| 1 | ஆண்டவர் கூறுவது இதுவே: விண்ணகம் என் அரியணை: மண்ணகம் என் கால்மணை: அவ்வாறிருக்க, எத்தகைய கோவிலை நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்? எத்தகைய இடத்தில் நான் ஓய்வெடுப்பேன்? | 1இரா 8:27 1நாளா 28:2 2நாளா 6:18 சங் 11:4 சங் 99:9 சங் 132:7 மத் 5:34 மத் 5:35 மத் 23:21 மத் 23:22 அப் 17:24 |
| 2 | இவை அனைத்தையும் என் கைகளே உண்டாக்கின: இவை யாவும் என்னால் உருவாகின, என்கிறார் ஆண்டவர். எளியவரையும், உள்ளம் வருந்துபவரையும், என் சொல்லுக்கு அஞ்சுபவரையும் நான் கண்ணோக்குவேன். | ஏசா 40:26 ஆதி 1:1-31 கொலோ 1:17 எபிரெ 1:2 எபிரெ 1:3 |
| 3 | அவர்களுக்கு இளம் காளையை வெட்டிப் பலியிடுவதும் மனிதரைக் கொலைச்செய்வதும் ஒன்றாம்: ஆட்டுக் குட்டியைப் பலியாகக் கொடுப்பதும் நாயின் கழுத்தை முறிப்பதும் ஒன்றாம்: உணவுப் படையலைப் படைப்பதும், பன்றியின் இரத்தத்தை ஒப்புக் கொடுப்பதும் ஒன்றாம்: நினைவுப் படையலாகிய தூபம் காட்டுதலைச் செய்வதும் சிலைகளை வணங்குதலும் ஒன்றாம்: அவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்தெடுத்துள்ளனர்: தங்கள் அருவருப்புகள் மீது அவர்கள் உள்ளம் மகிழ்கின்றது. | ஏசா 1:11-15 நீதி 15:8 நீதி 21:27 ஆமோ 5:21 ஆமோ 5:22 |
| 4 | நானும் அவர்களுக்குரிய தண்டனையைத் தேர்ந்து கொள்வேன்: அவர்கள் அஞ்சுகின்றவற்றை அவர்கள்மீது வரச்செய்வேன்: ஏனெனில், நான் அழைத்தபோது எவரும் பதில் தரவில்லை: நான் பேசியபோது அவர்கள் செவி கொடுக்கவில்லை: என் கண்முன்னே தீயவற்றைச் செய்தார்கள்: நான் விருப்பாதவற்றைத் தெரிந்தெடுத்தார்கள். | 1இரா 22:19-23 சங் 81:12 நீதி 1:31 நீதி 1:32 மத் 24:24 2தெச 2:10-12 |
| 5 | ஆண்டவரின் வாக்குக்கு நடுநடுங்குவோரே, இதைக் கேளுங்கள்: என் பெயர் பொருட்டு உங்களை வெறுத்து ஒதுக்கும் உங்கள் உறவின் முறையார் “நாங்கள் உங்கள் மகிழ்ச்சியைக் காணும் பொருட்டு ஆண்டவர் தம் மாட்சியைக் காண்பிக்கட்டும்” என்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் வெட்கம் அடைவார்கள். | ஏசா 66:2 நீதி 13:13 எரே 36:16 எரே 36:23-25 |
| 6 | இதோ, நகரில் பேரொலி கேட்கின்றது! திருக்கோவிலில் பேரோசை எழுகின்றது! ஆண்டவர் தம் பகைவருக்குத் தக்க பதலடி கொடுப்பதால் எழும் இரைச்சலே அது! | ஏசா 34:8 ஏசா 59:18 ஏசா 65:5-7 யோவே 3:7-16 ஆமோ 1:2-2 |
| 7 | வேதனை வருமுன்னே சீயோன் பிள்ளை பெற்றாள்! பிரசவ நேரம் நெருங்குமுன்னே ஆண்மகவை ஈன்றாள்! | ஏசா 54:1 கலா 4:26 வெளிப் 12:1-5 |
| 8 | இத்தகைய நிகழ்ச்சிபற்றிக் கேள்வியுற்றவர் யார்? இதைப் போன்ற ஒன்றைப் பார்த்தவர் யார்? ஒரே நாளில் நாடு ஒன்று உருவாகிட இயலுமா? ஒரு நொடிப்பொழுதில் மக்களினம் ஒன்று பிறக்கக்கூடுமா? ஆனால் வேதனை ஏற்பட்டவுடனே சீயோன் தன் பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள். | ஏசா 64:4 1கொரி 2:9 |
| 9 | பேறுகாலத்தை ஏற்படுத்திய நான் மகப்பேற்றைத் தடை செய்வேனா? என்கிறார் ஆண்டவர். மகப்பேற்றுக்குக் காரணமான நான் கருப்பையை அடைத்துவிடுவேனா? என்கிறார் உங்கள் கடவுள். | ஏசா 37:3 ஆதி 18:14 |
| 10 | எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்: அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். | ஏசா 44:23 ஏசா 65:18 உபா 32:43 ரோம 15:9-12 |
| 11 | அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்: அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள். | ஏசா 60:5 ஏசா 60:16 சங் 36:8 யோவே 3:18 1பேது 2:2 |
| 12 | ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்: பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்: நீங்கள் பால் பருகுவீர்கள்: மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்: மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். | ஏசா 9:7 ஏசா 48:18 ஏசா 60:5 சங் 72:3-7 |
