1 | எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்: நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்: இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்: |
2 | மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு இழுக்கைக் கொண்டு வருவீர்கள்? எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா) |
3 | ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்: நான் மன்றாடும் போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்: -இதை அறிந்துகொள்ளுங்கள். |
4 | சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்: படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள். (சேலா) |
5 | முறையான பலிகளைச் செலுத்துங்கள்: ஆண்டவரை நம்புங்கள். |
6 | 'நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?" எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும். |
7 | தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர். |
8 | இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்: ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். |