வேதாகமத்தை வாசி

Click to Subscribe

உன்னதப்பாட்டு 6

                   
புத்தகங்களைக் காட்டு
1“பெண்களுக்குள் பேரழகியே, உன் காதலர் எங்கே போனார்? உன் காதலர் எப்பக்கம் திரும்பினார்? உன்னோடு நாங்களும் அவரைத் தேடுவோம்.”
2“என் காதலர் தம் தோட்டத்திற்கும் நறுமண நாற்றங்கால்களுக்கும போனார்: தோட்டங்களில் மேய்க்கவும் லீலி மலர்களைக் கொய்யவும் சென்றுள்ளார்”.
3நான் என் காதலர்க்குரியள்: என் காதலர் எனக்குரியர்: லீலிகள் நடுவில் அவர் மேய்க்கின்றார்.
4என் அன்பே. நீ திரட்சாவைப்போல் அழகுள்ளவள்: எருசலேமைப்போல் எழில் நிறைந்தவள்: போரணிபோல் வியப்பார்வம் ஊட்டுகின்றாய்!
5என்னிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக்கொள்: அவை என்னை மயக்குகின்றன: கிலயாதிலிருந்து இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தை போன்றது உன் கூந்தல்.
6உன் பற்களோ, குளித்துக்கரையேறும் பெண் ஆடுகளின் மந்தைபோல்வன: அவையாவும் இரட்டைக்குட்டி போட்டவை: அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.
7முகத்திரையின் பின்னிருக்கும் உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.
8அரசியர் அறுபது பேர்: வைப்பாட்டியர் எண்பது பேர்: இளம்பெண்கள் எண்ணிறந்தவர்.
9என் வெண்புறா, அழகின் வடிவம் அவள் ஒருத்தியே! அவள் தாய்க்கும் அவள் ஒருத்தியே: அவளைப் பெற்றவளுக்கு அவள் அருமையானவள்: மங்கையர் அவளைக் கண்டனர்: வாழ்த்தினர்: அரசியரும் வைப்பாட்டியரும் அவளைப் புகழ்ந்தனர்:
10“யாரிவள்! வைகறைபோல் தோற்றம்: திங்களைப் போல் அழகு: ஞாயிறுபோல் ஒளி: போரணிபோல் வியப்பார்வம்: யாரிவள்!”
11வாதுமைச் சோலைக்குள் சென்றேன்: பள்ளத்தாக்கில் துளிர்த்தவற்றைப் பார்க்கப் போனேன்: திராட்சை பூத்துவிட்டதா என்றும் மாதுளைகள் மலர்ந்தனவா என்றும் காணச் சென்றேன்.
12என்னவென்றே எனக்குத் தெரியவில்லை! மகிழ்ச்சியில் மயங்கினேன்: இளவரனுடன் தேரில் செல்வது போல் நான் உணர்ந்தேன்.
13திரும்பி வா! திரும்பி வா! சூலாமியளே! திரும்பி வா! திரும்பி வா! நாங்கள் உன்னைப் பார்க்க வேண்டும்! இரண்டு பாசறைகள் நடுவில் ஆடுபவளைப்போல் சூலாமியளை நீங்கள் ஏன் நோக்க வேண்டும்?
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.