1 | கடவுளின் கோவிலுக்குச் செல்லும்போது விழிப்புடனிரு. மதிகேடரைப்போலப் பலிசெலுத்துவதை விட, உள்ளே சென்று கேட்டறிவதே மேல். ஏனெனில், அவர்கள் தாங்கள் செய்த தீவினைகளை உணர்வதில்லை. |
2 | கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே: எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே. கடவுள் விண்ணுலகில் இருக்கிறார்: நீயோ மண்ணுலகில் இருக்கிறாய்: எனவே, மிகச்சில சொற்களே சொல். |
3 | கவலை மிகுமானால் கனவுகள் வரும்: சொல் மிகுமானால் மூடத்தனம் வெளியாகும். |
4 | கடவுளுக்கு நீ ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால், அதை நிறைவேற்றுவதில் காலந்தாழ்த்தாதே. ஏனெனில், பொறுப்பின்றி நடப்போரிடம் அவர் விருப்பங்கொள்வதில்லை. என்ன வாக்குக் கொடுத்தாயோ அதைத் தவறாமல் நிறைவேற்று. |
5 | கொடுத்த வாக்கை நிறைவேற்றாமற் போவதைவிட, வாக்குக் கொடாமல் இருப்பதே மேல். |
6 | வாய் தவறிப் பேசிப் பழிக்கு ஆளாகாதபடி பார்த்துக்கொள்: தவறுதலாய்ச் செய்துவிட்டேன் என்று வான தூதரிடம் சொல்லும்படி நடந்துகொள்ளாதே. உன் பேச்சின் பொருட்டுக் கடவுள் உன்மீது சினங்கொண்டு, நீ செய்தவற்றை அழிக்கும்படி நடந்துகொள்வானேன்? |
7 | கனவுகள் பல வரலாம்: செயல்களும் சொற்களும் எத்தனையோ இருக்கலாம். நீயோ கடவுளுக்கு அஞ்சி நட. |
8 | ஒரு மாநிலத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுவதையும் அவர்களுக்கு நீதி நியாயம் வழங்கப்படாதிருப்பதையும் நீ காண்பாயானால் வியப்படையாதே. ஏனெனில், அலுவலர்களுக்குமேல் அதிகாரிகள் உள்ளனர் என்றும், அவர்களுக்கும் மேலதிகாரிகள் உள்ளனர் என்றும் சொல்வார்கள். |
9 | “பொதுநலம்”, “நாட்டுத் தொண்டு” என்ற சொற்களும் உன் காதில் விழும். |
10 | பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது: செல்வத்தின்மேல் மிகுந்த ஆசை வைப்பவர் அதனால் பயனடையாமற்போகிறார். இதுவும் வீணே. |
11 | சொத்து பெருகினால் அதைச் சுரண்டித் தின்பேரின் எண்ணிக்கையும் பெருகும். செல்வர்களுக்குத் தங்கள் சொத்தைக் கண்ணால் பார்ப்பதைத் தவிர வேறு என்ன பயன் உண்டு? |
12 | வேலை செய்கிறவரிடம் போதுமான சாப்பாடு இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்: ஆனால் அவருக்கு நல்ல தூக்கமாவது இருக்கும். செல்வரது செல்வப் பெருக்கே அவரைத் தூங்கவிடாது. |
13 | உலகில் ஒரு பெருந்தீங்கை நான் கண்டேன். ஒருவர் சேமிக்கும் செல்வம் அவருக்குத் துன்பத்தையே விளைவிக்கும். |
14 | ஒருவர் ஒரு நட்டம்தரும் தொழிலில் ஈடுபட்டுத் தம் செல்வத்தை இழக்கிறார். அவருக்கு ஒரு பிள்ளை உள்ளது. ஆனால் அப்பிள்ளைக்குக் கொடுப்பதற்கோ ஒன்றுமில்லை. |
15 | மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்: வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை. |
16 | இது கொடிய தீங்காகும். அவர் எப்படி வந்தாரோ அப்படியே மீளுகிறார்: காற்றைப் பிடிக்கப் பாடுபடுகிறார். |
17 | அவர் அடையும் பயன் என்ன? வாழ்நாள் முழுவதும் இருள், கவலை, பிணி, எரிச்சல், துன்பம். |
18 | ஆகையால், நான் இந்த முடிவுக்கு வந்தேன்: தமக்குக் கடவுள் வரையறுத்திருக்கும் குறுகிய வாழ்நாளில் மனிதர் உண்டு குடித்து, உலகில் நம் உழைப்பின் பயனைத் துய்ப்பதே நலம்: அதுவே தகுந்ததுமாகும். |
19 | கடவுள் ஒருவருக்குப் பெருஞ்செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து, அவற்றை அவர் துய்த்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால், அவர் நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம். அது அவருக்குக் கடவுள் அருளும் நன்கொடை. |
20 | தம் வாழ்நாள் குறுகியதாயிருப்பதைப்பற்றி அவர் கவலைப்படமாட்டார். ஏனெனில் கடவுள் அவர் உள்ளத்தை மகிழ்ச்சியோடிருக்கச் செய்கிறார். |