யோவேல் 3:7-16 - WCV
7
நீங்கள் விற்றுவிட்ட இடத்திலிருந்து அவர்களை இப்பொழுதே கிளர்ந்தெழச் செய்வேன்: நீங்கள் செய்த கொடுமையை உங்கள் தலை மேலேயே விழச் செய்வேன்.
8
உங்கள் புதல்வரையும் புதல்வியரையும் யூதா மக்களிடமே விற்றுவிடுவேன்: யூதா மக்களோ அவர்களைத் தொலைநாட்டவரான செபாயரிடம் விற்றுவிடுவார்கள்:” இதைக் கூறுவது ஆண்டவரே.
9
வேற்றினத்தாரிடையே இதைப் பறைசாற்றுங்கள்: போருக்காக நாள் குறித்து, போர் வீரர்களைக் கிளர்ந்ததெழச் செய்யுங்கள்: படை வீராகள் அனைவரும் திரண்டு வந்து, போருக்குக் கிளம்பட்டும்.
10
உங்கள் கலப்பைக் கொழுவைப் போர்வாளாக அடித்துக் கொள்ளுங்கள்: கதிரறுக்கும் அரிவாள்களை ஈட்டிகளாக வடித்துக் கொள்ளுங்கள்: வலுவற்றவனும் “நானொரு போர்வீரன்” என்று சொல்லிக் கொள்ளட்டும்.
11
சுற்றுப் புறங்களிலுள்ள வேற்று நாட்டவர்களே, நீங்கள் அனைவரும் விரைந்து வாருங்கள்: வந்து அவ்விடத்தில் ஒன்றாய்க் கூடுங்கள்: ஆண்டவரே, உம் போர் வீரர்களை அனுப்பியருளும்.
12
வேற்றினத்தார் அனைவரும் கிளர்ந்தெழட்டும்: கிளர்ந்தெழுந்து யொசபாத்து பள்ளத்தாக்கிற்கு வந்து சேரட்டும்: ஏனெனில் சுற்றுப்புறத்து வேற்றினத்தார் அனைவர்க்கும் தீர்ப்பு வழங்க நான் அங்கே அமர்ந்திருப்பேன்.
13
அரிவாளை எடுத்து அறுங்கள், பயிர் முற்றிவிட்டது: திராட்சைப் பழங்களை மிதித்துப் பிழியுங்கள். ஏனெனில் ஆலை நிரம்பித் தொட்டிகள் பொங்கி வழிகின்றன: அவர்கள் செய்த கொடுமை மிகப் பெரிது.
14
திரள் திரளாய் மக்கட் கூட்டம் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் திரண்டிருக்கிறது. ஏனெனில், ஆண்டவரின் நாள் அப்பள்ளத்தாக்கை நெருங்கி வந்துவிட்டது.
15
கதிரவனும் நிலவும் இருளடைகின்றன: விண்மீன்கள் ஒளியை இழக்கின்றன.
16
சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்: எருசலேமிலிருந்து அவர் முழங்குகின்றார்: விண்ணும் மண்ணும் அதிர்கின்றன: ஆயினும் ஆண்டவரே தம் மக்களுக்குப் புகலிடம்: இஸ்ரயேலருக்கு அரணும் அவரே.