முன்னோக்கிச் செல்ல முடியும். ஒருவன், தனக்கு அன்பானர் இறந்திருக்கும்பொழுது, அந்த இடத்தை நெருங்குவது அவனுக்கு எத்தனை வேதனைத் தருவதாக இருக்கிறது! அதே மனிதன் தன்னுடைய மணவாட்டியை சந்திக்கப் புறப்படும்பொழுது எத்தனை உற்சாகத்துடன் செல்கிறான்! வாழ்க்கையின் போராட்டங்களுக்கு புலம்பல்கள் ஏற்புடையதல்ல. எங்கே நம்பிக்கை இல்லையோ அங்கே அவர்கள் கீழ்ப்படிவதற்கும் எந்த பெலனும் இல்லை. அங்கே சந்தோஷம் இல்லையென்றால், அங்கே ஆராதனையும் இருக்க முடியாது.
என் பிரியமான வாசகரே, செய்யப்படவேண்டிய வேலைகள் பல இருக்கின்றன, மற்றவர்களுக்குத் தேவைப்படுகிற சேவை செய்யப்படவேண்டியதாயிருக்கிறது, மேற்கொண்டு வர வேண்டிய சோதனைகள் உள்ளன, போர்செய்ய வேண்டிய போராட்டங்கள் உண்டு; நம்முடைய இருதயங்கள் கர்த்தருக்குள் மகிழ்ந்துகொண்டிருப்பதால் நாம் அவைகளுடன் சோதனை அடிப்படையிலேயே இணைந்துள்ளோம். நம்முடைய ஆத்துமாக்கள் கிறிஸ்துவுக்குள் இளைப்பாறிக்கொண்டிருக்குமென்றால், நம்முடைய இருதயங்கள் கவலையில்லா மகிழ்ச்சியில் நிறைந்திருக்குமென்றால், நம்முடைய வேலை எளிதாயிருக்கும், கடமைகள் இன்பமாயிருக்கும், கவலைகள் தாங்கக்கூடியதாயிருக்கும், பொறுமை சாத்தியமாகும். கடந்தகால தோல்விகளின் சோகமான நினைவுகளோ அல்லது உற்சாகமான எதிர்காலத் தீர்மானங்களோ நம்மை இழுத்துச் சென்றுவிடாது. கரங்கள் வேகமாக அடிக்க வேண்டுமென்றால், அது அதை தாங்ககூடிய இருதயத்தையே அடிக்க வேண்டும். இரட்சகரைப்பற்றி இப்படியாக பதிவுசெய்யப்பட்டுள்ளது, ‘அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணவில்லை’ (எபி 12:2).
விசுவாசமே மகிழ்ச்சியின் ஊற்று: ‘நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக’ (ரோம 15:13). நம்மிடத்திலிருந்து சிலவற்றை எடுத்துக்கொள்ளுவதினாலும், நமக்கு சிலவற்றை கொண்டுவருவதினாலும், ஒரு கிறிஸ்தவனின் இருதயத்தில் அமைதியையும் நிரந்தரமான பளபளப்பையும் கொடுக்கும் ஒரு அதிசயமான ஏற்பாடு நற்செய்தியில் இருக்கிறது. குத்திக்கொண்டிருக்கும் மனசாட்சிக்கு சமாதானத்தைச் சொல்லி குற்றசுமையை அது அகற்றுகிறது. ஒரு ஆத்துமா ஆக்கினைத்தீர்ப்பிற்கு கீழே இருக்கையில் இருந்த மரண திகிலையும் தேவன் மீதான பயத்தையும் இது அகற்றுகிறது. இது நமக்கு தேவனையே நம்முடைய இருதயத்தின் பங்காகவும், நம்முடைய ஐக்கியத்தின் பொருளாகவும் தருகிறது. ஆத்துமா தேவனில் இளைப்பாறுவதால் நற்செய்தி சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் தனிப்பட்டவிதத்திலே அப்பியாசப்படுத்திக்கொள்வதன் மூலமே இந்த ஆசீர்வாதங்கள் நமக்கு சொந்தமாகின்றன. விசுவாசம் அவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும், அது