(உபாகமம் 21:11-14): சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஓர் அழகான பெண்ணைக் கண்டால், அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளிடம் பிரவேசியுங்கள் என்று இந்த வேத பகுதி கூறுகிறதே?

(உபாகமம் 21:10-14): “நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து, சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி, அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து, தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள். அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்”.

ஒருவனுக்கு சிறைப்பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பிடித்திருந்தால், அவன் அவளைக் கற்பழிக்க அனுமதியில்லை. ஆனால் அவன் விரும்பினால் அவளை மனைவியாக்கிக் கொள்ளலாம். சிறைபிடிக்கப்பட்ட முகாமில் இருந்து அவளை அவன் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும், பிறகு சிறைபிடிக்கப்பட்டவள் என்று அடையாளம் காட்டுகிற அவளுடைய ஒவ்வொரு வெளிப்புற அடையாளத்தையும் முத்திரையையும் அகற்ற வேண்டும். மேலும் அவளுடைய பெற்றோரை நினைத்து துக்கங்ககொண்டாடுவதற்குப் போதுமான கால அவகாசம் (ஒரு முழு மாதம்) வழங்க வேண்டும். அதன் பிறகுதான் அந்த மனிதன் அவளை மனைவியாக அழைத்துக் கொண்டு போய் அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டும். இது பண்டைய போர்க்கால வழக்கமான நடைமுறையிலிருந்து மிகவும் முன்னேறிய ஒரு முறையாகும். அன்றைய காலகட்டத்தில் போரில் அடிமையாகப் பிடிக்கப்பட்ட பெண்கள் அந்த இடத்திலேயே கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர் அல்லது அடிமையாக விற்கப்பட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் முற்றிலும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்தனர். அதாவது எவ்விதச் சுயாதீனமும் இராமல் எஜமானர்களின் முழுக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தனர். இத்தகைய சூழ்நிலையிலேயே அடிமைப் பெண்களுக்கு மரியாதையும் மதிப்பும் அளித்து, மனைவியின் ஸ்தானத்தை வழங்கி உயர்ந்த தராதரங்களை அவர்களுக்கு வேதாகமத்தின் தேவன் அமைத்துக்கொடுக்கிறார். ஒரு மாத காலத்திற்குப் பிறகும், அந்த ஆண் அவளை மனைவியாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றால் (ஆரம்ப காலத்தில் வெறும் மோகம் மட்டுமே சிலருக்கு இருக்கும் ), அந்தப் பெண் விடுவிக்கப்பட வேண்டும். அவள் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தாலும்கூட அவள் விடுதலை அடைவாள். இது அந்த காலகட்டத்தில் இருந்த நாடுகளில் மிகவும் பரவலாகப் பின்பற்றி வந்த நடைமுறையிலிருநதும், கலாச்சாரத்திலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதும், மாறுபட்டதுமான ஒன்றாகும்.  அந்த பெண்னை பணத்திற்காக எந்தக் காரணம் கொண்டு தவறாக நடத்தவோ அல்லது விற்கவோ முடியாது.

உபாகமம் 22:5: வசனத்தில் ஆண்களின் ஆடைகளை அணியும் பெண்கள் “கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்” என்று கூறப்பட்டுள்ளதே.

இந்தப் பெண்ணியவாதி இங்கே மீண்டும் பாதி வசனத்தை மேற்கோள் காட்டி, தேவனை ஒரு பாலினப் பாகுபாடு காட்டுகிறவர் என்பது போன்ற தோற்றத்தை உண்டுபண்ண முயற்சிக்கிறார்.

முழு வசனமும் பின்வருமாறு:

உபாகமம் 22:5: “புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்”.

ஆணின் ஆடையை அணிகிற பெண் மட்டுமல்ல, ஒரு பெண்ணின் ஆடையை அணிகிற ஆணும் கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானவனாகக் கருதப்படுகிறான் என்பதை நினைவில் கொள்க. இங்கே எந்தவிதப் பாலினப் பாகுபாடும் இல்லை என்பதை நாம் தெளிவாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போது, ​​நாம் இந்த வசனத்தின் உண்மையான பொருளைக் காண்போம்.

இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு முக்கியமான கருப்பொருள் வார்த்தைகளைக் (எபிரெய வார்த்தைகளைக்) கவனிக்க வேண்டும். ஒன்று கெலி (மநட) மற்றொன்று சிம்லட் (அடநவ). இவை தமிழ் வேதாகமத்தில் வெவ்வேறு வழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் பொதுவாக ஆடைகளைக் குறிக்க சிம்லட் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு “வெளியே அணியும் ஆடை,” அல்லது“அங்கியைக்” குறிக்கிறது. எனவே, எந்தவொரு ஆடையையும் குறிக்க இவ்வார்த்தையைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் கெலி என்ற சொல்லானது, கவசம், பை, வண்டி, தளவாடங்கள், கருவி, நகை, சாக்கு, பொருள், பாத்திரம், ஆயுதம், கருவி, சாமான்கள், படகு, இருக்கை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறிக்க பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தை பழைய ஏற்பாட்டில் 319 தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இதன் பெயர்ச் சொல் வார்த்தையான மனிதர்கள் வைத்திருக்கிற அல்லது அணிகிற எந்தவொரு பொருட்களையும் குறிப்பதற்காகவும் பயன்படுத்தலாம். பொதுவாக, பெண்கள் ஆண்களின் அணிகலன்களையும், ஆண்கள் பெண்களின் அணிகலன்களையும் அணிவதைச் சுட்டிக்காட்டுகிறது என்று பெரும்பாலான வேத பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதுவும் முக்கியமான புறஜாதிகளின் உருவ வழிபாட்டு வழக்கத்தை இது குறிக்கிறது என்று பல அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆகவே ஆண்களையும் உடையை பெண்களும், பெண்களின் உடைகளை ஆண்களும் அணிவது என்பது இஸ்ரவேலர் அல்லாத மதங்களின் சில சடங்குகளைக் கடைப்பிடிக்கிறதைக் காண்பிக்கிறது. எனவே இது தடைசெய்யப்பட்ட ஒன்றாக வேதம் கூறுகிறது.

வேதாகம காலங்களில் ஆண்களும் பெண்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக ஆடை அணிந்திருப்பதால் அதை சாதாரணமாக வீட்டிற்குள் பயன்படுத்தப்படும் ஆடைகளையே குறிக்கிறது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. பழைய ஏற்பாட்டு காலங்களில், ஆண்களும் பெண்களும் மேலோட்டமாக ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்தனர். நீண்ட அங்கி போன்ற ஆடைகளும், அதற்கு மேலாகப் போர்த்துகிற ஆடைகளும் இருபாலருக்கும் பொதுவானதாக இருந்தது. இருப்பினும், அவர்கள் அணிந்திருந்த விதம் அல்லது வடிவடைப்பு பாலினங்களுக்கு இடையே தெளிவான வேறுபாட்டை காண்பிக்கக்கூடியதாக இருந்தது. மேலும் தேவனுடைய மக்கள் அந்த வேறுபாடுகளை மதித்து நடக்கும்படியே இந்த கட்டளை அறிவுறுத்துகிறது. எனவே இது பாலினங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை வேண்டுமென்றே நீர்த்துப்போகச் செய்யும் வகையிலான ஆடை அணிவதற்கு எதிரான கட்டளையாகும். எனவே இது அன்றாடம் வீடுகளில் அணியும் ஆடைகளைப் போன்றதை குறிப்பதாக இருக்க முடியாது, ஆனால் சில குறிப்பிட்ட, அசாதாரணமான ஆடைகள், ஆயுதங்கள், நகைகள் ஆகியவற்றை ஓர் ஆண் அணிந்தால் அது பார்ப்பதற்கு பெண்களைப் போலவே தோற்றமளிக்கும். இது பண்டைய உலகில் இஸ்ரவேல் அல்லாத புறஜாதிகளிடையே பொதுவாக வழக்கத்தில் இருந்த ஒன்றாகும். மேலும் இது ஓரினச்சேர்க்கையுடன் தொடர்புடையதாகவும் இருந்தது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இஸ்ரவேலர்கள் அந்நிய தேசங்களின் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதைத் தடுக்கும் விதிமுறைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். இத்தகைய சமயப் பின்னணியில் இதைப் பார்க்கும்போது, ஆண்கள் ஆடையை பெண்களும், பெண்கள் ஆடையை ஆண்களும் அணிவதற்கான தடை என்பது, வெறுமனே ஆடையில் மட்டுமின்றி, அது புறமத வழிபாட்டு முறைகளைப் நடைமுறைப்படுத்துவதன் தொடர்பில் ஆகும். ஆகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் என்பது, இஸ்ரவேலர்கள் பிற மதத்தினருடன் சேர்ந்து விக்கிரக வழிபாட்டின் பழக்கங்களைக் கொண்டுவருவதை தடுப்பதற்கே என நாம் தைரியமாகக் கூறலாம்.

உபாகமம் 22:13-22: பெண்களே, உங்கள் கன்னித்தன்மையின் அடையாளங்களை கண்டிப்பாக கடைப்பிடியுங்கள். இல்லையெனில், உங்கள் ஊரைச் சேர்ந்த மனிதர்கள் உங்களைக் கல்லெறிந்து கொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த நிச்சயமாக ஆண்களுக்குப் பொருந்தாது. இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் “ஒரு ஆண் தன் மனைவியைக் கைவிட்டுவிட வேண்டுமென்று நினைத்தால் அவள் கன்னித்தன்மையின் அடையாளங்களை இழந்துவிட்டாள்என்று கூறி அவளை விலக்கிவிடலாம். திருமணமான ஒரு பெண் தான் கன்னி கழியாதவளாக இருக்கிறேன் என்பதை நிரூபிக்க எந்த வழியும் அவளுக்கு இல்லை என்பதாலும், அதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அவளுடைய கணவனுக்கே இருக்கிறதாலும், இது அவன் அவள்மீது வெறுப்புக்கொள்ளும்போது, அவளுடை கன்னித் தன்மையின்மீது சந்தேகம் உள்ளது என்று கூறி அவளை விலக்கி வைத்துவிடலாம்.

