தோராவில் அதாவது ஐந்தாகமத்தில் பாலினப்பாகுபாடு உள்ளது என்னும் கட்டுரைக்கு இது மறுப்புக் கட்டுரையாகும். ( www.evilbible.com ) என்னும் இணையதலத்தில், “தோராவில் பாலினப்பாகுபாடு” என்ற தலைப்பில் பெயர் வெளியிடாத ஒருவரால், தோராவுக்கு எதிரான சில தவறான கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. இத்தகைய தவறான கருத்துகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு தாழ்மையான முயற்சியே இந்தக் கட்டுரை ஆகும். தடித்த எழுத்துகளில் உள்ள வாசகங்கள் அந்த இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகள்; அதைத் தொடர்ந்து அதற்கான மறுப்புரைகள் சாதாரண எழுத்துகளில் கொடுக்கப்பட்டுள்ளன.
“தோராவில் பாலினப் பாகுபாடு” என்னும் இணையத்தில் ( www.evilbible.com ) கட்டுரைக்கான மறுப்புரை
பரிசுத்த வேதாகமம் தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகம். இது 40 வெவ்வேறு எழுத்தாளர்களால் 1500 ஆண்டுகளாக மூன்று கண்டங்களிலிருந்து எழுதப்பட்டது. இவற்றில் தோரா என்பது வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களைக் குறிக்கிறது. தமிழில் இது ஐந்தாகமம் என்று அழைக்கப்படுகிறது. தோராவைப் படிக்கும்போது நாம் மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அது உண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தெரிவிக்கும் துல்லியமான வரலாற்றுக் குறிப்பு என்பதாகும். வேதாகமத்தின் வரலாற்றுப் பூர்வமான நம்பகத்தன்மைக்கும் அதனுடைய சான்று உறுதிக்கும் கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவ அல்லாத ஆதாரங்களில் இருந்து பல சான்றுகள் உள்ளன. உண்மையைக் கூறுவோமெனில், பிளேட்டோ மற்றும் இலியட் போன்ற வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பிற எழுத்தாளர்கள் மற்றும் அவர்களுடைய இலக்கியங்களுக்கு இருப்பதைக் காட்டிலும், பரிசுத்த வேதாகமத்தின் புத்தகங்களுக்கு கணிசமான அளவு சான்று ஆவணங்களும், அதன் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, அதில் சொல்லப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள், அவர்களின் பாவங்கள், அவர்களின் தோல்விகள், அவர்களின் வெற்றிகள், அவர்களின் நல்ல மற்றும் கெட்ட செயல்கள் ஆகியவற்றைப் பற்றிய எல்லா உண்மைகளையும் தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்.
இதனால் தேவன் அவர்களை அங்கீகரிக்கிறார் என்றோ அவர்களின் செயல்களை மன்னிக்கிறார் என்றோ இது எந்த வகையிலும் அர்த்தப்படுத்தாது. வேதாகம கதாபாத்திரங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும், அவர்களைக் கதாநாயகர்களாக மாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தால் இதன் ஆசிரியர்கள் தங்களது வாழ்க்கையின் இருண்ட அத்தியாயங்களைப் பதிவு செய்வதிலிருந்து விலகியிருக்க முடியும். அவ்வாறு செய்திருந்தால் அது யாருக்கும் தெரியாமல் போயிருக்கும். ஆனால் பிற அனைத்து மத நூல்களிலும், உலக வரலாற்றிலும் கூட இல்லாத வகையில் வேதாகமத்தின் நம்பகத்தன்மைக்கும் அதன் உண்மைத் தன்மைக்கும் மிகத் துல்லியமாகச் சான்றளிக்கும் வகையில், அதில் வருகிற ஆண்கள் மற்றம் பெண்களின் வாழ்க்கை முழுவதும் எவ்விதப் பாரபட்சம் இல்லாமலும், விருப்பு வெறுப்பு இல்லாமலும் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தோரா எழுதப்பட்ட சமயத்தில் எபிரெயர்கள் மிகவும் பேரினவாத (இனப்பற்று) சமூகமாக இருந்தனர். எனவே தோராவில் பாலியல் பாகுபாடு மிகவும் பரவலாக உள்ளது.
தோராவைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின், முக்கியமாகத் தோராவில் பாலியல் பாகுபாடு இருந்ததா? அல்லது இல்லையா? என்பதைப் புரிந்துகொள்வதற்கு அது எழுதப்பட்ட காலத்தில் இருந்த பிற மதக் கலாச்சாரங்கள், மதங்களுக்காக மக்கள் கடைப்பிடித்துவந்த நடைமுறைகள் மற்றும் சமுதாய விதிமுறைகள் ஆகியவற்றை நாம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். எனவே எபிரெயர்களை ஒரு பேரினவாத சமூகம் என்று கூறுவதற்கு, தோராவை எழுதிய ஆசிரியர் பிற பண்டைய கலாச்சாரங்களைப் பார்த்து அவற்றின் அடிப்படையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அது பற்றி ஆசிரியர் இங்கே தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கு முனைவர் “ஹன்னி ஜே. மார்ஸ்மேன்” என்பவரின் ஆய்வுகள் நமக்கு வெளிச்சத்தைக் காட்டுகின்றன. இஸ்ரவேலர்களின் தேவனை வழிபடும் பெண்களின் நிலையானது, இஷ்த்தாரையோ, அஷேராவையோ அல்லது வேறு எந்த தெய்வங்களையோ வணங்கும் பெண்களின் நிலையைக் காட்டிலும் மோசமானது என்று குரல் எழுப்புவோரின் உண்மையான நோக்கத்தைத் வெளியே கொண்டுவரும் நோக்கத்துடன் இவ்விரு வகையான பெண்களின் வாழ்க்கையையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தார். இதன் ஆய்வுகளின் முடிவை அவர் கீழ்க்காணுமாறு விவரிக்கிறார்: “இஸ்ரவேல் பெண்களின் சமூதாயம் மற்றும் மத நிலையானது உகாரித்தின் (சிரியாவிலுள்ள ஒரு நகரம்) பெண்களின் நிலையும் ஏறத்தாழ ஒரே மாதிளரியாகவே இருந்துள்ளது. மேலும் என்னால் அறிய முடிந்தவரை, பண்டைய அண்மைக் கிழக்கிலுள்ள உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மற்ற பெண்களை விட ஓரளவு சுதந்திரத்தை அனுபவித்தாலும் கூட, எல்லா இடங்களிலும் பெண்களின் நிலைகளும் ஒட்டுமொத்தமாக ஆண்களுக்கு அடிபணியக் கூடியதாகவே இருந்தது.” (ஹன்னி ஜே. மார்ஸ்மேன், உகாரிட் மற்றும் இஸ்ரவேலில் உள்ள பெண்கள்: பண்டைய அன்மைக் கிழக்கிலுள்ள சூழலில் அவர்களின் சமூக மற்றும் மதநிலை, பிரில் வெளியீடு, 2003, பக்-738).
எனவே, இஸ்ரேலிய கலாச்சாரத்தை மட்டும் ஒரு பேரினவாதக் கலாச்சாராமாக தனிமைப்படுத்துவது சரியானதன்று. உண்மையில் சொல்வதென்றால், இஸ்ரவேலின் தேவன் தம்முடைய மக்களுக்கு பரிந்துரைத்த பெரும்பாலான நடவடிக்கைகள், பெண்களைப் பாதுகாப்பதற்கு ஏதுவாகவும், அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு ஏதுவாகவுமே இருந்தன.
ஒரு பெண்ணியவாதியாக, அவர்களுடைய வழிபாட்டுக் காரியங்களில் பின்பற்றப்படும் பாலியல் பாகுபாடு பற்றிக் கூறும் வசனங்களைத் கண்டறிந்து அவற்றை என் சக பெண்களுக்கு அறிவிக்க வேண்டியதை எனது கடமையாகக் கருதுகிறேன்.
பழங்கால எழுத்துக்களின் சூழலையும் கலாச்சாரத்தையும் புரிந்துகொண்டு, எது சரியல்ல என்பதைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவது உண்மையில் உன்னதமானது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்து, தோராவில் பெண்களுக்கு எதிரான காரியங்கள் இருந்தால் பிறரை எச்சரிப்பது நல்லது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் நீங்கள் தோராவுக்கு உண்மையாக இருக்க வேண்டியது அவசியம்.
தோராவில் பெண்களுக்கு எதிராக உள்ள அனைத்து அநீதிகளையும் என்னால் பட்டியலிட முடியாது. கிருபையிலிருந்து விழுந்துபோனதற்கு காரணமானவர்களாக “லிலித்” முதல் பிற அனைத்துப் பெண்களும் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். “லலித்” ஆதாமுக்குக் கீழ்ப்படியாததனால் ஏதேனில் இருந்து வெளியேற்றப்பட்டவர் எனக் கருதப்படுபவர்).
லிலித் தோராவில் சொல்லப்பட்ட ஒரு கதாபாத்திரம் அல்ல. ஆதியாகமம் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள ஆதாம் மற்றும் ஏவாள் வாழ்ந்த வெகு காலத்திற்குப் பிறகு, யூத நாட்டுப்புற இலக்கியங்களிலும், யூதப் பாரம்பரியத்திலும் இடம் பெற்றிருக்கிற ஒரு கற்பனைக் கதாபாத்திரமே இந்த லலித் என்ற கதாபாத்திரம் ஆவாள்.
தோராவில் பெண்களுக்கு எதிரானதாகக் கருதப்படும் வசனங்களின் ஒரு மாதிரிப் பட்டியலைத் தருவதோடு இப்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை நான் தோராவைப் புரட்டிப் பார்க்கும்போது வெளிப்படும் வசனங்களை அப்பட்டியலுடன் சேர்ப்பேன். அதுவரைக்கும் நீங்கள் இங்கே பார்க்கும் எந்த வசனத்தையும் பயன்படுத்தத் தயங்க வேண்டாம்.
ஆதியாகமம் 3:16: ஏவாள் நன்மை தீமை அறியக்கூடிய மரத்தின் கனியை உண்டதால், எல்லாப் பெண்களும் குழந்தை பிறக்கும் போது மிகுந்த வேதனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறுகிறது. (இறந்து போன முதையார்களுக்கு சற்றும் தொடர்பில்லாத அவர்களுடைய உறவினர்கள் பாவப் பரிகாரத்தக்காக பணத்தைச் செலவழிப்பது எப்படியோ அப்படியோ ஏவாளின் பாவத்துக்குச் சற்றம் தொடர்பில்லா அவளுடைய தலைமுறையில் வருகிற பிற்காலப் பெண்கள் பிரசவ காலத்தில் வேதனையை அனுபவிக்க வேண்டியதாயிருக்கிறது. இது பெண்களுக்குக் காட்டும் பாகுபாடு அல்லவா?
ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள மனிதகுலத்திற்கு ஏற்பட்ட பாவவீழ்ச்சியைப் பற்றிச் சிந்திக்கும் முன்னர், ஒன்று மற்றம் இரண்டாம் அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ள படைப்பின் விவரங்களைச் சற்று உற்றுக் கவனிக்க வேண்டியது அவசியம். ஆண், பெண் இருவருமே தேவனுடைய சாயலிலும், வேதனுடைய ரூபத்திலும் படைக்கப்பட்டார்கள். “பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக! தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” (ஆதியாகமம் 1:26,27). இருவருமே தேவ சாயலில் படைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இருவருடைய குணத்திலும் மதிப்பிலும் எவ்வித வேறுபாடும் இல்லை. மேலும் ஆதியாகமம் 1:28-30 -இல் “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் ஆண் பெண் இருவருக்கும் சேர்ந்தே வழங்கப்பட்டுள்ளன. எனவே, படைப்பின் செயல்பாட்டிலிருந்தும், ஆசீர்வாதங்களை வழங்கியதில் இருந்தும், எல்லா ஆணும் பெண்ணும் தேவனுக்கு முன்பாகச் சமமாக இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கிடைய எவ்வித வேறுபாடுகளும் இல்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.
அடுத்ததாக அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டபோது, ஆதியாகம் 2:18-25 வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, தேவனானவர் கணவனுக்கும் மனைவிக்கும் வெவ்வேறு வகையான பாத்திரங்களைக் (பங்களிப்புகளைக்) கொடுத்தார். (அவர்களுடைய மதிப்பில் அல்லது பெறுமதியில் வேறுபாடு அல்ல, பங்களிப்பில் வேறுபாடுகள் என்பதை மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்). தேவன் பெண்ணை ஆதாமுக்கு ஏற்ற துணையாகப் படைத்தார். இதிலிருந்து ஓர் ஆணுக்கு சம அளவிலுள்ள ஓர் உதவியாளர் அல்லது ஒரு துணையாளர் தேவை என்னும் உண்மையைக் கண்டுகொள்கிறோம்.
ஆதியாகமம் 2:18-20 -இல் பயன்படுத்தப்பட்டுள்ள, “ஏற்றதுணை” என்ற வார்த்தைக்கு எபிரெய மொழியில்அய்ஸர் (ay-zer) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தை பழைய ஏற்பாட்டில் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம், மிக இன்றியமையாததும் முக்கியமானதுமான ஆற்றல் மிக்க மீட்பின் நடவடிக்கைகளுக்கு உதவிசெய்யக்கூடிய செயலின் பின்னணியில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தை (ezer) என்னும் பெயர்ச்சொல்லாக பழைய ஏற்பாட்டில் இருபத்தி ஒரு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு முறை முதல் பெண்ணாகிய ஏவாளின் தொடர்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று முறை உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் உதவி செய்கிற (அல்லது ஆபத்தில் உதவி செய்யத் தவறிய) நபர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பதினாறு முறை தேவன் நமக்கு உதவியாளராக இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏவாளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள, “எற்றதுணை” என்ற வார்த்தையானது வேறு பகுதிகளில், “தேவன் நமக்கு உதவிசெய்கிறவர்” என்ற சொல்லப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே தோராவில் பெண்ணின் பங்கு என்பது குறைந்த மதிப்புடையது அல்ல, மேலும் முக்கியத்துவம் குறைந்ததும் அல்ல. ஆகவே பெண்ணின் மதிப்பும் தகுதியும் ஆணுக்குக் கொடுக்கப்பட்டதைப் போலவே இருக்கிறது. ஆயினும் அவர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்பில் வேறுபாடுகள் இருக்கின்றன.
இப்பொழுது மூன்றாம் அதிகாரத்துக்கு வருவோம். ஆணும் பெண்ணும் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் பாவத்தில் விழுந்தனர். நீதியும் பரிசுத்தமுமான தேவனால் பாவம் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். ஆகவே தேவன் அவர்களுக்குத் தண்டனை வழங்கினார். இதில் ஏவாளுக்கு வழங்கப்பட்ட தண்டனையே, அவள் பிரசவ வேதனைப்படும்போது வலி உண்டாகும் என்பது. ஆயினும் ஏவாளுக்குத் தண்டனை வழங்கிய விதத்திலும் தேவன் எவ்விதப் பாலினப் பாகுபாடும் கட்டவில்லை என்பதை மூன்று கருத்துகளை முன்வைத்து அதை நிரூபிக்க விரும்புகிறேன்.
* அவளுக்குப் பிரசவ வலி உண்டாகும் என்று சொல்லப்பட்ட தண்டனையின் ஊடாக, மேலும் ஒரு வாக்குறுதி அவளுக்கு வழங்கப்பட்டதைக் காண்கிறோம். இந்த வாக்குறுதி சர்ப்பத்திற்கு வழங்கப்பட்ட சாபத்தின் ஊடாகக் காணப்படுகிறது. “உனக்கும் பெண்ணுக்கும், உன் சந்ததிக்கும் (வித்துக்கும்) அவளுடைய சந்ததிக்கும் (வித்துக்கும்) பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவருடைய குதிங்காலை நசுக்குவாய்” (ஆதியாகமம் 3:15). இது மேசியாவைப் பற்றிய ஒரு முக்கியமான தீர்க்கதரிசனம். பெண்ணின் வித்திலிருந்து ஒரு மீட்பர் இந்த உலகில் தோன்றுவார் என்னும் வாக்குறுதி ஏவாளுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களில் மிகவும் பெரியதாகும்.
இப்போது நாம் இரண்டாவது குற்றச்சாட்டு நேராக வருவோம். ஏவாள் பாவம் செய்தாள், தண்டனை அனுபவித்தாள். ஆனால் தாங்கள் செய்யாத பாவத்திற்காக எல்லாப் பெண்களும் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்?
முதலாவது நாம் புரிந்துகொள்ள வேண்டிய காரியம் என்னவெனில், பாவத்திற்கான தண்டனை பெண்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை, அது ஆண்களுக்கும் வழங்கப்பட்டது. இங்கு ஆண் பெண் பேதமின்றி இருவருக்கும் வழங்கப்பட்டது. எனவே இது பாலியல் ரீதியிலான பிரச்சினை மட்டுமல்ல. இது ஆதாம் மற்றும் ஏவாள் இந்த இருவருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை வழி வழியாக அவர்களடைய பிள்ளைகளுக்கும் கடத்துவதுடன் தொடர்புடையது. அதாவது அவர்களுடைய பாவத்தின் விளைவைச் சந்ததி சந்ததியாக அனுபவிப்பதாகும். ஆகவேதான் இன்றும் கூட அந்தத் தண்டனையின் பாதிப்பு தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆகவே தோராவில் பாலினப் பாகுபாடு காட்டப்படுகிறது என்று புலம்புவதற்கு முன், சந்ததிதோறும் தண்டனையின் பாதிப்பு கடத்தப்படுவதை எதிர்மறையான காரியமாக மட்டும் காணமால், நேர்மறையான ஒன்றாகவும் இருக்கிறது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஆகவேதான், பிள்ளைகள் பெற்றோரின் சுதந்தரத்தை வழி வழியாகப் பெற்றுவருகிறார்கள். இந்தத் தண்டனையில் அது சொல்லப்படாவிட்டாலும் கூட, வாழ்க்கை என்னும் பரிசை நாம் பெற்றோரிடமிருந்து தான் பெற்றுக்கொள்கிறோம். இந்த ஆசீர்வாதம் அந்த தண்டனையின் ஊடாகவே அடங்கியிருக்கிறது. ஆதாமுக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் குறித்துப் பார்ப்போம். ஒரு நாட்டின் பிரதம அமைச்சரோ அல்லது ஒரு மாநிலத்தின் தலைமை அமைச்சரோ எடுக்கும் ஒரு முடிவானது அதன் குடிமக்கள் அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவது போல, ஆதாம் மனித இனத்தின் தலைவராக இருப்பதால், அவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை முழு மனித குலத்தையும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளது. மனித சமுதாயத்தில் நாம் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களாக இருக்கும் வரை, ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு இத்தகைய விளைவுகள் உண்டாவது தவிர்க்க முடியாதது ஆகும். ஒரு தலைமைப் பிரதிநிதி என்ற வகையில் ஒரு நாட்டின் தலைவர் எடுக்கும் முடிவுகள், அது போர் போன்ற பெரிய காரியமாக இருந்தாலும், அல்லது சிறிய காரியமாக இருந்தாலும் அது மக்களைப் பாதிக்கிறது. மேலும் ஒரு குடும்பத் தலைவர் என்ற முறையில் ஒரு ஆண் எடுக்கிற காரியங்கள் பிள்ளைகளைப் பாதிக்கின்றன. எடுத்துக்காட்டாக, வேலை தொடர்பாகவோ, அல்லது தங்குமிடம் தொடர்பாகவோ அல்லது இடம் பெயர்வது தொடர்பாகவோ எந்த முடிவெடுத்தாலும் அவை பிள்ளைகளின் மீது அழியாத முத்திரையை பதித்துவிடுகின்றன.
“உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” (ஆதி. 3:16) என்று கூறுவதன் மூலம் பாலினங்களுக்கு இடையேயுள்ள சமத்துவமின்மையோடு அதாவது ஆண்களுக்கு அதிகாரத்தை வழங்குவதோடு இந்த வசனம் முடிகிறது.
இந்த கேள்வியைச் சிந்திப்பதற்கு முன்னதாக, இது ஒரு திருமண உறவுக்குள் ஏற்படும் மாற்றத்தைப் பற்றி பேசுவதால், திருமணம் பற்றிய தேவனின் கண்ணோட்டத்தை அல்லது திருமணத்தில் தேவன் ஏற்படுத்தி வைத்திருக்கிற அமைப்பு முறையைப் பற்றிச் சிந்திப்போம். திருமணம் என்பது தேவனால் திட்டமிடப்பட்டு நிறுவப்பட்டது. ஒரு குடும்பத்தில், பல்வேறு விதமான கடமைகளும், பங்களிப்புகளும், பொறுப்புகளும் உள்ளன. தேவன் ஏற்படுத்திய இத்தகைய கடமைகளையும் பங்களிப்புகளையும் நாம் புரிந்துகொண்டு வாழ்வதே ஒரு சிறந்த குடும்பத்திற்கான எடுத்துக்காட்டாகும். ஒரு குடும்பத்தில் கணவனின் பங்கு என்பது அக்குடும்பத்தைத் தலைமை தாங்கி நடத்துவதாகும். அவன் தன் வீட்டிற்கு சேவை செய்யும் ஒரு அன்பான தலைவனாக விளங்குகிறார். மனைவிக்கும் இதற்கு நிகரான பங்களிப்பு இருக்கிறது. கணவனுக்கு ஏற்ற உதவியாளராக இருப்பதும், அவருடைய தலைமைக்குக் கீழ்ப்படிந்து இருப்பதுமே அவளுடைய கணவனுக்கு நிகரான பங்களிப்பாகும். இந்த உலகத்தில் எந்த நிறுவனத்தையோ அல்லது அமைப்பையோ எடுத்துக்கொண்டாலும், அங்கு பணிபுரிகிற எல்லாருக்கும் ஒரே மாதிரியான பங்களிப்பு கிடையாது. எல்லோரும் ஒரே பங்களிப்பை அல்லது பொறுப்பை ஏற்று, எல்லாரும் ஓரேவிதமாகச் செயல்பட்டால், அந்தச் சமுதாயத்தில் குறைவுகளும், திறமையின்மைகளும், குழப்பங்களுமே மிஞ்சும். குடும்பம் என்பது ஒரு பெரிய சமுதாயத்தின் மிகச்சிறிய அம்சம் அல்லது நிறுவனம் ஆகும். ஏற்கனவே நாம் விவாதித்தபடி, குடும்பத்திற்கு தேவன் சமமான மதிப்புள்ள, ஆனால் வெவ்வேறு பொறுப்புள்ள பாத்திரங்களை வழங்கியிருக்கிறார். அப்பொழுதே குடும்பம் என்னும் அமைப்பு தன்னுடைய முழுத் திறனுடன் செயல்பட முடிகிறது.
குடும்ப வாழ்க்கையானது, அன்பு, ஆறுதல், மற்றும் பெண்ணின் ஆசை நிறைவேறுதல் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எளிதானதாக இருப்பதற்குப் பதிலாக, பாவம் உலகத்தில் நுழைந்ததால் அது வலிந்து நடத்துகிற ஒன்றாக மாறிவிட்டது. பாவத்தின் விளைவாகக் கணவன் மனைவி ஆகிய இருவரின் மனப்பான்மையும் மொத்தமாகத் தலைகீழாக மாறிவிட்டது. மனைவியானவள் தன் கணவனின் தலைமைக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்திருப்பதற்குப் பதிலாக, பாவம் பிரவேசித்ததன் காரணமாக இப்போது வலுக்கட்டாயமாகக் கீழ்ப்படிகிற நிலைமைக்கு ஆளாகிவிட்டது. உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும் என்னும் அறிக்கையானது, மனைவி கணவன் மீது கொண்டிருக்கும் எளிய ஆசையன்று, மாறாக அது கணவனையே ஆளுகை செய்ய வேண்டும் என்னும் ஆசையாகும். “அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய்” (ஆதி. 4:7) என்று காயீனை ஆளுகை செய்ய வேண்டும் என்கிற பாவத்தின் ஆசையைப் பற்றிச் சொல்லும்போதும் இதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும்” என்ற வசனத்தின் அர்த்தம், “பெண் தன் கணவனைக் கட்டுப்படுத்த விரும்புவாள், ஆனால் அவனோ அதையும் மீறி அவளுடைய எஜமானனாக இருப்பான்” என்பதாகும். தேவன் கொடுத்த பொறுப்பை அழகான முறையில் வெளிப்படுத்த வேண்டிய மனைவி என்னும் பாத்திரம், பாவத்தின் காரணமாக இப்பொழுது வெறுப்புடன் செய்ய வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. பாவம் நுழைந்ததின் விளைவாக பெண்ணைப் பற்றியிருந்த ஆசையானது அவளது கணவனின் அதிகாரத்தால் உறவுகள் விரக்தியடையும் நிலைக்குச் சென்றுவிட்டது. மேலும் இந்த ஆசையானது, வீழ்ந்துபோன உலகில், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே மோதல்களுக்கு ஓர் ஆதாரமாகவும் ஆகிவிட்டது. ஆயினும், பாவத்தின் தாக்கத்தால் முழுமையான வகையில் வாழ்க்கை மூழ்கியிருந்தாலும், இது எந்த வகையிலும் குடும்பத்திலுள்ள அதிகாரத்தை அகற்றிப் போடாமல், அதிலுள்ள வெவ்வேறு பாத்திரங்கள் எவ்வாறு தங்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றப்படும் என்பது தொடர்ந்து இருந்து வருகிறது.
ஆதியாகமம் 19:8 : லோத்து என்ற ஒரு மனிதன் தூதர்களைக் காப்பாற்றுவதற்காக தன் சொந்த மகள்களை மோசமான நடத்தையுள்ள ஒரு குழுவினருக்குக் கொடுக்க முன்வந்த செயல் பெண்களை இழிவாக நடத்துகிற செயல் அல்லவா?
தொடக்கத்தில் நாம் குறிப்பிட்டபடி, இந்தக் காரியமானது அங்கே என்ன நடந்ததோ அதை எவ்விதப் பாரபட்சமும் இன்றி வெளிப்படையாகவும் உண்மையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதோமின் ஆண்கள் கூட்டம், ஆண்களுடன் தவறாக நடக்க விரும்பி லோத்தின் வீட்டைச் சுற்றி வளைந்துகொண்டர். தன்னைத் தேடிவந்த இரண்டு தூதர்களுக்குப் பதிலாக, லோத் தனது சொந்த மகள்களை வழங்க முன்வந்த செயல் சரியானதா? நிச்சயமாக? இல்லை. இந்த சம்பவத்தில் லோத்து ஒரு தவறான பார்வையைக் கொண்டிருந்தான், அதாவது அவன் நற்குணத்தில் தரம் தாழ்ந்தவனாகவும், உலகத்தாரைப் போலவும் நடந்துக் கொண்டான். ஆனால் அவனுடைய வீட்டிற்கு விருந்தினராக வந்த இரண்டு கர்த்தருடைய தூதர்கள் லோத்துவையும் அவனது இரண்டு மகள்களையும் அந்த ஊர் ஆண்களிடமிருந்து பாதுகாத்துக்கொண்டனர். தன்னையும் தன் வீட்டையும், தன் விட்டுக்கு வந்த விருந்தினரையும் பாதுகாக்கும் பொருட்டு, இவ்விதமான முடிவை அவன் எடுத்தான். குறிப்பாக அந்த ஊர் ஆண்களை சமாதானப்படுத்தும் பொருட்டு இவ்விதமான வார்த்தைகளைப் பேசினான். ஆயினும் அவன் தன் சொந்த மகள்களை வழங்க வேண்டும் என்பது தவறான தெரிந்தெடுப்பே ஆகும். இருப்பினும் கர்த்தருடைய தூதர்கள் லோத்தின் செயலை நிராகரித்து, தங்களுடைய அதிகாரத்தால் அதை வேறு விதமாகக் கையாண்டர்கள். இதன் மூலம் லோத்தின் இத்தகைய தவறான நடத்தையை தேவன் ஏற்கவில்லை என்பதைக் காண்கிறோம். மேலும் குற்றவாளிகளைக் குருடாக்கிய தன் மூலம் லோத்தின் மகள்களைப் பாதுகாக்கத் தேவையான காரியங்களை அவர் செய்தார் என்பதையும் இது காட்டுகிறது. ஒரு பூமிக்குரிய தந்தை தன் சொந்த மகள்களைப் பாதுகாக்கத் தவறினாலும் கூட, தேவன் அந்தப் பெண் பிள்ளைகளைப் பாதுகாக்கிறார்.
இந்தக் காரியங்கள் நடந்த பின்னர், லோத்து தனது சொந்த மகள்கள் கர்ப்பந்தரிக்கும் படிக்கு காரணமாகிறான். இதுவும் பெண்களைத் தவறாகக் கையாளுகிற செயல் அல்லவா?
ஆதியாகமம் 19:31-32 வரையுள்ள வசனங்கள் இந்தச் சம்பவத்தின் காரண காரியத்தை தெளிவாக விளக்குகின்றன. லோத்தின் மகள்கள், தங்களைத் திருமணம் செய்து, சந்ததியை உண்டாக்குவதற்கு அதாவது குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு அந்த இடத்தில் எவ்வித ஆண்களும் இல்லை என்று நம்பினர். ஏனெனில் அவர்கள் சோதோம் நகரின் அழிவைக் கண்டவர்கள். மேலும் அங்கே எல்லாரும் இறந்திருக்கலாம், பூமியில் எஞ்சியிருக்கும் மக்கள் தாங்கள் மட்டுமே என்று நம்பியிருக்கலாம். மேலும் இந்த இளம் பெண்கள் தாங்கள் இதுவரைக்கும் வாழ்ந்த நகரத்தின் பாவ கலாச்சாரத்தின் தாக்கத்தினாலும் இந்த முடிவை எடுத்திருக்கலாம். சோதோம் மக்களின் இயல்புக்கு மாறாக ஒழுக்கக்கேடான பாலியல் பழக்கங்களுக்காக தேவன் அவர்களைத் தண்டித்தார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இருப்பினும் இவ்விரு பெண்களும் தங்களது குடும்பத்தின் வம்சம் அழிந்துபோகாமல் காப்பாற்ற முயன்றனர்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியம், தந்தையோடு உடலுறவு கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் அந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கே ஏற்பட்டது, அவர்களே இதற்காக முயற்சியைத் தொடங்கினார்கள். லோத்து தனது சொந்த மகள்களுடன் உடலுறவு கொண்டதற்கான காரணம் என்ன? அவருக்க ஏற்கனவே மதுபானம் குடிக்கும் பழக்கம் இருந்தது, இந்தக் குடிப்பழக்கத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அவ்விரு வாலிபப் பெண்களும் சதிசெய்தார்கள். லோத்து ஏற்கனவே குடிகாரனாக இருந்ததால், தன் மகள்கள் கொடுத்த மதுபானத்தை விருப்பத்துடன் குடித்தான். அவனுக்கு மேலும் மேலும் மதுபானம் கொடுக்கப்பட்டதால் அவன் தன் கட்டுப்பாட்டையும் பொது அறிவையும் இழந்தான். (ஆதியாகமம் 19:30-38), மேலும் தான் என்ன செய்கிறோம் என்று அவனுக்கே உணர்வில்லாத நிலை இருந்தது. இருப்பினும் அவன் செய்ததை எந்த விதத்திலும் நியாயப்படுத்தாது. ஒரு நபர் அளவுக்கு அதிகமாக மதுபாகம் குடிக்கும்போது, அவரால் நல்ல காரியங்களைச் செய்யும்படி தேர்ந்தெடுக்க முடியாது. நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை இது. மேலும் மோசேயினால் கொடுக்கப்பட்ட சட்டத்திலும் இத்தகைய முறை தவறிய உடலுறவு தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது, தேவன் அங்கீகரிக்காத ஒன்றாகவே இது இருக்கிறது (லேவியராகமம் 18:6-26). இத்தகைய உறவுகள் தேவனுக்கு முன்பாக அறுவெறுப்பான செயலாகவே பார்க்கப்படுகிறது.
லோத்தின் மனைவி ஏதோ திரும்பி சோதோம் நகரத்தின் அழிவின் எச்சங்களைச் சற்றுத் திரும்பிப் பார்த்ததற்காக தேவன் அவளைக் கொன்ற செயல் பெண்களின் மீது அவருக்கு இருந்த குறைவான அபிப்பிராயத்தினால் தானா?
லோத்தும் அவனுடைய குடும்பத்தாரும் நகரத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்குத் தப்பிச் செல்லும்போது திரும்பிப் பார்க்கக்கூடாது என்று தேவதூதர்கள் தெளிவாக எச்சரித்திருந்தார்கள். எனவே, இது “வெறுமனே திரும்பிப் பார்க்கிற” ஒரு செயலாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் ஓடிச்செல்லும்போது அவர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு நேரடிக் கட்டளை தேவதூதர்களிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தது. முழு நகரமும் எரிக்கப்படும்போது அவர்கள் அதிலிருந்து மீட்கப்பட்டனர். எனவே தேவன் அவர்கள்மீது காட்டிய மாபெரும் இரக்கத்துக்கு அவர்கள் வாழ்க்கையில் காட்டவேண்டிய பிரதி உபகாரத்துக்கு அடையாளமாகவே திரும்பிப் பார்க்க வேண்டாம் என்னும் கட்டளை கொடுக்கப்பட்டது. இதற்கு அவர்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். ஆனால் தேவதூதர்களால் கொடுக்கப்பட்ட ஒரு நேரடியான கட்டளைக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாதது லோத்தின் மனைவியின் குற்றமே ஆகும். வேண்டுமென்றே சட்டங்களை மீறுகிற செயல்களுக்கு எந்த நீதிமன்றமும் தண்டனையே வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆகவேதான் லோத்தின் மனைவி உப்புத் தூணாக மாறினாள். இது அவள் ஒரு பெண்ணாக இருப்பதால் கொடுக்கப்பட்ட தண்டனை அல்ல. லோத்து திரும்பிப் பார்த்திருந்தாலும், அவனது கீழ்ப்படியாமையின் விளைவாக அவனும் சட்டத்தை மீறியதன் அடிப்படையில் தண்டனையைச் சந்தித்திருப்பான். எனவே, லோத்தின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வுகள் தேவன் எந்த வகையிலும் பாலினப் பாகுபாடு பார்க்கிறவர் அல்ல, என்பதை தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவன், பாவத்தை எந்தப் பாலினத்தவர் செய்தாலும், யாரையும் பொருட்படுத்தாமல் அதைத் தண்டிக்கிறவர் என்பதை இதன் மூலம் தெளிவாக அறிந்துகொள்கிறோம்.
ஆதியாகமம் 38:16-24: இந்த வேதபகுதி யூதா என்ற மனிதன் தன் விதவை மருமகளுடன் உடலுறவு கொண்ட அந்த நிகழ்வைச் சொல்கிறது. அவள் துக்கத்தின் ஆடை அணிந்திருந்ததை, விபச்சாரியின் ஆடை என்று தவறாகக் கருதி யூதா (ஒரு முட்டாள்தனமான மனிதனாக) அவளுடன் உடலுறவு கொண்டான். பின்னர் அவன் அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டான். இது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இல்லையா?
