யாத்திராகமம் 21:7 -ஆம் வசனம் கூறுகிறபடி, ஒருவன் தன் மகளை அடிமைத்தனத்திற்கு விற்க தேவன் அனுமதிக்கிறார் என்பது மட்டுமின்றி, அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான சட்டங்களையும் அவர் வழங்குகிறாரே. இது பெண்களுக்கு எதிரான பாகுபாடு அல்லவா?
யாத்திராகமம் 21:7-11: “ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது. அவளைத் தனக்கு நியமித்துக்கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை. அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன். அவன் வேறொரு பெண்ணைக் கொண்டானாகில், இவளுக்குரிய அன்னவஸ்திர விவாகக்கடமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருப்பானாக. இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணங்கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவள்”.
இந்த வசனம், “ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால்” என்று தொடங்குகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். தேவன் யாரிடமும் அடிமைத்தனத்தை திணிப்பவரும் அல்ல, அதை உற்சாகமூட்டுபவரும் அல்ல. மாறாக அங்கே ஒரு தந்தை தனது மோசமான சூழ்நிலையின் காரணமாக தன் மகளை விற்க வேண்டும் என்னும் முடிவை எடுக்க நிர்பந்திக்கப்படுகிறார். இது அந்த கலாச்சாரத்தில் நிலவும் சூழ்நிலை. எனவே தேவன் இதில் உடனடியாகத் தலையிட்டு தனது அக்கறையை வெளிப்படுத்துகிறார். எனவேதான் ஒரு “வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது” என்று கூறுகிறார். இதைக் கண்டு பெண்ணிய வாதிகள் தேவன் ஆண்களுக்கு ஆதரவாகவும் பெண்களுக்கு எதிராகவும் இருக்கிறார் என்று முறையிடுகிறார்கள். இது தேவனுடைய பாலினப்பாகுபாட்டைக் காட்டுகிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக, பெண்களையும் அவர்களது நல்வாழ்வையும் பாதுகாக்க தேவன் வகுத்துள்ள விதிகளைக் காட்டுகிறது என்பதே உண்மையாகும்.
மேலும், வசனம் 8 -ஆம் வசனத்திலிருந்து, அடிமையாக விற்கப்பட்ட மகளை எஜமான் ஒரு கட்டத்தில் ( அநேகமாக யூத வழக்கப்படி ஒரு வருடம் கழித்து ) திருமணம் செய்து கொடுக்க வாய்ப்பிருப்பதாக புரிந்துகொள்கிறோம். இது நிச்சயமாகவே அவளுடைய நிலையை உயர்த்தும். எனவே, இங்கு விவரிக்கப்பட்டுள்ள விஷயம் என்னவெனில், ஓர் இளம் பெண்ணை அவளது தந்தை ஒரு குடும்பத்திற்கு திருமண நோக்கத்துடன் விற்றதாகத் தெரிகிறது. திருமணத்தின் விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், அது ஒப்பந்தத்தை மீறுவதாகக் கருதப்படும். மேலும் அந்தப் பெண் அவனுக்கு வஞ்சக துரோகம் செய்தாலும் அவளை அவன் வேறொருவருக்கு விற்றுவிட முடியாது. மேலும் அந்த எஜமான் இந்த நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள முற்படுவதை தேவன் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார். எனவே அந்த மனிதன் அவளை வெறுமனே அனுப்பிவிட முடியாது. அவர் அவளை எந்த வெளி மனிதருக்கும் விற்க முடியாது. ஆனால் அவள் தந்தையால் மீட்கப்படலாம். ஒருவேளை அவர் அவளைத் தன் மகனுக்கு திருமணம் செய்துகொடுத்தால், அவர் அந்தப் பெண்ணை ஓர் அடிமையாக அல்ல, தன் மகள்களில் ஒருத்தியைப் போல நடத்த வேண்டும். மேலும் அவன் வேறொரு மனைவியைத் திருமணம் செய்துகொண்டாலும், இவளைக் கைவிட்டுவிடாமல், ஒரு மனைவிக்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் செய்து அவளைப் பராமரிக்க வேண்டும். இவை எதுவும் செய்யப்படவில்லையெனில், அவளுடைய தந்தை அவளை எவ்வளவு தொகைக்கு விற்றானோ அந்தத் தொகையைக் கூட திருப்பிச் செலுத்தாமல் அவளை விடுதலையாக அழைத்துச் சென்றுவிடலாம். இது அவளை ஓர் அடிமைப் பெண் என்ற நிலையிலிருந்து அவளுக்கு விடுதலையைக் கொண்டுவரும். எனவே, விற்கப்பட்ட பெண்ணாணவள் தன் எஜமானரின் வீட்டில், எஜமானனின் மனைவியாகவோ அல்லது அவரது மகளைப் போலவோ கண்ணியமான வாழ்க்கை வாழவே வழியிருக்கிறது. இப்படி இராவிட்டாலும், எஜமானோ அல்லது அவருடைய மகனோ அவளைத் திருமணம் செய்துகொள்ளத் தவறினாலும், அவள் தந்தையால் மீட்கப்படுகிறாள் அல்லது அவள் விடுவிக்கப்படுகிறாள்.
இன்றைய நவீன காலத்திலும், குறிப்பாக பெண்களுக்கு அதிகப்படியாக சுதந்தரம் கொடுக்கப்பட்டிருக்கிற இந்தக் காலத்திலும், அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் அளிப்பது இருந்தாலும் கூட, எந்த விதத்திலும் பொறுப்பேற்காமல் எத்தனை ஆண்கள் பெண்களை வாக்குக்கொடுத்துவிட்டு அதாவது நிச்சயம் வரை சென்றுவிட்டு திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிடுகிறார்கள். இவற்றையெல்லாம் கண்டும்கூட நமது தற்காலச் சமூகம் அமைதியாக வேடிக்கை பார்த்தக்கொண்டிருப்பது விநோதமான காரியம் அல்லவா? பண்டைய கலாச்சாரத்தில், நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நிறுத்தப்பட்ட அடிமைப் பெண்ணைத் தேவன் எவ்வளவு கரிசணையோடு கவனித்துக் கொள்கிறார் என்பது எவ்வளவு பெரிய காரியம். இதை உங்களால் கற்பனை செய்தாவது பார்க்க முடிகிறதா? ஆகவே பெண்ணியவாதிகள் குற்றம் சாட்டுவதுபோல் வேதாகமக் காலத்தில் அல்லது தோராவில் பெண்களுக்கு அநிதி எதுவும் இழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது?