| 1 | உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்போர் யூதா நாட்டின் அரசர்களாய் இருந்த காலத்தில் யூதா, எருசலேம் என்பவற்றைக் குறித்து ஆமோட்சின் எசாயா கண்ட காட்சி: | ஏசா 21:2 எண் 12:6 எண் 24:4 எண் 24:16 2நாளா 32:32 சங் 89:19 எரே 23:16 நாகூ 1:1 ஆபகூ 2:2 மத் 17:9 அப் 10:17 அப் 26:19 2கொரி 12:1 |
| 2 | விண்வெளியே கேள்: மண்ணுலகே செவிகொடு: ஆண்டவர் திருவாய் மலர்ந்தருளுகின்றார்: பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்: அவர்களோ எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். | உபா 4:26 உபா 30:19 உபா 32:1 சங் 50:4 எரே 2:12 எரே 6:19 எரே 22:29 எசே 36:4 மீகா 1:2 மீகா 6:1 மீகா 6:2 |
| 3 | காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது: கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது: ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை: என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை. | நீதி 6:6 எரே 8:7 |
| 4 | ஐயோ, பாவம் நிறைந்த மக்களினம் இது: அநீதி செய்வோரின் கூட்டம் இது: தீச்செயல் புரிவோரின் வழிமரபு இது: கேடுகெட்ட மக்கள் இவர்கள்: ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்: இஸ்ரயேலின் தூயவரை அவமதித்துவிட்டார்கள்: அவருக்கு அன்னியராய் ஆகிவிட்டார்கள். | ஏசா 1:23 ஏசா 10:6 ஏசா 30:9 ஆதி 13:13 மத் 11:28 அப் 7:51 அப் 7:52 வெளிப் 18:5 |
| 5 | நீங்கள் ஏன் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்? என் கையால் பட்ட அடி போதாதா? உங்கள் தலையெல்லாம் வடுக்கள்: இதயமெல்லாம் தளர்ச்சி. | ஏசா 9:13 ஏசா 9:21 எரே 2:30 எரே 5:3 எரே 6:28-30 எசே 24:13 எபிரெ 12:5-8 |
| 6 | உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை: ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள், கீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன: அங்கே கீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை, எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை. | யோபு 2:7 யோபு 2:8 லூக் 16:20 லூக் 16:21 |
| 7 | உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது: உங்கள் நகரங்கள் நெருப்புக்கு இரையாயின: வேற்று நாட்டினர் உங்கள் கண்ணெதிரே உங்கள் நாட்டை விழுங்குகிறார்கள்: வேற்று நாட்டினரால் வீழ்த்தப்பட்ட உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது. | ஏசா 5:5 ஏசா 5:6 ஏசா 5:9 ஏசா 6:11 ஏசா 24:10-12 லேவி 26:34 உபா 28:51 2நாளா 28:5 2நாளா 28:16-21 சங் 107:34 சங் 107:39 எரே 6:8 |
| 8 | மகள் சீயோன் திராட்சைத் தோட்டத்துக் குடில் போன்றும் வெள்ளரித் தோட்டத்துக் குடிசை போன்றும் முற்றுகையிடப்பட்ட நகரம் போன்றும் கைவிடப்பட்டாள். | ஏசா 4:4 ஏசா 10:32 ஏசா 37:22 ஏசா 62:11 சங் 9:14 புலம் 2:1 சகரி 2:10 சகரி 9:9 யோவா 12:15 |
| 9 | படைகளின் ஆண்டவர் நம்மில் சிலரையேனும் எஞ்சியிருக்கச் செய்யாவிடில் சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம். கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம். | புலம் 3:22 ஆபகூ 3:2 ரோம 9:29 |
| 10 | எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், சோதோம் கொமோராவைப் போன்றவர்களாயிருக்கின்றனர்: நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்: அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள். | 1இரா 22:19-23 ஆமோ 3:1 ஆமோ 3:8 மீகா 3:8-12 |
