தோராவில் அதாவது ஐந்தாகமத்தில் பாலினப்பாகுபாடு உள்ளது என்னும் கட்டுரைக்கு இது மறுப்புக் கட்டுரையாகும். ( www.evilbible.com ) என்னும் இணையதலத்தில், “தோராவில் பாலினப்பாகுபாடு” என்ற தலைப்பில் பெயர் வெளியிடாத ஒருவரால், தோராவுக்கு எதிரான சில தவறான கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. இத்தகைய தவறான கருத்துகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு தாழ்மையான முயற்சியே இந்தக் கட்டுரை ஆகும். தடித்த எழுத்துகளில் உள்ள வாசகங்கள் அந்த இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகள்; அதைத் தொடர்ந்து அதற்கான மறுப்புரைகள் சாதாரண எழுத்துகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

“தோராவில் பாலினப் பாகுபாடு” என்னும் இணையத்தில் ( www.evilbible.com ) கட்டுரைக்கான மறுப்புரை

பரிசுத்த வேதாகமம் தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகம். இது 40 வெவ்வேறு எழுத்தாளர்களால் 1500 ஆண்டுகளாக மூன்று கண்டங்களிலிருந்து எழுதப்பட்டது. இவற்றில் தோரா என்பது வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களைக் குறிக்கிறது. தமிழில் இது ஐந்தாகமம் என்று அழைக்கப்படுகிறது. தோராவைப் படிக்கும்போது நாம் மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அது உண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தெரிவிக்கும் துல்லியமான வரலாற்றுக் குறிப்பு என்பதாகும். வேதாகமத்தின் வரலாற்றுப் பூர்வமான நம்பகத்தன்மைக்கும் அதனுடைய சான்று உறுதிக்கும் கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவ அல்லாத ஆதாரங்களில் இருந்து பல சான்றுகள் உள்ளன. உண்மையைக் கூறுவோமெனில், பிளேட்டோ மற்றும் இலியட் போன்ற வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பிற எழுத்தாளர்கள் மற்றும் அவர்களுடைய இலக்கியங்களுக்கு இருப்பதைக் காட்டிலும், பரிசுத்த வேதாகமத்தின் புத்தகங்களுக்கு கணிசமான அளவு சான்று ஆவணங்களும், அதன் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, அதில் சொல்லப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள், அவர்களின் பாவங்கள், அவர்களின் தோல்விகள், அவர்களின் வெற்றிகள், அவர்களின் நல்ல மற்றும் கெட்ட செயல்கள் ஆகியவற்றைப் பற்றிய எல்லா உண்மைகளையும் தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

இதனால் தேவன் அவர்களை அங்கீகரிக்கிறார் என்றோ அவர்களின் செயல்களை மன்னிக்கிறார் என்றோ இது எந்த வகையிலும் அர்த்தப்படுத்தாது. வேதாகம கதாபாத்திரங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும், அவர்களைக் கதாநாயகர்களாக மாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தால் இதன் ஆசிரியர்கள் தங்களது வாழ்க்கையின் இருண்ட அத்தியாயங்களைப் பதிவு செய்வதிலிருந்து விலகியிருக்க முடியும். அவ்வாறு செய்திருந்தால் அது யாருக்கும் தெரியாமல் போயிருக்கும். ஆனால் பிற அனைத்து மத நூல்களிலும், உலக வரலாற்றிலும் கூட இல்லாத வகையில் வேதாகமத்தின் நம்பகத்தன்மைக்கும் அதன் உண்மைத் தன்மைக்கும் மிகத் துல்லியமாகச் சான்றளிக்கும் வகையில், அதில் வருகிற ஆண்கள் மற்றம் பெண்களின் வாழ்க்கை முழுவதும் எவ்விதப் பாரபட்சம் இல்லாமலும், விருப்பு வெறுப்பு இல்லாமலும் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.