இது மிகவும் சுவாரசியமான கதை என்று சொல்லுகிறார். ஆனால் அவர் முழுக்கதையையும் புறக்கணித்துவிட்டு, கதையில் ஆங்காங்கே சில குறிப்புகளை மட்டும் எடுத்து வைத்து குற்றம் கண்டுபிடிப்பது சரியானது அல்ல. அகவே நாம் இதன் முழுக் கதையையும் பார்ப்போம். இந்த சம்பவத்தின் பின்னணி என்னவென்றால், தாமார் யூதாவின் மூத்த மகன் ஏர் என்பவனை மணந்திருந்தாள். இவன் இறந்துவிட்டான். எனவே யூதாவின் இரண்டாவது மகன் ஓனான் அவளை மணந்தான். ஆனால் அவன் தன் சகோதரனின் சந்ததியைப் (இஸ்ரவேலின் பொதுவான வழக்கம்) பாதுகாக்க விரும்பாததால் வேண்டுமென்றே அவளுக்கு குழந்தை உண்டாவதற்கான வாய்ப்பை மறுக்கிறான். இதனால் தேவன்அவனையும் கொன்று விடுகிறார். தேவன் பாலியல் பாகுபாடு காட்டுகிறவர் அல்ல என்பதற்கு இங்கே ஒரு நிரூபணம் இருக்கிறது. ஏனெனில் இந்தக் கதையில் அவர் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு எந்த வகையிலும் சாதகமாக நடந்துகொள்ளவில்லை. ஓனான் தாமாருக்கு கடமை தவறியபோது, தேவன் அவனைக் கொன்றுவிடுகிறார். தேவன் பாலியல் விஷயங்களில் பாரபட்சம் காட்டுகிறார் என்பது உண்மையல்ல. இங்கே ஆண்களுக்குச் சாதகமாக இருந்து ஒருதலைப் பட்சமாக நடந்துக் கொள்ளவில்லை என்பதற்கு இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும். இதற்கு மாறாக பாலுறவுக் காரியத்தில் பெண்ணின் உரிமையை தேவன் நிலைநாட்டுகிறதையே காண்கிறோம். மேலும் அவளிடம் அநியாயமாக நடந்துக் கொண்டதற்காக தண்டிக்கிறதையும் பார்க்கிறோம்.
இரு மகன்களும் இறந்துவிட்டதால் அவர்களுடைய வழக்கத்தின்படி யூதா இப்போது தனது மூன்றாவது மகனை தாமாருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். ஆனால் மூன்றாவது மகனும் இறந்துவிடுவானோ என்று அஞ்சி அவர் அதைச் செய்யவில்லை. யூதா அவளை அவளுடைய தந்தையின் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறான். இங்கே கவனிக்க வேண்டிய முதலாவது முக்கியமான காரியம் யூதா தாமருடன் உடலுறவு கொண்டபோது, அவள் தனது மாமனாருடன் வசிக்கவில்லை.
இப்போது, தாமருடைய செயலின் நோக்கத்தைக் காண்பதற்காக பின்வரும் வசனங்களை வாசித்துக்கொள்வோம்.
ஆதியாகமம் 38:11-15: “அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள். அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து.”
தாமார் அணிந்திருந்த முக்காட்டை யூதா வேசியின் முக்காடாகக் கருதினான் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்று இந்த வசனப் பகுதியின் வாயிலாக தெளிவாக அறிந்துகொள்கிறோம். தன் மாமனாகிய யூதா தன்னுடைய நகரத்துக்கு வந்திருக்கிறான் என்பதை அறிந்த தாமார், தனது விதவையின் ஆடைகளைக் கழற்றிவிட்டு, வேண்டுமென்றே ஒரு விபச்சாரியின் ஆடையை அணிந்திருந்தாள் என்பது இந்தப் பகுதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யூதா தனது மூன்றாவது மகனை தனக்குத் திருமணம் செய்துக் கொடுக்கவில்லை என்பதற்காக அவளுடைய ஒருவிதமாகபழிவாங்கல் இது. எனவே இந்த பெண்ணியவாதி இதை வேண்டுமென்றே இந்தப் பகுதியை தவறாகச் சித்தரித்து குற்றஞ்சாட்டியிருக்கிறார். யூதா ஒரு முட்டாளும் இல்லை, தாமார் விதவையின் உடையிலும் இல்லை. தாமாரின் நோக்கம், ஒரு விபச்சாரியாக நடித்து, யூதாவைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்பதே ஆகும். இதற்காக அவள் திட்டமிட்டு நாடகமாடினாள் என்பது தெளிவாகத் தெரிகிறது. லோத்தின் மகள்களின் காரியத்தைப் போலவே, இங்கேயும் தாமாரே தனது முதல் அடியை எடுத்து வைக்கிறாள். யூதா செய்ததை இது எந்த விதத்திலும் நியாயப்படுத்தாது. அது தீயது மற்றும் இழிவானது. ஆனால் முழு உண்மையையும் உணர்த்தும் வசனங்களை மேற்கோள் காட்டுவதை எவ்வளவு வசதியாக இந்த பெண்ணியவாதி தவிர்த்திருக்கிறார்.
பின்னாட்களில் யூதா மீண்டும் அந்த இளம் பெண்ணைப் (தாமாரைப்) பார்த்து, அவள் விபச்சாரியாக இருந்ததற்காக எரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இருவரும் இணைந்து தவறான செயலில் ஈடுபடும் போது, அந்தப் பெண் மட்டும் தண்டிக்கப்பட வேண்டும் என எவ்வாறு கோரிக்கை வைக்கிறார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்). ஆனால் உண்மை தெரிந்தபிறகு, யூதா அந்தப் பெண்ணை தன் மருமகளாக அங்கீகரித்து, அவள் தன் குழந்தையுடன் இருந்தபோது அவளைக் கொல்ல வேண்டாம் என்று அவன் முடிவு செய்தான். யூதா உடலுறவில் ஈடுபடலாம், தேவைக்கு ஒரு விபச்சாரியைப் பயன்படுத்தலாம், அதுவும் அவனைக் காட்டிலும் மிகவும் இளைய பெண்ணை கர்ப்பந்தரிக்கச் செய்யலாம், ஆனால் அவள் மட்டுமே மரணத்திற்கு தகுதியானவள் என்று அவர் நினைப்பது பாலினப் பாகுபட்டினால் அல்லவா?
யூதாவுக்கும் தாமாருக்கும் இடையே என்ன நடந்ததோ அது எவ்வித ஒளிவு மறைவுமின்றி வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நாங்கள் மீண்டும் சொல்ல விரும்புகிறோம். இந்தச் சம்பவமானது, மனிதன் முற்றிலும் பாவத்தால் ஆட்கொள்ளப்பட்டவனாகவும், கறைப்படிந்தவனாகவும், அவனது பாவநடத்தையில் எந்த எல்லைக்கும் அவனால் செல்வான் என்னும் வேதாகமத்தின் மையக் கருத்துக்கு உடன்பட்டதாகவும் ஆதரவளிக்கிறதாயும் இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். தேவனின் கிருபையையும் இரக்கத்தையும் தவிர அவனுக்கு வேறு எவ்வித நம்பிக்கையும் இல்லை.
நான் முன்பே குறிப்பிட்டது போல, திருமண உறவுக்கு அப்பாற்பட்டு நடக்கிற விபசாரம் போன்ற எந்தவொரு பாலியல் உறவுகளும் பாலியல் பழக்கவழக்கங்களும் தேவனால் தண்டிக்கப்படுகின்றன. யூதாவுக்கோ! அல்லது தாமாருக்கோ! சட்ட விரோதமான பாலுறவில் ஈடுபடும்படி தேவன் எந்த உரிமத்தையும் வழங்கவில்லை. எனவே, “யூதாவால் உடலுறவு கொள்ள முடியும், ஆனால் தாமரால் முடியாது” என்று இந்த பெண்ணியவாதி எப்படிச் சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. தேவனுடைய நீதிமன்றத்தில், இருவரும் சமமாகக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்கள். யூதா தான் உறவு கொண்டவள் தன்னுடைய மருமகளாகிய தாமார் என்று உணர்ந்தவுடன் அவன் அவளிடத்தில் மேலும் உறவு கொள்ளவில்லை என்பது வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. யூதாவும் கூட இத்தகைய தவறான உடலுறவுக்கு எதிரானவர் என்பதையே இது காட்டுகிறது.
மத்தேயு ஒன்றாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள மேசியாவின் குடும்ப வழிப்பட்டியலில் தாமாரின் பெயர் இடம் பெற்றிருப்பது. குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெண்கள் பரிபூரணமான வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தாலும் தேவன் அவர்களை (பெண்களை) எவ்வாறு உயர்த்துகிறார் என்பது இதன் மூலம் உறுதியாகிறது அல்லவா!
யாத்திராகமம் 21:3-4: இந்த வேதபகுதியில், ஒரு எஜமான் தன்னிடத்தில் இருக்கிற ஒரு ஆண் அடிமைக்கு ஒரு பெண்ணை வாழ்க்கைத் துணையாகக் கொடுத்திருந்தாலும் (அவர்கள் எவ்வளவு காலம் திருமணம் செய்திருந்தாலும், அவர்கள் ஒருவரையொருவர் எவ்வளவு நேசித்தாலும் அல்லது குழந்தைகளைப் பெற்றிருந்தாலும்) அந்த அடிமை ஆண் விடுதலை பெற்றுப் போகிற சமயத்தில் தனது மனைவி அல்லது குழந்தைகளுடன் செல்ல முடியாது என்று கூறுகிறது. அவனுடைய மனைவியும் அவர்கள் பெற்ற குழந்தைகளும் எஜமானரின் சொத்தாகவே உள்ளது. இங்கே அந்தப் பெண் மற்றும் பிள்ளைகளுடைய தனிப்பட்ட மகிழ்ச்சியும், அந்தக் குடும்பத்தின் முக்கியத்துவமும் ஒரு பொருட்டாகவே எண்ணப்படவில்லையே?
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிற வேதபகுதியை தெளிவான வகையில் ஆராய்வதற்கு முன்னதாக அதன் பின்னணியை ஆராய்வது நமக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். பண்டைய உலகில் அடிமைத்தனம் கட்டுப்பாடற்ற வகையில் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. இத்தகைய அடிமைத்தனத்திற்கு வேதாகமமே காரணம் என்று சிலர் நினைக்கிறார்கள். இது முற்றிலும் முரணானது. மோசேயின் காலத்திற்கு முன்னரே அல்லது இஸ்ரவேல் நாடு உருவாவதற்கு முன்னரே அடிமைத்தனம் உலகில் இருந்தது. உண்மையைச் சொல்வதென்றால் எபிரெய மக்களே எகிப்தில் 400 ஆண்டுகளாக அடிமைகளாக இருந்தார்கள்.
அவர்கள் எகிப்தில் இருந்த சமயத்தில் அடிமைத்தனம் எவ்வளவு கொடூரமாக இருந்தது என்பதை நாம் பார்க்கிறோம். பண்டைய உலகில் இருந்த அடிமை முறையானது மனித இனத்தை மிகவும் இழிவுபடுத்துகிற ஒன்று என பண்டைய வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அடிமைகளின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிற எவ்வித சட்டங்களும் விதிமுறைகளும் அந்தக் காலத்தில் இல்லை. அவர்கள் மிகவும் தவறாக நடத்தப்பட்டார்கள், தவறாகக் கையாளப்பட்டார்கள். சமுதாயத்தில் எவ்வித மதிப்பும் இன்றி காணப்பட்டார்கள். பலர் அடித்துக் கொல்லப்பட்டார்கள், பலருக்கு உணவு கொடுக்கப்படாமல் பசியால் மடிந்தார்கள். அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை, விலங்குகளைக் காட்டிலும் மோசமான முறையில் நடத்தப்பட்டார்கள்.
இந்த சூழலைப் பார்க்கும்போது, யாத்திராகமம் 21 -ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட அடிமைகளைக் குறித்த காரியங்கள் எத்தனையோ சிறப்பானதாக அமைந்துள்ளது. தேவன் அடிமைகளின் மீது எவ்வளவு கரிசனையுள்ளவராக இருந்தார் என்பதைக் காணமுடிகிறது. ஆம், அது தேவனுடைய இளகிய இருதயத்தின் வெளிப்பாடே ஆகும். பண்டைய உலகத்தைப் போலவே இஸ்ரவேல் மக்களுக்கும் அடிமைகள் இருந்தார்கள். ஆனால் இவ்விரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருந்ததைக் காணடிமுடியும். பண்டைய காலத்தில் இருந்த அடிமைகளைப் போலவே இஸ்ரவேல் மக்களிடத்தில் இருந்த அடிமைகளும் இருந்தார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் பண்டைய உலகத்தைப் போல இஸ்ரவேலர்களின் அடிமைகள் மிருகத்தனமாகவோ இழிவாகவோ நடத்தப்படவில்லை. பண்டைய காலத்தில் அடிமைத்தனம் இருந்ததால், அதைத் தவிர்க்க முடியாத வகையில் ஏற்றுக்கொள்கிறது. “புதிய ஏற்பாட்டில் பவுல் காலத்தில் அப். பவுல் இத்தகைய அடிமைத்தனத்தை எவ்வாறு ஏடுத்துக்கொண்டாரோ அவ்விதமாகவே தோராவும் எடுத்துக்கொள்கிறது. ஆனால் பண்டைய உலகத்தைப் போல அல்லாமல் புதிய மனிதாபிமான அணுகுமுறையுடன் அவர்களைப் பார்க்கிறது. இறுதியில் அடிமைகளுக்கு விடுதலை கொடுப்பதன் மூலமாக அதற்குச் சாவுமணி அடிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் அடிமைத்தனம் இஸ்ரவேலின் கிராமப்புறங்களிலும், சிறிய ஊர்களிலும் ஒரு சிறிய அளவில் இருந்தது” என்று திரு. கோல் என்பார் கூறுகிறார். “மோசே அடிமைத்தனத்தின் எந்த வடிவத்தையும் நிறுவவில்லை; மேலும் அது தொடர்பான சட்டங்களை இயற்றி அதை ஒரு குறுகிய எல்லைக்குள் சுருக்கினார். இறுதியாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்பட்டன” என்று பிரசிங்கிகளின் இளவரசனான C.H. ஸ்பர்ஜன் கூறுகிறார்.
“யாத்திராகமப் புத்தகத்தில் நியாயப்பிரமாணச்சட்டங்கள் பற்றிச் சொல்லப்பட்டபகுதியின் முதல் வார்த்தைகளே வேலைக்காரர்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் இஸ்ரவேலர் மதிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்னும் கருத்துடன் தொடங்குவது குறிப்பிடத்தக்கது ஆகும். அடிமைகளை மனிதர்களாகக் கூட கருதாத ஒரு கலாச்சாரத்திலேயே, அவர்களை இழிவுபடுத்துவதைக் கட்டுப்படுத்தவும், அவர்களுக்குரிய கண்ணியத்தை வழங்கவும் விதிகளையும் ஒழுங்கு முறைகளையும் வகுத்த வேதாகமத்தின் தேவனுடைய இதயத்தைப் பாருங்கள். சீனாய் மலையிலிருந்து மோசேயிடம் தேவன் பேசிய வார்த்தைகளில் முதல் வார்த்தையைக் கவனியுங்கள். உங்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டுவந்தர் யெகோவா என்றே அது அறிவிக்கிறது. சீனாய் மலையிலிருந்து கொடுக்கப்பட்ட இன்றியமையாத நியாயப்பிரமாணச் சட்டத்தில் முதல் முதலாகக் கையாளப்படும் நபர் அடிமைகள் என்பவர்களே ஆவார்” என்று திருவாளர் “சாட்விக்” என்பவர் கூறுகிறார்.
ஒரு எபிரெயர் மற்றொரு எபிரெயருக்கு அடிமையாக மாற வேண்டுமாயின் நான்கு அடிப்படை வழிகள் இருந்தன.
மேற்கண்ட நான்கு சந்தர்ப்பத்திலும், ஒருவன் வேறொருவருக்கு ஏன் வேலைக்காரனாக ஆக வேண்டும் என்ற நோக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கடன் பிரச்சினையினால் சாவதை விட, ஒருவனிடத்தில் வேலைக்காரனாக இருப்பதன் மூலம் அவன் வாழ முடியும் என்பதை நாம் காண்கிறோம்.
யாத்திராகமம் 21 -ஆம் அதிகாரத்தில், உண்மையிலே என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துக் கொள்வதற்காக அந்த அதிகாரத்தின் முழுப் பகுதியையும் படிக்கவேண்டும். ஆங்காங்கே சில வசனங்களை எடுத்துக்காட்டினால் முழுமையான பொருளைப் புரிந்துகொள்ள முடியாது. எனவே உண்மையை என்ன என்பதை அறிய அந்த அதிகாரத்தின் முதல் ஆறு வசனங்களைக் கவனமாகப் படிக்க வேண்டியது அவசியம்.
யாத்திராகமம் 21:1 –வது வசனத்தில், ஒரு எஜமானன் வேலையாட்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் தேவன் கட்டமைக்கிறார். இது ஒரு எஜமானன் தம்முடைய வேலைக்காரர்களை தாம் விரும்பியபடி நடத்துவதற்கான உரிமையைப் பறிக்கிறது. இதுவே பழங்காலக் கலாச்சாரத்தில் நாம் நம்புவதற்கு அரிதான ஒரு விதிமுறை.
யாத்திராகமம் 21:2 –வது வசனத்தில், ஒரு வேலைக்காரன் தன் எஜமானுக்கு என்றென்றும் அல்லது நிரந்தரமாக கட்டுப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைத் தெரிவிக்கிறது. அவன் அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் மட்டுமே அடிமையாக ஒருவனிடத்தில் இருக்க முடியும். அதற்குப் பிறகு அவனுக்கு விடுதலை கொடுத்துவிட வேண்டும். இதன் மூலம் ஒரு வேலைக்காரன் எஜமானரின் ஒரு உடைமையாக அல்லாமல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான தொழிலாளியாகவே இருக்கிறான். மேலும் இவன் எந்த முகாந்தரத்தை முன்னிட்டு வேலைக்காரனாக மாறியிருந்தாலும், ஏழாவது ஆண்டில் அவன் பணமோ அல்லது வேறு எந்தக் கிரயமோ செலுத்தாமல் சுதந்தரமாக எஜமானிடமிருந்து வெளியேறிச் செல்ல முடியும். இத்தகைய முறையில் ஒரு அடிமையை விடுதலையாக்குவது என்பது பழங்காலச் சமுதாயத்தில் கேள்விப்பட்டிராத ஒன்று.