| 11 | “எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு?” என்கிறார் ஆண்டவர். ஆட்டுக் கிடாய்களின் எரி பலிகளும், கொழுத்த விலங்குகளின் கொழுப்பும் எனக்குப் போதுமென்றாகிவிட்டன: காளைகள், ஆட்டுக் குட்டிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தத்திலும் எனக்கு நாட்டமில்லை. | ஏசா 66:3 1சாமு 15:22 சங் 50:8 சங் 51:16 நீதி 15:8 நீதி 21:27 எரே 6:20 எரே 7:21 ஆமோ 5:21 மீகா 6:7 மத் 9:13 |
| 12 | நீங்கள் என்னை வழிபட என் திருமுன் வரும்போது, இவற்றையெல்லாம் கொண்டு வந்து என் கோவில் முற்றத்தை மிதிக்க வேண்டுமென்று கேட்டது யார்? | ஏசா 58:1 ஏசா 58:2 யாத் 23:17 யாத் 34:23 உபா 16:16 பிரச 5:1 மத் 23:5 |
| 13 | இனி, காணிக்கைகளை வீணாகக் கொண்டுவர வேண்டாம்: நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது: நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும் அமாவாசை, ஓய்வுநாள் வழிபாட்டுக் கூட்டங்களை நான் சகிக்க மாட்டேன். | எசே 20:39 மல்கி 1:10 மத் 15:9 லூக் 11:42 |
| 14 | உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும், என் உள்ளம் வெறுக்கின்றது: அவை என் மேல் விழுந்த சுமையாயின: அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன். | ஏசா 61:8 ஆமோ 5:21 |
| 15 | என்னை நோக்கி உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தும் போது, பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்: நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவிகொடுப்பதில்லை: உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன. | ஏசா 59:2 1இரா 8:22 1இரா 8:54 எஸ்றா 9:5 யோபு 27:8 யோபு 27:9 யோபு 27:20 சங் 66:18 சங் 134:2 நீதி 1:28 எரே 14:12 எசே 8:17 எசே 8:18 மீகா 3:4 சகரி 7:13 லூக் 13:25-28 1தீமோ 2:8 |
| 16 | உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்: உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்: தீமை செய்தலை விட்டொழியுங்கள்: | யோபு 11:13 யோபு 11:14 சங் 26:6 எரே 4:14 அப் 22:16 2கொரி 7:1 யாக் 4:8 வெளிப் 7:14 |
| 17 | நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்: நீதியை நாடித் தேடுங்கள்: ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்: திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்: கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள். | ஏசா 1:23 சங் 82:3 சங் 82:4 நீதி 31:9 எரே 22:3 எரே 22:15 எரே 22:16 தானி 4:27 மீகா 6:8 செப் 2:3 சகரி 7:9 சகரி 7:10 சகரி 8:16 |
| 18 | “வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்” என்கிறார் ஆண்டவர்: “உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன: எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன: எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும். | ஏசா 41:21 ஏசா 43:24-26 1சாமு 12:7 எரே 2:5 மீகா 6:2 அப் 17:2 அப் 18:4 அப் 24:25 |
| 19 | மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால்: நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள். | ஏசா 3:10 ஏசா 55:1-3 ஏசா 55:6-3 ஏசா 55:7-3 எரே 3:12-14 எரே 31:18-20 ஓசி 14:1-4 யோவே 2:26 மத் 21:28-32 எபிரெ 5:9 |
