2
நான் உன்னைத் திருப்பி, தொலைவடக்குப் பகுதிகளிலிருந்து விரட்டி, இஸ்ரயேல் மலைகளுக்கு இழுத்துக்கொண்டு வருவேன்.
3
பின்னர் உன் இடக்கையில் இருக்கும் வில்லை நான் தட்டிவிட்டு வலக்கையில் இருக்கும் அம்புகளைக் கீழே விழச் செய்வேன்.
4
இஸ்ரயேல் மலைகளில் நீ வீழ்வாய்: நீயும் உன் எல்லாப் படைகளும், உன்னோடிருக்கும் மக்களினங்களும் வீழ்வீர். நான் உன்னை ஊன் தின்னும் எல்லாப் பறவைகளுக்கும், காட்டு விலங்குகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.
5
நீ திறந்தவெளியில் வீழ்வாய். நானே இதை உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
6
நான் மாகோகின்மீதும் கடலோரங்களில் பாதுகாப்பாய் வாழும் எல்லார்மீதும் நெருப்பை அனுப்புவேன். அப்பொழுது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.
7
நான் என் மக்களாம் இஸ்ரயேலில் என் திருப்பெயரை அறியச் செய்வேன். என் திருப்பெயரை இனிமேல் தீட்டுப்படவிடமாட்டேன். ஆண்டவராகிய நானே இஸ்ரயேலில் தூயவராய் இருப்பவர் என வேற்றினத்தார் அறிந்துகொள்வர்.
8
இதோ வருகிறது! இது உறுதியாய் நடந்தேறும்: இதுவே நான் குறிப்பிட்ட நாள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
9
அப்போது, இஸ்ரயேல் நகர்களில் வாழ்வோர் வெளியேறிப் படைக்கலன்களாகிய சிறியதும் பெரியதுமான கேடயங்களையும் வில்களையும் அம்புகளையும், வேல்களையும் ஈட்டிகளையும் எரிபொருளாய்ப் பயன்படுத்துவர். ஏழாண்டுகள் இவ்வாறு எரி பொருளாய்ப் பயன்படுத்துவர்.
10
அவர்கள் விறகுகளை வயல் வெளியிலிருந்து சேகரிக்கவோ காடுகளிலிருந்து வெட்டவோ மாட்டார்கள். ஏனெனில் படைக்கலன்களை அவர்கள் எரிபொருளாய்ப் பயன்படுத்துவர். அவர்கள் தங்களைக் கொள்ளையடித்தவர்களைக் கொள்ளையடிப்பர், தங்களைச் சூறையாடியோரைச் சூறையாடுவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.