| 1 | படைகளின் ஆண்டவரான நம் தலைவர், எருசலேமின் ஊன்றுகோலை ஒடித்து விடுவார்: யூதாவின் நலத்தை நலியச் செய்வார்: ஊன்றுகோலாகிய உணவையும் நலமாகிய நீரையும் அகற்றிவிடுவார். | ஏசா 2:22 |
| 2 | வலிமைமிகு வீரன், போர்க்களம் செல்லும் போர்வீரன், தீர்ப்பு வழங்கும் நீதிபதி, இறைவாக்கு உரைக்கும் இறைவாக்கினன், குறி சொல்லும் நிமித்திகன், அறிவு முதிர்ந்த முதியோன் இவர்கள் அனைவரையும் அழித்து விடுவார். | ஏசா 2:13-15 2இரா 24:14-16 சங் 74:9 புலம் 5:12-14 ஆமோ 2:3 |
| 3 | ஐம்பதின்மர் தலைவன், உயர்பதவி வகிக்கும் சான்றோன், அறிவுரை வழங்குபவன், திறன் வாய்ந்த மந்திரவாதி, மாயவித்தை புரிவதில் நிபுணன் ஆகிய அனைவரையும் அகற்றி விடுவார். | யாத் 18:21 உபா 1:15 1சாமு 8:12 |
| 4 | சிறுவர்களை மக்கள் தலைவர்களாய் மாற்றுவார்: பச்சிளங் குழந்தைகள் அவர்கள் மேல் அரசாட்சி செலுத்துவார்கள். | 1இரா 3:7-9 2நாளா 33:1 2நாளா 34:1 2நாளா 36:2 2நாளா 36:5 2நாளா 36:9 2நாளா 36:11 பிரச 10:16 |
| 5 | மக்கள் ஒருவரை ஒருவர் ஒடுக்குவர்: எல்லோரும் தமக்கு அடுத்திருப்பவரைத் துன்புறுத்துவர்: இளைஞர் முதியோரை அவமதிப்பர்: கீழ்மக்கள் மாண்பு மிக்கவரைப் புறக்கணிப்பர். | ஏசா 9:19-21 ஏசா 11:13 எரே 9:3-8 எரே 22:17 எசே 22:6 எசே 22:7 எசே 22:12 ஆமோ 4:1 மீகா 3:1-3 மீகா 3:11-3 சகரி 7:9-11 மல்கி 3:5 யாக் 2:6 யாக் 5:4 |
| 6 | தன் தந்தையின் இல்லத்தில் வாழும் தமையனின் கையைத் தொட்டு ஒருவன், “நீ ஒருவனாவது ஆடை உடுத்தியுள்ளாய்: நீ எங்கள் பெருந்தலைவன் ஆவாயாக: பாழடைந்து கிடக்கும் இந்த நாடு உன் கைக்குள் வருவதாக” என்பான். | ஏசா 4:1 நியா 11:6-8 யோவா 6:15 |
| 7 | அந்நாளில் அவன், “நான் காயத்திற்குக் கட்டுப்போடுகிறவன் அல்ல: இல்லத்தில் உடுத்துவதற்கு உடையோ, உண்பதற்கு உணவோ ஒன்றுமில்லை: மக்களின் தலைவனாய் என்னை நீங்கள் ஏற்படுத்தவும் வேண்டாம்” எனச் சொல்லி மறுத்துவிடுவான். | ஆதி 14:22 உபா 32:40 வெளிப் 10:5 வெளிப் 10:6 |
| 8 | எருசலேம் நிலைகுலைந்து தடுமாற்றம் அடைந்து விட்டது: யூதா வீழ்ச்சி அடைந்து விட்டது: ஏனெனில், அவர்களுடைய சொல்லும், செயலும் ஆண்டவரின் திருவுளத்திற்கு எதிராய் உள்ளன: மாட்சிமைமிகு அவர்தம் கண்களுக்குச் சினமூட்டின. | 2நாளா 28:5-7 2நாளா 28:18-7 2நாளா 33:11 2நாளா 36:17-19 எரே 26:6 எரே 26:18 புலம் 5:16 புலம் 5:17 மீகா 3:12 |
| 9 | அவர்களின் ஓரவஞ்சனை அவர்களுக்கு எதிராய்ச் சான்று கூறுகின்றது: அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல் சோதோம் மக்களைப்போல் புறைசாற்றுகிறார்கள். ஐயோ! அவர்கள் உயிருக்குக் கேடு: ஏனெனில், தங்களுக்குத் தாங்களே தீமையை வருவித்துக்கொண்டார்கள். | ஏசா 3:16 1சாமு 15:32 2இரா 9:30 சங் 10:4 சங் 73:6 சங் 73:7 நீதி 30:13 எரே 3:3 எரே 6:15 தானி 7:20 |
| 10 | ஆனால், மாசற்றோர் நலம் பெறுவர் என நவிலுங்கள்: அவர் தம் நற்செயல்களின் கனியை உண்பது உறுதி. | ஏசா 26:20 ஏசா 26:21 பிரச 8:12 எரே 15:11 எசே 9:4 எசே 18:9-19 செப் 2:3 மல்கி 3:18 ரோம 2:5-11 |
| 11 | தீச்செயல் புரிவோர்க்கு ஐயோ கேடு! தீமை அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்: அவர்களின் கைகள் செய்த தீவினைகள் அனைத்தும் அவர்கள் மேலேயே விழும். | ஏசா 48:22 ஏசா 57:20 ஏசா 57:21 ஏசா 65:13-15 ஏசா 65:20-15 சங் 1:3-5 சங் 11:5 சங் 11:6 பிரச 8:13 |
