வேதாகமத்தை வாசி

நெகேமியா 1

                   
புத்தகங்களைக் காட்டு
1அக்கல்யா மகனான நெகேமியா கூறியது: இருபதாம் ஆண்டின் கிசிலேவு மாதத்தில், நான் தலைநகரான சூசாவில் இருந்தேன்.
2அப்பொழுது, என் சகோதரர்களில் ஒருவரான அனானியும் சில ஆண்களும் யூதாவிலிருந்து வந்தார்கள். அடிமைத்தனத்திற்குத் தப்பித்துக்கொண்டு உயிரோடிருக்கும் யூதர்களைப்பற்றியும் எருசலேமைப் பற்றியும் அவர்களிடம் விசாரித்தேன்.
3அதற்கு அவர்கள், “அடிமைத்தனத்திற்குத் தப்பித்துக் கொண்டு அம்மாநிலத்தில் உயிரோடிருப்பவர்கள் பெருந் துயரும் சிறுமையும் அடைகிறார்கள். எருசலேமின் மதில்கள் தகர்த்தெறியப்பட்டுள்ளன: அதன் வாயிற்கதவுகள் தீக்கு இரையாகிவிட்டன” என்று கூறினர்.
4இவற்றைப் பற்றிக் கேள்விபட்டதும் நான் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன்: பல நாள்கள் துக்கம் கொண்டாடினேன்: மேலும் நான் நோன்பிருந்து விண்ணகக் கடவுளின்முன் மன்றாடினேன்:
5“விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரே! பெரியவரும் அஞ்சுதற்கு உரியவரும் ஆனவரே! தமக்கு அன்பு காட்டுபவர்களிடமும் தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களிடமும் உடன்படிக்கையையும் இரக்கத்தையும் காப்பவரே!
6உம் ஊழியர்களாகிய இஸ்ரயேல் மக்களுக்காக இரவும் பகலும் இன்று உம்முன் மன்றாடினேன்: இஸ்ரயேல் மக்களாகிய நாங்கள் உமக்கு எதிராகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிறேன். அடியேனுடைய மன்றாட்டைக் கேட்பதற்கு உம் செவிகள் திறந்திருப்பதாக! உன் கண்கள் விழித்திருப்பதாக! நானும் என் தந்தை வீட்டாரும் பாவம் செய்தோம்.
7நாங்கள் உமக்கு எதிராக முறைகேடாக நடந்து கொண்டோம். உமது ஊழியரான மோசேக்குத் தந்த கட்டளைகளையும், சட்டங்களையும், நீதி முறைமைகளையும் கடைப்பிடிக்கவில்லை.
8உம் ஊழியரான மோசேக்கு நீர் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தருளும். 'நீங்கள் நேர்மையற்றவர்களாக இருப்பீர்களேயாகில் உங்களை மக்களினங்களிடையே சிதறடிப்பேன்:
9இருப்பினும், நீங்கள் என்னிடம் திரும்பிவந்து, என் கட்டளைகளைப் பின்பற்றி நடப்பீர்களாகில், நீங்கள் உலகின் கடை எல்லைக்கு ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பினும், அங்கிருந்து உங்களை ஒன்று சேர்த்து எனது பெயர் விளங்கும் பொருட்டு நான் தேர்ந்துகொண்ட இடத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்'.
10உமது பேராற்றலாலும் கைவன்மையாலும் நீர் மீட்ட உம் மக்களும் ஊழியர்களும் இவர்களே.
11ஆண்டவரே, உம் ஊழியனான அடியேனின் மன்றாட்டையும், உமது பெயருக்கு அஞ்சி நடக்க விரும்பும் உம் ஊழியர்களின் மன்றாட்டையும் கேட்டருளும். உம் ஊழியனாகிய எனக்கு இன்று வெற்றியை அருளும். இம்மனிதர் எனக்கு இரக்கம் காட்டச் செய்தருளும்”. அப்பொழுது, நான் மன்னருக்குப் பானம் பரிமாறுவோனாக இருந்தேன்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.