எசேக்கியேல் 39:9-16 - WCV
9
அப்போது, இஸ்ரயேல் நகர்களில் வாழ்வோர் வெளியேறிப் படைக்கலன்களாகிய சிறியதும் பெரியதுமான கேடயங்களையும் வில்களையும் அம்புகளையும், வேல்களையும் ஈட்டிகளையும் எரிபொருளாய்ப் பயன்படுத்துவர். ஏழாண்டுகள் இவ்வாறு எரி பொருளாய்ப் பயன்படுத்துவர்.
10
அவர்கள் விறகுகளை வயல் வெளியிலிருந்து சேகரிக்கவோ காடுகளிலிருந்து வெட்டவோ மாட்டார்கள். ஏனெனில் படைக்கலன்களை அவர்கள் எரிபொருளாய்ப் பயன்படுத்துவர். அவர்கள் தங்களைக் கொள்ளையடித்தவர்களைக் கொள்ளையடிப்பர், தங்களைச் சூறையாடியோரைச் சூறையாடுவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
11
அந்த நாளில் இஸ்ரயேல் கடலுக்குக் கிழக்கே வழிப்போக்கர்களின் பள்ளத்தாக்கில் கோகுக்கு ஓர் இடுகாடு கொடுப்பேன். அது வழிப்போக்கரின் பாதையில் இரக்கும். ஏனெனில் கோகையும் அவனுடைய கூட்டத்தினர் அனைவரையும் அவர்கள் அங்கே புதைப்பர். எனவே அதை “அமோன் கோகு பள்ளத்தாக்கு” என அழைப்பர்.
12
நாட்டைத் தூய்மைப்படுத்தும்பொருட்டு இஸ்ரயேல் வீட்டார் அவர்களை ஏழு மாதங்கள் புதைப்பர்.
13
நாட்டின் எல்லா மக்களும் அவர்களைப் புதைப்பர். நான் என் மாட்சியை வெளிப்படுத்தும் அந்நாள் அவர்களுக்குச் சிறப்பான நாளாய் இருக்கும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
14
நாட்டைத் தூய்மைப்படுத்த வழிப்போக்கர் குழு ஒன்றை அவர்கள் அழைப்பர். அக்குழுவினர் அவர்கள் நாடெங்கும் சென்று மண்ணில் எஞ்சிக் கிடக்கும் பிணங்களைத் தேடிப்புதைப்பர். ஏழு மாத முடிவில் அவர்கள் இப்படித் தேடத் தொடங்குவர்.
15
அவர்கள் நாடெங்கும் செல்கையில் ஒருவன் ஒரு மனித எலும்புக்கூட்டைப் பார்த்தால், புதைப்போர் அதனை அமோன் கோகு பள்ளத்தாக்கில் புதைக்கும் வரை, அதன் அருகில் ஓர் அடையாளம் வைக்க வேண்டும்.
16
இத்துடன் “அமோனா” எனும் பெயரில் ஒரு நகரும் இருக்கும்: இவ்வாறு அவர்கள் நாட்டைத் தூய்மைப்படுத்துவர்.