லேவியராகமம் 21:9: இந்த வசனம், ஆசாரியர்களின் மகள் ஒழுக்கக்கேடான முறையில் நடந்துகொண்டால் எரித்து கொல்லப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் ஒழுக்கக் கேடாய் நடக்கிற ஆசாரியர்களின் மகன்களைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லையே? இது குறித்து தோராவில் எங்கும் பதிலளிக்கப் படவில்லை. இங்கே ஆண்களுக்கு அவர்கள் விரும்பியபடி செய்ய அதிகாரம் உள்ளது, ஆனால் ஒரு பெண் தவறு செய்துவிட்டால், அவள் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இது பாரபட்சம் அல்லவா?
லேவியராகமம் 21 மற்றும் 22 அதிகாரங்கள், ஆசாரியனுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் இருக்க வேண்டிய பரிசுத்த ஸ்தானத்திற்கான பரிந்துரைகளாகும். பரிசுத்த வேதாகமத்தின் தேவன் தம்முடைய ஆசாரியர்களிடத்திலும் குறிப்பாக யூத மக்களிடமும் எதிர்பார்க்கிற பரிசுத்த தரத்திற்கான தரநிலையாகும். இது தேவன் எதிர்பார்க்கிற பரிசுத்தத்திற்கான முக்கியத்தவத்தின் எதிர்பார்ப்பாகும்.
ஆரோனின் குமாரருக்குரிய பரிசுத்தராக இருக்க வேண்டும் என்ற பரிசுத்த நியமத்திற்கான கட்டளையை லேவியராகமம் 21 -ஆம் அதிகாரம் விவரிக்கிறது.. 1 முதல் 8 வசனங்கள் வரை ஆசாரியர்களின் மகன்கள் எவ்விதமாக இருக்க வேண்டும் என்பதற்கான அம்சங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. 9 -ஆம் வசனம், ஆசாரியனின் மகள்கள் இருக்க வேண்டிய முறை பற்றி விவரிக்கிறது.
ஆசாரியனின் மகள் விபச்சாரம் செய்தால் அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும், அதுவும் அவள் தீயினால் எரிக்கப்படுகிற மரணம் என்பது உண்மைதான். இது பாவங்களுக்கான தண்டனையிலேயே மிகவும் கடுமையான வடிவமாகும். தண்டனை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று அவர்கள் சட்டத்தை மீறுவதைத் தடுப்பதுதான். அதன் கடுமைக்கு பயந்து அவர்கள் அதைச் செய்யாமல் விட்டுவிடுவார்கள் என்பதே இதன் நோக்கம். மேலும் இங்கு ஆசாரியனின் மகன்களைப் பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் அவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விடுவார்கள் என்று கூறுவது வேதாகமத்தின் தேவனைப் பற்றிய அறிவு இல்லாதது ஆகும். எங்கெல்லாம் பாலியல் மீறுதல்களைப் பற்றி வேதம் விவாதிக்கிறதோ அந்தப் பகுதிகளில் எல்லாம் தேவன் ஆண் பெண் இருபாலருக்குமே தண்டனையை அறிவித்திருக்கிறார். எந்த ஒரு சாதாரண இஸ்ரவேலனுக்கும் இச்சட்டங்கள் பொருந்துமெனில், பலிகளுடன் தேவனிடம் நெருங்கி வரும் ஆசாரியர்களாக ஆரோனின் மகன்களுக்கு இது எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும். தேவனுக்கு அருகாமையில் இருப்பவர்களை அவர் தண்டிக்க மாட்டார் என்று சிந்திப்பது முட்டாள்தனமானது. இந்தக் குறிப்பிட்ட பகுதியில் ஆண்களின் தண்டனையைப் பற்றிக் குறிப்பிடாததால், அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று அர்த்தமல்ல.
நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான காரியம் என்னவெனில், இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு, எந்தவொரு ஆசாரியனின் மகளும் எரிக்கப்பட்டதாக வேதாகமத்தில் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் கீழப்படியாத ஆசாரியனின் மகன்களுக்கு என்ன நேரிட்டது என்பதற்கான இரண்டு பதிவுகள் வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளன. லேவியராகம் 10 -ஆம் அதிகாரத்தில், ஆரோனின் மூத்த மகன்களான நாதாபும், அபியுவும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்ததற்காக தேவனால் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள். பிரதான ஆசாரியனாகிய ஏலியின் மகன்களான ஓப்னியும், பினெகாசம் (1 சாமுவேல் 4) தங்களுடைய ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்காக போரில் கொல்லப்பட்டதையும் தேவனின் தண்டனையாகவே காண்கிறோம்.
பாவம் எப்பொழுதும் தேவனுக்கு முன்பாக மிகவும் தீவிரமான ஒரு காரியமாயிருக்கிறது. தேவன் பரிசுத்தரும், நீதியுள்ளவருமாயிருக்கிறார். பாலினம், தேசியம், சமூக அந்தஸ்து மற்றும் வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பாவம் செய்தால் தேவன் யாரையும் தண்டிக்கிறார். ஆணோ பெண்ணோ யார் பாவம் செய்தால், எந்தப் பாவத்தைச் செய்தாலும் தேவன் கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்கவே மாட்டார். அவர்களை நிச்சயமாகவே தண்டிப்பார். இந்தச் சத்தியம் வேதாகமம் முழுவதிலும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
அடுத்த அத்தியாயத்தில் (லேவியராகமம் 22) சொல்லப்பட்டு உள்ளதையும் நாம் கூடுதலாகக் கவனித்துப் பார்ப்போம். பலி செலுத்தப்பட்ட உணவுகளை ஆசாரியனின் பிள்ளைகள் என்ற முறையில் அவருடைய மகன்களும் மகள்களும் உண்பதற்கு தேவன் அனுமதித்திருக்கிறார். எனவே தேவன் பெண் பிள்ளைகளுடைய காரியத்தில் எவ்விதப் பாகுபாடும் பார்ப்பதில்லை. நாம் தேடினாலும் அவ்வாறு காட்டியதாக நாம் பர்க்கமுடியாது.