18
“மானிடா! இஸ்ரயேல் வீட்டார் எனக்குக் களிம்பாகிவிட்டனர். அவர்கள் எல்லாரும் எரி நெருப்பில் கிடக்கும் வெள்ளி, வெண்கலம், வெள்ளீயம், இரும்பு, ஈயம் ஆகியன போலாயினர்: அவர்கள் களிம்பாகி விட்டார்கள்”.
19
ஆகவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் யாவரும் களிம்பாகி விட்டதால் உங்கள் எல்லாரையும் எருசலேமில் ஒன்று சேர்ப்பேன்.
20
வெள்ளி, வெண்கலம், இரும்பு, ஈயம் ஆகியவற்றை நெருப்பிலிட்டு உருக்குவது போல், நானும் என் சினத்திலும் சீற்றத்திலும் நகரின் நடுவில் இட்டு உருக்குவேன்.
21
நான் உங்களை ஒன்றாய்ச் சேர்த்து, உங்கள் மீது என் சினத்தின் கனலை ஊதுவேன். நீங்களும் நகரின் நடுவில் உருக்கப்படுவீர்கள்.
22
வெள்ளி சூளையில் உருக்கப்படுவது போல் நீங்களும் அதன் நடுவில் உருக்கப்படுவீர்கள். அதன் மூலம் ஆண்டவராகிய நான் என் சினத்தை உங்கள் மீது கொட்டியுள்ளேன் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.