கிறிஸ்தவ ஒழுங்கு

உங்கள் பிள்ளைகளை கோபப்படுத்தாதீர்கள்
ஆசிரியர்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 5 நிமிடங்கள்

பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. எபேசியர் 6:4

இது ஒரு கற்பனை கதையே. ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ தகப்பன் தனது பிள்ளையை கோபப்பட்டு திட்டும் போது, எங்கே அவர் தன்னை அடித்து விடுவாரோ என்ற பயத்தினால் அந்தப் பிள்ளை வீட்டை விட்டு வெகு வேகமாக ஓடுகிறது. வேகமாக ஓடும் போது எதிரில் வரும் வாகனத்தை அறியாமல் அந்த பிள்ளை வாகனத்தில் அடிபட்டு இறந்து போகிறது. இது எவ்வளவு ஒரு துக்கமான காரியம் என்று சற்று நிதானித்து பாருங்கள். அந்த தகப்பனின் சாதாரண கோபம் சிறு குழந்தையின் உயிரைப் பறித்து விட்டது.

நம்முடைய சமுதாயத்தில் கோபம் என்பது எளிமையாக வெளிப்படுத்தக் கூடிய உணர்ச்சிகளில் ஒன்று. பாரபட்சம் இன்றி சிறியவர் முதற்கொண்டு பெரியவர் வரைக்கும் இது எளிமையாக வெளிப்படுகிறது. ஆனால் வேதாகமம் கோபத்தை கட்டுபாட்டுக்குள் வைக்கவேண்டிய உணர்ச்சி என்கிறது. அதேநேரம் நியாயமான மற்றும் சரியான கோபத்தை வேதம் ஆதரிக்கிறது. மேலே உள்ள வேத வசனம் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படவேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தேவனுடைய வார்த்தையானது நேரடியாக பிள்ளை வளர்ப்பில் தகப்பனை முதன்மைப்படுத்துகிறது. பிள்ளைகளை கோபப்படுத்தாமல் சரியான பயிற்சியில் வளர்க்க வேண்டியது ஒரு தகப்பனுடைய கடமை என நீதிமொழிகளும் நமக்கு எச்சரிக்கை செய்கிறது.

முதலில் பிள்ளைகளை கோபப்படுத்துவது எது?

“பிதாக்களே, உங்கள் பிள்ளைகளைக் கோபமூட்டாதீர்கள்;” என்று வெளிப்படையாக அறிவுறுத்தப்படுகிறது. பிள்ளைவளர்ப்பின் அடிப்படையான அம்சம், குழந்தைகள் தங்கள் தந்தையின் செயல்கள் மற்றும் வார்த்தைகளால் விரக்தியடையாத, வெறுப்படையாத, கோபப்படாத சூழலை உருவாக்குவதை உள்ளடக்கியது. நாம் பிள்ளைகளுக்கு முன்பாக தவறை செய்துவிட்டு அவர்கள் அதை செய்யக்கூடாது என்று சொல்வது இயற்கைக்கு எதிரானது. உதாரணமாக நாம் கைபேசியில் முழ்கி நேரத்தை செலவிட்டு நேரத்தை கடத்தினால் அவர்களும் அதையே செய்வார்கள். அதற்காக அவர்களை கண்டிப்பதோ அல்லது அடிப்பதோ முட்டாள்தனம்.

அதேபோன்று குழந்தைகளை அந்நியப்படுத்தும், கோபப்படுத்தும் வார்த்தைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நமது வாயில் இருந்து புறப்படும் வார்த்தையை குறித்து நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். குழந்தையின் ஆத்மீக வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் ஏற்ற ஒரு நேர்மறையான உறவை வளர்ப்பதற்கு இந்த மென்மையான மற்றும் அக்கறையுள்ள அணுகுமுறை மிக முக்கியமானது. நாம் பாவத்தில் இருப்பதால் இது கடினமான பணியே. அதிக கஷ்டத்தோடு செய்யும் வேலையே மிகுந்த மதிப்பு மிக்கவை. இனி என் பிள்ளைகளை கோபப்படுத்தும் செயலை ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று உறுதி கொள்ளுங்கள். தேவன் உங்களுக்கு உதவி செய்யட்டும்.