அப்படி செய்யும்பொழுது இருதயம் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிறைந்திருக்கும். தொடர்ச்சியான சந்தோஷத்தின் ரகசியம், நாம் ஆரம்பித்தபொழுது (இரட்சிக்கப்பட்டபொழுது) இருந்தபடியே அது தொடர குழாயை திறந்தே வைத்திருக்க வேண்டும். அவிசுவாசமே அந்த குழாயை அடைக்கிறது. ஒரு வெப்பமானியின் பாதரசக்குமிழியை சுற்றி வெப்பம் இல்லாதிருந்தால், பாதரச அளவு மிகக்குறைந்த டிகிரியிலேயே இருக்கும் என்பதில் வியப்பேதுமில்லை. விசுவாசம் பெலவீனமாயிருக்கையில் சந்தோஷம் வலிமையாயிருக்கமுடியாது. நற்செய்தியின் விலைமதிப்பில்லாத் தன்மையை புதிதாய் உணர்ந்துகொள்ளும்படியும், அதன் ஆசீர்வதிக்கப்பட்டவைகளை புதிதாக அப்பியாசப்படுத்திக்கொள்ளும்படிக்கும் நாம் தினமும் ஜெபிக்க வேண்டும்; அப்பொழுது நம்மில் ஒரு புதுப்பிக்கப்பட்ட சந்தோஷம் இருக்கும்.
‘பரிசுத்த ஆவியில் சந்தோஷம்’ என்பது இயற்கையாக ஆவியில் உற்சாகமாயிருப்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக வேறுபட்டது. இது நம்முடைய சரீரத்திலும் இருதயத்திலும் வாசம்செய்யும் தேற்றரவாளனின் தயாரிப்பு, கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்தி, மன்னிப்பிற்கும் சுத்தமாகுதலுக்கும் தேவையான எல்லா பதில்களையும் அளித்து, அதன்மூலம் தேவனுடன் சமாதானம் ஆகும்படிச் செய்கிறது; கிறிஸ்துவை நம்மில் அமையச்செய்து, அதனால் அவர் நம்முடைய ஆத்துமாவை ஆளுகைச் செய்து, அவருடையக் கட்டுப்பாட்டிற்கு நம்மைக் கீழ்ப்படுத்துகிறார். ‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்’ என்ற கட்டளை இருப்பதினாலே, நாம் சந்தோஷத்தை விட்டு விலகி இருப்பதற்கான எந்த ஒரு சோதனையோ, பாடுகளின் சூழ்நிலையோ இல்லை. இந்தக் கட்டளையைக் கொடுத்தவர் நம்முடைய வாழ்க்கையின் எல்லா இருண்ட பக்கங்களையும், எப்பக்கத்திலிருந்தும் நம்மை நெருக்கும் பாவங்களையும், கவலைகளையும், தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க நாம் செல்ல வேண்டிய ‘மகா உபத்திரவத்தையும்’ அறிந்து வைத்திருக்கிறார். இயற்கையான களியாட்டு இந்த உலகத்தின் கவலைகளை மறக்கச்செய்கிறது; இது வாழ்க்கையின் கஷ்டங்களிலே விரைவில் தளர்ந்துவிடுகிறது: நண்பர்களை இழந்தாலோ அல்லது உடல் ஆரோக்கியத்தை இழந்தாலோ இது மறைந்துவிடுகிறது. ஆனால் நாங்கள் விளக்கிக்கொண்டிருக்கும் சந்தோஷமானது எந்த ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அமைப்பிற்கோ அல்லது குணாதிசயத்திற்கோ உட்பட்டதல்ல; நம்முடைய மாறும் மனநிலையையோ அல்லது அதிர்ஷ்டத்தையோ பொறுத்து ஏறி இறங்குவதும் அல்ல.