| 12 | என் மக்களே, சிறுவர் உங்களை ஒடுக்குகின்றார்கள்: பெண்கள் உங்கள்மேல் ஆட்சி செலுத்துகின்றார்கள்: என் மக்களே, உங்கள் தலைவர்கள் உங்களைத் தவறாக வழி நடத்துகின்றார்கள்: உங்களை ஆள்பவர்கள் நீங்கள் நடக்கவேண்டிய நெறிமுறைகளைக் குழப்புகின்றார்கள். | ஏசா 3:4 2இரா 11:1 நாகூ 3:13 |
| 13 | ஆண்டவர் வழக்காடுவதற்கு ஆயத்தமாகிறார்: மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்க எழுந்து நிற்கிறார். | சங் 12:5 நீதி 22:22 நீதி 22:23 நீதி 23:10 நீதி 23:11 ஓசி 4:1 ஓசி 4:2 மீகா 6:2 |
| 14 | தம் மக்களின் முதியோரையும் தலைவர்களையும் தம் நீதித் தீர்ப்புமுன் நிறுத்துகிறார்: இந்தத் திராட்சைத் தோட்டத்தைத் தின்றழித்தவர்கள் நீங்கள்: எளியவர்களைக் கொள்ளையிட்ட பொருள்கள் உங்கள் இல்லங்களில் நிறைந்துள்ளன: | யோபு 22:4 யோபு 34:23 சங் 143:2 |
| 15 | என் மக்களை நீங்கள் நசுக்குவதன் பொருள் என்ன? எளியோரின் முகத்தை உருக்குலைப்பதன் பொருள் என்ன?” என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர். | எசே 18:2 யோனா 1:6 |
| 16 | மேலும் ஆண்டவர் கூறியது இதுவே: “சீயோன் மகளிர் செருக்குக் கொண்டுள்ளார்கள்: தங்கள் கழுத்தை வளைக்காது நிமிர்ந்து நடக்கின்றார்கள்: தம் கண்களால் காந்தக் கணை தொடுக்கின்றார்கள்: தங்கள் கால்களிலுள்ள சிலம்பு ஒலிக்கும்படி ஒய்யார நடை நடந்து உலவித் திரிகிறார்கள். | ஏசா 1:8 ஏசா 4:4 மத் 21:5 லூக் 23:28 |
| 17 | ஆதலால், ஆண்டவர் சீயோன் மகளிரின் உச்சந்தலைகளில் புண்ணை விருவிப்பார்: வழுக்கைத் தலையர்களாய் அவர்களை ஆக்குவார்: ஆண்டவர் அவர்களின் மானத்தைக் குலைப்பார். | லேவி 13:29 லேவி 13:30 லேவி 13:43 லேவி 13:44 உபா 28:27 வெளிப் 16:2 |
| 18 | அந்நாளில் அவர்களுடைய அணிகலன்களாகிய கால்சிலம்புகள், கட்டிகள், பிறைவடிவமான அணிகலன்கள், | நியா 8:21 |
| 19 | ஆரங்கள், கழுத்துப் பொற்சங்கிலிகள், கழுத்துத் துண்டுகள், | ஆதி 24:22 ஆதி 24:30 ஆதி 24:53 ஆதி 38:18 ஆதி 38:25 யாத் 35:22 எண் 31:50 எசே 16:11 |
| 20 | கைவளையல்கள், தலை அணிகலன்கள், கூந்தல்கட்டும் பட்டு நாடாக்கள், அரைக்கச்சைகள், நறுமணச் சிமிழ்கள், | ஆதி 35:4 யாத் 32:2 எசே 16:12 ஓசி 2:13 |
| 21 | காதணிகள், மோதிரங்கள், மூக்கணிகள், | ஆதி 41:42 எஸ்தர் 8:12 உன்ன 5:14 லூக் 15:22 யாக் 2:2 |
| 22 | வேலைப்பாடுள்ள அழகிய ஆடைகள், மேலாடைகள், போர்வைகள், கைப்பைகள், |
| 23 | கண்ணாடிகள், மெல்லிய சட்டைகள், குல்லாக்கள், முக்காடுகள் ஆகியவற்றை ஆண்டவர் களைந்துவிடுவார். | யாத் 38:8 |
| 24 | நறுமணத்திற்குப் பதிலாக அவர்கள்மேல் துர்நாற்றம் வீசும்: கச்சைக்குப் பதிலாகக் கயிற்றைக் கட்டிக்கொள்வார்கள்: வாரிமுடித்த கூந்தலுக்குப் பதிலாக அவர்கள் வழுக்கைத் தலை கொண்டிருப்பார்கள்: ஆடம்பர உடைகளுக்குப் பதிலாக அவர்கள் சாக்குடை உடுத்துவார்கள். அழகிய உடல்கொண்ட அவர்கள் மானக்கேடு அடைவார்கள். | ஏசா 57:9 நீதி 7:17 |
| 25 | உங்கள் ஆண்கள் வாளுக்கு இரையாவார்கள்: வலிமை மிக்க உங்கள் வீரர்கள் போரில் மடிவார்கள். | 2நாளா 29:9 எரே 11:22 எரே 14:18 எரே 18:21 எரே 19:7 எரே 21:9 புலம் 2:21 ஆமோ 9:10 |
| 26 | சீயோன் வாயில்கள் புலம்பி அழும்: அவள் எல்லாம் இழந்தவளாய்த் தரையில் உட்காருவாள். | எரே 14:2 புலம் 1:4 |