வேதாகமத்தை வாசி

Click to Subscribe

ஓசியா 4

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: நாட்டில் குடியிருப்பவர்களோடு ஆண்டவருக்கு வழக்கு ஒன்று உண்டு: நாட்டில் உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை: கடவுளை அறியும் அறிவும் இல்லை.
2பொய்யாணை, பொய்யுரை, கொலை, களவு, விபசாரம் ஆகியன பெருகிவிட்டன. எல்லாக் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிகின்றனர்: இரத்தப் பழிமேல் இரத்தப்பழி குவிகின்றது.
3ஆதலால் நாடு புலம்புகின்றது: அதில் குடியிருப்பன எல்லாம் நலிந்து போகின்றன: காட்டு விலங்குகளும், வானத்துப் பறவைகளும், கடல்வாழ் மீன்களும்கூட அழிந்து போகின்றன.
4ஆயினும் எவனும் வழக்காட வேண்டாம்: எவனும் குற்றம் சாட்ட வேண்டாம்: உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்.
5பகலிலே நீ இடறி விழுவாய்: இரவிலே இறைவாக்கினனும் உன்னோடு இடறி விழுவான்: உன் தாயை நான் அழித்துவிடுவேன்.
6அறிவின்மையால் என் மக்கள் அழிகின்றார்கள்: நீ அறிவைப் புறக்கணித்தாய்: நானும் நீ எனக்குக் குருவாய் இராதபடி உன்னை புறக்கணிப்பேன். நீ உன் கடவுளின் திருச்சட்டத்தை மறந்துவிட்டாய்: நானும் உன் மக்களை மறந்து விடுவேன்.
7எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ அவ்வளவுக்கு அவர்கள் எனக்கு எதிராயப் பாவம் செய்தார்கள்: அவர்கள் மேன்மையை இகழ்ச்சியாக மாற்றுவேன்.
8என் மக்களின் பாவங்களால் இவர்கள் வயிறு வளர்க்கின்றார்கள்: அவர்கள் தீச்செயல் செய்யும்படி இவர்கள் ஏங்குகின்றார்கள்.
9குருவுக்கு நேரிடுவது மக்களுக்கும் நேரிடும்: அவர்களுடைய தீய வழிகளுக்காகத் தண்டனை வழங்குவேன்: அவர்களுடைய செயல்களுக்கேற்ற பதிலை அளிப்பேன்.
10அவர்கள் உண்டாலும் நிறைவடைய மாட்டார்கள்: வேசித்தனம் செய்தாலும் பலுகமாட்டார்கள்: ஏனெனில் வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக ஆண்டவரைக் கைவிட்டார்கள்.
11மதுவும், திராட்சை இரசமும் அறிவைக் கெடுக்கும்.
12என் மக்கள் மரக்கட்டையிடம் குறி கேட்கின்றனர்: அவர்களது கோல் மறைமொழிகள் கூறுகின்றது! விபசாரப் புத்தி அவர்களை நெறிதவறச் செய்தது: விபசாரம் செய்வதற்காக அவர்கள் தங்கள் கடவுளைவிட்டு அகன்றனர்.
13மலையுச்சிகளில் அவர்கள் பலியிடுகின்றார்கள்: குன்றுகள் மேலும், நல்ல நிழல் தரும் கருவாலி, புன்னை, தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் நறுமணப் புகை எழுப்புகின்றார்கள்: ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கின்றார்கள்: உங்கள் மருமக்கள் விபசாரம் புரிகின்றார்கள்.
14உங்கள் புதல்வியர் விபசாரம் செய்தாலும், உங்கள் மருமக்கள் விபசாரம் புரிந்தாலும், நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன்: ஏனெனில், ஆண்கள் விலைமாதரோடு போகின்றார்கள்: தேவதாசிகளோடு சேர்ந்து பலி செலுத்துகின்றார்கள்: அறிவற்ற அம்மக்கள் அழிந்து போவார்கள்.
15இஸ்ரயேல், நீ வேசித்தனம் புரிந்தாலும், யூதா நாடாகிலும் குற்றமற்றதாய் இருக்கட்டும்: கில்காலுக்குள் நுழையாதீர்கள்: பெத்தாவேனுக்குப் போகாதீர்கள்: “ஆண்டவர்மேல் ஆணை” என்று ஆணையிடாதீர்கள்.
16கட்டுக்கடங்காத இளம் பசுவைப் போல இஸ்ரயேல் மக்கள் பிடிவாதமாயிருக்கின்றார்கள்: ஆண்டவர் அவர்களைப் பரந்த புல்வெளியில் ஆட்டுக் குட்டியைப் போல் மேய்க்க முடியுமா?
17எப்ராயிம் சிலைகளோடு சேர்ந்து கொண்டான். அவனை விட்டுவிடு.
18குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள் வேசித்தனத்தில் ஆழ்ந்திருக்கின்றார்கள்: தங்களது மேன்மையைக் காட்டிலும் இகழ்ச்சியையே அவர்கள் மிகுதியாய் விரும்புகின்றார்கள்.
19காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் பற்றிக் கொள்ளும்: அவர்கள் தங்கள் பலிகளால் நாணமடைவார்கள்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.