1 | பிறகு நான் இவ்வுலகில் நடக்கும் கொடுமைகளையெல்லாம் பார்த்தேன். இதோ! மக்கள் ஒடுக்கப்பட்டுக் கண்ணீர் சிந்துகிறார்கள். அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை. அவர்களை ஒடுக்குவோர் கை ஓங்கி இருந்ததால், அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை. |
2 | ஆகையால், இன்று உயிரோடு வாழ்கிறவர்களின் நிலைமையைவிட ஏற்கெனவே மாண்டு மறைந்துபோனவர்களின் நிலைமையே மேலானது என்றேன். |
3 | இவ்விரு சாராரின் நிலைமையைவிட இன்னும் பிறவாதவர்களின் நிலைமையே சிறந்தது. ஏனெனில், அவர்கள் இவ்வுலகில் நடக்கும் கொடும் செயல்களைப் பார்க்கும் நிலையில் இல்லை. |
4 | மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும் கண்டறிந்தேன். இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையாகும். இது வீண் செயல்: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். |
5 | தம் கைகளைக் கட்டிக்கொண்டு பட்டினிகிடந்து மடிகிறவர் மடையர் என்று சொல்லப்படுகிறது. |
6 | காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல். |
7 | உலக வாழ்க்கையில் வேறொரு காரியமும் வீணென்று கண்டேன். |
8 | ஒருவர் தனி மனிதராக வாழ்கிறார். அவருக்குப் பிள்ளையுமில்லை, உடன் பிறந்தாருமில்லை: என்றாலும், அவர் ஓயாது உழைக்கிறார். ஆனால், தமக்கிருக்கும் செல்வத்தால் ஒருபோதும் மனநிறைவடைவதுமில்லை: தாம் இவ்வாறு உழைப்பதும் எவ்வகையான இன்பத்தையும் அனுபவியாமல் இருப்பதும் யாருக்காக என்று அவர் எண்ணிப் பார்ப்பதுமில்லை. இது வீணானதும் வருந்தத்தக்கதுமான வாழ்க்கை அன்றோ? |
9 | தனி மனிதராய் இருப்பதை விட இருவராய் இருப்பது மேல். ஏனெனில், அவர்கள் சேர்ந்து உழைப்பதால், அவர்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும். |
10 | ஒருவர் விழுந்தால், அடுத்தவர் அவரைத் தூக்கி விடுவார். தனி மனிதராய் இருப்பவர் விழுந்தால், அவரது நிலைமை வருந்தத்தக்கதாகும்: ஏனெனில், அவரைத் தூக்கி விட எவருமில்லை. |
11 | குளிரை முன்னிட்டு இருவர் ஒன்றாய் படுத்துச் சூடு உண்டாக்கிக்கொள்ளலாம்: தனி மனிதனுக்கு எப்படிச் சூடு உண்டாகும்? |
12 | தனி மனிதரை வீழ்த்தக்கூடிய எதிரியை இருவரால் எதிர்த்து நிற்க முடியும். முப்புரிக் கயிறு அறுவது கடினம். |
13 | வயதுசென்ற அறிவுரை கேளாத முட்டாள் அரசரைவிட, விவேகமுள்ள ஏழை இளைஞனே மேலானவன். |
14 | சிறையில் கைதியாதிருந்தவர் அரியணை ஏறியதும் உண்டு: அரசுரிமையுடன் பிறந்தவர் வறியவராவதும் உண்டு. |
15 | ஆனால், இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் அந்த அரச பதவியை ஏற்ற இளைஞனின் சார்பில் இருந்ததைப் பார்த்தேன். |
16 | அவன் ஆண்ட மக்களின் எண்ணிக்கைக்கு வரையறையே இல்லை. அவன் காலத்திற்குப்பின் வந்த மக்களோ அவனில் மனநிறைவடையவில்லை. இதுவும் வீணே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். |