யாத்திராகமம் 21:10 –ம் வசனப் பகுதி தோராவில், ஆண்கள் பலாதார மணம் செய்துகொள்ளும்படி தேவன் அனுமதிக்கிறார், மேலும் ஓர் ஆண் பல மனைவிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான சட்டங்களையும் கூட அமைத்திருக்கிறாரோ?

வேதாகமத்தின் தேவன் ஒருபோதும் பலதார மணத்தை ஏற்படுத்தவுமில்லை, அதை ஆதரிக்கவும் இல்லை (ஆதியாகமம் 2:18-25 ஆகிய வசனங்களில் சொல்லப்பட்ட காரியம், மத்தேயு 19:1-9 ஆகிய வசனங்களிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது திருமண உடன்படிக்கையில் ஓர் ஆண் ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்துகொள்வதே தேவனுடைய திட்டமாயிருக்கிறது. இதை மீறுவது பாவமாகும், மேலும் தேவனின் பார்வையில் இது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகும். புறமதக் கலாச்சாரங்கள் எபிரெய மக்களின் மீது அதிக அளவிலான தாக்கங்களைக் கொண்டிருந்தன என்பது உண்மைதான். பலருக்கு பல மனைவிகள் இருந்தார்கள் என்பது உண்மையே. ஆனால் இது ஒருபோதும் தேவனின் திட்டம் அல்ல. தேவன் ஒருபோதும் பலதார மணத்தை மன்னிக்கவில்லை. உண்மையில், தோராவின் சட்டங்கள் மிகவும் கடுமையானவை. அது திருமணமானவர்களிடையே காணப்படும் விபச்சாரம் என்னும் பாவத்துக்கு மரண தண்டனையை கொடுக்கப் பரிந்துரைக்கிறது. (லேவியராகமம் 20:10, உபாகமம் 20:20). பெரும்பாலான பண்டைய கலாச்சாரங்களும் மதங்களும் விபசாரத்தைக் குற்றத்துக்குரிய ஒரு தண்டனையின் செயலாகக் கூடப் பார்ப்பதில்லை.

வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள எந்த குடும்பத்திலும் பலதாரமணம் நேர்மறையான விளைவை ஏற்படுத்தியதாக நாம் காண்கிறதில்லை. வேதம் கூறும் அனைத்து முக்கியமான கதாபாத்திரங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கொண்டிருந்ததால் பிரச்சினைகளையே சந்தித்தன என்பதே உண்மை. இத்தகைய பிரச்சினைகள் அனைத்துக்கும் முதன்மையாக காரணம் ஒரே கணவன் ஒரு மனைவி என்ற குடும்பத்திற்கான தேவ திட்டத்திற்கு எதிராக இருந்ததன் விளைவு தான். இத்தகைய பிரச்சினைக்குரிய நிகழ்வுகளை வேதத்தில் சேர்க்கப்படுவதை தேவன் உறுதி செய்தார். ஏனெனில் இத்தகைய பலாதாரண திருமணத்தை தேவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், அது தண்டனைக்குரியது என்பதையும் மக்கள் அறிந்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவும் இதை வேதாகமத்தில் சேர்த்துள்ளார். பழைய ஏற்பாட்டின் இறுதிப் பகுதிக்கு நாம் வரும்போது, கணவன் - மனைவிக்கு இடையே (மனைவிகளுக்கு இடையே அல்ல) அமைந்துள்ள திருமண உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மல்கியாவின் தீர்க்கதரிசனத்தில் தேவன் தெளிவாகக் கூறியுள்ளார். நாம் புதிய ஏற்பாட்டிற்கு வரும்போது அந்தக் காட்டளை மீண்டும் உறுதிப்படுத்தப்படிருப்பதைக் காண்கிறோம்.