யாத்திராகமம் 21:3 –வது வசனத்தில், அவன் திருமணம் செய்து கொண்டவனாக வந்திருந்தால் அவன் விடுதலை பெற்றுப் போகிற சமயத்தில் தனது மனைவியையும் தன்னுடன் அழைத்துச் செல்லலாம் என்று நாம் காண்கிறோம். (பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைச் சுட்டிக்காட்டுகிற இந்தப் பெண்ணியவாதி இந்த வசனத்தைப் படித்திருந்தாலும் இந்தக் கருத்தை அறியாமல் போனது ஏனோ?). தன்னிடம் வருகிற ஒரு அடிமைக்கு குடும்பம் இருந்தால் அந்தக் குடும்பத்தையும் அந்த எஜமானர் கவனித்துக் கொள்ளவேண்டும். மேலும் அந்த அடிமை தனது குடும்பத்தை தன்னுடன் வைத்துக் கொள்ளவும், மனைவியுடன் இணைந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். ஓர் அடிமைக்கு குடும்ப வாழ்க்கை நடத்துவது என்பது அந்தக் காலக் கலாச்சாரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
யாத்திராகமம் 21:4-6 வசனங்களில், ஒரு அடிமை குடும்பம் இல்லாதவனாக வந்திருந்தால், அவன் வந்தபின் அவனுக்கு எஜமான் திருமணம் முடித்துக்கொடுத்து குடும்பம் நடத்த அனுமதித்திருந்தால் (இதுவும் அந்தக் கலாச்சாரத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாதது), அந்தக் குடும்பம் எஜமானருக்கு சொந்தமானது. அதாவது அவனுடைய மனைவியும் அவளுடைய பிள்ளைகளும் எஜமானுக்குச் சொந்தமானவர்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது இது நியாயமற்றதாகத் தோன்றினாலும், அந்தக் காலத்தில் இருந்த அடிமைத்தனத்தோடு ஒப்பிடும் போது இது பெரிய காரியமே அல்ல. அந்தக் காலத்திய கலாச்சாரம் ஓர் அடிமைக்கு ஒரு குடும்பத்தைக் கொடுக்க வேண்டும் என்பதைக் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு செயலாகும். குடும்பத்தோடு வந்திருந்தால் குடும்பத்தோடு செல்லலாம் என்று கூறிய முந்தைய வசனத்தில் சொல்லப்பட்டதற்கு மாறாக, இது எஜமான் வழங்கிய குடும்பமாகையால் இது எஜமானனுக்கே சொந்தம். திருமணமாகி அடிமையாகி வந்தவனின் குடும்பத்தை வைத்துக்கொள்ள எஜமானுக்கு எவ்விதத்திலும் உரிமையில்லை. ஆனால் எஜமான் கொடுத்த குடும்பத்தை அவரே வைத்துக்கொள்ள முடியும். இங்கே ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஓர் அடிமைக்கு தன் குடும்பத்தை விட்டுச் செல்லலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் அந்த அடிமையின் முடிவாகவும் விருப்பமாகவுமே இருக்கிறது. அந்தக் காலத்தில் அடிமைகளுக்கென்று சுயமான எந்த விருப்பமும் இல்லை என்பது நாம் அறிந்ததே. மேலும் ஒரு சுவாராஸ்யமான காரியம் என்னவெனில், ஓர் அடிமை தன் எஜமான் மீதும், தன் குடும்பத்தார் மீதும் அன்பு வைத்து அங்கே நிரந்தரமாகத் தங்கிவிட முடியும். தனது அன்பான எஜமானரின் பாதுகாப்பில், தனது குடும்பத்துடன் தொடர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு இருந்தது, ஒரு அடிமைக்குக் கிடைக்கக்கூடிய எவ்வளவு சிறந்த வாழ்க்கை இது. இப்படி இருப்பானேயாகில் அந்த எஜமான் அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் தேவையான பாதுகாப்பைக் கொடுத்து, அவர்களுடைய அடிப்படையான தேவைகளைச் சந்தித்து, சமாதானத்துடன் வாழ வழிவகை செய்கிறார்.
அடிமை தொடர்பான சட்டங்களை நன்றாக அறிந்திருக்கிற திருவாளர் “கேம்பல் மோர்கன்” என்பாருடைய மேற்கோளுடன் இந்தப் பகுதியை நிறைவு செய்ய விரும்புகிறேன்:
“வேதாகமத்தில் சொல்லப்பட்ட அடிமைத்தனம் தொடர்பான சட்டங்களை கவனமாக ஆராய்ந்து பரிசீலித்தால், அங்கே அடிமைத்தனத்தை ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக அவர்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒர் உடன்படிக்கையின் வரம்புக்குள் செய்ய வேண்டிய உழைப்பு என்றே தெரிய வருகிறது. மேலும் அந்தக் காலத்திய சமுதாயத்தில் இருந்த அடிமைகளின் நிலைக்கும், எபிரெய மக்களிடையே காணப்பட்ட அடிமைகளின் நிலைக்கும் குறிப்பிடத்தக்க பெரிய வேறுபாடுகள் இருந்ததைக் காணமுடியும். அடிமைகள் விடுதலையாகிச் செல்வதற்கான தார்மீக முன்னெடுப்பின் ஒரு தொடக்கம் என்றே இதைக் குறித்துக் கூற முடியும். உண்மையில் வேதாகமம் அடிமைத்தனத்தை அகற்றுவதற்கான பொறுப்பையே கொண்டிருக்கிறது தவிர, அதை நிலை நிறுத்துவதற்கு ஒருபோதும் முயலவில்லை. பண்டைய உலகில் இத்தகைய நியாயப்பிரமாணச் சட்டங்களின் மூலமாகவும், நவீன உலகில் “ஆபிரகாம் லிங்கன்”, “வில்லியம் வில்பர்ஃபோர்ஸ்” மற்றும் “வில்லியம் கேரி” போன்ற மனிதர்கள் மூலமாகவும் அகற்றவே போராடுகிறது.
யாத்திராகமம் 21:7 -ஆம் வசனம் கூறுகிறபடி, ஒருவன் தன் மகளை அடிமைத்தனத்திற்கு விற்க தேவன் அனுமதிக்கிறார் என்பது மட்டுமின்றி, அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான சட்டங்களையும் அவர் வழங்குகிறாரே. இது பெண்களுக்கு எதிரான பாகுபாடு அல்லவா?
யாத்திராகமம் 21:7-11: “ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது. அவளைத் தனக்கு நியமித்துக்கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை. அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன். அவன் வேறொரு பெண்ணைக் கொண்டானாகில், இவளுக்குரிய அன்னவஸ்திர விவாகக்கடமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருப்பானாக. இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணங்கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவள்”.
இந்த வசனம், “ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால்” என்று தொடங்குகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். தேவன் யாரிடமும் அடிமைத்தனத்தை திணிப்பவரும் அல்ல, அதை உற்சாகமூட்டுபவரும் அல்ல. மாறாக அங்கே ஒரு தந்தை தனது மோசமான சூழ்நிலையின் காரணமாக தன் மகளை விற்க வேண்டும் என்னும் முடிவை எடுக்க நிர்பந்திக்கப்படுகிறார். இது அந்த கலாச்சாரத்தில் நிலவும் சூழ்நிலை. எனவே தேவன் இதில் உடனடியாகத் தலையிட்டு தனது அக்கறையை வெளிப்படுத்துகிறார். எனவேதான் ஒரு “வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது” என்று கூறுகிறார். இதைக் கண்டு பெண்ணிய வாதிகள் தேவன் ஆண்களுக்கு ஆதரவாகவும் பெண்களுக்கு எதிராகவும் இருக்கிறார் என்று முறையிடுகிறார்கள். இது தேவனுடைய பாலினப்பாகுபாட்டைக் காட்டுகிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக, பெண்களையும் அவர்களது நல்வாழ்வையும் பாதுகாக்க தேவன் வகுத்துள்ள விதிகளைக் காட்டுகிறது என்பதே உண்மையாகும்.
மேலும், வசனம் 8 -ஆம் வசனத்திலிருந்து, அடிமையாக விற்கப்பட்ட மகளை எஜமான் ஒரு கட்டத்தில் ( அநேகமாக யூத வழக்கப்படி ஒரு வருடம் கழித்து ) திருமணம் செய்து கொடுக்க வாய்ப்பிருப்பதாக புரிந்துகொள்கிறோம். இது நிச்சயமாகவே அவளுடைய நிலையை உயர்த்தும். எனவே, இங்கு விவரிக்கப்பட்டுள்ள விஷயம் என்னவெனில், ஓர் இளம் பெண்ணை அவளது தந்தை ஒரு குடும்பத்திற்கு திருமண நோக்கத்துடன் விற்றதாகத் தெரிகிறது. திருமணத்தின் விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், அது ஒப்பந்தத்தை மீறுவதாகக் கருதப்படும். மேலும் அந்தப் பெண் அவனுக்கு வஞ்சக துரோகம் செய்தாலும் அவளை அவன் வேறொருவருக்கு விற்றுவிட முடியாது. மேலும் அந்த எஜமான் இந்த நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள முற்படுவதை தேவன் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார். எனவே அந்த மனிதன் அவளை வெறுமனே அனுப்பிவிட முடியாது. அவர் அவளை எந்த வெளி மனிதருக்கும் விற்க முடியாது. ஆனால் அவள் தந்தையால் மீட்கப்படலாம். ஒருவேளை அவர் அவளைத் தன் மகனுக்கு திருமணம் செய்துகொடுத்தால், அவர் அந்தப் பெண்ணை ஓர் அடிமையாக அல்ல, தன் மகள்களில் ஒருத்தியைப் போல நடத்த வேண்டும். மேலும் அவன் வேறொரு மனைவியைத் திருமணம் செய்துகொண்டாலும், இவளைக் கைவிட்டுவிடாமல், ஒரு மனைவிக்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் செய்து அவளைப் பராமரிக்க வேண்டும். இவை எதுவும் செய்யப்படவில்லையெனில், அவளுடைய தந்தை அவளை எவ்வளவு தொகைக்கு விற்றானோ அந்தத் தொகையைக் கூட திருப்பிச் செலுத்தாமல் அவளை விடுதலையாக அழைத்துச் சென்றுவிடலாம். இது அவளை ஓர் அடிமைப் பெண் என்ற நிலையிலிருந்து அவளுக்கு விடுதலையைக் கொண்டுவரும். எனவே, விற்கப்பட்ட பெண்ணாணவள் தன் எஜமானரின் வீட்டில், எஜமானனின் மனைவியாகவோ அல்லது அவரது மகளைப் போலவோ கண்ணியமான வாழ்க்கை வாழவே வழியிருக்கிறது. இப்படி இராவிட்டாலும், எஜமானோ அல்லது அவருடைய மகனோ அவளைத் திருமணம் செய்துகொள்ளத் தவறினாலும், அவள் தந்தையால் மீட்கப்படுகிறாள் அல்லது அவள் விடுவிக்கப்படுகிறாள்.
இன்றைய நவீன காலத்திலும், குறிப்பாக பெண்களுக்கு அதிகப்படியாக சுதந்தரம் கொடுக்கப்பட்டிருக்கிற இந்தக் காலத்திலும், அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் அளிப்பது இருந்தாலும் கூட, எந்த விதத்திலும் பொறுப்பேற்காமல் எத்தனை ஆண்கள் பெண்களை வாக்குக்கொடுத்துவிட்டு அதாவது நிச்சயம் வரை சென்றுவிட்டு திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிடுகிறார்கள். இவற்றையெல்லாம் கண்டும்கூட நமது தற்காலச் சமூகம் அமைதியாக வேடிக்கை பார்த்தக்கொண்டிருப்பது விநோதமான காரியம் அல்லவா? பண்டைய கலாச்சாரத்தில், நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நிறுத்தப்பட்ட அடிமைப் பெண்ணைத் தேவன் எவ்வளவு கரிசணையோடு கவனித்துக் கொள்கிறார் என்பது எவ்வளவு பெரிய காரியம். இதை உங்களால் கற்பனை செய்தாவது பார்க்க முடிகிறதா? ஆகவே பெண்ணியவாதிகள் குற்றம் சாட்டுவதுபோல் வேதாகமக் காலத்தில் அல்லது தோராவில் பெண்களுக்கு அநிதி எதுவும் இழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது?
யாத்திராகமம் 21:10 –ம் வசனப் பகுதி தோராவில், ஆண்கள் பலாதார மணம் செய்துகொள்ளும்படி தேவன் அனுமதிக்கிறார், மேலும் ஓர் ஆண் பல மனைவிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான சட்டங்களையும் கூட அமைத்திருக்கிறாரோ?
வேதாகமத்தின் தேவன் ஒருபோதும் பலதார மணத்தை ஏற்படுத்தவுமில்லை, அதை ஆதரிக்கவும் இல்லை (ஆதியாகமம் 2:18-25 ஆகிய வசனங்களில் சொல்லப்பட்ட காரியம், மத்தேயு 19:1-9 ஆகிய வசனங்களிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது திருமண உடன்படிக்கையில் ஓர் ஆண் ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்துகொள்வதே தேவனுடைய திட்டமாயிருக்கிறது. இதை மீறுவது பாவமாகும், மேலும் தேவனின் பார்வையில் இது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகும். புறமதக் கலாச்சாரங்கள் எபிரெய மக்களின் மீது அதிக அளவிலான தாக்கங்களைக் கொண்டிருந்தன என்பது உண்மைதான். பலருக்கு பல மனைவிகள் இருந்தார்கள் என்பது உண்மையே. ஆனால் இது ஒருபோதும் தேவனின் திட்டம் அல்ல. தேவன் ஒருபோதும் பலதார மணத்தை மன்னிக்கவில்லை. உண்மையில், தோராவின் சட்டங்கள் மிகவும் கடுமையானவை. அது திருமணமானவர்களிடையே காணப்படும் விபச்சாரம் என்னும் பாவத்துக்கு மரண தண்டனையை கொடுக்கப் பரிந்துரைக்கிறது. (லேவியராகமம் 20:10, உபாகமம் 20:20). பெரும்பாலான பண்டைய கலாச்சாரங்களும் மதங்களும் விபசாரத்தைக் குற்றத்துக்குரிய ஒரு தண்டனையின் செயலாகக் கூடப் பார்ப்பதில்லை.
வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள எந்த குடும்பத்திலும் பலதாரமணம் நேர்மறையான விளைவை ஏற்படுத்தியதாக நாம் காண்கிறதில்லை. வேதம் கூறும் அனைத்து முக்கியமான கதாபாத்திரங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கொண்டிருந்ததால் பிரச்சினைகளையே சந்தித்தன என்பதே உண்மை. இத்தகைய பிரச்சினைகள் அனைத்துக்கும் முதன்மையாக காரணம் ஒரே கணவன் ஒரு மனைவி என்ற குடும்பத்திற்கான தேவ திட்டத்திற்கு எதிராக இருந்ததன் விளைவு தான். இத்தகைய பிரச்சினைக்குரிய நிகழ்வுகளை வேதத்தில் சேர்க்கப்படுவதை தேவன் உறுதி செய்தார். ஏனெனில் இத்தகைய பலாதாரண திருமணத்தை தேவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், அது தண்டனைக்குரியது என்பதையும் மக்கள் அறிந்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவும் இதை வேதாகமத்தில் சேர்த்துள்ளார். பழைய ஏற்பாட்டின் இறுதிப் பகுதிக்கு நாம் வரும்போது, கணவன் - மனைவிக்கு இடையே (மனைவிகளுக்கு இடையே அல்ல) அமைந்துள்ள திருமண உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மல்கியாவின் தீர்க்கதரிசனத்தில் தேவன் தெளிவாகக் கூறியுள்ளார். நாம் புதிய ஏற்பாட்டிற்கு வரும்போது அந்தக் காட்டளை மீண்டும் உறுதிப்படுத்தப்படிருப்பதைக் காண்கிறோம்.
லேவியராகமம் 12:1-8: இந்த வேதபகுதியில் ஒரு பெண் “அசுத்தமானவள்” என்பதால் பிரசவத்திற்குப் பிறகு அவள் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. பெண் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதைக் காட்டிலும் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுப்பது தூய்மையானது என்றும் அது கூறுகிறது. மேலும் ஒரு தாய் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது இருமுறை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும் என்று அது கூறுகிறது. இது குழந்தைப் பிறப்பின் அடிப்படையில் முக்கியமாக பெண் குழந்தைகளைப் பொருத்தவரை பாலினப் பாகுபாடு காட்டப்படுகிற ஒன்றல்லவா? ஒரு பெண் ஒரு பெண்ணாக இருக்கிறதற்காக தீட்டுள்ளவளாக இருக்க வேண்டுமா? இது பெண்களுக்கு எதிராக வெளிப்படையான பேரினவாதமும் பாரபட்சமுமாக இருக்கிறது அல்லவா?
ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்த பெண் 7 நாட்கள் மற்றும் 33 நாட்கள் (மொத்தம் 40 நாட்கள்) சடங்கு ரீதியாகத் தீட்டுள்ளவளாக இருக்க வேண்டும் என்று நியாயப்பிரமாணச் சட்டம் குறிப்பிடுகிறது. அதுவே அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் 14 நாட்கள் மற்றும் 66 நாட்களுமாகச் சேர்த்து 80 நாட்கள் தீட்டுள்ளவளாக இருக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது என்பது உண்மையே.
யூத பாரம்பரியத்தில் பின்பற்றப் படுகிற சடங்குகளையும், வாழ்க்கையில் தூய்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் புரிந்துகொள்வதே இந்த வாதத்தைத் தீர்ப்பதற்கான சிறந்த வழியாகும். இங்கே சொல்லப்பட்டுள்ள தீட்டு என்ற வார்த்தையானது குறைவுள்ளவள் என்றோ அல்லது பாவம் நிறைந்தவள் என்றோ பொருளைத் தருகிறதில்லை. மாறாக, இது யூத கலாச்சாரத்தில் பேணப்படுகிற சுத்தத்தின் மாபெரும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இதற்காக நாற்பது நாட்கள் எண்பது நாட்கள் போன்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்கள் ஏன் கொடுக்கப்படுகின்றன என்று வேதம் நமக்குச் சரியாகச் சொல்லவில்லை என்றாலும், நாம் நம்பத்தகுந்த சிறந்த காரணங்கள் சிலவற்றை நாம் சிந்திக்கலாம்.
