யாத்திராகமம் 21:3-4: இந்த வேதபகுதியில், ஒரு எஜமான் தன்னிடத்தில் இருக்கிற ஒரு ஆண் அடிமைக்கு ஒரு பெண்ணை வாழ்க்கைத் துணையாகக் கொடுத்திருந்தாலும் (அவர்கள் எவ்வளவு காலம் திருமணம் செய்திருந்தாலும், அவர்கள் ஒருவரையொருவர் எவ்வளவு நேசித்தாலும் அல்லது குழந்தைகளைப் பெற்றிருந்தாலும்) அந்த அடிமை ஆண் விடுதலை பெற்றுப் போகிற சமயத்தில் தனது மனைவி அல்லது குழந்தைகளுடன் செல்ல முடியாது என்று கூறுகிறது. அவனுடைய மனைவியும் அவர்கள் பெற்ற குழந்தைகளும் எஜமானரின் சொத்தாகவே உள்ளது. இங்கே அந்தப் பெண் மற்றும் பிள்ளைகளுடைய தனிப்பட்ட மகிழ்ச்சியும், அந்தக் குடும்பத்தின் முக்கியத்துவமும் ஒரு பொருட்டாகவே எண்ணப்படவில்லையே?
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிற வேதபகுதியை தெளிவான வகையில் ஆராய்வதற்கு முன்னதாக அதன் பின்னணியை ஆராய்வது நமக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். பண்டைய உலகில் அடிமைத்தனம் கட்டுப்பாடற்ற வகையில் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. இத்தகைய அடிமைத்தனத்திற்கு வேதாகமமே காரணம் என்று சிலர் நினைக்கிறார்கள். இது முற்றிலும் முரணானது. மோசேயின் காலத்திற்கு முன்னரே அல்லது இஸ்ரவேல் நாடு உருவாவதற்கு முன்னரே அடிமைத்தனம் உலகில் இருந்தது. உண்மையைச் சொல்வதென்றால் எபிரெய மக்களே எகிப்தில் 400 ஆண்டுகளாக அடிமைகளாக இருந்தார்கள்.
அவர்கள் எகிப்தில் இருந்த சமயத்தில் அடிமைத்தனம் எவ்வளவு கொடூரமாக இருந்தது என்பதை நாம் பார்க்கிறோம். பண்டைய உலகில் இருந்த அடிமை முறையானது மனித இனத்தை மிகவும் இழிவுபடுத்துகிற ஒன்று என பண்டைய வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அடிமைகளின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிற எவ்வித சட்டங்களும் விதிமுறைகளும் அந்தக் காலத்தில் இல்லை. அவர்கள் மிகவும் தவறாக நடத்தப்பட்டார்கள், தவறாகக் கையாளப்பட்டார்கள். சமுதாயத்தில் எவ்வித மதிப்பும் இன்றி காணப்பட்டார்கள். பலர் அடித்துக் கொல்லப்பட்டார்கள், பலருக்கு உணவு கொடுக்கப்படாமல் பசியால் மடிந்தார்கள். அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை, விலங்குகளைக் காட்டிலும் மோசமான முறையில் நடத்தப்பட்டார்கள்.
