லேவியராகமம் 27:3-7 இந்த வசனங்களில் தேவன் மனிதர்களுக்கு நியமித்த மதிப்பைப் பார்க்கிறோம். இதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களை குறைவாக மதிப்பிடுகிறதைக் காண்கிறோமே? இது பெண்களை சமமாகப் பாவிக்காத காரியம் அல்லவா? ஏன் இந்தப் பாகுபாடு?

லேவியராகமம் 27 -ஆம் அதிகாரதில் பொருத்தனை செய்தவர்கள் தேவனுக்குச் செலுத்தவேண்டிய மதிப்புக் காணிக்கை பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.

முதலாவதும் முக்கியமானதுமாகக் கவனிக்க வேண்டிய காரியம் என்னவெனில், இந்த மதிப்புக் காணிக்கை தேனுடைய கட்டளைப்படி செலுத்த வேண்டிய ஒன்றல்ல. இது தேவனுக்குப் பொருத்தனை பண்ணிய தனிப்பட்ட நபர் ஒருவர் மனப்பூர்வமாகச் செலுத்த வேண்டிய பணத்தைப் பற்றியது. அதாவது இது கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியவர்களின் நேர்மையைப் பற்றிய காரியம் இது.

இரண்டாவதாக, தேவனுக்குப் பொருத்தனை செய்த ஒரு நபர், அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நினைத்தால், ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட்டு அதிலிருந்து வெளியே வந்துவிடலாம்.

மூன்றாவதாக, தேவனுக்காகச் செய்யப்படுகிற பொருத்தனை என்பது வெற்று வார்த்தைகளைக் காட்டிலும் திட்டவட்டமான செயல் வடிவத்தைக் கொண்டது. இது பெயரளவுக்கு பொருத்தனை செய்வதிலிருந்து மக்களைத் தடுக்கிறது. பொருத்தனை செய்வது பாவம் அல்ல, ஒரு முறை பொருத்தனை செய்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பதே பாவம். ஆகவே ஒருவன் செய்த பொருத்தனையைக் கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும் (உபாகமம் 23:21-23; மற்றும் (எண்ணாகம்ம 30:2). ஆனால் சில சூழ்நிலைகள் கருதி இதற்கு விதிவிலக்குகளும் உள்ளன. அதாவது நிறைவேற்ற முடியாவிட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகளும் உண்டு. அதுவும் நம்முடைய சொந்த இஷ்டத்திற்கு செய்ய முடியாது, தேவன் பரிந்துரைத்திருக்கிற காரியங்களை செய்ய வேண்டும். இதிலிருந்து தேவன் விடாப்பிடியானவர் அல்ல என்றும், பொருத்தனை செய்தவரின் மீது தேவன் இரக்க குணமுள்ளவராக இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. மேலும் தேவன் நம்முடைய கஷ்டத்தையும், உணர்ச்சிகளையும் புரிந்துக் கொண்டவராக இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.