1) தாயின் வயிற்றில் இருக்கும் போது, குழந்தைகளிடத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக குழந்தைகளுக்கு “மாதவிடாய்” போன்ற சிறிய இரத்தப் போக்கு பிறப்புறுப்பு வழியாக வெளியேற்றப்படுவது பொதுவான ஒன்றாகும். குழந்தைகளுக்கு உண்டாகிற மாதவிடாய் போன்ற இது தோராயமாக ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வாரங்கள் வரை நீடிக்கும். எனவே, ஒரு பெண் குழந்தையும் அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கும் மற்றொரு பெண்ணும் அதாவது, தாயுக்கும் மகளுக்கும் சுத்திகரிப்புக்க்கான காலம் இரட்டிப்பாகத் தேவைப்படலாம்.
2) மேலும், “ஜான் ஹாப்கின்ஸ்” பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வறிக்கை கூறுவதைக் கவனிப்போம். பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயின் மாதவிடாயிலிருந்து வெளிப்படும் இரத்தத்தின் நச்சுத்தன்மையானது, ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயின் இரத்தப்போக்கின் நச்சுத் தன்மையைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. குழந்தைகள் பிறந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு பெண்களின் மாதவிடாய் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யப்பட்டபோது, ((David I. MAcht, A Scientific Appreciation of Genesis 1:28 Leviticus 12:1-5, Journal of Biblical Literature, Vol. 52, No. 4 (Dec., 1933), pp. 253-260).) (வெளியிடப்பட்ட ஆய்வு மற்றும் முடிவுகளின் விவரங்களை https://www.jstor.org/stable/3259207காணலாம்) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு பெண் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரவும், மற்றும் பாலியல் உறவுகளை வைத்துக்கொள்ளவும் அதிக நேரம் தேவைப்படுவதாக அது கூறுகிறது. எனவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேவையான பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இத்தகைய நீண்ட காலம் அதாவது எண்பது நாட்கள் விலகியிருக்க வேண்டியது அவசியமாக இருக்கலாம்.
3) ஆண் குழந்தைகள் பிறந்த ஏழவாது நாளில் அதற்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும், இது இக்குழந்தைகளுக்கு இயல்பான சுத்தம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கலாம். ஆனால் பெண் குழந்தைக்கு இத்தகைய விருத்தசேதனம் இல்லாததால் இது தன்னைச் சுத்திகரித்துக் கொள்வதற்காக அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம்.
4) பண்டைய கலாச்சாரங்களில் ஆண் பிள்ளைகள் மிகவும் மதிப்பு மிக்கவர்களாகக் கருதப்பட்டார்கள் (இன்றைய பல கலாச்சாரங்களில் இத்தகைய எண்ணமே தொடர்ந்துக் கொண்டிருக்கிறது). ஒரு தாய் புதிதாகப் பிறந்த ஒரு பெண் குழந்தையுடன் வீட்டில் அதிக நாட்கள் (அதாவது சுத்திகரிப்பின் நாட்கள்) இருப்பது, தாய்க்கும் மகளுக்குமான அதிகமான பிணைப்பை உருவாக்க உதவும். மேலும் பெண் குழந்தை பிறந்து விட்டதே, ஓர் ஆண் குழந்தை பிறந்தால் நன்றாயிருக்குமே என்று கருதுகிற கணவன், பெண் குழந்தை பிறந்த சிறிது நாட்களிலேயே மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தடுப்பதற்கும் இந்த அதிகப்படியான சுத்திகரிப்பின் நாட்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. தாயின் ஆரோக்கியத்தைக் காக்கப்படுவதற்கும் மேம்படுவதற்கும் இத்தகைய சுத்திகரிப்பின் நாட்கள் அதிகமாக உதவி செய்கின்றன.
இப்போது முக்கியமானதும் நம்முடைய ஆர்வத்தைத் தூண்டுகிறதுமான ஒரு காரியத்துக்கு வருவோம். பிறக்கிற குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், சுத்திகரிப்பின் பிராயச்சித்தத்துக்காக தேவனுக்கு முன்பாக செலுத்த வேண்டிய பலிகள் ஒரே விதமானதாகும். ஆண் குழந்தைகளுக்கு வேறு விதமான பலியும் பெண் குழந்தைகளுக்கு வேறுவிதமான பலிகளும் கிடையாது. இரண்டு சடங்குகளிலும் வேறுபாடுகள் எதுவும் இல்லை, இது தேவனுக்கு முன்பாக இரு பாலினத்தவரும் சமமாக இருக்கிறார்கள் எனபதையும் அவர் எவ்விதப் பாகுபாடும் காட்டுகிறவர் அல்ல என்பதையும் இது நமக்குக் காட்டுகிறது. பாலினம் தொடர்பான தேவனின் இருதயத்தைப் புரிந்துகொள்வதற்கு இந்தக் குறிப்பு முக்கியமானதாக உள்ளது.
“தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்” (ஆதி. 1:28) என்று கட்டளையிட்டார். எனவே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளையாகும். மேலும் பிள்ளைகள் கர்த்தருடைய சுதந்தராமாகக் (வெகுமதியாகக்) கருதப்படுகிறார்கள் (சங்கீதம் 127:3). தம்மிடத்தில் வந்த குழந்தைகளை வரவேற்று அவர்களை ஆசீர்வதித்ததன் மூலமாக இயேசு கிறிஸ்து மோசேயின் சட்டங்களை நிறைவேற்றினார் (மத்தேயு 18). ஆகவே பெண்களுக்கான சுத்திகரிப்பின் நாட்கள் (தனிமைப்படுத்தப்பட்ட காலங்கள்) பாலினங்களின் அடிப்படையில் அதாவது ஆண், பெண் குழந்தைகளின் சுத்திகரிப்பு நாட்களுடன் நேடியாக தொடர்புபடுத்தப்படவில்லை என்னும் முடிவுக்கு நாம் தைரியாகவே வரலாம். மாறாக இது பிறப்பின் காலத்திலும், பிரசவத்திற்குப் பிந்தைய காலகட்டங்களிலும் இருக்க வேண்டிய சுத்திகரிப்பு நடைமுறைச் சூழ்நிலைகளுடன் தொடர்புடையது என்றும் நாம் தைரியமாகச் செய்யலாம்.
லேவியராகமம் 15:19-30: ஒரு பெண் தன் மாதவிடாய் காலத்தில், அவள் தொட்டதெல்லாம் தீட்டாக இருக்கிறது என்றும் அவள் தொட்டது எதைத் தொட்டாலும் தொட்டவர்களும் தீட்டாக இருக்கிறார்கள் என்றும் இந்த வேதபகுதி சொல்கிறது. தேவன் உருவாக்கியதாகக் கூறப்பட்டும் ஒரு உயிரியல் செயல்பாடு, அவளுக்கு வரும்போது (உதிரப்போக்கு) அது தீட்டாக எண்ணப்படுவதும், அதனினிமித்தம் அவள் தண்டிக்கப்படுவதும் வேடிக்கையாக உள்ளது. அவர் உருவாக்கிய ஒன்றை அவரே தீட்டு என்று சொல்வது தவறானது அல்லவா?
இந்த பத்திகளை நாம் படிக்கும்போது, இந்த கட்டளைகள் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டவை என்பதை நாம் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். யூத பாரம்பரியத்தில் சுத்திகரிப்புச் சடங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கே தீட்டு என்று கூறுவது, நான் குறிப்பிட்டது போல், அது பாவத்தையோ அல்லது தாழ்வு மனப்பான்மையையோ குறிப்பிடுவதில்லை. பெண்களின் மாதவிடாய் காலங்களில் அவளைத் தனிமைப்படுத்துவது அவளுக்கு அளிக்கப்படும் தண்டனை அல்ல. மாறாக இது தேவனுடைய மக்களுக்கான தரத்தை நிலை நிறுத்துவதற்கான ஏற்பாடு என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்.
உதிரப்போக்கு நாட்களில் தேவனுடைய மக்கள் அவரின் நிமித்தம் தங்களைப் பிரித்து வைத்துக்கொண்டு, தேசத்தின் நலனுக்காக மீண்டும் நல்ல முறையில் குழந்தை உண்டாகும் திறனுடன் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் திரும்பி வருவதற்கான ஏற்பாடு ஆகும். தேவன் இஸ்ரவேல் மக்களை தம்முடைய தனித்துவமானவர்களாகத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி, பிற தேசங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மக்களாக வாழும்படி அழைத்திருந்தார் என்பதை நினைவில் வையுங்கள். மேலும், தேவன் அவர்கள் நடுவில் தம்முடைய “வாசஸ்தலத்தையும் - ஆசரிப்புக்கூடாரம்” உருவாக்கியிருந்தார். (லேவியராகமம் 15:31).
அந்த பெண்ணியவாதி குறிப்பிடாத மற்றொரு குறிப்பிடத்தக்க காரியம் என்னவென்றால், இந்தச் சுத்திகரிப்பின் முறைமைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருந்தன என்பதே ஆகும். இது பெண்களுக்கு மட்டும் அல்ல. எனவே இது எந்தப் பாலின பாகுபாட்டையும் குறிக்கவில்லை. இது பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் போது மட்டுமின்றி, யாரிடமிருந்தும் எந்த பிரமியத்தினால் உண்டான தீட்டு வெளியேற்றத்தின் போதும் தனிமைப்படுத்தலும் மற்றும் சரீர சுத்திகரிப்பும் தேவைப்படும். லேவியராகமம் 15 -ஆம் அதிகாரத்தில் நான்கு வகையான தீட்டு வெளியேற்றத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1) ஆணின் பிரமியம் வெளியேற்றப்படுதல் (ஒரு வியாதியாக தொடர்ந்து வெளியேறுதல்) (வசனங்கள் 1-15)
2) ஆணின் இந்திரியம் வெளியேற்றப்படுதல் (வசனங்கள் 16-18)
3) பெண்ணின் மாதவிடாயின் உண்டாகிற உதிரப்போக்கு (வசனங்கள் 19-24)
4) பெண்ணுக்கு பால நாட்களாகதொடர்ந்து ஏற்படும் உதிரப்போக்கு (வசனம் 25-30).
இங்கே சொல்லப்பட்ட பிரச்சினைகள் இருபாலருக்கும் ஏற்படுகிறதைக் காண்கிறோம். இரு பிரச்சினைகள் ஆண்கள் சம்பந்தப்பட்டதாகவும், இரு பிரச்சினைகள் பெண்கள் சம்பந்தப்பட்டதாகவும் இருப்பதைக் காண்கிறோம். மேலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுத்திகரிப்பின் விதிகள் ஒரே மாதிரியானவை ஆகும். எனவே இந்த வசனங்களின் வாயிலாக தேவன் பாலினப் பாகுபாடு உடையவர் என்று தீர்மானிக்கமுடியாது. மாறாக இது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் தேசம் தனித்துவமாக விளங்கும்படி அவரால் கொடுக்கப்பட்ட உயரிய தரநிலைக் கட்டளைகளாகும்.
இதுபோன்ற உடல் வெளியேற்றங்கள் முடிவடைந்தவுடன் சுத்திகரித்தல் முறைமை சொல்லப்பட்டுள்ளது. அது முடிந்த பிறகு, அவர்கள் தங்களது சரீரத்தை தியாகபலியாக ஒப்புவித்து, தேவனுக்கென்று தங்களை மறு பிரதிஷ்டை செய்வதற்காக ஏற்பாடாக இது இருக்கிறது.
மேலும், ஒரு பெண்ணின் மாதாந்திர மாதவிடாயின் போது, ஏழு நாட்கள் தனிமைப்படுத்துவது அவர்களுக்கு போதுமான ஓய்வையும் புத்துணர்ச்சியையும் தர அனுமதிக்கிறது. இது நவீன கால பெண்களுக்குக்கூட அரிதாகக் கிடைக்கிற ஒன்றாகும்.
லேவியராகமம் 18:19: பெண்களின் மாதவிடாய்க் காலத்தில் அவர்களைப் பார்ப்பது கூட தவறு என்று இந்த வசனம் சொல்கிறதே.
லேவியராகமம் 18:19: இந்த வசனம் உ.ண்மையிலேயே என்ன சொல்கிறது என்று பார்ப்போம்: “ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே”.
முதலாவதாக, இந்த வசனத்தை மேலோட்டமாக வாசித்தாலே, ஒரு பெண்ணை மிகவும் தவறான வகையில் சித்தரிக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இது மாதவிடாய் காலத்தில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள முயற்சிப்பது பற்றியது. இங்கு தடை என்பது, பெண்களைப் பார்க்கக்கூடாது என்றல்ல, மாறாக மாதவிடாய் காலத்தில் அவளுடன் உடலுறவு கொள்ளாமல் இருப்பதும், அதன் பொருட்டு அவளை நிர்வாணமாக்காமலிருப்பது பற்றியது ஆகும். நேர்மையாகச் சிந்திப்போமானால், இத்தகைய தடையானது யாருக்குச் சாதகமாக இருக்கிறது, ஆணுக்கா? அல்லது பெண்ணுக்கா? நிச்சயமாகவே இது பெண்ணுக்கே சாதகமானது ஆகும். ஒரு பெண் மாதவிடாய் காலத்தில், மனரீதியாக, உடல் ரீதியாகவும் மிகவும் பெலவீனமாக இருப்பாள். இந்த நேரத்தில் உடலுறவு என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே இதனுடைய வலியைப் புரிந்துகொள்ள முடியும். இந்த நேரத்தில் உடலுறவுத் தடை என்பது பெண்களைக் குறித்த காரியத்தில் தேவனுடைய கனிவான இருதயத்தையே என்னால் பார்க்க முடிகிறது. இதன் மூலம் தேவன் ஒரு பாலியல் பாகுபாடு காட்டுகிறவர் அல்ல என்பது தெளிவான உண்மையாகும்.
லேவியராகமம் 19:20: இந்த வசனம், ஒரு பெண் அடிமையாயிருந்து, ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும்போது அவள் வேறொருவனுடன் உடலுறவு கொண்டால், அவள் “கசையினால்” அடிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. கசையடி என்பது மிகவும் கடுமையான தண்டனை அல்லவா? இத்தகைய நிகழ்வுக்குக் காரணமன அந்தப் பெண் அடிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது, ஆனால் அவளுடன் இருந்த அந்த ஆணைப் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லையே இது என்ன மாதிரியான சமத்துவம்?
இந்தக் கேள்வியைப் புரிந்துகொள்ளவும், குற்றச்சாட்டை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் இந்தப் பகுதி முழுவதையும் வாசிப்போம்:
லேவியராகமம் 19:20-22 “ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல. அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன். அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.”
இந்த 20 -ஆம் வசனம் மூலமொழிக்கு ஏற்றாற்போல் மொழிபெயர்க்கப்படவில்லை. உண்மையில் இவ்வார்த்தைக்கு அடிக்கப்படுதல் என்பது பொருள் கிடையாது. இந்த பெயர்ச்சொல் முழு பழைய ஏற்பாட்டிலும் ஒருயொரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெயர்ச்சொல்லிலிருந்தே “பகார்” என்ற வினைச்சொல் தோன்றியது. அதாவது “விசாரணை செய், தீர விசாரி, தீவிரமாய் தேடு” என்பதே இதன் பொருள். எனவே, அடிக்கப்படுதல் என்பதற்குப் பதிலாக, அவளுடைய “விவகாரம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்” என்று வர வேண்டும். இவ்வசனத்தில் வருகிற “ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க,” என்ற வாசகத்தில் வருகிற, “மீட்கப்படாமலும்” என்னும் தமிழ் வார்த்தைக்கான எபிரெயச் சொல், “படா” என்பதாகும். இதற்கு மீட்பு என்ற பொருள் இருந்தாலும் பெரும்பாலும், “காப்பாற்றப்படுதல், விடுவிக்கப்படுதல்” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே “ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க” என்பதற்குப் பதில், “ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் காப்பாற்றப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க” என்று வர வேண்டும். அதாவது, அந்த அடிமைப் பெண், தவறான முறையில் உடலுறவு கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் போது, ஒருவராலும் அவள் காப்பாற்றப்படாமல் விட்டுவிடப்பட்டால் அவள் விசாரிக்கப்பட வேண்டும். எனவே லேவியராகமம் 19:20 க்கான மாற்று எளிய மொழிபெயர்ப்பு, இவ்வறாக இருக்க வேண்டும். “ஓர் அடிமையாகிய பெண்ணுடன் ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அப்பெண்ணுடன் தவறாக நடந்துகொண்ட நபரால் நிந்திக்கப்பட்டும், அவளுக்கு எந்த உதவியும் செய்யாமலும், அவளுக்குக் கிடைக்க வேண்டிய சுதந்தரம் வழங்கப்படாமலும் இருந்தால், அவள் விசாரிக்கப்பட வேண்டும்; அவள் அடிமை ஸ்தானத்திலிருந்து விடுதலை பெறாதவளாகையால் அவன் கொல்லப்படமாட்டான்.”
ஆகவே இங்கு வழங்கப்பட்ட அறிவுரையில் அந்தப் பெண்ணுடன் நேரடியாகப் பொருந்தக்கூடிய எந்த வித அறிவுரையும் இல்லை. அவளே இங்கு பாதிக்கப்பட்டவள். இந்த வசனத்தின் தொடக்கத்தில் ஒரு ஆண் அடிமைப் பெண்ணைக் கற்பழித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பிறகு, அவள் விடுதலையாகாதவள் ஆகையால் அவள் இறக்க மாட்டான் என்பதே முடிவு. அவள் விடுதலை பெற்ற ஒரு சுதந்திரப் பெண்ணாக இருந்திருந்தால், அவன் இறக்க வேண்டியிருக்கும்!
இந்த வழக்கில், அவளைக் கற்பழித்தவன் தன்னுடைய குற்றத்தை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, அதற்கான குற்றநிவாரண பலியைச் செலுத்த வேண்டும் (வசனம் 21). ஆகவே அவளைக் கற்பழித்த ஆணுக்குத் தண்டனை இல்லை என்று ஆகிவிடாது. அவனும் தன் குற்றத்தைச் சுமக்க வேண்டும், அதற்காக காணிக்கை செலுத்த வேண்டும். அவள் விட்டு விடப்படுவதுப் போல் இவன் விடுவிக்கப்படுவதில்லை.
இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்று உள்ளது. அது, என்னவெனில், இந்தப் பிரச்சினையில், அடிமைப் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆணிடம் மட்டுமே பரிகாரம் செய்ய வேண்டும் என்று கட்டளை உள்ளது. அந்த அடிமைப் பெண் செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஏனெனில் இவள் ஒரு அடிமையாக இருப்பதால், ஒரு சுதந்திரமான மனிதனை எதிர்ப்பதில் உள்ள தன்னுடைய இயலாமையை அவள் உணர்ந்திருக்கலாம். எனவே பாவத்திற்கு பரிகாரம் செய்யும் பொறுப்பை பெண்ணிடம் கேட்காமல் ஆணின்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இங்கே ஓர் அடிமைப் பெண்ணிடம் தேவன் கொண்டிருக்கிற கரிசனையுள்ள இதயத்தைப் பாருங்கள். அந்தக் காலத்தில் நிலவிய அடிமைத்தனத்தில் இப்படியான ஒன்று நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
லேவியராகமம் 21:9: இந்த வசனம், ஆசாரியர்களின் மகள் ஒழுக்கக்கேடான முறையில் நடந்துகொண்டால் எரித்து கொல்லப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் ஒழுக்கக் கேடாய் நடக்கிற ஆசாரியர்களின் மகன்களைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லையே? இது குறித்து தோராவில் எங்கும் பதிலளிக்கப் படவில்லை. இங்கே ஆண்களுக்கு அவர்கள் விரும்பியபடி செய்ய அதிகாரம் உள்ளது, ஆனால் ஒரு பெண் தவறு செய்துவிட்டால், அவள் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இது பாரபட்சம் அல்லவா?
லேவியராகமம் 21 மற்றும் 22 அதிகாரங்கள், ஆசாரியனுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் இருக்க வேண்டிய பரிசுத்த ஸ்தானத்திற்கான பரிந்துரைகளாகும். பரிசுத்த வேதாகமத்தின் தேவன் தம்முடைய ஆசாரியர்களிடத்திலும் குறிப்பாக யூத மக்களிடமும் எதிர்பார்க்கிற பரிசுத்த தரத்திற்கான தரநிலையாகும். இது தேவன் எதிர்பார்க்கிற பரிசுத்தத்திற்கான முக்கியத்தவத்தின் எதிர்பார்ப்பாகும்.
ஆரோனின் குமாரருக்குரிய பரிசுத்தராக இருக்க வேண்டும் என்ற பரிசுத்த நியமத்திற்கான கட்டளையை லேவியராகமம் 21 -ஆம் அதிகாரம் விவரிக்கிறது.. 1 முதல் 8 வசனங்கள் வரை ஆசாரியர்களின் மகன்கள் எவ்விதமாக இருக்க வேண்டும் என்பதற்கான அம்சங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. 9 -ஆம் வசனம், ஆசாரியனின் மகள்கள் இருக்க வேண்டிய முறை பற்றி விவரிக்கிறது.
ஆசாரியனின் மகள் விபச்சாரம் செய்தால் அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும், அதுவும் அவள் தீயினால் எரிக்கப்படுகிற மரணம் என்பது உண்மைதான். இது பாவங்களுக்கான தண்டனையிலேயே மிகவும் கடுமையான வடிவமாகும். தண்டனை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று அவர்கள் சட்டத்தை மீறுவதைத் தடுப்பதுதான். அதன் கடுமைக்கு பயந்து அவர்கள் அதைச் செய்யாமல் விட்டுவிடுவார்கள் என்பதே இதன் நோக்கம். மேலும் இங்கு ஆசாரியனின் மகன்களைப் பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் அவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விடுவார்கள் என்று கூறுவது வேதாகமத்தின் தேவனைப் பற்றிய அறிவு இல்லாதது ஆகும். எங்கெல்லாம் பாலியல் மீறுதல்களைப் பற்றி வேதம் விவாதிக்கிறதோ அந்தப் பகுதிகளில் எல்லாம் தேவன் ஆண் பெண் இருபாலருக்குமே தண்டனையை அறிவித்திருக்கிறார். எந்த ஒரு சாதாரண இஸ்ரவேலனுக்கும் இச்சட்டங்கள் பொருந்துமெனில், பலிகளுடன் தேவனிடம் நெருங்கி வரும் ஆசாரியர்களாக ஆரோனின் மகன்களுக்கு இது எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும். தேவனுக்கு அருகாமையில் இருப்பவர்களை அவர் தண்டிக்க மாட்டார் என்று சிந்திப்பது முட்டாள்தனமானது. இந்தக் குறிப்பிட்ட பகுதியில் ஆண்களின் தண்டனையைப் பற்றிக் குறிப்பிடாததால், அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று அர்த்தமல்ல.
நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான காரியம் என்னவெனில், இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு, எந்தவொரு ஆசாரியனின் மகளும் எரிக்கப்பட்டதாக வேதாகமத்தில் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் கீழப்படியாத ஆசாரியனின் மகன்களுக்கு என்ன நேரிட்டது என்பதற்கான இரண்டு பதிவுகள் வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளன. லேவியராகம் 10 -ஆம் அதிகாரத்தில், ஆரோனின் மூத்த மகன்களான நாதாபும், அபியுவும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்ததற்காக தேவனால் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள். பிரதான ஆசாரியனாகிய ஏலியின் மகன்களான ஓப்னியும், பினெகாசம் (1 சாமுவேல் 4) தங்களுடைய ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்காக போரில் கொல்லப்பட்டதையும் தேவனின் தண்டனையாகவே காண்கிறோம்.
பாவம் எப்பொழுதும் தேவனுக்கு முன்பாக மிகவும் தீவிரமான ஒரு காரியமாயிருக்கிறது. தேவன் பரிசுத்தரும், நீதியுள்ளவருமாயிருக்கிறார். பாலினம், தேசியம், சமூக அந்தஸ்து மற்றும் வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பாவம் செய்தால் தேவன் யாரையும் தண்டிக்கிறார். ஆணோ பெண்ணோ யார் பாவம் செய்தால், எந்தப் பாவத்தைச் செய்தாலும் தேவன் கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்கவே மாட்டார். அவர்களை நிச்சயமாகவே தண்டிப்பார். இந்தச் சத்தியம் வேதாகமம் முழுவதிலும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
அடுத்த அத்தியாயத்தில் (லேவியராகமம் 22) சொல்லப்பட்டு உள்ளதையும் நாம் கூடுதலாகக் கவனித்துப் பார்ப்போம். பலி செலுத்தப்பட்ட உணவுகளை ஆசாரியனின் பிள்ளைகள் என்ற முறையில் அவருடைய மகன்களும் மகள்களும் உண்பதற்கு தேவன் அனுமதித்திருக்கிறார். எனவே தேவன் பெண் பிள்ளைகளுடைய காரியத்தில் எவ்விதப் பாகுபாடும் பார்ப்பதில்லை. நாம் தேடினாலும் அவ்வாறு காட்டியதாக நாம் பர்க்கமுடியாது.
லேவியராகமம் 27:3-7 இந்த வசனங்களில் தேவன் மனிதர்களுக்கு நியமித்த மதிப்பைப் பார்க்கிறோம். இதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களை குறைவாக மதிப்பிடுகிறதைக் காண்கிறோமே? இது பெண்களை சமமாகப் பாவிக்காத காரியம் அல்லவா? ஏன் இந்தப் பாகுபாடு?
லேவியராகமம் 27 -ஆம் அதிகாரதில் பொருத்தனை செய்தவர்கள் தேவனுக்குச் செலுத்தவேண்டிய மதிப்புக் காணிக்கை பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.
முதலாவதும் முக்கியமானதுமாகக் கவனிக்க வேண்டிய காரியம் என்னவெனில், இந்த மதிப்புக் காணிக்கை தேனுடைய கட்டளைப்படி செலுத்த வேண்டிய ஒன்றல்ல. இது தேவனுக்குப் பொருத்தனை பண்ணிய தனிப்பட்ட நபர் ஒருவர் மனப்பூர்வமாகச் செலுத்த வேண்டிய பணத்தைப் பற்றியது. அதாவது இது கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியவர்களின் நேர்மையைப் பற்றிய காரியம் இது.
இரண்டாவதாக, தேவனுக்குப் பொருத்தனை செய்த ஒரு நபர், அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நினைத்தால், ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட்டு அதிலிருந்து வெளியே வந்துவிடலாம்.
மூன்றாவதாக, தேவனுக்காகச் செய்யப்படுகிற பொருத்தனை என்பது வெற்று வார்த்தைகளைக் காட்டிலும் திட்டவட்டமான செயல் வடிவத்தைக் கொண்டது. இது பெயரளவுக்கு பொருத்தனை செய்வதிலிருந்து மக்களைத் தடுக்கிறது. பொருத்தனை செய்வது பாவம் அல்ல, ஒரு முறை பொருத்தனை செய்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பதே பாவம். ஆகவே ஒருவன் செய்த பொருத்தனையைக் கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும் (உபாகமம் 23:21-23; மற்றும் (எண்ணாகம்ம 30:2). ஆனால் சில சூழ்நிலைகள் கருதி இதற்கு விதிவிலக்குகளும் உள்ளன. அதாவது நிறைவேற்ற முடியாவிட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகளும் உண்டு. அதுவும் நம்முடைய சொந்த இஷ்டத்திற்கு செய்ய முடியாது, தேவன் பரிந்துரைத்திருக்கிற காரியங்களை செய்ய வேண்டும். இதிலிருந்து தேவன் விடாப்பிடியானவர் அல்ல என்றும், பொருத்தனை செய்தவரின் மீது தேவன் இரக்க குணமுள்ளவராக இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. மேலும் தேவன் நம்முடைய கஷ்டத்தையும், உணர்ச்சிகளையும் புரிந்துக் கொண்டவராக இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
இப்போது மீட்பிற்காக செலுத்த வேண்டிய தொகைக்கு வரும்வோம். இது பெரும்பாலும் அந்த நபரின் உடல் உழைப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் அளவீடு செய்யப்படுகிறது. 25 வயதுடைய இளைஞன் ஒருவன் 5 வயது சிறுவனைக் காட்டிலும் அதிகமாக வேலை செய்ய முடியும். எனவே, தனிநபர்களின் மதிப்பு என்பது ஒரு தொழிலாளியின் ஊதியத்திற்கு சமமாகவே (வேதாகம காலத்தில் ஒரு மாதத்திற்கு ஒரு ஷேக்கல் பணம் ஊதியமாக வழங்கப்பட்டது) அல்லது ஆசரிப்புக் கூடாரத்தில் அந்த நபர் செய்கிற வேலையின் மதிப்பை ஒப்பீட்டு அளவு குறிக்கப்படுகிறது. பலி செலுத்தப்பட வேண்டிய மிருகங்களைக் கையாளுதல் என்பது ஒரு கடினமான வேலை, அவ்வாறே ஆசரிப்புக் கூடாரத்தைக் தூக்கிச் சுமப்பதும் கடினமான வேலையாகும். இத்தகைய வேலைகளை இளைஞர்களே அதிகமாகச் செய்ய இயலாம். எனவேதான் இளைஞர்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படுகிறது. கடின உழைப்பைப் பொருத்தவரை ஒரு இளைஞனால் இயல்பாகவே வயதான ஆண்களைக் காட்டிலும் அல்லது ஒரு சிறுவனைக் காட்டிலும், அல்லது ஒரு பெண்ணைக் காட்டிலும் அதிக வேலைகளைச் செய்ய முடியும். எனவே அவர்கள் எல்லாரைக் காட்டிலும் இளைஞன் அதிக மதிப்புடையவனாக இருக்கிறான். எனவே, ஒவ்வொரு பிரிவினருக்கும் மதிப்பிடப்பட்ட பணத்தின் மதிப்பு என்பது, தேவன் மனித வாழ்க்கைக்கு அளிக்கும் மதிப்பையோ அல்லது பாலினத்தைச் சார்ந்த மதிப்பையோ பிரதிபலிக்கிறதில்லை. ஒவ்வொரு பிரிவினருக்கும் பொதுவாக அவர்கள் செய்யும் வேலைக்குத்த ஊழியம் வழங்கப்படும் முறையானது இன்றும் நடைமுறையில் இருக்கிறதைக் காணலாம். கட்டுமானப் பணி போன்ற பிற கடினமான வேலைகளில் கடினமான உடல் உழைப்பு தேவைப்படுகிறது. எனவே இத்தகைய வேலைகளுக்கு அதிகமான உடல் உழைப்பைக் காண்பித்து, அதிகமாக வேலை செய்கிறவர்களுக்கு சிறுவர்களைக் காட்டிலும், பெண்களைக் காட்டிலும் அதிகமான ஊதியம் வழங்கப்படுகிறதை நாம் அறிந்திருக்கிறோம். எங்கே பெண்கள் அதிகமாக வேலை செய்து உற்பத்தியைப் பெருக்குகிறார்களோ அங்கே பெண்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்படுகிறது. எனவே, இது பாலினப் பாகுபாட்டினால் நிர்ணயிக்கப்படுவது அல்ல. இது எந்தத் துறையில் எவ்விதமான செயல்திறனுடன் வேலை செய்கிறார்களோ அதைப் பொறுத்தே இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆகவே இதன் அடிப்படையில் நாம் ஒரு முடிவுக்கு வருவோம். மனித வாழ்க்கையின் பண மதிப்பு என்பது ஒரு தொழிலாளியின் கூலியின் மதிப்பீடாகவே இருக்கிறதே தவிர, மனித வாழ்க்கையைக் குறித்து தேவன் தரும் மதிப்பல்ல. தர்க்கரீதியாகப் பார்த்தால், இந்த மதிப்பீடு பெண்களுக்குச் சாதகமாக உள்ளது, ஏனெனில் பெண்களுக்கான மீட்பிற்கான தொகை ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குக் குறைவாகவே உள்ளது. மேலும் அவர்களது மீட்பு எளிதாக இருக்கிறது. இது ஒரு நபரின் மதிப்பு அல்ல, ஒருவர் செய்த பொருத்தனையைக் கைவிட்டு வெளியேறுவதற்காகச் செலுத்த வேண்டிய பணமதிப்பு. இந்தச் சட்டமும் மக்களின் நலனுக்காக மட்டுமே போடப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் எளிதாக பொருத்தனைக்கு உட்பட்டு விடமாட்டார்கள், அதாவது எளிதாக பாவத்திற்கு ஆட்பட்டு விட மாட்டார்கள். ஆசரிப்புக்கூடாரத்தில் ஊழியம் செய்ய முடியாத சூழல் ஏற்படும்போது, அதற்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்ட நபரை மீட்பதற்கான ஏற்பாடுகளை அனுமதிப்பதில் தேவனுடைய இரக்கத்தையே இது காட்டுகிறது. மேலும், ஏழைகள் தேவனுக்குச் செய்த வாக்கை நிறைவேற்றுவதற்கும் அதிகமான ஏற்பாடுகளை வழங்கியிருக்கிறார். லேவியராகமம் 27:8 –ம் வசனத்தில் நாம் இவ்விதமாகப் படிக்கிறோம்: “9. ஒருவன் பொருத்தனை பண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருக ஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக”.
எனவே, இது உண்மையில் ஏழைகளுக்கும் பெண்களுக்கும் ஓர் அற்புதமான நிவாரணமாகும். குறைந்த பணத்தைச் செலுத்துவது என்பது மதிப்பைக் குறைப்பது அல்ல, அது ஒரு சிறப்புச் சலுகையாகும்.
எண்ணாகமம் 1:2: இன்றைய காலகட்டம் வரை தலைவிரித்தாடுகிற பாலினப் பாகுபாடுக்கு அடிப்படையாக இருப்பதே இந்த வசனம். போரிடுவதற்குத் தகுதியான அனைத்து ஆண்களையெல்லாம் கணக்கிடுமாறு மோசே இந்த வசனத்தின் வாயிலாகக் கூறியிருக்கிறார். பொதுவான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது கூட பெண்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை. அன்று இருந்ததைப் போலவே இன்றைய காலத்திலும் பெண்கள் புறக்கணிக்கப் பட்டவர்களாகவே இருக்கிறார்கள். பெண்களாகிய நாங்கள் போரிடுவதற்குத் தகுதியற்ற அல்லது இயலாத பெலவீனர்களாகவே கருதப்படுகிறோம். (தோரா எழுதப்பட்ட காலத்தில், இஸ்ரவேலர் அல்லாத அந்நிய கலாச்சாரங்களில் பெண்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாகவும், பிறர் பெண்களைக் கண்டு அஞ்சுகிற நிலையிலும் இருந்தார்கள். மட்டுமின்றி, அவர்கள் சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாகவும் இருந்தார்கள் எனபதை மறந்துவிடாதீர்கள். இந்த ஆணாதிக்க மதத்தாலும், அதன் பிரிவுகளாலும் பெண்கள் மனித நிலையைக் காட்டிலும் சற்றுக் குறைவான பிறவிகளாகவும், தாழ்த்தப்பட்ட உயிரிகளாகவும் தரங்குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்).
எண்ணாகமம் 1:2-3: “நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர் பேராக எண்ணித் தொகையேற்றுங்கள். இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக” என்றார்.
எண்ணாகமம் 1 -ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி போருக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பெண்கள் சேர்க்கப்படாமல் விட்டதற்கும், நவீன உலகில் காணப்படுகிற பாலினப் பாகுபாட்டுக்கும் இடையே எளிதாக முடிச்சுப்போடுகிற இந்தப் பெண்ணியவாதியின் குரல் வேடிக்கையானதும் விசித்திரமானதுமாக இருக்கிறது. அவர் இந்த விநோதமான முடிவுக்கு வருவதற்கு என்னென்ன அதிகாரப்பூர்வச் சான்றுகளோ அல்லது வரலாற்றுத் தொடர்பான ஆவணங்களோ வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
இரண்டு முக்கியமான காரியங்களை நாம் இங்கே கவனிக்க வேண்டும். 20 வயதுக்குட்பட்ட ஆண்களில் யாரும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. மேலும், இஸ்ரேலுக்காக யாரெல்லாம் போருக்குச் செல்வதற்கு தகுதிபெற்றவர்களோ அவர்கள் மட்டுமே மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே இதில் பெண்கள் மட்டுமின்றி, ஏராளமான ஆண்களுக்கும் இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை என்பது தெளிவான உண்மையாகும்.
