வேதாகமத்தை வாசி

எஸ்றா 1

                   
புத்தகங்களைக் காட்டு
1எரேமியா வழியாக வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி பாரசீக மன்னர் சைரசின் முதல் ஆண்டில் தூண்டினார். எனவே சைரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்து, அதைத் தம் நாடெங்கும் எழுத்துமூலம் வெளியிட்டார்.
2“பாரசீக மன்னர் சைரசு கூறுவது: விண்ணகக் கடவுளான ஆண்டவர் மண்ணகத்திலுள்ள எல்லா அரசுகளையும் என்னிடம் ஒப்படைத்துள்ளார். மெலும் யூதாவிலுள்ள எருசலேமில் தமக்கென ஒரு வோவிலைக் கட்டும்படி அவர் என்னை நியமித்துள்ளார்.
3அவருடைய எல்லா மக்களிலும் யார் யார் அவரைச் சார்ந்துள்ளனரோ கடவுள் அவர்களோடு இருப்பாராக! அவர்கள், யூதாவிலுள்ள எருசலேமுக்குச் சென்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக! எருசலேமில் இருக்கும் அவரே கடவுள்!
4எஞ்சியுள்ளவன் ஒவ்வொருவனும் எங்குத் தங்கியிருந்தாலும் அங்கு வாழும் மக்கள், எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலுக்குத் தன்னார்வக் காணிக்கை அனுப்புவதோடு, அவனுக்கும் வெள்ளி, பொன், மற்றப்பொருள்கள், கால்நடைகள் ஆகியவற்றைக் கொடுத்து உதவுவார்களாக!”
5அப்போது யூதா, பென்யமினுடைய குலத்தவர்களும், குருக்களும் லேவியரும், எருசலேமில் ஆண்டவரின் கோவிலைக் கட்டச் செல்லுமாறு ஆண்டவரால் தூண்டப்பெற்ற அனைவரும் புறப்பட்டார்கள்.
6அவர்களைச் சூழந்து வாழ்ந்த மக்கள் தன்னார்வக் காணிக்கை அனைத்தும் கொடுத்ததுமல்லாமல் அவர்களுக்கு வெள்ளிப் பாத்திரங்களையும், பொன்னையும் மற்றப் பொருள்களையும், கால்நடைகளையும், விலையுயர்ந்த பொருள்களையும் கொடுத்து உதவினார்கள்.
7நேபுகத்னேசர் எருசலேமில் இருந்த ஆண்டவரின் கோவிலுக்கு உரிமையான பாத்திரங்களை எடுத்து வந்து தன் தெய்வங்களின் கோவிலில் வைத்திருந்தான். அவற்றைச் சைரசு மன்னர் திரும்பிக் கொடுத்தார்.
8பாரசீக மன்னரான சைரசின் பொருளாளரான மித்ரதாத்தின் கையில் அவற்றை ஒப்படைத்தார். அவர் அவற்றை யூதாவின் தலைவரான சேஸ்பட்சரிடம் எண்ணிக் கொடுத்தார்.
9அவற்றின் எண்ணிக்கை பின் வருமாறு: பொற்பாத்திரங்கள் முப்பது, வெள்ளிப் பாத்திரங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது.
10பொற் கிண்ணங்கள் முப்பது, வேறு வகையான வெள்ளிக் கிண்ணங்கள் நானூற்றுப் பத்து, மற்றப் பாத்திரங்கள் ஆயிரம்.
11பொன், வெள்ளியாலான பாத்திரங்கள் அனைத்தும் ஐயாயிரத்து நானூறு. அவற்றையெல்லாம் சேஸ்பட்சரும், பாபிலோன் அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்களும் கொண்டு வந்தார்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.