இப்போது மீட்பிற்காக செலுத்த வேண்டிய தொகைக்கு வரும்வோம். ​​இது பெரும்பாலும் அந்த நபரின் உடல் உழைப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் அளவீடு செய்யப்படுகிறது. 25 வயதுடைய இளைஞன் ஒருவன் 5 வயது சிறுவனைக் காட்டிலும் அதிகமாக வேலை செய்ய முடியும். எனவே, தனிநபர்களின் மதிப்பு என்பது ஒரு தொழிலாளியின் ஊதியத்திற்கு சமமாகவே (வேதாகம காலத்தில் ஒரு மாதத்திற்கு ஒரு ஷேக்கல் பணம் ஊதியமாக வழங்கப்பட்டது) அல்லது ஆசரிப்புக் கூடாரத்தில் அந்த நபர் செய்கிற வேலையின் மதிப்பை ஒப்பீட்டு அளவு குறிக்கப்படுகிறது. பலி செலுத்தப்பட வேண்டிய மிருகங்களைக் கையாளுதல் என்பது ஒரு கடினமான வேலை, அவ்வாறே ஆசரிப்புக் கூடாரத்தைக் தூக்கிச் சுமப்பதும் கடினமான வேலையாகும். இத்தகைய வேலைகளை இளைஞர்களே அதிகமாகச் செய்ய இயலாம். எனவேதான் இளைஞர்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படுகிறது. கடின உழைப்பைப் பொருத்தவரை ஒரு இளைஞனால் இயல்பாகவே வயதான ஆண்களைக் காட்டிலும் அல்லது ஒரு சிறுவனைக் காட்டிலும், அல்லது ஒரு பெண்ணைக் காட்டிலும் அதிக வேலைகளைச் செய்ய முடியும். எனவே அவர்கள் எல்லாரைக் காட்டிலும் இளைஞன் அதிக மதிப்புடையவனாக இருக்கிறான். எனவே, ஒவ்வொரு பிரிவினருக்கும் மதிப்பிடப்பட்ட பணத்தின் மதிப்பு என்பது, தேவன் மனித வாழ்க்கைக்கு அளிக்கும் மதிப்பையோ அல்லது பாலினத்தைச் சார்ந்த மதிப்பையோ பிரதிபலிக்கிறதில்லை. ஒவ்வொரு பிரிவினருக்கும் பொதுவாக அவர்கள் செய்யும் வேலைக்குத்த ஊழியம் வழங்கப்படும் முறையானது இன்றும் நடைமுறையில் இருக்கிறதைக் காணலாம். கட்டுமானப் பணி போன்ற பிற கடினமான வேலைகளில் கடினமான உடல் உழைப்பு தேவைப்படுகிறது. எனவே இத்தகைய வேலைகளுக்கு அதிகமான உடல் உழைப்பைக் காண்பித்து, அதிகமாக வேலை செய்கிறவர்களுக்கு சிறுவர்களைக் காட்டிலும், பெண்களைக் காட்டிலும் அதிகமான ஊதியம் வழங்கப்படுகிறதை நாம் அறிந்திருக்கிறோம். எங்கே பெண்கள் அதிகமாக வேலை செய்து உற்பத்தியைப் பெருக்குகிறார்களோ அங்கே பெண்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்படுகிறது. எனவே, இது பாலினப் பாகுபாட்டினால் நிர்ணயிக்கப்படுவது அல்ல. இது எந்தத் துறையில் எவ்விதமான செயல்திறனுடன் வேலை செய்கிறார்களோ அதைப் பொறுத்தே இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆகவே இதன் அடிப்படையில் நாம் ஒரு முடிவுக்கு வருவோம். மனித வாழ்க்கையின் பண மதிப்பு என்பது ஒரு தொழிலாளியின் கூலியின் மதிப்பீடாகவே இருக்கிறதே தவிர, மனித வாழ்க்கையைக் குறித்து தேவன் தரும் மதிப்பல்ல. தர்க்கரீதியாகப் பார்த்தால், இந்த மதிப்பீடு பெண்களுக்குச் சாதகமாக உள்ளது, ஏனெனில் பெண்களுக்கான மீட்பிற்கான தொகை ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குக் குறைவாகவே உள்ளது. மேலும் அவர்களது மீட்பு எளிதாக இருக்கிறது. இது ஒரு நபரின் மதிப்பு அல்ல, ஒருவர் செய்த பொருத்தனையைக் கைவிட்டு வெளியேறுவதற்காகச் செலுத்த வேண்டிய பணமதிப்பு. இந்தச் சட்டமும் மக்களின் நலனுக்காக மட்டுமே போடப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் எளிதாக பொருத்தனைக்கு உட்பட்டு விடமாட்டார்கள், அதாவது எளிதாக பாவத்திற்கு ஆட்பட்டு விட மாட்டார்கள். ஆசரிப்புக்கூடாரத்தில் ஊழியம் செய்ய முடியாத சூழல் ஏற்படும்போது, அதற்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்ட நபரை மீட்பதற்கான ஏற்பாடுகளை அனுமதிப்பதில் தேவனுடைய இரக்கத்தையே இது காட்டுகிறது. மேலும், ஏழைகள் தேவனுக்குச் செய்த வாக்கை நிறைவேற்றுவதற்கும் அதிகமான ஏற்பாடுகளை வழங்கியிருக்கிறார். லேவியராகமம் 27:8 –ம் வசனத்தில் நாம் இவ்விதமாகப் படிக்கிறோம்: “9. ஒருவன் பொருத்தனை பண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருக ஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக”.

எனவே, இது உண்மையில் ஏழைகளுக்கும் பெண்களுக்கும் ஓர் அற்புதமான நிவாரணமாகும். குறைந்த பணத்தைச் செலுத்துவது என்பது மதிப்பைக் குறைப்பது அல்ல, அது ஒரு சிறப்புச் சலுகையாகும்.

எண்ணாகமம் 1:2: இன்றைய காலகட்டம் வரை தலைவிரித்தாடுகிற பாலினப் பாகுபாடுக்கு அடிப்படையாக இருப்பதே இந்த வசனம். போரிடுவதற்குத் தகுதியான அனைத்து ஆண்களையெல்லாம் கணக்கிடுமாறு மோசே இந்த வசனத்தின் வாயிலாகக் கூறியிருக்கிறார். பொதுவான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது கூட பெண்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை. அன்று இருந்ததைப் போலவே இன்றைய காலத்திலும் பெண்கள் புறக்கணிக்கப் பட்டவர்களாகவே இருக்கிறார்கள். பெண்களாகிய நாங்கள் போரிடுவதற்குத் தகுதியற்ற அல்லது இயலாத பெலவீனர்களாகவே கருதப்படுகிறோம். (தோரா எழுதப்பட்ட காலத்தில், இஸ்ரவேலர் அல்லாத அந்நிய கலாச்சாரங்களில் பெண்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாகவும், பிறர் பெண்களைக் கண்டு அஞ்சுகிற நிலையிலும் இருந்தார்கள். மட்டுமின்றி, அவர்கள் சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாகவும் இருந்தார்கள் எனபதை மறந்துவிடாதீர்கள். இந்த ஆணாதிக்க மதத்தாலும், அதன் பிரிவுகளாலும் பெண்கள் மனித நிலையைக் காட்டிலும் சற்றுக் குறைவான பிறவிகளாகவும், தாழ்த்தப்பட்ட உயிரிகளாகவும் தரங்குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்).