இயற்கையானது அதன் தன்மையை தன்னுடைய பொருளிலே வெளிப்படுத்தலாம், இயேசுவும் லாசருவின் கல்லரையருகே கண்ணீர் விட்டார். ஆகிலும், அவைகள் பவுலுடன் இணைந்து வியப்படையலாம், ‘துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறோம்’ (2கொரி 6:10). ஒருவேளை கிறிஸ்தவனின் மீது அதிக பொறுப்புகள் ஏற்றப்படலாம், அவனுடைய வாழ்க்கை தொடர்ச்சியான பின்னடைவுகளைக் கொண்டிருக்கலாம், அவனுடையத் திட்டங்கள் முறியடிக்கப்பட்டு நம்பிக்கை தகர்ந்துபோயிக்கலாம், அவனுக்கு இந்த உலக வாழ்க்கையையும் அதின் உற்சாகத்தையும் இனிமையையும் கொடுத்த அன்புக்குறியவர்கள் மரணத்திற்கு மிக அருகில் இருக்கலாம், ஆனாலும், அவனுடைய எல்லா ஏமாற்றங்கள் மற்றும் கவலைகளுக்கு மத்தியிலும், அவனுடைய தேவன் அவன் ‘சந்தோஷமாயிருக்க’ வேண்டுமென்று கட்டளையிடுகிறார். பிலிப்பி பட்டணத்தில் சிறையிலிருந்த அப்போஸ்தரைக் கவனியுங்கள், உட்காவலறையிலே, கால்கள் தொழுமரத்தில் மாட்டியிருக்கையில், பயங்கரமாக அடித்ததினாலே அவர்கள் உடலிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? புகார் சொல்லிக்கொண்டும் முரைத்துக்கொண்டும் இருந்தார்களா? இந்தஅளவு மோசமாக நடத்தப்படும்படிக்கு நாம் என்ன செய்துவிட்டோமென்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டிருந்தார்களா? இல்லை! ‘நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத்துதித்துப் பாடிக்கொண்டிருத்தார்கள்’ (அப் 16:25). அவர்களுடைய வாழ்க்கையிலே பாவம் இல்லை, கீழ்ப்படிந்து நடந்தார்கள், ஆகவே பரிசுத்த ஆவியானவர் தங்குதடையின்றி கிறிஸ்துவின் காரியங்களை எடுத்து அவர்களுடைய இருதயங்களுக்கு காட்டினார், ஆகவே அவைகள் வழிந்து ஓடும்படி நிரம்பியிருந்தது. நாம் நம்முடைய சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தக்கூடாது.
கிறிஸ்து இருதயத்தில் பிரதானமாக இருக்கும்பொழுது, சந்தோஷம் அதை நிரப்புகிறது. நம்முடைய ஒவ்வொரு விருப்பத்திற்கும் அவர் தேவனாயும், ஒவ்வொரு நோக்கத்திற்கும் மூலமாயும் (Source), எல்லா இச்சைகளையும் அடக்கியாள்பவராகவும் இருக்கும்பொழுது, இருதயத்தை சந்தோஷம் நிரப்பும், மேலும் உதடுகளிலிருந்து துதி எழும்பும். இவைகளைக் கொண்டிருப்பது நாளின் ஒவ்வொரு மணியிலேயும் சிலுவையை சுமந்து கொண்டிருப்பதை உள்ளடக்கியது; நாம் ஒன்று இல்லாமல் மற்றொன்றைப் பெற்றுக்கொள்ளாதபடிக்கு தேவன் அப்படி செய்திருக்கிறார். சுயத்தை துறத்தல், வலது கையை தறித்துப்போடுதல், வலது கண்ணைப் பிடுங்கிப்போடுதல் ஆகியவை ஆவியானவர் ஆத்துமாவில் நுழையும் வழிகள், உள்ளே வரும்பொழுது தேவனின் ஏற்றுக்கொள்ளப்பட்ட புன்முறுவல், அவருடைய அன்பின் நிச்சயம், நிலைத்திருக்கும் பிரசன்னம் ஆகிய சந்தோஷங்களைத் தன்னுடன் எடுத்து வருகிறார். ஒவ்வொரு நாளும் நாம் எந்த ஆவியுடன் (மனநிலையுடன்) உலகத்தில் நுழைகிறோம் என்பதையும் இது அதிகமாகச் சார்ந்திருக்கிறது. மற்றவர்கள் நம்மை