லேவியராகமம் 12:1-8: இந்த வேதபகுதியில் ஒரு பெண் “அசுத்தமானவள்” என்பதால் பிரசவத்திற்குப் பிறகு அவள் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. பெண் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதைக் காட்டிலும் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுப்பது தூய்மையானது என்றும் அது கூறுகிறது. மேலும் ஒரு தாய் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது இருமுறை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும் என்று அது கூறுகிறது. இது குழந்தைப் பிறப்பின் அடிப்படையில் முக்கியமாக பெண் குழந்தைகளைப் பொருத்தவரை பாலினப் பாகுபாடு காட்டப்படுகிற ஒன்றல்லவா? ஒரு பெண் ஒரு பெண்ணாக இருக்கிறதற்காக தீட்டுள்ளவளாக இருக்க வேண்டுமா? இது பெண்களுக்கு எதிராக வெளிப்படையான பேரினவாதமும் பாரபட்சமுமாக இருக்கிறது அல்லவா?

ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்த பெண் 7 நாட்கள் மற்றும் 33 நாட்கள் (மொத்தம் 40 நாட்கள்) சடங்கு ரீதியாகத் தீட்டுள்ளவளாக இருக்க வேண்டும் என்று நியாயப்பிரமாணச் சட்டம் குறிப்பிடுகிறது. அதுவே அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் 14 நாட்கள் மற்றும் 66 நாட்களுமாகச் சேர்த்து 80 நாட்கள் தீட்டுள்ளவளாக இருக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது என்பது உண்மையே.

யூத பாரம்பரியத்தில் பின்பற்றப் படுகிற சடங்குகளையும், வாழ்க்கையில் தூய்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் புரிந்துகொள்வதே இந்த வாதத்தைத் தீர்ப்பதற்கான சிறந்த வழியாகும். இங்கே சொல்லப்பட்டுள்ள தீட்டு என்ற வார்த்தையானது குறைவுள்ளவள் என்றோ அல்லது பாவம் நிறைந்தவள் என்றோ பொருளைத் தருகிறதில்லை. மாறாக, இது யூத கலாச்சாரத்தில் பேணப்படுகிற சுத்தத்தின் மாபெரும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இதற்காக நாற்பது நாட்கள் எண்பது நாட்கள் போன்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்கள் ஏன் கொடுக்கப்படுகின்றன என்று வேதம் நமக்குச் சரியாகச் சொல்லவில்லை என்றாலும், நாம் நம்பத்தகுந்த சிறந்த காரணங்கள் சிலவற்றை நாம் சிந்திக்கலாம்.

1) தாயின் வயிற்றில் இருக்கும் போது, குழந்தைகளிடத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக குழந்தைகளுக்கு “மாதவிடாய்” போன்ற சிறிய இரத்தப் போக்கு பிறப்புறுப்பு வழியாக வெளியேற்றப்படுவது பொதுவான ஒன்றாகும். குழந்தைகளுக்கு உண்டாகிற மாதவிடாய் போன்ற இது தோராயமாக ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வாரங்கள் வரை நீடிக்கும். எனவே, ஒரு பெண் குழந்தையும் அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கும் மற்றொரு பெண்ணும் அதாவது, தாயுக்கும் மகளுக்கும் சுத்திகரிப்புக்க்கான காலம் இரட்டிப்பாகத் தேவைப்படலாம்.

2) மேலும், “ஜான் ஹாப்கின்ஸ்” பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வறிக்கை கூறுவதைக் கவனிப்போம். பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயின் மாதவிடாயிலிருந்து வெளிப்படும் இரத்தத்தின் நச்சுத்தன்மையானது, ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயின் இரத்தப்போக்கின் நச்சுத் தன்மையைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. குழந்தைகள் பிறந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு பெண்களின் மாதவிடாய் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யப்பட்டபோது, ((David I. MAcht, A Scientific Appreciation of Genesis 1:28 Leviticus 12:1-5, Journal of Biblical Literature, Vol. 52, No. 4 (Dec., 1933), pp. 253-260).) (வெளியிடப்பட்ட ஆய்வு மற்றும் முடிவுகளின் விவரங்களை https://www.jstor.org/stable/3259207காணலாம்) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு பெண் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரவும், மற்றும் பாலியல் உறவுகளை வைத்துக்கொள்ளவும் அதிக நேரம் தேவைப்படுவதாக அது கூறுகிறது. எனவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேவையான பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இத்தகைய நீண்ட காலம் அதாவது எண்பது நாட்கள் விலகியிருக்க வேண்டியது அவசியமாக இருக்கலாம்.

