வேதாகமத்தை வாசி

பிரசங்கி 1

                   
புத்தகங்களைக் காட்டு
1தாவீதின் மகனும் எருசலேமின் அரசருமாகிய சபையுரையாளர் உரைத்தவை:
2வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்: வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்.
3மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்: ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன?
4ஒரு தலைமுறை மறைகின்றது: மறு தலைமுறை தோன்றுகின்றது: உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது.
5ஞாயிறு தோன்றுகின்றது: ஞாயிறுமறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது.
6தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது: பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது. இப்படிச் சுழன்று சுழன்று வீசித் தன் இடத்திற்குத் திரும்புகின்றது.
7எல்லா ஆறுகளும் ஓடிக் கடலோடு கலக்கின்றன: எனினும், அவை ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை: மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான இடத்திற்கே திரும்புகின்றன.
8அனைத்தும் சலிப்பையே தருகின்றன: அதைச் சொற்களால் எடுத்துரைக்க இயலாது. எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை: எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை.
9முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்: முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை.
10ஏதேனும் ஒன்றைப்பற்றி, “இதோ, இது புதியது” என்று சொல்லக் கூடுமோ? இல்லை. அது ஏற்கனவே, நமது காலத்திற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே!
11முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை: அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப்பற்றிய நினைவு இருக்கப்போவதில்லை.
12சபையுரையாளனாகிய நான் எருசலேமில் இஸ்ரயேலுக்கு அரசனாய் இருந்தேன்.
13இவ்வுலகில் நடக்கிற எல்லாவற்றையும் ஞானத்தின் துணை கொண்டு கூர்ந்து ஆராய்வதில் என் சிந்தையைச் செலுத்தினேன். மானிடர் பாடுபட்டுச் செய்வதற்கென்று அவர்களுக்குக் கடவுள் எவ்வளவு தொல்லைமிகு வேலையைக் கொடுத்திருக்கிறார்!
14இவ்வுலகில் செய்யப்படும் ஒவ்வொரு செயலையும் கவனித்தேன். அனைத்தும் வீணான செயல்களே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானவை.
15கோணலானதை நேராக்க இயலாது: இல்லாததை எண்ணிக் கையில் சேர்க்க முடியாது.
16எனக்குமுன் எருசலேமில் அரசராய் இருந்தவர்கள் எல்லாரையும் விட நான் ஞானத்தை மிகுதியாகத் தேடிப்பெற்றவன்: மிகுந்த ஞானத்தையும் அறிவையும் அனுபவத்தால் பெற்றவன் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
17ஞானத்தையும் அறிவையும்பற்றித் தெரிந்துகொள்வதில் என் சிந்தையைச்செலுத்தினேன்: மடமையையும் மதிகேட்டையும்பற்றி அறிய முயன்றேன். இதுவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானதே எனக் கண்டேன்.
18ஞானம் பெருகக் கவலை பெருகும்: அறிவு பெருகத் துயரம் பெருகும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.