இந்த சூழலைப் பார்க்கும்போது, யாத்திராகமம் 21 -ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட அடிமைகளைக் குறித்த காரியங்கள் எத்தனையோ சிறப்பானதாக அமைந்துள்ளது. தேவன் அடிமைகளின் மீது எவ்வளவு கரிசனையுள்ளவராக இருந்தார் என்பதைக் காணமுடிகிறது. ஆம், அது தேவனுடைய இளகிய இருதயத்தின் வெளிப்பாடே ஆகும். பண்டைய உலகத்தைப் போலவே இஸ்ரவேல் மக்களுக்கும் அடிமைகள் இருந்தார்கள். ஆனால் இவ்விரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருந்ததைக் காணடிமுடியும். பண்டைய காலத்தில் இருந்த அடிமைகளைப் போலவே இஸ்ரவேல் மக்களிடத்தில் இருந்த அடிமைகளும் இருந்தார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் பண்டைய உலகத்தைப் போல இஸ்ரவேலர்களின் அடிமைகள் மிருகத்தனமாகவோ இழிவாகவோ நடத்தப்படவில்லை. பண்டைய காலத்தில் அடிமைத்தனம் இருந்ததால், அதைத் தவிர்க்க முடியாத வகையில் ஏற்றுக்கொள்கிறது. “புதிய ஏற்பாட்டில் பவுல் காலத்தில் அப். பவுல் இத்தகைய அடிமைத்தனத்தை எவ்வாறு ஏடுத்துக்கொண்டாரோ அவ்விதமாகவே தோராவும் எடுத்துக்கொள்கிறது. ஆனால் பண்டைய உலகத்தைப் போல அல்லாமல் புதிய மனிதாபிமான அணுகுமுறையுடன் அவர்களைப் பார்க்கிறது. இறுதியில் அடிமைகளுக்கு விடுதலை கொடுப்பதன் மூலமாக அதற்குச் சாவுமணி அடிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் அடிமைத்தனம் இஸ்ரவேலின் கிராமப்புறங்களிலும், சிறிய ஊர்களிலும் ஒரு சிறிய அளவில் இருந்தது” என்று திரு. கோல் என்பார் கூறுகிறார். “மோசே அடிமைத்தனத்தின் எந்த வடிவத்தையும் நிறுவவில்லை; மேலும் அது தொடர்பான சட்டங்களை இயற்றி அதை ஒரு குறுகிய எல்லைக்குள் சுருக்கினார். இறுதியாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்பட்டன” என்று பிரசிங்கிகளின் இளவரசனான C.H. ஸ்பர்ஜன் கூறுகிறார்.
“யாத்திராகமப் புத்தகத்தில் நியாயப்பிரமாணச்சட்டங்கள் பற்றிச் சொல்லப்பட்டபகுதியின் முதல் வார்த்தைகளே வேலைக்காரர்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் இஸ்ரவேலர் மதிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்னும் கருத்துடன் தொடங்குவது குறிப்பிடத்தக்கது ஆகும். அடிமைகளை மனிதர்களாகக் கூட கருதாத ஒரு கலாச்சாரத்திலேயே, அவர்களை இழிவுபடுத்துவதைக் கட்டுப்படுத்தவும், அவர்களுக்குரிய கண்ணியத்தை வழங்கவும் விதிகளையும் ஒழுங்கு முறைகளையும் வகுத்த வேதாகமத்தின் தேவனுடைய இதயத்தைப் பாருங்கள். சீனாய் மலையிலிருந்து மோசேயிடம் தேவன் பேசிய வார்த்தைகளில் முதல் வார்த்தையைக் கவனியுங்கள். உங்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டுவந்தர் யெகோவா என்றே அது அறிவிக்கிறது. சீனாய் மலையிலிருந்து கொடுக்கப்பட்ட இன்றியமையாத நியாயப்பிரமாணச் சட்டத்தில் முதல் முதலாகக் கையாளப்படும் நபர் அடிமைகள் என்பவர்களே ஆவார்” என்று திருவாளர் “சாட்விக்” என்பவர் கூறுகிறார்.
ஒரு எபிரெயர் மற்றொரு எபிரெயருக்கு அடிமையாக மாற வேண்டுமாயின் நான்கு அடிப்படை வழிகள் இருந்தன.
- கொடிய வறுமையின் காரணமாக, அவர்கள் தங்கள் சுதந்திரத்தை விற்றுவிட்டு அடிமையாக மாறுதல். (லேவியராகமம் 25:39).
- ஒரு தகப்பன் தன் மகளை ஒரு வீட்டுக்கு வேலைக்காரியாக விற்கலாம், இறுதியில் அவள் அந்த குடும்பத்தில் ஒருவனைத் திருமணம் செய்து கொள்வாள். (யாத்திராகமம் 21:7).
- 3. ஒரு மனிதன் திவால் ஆகிவிட்டால், அவன் தான் வாங்கிய கடனுக்காக கடன் கொடுத்தவர்களுக்கு வேலைக்கார அடிமையாக மாறுதல் ஆகலாம். (2 இராஜாக்கள் 4:1).
- ஒரு திருடன் கண்டுபிடிக்கப்பட்டு, களவு செய்த பொருட்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் நேரிடும்போது, அவனிடம் எந்தப் பொருளும் இல்லையென்றால் அவன் அடிமையாக மாற்ற வேண்டும். (யாத்திராகமம் 22:3-4).