இரண்டாவது மிக முக்கியமானது “உங்கள் பிள்ளைகளை கர்த்தருடைய பயிற்சியிலும் போதனையிலும் வளர்ப்பது”

ஒரு போதகர் எப்பொழுதும் தன்னுடைய பிள்ளைகளைப் பற்றி பெரிதாக பேசுவார். அவர்களை தான் எவ்வளவு ஒழுக்கமாக வளர்த்தேன் என்பதை பற்றி அடிக்கடி சொல்லுவார். அவர்கள் இன்று பல லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவுக்கு அடுத்த காரியங்களில் நிலைமை சொல்லி கொல்லும்படியாக இல்லை. வேதம் இதை தவறு என்கிறது. உங்கள் பிள்ளைகளைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

தேவனுக்கு முன்பாக நியாயத்தீர்ப்பு நாளில் நிற்கும் போது நம்முடைய பிள்ளைகள் நம்மை குறித்து என்ன சொல்வார்கள் என்பது குறித்து சற்று யோசித்துப் பாருங்கள். அந்த சமயத்தில் நாம் வெட்கப்படாமல் நம்முடைய பிள்ளைகளை பார்க்க முடியுமா? நாம் இரட்சிப்பை எப்படி பார்க்கிறோமோ அப்படித்தான் நமது பிள்ளைகளும் பார்ப்பார்கள். தாமஸ் வாட்சன் தன்னுடைய மனம்திரும்புதல் புத்தகத்தில் இவ்விதமாக சொல்கிறார்: “வெளிப்படையான பாவங்களைச் செய்த குற்றவாளிகளான உங்களால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உங்களுக்கு தெரியாது. உன்னுடைய கெட்ட முன்மாதிரி மட்டும் இருந்திருக்காவிடில் தாங்கள் நரகத்திற்கு வந்திருக்க மாட்டார்கள் எனக் கதறும் அநேகர் இப்போது நரகத்தில் இருக்கலாம்.” நம்முடைய அனுதின பாவங்கள் நம்முடைய பிள்ளைகளால் பார்க்க கூடிய விதத்தில் இருக்கிறது. உங்கள் பிள்ளைகளின் ஆத்துமாவுக்கு எதிரியாக இருந்து விடாதீர்கள்.

பயிற்றுவித்தல் என்பது அந்த பயிற்சியின் முடிவில் பிள்ளைகளுடைய நடத்தையும் பழக்க வழக்கங்களும் வேதத்தை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும். இந்த பயிற்சியை நாம் தொடர்ச்சியாக விடாமுயற்சியோடும் ஜெபத்தோடும் செய்ய வேண்டும். இது காலப்போக்கில் அவர்களில் ஒழுக்கத்தையும் நல்ல பண்புகளையும் உண்டாக்கும்.

உலகப் பிரகாரமான அறிவைப் பெற்றுக் கொள்ள பள்ளிகளும் அனேக சாதனங்களும் இன்று உலகத்தில் இருக்கிறது. ஆனால் வேதத்தின் அறிவை அறிந்துக்கொள்ள மற்றும் பெற்றுக்கொள்ள ஒரு சில வழிமுறைகளே இருக்கிறது. வேதத்தின் சரித்திரம், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு, சிறுவர்களுக்கான வேத உபதேசம், வினா விடை போதனைகள் போன்றவற்றை நீங்கள் சிறிது சிறிதாக உங்க பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம். தமிழகத்தில் இன்று வேதபூர்வமான சத்தியத்தை போதிக்கக் கூடிய திருச்சபைகள் மிகவும் குறைவு. உங்களைத் தொடர்ந்து வேத அறிவில் வழி நடத்தகூடிய திருச்சபையை நீங்கள் தேடி கண்டுபிடிக்க வேண்டியது மிக அவசியம். உங்களை பரிசுத்தத்தின் பாதையில் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வளர்க்கக்கூடிய சபையை கண்டுபிடிங்கள். நீங்கள் வேதத்தின் அருகில் வளரும்போது மட்டுமே! உங்கள் பிள்ளைகளை வேதத்தின் அருகில் வளர்க்க நீங்கள் முற்படுவீர்கள்.

திருச்சபையில் அரசியல், விசுவாசிகள் மத்தியில் பாரபட்சமும், நீயா நானா என்று போட்டி போடுதலும், சுவிசேஷ வாஞ்சை இல்லாத இடத்தில் நீங்கள் இருந்தால் இன்றே அப்படிப்பட்ட திருச்சபைக்கு முழுக்கு போடுங்கள். அது உங்களுக்கு உறவுனரன் நடத்தும் சபையாக இருந்தால் கூட பரவால்லை. இந்த விஷயத்தில் சமரசம் காட்டாதீர்கள். ஏனெனில் இது உங்கள் ஆத்துமா சம்பந்தப்பட்டது. புற்றுநோயை குணப்படுத்த வேண்டிய அவசரத்தில் இருப்பதுபோல, நாம் அவசரத்தில் இருக்கிறோம். பாவமானது நம்மையும் நமது பிள்ளைகளையும் விழுங்க காத்திருக்கிறது.

