1 | ஆண்டவர் கூறுவது இதுவே: “மோவாபு எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவன் ஏதோம் அரசனின் எலும்புகளைச் சுட்டுச் சாம்பலாக்கினான். |
2 | ஆதலால், மோவாபின்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது கெரியோத்தின் கோட்டைகளை விழுங்கிவிடும்: இரைச்சல், கூச்சல், எக்காள முழக்கம் ஆகியவை ஒருசேர எழும் வேளைகளில் மோவாபு மடிந்திடுவான். |
3 | அந்நாட்டின் ஆட்சியாளனை அவர்களிடையேயிருந்து அகற்றிவிடுவேன்: அவனோடு அதிகாரிகள் அனைவரையும் அழித்து விடுவேன்” என்கிறார் ஆண்டவர். |
4 | ஆண்டவர் கூறுவது இதுவே: “யூதா எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவேமாட்டேன்: ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் திருச்சட்டத்தை புறக்கணித்தார்கள்: அவருடைய நியமங்களை கடைப்பிடிக்கவில்லை: அவர்களுடைய தந்தையர் பின்பற்றிய பொய்த் தெய்வங்கள் அவர்களையும் வஞ்சித்துவிட்டன. |
5 | ஆதலால் யூதாவின்மேல் நெருப்பைக் கொட்டுவேன்: அது எருசலேமின் கோட்டைகளை விழுங்கிவிடும்.” |
6 | ஆண்டவர் கூறுவது இதுவே: “இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும் வறியவரை இரு காலணிக்கும் விற்கின்றார்கள். |
7 | ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்: ஒடுக்கப்பட்டோரின் நெறியைக் கெடுக்கின்றார்கள்: மகனும் தந்தையும் ஒரே பெண்ணைக் கூடி, என் திருப்பெயரைக் களங்கப்படுத்துகின்றார்கள். |
8 | கடன்காரரிடமிருந்து பறித்த ஆடைகளை விரித்துப் போட்டு, எல்லாப் பலிபீடங்களின் முன்பும் கிடந்து கொண்டு அபராதம் விதித்துக் கிடைத்த மதுவினைத் தங்கள் கடவுளின் இல்லத்தில் குடிக்கின்றார்கள். |
9 | நானோ கேதுரு மரத்தின் உயரமும் கருவாலி மரத்தின் வலிமையும் கொண்ட எமோரியரை அவர்கள் முன்பாக அழித்துவிட்டேன்: மேலே அவர்களுடைய கனிகளையும், கீழே அவர்களுடைய வேர்களையும் அழித்துவிட்டேன்: |
10 | மேலும், எகிப்து நாட்டிலிருந்து உங்களை அழைத்து வந்து, நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தி, எமோரியர் நாட்டை நீங்கள் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச் செய்தேன். |
11 | உங்கள் புதல்வர்களுள் சிலரை இறைவாக்கினராய் உயர்த்தினேன்: உங்கள் இளைஞர்களுள் சிலரை நாசீர்களாய்த் தேர்ந்துகொண்டேன்: இஸ்ரயேல் மக்களே, இது உண்மையன்றோ?” என்கிறார் ஆண்டவர். |
12 | ஆனால், நீங்கள் நாசீர்களை மது அருந்தச் செய்தீர்கள்: இறைவாக்கினருக்கு “இறைவாக்கு உரைக்கக்கூடாது” என்று கட்டளையிட்டீர்கள். |
13 | வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுந்துவது போல, உங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே அழுத்துவேன். |
14 | விரைந்தோடுகிறவனும் தப்ப முடியாது: வலிமையுள்ளவனும் தன் வலிமையை இழந்து விடுவான்: வீரனாலும் தன்னுயிரைக் காத்துக் கொள்ள முடியாது. |
15 | வில்லேந்தும் வீரன் எதிர்த்து நிற்கமாட்டான். விரைந்தோடுபவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டான், குதிரை வீரனாலும் தன்னுயிரைக் காத்துக்கொள்ள முடியாது. |
16 | அந்நாளில் வலிமை மிக்கவர்களுள் நெஞ்சுரம் கொண்டவன்கூடப் படைக்கலன்களைத் தூக்கி எறிந்து விட்டு ஓடுவான் என்கிறார் ஆண்டவர். |