வேதாகமத்தை வாசி

எஸ்றா 4

                   
புத்தகங்களைக் காட்டு
1அடிமைத்தனத்திலிருந்து திரும்பியிருந்த மக்கள் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவருக்குக் கோவில் கட்டுவதை யூதா, பென்யமின் குலங்களின் பகைவர் அறிந்தனர்.
2அவர்கள் செருபாபேலையும் குலத்தலைவர்களையும் அணுகி, “நாங்களும் உங்களோடு சேர்ந்து கட்டுகின்றோம். ஏனெனில் உங்கள் கடவுளையே நாங்களும் உங்களைப்போல் வழிபடுகின்றோம். அசீரிய மன்னன் ஏசர்கத்தோன் எங்களை இங்கு கொண்டுவந்த நாளிலிருந்து அவருக்கே பலி செலுத்தி வருகின்றோம்.”
3ஆனால், செருபாபேலும் ஏசுவாவும் இஸ்ரயேலின் எஞ்சிய குலத்தலைவர்களும் அவர்களிடம், “நீங்களும் நாங்களும் சேர்ந்து எங்கள் கடவுளுக்கு கோவில் கட்ட வேண்டியதில்லை. மாறாகப் பாரசீக மன்னரான சைரசு எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்கள் மட்டுமே, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோவில் கட்டுவோம்” என்றனர்.
4ஆதலால், அந்நாட்டு மக்கள், யூதாவின் மக்களது கோவில் கட்டும் பணியைத் தடுத்தனர்: அவர்களை அச்சுறுத்தவும் செய்தனர்.
5பாரசீக மன்னரான சைரசு ஆட்சிக்காலம் தொடங்கிப் பாரசீக மன்னரான தாரியு ஆட்சிக்காலம்வரை அரசு அலுவலர்களுக்குக் கையூட்டுக் கொடுத்து, அவர்களின் திட்டங்களைச் சீர்குலைக்கத் தூண்டினர்.
6அகஸ்வேர் ஆட்சியின்போது, அவரது ஆட்சியின் தொடக்கத்திலேயே யூதாவிலும் எருசலேமிலும் குடியிருந்தவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு ஒன்று எழுதினர்.
7அர்த்தக்சஸ்தாவின் காலத்தில் பிஸ்லாம், மித்ரதாத்து, தாபேல், அவர்களைச் சார்ந்த மற்றவர்களும், பாரசீக மன்னனான அர்த்தக்சஸ்தாவிற்கு ஒரு மடல் எழுதினர். அம்மடல் அரமேயத்தில் எழுதப்பட்டிருந்தால், மொழிபெயர்க்கப்பட வேண்டியிருந்தது.
8ஆறுநர் இரகூமும் எழுத்தாளரான சிம்சாயும் எருசலேமுக்கு எதிராக அர்த்தக்சஸ்தா மன்னருக்குக் கீழ்க் கண்டவாறு ஒரு மடல் எழுதினர்:
9ஆளுநர் இரகூம், எழுத்தர் சிம்சாய், அவர்களைச் சார்ந்து நீதிபதிகள், தூதர், ஆலாசகர், அதிகாரிகள் மேலும் எரோக்கியர், பாபிலோனியர், எலாமித்தியரான சூசா நகரின் மக்கள்,
10மாட்சியும், மேன்மையும் பொருந்திய ஒஸ்னப்பர் அடிமைதனத்திற்கு இட்டுச் சென்ற மக்களைச் சமாரியா நதியின் அக்கரைப் பகுதியின் ஊர்களிலும் குடியேற்றிய பிற மக்கள் ஆகியோர் எழுதும் மடல்:
11மன்னர் அர்த்தக்சஸ்தாவுக்கு அனுப்பிய கடிதத்தின் உட்பொருள் இதுவே: நதியின் அக்கரையில் வாழும் உம் பணியாளராகிய மக்கள் அறிவிப்பது:
12உம்மிடமிருந்து எங்களிடம் வந்த யூதர்கள் எருசலேமுக்கச் சென்று கலகம் மிகுந்த, தீங்கு நிறைந்த அந்நகரைக் கட்டுகின்றார்கள்: மதில் சுவர்களைக் கட்டி முடிக்கின்றார்கள், அடித்தளங்களைப் பழுதுபார்க்கின்றார்கள்.