அந்தக் காலத்தில் நிலவிய கலாச்சாரம் மற்றும் அந்தக் காலத்தில் நிலவிய தீய பழக்கவழக்கங்களால் பெண்களை போருக்கு அனுப்புவது என்பது அவர்கள் எதிரிகளால் மிகப் பெரிய தீங்குக்கு ஆளாக நேரிடும். எனவே, தேவன் தீய கலாச்சாரங்களுக்கிடையில், பெண்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஓர் ஒழுங்கு முறையைக் கொண்டு வந்திருந்தார். இந்த 21 -ஆம் நூற்றாண்டிலேயே “நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்” மீ டூ என்ற இயக்கம் தேவைப்படுகிறதெனில் அந்த நாட்களின் பெண்களின் நிலை என்னவாயிருந்திருக்கும்?!
பெண்கள் போருக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படாமல் விடபட்டிருந்ததற்கான மிக முக்கியமான காரணம், ஆண்கள் போருக்குச் செல்லும் போது பெண்கள் தங்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வீடுகளில் இருந்தார்கள். அந்தக் காலப் போர்கள் மிகவும் கொடூரமானவை, ஒவ்வொரு போரிலும் விலைமதிப்பற்ற உயிர்களின் இரத்த ஆறு ஓடும். இதனால் போரில் பங்கு பெற்றோரின் விலைமதிப்பற்ற உயிர்கள் எளிதில் பறிபோய்விடும். பெண்கள் போருக்குப் போய்விட்டால் வீட்டில் இருக்கும் குழந்தைகளை என்ன செய்வது? ஆகவே தேவன் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டும், பிள்ளைகள் அனாதைகள் ஆவதை தடுக்கும் பொருட்டும், அல்லது இருக்கிற பிள்ளைகள் பராமரிப்பின்று அனாதைகளாக ஆக நேரிடும் என்பதைக் கருத்தில் கொண்டும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட அற்புதமான ஏற்பாடே இது. ஒரு மனிதனுக்குச் சமீபத்தில் திருமணம் ஆகியிருந்தால், அவனும் போருக்குச் செல்லக்கூடாது அல்லது அவனை அனுப்பப்படக்கூடாது அல்லது வேறு எந்தக் கடமையும் அவன் மீது சுமத்தப்படக்கூடாது என்பதை திட்டவட்டமாக (உபாகமம் 24:5) –ம் வசனத்தில் போதிக்கும் அறிவுரையாகும். அவன் ஓராண்டு காலம் வீட்டில் தங்கியிருந்து தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். எனவே, போருக்குச் செல்ல ஆண்களைத் தேர்ந்தெடுக்கும் போது, குடும்பத்தின் நலனும் இங்கே கருத்தில் கொள்ளப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. இது திருமணம் மற்றும் குடும்பத்திற்கு தேவன் அளிக்கும் முக்கியத்துவத்தையும், குடும்பத்தில் அவரவர் வகிக்கும் பங்கையும் காட்டுகிறது.
(எண்ணாகமம் 30:3-16): இந்தப் பகுதியில் ஒரு பெண் தன் கணவன் அனுமதிக்காத வரை ஒரு பொருத்தனையைச் செய்ய முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது பாலினப் பாகுபாடு அல்லவா?
நாம் மீண்டும் ஒரு முக்கியமான பகுதியைச் சிந்திக்கப் போகிறோம். மேலும் இதுவே பெரும்பாலன மக்களால் அடிக்கடி தவறாக விளக்கம் கொடுக்கப்படுகிற பகுதியாகும். அந்தப் பெண்ணியவாதி குறிப்பிடுவது போல, இந்த பகுதி கர்த்தருக்குப் பொருத்தனை செய்வது பற்றியதுதான். நாம் ஏற்கனவே சிந்தித்தபடி பொருத்தனை செய்வது ஒரு தீவிரமான விஷயமாகும். அதை ஒருவரும் எளிதாகக் கருத முடியாது. எவனொருவன் பொருத்தனை செய்தாலும் அவன் எந்தக் காரியமாக இருந்தாலும் அதை அவன் நிறைவேற்றியே ஆக வேண்டும். ஒருவேளை ஒரு பெண் தன் தந்தையின் அனுமதியில்லாமலோ அல்லது கணவனின் அனுமதியில்லாமலோ ஒரு பொருத்தனை செய்திருந்தால், அவள் அதை நிறைவேற்றாமல் போனால், அவள் அதைச் செலுத்தியே தீர வேண்டும் என்று கட்டாயத்திலிருந்து விடுபடுகிறாள். தேவன் அவளை மன்னிப்பார், அது அவளுக்கு எதிரான பாவமாக கருதப்படமாட்டாது. மேலும் கணவனோ அல்லது தந்தையோ அதற்கு உடன்படவில்லை என்றாலும் அவள் அந்தப் பொருத்தனையிலிருந்து விடுபடுகிறாள். என்னைப் பொருத்தவரை இது பெண்களைப் பற்றிய காரியத்தில் பதற்றத்தைக் காட்டிலும் பெரிய ஆறுதலையே தருகிறது. ஒரு குடும்பத்தில் தந்தையோ (திருமணமாகாத பெண்ணின் விஷயத்தில்) அல்லது கணவனோ தான் (திருமணமான பெண்ணின் விஷயத்தில்) தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்பதே தெய்வீக வடிவமைப்பில் குடும்பத்தைப் பற்றி கருத்தாகும்.
எனவே ஒரு பெண் பொருத்தனை செய்ய முடியாது என்ற பெண்ணியவாதியின் அனுமானம் மிகவும் தவறானது. ஆனால் இந்தப் பொருத்தனைகளானது குடும்பத்தின் தேவைகளைச் சந்திக்கவும் அதைப் பாதுகாக்கவும் தேவன் கட்டளையிட்ட நபர்களாகிய அவரது தந்தை அல்லது கணவர் ஆகியோருடன் தொடர்புடையது ஏற்புடையதா என்பதே கேள்வியாகும். ஒரு பெண் தனது திருமணத்திற்கு முன் இளம் பெண்ணாக தனது தந்தையின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறபடியால் அவள் வீட்டில் உள்ள விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் மற்றும் அவளுடைய தந்தைக்கு கீழ்ப்படியவும் வேண்டும் (எப்படி நம் குழந்தைகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பதவியில் இருப்பவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று கற்பிக்கிறோமோ அதுபோலத்தான் இதுவும்). ஆதியாகமம் 1-2 ல் நாம் முன்பு விவாதித்தபடி, படைப்பில் தேவன் மனிதனை வீட்டின் தலைவராக உருவாக்கியிருக்கிறார். எனவே குடும்பத்தின் தலைவரின் வழி நடத்துதலுக்கு அடிபணிந்து நடக்க வேண்டிய பொறுப்பு மனைவிக்கு உள்ளது.
தேவனை மையமாகக் கொண்ட ஒரு அன்பான இல்லத்தில், தந்தையாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி, பெண்கள் செய்த பொருத்தனையைப் புரிந்துகொண்டு, அந்தப் பெண்ணின் பொருத்தனையை நிறைவேற்றவே அனுமதிப்பார்கள் என நான் நம்புகிறேன். ஒரு அன்பான குடும்பத்தில் ஒரு பெண் சுயாதீனமாக தேவனுக்குப் பொருத்தனை செய்கிற சுதந்திரம் உள்ள சிறந்த சூழ்நிலையே நிலவும் என்பதிலும் சந்தேகமில்லை. எனினும் இந்த பகுதி சுட்டிக்காட்டுகிற படி பெண்கள் பொருத்தனை செய்வதை ஏதோவொரு காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ளாத தந்தைகளும் கணவர்களும் இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தேவன் பொருத்தனை செய்த பெண்களைக் காப்பாற்றவே விரும்புகிறார். அவர்களுடைய பொருத்தனைமீது கவனம் வைக்காமல், அவர்களுக்கு மன்னிப்பையும் பொருத்தனையை நிறைவேற்றாத குற்றத்திலிருந்து விடுதலையையும் தருகிறார்.
சில சமயங்களில் பெண்களின் கடினமான சூழ்நிலைகளைத் தேவன் புரிந்துகொள்கிறார். மேலும் அவருடைய இருதயம் பெண்களின் பக்கமாக தாங்கலாக இருக்கிறது. அவரது இரக்கமும் கருணையும் பெண்களின் கரிசணையைக் குறித்தே உள்ளது, இது இந்த தேவனைப் பின்பற்றுவதற்கு எனக்கு அதிக நம்பிக்கையைத் தருகிறது. எனவே, ஒரு பெண் பொருத்தனையை நிறைவேற்றாவிட்டால் அவள் அதற்குப் பொறுப்பாளியாவதில்லை, மாறாக அவள் பொருத்னையை நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். பெண்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுகிறது என்று எப்படிக் கூறமுடியும்?
(எண்ணாகம் 31:14-18): இந்த வேதபகுதியில், மீதியானிய இனத்தைச் சேர்ந்த ஆண்களையும், பெண்களையும், முதியவர்களையும், குழந்தைகளையும் கொல்லும்படி மோசே தனது ஆட்களிடம் உத்தரவிடுகிறார். ஆனால் திருமணமாகாத கன்னிப் பெண்களை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். இது அப்பெண்களைக் கற்பழிப்பதற்குத்தானே உயிரோடு காப்பாற்றச் சொல்லுகிறார். இது பெண்களுக்கு எதிரான பாகுபாடு தானே?
மீதியானியர் ஒரு நாடோடிக் கூட்டத்தார் ஆவர். இவர்கள் மோவாப் மக்களுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள். பாலியல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தையின் மூலமாக இஸ்ரவேலரைக் கவர்ந்து, அவர்களை உருவ வழிபாட்டிற்குள் தள்ளியவர்கள் இவர்கள். எனவே இவர்களைப் பழிவாங்கும் வகையில் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார் (எண். 25). இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் பலிகளில் கலந்துகொண்டார்கள், அவர்கள் மத்தியில் அவர்களுடைய பலியின் உணவைச் சாப்பிட்டு, பாகால் உட்பட மோவாபியர்களின் பல தெய்வங்களை வணங்கினர் (எண் 25:2,3). இதனிமித்தமாக இஸ்ரவேல் மக்களில் 24,000 பேர்களை ஒரு கொள்ளை நோய்யை அனுப்பிக் கொலை செய்தார். இந்த கொள்ளை நோயானது இஸ்ரலேர்கள் மீதியானியர்களுடன் உடலுறவு கொண்டு தங்களைத் தீட்டுப்படுத்தியதன் விளைவாக நேரிட்டது. (எண் 25:9). ஆகவே, மிதியானியர்களின் தவறான சூழ்ழ்ச்சியின் காரணமாகவும் அவர்களுடைய பாவத்தின் காரணமாகவும் தேவன் அவர்களை நியாயமான முறையில் தண்டித்தார். இஸ்ரவேலர்களுக்கு மேலும் இவர்களுக்குப் பிரச்சினை வராதபடிக்கு ஒரு தற்காப்பு நடவடிக்கையாக அவர்களை அழித்து நியாயம் தீர்க்கும்படி கட்டளையிட்டார்.
எண்ணாகமம் 31:14-18. இந்த வேதபகுதி திருமணமாகாத கன்னிப் பெண்கள் தவிர அனைத்துப் பெண்களும் இஸ்ரவேலர்களை மயக்கிப் பாவம் செய்யத் தூண்டியதன் தண்டனையாக அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறுகிறது. கன்னிப் பெண்களை விட்டுவிட வேண்டும் என்றும் அது கூறுகிறது, ஒருவேளை இந்த இளம் கன்னிப் பெண்கள் பாகால் வழிபாட்டுடன் தொடர்புடைய ஒழுக்கக்கேடான செயல்களில் வெளிப்படையாக ஈடுபடாமல் இருந்திருக்கலாம். எனவேதான் அவர்கள் திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களுடன் அவர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த இளம் பெண்கள் இஸ்ரவேலர்கள் சிறைபிடிக்கப்பட வேண்டும் என்றுதான் வேத வசனம் கூறுகிறது. இவர்கள் இஸ்ரவேலர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எனவே எந்தபொரு ஆதாரமும் இல்லாமல் இஸ்ரவேலின் ஆண்கள் அவர்களை கற்பழித்தார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள் என்று கூறுவது தவறான கருத்தாகும். அவர்கள் போரின்போது கைதியாக்கப்பட்டதால் போர் நிபந்தனைகளின்படி அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு அடிமைகளாக மாறியிருப்பார்கள் என்று கூறமுடியும். மேலும் அவர்கள் அடிமைகளாகிவிட்டால், இஸ்ரவேலில் வழங்கி வருகிற அடிமை தொடர்பான அனைத்துச் சட்டங்களும் அவர்களுக்குப் பொருந்தும். எனவே, அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்று எந்த எழுதப்பட்ட ஆதாரமும் இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் கருதுவது தவறானது. இன்றைய நாட்களில் இளம் பெண்கள் கடத்தப்பட்டால் என்ன நிகழுகிறதோ அதைக் குறித்த அச்சத்தால் எழுகிற கருத்தாகும் இது.
மேலும், எண்ணாகமம் 25:7,8 -இல் ஒரு சம்பவம் சொல்லப்பட்டுள்ளது. ஒரு இஸ்ரவேல் ஆணும் ஒரு மீதியானிய பெண்ணும் பாலுறவில் ஈடுபட்டதால், இருவரும் பினெகாஸால் கொல்லப்பட்டதைக் காண்கிறோம். இஸ்ரவேலர்களுக்கு தேவன் வழங்கிய சட்டம் கற்பழிப்பைக் கண்டனம் செய்கிறது மட்டுமின்றி, சில சந்தர்ப்பங்களில் அது மரண தண்டனையும் வழங்குகிறது (உபாகமம் 22:25-27). மேலும், கன்னிப் பெண்களைத் தப்பவிடுவதற்கான கட்டளையைத் தொடர்ந்து, வீரர்கள் உடனடியாகத் தங்களையும், தாங்கள் சிறைபிடித்துக் கொண்டுவந்தவர்களையும் சுத்திகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர் (எண்ணாகமம் 31:19). கற்பழிப்போ அல்லது ஒருமித்த மனதுடன் உடலுறவு கொள்வதோ லேவியராகமம் 15:16-18 வசனங்களில் கூறப்பட்டிருக்கும் கட்டளையை மீறும் செயலாகும். எனவே உடலுறவு குறித்த காரியத்தில் இவ்வளவு கெடுபிடிகள் சட்டங்களால் கொடுக்கப்பட்டுள்ளதால், அமலேக்கிய இனத்தைச் சேர்ந்த கன்னிப் பெண்களை பலாத்காரம் இஸ்ரவேலர்கள் பலாத்காரம் செய்தார்கள் என்று கூறுவது, வேத வாக்கியங்களின் வெளிச்சத்தில் எந்த வகையாலும் பொருளற்ற வாதம் ஆகும்.
நீங்கள் தொடர்ந்து தோராவைப் படிப்பீர்களாயின், மோசேயைத் தவிர வேறு எந்த யூதர்களும் ஒரு மீதியானியப் பெண்ணை திருமணம் செய்ய முடியாது என்று தேவன் கூறியிருக்கிறதைக் காண்பீர்கள். இது முரண்பாடான காரரியம் அல்லவா?
இஸ்ரவேலர்கள் எவரும் மீதியானியப் பெண்களை மணக்க முடியாது என்றும், மோசே மட்டும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிற வேத வசனங்களை இந்தப் பெண்ணியவாதி ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. எந்த இடத்திலும் பிற்காலத்தில் எழுதப்பட்ட வேத வாக்கியங்களிலும் இவ்வாறு எழுதப்படவில்லை. இது அந்தப் பெண்ணியவாதியின் அறியாமையா அல்லது வேண்டுமென்றே கூறப்பட்ட சதியா என்று எனக்குத் தெரியவில்லை. மோசே ஒரு மீதியானியப் பெண்ணை மணந்தார் என்பது உண்மைதான். ஆனால் இது நியாயப்பிரமாணம் வழங்கப்படுவதற்கு முன்னரே நடந்த காரியம். சில குறிப்பிட இன மக்களுடன் இஸ்ரவேலர்கள் திருமண உறவு செய்யக்கூடாது என்று சொல்வதற்கான காரணம், அவர்கள் வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அல்ல, அவர்கள் விக்கிரக ஆராதனை செய்கிற மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே ஆகும். கானானியப் பெண்ணான ராகாப், மோவாபிய பெண்ணான ரூத் ஆகியோர் யூதர்களைத் திருமணம் செய்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மத வழிபாட்டை விட்டுவிட்டு, மெய்யான கடவுளாகிய யெகோவாவைப் பின்பற்றினால் இஸ்ரவேல் வம்சத்தின் ஆண்களைத் திருமணம் செய்ய உரிமை பெற்றிருக்கிறார்கள். மேலும் இவர்களுடைய பெயர்கள் இயேசுவின் வம்சவழிப் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறதன் மூலமாக தேவன் அவர்களைக் கனப்படுத்தியிருக்கிறார்.
போரில் பிடிபட்ட பெண்கள் பலமுறை கற்பழிக்கப்பட்டு கருவுற வைக்கப்பட்டனர். ஆயினும் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, திருமணம் ஆனவர்கள் என்ற அந்தஸ்துகூட அவர்களுக்குத் தரப்படவில்லை.
இது முற்றிலும் ஒரு தவறான குற்றச்சாட்டு என்றே கூற வேண்டும். வேண்டுமென்ற அனுமானத்தின் அடிப்படையில் வைக்கப்படுகிற குற்றச்சாட்டாகும். பெண்கள் மீண்டும் மீண்டும் கற்பழிக்கப்பட்டு கருவுற்றனர் என்று கூறுவதற்கு எந்த ஒரு வரலாற்று மேற்கோளையும் இந்தப் பெண்ணியவாதியால் வழங்க முடியாது. ஏனெனில் அப்படியான ஆதாரங்கள் எதுவும் அறவே இல்லை!
