1 | இஸ்ரயேல் மக்களே! கேளுங்கள்: உங்களுக்கு எதிராக-ஆம், எகிப்து நாட்டினின்று நான் அழைத்து வந்த முழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக-ஆண்டவர் உரைக்கும் இந்த வாக்கைக் கேளுங்கள்: |
2 | “உலகத்திலுள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்துகோண்டேன்: ஆதலால், உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன். |
3 | தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் இருவர் சேர்ந்து நடப்பார்களோ? |
4 | இரை அகப்படாமல் இருக்கும்போது காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ? ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழுக்கம் செய்யுமோ? |
5 | வேடன் தரையில் வலைவிரிக்காதிருக்கும்போதே பறவை கண்ணியில் சிக்கிக்கொள்வதுண்டோ? ஒன்றுமே சிக்காதிருக்கும்போது பொறி தரையைவிட்டுத் துள்ளுவதுண்டோ? |
6 | நகரில் எக்காளம் ஊதப்படுமானால், மக்கள் அஞ்சி நடுங்காமல் இருப்பார்களோ? ஆண்டவர் அனுப்பவில்லையெனில், நகருக்குத் தீமை தானாக வந்திடுமோ? |
7 | தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்குத் தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல், தலைவராகிய ஆண்டவர் ஏதும் செய்வதில்லை. |
8 | சிங்கம் கர்ச்சனை செய்கின்றது: அஞ்சி நடுங்காதவர் எவர்? தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க, இறைவாக்கு உரைக்காதவர் எவர்? |
9 | “அசீரியாவின் கோட்டைகள் மேலும் எகிப்து நாட்டின் கோட்டைகள் மேலும் நின்றுகொண்டு இவ்வாறு பறைசாற்று: சமாரியாவின் மலைகள்மேல் வந்து கூடுங்கள்: அங்கு ஏற்படும் குழப்பங்களையும் நடக்கும் கொடுமைகளையும் பாருங்கள். |
10 | நலமானதைச் செய்ய அவர்களுக்குத் தெரியவதில்லை” என்கிறார் ஆண்டவர். “அவர்கள் தங்கள் கோட்டைகளை வன்முறைகளாலும் கொள்ளைகளாலும் நிரப்புகிறார்கள்.” |
11 | ஆகையால், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: “பகைவன் ஒருவன் வந்து நாட்டைச் சூழந்து கொள்வான்: அரண்களையெல்லாம் தரைமட்டமாக்குவான்: உங்கள் கோட்டைகள் கொள்ளையிடப்படும். |
12 | ஆண்டவர் கூறுவது இதுவே: “சிங்கத்தின் வாயிலிருந்து இடையன் தன் ஆட்டின் இரண்டு கால்களையோ காதின் ஒருபகுதியையோ பிடுங்கி எடுப்பது போல, சமாரியாவில் குடியிருந்து, பஞ்சணைகள்மீதும் மெத்தைகள்மீதும் சாய்ந்து இன்புறும் இஸ்ரயேல் மக்கள் விடுவிக்கப்படுவதும் இருக்கும்.” |
13 | “கேளுங்கள்: யாக்கோபின் வீட்டாருக்கு எதிராகச் சான்று பகருங்கள்,” என்கிறார் தலைவரும் படைகளின் கடவுளுமாகிய ஆண்டவர். |
14 | “இஸ்ரயேலை அதன் குற்றங்களுக்காகத் தண்டிக்கும் நாளில், பெத்தேலில் உள்ள பலிபீடங்களை அழிப்பேன்: பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டுத் தரையில் விழும். |
15 | குளிர்கால வேனிற்கால மாளிகைகளை இடித்துத் தள்ளுவேன்: தந்தத்தாலான வீடுகள் அழிந்து போகும்: மாபெரும் இல்லங்களும் பாழாய்ப் போகும்,” என்கிறார் ஆண்டவர். |