| 20 | மாறாக, இணங்க மறுத்து எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்: ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார். | ஏசா 3:11 1சாமு 12:25 2நாளா 36:14-16 எபிரெ 2:1-3 |
| 21 | உண்மையாய் இருந்த நகரம், எப்படி விலைமகள் போல் ஆயிற்று! முன்பு அந்நகரில் நேர்மை நிறைந்திருந்தது: நீதி குடி கொண்டிருந்தது: இப்பொழுதோ, கொலைபாதகர் மலிந்துள்ளனர். | ஏசா 48:2 நெகே 11:1 சங் 46:4 சங் 48:1 சங் 48:8 ஓசி 11:12 சகரி 8:3 எபிரெ 12:22 |
| 22 | உன் வெள்ளி களிம்பேறிற்று: உன் மதுபானம் நீர்க்கலப்பாயிற்று. | எரே 6:28-30 புலம் 4:1 புலம் 4:2 எசே 22:18-22 ஓசி 6:4 |
| 23 | உன் தலைவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்: திருடருக்குத் தோழராய் இருக்கின்றனர்: கையூட்டு வாங்குவதற்கு ஒவ்வொருவனும் ஏங்குகிறான்: திக்கற்றோருக்கு அவர்கள் நீதி வழங்குவதில்லை: கைம்பெண்ணின் வழக்குகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை. | ஏசா 3:14 2நாளா 24:17-21 2நாளா 36:14 எரே 5:5 எசே 22:6-12 தானி 9:5 தானி 9:6 ஓசி 7:3-5 ஓசி 9:15 மீகா 3:1-3 மீகா 3:11-3 அப் 4:5-11 |
| 24 | ஆதலால், படைகளின் ஆண்டவரும் இஸ்ரயேலின் வல்லவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் எதிரிகளைப் பழிவாங்குவேன்: என் பகைவர்மேலுள்ள சீற்றத்தைத் தீர்த்துக்கொள்வேன். | ஏசா 30:29 ஏசா 49:26 ஏசா 60:16 எரே 50:34 வெளிப் 18:8 |
| 25 | உனக்கு நேராக என் கைகளை நீட்டுவேன்: உன்னை நன்றாகப் புடமிட்டு உன் களிம்பை நீக்குவேன்: உன்னிடமுள்ள உலோகக் கலவை அனைத்தையும் நீக்குவேன். | சகரி 13:7-9 வெளிப் 3:19 |
| 26 | முன்னாளில் இருந்தது போலவே உன் நீதிபதிகளைத் திருப்பிக் கொணர்வேன்: தொடக்க காலத்தில் இருந்தது போலவே உன் ஆலோசகர்களை மீண்டும் தருவேன்: அப்பொழுது எருசலேம் “நீதியின் நகர்” எனப் பெயர் பெறும்: “உண்மையின் உறைவிடம்” எனவும் அழைக்கப்படும். | ஏசா 32:1 ஏசா 32:2 ஏசா 60:17 ஏசா 60:18 எண் 12:3 எண் 16:15 1சாமு 12:2-5 எரே 33:7 எரே 33:15-17 எசே 34:23 எசே 34:24 எசே 37:24 எசே 37:25 எசே 45:8 |
| 27 | நீதி சீயோனை மீட்கும்: நேர்மை மனமாற்றம் அடைவோரை விடுவிக்கும். | ஏசா 5:16 ஏசா 45:21-25 ரோம 3:24-26 ரோம 11:26 ரோம 11:27 2கொரி 5:21 எபே 1:7 எபே 1:8 தீத் 2:14 1பேது 1:18 1பேது 1:19 |
| 28 | ஆனால் வன்முறையாளரும் பாவிகளும் ஒருங்கே அழிந்தொழிவர்: ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள் அனைவரும் இல்லாதொழிவர்: | யோபு 31:3 சங் 1:6 சங் 5:6 சங் 37:38 சங் 73:27 சங் 92:9 சங் 104:35 சங் 125:5 நீதி 29:1 லூக் 12:45 லூக் 12:46 1தெச 5:3 2தெச 1:8 2தெச 1:9 2பேது 3:7 வெளிப் 21:8 |
| 29 | நீங்கள் நாடி வழிபட்ட தேவதாரு மரங்களை முன்னிட்டு மானக்கேடு அடைவீர்கள்: நீங்கள் தெரிந்து கொண்ட சோலைகளை முன்னிட்டு நாணுவீர்கள். | ஏசா 30:22 ஏசா 31:7 ஏசா 45:16 எசே 16:63 எசே 36:31 ஓசி 14:3 ஓசி 14:8 ரோம 6:21 |
| 30 | ஏனெனில் நீங்கள் இலையுதிர்ந்த தேவதாரு மரத்தைப்போல் ஆவீர்கள்: நீரின்றி வாடிப்போகும் சோலையைப் போலவும் இருப்பீர்கள்: | ஏசா 5:6 எரே 17:5 எரே 17:6 எசே 17:9 எசே 17:10 எசே 17:24 மத் 21:19 |
| 31 | வலிமை மிக்கவன் சணற் கூளம் போலாவான்: அவனுடைய கைவேலைப்பாடும் தீப்பொறியாகும். அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும்: நெருப்புத் தணலை அணைப்பார் எவரும் இரார். | எசே 32:21 |