வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 5

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்: என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
2என் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்: ஏனெனில். நான் உம்மை நோக்கியே மன்றாடுகின்றேன்.
3ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்: வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன்.
4ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை: உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
5ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார்: தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.
6பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்: கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர்.
7நானோ உம் பேரருளால் உமது இல்லம் சென்றிடுவேன்: உம் திருத்தூயகத்தை நோக்கி இறையச்சத்துடன் உம்மைப் பணிந்திடுவேன்:
8ஆண்டவரே, எனக்குப் பகைவர் பலர் இருப்பதால், உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்: உமது செம்மையான வழியை எனக்குக் காட்டியருளும்.
9ஏனெனில், அவர்கள் வாயில் உண்மை இல்லை: அவர்கள் உள்ளம் அழிவை உண்டாக்கும்: அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி: அவர்கள் நா வஞ்சகம் பேசும்.
10கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய தண்டனையை அவர்களுக்கு அளியும்: அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே வீழ்ச்சியுறட்டும்: அவர்களுடைய ஏராளமான தீச்செயல்களை முன்னிட்டு, அவர்களைப் புறம்பே தள்ளிவிடும். ஏனெனில், அவர்கள் உம்மை எதிர்த்துள்ளார்கள்.
11ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்: அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்: நீர் அவர்களைப் பாதுகாப்பீர்: உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர்.
12ஏனெனில், ஆண்டவரே, நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்: கருணை என்னும் கேடயத்தால் அவரை மறைத்துக் காப்பீர்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.