நாம் பிள்ளைகளை கர்த்தருடைய பயிற்சியிலும் போதனையிலும் வளர்ப்பதற்கான சில ஆலோசனைகள்:

  1. முதலில் நீங்கள் குடும்பமாக திருச்சபை வாழ்க்கைக்கு அற்பணியுங்கள். உயிரே போனாலும் சபை கூட்டங்களை தவிர்க்க கூடாது என்பதை வார்த்தையிலும் வாழ்க்கையிலும் காட்டுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வேலைகளையும், படிப்புகளையும் தயவு செய்து தவிரத்து விடுங்கள்.
  2. வேதவாசிப்பு, ஜெபம், குடும்ப ஆராதனை இவைகளை தொடர்ச்சியாக செய்யுங்கள். இதன் மூலமாக நீங்கள் பெற்றுக்கொண்ட சந்தோஷத்தையும் சமாதானத்தையும் அந்த பிள்ளைகளுக்கு அடிக்கடி சொல்லுங்கள்.
  3. உங்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய பராமரிப்பின் செயல்களை நீங்கள் உற்றுப்பார்த்து அதை பிள்ளைகளுக்கு அடிக்கடி எடுத்துச் சொல்லுங்கள். அவரே எல்லவற்றையும் ஆளுகிறார் என்பதை பிள்ளைகள் சிறுவயதில் இருந்தே விசுவாசிக்க வேண்டும்.
  4. தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி வைத்திருக்கும் பரலோக ராஜ்ஜியத்தை பற்றியும் அதன் மகிமையை பற்றியும், நாம் அவரை தேடாமல் அவருக்கு தூரமாய் இருப்பதால் ஏற்படும் நித்திய அழிவை குறித்தும் அடிக்கடி உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
  5. உங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்கள் பிள்ளைகளுக்கு சுவிசேஷத்தின் முக்கியத்தையும், அதை எப்படி செய்வது என பயிற்சி அளிக்கக் கூடியதாக இருக்கும்.
  6. வேத சத்தியங்களை கேட்கும் போது அதற்கு கீழ்படியக்கூடிய பழக்கத்தை ஏற்படுத்துங்கள். இது உங்கள் பிள்ளைகளிலும் தொடரும். தேவனுடைய ஆசீர்வாதம் நம்மில் தொடர்ந்து தங்குவதற்கு இது மிக அவசியம்.
  7. பிள்ளைகளோடு சேர்ந்து வேத வசனங்களை மனப்பாடம் செய்யுங்கள். வேத வார்த்தைகள் அவர்களில் வெறுமையாய் இருக்காது. அவை உயிருள்ளவை.
  8. இறுதியாக நம்முடைய நோக்கமும், போராட்டமும் குறிக்கோளும் பரலோக ராஜ்யத்தை முதன்மையாகக் கொண்டதாய் இருக்க வேண்டும்.

முடிவாக,

ஒருவேளை பிள்ளைகளுடைய ஆத்துமா கெட்டுப் போனால் அதற்கு காரணம் நாம் தான். நாத்தான் தீர்க்கதரிசி தாவீதை பார்த்து சொன்னது போல “நீயே அந்த மனுஷன்;” இது எல்லாம் நமக்கு கொடுத்த தேவனுக்கு நாம் கொடுக்க வேண்டிய கனத்தை கொடுக்காததால் ஏற்பட்டதின் விளைவு. உங்கள் பிள்ளைகளின் ஆத்துமா விலையேறப்பற்றது. நியாயதீர்ப்பின் நாளில் நீங்கள் ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்ல வேண்டும். கெட்ட காரியத்துக்கு நீங்கள் பொறுப்பாளியாக இருக்கிறீர்கள்.

பாவ மனிதர்களாகிய நம்மால் இந்த காரியங்களை செய்வதற்குரிய பெலனோ ஞானமோ இல்லை. அநேக நேரங்களில் தவறான எடுத்துக்காட்டுகளையே பிள்ளைகளுக்கு காண்பிக்கிறோம். சிந்தித்துப்பார்த்து மனந்திரும்புங்கள். ஜெபத்தில் கர்த்தரிடம் உதவியை கேளுங்கள். “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” (யாக்கோபு 1:5). ஒருவேளை உங்களுடைய வாழ்க்கையில் ஏதேனும் பெரிய தவறு நடந்திருந்தால் தயவு செய்து தேவனிடம் வாருங்கள். எப்பேர்ப்பட்ட பிரச்சனையும் அவரால் சரி செய்ய முடியும். அவரால் மட்டுமே! சரி செய்ய முடியும். என்பதை மறவாதிருங்கள், கிருபை நிறைந்த தேவன் இந்த காரியத்தில் உங்களுக்கு கிருபை செய்வாராக. ஆமென்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.