செல்லமாகவும் மென்மையாகவும் நடத்த வேண்டுமென்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். நாம் உயர்வாக நடத்தப்பட வேண்டுமென்று விரும்பினால், அப்படி நடக்காதபொழுது நாம் சோர்ந்துபோவோம். சுயத்தை மறந்து மற்றவர்கள் மகிழ்ச்சிபெற ஊழியம் செய்வதே மகிழ்ச்சியின் இரகசியமாகும். ‘வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே அதிக பாக்கியம்’, ஆகவே நமக்கு ஊழியம் கொள்ளுவதைவிட மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதே மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
ஏன் அனேகக் கிறிஸ்தவர்கள் சந்தோஷமில்லாமல் காணப்படுகிறார்கள்? அவர்களெல்லாரும் ஒளியின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமில்லையா? ‘ஒளி’ என்ற வார்த்தை, தேவனுடைய தன்மையையும், அவருடனான நம்முடையத் தொடர்பையும், எதிர்காலத்தில் நாம் சேருமிடத்தையும், மேலும் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் நமக்கு விளக்கிக்காட்டுவதற்காக வேதவாக்கியங்களிலே பலமுறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கையிலே ஒளியைப்போல நன்மைபயக்கும் மற்றும் அழகான பொருள் வேறு எது? ‘தேவன் ஒளியாயிருக்கிறார்; அவரில் எவ்வளவேனும் இருளில்லை’ (1யோவா 1:5). நாம் ஒளியில் தேவனுடன் நடக்கும்பொழுது மட்டுமே நம்முடைய இருதயம் உண்மையான சந்தோஷத்தினால் பூரிப்படையும். அவருடனான ஐக்கியத்தைத் தடுக்கும் காரியங்களை நாம் வேண்டுமென்றே அனுமதிப்பதே நம்முடைய ஆத்துமாவைக் குளிர்ந்துபோகச் செய்து இருளடையச் செய்கிறது. மாம்சத்தைத் திருப்திபடுத்துவதும், உலகத்துடன் ஒத்துப்போவதும், தடைசெய்யப்பட்ட பாதையில் நுழைவதுமே நம்முடைய ஆவிக்குறிய வாழ்க்கையை நோய்வாய்ப்படச்செய்து, நம்மை உற்சாகமற்றவர்களாக மாற்றுகிறது. ‘உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்ப எனக்குத் தாரும்’ (சங் 51:12) என்று தாவீது கதற வேண்டியிருந்தது. அவன் கட்டுப்பாடற்றவனாகவும், சுயத்தைத் திருப்திபடுத்துபவனாகவும் மாறியிருந்தான். சோதனை வந்தபொழுது அதை எதிர்த்து நிற்க அவனில் பெலனில்லை. அதற்கு அடிபணிந்தான், ஒரு பாவம் மற்றொன்றிற்கு வித்திட்டது. அவன் பின்வாங்கிப்போய் தேவனுடனான தொடர்பை இழந்தான். அறிக்கை செய்யப்படாத பாவம் அவனது மனசாட்சியை அழுத்தியது. ஓ, என்னுடைய சகோதர சகோதரிகளே! அப்படிப்பட்ட வீழ்ச்சியிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் நம்முடைய சந்தோஷத்தை இழந்துபோகாதிருக்க வேண்டுமென்றால், நம்முடைய சுயம் மறுக்கப்பட வேண்டும், மாம்ச இச்சைகளும் ஆசைகளும் சிலுவையிலறையப்பட வேண்டும். சோதனைக்கெதிராக நாம் எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும். நம்முடைய முழங்காலில் நாம் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும். ஜீவத்தண்ணீரின் ஊற்றிலிருந்து நாம் அடிக்கடி பருக வேண்டும். நாம் எப்பொழுதும் தேவனுக்கென்றே இருக்க வேண்டும்.
