வேதாகமத்தை வாசி

Click to Subscribe

உன்னதப்பாட்டு 5

                   
புத்தகங்களைக் காட்டு
1என் தோட்டத்திற்கு நான் வந்துள்ளேன்: என் தங்காய், மணமகளே, நறுமணப் பொருளையும் சேகரிக்கின்றேன்: என் தேனையும் தேனடைகளையும் உண்கின்றேன்: என் திராட்சை இரசத்தையும் பாலையும் பருகுகின்றேன்: தோழர்களே, உண்ணுங்கள்: அன்பர்களே, போதையேறப் பருகுங்கள்.
2நான் உறங்கினேன்: என் நெஞ்சமோ விழித்திருந்தது: இதோ, என் காதலர் கதவைத் தட்டுகின்றார்: “கதவைத் திற, என் தங்காய், என் அன்பே, என் வெண்புறாவே, நிறை அழகே, என் தலை பனியால் நனைந்துள்ளது: என் தலைமயிர்ச் சுருள் இரவுத் தூறலால் ஈரமானது, “
3“என் ஆடையைக் களைந்து விட்டேன்: மீண்டும் அதனை நான் உடுத்த வேண்டுமோ? என் கால்களைக் கழுவியுள்ளேன்: மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?”
4என் காதலர் கதவுத் துளை வழியாகக் கையைவிட்டார்: என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.
5எழுந்தேன் நான், காதலர்க்குக் கதவு திறக்க: என் கையில் வெள்ளைப்போளம் வடிந்தது: என் விரல்களில் வெள்ளைப்போளம் சிந்திற்று: தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று.
6கதவைத் திறந்தேன் நான் என் காதலர்க்கு: அந்தோ! என் காதலர் காணவில்லை, போய்விட்டார்: என் நெஞ்சம் அவர் குரலைத் தொடர்ந்து போனது: அவரைத் தேடினேன்: அவரைக் கண்டேன் அல்லேன்: அவரை அழைத்தேன்: பதிலே இல்லை!
7ஆனால் என்னைக் கண்டனர் சாமக் காவலர்: நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்: அவர்கள் என்னை அடித்தனர்: காயப்படுத்தினர்: என் மேலாடையைப் பறித்துக் கொண்டனர்: கோட்டைச் சுவரின் காவலர்கள் அவர்கள்!
8எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்: என் காதலரைக் காண்பீர்களாயின் அவரிடம் என்ன சொல்வீர்கள்? “காதல் நோயுற்றேன் நான்” எனச் சொல்லுங்கள்.
9“பெண்களுக்குள் பேரழகியே, மற்றக் காதலரினும் உன் காதலர் எவ்வகையில் சிறந்தவர்? இவ்வாறு எங்களிடம் ஆணையிட்டுக் கூறுகின்றாயே: மற்றக் காதலரினும் உன்காதலர் எவ்வகையில் சிறந்தவர்?”
10“என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்: பல்லாயிரம் பேர்களிலும் தனித்துத் தோன்றுவார்!
11அவரது தலை பசும்பொன்: தலைமுடி சுருள்சுருளாய் உள்ளது: காகம்போல் கருமை மிக்கது.
12அவர் கண்கள் வெண்புறாக்கள் போன்றவை: பாலில் குளிந்து, நீரோடைகளின் அருகில் கரையோரங்களில் தங்கும் வெண்புறாக்கள் அவை.
13அவர் கன்னங்கள் நறுமண நாற்றங்கால்கள் போல்வன: நறுமணம் ஆங்கே கமழ்கின்றது: அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்: அவற்றினின்று வெள்ளைப்போளம் சொட்டுச்சொட்டாய் வடிகின்றது.
14அவருடைய கைகள் உருண்ட பொன் தண்டுகள்: அவற்றில் மாணிக்கக் கற்கள் பதிந்துள்ளன: அவரது வயிறு யானைத் தந்தத்தின் வேலைப்பாடு: அதில் நீலமணிகள் பொதியப் பெற்றுள்ளன.
15அவருடைய கால்கள் பளிங்குத் தூண்கள்: தங்கத் தளத்திலே அவை பொருந்தியுள்ளன: அவரது தோற்றம் லெபனோனுக்கு இணையானது: கேதுரு மரங்கள்போல் தலைசிறந்தது.
16அவரது வாய் இணையற்ற இனிமை: அவர் முழுமையும் பேருவகையே: எருசலேம் மங்கையரே, இவரே என் காதலர், இவரே என் நண்பர்.”
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.