எண்ணாகமம் 1:2-3: “நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர் பேராக எண்ணித் தொகையேற்றுங்கள். இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக” என்றார்.

எண்ணாகமம் 1 -ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி போருக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பெண்கள் சேர்க்கப்படாமல் விட்டதற்கும், நவீன உலகில் காணப்படுகிற பாலினப் பாகுபாட்டுக்கும் இடையே எளிதாக முடிச்சுப்போடுகிற இந்தப் பெண்ணியவாதியின் குரல் வேடிக்கையானதும் விசித்திரமானதுமாக இருக்கிறது. அவர் இந்த விநோதமான முடிவுக்கு வருவதற்கு என்னென்ன அதிகாரப்பூர்வச் சான்றுகளோ அல்லது வரலாற்றுத் தொடர்பான ஆவணங்களோ வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

இரண்டு முக்கியமான காரியங்களை நாம் இங்கே கவனிக்க வேண்டும். 20 வயதுக்குட்பட்ட ஆண்களில் யாரும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. மேலும், இஸ்ரேலுக்காக யாரெல்லாம் போருக்குச் செல்வதற்கு தகுதிபெற்றவர்களோ அவர்கள் மட்டுமே மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே இதில் பெண்கள் மட்டுமின்றி, ஏராளமான ஆண்களுக்கும் இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை என்பது தெளிவான உண்மையாகும்.

அந்தக் காலத்தில் நிலவிய கலாச்சாரம் மற்றும் அந்தக் காலத்தில் நிலவிய தீய பழக்கவழக்கங்களால் பெண்களை போருக்கு அனுப்புவது என்பது அவர்கள் எதிரிகளால் மிகப் பெரிய தீங்குக்கு ஆளாக நேரிடும். எனவே, தேவன் தீய கலாச்சாரங்களுக்கிடையில், பெண்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஓர் ஒழுங்கு முறையைக் கொண்டு வந்திருந்தார். இந்த 21 -ஆம் நூற்றாண்டிலேயே “நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்” மீ டூ என்ற இயக்கம் தேவைப்படுகிறதெனில் அந்த நாட்களின் பெண்களின் நிலை என்னவாயிருந்திருக்கும்?!

பெண்கள் போருக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படாமல் விடபட்டிருந்ததற்கான மிக முக்கியமான காரணம், ஆண்கள் போருக்குச் செல்லும் போது பெண்கள் தங்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வீடுகளில் இருந்தார்கள். அந்தக் காலப் போர்கள் மிகவும் கொடூரமானவை, ஒவ்வொரு போரிலும் விலைமதிப்பற்ற உயிர்களின் இரத்த ஆறு ஓடும். இதனால் போரில் பங்கு பெற்றோரின் விலைமதிப்பற்ற உயிர்கள் எளிதில் பறிபோய்விடும். பெண்கள் போருக்குப் போய்விட்டால் வீட்டில் இருக்கும் குழந்தைகளை என்ன செய்வது? ஆகவே தேவன் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டும், பிள்ளைகள் அனாதைகள் ஆவதை தடுக்கும் பொருட்டும், அல்லது இருக்கிற பிள்ளைகள் பராமரிப்பின்று அனாதைகளாக ஆக நேரிடும் என்பதைக் கருத்தில் கொண்டும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட அற்புதமான ஏற்பாடே இது. ஒரு மனிதனுக்குச் சமீபத்தில் திருமணம் ஆகியிருந்தால், அவனும் போருக்குச் செல்லக்கூடாது அல்லது அவனை அனுப்பப்படக்கூடாது அல்லது வேறு எந்தக் கடமையும் அவன் மீது சுமத்தப்படக்கூடாது என்பதை திட்டவட்டமாக (உபாகமம் 24:5) –ம் வசனத்தில் போதிக்கும் அறிவுரையாகும். அவன் ஓராண்டு காலம் வீட்டில் தங்கியிருந்து தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். எனவே, போருக்குச் செல்ல ஆண்களைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​குடும்பத்தின் நலனும் இங்கே கருத்தில் கொள்ளப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. இது திருமணம் மற்றும் குடும்பத்திற்கு தேவன் அளிக்கும் முக்கியத்துவத்தையும், குடும்பத்தில் அவரவர் வகிக்கும் பங்கையும் காட்டுகிறது.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.