13மேலும் மன்னர் அறிய வேண்டியது: அந்நகர் கட்டப்படுமானால், அதன் மதில்கள் கட்டி முடிக்கப்படுமானால், அவர்கள் வரியும், தீர்வையும் தரவோ, கட்டாய வேலை செய்யவோ மாட்டார்கள். எனவே மன்னருக்குரிய வருமானம் குறையும்.
14நாங்களோ அரண்மனை உப்பைத் தின்பதாலும், மன்னரின் இழிவைப் பார்ப்பது முறையற்றது என்பதாலும், நாங்கள் மன்னருக்கு இதை அனுப்பித் தெரிவித்துக்கொள்கின்றோம்.
15எனவே, உம்முடைய முன்னோரின் வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் அதில் அந்நகர் கலகம் மிகுந்த அரசர்களுக்கும், மாநிலங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதைக் கண்டுணர்வீர். அதில் தொன்றுதொட்டுக் கலகங்கள் எழுந்துள்ளன. அதன் பொருட்டே அந்நகர் அழிக்கப்பட்டது.
16ஆகையால் அந்நகர் கட்டப்படுமானால், அதன் மதிற் சுவர்கள் கட்டுதல் நிறைவேறுமானால் பேராற்றுக்கு அக்கரைப் பகுதி உமக்குச் சொந்தமாகாது என்பதை மன்னருக்குத் தெரிவிக்கின்றோம்.
17ஆட்சியாளரான இரகூம், எழுத்தாளரான சிம்சாய், அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் சமாரியாவில் வாழ்ந்தவர்களுக்கும், நதிக்கு அக்கரையில் வாழும் மற்றவர்களுக்கும் சமாதானம் கூறி மன்னர் அனுப்பிய செய்தி பின்வருமாறு:
18“நீங்கள் எங்களுக்கு அனுப்பிய மடல் என்முன் தெளிவாக் வாசிக்கப்பட்டது.
19எனவே என்னிடமிருந்து ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டு தொன்றுதொட்டு அந்நகர் மன்னருக்கு எதிராக எழுந்தது என்றும், குழப்பமும் கிளர்ச்சியும் அதில் இருந்து வந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
20மேலும் எருசலேமில் ஆற்றல்மிக்க அரசர்கள் இருந்திருக்கின்றனர்: அவர்கள் பேராற்றுக்கு அக்கரைப் பகுதிகளையெல்லாம் ஆட்சி செய்துள்ளனர்: வரி மற்றும் ஆயம் வசூலித்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
21எனவே நான்ன மறுஆணை பிறப்பிக்கும் வரை அந்நகரைக் கட்டியெழுப்பாமல் இந்த ஆள்கள் வேலையை நிறத்துமாறு கட்டளை கொடுங்கள்.
22இதைச் செய்வதில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். மன்னருக்குத் தீங்கு வரும் அளவிற்குத் தீமை ஏன் பெருகவேண்டும்?”
23மன்னர் அர்த்தக்சஸ்தாவின் மடலின் நகல் இரகூம், எழுத்தாளரான சிம்சாய், அவர்களைச் சார்ந்தவர்கள் ஆகியோர்முன் வாசிக்கப்பட்டது. உடனே அவர்கள் எருசலேமில் வாழ்ந்த யூதர்களிடம் சென்று ஆற்றலையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி வேலையை நிறத்தும்படி செய்தனர்.
24எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் வேலை தடைப்பட்டு, பாரசீக மன்னர் தாரியு ஆட்சியின் இரண்டாம் ஆண்டுவரை நிறுத்தப்பட்டிருந்தது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.