3) ஆண் குழந்தைகள் பிறந்த ஏழவாது நாளில் அதற்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும், இது இக்குழந்தைகளுக்கு இயல்பான சுத்தம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கலாம். ஆனால் பெண் குழந்தைக்கு இத்தகைய விருத்தசேதனம் இல்லாததால் இது தன்னைச் சுத்திகரித்துக் கொள்வதற்காக அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம்.

4) பண்டைய கலாச்சாரங்களில் ஆண் பிள்ளைகள் மிகவும் மதிப்பு மிக்கவர்களாகக் கருதப்பட்டார்கள் (இன்றைய பல கலாச்சாரங்களில் இத்தகைய எண்ணமே தொடர்ந்துக் கொண்டிருக்கிறது). ஒரு தாய் புதிதாகப் பிறந்த ஒரு பெண் குழந்தையுடன் வீட்டில் அதிக நாட்கள் (அதாவது சுத்திகரிப்பின் நாட்கள்) இருப்பது, தாய்க்கும் மகளுக்குமான அதிகமான பிணைப்பை உருவாக்க உதவும். மேலும் பெண் குழந்தை பிறந்து விட்டதே, ஓர் ஆண் குழந்தை பிறந்தால் நன்றாயிருக்குமே என்று கருதுகிற கணவன், பெண் குழந்தை பிறந்த சிறிது நாட்களிலேயே மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தடுப்பதற்கும் இந்த அதிகப்படியான சுத்திகரிப்பின் நாட்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. தாயின் ஆரோக்கியத்தைக் காக்கப்படுவதற்கும் மேம்படுவதற்கும் இத்தகைய சுத்திகரிப்பின் நாட்கள் அதிகமாக உதவி செய்கின்றன.

இப்போது முக்கியமானதும் நம்முடைய ஆர்வத்தைத் தூண்டுகிறதுமான ஒரு காரியத்துக்கு வருவோம். பிறக்கிற குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், சுத்திகரிப்பின் பிராயச்சித்தத்துக்காக தேவனுக்கு முன்பாக செலுத்த வேண்டிய பலிகள் ஒரே விதமானதாகும். ஆண் குழந்தைகளுக்கு வேறு விதமான பலியும் பெண் குழந்தைகளுக்கு வேறுவிதமான பலிகளும் கிடையாது. இரண்டு சடங்குகளிலும் வேறுபாடுகள் எதுவும் இல்லை, இது தேவனுக்கு முன்பாக இரு பாலினத்தவரும் சமமாக இருக்கிறார்கள் எனபதையும் அவர் எவ்விதப் பாகுபாடும் காட்டுகிறவர் அல்ல என்பதையும் இது நமக்குக் காட்டுகிறது. பாலினம் தொடர்பான தேவனின் இருதயத்தைப் புரிந்துகொள்வதற்கு இந்தக் குறிப்பு முக்கியமானதாக உள்ளது.

“தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்” (ஆதி. 1:28) என்று கட்டளையிட்டார்.  எனவே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளையாகும். மேலும் பிள்ளைகள் கர்த்தருடைய சுதந்தராமாகக் (வெகுமதியாகக்) கருதப்படுகிறார்கள் (சங்கீதம் 127:3). தம்மிடத்தில் வந்த குழந்தைகளை வரவேற்று அவர்களை ஆசீர்வதித்ததன் மூலமாக இயேசு கிறிஸ்து மோசேயின் சட்டங்களை நிறைவேற்றினார் (மத்தேயு 18). ஆகவே பெண்களுக்கான சுத்திகரிப்பின் நாட்கள் (தனிமைப்படுத்தப்பட்ட காலங்கள்) பாலினங்களின் அடிப்படையில் அதாவது ஆண், பெண் குழந்தைகளின் சுத்திகரிப்பு நாட்களுடன் நேடியாக தொடர்புபடுத்தப்படவில்லை என்னும் முடிவுக்கு நாம் தைரியாகவே வரலாம். மாறாக இது பிறப்பின் காலத்திலும், பிரசவத்திற்குப் பிந்தைய காலகட்டங்களிலும் இருக்க வேண்டிய சுத்திகரிப்பு நடைமுறைச் சூழ்நிலைகளுடன் தொடர்புடையது என்றும் நாம் தைரியமாகச் செய்யலாம்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.