இந்த வேதபகுதியிலிருந்து நாம் முதலாவதாகத் தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் என்னவெனில், புதிதாக திருமணமான ஒரு மனிதன் தனது மனைவி கன்னித் தன்மையுடன் இருக்கிறாளா இல்லையா என்பதுடன் தொடர்புடையது. இங்கே வேறு எந்த காரணத்திற்காகவும் அவன் அவளை வேண்டாமென்று தள்ளிவிடவில்லை. அவள் தனது கன்னித் தன்மையை இழந்துவிட்டாள் என்ற காரணத்திற்காக மட்டுமே அவள் மீது குற்றம் சாட்டுகிறான். ஏனெனில் அவள் திருமணத்திற்கு முன்னரே தன்னுடைய தூய்மையைக் காத்துக் கொள்ளாததினாலேயே அவள் மீது குற்றம் சாட்டி அவன் அவளை வெறுக்கிறான். பண்டைய கலாச்சாரங்களில் கன்னித்தன்மை மிகவும் மதிக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒரு பெண் தனது கன்னித் தன்மையைப் பற்றி கணவனிடம் பொய் சொன்னால், அவன் தான் ஏமாற்றப்பட்டதாக உணருகிறான்.

இத்தகைய சிக்கலைத் தீர்ப்பதற்கான முயற்சி என்ன?

பழங்கால வழக்கப்படி, ஒரு யூதப் பெண் தனது கணவருடன் முதலாவது முறையாக உடலுறவு கொள்ளும்போது ஒரு வெள்ளைத் துணியை விரித்து அதன் மேல் நெருக்கமாக இருப்பாள். அவள் கன்னித் தன்மையுடன் இருப்பாளேயாகில், உடலுறவின்போது சில துளி இரத்தம் அந்தத் துணியில் படும். இது இளம் பெண்ணின் கன்னித்தன்மைக்கு சான்றாக அமையும். இந்த இரத்தக்கறை படிந்த துணி, திருமணமான பெண்ணின் பெற்றோரின் சொத்தாகக் கொடுக்கப்படும். இதை அவர்கள் தங்களது மகளின் (இளம் பெண்ணின்) கன்னித்தன்மைக்கு சான்றாக வைத்துக்கொள்வார்கள்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கன்னித் தன்மை பற்றிய பிரச்சினை உருவானால், அந்த பெண்ணின் பெற்றோர் தங்கள் மகள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க, தங்கள் வசம் இருக்கிற அந்த துணியை நகரத்தின் மூப்பர்களிடம் கொண்டு வருவர். ஒருவேளை அந்த ஆண் தவறான குற்றச்சாட்டை தன் மனைவியின் மீது சுமத்தியது கண்டறியப்பட்டால், அவன் அந்தப் பெண்ணின் தந்தைக்கு பெரும் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் எந்தக் காரணம் கொண்டும், எக்காலத்திலும் தனது மனைவியை விவாகரத்து செய்யும் உரிமையை அவன் இழக்க நேரிடும். ஆனால் அந்த பெண் ஏற்கனவே கன்னித் தன்மையை இழந்தவள் என்று நிரூபிக்கப்பட்டாள், அவள் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, அந்த பெண் கல்லெறிந்து கொல்லப்படுவாள். இதுவே அவளுக்கு வழங்கப்படுகிற சரியான தண்டனையாக இருக்கும். இத்தண்டனை அவள் திருமணத்திற்கு முன்னரே பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக மட்டுமின்றி ( திருமணத்திற்கு முந்தைய பாலுறவு செய்கிறவள் வேசி எனப்படுவாள் ), தன் கணவனை ஏமாற்றியதற்காகவும் ஆகும். எனவே, இச்சட்டம் உண்மையிலேயே கன்னிப் பெண்ணாக இருக்கிறவளுக்கு எந்த விதத்திலும் பாதகமானதல்ல. இயல்பாகவே அவள் குற்றமற்றவாளிவிடுவாள். அவளுக்கு எந்தவிதத் தண்டனையும் கிடையாது. ஆனால் அவள் மீது சாட்டப்பட்ட குற்றம் ஊர்சிதமானால் அவள் தன் குற்றத்தைச் சுமந்துகொண்டு சாவைப் பெற வேண்டும்.

-முற்றும்-

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.