எசேக்கியேல் 18:9-19 - WCV
9
என் நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகெண்டால், அவன் நீதிமான் ஆவான்: அவன் வாழப்போவது உறுதி, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
10
ஆனால், அவனுக்குப் பிறந்த மகன் கட்டுக்கடங்காதவனாயும், இரத்தம் சிந்துபவனாகவும் முன் சொல்லியவற்றுள் ஒன்றைப் பிறருக்குச் செய்பவனாகவும் இருந்தால்,
11
தந்தை இவற்றுள் எதையும் செய்யாதிருக்க-மகனோ மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்டு, பிறன் மனைவியைக் கறைப்படுத்தி,
12
எளியவரையும் வறியவரையும் ஒடுக்குபவனாகவும், கொள்ளையிடுபவனாகவும், அடைமானத்தைத் திருப்பித் தராதவனாகவும், சிலைகளை வணங்குபவனாகவும், அருவருப்பானதைச் செய்பவனாகவும்,
13
வட்டிக்குக் கொடுப்பவனாகவும், கொடுத்ததற்கு அதிகமாக வாங்குபவனாகவும் இருந்தால், அவன் வாழ்வானோ? அவன் வாழ மாட்டான். அருவருப்பான இவற்றையெல்லாம் அவன் செய்துள்ளதால் அவன் சாவது உறுதி. அவனது இரத்தப்பழி அவன் மேலேயே இருக்கும்.
14
ஆனால், இவனுக்குப் பிறந்த மகன் தன் தந்தை செய்த பாவங்களை எல்லாம் கண்டு தெளிந்து அவ்வாறு செய்யாதிருந்தால்-
15
அதாவது மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்ணாமலும, இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை வணங்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும்,
16
ஒருவரையும் ஒடுக்காமலும், அடைமானம் பெறாமலும், கொள்ளையிடாமலும், பசித்தவருக்குத் தன் உணவை அளித்தும், ஆடையின்றி இருப்பவருக்கு ஆடை கொடுத்தும்,
17
எளியவருக்குத் தீங்கிழைக்காமலும், வட்டி வாங்காமலும், கொடுத்ததற்கு அதிகமாய் வாங்காமலும், என் நீதி நெறிகளைக் கடைப்பிடித்தும், என் நியமங்களின்படி நடந்தும் இருந்தால்-அவன் தன் தந்தையின் குற்றத்திற்காகச் சாக மாட்டான்: அவன் வாழ்வது உறுதி.
18
மாறாக, அவன் தந்தை பிறனைக் கொடுமைப்படுத்திக் கொள்ளையடித்துத் தன் இனத்தாரிடையே நல்லன அல்லாதவற்றைச் செய்தால், தன் குற்றத்திற்காக மடிவான்.
19
ஆயினும், “தந்தையின் குற்றத்தை மகன் ஏன் சுமக்கக்கூடாது?” என்று நீங்கள் கேட்கலாம். மகன், நீதியையும் நேர்மையும் கடைப்பிடித்து, என் நியமங்களை எல்லாம் கைக்கொண்டு ஒழுகினால், அவன் வாழ்வது உறுதி.