கிறிஸ்தவ விசுவாசம் சந்தோஷத்தைப்பிறப்பிக்க மாற்றம் பெற்றிருக்குமென்றால், அது கிட்டத்தட்ட சமஅளவில் கவலையையும் பிறப்பிக்கத்தக்க வடிவமைப்பைப் பெற்றிருக்கிறது. அந்த கவலை பரிசுத்தமானது, துணிச்சலானது, உன்னதமானது. ‘துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும்’ (2கொரி 6:10) என்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் சட்டமாகும். விசுவாசம் தன்னுடைய ஒளியை நம்முடைய நிலையின்மீதும், தன்மையின்மீதும், நம்முடைய பாவங்களின்மீதும் வீசும்பொழுது, துக்கமடைதலென்பது அதன் விளைவுகளில் ஒன்றாயிருக்க வேண்டும். அமைதியான, பொறுமையான துக்கத்தின் மீது எந்த ஆழமான அஸ்திபாரமுமில்லாத, வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல், மிகக் குறைந்த அளவே ஈடுபட்டு, ஒரு நிழலாட்டம் கூட இல்லாத மகிழ்ச்சியைக் கொண்டிருப்பதை விட மேலான வெறுக்கத்தக்க ஒன்று இல்லை; துக்கம், ஏனென்றால் நான் எப்படி இருக்கிறேனென்றும், நான் எப்படி இருக்க வேண்டியவனாயிருக்கிறேனென்றும் எனக்குத் தெரியும்; துக்கம், ஏனென்றால் நான் உலகத்தைப் பார்க்கையில் அதன் களிப்பின் பின்னால் இருக்கும் நரக அக்கினியைப் பார்க்கிறேன், மேலும் மனிதன் எதை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறான் என்பதையும் அறிந்திருக்கிறேன்.
தன்னுடைய தோழரைப்பார்க்கிலும் ஆனந்ததைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்டவரே (சங் 45:7) ‘துக்கப்பட்டு வியாகுலப்பட்டார்’ (மத் 26:37). இந்த இரண்டு குணாதிசயங்களும் அவருடைய நற்செய்தியின் செயல்பாட்டில் உண்மையாகவே அதை ஏற்றுக்கொள்ளும் இருதயத்தில் திரும்பத்திரும்ப வருகிறது. மேலும், ஒருவகையில் இது நம்மிடமிருந்து பயத்தை அகற்றுகிறது, நம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்துகிறது, ஐக்கியத்தை நமக்குள் அறிமுகப்படுத்துகிறது, மகிழ்ச்சியின் தைலத்தால் நாம் அபிஷேகம் பண்ணப்படுகிறோம்; வேறொருவகையில் நம்முடைய சொந்த மோசமானத்தன்மையை இது நமக்கு எடுத்துக்காட்டுகிறது, மாம்சத்திற்கும் ஆவியானவருக்கும் இடையேயான போராட்டத்தினால், வருத்தத்தை உட்செலுத்துகிறது – அது இப்படியாகச் சொல்லச் செய்கிறது, ‘நிர்பந்தமான மனுஷன் நான்!’ (ரோம 7:24). இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிடையானதல்ல, ஒன்றையொன்று நிரப்புபவை. ஆட்டுக்குட்டியானது ‘கசப்பான கீரையுடன்’ (யாத் 12:8) உட்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.