1 | தாவீதின் மகன் சாலமோன் தம் ஆட்சியை உறுதியாக நிலைநாட்டினார். அவருடைய கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்து அவரை மேன்மை மிக்கவர் ஆக்கினார். |
2 | சாலமோன், இஸ்ரயேலர் அனைவரையும்-ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்கள், நீதிபதிகள், இஸ்ரயேலரின் தலைவர்கள், குடும்பத் தலைவர்கள் அனைவரையும்- வரவழைத்துப் பேசினார். |
3 | அங்கே இருந்த சபையார் அனைவரும் சாலமோனுடன், கிபயோனிலிருந்த தொழுகை மேட்டுக்குச் சென்றனர். ஏனெனில் ஆண்டவரின் அடியார் மோசே பாலை நிலத்தில் செய்த கடவுளின் சந்திப்புக் கூடாரம் அங்கே இருந்தது. |
4 | ஆனால் இதற்குமுன் தாவீது கடவுளின் பேழையை கிரியத்து எயாரிமிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அங்கே ஏற்கெனவே தாம் அதற்கென அமைத்திருந்த கூடாரத்தில் வைத்திருந்தார். |
5 | இருப்பினும் கூரின் பேரரும் ஊரியின் மகனுமான பெட்சலேல் செய்த வெண்கலப் பலிபீடம் கிபயோனில் ஆண்டவரின் திருஉறைவிடத்திற்குமுன் இருந்தது. சாலமோனும் சபையாரும் அங்கே வழிபாடு நடத்தச் சென்றனர். |
6 | சாலமோன் சந்திப்புக்கூடாரத்திற்கு முன்பாக ஆண்டவர் திருமுன் அமைந்திருந்த வெண்கலப் பலிபீடத்திற்கு ஏறிச்சென்று, அதன்மேல் ஆயிரம் எரி பலிகள் செலுத்தினார். |
7 | அன்றிரவு கடவுள் சாலமோனுக்குத் தோன்றி,“உனக்கு என்ன வரம் வேண்டும்: கேள்” என்று கூறினார். |
8 | அதற்குச் சாலமோன் கடவுளை நோக்கி,“என் தந்தை தாவீதுக்கு மாபேரன்பு காட்டினீர்: அவருக்குப் பின் நீர் என்னை அரியணையில் அமர்த்தியிருக்கிறீர். |
9 | கடவுளாகிய ஆண்டவரே, என் தந்தை தாவீதுக்கு நீர் அளித்த வாக்குறுதியை இப்பொழுது நிறைவேற்றுமாறு வேண்டுகிறேன்: ஏனெனில், நிலத்தின் மணல் போன்ற எண்ணற்ற மக்களுக்கு நீர் என்னை அரசனாக்கினீர்: |
10 | எனவே, நான் இம்மக்களை நன்கு அரசாள வேண்டிய ஞானத்தையும் அறிவையும் எனக்கு அளித்தருளும்: ஏனெனில் கணக்கற்ற உம் மக்களுக்கு நீதி வழங்க யாரால் முடியும்?” என்றார். |
11 | கடவுள், சாலமோனை நோக்கி,“செல்வத்தையோ, சொத்தையோ, புகழையோ, உன்னை வெறுப்பவர்களின் உயிரையோ, நீடிய ஆயுளையோ, நீ கேட்கவில்லை. மாறாக, அரசாளும்படி உன்னிடம் நான் ஒப்படைத்த மக்களுக்கு நீதி வழங்கத் தேவையான ஞானத்தையும் அறிவையும் நீ உள்ளார்ந்த விருப்பத்தோடு கேட்டிருக்கிறாய். |
12 | எனவே, நான் உனக்கு ஞானத்தையும் அறிவையும் வழங்குகிறேன். அத்துடன் உனக்கு முன் இருந்த அரசர்களோ உனக்குப் பின் வரும் அரசர்களோ பெறாத அளவுக்கு செல்வத்தையும், சொத்தையும், புகழையும் நான் உனக்குத்தருவேன்” என்றார். |
13 | பிறகு சாலமோன் கிபயோனிலிருந்த தொழுகை மேட்டிலிருந்தும் சந்திப்புக் கூடாரத்திலிருந்தும் புறப்பட்டு எருசலேமுக்கு திரும்பி வந்து, தொடர்ந்து இஸ்ரயேலை ஆட்சி செய்தார். |
14 | சாலமோன் தேர்ப் படையையும் குதிரைப் படையையும் அமைத்தார். அவருக்கு ஆயிரத்து நானூறு தேர்கள் இருந்தன: பன்னீராயிரம் குதிரை வீரர்களும் இருந்தனர். அவர்களைத் தேர்ப்படை நகர்களிலும், அரசராகிய தம்மோடு எருசலேமிலும் நிறுத்தி வைத்தார். |
15 | வெள்ளியும் பொன்னும் கற்களைப்போன்றும், கேதுரு மரங்கள் சமவெளிப் பகுதிகளில் வளரும் அத்தி மரங்களைப் போன்றும் எருசலேமில் ஏராளமாகக் கிடைக்கும்படி அரசர் செய்தார். |
16 | சாலமோனின் குதிரைகள் எகிப்திலிருந்தும் கோவேயிலிருந்தும் வந்தவை. அரச வணிகர்கள் சிலிசியாவிலிருந்து குறிப்பிட்ட விலைக்கு வாங்கி வந்தனர். |
17 | அவர்கள் தேர் ஒன்றிற்கு அறுநூறு செக்கேல் எனவும் எகிப்திலிருந்து விலைக்கு வாங்கினர். அவை அவர்கள் வழியாகவே இத்திய மன்னர், சிரிய மன்னர் அனைவரையும் சென்றடைந்தன. |