மேற்கண்ட நான்கு சந்தர்ப்பத்திலும், ஒருவன் வேறொருவருக்கு ஏன் வேலைக்காரனாக ஆக வேண்டும் என்ற நோக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கடன் பிரச்சினையினால் சாவதை விட, ஒருவனிடத்தில் வேலைக்காரனாக இருப்பதன் மூலம் அவன் வாழ முடியும் என்பதை நாம் காண்கிறோம்.
யாத்திராகமம் 21 -ஆம் அதிகாரத்தில், உண்மையிலே என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துக் கொள்வதற்காக அந்த அதிகாரத்தின் முழுப் பகுதியையும் படிக்கவேண்டும். ஆங்காங்கே சில வசனங்களை எடுத்துக்காட்டினால் முழுமையான பொருளைப் புரிந்துகொள்ள முடியாது. எனவே உண்மையை என்ன என்பதை அறிய அந்த அதிகாரத்தின் முதல் ஆறு வசனங்களைக் கவனமாகப் படிக்க வேண்டியது அவசியம்.
யாத்திராகமம் 21:1 –வது வசனத்தில், ஒரு எஜமானன் வேலையாட்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் தேவன் கட்டமைக்கிறார். இது ஒரு எஜமானன் தம்முடைய வேலைக்காரர்களை தாம் விரும்பியபடி நடத்துவதற்கான உரிமையைப் பறிக்கிறது. இதுவே பழங்காலக் கலாச்சாரத்தில் நாம் நம்புவதற்கு அரிதான ஒரு விதிமுறை.
யாத்திராகமம் 21:2 –வது வசனத்தில், ஒரு வேலைக்காரன் தன் எஜமானுக்கு என்றென்றும் அல்லது நிரந்தரமாக கட்டுப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைத் தெரிவிக்கிறது. அவன் அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் மட்டுமே அடிமையாக ஒருவனிடத்தில் இருக்க முடியும். அதற்குப் பிறகு அவனுக்கு விடுதலை கொடுத்துவிட வேண்டும். இதன் மூலம் ஒரு வேலைக்காரன் எஜமானரின் ஒரு உடைமையாக அல்லாமல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான தொழிலாளியாகவே இருக்கிறான். மேலும் இவன் எந்த முகாந்தரத்தை முன்னிட்டு வேலைக்காரனாக மாறியிருந்தாலும், ஏழாவது ஆண்டில் அவன் பணமோ அல்லது வேறு எந்தக் கிரயமோ செலுத்தாமல் சுதந்தரமாக எஜமானிடமிருந்து வெளியேறிச் செல்ல முடியும். இத்தகைய முறையில் ஒரு அடிமையை விடுதலையாக்குவது என்பது பழங்காலச் சமுதாயத்தில் கேள்விப்பட்டிராத ஒன்று.
யாத்திராகமம் 21:3 –வது வசனத்தில், அவன் திருமணம் செய்து கொண்டவனாக வந்திருந்தால் அவன் விடுதலை பெற்றுப் போகிற சமயத்தில் தனது மனைவியையும் தன்னுடன் அழைத்துச் செல்லலாம் என்று நாம் காண்கிறோம். (பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைச் சுட்டிக்காட்டுகிற இந்தப் பெண்ணியவாதி இந்த வசனத்தைப் படித்திருந்தாலும் இந்தக் கருத்தை அறியாமல் போனது ஏனோ?). தன்னிடம் வருகிற ஒரு அடிமைக்கு குடும்பம் இருந்தால் அந்தக் குடும்பத்தையும் அந்த எஜமானர் கவனித்துக் கொள்ளவேண்டும். மேலும் அந்த அடிமை தனது குடும்பத்தை தன்னுடன் வைத்துக் கொள்ளவும், மனைவியுடன் இணைந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். ஓர் அடிமைக்கு குடும்ப வாழ்க்கை நடத்துவது என்பது அந்தக் காலக் கலாச்சாரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