| 13 | தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்: எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள். | ஏசா 51:3 1தெச 2:7 |
| 14 | இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல்போல் வளரும்: ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார் என்பதும் அவரது சினம் அவர்தம் பகைவருக்கு எதிராய் மூளும் என்பதும் அறியப்படும். | சகரி 10:7 யோவா 16:22 |
| 15 | இதோ! ஆண்டவர் நெருப்பென வருவார்: அவர் தேர்கள் புயலென விரையும்: கொழுந்து விட்டெரியும் தம் சினத்தைக் கொட்டுவார்: தீப்பிழம்பென அவர்தம் கண்டனம் வருகின்றது. | ஏசா 30:27 ஏசா 30:28 ஏசா 30:33 சங் 11:6 சங் 21:9 சங் 50:3 சங் 97:3 ஆமோ 7:4 மத் 22:7 2தெச 1:6-9 2பேது 3:10-12 |
| 16 | தம் நெருப்பையும் வாளையும் கொண்டு மானிடர் அனைவர்மீதும் ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பு வழங்குவார்: எண்ணிறந்தோரை ஆண்டவர் கொன்றுவிடுவார். | ஏசா 27:1 ஏசா 34:5-10 எசே 38:21 எசே 38:22 எசே 39:2-10 வெளிப் 19:11-21 |
| 17 | தோட்ட வழிபாட்டிற்கெனத் தங்களைத் தூய்மைப்படுத்தித் தீட்டகற்றுவோர், அதற்கு அணி அணியாய்ச் செல்வோர், பன்றி, எலி இவற்றின் இறைச்சி மற்றும் அருவருப்புகளை உண்போர் ஆகிய அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர், என்கிறார் ஆண்டவர். | ஏசா 1:29 ஏசா 65:3 ஏசா 65:4 |
| 18 | அவர்கள் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்: பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்: அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள். | ஏசா 37:28 உபா 31:21 ஆமோ 5:12 யோவா 5:42 வெளிப் 2:2 வெளிப் 2:9 வெளிப் 2:13 |
| 19 | அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்: அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்: அவர்கள் தர்சீசு, பூல், வில்வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ்பற்றிக் கேள்விப்படாதவர்: என் மாட்சியைக் கண்டிராதவர்: அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள். | ஏசா 11:10 ஏசா 18:3 ஏசா 18:7 ஏசா 62:10 லூக் 2:34 |
| 20 | அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்: இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின் மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர். | ஏசா 43:6 ஏசா 49:12-26 ஏசா 54:3 ஏசா 60:3-14 |
| 21 | மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும் லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர். | ஏசா 61:6 யாத் 19:6 எரே 13:18-22 1பேது 2:5 1பேது 2:9 வெளிப் 1:6 வெளிப் 5:10 வெளிப் 20:6 |
| 22 | நான் படைக்கின்ற புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் என் முன்னே நிலைத்திருப்பது போல், உங்கள் வழித்தோன்றல்களும் உங்கள் பெயரும் நிலைத்திருக்கும், என்கிறார் ஆண்டவர். | ஏசா 65:17 எபிரெ 12:27 எபிரெ 12:28 2பேது 3:13 வெளிப் 21:1 |
| 23 | அமாவாசைதோறும் ஓய்வுநாள்தோறும் மானிடர் அனைவரும் என்முன் வழிபட வருவர், என்கிறார் ஆண்டவர். | ஏசா 1:13 ஏசா 1:14 2இரா 4:23 சங் 81:3 சங் 81:4 எசே 46:1 எசே 46:6 கொலோ 2:16 கொலோ 2:17 |
| 24 | அவர்கள் புறப்பட்டுச் சென்று, என்னை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தோரின் பிணங்களைக் காண்பார்கள்: அவர்களை அரிக்கும் புழு சாவதில்லை: அவர்களை எரிக்கும் நெருப்பு அணைந்து போவதில்லை: மானிடர் யாவருக்கும் அவர்கள் ஓர் அருவருப்பாக இருப்பார்கள். | ஏசா 66:16 சங் 58:10 சங் 58:11 எசே 39:9-16 சகரி 14:12 சகரி 14:18 சகரி 14:19 வெளிப் 19:17-21 |