ஆயினும் அவர்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில் அளிப்போம். போரில் சிறைபிடிக்கப்பட்ட பெண்களுக்கு என்ன நேரிட்டது? ஆகாயத்தில் சிலம்பம் செய்வதைப் போலில்லாமல், பிற வேதவசனங்களின் துணையோடு, எவ்வித அனுமானத்திற்கும் இடம் கொடாமல் நேர்மையான முறையில் நாம் பதிலளிக்க முயலுவோம். சிறைபிடிக்கப்பட்ட பெண்களை இஸ்ரவேலர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தேவன் அனுமதி அளித்தார். இதுமட்டுமின்றி, அவர்களை மனைவிகள் என்ற முறையில் கண்ணியத்துடன் நடத்தவும் கட்டளை வழங்கியிருந்தார் (வாசிக்கவும் உபாகமம் 21:10-14). அடிமையாகப் பிடித்து வரப்பட்டு, திருமணம் செய்யாதவர்களாக இருந்தால் அவர்களை வேலைக்காரிகளாக வைத்திருப்பார்கள். ஆயினும் இத்தகையோரையும் தவறாக நடத்துவதற்கு எதிரான விதிகளே இருந்தன (யாத்திராகமம் 21:26-27, உபாகமம் 23:15-16). இக்கட்டளைகள் அனைத்தும் வழக்கமான பழங்காலப் போர்களில் இருந்து வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கால கலாச்சாரத்தில் இவ்வாறு போரில் பிடிக்கப்படுகிற பெண்கள் தகாதவிதமாய் நடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும் அவர்களை அடிமைகளாக விற்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக, இஸ்ரவேலர்கள் ஒரு மாதம் காத்திருந்து, அந்தப் பெண்ணை மணந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை இருந்தது. இது மனிதர்கள் என்ற முறையில் பெண்களுடைய ஆளுமையை மதிக்கக் கற்றுக்கொடுத்திருந்தது.
உபாகமம் 20:13-15: இந்த வசனத்தில், கர்த்தர் ஒரு பட்டணத்தை உங்கள் கைகளில் ஒப்படைக்கும்போது, அங்குள்ள உள்ள ஆண்களையும், சிறுவர்களையும், கொன்றுவிடுங்கள். ஆனால் கற்பழிப்பதற்காக பெண்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் என்று உள்ளது. இது ஒரு பெண்களுக்கு எதிரான ஒரு மோசமான காரியம் அல்லவா?
உபாகமம் 20:13-15: நாம் இந்த பகுதியிலுள்ள வசனங்களில் உண்மையிலேயே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று காண்போம்: “உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக. இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக”.
எண்ணாகமம் 31 -ஆம் அதிகாரத்தில் உள்ளதைப் போலவே, இந்த வேதபகுதியிலும் கற்பழிப்பு பற்றியோ அல்லது பாலியல் வன்செயல் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, வேதவசனங்களிலுள்ள உண்மையைப் பார்க்காமல், தன் கருத்துக்கு ஏற்றவாறு அனுமானங்களை இட்டுக்கட்டுகிறார் இந்தப் பெண்ணியவாதி என்று தன்னை அழைத்துக்கொள்பவர். உண்மையில், இஸ்ரவேலர்கள் சிறைபிடிக்கப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள தேவன் அனுமதித்தார். மேலும் அவர்கள் தங்கள் மனைவிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பெண்கள் முதலாவது தங்கள் குடும்பங்களை நினைத்து துக்கங்ககொண்டாட வேண்டும். அவளை மனைவியாக்கிய பிறகு அவளைத் தவறாக நடத்தக் கூடாது (உபாகமம் 21:10-14). திருமணம் செய்யாதவர்களை அவர்கள் வேலைக்காரர்களாக ஆக்கியிருந்தார்கள். ஆயினும் நாம் முன்னரே சிந்தித்ததுபோல அவர்களை தவறாக நடத்துவதற்கு எதிரான விதிகள் இருந்தன.
மேலும் இந்த வேதபகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியம் என்னவெனில், இந்தப் பெண்ணிவாதி கூறுவதுபோல சிறுவர்கள் கொல்லப்படவில்லை. ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆகவே இந்த வகையில் சிறுவர்களும் பெண்களும் தேவனுடைய அன்பான கரிசனைக்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
(உபாகமம் 21:11-14): சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஓர் அழகான பெண்ணைக் கண்டால், அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளிடம் பிரவேசியுங்கள் என்று இந்த வேத பகுதி கூறுகிறதே?
(உபாகமம் 21:10-14): “நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து, சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி, அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து, தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள். அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்”.
ஒருவனுக்கு சிறைப்பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பிடித்திருந்தால், அவன் அவளைக் கற்பழிக்க அனுமதியில்லை. ஆனால் அவன் விரும்பினால் அவளை மனைவியாக்கிக் கொள்ளலாம். சிறைபிடிக்கப்பட்ட முகாமில் இருந்து அவளை அவன் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும், பிறகு சிறைபிடிக்கப்பட்டவள் என்று அடையாளம் காட்டுகிற அவளுடைய ஒவ்வொரு வெளிப்புற அடையாளத்தையும் முத்திரையையும் அகற்ற வேண்டும். மேலும் அவளுடைய பெற்றோரை நினைத்து துக்கங்ககொண்டாடுவதற்குப் போதுமான கால அவகாசம் (ஒரு முழு மாதம்) வழங்க வேண்டும். அதன் பிறகுதான் அந்த மனிதன் அவளை மனைவியாக அழைத்துக் கொண்டு போய் அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டும். இது பண்டைய போர்க்கால வழக்கமான நடைமுறையிலிருந்து மிகவும் முன்னேறிய ஒரு முறையாகும். அன்றைய காலகட்டத்தில் போரில் அடிமையாகப் பிடிக்கப்பட்ட பெண்கள் அந்த இடத்திலேயே கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர் அல்லது அடிமையாக விற்கப்பட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் முற்றிலும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்தனர். அதாவது எவ்விதச் சுயாதீனமும் இராமல் எஜமானர்களின் முழுக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தனர். இத்தகைய சூழ்நிலையிலேயே அடிமைப் பெண்களுக்கு மரியாதையும் மதிப்பும் அளித்து, மனைவியின் ஸ்தானத்தை வழங்கி உயர்ந்த தராதரங்களை அவர்களுக்கு வேதாகமத்தின் தேவன் அமைத்துக்கொடுக்கிறார். ஒரு மாத காலத்திற்குப் பிறகும், அந்த ஆண் அவளை மனைவியாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றால் (ஆரம்ப காலத்தில் வெறும் மோகம் மட்டுமே சிலருக்கு இருக்கும் ), அந்தப் பெண் விடுவிக்கப்பட வேண்டும். அவள் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தாலும்கூட அவள் விடுதலை அடைவாள். இது அந்த காலகட்டத்தில் இருந்த நாடுகளில் மிகவும் பரவலாகப் பின்பற்றி வந்த நடைமுறையிலிருநதும், கலாச்சாரத்திலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதும், மாறுபட்டதுமான ஒன்றாகும். அந்த பெண்னை பணத்திற்காக எந்தக் காரணம் கொண்டு தவறாக நடத்தவோ அல்லது விற்கவோ முடியாது.
உபாகமம் 22:5: வசனத்தில் ஆண்களின் ஆடைகளை அணியும் பெண்கள் “கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்” என்று கூறப்பட்டுள்ளதே.
இந்தப் பெண்ணியவாதி இங்கே மீண்டும் பாதி வசனத்தை மேற்கோள் காட்டி, தேவனை ஒரு பாலினப் பாகுபாடு காட்டுகிறவர் என்பது போன்ற தோற்றத்தை உண்டுபண்ண முயற்சிக்கிறார்.
முழு வசனமும் பின்வருமாறு:
உபாகமம் 22:5: “புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்”.
ஆணின் ஆடையை அணிகிற பெண் மட்டுமல்ல, ஒரு பெண்ணின் ஆடையை அணிகிற ஆணும் கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானவனாகக் கருதப்படுகிறான் என்பதை நினைவில் கொள்க. இங்கே எந்தவிதப் பாலினப் பாகுபாடும் இல்லை என்பதை நாம் தெளிவாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது, நாம் இந்த வசனத்தின் உண்மையான பொருளைக் காண்போம்.
இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு முக்கியமான கருப்பொருள் வார்த்தைகளைக் (எபிரெய வார்த்தைகளைக்) கவனிக்க வேண்டும். ஒன்று கெலி (மநட) மற்றொன்று சிம்லட் (அடநவ). இவை தமிழ் வேதாகமத்தில் வெவ்வேறு வழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் பொதுவாக ஆடைகளைக் குறிக்க சிம்லட் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு “வெளியே அணியும் ஆடை,” அல்லது“அங்கியைக்” குறிக்கிறது. எனவே, எந்தவொரு ஆடையையும் குறிக்க இவ்வார்த்தையைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் கெலி என்ற சொல்லானது, கவசம், பை, வண்டி, தளவாடங்கள், கருவி, நகை, சாக்கு, பொருள், பாத்திரம், ஆயுதம், கருவி, சாமான்கள், படகு, இருக்கை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறிக்க பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தை பழைய ஏற்பாட்டில் 319 தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இதன் பெயர்ச் சொல் வார்த்தையான மனிதர்கள் வைத்திருக்கிற அல்லது அணிகிற எந்தவொரு பொருட்களையும் குறிப்பதற்காகவும் பயன்படுத்தலாம். பொதுவாக, பெண்கள் ஆண்களின் அணிகலன்களையும், ஆண்கள் பெண்களின் அணிகலன்களையும் அணிவதைச் சுட்டிக்காட்டுகிறது என்று பெரும்பாலான வேத பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதுவும் முக்கியமான புறஜாதிகளின் உருவ வழிபாட்டு வழக்கத்தை இது குறிக்கிறது என்று பல அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆகவே ஆண்களையும் உடையை பெண்களும், பெண்களின் உடைகளை ஆண்களும் அணிவது என்பது இஸ்ரவேலர் அல்லாத மதங்களின் சில சடங்குகளைக் கடைப்பிடிக்கிறதைக் காண்பிக்கிறது. எனவே இது தடைசெய்யப்பட்ட ஒன்றாக வேதம் கூறுகிறது.
வேதாகம காலங்களில் ஆண்களும் பெண்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக ஆடை அணிந்திருப்பதால் அதை சாதாரணமாக வீட்டிற்குள் பயன்படுத்தப்படும் ஆடைகளையே குறிக்கிறது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. பழைய ஏற்பாட்டு காலங்களில், ஆண்களும் பெண்களும் மேலோட்டமாக ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்தனர். நீண்ட அங்கி போன்ற ஆடைகளும், அதற்கு மேலாகப் போர்த்துகிற ஆடைகளும் இருபாலருக்கும் பொதுவானதாக இருந்தது. இருப்பினும், அவர்கள் அணிந்திருந்த விதம் அல்லது வடிவடைப்பு பாலினங்களுக்கு இடையே தெளிவான வேறுபாட்டை காண்பிக்கக்கூடியதாக இருந்தது. மேலும் தேவனுடைய மக்கள் அந்த வேறுபாடுகளை மதித்து நடக்கும்படியே இந்த கட்டளை அறிவுறுத்துகிறது. எனவே இது பாலினங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை வேண்டுமென்றே நீர்த்துப்போகச் செய்யும் வகையிலான ஆடை அணிவதற்கு எதிரான கட்டளையாகும். எனவே இது அன்றாடம் வீடுகளில் அணியும் ஆடைகளைப் போன்றதை குறிப்பதாக இருக்க முடியாது, ஆனால் சில குறிப்பிட்ட, அசாதாரணமான ஆடைகள், ஆயுதங்கள், நகைகள் ஆகியவற்றை ஓர் ஆண் அணிந்தால் அது பார்ப்பதற்கு பெண்களைப் போலவே தோற்றமளிக்கும். இது பண்டைய உலகில் இஸ்ரவேல் அல்லாத புறஜாதிகளிடையே பொதுவாக வழக்கத்தில் இருந்த ஒன்றாகும். மேலும் இது ஓரினச்சேர்க்கையுடன் தொடர்புடையதாகவும் இருந்தது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இஸ்ரவேலர்கள் அந்நிய தேசங்களின் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதைத் தடுக்கும் விதிமுறைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். இத்தகைய சமயப் பின்னணியில் இதைப் பார்க்கும்போது, ஆண்கள் ஆடையை பெண்களும், பெண்கள் ஆடையை ஆண்களும் அணிவதற்கான தடை என்பது, வெறுமனே ஆடையில் மட்டுமின்றி, அது புறமத வழிபாட்டு முறைகளைப் நடைமுறைப்படுத்துவதன் தொடர்பில் ஆகும். ஆகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் என்பது, இஸ்ரவேலர்கள் பிற மதத்தினருடன் சேர்ந்து விக்கிரக வழிபாட்டின் பழக்கங்களைக் கொண்டுவருவதை தடுப்பதற்கே என நாம் தைரியமாகக் கூறலாம்.
உபாகமம் 22:13-22: பெண்களே, உங்கள் கன்னித்தன்மையின் அடையாளங்களை கண்டிப்பாக கடைப்பிடியுங்கள். இல்லையெனில், உங்கள் ஊரைச் சேர்ந்த மனிதர்கள் உங்களைக் கல்லெறிந்து கொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த நிச்சயமாக ஆண்களுக்குப் பொருந்தாது. இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் “ஒரு ஆண் தன் மனைவியைக் கைவிட்டுவிட வேண்டுமென்று நினைத்தால் அவள் கன்னித்தன்மையின் அடையாளங்களை இழந்துவிட்டாள்என்று கூறி அவளை விலக்கிவிடலாம். திருமணமான ஒரு பெண் தான் கன்னி கழியாதவளாக இருக்கிறேன் என்பதை நிரூபிக்க எந்த வழியும் அவளுக்கு இல்லை என்பதாலும், அதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அவளுடைய கணவனுக்கே இருக்கிறதாலும், இது அவன் அவள்மீது வெறுப்புக்கொள்ளும்போது, அவளுடை கன்னித் தன்மையின்மீது சந்தேகம் உள்ளது என்று கூறி அவளை விலக்கி வைத்துவிடலாம்.
இந்த வேதபகுதியிலிருந்து நாம் முதலாவதாகத் தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் என்னவெனில், புதிதாக திருமணமான ஒரு மனிதன் தனது மனைவி கன்னித் தன்மையுடன் இருக்கிறாளா இல்லையா என்பதுடன் தொடர்புடையது. இங்கே வேறு எந்த காரணத்திற்காகவும் அவன் அவளை வேண்டாமென்று தள்ளிவிடவில்லை. அவள் தனது கன்னித் தன்மையை இழந்துவிட்டாள் என்ற காரணத்திற்காக மட்டுமே அவள் மீது குற்றம் சாட்டுகிறான். ஏனெனில் அவள் திருமணத்திற்கு முன்னரே தன்னுடைய தூய்மையைக் காத்துக் கொள்ளாததினாலேயே அவள் மீது குற்றம் சாட்டி அவன் அவளை வெறுக்கிறான். பண்டைய கலாச்சாரங்களில் கன்னித்தன்மை மிகவும் மதிக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒரு பெண் தனது கன்னித் தன்மையைப் பற்றி கணவனிடம் பொய் சொன்னால், அவன் தான் ஏமாற்றப்பட்டதாக உணருகிறான்.
இத்தகைய சிக்கலைத் தீர்ப்பதற்கான முயற்சி என்ன?
பழங்கால வழக்கப்படி, ஒரு யூதப் பெண் தனது கணவருடன் முதலாவது முறையாக உடலுறவு கொள்ளும்போது ஒரு வெள்ளைத் துணியை விரித்து அதன் மேல் நெருக்கமாக இருப்பாள். அவள் கன்னித் தன்மையுடன் இருப்பாளேயாகில், உடலுறவின்போது சில துளி இரத்தம் அந்தத் துணியில் படும். இது இளம் பெண்ணின் கன்னித்தன்மைக்கு சான்றாக அமையும். இந்த இரத்தக்கறை படிந்த துணி, திருமணமான பெண்ணின் பெற்றோரின் சொத்தாகக் கொடுக்கப்படும். இதை அவர்கள் தங்களது மகளின் (இளம் பெண்ணின்) கன்னித்தன்மைக்கு சான்றாக வைத்துக்கொள்வார்கள்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கன்னித் தன்மை பற்றிய பிரச்சினை உருவானால், அந்த பெண்ணின் பெற்றோர் தங்கள் மகள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க, தங்கள் வசம் இருக்கிற அந்த துணியை நகரத்தின் மூப்பர்களிடம் கொண்டு வருவர். ஒருவேளை அந்த ஆண் தவறான குற்றச்சாட்டை தன் மனைவியின் மீது சுமத்தியது கண்டறியப்பட்டால், அவன் அந்தப் பெண்ணின் தந்தைக்கு பெரும் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் எந்தக் காரணம் கொண்டும், எக்காலத்திலும் தனது மனைவியை விவாகரத்து செய்யும் உரிமையை அவன் இழக்க நேரிடும். ஆனால் அந்த பெண் ஏற்கனவே கன்னித் தன்மையை இழந்தவள் என்று நிரூபிக்கப்பட்டாள், அவள் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, அந்த பெண் கல்லெறிந்து கொல்லப்படுவாள். இதுவே அவளுக்கு வழங்கப்படுகிற சரியான தண்டனையாக இருக்கும். இத்தண்டனை அவள் திருமணத்திற்கு முன்னரே பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக மட்டுமின்றி ( திருமணத்திற்கு முந்தைய பாலுறவு செய்கிறவள் வேசி எனப்படுவாள் ), தன் கணவனை ஏமாற்றியதற்காகவும் ஆகும். எனவே, இச்சட்டம் உண்மையிலேயே கன்னிப் பெண்ணாக இருக்கிறவளுக்கு எந்த விதத்திலும் பாதகமானதல்ல. இயல்பாகவே அவள் குற்றமற்றவாளிவிடுவாள். அவளுக்கு எந்தவிதத் தண்டனையும் கிடையாது. ஆனால் அவள் மீது சாட்டப்பட்ட குற்றம் ஊர்சிதமானால் அவள் தன் குற்றத்தைச் சுமந்துகொண்டு சாவைப் பெற வேண்டும்.
-முற்றும்-
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.