யாத்திராகமம் 21:4-6 வசனங்களில், ஒரு அடிமை குடும்பம் இல்லாதவனாக வந்திருந்தால், அவன் வந்தபின் அவனுக்கு எஜமான் திருமணம் முடித்துக்கொடுத்து குடும்பம் நடத்த அனுமதித்திருந்தால் (இதுவும் அந்தக் கலாச்சாரத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாதது), அந்தக் குடும்பம் எஜமானருக்கு சொந்தமானது. அதாவது அவனுடைய மனைவியும் அவளுடைய பிள்ளைகளும் எஜமானுக்குச் சொந்தமானவர்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது இது நியாயமற்றதாகத் தோன்றினாலும், அந்தக் காலத்தில் இருந்த அடிமைத்தனத்தோடு ஒப்பிடும் போது இது பெரிய காரியமே அல்ல. அந்தக் காலத்திய கலாச்சாரம் ஓர் அடிமைக்கு ஒரு குடும்பத்தைக் கொடுக்க வேண்டும் என்பதைக் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு செயலாகும். குடும்பத்தோடு வந்திருந்தால் குடும்பத்தோடு செல்லலாம் என்று கூறிய முந்தைய வசனத்தில் சொல்லப்பட்டதற்கு மாறாக, இது எஜமான் வழங்கிய குடும்பமாகையால் இது எஜமானனுக்கே சொந்தம். திருமணமாகி அடிமையாகி வந்தவனின் குடும்பத்தை வைத்துக்கொள்ள எஜமானுக்கு எவ்விதத்திலும் உரிமையில்லை. ஆனால் எஜமான் கொடுத்த குடும்பத்தை அவரே வைத்துக்கொள்ள முடியும். இங்கே ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஓர் அடிமைக்கு தன் குடும்பத்தை விட்டுச் செல்லலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் அந்த அடிமையின் முடிவாகவும் விருப்பமாகவுமே இருக்கிறது. அந்தக் காலத்தில் அடிமைகளுக்கென்று சுயமான எந்த விருப்பமும் இல்லை என்பது நாம் அறிந்ததே. மேலும் ஒரு சுவாராஸ்யமான காரியம் என்னவெனில், ஓர் அடிமை தன் எஜமான் மீதும், தன் குடும்பத்தார் மீதும் அன்பு வைத்து அங்கே நிரந்தரமாகத் தங்கிவிட முடியும். தனது அன்பான எஜமானரின் பாதுகாப்பில், தனது குடும்பத்துடன் தொடர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு இருந்தது, ஒரு அடிமைக்குக் கிடைக்கக்கூடிய எவ்வளவு சிறந்த வாழ்க்கை இது. இப்படி இருப்பானேயாகில் அந்த எஜமான் அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் தேவையான பாதுகாப்பைக் கொடுத்து, அவர்களுடைய அடிப்படையான தேவைகளைச் சந்தித்து, சமாதானத்துடன் வாழ வழிவகை செய்கிறார்.
அடிமை தொடர்பான சட்டங்களை நன்றாக அறிந்திருக்கிற திருவாளர் “கேம்பல் மோர்கன்” என்பாருடைய மேற்கோளுடன் இந்தப் பகுதியை நிறைவு செய்ய விரும்புகிறேன்:
“வேதாகமத்தில் சொல்லப்பட்ட அடிமைத்தனம் தொடர்பான சட்டங்களை கவனமாக ஆராய்ந்து பரிசீலித்தால், அங்கே அடிமைத்தனத்தை ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக அவர்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒர் உடன்படிக்கையின் வரம்புக்குள் செய்ய வேண்டிய உழைப்பு என்றே தெரிய வருகிறது. மேலும் அந்தக் காலத்திய சமுதாயத்தில் இருந்த அடிமைகளின் நிலைக்கும், எபிரெய மக்களிடையே காணப்பட்ட அடிமைகளின் நிலைக்கும் குறிப்பிடத்தக்க பெரிய வேறுபாடுகள் இருந்ததைக் காணமுடியும். அடிமைகள் விடுதலையாகிச் செல்வதற்கான தார்மீக முன்னெடுப்பின் ஒரு தொடக்கம் என்றே இதைக் குறித்துக் கூற முடியும். உண்மையில் வேதாகமம் அடிமைத்தனத்தை அகற்றுவதற்கான பொறுப்பையே கொண்டிருக்கிறது தவிர, அதை நிலை நிறுத்துவதற்கு ஒருபோதும் முயலவில்லை. பண்டைய உலகில் இத்தகைய நியாயப்பிரமாணச் சட்டங்களின் மூலமாகவும், நவீன உலகில் “ஆபிரகாம் லிங்கன்”, “வில்லியம் வில்பர்ஃபோர்ஸ்” மற்றும் “வில்லியம் கேரி” போன்ற மனிதர்கள் மூலமாகவும் அகற்றவே போராடுகிறது.